உள்ளத்தில் ஊறவைத்த ஊனங்கள்

 

திவாகர்

 e6c45fe1-e1a2-4984-896a-a2f8f14e2011

என்னபேச்சு பேசிவிட்டாய் பேச

உன்னால் எப்படித்தான் முடிந்ததோ

என்மேல் காதலென்று சொன்னதெல்லாம்

புனைகதையோ பொய்யோ முறையோ

நான்மாயம் செய்யும் மர்மமங்கையோ

நானுனக்கு செய்ததெல்லாம் துரோகமா

நாணத்தோடு மாமனேயென நேர்மையாய்

நான்மையல் கொள்வதெல்லாம் வேடமா

நல்லமனத்தால் நான்செய்யும் சேவையை

கள்ளத்தனமென கலங்காமல் தீர்ப்பளித்தாயே

உள்ளத்தால் உண்மையாய் உறவாடாமல்

உள்ளுக்குள்ளே ஊனத்தை ஊறவிட்டாயே

உடலெல்லாம் விஷமென்று உளறினாயே

உடல்மட்டும்தானே என்னில் உன்விருப்பம்

சந்தேகம் என்கின்ற வெந்தணல்கொண்டு

தேகத்தோடு என்னுள்ளத்தையும் காய்ச்சினாய்

என்னபேச்சுபேசிவிட்டாய் அத்தனையும்

உன்நாவால் திரும்பப்பெறமுடியுமோ

அப்படியென்னதான் கண்ணால் கண்டாய்

அப்படிநான் செய்ததை தவறென்பாயோ

 

அனாதையென ஆதியிலெனை அவர்வளர்த்தார்

அன்றாடம் அன்னம்போட்டு அறிவையும்

சேர்த்து வளர்த்தசெம்மல் அவரையா

பார்த்து சந்தேகம் வளர்த்தாய்?

ஆசானாக என்னை வளர்த்தவரை

ஆசைநாயகனாக வர்ணித்தாயே ஐய்யோ

தாயும்தந்தையுமாக இருப்பவரை

பேய்போல நினைத்துப் பிழைசொன்னாயே

ஆசையோடா அவர்கால் பிடித்தேன்?

பாசமும் நேசமும் அறியாதவனே

 

உடல்நடுங்க சுரம்வந்து கொதித்து

உடல்வலியோடு படுத்தவரின்

காலைப்பிடித்துவிட்ட நானாதுரோகி?

வாலைக்குழந்தையாய் அவரோடு

காலமெல்லாம் வளர்ந்ததை அறியாயோ

கால்பிடித்தது தொட்டது குற்றமோ

பாசத்தோடுபிடித்துவிட்டதை இப்படி

ஆபாசமாக பார்த்து ஏசலாமா

 

 

பெண்ணினால்தோன்றி பெண்ணோடுவளர்ந்து

பெண்ணென்றால் யாரென அறியாயோ

அன்பின்வடிவம் பெண்ணென உணர்வாயோ

சின்னத்தனமாய் சுயநலத்தைப் பேணிவிட்டாய்

மனம்கனக்க என்னன்னவோ பேசிவிட்டாய்

ஆசை என்மேல்கொண்டால் போதுமோ

ஆசையைப் பாசமாக மாற்றவில்லையே

கூசாமல் ஏசத்தெரிந்த உனக்கு

நேசத்தைப் போற்ற முடியவில்லையே

அழுக்காறு.மனத்தில்கொண்டு என்மனம்

பழுக்கக்காய்ச்சி பேசி நோகடித்தாயே

 

என்னபேச்சு பேசிவிட்டாய் பேச

உன்னால் எப்படித்தான் முடிந்ததோ

சுயநலத்தின்மேல் ஆவல்வைத்தாய்

பயனில்லா வசவுகளை வீசிவிட்டாய்

உன்னோடு முடிந்துபோச்சு என்னுறவு

இனியும் காணாதுதனியே என்னைவிடு

இன்னாசொல்லே சொல்பவனோடு 

இனியும்வாழ்ந்தால் ஊரேயிகழும்

ஒழுக்கமே உயிரினும் பெரிதென்பவளிடம்

அழுக்கு எனச்சொல்லி அழவைத்தாயே

அசூயையே உருவாய் வந்தவனே

மாசில்லா மங்கைநான் விடைபெறுகிறேன்

 

அழுக்காறு அவாவெகுளி இன்னாசொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம் (திருக்குறள்-35)

 

(பொறாமையும் ஆசையும் கோபமும் கடுஞ்சொல்லும்

ஆகிய இந்நான்கு குற்றங்களையும் விட்டு நடப்பது அறமாகும்)

 

தித்திக்குதே திருக்குறள்-4

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.