Author: admin

  • ஆண்களே…! இதில் நீங்கள் எந்த வகை?

    -விஜய் விக்கி

    பாயும் ஆறு முதல் பதறவைக்கும் புயல் வரையிலும் எங்கும் எதிலும் பெண்களின் நாமம்தான்… அரசியல் முதல் அறிவியல்வரைக்கும் பெண்ணுரிமை பற்றிய பேச்சுகள்தான்… நிலவு, காற்று, வானம் என வர்ணிக்கும் அழகெல்லாம் பெண்களுக்கென்றே உரித்தாகிவிட்டது. பெண்களைச் சுற்றியே சுழல்கின்ற இந்த உலகத்தில், ஆண்களைப்பற்றி எண்ணிப்பார்ப்பதே அபூர்வமான சிந்தனையாகிவிட்டது. அந்த அபூர்வச் சிந்தனையின் ஒரு துளிதான் இந்தக் கட்டுரையும்!

    ஓர் ஆணுக்கு எது அழகு? பெண்களைக் கவர்கின்ற ஆண்களின் ஆளுமைதான் அழகு! ஆறு அடிகள் உயரமும், ஆஜானுபாகுவான உடல்வாகும், ஆர்யாவின் கசின் போன்ற புறத்தோற்றமும் ஒரு பெண்ணிடம் ஆணின் மீதான ஈர்ப்பை உண்டாக்குவதைவிட, ஆண்மகனின் ஆளுமைதான் அதிகம் கவர்ச்சியை உண்டாக்குகிறது என்கிற அறிவியல் உண்மையைத்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

    அந்த ஆளுமையின் அடிப்படையில் ஆண்களை ஐந்து வகையாக பிரிக்கிறது உளவியல் உலகம்.

    ஆல்பா (alpha), பீட்டா (beta), காம்மா (gamma), ஒமேகா (omega), சிக்மா (sigma) என்கிற ஐந்து பிரிவுகளுக்குள் உலகின் முன்னூறு கோடி ஆண்களையும் புகுத்திவிடமுடியும்.

    ஒரு தமிழ்த் திரைப்படம் என்றால், அதன் முதல் காட்சியே ஹீரோ இன்ட்ரொடக்ஷன்தான்! அதன்படிப் பார்க்கையில், ஆல்பா ஆண்களைத்தான் இங்க முதலில் அறிமுகப்படுத்தணும். காரணம், இந்த உலகம் ஆல்பா ஆண்களைத்தான் நாயகர்களாக ஏற்றுக்கொள்கிறது. நாம் மட்டும் விதிவிலக்கா என்ன?

    ஆல்பா ஆண்கள் யார்? அவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது?

    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
    திமிர்ந்த ஞானச் செருக்கும்

    இந்த பாரதியின் வரிகளே ஒட்டுமொத்தமாக ஆல்பா ஆளுமையைக் குறிப்பாக உணர்த்திவிடுகிறது. சற்று விளக்கமாகக் கூறவேண்டுமானால், இவர்கள் வலிமையான மனவுறுதி பெற்றவர்கள். எப்போதும் தம்மை வெற்றியாளராகவே கருதுபவர்கள். அதற்காக எப்போதும் வெற்றிபெற்றுக்கொண்டே இருப்பார்களா? என ஆச்சர்யப்படவேண்டாம். ஆல்பா ஆண்களுக்கு அவ்வப்போது தோல்வியும் நேரிடலாம். ஆனால், அந்தத் தோல்விகளில் துவண்டு மேலே எழமுடியாமல் தடுமாறுபவர்கள் அல்லர். விழுந்த வேகத்திலேயே நம்பிக்கையோடு எழுந்து நிற்கும் குதிரை போன்றவர்கள். தன்னுடைய தோல்வியைக்கண்டு பிறர்
    எள்ளி நகையாடக்கூடாது எனவும், தம் மீது பிறருக்குப் பரிதாபம் உண்டாகக்கூடாது எனவும் எண்ணுவதால் தமது தோல்வியின் தடம், சுவடே தெரியாமல் மறைந்துபோகும் அளவிற்கு அடுத்த இலக்கை நோக்கிப் பயணிப்பவர்கள்.

    ஒருமுறை கிடைத்த தோல்வியின் மூலம் கிடைக்கும் கற்பினையால், அடுத்த இலக்கின் வெற்றி எதிரிக்கு சம்மட்டி அடியாய் அடிக்கவேண்டுமெனக் கடுமையாக உழைப்பவர்கள். அதேபோலத் தமது வெற்றியைப் பிறரிடம் சொல்லித் தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் இல்லை. வெற்றியைக்கூட அதிகம் வெளிப்படுத்திக்கொள்ள எத்தனிக்காமல், மேற்கொண்டு அதைத்தாண்டிய வரலாற்று வெற்றிக்காக உழைப்பவர்கள். வெளித்தோற்றம் ஆல்பா ஆண்களைத் தீர்மானிப்பதில்லை. ஆனால் ஒருமுறை பேசுவதிலேயே தனது ஆளுமையைப் பிறருக்கு பதியவைத்துவிடுவார்கள்.

    எதிரே நிற்பவரின் கண்களை எதிர்கொண்டுதான் பேசுவார்கள். பேச்சில் தெள்ளிய நீரோடை போன்ற தெளிவு இருக்கும். அநாவசியப் பேச்சுகள் இருக்காது. பேசும் வார்த்தைகளில் கண்ணியம் தொனிக்கும். அவர்கள் நடையில் கூட ஒரு நிதானம் இருக்கும். எடுத்துவைக்கும் அடிகளில் ஓர் அழுத்தம் தென்படும். நான்கு நபர்களுக்கு மத்தியில் பேசிக்கொண்டிருக்கும்போது, தான் நிற்கவேண்டிய இடத்தைக்கூட யோசித்துதான் நிற்பார்கள். பேசும் சில மணித்துளிகளிலேயே அந்தக் குழுவைத் தன்வசப்படுத்திவிடுவார்கள்.

    ஒரு குழுவாகச் செயலை செய்வதாக இருந்தால்கூட, ஆல்பா ஆண்களின் தலையீடுதான் அதில் பிரதானமாக இருக்கும். தாம் செய்யவேண்டிய விஷயங்கள் மட்டுமல்லாது, பிறர் செய்வதற்கான பணிகளைக்கூட இவர்கள்தான் தீர்மானிப்பார்கள். எதிர்கொள்ளும் இலக்கினில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டாகுமேயானால், அதனைத் துணிச்சலாக முன்னின்று எதிர்கொள்வர். ஒரு மன அழுத்தமான சூழலில் கூடத் தம் மனக்குமுறலை பிறரிடம் வெளிப்படுத்தமாட்டார்கள். எந்தத் தருணத்திலும் தம் பலவீனம் பிறருக்குத் தெரியக்கூடாது என்பதில் தெளிவாய் இருப்பார்கள். கடுமையான சூழலில் கூடப் பொறுமையாகவும், பிறருக்குப் பதற்றத்தை உண்டாக்காத அளவிலும் செயல்படுவார்கள்.

    பிறர் தம்மை அங்கீகரிக்க வேண்டுமென எப்போதும் எதிர்பார்க்காதவர்கள். தமக்கான உலகத்தில், தமக்குப் பிடித்தவற்றைச் செய்தால் போதும். அதற்கு யாரோ ஒரு மூன்றாம் நபரின் பாராட்டுப்பத்திரம் பெரிய விஷயமில்லை என நினைப்பவர்கள். மகிழ்ச்சி என்பது தாம் செய்யும் செயல்மூலம் கிடைப்பது, அந்தச் செயலின்வழி கிடைக்கும் பாராட்டால் கிடைப்பது அன்று என உணர்ந்தவர்கள்.

    உடை உடுத்துவது முதல் செயல்கள் செய்வதுவரை எது தமக்குப் பிடிக்கிறதோ அதைமட்டும்தான் செய்வார்கள். எல்லோருக்கும் நல்லவனாக, நண்பனாக இருக்கவேண்டுமென நினைப்பவன் ஆல்பா ஆணாக முடியாது. “எல்லோருக்கும் பிடித்தவனாக இருக்கணுமென்றால், நீ பிரியாணியாகத்தான் இருக்கணும்!” என்றொரு பழமொழி உண்டு. இவர்கள் பிரியாணி அல்ல….மொத்தத்தில் தன்னை நம்புபவன், தனக்காக வாழ்பவன், தன்னம்பிக்கை உடையவன் என்று மூன்றே வார்த்தைகளில் சொல்லிவிடலாம். இவ்வளவுதான் ஆல்பா ஆளுமை!

    இதனை முன்வைத்தே நாம் பீட்டா ஆளுமையை எளிமையாகக் கணித்துவிடமுடியும்! எல்லா விஷயங்களிலும் நேரெதிர் ஆளுமைதான் பீட்டா.

    பீட்டா ஆண்களைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பு வளையத்தைத் தாண்ட விரும்பாதவர்கள். துணிச்சலாக ஒரு சவாலை ஏற்கத் தயங்கி, தன் வட்டத்தைத் தாண்ட தயங்குபவர்கள். ஒரு புதிய முயற்சியைக் கையிலெடுத்து, அதிலெதாவது தோல்வி உண்டாகுமானால், அதனைக் கிரகிக்கும் மனத்திடம் இல்லாதவர்கள். அந்தத் தோல்விக்கு பயந்தே, எல்லை தாண்டிப் பயணிக்க விரும்பாதவர்கள். தமது கூச்ச சுபாவத்தால், புதியவர்களிடம் பழகிடத் தடுமாறுபவர்கள். “நல்ல பையன்” பெயரைத் தக்கவைத்துக்கொள்ள விரும்புபவர்கள். எப்போதும் அவர்களுக்குப் பிறரின் அங்கீகாரம் தேவைப்பட்டுக்கொண்டே இருப்பதால், சற்றுக் கடுமையான விஷயமாகக் கருதப்படும் செயல்களில் ஈடுபட விரும்பாதவர்கள். பிறரைத் திருப்திப் படுத்துவதிலேயே தம் நேரத்தைச் செலவிடுவர். எல்லோருக்கும் தாம் பிடித்தவராக இருக்கவேண்டுமென நினைப்பவர்கள்.

    எல்லா விஷயங்களிலும் நூல் பிடித்தபடி, கோடிட்டு வாழ நினைப்பவர்கள். அப்படி வாழ்வதன்மூலம் பிறர் தம்மை அதிகமாக மதிப்பார்கள் என்று நினைப்பார்கள். இவர்களின் எல்லாச் செயலுக்கும் அர்த்தமிருக்கும்; தம்மை அழகூட்டிக்கொள்ள அதிகம் மெனக்கெடுவார்கள், பிறருக்கு உதவுவார்கள். ஆனால் இவை எல்லாமுமே பிறரின் அங்கீகாரம் கருதியே செயல்பட்டிருக்கும். ஒரு விவாதம் எழுகிறதென்றால், அதில் தம் தரப்பில் வாதம் புரிய முறையான விஷயங்கள் இருந்தால் கூட, அதை வெளிப்படையாய்ப் பேசத் தயங்குவார்கள்.

    மனத்திற்குள் எழும் ஆதங்கங்களை, எச்சிலைப்போல விழுங்கிக்கொள்வார்கள். தாம் தமது நியாயத்தை முன்வைத்தால், மற்றவரின் முகச்சுளிப்பை எதிர்நோக்க
    வேண்டிவருமோ எனவும் மற்றவரின் பகையைச் சுமக்க நேரிடுமோ எனத் தயங்கியே மௌனித்து போவார்கள். ஓர் உதவியைப் பிறருக்குச் செய்யும்போது கூட, என்றைக்காவது ஒருநாள் அதற்கான பதிலுதவி கிடைக்குமென எதிர்பார்த்தே செய்வார்கள். ஏதாவது விதத்தில் ஆதாயம் கிடைக்குமெனில் தயங்காமல் உதவி செய்வார்கள்.

    ஒரு குழுவாகச் செயல்படும்போது, பீட்டா ஆண், “நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க!” எனப் பிறரின் கட்டளைக்காகக் காத்திருப்பார்கள். தாமே முன்வந்து
    எதையாவது செய்து, அது சொதப்பிவிடுமோ? எனத் தயங்குவார்கள். அதையும் மீறித் தவறு நிகழும் பட்சத்தில், “நீங்க சொன்னதுதானே செய்தேன்!” என்று
    தப்பித்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கையோடு செயல்படுவார்கள். அதாவது ஒரு செயலைச் செய்வதற்கு முன்பே அதில் தோல்விதான் உண்டாகும் என்கிற எதிர்மறைச் சிந்தனை அவர்களுக்குள் பொதிந்திருக்கும். செயலைச் செய்துமுடிக்கும்வரை, “நான் செய்றது சரியா?.. இதைத்தானே நான் செய்யணும்னு சொன்னிங்க?” என்று ஒவ்வொரு நகர்வுக்கும் ஒப்புதல்பெற நினைப்பார்கள். என்றைக்குமே தம் விருப்பத்திற்காக ஒரு செயலைச் செய்யமாட்டார்கள். பிறர் விருப்பத்தை முன்னிறுத்தியே காரியத்தில் இறங்குவார்கள். அதனால், செய்யும் செயல்களில் முழு மனத்துடன் ஈடுபட முடியாமல் தவிப்பவர்கள். உலகமே தமக்கு எதிராய்ச் செயல்படுவதாய் நினைப்பார்கள். ஒரு தோல்வி ஏற்படும்போது, அதில் தம்மைத்தவிர தம்மைச் சூழ்ந்திருக்கும் அத்தனை பேரின் மீதும் பழியைப் போடுபவர்கள். விளையாட்டாய்த் தம்மைப் பகடி செய்யும்போதுகூட, அதில் ஆயிரம் கற்பிதங்கள் கற்பித்துத் தம்மை நொந்துகொள்வார்கள்.

    எளிதில் உணர்ச்சியவயப்படுபவர்கள்; சோர்ந்து போகக்கூடியவர்கள். எல்லோரிடமும் நல்லவர்களாக இருக்க முற்பட்டு, ஒருகட்டத்தில் நடித்து வாழும் சூழலுக்குத் தள்ளப்படுவார்கள். தம் சுயத்தை இழந்து பிம்பமாக வாழ்பவர்கள். தம் இயல்பை மீறிய விஷயங்களுக்கும் ஒப்புதல் கொடுத்துவிட்டு, பின்பு வாக்கினைக் காப்பாற்ற முடியாது தவிப்பார்கள்.

    பிறரின் பாராட்டு ஒன்றே அவர்களின் ஒரே குறிக்கோளாக இருக்கும். எந்த ஒரு கேள்விக்கும் அவர்களிடம் விடை இருக்கும். “எனக்குத் தெரியாது!”ன்னு ஒரு பதிலைச் சொல்லவே விரும்பமாட்டார்கள். தெரியாத விஷயங்களைக் கூடத் ‘தெரியும்!’ என்று சொல்லி, அதன்மூலம் சிக்கல்களை
    உருவாக்கிக்கொள்வார்கள். இவைதான் பீட்டா ஆளுமை!

    ஆல்பா ஆளுமையைப்பற்றி படித்தபோது, ஏதோ திரைப்படத்தின் கதாநாயகனைப்பற்றி விவரிப்பதைப் போலத் தோன்றியிருக்கலாம். ஆனால், உலகம் ஹீரோக்களால் சூழப்பட்டது இல்லை என்ற நிதர்சனம் அறியாதவர்கள் இல்லையே நாம்.

    அந்தவகையில் நம்மில் பெரும்பாலானவர்கள் பீட்டா ஆண்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் அதனை ஏற்கத் தயங்குவார்கள்.
    ஒருவன் தன்னை பீட்டா ஆணாக ஏற்றுக்கொள்வது மட்டுமே, ஆல்பா ஆணாகத் தம்மை மாற்றிக்கொள்வதற்கான முதல் படி” என்கிறார்கள் உளவியலாளர்கள்.

    ஒரு குழந்தை பிறக்கும்போதே அதன் ஆளுமை தீர்மானிக்கப்படுவதில்லை.. பீட்டா ஆணாக ஒரு குழந்தை உருவாவதற்கு நிறைய காரணிகள் இருக்கின்றன. குழந்தை வளர்ந்த விதம், வாழும் சமூகச் சூழல், தந்தையின் ஆல்பா நிலையைப் பார்த்து வளரமுடியாத சூழல் எனப் பல்வேறு காரணிகள் உண்டு. தந்தை ஆல்பா நிலையில் இருந்து வழிநடத்திடாத காரணம் பிரதானமாகக் கருதப்படுகிறது.

    ஆளுமை மிக்கத் தந்தையின் தடம் அவன் மனத்தில் பதியமறுத்து, பெண்மையின் தடம் பதிவேருகிறது. ஆய்வாளர்கள் சொல்வதென்னவென்றால், குகைகளில் வாழும்போதே நமது மூதாதையர் பீட்டா ஆளுமை பெற்றவர்களாகத்தான் வாழ்ந்தார்கள். காலப்போக்கில் தப்பித்தவறி உருவானதுதான் ஆல்பா கலாசாரம் என்கிறார்கள்.

    காரணிகள் எதுவாக இருந்தாலும், எதிர்பாலினத்திடம் அதிக ஈர்ப்புக் கொண்டவர்கள் ஆல்பா ஆண்கள்தான் எனும்போது பரிணாம வளர்ச்சியைக் குற்றம் சொல்லுதல் முறையில்லை. ஆல்பா ஆண்களிடம் பெண்கள் பாதுகாப்பை உணர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. வாழ்க்கையின் கடைமட்டத்தில் இருந்தால்கூட, இவனால் உயர்நிலைக்கு வரமுடியும் என்று பெண்கள் நம்புகிறார்கள். ஆனாலும், நம் ஊர்களில் ‘பிழைக்கத் தெரிஞ்சவன்’ என்ற பாராட்டுக்கு உரியவர்கள் பீட்டா ஆண்கள்தான்.

    இவர்களில் யார் சிறந்தவர்கள்? என்ற விவாதத்திற்குள் செல்லவிரும்பவில்லை. அவரவர் விருப்பம் அவரவருக்கு என்பதால் மற்ற மூன்று பிரிவுகளைப்பற்றிச் சுருக்கமாக பார்த்துவிடலாம்.

    ஒமேகா – ஆல்பா ஆண்களைப் போலவே நம்பிக்கை உடையவர்கள், புத்திசாலிகள், செய்யும் செயல்களின் தெளிவு உடையவர்கள். ஆனால், ஆல்பா ஆண்களைப் போல அல்லாமல், தமக்காகவே வாழ்பவர்கள். எவருடனும் உணர்வுப்பூர்வ ஒட்டுதல் இல்லாதவர்கள். வெகு சிலரை மட்டுமே நம்புவார்கள், அதனினும் வெகு சிலரைத்தான் நெருங்கிய வட்டத்துக்குள் சேர்த்துகொள்வார்கள். தலைமையைப் பற்றி கவலைப்படாதவர்கள். ‘எனக்கு நானே தலைவன்!’ என்று வாழ்பவர்கள்.

