நீதி இலக்கியங்கள் கூறும் அறக்கொள்கைகள்

0

-க.பிரகாஷ்  

நீதிஇலக்கியம் என்பது சங்க மருவிய கால இலக்கியம் அதாவது சங்க காலத்திற்குப் பின்னா்த் தமிழில் தோன்றிய இலக்கியங்களைக் குறிக்கும். கி.பி. 3- ஆம் நூற்றாண்டு முதல் 6- ஆம் நூற்றாண்டுவரை அறம் வலியுறுத்தும் நீதி நூல்கள் இருந்தன. சங்க காலத்திற்குப் பின்னா் தமிழகத்தில் களப்பிரா்கள் ஆட்சி ஏற்பட்டு, தமிழில் புது இலக்கியங்கள் தோன்றாவண்ணம் தடையான சூழல் நிலவியதாகக் கருதப்படுகிறது. இக்காரணத்தால் களப்பிரா் காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருண்டகாலம் என்று கருதப்படுகிறது. இக்காலத்தில், சங்க காலத்தில் போற்றப்பட்ட காதலும் வீரமும், பின்தள்ளப்பட்டு அறமும், நீதியும் பெரிதும் போற்றப்பட்டன.

     பிற்காலத்தினா் தொகை நூல்களை மேல்வரிசை நூல்கள் என்றும் கீழ்வரிசை நூல்கள் என்றும் பிரித்தனா். குறைந்த அடிகளையுடைய பாடல்களுக்குக் கீழ்வரிசை அல்லது கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் நிறைந்த அடிகள் அமைந்த பாடல்களுக்கு மேல்வரிசை அல்லது மேற்கணக்கு நூல்கள் என்றும் பெயரிடப்பட்டது.

மேற்கணக்கு நூல்கள் பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும்; அவற்றின் எண்ணிக்கை பதினெட்டு. கீழ்க்கணக்கு நூல்களின் எண்ணிக்கையும் பதினெட்டே. மேற்கணக்கு நூல்கள் எல்லாம் பெரும்பாலும் மூன்றடி முதல் ஆயிரம் அடி வரையிலும் எழுதப்படும். அவை ஆசிரியப்பாவால் ஆனவை. கலிப்பா, பரிபாட்டு, வஞ்சிப்பா ஆகிய பாக்களைக் கொண்ட பாடல்கள் மேற்கணக்கில் உள்ளன. கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் இரண்டடி முதல் எட்டடி வரையிலும் உள்ள வெண்பாக்களால் ஆனவையே ஆகும்.

   “நாலடி நான்மணி நால்நாற்பது ஐந்திணைமுப்
     பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம்,
     இன்னிலைய காஞ்சியோடு, ஏலாதி என்பவே
     கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.”

இந்நூல்களில் பண்டைத் தமிழர்களின் சிறந்த ஒழுக்கங்களைக் காணலாம். சமுதாய அமைப்பு, அரசியல்முறை, பழக்க வழக்கங்கள், நாகரிகம், பண்பாட்டையும் அறநூல்கள் எடுத்துரைக்கின்றன. இது மட்டுமல்லாமல் மனிதன் வாழ்வைக் குணப்படுத்தும் அளவிற்குத் தன் கருத்துக்களை மருந்து போல் எடுத்து விளக்குவது அற நூலாகும்.

அற இலக்கியங்களாகிய திருக்குறள், திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகிய நூல்கள் மருந்து போன்ற அருங்கருத்துகளைக் கொண்டிருக்கின்றன.

சமண, பௌத்த சமயங்களின் வரவால் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின. இந்தப் பதினெட்டு நூல்களில் பதினோரு நூல்கள் அற நூல்களாக அமைந்தன. இந்நூல்களின் ஒவ்வொரு பாடலும், பாடலின் ஒவ்வோர் அடியும் அறக்கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அக்கருத்துகள் பொய்யாமை, கொல்லாமை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை, கள்ளாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் கூறல், ஈகை, அன்புடைமை முதலியன.

திருக்குறளில் மருந்து

பழவினையானும், காரணங்களானும் மக்கட்கு வாதம் முதலிய பிணிகள் வரும். மனித வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருக்குறளின் மருந்து என்ற அதிகாரத்தில் திருவள்ளுவா் மருத்துவம் பற்றிய பத்து குறட்பாக்களை கூறியுள்ளார்.

