-முனைவர் சு.இரமேஷ்

அறிமுகம்

பன்முகத்தன்மை கொண்ட நவீனத்துவத்துடன் விளங்கும் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். பல்வேறுபட்ட குடிமாந்தர்களின் வாழ்க்கை முறைமைகளைப் பிரதிபலிப்பது மட்டுமல்லாது பண்பாட்டுக்கூறுகளின் வடிவங்களையும் தன்னகத்தே பொதித்துள்ள கருவூலமாகத் திகழ்கிறது. அத்தகைய காப்பியத்தை எழுதிய இளங்கோ அரச மரபில் வந்தவர் என்பதோடு துறவு மேற்கொண்டவர் என்பதால் குறிப்பிடத்தக்க அம்சத்தை இக்காப்பியம் பெற்றிருக்கிறது. அன்றைய நிலையிலான அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றின் நிலையிலிருந்து உணர்த்தி நீதி, அறம், ஊழ்வினை, துறவு போன்றவற்றை போதிக்கின்ற அதேநேரத்தில்  சமூக அநீதி, கொடுமைகளும் நிகழ்ந்தேறியிருப்பது பதிவாகியிருப்பதை  இக்கட்டுரை ஆராய்கிறது. 

பொன்தொழிலாளர்கள் படுகொலை

கோவலன் கொலைசெய்யப்பட்ட நாளிலிருந்து பாண்டிய நாட்டில் மழை வளம்குன்றி பூமி வறண்டு பஞ்சம் பசி தலைதூக்கியது. வெக்கை நோய்களும் பரவின. இவற்றைக் கண்ட கொற்கையிலிருந்த வெற்றிவேற்செழியன் பாண்டிய மன்னனானதும் நாட்டின் இந்த நிலைமைக்குக் காரணம் கண்ணகியின் கடுங்கோபம்தான் எனக்கருதி ஆயிரம் பொற்கொல்லர்களை பலியிட்டுப் பூசை செய்தான். அதன்பிறகு நல்லமழை பெய்து நோய்களும் நீங்கின. மக்கள் நலம் பெற்றனர் என்பதை, இளங்கோ,

”அன்று தொட்டு பாண்டிய நாடு மழைவறம்
கூர்ந்து வறுமை எய்தி, வெப்பு நோயும்|குருவும் தொடர, கொற்கையில் இருந்த
வெற்றி வேற் செழியன், நங்கைக்கு
பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று,
நாடு மலிய மழை பெய்து நோயும் துன்பமும்
நீங்கியது”             (உரைபெறு கட்டுரை)

என்று குறிப்பிடுகின்றார். எவ்வித விசாரணையும் இல்லாமல் கோவலன் கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து பாண்டிய நாடு வளம் பெறாமைக்குக் காரணம் கண்ணகியின் கடுங்கோபமேயாகும் என்று இதற்குப் பரிகாரமாக பொன்வேலை செய்யும் ஆயிரம் தொழிலாளர்களை (பொற்கொல்லர்களை) பலி என்ற பெயரில் படுகொலை செய்தது இதயத்தை உலுக்குகின்ற கொடுமையாக இருக்கிறது. ஒரு மன்னனுக்கு இருக்கக்கூடாத பெரும் மூடநம்பிக்கையுடன் தான் தோன்றித்தனமாக செயல்படும் ஹிட்லரிசத்தின் முன்மாதிரியாகவும் பார்க்கமுடிகிறது. இத்தகைய கொடுமை இவனோடு முடியாமல் பரவலாக்கல் என்னும் நோக்கத்தில் கொங்குநாட்டின் இளவரசர் இளங்கோசர் என்பானும் இலங்கைத் தீவின் கயவாகு மன்னனும் பலியிட்டு பூசைகள் செய்திருக்கின்றனர் என்பதை உரைபெறு கட்டுரையின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. நீதிகேட்டுப் போராடிய கண்ணகி, தெய்வமாகிப் உயிர்பலி கேட்பதாகக் கருதி  பலியிட்டிருப்பது வேத ஆகம விதிப்படி பார்ப்பனிய முறையில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பது திண்ணமாகிறது. மனித பலியிடுதலை ‘நரபலி’ என்பர். இவ்வழக்கமானது தொன்மைக்காலத்திலிருந்தே வருகிறது. பலியிடுதல் பற்றிய சடங்கு முறையை யசூர் வேதத்தில் (பலிச்சடங்கு வேதம்) கூறப்படுகிறது. “யசூர் வேதத்தில் புனித அதிகாரத்தின் (பிராமணர்கள்) ஆயுதம் பலிகள் ஆகும்” என்பதை எடுத்துரைக்கிறார் எஸ்.ஜி.சர்தேசாய் (2012:184).   “கடவுளின் அருளைப்பெருவதுதான் சடங்குகளின் நோக்கம்” என்பதை எடுத்துரைக்கிறார் வி.புரோதோவ் (1988:60). பலி அக்னியில் பிறந்தது தெய்வ சோதியில் ஒன்றான அக்னி பலியிடுகிறவனின் பாவத்தை பட்சித்துப் போகும் அக்னியின் புண்ணியத்தால் பரலோகத்தில் சுடராவான்” என்று சதபத பிராமணம் குறிப்பிடுவதாக எடுத்துரைக்கிறார் தே.ஞானசேகரன்(2000:93). ஆகவே பலியிடுதல் தமிழ்ப்பண்பாட்டின் அடையாளமாகக் கருதமுடியாது. 