    காம்மா – ஒருவகையான தலைமறைவு நபர்கள். ஆல்பாவைப் போல, தாங்கள் இருக்கும் இடத்தைத் தம் வசப்படுத்துபவர்களும் அல்லர்; அருகில் நின்று ஆமோதிக்கும் ‘பீட்டா’ போலவும் அல்லாதவர்கள். அறையின் சுவர்களைப்போல அவர்களும் ஒரு பிராப்பர்ட்டிதான். யாருக்கும் தொந்தரவு செய்யாதவர்கள், அதேநேரத்தில் பிறருக்கு மறக்கமுடியாத அளவுக்குத் தம் இருப்பினைக் காட்டிக்கொள்பவர்களும் அல்லர். தலைமைக்கும் ஆசைப்படாது, பின்தொடர்பவர்களாகவும் இருக்க விரும்பாதவர்கள். அதிகச் சிரமமில்லாத இலக்கை, தமக்கு வசதிப்பட்டால் கையில் எடுத்துக்கொள்வார்கள்.

    சிக்மா – திறமையான சாணக்கியர்கள். தன் இரைக்காகக் காத்திருக்கும் சிலந்தியைப்போலத் தனக்கான வாய்ப்புக்காகக் காத்திருப்பார்கள். தம் இலக்கினை அடைவதற்குப் பிறருக்குக் குழிபறித்துக் காத்திருப்பவர்கள். ஆல்பா ஆண்கள் போலவே, ஒரு குழுவில் இவர்களுடைய குரலுக்கு அதிக வலிமை இருக்கும். ஆனால், அது தலைமைப் பண்பினால் உண்டாகும் மதிப்பு அன்று! “இவன் பேச்சைக் கேட்காவிட்டால், நம்மை எதிலாவது (சிக்கல்களில்) மாட்டிவிடுவானோ?” என்ற அச்சத்தில் பிறர் ஆமோதிப்பார்கள். விதியே என நொந்து இவரைத் தலைவனாக ஏற்றுக்கொள்வார்கள். இதன்காரணமாகச் சில நேரங்களில் ஆல்பா ஆண்களை விட அதிக உயரத்துக்குச் செல்லும் வாய்ப்புகள் கூடக் கிடைக்கலாம். வாய்ப்புக் கிடைக்கும்வரை பீட்டா போலவும், கிடைத்தபிறகு ஆல்பா போலவும் மாறிக்கொள்ளும் ’அமைதிப்படை அமாவாசை’கள்!

    இவ்வளவுதான் ஆண்கள்! இனக்கவர்ச்சி என்பது ஏதோ ஒரு சபலம் சம்மந்தப்பட்ட விடயமன்று! மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் அடிநாதமே இனக்கவர்ச்சிதான். ஏவாளின் மீது ஆதாமுக்கு இனக்கவர்ச்சி ஏற்பட்டிருக்காமல் போயிருந்தால், என்னாகியிருக்கும்?

    ஆகையால் பெண்களைக் கவர்கின்ற ஆண்களின் ஆளுமைப் பட்டியலை இங்கே வரையறுத்திருப்பதும் அவசியமாகவே படுகிறது. “அவன் திமிர்பிடிச்சவன்!” என்று ஆல்பா ஆளுமையைப் புறந்தள்ளும் பெண்களும் உண்டுதான். அத்தகைய பெண்கள் பீட்டா ஆண்களைத் தேடிப்பிடிப்பதும் உண்டு. ஆனால், பெரும்பாலும் பெண்களின் தேடல், ஆல்பா ஆளுமை மிக்க ஆண்களைச் சுற்றியே சுழல்கிறது என்பதுதான் உண்மை.

    ஒருவன் தன் ஆளுமையை வளர்த்துக்கொள்ள முதல் படியே, தனது ஆளுமையின் படிநிலையை உணர்வதுதான். அந்தவகையில் ஆளுமைகளைப்பற்றி அறிந்துகொள்வதுதான், தலைமைப்பண்பு மிக்க ஆல்பா ஆணாக உருவாவதன் முதல்நிலை. இதனைச் சரியாகப் புரிந்துகொண்டால் உங்களுக்கும் ஒரு ஹீரோ இன்ட்ரொடக்ஷன் பாடல் தயாராகிவிட்டது என்று பொருள் கொள்க!

    Share
  • நீதி இலக்கியங்கள் கூறும் அறக்கொள்கைகள்

    -க.பிரகாஷ்  

    நீதிஇலக்கியம் என்பது சங்க மருவிய கால இலக்கியம் அதாவது சங்க காலத்திற்குப் பின்னா்த் தமிழில் தோன்றிய இலக்கியங்களைக் குறிக்கும். கி.பி. 3- ஆம் நூற்றாண்டு முதல் 6- ஆம் நூற்றாண்டுவரை அறம் வலியுறுத்தும் நீதி நூல்கள் இருந்தன. சங்க காலத்திற்குப் பின்னா் தமிழகத்தில் களப்பிரா்கள் ஆட்சி ஏற்பட்டு, தமிழில் புது இலக்கியங்கள் தோன்றாவண்ணம் தடையான சூழல் நிலவியதாகக் கருதப்படுகிறது. இக்காரணத்தால் களப்பிரா் காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருண்டகாலம் என்று கருதப்படுகிறது. இக்காலத்தில், சங்க காலத்தில் போற்றப்பட்ட காதலும் வீரமும், பின்தள்ளப்பட்டு அறமும், நீதியும் பெரிதும் போற்றப்பட்டன.

         பிற்காலத்தினா் தொகை நூல்களை மேல்வரிசை நூல்கள் என்றும் கீழ்வரிசை நூல்கள் என்றும் பிரித்தனா். குறைந்த அடிகளையுடைய பாடல்களுக்குக் கீழ்வரிசை அல்லது கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் நிறைந்த அடிகள் அமைந்த பாடல்களுக்கு மேல்வரிசை அல்லது மேற்கணக்கு நூல்கள் என்றும் பெயரிடப்பட்டது.

    மேற்கணக்கு நூல்கள் பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும்; அவற்றின் எண்ணிக்கை பதினெட்டு. கீழ்க்கணக்கு நூல்களின் எண்ணிக்கையும் பதினெட்டே. மேற்கணக்கு நூல்கள் எல்லாம் பெரும்பாலும் மூன்றடி முதல் ஆயிரம் அடி வரையிலும் எழுதப்படும். அவை ஆசிரியப்பாவால் ஆனவை. கலிப்பா, பரிபாட்டு, வஞ்சிப்பா ஆகிய பாக்களைக் கொண்ட பாடல்கள் மேற்கணக்கில் உள்ளன. கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் இரண்டடி முதல் எட்டடி வரையிலும் உள்ள வெண்பாக்களால் ஆனவையே ஆகும்.

       “நாலடி நான்மணி நால்நாற்பது ஐந்திணைமுப்
         பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம்,
         இன்னிலைய காஞ்சியோடு, ஏலாதி என்பவே
         கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.”

    இந்நூல்களில் பண்டைத் தமிழர்களின் சிறந்த ஒழுக்கங்களைக் காணலாம். சமுதாய அமைப்பு, அரசியல்முறை, பழக்க வழக்கங்கள், நாகரிகம், பண்பாட்டையும் அறநூல்கள் எடுத்துரைக்கின்றன. இது மட்டுமல்லாமல் மனிதன் வாழ்வைக் குணப்படுத்தும் அளவிற்குத் தன் கருத்துக்களை மருந்து போல் எடுத்து விளக்குவது அற நூலாகும்.

    அற இலக்கியங்களாகிய திருக்குறள், திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகிய நூல்கள் மருந்து போன்ற அருங்கருத்துகளைக் கொண்டிருக்கின்றன.

    சமண, பௌத்த சமயங்களின் வரவால் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின. இந்தப் பதினெட்டு நூல்களில் பதினோரு நூல்கள் அற நூல்களாக அமைந்தன. இந்நூல்களின் ஒவ்வொரு பாடலும், பாடலின் ஒவ்வோர் அடியும் அறக்கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அக்கருத்துகள் பொய்யாமை, கொல்லாமை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை, கள்ளாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் கூறல், ஈகை, அன்புடைமை முதலியன.

    திருக்குறளில் மருந்து

    பழவினையானும், காரணங்களானும் மக்கட்கு வாதம் முதலிய பிணிகள் வரும். மனித வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருக்குறளின் மருந்து என்ற அதிகாரத்தில் திருவள்ளுவா் மருத்துவம் பற்றிய பத்து குறட்பாக்களை கூறியுள்ளார்.

    “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
    அற்றது போற்றி உணின்”  (குறள் – 942)

    தான் முன்புஉண்ட உணவு செரித்துவிட்டது என்பதை அறிந்து, அடுத்த வேளை உண்பானேயானால் அவனுக்கு மருந்து என்று தேவையில்லை என்பது இங்கே வள்ளுவம் கூறும் கருத்தாகும்.    

    “பசித்துப் புசி” என்பது சான்றோர் வாக்கு. பசித்த பின்பே உணவருந்த வேண்டும். பசியாமல் உண்பது அஜீரணத்துக்கு வழிவகுக்கும். அஜீரணத்தால் உடல் இயக்கம் தடைப்படும். இது பல நோய்கள் உருவாக காரணமாகிறது.

    “ஒருவேளை உண்பான் யோகி
    இருவேளை உண்பான் போகி
    முப்போதும் உண்பான் ரோகி
    எப்போதும் உண்பான் துரோகி” – 

    ஒருவன் அளவுக்கு மீறினால், தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான் என்பதே கருத்து.

    “அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
    பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு”  (குறள் – 943) 

    அற்றால் அளவறிந்து உண்க. முன்னுண்டது அற்றால் பின்னுண்பதனை அறுமளவு அறிந்து அவ்வளவிற்றாக உண்க. உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு அஃது – இறப்பவும் பலவாய பிற யாக்கைகளிற் பிழைத்துப் பெறர்க்கு அரிய இம்மானுட யாக்கையைப் பெற்றான் அதனை நெடுங்காலம் கொண்டு செலுத்தும் நெறி அதுவாகலான். (இம்மை மறுமை வீடுபேறுகள் எய்தற்பாலது ஈதொன்றுமேயாகலின் உடம்பு பெற்றான் என்றும் அது நெடிது நின்றுழி அவை பெருகச்செய்து கொள்ளலாம் ஆகலின், நெடிது உய்க்குமாறு என்றும் கூறினார்.)

    “இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
    கழிபேர் இரையான்கண் நோய்” (குறள் – 946) 

    குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்கும்.

    திரிகடுகத்தில் அறம்

    திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என்னும் மூன்று கீழ்க்கணக்கு நூல்களும் பெயர் அமைந்துள்ள வகையிலும் நீதிப் பொருள்களைப் பாக்களில் வகுத்துத் தந்த வகையிலும் பெரிதும் ஒப்புமை உடையனவாகும். இம் மூன்றும் நோய் நீக்கி உடல்நலம் பேணும் மருந்துகளின் பெயர்களாம். இந்நூல்கள், பாடல்கள் தோறும், மூன்று, ஐந்து ஆறு என்ற அரிய கருத்துக்களை அருமையான முறையில் அமைத்துக் கொடுத்துள்ளன.

         “உலகில் கடுகும் உடலின் நோய் மாற்றும்
          அல(கு)இல் அகநோய் அகற்றும் – நிலைகொள்
          திரிகடுகம் என்னும் திகழ்தமிழ்ச் சங்கம்
          மருவுநல் லாதன் மருந்து”     

    சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று மருந்துப் பொருள்களைக் கொண்டதே திரிகடுகம் ஆகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திவாகரம். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய திரிகடுகம் என்னும் அரிய மருந்து ஒருவர் உடல் நோயைப் போக்கும். அது போல் இந்நூலில் வரும் ஒவ்வொரு பாட்டிலும் சொல்லப்படும் மூன்று அறநெறிகளும் மனிதர்களுடைய அறியாமையாகிய நோயைப் போக்கும்.

    “பொய்வழங்கி வாழும் பொறியறையும் கைதிரிந்து
    தாழ்விடைத்து நோ்கருதும் திட்டையும் – ஊழினால்
    ஒட்டி வினைநலம் பார்ப்பானும் இம்மூவா்
    நட்கப் படாஅ தவா்”   (பாடல் – 15) 

    பொய்யான சொற்களைப் பேசி அதனால் உயிர்வாழ்கின்ற அழிவற்றவனும், முறைமைமாறி ஒருவன் தாழ்ந்த இடத்துத் தன்னை உயா்ந்தவனாகக் கருதும் மூங்கில் போன்ற புரைபட்ட மனத்தையுடையவனும், பிறரிடம் சோ்ந்து வினை ஆற்றும் போது தனக்குரிய பயனையே எதிர்பார்த்து செயல் செய்கின்றவனும் ஆகிய இம் மூவரும் யாராலும் நட்புக் கொள்ளத் தகுதியற்றவா்கள் ஆவார்கள்.

    “ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்கு
    இருதலையும் இன்னாப் பிரிவும் – உருவினை
    உள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியும் இம்மூன்றும்
    கள்வரின் அஞ்சப் படும்”  (பாடல் – 18) 

    உறுதியாக வந்தடையும் கிழப்பருவமும், நண்பரிடையே ஏற்படும் பெருந்துன்பத்தைச் செய்கின்ற பிரிவும், உடம்பைக் கரையச் செய்து வருத்துகின்ற தீராத நோயும் ஆகிய இம்மூன்றும் கள்வரைவிட அஞ்சக் கூடியவை.

    சிறுபஞ்சமூலம் கூறும் அறம் 

    ஐந்து சிறு வேர்களுடைய பெயர்களை கொண்டு சிறுவழுதுணைவேர், நெருஞ்சிவேர், சிறுமல்லிவேர், பெருமல்லிவேர், கண்டங்கத்திரி வேர் ஆகிய ஐந்து வேர்களை கொண்டதுதான் சிறுபஞ்சமூலம் ஆகும்.

    வேர்களால் தயாரிக்கப்படும் இச் சிறுபஞ்சமூலம் ஆகிய மருந்து உடல் நலத்தைப் போற்றுவதுபோல அதில் வரும் ஒவ்வொரு பாடலிலும் சொல்லப்படும் ஐந்தைந்து கருத்துக்களும் மனித வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்படுவனவாக உள்ளன. அவர்களின் அறியாமையாகிய நோயைப் போக்கக் கூடிய வகையில் சிறு பஞ்சமூலம் குறிப்பிடும் பாடல்கள் அமைந்துள்ளன.

    இப்பாடல்கள் வெண்பாவில் யாக்கப்பட்டுள்ளன.

    “ஒத்த ஒழுக்கம் கொலைபொய் புலால் களவொ(டு)
          ஒத்த இவையல வோர் நாலிட்(டு) – ஒத்த
          சிறுபஞ்ச மூலம் சிறந்து” – (பாடல் – 02)

    கொலை, பொய், புலால், களவோடொத்த இவையன்றி இவற்றுக்கு மறுதலையாகிய கொல்லாமை, புலால் மறுத்தல், உண்மை பேசுதல், கள்ளாமை, என்று சொல்லப்பட்ட நாலோடு ஒழுக்கத்தையும் சேர்த்து இவ்வைந்தும் அகப்பட மிகுதியான பஞ்சத்தைத் தீர்க்கும் மழைபோல அறியாமையாகிய நோயைப் போக்குகின்ற சிறுபஞ்சமூலம் என்னும் இந்நூலை சிறப்பாக கூறுகிறார்.

    “கல்லாதான் தான்காணும் நுட்பமும் காதிரண்டும்
    இல்லாதாள் ஏக்கழுத்தம் செய்தலும் – இல்லாதான்
    ஒல்லாப் பொருளில்லார்க்கு ஈததளியான் என்றலும்
    நல்லவா்கள் கேட்பின் நகை” – (பாடல் – 5) 

    • கல்வியறிவில்லாதவன் தானே ஆராய்ந்து காண்கின்ற நுட்பமான பொருளும்
    • இரண்டு காதுகள் இல்லாதவள் தான் மிக்க அழகுடையவள் என்ற இறுமாப்பு கொள்ளுதலும்
    • பொருளில்லாதவன் இல்லாதார்க்கு ஈத்தறியான் என்றாலும், தான் வறியவரிடத்து மிக்க அருளுடையவன் என்றலும்
    • அறிவுடையவா்களாகிய சான்றோர்கள் கேட்பின் நகைப்பர்.

    “கொண்டான் வழியொழுகல் பெண்மகன் தந்தைக்குத்
    தண்டான் வழியொழுகல் தன்கிளை அஃது அண்டாதே
    வேல்வழி வெம்முனை வீடாது மன்னாடு
    கோல்வழி வாழ்தல் குணம்”  (பாடல் – 15) 

    • தன்னை மணந்து கொண்டவன் சொற்படியே ஒரு பெண் ஒழுகல்
    • மகன், தந்தையின் சொல்லைத் தட்டாதவனாய் அவன் சொல்படி நடத்தல்
    • போரின்கண் வீரா்கள் பகைவரோடு சேராமல் தன்மன்னனோடு வாழ்தல்,
    • குடிமக்கள் அரசனது கோல்வழியே வாழ்வதும் அவரவர்க்குரிய குணங்களாம்.

    ஏலாதி கூறும் அறம்

    ஏலம், இலவங்கம், சிறு நாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்ற ஆறு பொருள்கள் குறிப்பிட்ட அளவோடு சோ்க்கப்பட்ட ஒரு வகைச் சூரணமே ஏலாதியாகும். இச்சூரணம் உடலுக்கு வலிவையும், பொலிவையும், தெம்பையும் தரவல்லது. இதுபோல் இப்பாடல் குறிப்பிடும் ஆறு அறக்கருத்துகள் மக்களுடைய அறியாமை நீக்கி அறிவுடையோராக மாற்றுவதாகும்.

    கொலை, களவு, பொய், காமம், கள் என்னும் ஆகியவற்றை நீக்குதல் எனும் சமண சமயத்தின் அறநெறிகளை இந்நூல் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. இல்லறம், துறவறம், விருந்தோம்பல், ஒழுக்கமுடைமை போன்ற உயா்ந்த கருத்துக்களையும் சிறந்த முறையில் எடுத்துக்காட்டுகின்றது.

    “கருஞ்சிரங்கு வெண்தொழுநோய் கல்வளி காயும்
    பெருஞ்சிரங்கு பேர்வயிற்றுத் தீயார்க்கு – அஞ்சிரமம்
    ஆற்றயூன் ஒத்(து) அவை தீா்த்தார் அரசராய்ப்
    போற்றியூண் உண்பார் புரந்து” – (57)

    • கொடிய சிரங்கு நோயும்
    • வெள்ளைத் தொழுநோயும்
    • கல்லடைப்பு நோயும்
    • வாத நோயும்
    • வருந்துகின்ற பெருஞ்சிரங்கு நோய்,
      பெரிய வயிற்றுத் தீநோய் – ஆகிய நோய்களுடையவர் பெரும் துன்பத்தை, அடைகின்றனர். அவர்களுக்கு உணவைக்கொடுத்து அந் நோய்களை நீக்கியவா்கள் மன்னராய் அனைவராலும் போற்றப்பட்டு உலகாண்டு வாழ்வர்.