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”  (குறள் – 942)

தான் முன்புஉண்ட உணவு செரித்துவிட்டது என்பதை அறிந்து, அடுத்த வேளை உண்பானேயானால் அவனுக்கு மருந்து என்று தேவையில்லை என்பது இங்கே வள்ளுவம் கூறும் கருத்தாகும்.    

“பசித்துப் புசி” என்பது சான்றோர் வாக்கு. பசித்த பின்பே உணவருந்த வேண்டும். பசியாமல் உண்பது அஜீரணத்துக்கு வழிவகுக்கும். அஜீரணத்தால் உடல் இயக்கம் தடைப்படும். இது பல நோய்கள் உருவாக காரணமாகிறது.

“ஒருவேளை உண்பான் யோகி
இருவேளை உண்பான் போகி
முப்போதும் உண்பான் ரோகி
எப்போதும் உண்பான் துரோகி” – 

ஒருவன் அளவுக்கு மீறினால், தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான் என்பதே கருத்து.

“அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு”  (குறள் – 943) 

அற்றால் அளவறிந்து உண்க. முன்னுண்டது அற்றால் பின்னுண்பதனை அறுமளவு அறிந்து அவ்வளவிற்றாக உண்க. உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு அஃது – இறப்பவும் பலவாய பிற யாக்கைகளிற் பிழைத்துப் பெறர்க்கு அரிய இம்மானுட யாக்கையைப் பெற்றான் அதனை நெடுங்காலம் கொண்டு செலுத்தும் நெறி அதுவாகலான். (இம்மை மறுமை வீடுபேறுகள் எய்தற்பாலது ஈதொன்றுமேயாகலின் உடம்பு பெற்றான் என்றும் அது நெடிது நின்றுழி அவை பெருகச்செய்து கொள்ளலாம் ஆகலின், நெடிது உய்க்குமாறு என்றும் கூறினார்.)

“இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்” (குறள் – 946) 

குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்கும்.

திரிகடுகத்தில் அறம்

திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என்னும் மூன்று கீழ்க்கணக்கு நூல்களும் பெயர் அமைந்துள்ள வகையிலும் நீதிப் பொருள்களைப் பாக்களில் வகுத்துத் தந்த வகையிலும் பெரிதும் ஒப்புமை உடையனவாகும். இம் மூன்றும் நோய் நீக்கி உடல்நலம் பேணும் மருந்துகளின் பெயர்களாம். இந்நூல்கள், பாடல்கள் தோறும், மூன்று, ஐந்து ஆறு என்ற அரிய கருத்துக்களை அருமையான முறையில் அமைத்துக் கொடுத்துள்ளன.

     “உலகில் கடுகும் உடலின் நோய் மாற்றும்
      அல(கு)இல் அகநோய் அகற்றும் – நிலைகொள்
      திரிகடுகம் என்னும் திகழ்தமிழ்ச் சங்கம்
      மருவுநல் லாதன் மருந்து”     

சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று மருந்துப் பொருள்களைக் கொண்டதே திரிகடுகம் ஆகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திவாகரம். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய திரிகடுகம் என்னும் அரிய மருந்து ஒருவர் உடல் நோயைப் போக்கும். அது போல் இந்நூலில் வரும் ஒவ்வொரு பாட்டிலும் சொல்லப்படும் மூன்று அறநெறிகளும் மனிதர்களுடைய அறியாமையாகிய நோயைப் போக்கும்.

“பொய்வழங்கி வாழும் பொறியறையும் கைதிரிந்து
தாழ்விடைத்து நோ்கருதும் திட்டையும் – ஊழினால்
ஒட்டி வினைநலம் பார்ப்பானும் இம்மூவா்
நட்கப் படாஅ தவா்”   (பாடல் – 15) 

பொய்யான சொற்களைப் பேசி அதனால் உயிர்வாழ்கின்ற அழிவற்றவனும், முறைமைமாறி ஒருவன் தாழ்ந்த இடத்துத் தன்னை உயா்ந்தவனாகக் கருதும் மூங்கில் போன்ற புரைபட்ட மனத்தையுடையவனும், பிறரிடம் சோ்ந்து வினை ஆற்றும் போது தனக்குரிய பயனையே எதிர்பார்த்து செயல் செய்கின்றவனும் ஆகிய இம் மூவரும் யாராலும் நட்புக் கொள்ளத் தகுதியற்றவா்கள் ஆவார்கள்.

“ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்கு
இருதலையும் இன்னாப் பிரிவும் – உருவினை
உள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியும் இம்மூன்றும்
கள்வரின் அஞ்சப் படும்”  (பாடல் – 18) 

உறுதியாக வந்தடையும் கிழப்பருவமும், நண்பரிடையே ஏற்படும் பெருந்துன்பத்தைச் செய்கின்ற பிரிவும், உடம்பைக் கரையச் செய்து வருத்துகின்ற தீராத நோயும் ஆகிய இம்மூன்றும் கள்வரைவிட அஞ்சக் கூடியவை.

சிறுபஞ்சமூலம் கூறும் அறம் 

ஐந்து சிறு வேர்களுடைய பெயர்களை கொண்டு சிறுவழுதுணைவேர், நெருஞ்சிவேர், சிறுமல்லிவேர், பெருமல்லிவேர், கண்டங்கத்திரி வேர் ஆகிய ஐந்து வேர்களை கொண்டதுதான் சிறுபஞ்சமூலம் ஆகும்.

வேர்களால் தயாரிக்கப்படும் இச் சிறுபஞ்சமூலம் ஆகிய மருந்து உடல் நலத்தைப் போற்றுவதுபோல அதில் வரும் ஒவ்வொரு பாடலிலும் சொல்லப்படும் ஐந்தைந்து கருத்துக்களும் மனித வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்படுவனவாக உள்ளன. அவர்களின் அறியாமையாகிய நோயைப் போக்கக் கூடிய வகையில் சிறு பஞ்சமூலம் குறிப்பிடும் பாடல்கள் அமைந்துள்ளன.

இப்பாடல்கள் வெண்பாவில் யாக்கப்பட்டுள்ளன.

“ஒத்த ஒழுக்கம் கொலைபொய் புலால் களவொ(டு)
      ஒத்த இவையல வோர் நாலிட்(டு) – ஒத்த
      சிறுபஞ்ச மூலம் சிறந்து” – (பாடல் – 02)

கொலை, பொய், புலால், களவோடொத்த இவையன்றி இவற்றுக்கு மறுதலையாகிய கொல்லாமை, புலால் மறுத்தல், உண்மை பேசுதல், கள்ளாமை, என்று சொல்லப்பட்ட நாலோடு ஒழுக்கத்தையும் சேர்த்து இவ்வைந்தும் அகப்பட மிகுதியான பஞ்சத்தைத் தீர்க்கும் மழைபோல அறியாமையாகிய நோயைப் போக்குகின்ற சிறுபஞ்சமூலம் என்னும் இந்நூலை சிறப்பாக கூறுகிறார்.

“கல்லாதான் தான்காணும் நுட்பமும் காதிரண்டும்
இல்லாதாள் ஏக்கழுத்தம் செய்தலும் – இல்லாதான்
ஒல்லாப் பொருளில்லார்க்கு ஈததளியான் என்றலும்
நல்லவா்கள் கேட்பின் நகை” – (பாடல் – 5) 

 • கல்வியறிவில்லாதவன் தானே ஆராய்ந்து காண்கின்ற நுட்பமான பொருளும்
 • இரண்டு காதுகள் இல்லாதவள் தான் மிக்க அழகுடையவள் என்ற இறுமாப்பு கொள்ளுதலும்
 • பொருளில்லாதவன் இல்லாதார்க்கு ஈத்தறியான் என்றாலும், தான் வறியவரிடத்து மிக்க அருளுடையவன் என்றலும்
 • அறிவுடையவா்களாகிய சான்றோர்கள் கேட்பின் நகைப்பர்.

“கொண்டான் வழியொழுகல் பெண்மகன் தந்தைக்குத்
தண்டான் வழியொழுகல் தன்கிளை அஃது அண்டாதே
வேல்வழி வெம்முனை வீடாது மன்னாடு
கோல்வழி வாழ்தல் குணம்”  (பாடல் – 15) 

 • தன்னை மணந்து கொண்டவன் சொற்படியே ஒரு பெண் ஒழுகல்
 • மகன், தந்தையின் சொல்லைத் தட்டாதவனாய் அவன் சொல்படி நடத்தல்
 • போரின்கண் வீரா்கள் பகைவரோடு சேராமல் தன்மன்னனோடு வாழ்தல்,
 • குடிமக்கள் அரசனது கோல்வழியே வாழ்வதும் அவரவர்க்குரிய குணங்களாம்.