மாதவிக்குக் கோவலன் இழைத்த கொடுமை

மாதவி, முறைப்படியான ஆடல்கலையை நிகழ்த்தியமைக்குச் சோழ மன்னன் பச்சை மாலையையும் தலைக்கோல் பட்டமும் அதனோடு ஆயிரத்தெட்டு பொன் கழஞ்சுமாலையும் பரிசாகத் தந்தான். அம்மாலையை விலைகொடுத்து வாங்குபவர் மாதவிக்கு ஏற்ற கணவனாகலாம் என நகரின் இளைஞர்கள் கூடுமிடத்தில் ஒரு கூனிப்பெண் கூறியதைக்கேட்ட கோவலன் அதற்குண்டான விலையைக் கொடுத்து கூனியின் பின்னால் மாதவியுடன் சென்றுவிட்டான் என்பதை, 

மாமலர் நெடுங்கண் மாதவி மாலை
கோவலன் வாங்கிக் கூனி தன்னோடு
மணமனை புக்கு மாதவி தன்னோடு   (அரங்கேற்று காதை 170-172) 

என்று இளங்கோ குறிப்பிடுகிறார். ஆயிரத்தெட்டு பொன்கழஞ்சு மாலையை விலை கொடுத்து வாங்கும் பணபலமும் மனவலிமையும் பெற்றிருந்த கோவலன், அன்பு மிக்க குற்றமற்ற கண்ணகியை மணந்து சிலகாலம் மட்டுமே ஆகியிருந்தது. சந்தையில் ஒருபொருளை ஏலம் எடுப்பதுபோல் ஏதுமறியாத ஆடல் நங்கையாகிய மாதவியை போகப்பொருளாக எண்ணித் தேவைக்கேற்பப் பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறிந்துவிடலாம் என்ற யதேச்சதிகார எண்ணத்திலேயே கோவலன் மாதவியை விலை கொடுத்து வாங்கியிருக்கலாமென்று கருதமுடிகிறது. மேலும், மாதவி கணிகையர் குலம் என்பதை அறிந்து கோவலன் விலைமாதர் நோக்கில் இதை செய்திருக்கக்கூடும் என்பது புலனாகிறது.

மாதவி ஒரு பெண்குழந்தையை பெற்றெடுத்தப் பிறகு தாயையும் பிள்ளையையும் பரிதவிக்க விட்டுவிட்டு கண்ணகியிடம், “வஞ்சகமும் பொய்யும் நிறைந்த ஒருத்தியோடு உறவாடி நற்குடியில் பிறந்த பெரியோர்கள் உருவாக்கி வைத்த செல்வத்தைத் தொலைத்து விட்டு நிற்கிறேன்” என்பதை

சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி
குலம் தருவான் பொருள் குன்றம் தொலைந்த
இலம்பாடு நாணுத் தரும் எனக்கு என்ன…  (கனாத்திறம் உரைத்த காதை- 69-71)

என்று கோவலன் கூறுகிறான். இது தன் தவற்றை, தனது ஒழுக்கமின்மையை,  தன்னால் உண்டான குடும்பச்சிதைவை, மாதவியை விலைகொடுத்தேனும் வாங்கி நுகர்ந்து மீண்டும் கண்ணகியிடம் வந்துவிடலாம் என்ற இழிவான போக்கை மறைப்பதற்கான முயற்சியில் கண்ணகியைச் சாந்தப்படுத்திட ‘வஞ்சகமும் பொய்யும் நிறைந்த ஒருத்தியோடு’ என்று மாதவியைப் பழித்துரைக்கும் அவனின் கூற்று  மாதவிக்கு இழைத்த அநீதியைக்காட்டுகிறது.

பிறன்மனை நோக்குகின்றவனைக் கொல்லும் சதுக்கப்பூதம் தன்மனைக்கு துரோகம் இழைக்கும் நயவஞ்சகரைத் தண்டிக்காமல் விட்டிருப்பது அரசர், அந்தணர், அடுத்து வணிகரையும் பூதம் தண்டிக்காமல் இருந்திருப்பதை இது காட்டுகிறது. மாதவியை தவறானவள் என்று கூறிய கோவலனின் நாக்கு மாதவியின் கடிதத்தைக் கோசிகமாணியிடம் வாங்கிப் படித்த பின்பு,

தன்தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி
என்தீது என்றே எய்தியது உணர்ந்து ஆங்கு (புறஞ்சேரியிருத்த காதை 94-95)

என்ற பாடல் வரிகள் மூலம் ‘மாதவி குற்றமற்றவள் எல்லாம் என் தவறே’ என்று கோவலன் மனம் பிறழ்ந்து பேசியது மாதவிக்கு இழைத்த கொடுமை மட்டுமல்லாமல் இழந்த செல்வத்தைக் கண்ணகியின் வாயிலாகப் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்துடன் தன்வழிக்கு நடத்த முற்பட்டிருக்கிறான் என்பது தெளிவாகிறது. 

ஊழ் எனும் பெயரில் கொடுமை    

கண்ணகியின் கதை முழுதும் சாத்தனார் கூறக் கேட்ட இளங்கோவடிகள், ஊழ்வினையை முன்வைத்தே எழுதப்படுவதை,

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதுஉம்
சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் (பதிகம் 55-60)  

எனக் குறிப்பிடுகிறார். சாத்தனார் கூறிய கதையை வைத்துக்கொண்டு மனித எதார்த்த அல்லது திட்டமிட்டு நடத்திய தவறுகளுக்கெல்லாம் ஊழ்தான் என்பதை அவ்வப்போது நினைவுப்படுத்திக் கொண்டிருக்கிறார். புகார் நகரத்தின் வணிகனான கோவலன் கண்ணகியைப் பிரிந்து நாட்டிய நங்கை மாதவியுடன் சில காலம் வாழ்ந்து துன்பப்பட்டுக் கண்ணகியுடன் மதுரைக்குச் சென்று கொலையுண்டதும் அதனால் கண்ணகி மதுரையை அழித்தது மட்டுமல்லாமல் பாண்டிய மன்னனும் கோப்பெருந்தேவியும் உயிர்நீத்தனர். இவை அனைத்திற்கும் அவரவர் செய்த ‘ஊழ்வினையைக்’ காரணம் காட்டுகிறார். 