    “பொய்தீர் புலவா் பொருள்புரிந் தாராய்ந்த
    மைதீா் உயர்கதியின் மாண்புரைப்பின் – மைதீர்
    சுடரின்று சொல்லின்று மாறின்று சோர்வின்(று)
    இடரின்(று) இனிதுயிலும் இன்று”  (66) 

    • பொய்ம்மை நீங்கிய சான்றோர்கள் விரும்பி ஆராய்ந்த மெய்ப் பொருளாகிய குற்றமற்ற வீடுபேற்றின் மாட்சியைச் சொல்லுமிடத்து.
    • அங்கு இருளை நீக்கும் ஞாயிறு இல்லை
    • உரையில்லை
    • நிலை மாறுதல் இல்லை
    • தளர்ச்சி இல்லை
    • துன்பமில்லை
    • இனிய துயிலுமில்லை

    வீடுபேற்றில் பகலிரவு முதலானவை இல்லை என்பதாம் இப்பாடல் கருத்து.

    ஒரு மனிதனுக்கு ஏற்படும் நோயைக் குணப்படுத்துவதற்கு எந்த அளவிற்கு மருந்து முக்கியமோ அதுபோல் ஒரு மனிதன் வாழ்வதற்குச் சில கொள்கைகளைக் கைப்பிடிக்க வேண்டும். சுக்கு, மிளகு, திப்பிலி, சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், கண்டங்கத்திரி வோ், ஏலம், இலவங்கம், சிறு நாவற்பூ இவ்வகையான மருத்துவப் பொருட்களை அளவின்றி அருந்தினால் உடல் சரியான நிலையில் இருக்கும்.

    பொய்யாமை, கொல்லாமை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை, கள்ளாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் கூறல், ஈகை, அன்புடைமை, இல்லறம், துறவறம், விருந்தோம்பல், ஒழுக்கமுடைமை இது போன்ற சிறந்த கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் நோயிலிருந்து குணமடைவதுபோல், உள்ள(மன)நோய் நீங்கி இயல்பான நிலையில் வாழ்க்கையைக் கடைப்பிடித்து நல்லவண்ணம் வாழலாம்.

    ***

    பார்வை:

    திருக்குறள் – பரிலேழகர் உரை.
    பதினெண் கீழ்க்கணக்கு பகுதி – 3 – துரை. இராசாராம்

    ***

    க.பிரகாஷ் எம்.ஏ, எம்.பிஃல்,
    தமிழ்த்துறை
    தொழில்நுட்பக் கள ஆய்வுப் பணியாளர்
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46
     

    Share
  • அறவியல் நோக்கில் இரட்டைக்காப்பியங்கள்

    –து.கார்த்திகேயன் 

    தமிழ்மொழியில் தோன்றிய முதற்காப்பியம் சிலப்பதிகாரம். அதனைத்தொடர்ந்து தோன்றியது மணிமேகலை. இவை இரண்டுமே ஒன்றுடன் ஒன்று மிக நெருங்கிய தொடர்பு கொண்டனவாகும். இரண்டு என்பதற்கும் இரட்டை என்பதற்கும் வேறுபாடு உண்டு. இரண்டு என்பது வெவ்வேறான இரண்டைக்குறிக்கும். இரட்டை என்பது மிக நெருங்கிய ஒற்றுமையுடைய இரண்டைக் குறிக்கும். உலகியலிலும் ‘இரட்டை வாழைப்பழம்’ என்ற வழக்கை நன்கு அறியலாம். ஆகவே சிலம்பும் மணிமேகலையும் கதைத் தொடர்ச்சி மட்டுமல்லாமல் வாழ்வியலுக்குத் தேவையான நல்லறங்களைச் சொல்வதிலும் ஒன்றுபட்டு நிற்கின்றன. சமய நோக்கில் மட்டுமே இவை இரண்டும் வேறுபடுகின்றனவே தவிர மற்றபடி அறவியல் நோக்கில் இவை ஒன்றுபட்டே விளங்குகின்றன. நற்சொல், நற்செயல், நன்னடத்தை ஆகியவற்றைப் பல்லாற்றானும் இவ்விரட்டைக்காப்பியங்கள் விளக்குகின்றன.

    பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாத – நினைக்காத வாழ்க்கையே பண்பட்ட வாழ்க்கையாகும். அதற்கு அடிப்படையாக அமைவது நற்சொல், நற்செயல், நன்னடத்தை ஆகிய மூன்றும் ஆகும். இம்மூன்றும் சரிவர ஒருவனுக்கு வாய்க்கப்பெற்றால், அவன் வீட்டின்பத்தைப் பெறும் வாய்ப்பைப் பெறுகிறான். அத்தகைய நல்லறங்களைப் பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    மனித வாழ்வும் பயனும்:

    மண்ணுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்த எல்லா உயிர்களின் நோக்கமும் இனிப்பிறவாப் பெருநிலை அடைய வேண்டும் என்பதே! ஆனால், உயிர்களோ அதனை அறியாது அறியாமையில் உழன்று அல்லற்பட்டு நிற்கின்றன. இவ் வுயர் நோக்கத்தை உணர்ந்து மனித உயிர்கள் உய்யவேண்டும் என்பதையே திரு நாவுக்கரசர்,

    “வாய்த்தது நந்தமக் கீதோர் பிறவி மதித்திடுமின்”  (திருமுறை:4: பாடல்: 784)

    என்றார். ஆனால் மனித உயிர்களோ உலகியலில் மூழ்கிச் சிற்றின்பச் சேற்றில் திளைத்து மகிழ்கின்றன. இவ்வாறு பெண்வழிச் சேரலும், உண்டி பெருக்கி உடலை ஓம்பலும் மனிதர்க்குத் துன்பத்தையே தருகின்றன. இதனைச் சிலப்பதிகாரம்,

    “பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகின்
    கொண்டோர் உறூஉம் கொள்ளாத் துன்பம்” (சிலம்பு: ஊர்காண் காதை.3940)

    என எடுத்துக் காட்டுகின்றது. பிறப்பின் நோக்கத்தை உறுதிபட  உணராமல் அறவழிப்பட்ட மனையற வாழ்வியலை வகுத்துச் சிற்றின்பத்தை நாடித் திரிந்தான் கோவலன். மனைவியோடுகூடி மனையறம்  காக்கும் உயர்வினை மறந்தான்; அறிவுமயங்கி, ஐம்புல நுகர்ச்சியினை விரும்பினான். இறுதியில் களவுப்பழி ஏற்று உயிரை இழந்தான். மக்கள் அருந்தவம் உடையோர் என்றாலும் அவர்களின் முன்வினைப் பயன்களால் கீழ்நிலை ஏற்படும். அப்போது அவர்கள் மேற்கொள்ளும் அறவாழ்வு ஒன்றே, அரணாக நின்று காக்கும். அப்படி இல்லாது அறத்திலிருந்து மாறுபடுகின்றபோது – அறவாழ்வைத் தவிர்க்கும்போது, முந்தைய நல்வினைகூடக் காவலாகாது என்பதைச் சிலப்பதிகாரம்,

    “உம்மை வினைவந்து உருத்த காலைச்
    செம்மையில் லோர்க்குச் செய்தவம் உதவாது” (சிலம்பு-கட்டுரை காதை.171-172)

    என உரைக்கிறது. எனவே ஐம்புலன்களை நல்வழிப்படுத்தி நல்லறம் புரியும் நல்வாழ்க்கையே நன்னிலை நல்கும் என்பதை இதன்வழி உணரலாம்.

    நற்சொல் நவிலல்:

    சொற்கள் மிகுந்த வலிமை மிக்கன. சொற்களால் பகை நட்பாகலாம்; நட்புகூடப்  பகையாகலாம். நல்லசொற்கள் அன்பை மலரச்செய்யும், நட்பை வளரச்செய்யும், உறவை நிலைபெறச் செய்யும், ஆறுதலைத் தரும், மாறுதலைத் தரும். இப்படி, பலவாறாகப் பயன்பாட்டில் உள்ளன நற்சொற்கள். அதனாலேயே இன்மொழி உரைத்தலை மக்கட்பண்புகளில் ஒன்றாகவே எடுத்துக்காட்டினார் வள்ளுவர்.

    “தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினால் சுட்ட வடு” (குறள்-129)

    என்பார் வள்ளுவப் பெருந்தகை. தீயசொற்களைச் சொல்லிவிடின் அவை ஏற்படுத்தும் காயம் நிலைபெற்றுவிடும். எனவே தீச்சொற்களைத் தவிர்க்க வேண்டும்.

    கவுந்தியடிகளோடு கோவலனும் கண்ணகியும் மதுரைக்குப் பயணித்தார்கள். இடைவழியில் ஒரு பரத்தையும், காமுகனும் அவர்களிடம் வந்தனர். கோவலன், கண்ணகியைப் பார்த்து இவர்கள் யாவர் என அடிகளிடம் வினவினர். கவுந்தியடிகள் ‘இவர்கள் என்மக்கள்’ என விடைபகர்ந்தார்.’ அதைக்கேட்ட அவர்கள் “இவர்கள் உமது மக்களாயின் உடன்பிறந்தோர் கணவனும் மனைவியுமாக வாழ இயலுமோ?” என்றனர். இத்தீச் சொற்களைச் செவியுற இயலாது பெரிதும் நடுக்குற்றாள் கண்ணகி. இதனைக் கண்ட கவுந்தியடிகள்,  அக்கீழ்மக்களைச் சினந்து முள்ளுடைக் காட்டில் முதுநரிகளாகத் திரியும்படி சாபமிட்டார்.

    “உடன்வயிற் றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கைக்
    கடவதும் உண்டோ! கற்றறிந்தீர் எனத்
    தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்
    காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க
    எள்ளுநர் போலும் இவர்என்பூங் கோதையை
    முள்ளுடைக் காட்டின் முதுநரி ஆக எனக்
    கவுந்தி இட்டது தவந்தரு சாபம்” (சிலம்பு: நாடுகாண் காதை.227-233)

    என்னும்  அடிகள் தீச்சொல் உரைத்தமையால் வரும் அவலநிலையை உணர்த்துகின்றன.

    ஒருவனைக் கண்ட அளவில் அவர்தம் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், உருவம், பருவம் ஆகிய திறங்களை உய்த்துணர்ந்து தமக்கும் அவர்க்கும் தீமைதராத  சொற்களை உரைத்தலே திறனறிந்து உரைத்தலாகும். ஒருவரது திறனறிந்து அவரிடத்தில் நற்சொல் உரைத்தலைக் காட்டிலும் வேறு சிறந்த அறமும் பொருளும் இல்லை என்கிறார் வள்ளுவர்.

    “திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
    பொருளும் அதனினூஉங் கில்”  (குறள்-644)

    எனவே திறனறிந்து பேசுதல் என்ற தன்மை இல்லாமையால் விளைந்த அவலம் சிலப்பதிகாரத்தின் வழி அறியப்படுகின்றது. 

    நற்செய்கை புரிதல்:

    அறம்,பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் உயிர்க்கு உறுதிப்பொருளாகும். உயிர்கள் தம் பிறவிப் பயனே வீடுபேறாகும். அவ்வீடுபேற்றினை அடைய வேண்டுமானால் பற்றறுத்தல் வேண்டும். ’அற்றது பற்றெனில் உற்றது வீடு’ என்னும் ஆன்றோர் வாக்கு இங்கு நினையத் தகும். பற்று நீக்கமும் அதன்வழியிலான நற்செயலாக்கமும் வீடுபேற்றுக்கு அழைத்துச் செல்லும் கருவிகளாகும். உலகியல் இன்பத்திற்கு காரணமான இளமை, செல்வம், யாக்கை போன்றவற்றிலிருந்து பற்று நீங்குதலே பற்றறுத்தல் எனப்படும். வாழ் நாள் படாமல் ஒருவன் நற்செயல் புரிந்தால் அதுவே அவனது பிறவியின் பெருவாயிலை அடைக்கும் கல் என்றார் வள்ளுவப் பேராசான்.

    “வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
    வாழ்நாள் வழியடைக்குங் கல்” (குறள்-38)

    என்ற திருக்குறள், நற்செயல்களே வாழ்வின் பிறவித்துன்பங்களைப் போக்கும் அருமருந்து என்பதை எடுத்துக்காட்டுகிறது.

    பிறர்வாழ நற்செயல் புரியும் நல்லறச் சிந்தனையை கண்ணகி மூலம் சிலப்பதிகாரம் இவ்வுலகிற்கு வழங்குகிறது. கண்ணகி, தன் கணவன் பிரிந்து சென்றபோது இல்லற இன்பங்களை நுகரவில்லையே என வருந்தவில்லை. அறவோர்க்கு அளித்தல், அந்தணர் ஓம்பல், துறவோரைக் காத்தல், விருந்தோம்பல் செய்தல் போன்ற அறச்செயல்களைப் புரியஇயலாமற் போயிற்றே என வருந்துகிறாள்.

    “அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
    துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
    விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” (சிலம்பு.கொலைக்களக்காதை:71-73)

    என்னும் அடிகள் சிற்றின்பத்தைக் கடந்து பேரின்பத்திற்கு வழிகோலும் அறச்செயல்கள் புரிகின்ற உயர்வாழ்வியலை உணர்த்துகின்றன. இல்லற வழியமைந்த நல்லறச் செய்கைக்கும் சிலப்பதிகாரத்தின் இவ்வடிகள் சான்று பகர்கின்றன.

    துறவறத்தின் வழியமைந்த அறச்செய்கைக்கு மணிமேகலை வாழ்வைச் சான்றாகக் கொள்ளலாம். அறத்தால் வருவதே இன்பம் என்பதை உணர்ந்த மணிமேகலை, பிறப்பு, மூப்பு, பிணி என்பனவற்றையுடைய கொள்கலனாக விளங்குவது மக்கள் யாக்கை என்பதையும் நன்றாக உணர்ந்திருந்தாள்.

    “மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” (மணிமேகலை:பாத்திரம் பெற்றகாதை.95-96)

    என்னும் அறக்கோட்பாட்டை நிறுவி, பாரினில் உள்ளோரின் பசிப்பிணி அகற்றும் அறச்செயல் புரிந்தாள். அதன்வழி பேரின்பப் பெருவாழ்வு பெற்றாள்.

    தொகுப்புரை:

    மனித வாழ்க்கை ஒரு வரம். அதன்மூலம் பிறவியின் வேரறுத்துப் பிறவாநிலை எய்த மனித உயிர்கள் முயலல்வேண்டும். அத்தகைய நிலைக்கு அடிப்படை இயல்புகளாக விளங்குவன பண்பட்ட நன்னடத்தையும், அருளுணர்வோடு பிறக்கும் நற்சொற்களும், தன்னலம் மறந்து பிறர்க்காக முயலும் நற்செயல்களும் ஆகும். அத்தகைய இயல்புகளை மக்கள் சமுதாயம் எய்துகின்றபோது தீயவை தானாக அழிந்துபோகும். மனித வாழ்க்கை மாண்புடையதாக மலரும். அதன்வழி, பேரின்பப் பெருவாழ்வை மக்கள் அடைய இயலும் என்பதையே இவ் விரட்டைக் காப்பியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

    ***

    து.கார்த்திகேயன்,
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    உதவிப்பேராசிரியர்,
    தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரி,
    தருமபுரம்மயிலாடுதுறை
    tamilkarthik82@gmail.com

     

     

    Share
  • ஏழை

     

    ஏழை வீட்டு அடுப்பில்
    அழுதபடி ஈரமாகிறது
    விறகு
    வியர்வைக் கடலில்
    குளிக்கிறான் ஏழை
    ஒரு பிடிச்சோற்றுக்காய்

    மூன்று வேளையும்
    வயிற்றுக்கு விழாயெனில்
    அது நிலா நாள்தான் ஏழைக்கு

    ஒவ்வொரு நாளையும்
    அவன் உழைப்புக்கு அடகு வைத்தாலும்
    இழக்கிறான் முதலும் வட்டியும்

    சுவாசிக்கவும் காசெனில்
    பிறந்தபோதே மூச்சிழந்திருப்பான்
    ஏழை

    ஏழைக் குடிசை சோற்றுப்பானைக்குள்
    இருக்கும்
    உண்மை நேர்மை உழைப்பு

    சிப்பிகளுக்கு ஏக்கம்
    ஏழை வியர்வை எடுத்து முத்தாக்க

    பணக்காரன் வெள்ளிப் பாத்திரத்தில்
    உணவு
    ஊழல் பொய் சுரண்டல்

    மழைக்காலம் கண்ணீரால் நிரம்பியது
    ஏழைக் குடிசை
    ஏழை புன்னகைபோல் அழகில்லை
    சொர்க்க
    பூக்களுக்கும்

    சோழ மன்னனைவிட மேல்
    ஏழைக்குத் தொழில் கொடுத்து
    சோறுபோடும் முதலாளி

    ஏழை கண்ணீர் துடைத்த விரலால்
    சூரியன் தொடினும்
    அது குளிரும்

    மண் குடிசைகளில் ஏழை இதயங்கள்
    பொன் முட்டைகள்

    வறுமைக்குத் தீ கண்டு பிடிக்காதவரை
    அறிவு இல்லை
    எந்த விஞ்ஞானிக்கும்

    ஏழை வாழும் பூமியில் வெளிச்சம் மகிழ்ச்சியில்லை
    நூறு நூறு சூரியன்
    உதித்தாலும்

    ஏழை பசிபோக்கும் செல்வத்தில் தெரியும்
    ஒளிப் புன்னகை

    – ராஜகவி ராகில் –

    Share
  • சிலம்பும் உரிச்சொற்களும்

    –து.கார்த்திகேயன்

    முன்னுரை:

    தமிழ் மொழியின் அமைப்பைப் புரிந்துகொள்ள  உதவும் சொல்லிலக்கண நூல்களிலேயே  முதன்மையானது தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியச் சொற்பாகுபாடுகளுள் முதன்மையானவை பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் ஆகும். இவற்றைச் சார்ந்து இயங்குவன இடைச்சொல்லும் உரிச்சொல்லுமாம். தனித்து இயங்கும் ஆற்றல் இல்லை எனப்பெற்றாலும் இசை, பண்பு, குறிப்புப் பொருளுக்கு உரியனவாகவும், பெயர், வினைச் சொற்களுக்கு அடையாகவும் சில வேளைகளில் பெயர், வினைச் சொற்களாகவும் உரிச்சொற்கள் செய்யுள்களில் முதன்மைப் பங்காற்றுகின்றன. அந்த வகையில் தொல்காப்பியர் குறிப்பிடும் உரிச்சொற்களின் மரபுகளைக் காப்பிய இலக்கியமாகிய சிலப்பதிகாரத்தில் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    தொல்காப்பியம் காட்டும் உரிச்சொல்:

    தமிழ் இலக்கண நூல்களுள் தொல்காப்பியம், நன்னூல், இலக்கண விளக்கம், நேமிநாதம், தொன்னூல் விளக்கம் ஆகியன உரிச்சொலுக்கென  தனி இயல் வகுத்துள்ளன. இவை பெரும்பாலும் தொல்காப்பிய உரிச்சொல் மரபுகளையே பின்பற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியர் குறிப்பிடும் உரிச்சொல் இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவநிலை மற்றும் பொருள்நிலையில் உரிச்சொற்களின் ஆறு நிலைகளை அறியமுடிகிறது. 

