-செண்பக ஜெகதீசன்

ஆக்கமுங் கேடு மதனால் வருதலாற்
காத்தோம்பற் சொல்லின்கண் சோர்வு. (திருக்குறள் -642: சொல்வன்மை) 

புதுக் கவிதையில்… 

நல்வாழ்வும் கெடுதலும்
நாம் சொல்லும்
சொல்லினால் வருவதால்,
சொல்லில்
சோர்வு வராமல் பார்த்திடல்
நலம்தரும்…! 

குறும்பாவில்… 

நல்லதும் கெட்டதும்
நம் சொல்லால் வருவதால்,
சோர்வுவேண்டாம் சொல்லில்…!      

மரபுக் கவிதையில்… 

அரசியல் மற்றும் மனிதவாழ்வில்
-ஆக்கம் கெடுதல் வருவதெல்லாம்
ஒருவர் சொல்லும் சொல்லாலே
-உரைக்கும் சொல்லின் வன்மையாலே,
கருத்தில் இதனைக் கொண்டேதான்
-காத்திட வேண்டும் சொல்லினையே
வருந்திட வைக்கும் சோர்வதுதான்
-வார்த்தையில் வந்து விடாமலேயே…! 

லிமரைக்கூ… 

சொல்லால்வரும் ஆக்கமுடன் கேடு,
கொண்டே இதனைக் கருத்திலே
சொல்லில் சோர்வின்மை நாடு…! 

கிராமிய பாணியில்… 

நல்லதும் கெட்டதும் வருவதெல்லாம்
நாம சொல்லுற சொல்லால,
நாட்டுக்கும் ஊட்டுக்கும்
நல்லசேதி இதுதானே…

அதால
பாத்துக்கோ பாத்துக்கோ
சொல்ல நல்லதா பாத்துக்கோ,
சொல்லுற சொல்லுல
சோர்வு வராம காத்துக்கோ…!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *