-நிலவளம் கு.கதிரவன்

முன்னுரை

kathirஆயர் குல விளக்காம் ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்கள் முப்பதும் சரணாகதித் தத்துவத்தைப் போற்றுவதாகும்.  எட்டாம் பாடலான ’கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு’ என்ற பாடலின் பொருளையும், விளக்கத்தையும், இப்பாடலில் பொதிந்துள்ள உள்ளுறை கருத்துக்களையும் நாம் காணப்போகிறோம்.    

அவதாரிகை                                          

திருப்பாவை பாசுர வரிசையில் எட்டாவது வரிசையில் வரும் கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு என்ற பாசுரம் தமோ குணம் நீங்கி சத்வ குணம் வருவதையும், அத்தகைய சத்வ குணத்தினால் அஞ்ஞானம் விலகும். மெய்ஞானம் பிறக்கும் என்பதை ஆண்டாள் நமக்கு உள்ளுறையாக விளக்குகிறாள். மேலும் இப்பாசுரம் ஸ்வாமி நம்மாழ்வார் எழுப்பப் பாடுவதாகவும், சிலர் பூதத்தாழ்வாரை எழுப்பப் பாடுவதாகவும் கூறுவர். தவிரவும் ஆசார்ய சம்பந்தம், மோட்சம் போன்ற அம்சங்களையும் இப்பாசுரம் ஆய்ந்து விளக்குகிறது.                       

திருப்பாவை எட்டாம் பாசுரம்

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போக்கின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரைமாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்! 

பாசுரப் பொருள் விளக்கம் 

இப்பாசுரத்தில் எழுப்பப்படும் பெண் பகவான் கிருஷ்ணரால் மிகவும் விரும்பப்பட்டவள்.  ஆகையாலே கோதை அவள் இல்லம் சென்று, கீழ்வானம் வெளுத்துவிட்டது, எருமைகள் எல்லாம் சிறுவீடு மேய சென்றுவிட்டது என்பதால் நாங்கள் உன்னை எழுப்புவதற்காக கோஷ்டியாக வந்துள்ளோம்.  நீ ஏன் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாய்? திருவேங்கட யாத்திரை செல்லும் குழுவினரையும் உனக்காக நிறுத்தி வைத்துள்ளோம்.  கிருஷ்ணரால் மிகவும் விரும்பப்பட்ட பெண்ணே சீக்கிரம் எழுந்திரு.  கேசி என்ற அசுரன் குதிரை உருவத்திலும், பகாசுரன் கொக்கு வடிவத்திலும் வந்தபோது அவர்களின் வாயைக் கிழித்தவனும், சாணுரன், முஷ்டிகன்  என்ற மல்லர்களை மாய்த்தவனுமான, தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக விளங்கக் கூடிய எம்பெருமானின் மகாத்மியங்களை பாடிக்கொண்டு அவனை நாம் சேவிப்போம்.  அப்படி சேவித்தால் எம்பெருமான் நம்மிடம் வந்து, நமது குறைகளை ஆராய்ந்து, அனுதாபப்பட்டு நமக்கு அருள்செய்வான்.  எனவே எழுந்திரு தோழியே எனத் தோழியின் வீட்டுக் கதவை கூடியிருந்து தட்டியெழுப்புகின்றனர்.    

தோழியை எழுப்புதல் 

பாவை நோன்பிற்காக வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் பெண் பிள்ளையை, கீழ்வானம் வெளுத்து, சூரிய  உதயம் ஆகிறது.  இன்னும் நீ எழுந்திருக்கவில்லையா? என்று ஆண்டாளும், தோழியர்களும் அழைக்கிறார்கள்.  இங்கு கீழ்வானம் என்பது ஆகாயத்தைக் குறிக்கும். அதேபோன்று ஒவ்வொரு ஜீவாத்மாவுக்குள்ளும் இருக்கும் மனத்தின் உள் வெளியை குறிக்கிறது.  அந்த உள்வெளி சுத்தமாக இருந்தால்தான் சுடர்விட்டு ஒளிரும். பரமாத்மாவைக் கண்டுகொள்ள முடியும், என உள்ளுறையாக கூறப்பட்டுள்ளது.    

கீழ்வானம் வெளுத்ததைத் தொடர்ந்து, எருமைகள் எல்லாம் சிறுவீடு மேயச் சென்றுவிட்டன. சிறுவீடு மேய்வது என்பது பனித்துளி படர்ந்த புற்களை மேய விடிந்தும், விடியாத காலையில் புறப்பட்டுச் செல்லும் நேரமாகும்.  எருமைகள் சென்றதைத் தொடர்ந்து மற்ற பிள்ளைகளும் செல்லத் தொடங்கிவிட்டனர். போவதற்காக போகின்றவர்கள் அதாவது பரமனைக் காணப் போவதாகிய செயலே போதுமானது என்றும், அப்பரமனே உபாயமும், உபேயமுமாகக் கொண்டு செல்கின்றனர்.  அவர்களை நிறுத்தி உனக்காக காத்திருக்கச் சொல்லியிருக்கின்றோம்.  அப்படி அவர்களை நிறுத்தி வைத்துவிட்டு, உன் வீட்டுவாசலில் உன்னை எழுப்புவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றோம்.  பகவான் கிருஷ்ணனால் விரும்பப்பட்டவளும், உன்னால் விரும்பப்பட்ட கிருஷ்ணனுமாகிய அப்பெருமானின் கல்யாண குணங்களைப் பாடி, பறைகொண்டு சேவிக்கலாம்.  அதனால் நீ எழுந்திரு தோழி என்று எழுப்புகிறார்கள்.  

தோழியின் பதில் 

ஆண்டாளும், மற்றவர்களும் எழுப்பும்போது, தோழி சொல்கிறாள்.  கீழ்வானம் வெளுக்கவில்லை. பொழுதும் விடியவில்லை.  கிருஷ்ணனைச் சென்று சேர்வதற்காக எப்போது பொழுது விடியும் என்று கிழக்குத் திசையையே பார்த்துப் பார்த்து உங்கள் முகத்தினொளியின் பிரதிபலிப்பே கீழ்வானம் வெளுத்ததுபோல் தெரிகின்றது.  அதே போன்று நீங்கள் எருமைகள் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றீர்களே அது எருமைகள் அல்ல, உங்கள் முகத்தின் ஒளிபடரப் படர இருளானது விலகிக் கொண்டே செல்லும்.  அந்த இருள் திரளானது உங்களுக்கு எருமைகள் போல் தெரிகிறது. எனவே இன்னும் பொழுது புலரவில்லை. இப்படிக் கூறியவளை இடைமறித்து, சரி.  பொழுது புலரவில்லை என்று கூறுகிறாய்.  அப்படியென்றால் விடியலுக்கு வேறு என்னதான் அடையாளமாக நீ கேட்கிறாய் என்றார்கள் பிற தோழியர்கள்.  அதற்கு அவள், ஆய்ப்பாடியில் ஐந்து லட்சம் குடியில் உள்ளவர்களில் எத்தனைபேர் இங்கு வந்துள்ளார்கள்?  அப்படி அனைவரும் வரவில்லையெனில் மற்றவர்கள் இன்னும் உறங்கிக் கொண்டுதானே இருக்கின்றார்கள்.  இச் செயலே தெரியவில்லையா? இன்னும் விடியவில்லை என்று மறுமொழியிட்டாள் தோழி.  

தோழிக்கு பதில்     

தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றாய் தோழி.  நாங்கள் முன்னமே சொன்னதுபோல்தான், விடியலைக் கண்டு எருமைகள் சிறுவீடு சென்றுவிட்டன, அதைத் தொடர்ந்து மற்ற பெண் பிள்ளைகள் அனைவரும் பகவானைச் சேவிக்க சென்றுவிட்டனர் என்றும், அதைத் தொடர்ந்து,  பறை கொண்டு பாடப்படும் அத்தகைய பரம்பொருள் எப்படிப்பட்டவன் தெரியுமா? குதிரை வடிவம் கொண்டு வந்த கேசி என்ற அசுரனைப் பிளந்து அழித்தவன்.  அதேபோன்று கொக்கு வடிவம் கொண்டு வந்த பகாசுரனை அவன் வாயைக் கிழித்து கொன்றவன்,  கம்சன் அவையில் ஏவப்பட்ட மல்லர்களான சாணூரனையும், முஷ்டிகனையும் வதம் செய்தவன்.  அப்பேரருளாளனான எம்பெருமான் தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக இருக்கக் கூடியவனும், வரந்தருவார்க்குள் எல்லாம் மிகச் சிறந்த தெய்வமான சர்வேஸ்வரன் ஸ்ரீமன் நாராயணனை நாம் சென்று சேவித்தால்,  அவன் மனம் இரங்கி, நமது குறைகளை ஆராய்ந்து  அருள் புரிவான்.  எப்படியென்றால் நாம் அவர்கள் இருக்கும் இடம் சென்று அருள்பாலிக்கக் காத்திருக்க வேண்டியவர்கள், அதையே பெரும்பேறாகக் கருதியிருக்கும் அவர்கள், நாம் இருக்கும் இடம்தேடி வருகிறார்கள் என்றால், அவர்களின் குறைகள்தான் என்னவோ? என்றெண்ணி மனம் இரங்கி நமக்கு அருள்செய்வான்.  அதனால் சீக்கிரம் எழுந்திரு தோழி என எழுப்புகிறார்கள். 

பாசுர உள்ளுறை

  1. கீழ்வானம் வெள்ளென்று என்று கூறும்பொழுது மேல்வானம் பரமபதத்தில் உள்ள சர்வேஸ்வரனையும், கீழ்வானமான இப்பூமியில் அடியார்கள் வாழ்வதையும் கொண்டு, கீழ்வானம் தூய்மையாக இருந்தால்தானே பரமன்வந்து அமர்வான். கீழ்வானம் வெளுத்தது என்றால்,மோட்ச சிந்தனையைத் தேடும் சீடன் உபாயம் அறியாமல், அகஇருளில் உழலும் இவர்களுக்கு ஆச்சார்ய சம்பந்தத்தினால் சத்வ குணம் தலையெடுப்பதையும், ஞான வெளிச்சம் கிடைப்பதையும் கூறலாம்.
  1. எருமை சிறுவீடு என்ற வரியில், எருமையானது மிக மெதுவாக நகரும்.பசுக்கள் போன்று விரைவாக செல்லாது.  எருமையானது சிறுவீடு செல்வதற்கு முன், சிறு குளம், குட்டை என எல்லாவற்றிலும் விழுந்து பின்னர்ப் போகவேண்டிய இடத்திற்கு செல்லும்.  ஆனால் மிக்குள்ள பிள்ளைகளானவர்கள்  பக்தியோகத்தை அனுசரிக்க தங்களின் தகுதியின்மையை உணர்ந்ததால் சரணாகதி மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்து சீக்கிரமாக செல்லும்.  அதாவது தமோ குணம் மிககவர்கள் ஸம்சார பந்தத்தில் உழன்று பின்னர் தமது இறுதிக் காலத்தில் மோட்சத்திற்குச் செல்வர்.  ஆனால் பசுக்கள் போன்ற சுறுசுறுப்பு மிக்குள்ள பிள்ளைகள் சத்வகுணம் பெற்று சீக்கிரமே மோட்சத்தை அடைகிறார்கள். 
  1. கோதுகலமுடைய என்ற வரியில் கிருஷ்ணனால் மிகவும் விரும்பப்பட்ட பதுமை போன்றவளே என்று கூறுகிறாள் ஆண்டாள். பராசர பட்டர் கிருஷ்ணனுடைய குதூகலமே நம்மாழ்வாராக வடிவெடுத்தது என்று இதற்கு உவமை கூறுகிறார்.அதாவது க்ருஷ்ண த்ருஷ்ணா என்றதும் க்ருஷ்ணனிடத்தில் த்ருஷ்ணை, க்ருஷ்ணனுடைய த்ருஷ்ணை.  அதாவது நம்மாழ்வார் எம்பெருமானிடத்தில் குதுகலம் கொண்டார்.  எம்பெருமானும் தன்னிடத்திலே குதுகலம் கொண்டார் என்பதை க்ருஷ்ண, த்ருஷ்ண என்று உவமையாக கூறுவதைக் கொண்டால், தோழியானவள் க்ருஷ்ணன் மீது ஆசை கொண்டாள்.  க்ருஷ்ணனும் தோழிமீது ஆசை கொண்டான் என்று பொருள் கொள்ளலாம்.
  1. இப்பாசுரத்தில் தேவாதி தேவன் என்று பரமாத்மாவை விளிக்கிறாள் ஆண்டாள்.அதாவது நித்யசூரிகளுக்கெல்லாம் மேலானவர்.  வரந்தருவோர்க்கெல்லாம் மேலானவர் என்ற பொருளில் விளக்குகிறார்.  கீதையில் பரமாத்மா, ”தனஞ்செயனே, என்னைக் காட்டிலும் மேலானது வேறொன்றுமில்லை. நூலிலே மணிக் கோவை போல அண்டங்கள் அனைத்தும் சர்வேஸ்வரன் என்ற நுலான சூத்திரத்தால் என்மீதுதான் கோக்கப்பட்டு இருக்கின்றன”.   எனவே அப்படிப்பட்ட பரமாத்மாவை நாம் பற்றினால் நம் குற்றம் குறைகளைக் கருணையுடன் ஆராய்ந்து பெருங் கருணையுடன் அருளுவான்.  இங்கு ஆராய்தல் என்பது கோபியரின் கர்ம, ஞான, பக்தி யோகங்களை அல்ல.  தாஸ்ய பாவமான பரிபூரண சரணாகதியே ஆகும். 
  1. போவான் போகின்றாரை என்ற வரியில், போவதற்காக போகின்றவர்கள்,அதாவது பரமனைக் காணப் போவதான செயலே போதுமானது.அதுவே இலக்கு.  உபாயமும், உபேயமும் அவனே. இதற்கு பெரியவாச்சான் பிள்ளை, போவான் போகின்றவர்கள், அர்ச்சிராதி மார்க்கம் போலே, அக்ரூராயனம் போலே, திருவேங்கட யாத்திரை போலே போவதையே பிரயோஜனமாகக் கொண்டவர்கள் என்கிறார்.  அதாவது அர்ச்சிராதிகதி என்பது ஸ்ரீவைகுண்டத்திற்கு போவதைப்போலே, அக்ரூராயனம் என்பது கண்ணனைப் பார்க்க ஆயர்பாடிக்கு போவது போலே, திருங்கட யாத்திரை   என்பது  திருமலைக்கு யாத்திரை செல்வது போலே என   வியாக்யானம் அருள்கிறார்.
  1. கீழ்வானம் வெள்ளென்று என்பது சூரிய உதயத்தின்போதுதான் இருக்கும். அதுபோல கலியுகத்தின் தொடக்கத்தில் நம்மாழ்வார் அவதரித்த பின்னர்தான் அடியார்கள் ஞானஒளி பெற்றனர்.அதுவரை அஞ்ஞான ஒளியில் அகங்கார, மமகாரத்துடன் இருந்தனர்.  அதே போன்று புளிய மரத்தடியில் உதித்தவரான நம்மாழ்வார் நீண்டநாள் எழுந்திராமல் இருந்து, மதுரகவியாழ்வாரால் எழுப்பப்பட்டவர்.  அதேபோன்று அனைத்துத் திவ்ய தேசங்களிலும் இவர் மட்டும் அமர்ந்திருக்க, ஏனைய ஆழ்வார்கள் அர்ச்சாவதாரமாக நின்றபடியே சேவை சாதிப்பர். அதனைக் குறிக்கும் விதமாக எழுந்திராய் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் கொள்ளலாம். 

முடிவுரை 

கலியுகமான இக்காலத்தில் சரணாகதி மார்க்கம் ஒன்று மட்டுமே இறைவனை அடையும் வழியாகும்.  இப்பாசுரம் விளக்குவது போல சத்வ குணம் ஓங்கினால் மெய்ஞ்ஞானம் பிறக்கும்.  அஞ்ஞானம் தானாக விலகிச் சென்றுவிடும்.  அஞ்ஞானம் விலகினால் பகவான் அருள் கிடைக்கும்.  இதற்குப் பிராட்டியார் அருள்  வேண்டும்.  அதனால் சேர்ந்து நாம சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.  அப்படி நாம சங்கீர்த்தனம் செய்யச்  செய்ய நமது அகங்கார, மமகாரங்கள் எல்லாம் நம்மைவிட்டுச் செல்லும். இதுவே இப்பாசுரம் உள்ளுறையாக நமக்கு அருளும் அறிவுரையாகும்.  பின்பற்றி உய்வோம்.                              

             எம்பெருமானார் திருவடிகளே சரணம்!!
             வரவரமுநியே நம!!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *