Author: admin

  • சித்தர் பாடல்கள் வெளிப்படுத்தும் கல்வியியல் சிந்தனைகள்

    -ச. பிரியா

            கல்வி மனித வாழ்விற்கு இன்றியமையாது வேண்டப்படும் ஒன்றாகும். கல்வி அறிவில்லாத சமுதாயம் என்றும் முன்னேறுவதில்லை இது வரலாறு. கல்வி என்பது வாழ்க்கையில் தோன்றும் அறியாமையை நீக்கி, அறிவைக் கொடுப்பதாகும். அனைவருக்கும் கல்வி என்பது அரசியல் நிர்ணயச்சட்டத்தின்படி அடிப்படைத்தேவைகளில் ஒன்றாகும். இதன்படி கல்வி குறித்து சித்தர்கள் அவர்கள் காலத்திலேயே சிந்தித்து, பல கருத்துக்களை எடுத்துரைத்துள்ளனர் அதனை விளக்குவதாகவே இக்கட்டுரை அமைகிறது.

    கல்வியின் சிறப்புகள்

    கற்கை நன்றே கற்கை நன்றே
        பிச்சைபுகினும் கற்கை நன்றே”     (நறுந்தொகை – 35)

    என்று அதிவீரராம பாண்டியனும்,

    உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
          பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே”      (புறம் – 183)    என்று பாண்டியன் நெடுஞ்செழியனும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து கூறியுள்ளனர். எனவே கல்வி என்பது எல்லாருக்கும் பொதுவானது. எந்தத் தனிப்பட்டவருக்கும் சொந்தமானது அன்று. அதனால்தான் எல்லாரும் கற்க வேண்டும். பிச்சைப்பெரினும் கற்றல் நன்று என்று கூறியுள்ளனர் நம்முன்னோர்கள்.

    கல்வி – உயர்ந்தோர்

         கல்வி அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். முன்னைப் பழங்காலத்தில் எந்தத்தொழில் செய்து வந்தாலும் எக்குடியில் பிறந்திருந்தாலும் எந்தவித தடையும் இன்றி கல்விகற்று வந்தனர். ஆரியரின் வருகைக்குப் பிறகே நிலைமை தலைகீழாக மாறியது எனலாம். நால்வகை வருணப்பாகுபாடுகள் தோன்றியதன் அடிப்படையில் கல்வி என்பது ஒரு சாராருக்கு உரியதாக மாறிப்போனது. இதனை,

         “ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன”      (தொல்.அகத்.26) என்ற தொல்காப்பிய அடிகளின்வழி அறியலாம். இதற்கு உரைகூறும் நச்சினார்க்கினியர்,

      “…அம்மூன்றனுள் ஒதற்பிரிவும் தூதிற் பிரிவும் அந்தணர் முதலிய முவரிடத்தன என்றவாறு. எனவே ஒழிந்த பகைவயின் பிரிவு அரசர்க்கே உரித்தென மேலே கூறுப. உயர்ந்தோரெனக் கூறலின் வேளாளரை ஒழித்தாரென்றுணர்க.” (ப-54)

    எனக் கூறியுள்ளார். இதன்படி நச்சினார்கினியர் உயர்ந்தோர் எனக் கருதுவது அந்தணர், அரசர், வணிகரையே. இம்மூவர் மட்டுமே உயர்கல்வி கற்கவும் வெளிநாடு செல்லவும் தகுதி படைத்தவர்கள். நான்காம் சாதியினருக்கு அவ்வுரிமை கொஞ்சமும் இல்லை எனத்தெரிகிறது.

        நாலாம் சாதியாம் சூத்திரர்கள், உழைக்கும் வர்க்கமாகிய பெரும்பான்மை மக்கள் படிக்கவே கூடாது எனத் தடைபோடப்பட்டது. அப்படி மீறிப் படித்தவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டதாக மனுதர்ம விதி கூறுகிறது. என்பதை,

         “ சூத்திரன் படித்தால் நாவை அறுக்க வேண்டும். படிக்கக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்”. (ப.49)

    என்ற வரிகளின்வழி அறியலாம். ஒருவன் படிக்கக் கூடாது என அறிவுக்கு தடைபோடும் மனுநீதிக்கு எதிராக முழக்கம் இட்டவர்கள் சித்தர்கள் ஆவர்.

    இவர்கள் கூறும் கல்விமுறை ஒழுக்கத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் குறிக்கிறது. ஆனால் சித்தர்களின் காலக்கட்டதில் குருகுலக் கல்விமுறை பயிலப்பட்டதை,

    “மூங்கிலை வெட்டி நார் உரித்துப் பதப்படுத்தி நூல்களைத் தயாரித்தனர். அவை புத்தகம் என்றழைக்கப்பட்டன. அரச குடும்பத்தைச் சார்ந்தவர்களும் அந்தணர்களும் மற்றும் வசதி மிகுந்தவர்களுமே கல்வி கற்றனர். கல்வியும் வேதங்கள் ,சாத்திரங்கள், இதிகாசங்கள், புராணங்கள் முதலானவற்றைக் கற்பிப்பதாகவே அமைந்திருந்தது. நாட்டில் வேத பாடசாலைகள் இருந்தன. குருகுலமுறையில் கல்வி கற்பிக்கப்பட்டது” என்ற இளமதி சானகிராமன் கருத்தால் குருகுலக்கல்வியும் வேதசாத்திரங்கள் பயிலப்பட்டதையும் அறியமுடிகிறது. (ப-211)

           சித்தர்கள் கல்விமுறையானது மக்களின் அறிவை வளர்க்காமல் அறியாமை நிலைக்கு இட்டுச்செல்வதால் அர்த்தமற்றது, பொய்யானது என்று சாடினர். மேலும் பிராமணர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற நியதியைக் கண்டு சீற்றம் கொண்டனர். சித்தர்களின் காலம் 15ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். இக்காலக்கட்டத்தில் நாயக்கர்கள் முதலான வேற்று மன்னர்களின் ஆட்சியில் தமிழகம் சிக்கியது. இக்காலநிலையில் கல்விநிலை குறித்து

          “திருமலைநாயக்கர் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வருகின்றார். இதில் 3000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இலவசமாகச் செய்து தரப்பட்டுள்ளன. இதில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பிராமணர்களே. அவர்களைத் தவிர வேறு எவருமே இல்லை” என்று இராபர்ட் டி நொபிலி குறிப்பிடுகிறார். (ப.54). இவர் கருத்திலிருந்து பிராமணர்கள் தவிர மற்றவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதை அறியமுடிகிறது.

          சித்தர்கள் பிராமணர்கள் தவிர மற்றவர்கள் கல்விபயில மறுக்கப்பட்டதையும் கல்வியாகக் கற்பிக்கப்பட்ட வேதபுராண சாத்திரங்களையும் கடுமையாக விமர்சித்தனர். ஏட்டுக்கல்வியானது பொய்க்கல்வி என்பதை,

          “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கிங் கெய்திடாது” (பாம்.சித்.பா.129)

    என்ற வரியில் ஏட்டுக்கல்வி வாழ்க்கைக்கு உதவாது என்பதை உணர்த்துகிறது. இதனை நாம் நடைமுறையில் நன்கு அறிந்துகொள்ளமுடிகிறது. இன்றைய இளைஞர்களில் பலர் பார்க்கும் பணிக்கும் படித்த படிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்பதை அறியலாம். மேலும்,

      “பொய்யான கல்விகற்றுப் பொருண் மயக்கம் கொள்ளாமல்
        மெய்ஞானக் கல்வி விரும்புவாய் கன்மனமே ”    (இடை.சித்.பா.249)

    என்ற வரிகளில் பகுத்தறிவு கொண்டு எதனையும் ஆராய்ந்து கூறும் மெய்க்கல்வியை கற்றால் மட்டுமே வாழ்வி ஈடேற்றம் கிடைக்கும் என்று இடைக்காடர் அறிவுறுத்துகின்றார்.

            “ சதுர்வேதம் அறுவகைச் சாத்திரம் பல
             தந்திரம் புராணங்களைச் சாற்று மாகமம்
            விதம்வித மானவான வேறு நூல்களும்
       வீணாண நூல்களே யென்றாடு பாம்பே”   (பாம்.சித்.பா.54)

     என்ற பாடலில் பாம்பாட்டிச்சித்தர் நால்வகை வேதங்கள் ஆறுவகைச் சாத்திரங்கள், புராணங்கள், தந்திரம் ஆகமம் ஆகிய அனைத்தும் வீணாண நூல்கள் என்று குறிப்பிடுகின்றார். இவையாவும் பிதற்றல்களே என்று சிவவாக்கியரும் குறிப்பிடுகிறார், இதனை,

           “ நட்டதாவரங்களும் நவின்ற சாத்திரங்களும்
                 இட்டமான ஒமகுண்ட மிசைந்த நாலுவேதமும்
              கட்டி வைத்த புத்தகம் கடும் பிதற்றி தற்கெலாம்
              பெட்டதாய் முடிந்தே பிராணயான றியயோ”   (சிவ.பா.184)

    என்ற பாடலின்வழி மெய்ஞானமாம் இறைவனின் அருளை அடைந்தவர்களுக்கு மற்ற அனைத்தும் பிதற்றல்கள் என்று சாடுகின்றார்.

           சித்தர்கள் மெய்ஞானமான இறைஞானம் பெற்றால் மற்றவை எல்லாம் தேவையில்லாதது என்கின்றனர். இதனை சுவாமி விவேகானந்தரும்,

         “கல்வி என்பது இயற்கையாக மனிதனுள்ளே புதைந்துள்ள தெய்வீகமான பூரணத்தை வெளிக் கொணர்வதாகும்.” (ப-1).

           எனவே ,பொய்யான புராண சாத்திரங்கள் தேவையில்லாதது. இயற்கையில் உள்ள தெய்வீகத்தை வெளிக்கொணர்வதே அடிப்படைத்தேவை என்று சித்தர்கள் கூறுகின்றனர்.

            தமிழகத்தில் சித்தர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். உலக வாழ்வு பற்றியும் உலகப்பொருள்கள் பற்றியும் மிகுதியாகச் சிந்தித்தவர்கள். இறுதியில் அனைத்துமே மாயை என்ற முடிவிற்கு வந்தவர்கள். நாம் சித்தர்கள் வரிசையில் முதலில் சொல்லக்கூடியவர் திருமூலர்தான். திருமந்திரத்தில் கல்வி, கேள்வி, கல்லாமை என்னும் முத்தலைப்பில் முப்பது பாடல்களில் கல்விகுறித்துக் குறிப்பிடுகிறார்.,

       தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படும் கல்வி, கேள்வி, கல்லாமைக்கும் திருமூலர் சொல்வதற்கும் வேறுபாடுகள் சற்று மிகுதி. அவர்கள் எல்லாம் லோகாயதத்தை (பொருள் முதல்வாதம்) சொன்னார்கள் என்றால், திருமூலர் மெய்ஞ்ஞானத்தைச் (கருத்தியல் வாதம்) சொல்கிறார்.” என்று மு.அண்ணாமலை குறிப்பிடுகிறார். (தமிழ் நாட்டில் கல்வி அன்றும் இன்றும் ப.130)

    கல்வியே தக்கதுணை

    மனிதனுக்குக் கடைசிவரை தக்க துணையாக இருப்பது கல்வி மட்டுமே, மற்ற பொன், பொருள், உறவுகள் அனைத்தும் துணையாவதில்லை. என்பதை,

        “துணையது வாய்வருந் தூயநற் சோதி
            துணையது வாய்வருந் தூயநற் சொல்லாம்
            துணையது வாய்வருந் தூயநற் சந்தம்
            துணையது வாய்வருந் தூயநற் கல்வியே”      (திருமந். 294)

    என்ற பாடலில் திருமூலர் மனிதனுக்கு கடைசியில் துணையாக வருவது தேடிய புகழ், சொன்னசொல், கற்றகல்வி ஆகியவை மட்டுமே என்கிறார்.

      “ கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு” என்று அவ்வையாரும்,

      “யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்
       சாந்துணையும் கல்லாத வாறு”   (குறள்- 394)

     என்று கற்றவர்களுக்கு எல்லா இடங்களிலும் கல்வியே துணையாக வரும் என்ற கருத்தும் இவண் ஒப்புநோக்கத் தக்கதாகும்.

    அனுபவஅறிவு – பட்டறிவு

         கல்வியில் ஒன்று அனுபவக்கல்வி ஆகும். வாழ்க்கையில் உணர்ந்த பட்டறிவே அனுபவ அறிவாகும். இந்த அறிவு ஒருவனை எந்தச் சூழலிலும் கைவிடாதது என்கிறார்.

             “ பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின்
              முற்றது எல்லா முதல்வன் அருள்பெறின்
              கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
              கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே ” (திரு- 298)

    என்ற திருமந்திரவரிகள் பட்டறிவு பெற்றவர்கள் பேரின்பம் பெற்றவர்கள் என்கிறது. மேலும்,

            “ கணக்கறிந் தார்க்கன்றிக் காணவொ ண்ணாது
             கணக்கறிந் தார்க்கன்றிக் கைகூடாக் காட்சி
            கணக்கறிந் துண்மையைக் கண்ட நிற்கும்
            கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே”           (திரு.316)

    என்ற பாடலில் அனுபவக்கல்வியாம் மெய்ஞ்ஞானக் கல்வியே இறைவனை அடைய உதவும். மெய்ஞ்ஞானமே உண்மையான கல்வி என்று கூறுகிறார் திருமூலர்.

        எனவே சித்தர்கள் கூறும் கல்வி அனுபவக்கல்வி ஆகும். இது உண்மைப் பொருளை உணர்ந்தறியும் மெய்ஞ்ஞானக் கல்வியை குறிக்கிறது. உலகியல் அறிவைத் தரும் பள்ளிக்கல்வியையும் வேத புராண, சாத்திரக் கல்வியையும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

         சித்தர்களின் கல்வி குறித்த சாடல்களும் ஏசல்களும் நவீன உலகிற்கும் பொருந்தும். இன்றைய கவிஞர்கள் கல்விமுறை குறித்து,

            “ புத்தகங்களே
             சமர்த்தாய் இருங்கள்
             குழந்தைகளைக்
             கிழித்து விடாதீர்கள்”                  (பித்தன் ப.80)

    என்றும்

      “ குழந்தைகளே பாடப்புத்தகங்களாக
                இருக்கிறார்கள்
               அவர்கள் கையில் ஏன்
               காகிதக்குப்பைகளைத் தருகிறார்கள்” (பித்தன் ப-80)

     என்ற கவிதையில் அப்துல் ரகுமான் புத்தகங்களைக் காகிதக்குப்பைகள் என்று கூறுகின்றார். எதிர்கால வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொள்ள ஏட்டுக்கல்வி வழிகாட்டவில்லை என்பதை கூறுவதில் சித்தர்களின் சாடல்முறையை நவீன கவிஞர்களும் பின்பற்றுகின்றனர்.

    முடிவுரை

    • கல்வியில் எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் மெய்மையை விளக்கும் கல்வியே மெய்ஞ்ஞானமாகும்.
    • சித்தர்கள் மெய்ம்மையியல் விஞ்ஞானிகளாகவும் அறிவுத்துறை விஞ்ஞானிகளாகவும் செயல்பட்டிருந்தார்கள் என்பதை அறியமுடிகின்றது.
    • திருமூலர் அனுபவக்கல்வியாம் மெய்மைக்கல்வியை வலியுறுத்துகிறார். மற்ற சித்தர்கள் வேதபுராணக் கல்வியாம் ஏட்டுக்கல்வியைக் கடுமையாகச் சாடியுள்ளனர். ஏனெனில் புராணக்கல்வி என்பது ஒருசாராருக்கு மட்டுமே உரிய கல்வியாகவும் கற்பனைக்கல்வியாகவும் அமைகிறது.

    துணைநின்ற நூல்கள்

    1. சி.எஸ்.முருகேசன், சித்தர் பாடல்கள், (பெரியஞானக்கோவை) சங்கர் பதிப்பகம், சென்னை-49, 2012.
    2. பரிமேலழகர் (உ.ஆ), திருக்குறள், சாரதா பதிப்பகம், சென்னை-14, 2004.
    3. தொல்காப்பியம், பொருளதிகாரம், சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை-18, 2001.
    4. அப்துல் ரகுமான், பித்தன், நேசனல் பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2003.
    5. மு.அண்ணாமலை, தமிழ்நாட்டில் கல்வி அன்றும் இன்றும் ,அம்மன் புத்தகக் குழுமம், சென்னை- 5, 2005.
    6. இளமதி சானகிராமன், சித்தர் இலக்கியம், கோகுலம், புதுச்சேரி- 8.2007.
    7. அவ்வை.சு.துரைசாமிப்பிள்ளை(உ.ஆ), புறநானூறு, கழகவெளியிடு, சென்னை-18,ம.ப.2007.
    8. கி.நாகராசன், மலரும் இந்தியச்சமுதாயத்தில் கல்வி, இராம் பதிப்பகம், சென்னை-93,2009.

     

     

    Share
  • எங்கே போகிறோம் ?

    கவிஞர் ஜவஹர்லால்

    சாதிக்குச் சங்கங்கள் உண்டே யன்றிச்
    சாதிக்கச் சங்கங்கள் இல்லை; வீணே
    மோதிக்கச் சங்கங்கள் உண்டே யன்றி
    முனைப்பிக்கச் சங்கங்கள் இல்லை; உள்ளம்
    பேதிக்கச் சங்கங்கள் உண்டே யன்றிப்
    பிணைப்பிக்கச் சங்கங்கள் இல்லை; இங்கே
    ஏதுக்குச் சங்கங்கள் ? ஆய்ந்து பார்த்தால்
    எங்கேநாம் போகின்றோம் ? தெரிய வில்லை.

    மனிதாபி மானத்தைக் காண வில்லை;
    மனத்தினிலே நல்லெண்ணம் பூப்ப தில்லை;
    இனிதான சொற்களிங்கு வீழ்வ தில்லை;
    இடர்துடைக்கக் கைகளிங்கு நீள்வ தில்லை;
    கனிவான நெஞ்சங்கள் தோண வில்லை;
    கண்களிலே தூயசுடர் ஒளிர்வ தில்லை;
    இனியஉள்ளம் நல்லசெயல் எங்கு மில்லை;
    எங்கேநாம் போகின்றோம் ? தெரிய வில்லை.

    பள்ளங்கள் மேடாக வில்லை; இங்கே
    பாவங்கள் குறைவாக வில்லை; நல்ல
    உள்ளங்கள் உயர்வாக வில்லை; நாட்டின்
    ஊனங்கள் சீராக வில்லை; நெஞ்சக்
    கள்ளங்கள் அழிவாக வில்லை; செய்யும்
    கபடங்கள் மறைவாக வில்லை; எங்கும்
    இல்லங்கள் வளமாக வில்லை; நாட்டில்
    எங்கேநாம் போகின்றோம் ? தெரிய வில்லை.

    நதிநீரைப் பங்குதர மனமே இல்லை;
    நாட்டினிலே ஒருமைப்பாட் டுணர்வே இல்லை;
    விதியைத்தான் நம்புவதைத் தவிர வேறு
    வினைவலியை நம்புகின்ற நெஞ்சே இல்லை;
    கதிமாற்றும் தேர்தலிலே செம்மை யாகக்
    கடமையாற்றி நிலைமாற்றும் துணிவே இல்லை;
    நிதிசேர்க்கும் தவறுகளோ குறைய வில்லை;
    நாமெங்கே போகின்றோம் ? தெரிய வில்லை.
    மதுரை வானொலி—18-02-96

    Share
  • சிலப்பதிகாரத்தில் சமூக அவலம்

    -முனைவர் சு.இரமேஷ்

    அறிமுகம்

    பன்முகத்தன்மை கொண்ட நவீனத்துவத்துடன் விளங்கும் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். பல்வேறுபட்ட குடிமாந்தர்களின் வாழ்க்கை முறைமைகளைப் பிரதிபலிப்பது மட்டுமல்லாது பண்பாட்டுக்கூறுகளின் வடிவங்களையும் தன்னகத்தே பொதித்துள்ள கருவூலமாகத் திகழ்கிறது. அத்தகைய காப்பியத்தை எழுதிய இளங்கோ அரச மரபில் வந்தவர் என்பதோடு துறவு மேற்கொண்டவர் என்பதால் குறிப்பிடத்தக்க அம்சத்தை இக்காப்பியம் பெற்றிருக்கிறது. அன்றைய நிலையிலான அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றின் நிலையிலிருந்து உணர்த்தி நீதி, அறம், ஊழ்வினை, துறவு போன்றவற்றை போதிக்கின்ற அதேநேரத்தில்  சமூக அநீதி, கொடுமைகளும் நிகழ்ந்தேறியிருப்பது பதிவாகியிருப்பதை  இக்கட்டுரை ஆராய்கிறது. 

    பொன்தொழிலாளர்கள் படுகொலை

    கோவலன் கொலைசெய்யப்பட்ட நாளிலிருந்து பாண்டிய நாட்டில் மழை வளம்குன்றி பூமி வறண்டு பஞ்சம் பசி தலைதூக்கியது. வெக்கை நோய்களும் பரவின. இவற்றைக் கண்ட கொற்கையிலிருந்த வெற்றிவேற்செழியன் பாண்டிய மன்னனானதும் நாட்டின் இந்த நிலைமைக்குக் காரணம் கண்ணகியின் கடுங்கோபம்தான் எனக்கருதி ஆயிரம் பொற்கொல்லர்களை பலியிட்டுப் பூசை செய்தான். அதன்பிறகு நல்லமழை பெய்து நோய்களும் நீங்கின. மக்கள் நலம் பெற்றனர் என்பதை, இளங்கோ,

    ”அன்று தொட்டு பாண்டிய நாடு மழைவறம்
    கூர்ந்து வறுமை எய்தி, வெப்பு நோயும்|குருவும் தொடர, கொற்கையில் இருந்த
    வெற்றி வேற் செழியன், நங்கைக்கு
    பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று,
    நாடு மலிய மழை பெய்து நோயும் துன்பமும்
    நீங்கியது”             (உரைபெறு கட்டுரை)

    என்று குறிப்பிடுகின்றார். எவ்வித விசாரணையும் இல்லாமல் கோவலன் கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து பாண்டிய நாடு வளம் பெறாமைக்குக் காரணம் கண்ணகியின் கடுங்கோபமேயாகும் என்று இதற்குப் பரிகாரமாக பொன்வேலை செய்யும் ஆயிரம் தொழிலாளர்களை (பொற்கொல்லர்களை) பலி என்ற பெயரில் படுகொலை செய்தது இதயத்தை உலுக்குகின்ற கொடுமையாக இருக்கிறது. ஒரு மன்னனுக்கு இருக்கக்கூடாத பெரும் மூடநம்பிக்கையுடன் தான் தோன்றித்தனமாக செயல்படும் ஹிட்லரிசத்தின் முன்மாதிரியாகவும் பார்க்கமுடிகிறது. இத்தகைய கொடுமை இவனோடு முடியாமல் பரவலாக்கல் என்னும் நோக்கத்தில் கொங்குநாட்டின் இளவரசர் இளங்கோசர் என்பானும் இலங்கைத் தீவின் கயவாகு மன்னனும் பலியிட்டு பூசைகள் செய்திருக்கின்றனர் என்பதை உரைபெறு கட்டுரையின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. நீதிகேட்டுப் போராடிய கண்ணகி, தெய்வமாகிப் உயிர்பலி கேட்பதாகக் கருதி  பலியிட்டிருப்பது வேத ஆகம விதிப்படி பார்ப்பனிய முறையில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பது திண்ணமாகிறது. மனித பலியிடுதலை ‘நரபலி’ என்பர். இவ்வழக்கமானது தொன்மைக்காலத்திலிருந்தே வருகிறது. பலியிடுதல் பற்றிய சடங்கு முறையை யசூர் வேதத்தில் (பலிச்சடங்கு வேதம்) கூறப்படுகிறது. “யசூர் வேதத்தில் புனித அதிகாரத்தின் (பிராமணர்கள்) ஆயுதம் பலிகள் ஆகும்” என்பதை எடுத்துரைக்கிறார் எஸ்.ஜி.சர்தேசாய் (2012:184).   “கடவுளின் அருளைப்பெருவதுதான் சடங்குகளின் நோக்கம்” என்பதை எடுத்துரைக்கிறார் வி.புரோதோவ் (1988:60). பலி அக்னியில் பிறந்தது தெய்வ சோதியில் ஒன்றான அக்னி பலியிடுகிறவனின் பாவத்தை பட்சித்துப் போகும் அக்னியின் புண்ணியத்தால் பரலோகத்தில் சுடராவான்” என்று சதபத பிராமணம் குறிப்பிடுவதாக எடுத்துரைக்கிறார் தே.ஞானசேகரன்(2000:93). ஆகவே பலியிடுதல் தமிழ்ப்பண்பாட்டின் அடையாளமாகக் கருதமுடியாது. 

    மாதவிக்குக் கோவலன் இழைத்த கொடுமை

    மாதவி, முறைப்படியான ஆடல்கலையை நிகழ்த்தியமைக்குச் சோழ மன்னன் பச்சை மாலையையும் தலைக்கோல் பட்டமும் அதனோடு ஆயிரத்தெட்டு பொன் கழஞ்சுமாலையும் பரிசாகத் தந்தான். அம்மாலையை விலைகொடுத்து வாங்குபவர் மாதவிக்கு ஏற்ற கணவனாகலாம் என நகரின் இளைஞர்கள் கூடுமிடத்தில் ஒரு கூனிப்பெண் கூறியதைக்கேட்ட கோவலன் அதற்குண்டான விலையைக் கொடுத்து கூனியின் பின்னால் மாதவியுடன் சென்றுவிட்டான் என்பதை, 

    மாமலர் நெடுங்கண் மாதவி மாலை
    கோவலன் வாங்கிக் கூனி தன்னோடு
    மணமனை புக்கு மாதவி தன்னோடு   (அரங்கேற்று காதை 170-172) 

    என்று இளங்கோ குறிப்பிடுகிறார். ஆயிரத்தெட்டு பொன்கழஞ்சு மாலையை விலை கொடுத்து வாங்கும் பணபலமும் மனவலிமையும் பெற்றிருந்த கோவலன், அன்பு மிக்க குற்றமற்ற கண்ணகியை மணந்து சிலகாலம் மட்டுமே ஆகியிருந்தது. சந்தையில் ஒருபொருளை ஏலம் எடுப்பதுபோல் ஏதுமறியாத ஆடல் நங்கையாகிய மாதவியை போகப்பொருளாக எண்ணித் தேவைக்கேற்பப் பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறிந்துவிடலாம் என்ற யதேச்சதிகார எண்ணத்திலேயே கோவலன் மாதவியை விலை கொடுத்து வாங்கியிருக்கலாமென்று கருதமுடிகிறது. மேலும், மாதவி கணிகையர் குலம் என்பதை அறிந்து கோவலன் விலைமாதர் நோக்கில் இதை செய்திருக்கக்கூடும் என்பது புலனாகிறது.

    மாதவி ஒரு பெண்குழந்தையை பெற்றெடுத்தப் பிறகு தாயையும் பிள்ளையையும் பரிதவிக்க விட்டுவிட்டு கண்ணகியிடம், “வஞ்சகமும் பொய்யும் நிறைந்த ஒருத்தியோடு உறவாடி நற்குடியில் பிறந்த பெரியோர்கள் உருவாக்கி வைத்த செல்வத்தைத் தொலைத்து விட்டு நிற்கிறேன்” என்பதை

    சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி
    குலம் தருவான் பொருள் குன்றம் தொலைந்த
    இலம்பாடு நாணுத் தரும் எனக்கு என்ன…  (கனாத்திறம் உரைத்த காதை- 69-71)

    என்று கோவலன் கூறுகிறான். இது தன் தவற்றை, தனது ஒழுக்கமின்மையை,  தன்னால் உண்டான குடும்பச்சிதைவை, மாதவியை விலைகொடுத்தேனும் வாங்கி நுகர்ந்து மீண்டும் கண்ணகியிடம் வந்துவிடலாம் என்ற இழிவான போக்கை மறைப்பதற்கான முயற்சியில் கண்ணகியைச் சாந்தப்படுத்திட ‘வஞ்சகமும் பொய்யும் நிறைந்த ஒருத்தியோடு’ என்று மாதவியைப் பழித்துரைக்கும் அவனின் கூற்று  மாதவிக்கு இழைத்த அநீதியைக்காட்டுகிறது.

    பிறன்மனை நோக்குகின்றவனைக் கொல்லும் சதுக்கப்பூதம் தன்மனைக்கு துரோகம் இழைக்கும் நயவஞ்சகரைத் தண்டிக்காமல் விட்டிருப்பது அரசர், அந்தணர், அடுத்து வணிகரையும் பூதம் தண்டிக்காமல் இருந்திருப்பதை இது காட்டுகிறது. மாதவியை தவறானவள் என்று கூறிய கோவலனின் நாக்கு மாதவியின் கடிதத்தைக் கோசிகமாணியிடம் வாங்கிப் படித்த பின்பு,

    தன்தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி
    என்தீது என்றே எய்தியது உணர்ந்து ஆங்கு (புறஞ்சேரியிருத்த காதை 94-95)

    என்ற பாடல் வரிகள் மூலம் ‘மாதவி குற்றமற்றவள் எல்லாம் என் தவறே’ என்று கோவலன் மனம் பிறழ்ந்து பேசியது மாதவிக்கு இழைத்த கொடுமை மட்டுமல்லாமல் இழந்த செல்வத்தைக் கண்ணகியின் வாயிலாகப் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்துடன் தன்வழிக்கு நடத்த முற்பட்டிருக்கிறான் என்பது தெளிவாகிறது. 

    ஊழ் எனும் பெயரில் கொடுமை    

    கண்ணகியின் கதை முழுதும் சாத்தனார் கூறக் கேட்ட இளங்கோவடிகள், ஊழ்வினையை முன்வைத்தே எழுதப்படுவதை,

    அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும்
    உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
    ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதுஉம்
    சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
    சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
    நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் (பதிகம் 55-60)  

    எனக் குறிப்பிடுகிறார். சாத்தனார் கூறிய கதையை வைத்துக்கொண்டு மனித எதார்த்த அல்லது திட்டமிட்டு நடத்திய தவறுகளுக்கெல்லாம் ஊழ்தான் என்பதை அவ்வப்போது நினைவுப்படுத்திக் கொண்டிருக்கிறார். புகார் நகரத்தின் வணிகனான கோவலன் கண்ணகியைப் பிரிந்து நாட்டிய நங்கை மாதவியுடன் சில காலம் வாழ்ந்து துன்பப்பட்டுக் கண்ணகியுடன் மதுரைக்குச் சென்று கொலையுண்டதும் அதனால் கண்ணகி மதுரையை அழித்தது மட்டுமல்லாமல் பாண்டிய மன்னனும் கோப்பெருந்தேவியும் உயிர்நீத்தனர். இவை அனைத்திற்கும் அவரவர் செய்த ‘ஊழ்வினையைக்’ காரணம் காட்டுகிறார். 

    கனாத்திறம் உரைத்த காதையில், தேவந்தி தன் கணவன் பாசண்டச்சாத்தனால்  கைவிடப்பட்ட நிலையில் கணவனிடம் மீண்டும்  சேர்வதற்குக் கோயில் கோயிலாக வேண்டி அலைகிறாள். அந்த வேளையில் கண்ணகியைச் சந்தித்து “நீ உன் கணவனால் வெறுத்து ஒதுக்கப்பட்டவள் அல்ல, பின் ஏன் பிரிய நேரிட்டது என்றால், முற்பிறப்பில் உன் கணவனுக்காக செய்ய வேண்டிய நோன்பினை செய்யத் தவறிவிட்டாய். அது நீங்கிடவேண்டுமானால் பூம்புகார் நகரிலே இருக்கும் சோம குண்டம், சூரிய குண்டம் என்னும் இரு பொய்கையில் மூழ்கிப் பின்பு மன்மதக்கடவுளை வணங்கினால் இம்மையிலும் மறுமையிலும் உன் கணவனைப் பிரியாமல் வாழலாம்” என்று கூறினாள் என்பதைக் கூறுகிறார். முற்பிறப்பில் கண்ணகி நோன்பு மேற்கொள்ளவில்லை என்பதால் இப்பிறவியில் கணவனைப் பிரிய நேர்ந்தது என்னும் கருத்தானது நோன்பு என்னும் பெயரில் குடும்பம், வீடு என்ற நிலையில் பெண்களை மரபு மீறாமல் புற உலகைப்பற்றி அறியச்செய்யாமல் அடக்குமுறை ஏவப்பட்டிருக்கிறது என்பது புலனாகிறது. 

    மதிமயக்கத்தில் கோப்பெருந்தேவியின் பின்னால் ஓடிய மன்னன் பொற்கொல்லனின் பொய்க்குற்றத்தை ஆராயாமல் போகிற போக்கில்  ‘கொன்று வருக’ என்று கூறியது முன்செய்த தீவினை பயன்முற்றி மூளப்போகிற நேரம் வந்தது என்பதை, 

    வினைவிளை காலம் ஆதலின் யாவதும்
    சினை அலர் வேம்பன் தேரான் ஆகி
    ஊர் காப்பாளரைக் கூவி ஈங்குஎன
    தாழ் பூங்கோதை தன்கால் சிலம்பு
    கன்றிய கள்வன் கையது ஆகின்
    கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்குஎன (கொலைக்களக் காதை 148-151)

    இளங்கோ கூறுகிறார்.

    கோவலன் வெட்டுண்டு கிடக்கும் பொழுது அநாதையாகிய கண்ணகி அழுது புரண்டு இத்தகைய பெரும் துன்பத்தை உண்டாக்கிய அரசன் இவ்வாறு செய்திட காரணம் தெரியாமல் தவிக்கும் எனக்கு நான் செய்த தீவினைதான் என்ன? என்பதை யாராவது சொல்ல மாட்டார்களா? என்று அழுது புலம்புவதை,

    மன்னுறு துயர்செய்த மறவினை அறியாதேற்கு
    என்னுறு வினைகாண் ஆ! இதுஎன உரையாரோ
    பார்மிகு பழிதூற்ற பாண்டியன் தவறிழைப்ப
    ஈர்வது ஓர்வினை காண் ஆ! இதுயென உரையாரோ
    கண்பொழி புனல்சோரும் கடுவினை உடையேன்முன் (ஊர்சூழ்வரி 41-47)

    எனக் குறிப்பிடுகிறார்.

    கட்டுரைக்காதையில் (155-170) கண்ணகி முன்பாக தோன்றிய மதுராபதித் தெய்வம் பாண்டியனும் கோவலனும் தவறு செய்யாதவர்கள். ஆனாலும், முன்செய்த தீவினை காரணமாக பழி ஒன்று உண்டு கேள் என்று கூறலானது. “சங்கமன் என்னும் வணிகன் சிங்கபுரத்துக் கடை வீதியில் தான் கொண்டு வந்திருந்த அணிமணிகளை விற்றுக்கொண்டிருந்த போது அப்பிறப்பில் பரதன் என்னும் பெயருடன் இருந்த உன் கணவன் கோவலன் அவனை அரசனிடம் கொண்டு சென்று இவன் பகை நாட்டு ஒற்றன் எனக் கூறி கொலை செய்தான். கணவனை கொன்ற செய்தியைக் கேள்வியுற்ற நீலி பதறித்துடித்து வீதியில் அழுதுபுரண்டு இது அரச நீதியோ எனக்கேட்டு வேதனையுடன் ஒரு மலை மீது ஏறி நின்று உயிர் துறக்கும்முன் எனக்கு இத்தகைய நிலைமையைச் செய்தவர்கள் யாரானாலும் நான் அடைந்த இத்துன்பத்தை அடைந்து மடிவார்கள்” எனக்கூறி உயிரை மாய்த்துக்கொண்டாள். இதுவரைப் பட்ட துன்பத்திற்கெல்லாம் காரணம் இதுவே. நான் சொல்ல வந்த உண்மைப்பொருளும் இதுவே  என்று கூறியதாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

    இவ்வாறு நடப்பதற்கெல்லாம் காரணம் கோவலன் மற்றும் பாண்டியமன்னன்  செய்த தீவினைதான் எனக்கூறும் இளங்கோ, பாண்டிமா தேவியின் இறப்பு, கோவலனின் தந்தை, கண்ணகியின் தந்தை ஆகிய இருவரும் துறவு கொண்டது, கோவலன் தாயும் கண்ணகியின் தாயும் இறந்து போனது, மாதரி தீயிட்டுத் தற்கொலை செய்து கொண்டது, வழித்துணையாக வந்த கவுந்தியடிகள் நோன்பிருந்து இறந்தது, மாதவியும் மணிமேகலையும் துறவு கொண்டது, கோயிலில் ஆயிரம் பொற்கொல்லத் தொழிலாளிகள்  பலியானது இவைகளுக்கெல்லாம் என்ன முன்வினை காரணமாக இருக்கிறது என்று கூறவில்லை என்பது நோக்கத்தக்கது. 

    திருட்டு வழக்கில் மன்னன் இழைத்த அநீதி 

    நாடக நங்கையர் ஆடிய ஆட்டத்திலும் பாடிய பாட்டினிலும் தன்னை மறந்து லயித்திருந்த பாண்டிய மன்னனைக் கண்ட கோப்பெருந்தேவி காணப்பொறுக்காதவளாகி மன்னனுடன் ஊடல் கொண்டு அதை வெளிக்காட்டாமல் தனக்குத் தலைவலி வந்ததென்று பொய் சொல்லி அரங்கை விட்டு வெளியேறி அந்தப்புரம் நோக்கி சென்றாள். இதையறிந்த மன்னனும் சமாதானம் செய்ய அந்தப்புரம் நோக்கி விரைந்தான். அந்த நேரத்தில் மன்னரின் காலைப்பிடித்து வணங்கி அரசியின் காற்சிலம்பைத் திருடிய கள்வன் என்னுடைய வீட்டருகில் இருக்கிறான் என்று பொற்கொல்லன் கூறியதைக்கேட்ட மன்னன்,

    தாழ் பூங்கோதை தன்கால் சிலம்பு
    கன்றிய கள்வன் கையது ஆகின்
    கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்கு (கொலைக்களக் காதை 151-153) 

    ‘கள்வனைக் கொன்று சிலம்பைக் கொண்டுவா’ என்று உத்தரவிட்டான். ஆனால், இவ்வாறு கூறும் பொற்கொல்லனின் பேச்சைக்கேட்ட மன்னன் குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை ஆராயாமலும்  குற்றவாளியிடம் விசாரணை நடத்தாமலும்  கொலை செய்ய ஆணையிட்டது அரசனென்ற முறையில் நீதி தவறியிருப்பதைக் காட்டுகிறது. திருவள்ளுவர் செங்கோன்மை அதிகாரத்தில்,

    ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
    தேர்ந்துசெய் வஃதே முறை. (குறள்.541)

    என்றவழி, தன் குடிமக்கள் ஏதேனும் குற்றம் இழைத்தால் குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து ஒரு பக்கம் சாராது நடுவுநிலைமையுடன் உரிய தண்டனை வழங்குவதே முறையாகும் என்று கூறுகிறார்.

    கட்டுரைக்காதையில் கணவனை இழந்த நிலையில் கோபமும் ஆவேசமும் கொண்டிருந்த கண்ணகியின் முன்பாக மதுராபதித் தெய்வம் தோன்றி பாண்டிய மன்னன் குற்றமற்றவன் என்பதற்குச் சான்றாக ஒரு கதை கூறியது. “வார்த்திகன் மகன் தட்சிணாமூர்த்தி என்னும் அந்தணச்சிறுவன் பராசரனிடம் அணிமணிகளைப் பரிசாகப் பெற்று வருகிறான். அணிமணிகளோடு அவன் இருப்பதைக் கண்ட காவலர்கள், பாண்டிய மன்னனின் ஆபரணங்களை வார்த்திகன் திருடிவிட்டதாகக்கூறி அவனைக் கொடுஞ்சிறையில் அடைத்தனர். இதைக்கேள்வியுற்ற அவனது மனைவி கார்த்திகை அழுதுபுரண்டு வீதியில் புலம்பி அழுதாள். இந்தக்கொடுமையை தாங்காமல் துர்க்கை, ஐயைக்கோயில்களின் கதவுகள் தாமாக மூடிக்கொண்டன. இதைக்கேள்வியுற்ற பாண்டிய மன்னன் தீர விசாரித்ததில் வார்த்திகன் மீது தவறு இல்லாததை உணர்ந்து, 

    நீர்த்தன்று இது என நெடுமொழி கூறி
    அறியா மாக்களின் முறை நிலைத் திரிந்தவென்
    இறைமுறை பிழைத்தது  பொறுத்தல் நும்கடன் என  (115-117) 

    என்று கூறினான். ஆராயும் அறிவற்ற காவல் மக்களால் என்னுடைய அரச நீதி கெட்டுவிட்டது. என் தவறு பொறுத்தருள வேண்டும் தாயே! என்று கூறி நீர்வளம் மிக்க திருத்தங்கால் என்னும் ஊரையும் செல்வம் கொழிக்கும் வயலூரையும் பரிசாகத் தந்ததோடு வேந்தனானவன் நிலத்தில் விழுந்து வணங்குதல் என்ற மரபு இல்லை என்றாலும் வார்த்திகன் முன்பாக வீழ்ந்து வணங்கினான் என்ற கதையை கண்ணகியிடம் சொன்னது. ஆனாலும், திருட்டு வழக்கில் கோவலனுக்கு அநீதியும் வார்த்திகனுக்கு சன்மானமும் கொடுக்கப்பட்டிருப்பது அரச அநீதியாகும். கோவலன் வணிகன் என்பதாலும் வார்த்திகன் அந்தணன் என்பதாலும் அரச நீதி மாறுபடுவதைச் சிலம்பில் காணமுடிகிறது. 

    பூதங்கள் இழைத்த அநீதி 

    இந்திரவிழவூரெடுத்த காதையில் பூம்புகார் நகரின் சிறப்பைப்பற்றிக் குறிப்பிடுகையில் பொதுமக்கள் தவறு செய்கின்றபோது குறிப்பாகத் தவநெறியிலிருந்து தவறு செய்கின்றவர்களையும் மறைவாகத் தவறுசெய்கின்ற இழிந்த குணமுடைய பெண்களும் மன்னருக்கு துரோகம் இழைக்கும் அமைச்சர்களும் பொய்சாட்சி சொல்பவர்களும் புறங்கூறுபவர்களும், பிறன்மனை நோக்குபவர்களும் என் பாசக்கயிறுக்கு பலியாவார்கள் என்று நான்கு காத தூரம் கேட்கும்படி கொடிய குரலெழுப்பி கூவும். தவறு செய்பவர்களை அடித்துக்கொன்று தின்னும் சதுக்கப்பூதம் பூம்புகார் நகரில் இருந்தது. ஆனால், அரசன் செங்கோல் தவறினாலும் வழக்குரை மன்றத்தில் தீர்ப்புரைக்கும் நீதிபதி நடுவுநிலை மாறி ஒருபக்கமாக தீர்ப்புக்கூறினாலும் ஆங்கே தவறு நடந்ததை வாய்பேசாமல் அழுது வடிக்கும், கண்ணீர்க்குறிப்பால் உணர்த்தும் பாவைபூதம் மன்றமும் இருந்தது. பொதுமக்கள் தவறு இழைத்தால் சதுக்கப்பூதம் கொன்று தின்னும். ஆனால், மன்னனோ நீதிபதிகளோ தவறு செய்தால் பாவை பூதம் எதிர்த்துப்பேசாமல் தண்டிக்காமல் அழுதுபுலம்புவது என்பது பொதுமக்களுக்கு ஒரு நீதியும், அரசர், அந்தணர் போன்றோருக்கு மற்றொரு நீதியும் பூதங்களின் வடிவில்  வழங்கப்பட்டிருப்பது சிலம்பில் பதிவாகியிருக்கிறது. 

    முடிவு 

    *     பொய் சொன்ன குற்றத்திற்கு பொற்கொல்லர்களுக்கு மரண தண்டனை ஆனால் கொலை நிகழ்த்திய காவலர்கள் தண்டிக்கப்படவில்லை ஏனெனில் அதிகார  வர்க்கத்தின் சமூக விரோதப்போக்கை நிறைவேற்றித் தருவதால் காலங்காலமாக இன்றளவும் காக்கப்பட்டு வருகிறார்கள்.

    *     பூதமாகினும் சட்டமாகினும் அரசனையும் அந்தணனையும் தண்டிக்க வலிமை கிடையாது. இவர்களுக்கு உட்பட்டே இயங்கும் என்பது புலனாகிறது. இன்றளவும் இம்முறை நீடிக்கிறது.

    *     மாதவியைப் போகப்பொருளாகவும் கண்ணகியை வணிக நோக்குடனும் நடத்திய கோவலன் இருவருக்கும் அநீதி இழைத்திருப்பது  நடைமுறை மனித வாழ்வுக்கு உகந்ததில்லை.

    *     மனிதனின் தவற்றுக்கெல்லாம் முற்பிறவி, தீவினை, ஊழ்வினை என்று காரணம் கற்பிப்பது,  குறிப்பாக அரசர், அந்தணர், வணிகர் தவற்றை மறைப்பதற்கான ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது.

    *     அரசருக்கும் வணிகருக்கும் நடக்கும் வர்க்க முரண்பாடாகச் சங்கமன் கொலையும், கோவலன் கொலையும் அமைந்திருக்கிறது.

    *     கோவலன் ஆடல் கலையிலும் ஆடலழகியிடமும் லயித்துப்போனதால் பொருளோடு வாழ்வையும் உயிரையும் இழந்தான். கண்ணகியைப் பரிதவிக்கவும் விட்டான். பாண்டிய மன்னனும் ஆடல் கலையிலும் ஆடலழகியிடமும்  லயித்து போனதால்தான் பெரும் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் இழக்க நேரிட்டது. இது மன்னர்களுக்கும் வணிகர்களுக்கும் பொறுப்பில் இருக்கும் எவரும் நெறிதவறி நடந்தால் நாட்டில் குற்றங்கள் மட்டுமே நடக்கும். இவர்களுக்கு ஏற்படும் இச்சையை அதிகாரத் தவறென்று சொல்லலாமேயொழிய ஊழ் என்று கருதமுடியாது.

    *** 

    பார்வை நூல்கள்:

    1.ஞா.மாணிக்கவாசகன் (உ.ஆ), சிலப்பதிகாரம் தெளிவுரை, உமா  பதிப்பகம்1995.

    2.ந.மு.வேங்கடசாமி நாட்டார்(உ.ஆ.) கழகவெளியீடு,1942.

    3.க.ப.அறவாணன் (உ.ஆ.), திருக்குறள் தெளிவும் உரையும்,  தமிழ்க்கோட்டம்,2007.

    4.வி.புரோத்தோவ், இக்கால இந்திய மெய்ப்பொருளியல், நியூசெஞ்சுரி புக்  ஹவுஸ்,1998.

    5.எஸ்.ஜி.சர்தேசாய், பண்டைய இந்தியாவில் முற்போக்கும் பிற்போக்கும்,  நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்,2012.

    6.தே.ஞானசேகரன், மந்திரம் சடங்குகள் சமயம்,பார்த்திபன் பதிப்பகம்,2000.

    7.வெ.பெருமாள்சாமி, சிலப்பதிகாரம் மறுக்கப்பட்ட நீதியும் மறைக்கப்பட்ட  உண்மையும்,பாரதி புத்தகாலயம், 2008.

     

     

     

     

     

    Share
  • கவிஞர் சுரதாவின் கவிதைகளில் குமுகாயச் சிந்தனைகள்

    முனைவர் ச.அருள்

    முன்னுரை 

         மனிதன் சமுதாயம் என்ற அமைப்பில் இருந்து தனித்து வாழ்பவன் அல்லன். ஏனெனில் மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள், உணர்வுகள் அனைத்தும் சமுதாயத்தின் வழியேதான் நிறைவு பெறுகின்றன. பரவிக்கிடக்கும் தேவைகளைப் பெறத் தனி மனிதன் இன்னொரு மனிதனை நாடுகின்றான். தன்னுடைய உணர்வுகளைத் தனக்குள்ளேயே அடக்கிக் கொள்ளாமல், மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள எண்ணுவது மனித இயல்பு. இவ்வாறு தேவைகளும், எண்ணங்களும், தொடர்புகளும் பரிமாறப்படுவதால் சமுதாய அமைப்பு விரிவடைகிறது. கவிஞர்கள் சமுதாயத்தில் ஓர் அங்கமாகத் திகழக் கூடியவர்கள். படைப்பாளர்கள் வரிசையில் கவிஞர்களுக்கான இடம் முதன்மையானதாகும். சமுதாயத்தின் குரலைப் படியெடுத்து வெளியிடும் திறனில் கவிதைகள் தனியிடம் பெறத்தக்கன. அவ்வகையில் உவமைக் கவிஞர் சுரதாவின் கவிதைகள் வழிக் குமுகாயச் சிந்தனைகளை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    குமுகாயம் 

         குமுகாயத்தில் வாழும் குடிமக்கள் ஒவ்வொருவரும் கொள்ளவேண்டிய குமுகாயச் சிந்தனை தம் குமுகாயம் அறிவார்ந்த – நேர்மையான – நல்ல வழியில் சென்று முன்னேறிச் சிறப்பதற்கான வழிவகைகளைச் சிந்தித்து செயல்படுத்த முனைதலே குமுகாயச் சிந்தனையாகும்.

         எவர் ஒருவர் தம் அண்டை மக்களின் துன்பங்களைத் தம் துன்பமாக எண்ணித் துடித்து, அவற்றைப் போக்க முற்படுகிறாரோ அவரே குமுகாயச் சிந்தனையுள்ள மாந்தர் ஆவார். “குமுகாயவியலாரின் கோட்பாட்டின்படித் தனி மாந்தனின் செயல்பாடுகளிலிருந்து தான் குமுகம் உருவாகிறது என்பதை உணரமுடிகிறது. எனவே, நல்ல குமுகம் மலரவேண்டுமெனில் தனி மாந்தன் உயரவேண்டும். தனி மாந்தனின் நல்ல செயல்பாடுகளே குமுகத்தை உருவாக்குவன”1 “மனிதர்கள் பலர் சேர்ந்து வாழ்வது குடும்பம். பல குடும்பங்கள் சேர்ந்தது சமூகம். சமூகத்தின் சட்ட திட்டங்கள், பழக்க வழக்கங்கள், செயல் முறைகள், ஒருவருக்கொருவர் உதவுதல், ஒழுங்கு முறைகள் ஆகியவற்றை நிர்ணயிப்பதே சமுதாயம் ஆகும்.”2 என்னும் கருத்தும் நோக்கத்தக்கதாகும். இவற்றின் மூலம் ஒரு குறிப்பிட்ட தனி இயல்பு கொண்ட மக்கள் கூட்டத்தைச் சமூகம் என்றும், சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொண்ட பொது ஒழுங்குமுறைக்குக் கட்டுப்பட்டு வாழும் சமூகக் குழுக்களைச் குமுகாயம் என்றும் பிரித்து அறியமுடிகிறது.

    சாதிப்பாகுபாடு 

         சமுதாயம் என்பது உணவு, உடை, மொழி, பண்பாடு முதலியவற்றின் அடிப்படையில் அமைவதாகும். இவற்றால் ஒன்றிணைந்திருந்த தமிழ்ச் சமுதாயம் சாதியாலும் சமயத்தாலும் பல பிரிவாகிப் போராடுவதைக் காணமுடிகிறது. இந்தியச் சமுதாயத்தையும் பெரிதாகப் பீடித்திருக்கும் நோய்களுள் ஒன்று சாதிப்பாகுபாடு. “இந்தியாவில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகள் காணப்படுகின்றன. இச்சாதிகள் ஒவ்வொன்றும் மற்ற சாதிகளில் இருந்து தாங்கள் மேம்பாடுடையவையென நிலை நாட்ட விழைகின்றன”3 இக்கூற்றின் மூலம், இந்தியாவில் உள்ள சாதிப்பிரிவுகளையும், சாதியின் இயல்பையும் அறிந்து கொள்ளமுடிகிறது.

         தொடக்க காலத்தில் சமுதாயத்தில், பிறப்பால் வேற்றுமை பாராட்டும் சாதிமுறை இல்லை. பிற்காலத்தில் ஏற்பட்ட சமயப் பிரிவுகளே இச்சாதி முறையைப் புகுத்தியுள்ளன. இதனை, “ஆரியர் வருகைக்கு முன்பு தமிழ்நாட்டில்  சாதிமுறை என்பதே இல்லை”4  என்னும் கூற்றும், “மதமே வாழ்க்கையாகக் கொண்டிருந்த ஆரியர் வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் சாதி தோன்றியது”5 என்னும் கூற்றும் உறுதி செய்கின்றன. “ஆரியர் வருகையால் வருணம், ஏற்றத்தாழ்வுகள் முதலியன வந்து புகுந்து தமிழ்ச் சமுதாயத்தைச் சிதறடித்தன.”6 ஒன்றாக இணைந்திருக்க வேண்டிய சமுதாயம் பிரிந்து பாழ்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இதனை, உவமைக் கவிஞர் சுரதா கடுமையாகச் சாடுவதுடன், சாதி அமைப்பால் சிலர் உயர்ந்தோர் எனக் கூறிக் கொள்வதையும் கண்டிக்கின்றார்.

               “செரிக்காத சோறாகும் மனித னுக்கே
    தேவையற்ற சாதிமதம்…………….”7

         இதில், சாதி வேறுபாடுகளைப் புகுத்த சமயமும் துணைநிற்கிறது என்பதால் அதனையும் சேர்த்தே கண்டித்துள்ளார். பண்டைக் காலத்தில் வேதங்களைப் பின்பற்றி நடந்த பிராமணர்களை ’வேதியர்’ என்று அழைப்பது மரபாக இருந்துள்ளது. ஆனால், இன்று எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் வேதங்களையும் இந்துசமய சாத்திரங்களையும் தழுவி நடப்போரை வேதியர் என அழைக்கலாம். இதனை,

               “ஜாதி மதங்களைப் பாரோம்………………
    வேதியர் ஆயினும் ஒன்றே, அன்றி
    வேறு குலத்தவர் ஆயினும் ஒன்றே”8

         என்று பாரதியார் பாடியுள்ளார். சமுதாயச் சீர்திருத்த எண்ணம் கொண்ட பாரதி, இந்தியாவில் காணப்பட்ட ஒற்றுமை இன்மைக்குக் காரணம் சாதி, சமய வேறுபாடுகள் என்று உணர்ந்து, அந்தணர், அந்தணர் அல்லாதவர் ஆகிய எல்லாரும் ஒன்றே என்னும் கருத்தில் சாதி, சமயம்அற்ற சமுதாயம் அமையக் குரல் கொடுத்துள்ளார். பாரதியின் தாசனுக்குத் தாசனான சுரதா,

               “சாதியென்பார், மதமென்பார், சங்க டத்தைச்
    சடங்கென்பார், சாத்திரகோத் திரங்க ளென்பார்
    நீதியென்பார், மனுநீதி சிறந்த தென்பார்
    நிலையற்ற உடலென்பார் நெய்பால் உண்பார்
    வேதியர்யாம் வீதியர்நீர் என்பார் எல்லாம்
    விதியென்பார் வினையென்பார் வேத மென்பார்
    ஓதுகலை ஒருசிலர்க்கே உரிய தென்பார்
    ஊழ்வினையே வையத்தின் வரலா றென்பார்”9

         என்று பாடியுள்ளார். இதில், சாதி, மதம், சடங்கு முறை, சாத்திரம், மனுநீதி, விதி, வேதம், ஊழ்வினை ஆகியவை நையாண்டிக்கு உரியவை என எடுத்துரைத்துள்ளார்.

         இந்து சமயத்தில் பிறவியிலேயே, சாதியும் உடன் பிறக்கிறது. நிறத்தால் அழகாக இருப்பதாலேயே ஒருவரை உயர்ந்தோர் எனக் கூறிவிட முடியாது. ஒரு மனிதனை உயர்ந்தோன் ஆக்கிக் காட்டுவது அவனுடைய பண்பாடே ஆகும். இதனை,

             “நிறத்தாலே பிறப்பாலே சிறந்தோர் என்று
    நினைப்பவ ரெல்லாங்கடையர் மடயர் மேனி
    நிறத்தாலே அந்தணர்கள் சிறந்தா ரேனும்
    நினைப்பாலே உயராதார் மேலோர் ஆகார்”10

    என்று சுரதா சுட்டியுள்ளார்.

         பண்டைக்காலத் தமிழ்ச் சமுதாயத்தில் சாதிப் பிரிவுகள் இருந்ததில்லை. பிற்காலத்தில் புகுத்தப்பட்டவையே இப்பிரிவுகள். ஆனால், தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் தமிழர்கள் இதனை உணரவில்லை. எடுத்துச் சொன்னாலும் அவர்களுக்குப் புரியவில்லை. எனவே, இக்கருத்தினைத் தமிழர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதை,

               “………………………….. கலப்பை மூலம்
    நிலத்தில்நாம் உண்டாகும் கலப்பை மாந்தர்
    நெஞ்சத்தில் உண்டாக்கி விடுவோ மாயின்
    கலப்புமணம் உருவாக வழியுண் டாகும்
    கலப்புமணத் தால்சாதி செத்தே போகும்”11

         என்னும் கவிதை வழி வெளிப்படுத்தியுள்ளார். இதில், கலப்பு மணம் செய்தால் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும் என்கிறார்.

    உடன்கட்டை ஏற்றுதல் 

         பெண்களுக்கு ஏதிரான ஆண்களின் வன்முறைகளில் ஒன்றுதான் உடன்கட்டை ஏற்றுதல். கணவன் இறந்தஉடன் உடன்கட்டை ஏறும் பெண்கள் குறித்து இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. தொல்காப்பியம்,

               “நல்லோள் கணவனொடு நனியழல் புகீஇச்
    சொல்லிடை இட்ட பாலை நிலையும்”12

         என்று சுட்டியுள்ளது. அஃதாவது கணவனின் இறந்த உடலுடன் கூடவே எரிமூழ்கிய அவள் சமுதாயத்தில் முழுமையான நல்லபெண் ஆகிவிடுகிறாள். இதில், ‘நல்லோள்’ என்னும் சொல் கணவனுடன் எரிபுகும் பெண்ணைக் குறிக்கக் கையாளப்படிருக்கிறது.

         “தம்முடன் இறக்கும் மனைவி, வேலைக்காரர், குதிரை போன்றவை தம்முடன் மறுஉலகுக்குச் செல்கின்றன என நம்பப்பட்டு வந்தது. ஆகவே பிரதானி ஒருவன் இறந்தபோது அவன் மனைவி வேளையாள் முதலியோரும் உடன் வைத்துக் கொளுத்தப்பட்டார்கள் அல்லது புதைக்கப்பட்டார்கள்”13 மனைவியை உடன்கட்டை ஏற்றுவதற்கு வேறு காரணமும் இருந்தது எனலாம். கணவன் இறந்தபின் அவன் மனைவி பிற ஆடவனைக் கணவனாகக் கொண்டு வாழ்வாள் என்னும் பொறாமைக் குணம் அவன் உள்ளத்தில் குடிகொண்டிருந்திருக்கலாம். கணவன் இறந்தபின் குழந்தை இல்லாத மனைவிக்குச் சொத்துரிமைச் சென்று விடக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். இதனால் பெண்களை உடன்கட்டை ஏற்றியிருக்கலாம்.

         நாட்டில் ஆணுக்கொரு நீதியும் பெண்ணுக்கொரு நீதியும் வரையறுக்கப்பட்டுள்ளன. மனைவி இறந்தால், கணவன் கிழவனாக இருந்தாலும் மறுமணம் செய்து கொள்ளலாம். அவன், கன்னிப் பெண்ணாக இருந்தாலும் அவளை மணந்து கொள்ளலாம். ஆனால், கணவனை இழந்த பெண், இளமையுடன் இருந்தாலும் அவள் மறுமணம் செய்து கொள்ளக்கூடாது. கணவன் இறந்தஉடன் அவனுடன் உடன்கட்டை ஏறிவிட வேண்டும்.

    இக்கொடுமையைக் கண்டு கொதித்துஎழும் கவிஞர் சுரதா,

    “பால்நிலவுப் பத்தினியும் பாடைமீது
    படுப்பானேன்? உடன்கட்டை ஏறு வானேன்?
    வேல்தொடரும் விழியுடையாள் கணவ னோடு
    வெந்துவிட வேண்டுமென்ப தென்ன நியாயம்”14

    “புடம்போட்ட பசும்பொன்னைப் போன்ற பெண்கள்
    பூவோடும் பொட்டோடும் மஞ்ச ளோடும்
    உடன்கட்டை ஏறிவரும் வழக்க மிங்கே
    உண்டென்ப தறிவீர்நீர் ஆய்ந்து பார்த்தால்
    முடம்பட்ட நெஞ்சத்தார் புகுத்தி விட்ட
    முழுமூடத் தனமென்ற முடிவே தோன்றும்”15

         என்னும் கவிதைகள் வழியாகச் சமுதாயத்திற்குச் சாட்டையடி கொடுத்துள்ளார். இவ்வாறு பெண் குலத்தைத் தீயிட்டுக் கொளுத்திய கொடுமைக்குக் காரணம் மக்களின் மூடத்தனமே எனக் கூறியுள்ளார். இம்மூடத்தனத்திற்குப் பலியான சிலரையும் எடுத்துக்காட்டுகின்றார். இதனை,

               “சித்திரப்பெண் பத்தினியும் காஷ்மீ ரத்தில்
    சிற்சிலரும் செஞ்சியிலோர் பதுமைப் பெண்ணும்
    கத்துகடல் முத்தரசன் ராச ராசன்
    காலத்து மங்கையரும் தீயில் தூங்கிச்
    செத்ததைநாம் வரலாற்றில் அறிவோம் அன்னார்
    தேன்வாழ்வை ஏன்கெடுத்துக் கொண்டா ரென்றால்
    பத்தினிமார் உடன்கட்டை ஏறிச் செத்தால்
    பரலோகம் கிட்டிடுமாம் எனவே செத்தார்”16
         என்னும் கவிதை வழி அறியலாம். முடிவாகக் கவிஞர்,

    “சித்திரத்தேர் தீப்பற்றி எரிதல் போன்ற
    தீச்செயலைத் தடுப்பீரென் றெண்ணு கின்றேன்”17
         என்று எடுத்துரைக்கின்றார்.

    குடும்பமும் கல்வியும்

         குடும்பம் என்னும் நிறுவனத்தின் நங்கூரமாகப் பெண்ணே கருதப்படுகிறாள். குடும்பத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பு பெண்ணுக்கு மட்டுமே உரியதாகிவிட்டது. பெண், தன்னுடைய குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் அடித்தளமிடுபவள் ஆகிறாள். குழந்தையின் மழலை மொழியினைத் திருவள்ளுவர்,

               “குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர்”18

         என்று எடுத்துரைப்பார். மனைவி இல்லாதவன் வாழ்க்கை கரும்பின் பூவைப் போன்றது. புத்தகம், முத்தமிடும் மனைவி, மழலைமொழி பேசும் மக்கள் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் சிறப்பினைத் தருவதாகும். புத்தகம் வாசிப்பதால் மனிதன் முழுமையான அறிவு பெறுகிறான். இதனை,

               “புத்தகங்கள் முத்தமிடும் மனைவி சொற்கள்
    புரியாத மழலைமொழி பேசும் மக்கள்
    இத்தரைமீ தினில் ஒவ்வோர் மனிதனுக்கும்
    இருப்பதுவே சிறப்பாகும் இருக்கு மாயின்
    புத்தகத்தால் பேரறிவும் குழந்தைப் பேச்சால்
    பூரிப்பும் மனைவி யினால் சுகமும் சேரும்
    எத்தனைபேர் இருந்தென்ன? மனைவி யில்லான்
    இல்வாழ்க்கைக் கரும்புக்கு வெறும்பூ வன்றோ?”19

         என்னும் கவிதை வரிகள் மெய்ப்பித்துக்காட்டுகின்றன. மனிதனின் நுகர்வுக்கு வேண்டியனவற்றையும் அவற்றை எந்தந்தத் தருணத்தில் பெற வேண்டும் என்பதையும் அறுதியிட்டுக் கூறுகிறார். இதனை,

               “திருமண வாழ்க்கையே சிறந்த பதிப்புரை
    ஓரெட்டில் உணவும், ஈரெட்டில் கல்வியும்
    மூவெட்டில் புதல்வனும் நாலெட்டில் பொருளும்
    ஐயெட்டில் ஞானமும் அடைவதே சிறப்பாம்”20
         என்னும் கவிதைக் காட்சிப்படுத்தியுள்ளது.

    பெண்மை

         பெண் உரிமையோடும் பெருமையோடும் கடமை உணர்வோடும் கண்ணியத்தோடும் இருக்க வேண்டும் எனக் கருதிக் கவிதைப் புனைந்தவர் சுரதா. காதலை மிகுதியாகப் பாடிப் பெண்ணின் அழகை நுட்பமாகப் பல்வேறு சொற்களால் புனைந்திருந்தாலும் பெண்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர். என் கடமை, என்னும் கவிதையில் ஒரு பெண் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை,

               “ஒளிவீசும் காலையில்நான் எழுந்திருந்து
    நுரைசெய்யும் ஆற்றில்நீ ராடச் செல்வேன்
    நுணுக்கமுள்ள ஆசாரக் கோவை கூறும்
    வரிவெண்பா நீதியைப்பின் பற்றி வாழ்ந்து
    வருவதனால் நீரில்நான் உமிழ மாட்டேன்
    ………………………………………………………………………..
    ஊரறிந்த பேரறிஞர் மேடைப் பேச்சை
    ஒருநாளும் நான்கேட்கத் தவற மாட்டேன்
    பாரறிந்த பைந்தமிழை அழிக்க வேண்டிப்
    படைவந்தே எதிர்த்தாலும் அஞ்ச மாட்டேன்”21

    என்று விரிவாகப்பாடியுள்ளார்.

         மனைவிக்குக் கணவன்மேல் உண்மையான காதல் இருக்க வேண்டுமென்றால், அவளுடைய மனத்திற்குப் பிடித்தவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் இருத்தல் வேண்டும். எப்படிப்பட்டவனைக் கணவனாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் அவளே தீர்மானிக்க வேண்டும். யாரைக் கணவனாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை விட யாரைக் கணவனாகத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் தமிழ்ப் பெண் ஒருத்தி கூறுவதாக,

               “தேய்புரி பழங்க யிற்றைப்
    போன்றானைச் சிறப்பில் லானை
    வாய்மையும் சிறந்த வாக்கு
    வன்மையும் இல்லா தானை
    நோய்மத வெறிகொண் டானை
    நுண்ணறி வில்லா தானைத்
    தாய்மொழிப் பற்றில் லானைத்
    தையல்நான் மணக்க மாட்டேன்                ………………………………………………………………………….
    …………………… அறிவில் மூத்தோன்
    வடித்தநூ லான முப்பால்
    திருக்குறள் கல்லா தானைத்
    திருமணம் செய்து கொள்ளேன்”22

    என்று சுரதா கூறியுள்ளார். இந்தக் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் சிந்திக்கத்தக்கனவாக அமைந்துள்ளன.

    ஒழுக்கம்

         ஒழுக்கம் என்பது மக்களின் வாழ்வியலை முறைப்படுத்துவதில் முதன்மையானதாகத் திகழ்ந்து உயிரினும் மேலானதாகக் கருதப்படுகிறது. ஒழுக்கமுடைய வாழ்வே உயர்ந்த வாழ்வு என்பது பண்டையத் தமிழரின் கொள்கையாகும். மனிதனுக்கு புறத்தூய்மை, அகத்தூய்மை ஆகிய இரண்டும் வேண்டும். புறத்தூய்மை உடல் நோய்கள் வராமலும், அகத்தூய்மை அகநோய்கள் வராமலும் காக்கும். எனவே, அகமும் புறமும் தூய்மையாக இருத்தலே உயர்ந்த நாகரிகம். திருவள்ளுவர்,

               “புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
    வாய்மையால் காணப் படும்”23

         என்ற கூறுகின்றார். புறத்தூய்மையை உடனடியாகக் கண்டுகொள்ள முடியும். அகத்தூய்மையைப் படிப்படியாக, அவரவர் நடத்தையின் மூலமே அறிந்துகொள்ள இயலும். ஒருவன் சமுதாயத்தில் வகிக்கும் பதவியையோ, செய்யும் தொழிலையோ வைத்து அவனுடைய அகத்தூய்மையை உறுதிப்படுத்தி விடக்கூடாது. வெளிஉலகிற்கு நல்லவனாகக் காட்சியளிக்கும் ஒருவன் அகத்தில் அழுக்கு நிறைந்தவனாக இருக்கலாம். இதனை,

               “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளவும்,
    கதவுள்ள போதே சாத்திக் கொள்ளவும்,
    நன்கு தெரிந்த நடிகை …… ……..
    நித்தம் இருமுறை நீராடு வாராம்
    விடிந்ததும் ஒருமுறை வெந்நீரில் குளியலாம்
    எல்லாம் முடிந்தபின் இன்னொரு குளியலாம்
    ………………………………………………………………………………….
    ஆடை பாதியும் அழகு பாதியும்
    தெரியக் காட்டும் திரைப்பட நடிகையோ,
    அறிஞனோ, கலைஞனோ, அரசியல் தலைவனோ,
    மடாதி பதியோ, மக்கள் திலகமோ,
    கோப்பைக் கவிஞனோ, கோயில் குருக்களோ,
    மற்றிங்கு வாழும் மக்கள் கூட்டமோ,
    ஆயிரம் தடவை அன்றாடம் குளிப்பினும்
    மிகத்தூய்மை பெறுவது மேனியே யன்றி
    அகத்தூய்மை நீரால் அமைவ தில்லையே”24

         என்னும் பாடல்களில் சுரதா சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக் கவிதையில் பலரையும் குறிப்பிடும் கவிஞர், அறிஞனையும் சேர்த்துக் கூறுகின்றார். பண்பாட்டை அறிவு உருவாக்கும், ஆனால் சில சமயம் தீமையைக் கூர்மைபடுத்தி விடுவதும் உண்டு. உணர்ச்சியைச் செம்மைப்படுத்தத் தவறிவிடுவதும் உண்டு. எனவே, தான் ஆங்கிலத்தில் ‘Intellectual Giants are moral Pygmies’ என்னும் பழமொழி வழங்குகிறது. ‘அறிவில் வானளாவ உயர்ந்திருப்பவர்களும் ஒழுக்கத்தில் குள்ளராக இருப்பதுண்டு’.

    குடும்பக்கட்டுப்பாடு 

         செல்வங்களில் சிறந்தது குழந்தைச் செல்வம். ஆனால் அளவில் மிஞ்சினால், அதுவே குடும்பத்திலும், பின்பு நாட்டிலும் வறுமையைத் தோற்றுவிக்கும். மக்கள்தொகைப் பெருக்கம் இன்று உலகை மிரட்டும் சிக்கலாக மாறி வருகிறது. 138 கோடி மக்களைக் கொண்டுள்ள சீனா, உலகிலேயே அதிகபட்ச மக்கள் தொகையைக் கொண்ட நாடாகத் திகழ்கிறது. குறிப்பாக, சீனாவில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ளத் தம்பதியருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது சீனாவில் குடும்பக் கட்டுப்பாட்டு விதி தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், வருங்கால நலனைக் கருத்தில் கொண்டு, குடும்பக்கட்டுப்பாட்டு விதியைத் தளர்த்த சீன அரசு முடிவெடுத்துள்ளது. எனவே, மக்கள்தொகைப் பெருக்கத்தை உலக நாடுகள் கட்டுப்படுத்த வில்லையானால் உலகில் வறுமை, பஞ்சம், பட்டினி, நோய் போன்றவை பெருகும். இந்த எச்சரிக்கையை முற்போக்குச் சிந்தனையாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இந்திய அரசும் இதனை ஏற்று செயல்படுத்தி வருகிறது. இந்தக் கொள்கையைப் பெரியார், “பெண்கள் விடுதலையடையவும், சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகின்றோம். மற்றவர்கள், பெண்கள் உடல்நலத்தை உத்தேசித்தும், பிள்ளைகளின் தாட்டீகத்தை உத்தேசித்தும், நாட்டின் பொருளாதார நிலையை உத்தேசித்தும் குடும்பச் சொத்துக்கு அதிகப் பங்கு ஏற்பட்டுக் குறைந்தும், குலைந்தும் போகாமல் இருக்க வேண்டும் என்பதை உத்தேசித்தும் கர்ப்பத்தடை அவசியமென்று கருதுகிறார்கள்”25 என்று எடுத்துக் கூறியுள்ளார். பெரியாரின் சிந்தனையை அடியொற்றி கவிதைகள் படைத்து வந்த பாரதிதாசன்,

               “காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்
    கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன
    குற்றம்?”26
         என்று பாடியிருக்கிறார். இதே சிந்தனையை, அவருடைய மாணவரான உவமைக் கவிஞர் சுரதா,

    “பெருக்கெடுக்கும் உணர்ச்சியினால் ஒன்று பத்தாய்ப்
    பெற்றெடுக்கும் குழந்தையெனும் கொழுந்தின் கூட்டம்
    நெருக்கடியின் அடையாள மன்றோ? அந்த
    நெருக்கடிக்கிங் கிடங்கொடுத்தால் குடும்ப வாழ்வே
    சருக்குநிலம் ஆகிவிடும் அதனால், பெற்றோர்
    தயவுசெய்து குடும்பநலம் காக்க வேண்டும்”27

         என்று பாடுகிறார். மக்கள் செல்வம் மிகுதியானால், அறிவையும், கற்பனை வளத்தையும் குறைத்துவிடும் என்றும், அதனால் குடும்பத்தில் வறுமையும், நிம்மதியின்மையும் தோன்றும் என்றும் எடுத்துரைக்கின்றார்.

