தாத்தா சாமி
-பழ.செல்வமாணிக்கம்
மயிலாபுரி என்கின்ற மயிலாப்பூர் வழக்கம் போலப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. “மயிலையே கயிலை, கயிலையே மயிலை “ என்ற வரிகளைத் தாங்கிய பதாகை கோவில் அருகே நடந்து செல்பவர்கள் மனதிற்கு நிறைவை தந்து கொண்டிருந்தது. நடையோரக் காய்கறிக்கடைகளில் வியாபாரம் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது. காய்கறிகளைப் பார்த்தால் புதிதாக திருமணமான மணமக்களைப் போல் புதுப்பொலிவுடன் இருந்தன.
மாதவன், அவன் மற்றும் ஒன்றரை வயதுப் பெயர்த்தி தங்க நாச்சியார் அனைவரும் கபாலீசுவரர் கோவில் பங்குனித் திருவிழா பார்ப்பதற்குச் சென்று கொண்டிருந்தனர். மாட வீதி முழுவதும் திருவிழாக் கடைகள், விளையாட்டுச்சாமான்கள், பொம்மைகள், அழகு சாதனப் பொருட்கள், பனை ஓலைக் கூடைகள், பலூன்கள் அப்பப்பா… குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் அந்தக்கடைகளைப் பார்த்துகொண்டே இருக்கவேண்டும் என்று தான் தோன்றும்!
கபாலி கோவில் பங்குனிப்பெருவிழா பார்ப்பதற்கே மீண்டும், மீண்டும் பிறந்து வரலாம். மயிலைவாசிகளிடம், மயிலாப்பூரை விட்டு வந்தால், சொர்க்கத்தைப் பதிலாகத் தருவதாகச் சொன்னால் கூட, சொர்க்கம் வேண்டாம்! மயிலாப்பூர் தான் வேண்டும் என்று தான் சொல்லுவார்கள்!
“அதிகார நந்தி“ என்ன ஒரு அற்புதக்காட்சி தெரியுமா? நந்தி எம்பெருமான் தன் முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கிய வண்ணம், கற்பகாம்பாள், கபாலீசுவரரை சுமந்து வரும் கம்பீரம்! அப்படியே கயிலாயத்தில் இருந்து இறங்கி வானத்திற்கும், பூமிக்குமாய்ச் சுமந்து வருவது போல் தோன்றும்!
ஆண்டவனை வணங்கிவிட்டு மன நிறைவுடன் மாதவன் குடும்பம் வீடு திரும்பிக்கொண்டிருந்தது. சாமி பார்க்கப்போகும் போதே , மாதவனின் பெயர்த்தி, பலூனைக்காட்டி வேண்டும் என்று கேட்டது. மாதவனும் “தங்கம், சாமி பாத்துட்டு திரும்பிப்போகும்போது வாங்கித்தாறேன் “என்று சொல்லியிருந்தான். அதுவும் ஏதோ புரிந்தது போல சிரித்துக்கொண்டே தலையாட்டியது. வழக்கம் போல மாதவனின் மகள் யாழினி “அப்பா எங்கேயாவது சாப்பிட்டு விட்டுப்போகலாம் “ என்றாள். மாதவனுக்குத்தெரியும், வேண்டாம் என்று சொன்னால் என்ன நடக்கும் என்று! திருப்பதியில் ஏழுமலையான் , குபேரனிடம் தன் திருமணத்திற்காக வாங்கிய கடனைக் கட்டிக்கொண்டிருப்பதாக ஐதீகம்.அது போல மாதவன் ஏதோ ஒரு பிறவியில் வாங்கிய கடனை , உணவு விடுதி, உணவு விடுதியாகச்சென்று தீர்த்து வருகிறான்!
மாதவன் குடும்பத்தினர் உணவு விடுதியில், கேட்டிருந்த பலகாரங்கள் வருவதற்காகக் காத்துக் கொண்டிருந்தனர். பக்கத்து மேசையில் இன்னொரு குடும்பம் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அந்தக் குடும்பத்தில் 4 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் பலூன் ஒன்றை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். தங்க நாச்சியார் அந்த பலூனை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவனின் அம்மா , அவனைப் பார்த்து “செல்லக்குட்டி, தங்கச்சி பாப்பாவுக்கு உன் பலூனைக் கொடுக்கிறியா? “ என்று கேட்டாள். அரை மனதோடு அந்தச்சிறுவன் பலூனை மாதவனின் பேத்தியிடம் கொடுத்தான். அதை வைத்துக்கொண்டு தங்க நாச்சியார், மகிழ்ச்சியோடு விளையாடிக்கொண்டிருந்தாள். பக்கத்து மேசைக்குடும்பம், சாப்பிட்டு விட்டுக் கிளம்பத் தயார் ஆனார்கள். பலூனைக் கொடுத்த அந்தச் சிறுவன், ஏக்கத்தோடு அந்த பலூனைத் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே சென்று கொண்டிருந்தான்.
மாதவன் தன் பேத்தியிடம் “தங்கம் அந்த அண்ணன் பாவம் இல்லையா? பலூனைத் திருப்பிக்கொடுத்திடுறியா? உனக்கு வேற பலூன் வாங்கித்தாறேன் “ என்றான். ஒரு நொடி கூட யோசிக்காமல், தத்தித்தத்தி தளிர் நடை நடந்து, பலூனை அந்தச்சிறுவனிடம் கொடுத்துவிட்டு, மாதவனிடம் போய் ஒட்டிக்கொண்டாள். மாதவன் மனதில் நினைத்துக்கொண்டான். “பெரும்பாலான பெரியவர்களுக்குக்கூட இல்லாத மனமுதிர்ச்சி, நம்பிக்கை, இந்தப்பிஞ்சு உள்ளத்தில் எப்படி ஏற்பட்டது “என்று. திரும்பிப்போகும்போது, கட்டாயம் பேத்திக்குப் பலூன் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். உணவை முடித்துக்கொண்டு திரும்பும் போது இரவு மணி 11 ஆகி விட்டது. பலூன் விற்பவர் ஒருவரைக்கூட பார்க்க முடியவில்லை. அனைவரும், விற்பனையை முடித்துக் கொண்டு வீடு திரும்பி விட்டனர். குற்ற உணர்வு மாதவனை ஆட் கொண்டது. மறுபடியும் பேத்தியைப்பார்த்து , “தங்கம் உனக்கு, நாளைக்கு நிச்சயம் பலூன் வாங்கித் தாறேன் “ என்றான். மறுபடியும்,தங்கநாச்சியார், அவனைப் பார்த்துச் சிரித்தது. உடனே மாதவன் பெருமையாகத் தன் மனைவியைப் பார்த்து “என்னோட பேத்திக்கு எம்மேல எவ்வளவு நம்பிக்கை பாத்தியா? ஏன் தெரியுமா? நான் சொன்னா, சொன்னபடி நடப்பேன்னு அவளுக்குக்கூட தெரிஞ்சிருக்கு “ என்று சொன்னவனின் முகத்தில் , திடீரென ஒரு இறுக்கம் தோன்றியது. கூட வந்த அனைவருக்கும் ஒன்றுமே புரியவில்லை. மைதிலிக்கு மட்டும் ஏதோ புரிந்தது போல இருந்தது.
மாதவனின் நண்பர் சந்திரன் ஒரு மாதத்திற்குமுன் மாதவனின் வீட்டிற்கு வந்திருந்தார். அவர், மாதவனிடம் ஒரு பையைக் கொடுத்து “இதில் ஐந்து லட்சம் ரூபாய் இருக்கிறது. இப்போதைக்கு இது உன்னிடம் இருக்கட்டும். வீட்டில் எனக்கும், என் பிள்ளைகளுக்கும் மனக்கசப்பு. எனக்கு வந்த ஓய்வூதியப்பணத்தில் இருவருக்கும் ஆளுக்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்து விட்டேன். எனக்கும், என் மனைவிக்கும் இருக்கும் செலவுக்காக இந்தப் பணத்தை வைத்திருக்கிறேன். ஆனால், என் பிள்ளைகள், என்னிடம் இன்னும் கொஞ்சம் பணம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டு, பணத்தைத் தரச்சொல்லி, நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு, உன்னை விட நம்பிக்கையான நண்பன் யாரும் கிடையாது. வயதான காலத்தில் எங்களுக்கு இந்தப்பணம் மிகத் தேவையான ஒன்று. வீட்டு நிலைமை சரியான பின் நானே வந்து வாங்கிக் கொள்கிறேன் “ என்று சொல்லிவிட்டுச்சென்றிருந்தார்.
சந்திரனின் பிள்ளைகள் இருவருமே இப்போது நல்ல வசதியோடு தான் இருக்கிறார்கள். அவர்களை இந்த நிலைக்கு கொண்டு வரச் சந்திரன் வாழ்க்கையில் தொலைத்தது ஏராளம்.
சந்திரன் வந்துவிட்டுச் சென்ற இரண்டு நாட்களுக்குப்பிறகு, சந்திரன் காலமான தகவல்தான் மாதவனுக்கு வந்தது. உடனே பதறி அடித்துக்கொண்டு சந்திரன் வீட்டிற்குச் சென்றான். சந்திரன் மனைவி கதறி அழுதது, மனதை என்னவோ செய்தது. எல்லோரும் ஒரு நாள் இறக்கப்போவது நிச்சயம் என்றாலும், நம் மனது அதை ஒத்துக்கொள்ள மறுக்கிறது. “செத்த பிணத்தைச் சுற்றி இனிச் சாம் பிணங்கள் கத்தும் கணக்கென்ன? கச்சி ஏகம்பனே “ என்னும் பட்டினத்தார் பாடல் சொல்வதற்கு, நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இதுவே நம் வீட்டில் நடக்கும் போது மனம் அழுது புலம்புகின்றது. சந்திரன் இறந்து 15 நாட்களுக்குப் பிறகு, மாதவன் சந்திரன் கொடுத்த ஐந்து லட்சம் ரூபாயை, சந்திரன் மனைவியிடம் கொடுத்து விட்டு வரலாம் எனப் புறப்பட்டான்.
மைதிலி அவனைப்பார்த்து “என்னங்க, நான் ஒண்ணு சொன்னாக் கோச்சுக்க மாட்டீங்களே? சந்திரண்ணன் பணத்தை அவர் மனைவி கிட்ட கொடுக்கிறது தான் நியாயம்! ஆனா, அந்தப்பணத்தை, அவுங்க புள்ளைங்க எடுத்துக்கிட்டு, அந்த அம்மாவை, தெருவில விட மாட்டங்கன்னு என்ன நிச்சயம் “ என்றாள். ”அதுக்கு என்ன பண்ணலாமுன்னு சொல்ற?“ என்றபடி கோபத்தோடு மைதிலியைப் பார்த்தான் மாதவன். ”இல்லங்க, நீங்களும் உங்க வியாபாரத்துக்குப் பணம் தேவைப்படுதுன்னு தவிச்சுக்கிட்டு இருக்கீங்க! இந்தப்பணத்தை உங்க தொழில்ல போடுங்க. கொஞ்ச நாள் கழிச்சு, அவுங்க வீட்டில நிலமை சரியானதுக்கு அப்பறம், வட்டியோட சேத்து, பணத்தை, சந்திரண்ணன் சம்சாரத்துக்கிட்ட கொடுத்துருவோம் “ என்று மைதிலி நீட்டி முழக்கினாள்.
மனிதன் சபலம் உள்ள ஒரு கடவுளின் படைப்புத் தானே! மனைவி சொல்லும் நல்ல யோசனைகளை எடுத்துக்கொள்கிறோமோ இல்லையோ! நமக்கு லாபம் கிடைக்கும் விசயம் என்றால் சரி என்று தான் நினைப்போம்.”சரி யோசிப்போம் “ என்றவாறு , மாதவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் யோசனையைத் தள்ளி வைத்தான்.
சாமி கும்பிட்டு வீட்டுக்கு வந்த மாதவனுக்கு ஒன்று நன்றாகப் புரிந்தது. சிறுபிள்ளைகளுக்கு இருக்கும் உறுதி, மற்றும் நம்பிக்கை, நாணயம், மனிதன் வளர வளரக் குறைந்து, முடிவில் இல்லாமலே போய்விடுகிறது. அடுத்த நாள் காலை மூன்று பேருக்கு நன்றாகவே விடிந்தது. கிடைத்தது தங்க நாச்சியாருக்கு பலூன், சந்திரன் மனைவிக்கு வயதான காலத்திற்குத் தேவையான வாழ்வாதாரம், மாதவனுக்கு மன நிம்மதி.