பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

31554314645_161d145bff_z
15726697_1192889637431900_1356396708607082567_nசாந்தி மாரியப்பன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (07.01.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி (93)

  1. அணிற்பிள்ளை 

    பிள்ளை பிள்ளை அணிற்பிள்ளை
    கொட்டை உண்ணும் செல்லப்பிள்ளை
    பழமோயென மண்ணில் கிடப்பதை
    எடுத்து வாயில்வைக்கும் சின்னப்பிள்ளை! 

    முதுகின்மேல் மூன்று கோடுகள்
    பட்டை தீட்டிய அழகுப்பிள்ளை
    மரக்கிளையிலும் தரையிலும்
    தாவி ஓடும் கலைப்பிள்ளை! 

    மூப்பிலும் மென்மை மாறா தோல்
    வளமை கொண்ட இளம்பிள்ளை
    குட்டிகளைத் தத்தெடுத்தும்
    பாலூட்டும் தாய்மைப்பிள்ளை! 

    தென்னைநாரில் பஞ்சில்  
    கூடு கட்டும் அறிவுப்பிள்ளை
    வளைந்த கூரிய நகங்களால்
    மரங்களை இறுகப்பற்றும் வீரப்பிள்ளை! 

    பிள்ளை பிள்ளை அணிற்பிள்ளை
    கொட்டை உண்ணும் செல்லப்பிள்ளை
    பழமோயென மண்ணில் கிடப்பதை
    எடுத்து வாயில்வைக்கும் சின்னப்பிள்ளை! 

    … நாகினி 

  2. அகரம் கற்றுக்கொடுத்த அரிச்சுவடி நண்பன் நீ!
    அனில் பிள்ளையெனும் அழகுப் பெயர் கொண்டவன் நீ!
    சேது பந்தனம் அமைக்கயிலே
    மண் சுமந்த மனித நேயன் நீ!
    உயிரினம் மொத்தமும் ஆண்டவன்
    படைப்பு!
    உதவி செய்தது உந்தன் சிறப்பு! பரிசாய் கிடைத்தது மூவர்ணக்கோடு!
    அன்னல் ராமனும கொடுத்தார் உவப்போடு !
    முன் காலிரண்டை கையாக்கி
    கொய்யாக்கனி அதில் ஏந்தி
    உண்ணும் எழில் காண
    கண் இரண்டு போதாது!
    அழகாய் மரத்தில் கூடமைத்து
    குட்டிகளை காத்திருப்பாய்!
    நீ ஓய்வாய் இருந்து ஒரு நாளும் பார்த்ததில்லை!
    மரத்தை விட்டு மண்ணுக்கு வந்த
    கதை என்ன?
    மரத்தை அழிக்கும் மனிதனுக்கு
    அறிவுரை சொல்ல வந்தாயோ !
    இயற்கை அழிந்தால் இன்னல் வரும் என்பதனை
    பாங்காய் சொல்ல வந்தாயோ!
    பழத்தை உண்பதை விட்டுவிட்டு
    கண்டதை தின்பது சரியாமோ !
    செயற்கை உணவை தின்பதெல்லாம்
    மனிதன் செய்யும் மூடத்தனம் !
    மறந்தும் அதை நீ செய்யாதே !

  3. அதிசய அணிலே

    அணிலே அணிலே அதிசய் அணிலே
    ஆச்சர்யத்திலே மூழ்கிறேன் உனைக் கண்டு
    இயற்கைப் பேரிடர்கள்
    உன்னையும் விட்டு வைக்கவில்லை
    ஊரே தத்தளித்தது புயலில்
    எங்கு இருந்தாயோ எப்படி இருந்தாயோ
    ஏறெடுத்துப் பார்ப்பார் எவருமில்லை
    ஐய்யம் கொண்டேன் நின் இருப்பைப் பற்றி
    ஒரு மரம் கூட நிற்கவில்லை
    ஓடி ஓடி எங்கு வாழ்ந்தாய்
    ஓளவையைப் போல உன்னைப் புகழ‌
    கவியேதுமறியேன்….
    கற்றேன் புது பாடம் உன்னிடம்
    வாழ்க்கை வாழ்வதற்கே
    சாவதற்கல்ல‌
    வாழ நினைத்து விட்டால்
    சேதனையை சாதனையாக்க வேண்டுமென‌
    துளிர் விடும் மரத்திற்காக‌
    துணிவுடன் வாழ்கிறாய் மண்ணில்
    மண் இருக்கும் வரை
    மரம் இருக்கும்
    மரம் சாய்ந்தாலும்
    வேர்கள் சாவதில்லை
    துன்பத்தைக் கண்டு துவளாத நின்னைக் கண்டு
    என்னுள்ளும் துளிர்க்கிறது
    நம்பிக்கையெனும் வேர்

  4. அணில் சொல்லும் அற்புத பாடம்!..

    ஓராயிரம் நெல்லை உரித்தெடுக்குமியந்திரத்தால்
    ஒருநெல்லை உடையாமல் உரித்தெடுக்கயுனைபோல் முடியுமா?..

    ஒருகையால் சாப்பிடும் மனிதர்களுடன்
    இருகையால் சாப்பிடும்நீ யவனுக்குநண்பனானாய்

    உணவுக்காக விட்டுக்கொடுக்க மனமில்லையென்றாலும்
    உறவுக்காக காக்கையுடன் விளையாட்டுச்சண்டையிடுவாய்!

    பறவைக் கூட்டில் முட்டையைத்தேடி
    பாம்பொன்று விழுங்கவரும் போது…

    நக்கிப் பிழைக்கும் நச்சுப்பாம்பை
    நடுங்கும் குரலில் எச்சரிப்பாய்!

    பாம்பென்றால் படைநடுங்கு மென்பார்கள்
    பயப்படாமல் கிரீச்சிட்டு எதிரியை விரட்டுவாய்!

    தூக்கணாங்குருவிக்கு தூக்கம்வரும்போது
    துணைநிற்பாய், கூடுகட்ட நார்கொடுத்துதவுவாய்!

    ஆபத்தென்று வரும்போது, அடிபடாமல்தாவுவதை
    ஆறறிவுக்கும்கூட அருமையாகக்கற்றுக்கொடுப்பாய்!

    வாலின் முடித்தூரிகையைத் தந்துதவி…
    வண்ணஓவியங்களுக்கு உயிரூட்டுவாய்!

    முதுகு வளைந்து நாணியதாலோ?யுனை
    முதுகுநாணி இனமென்பார்கள்?..

    தோலாத தனிவீரன் முதுகிலுனை வருடியதால்…
    துணையான தோழனானானாய், மானுடருக்கு…

    முதுகில் மூன்று கோடுகளோடு வரம்பெற்று…
    முத்திரை பெற்றன்புடன் அணிப்பிள்ளையென
    அழைக்கப்பட்டாயோ!

    வாயில்லா ஜீவனானலும்
    வாயைசைத்து அரைக்காவிடில்

    வாழ்ந்து விடமுடியாதென்று
    வாழ்வியல் பாடம் சொன்னாய்!

    பிள்ளையில்லையெனவரம் வேண்டுவோருக்கு
    தத்துப்பிள்ளை உண்டெனஓர் அற்புதவழிசொன்னாய்!

  5. அணிலே ஒரு சேதி…

    இராமன் தடவியதில்
    கோடு வந்தது,
    மனிதன் தடவினால்
    கேடு வந்துவிடும்..

    கேட்டுக்கொள் அணிலே
    கூட்டுக்குள் இருந்துகொள்,
    மாட்டிக்கொண்டால்
    அதையும் பிரித்து
    வேட்டையாடிவிடுவான்..

    உன்பசிக்கு
    ஓன்றும் கொடுக்கமாட்டான்,
    பழத்தைத் தின்று நீ
    பாதியை மீதிவைத்தால்,
    அணில் கடித்த பழம்
    அதிக சுவையென்று
    அதையும் பறித்திடுவான்..

    வயிற்றிலடிப்பது அவன்
    வாடிக்கைதான்,
    அதனால் அவன்
    கிட்டே வராதே,
    எட்டியே செல் எப்போதும்…!

    -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.