    முடிவுரை

         சாதி, சமய வேறுபாடுகளைக் கண்டிக்கும் கவிஞர், அவை மானிட சமூகத்திற்குத் தேவையற்றது எனச் சாடியுள்ளார். நிறத்தாலும், பிறப்பாலும் உயர்ந்தோர் என்று எண்ணக் கூடியவர்களை மடையர்கள் எனக் கண்டித்துள்ளார். பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தைக் கண்டித்து,  இந்த மூடத்தனமான கொடுமையைத் தடுத்து நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். குடும்பத் தலைவனுக்கு மனைவியும் மழலையும் தரும் மகிழ்வும், புத்தகங்கள் தரும் அறிவும் அலாதியானவை என்பதைக் கவிதை வழி வெளிப்படுத்தியுள்ளார். இல்லாள் இல்லாதவனை இருந்தும் பயன் இல்லாதவன் என ஏளனமாகக் கூறியுள்ளார். தனக்குப் பிடித்தவனைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமையும், தனக்குப் பிடிக்காதவனைத் தானே நிராகரிக்கும் உரிமையும் பெண்களுக்கு வேண்டும் எனக் குரல் கொடுக்கின்றார். மகளிர் தம் அன்றாட வாழ்வில் எவற்றை எல்லாம் கடைபிடித்து வாழ வேண்டும் எனப் பட்டியலிடுகின்றார். ஒழுக்கத்தினை உயிரினும் மேலாகக் கருதும் கவிஞர் சுரதா, ஒழுக்கம் இல்லாதவனை உள்ளத்தில் அழுக்கு நிறைந்தவனாகக் காட்சிப்படுத்தியுள்ளார். மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, தாய்மார்கள் குழந்தைச் செல்வங்களை அளவோடு பெற்றுக்கொள்ள அறிவுரை கூறும் கவிஞர், குடும்பக்கட்டுப்பாட்டுச் சிந்தனையையும் விதைத்துச் சென்றுள்ளார்.

    ***

    குறிப்புகள்

    1. மு.அவையாம்பாள் (க.ஆ), ‘கவிராயரின் சமூகவியல் சிந்தனைகள்’ உடுமலை நாராயணகவி பன்முகப்பார்வை, இரா.சந்திரசேகரன், க.இந்திரசித்து (ப.ஆ), ப.237
    2. கி.முத்துக்கூரி (க.ஆ), பூமணியின் நல்ல நாளில் சமூகச் சித்திரிப்பு, இ.ப.த.ம. முப்பத்தோராம் கருத்தரங்கு ஆய்வுக்கோவை- தொகுதி-3, ப.1393.
    3. பி.யோகீஸ்வரன், தமிழ்க் கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள், ப.128.
    4. “Before the arrival of Aryans there was no caste systems in the Tamil Country” Srinivasa Iyengar,M, Tamil Studies, P.61
    5. சி.என். அண்ணாதுரை, ஆரிய மாயை, ப.65
    6. சுப.கதிரேசன், கண்ணதாசன் கவிதைகளில் சமுதாயக் கூறுகள், பிஎச்.டி., ஆய்வேடு, ப.53
    7. சுரதா, தேன்மழை, ப.43.
    8. பாரதியார், வந்தே மாதரம், 1
    9. சுரதா, தேன்மழை, ப. 120
    10. மேலது, ப.37
    11. மேலது, ப.64
    12. தொல்.புறத்திணை, நூ.19
    13. ந.சி.கந்தையாபிள்ளை, பெண்கள் உலகம், ப. 70
    14. சுரதா, தேன்மழை, ப.123
    15. மேலது, ப.122
    16. மேலது, ப.124
    17. மேலது, ப.127
    18. திருக்குறள், 66
    19. சுரதா, சுரதா கவிதைகள், ப.79
    20. சுரதா, சுவரும் சுண்ணாம்பும், ப.6
    21. சுரதா, தேன்மழை, ப.112
    22. மேலது, ப.113
    23. திருக்குறள், 298
    24. சுரதா, சுவரும் சுண்ணாம்பும், பக்.17-18
    25. பெரியார், பெண் ஏன் அடிமையானாள்?, ப.57
    26. பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள், தொகுதி-1, ப.40
    27. சுரதா, துறைமுகம், ப.142

     

     

     

     

    Share
  • வெளிச்சம்

     

    கவிஞர் ஜவஹர்லால்

    இருட்டில் இருப்பவன் வெளிச்சம் வேண்டி
    வெளியில் தேடுகிறான் ––மனசை
    இருட்டுக் குகையென ஆக்கி வாழ்பவன்
    எங்கே கண்டிடுவான் ?

    அல்லவை தேடி அலையும் மனமொரு
    கனத்த இருட்குகையே –அதில்
    நல்லவை நாடி ஒருசிறு சுடரை
    ஏற்றிடில் ஒளிபிறக்கும்.

    சித்த மயக்கம் என்பது வாழ்வைச்
    சூழும் இருட்டாகும்; –அங்கே
    சித்தத் தெளிவினைச் சேர்க்கும் அறநூல்
    சிறந்த விளக்காகும்.

    சூழும் வஞ்சகம் சூது பொய்மை
    சூழ்ந்துள மனசெல்லாம் – இருட்டில்
    ஆழும் ஒருகுகை; அதனுள் பிசாசுகள்
    அண்டிக் குடியிருக்கும்.

    கருத்து வெளிச்சம் தானாய் வராது
    கற்பன கற்றிடுவாய்! -–மனம்
    வெறுத்து நீயே வீழ்ந்து விடாமல்
    காப்பது கற்பவையே!

    வெளிச்சம் தேடி வெளியில் அலைவோர்
    பாறையில் விதைப்பவரே ! -–அந்த
    வெளிச்சம் உள்ளே ஏற்றி வெளியே
    விளங்கச் செய்திடுநீ !

    அடுத்தவர் நலத்தை நினைத்துப் பார்நீ !
    அங்கொரு சுடர்தோன்றும் ! –உன்னைக்
    கெடுத்தவர் தமக்கும் நலமே செய்நீ !
    கருத்துள் ஒளிபிறக்கும்.

    உள்ளொளி தோன்றின் வெளியொளி பிறக்கும்
    உள்ளே விளக்கேற்று ! –மிகத்
    தெள்ளத் தெளிந்த அறிவொளி ஏற்றிச்
    சூழும் இருள்நீக்கு !

    வெளிச்சம் என்றும் வெளியில் இல்லை
    விளைகிற இடம்மனமே ! –அந்த
    வெளிச்சம் பிறர்க்கே ஒளிதர வேண்டும்;
    மேன்மை நீயடைவாய் !

    Share
  • கனவுக் குதிரைகள்

     

    சிவ .விஜயபாரதி

     

    கனவுக் குதிரைகள் பூட்டியத் தேரில்
    புவனத்தின் திசைக்குள்
    இலக்கற்ற பயணம்
    பெய்துவிட்டுப் போன மழையில்
    நனைந்து நிற்கும் முட்செடிகள்
    முட்களின் கூரிய முனைகள்
    துளியைச் சுமந்தபடி
    உச்சிக் கொம்பைப் பற்றிய தேன்கூடு
    நிரம்பி உதிர்க்கிற துளிகள்
    பழங்களைச் சிறுகச் சுவைத்து
    மீண்டும் கடக்கின்றன
    செடிகளின் பூக்களில் ஒழுகி
    வழியில் பரவ
    தேர்க்கால்கள் வழுக்குகின்றன
    வியாபித்திருக்கும் கனத்த மௌனத்தினூடே
    இருமருங்கும் உதிர்ந்து கிடக்கும் பூக்கள்
    சொப்பனத்தைக் கலைத்துப் போடுகின்றன.

    Share
  • சொல்லுக சொல்லை…

    -முனைவர் க.துரையரசன்

    சொல்லாத சொல்லிற்கு நீ எஜமான்; சொன்ன சொல்லுக்கு அது எஜமான் – இது நூற்றுக்கு நூறு உண்மை என்று அனுபவம் கூறுகிறது. இதைத்தான் வள்ளுவர்,

    யாகவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.   (குறள். 127) என்று கூறியுள்ளார்.  பொருளற்ற சொற்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதைத் தொல்காப்பியர்,

    “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே”  (தொல். பெயரியல் நூ. 1)

    thiruஎன்று வலியுறுத்துகிறார். இத்தகு சொற்பயன்பாடு குறித்த வள்ளுவர் கருத்துகளை இக்கட்டுரை முன்வைக்கிறது.

    ஒத்த கருத்தை வலியுறுத்துவன:

    அதிகாரந்தோறும் பத்து குறள்கள் என்று வள்ளுவர் தான் வகுத்துக் கொண்ட வரையறைக்குள் தாம் கூறவந்த பொருண்மையைக் கூறிமுடிக்க முடியாத சில இடங்கள் இருந்ததாகவே கருத வேண்டியுள்ளது. அதனால்தான் சில பொருண்மைகள் குறித்து ஒன்றுக்கு மேற்பட்ட அதிகாரங்களை வள்ளுவர் படைத்துள்ளார். ஒத்தக் கருத்துடைய அதிகாரங்களில் நுணுக்கமான பொருள் வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை நாம் ஒரு பொருள் பற்றியவையாகவே கருத வேண்டும். அப்பொழுதுதான் வள்ளுவர் கூறவந்த பொருண்மை முழுமை அடைவதாக இருக்கும். அவ்வகையில் சொற்களைப் பயன்படுத்துவதில் உள்ள முக்கியத்துவம் குறித்து வள்ளுவர் ஐந்து அதிகாரங்களைப் படைத்துள்ளார். அவை:

    • இனியவை கூறல்   –   அதிகாரம் 10
    • பயனில சொல்லாமை – அதிகாரம் 20
    • சொல்வன்மை   –   அதிகாரம் 65
    • அவையறிதல்   –   அதிகாரம் 72
    • அவையஞ்சாமை –    அதிகாரம் 73

    இங்ஙனம் ஒத்தப் பொருண்மையுடைய அதிகாரங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

    நட்பு:

    இப்பொருண்மையில் 5 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

    • சிற்றினம் சேராமை –     அதிகாரம் 46
    • நட்பு      –     அதிகாரம் 79
    • நட்பாராய்தல்      –     அதிகாரம் 80
    • தீநட்பு      –     அதிகாரம் 82
    • கூடாநட்பு      –     அதிகாரம் 83

    குறிப்பறிதல்:

    இப்பொருண்மையில் 3 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

    • குறிப்பறிதல்      –     அதிகாரம் 71
    • குறிப்பறிதல் –     அதிகாரம் 110
    • குறிப்பறிவுறுத்தல் –     அதிகாரம் 128

    தெரிந்துசெயல்: 

    இப்பொருண்மையில் 3 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

    • தெரிந்துசெயல்வகை –     அதிகாரம் 47
    • தெரிந்துதெளிதல் –     அதிகாரம் 51
    • தெரிந்துவினையாடல் –     அதிகாரம் 52

    வினை:

    இப்பொருண்மையில் 3 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

    • வினைத்தூய்மை –     அதிகாரம் 66
    • வினைத்திட்பம் –     அதிகாரம் 67
    • வினைசெயல்வகை –     அதிகாரம் 68

    இல்வாழ்க்கை: 

    இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

    • இல்வாழ்க்கை    –  அதிகாரம் 5
    • வாழ்க்கைத் துணைநலம் –  அதிகாரம் 6

    கல்வி: 

    இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

    • கல்வி –     அதிகாரம் 40
    • கல்லாமை – அதிகாரம் 41

    குடிமை: 

    இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

    • குடிமை –     அதிகாரம் 96
    • குடிசெயல்வகை –     அதிகாரம் 103

    கொல்லாமை: 

    இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

    • புலால் மறுத்தல் –     அதிகாரம் 26
    • கொல்லாமை –     அதிகாரம் 33

    நெஞ்சு: 

    இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

    • நெஞ்சொடு கிளத்தல் –     அதிகாரம் 125
    • நெஞ்சொடு புலத்தல் –     அதிகாரம் 130

    படை: 

    இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

    • படைமாட்சி –     அதிகாரம் 77
    • படைச்செருக்கு –     அதிகாரம் 78

    புணர்ச்சி: 

    இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

    • புணர்ச்சி மகிழ்தல் –     அதிகாரம் 111
    • புணர்ச்சி விதும்பல் –     அதிகாரம் 129

    புலவி: 

    இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

    • புலவி –     அதிகாரம் 131
    • புலவி நுணுக்கம் –     அதிகாரம் 132

    பெரியார் தொடர்பு: 

    இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

    • பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரம் 45
    • பெரியாரைப் பிழையாமை –     அதிகாரம் 90

    மேற்காண் செய்திகளின் அடிப்படையில் நோக்கும்பொழுது சொற்பயன்பாடு, நட்பு ஆகிய இரண்டு பொருண்மைகளுக்கு மட்டுமே தலா ஐந்து அதிகாரங்களை வள்ளுவர் படைத்துள்ளார். பிற பொருண்மைகளுக்கு இரண்டு அல்லது மூன்று அதிகாரங்களைப் படைத்துள்ளார் என்பதைக் காணமுடிகிறது.

    இனி, கட்டுரையின் பொருண்மையான சொற்பயன்பாடு குறித்துத் தொடர்ந்து நோக்கலாம். இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறியுள்ளதைப்போல இனியவை கூறல், பயனில சொல்லாமை, சொல்வன்மை, அவையறிதல், அவையஞ்சாமை ஆகிய ஐந்து அதிகாரங்களில் கூறப்பட்டுள்ள செய்திகள் ஒத்த தன்மையுடையவை அல்லது ஒத்தப் பொருண்மையுடையவை என்பதை ஆராய்வோம்.

    இனியவை கூறல்: 

    ஒருவன் இனிமையான சொற்களையே கூறவேண்டும் என்ற கருத்தை வற்புறுத்தும் வள்ளுவர் இனிய சொற்கள், அன்பு கலந்தவை – ஈதலின் நன்று – அறச்செயல் – அணிகலன் – இம்மையும் மறுமையும் இன்பம் பயப்பன – என்றெல்லாம் கூறி,

    இனிய உளவாக இன்னாத கூறல்
    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. (குறள். 100) என்று வேதனையுடன் வினா எழுப்புகிறார்.

    பயனில சொல்லாமை: 

    இனிய சொற்களைக் கூறவேண்டும் என்று வலியுறுத்திய வள்ளுவர் பயனற்ற சொற்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்துகிறார். பயனில சொல்லுவான், எல்லாராலும் எள்ளப்படுவான் – நண்பர்களுக்குத் தீமை செய்வான் – அறம் இல்லாதவன் – மதிப்புக் கெடும் – மனிதன் என்று கூறார் – மக்கட்பதடி என்பர் – அறிவுடையோர் சொல்லார் – என்றெல்லாம் கூறி,

    சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
    சொல்லின் பயனிலாச் சொல்.     (குறள். 200) என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

    சொல்வன்மை: 

    இனியவற்றைக் கூறுக, பயனில கூறற்க என்ற வள்ளுவர் சொல்வன்மையை நாநலம் என்றியம்புகிறார். நாநலம், எல்லா நலத்துள்ளும் உயர்ந்தது – ஆக்கமும் கேடும் வரும் – கேட்பாரைப் பிணிக்கும் – கேளாரைக் கேட்பிக்கும் – அறம் பொருளை விடச் சிறந்தது – சொலல் வல்லனை இகல்வெல்லல் அரிது – உலகம் ஏவல் கொள்ளும் என்றெல்லாம் கூறி,

    சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
    வெல்லும்சொல் இன்மை அறிந்து. (குறள். 645)

    என்று சொற்களைத் தேர்ந்து – சொல்லும் சொல்லை வெல்லும் சொல் இல்லை என்று அமையுமாறு சொல்ல வேண்டும் என்று கூறி சொல்வன்மையை வள்ளுவர் விளக்குகிறார்.

    அவையறிதல்: 

    இடம், பொருள், ஏவல் அறிந்து பேசவேண்டும் என்பர் அனுபவசாலிகள். இதை வள்ளுவர் அவையறிதலில் நன்கு விளக்கிக் கூறியுள்ளார்.

    அவையறிந்து பேசவேண்டும் – ஆராய்ந்து பேசவேண்டும் – இடமறிந்து பேசவேண்டும் – அறிவுடையாரிடத்து அறிவுடையோராயும் அறிவிலிகளிடத்து அறிவிலியாயும் பேசவேண்டும் – அறிவில் மிக்கோர் கூடியுள்ள அவையில் முந்திச் சென்று பேசற்க – என்றெல்லாம் கூறிய வள்ளுவர்,

    அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தமகணத்தார்
    அல்லார்முன் கோட்டி கொளல். (குறள். 720)

    என்பதன் மூலம் ஒத்த அறிவுடையாரிடத்து ஒத்த அறிவுடைய செய்திகளைப் பேசவேண்டும். இவ்வரன்முறை மீறினால் சொல்லப்படும் செய்தி தூய்மையற்ற முற்றத்தில் (தரையில்) கொட்டிய அமிழ்தத்திற்கு ஒப்பாகும் என்கிறார்.

    அவையஞ்சாமை: 

    அவையில் அஞ்சாமல் பேசும் ஆற்றல் மிக்கோர் வாய்தவறியும் பிழை சொல்லார். அவையிலஞ்சாமல் கற்றார் மனங்கொள்ளுமாறு கூறுவோரே கற்றாருள் கற்றார் ஆவர். போர்க்களத்தில் அஞ்சாமல் சென்று சாகத்துணிந்தவர் பலரிருக்கச் சான்றோர் அவைக்களத்தில் அஞ்சாமல் சென்று உரைப்போர் ஒரு சிலரே என்று வள்ளுவர் அவையஞ்சா ஆற்றல் மிக்காரைப் புகழ்ந்துரைப்பர்.

    அவையஞ்சி உரைக்குந்திறனற்றோரை, போரிட அஞ்சுந்தன்மை கொண்டானிடம் உள்ள வாள் போன்றதே அவையஞ்சுவான் கற்ற கல்வி – தாம் கற்றவற்றைக் கல்வித்திறமிக்க அவையினில் உரைக்க இயலாதவர் கற்ற கல்வி பயனற்றது – அத்தகையவன் கல்லாதவரை விடக் கீழானவன் என்றெல்லாம் கூறும் வள்ளுவர் அவையஞ்சுவோர் உயிரோடு வாழ்ந்தாலும் இறந்தவர்க்கு ஒப்பானவர் என்பதை,

    உளர்எனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
    கற்ற செலச்சொல்லா தார்.   (குறள். 730) என்ற குறளில் பதிவு செய்துள்ளார்.

    இங்ஙனம் மேற்கண்டவாறு வள்ளுவர் சொல்லும் சொல்லின் முக்கியத்துவத்தை வள்ளுவர்  இனியவை கூறல், பயனில சொல்லாமை, சொல்வன்மை, அவையறிதல், அவையஞ்சாமை ஆகிய ஐந்து அதிகாரங்களில் விளக்கமுற எடுத்துரைத்துள்ளார். ஆகையால் வள்ளுவரைப் பின்பற்றி சொல்லும் சொல்லை வெல்லும் சொல்லில்லை என்று அனைவரும் பாராட்டத்தக்க வகையில் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றிக்கு வித்திடுவோம்.

    Share
  • மகாத்மா

     

     

    அஹிம்ஸையை நிலைநிறுத்தி
    ஆங்கிலேயரை ஓட ஓட விரட்டி
    இந்தியத் தலைமகனாய் நின்று
    ஈன நிலையை அறவே கொன்று
    உலக உத்தமனாய் நீ ஒளிர்ந்து
    ஊழ்வினை தீர்த்த மகாத்மாவே
    எங்கள் அன்னை பதறித் துடித்தாளே
    ஏறு போன்ற மகன் மார்புச் சிதறக்
    கண்டு
    ஐயா நீ துயர் தந்து மறைந்தாய் இன்று
    ஒற்றுமைக்கு வித்திட்ட குணவானே
    ஓரிரு நிமிடமாவதுனை நினைப்போம்
    மீண்டும் நீதான் மீண்டு வருவாயா
    மலர்ந்து பாரதம் அமைதி கண்டிட!

    – சித்ரப்ரியங்கா ராஜா,
    திருவண்ணாமலை.

    Share
  • வரம் தாரீரோ கண்களே!

     
    இல.பிரகாசம்

     

    உயிர் உண்ணும் கண்கள்
    களவாடிச் செல்ல
    இமைகள்
    இமைக்குந் தருணம் இதுவல்லவோ?

    இளமைஅது கொள்ளாது கொள்ளாது உன்
    உறவைத் தீண்டிட மனம் கள்ளத்தனத்
    திட்டம் தீட்டுகிறது!;
    தீயில் ஊறுந் தேனாய்க்
    கார்மேகஞ் சூழ்ந்த மையல் கொண்ட
    கயல்விழிப் பாவையின் பார்வையது பொல்லாது!

    யாவரும் மோகங் கொள்ளும் கலைநயப்
    பாவையின் நயனம் எனைத் தீண்டாதோ?
    தீரரெனப் போற்றும் வீரர்களுக்கெல்லாம்
    வீரம் விளைத்திடும் -அந்தக்
    கொற்றவையின் கருணை
    கடுகளவேனும் எனை தீண்டாதோ? கண்களே!

    காவியம்பல போற்றும் நாயகன் நானென
    பாவலர் பாடும் பாடுபொருளாய் நானாவேனோ?
    உயிருறவை ஈர்க்குங் கலைநயக் காதலை
    கருவில் சுமந்தலையும் கண்களே நீங்கள்
    நான்கேட்ட வரமதனை தாரீரோ?

    Share
  • “உன்னை அறிந்தால் “

    இன்று 17.01.17 புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜிஆர் அவர்கள் 100 வது பிறந்த தினம். அவர் நடிப்பில் என்னை பெருமளவில் ஈர்த்த வசனம் “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தில் அடிமைத் தனத்தை எதிர்த்து “உங்கள் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா என்றும் நிலைத்து நிற்பதற்கு?” என்ற வசனமே. அவரைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை எனினும், நிறைய நல்ல விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம் அவர் நடிப்பில். அவர் நடித்த வேட்டைக்காரன் படத்தில் வரும் கவியரசர் கண்ணதாசன் பாடல்”உன்னை அறிந்தால்” என்பதன் கருவை மையமாக கொண்டு நான் புனைந்த கவிதை.

    aa

    “உன்னை அறிந்தால் “

    அன்பெனும் தோணியைத் துணையாகக் கொண்டு
    ஆழ்கடல் சமூகத்தில் அழகாய்த் தான் முத்தெடுக்க
    இன்னது யாதென்ன நீ செய்ய வேண்டுமெனில்
    ஈடற்ற ஆற்றலின் உறைவிடமாய்த் திகழும்
    உன்னதமான உன்னை நீ முழுவதுமாய் அறிந்துபின்
    ஊக்கமாய் அனைவரோடும் ஒருசேரக் கைகோர்த்து
    எண்ணும் எழுத்தும் கண்ணெனச சொல்வது போல்
    ஏற்றம் நல்கும் மானத்தையும் உயிரென மதித்து
    ஐயம் தெளிவுற அனைத்திலும் அறவே தெளிந்து
    ஒப்பற்ற உன்குடியும் உயர்ந்திடச் செய்தால்
    ஓர்நாளும் நீயுந்தான் வீரநடை போட்டு
    ஓ! என அனைவர் வியக்க, கோ என வலம் வரலாம்!
    தான்கற்று தனையறிந்ததோடு நில்லாது
    தன்னலம் தன்னையும் தகர்த்திடுவாய் நாளும்
    பிறர்நலன் நோக்கும் பேரறிவாளனாய் நீயிருந்தால்
    இந்நன்னிலம் தன்னில் மன்னனாவது உறுதி!!
    அதனால்
    உன்னதமான உன்னை நீ முமுவதுமாய் அறிந்து
    சமூகம்
    உயர்வடையச் செயலாற்றுவாய் நீயுந்தான் விரைந்து!

    – சித்ரப்ரியங்கா ராஜா.
    திருவண்ணாமலை.

    Share
  • நூல்

    -முல்லை அமுதன்

    ‘அப்பா!’

    கூப்பிட்ட தொனி கோபமா அல்லது அப்பாவின் இயலாமை மீதான கழிவிரக்கமா?

    மௌனமாகத் திரும்பினேன்.

    விழிகளை அகலத்திறந்து அவளைப் பார்க்கையில்..

    என் கேள்வியின் அர்த்தம் பார்வையில் தெரிந்திருக்கவேண்டும்.

    சொன்னாள்.

    ‘ஏனப்பா..உங்களைப் போல நானும் எழுத வேண்டும்…என்னை என் பாட்டில் விட்டுவிடுங்களேன்’

    அதற்கு..?

    அருகில் வந்து அமர்ந்தேன்.அவள் ஏதோ சொல்ல நினைக்கிறாள்.

     சொல்லட்டுமே. அவளின் குரல் வரட்டுமே.

    எத்தனை நாள் பூட்டிவைத்திருக்கும் கேள்வியும் அது எனில் கேட்டுவிட்டுப்போகட்டுமே.

    உங்கள் விருப்பப்படியே படித்தேன். பட்டமும் பெற்றாயிற்று. உங்கள் விருப்பப்படியே நூல் எழுதியும் தந்தேன். போதுமே…நாம் வாழும் சூழலினைப் பாருங்கள். எப்படி தெளிவாகச் சிந்திக்கிறார்கள்; செயல்படுகிறார்கள். நூலை வாங்க நிறுவனம்..வாசிக்கவென வாசகர்கள்…நாம் காணும் அனைவரின் கைகளைப் பாருங்கள்…ஏதாவது வாங்கி வாசித்தபடியே நிற்கிறார்கள். வயது வித்தியாசம் என்றிலை..மடிக்கணினி, கைத்தொலைபேசி, கைக்கடக்கமான கின்டில் என…அவர்களின் உலகம் தனி.

    நீங்கள் சொல்லும் உங்களின் உலகம் எப்படி என்று சொல்லுங்கள். உங்களைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். நண்பர்களும் சொல்கிறார்கள்…உங்களின் உலகம் வேறு…வாசிக்கும் மக்கள் தொகை குறைவு…அதற்குள் போட்டி..பொறாமை…மற்றவர்களின் வளர்ச்சியில் மூக்கு நுழைத்துத் தட்டிப்பறித்தல் அல்லது இல்லாமல் ஒழித்தல்… ஏனப்பா?

    சரி விடுங்கள்..உங்களுக்கு ஆத்ம திருப்தி என்று தப்பிவிடுகின்றீர்கள். காலம் ஒருநாள் திரும்பும் என்பதும் சரி என்றே வைத்துக்கொள்ளுங்கள். பிறகு நீங்கள் இருப்பீர்களா?

    உங்களின் நூல்கள் அப்படியே அச்சிட்டு வீட்டில் தூங்குகின்றனவே..எனது நூலை வெளியீடு செய்தீர்கள். எத்தனை பேர் வாங்கினார்கள்? உங்கள் மனச்சாட்சியினைத் தொட்டு சொல்லுங்கள். இலவசமாக வாங்கிச் சென்றவர்கள் எத்தனை பேர்! நீங்களே சொல்கிறீர்கள்? இதெல்லாம் கடன் திருப்பிக்கொடுக்கவேண்டும் என்று..பிறகு தேவையா? ஏன் உங்கட சனம் இப்படி?

    நாட்டுக்கு என்றும் தப்பிவிடுகிறீர்கள். எல்லாரும் மறந்திருக்க நீங்கள் மட்டும்…சொல்லுங்கள் அப்பா! எல்லாரும் இப்படித் தப்பிவிடுவதனால் தான் எல்லாமே தோல்வி..தோல்வி மனப்பான்மை  தான் எங்களையும் இப்ப அழிக்கிறது.

    வேண்டாம்..விட்டுவிடுங்கள். போலியாய் வாழ்வதில் பலன் இல்லை. உங்களுக்காவேனும் வாழுங்கள். போலிகளுடன் வாழ்கிறோம் என்பதை உணருங்கள்.

    வாழலாம்..

    மகள் சொல்லிவிட்டுத் திரும்பி பார்க்காமலேயே உள்ளே சென்றாள்.

    எச்சிலை என் முகத்தில் எறிந்து செல்கிறாளா?

    Share
  • காற்றின் அலகுகள்

    முல்லைஅமுதன்

     

    காற்று
    தன் அலகுகளால்
    தலையினை
    துளைத்தபடி
    எதையோ தேடியது.
    கிடைத்ததை சப்பி தின்று
    தூர எறிந்தது.
    அவைகள் சுவரில் ஒட்டிக்கொண்டது
    என் கவிதைகளாய்.
    மீதமிருத்த உடலை
    என்ன செய்யலாம் என்று தீர்மானித்த பொழுதின் முடிவாய்
    கட்டித் தொங்கவிட்டு
    தற்கொலை என்றெழுதியது.
    எனி
    கவிதை எழுதாபொழுதுகள்
    அவர்களுக்காய் விடியும்.

    Share
  • மார்கழி மணாளன் 23

     

     

    திருவைகுண்ட விண்ணகரம் – அருள்மிகு தாமரைக்கண்ணுடையபிரான் கோயில்

     ag

    வேடங்கள் கலைந்ததும் வேண்டிட ஒன்றில்லை

    வேதவன் வாழ்ந்திடும் வைகுந்தமே வேறில்லை

    வேதங்கள் வாதங்கள் வழியினில் துணையில்லை

    பேதங்கள் இல்லையே வைகுந்தன் பார்வையில்!

     

    இழிவென்ற அழிவென்ற நினைப்பெல்லாம் நீங்கிட 

    விதியென்ற மதியென்ற கணக்கெல்லாம் பொய்த்திட

    கதியென்றே அரங்கனின் பாதங்கள் கிடக்கையிலே

    பிடியென்று அறிந்திடும் அறிவும்தான் வந்திடுமோ ?

     

    அரவத்தின் கண்கள் அச்சுறுத்தி நிற்க்கையில்

    கருமத்தின்  கணக்குகள் கவலைகள் தருகையில்

    தருமங்கள் முன்வந்து தன்வழக்கு உரைக்கையில்  

    உருவமாய் அருவமாய் வைகுந்தா வாழ்த்திடு  !

     

    பாயிரங்கள் ஒன்றேனும் உளமுருகிப் பாடாமல்

    பேய்மானமாய் அலைபாய்ந்து ஆடியே வந்தாலும் 

    மாயவனே ஏற்றிடுவாய் மனமுவந்து மலரடியில் 

    தாயவள் சேயினையே துறந்திட நினைப்பதோ?

     

    வாயில்கள் பலநூறும் வலம்வந்தேன் வழிதேடி

    கோயில்கள் எங்கெங்கோ கொண்ட பரந்தாமா !

    மாதத்தில் ஒன்றான மார்கழியில் மங்கலமாய்

    சொர்கத்தின் வாசல்வழி தந்தாயே சுந்தரனே !

     

    பொன்னங்கி முத்தங்கி பூவங்கி போட்டாலும்

    தானியங்கி தருமத்தை உள்ளங்கி போட்டவனே

    புகழங்கி போட்டோரின் பொய்யங்கி விலக்கியே

    மெய்யங்கி காட்டுவாய் சொல்லங்கி உனக்கெதற்கு?

     

     

     

     

    Share
  • புதுப்பிக்க தவறின காதல்

     

    இரா. சந்தோஷ் குமார்

    மணற் பூக்களைத் தூவி
    எனை வரவேற்றது ஆழி..!

    என் அன்பு அன்னையை போல
    தாலாட்டுக் காற்றை 
    என் மீது
    விசிறி விட்டது இயற்கை.

    என் கடந்தகால துரோகிகளைப் போல
    துர்நாற்றமடித்தது மெரீனா குப்பைகள்.

    பருவத்திற்கு வந்த
    என் அத்தை மகளைப் போல
    அந்தி தாவணியை பிடித்து
    பகல் வெண்ணிலா
    வெட்கத்தோடு எட்டி்பார்த்தது.

    கல்லூரிப் பெண்களின்
    அரட்டையென அழகாக
    ரீங்காரிமிட்டது அலைகள்.

    குட்டிப்பாப்பா ஒருத்தியின்
    மணல் வீட்டில்
    குடிப்புகுந்தது
    என் இருதயம்..!

    ராஜ ராஜ சோழர்கள்
    குதிரையிலேறி
    செல்ஃபி கிளிக்கிட்டு இருந்தார்கள்.

    என்றாலும் என்ன…
    என்னோடு வராத
    வர முடியாத அவளின்
    நினைவுகளில் புதுப்பிக்க தவறின
    என் காதல் கதைகள்.

    **

    -இரா.சந்தோஷ் குமார்.

    Share
  • தாத்தா சாமி

    -பழ.செல்வமாணிக்கம்

    மயிலாபுரி என்கின்ற மயிலாப்பூர் வழக்கம் போலப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. “மயிலையே கயிலை, கயிலையே மயிலை “ என்ற வரிகளைத் தாங்கிய பதாகை  கோவில் அருகே நடந்து செல்பவர்கள் மனதிற்கு நிறைவை தந்து கொண்டிருந்தது. நடையோரக் காய்கறிக்கடைகளில் வியாபாரம் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது. காய்கறிகளைப் பார்த்தால் புதிதாக திருமணமான மணமக்களைப் போல் புதுப்பொலிவுடன் இருந்தன.

    மாதவன், அவன் மற்றும் ஒன்றரை வயதுப் பெயர்த்தி தங்க நாச்சியார்  அனைவரும் கபாலீசுவரர் கோவில் பங்குனித் திருவிழா பார்ப்பதற்குச் சென்று கொண்டிருந்தனர். மாட வீதி முழுவதும் திருவிழாக் கடைகள், விளையாட்டுச்சாமான்கள், பொம்மைகள், அழகு சாதனப் பொருட்கள், பனை ஓலைக் கூடைகள், பலூன்கள் அப்பப்பா… குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் அந்தக்கடைகளைப் பார்த்துகொண்டே இருக்கவேண்டும் என்று தான் தோன்றும்!

    கபாலி கோவில் பங்குனிப்பெருவிழா பார்ப்பதற்கே மீண்டும், மீண்டும் பிறந்து வரலாம். மயிலைவாசிகளிடம், மயிலாப்பூரை விட்டு வந்தால், சொர்க்கத்தைப் பதிலாகத் தருவதாகச் சொன்னால் கூட, சொர்க்கம் வேண்டாம்! மயிலாப்பூர் தான் வேண்டும் என்று தான் சொல்லுவார்கள்!

    “அதிகார நந்தி“ என்ன ஒரு அற்புதக்காட்சி தெரியுமா? நந்தி எம்பெருமான் தன் முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கிய வண்ணம், கற்பகாம்பாள், கபாலீசுவரரை சுமந்து வரும் கம்பீரம்! அப்படியே கயிலாயத்தில் இருந்து இறங்கி வானத்திற்கும், பூமிக்குமாய்ச் சுமந்து வருவது போல் தோன்றும்!

    ஆண்டவனை வணங்கிவிட்டு  மன நிறைவுடன் மாதவன் குடும்பம் வீடு திரும்பிக்கொண்டிருந்தது. சாமி பார்க்கப்போகும் போதே , மாதவனின் பெயர்த்தி, பலூனைக்காட்டி வேண்டும் என்று கேட்டது. மாதவனும் “தங்கம், சாமி பாத்துட்டு திரும்பிப்போகும்போது வாங்கித்தாறேன்  “என்று சொல்லியிருந்தான். அதுவும் ஏதோ புரிந்தது போல சிரித்துக்கொண்டே தலையாட்டியது. வழக்கம் போல மாதவனின் மகள் யாழினி “அப்பா எங்கேயாவது சாப்பிட்டு விட்டுப்போகலாம் “ என்றாள். மாதவனுக்குத்தெரியும், வேண்டாம் என்று சொன்னால் என்ன நடக்கும் என்று! திருப்பதியில் ஏழுமலையான் , குபேரனிடம் தன் திருமணத்திற்காக வாங்கிய கடனைக் கட்டிக்கொண்டிருப்பதாக ஐதீகம்.அது போல மாதவன் ஏதோ ஒரு பிறவியில் வாங்கிய கடனை , உணவு விடுதி, உணவு விடுதியாகச்சென்று தீர்த்து வருகிறான்!

    மாதவன் குடும்பத்தினர் உணவு விடுதியில், கேட்டிருந்த பலகாரங்கள் வருவதற்காகக் காத்துக் கொண்டிருந்தனர். பக்கத்து மேசையில் இன்னொரு குடும்பம் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அந்தக் குடும்பத்தில் 4 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் பலூன் ஒன்றை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். தங்க நாச்சியார் அந்த பலூனை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவனின் அம்மா , அவனைப் பார்த்து “செல்லக்குட்டி, தங்கச்சி பாப்பாவுக்கு உன் பலூனைக் கொடுக்கிறியா? “ என்று கேட்டாள். அரை மனதோடு அந்தச்சிறுவன் பலூனை மாதவனின் பேத்தியிடம் கொடுத்தான். அதை வைத்துக்கொண்டு தங்க நாச்சியார், மகிழ்ச்சியோடு விளையாடிக்கொண்டிருந்தாள். பக்கத்து மேசைக்குடும்பம், சாப்பிட்டு விட்டுக் கிளம்பத் தயார் ஆனார்கள். பலூனைக் கொடுத்த அந்தச் சிறுவன், ஏக்கத்தோடு அந்த பலூனைத் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே சென்று கொண்டிருந்தான்.

    மாதவன் தன் பேத்தியிடம் “தங்கம் அந்த அண்ணன் பாவம் இல்லையா?  பலூனைத் திருப்பிக்கொடுத்திடுறியா? உனக்கு வேற பலூன் வாங்கித்தாறேன் “ என்றான். ஒரு நொடி கூட யோசிக்காமல், தத்தித்தத்தி தளிர் நடை நடந்து, பலூனை அந்தச்சிறுவனிடம் கொடுத்துவிட்டு, மாதவனிடம் போய் ஒட்டிக்கொண்டாள். மாதவன் மனதில் நினைத்துக்கொண்டான். “பெரும்பாலான பெரியவர்களுக்குக்கூட இல்லாத மனமுதிர்ச்சி, நம்பிக்கை, இந்தப்பிஞ்சு உள்ளத்தில் எப்படி ஏற்பட்டது “என்று. திரும்பிப்போகும்போது, கட்டாயம் பேத்திக்குப் பலூன் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். உணவை முடித்துக்கொண்டு திரும்பும் போது இரவு மணி 11 ஆகி விட்டது. பலூன் விற்பவர் ஒருவரைக்கூட பார்க்க முடியவில்லை. அனைவரும், விற்பனையை முடித்துக் கொண்டு வீடு திரும்பி விட்டனர். குற்ற உணர்வு மாதவனை ஆட் கொண்டது. மறுபடியும் பேத்தியைப்பார்த்து , “தங்கம் உனக்கு, நாளைக்கு நிச்சயம் பலூன் வாங்கித் தாறேன் “ என்றான். மறுபடியும்,தங்கநாச்சியார், அவனைப் பார்த்துச் சிரித்தது. உடனே மாதவன் பெருமையாகத் தன் மனைவியைப் பார்த்து “என்னோட பேத்திக்கு எம்மேல எவ்வளவு நம்பிக்கை பாத்தியா? ஏன் தெரியுமா?  நான் சொன்னா, சொன்னபடி நடப்பேன்னு அவளுக்குக்கூட தெரிஞ்சிருக்கு “ என்று சொன்னவனின் முகத்தில் , திடீரென ஒரு இறுக்கம் தோன்றியது. கூட வந்த அனைவருக்கும் ஒன்றுமே புரியவில்லை. மைதிலிக்கு மட்டும் ஏதோ புரிந்தது போல இருந்தது.

    மாதவனின் நண்பர் சந்திரன் ஒரு மாதத்திற்குமுன் மாதவனின் வீட்டிற்கு வந்திருந்தார். அவர், மாதவனிடம் ஒரு பையைக் கொடுத்து “இதில் ஐந்து லட்சம் ரூபாய் இருக்கிறது. இப்போதைக்கு இது உன்னிடம் இருக்கட்டும். வீட்டில் எனக்கும், என் பிள்ளைகளுக்கும் மனக்கசப்பு. எனக்கு வந்த ஓய்வூதியப்பணத்தில் இருவருக்கும் ஆளுக்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்து விட்டேன். எனக்கும், என் மனைவிக்கும் இருக்கும் செலவுக்காக இந்தப் பணத்தை வைத்திருக்கிறேன். ஆனால், என் பிள்ளைகள், என்னிடம் இன்னும் கொஞ்சம் பணம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டு, பணத்தைத் தரச்சொல்லி, நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு, உன்னை  விட நம்பிக்கையான நண்பன் யாரும் கிடையாது. வயதான காலத்தில் எங்களுக்கு இந்தப்பணம் மிகத் தேவையான ஒன்று. வீட்டு நிலைமை சரியான பின் நானே வந்து  வாங்கிக் கொள்கிறேன்  “ என்று சொல்லிவிட்டுச்சென்றிருந்தார்.

    சந்திரனின் பிள்ளைகள் இருவருமே இப்போது நல்ல வசதியோடு தான் இருக்கிறார்கள். அவர்களை இந்த நிலைக்கு கொண்டு வரச் சந்திரன் வாழ்க்கையில் தொலைத்தது ஏராளம்.

    சந்திரன் வந்துவிட்டுச் சென்ற இரண்டு நாட்களுக்குப்பிறகு, சந்திரன் காலமான தகவல்தான் மாதவனுக்கு வந்தது. உடனே பதறி அடித்துக்கொண்டு சந்திரன் வீட்டிற்குச் சென்றான். சந்திரன் மனைவி கதறி அழுதது, மனதை என்னவோ செய்தது. எல்லோரும் ஒரு நாள் இறக்கப்போவது நிச்சயம் என்றாலும், நம் மனது அதை ஒத்துக்கொள்ள மறுக்கிறது. “செத்த பிணத்தைச் சுற்றி இனிச் சாம் பிணங்கள் கத்தும் கணக்கென்ன? கச்சி ஏகம்பனே “ என்னும் பட்டினத்தார் பாடல் சொல்வதற்கு, நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இதுவே நம் வீட்டில் நடக்கும் போது மனம் அழுது புலம்புகின்றது. சந்திரன்  இறந்து 15 நாட்களுக்குப் பிறகு, மாதவன் சந்திரன் கொடுத்த ஐந்து லட்சம் ரூபாயை, சந்திரன் மனைவியிடம் கொடுத்து விட்டு வரலாம் எனப் புறப்பட்டான்.

    மைதிலி அவனைப்பார்த்து  “என்னங்க, நான் ஒண்ணு சொன்னாக் கோச்சுக்க மாட்டீங்களே?  சந்திரண்ணன் பணத்தை அவர் மனைவி கிட்ட கொடுக்கிறது தான் நியாயம்! ஆனா, அந்தப்பணத்தை, அவுங்க புள்ளைங்க எடுத்துக்கிட்டு, அந்த அம்மாவை, தெருவில விட மாட்டங்கன்னு என்ன நிச்சயம் “ என்றாள். ”அதுக்கு என்ன பண்ணலாமுன்னு சொல்ற?“ என்றபடி கோபத்தோடு மைதிலியைப் பார்த்தான் மாதவன். ”இல்லங்க, நீங்களும் உங்க வியாபாரத்துக்குப் பணம் தேவைப்படுதுன்னு தவிச்சுக்கிட்டு இருக்கீங்க! இந்தப்பணத்தை உங்க தொழில்ல போடுங்க. கொஞ்ச நாள் கழிச்சு, அவுங்க வீட்டில நிலமை சரியானதுக்கு அப்பறம்,  வட்டியோட சேத்து, பணத்தை, சந்திரண்ணன் சம்சாரத்துக்கிட்ட கொடுத்துருவோம்  “ என்று மைதிலி நீட்டி முழக்கினாள்.

    மனிதன் சபலம் உள்ள ஒரு கடவுளின் படைப்புத் தானே! மனைவி சொல்லும் நல்ல  யோசனைகளை எடுத்துக்கொள்கிறோமோ இல்லையோ! நமக்கு லாபம் கிடைக்கும் விசயம் என்றால் சரி என்று தான் நினைப்போம்.”சரி யோசிப்போம் “ என்றவாறு , மாதவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் யோசனையைத் தள்ளி வைத்தான்.

    சாமி கும்பிட்டு வீட்டுக்கு வந்த மாதவனுக்கு ஒன்று நன்றாகப் புரிந்தது. சிறுபிள்ளைகளுக்கு இருக்கும் உறுதி, மற்றும் நம்பிக்கை, நாணயம், மனிதன் வளர வளரக் குறைந்து, முடிவில் இல்லாமலே போய்விடுகிறது. அடுத்த நாள் காலை  மூன்று பேருக்கு நன்றாகவே விடிந்தது. கிடைத்தது தங்க நாச்சியாருக்கு பலூன், சந்திரன் மனைவிக்கு வயதான காலத்திற்குத் தேவையான வாழ்வாதாரம், மாதவனுக்கு மன நிம்மதி.

    Share