கனாத்திறம் உரைத்த காதையில், தேவந்தி தன் கணவன் பாசண்டச்சாத்தனால்  கைவிடப்பட்ட நிலையில் கணவனிடம் மீண்டும்  சேர்வதற்குக் கோயில் கோயிலாக வேண்டி அலைகிறாள். அந்த வேளையில் கண்ணகியைச் சந்தித்து “நீ உன் கணவனால் வெறுத்து ஒதுக்கப்பட்டவள் அல்ல, பின் ஏன் பிரிய நேரிட்டது என்றால், முற்பிறப்பில் உன் கணவனுக்காக செய்ய வேண்டிய நோன்பினை செய்யத் தவறிவிட்டாய். அது நீங்கிடவேண்டுமானால் பூம்புகார் நகரிலே இருக்கும் சோம குண்டம், சூரிய குண்டம் என்னும் இரு பொய்கையில் மூழ்கிப் பின்பு மன்மதக்கடவுளை வணங்கினால் இம்மையிலும் மறுமையிலும் உன் கணவனைப் பிரியாமல் வாழலாம்” என்று கூறினாள் என்பதைக் கூறுகிறார். முற்பிறப்பில் கண்ணகி நோன்பு மேற்கொள்ளவில்லை என்பதால் இப்பிறவியில் கணவனைப் பிரிய நேர்ந்தது என்னும் கருத்தானது நோன்பு என்னும் பெயரில் குடும்பம், வீடு என்ற நிலையில் பெண்களை மரபு மீறாமல் புற உலகைப்பற்றி அறியச்செய்யாமல் அடக்குமுறை ஏவப்பட்டிருக்கிறது என்பது புலனாகிறது. 

மதிமயக்கத்தில் கோப்பெருந்தேவியின் பின்னால் ஓடிய மன்னன் பொற்கொல்லனின் பொய்க்குற்றத்தை ஆராயாமல் போகிற போக்கில்  ‘கொன்று வருக’ என்று கூறியது முன்செய்த தீவினை பயன்முற்றி மூளப்போகிற நேரம் வந்தது என்பதை, 

வினைவிளை காலம் ஆதலின் யாவதும்
சினை அலர் வேம்பன் தேரான் ஆகி
ஊர் காப்பாளரைக் கூவி ஈங்குஎன
தாழ் பூங்கோதை தன்கால் சிலம்பு
கன்றிய கள்வன் கையது ஆகின்
கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்குஎன (கொலைக்களக் காதை 148-151)

இளங்கோ கூறுகிறார்.

கோவலன் வெட்டுண்டு கிடக்கும் பொழுது அநாதையாகிய கண்ணகி அழுது புரண்டு இத்தகைய பெரும் துன்பத்தை உண்டாக்கிய அரசன் இவ்வாறு செய்திட காரணம் தெரியாமல் தவிக்கும் எனக்கு நான் செய்த தீவினைதான் என்ன? என்பதை யாராவது சொல்ல மாட்டார்களா? என்று அழுது புலம்புவதை,

மன்னுறு துயர்செய்த மறவினை அறியாதேற்கு
என்னுறு வினைகாண் ஆ! இதுஎன உரையாரோ
பார்மிகு பழிதூற்ற பாண்டியன் தவறிழைப்ப
ஈர்வது ஓர்வினை காண் ஆ! இதுயென உரையாரோ
கண்பொழி புனல்சோரும் கடுவினை உடையேன்முன் (ஊர்சூழ்வரி 41-47)

எனக் குறிப்பிடுகிறார்.

கட்டுரைக்காதையில் (155-170) கண்ணகி முன்பாக தோன்றிய மதுராபதித் தெய்வம் பாண்டியனும் கோவலனும் தவறு செய்யாதவர்கள். ஆனாலும், முன்செய்த தீவினை காரணமாக பழி ஒன்று உண்டு கேள் என்று கூறலானது. “சங்கமன் என்னும் வணிகன் சிங்கபுரத்துக் கடை வீதியில் தான் கொண்டு வந்திருந்த அணிமணிகளை விற்றுக்கொண்டிருந்த போது அப்பிறப்பில் பரதன் என்னும் பெயருடன் இருந்த உன் கணவன் கோவலன் அவனை அரசனிடம் கொண்டு சென்று இவன் பகை நாட்டு ஒற்றன் எனக் கூறி கொலை செய்தான். கணவனை கொன்ற செய்தியைக் கேள்வியுற்ற நீலி பதறித்துடித்து வீதியில் அழுதுபுரண்டு இது அரச நீதியோ எனக்கேட்டு வேதனையுடன் ஒரு மலை மீது ஏறி நின்று உயிர் துறக்கும்முன் எனக்கு இத்தகைய நிலைமையைச் செய்தவர்கள் யாரானாலும் நான் அடைந்த இத்துன்பத்தை அடைந்து மடிவார்கள்” எனக்கூறி உயிரை மாய்த்துக்கொண்டாள். இதுவரைப் பட்ட துன்பத்திற்கெல்லாம் காரணம் இதுவே. நான் சொல்ல வந்த உண்மைப்பொருளும் இதுவே  என்று கூறியதாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு நடப்பதற்கெல்லாம் காரணம் கோவலன் மற்றும் பாண்டியமன்னன்  செய்த தீவினைதான் எனக்கூறும் இளங்கோ, பாண்டிமா தேவியின் இறப்பு, கோவலனின் தந்தை, கண்ணகியின் தந்தை ஆகிய இருவரும் துறவு கொண்டது, கோவலன் தாயும் கண்ணகியின் தாயும் இறந்து போனது, மாதரி தீயிட்டுத் தற்கொலை செய்து கொண்டது, வழித்துணையாக வந்த கவுந்தியடிகள் நோன்பிருந்து இறந்தது, மாதவியும் மணிமேகலையும் துறவு கொண்டது, கோயிலில் ஆயிரம் பொற்கொல்லத் தொழிலாளிகள்  பலியானது இவைகளுக்கெல்லாம் என்ன முன்வினை காரணமாக இருக்கிறது என்று கூறவில்லை என்பது நோக்கத்தக்கது. 

திருட்டு வழக்கில் மன்னன் இழைத்த அநீதி 

நாடக நங்கையர் ஆடிய ஆட்டத்திலும் பாடிய பாட்டினிலும் தன்னை மறந்து லயித்திருந்த பாண்டிய மன்னனைக் கண்ட கோப்பெருந்தேவி காணப்பொறுக்காதவளாகி மன்னனுடன் ஊடல் கொண்டு அதை வெளிக்காட்டாமல் தனக்குத் தலைவலி வந்ததென்று பொய் சொல்லி அரங்கை விட்டு வெளியேறி அந்தப்புரம் நோக்கி சென்றாள். இதையறிந்த மன்னனும் சமாதானம் செய்ய அந்தப்புரம் நோக்கி விரைந்தான். அந்த நேரத்தில் மன்னரின் காலைப்பிடித்து வணங்கி அரசியின் காற்சிலம்பைத் திருடிய கள்வன் என்னுடைய வீட்டருகில் இருக்கிறான் என்று பொற்கொல்லன் கூறியதைக்கேட்ட மன்னன்,

தாழ் பூங்கோதை தன்கால் சிலம்பு
கன்றிய கள்வன் கையது ஆகின்
கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்கு (கொலைக்களக் காதை 151-153) 

‘கள்வனைக் கொன்று சிலம்பைக் கொண்டுவா’ என்று உத்தரவிட்டான். ஆனால், இவ்வாறு கூறும் பொற்கொல்லனின் பேச்சைக்கேட்ட மன்னன் குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை ஆராயாமலும்  குற்றவாளியிடம் விசாரணை நடத்தாமலும்  கொலை செய்ய ஆணையிட்டது அரசனென்ற முறையில் நீதி தவறியிருப்பதைக் காட்டுகிறது. திருவள்ளுவர் செங்கோன்மை அதிகாரத்தில்,

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை. (குறள்.541)

என்றவழி, தன் குடிமக்கள் ஏதேனும் குற்றம் இழைத்தால் குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து ஒரு பக்கம் சாராது நடுவுநிலைமையுடன் உரிய தண்டனை வழங்குவதே முறையாகும் என்று கூறுகிறார்.

கட்டுரைக்காதையில் கணவனை இழந்த நிலையில் கோபமும் ஆவேசமும் கொண்டிருந்த கண்ணகியின் முன்பாக மதுராபதித் தெய்வம் தோன்றி பாண்டிய மன்னன் குற்றமற்றவன் என்பதற்குச் சான்றாக ஒரு கதை கூறியது. “வார்த்திகன் மகன் தட்சிணாமூர்த்தி என்னும் அந்தணச்சிறுவன் பராசரனிடம் அணிமணிகளைப் பரிசாகப் பெற்று வருகிறான். அணிமணிகளோடு அவன் இருப்பதைக் கண்ட காவலர்கள், பாண்டிய மன்னனின் ஆபரணங்களை வார்த்திகன் திருடிவிட்டதாகக்கூறி அவனைக் கொடுஞ்சிறையில் அடைத்தனர். இதைக்கேள்வியுற்ற அவனது மனைவி கார்த்திகை அழுதுபுரண்டு வீதியில் புலம்பி அழுதாள். இந்தக்கொடுமையை தாங்காமல் துர்க்கை, ஐயைக்கோயில்களின் கதவுகள் தாமாக மூடிக்கொண்டன. இதைக்கேள்வியுற்ற பாண்டிய மன்னன் தீர விசாரித்ததில் வார்த்திகன் மீது தவறு இல்லாததை உணர்ந்து, 