    வடிவநிலை:

    1.எழுத்துப் பிரிந்து இசையாப் பண்பு (தொல்.சொல்.297)

    2.பெயரினும் வினையிலும் மெய்தடுமாறல் (தொல்.சொல்.297)

    3.நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவி

    பொருள்நிலை:

    1.இடையினும் பண்பினும் குறிப்பினும் தோன்றல் (தொல்.சொல்.297)

    2.ஒருசொல் பலபொருள் தோன்றல் (தொல்.சொல்.297)

    3.பல்சொல் ஒருபொருள் தோன்றல் (தொல்.சொல்.297)

    வடிவநிலை உரிச்சொற்கள்:

    தொல்காப்பிய எழுத்ததிகாரத்திலேயே உரிச்சொல்லைப் பற்றித் தொல்கப்பியர் குறிப்பிடுகின்றார். “புள்ளியும் உயிரும் இறுதியாகி நெறிப்பட வாரா குறைச்சொற்கிளவி (தொல்.எழு.421)” என உரிச்சொற்களை குறைச்சொற்கள் என அறிமுகப்படுத்துகிறார் தொல்காப்பியர்.

    சால,மழ,குழ போன்ற சொற்கள் முழுச்சொற்கள் அல்ல; குறை வடிவங்களே. இவை நேரடியாகப் பெயரையோ வினையையோ குறிப்பிடவில்லை. மாறாக இலக்கியத்தில் பெயர், வினைகளைச் சார்ந்து வந்தே பொருள் தருகின்றன. இத்தன்மையினாலேயே அவற்றைக் குறைச்சொல் என்றார் தொல்காப்பியர். எடுத்துக்காட்டாக கயமலர் (சிலம்பு:2,10), மழவிடை (சிலம்பு:22,15), வயப்புலி (சிலம்பு:12,27), கவவுக்கை (சிலம்பு:1,61), மதகரி (சிலம்பு:25,49) என்பன போன்ற சொல்லாட்சிகளில் கய,மழ, வய, கவவு, மத ஆகிய குறைச்சொல் வடிவங்கள் பெயரடைகளாக வழங்குகின்றன.

    உரிச்சொற்கள் பெயரினும் வினையினும் மெய்தடுமாறி வருகின்றன. மெய்தடுமாறி என்பதற்கு சேனாவரையர் இசை, பண்பு, குறிப்பு என்னும் பொருளாய்ப் பெயர், வினை போன்றும் அவற்றிற்கு முதனிலையாயும் தடுமாறியும் என்று விளக்கமளிக்கிறார். உரிச்சொற்களின் வடிவ நிலையிலான தடுமாற்றத்தை இது உணர்த்துகிறது. அலமரல் என்னும் உரிச்சொல் சிலப்பதிகாரத்தில் அலமந்து (சிலம்பு-21,44) என வினையெச்ச வடிவமாகப் பயின்று வந்துள்ளது. இலம்பாடு என்னும் உரிச்சொல் இலம்பாடு  நாணுத்தரும் (சிலம்பு:9,97) என்ற தொடரில் வறுமைப் பொருளைத் தருகின்றது. எனவே உரிச்சொற்கள் சொல் நிலையில் பெயர்களாகவும், வினை வடிவில் குறைச்சொற்களாகவும் (அடையாக) இயங்க வல்லன என உணரலாம்.

    பொருள் நிலையிலான உரிச்சொற்கள்:

    உரிச்சொற்கள் இசை, பண்பு குறிப்பு பண்புகளில் தோன்றும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. உரையாசிரியர், சேனாவரையர், ”உரிச்சொற்கு இலக்கணமாவது இசை, பண்பு, குறிப்பென்னும் பொருட்குரியவாய் வருதலேயாம்” என விளக்கம் தருகிறார்.

    தமக்கியல்பில்லாத இடைச்சொற்களைப் போன்று அல்லாது இசை, பண்பு குறிப்புப் பொருட்குத் தாமே உரியவாதலின் உரிச்சொல்லாயிற்று எனவும் உரிச்சொல்லின் இயல்பு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள 120 உரிச்சொற்களையும் உரையாசிரியர்கள் இசை, பண்பு, குறிப்பு ஆகிய மூன்று நிலைகளில் அடக்கிக் காட்டியுள்ளனர். சேனாவரையர் உரைப்படி, 9 சொற்கள் இசைப்பொருளையும் 15 சொற்கள் பண்புப்பொருளையும் எஞ்சிய 96 சொற்கள் குறிப்புப்பொருளையும் உணர்த்துவன. இவற்றுள் தொல்காப்பியம் கூறும் பொருள்மரபிலேயே சிலம்பில் பயின்று வருவனவாக இயம்பல், கலி ஆகிய இசைச்சொற்களையும், நளி, துணைவு போன்ற சொற்கள் குறிப்புச் சொற்களையும் எடுத்துக்காட்டாக கலிகெழு கூடல் (சிலம்பு:3.125) என்ற தொடரில் கலி என்பது அரவப்பொருளையே தருகிறது. செழுமை என்னும் பண்பு உரிச்சொல் செழுங்குலை (சிலம்பு:25,46), செழுமுத்தம் (சிலம்பு:29.1) ஆகியவற்றில் முறையே, தொல்காப்பியர் குறிப்பிட்ட வளன், கொழுப்பு ஆகிய பொருளில் கையாண்டுள்ளார் இளங்கோவடிகள்.

    நளிமலர் (சிலம்பு:2.56), துணைந்து சென்று(சிலம்பு:8.114) ஆகிய தொடர்களில் செறிவு, வரைவு எனக் குறிப்புப்பொருளில் ஆளப்பட்டுள்ளன. எனவே இவ்வாறு பொருள் நிலையில் உரிச்சொற்களை ஆராயும்இடத்து ஒருசொல் பலபொருள், பலசொல் ஒருபொருள் என்ற நிலையில் சிலப்பதிகாரத்தில் மிகுதியும் கையாளப்பட்டுள்ளது. 

    முடிவுரை:

    சிலப்பதிகாரத்தின் சொற்கூறுகளில் உரிச்சொல் நிலைகளை ஆராய்ந்த இக்கட்டுரையின் வாயிலாக உரிச்சொற்களின் இயல்புகள் இலக்கணங்களை அறிய முடிகின்றது. உரிச்சொற்கள் ஒரு சொல் பலபொருள் நிலையிலும், பலசொல் ஒருபொருள் நிலையிலும், குறைச்சொற்களாகிய அடைச்சொற்களாக பெயர், வினைகளுக்கு முன்னேயும், அவற்றைச் சார்ந்தும், பெயர், வினைகளாகவே சில இடங்களிலும் இயங்க வல்லன என அறியலாம்.

    ***

    து.கார்த்திகேயன்
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    உதவிப்பேராசிரியர்,
    தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரி,
    தருமபுரம்மயிலாடுதுறை
    tamilkarthik82@gmail.com

     

     

    Share
  • அரிதாரம்

     விஜய் விக்கி

    தீபாராதனை முடிந்து, அர்ச்சகர் கொடுத்த திருநீறை மடித்துவைக்க காகிதத்தைத் தேடிய அமுதாவிற்கு, கசங்கிய, அழுக்கான, தண்ணீரில் ஊறிய காகிதங்கள் மட்டும்தான் கண்களுக்கு அகப்பட்டது… வேறு வழியின்றி, சேலையின் முந்தானையில் கொட்டி முடிச்சுப்போட்ட பிறகுதான்தான் மனம் சற்று நிதானமானது… வழக்கம்போலவே அர்ச்சனையில் உடைத்த தேங்காய்முடிக்குள் அதனை கொட்டியிருக்கலாம்தான்… ஆனால், கடந்தமுறை அப்படி செய்திருந்த தேங்காயில் சட்னி செய்தபோது, “ஏன் சட்னி ஒரு மாதிரி ஸ்மெல்லா இருக்கு!”ன்னு மூன்று இட்லிகளோடு சிற்றுண்டியை முடித்துக்கொண்ட கணவனின் முகம் மனதிற்குள் வந்துபோனதால்தான் இன்றைக்கு காகிதத்தைத் தேடவேண்டிய கட்டாயம் இவளுக்கு…

    மாலையின் வெளிச்சம் மெள்ள மங்கிக்கொண்டிருந்தது.. பிரகாரத்தின் இடதுபுறம் ஒரு தூணில் சாய்ந்தபடி அமர்ந்துகொண்டாள் அமுதா.. பைக்குள்லிருந்து ‘க்ர்ர்ர்… க்ர்ர்ர்..’ அலைபேசி வைப்ரேட்டியது.. ‘அரவிந்த்’ என திரை பளிச்சிட, ஸ்வைப் செய்து காதில் வைத்தவாறு “கோவில்ல இருக்கேங்க.. கொஞ்சநேரம் இருந்துட்டு வரேனே!” பணிவாகப் பேசினாள்..

    “ஹ்ம்ம் சரி… கிளம்புறப்போ கால் பண்ணு, கார் வரச்சொல்றேன்.. இருட்டிடும்ல” கணவனின் அக்கறையான பதில்.. சிவப்பு பொத்தானை அழுத்தி, மொபைலை கைப்பைக்குள் திணித்துக்கொண்டாள்.. ஒரு மணி நேரத்திற்கொருமுறை, எவ்வளவு பணிச்சுமையில் சிக்கித் தவித்தாலும் அரவிந்திடமிருந்து ஒரு அழைப்பு வந்துவிடுவதுண்டு..

    “எங்க இருக்க?… சாப்டியா?.. இவ்ளோ நேரம் ஏன் சாப்டாம இருக்க?” நலன்சார்ந்த கேள்விகள்தான் அதில் பிரதானம்.. நடந்துசென்றால்கூட நெற்றி வியர்க்காத தூரத்திலிருக்கும் கோவிலுக்கு கார் அனுப்பும் இதுபோன்ற வினோத அக்கறைகளை அரவிந்திடம் மட்டும்தான் காணமுடியும்!

    இப்போ வீட்டிற்கு சென்றாலும் ஒன்றும் செய்துவிடப்போவதில்லை.. சட்னியும் கூட செய்து வைத்தாகிவிட்டது, தோசை வார்த்துக்கொடுக்க ஐந்து நிமிடங்கள் போதும்.. அதுவரை என்ன செய்வது?.. படித்த புத்தகம் எதையாவது எடுத்து புரட்டிக்கொண்டு வேண்டுமானால் இருக்கலாம்.. அப்படி பலமுறை புரட்டிய காகிதங்களே கிழியும் தருவாயில் தொக்கித்தான் நிற்கின்றன.. இப்போதும்கூட கிரிக்கெட்டில் ‘லொட்டு’ லொட்டு’ன்னு தட்டிக்கொண்டிருப்பதை வைத்த கண் விலகாமல் பார்த்துக்கொண்டிருப்பார் அரவிந்த்.. அப்பப்போ, ‘செம்ம ஷாட்!… ஐயோ அவுட் ஆகிட்டான்!’ன்னு தனியே புலம்பிக்கொண்டிருக்கும் அவரைத்தாண்டி, சுவற்றை மட்டும்தான் வெறித்துக் கொண்டிருக்கவேண்டும்… அதற்கு பதிலாக இந்த கோவிலில் வேடிக்கை பார்க்கத்தான் எவ்வளவோ விஷயங்கள் கொட்டிக்கிடக்கிறதே!…

    வலதுபுறத்தில், படிகளின் ஓரத்தில் அமர்ந்து கிசுகிசுத்துக்கொண்டிருக்கும் அந்த புதுமண ஜோடியை கண்களால் கணித்துக்கொண்டிருக்கிறாள் அமுதா.. திருமணம் முடிந்து அதிகபட்சம் பத்து நாட்கள்தான் ஆகியிருக்கணும்!.. தாலியின் மஞ்சள் கூட இன்னும் மங்கவில்லை, நெற்றியின் வகிட்டுக் குங்குமம் அந்த அனுபவமின்மையை பிரதிபலித்தது… அந்த புதுப்பெண்ணின் கைகளில் வைத்திருந்த மருதாணி வாசனையை அவள் கணவன் நுகரத்துடிக்கிறான்… அவளோ, அக்கம் பக்கத்தில் ஆட்கள் இருப்பதாய் மறுக்கிறாள்… அவன் ஏதோ காதுகளுக்குள் கிசுகிசுக்க, அவள் வெட்கப்பட்டுச் சிரித்தவாறே பதில் சொல்கிறாள்.. மேற்கொண்டு அவற்றை பார்க்க விரும்பாதவளாக வேறுபக்கம் பார்வையை படரவிட்டாள் அமுதா..

    திருமணமான புதிதில் இவளுக்கும் அப்படியோர் அனுபவம் வாய்த்தது… ஏதோ பரிகார நிவர்த்திக்காக புதுமணதம்பதியை மட்டும் கோவிலுக்கு அனுப்பிவிட்டு, ‘சின்னஞ்சிறுசுகள் தனியா போயிட்டு வரட்டும்!’ என ஒதுங்கிக்கொண்டார்கள் பெரியவர்கள்… வழிபாடு முடிந்து இப்படியோர் பிரகாரத்தில் அமர்ந்திருந்தபோது, அமுதாவிற்கும் அரவிந்திடம் கேட்க ஆயிரம் கேள்விகள் வரிசைகட்டிக் காத்திருந்தன… மொபைலில் சென்செக்ஸ் புள்ளிகளை கணித்துக்கொண்டிருந்த கணவனிடம், எப்படி கேள்வியை தொடங்குவது? என்றுதான் புரியவில்லை…

    “நீங்க படமெல்லாம் பார்ப்பிங்களா?” அப்பாவியாக பேச்சைத் தொடங்கினாள்..
    “ஹ்ம்ம்…”
    “எந்த ஹீரோ பிடிக்கும்?”
    “லியோனார்டோ டி காப்ரியோ”

    இந்த பதிலின் அர்த்தம் அவளுக்கு புரியவில்லை… ஆனால், மேற்கொண்டு கேள்விகளை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லப்பட்ட பதிலென்பது மட்டும் புரிந்தது.. மீதமிருந்த தொல்லாயிரத்து தொன்னூற்றெட்டு கேள்விகளும் தொண்டைக்குள் விழுங்கிய எச்சிலோடு கரைந்துபோனது..

    திருமணமாகி கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது… என்றாலும், இன்னும் முழுமையாய் புரிந்துகொள்ள முடியாத சூட்சமமாய்தான் இருக்கிறான் அரவிந்த்… சற்று ஏழ்மையான குடும்பத்தின் மூத்த மகளுக்கு, கனிம வளத்துறையில் உயரிய பொறுப்பு வகிக்கும் வசதியான வரன் அமைந்ததை எண்ணி இன்னும் சிலாகித்துக்கொண்டிருக்கிறார் அமுதாவின் அப்பா… “நம்ம அமுதாவ அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்காம்.. ஜாதகமும் நல்லா பொருந்திருக்கு, யோசிக்காம முடிச்சிடுங்க!” தூரத்து உறவினர் வழியே வந்த வாய்ப்பை இவளின் அதிர்ஷ்டமாகத்தான் பார்த்தார்கள் வீட்டார்… “நம்ம அமுதா யோகத்துக்கு அவ ராணி மாதிரி இருப்பான்னு சொன்னேனா இல்லையா?” அப்பா பெருமை பீற்றிக்கொண்டார்… மாமானாரைக்கூட ‘அப்பா’ என உரிமையோடு விளிக்கும் மாப்பிள்ளை எத்தனைபேருக்கு வாய்த்திருக்கமுடியும்?… வாய்வார்த்தைக்கு மட்டுமல்லாது, மகனாகவே பலமுறை குடும்பத்து பிரச்சினைகளின்போது முன்னின்ற அரவிந்த்துக்கு இவள் அப்பா ரசிகர் மன்றம் தொடங்கினால்கூட அதிசயமில்லை..

    அவர்கள் கணிப்பும், யோசனையும் பொய்யாகவில்லை… வசதியான வாழ்க்கை.. முழுமையான சுதந்திரம், ராணி போலத்தான் வாழ்கிறாள்.. ஆனால்….

    பின்னாலிருந்து ஒரு கை அவள் தோளின் மீது படர, திடுக்கிட்டுத் திரும்பினாள் அமுதா.. வாய் முழுக்க புன்னகையோடு நின்றுகொண்டிருக்கும் அந்த பெண்ணை சட்டென அடையாளம் காணமுடியவில்லை.. ஒருவழியாய் நிழல் உலகத்திலிருந்து தன்னை மீட்டுக்கொண்டு, எதிரே நிற்பவளை அடையாளம் காண்பதில் மனம் முனைப்பானது…

    “அமுதா மிஸ் தான நீங்க?” அமுதா மிஸ்’ஸா?.. ஏதோ ஒருகாலத்தில் பணிபுரிந்தது.. இவளுக்கே மறந்துபோயிருந்த இறந்தகாலமாயிற்றே, அந்த தனியார் பள்ளியின் ஆசிரியை பணி!… அதை நினைவுகூர்ந்து இன்றைக்கு அழைக்கும் இந்தப்பெண் யார்?.. அட ஆமா!.. அந்த தெத்துப்பல், புருவத்தின் மேலிருக்கும் மரு… ஒருவழியாய் ஊகித்துவிட்டவளாக, “பானு மிஸ்தான நீங்க?”

    ஆச்சர்யம் பொங்க வினவினாள்… கடந்த ஆறு மாதங்களாக தடயமே இல்லாது தனது வாழ்க்கைப் புத்தகத்தில் மறைந்துபோன மனிதர்களுள் ஒருத்திதான் பானுவும்…

    பானு, கலகலப்பாக பேசுபவள்.. மனதிற்குள் தோன்றியதை பட்டென போட்டு உடைத்துவிடும் கண்ணாடி மனசுக்காரி.. உணவு இடைவேளையில் அவள் திறக்கப்போகும் டிபன் பாக்ஸ்க்காக காத்திருந்த ஏழெட்டு சக ஆசிரியைகளுள் அமுதாவும் ஒருத்தி..’ ஒவ்வொன்றாய் நினைவுகள் வரிசைக்கட்டி மடையை திறந்து கொண்டு மனதிற்குள் கொட்டத்தொடங்கின…

    “பரவால்லையே… ஞாபகம் வச்சிருக்கிங்க!”

    “எப்டி மறக்கமுடியும்?… அந்த கத்தரிக்காய் தொக்கு இப்பவும் கண்ணு முன்னால வந்துபோகுது!” சிரித்துக்கொண்டாள் அமுதா..

    “கத்தரிக்காய்லாம் ஞாபகம் இருக்கு, என்னைய கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணனும்னு மட்டும் மறந்தாச்சுல்ல?”

    “ஐயோ சாரி பானு… அவசரமா ஏற்பாடு பண்ணிட்டாங்க… அவரு ஜாதகத்துல ரெண்டு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணனும்னு சொல்லிட்டாங்களாம்… அதான், நெருங்கிய சொந்தக்காரங்களுக்கு மட்டும் சொல்லி கோவில்லையே சிம்பிளா நடந்துமுடிஞ்சிடுச்சு… ப்ரெண்ட்ஸ், கூட வேலை பாக்குறவங்கன்னு யாரையும் இன்வைட் பண்ணமுடியலன்னு ரொம்ப கஷ்டமா போச்சுப்பா…” பானுவின் கையைப்பிடித்து அழுத்தியபோது அவள் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது…

    “சரி விடுங்க… பொம்பளைங்க நாம நெனச்சா எல்லாம் நடக்குது?… உங்க ஹஸ்பன்ட் எப்டி இருக்காரு?… கவர்மென்ட் ஜாப்னு சொன்னாங்க, வசதியான குடும்பமாமே.. சொத்துபத்துன்னு பாரம்பரியமான குடும்பம்னுலாம் சொன்னாங்களே!.” எல்லாவற்றையும் விசாரித்து வைத்திருக்கிறாள் போலும்..

    “ஆமா… மினரல்ஸ் டிப்பார்ட்மெண்ட்ல வர்க் பண்றார், பெரிய குடும்பம்தான்.. இங்க திருச்சிலதான்… ஆமா, நீங்க எப்போ தஞ்சாவூர்லேந்து இங்க வந்திங்க?”

    “மூணு மாசமாச்சு… திருச்சிதான் எனக்கும் புகுந்தவீடு”

    பானுவின் கழுத்தை கவனித்தாள் அமுதா… அட ஆமா, தாலி இருக்கிறது.. அவளிடம் கோபித்துக் கொள்வதில் அர்த்தமில்லை.. அவளுக்குமான பதிலாகத்தான் முன்னமே, ‘பொம்பளைங்க நாம நெனச்சா எல்லாம் நடக்குது?’ன்னு சொல்லிவிட்டாள்…

    “கங்க்ராட்ஸ்பா…” வாழ்த்துகளைத் தாண்டி, கடந்த கால நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தபோதுதான் பானுவின் கழுத்தினை எதேச்சையாக கவனித்து,

    “அதென்ன உங்க கழுத்தில சிவந்து போயிருக்கு?.. காயம் போல இருக்கே..”
    அக்கறையாய் வினவினாள் அமுதா…

    பானுவிடம் பதில் வார்த்தைகளாக வரவில்லை, அசட்டுச் சிரிப்பு மட்டும்தான் வெளிவந்தது… எதற்காக வெட்கப்படுகிறாள்? அமுதா புரியாமல் ஏறிட்டுப் பார்த்தாள்… சற்று கூர்ந்து அந்த காயத்தை கவனித்தபோதுதான், பற்களின் தடம் அவள் கண்களுக்கு புலப்பட்டது… அமுதாவிற்கு சுருக்கென்றது…

    கேட்டிருக்கக்கூடாத கேள்வியோ?.. என்ன நடந்திருக்கிறது? என்பது எளிதாக அனுமானிக்க முடிந்த விஷயம்தான்… அதனை இவ்வளவு துழாவியிருக்க வேண்டாம்!..

    “ஐயோ நீங்க சொன்னதும்தான் ஞாபகம் வருது.. அவரு அர்ச்சனை சீட்டு வாங்குறதுக்குப் போனார், உங்கள பார்த்ததும் அவரை மறந்துட்டேன் பாருங்க…

    போய் சாமி கும்பிட்டுட்டு வரேன், இங்கயே இருங்க.. நிறைய பேசுவோம்!”

    துள்ளிக்குதித்து கணவனை நோக்கி ஓடினாள் பானு…

    ஆனால் அமுதாவிற்கு அவளுடன் பேச்சைத் தொடர விருப்பமில்லை… மனதினுள் ஏதோ ஒரு இன்ஸ்டன்ட் கவலை சூழ்ந்துகொண்டது.. சட்டென பேட்டரியின் சார்ஜ் இழந்த மொபைல் போல முகத்தின் பிரகாசம் மங்கிப்போனது.. பானு தன் பார்வையைவிட்டு மறைந்த மறுகணம், சட்டென எழுந்து வீட்டை நோக்கி நடக்கத்தொடங்கினாள்..

    இப்போதெல்லாம் யாரோ கணவன், அவன் மனைவியிடம் காதலோடு பேசுவதை பார்த்தாலே அவள் மனதிற்குள் அனிச்சையாய் அமிலம் சுரக்கிறது… கோபம் சுளீரிடுகிறது..

    இப்போதுகூட பானுவின் கணவன் மீது, “கோவிலுக்கு போற பொண்ணுகிட்ட இப்டியா நடந்துக்கர்றது?.. பொண்டாட்டியாவே இருந்தாலும் இதல்லாம் அசிங்கமா இல்ல?”ன்னு கோபம் வருகிறது… இவள் வேகமாய் கிளம்பவும் அந்த கோபம்தான் காரணம், கொஞ்சம் கூடுதல் நேரம் பானுவிடம் பேசியிருந்தால் அநேகமாய் அந்த மனக்குமுறல் வார்த்தைகளாக வெளிவந்திருக்கும்.. இப்போது மட்டுமல்ல.. பார்க்கில் காதலன் மடியில் சாய்ந்திருக்கும் காதலியை பார்த்தபோதும், திரையரங்கில் கார்னர் சீட் தேடிப்போகும் தம்பதிகளை பார்க்கும்போதும், திரைப்படங்களில் அன்யோன்யமாக நடிக்கும் நடிகர்களைப் பார்த்தால்கூட இப்படிப்பட்ட கோபங்கள் அனிச்சையாகவே உண்டாகிறது.. ‘இதல்லாம் சமூக சீர்கேடு!.. அன்யோன்யம்னா வீட்டுக்குள்ள இருக்கணும், இப்டி பப்ளிக்ல அசிங்கமா… ச்ச ச்ச… மனுஷனுக்கும் நாய்க்கும் வித்யாசம் இல்லையா?’ன்னு அவ்வப்போது பொங்கித்தீர்ப்பதும் உண்டு… ஆனால், இந்த கோபங்கள் சமூக அக்கறையைத் தாண்டிய, அது ஒருவித மனவிரக்தியின் வெளிப்பாடு என்பது அவள் மனதிற்கு மட்டுமே தெரிந்த உண்மை… ஆனால், அந்த உண்மையை அமுதாவின் ஈகோ என்றைக்குமே ஏற்றதில்லை என்பது வேறு விஷயம்!..

    இருட்டிப்போயிருந்தது.. சாலையின் இருட்டு பயமில்லை, நாய் குரைப்பதில் கவனம் இல்லை, மதுவின் நெடி வீசும் யாரோ சில சிகரெட்’வாலாக்கள் தன்னைக் கடந்துசென்றபோதும் எவ்வித சலனமும் இல்லை… இவள் கவனம் முழுக்க மனதின் வலிகளைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறது.. எதற்கு இப்படியொரு கோபம், கவலை அவளுக்குள்?.. வசதியான வாழ்க்கை, அக்கறையான கணவன், முழுமையான சுதந்திரம்.. தன்னை மட்டுமல்லாது, தனது குடும்பத்தினையும் மிகுந்த பாசத்துடன் அணுகும் மணவாளன்… தன் தகுதியை மீறிக் கிடைத்த வாழ்க்கையென எத்தனையோ முறை எண்ணியிருக்கிறாள்… ஆனால், எல்லாமும் இருந்து ஏதுமற்றதாய் ஒரு வெறுமை எப்போதுமே அமுதாவை ஆட்கொண்டிருப்பதுதான் சிக்கலே.. உப்பில்லாத உணவு பண்டங்களை போல, உணர்ச்சிகளற்ற வாழ்க்கை அது…

    திருமணமான புதிதில் அரவிந்த் உடல் சார்ந்த இன்பங்களில் அதிகம் நாட்டமில்லாமல் இருப்பதை கவனித்தபோது, ‘சரி பழக்கமில்லாத பொண்ணுங்கிறதால தயங்குறார் போல!’ என அதனைப் பெரிதாய் பொருட்படுத்தவில்லை.. ஆனால், நாட்கள் செல்ல அந்த இடைவெளி இன்னும் அதிகரித்துக்கொண்டே செல்லும்போதுதான் அவளுக்குள் ஒருவித பயம் உதித்தது.. ‘ஒருவேளை என்னைய பிடிக்கலையோ?’

    இப்படித்தான் தாழ்வுமனப்பான்மை மொட்டாய் அரும்பியது… அமுதாவை பொறுத்தவரை பேரழகி இல்லை என்றாலும், களையான முகத்தவள்… செயற்கை ஒப்பனைகள் இல்லாமலேயே, முகப்பொலிவு மங்காதவள்… கல்லூரி காலம் முதல், பணிபுரியும் நாட்கள் வரையென இவளை மனைவியாக்கிக்கொள்ள எத்தனித்த ஆண்களின் எண்ணிக்கை மட்டும் டசன் கணக்கைத் தாண்டும்… அப்படியிருக்க அரவிந்துக்கு மட்டும் ஏன் பிடிக்கவில்லை?.. யாரோ ஒரு தோழி மூலம், அழகு நிலையம் கூட சென்று பார்த்துவிட்டாள்… புருவத்தைச் செப்பனிட முடிந்தது,

    கரும்புள்ளிகளை காணாமல் போக செய்திட முடிந்தது… பேஷியல், பவுண்டேஷன் க்ரீம், மஸ்காரா என செயற்கை ஒப்பனைகளால் அலங்கரித்தபோதிலும், அரவிந்தின் பார்வை மட்டும் இன்னும் இவள் பக்கம் திரும்பியபாடில்லை…

    “பொண்ணுங்க மல்லிப்பூ வச்சிருந்தாதான் தனி அழகே!” என்றைக்கோ ஒருமுறை நண்பரிடம் அரவிந்த் சம்பாஷித்த பேச்சினை கவனித்த அமுதாவிற்கு அன்றுமுதல் மல்லிகைப்பூவும் உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.. மல்லிகை மணம் ஏற்படுத்திய ஒவ்வாமை தலைவலியை தாங்கிக்கொண்டு, மலர் சூடிய மங்கையாய் அரவிந்தின் எதிரில் நிற்பாள்..

    இன்னும் வேறென்னவெல்லாம் குறை கண்டிருக்கிறார் என்னிடம்?… எவ்வளவோ இயல்பை மீறிய மாற்றங்களை உள்வாங்கி வெளிப்படுத்தியபோதும், அதனை பொருட்டாகவே கண்டுகொள்ளாத கணவனின் பார்வை என்றைக்குத்தான் இவள் பக்கம் ஏறிடுமோ தெரியவில்லை!..

    ‘ஒருவேளை இவருக்கு திருமணத்திற்கு முன்பே வேறு பெண்ணுடன் காதல் இருந்திருக்குமோ?’ ஆறு மாதங்களாய் அதற்கான தடயங்களை தேடியும், அப்படி ஒரு சான்றும் சிக்கவில்லை.. திருமணத்திற்கு பின்னும் கூட எத்தனையோ பெண்கள், இவள் அறிந்தே அரவிந்திற்கு தூண்டில் போட்டனர்… “தூண்டில் முள்ளில் சிக்கிட அரவிந்த் ஒன்றும் கெண்டை மீன் இல்லை, திமிங்கலம்” பலமுறை கணவனை
    நினைத்து இப்படி சிலாகித்ததுண்டு.. கடைக்கண் பார்வை பட்டால் கவிழ்ந்துவிட பெண்கள் என்னவோ தயாராகத்தான் இருந்தார்கள், இவன் நிமிர்ந்து பார்த்தால்தானே அதெல்லாம் நடக்கப்போகிறது!.. ராமன்தான்… ஆனால், சீதையைக்கூட தொட மறுக்கும் ராமன்… அணிலாய் நினைத்து தொட்டால்கூட, மூன்று கோடுகளுக்காவது கொடுப்பினை இருந்திருக்கும்.. அதற்கும் வழியில்லாத அசோகவனத்து சீதை இவள்..

    அதற்காக உடலுறவில் ஈடுபடவில்லை என்றெல்லாம் நினைத்திட வேண்டாம்… அத்திபூத்தார் போல அவ்வப்போது, ஒரு உடலியல் நிகழ்வாக மட்டும் அது நடப்பதுண்டு… முத்தம் கூட இல்லாமல், கருவை உருவாக்குவதில் மட்டுமே முனைப்பாகிய முற்றிலும் எந்திரத்தனமான நிகழ்வு அது.. ஆனால், அமுதாவின் ஏக்கம் வேறு மாதிரியானது… அது செக்ஸ் சார்ந்தது இல்லை..

    கதைகளில் படித்த காதல், திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்ட அன்யோன்யம், அக்கம்பக்கத்தில் பார்த்தறிந்த நெருக்கம்… ஒருவேளை தான் வாழ்வதுதான் உண்மை, மற்றவை எல்லாம் கற்பனையா? என்கிற யோசனை கூட அடிக்கடி வருவதுண்டு… நிஜத்தில் தன்னை சமாதானப்படுத்திக்கொள்ள அவளாகவே ஏற்படுத்திக்கொள்ளும் காம்ப்ரமைஸ் கற்பனைகள் அவை… இப்போது பார்த்த பானுவின் கழுத்து காயத்தடம் போன்ற நிகழ்வுகள், அந்த கற்பனை பிம்பத்தினை அவ்வப்போது சிதறிப்போகச் செய்துவிடுகின்றன… மீண்டும் பழையபடி ஒருவித காம்ப்ளக்ஸ் அவளைத் தொற்றிக்கொள்கிறது…

    இப்படி அன்யோன்யம் இல்லாது போவதால், அக்கறையில்லாத கணவனாகவும் அரவிந்த்தை பார்த்திட முடியாது.. கனிவான கவனிப்பில் சராசரி கணவன்மார்களைவிட சற்று கூடுதல் மதிப்பெண்களே கொடுக்கும் அளவிற்கு பொறுப்பானவன்…

    இதோ அமுதா இப்போது கடந்துசெல்லும் பாரதி ஹாஸ்பிட்டலே அதற்கொரு சாட்சிதான்…. இரண்டு மாதங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் கிட்டத்தட்ட ஒருவாரம் இங்குதான் அனுமதிக்கப்பட்டிருந்தாள் அமுதா..

    நிமிர்ந்து அமர்ந்திடக்கூட உடலில் வலு இல்லாமல் சுரத்தே இன்றி படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த அந்த நாட்களில் அரவிந்த்’தான் அவ்வளவு அக்கறையாக கவனித்துக்கொண்டான்.. பழச்சாறு பிழிந்து கொடுப்பது, கைத்தாங்கலாக நிமிர்த்தி அமரச்செய்தது, வேளாவேளைக்கு மாத்திரைகள் கொடுத்தது… “நீங்க ஏன் லீவ் போடுறீங்க?.. அம்மாவை வரச்சொல்றேன், நீங்க ஆபிஸ் போங்க!” அமுதாவும் சொல்லிப்பார்த்தாள்… அவன் மனம்தான் அதற்கு ஒப்பவில்லை.. “பரவால்ல… எனக்கொரு கஷ்டமும் இல்ல!” என்றான் பதிலுக்கு…

    “என் மனைவியை நான்தானே பார்த்துக்கணும்!” என்கிற தொனியிலான பதிலது.. இவ்வளவு அக்கறையாக இருப்பவர் ஏன் அன்யோன்யத்தை விரும்பவில்லை?.. பாசம் இல்லாமல் அக்கறை உருவாகிட வாய்ப்பில்லை.. பாசம் இருக்கும் பட்சத்தில் அது காதலாய் ஏன் கனியவில்லை?…

    ‘ஒருவேளை எனக்கு பிடிக்காதுன்னு நினைச்சு அதல்லாம் அவர் செய்றதில்லையோ?’ என்ற சந்தேகம்கூட ஒருமுறை எழுந்தது… சரி, அதையும்தான் வெட்கத்தைவிட்டு சோதித்து பார்க்கலாமே!.. தானாக அரவிந்திடம் அன்யோன்யமாக இருக்க முற்பட்டு கட்டி அணைத்தாள்… அந்த பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட அரவிந்த், அவளை வித்தியாசமாக ஏறிட்டு வெறித்துப்பார்த்தான்… அந்த பார்வையில், அமுதாவின் சப்த நாடிகளும் ஒடுங்கிப்போனது..

    அநேகமாய் இவள் நடத்தையில் கூட அவனுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம்… இந்த பாழாய்ப்போன உலகம் எல்லாவற்றுக்கும் ஒரு முட்டாள்த்தனமான வரையறை வகுத்துள்ளதே… காதலை சொல்வதோ, காமத்தில் திழைப்பதோ அவை பெண்கள் முன்னெடுக்கும்போது இயல்பாகவே அந்த வரையறையை மீறியதாகப் பார்க்கிறார்கள்.. ஆசையாய் கணவனைத் தொடும்போது, எதிர்கொள்ள வேண்டிய
    பார்வையா அது?… ஐயோ, பழுக்க காய்ச்சிய கம்பியை தலையில் தேய்த்ததுபோலஉயிரைப் பிளந்திடும் பார்வை.. அதற்குமேல் சோதித்து பார்க்கவெல்லாம் மனதில் திடமில்லை.. ஆசைகளை ஆழமாய் மனதிற்குள் புதைத்து வாழத்தொடங்கினாள்..

    யோசித்தபடியே வீட்டை நெருங்கிவிட்டாள்… தெருவின் முனையில் சாலையோர பள்ளத்தில் தேங்கிக்கிடந்த சேற்றுநீரில் கால் வைத்துவிட்டாள்..

    செருப்பெல்லாம் சகதி… இவள் குழம்பிய மனதோடு நடந்துவந்ததில், ஆற்று நீரை கடந்திருந்தால் கூட ஆச்சர்யமில்லை… “இந்த கார்ப்பரேஷன்காரங்க என்னதான் வேலை பார்க்குறாங்க” கணவன் மீதிருந்த கவலை, சில வினாடிகள் கார்ப்பரேஷன் மீதான கோபமாய் மாறியிருந்தது..

    ஐயோ புது செருப்பெல்லாம் சகதியாப் போச்சே!.. பேசாம போன் பண்ணி கார் வரச்சொல்லிருக்கலாம், வாளுபோய் கத்தி வந்தது போல இதை எங்கே கழுவுறது?…

    சேலையை தூக்கிப்பிடித்தபடி ஒருவழியாய் வீட்டின் கேட் அருகே வந்துவிட்டாள்.. இப்படியே அழைப்புமணியை அடித்தால், அனாவசிய சலசலப்புக்கு வழிவகுத்துவிடுவதாய் ஆகிவிடும்.. “ஏன் நடந்து வந்த?, எவ்ளோ சொன்னாலும் புரியாதா உனக்கு?.. போன வாரம் ஒரு பொண்ணு செய்னை அறுத்துட்டுப் போனானுகளே, மறந்துட்டியா?” இப்படி அரவிந்தின் ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.. சத்தமில்லாமல் சேற்றை கழுவிக்கொண்டு, உள்ளே போகலாம்… ஆட்டோவில் வந்ததாய் சொல்லி சமாளித்துக்கொள்ளலாம்..

    சத்தமில்லாமல் கேட்டைத் திறந்து, அப்படியே கொல்லைப்புறத்தில் இருக்கும் பைப்பை நோக்கி நடந்தாள்.. தண்ணீரை மெள்ள திறந்துவிட்டு, செருப்பைக் கழுவினாள்… சேலையின் கீழ்ப்புறத்திலும் சேற்றின் திட்டுக்கள்…

    அதனையும் தண்ணீர் தொட்டு துடைத்துவிட்டு நிமிர்ந்தாள் அமுதா.. படுக்கையறையின் ஜன்னலின் மீது பார்வை படர்ந்தது.. ஜன்னல் கதவு ஒருக்களித்து சாத்தப்பட்டிருக்கிறது… ஏசியின் காற்று அதனூடே கசிந்து வீணாவதாய் எத்தனையோ முறை மனம் பதைத்தபோதிலும், அரவிந்திற்கு எப்போதும் அது ஒரு பொருட்டாகவே தெரிந்ததில்லை..

    அருகிலிருந்த திட்டின் மீது ஏறி நின்று, அதனை அழுத்தி சாத்த முற்பட்டபோதுதான் ஒருவித வித்யாசமான சத்தம் உள்ளிருந்து காற்றினூடே காதுகளை அடைந்தது.. என்ன சத்தம் இது?.. ஏதோ முனகல் சத்தம் போலல்லவா கேட்கிறது.. அழுத்தி சாத்திட எத்தனித்த கைகள், அனிச்சையாகவே ஜன்னல் கதவினை மெள்ள திறந்தது.. உள்ளே என்ன நடக்கிறது?… அடக்கடவுளே!… ஒருசில வினாடிகள் தலை சுற்றிதடுமாறி நின்றது..

    அரவிந்துடன் வேறொரு நபர் நிர்வாண கோலத்தில் கட்டிப்பிடித்தபடி படுக்கையில்… ஐயோ.. அதுவும் யாரோ ஒரு ஆணுடன்… கடவுளே!… அரவிந்தாக அது இருக்கக்கூடாது என மனம் பதறியது… உற்று கவனித்தபோது, உறுதியாக அவனேதான்…

    கால்கள் செயலிழந்ததைப் போல தடுமாறின.. நிற்க வலுவின்றி சுவற்றோடு சாய்ந்து கீழே அமர்ந்தாள்.. மனம் நிதானிக்க மறுத்தது.. உடல் முழுக்க ஊசியால் குத்தும் உணர்வு, வியர்வை சுரப்பிகள் வெடித்து உமிழ்ந்ததில் வியர்வை அரும்பி வழிகிறது… வகிட்டுக்குங்குமம் வியர்வையோடு கரைந்து, மூக்கிற்கு நேராக சிவப்புக்கோடு வரைந்தது.. எச்சில் தொண்டையை தாண்டி உள்ளே செல்ல மறுத்தது.. ஓவென அழவேண்டும் போல தோன்றினாலும், அதற்கான திராணி அற்று பிண்டம் போல அமர்ந்திருந்தாள்.. கண்களின் ஓரத்தில் கண்ணீர் ஊற்றுநீராய் பொங்கி வழிந்துகொண்டிருக்கிறது…

    சீதையை தொடமறுத்த இவள் ஏகபத்தினி விரதன், கட்டிலில் யாரோ ஆடவனுடன்!.. இவ்வளவு காலமும் என் மீது தவறென நினைத்து, இத்தனை வேடங்கள் தரித்தபோதும் ஏமாளியாய் நிற்பதென்னவோ நான்தான்.. முகத்தின் செயற்கை பூச்சுகள் கம்பளிப்பூச்சியின் வருடலைப்போல அரிக்கத்தொடங்கியது.. மல்லிகையின் மணம் நெடியேற்றும் துர்நாற்றமாய் உருமாறியது…

    வேகமாய் எழுந்து, சூடியிருந்த பூவை பிய்த்து வீசியெறிந்தாள்… தண்ணீர் குழாயைத் திறந்து, கொட்டிய நீரை முகத்தின்மீது ஓங்கி இறைத்தாள்.. கண்ணின் கருப்பு மையும், முகத்தின் வண்ண பூச்சுகளும் நீரோடு கலந்து சாயமாய் தரையில் பாய்ந்தது.. வேஷம் கலைந்தது!..

    (முற்றும்)

    Share
  • காடும் நாடும்

    மீ.விசுவநாதன்

    DSC_03951-1024x777

    காட்டுக் குள்ளே நடக்கின்றேன் – எழில்
    கண்டு நானும் களிக்கின்றேன்
    கூட்டுக் குடும்ப களிறுகளின் – நல்ல
    துணிவும் உறவும் ரசிக்கின்றேன் !

    குருவி, மைனா, பருந்துகளும் – கிளி,
    கோட்டான், கொக்கும் அழகென்றேன் !
    உருவிப் பறக்கும் காக்கையுடன் – குயில்
    உருகிப் பாடும் ஒலிகேட்டேன் !

    சருகுக் குள்ளே பாம்புடனே -தவளை
    சறுக்கித் துள்ளிப் போகிறது !
    கருகு மணிபோல் ஒருவண்டு – என்
    காத ருகிலே பாய்கிறது !

    மானும் புலியும் நீரருந்த – அந்த
    மதகுப் பக்கம் வருகிறது !
    தானும் இன்று இரையாவேன் – என்ற
    தவிப்பில் மானும் விரைகிறது !

    காட்டை ரசிக்கும் என்னாலே – ஏன்
    நாட்டை ரசிக்க முடியவில்லை !
    காட்டில் இருக்கும் ஒழுங்குமுறை – ஏன்
    நாட்டு மனிதர் பழகவில்லை !

    Share
  • நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவம்

    -க.பிரகாஷ்  

    ஒவ்வொரு மனிதச் சமுதாயமும்  தனக்கென ஒரு மருத்துவ அமைப்பு முறையைக் கொண்டுள்ளது. அதனைச் சமூக நிறுவனம் என்றே கூறலாம். நோயும் மருத்துவமும் மனித இனப் பண்பாட்டு வரலாற்றில் பிரிக்க முடியாததாகும். நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவ முறைகளை நாட்டுப்புற மருத்துவம் என்பர். இவற்றை “கை வைத்தியம், நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், மூலிகை மருத்துவம், வீட்டு வைத்தியம், பரம்பரை வைத்தியம், பச்சிலை வைத்தியம், இயற்கை வைத்தியம் என்றெல்லாம்”கூறுவார். (ETHNO MEDICINE, FOLK MEDICINE, POPULAR MEDICINE, POPULAR HEALTH CULTURE, ETC.,) மிகப் பழமையான மருத்துவ முறை என்று ஆயூர்வேத மருத்துவ முறையைக் குறிப்பிடுவார். நாட்டுப்புற மருத்துவம் வேத காலத்திலேயே நடைமுறையில் இருந்தது.

    நாட்டுப்புற மருத்துவமுறை பற்றி இந்திய நாட்டில் விரிந்த ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. பழங்குடிகளை ஆராய்ந்து மேலைநாட்டு மானிடவியலறிஞர்கள் நாட்டுப்புற மருத்துவம் பற்றிச் சில குறிப்புகளை எழுதியுள்ளனார். இம்மருத்துவ முறை கிராமப்புற மக்களின் பண்பாட்டோடும், பழக்கவழக்கத்தோடும் சமூக அமைப்போடும் பின்னிப்பிணைந்துள்ளது. அவர்களது நம்பிக்கைக் கேற்ப நவீன மருத்துவ முறைகளையும் மேற்கொள்கின்றனா். பழங்குடி மக்களிடையேயும் நாட்டுப்புற மருத்துவம் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

    அவை…

    வீட்டு வைத்தியம்

    சுக்கு, மிளகு, இஞ்சி, மஞ்சள் போன்றவை வீட்டுப் trikadukamபுழக்கத்திற்கான பொருள்கள். இவை நோய்களைத் தீா்க்கும் மருத்துவ குணம் பெற்றவையாகவும் திகழ்கின்றன. வீட்டுச் சமையலுக்கான பயன்பாட்டுப் பொருள்களே மருந்துகளாகி நோய்களைப் போக்க உதவியதால் இது வீட்டு வைத்தியம் எனப் பெயர்பெற்றது. தங்களது அனுபவத்தின் அடிப்படையில் செய்திருக்கும் மருத்துவம் வீட்டு வைத்தியமாகும்.

    பரம்பரை வைத்தியம்

    தந்தை மகனுக்குச் சொல்ல மகன் அவன் மகனுக்குச் சொல்ல ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொன்ன தொழில் முறையான மருத்துவ முறை பரம்பரை வைத்தியம் ஆகும்.

    இயற்கை வைத்தியம்

    ஒவ்வொரு மனிதனிடமும் நோய் வராமல் தடுக்கும் சக்தியும், நோய்வந்தால் அதனைத் தடுக்கும் சக்தியும் இயற்கையாகவே அமைந்துள்ளது. இது இயற்கை மருத்துவம் ஆகும்.

    மூலிகை வைத்தியம்

    மருத்துவ குணங்கள் அடங்கிய செடி, கொடி, வேர், தாவர வகைகளைக் கொண்டு நோய்களைப் போக்கும் மருத்துவமுறை மூலிகை வைத்தியம்  ஆகும்.

    கை வைத்தியம்

    நாட்டு வைத்திய முறைகளில் கைப்பக்குவம் என்பது முக்கிய இடம் பெறுகிறது. மருந்துப் பொருள்களை இடிப்பதும் அரைப்பதும், மருத்துவச் செயல்களாகக் கொண்டு இருந்தனா். இடித்து அரைத்து மருந்துகளின் சீரான தன்மையைக் கைவிரல்களால் தொட்டுத் தடவிப் பார்த்து, அதன் பக்குவம் அறியப்படுகிறது. மருந்தின் அளவை ஒரு கைப்பிடி அல்லது ஒரு சிட்டிகை என்று சொல்லும் போக்கு கிராமங்களில் உண்டு. மருந்தைப் பதம்பார்க்க கைப்பக்குவம் பயன்படுவதால் நாட்டு மருத்துவத்திற்குக் கை வைத்தியம் எனப் பெயா் வந்தது. தனக்கு வந்த நோயைத் தானே போக்கிக் கொள்வதற்குக் கை வைத்தியமே ஒரு முக்கியப் பங்காக அமைகிறது.

    பச்சிலை வைத்தியம்

    செடி வகையைச் சார்ந்த ஒரு வகை மூலிகை பச்சிலை எனப்படும். தாவரத்தின் இலைகள் நல்ல மணத்துடன் கசக்கினால் சாறு வரக்கூடியதாக இருக்கும். இதன் இலைகளும், விதைகளும், மருத்துவ குணமுடையவையாகச் சொல்லப்படுகிறது. தலைவலி, இருமல் போன்ற நோய்களுக்குப் பச்சிலை நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. நோய்களைத் தீா்ப்பதால் இதற்குப் பச்சிலை வைத்தியம் என்று பெயா்வந்தது.

    எ.கா.

    அம்மை : வேப்ப இலை மீது படுக்கச் செய்தல்.

    காது வலி : சுரைக்காய் இலைச் சாற்றைக் கசக்கிக் காதில் விடுதல்.

    முதுகு வலி : புளியந் தழையை  ஒட்டுதல்.

    இராஜ வைத்தியம்

    மன்னர்கள் காலத்தில் மன்னனுக்கு மருத்துவம் பார்க்கும் அரண்மனை மருத்துவா் இராஜ வைத்தியா் என்றழைக்கப்பட்டார். புகழ்பெற்ற மருத்துவா் அவிசென்னா அரபி மன்னரின் அரசவை  மருத்துவராக 16 வது வயதில் நியமிக்கப்பட்டார் என்னும் செய்தி மூலம் அக்காலத்தில் அரண்மனை மருத்துவா்களின் முக்கியத்துவம் தெளிவாகிறது. அரசரின் நோய் தீா்க்கும் மருத்துவா் எடுத்துக்கொள்ளும் பெரும் முயற்சியையும் மருத்துவத்திற்கு உண்டாகும் பெரும் பொருள் செலவையும் மனதிற் கொள்ளும் மருத்துவமுறை இராஜ வைத்தியமாகும். 

    இரகசிய மருத்துவம்

    நோயைக் குணமாக்கும் மருந்து மற்றும் அந்த மருத்துவ முறைகளை வெளியில் சொல்லாமல் தொழில்முறையில் செய்துவரும் மருத்துவ முறை இரகசிய மருத்துவ முறையாகும்

    பாட்டி வைத்தியம்

    உணவே மருந்து” என்பது அனுபவ மொழி.

    சுக்கு, மிளகு, இஞ்சி, மஞ்சள், கீரை வகைகள் ஆகியவை மருத்துவ குணங்கள் மிக்கவையாகக் கருதப்படுகிறது. காலங்காலமாக வீட்டின் உணவுக் கூடங்கள் பெண்களின் பொறுப்பில் இருந்து வருவதால் இம்மருத்துவப் பயன்பாடுகளைப் பெரிதும் அவா்கள் அரிந்திருப்பார்கள்.

    உணவு வகைகள் பல குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்ளும். சிலரின் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாமல் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இவற்றை அருகிலிருந்து பார்த்துத் தம் பட்டறிவால் அதனைச் சரிசெய்ய முயல்வதில் தாயே முதலிடம் வகிக்கிறாள். இதுவே பழக்கவழக்கமானது. எனவே இதற்குப் பாட்டி வைத்தியம் எனப் பெயா் வந்திருக்கலாம்.

    ஒரு நோயை குணப்படுத்துவதற்கு அக்காலத்தில் மரப்பட்டைகள், உணவுப்பொருட்கள், பச்சிலைகள், வேர்கள், கசாயம், காய்கள், கனிகள், செடிகள், தாவரக் கொழுந்துகள், தாவரங்களின் (பால்), பழங்கள், கீரைகள், போன்றவை பயன்படுத்தப்பட்டன. சிறு குழந்தைகளில் இருந்து பெரியவா்கள் வரையும் இம்மருத்துவமுறையைப் பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தி வருவதுண்டு.

    இது மட்டுமல்லாமல் கிராம மக்கள் நம்பிக்கை சார்ந்த மருத்துவத்தையும் பயன்படுத்துவது உண்டு. மருத்துவா் கூறும் மந்திரங்களை வெளியில் சொன்னால் நோய் குணமடையாது (பலிக்காது) என்று குறிப்பிடுவதும் உண்டு. அவர்கள் பயன்படுத்தும் மந்திரங்களை வேறு யாவரும் பயன்படுத்தமுடியாது. அவர் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு மட்டுமே இம்மந்திரம் சொல்லிக் கொடுக்கப்படும். இம்மருத்துவத்தைப் பரம்பரை மருத்துவம் என்று குறிப்பிடுகின்றனர்.

    இன்றைய காலக்கட்டத்தில் ஆங்கில மருத்துவம் அளவுகடந்து இருந்தாலும் சில மலைவாழ் மக்களும், கிராம மக்களும் இவ்வகையான நாட்டு மருத்துவத்தைக் கைவிடுவதில்லை.

    ***

    பார்வை நூல்கள்

    • நாட்டுப்புற இயல் ஆய்வு – சத்திவேல்.சு
    • நாட்டு மருத்தவம் – சந்திரன்.ந

    ***

    க.பிரகாஷ் எம்.ஏ, எம்பிஃல்,
    தமிழ்த்துறை
    தொழில்நுட்பக் கள ஆய்வுப் பணியாளர்
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46

     

     

     

    Share
  • சங்க இலக்கியத்தில் மொழிசார் வன்முறை

    -பா.சிவக்குமார்                                                                                   

    கி.பி. 21ஆம் நூற்றாண்டில் ஒன்றுபட்ட ஜனநாயகக் குடியரசான இந்தியாவில் வாழும் மக்களிடையே முல்லைப் பெரியாறு அணைநீரைப் பெறுவதற்கும், காவிரிநீரைப் பெறுவதற்கும் வழக்குமன்றத்தை நாடவேண்டியுள்ளது. மேக்கே தாட்டு (மேகதாது) எனும் இடத்தில் காவிரியின் குறுக்கே கர்நாடகத்தினர் அணைகட்டத் தீர்மானித்த நிலையிலேயே தமிழ், கன்னடம் என இருவேறு மொழி பேசுவோர் என்ற அடிப்படையில் கடையடைப்பு, பேருந்து நிறுத்தம் போன்ற அமைதியான வழிகளில் எதிர்ப்புத் தெரிவிக்கும் பொழுதுகூட பல நேரங்களில் கல்லெறிதல், கடை உடைப்பு, பேருந்தை எரித்தல், இருவேறு மொழி பேசுபவர்கள் அடித்துக் கொள்ளல், போன்ற வன்முறைகள் நிகழ்ந்துள்ளதைக் காணநேரிட்டது. முல்லைப் பெரியாறு பிரச்சனையின்போது சபரிமலைக்குச் சென்ற ஐயப்ப பக்தர்கள் மீது மலையாள மக்கள் வன்முறை நிகழ்த்தியுள்ளனர். இலங்கையில் சிங்களர்கள், தமிழர்கள் இடையே இன்றும் ஒற்றுமை ஏற்படாமல் ஆளும் வர்க்கம் அதிகாரத்தால் அடக்கியாளும் நிலையினையே கண்கூடாகக் காண்கிறோம். இது போன்ற மொழிசார் வன்முறை சங்கச் சமூகத்திலும் ஊடுருவி இருந்துள்ளமையை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.

    tamil

                    சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்களும் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டாலும் இம்மூவரின் நாடுகளிலும் பேசப்படும் மொழி தமிழ்மொழியாகும். ஆனால், இம்மூவேந்தர்களும் வேற்றுமொழி பேசும் நாட்டினரைப் போர் வன்முறையால் அழித்து, மிரட்டி அவர்களிடம் திறை பெற்றுள்ளமையைக் காணமுடிகின்றது. இதனை,

    “………………………………வென்றியொடு
    வில்லலைத் துண்ணும் வல்லான் வாழ்க்கைத்
    தமிழ்கெழு மூவர் காக்கும்
    மொழிபெயர் தேஎத்த பன்மலை இறந்தே
    ”         (அகம்.31:12-15)                             

    எனும் அகநானூற்றுப் பாடல் சான்று பகர்கின்றது. பிறமொழி பேசும் மக்களின் உழைப்பால் வந்த பொருட்களையும், அவர்களின் உரிமைகளையும் சுரண்டும் வன்செயல்களில் மூவேந்தர்களும் ஈடுபட்டிருந்தனர் என்பதை அறியமுடிகின்றது.

                    வேற்றுமொழிப் பேசுபவர்களைத் தன் ஆதிக்கத்தின் கீழ் அடிபணிய வைக்க வேலேந்திச் சென்றதனை,

    விலங்குஇருஞ் சிமையக் குன்றத்து உம்பர்,
    வேறுபல் மொழிய தேஎம் முன்னி,
    வினைநசைஇப் பரிக்கும் உரன்மிகு நெஞ்சமொடு
    புனைமாண் எஃகம் வலவயின் ஏந்தி
    ”                                       (அகம். 215:1-4)    

    என்ற பாடல் எடுத்தியம்புகின்றது. வேற்றுமொழி பேசுபவர்களைத் தன் ஆதிக்கத்தின் கீழ் அடிபணிய வைக்கும் பொருட்டுத் தமிழ்அரசர்கள் கரிய கேடயத்தை ஏந்திப் படைநடத்திச் சென்றுள்ளதை அகம். 67:12-14ஆம் பாடல் வெளிப்படுத்துகின்றது.

    மொழி அடிப்படையில் வேற்படையையுடைய ’கட்டி’ என்பவனுடைய நாட்டை ‘நல்லநாடு’ என்றும், வேற்றுமொழி பேசுபவர்களைப் பகைவர் நாடு என்றும் புலவர்கள் பதிவு செய்துள்ளமையை,

    குல்லைக் கண்ணி வடுகர் முனாஅது
    பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
    மொழிபெயர் தேஎத்த ராயினும்
    ”                                 (குறுந்.11:5-7)                               

    என்ற பாடல் வழி அறிந்து கொள்ளலாம். இவ்வாறு புலவர்களும் வேற்றுமொழி பேசுபவர்களைப் பகைவர்களாகப் பார்க்கும் நிலையினைச் சங்கப்பாக்களின் வழி அறியலாம்.

    ஐ.நா.சபை போன்ற உலக சமாதான அமைப்பு, இந்திய தேசம் என்ற ஒருமைப்பாடு உள்ள நிலையிலேயே மொழிசார்  வன்முறைகள் நிகழ்கின்ற பொழுது சுமார் இருபது நூற்றாண்டுகளுக்குமுன் எத்தகைய வன்முறைகள் நிகழ்ந்திருக்கும் என்பதனைக் கற்பனைசெய்து பார்க்கமுடியாத அளவில் இருந்திருக்கும் என்பது உண்மை. அதனையே மேற்கண்ட பாடல்கள் வழி உணரமுடிகின்றது.

    ***

    பா.சிவக்குமார்,
    முனைவர்பட்ட ஆய்வாளர்,
    தமிழ்த்துறை,
    பாரதியார் பல்கலைக்கழகம்,
    கோவை, 641 046.

     

     

    Share
  • குறுந்தொகையும், குறிஞ்சியும்

    -க. பிரகாஷ் 

    கடல்கோள்களால் அழிவுற்றனபோக எஞ்சியவற்றைப் பாண்டிய, சேர அவையங்களில் புலவா்களைக்கூட்டித் திட்டமிட்டுத் தொகுத்துத் தந்தவையே பழந்தமிழ் இலக்கியப் பாடல்களாகும். அவையே பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களாகும். தமிழ் இலக்கியம் – பண்பாடு, நாகரிகத்தின் ஊற்றுக்கண்ணாகும்.

    குறுந்தொகையென்னும் நூல் பூரிக்கோ என்பவரால் தொகுக்கப்பட்டது. இதில் நான்கடிச் சிற்றெல்லைமுதல் எட்டடிப் பேரெல்லைவரை அமைந்த நானூறு பாடல்கள் அடங்கியுள்ளன. அடியளவால் குறுகிய இப்பாடல்களில் முதல், கருப்பொருளைவிட உரிப்பொருளே சிறப்பிடம் பெற்றுள்ளது.

    scan0004

    குறுந்தொகையில் தலைவன், தலைவி:

    ஊழ்வயத்தாலே ஒன்றுபடும் தலைவன் தலைவியரது வாழ்விலே ஏற்படுகின்ற கட்டங்கள் பல.  அவை, இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம், பாங்கியற் கூட்டம், பகற்குறி, பகற்குறி இடையீடு, இரவுக்குறி, இரவுக்குறியிடையீடு, வரைவுகடாதல், வரைபொருட் பிரிதல், அறத்தொடு நிற்றல், பொருள்வயிற் பிரிதல், பிரிவிடைத் தலைவனும், தலைவியும் ஒருவரையொருவா் நினைத்து புலம்பலும், ஏங்கலும், பிரிந்தவர் ஒன்றுபடுதல், பரத்தையரை நாடித் தலைமகன் பிரிதல், அவன் பழையபடி தலைவியோடு வந்து கூடுதல் என்னும் இவை போன்ற பலவாகும். இவர்களிடைத் தோன்றும் உள்ள நெகிழ்ச்சிகளையெல்லாம் நயம்பட அமைத்துக்காட்டுகின்றன இக்குறுந்தொகைச் செய்யுட்கள்.

    தமிழில் தொன்மையுடையது சங்க இலக்கியமே என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை. தொல்காப்பியர் அகத்திணை ஏழு என்பா். அவை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை, கைக்கிளை என்பவனாகும். இவற்றிற்கு ஏற்பப் புறத்திணையையும் ஏழு வகையாகக் குறிப்பிடுகிறார். அவை, வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பனவாகும். இதில் தொல்காப்பியா் அகத்திற்கே முதன்மைதந்து புறத்தைச் சார்புபடுத்தி விளக்குகிறார்.

    அக்காலத்தில் திணைப்பாடல்கள் வட்டாரப் பாடல்களாகத் திணைதோறும் வழங்கிவந்தன. நிலமே அதன் அடிப்படைப் பாகுபாட்டிற்கு காரணமாகும்.

    “அவற்றுள்
    நடுவண் ஐந்திணை நடுவண தொழியப்
    படுதிரை வையம் பாத்திய பண்பே” – (948)

    எனவும்,

    மாயோன்மேய காடுறை உலகமும்
    சேயோன்மேய மைவரை உலகமும்
    வேந்தன்மேய தீம்புனல் உலகமும்
    வருணன்மேய பெருமணல் உலகமும்
    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்…….(தொல்: 951) 

    எனக் கூறப்படும் தொல்காப்பிய நூற்பாக்களால் நிலவழியாக வளா்ந்த திணைப் பாங்கினை உணரலாம். நிலம், பொழுது, கருப்பொருள்களை வைத்தே முதற்கண் ஒரு பாடல் இன்ன திணையென உணரப்படுகிறது. முதல் என்பது நிலமும், பொழுதுமாகும். பொழுது என்பது சிறுபொழுது, பெரும்பொழுது என இருவகைப்படும். கருப்பொருள்கள் என்பது அவ்வகை நிலப்பாகுபாட்டையும், அதிலுள்ள தெய்வம், பறவை, விலங்கு, உணவு, யாழ் உள்ளிட்டவற்றையும் குறிக்கும்.

    ஐவகை நிலத்தினர்:

    குறிஞ்சி நிலத்தவரே அளவளாவி இன்புறுவரென்பதும், முல்லைநில மகளிரே தலைவரைப் பிரிந்து ஆற்றியிருப்ப ரென்பதும், மருதநில மகளிரே தலைவருடன் ஊடிப்பிணங்கி இருப்பரென்பதும், நெய்தல்நில மகளிரே இரங்குவரென்பதும், பாலைநில மகளிரே பிரிவை நினைந்து புலம்புவரென்பதுமான ஒரு வரையறை உலகவாழ்வில் இல்லாதிருப்பினும், புலவா்கள் யாத்தமைக்கச் செய்யுட்களிலே இவ்வரையறைகள் காணப்படுகின்றன. இவற்றை நாடக வழக்கெனவும், நாடகப் புலவன் தானமைக்க நினைக்கும் காட்சிக்கேற்பக் களத்தைப் புனைந்தமைத்துக் காட்டுமாறு போலவே, புலவர்களும் காட்டிச் செல்கின்றனா். சிறுபான்மை உலகியலையும், பெரும்பான்மை புனைந்துரைகளையும் கொண்டு விளக்குவனவாகவே இச்செய்யுட்கள் அமைந்துள்ளன.

    திணை:

    திணை என்பது ஒழுக்கம் என்று பொருள்படும். ஐந்திணை என்பது ஐவகையான ஒழுக்கங்கள். இவை ஐந்தும் இல்வாழ்மக்கள் கடைப்பிடித்து ஒழுகவேண்டிய ஒழுக்கமுறையே ஆகும்.

    குறுந்தொகையும் குறிஞ்சியும்: 

    “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
    காமஞ் செப்பாது கண்டது மொழிமோ….” (குறுந்: 2)

    இயைற்கைப்புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகனை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடுபட்டு நின்ற தலைமகன், தலைமகளை நாணின் நீக்குதன் பொருட்டு மெய்தொட்டுப் பயிறல் முதலியன அவள்மாட்டு நிகழ்த்திக்கூடி தனது அன்புதோன்ற நலம் பாராட்டியது. இறையனார் என்பது இங்குச் சிவபெருமானைக் குறிக்கும். சிவபெருமான் ஒரு புலவராய்த் தோன்றி, தருமி என்னும் அந்தணன் பொருட்டுப் பாடியது இப்பாடல்.

    மணமுடைய தேனை ஆராய்ந்து உண்டுவாழும் அழகிய சிறகுகளையுடைய தும்பியே! முற்பிறப்பில் பயின்றது இப்பிறப்பின் உரியதாகிய நட்பினையுடைய மயில் போன்ற சாயலினையும், வரிசையாய்ச் செறிந்துள்ள பற்களையும் கொண்ட இந்த அரிவையின் கூந்தல் நறுமணம் போன்றதொரு ஒப்பற்றமணம் நீ அறிந்த மலர்களில் உள்ளனவோ? பல மலா்கள்தோறும் சென்று அவற்றின் மணத்தை அறிந்துள்ள நீ, எனக்கின்பமான ஒன்றைக்கூறாது நீ துய்த்து அருந்திய மணமுடைய மலா் ஒன்று இருக்குமாயின் கூறுவாயாக.

    “நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
    நீரினும் ஆரளவின்றே சாரல்……( குறுந்: 3) 

    தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்துகொள்வது வேண்டித் தோழி இயற்பழித்தவழித் தலைமகள் இயற்பட மொழிந்தது இப்பாடல் ஆகும். கரிய கொம்பினையுடைய குறிஞ்சிப் பூக்களைக்கொண்டு மிகுதியான தேனைத்தொடுக்கும் மலைப் பக்கத்தையுடைய நாட்டைச் சேர்ந்தவனோடு உண்டாகிய அரிய நட்பானது, சொல்லப்புகின் நிலத்தைக் காட்டிலும் அகலத்தால் பெரியது; நினைத்துப் பார்த்தால் வானத்தைக் காட்டிலும் உயா்வில் உயர்ந்தது. உள்ளே புகுந்து எல்லைகாணப்புகின் கடலைக் காட்டிலும் ஆழத்தால் அரிய அளவினது.     பெருந்தேன் இழைக்கும் குறிஞ்சி நிலத் தலைவனின் நட்பு, தலைவன் பிரிந்திருத்தலால் பயனில்லாது கழிவது குறித்துத் தோழி இயற்பழித்தவழி, தலைமகள் அதனை மறுத்துத் தலைமகனின் நட்பின் சிறப்பை உயர்த்திக் கூறினாள். (நிலத்தினும், வானினும், நீரினும் – உயர்வு சிறப்பும்மைகள்).

    “யாரும் இல்லைத் தானே களவன்
    தானவன் பொய்ப்பின் யான் எவன் செய்கோ…” (குறுந்: 25)

    வரைவு நீட்டித்தஇடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

    தலைமகன் வரைந்துகொள்ளாது களவினை நீட்டித்தவிடத்து ஆற்றாத தலைகள், ”தோழி! உணா்வார் எவருமிலர்; அவன் கூறிய சூளுரையை அவன் பொய்ப்பின் யான் என் செய்வேன்? அவன் மணந்தஅன்று ஆரலைப் பார்க்கும் குருகு இருந்தது எனக் கூறுதல்.”

    தலைமகளிடம் அவன் கலந்தநாளில் வேறு எவருமில்லை… தலைவன் தானே நிகழ்ச்சி நடந்த இடத்துச் சான்றாவான். அவன், தான்கூறிய அச்சூளுரையிலிருந்து பொய்ப்பின் நான் என்ன செய்வேன்? அவன் மணந்த அன்று தினையினது தாளைப் போன்ற சிறிய பசுமையான கால்களையுடைய கொக்கு, இடையறாது ஒழுகும் நீரின்கண் நீந்தும் ஆரல்மீனை உணவாகக் கொள்ளுவதற்குக் காத்திருக்கும்.

    சங்கஇலக்கிய நூல்களில் ஒன்றாகவும், பதினெண் மேல்கணக்கு நூல்களுள் ஒன்றாகவும் விளங்கும் குறுந்தொகை, சிறந்த நூலாகவும், குறுகிய நூலாகவும், தலைவன், தலைவி பற்றி செய்திகளை அழகாக எடுத்து இயம்பக்கூடியதாகவும் திகழ்கின்றது.

    பார்வை நூல்கள்:

    • குறுந்தொகை – புலவா் துரை. இராசாராம்
    • குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு – மனோன்மணி           சண்முகதாஸ்
    • புதியநோக்கில் தமிழ் இலக்கியவரலாறு – தமிழண்ணல்
    • தமிழ் இலக்கிய அறிவுக் களஞ்சியம் – இலக்கிய வித்தகர்                      செந்துரையான்
    • குறுந்தொகை மூலமும் உரையும் – புலியூர் கேசிகன்

    ***

    க.பிரகாஷ் எம்.ஏ, எம்பிஃல்,
    தமிழ்த்துறை
    தொழில்நுட்பக் களஆய்வுப் பணியாளர்
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46

     

    Share
  • சங்க காலத்தில் பாலியல் வன்முறையும் தண்டனையும்

    -பா. சிவக்குமார்

    திருமணம் செய்வதாகக் கூறிப் புணர்தல், மானபங்கப்படுத்துதல், மயக்க மருந்து கொடுத்து, ஆயுதங்களைக் காட்டிப் பயமுறுத்திக் கற்பழித்தல், குழுவாகக் கற்பழித்தல் போன்ற பலவகையான பாலியல் வன்முறைகள் தற்காலத்தில் நிகழ்ந்து வருவதை நாளேடுகளிலும், ஊடகங்களிலும் பரவலாகக் காண்கிறோம். இந்தப் பாலியல் வன்மம் தொன்றுதொட்டே பெண்கள்மீது நிகழ்த்தப்பட்டு வந்துள்ளது.  இப்பாலியல் வன்முறை சங்கச் சமூகத்தில் எவ்விதம் ஊடுருவி இருந்துள்ளது என்பது குறித்து இக்கட்டுரை ஆய்கிறது.

    பொதுவிடங்களில் பெண்கள்மீது நிகழ்த்தியவை:

    தெருவில் தன் அன்னையுடன் நடந்து செல்லும் பெண்ணின் கையைப் பிடித்து  இழுக்கும் வன்செயலில் சங்ககாலத் தலைவன்  ஈடுபட்டுள்ளதை,

    “இடைநெடுந் தெருவிற் கதுமெனக் கண்டென்
    பொற்றொடி முன்கை பற்றினன் ஆக
    அன்னாய் என்றெனன் அவன்கைவிட் டனனே…”           (அகம்.356:5-7)

    என்ற பாடலிலிருந்து ஒரு பெண்ணின் அனுமதியின்றி நடுத்தெருவில் கையைப் பிடித்திழுக்கும் வன்செயலில் அக்காலத் தலைவன்  ஈடுபட்டுள்ளதை அறியமுடிகிறது.  மேலும், ஒரு பெண் (தலைவி) தன்னை விரும்பாத பொழுதும் ஆண் (தலைவன்) அவளது கையினைப் பிடித்துக் கட்டித்தழுவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதை குறிஞ்சிக்கலிப் பாடல் வெளிப்படுத்துகின்றது.  இதனை, கலி.62:1-11-ஆம் பாடலிலிருந்து பெண்ணின் விருப்பமின்றியே வன்புணர்வில் ஈடுபட்ட தலைவனின் வன்மம் வெளிப்படுகின்றது. நீர் அருந்துபவர்கள், நீர் தன் தாகத்தைத் தணிக்கும் என்று அருந்துவார்களே அன்றி நீருக்கு நன்று என்று நினைக்க மாட்டார்கள். அது போன்றே தலைவியைப் புணர்வதால் எனக்கு இன்பம் கிடைக்கும் என்பதால் புணர்ந்தேன் அவளது விருப்பம் தேவையில்லை என்று கூறும் தலைவனின் கூற்றிலிருந்து, பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஆண்களின் மனநிலை இப்பாடலில் பிரதிபலிப்பதைக் காணமுடிகின்றது. மேலும் நின்னை நெருங்க அணைத்துத் தழுவுதல் இனிதாக இருந்ததால் அவ்வாறு தழுவிக் கொண்டேன் என்று கூறும் தலைவனின் வார்த்தைகளிலிருந்து அவனின் ஆண் அதிகார  மையமும், தன் உடலியல் தேவை மட்டுமே மனதில் கொண்டு, பெண்ணை உணர்வற்ற பொருளாகவே பார்த்துள்ளமையையும் உணரமுடிகின்றது. அக்காலச் சமூகச் சூழலில் பெண்களுக்குப் போதுமான பாதுகாப்பற்ற நிலையினையே இப்பாடல் எடுத்துரைக்கின்றது.

    பாலியல் வன்புணர்வு:

    சங்க இலக்கியத்தில் தலைவன் ஒருவன், தான் மணந்து கொள்வதாகக் கூறி யாருக்கும் தெரியாமல் இன்பம் துய்த்துவிட்டு, பின்பு தலைவியை யாரென்றே தெரியாது என்று கூறியுள்ளதை, குறுந். 25ஆவது பாடல் விளக்குகிறது. மேலும், தற்போது இருப்பது போன்று உடற்பரிசோதனை, விந்தணுப் பரிசோதனை, மரபணுக்கள் (ஜீன்கள்) மூலமாகக் குழந்தையின் தந்தையினை அடையாளம் காணும் அளவிற்கு அக்காலத்தில் மருத்துவ வளர்ச்சி இல்லையாதலால் சாட்சிகள் மூலமே குற்றங்களுக்குத் தீர்வு வழங்கியுள்ளனர். எனவேதான் தலைவி தாங்கள் இன்புறும் இடத்தில் ‘குருகுமுண்டு’ என்று குருகினைச் சாட்சியாக்குகிறாள். ஆனால், அக்குருகும் ஒழுகுநீரில் ஆரல்மீன்களைப் பிடிக்கும் தன் வேலையில் கவனமாக இருந்தது. ஆகையால் தலைவன் என்னுடன் பேசிய மொழிகளையோ புணர்ந்ததையோ கண்டு, கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை கண்டு, கேட்டு இருந்திருந்தாலும் அதனால் பேசமுடியாது. சாட்சிகள் யாரும் இல்லையாதலால், இனி தலைவன் தானே தன் குற்றத்தை ஏற்றுக் கொண்டு தண்ணளி செய்ய வேண்டுமே தவிர எனக்கு வேறுவழியில்லை என்று புலம்புவதிலிருந்து சங்கச் சமூகத்தில் பெண்களைப் புணர்ந்து மணம் செய்ய மறுத்த பாலியல் வன்செயல்கள் நடந்துள்ளதைக் காணமுடிகின்றது.

    நச்சினார்க்கினியர் இப்பாடலை, “அவன் புணர்வு மறுத்தல்” என்னும் தொல்காப்பியக் களவியல் சூத்திரத்திற்குச் சான்றாக்கியுள்ளார். தன்னை ஏமாற்றிய தலைவனைச் ‘சான்றோன் இல்லை’ என்று அவனிடம் கூறிவருவோம் என்று தோழியை அழைப்பதாக நற். 365 ஆவது பாடல் அமைகிறது. செவிலித்தாய், தன் மகளின் காதலன் வேறு யாரையாவது மணந்துவிடுவானோ என்று ஐயுற்ற நிலையினை ஐங். 109ஆவது பாடல் எடுத்துரைக்கின்றது. எனவே சங்கச் சமூகத்தில் பாலியல் வன்முறைகள் இருந்துள்ளமை தெளிவாகிறது.

     பாலியல் வன்செயல்கள் பெருகியதால் ஏற்பட்ட சிக்கல்களும் பிரச்சினைகளும் திருமணம் எனும் கரணச்சடங்கைச் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை,

    “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்,
    ஐயர் யாத்தனர் கரணம் என்ப”

    என்ற தொல்காப்பிய நூற்பா அக்காலச் சமூகத்தில் நிலவியிருந்த பாலியல் வன்முறைக்குச் சான்று பகர்கின்றது.

    பாலியல் வன்புணர்வும் தண்டனையும்:

    சங்ககாலத்தில் பாலியல் வன்புணர்வில் ஆடவர்கள் ஈடுபட்டுத் தண்டனை பெற்றதற்கான பதிவு சங்க இலக்கியத்தில் உள்ளது. ஒரு அழகிய பெண்ணின் நலத்தைக் கெடுமாறு கவர்ந்து இன்பம் துய்த்துவிட்டுச் சென்ற அறம் அற்றவனைச் சபையோர் முன்பு தலைவி நிறுத்துகின்றாள். அவன் இவளை யாரென்றே தெரியாது என்று பொய்யுரைக்கின்றான். அவன் உரைப்பது பொய் என்பதைத் தகுந்த சாட்சிகளின் வாயிலாக அறிந்த ஊர்ப்பெரியவர்கள் அப்பெண்ணின் நலத்தை அழித்த அவனை மரத்தில் கட்டிவைத்து தலையில் நீற்றினை (சுண்ணாம்பு நீர்) ஊற்றுமாறு தண்டனை வழங்கியுள்ளதை,

    “திருநுதற் குறுமக ளணிநலம் வவ்விய
    ………………………………………
    ………………………………………
    வீறுசா லவையத்து ஆர்ப்பினும் பெரிதே”                   (அகம்.256:16-21)

    என்ற பாடலின் வழி சங்கச்சமூகத்தில் நிலவியிருந்த பாலியல் வன்புணர்வினையும் அதற்கு அளித்த தண்டனையும்  அறியமுடிகிறது.

    தொல்காப்பியர் பெருந்திணையின் குறிப்புகளாக, ஏறிய மடல் திறம், இளமைதீர் திறம், தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம், மிக்க காமத்து மிடல் (தொல். அகத். 51) என நான்கினைக் குறிப்பிடுவார். இந்நூற்பாவிற்கு ஷாஜகான் கனி “ஒருத்தியின் காதலைப் பெறாத ஒருவன் ஊரறிய மடலேறி அவளுக்குப் பழி ஏற்படுத்தி வலிந்து அவளை இணங்க வைக்கும் சூழ்ச்சித் திறம், தனக்கு இளமைப் பாலியலுணர்வு தீர்ந்து போய்விட்ட மலட்டு நிலையிலும் ஒருத்தியைப் பாலியலாகத் துன்புறுத்துதல், பிறன் மனைமீது தேற்றமுடியாத காமத்தில் வேட்கையுறுதல், மிக்க காமத்தில் காணும் பெண்களிடமெல்லாம் வன்புணர்ச்சியை நாடுதல் ஆகிய நான்கும் பெருந்திணையின் அடையாளம் ஆகும் என்பது இந்நூற்பாவின் உண்மைப் பொருளாகும். இந்நான்கு வகைப் பெருந்திணையும் பாலியல் வன்முறை (sexual violence) எனத் தோன்றுகிறது” என்பதிலிருந்தும்  பாலியல் வன்முறை சங்கச் சமூகத்தில் ஊடுருவி இருந்துள்ளது என்பது தெளிவாகிறது.

    ***

    துணை நின்ற நூல்கள்

    1. சிவலிங்கனார், ஆ., (தொ.ஆ.), தொல்காப்பியம் உரைவளம் – பொருளதிகாரம், களவியல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1994.
    2. சுப்பிரமணியன், ச.வே., தொல்காப்பியம்; (விளக்கவுரை), மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2008.
    3. சோமசுந்தரனார், பொ.வே., (உ.ஆ.), குறுந்தொகை, கழகவெளியீடு, சென்னை, 2007.
    4. நச்சினார்க்கினியர், (உ.ஆ.), கலித்தொகை, கழக வெளியீடு, 2007.
    5. துரைசாமிப்பிள்ளை, ஒளவை. சு. (உ.ஆ.), ஐங்குறுநூறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1978
    6. பின்னத்தூர் நாராயணசாமி அய்யர், நற்றிணை, கழக வெளியீடு, சென்னை, 2007
    7. வேங்கடசாமி நாட்டார், ந.மு., வேங்கடாசலம் பிள்ளை. ரா., அகநானூறு, மணிமிடைப்பவளம், கழக வெளியீடு, 2007
    8. வேங்கடசாமி நாட்டார், ந.மு., வேங்கடாசலம் பிள்ளை. ரா., அகநானூறு, நித்திலக்கோவை, கழக வெளியீடு, 2008
    9. ஷாஜகான் கனி, முனைவர், வெ.மு., திணை வரலாறு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2012

    ***

    பா. சிவக்குமார்,
    முனைவர்பட்ட ஆய்வாளர்,
    தமிழ்த்துறை,
    பாரதியார் பல்கலைக்கழகம்,
    கோவை, 641 046.

     

     

     

    Share
  • வேர்பறித்துக் கிடக்கும் மரங்கள்! 

    -சிவ. விஜயபாரதி

    நனைந்த பறவையின்
    சிலிர்ப்பில் தெறிக்கும்
    துளிகளின் பரவசம்போல்
    எங்கள் இதயங்கள்!

    வாழ்க்கைச் சாளரம் வழி
    வந்துவிட்ட வசந்தங்கள்!

    பட்டாம்பூச்சி சிறகடிக்க
    வானம் விரித்த உறவுகளின்
    கதகதப்புகள்!

    சூரிய உக்கிரத்தில்
    கடும் காற்றில்
    மழைப் பொழிவில்
    பனி உதிர்வில்
    சிக்கிச் சிறகு விரிக்க
    எத்தனித்த குருவிகளின் 
    ஏக்கப் பெருமூச்சுகள்!

    இழுத்துக் கட்டப்படும் 
    கன்றின் ஏக்கமென 
    மடிபார்த்தே பழகிவிட்ட 
    வியாபாரிகளிடம் 
    கட்டவிழ்க்கப்படும் 
    எங்கள் பெண்மை குறித்த 
    சிலாகிப்புகள்!

    இருப்பினும் கலவரப்படுத்தி
    மிரட்சியூட்டும் மனப்பிரமைகள்!

    உயர்பதவி
    கல்வியின் உச்சம் எனப்
    பூத்துக் குலுங்கினாலும்
    வேர் பறித்துக் கிடக்கும்
    மரமாகத்தான் 
    இன்னும்…

     

     

    Share
  • திருக்குறளில் மனித வாழ்வியல் கூறுகள்

    — க. பிரகாஷ்.

    குறள்திருக்குறள் நீதி நூலாக மட்டுமல்லாமல் ஒரு வாழ்வியல் நூலாகவும் திகழ்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனுக்கும், 21 ம் நூற்றாண்டிலுள்ள புதிய தலை முறையினருக்கும் வழிகாட்டும் ஒரு அறநூலாகும். வள்ளுவத்தின் மேன்மை காலந்தோறும் புதிய புதிய கருத்தாக்கங்களைத் தந்து, இனம், மொழி, நாடு என்னும் எல்லை கடந்த மனித வாழ்க்கையை வளப்படுத்தும் அளவிற்குச் சிறந்து விளங்குகிறது.

    வள்ளுவம் தான் தோன்றிய காலத்தோடு நின்று விடாமல் இனி வரும் தலைமுறையினருக்கும் பொருந்தும் படியாக மனிதனுக்கு வாழச்சொல்லிக் கொடுக்கிறது. இது மட்டுமல்லாமல் வாழ்க்கையின் மகத்துவத்தை விளக்குகிறது. வள்ளுவம் இலக்கியம் என்னும் நிலையில் நின்று விடாமல் மனித வாழ்க்கையின் அறநெறி சாராம்சத்தையும் பதிவு செய்கின்றது.

    ”இன்பம் பொருள் அறம் வீடென்னும் இந்நான்கும்
    முன்பறியச் சொன்ன முதுமொழிநூல் – மன்பதைகட்
    குள்ள அரிதென்றவை வள்ளுவர் உலகம்
    கொள்ள மொழிந்தார் குறள்”. (நரிவெரூஉத்தலையார்)

    இன்பம் பொருள் வீடு என்னும் இந்நான்கும் மன் பதைகட்கும் முன்பு அறியச் சொன்ன முது மொழிநூல் உள்ள அரிது என்று இன்பம் முதலி இந்நாற்பொருள் இயல்புகளையும் மக்கள் பரப்புக்கு அக்காலத்தில் அறியும் வண்ணம் சொல்லப்பட்ட பழமொழி வேதமானது ஓதி உணரப்படுதற்கு அரிது என்று, வள்ளுவர் அவை உலகம் கொள்ள குறள் மொழிந்தார். மனித வாழ்க்கை தலைசிறந்த அறமாக விளங்கும் அறம், பொருள், இன்பம் ஆகிய முதன்மைப் பயனை அறியவைத்துப் பயனுடைய வாழ்க்கையை வாழ வள்ளுவம் நன்கு வழி காட்டுகிறது.

    அன்பு, பண்பு, இன்சொல், நன்றியறிதல் என மனித மாண்புகளை விளக்குகிறது. மனிதர்களின் வாழ்க்கை நெறியை உயர்த்தும் கோட்பாடாக வள்ளுவம் நல்லறங்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்துகிறது.

    ஆன்மீக அறம்:
    “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு” – (குறள் – 1)

    கடவுளை அறிவு, ஆற்றல் அப்பாற்பட்ட நிலை என்னும் கருதுகோள் நிலையில் வைத்து மனித பெருமைக்கும், சமுதாய அமைதிக்கும் வள்ளுவர் குறள் வழிக் குரல் கொடுத்துள்ளார். “உலகு“ என நினைவூட்டி உலகளாவிய நோக்கத்தை மறைமுகமாக உணர்த்தியுள்ளார். கடவுள் பெயரால், மதத்தின் பெயரால் சண்டையிட்டுக் கொள்ளும் மனிதனுக்கு அவனது மனமாற்றத்திற்கு வள்ளுவம் ஒரு புதிய ஆன்மீக அறத்தைத் தந்துள்ளது.

    வள்ளுவம் கடவுளை நம்புகிறது. ஆனால் அது ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல வள்ளுவம் காட்டும் கடவுளுக்குக் கோபுரங்கள், கோட்டைகள் இல்லை ஆனால் அது பேரறிவு, வாய்மையான அறிவு, குணங்களின் திருவுரு, இன்பத்தின் திருவுரு, அன்பின் திருவுரு, அறத்தின் அடையாளம் என்று கருதப்படுகிறது.

    ஈதல் அறம்:
    “ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல
    ஊதியம் இல்லை உயிர்க்கு”

    மனிதப் பண்பை உணர்த்தும் ஒரு நெறி ஈதல் அறமாகும். ஈகை என்பது பிறருக்குக் கொடுத்து மகிழும் மனம்.அவ்வாறு கொடுத்துதவும் போது மனிதன் பக்குவம் அடைந்தவனாகி விடுகிறான். போட்டியும், பொறாமையும் அடுத்தவர் பொருளைக் கவரும் எண்ணமும் மனிதனை மிருக நிலைக்குக் கொண்டு செல்லும் ஈகைக் குணம் ஒன்றே மனிதனை மாண்புடையவனாக்கும். வள்ளுவர் ஈகை குணமே உயிரின் ஊதியம் என்பர். கொடுத்துப் புகழடையும் வாழ்க்கையே பயனுடைய வாழ்க்கை என்பதைக் குறள் உணர்த்துகிறது.

    காதல் அறம்:
    காமத்துப்பால் அறவழிப்பட்ட காதலுறவுகளை எடுத்துரைத்துள்ளது. காதலையும், ஆண் – பெண் உறவுகளையும் வள்ளுவர் நெறிப்படுத்தியுள்ளார். காமத்துப்பாலில் காதல், காதலர் உறவுநிலை ஆகியவற்றை இனிமை பயக்கப் பாடி அன்பெனும் நெறிக்குள் மனங்களின் சங்க மருததிற்குள், மாசுபடாத வாழ்வியல் படி நிலையை வடித்துத் தந்துள்ளார். களவையும் கற்பையும் வகைப்படுத்தி மனிதம் அடையும் வாழ்க்கை நெறியை வள்ளுவா் தந்துள்ளார்.

    இல்வாழ்க்கை:
    “பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
    வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்” (குறள் – 44)

    பழி அஞ்சிப் பார்த்து ஊண் உடைத்தாயின் ஈயாத கஞ்சன் என்று பிறர் பழித்ததற்கு அஞ்சித் துறந்தார் முதலிய மூவர்க்கும் தென்புலத்தார் முதலிய ஐவர்க்கும் அவன் பொருளைப் பகுத்தளித்து உண்டலை இயல்பாகக் கொண்டிருப்பின், வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் அவனது மரபுவழி ஒருபோதும் அறாது எக்காலும் தொடர்ந்து வருவதாம்.

    அன்பும் அறனும்:
    “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது” (குறள் – 45)

    இல் வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் ஒருவனது இல்லற வாழ்க்கை அவனுக்கும் அவன் வாழ்க்கைத் துணைக்கும் இடைப்பட்ட இருதலைக் காதலையும் அவர் கருத்தொருமித்தப் பிறர்க்குச் செய்யும் அறவினைகளையும் உடைத்தாயின், அது பண்பும் பயனும் அவ்வுடைமை அவ்வாழ்க்கைக்கு முறையே தன்மையும் பயன் விளைவுமாகும்.

    கணவன் மனைவியரிடைப்பட்ட இருதலையன்பு அதன் பண்பாயிற்று. அதனாற் செய்யப்படும் அறம் அதன் பயனாயிற்று. அன்பு பண்பும், அறம் பயனும் இல்வாழ்க்கை உரித்தே ஆகும்.

    இல்லவள் மாணாக் கடை:
    “இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
    இல்லவள் மாணாக் கடை? (குறள் -53)”

    இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் ஒருவனுடைய மனைவி நற்குண நற்செய்கைச் சிறப்புடையவளானால் அவனுக்கு இல்லாதது எது? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?

    அடக்கமுடைமையின் சிறப்பு:
    “பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித்
    தேரினும் அஃதே துணை” (குறள் – 132)

    ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும் பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும். ஒரு மனிதன் தன் வாழ்வில் எப்படியெல்லாம் வாழவேண்டும் என்பதையும், எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதையும் வாழ்க்கை நெறிமுறைகளையும், வாழ்வியல் கூறுகளையும் வழுவாகவும், செழுமையாகவும், செதுக்கியுள்ளார் திருவள்ளுவர்.

    பார்வை நூல்கள்:
    1. திருக்குறள் – வள்ளுவர் கண்ட தத்துவம் – தெ.பொ.மீ.
    2. திருக்குறள் – தமிழ் மரபுரை – ஞா.தேவநேயப் பாவாணர்
    3. மேலை மெய்யியலுக்கு வழிகாட்டிய வள்ளுவம் – ப.மருதநாயகம்
    4. புதிய நோக்கில் திருக்குறள் பாயிரம் – எஸ்.முத்துகிருஷ்ணன்

    _____________________________________

    க. பிரகாஷ் எம்.ஏ, எம்ஃபில்,
    தமிழ்த்துறை
    தொழில்நுட்ப கள ஆய்வு பணியாளர்
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46

    Share
  • சட்டத்தின் உரிமை மீறல்

    — சு.காந்திமதி.

    சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம் என்று நாம் அனைவரும் கூறுகிறோம். அது மட்டும் அல்ல மதம், இனம், மொழி, தேசியம், மற்றும் பாலியல் ரீதியாக எந்தவொரு பாகுபாடின்றி அனைவருக்கும் எல்லா இடங்களிலும் மனித உரிமை கிடைக்கப் பெற சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் தனி மனிதர் ஒருவருக்குப் பிரச்சனை என வந்தால் நாம் எல்லோரும் விலகி ஓடுகிறோம். வீட்டில் நிம்மதியாகக் கூட உறங்க முடிவதில்லை.

    பொதுவாகக் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் திருவிழாக்கள் பண்டிகைகள் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த நேரத்தில் சூழ்நிலை தவறி சண்டை சச்சரவுகள் வந்து விடுகின்றது. இதில் சிலரது கோபத்தினாலும் சூழ்ச்சியினாலும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்படப் பலர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, இதில் எந்தத் தவறும் செய்யாத அப்பாவி பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சண்டை சச்சரவுகளில் ஈடுபடாத அப்பாவிகள் வீட்டில் இருந்தாலும் ஒரு சில காவல்துறை அதிகாரிகள் எந்த ஒரு செயல்களிலும் ஈடுபடாத அப்பாவி பொது மக்களையும் பிரச்சனைக்கு உட்படுத்துகின்றனர். மேலும் சூழ்நிலையும் அவர்களுக்குப் பாதகமாக அமைந்துவிடுகிறது. சூழ்நிலையும், அக்கம் பக்கத்தினர் கூறுவதையும் மதிக்காமல் சம்பந்தம் இல்லாத அப்பாவி பொது மக்கள் காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்கின்றனர். இதனால் பொது மக்கள் அதிக மன உளைச்சலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இது சட்டத்தின் உரிமை மீறல் தானே!

    ____________________________________________

    சு.காந்திமதி
    ஆராய்ச்சியாளர்
    அரசியல் அறிவியல் மற்றும் நிர்வாக வளர்ச்சித் துறை
    காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகம், காந்திகிராமம்

    Share