செண்பக ஜெகதீசன்

 

இணரெரி தோய்வன்ன வின்னா செயினும்

புணரின் வெகுளாமை நன்று.

     -திருக்குறள் -308(வெகுளாமை)

 

புதுக் கவிதையில்…

 

கொடுநெருப்பில்

சுடுவதுபோல் ஒருவன்

கெடுதி செய்தாலும்

முடியுமானால் சினமுறாதிருக்க,

மிகச் சிறப்பு அது…!

 

குறும்பாவில்…

 

நெருப்பு சுடுவதுபோல் உனக்குக்

கொடுமை செய்தவனிடமும்

கோபப்படாமலிருந்தால் நல்லது…!

 

 மரபுக் கவிதையில்…

 

தொட்டால் சுட்டிடும் நெருப்பதுபோல்

     தேடி யுனக்குத் துன்பந்தனை

விட்டு விடாமல் செய்வோர்மேல்

     வந்திடும் கோபம் இயற்கைதான்,

கெட்ட குடியே மேலுங்கெட

     கேடு தொடர்ந்து செய்வோரைத்

தட்டிக் கேட்கும் பெருங்கோபம்

     தவிர்த்திடல் சாலச் சிறப்பாமே…!

 

லிமரைக்கூ…

 

சுட்டிடும் நெருப்பது தொட்டால்,

நன்றாகும் அதுபோல் துன்பம் தருவோர்மீது,

கோபம் கொள்ளாமல் விட்டால்…!

 

கிராமிய பாணியில்…

 

கொள்ளாதே கொள்ளாதே

கோவம் கொள்ளாதே..

 

எரியும் நெருப்புபோல

எவளவு தும்பஞ்செங்சாலும்

அவமேல கோவப்படாம

அடங்கிப்போனா நல்லாயிருக்கும்

வாழ்க்க நல்லாயிருக்கும்..

 

அதால

கொள்ளாதே கொள்ளாதே

கோவம் கொள்ளாதே…!

 

குறளின் கதிர்களாய்…(120)

 

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை யிறைப்பவர்க்

கூற்றுநீர் போல மிகும்.

     -திருக்குறள் -1161(படர்மெலிந்திரங்கல்)

 

புதுக் கவிதையில்…

 

நிலத்தில் ஊறிடும்

நீரது,

இறைக்க இறைக்கத்தான்

நிறைய ஊறும்,

காமநோயும் இதுபோல

மறைக்க மறைக்கப்

பெருகிடுமே…!

 

குறும்பாவில்…

 

ஊற்றுநீரும் காமநோயும் ஒன்றே,

இறைத்தாலும், மறைத்தாலும் 

இரண்டும் பெருகும்…!

 

 மரபுக் கவிதையில்…

 

நிலத்தில் ஊற்று நீரதுதான்

     நிறுத்தா திறைத்திட ஊறிடுமே,

கலக்கம் தந்திடும் காமநோயின்

     கதையும் இதுதான் காண்பீரே,

பலரும் அறிய வேண்டமென

     பற்றிய காம நோயதனை

பலமாய் மறைத்தே வைத்தாலும்

     பொங்கியே வெளிவரும் ஊற்றெனவே…!

 

லிமரைக்கூ…

 

ஊறிடும் நீரூற்று இறைத்தாலே,

இதுபோல் பெருகிடும் காமமாம் நோயும், 

எவர்க்கும் தெரியாமல் மறைத்தாலே…!

 

கிராமிய பாணியில்…

 

மறச்சாலும் முழுசா மறச்சாலும்,

வேதன தந்திடும் காமநோய

வெளிய தெரியாம மறச்சாலும்,

வேதன கொஞ்சமும் கொறயாது..

 

எறைக்க எறைக்க ஊறுகிற

நெலத்து ஊத்துத் தண்ணிபோல,

நோயும் பெருவிப் போயிடுமே

நெறஞ்ச துன்பந் தந்திடுமே..

 

மறயாது மறயாது

கொறயாது கொறயாது

காமநோயும் கொறயாது…!

 

-செண்பக ஜெகதீசன்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *