Featuredஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்

சித்தர் பாடல்கள் வெளிப்படுத்தும் கல்வியியல் சிந்தனைகள்

-ச. பிரியா

        கல்வி மனித வாழ்விற்கு இன்றியமையாது வேண்டப்படும் ஒன்றாகும். கல்வி அறிவில்லாத சமுதாயம் என்றும் முன்னேறுவதில்லை இது வரலாறு. கல்வி என்பது வாழ்க்கையில் தோன்றும் அறியாமையை நீக்கி, அறிவைக் கொடுப்பதாகும். அனைவருக்கும் கல்வி என்பது அரசியல் நிர்ணயச்சட்டத்தின்படி அடிப்படைத்தேவைகளில் ஒன்றாகும். இதன்படி கல்வி குறித்து சித்தர்கள் அவர்கள் காலத்திலேயே சிந்தித்து, பல கருத்துக்களை எடுத்துரைத்துள்ளனர் அதனை விளக்குவதாகவே இக்கட்டுரை அமைகிறது.

கல்வியின் சிறப்புகள்

கற்கை நன்றே கற்கை நன்றே
    பிச்சைபுகினும் கற்கை நன்றே”     (நறுந்தொகை – 35)

என்று அதிவீரராம பாண்டியனும்,

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
      பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே”      (புறம் – 183)    என்று பாண்டியன் நெடுஞ்செழியனும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து கூறியுள்ளனர். எனவே கல்வி என்பது எல்லாருக்கும் பொதுவானது. எந்தத் தனிப்பட்டவருக்கும் சொந்தமானது அன்று. அதனால்தான் எல்லாரும் கற்க வேண்டும். பிச்சைப்பெரினும் கற்றல் நன்று என்று கூறியுள்ளனர் நம்முன்னோர்கள்.

கல்வி – உயர்ந்தோர்

     கல்வி அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். முன்னைப் பழங்காலத்தில் எந்தத்தொழில் செய்து வந்தாலும் எக்குடியில் பிறந்திருந்தாலும் எந்தவித தடையும் இன்றி கல்விகற்று வந்தனர். ஆரியரின் வருகைக்குப் பிறகே நிலைமை தலைகீழாக மாறியது எனலாம். நால்வகை வருணப்பாகுபாடுகள் தோன்றியதன் அடிப்படையில் கல்வி என்பது ஒரு சாராருக்கு உரியதாக மாறிப்போனது. இதனை,

     “ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன”      (தொல்.அகத்.26) என்ற தொல்காப்பிய அடிகளின்வழி அறியலாம். இதற்கு உரைகூறும் நச்சினார்க்கினியர்,

  “…அம்மூன்றனுள் ஒதற்பிரிவும் தூதிற் பிரிவும் அந்தணர் முதலிய முவரிடத்தன என்றவாறு. எனவே ஒழிந்த பகைவயின் பிரிவு அரசர்க்கே உரித்தென மேலே கூறுப. உயர்ந்தோரெனக் கூறலின் வேளாளரை ஒழித்தாரென்றுணர்க.” (ப-54)

எனக் கூறியுள்ளார். இதன்படி நச்சினார்கினியர் உயர்ந்தோர் எனக் கருதுவது அந்தணர், அரசர், வணிகரையே. இம்மூவர் மட்டுமே உயர்கல்வி கற்கவும் வெளிநாடு செல்லவும் தகுதி படைத்தவர்கள். நான்காம் சாதியினருக்கு அவ்வுரிமை கொஞ்சமும் இல்லை எனத்தெரிகிறது.

    நாலாம் சாதியாம் சூத்திரர்கள், உழைக்கும் வர்க்கமாகிய பெரும்பான்மை மக்கள் படிக்கவே கூடாது எனத் தடைபோடப்பட்டது. அப்படி மீறிப் படித்தவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டதாக மனுதர்ம விதி கூறுகிறது. என்பதை,

     “ சூத்திரன் படித்தால் நாவை அறுக்க வேண்டும். படிக்கக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்”. (ப.49)

என்ற வரிகளின்வழி அறியலாம். ஒருவன் படிக்கக் கூடாது என அறிவுக்கு தடைபோடும் மனுநீதிக்கு எதிராக முழக்கம் இட்டவர்கள் சித்தர்கள் ஆவர்.

இவர்கள் கூறும் கல்விமுறை ஒழுக்கத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் குறிக்கிறது. ஆனால் சித்தர்களின் காலக்கட்டதில் குருகுலக் கல்விமுறை பயிலப்பட்டதை,

“மூங்கிலை வெட்டி நார் உரித்துப் பதப்படுத்தி நூல்களைத் தயாரித்தனர். அவை புத்தகம் என்றழைக்கப்பட்டன. அரச குடும்பத்தைச் சார்ந்தவர்களும் அந்தணர்களும் மற்றும் வசதி மிகுந்தவர்களுமே கல்வி கற்றனர். கல்வியும் வேதங்கள் ,சாத்திரங்கள், இதிகாசங்கள், புராணங்கள் முதலானவற்றைக் கற்பிப்பதாகவே அமைந்திருந்தது. நாட்டில் வேத பாடசாலைகள் இருந்தன. குருகுலமுறையில் கல்வி கற்பிக்கப்பட்டது” என்ற இளமதி சானகிராமன் கருத்தால் குருகுலக்கல்வியும் வேதசாத்திரங்கள் பயிலப்பட்டதையும் அறியமுடிகிறது. (ப-211)

       சித்தர்கள் கல்விமுறையானது மக்களின் அறிவை வளர்க்காமல் அறியாமை நிலைக்கு இட்டுச்செல்வதால் அர்த்தமற்றது, பொய்யானது என்று சாடினர். மேலும் பிராமணர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற நியதியைக் கண்டு சீற்றம் கொண்டனர். சித்தர்களின் காலம் 15ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். இக்காலக்கட்டத்தில் நாயக்கர்கள் முதலான வேற்று மன்னர்களின் ஆட்சியில் தமிழகம் சிக்கியது. இக்காலநிலையில் கல்விநிலை குறித்து

      “திருமலைநாயக்கர் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வருகின்றார். இதில் 3000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இலவசமாகச் செய்து தரப்பட்டுள்ளன. இதில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பிராமணர்களே. அவர்களைத் தவிர வேறு எவருமே இல்லை” என்று இராபர்ட் டி நொபிலி குறிப்பிடுகிறார். (ப.54). இவர் கருத்திலிருந்து பிராமணர்கள் தவிர மற்றவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதை அறியமுடிகிறது.

      சித்தர்கள் பிராமணர்கள் தவிர மற்றவர்கள் கல்விபயில மறுக்கப்பட்டதையும் கல்வியாகக் கற்பிக்கப்பட்ட வேதபுராண சாத்திரங்களையும் கடுமையாக விமர்சித்தனர். ஏட்டுக்கல்வியானது பொய்க்கல்வி என்பதை,

      “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கிங் கெய்திடாது” (பாம்.சித்.பா.129)

என்ற வரியில் ஏட்டுக்கல்வி வாழ்க்கைக்கு உதவாது என்பதை உணர்த்துகிறது. இதனை நாம் நடைமுறையில் நன்கு அறிந்துகொள்ளமுடிகிறது. இன்றைய இளைஞர்களில் பலர் பார்க்கும் பணிக்கும் படித்த படிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்பதை அறியலாம். மேலும்,

  “பொய்யான கல்விகற்றுப் பொருண் மயக்கம் கொள்ளாமல்
    மெய்ஞானக் கல்வி விரும்புவாய் கன்மனமே ”    (இடை.சித்.பா.249)

என்ற வரிகளில் பகுத்தறிவு கொண்டு எதனையும் ஆராய்ந்து கூறும் மெய்க்கல்வியை கற்றால் மட்டுமே வாழ்வி ஈடேற்றம் கிடைக்கும் என்று இடைக்காடர் அறிவுறுத்துகின்றார்.

        “ சதுர்வேதம் அறுவகைச் சாத்திரம் பல
         தந்திரம் புராணங்களைச் சாற்று மாகமம்
        விதம்வித மானவான வேறு நூல்களும்
   வீணாண நூல்களே யென்றாடு பாம்பே”   (பாம்.சித்.பா.54)

 என்ற பாடலில் பாம்பாட்டிச்சித்தர் நால்வகை வேதங்கள் ஆறுவகைச் சாத்திரங்கள், புராணங்கள், தந்திரம் ஆகமம் ஆகிய அனைத்தும் வீணாண நூல்கள் என்று குறிப்பிடுகின்றார். இவையாவும் பிதற்றல்களே என்று சிவவாக்கியரும் குறிப்பிடுகிறார், இதனை,

       “ நட்டதாவரங்களும் நவின்ற சாத்திரங்களும்
             இட்டமான ஒமகுண்ட மிசைந்த நாலுவேதமும்
          கட்டி வைத்த புத்தகம் கடும் பிதற்றி தற்கெலாம்
          பெட்டதாய் முடிந்தே பிராணயான றியயோ”   (சிவ.பா.184)

என்ற பாடலின்வழி மெய்ஞானமாம் இறைவனின் அருளை அடைந்தவர்களுக்கு மற்ற அனைத்தும் பிதற்றல்கள் என்று சாடுகின்றார்.

       சித்தர்கள் மெய்ஞானமான இறைஞானம் பெற்றால் மற்றவை எல்லாம் தேவையில்லாதது என்கின்றனர். இதனை சுவாமி விவேகானந்தரும்,

     “கல்வி என்பது இயற்கையாக மனிதனுள்ளே புதைந்துள்ள தெய்வீகமான பூரணத்தை வெளிக் கொணர்வதாகும்.” (ப-1).

       எனவே ,பொய்யான புராண சாத்திரங்கள் தேவையில்லாதது. இயற்கையில் உள்ள தெய்வீகத்தை வெளிக்கொணர்வதே அடிப்படைத்தேவை என்று சித்தர்கள் கூறுகின்றனர்.

        தமிழகத்தில் சித்தர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். உலக வாழ்வு பற்றியும் உலகப்பொருள்கள் பற்றியும் மிகுதியாகச் சிந்தித்தவர்கள். இறுதியில் அனைத்துமே மாயை என்ற முடிவிற்கு வந்தவர்கள். நாம் சித்தர்கள் வரிசையில் முதலில் சொல்லக்கூடியவர் திருமூலர்தான். திருமந்திரத்தில் கல்வி, கேள்வி, கல்லாமை என்னும் முத்தலைப்பில் முப்பது பாடல்களில் கல்விகுறித்துக் குறிப்பிடுகிறார்.,

   தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படும் கல்வி, கேள்வி, கல்லாமைக்கும் திருமூலர் சொல்வதற்கும் வேறுபாடுகள் சற்று மிகுதி. அவர்கள் எல்லாம் லோகாயதத்தை (பொருள் முதல்வாதம்) சொன்னார்கள் என்றால், திருமூலர் மெய்ஞ்ஞானத்தைச் (கருத்தியல் வாதம்) சொல்கிறார்.” என்று மு.அண்ணாமலை குறிப்பிடுகிறார். (தமிழ் நாட்டில் கல்வி அன்றும் இன்றும் ப.130)

கல்வியே தக்கதுணை

மனிதனுக்குக் கடைசிவரை தக்க துணையாக இருப்பது கல்வி மட்டுமே, மற்ற பொன், பொருள், உறவுகள் அனைத்தும் துணையாவதில்லை. என்பதை,

    “துணையது வாய்வருந் தூயநற் சோதி
        துணையது வாய்வருந் தூயநற் சொல்லாம்
        துணையது வாய்வருந் தூயநற் சந்தம்
        துணையது வாய்வருந் தூயநற் கல்வியே”      (திருமந். 294)

என்ற பாடலில் திருமூலர் மனிதனுக்கு கடைசியில் துணையாக வருவது தேடிய புகழ், சொன்னசொல், கற்றகல்வி ஆகியவை மட்டுமே என்கிறார்.

  “ கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு” என்று அவ்வையாரும்,

  “யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்
   சாந்துணையும் கல்லாத வாறு”   (குறள்- 394)

 என்று கற்றவர்களுக்கு எல்லா இடங்களிலும் கல்வியே துணையாக வரும் என்ற கருத்தும் இவண் ஒப்புநோக்கத் தக்கதாகும்.

அனுபவஅறிவு – பட்டறிவு

     கல்வியில் ஒன்று அனுபவக்கல்வி ஆகும். வாழ்க்கையில் உணர்ந்த பட்டறிவே அனுபவ அறிவாகும். இந்த அறிவு ஒருவனை எந்தச் சூழலிலும் கைவிடாதது என்கிறார்.

         “ பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின்
          முற்றது எல்லா முதல்வன் அருள்பெறின்
          கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
          கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே ” (திரு- 298)

என்ற திருமந்திரவரிகள் பட்டறிவு பெற்றவர்கள் பேரின்பம் பெற்றவர்கள் என்கிறது. மேலும்,

        “ கணக்கறிந் தார்க்கன்றிக் காணவொ ண்ணாது
         கணக்கறிந் தார்க்கன்றிக் கைகூடாக் காட்சி
        கணக்கறிந் துண்மையைக் கண்ட நிற்கும்
        கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே”           (திரு.316)

என்ற பாடலில் அனுபவக்கல்வியாம் மெய்ஞ்ஞானக் கல்வியே இறைவனை அடைய உதவும். மெய்ஞ்ஞானமே உண்மையான கல்வி என்று கூறுகிறார் திருமூலர்.

    எனவே சித்தர்கள் கூறும் கல்வி அனுபவக்கல்வி ஆகும். இது உண்மைப் பொருளை உணர்ந்தறியும் மெய்ஞ்ஞானக் கல்வியை குறிக்கிறது. உலகியல் அறிவைத் தரும் பள்ளிக்கல்வியையும் வேத புராண, சாத்திரக் கல்வியையும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

     சித்தர்களின் கல்வி குறித்த சாடல்களும் ஏசல்களும் நவீன உலகிற்கும் பொருந்தும். இன்றைய கவிஞர்கள் கல்விமுறை குறித்து,

        “ புத்தகங்களே
         சமர்த்தாய் இருங்கள்
         குழந்தைகளைக்
         கிழித்து விடாதீர்கள்”                  (பித்தன் ப.80)

என்றும்

  “ குழந்தைகளே பாடப்புத்தகங்களாக
            இருக்கிறார்கள்
           அவர்கள் கையில் ஏன்
           காகிதக்குப்பைகளைத் தருகிறார்கள்” (பித்தன் ப-80)

 என்ற கவிதையில் அப்துல் ரகுமான் புத்தகங்களைக் காகிதக்குப்பைகள் என்று கூறுகின்றார். எதிர்கால வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொள்ள ஏட்டுக்கல்வி வழிகாட்டவில்லை என்பதை கூறுவதில் சித்தர்களின் சாடல்முறையை நவீன கவிஞர்களும் பின்பற்றுகின்றனர்.

முடிவுரை

 • கல்வியில் எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் மெய்மையை விளக்கும் கல்வியே மெய்ஞ்ஞானமாகும்.
 • சித்தர்கள் மெய்ம்மையியல் விஞ்ஞானிகளாகவும் அறிவுத்துறை விஞ்ஞானிகளாகவும் செயல்பட்டிருந்தார்கள் என்பதை அறியமுடிகின்றது.
 • திருமூலர் அனுபவக்கல்வியாம் மெய்மைக்கல்வியை வலியுறுத்துகிறார். மற்ற சித்தர்கள் வேதபுராணக் கல்வியாம் ஏட்டுக்கல்வியைக் கடுமையாகச் சாடியுள்ளனர். ஏனெனில் புராணக்கல்வி என்பது ஒருசாராருக்கு மட்டுமே உரிய கல்வியாகவும் கற்பனைக்கல்வியாகவும் அமைகிறது.

துணைநின்ற நூல்கள்

 1. சி.எஸ்.முருகேசன், சித்தர் பாடல்கள், (பெரியஞானக்கோவை) சங்கர் பதிப்பகம், சென்னை-49, 2012.
 2. பரிமேலழகர் (உ.ஆ), திருக்குறள், சாரதா பதிப்பகம், சென்னை-14, 2004.
 3. தொல்காப்பியம், பொருளதிகாரம், சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை-18, 2001.
 4. அப்துல் ரகுமான், பித்தன், நேசனல் பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2003.
 5. மு.அண்ணாமலை, தமிழ்நாட்டில் கல்வி அன்றும் இன்றும் ,அம்மன் புத்தகக் குழுமம், சென்னை- 5, 2005.
 6. இளமதி சானகிராமன், சித்தர் இலக்கியம், கோகுலம், புதுச்சேரி- 8.2007.
 7. அவ்வை.சு.துரைசாமிப்பிள்ளை(உ.ஆ), புறநானூறு, கழகவெளியிடு, சென்னை-18,ம.ப.2007.
 8. கி.நாகராசன், மலரும் இந்தியச்சமுதாயத்தில் கல்வி, இராம் பதிப்பகம், சென்னை-93,2009.

 

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க