கற்றல் ஒரு ஆற்றல் 28
க. பாலசுப்பிரமணியன்
ஊடாடும் கற்றல் (Interactive learning)
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சிகாகோவில் ஒரு அரங்கத்தில் பேசிய பேச்சு உலகளவில் அனைவருடைய கவனத்தையும் பெற்று பாராட்டப்பட்டது. “சகோதரர்களே, சகோதரிகளே “என்று உலக அரங்கில் அனைவரையும் அழைத்தது இந்திய பண்பாட்டின் சிகரமாக அமைந்தது. இதே போன்று மார்டின் லூதர் கிங், வின்ஸ்டன் சர்ச்சில், மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற பலரின் பேச்சுக்கள் சில நாடுகளின் தலைவிதியை மாற்றி அமைக்க அடிப்படையாக அமைந்தது. தொழில் நுட்பத்தின் தாக்கம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வரும் முன்னர் இலக்கியத்தின் தாக்கம் சிறப்பாக இருந்தது. மாணவர்களை பல தலைவர்களின் பேச்சுக்களை மேடைகளில் பேசச்சொல்லி அந்தத் தலைவர்களின் நோக்கங்களையும் கருத்துக்களையும் பாராட்டி சிறுவர்களின் திறன்களை வளர்ப்பர்.
பள்ளிகளில் இது போன்ற மாதிரி பேச்சுப் பழக்கங்கள் மாணவர்களுடைய தன்னம்பிக்கையையும் சாதனைகள் படிப்பதற்குத் தேவையான உள்ளுணர்வுகளையும் கொடுக்கின்றன. பாடத்திட்டத்தில் எப்பொழுதெல்லாம் மாணவர்களுடைய திறன்களை வளர்ப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கின்றதோ அவைகளை ஆசிரியர்கள் முழுமையாக உபயோகிக்க வேண்டும்.
பல நாடுகளில் வகுப்பறைகளை ஒரு நாடக மேடையாகக் கருதுகின்றனர். மொழி, சரித்திரம், பூகோளம், இயற்பியல், சுற்றுச்சூழல் கல்வி போன்ற பல பாடத்திட்டங்களை வகுப்பறைகளில் நடத்த கருத்துக்களை சிறு கதைகளாகவோ அல்லது நாடகமாகவோ மாற்றி நடத்தும் பொழுது அவைகளை அனுபவமாக புரிந்துகொள்ள முடிகின்றது. இத்தகைய ஈடுபாடுகளில் மாணவர்கள் மிக்க ஆர்வம் காட்டுவது மட்டுமின்றி அவர்களுடைய ஈடுபாடும் முழுதாக அமைகின்றது. மேலும் இத்தகைய செயல்களில் மாணவர்கள் கூட்டாக ஈடுபடும் பொழுது கற்றல் புத்தகத்தின் சுவர்களைத் தாண்டி அனுபம் சார்ந்த கற்றலாகவும் (Experiential Learning) பங்கேற்றும் கற்றலாகவும் (Participative Learning), கூட்டாகக் கற்கும் கல்வியாகவும் (Cooperative Learning) அமைகின்றது.
கற்றலைப் பற்றி ஆராய்ச்சி செய்யம் வல்லுனர்கள் (Cognitive Psychologists) இது போன்ற மாறு பட்ட கற்றல் முறைகளை கற்றலுக்கு மட்டுமன்றி மூளையின் வளர்ச்சிக்கும் நலத்திற்கும் இன்றியமையாததாகக் கருதுகின்றனர். அவர்களுடைய கருத்தின் படி புத்தகங்கள் கற்றலுக்கு ஒரு வழிகாட்டியாக மட்டும் இருக்கமுடியும். வழிகாட்டிகள் கற்றலுக்குத் துணையாக இருக்கலாமேயன்றி அதன் முடிவாக இருக்க இயலாது.
“எப்படி ஒரு விமானம் பறப்பதற்கு ஒரு ஓடுகளம் தேவைப்படுகிறதோ அதுபோல் கருத்துக்கள் வளர்வதற்கும் சிந்தனைத் திறன் பெருகுவதற்கும் புதிய கருத்துக்களும் அறிவுசால் அனுபவங்கள் அடைவதற்கும் புத்தகங்கள் நல்ல ஒரு ஓடுகளமே ” என கற்பியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
கற்றலின் பொழுது மாணவர்களைக் கூட்டாக அமர்த்தி சிந்தனைகளை வளர்க்கும் கருத்துக்களை கூட்டு விவாதங்களாகவும் (group discussions), விவாத மேடைகளாகவும் (debating platforms), சிக்கல் தீர்க்கும் மேடைகள் (Problem Solving Centers) மற்றும் அரங்கங்களாகவும் மாற்றினால் புதிய கருத்துக்கள், புதிய பார்வைகள் மூலம் பிரச்சனைகளைப் பரிசீலிக்க உதவியாக இருக்கும்.
கற்றலை சீராக்கவும், மேம்படுத்தவும், நிலைநிறுத்தவும் பல வழிகளை நமது மூளைகள் கையாளுகின்றன. இவை ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டதாகவும் சிறப்பானதாகவும் அமைகின்றது. இந்த முறைகளில் வாயால் சத்தமாகப் படித்து அறிந்துகொள்பவர்கள் ஒரு பகுதி. இதே போல் தனக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தோ அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டோ கற்றுக்கொள்ளுபவர்கள் இன்னொரு பகுதி. ஆகவே பேச்சுத் திறனும் நடிப்புத்திறனும் கற்றலை சிறப்பிக்கவும் வளர்க்கவும் மிக இன்றியமையாதவை.
கேட்கும் திறன் (Listening Skills) மற்றும் பேசும் திறன் (Speaking Skills) போலவே படிக்கும் திறனும் ( Reading Skills) கற்றலை வளர்க்க உதவுகின்றது. படிக்கும் திறனைப் பற்றிய சில்ல நுணுக்குங்களை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
தொடரும் ..