நீர்த்தன்று இது என நெடுமொழி கூறி
அறியா மாக்களின் முறை நிலைத் திரிந்தவென்
இறைமுறை பிழைத்தது  பொறுத்தல் நும்கடன் என  (115-117) 

என்று கூறினான். ஆராயும் அறிவற்ற காவல் மக்களால் என்னுடைய அரச நீதி கெட்டுவிட்டது. என் தவறு பொறுத்தருள வேண்டும் தாயே! என்று கூறி நீர்வளம் மிக்க திருத்தங்கால் என்னும் ஊரையும் செல்வம் கொழிக்கும் வயலூரையும் பரிசாகத் தந்ததோடு வேந்தனானவன் நிலத்தில் விழுந்து வணங்குதல் என்ற மரபு இல்லை என்றாலும் வார்த்திகன் முன்பாக வீழ்ந்து வணங்கினான் என்ற கதையை கண்ணகியிடம் சொன்னது. ஆனாலும், திருட்டு வழக்கில் கோவலனுக்கு அநீதியும் வார்த்திகனுக்கு சன்மானமும் கொடுக்கப்பட்டிருப்பது அரச அநீதியாகும். கோவலன் வணிகன் என்பதாலும் வார்த்திகன் அந்தணன் என்பதாலும் அரச நீதி மாறுபடுவதைச் சிலம்பில் காணமுடிகிறது. 

பூதங்கள் இழைத்த அநீதி 

இந்திரவிழவூரெடுத்த காதையில் பூம்புகார் நகரின் சிறப்பைப்பற்றிக் குறிப்பிடுகையில் பொதுமக்கள் தவறு செய்கின்றபோது குறிப்பாகத் தவநெறியிலிருந்து தவறு செய்கின்றவர்களையும் மறைவாகத் தவறுசெய்கின்ற இழிந்த குணமுடைய பெண்களும் மன்னருக்கு துரோகம் இழைக்கும் அமைச்சர்களும் பொய்சாட்சி சொல்பவர்களும் புறங்கூறுபவர்களும், பிறன்மனை நோக்குபவர்களும் என் பாசக்கயிறுக்கு பலியாவார்கள் என்று நான்கு காத தூரம் கேட்கும்படி கொடிய குரலெழுப்பி கூவும். தவறு செய்பவர்களை அடித்துக்கொன்று தின்னும் சதுக்கப்பூதம் பூம்புகார் நகரில் இருந்தது. ஆனால், அரசன் செங்கோல் தவறினாலும் வழக்குரை மன்றத்தில் தீர்ப்புரைக்கும் நீதிபதி நடுவுநிலை மாறி ஒருபக்கமாக தீர்ப்புக்கூறினாலும் ஆங்கே தவறு நடந்ததை வாய்பேசாமல் அழுது வடிக்கும், கண்ணீர்க்குறிப்பால் உணர்த்தும் பாவைபூதம் மன்றமும் இருந்தது. பொதுமக்கள் தவறு இழைத்தால் சதுக்கப்பூதம் கொன்று தின்னும். ஆனால், மன்னனோ நீதிபதிகளோ தவறு செய்தால் பாவை பூதம் எதிர்த்துப்பேசாமல் தண்டிக்காமல் அழுதுபுலம்புவது என்பது பொதுமக்களுக்கு ஒரு நீதியும், அரசர், அந்தணர் போன்றோருக்கு மற்றொரு நீதியும் பூதங்களின் வடிவில்  வழங்கப்பட்டிருப்பது சிலம்பில் பதிவாகியிருக்கிறது. 

முடிவு 

*     பொய் சொன்ன குற்றத்திற்கு பொற்கொல்லர்களுக்கு மரண தண்டனை ஆனால் கொலை நிகழ்த்திய காவலர்கள் தண்டிக்கப்படவில்லை ஏனெனில் அதிகார  வர்க்கத்தின் சமூக விரோதப்போக்கை நிறைவேற்றித் தருவதால் காலங்காலமாக இன்றளவும் காக்கப்பட்டு வருகிறார்கள்.

*     பூதமாகினும் சட்டமாகினும் அரசனையும் அந்தணனையும் தண்டிக்க வலிமை கிடையாது. இவர்களுக்கு உட்பட்டே இயங்கும் என்பது புலனாகிறது. இன்றளவும் இம்முறை நீடிக்கிறது.

*     மாதவியைப் போகப்பொருளாகவும் கண்ணகியை வணிக நோக்குடனும் நடத்திய கோவலன் இருவருக்கும் அநீதி இழைத்திருப்பது  நடைமுறை மனித வாழ்வுக்கு உகந்ததில்லை.

*     மனிதனின் தவற்றுக்கெல்லாம் முற்பிறவி, தீவினை, ஊழ்வினை என்று காரணம் கற்பிப்பது,  குறிப்பாக அரசர், அந்தணர், வணிகர் தவற்றை மறைப்பதற்கான ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது.

*     அரசருக்கும் வணிகருக்கும் நடக்கும் வர்க்க முரண்பாடாகச் சங்கமன் கொலையும், கோவலன் கொலையும் அமைந்திருக்கிறது.

*     கோவலன் ஆடல் கலையிலும் ஆடலழகியிடமும் லயித்துப்போனதால் பொருளோடு வாழ்வையும் உயிரையும் இழந்தான். கண்ணகியைப் பரிதவிக்கவும் விட்டான். பாண்டிய மன்னனும் ஆடல் கலையிலும் ஆடலழகியிடமும்  லயித்து போனதால்தான் பெரும் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் இழக்க நேரிட்டது. இது மன்னர்களுக்கும் வணிகர்களுக்கும் பொறுப்பில் இருக்கும் எவரும் நெறிதவறி நடந்தால் நாட்டில் குற்றங்கள் மட்டுமே நடக்கும். இவர்களுக்கு ஏற்படும் இச்சையை அதிகாரத் தவறென்று சொல்லலாமேயொழிய ஊழ் என்று கருதமுடியாது.

*** 

பார்வை நூல்கள்:

1.ஞா.மாணிக்கவாசகன் (உ.ஆ), சிலப்பதிகாரம் தெளிவுரை, உமா  பதிப்பகம்1995.

2.ந.மு.வேங்கடசாமி நாட்டார்(உ.ஆ.) கழகவெளியீடு,1942.

3.க.ப.அறவாணன் (உ.ஆ.), திருக்குறள் தெளிவும் உரையும்,  தமிழ்க்கோட்டம்,2007.

4.வி.புரோத்தோவ், இக்கால இந்திய மெய்ப்பொருளியல், நியூசெஞ்சுரி புக்  ஹவுஸ்,1998.

5.எஸ்.ஜி.சர்தேசாய், பண்டைய இந்தியாவில் முற்போக்கும் பிற்போக்கும்,  நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்,2012.

6.தே.ஞானசேகரன், மந்திரம் சடங்குகள் சமயம்,பார்த்திபன் பதிப்பகம்,2000.

7.வெ.பெருமாள்சாமி, சிலப்பதிகாரம் மறுக்கப்பட்ட நீதியும் மறைக்கப்பட்ட  உண்மையும்,பாரதி புத்தகாலயம், 2008.

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சிலப்பதிகாரத்தில் சமூக அவலம்

  1. நல்லதொரு திறனாய்வு….. வாழ்த்துக்கள் ஐயா!

    சிலப்பதிகாரத்தில் மட்டும் இல்லை, இது போன்ற சமூக அவலங்களை மணிமேகலை, பெரிய புராணம் போன்ற நூல்களிலும் காண முடிகிறது. இவற்றை ஆய்ந்தறிந்து, தற்கால சமூகத்திலும் தொடரும் இத்தகைய அவலங்களை நீக்குவதற்கு தங்களைப் போன்றவர்களின் கட்டுரைகள் பயன்பட வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *