-எம். ஜெயராமசர்மா – மெல்பேண்,  அவுஸ்திரேலியா

     கலியுகத்தில்  கண்கண்ட தெய்வமாக கந்தப்பெருமான் விளங்குகின்றார். அவரது அருங்கருணையால் அனைவருக்கும்  அல்லல் அகன்று அகமகிழ்வு ஏற்பட வழி பிறக்கிறது. அடியார் ஓரடி நடந்தால் ஆண்டவன் நூறடிவருவான். அடியார் நூறடி நடந்தால் ஆண்டவன் ஆயிரமடி வருவான் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். முருகா என்று ஒருமுறை அழைத்தால் – இம்மைக்கும் மறுமைக்கும் என்றுமை நல்லதையே முருகப்பெருமான் நல்குவான். அந்த அளவுக்கு அளப்பரும் ஆற்றல் கொண்டவன் முருகப்பெருமான்.

    கலியுகத்தில் எவர் வாயிலும் முதலில் வருகின்ற வார்த்தை ” முருகா ” என்பதே யாகும். ஓம்முருகா – ஓம்முருகா – என்று அழைக்கும் பொழுது , உள்ளமெலாம் பூரிக்கின்றது! உடலிலே ஒருவிதப் பரவசம் உருவாகிறது! உணர்வுகள் தூய்மை அடைகின்றன.

   அழகு, ஆற்றல், கருணை நிரம்பிய முருகப்பெருமானுக்குப் பல விசேட தினங்கள் இருந்தாலும் ” தைப்பூசம் ” மிகவும் சிறப்பானதாக அடியவர்களால் முருகனுக்குரிய சிறப்புத் தினமாக கொண்டாடாப் பட்டுவருகிறது.

    தைமாதத்தில் பெளர்ணமியில் வருகின்ற பூச நட்சத்திரத்தன்று முருகனுக்கு உகந்த தினமாக நீண்ட காலமாகத்  தைப்பூசப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது எனலாம்.

    இந்த விழா இன்று நேற்று ஏற்பட்டதல்ல. தேவாரம் பாடிய செல்வக் குழந்தை திருஞான சம்பந்தர் காலம் முதல் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. பழைய இலக்கியங்களிலும் இவ்விழா பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

    முருக வழிபாடு பழைமை வாய்ந்தது. தைப்பூசத்தோடு முருகப் பெருமான் பல நிலைகளில் இணைக்கப்படுகிறார். முருகனது அவதாரமே மிகவும் அற்புதமானது.

    முருகன் என்னும் நாமம்கூட மிகவும் அர்த்தம் பொதிந்தாகக் கருதப்படுகிறது.

முருகு – என்றால் இளமை.முருகன்  – என்றால் அழகன் என்றும் இளமையானவன் என்றும் கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. முருகன் என்னும் பெயரில் தமிழின்
வல்லின , மெல்லின, இடையின எழுத்துக்கள் இடம்பெறுகின்றன. இதனால்   முருகப்பெருமானை தமிழுடன் இணைத்துப் பேசுவார்கள். அதுமட்டுமல்ல முருகன் என்றாலே தமிழே வடிவானவன் என்னும் ஓர் எண்ணமும் மேலோங்கி நின்று முருகப்பெருமான் தமிழ் மயமாகவே விளங்குகிறார் என்று சொல்லிப் பெருமைப்படும்  நிலையும் இருப்பதையும் கண்டுகொள்ளலாம்.

     ஆண்டவனிடம் வரம்பெற்று அந்தவரத்தை  நல்வழியில் பயன்பபடுத்தாது – ஆணவத் தால் அறவழியை மறந்து –  தேவர்களுக்கே துன்பம் செய்யத் துணிந்துவிட்டான் சூரபதுமன் எனும் அரக்கன். ஆணவம் எங்கு மேலோங்குகிறதோ அங்கு ஆண்டவனின் சக்தி தோன்றி அதனை
அழித்துவிடும். அந்த பெரும் சக்தியாக உருவெடுத்த நிலைதான் முருகன் அவதார மாக அமைகிறது.

   “அருவமும் உருவமாகி
      அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
      பிரமாய் நின்றஜோதி
      பிழம்பதோர் மேனியாகி
      கருணைகூர் முகங்களாறும்
      கரங்கள் பனிரண்டும் கொண்டு
      ஒருதிரு முருகன் வந்தாங்கு
      உதித்தனன் உலகம் உய்ய”

  முருகனது பிறப்பைப் பற்றிக் கந்தபுராணம் இவ்வாறு காட்டுகிறது. அரக்கரை அழித்து ஆணவத்தை அகற்றி அறம்தழைக்கச் செய்ய முருகன் வந்துதித்த தினமே தைப்பூசத்திருநாளாகப் முருகப்பெருமானது ஆலயங்கள் தோறும் கொண்டாடப் பட்டு வருகிறது என ஒரு வரலாற்றுக் கதையும் நிலவுகிறது.

     உமையம்மன் கொடுத்த வேல் என்னும் ஆயுதத்தால் அட்டூழியம் புரிந்த அரக்கனை வதம்செய்து வெற்றிகொண்ட  தினமாகவும் தைப்பூச விழா அமைகிறது என்று ஒரு கதையும் சொல்லப்படுகிறது.

    இவற்றைவிட மேலும் ஒரு கதையும் தைப்பூசத்துடன் தொடர்பு படுத்திச் சொல்லப் படுகிறது. சிவனால் பார்வதிக்கு மந்திரம் ஒன்று உபதேசிக்கப்படுகிறது. அவ்வேளை முருகன் அதை மறைந்திருந்து கேட்கவே – பார்வதி கோபங்கொண்டு சபித்திட முருகன் கோபித்து திருப்பரங்குன்றம் சென்று இருந்திட – சிவனும் பார்வதியும்  சென்று சாபத்தை மீளப்பெற்று முருகனை அரவணைத்த தினமே தைப்பூசம் என்றும் சொல்லப்படுகிறது.

    இக்கதைகளை வைத்துப் பார்க்கின்றபொழுது – தைப்பூசம் என்னும் தினமானது முருகப்பெருமானுடன் நெருங்கிய தொடர்புடைய தினமாகவே இருக்கிறது என்பதே இங்கு முக்கிய அம்சமெனலாம்.

      முருகன் தோற்றத்துடன் பிரகாசம் சம்பந்தப் பட்டிருக்கிறது.சிவனின் நெற்றிக்
கண்ணிலிருந்து வெளிப்பட்ட அக்கினிப் பொறி சரவணப் பொய்கையில் விழுந்து ஆறுமுகன் அவதரிக்கிறார் என்பதைக் கந்தபுராணம் வாயிலாக அறிகின்றோம். ஒளிப் பிழம்பான முருகன் – ஒளிநிறைந்த பெளர்ணமி தினத்துடன் இணைக்கப்பட்டது மிகவும் பொருத்தமானது என்றே எண்ணமுடிகிறதல்லாவா ?

       தைபிறந்தால் வழிபிறக்கும். தைப்பொங்கல் சூரியனுக்குரியது. சூரியன் வெப்ப மயமானவன். சூரியனுக்குரிய பொங்கலையடுத்து வருகின்ற பெளர்ணமி சிறப்புடை யது. அந்தத்தினத்தில் வருகின்ற பூசமும் சிறப்புடையது. இத்தகைய காரணங்கள் தைப்பூசத்துடன் முருகப் பெருமான் இணைக்கப்பட்டது பொருத்தமாய் இருப்பதாகத் தெரிகிறதல்லவா ?

       தைப்பூசம் மிகவும் முக்கியத்துவம் மிக்கது என்பதற்கு – சம்பந்தப்பெருமானே தனது தேவாரத்தில் குறிப்பிட்டிருப்பதும் நோக்கத்தக்கது.

   “மைப்பூசும் ஒண்கண் மடநல்லூர் மாமயிலை
    தைப்பூசும் நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
    நெய்ப்பூசும் ஒண்புகழ் நேரிழையார் கொண்டாடும்
    தைப்பூசம் காணாது போதியோ பூம்பாவாய் ”    

     சைவத்தமிழ் மக்கள் செறிந்துவாழும் தென் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர்,  மலேசியா, தென்னாபிரிக்கா, பிரான்ஸ், கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, போன்ற நாடுகளிலும் – தமிழரல்லாத மக்கள் வாழுகின்ற கேரளப்பகுதிகளிலும்கூட தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

     வித்தியாரம்பம், காதுகுத்தல், புதுக்கணக்கு ஆரம்பித்தல், புதிய முயற்சிகள்
தொடங்குதல் எனப் பல சுபநிகழ்ச்சிகளை ஆரம்பிக்கும் நாளாகவும் தைப்பூசம். முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.

    பலவிதமான காவடிகள் எடுத்துத் தங்கள் குறைகளைப் போக்கும் தினமாக அடியார் கள் தைப்பூசத்தினத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். காவடிகளிலே  பல வகையுண்டு.

பாற்காவடி, பன்னீர்காவடி, புஷ்பக்காவடி, சந்தனக்காவடி, பறவைக்காவடி , இவற்றோடு – தமது உடலை வருத்தக்கூடிய பலவித நிலைகளையும் இணைத்து  அடியார்கள் முருகனை வழிபடும் தினமாகவும் தைப்பூசம் விளங்குகிறது.

 ” தீபமங்கள ஜோதி நமோநமோ” – ” ஒளிவளர் விளக்கே ”

” ஆதியும் அந்தமுமில்லா அரும்பெருஞ்சோதி ” –

      ” சோதியே சுடரே சூழொளி விளக்கே ”  – இவையனைத்தும் இறைவன் ஒளி
வடிவானவன், பிரகாசமானவன் என்பதையே காட்டுகின்றன எனலாம்.முருகனே ஒளிவடிவானவன்.ஜோதிப்பிழம்பாயிருந்து வந்தவனே முருகன்.

      உலக இயக்கத்துக்கு ஒளியும் வெப்பமும் இன்றியமையாத சக்திகளாகும். உயிர்வாழ்வதற்கும் உற்பத்திக்கும் இவையிரண்டுமே அவசியமானதேயாகும். அந்தச் சக்தியாக முருகப்பெருமானே விளங்குகின்றான் என்பதுதான் எங்கள் சமயநம்பிக்கை ஆகும். அதனையே புராணங்களும் காட்டி நிற்கின்றன. இவையாவும் இணையும் விதத்தில் தைப்பூசம் அமைவதால்  தைப்பூசம் முக்கியச் சமயக் கொண்டாட்டமாகவும் முருகப்பெருமானுடன் தொடர்புபட்டதாகவும் இருந்து வருகிறது. எதையும் இறை உணர்வுடன் செய்கின்றபொழுது அது உன்னதத்தையே தொட்டுநிற்கும் என்பதை மனமிருத்தினால் தைப்பூசம் காண்பது யாவருக்கும்  நல்லுணர்வையே நல்கி நிற்கும்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.