ஏலாதி கூறும் அறம்

ஏலம், இலவங்கம், சிறு நாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்ற ஆறு பொருள்கள் குறிப்பிட்ட அளவோடு சோ்க்கப்பட்ட ஒரு வகைச் சூரணமே ஏலாதியாகும். இச்சூரணம் உடலுக்கு வலிவையும், பொலிவையும், தெம்பையும் தரவல்லது. இதுபோல் இப்பாடல் குறிப்பிடும் ஆறு அறக்கருத்துகள் மக்களுடைய அறியாமை நீக்கி அறிவுடையோராக மாற்றுவதாகும்.

கொலை, களவு, பொய், காமம், கள் என்னும் ஆகியவற்றை நீக்குதல் எனும் சமண சமயத்தின் அறநெறிகளை இந்நூல் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. இல்லறம், துறவறம், விருந்தோம்பல், ஒழுக்கமுடைமை போன்ற உயா்ந்த கருத்துக்களையும் சிறந்த முறையில் எடுத்துக்காட்டுகின்றது.

“கருஞ்சிரங்கு வெண்தொழுநோய் கல்வளி காயும்
பெருஞ்சிரங்கு பேர்வயிற்றுத் தீயார்க்கு – அஞ்சிரமம்
ஆற்றயூன் ஒத்(து) அவை தீா்த்தார் அரசராய்ப்
போற்றியூண் உண்பார் புரந்து” – (57)

 • கொடிய சிரங்கு நோயும்
 • வெள்ளைத் தொழுநோயும்
 • கல்லடைப்பு நோயும்
 • வாத நோயும்
 • வருந்துகின்ற பெருஞ்சிரங்கு நோய்,
  பெரிய வயிற்றுத் தீநோய் – ஆகிய நோய்களுடையவர் பெரும் துன்பத்தை, அடைகின்றனர். அவர்களுக்கு உணவைக்கொடுத்து அந் நோய்களை நீக்கியவா்கள் மன்னராய் அனைவராலும் போற்றப்பட்டு உலகாண்டு வாழ்வர்.

“பொய்தீர் புலவா் பொருள்புரிந் தாராய்ந்த
மைதீா் உயர்கதியின் மாண்புரைப்பின் – மைதீர்
சுடரின்று சொல்லின்று மாறின்று சோர்வின்(று)
இடரின்(று) இனிதுயிலும் இன்று”  (66) 

 • பொய்ம்மை நீங்கிய சான்றோர்கள் விரும்பி ஆராய்ந்த மெய்ப் பொருளாகிய குற்றமற்ற வீடுபேற்றின் மாட்சியைச் சொல்லுமிடத்து.
 • அங்கு இருளை நீக்கும் ஞாயிறு இல்லை
 • உரையில்லை
 • நிலை மாறுதல் இல்லை
 • தளர்ச்சி இல்லை
 • துன்பமில்லை
 • இனிய துயிலுமில்லை

வீடுபேற்றில் பகலிரவு முதலானவை இல்லை என்பதாம் இப்பாடல் கருத்து.

ஒரு மனிதனுக்கு ஏற்படும் நோயைக் குணப்படுத்துவதற்கு எந்த அளவிற்கு மருந்து முக்கியமோ அதுபோல் ஒரு மனிதன் வாழ்வதற்குச் சில கொள்கைகளைக் கைப்பிடிக்க வேண்டும். சுக்கு, மிளகு, திப்பிலி, சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், கண்டங்கத்திரி வோ், ஏலம், இலவங்கம், சிறு நாவற்பூ இவ்வகையான மருத்துவப் பொருட்களை அளவின்றி அருந்தினால் உடல் சரியான நிலையில் இருக்கும்.

பொய்யாமை, கொல்லாமை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை, கள்ளாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் கூறல், ஈகை, அன்புடைமை, இல்லறம், துறவறம், விருந்தோம்பல், ஒழுக்கமுடைமை இது போன்ற சிறந்த கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் நோயிலிருந்து குணமடைவதுபோல், உள்ள(மன)நோய் நீங்கி இயல்பான நிலையில் வாழ்க்கையைக் கடைப்பிடித்து நல்லவண்ணம் வாழலாம்.

***

பார்வை:

திருக்குறள் – பரிலேழகர் உரை.
பதினெண் கீழ்க்கணக்கு பகுதி – 3 – துரை. இராசாராம்

***

க.பிரகாஷ் எம்.ஏ, எம்.பிஃல்,
தமிழ்த்துறை
தொழில்நுட்பக் கள ஆய்வுப் பணியாளர்
பாரதியார் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் – 46
 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *