Author: admin

  • மகாகவி பாரதியார்

    -சேது சுப்ரமணியம்

    பாரறியாதிருந்த  எட்டையபுரந்தன்னைப்
    பாரறியச் செய்தான் சுப்ரமணிய
    பாரதி என்னும் மகா கவிஞன் –   கலைவாணி
    பாரதி அருள் பெற்ற கலைஞன்                                        bharathi
    பாரதிரச் செய்த சுதந்திர வேட்கைப்
    பாடல்கள் புனைந்திட்ட இளைஞன்!
    என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
    என்று கலங்கி நின்ற கவிஞன்
    நெஞ்சு பொறுக்குதில்லையே என்று எழுதி
    நெஞ்சம் கலங்க வைத்த கவிஞன்!

    உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
    இச்சகத்துளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்
    அச்சமென்பதில்லை என்று முழங்கினான்!
    உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று
    உளமார வாழ்த்திய போதிலே – வீணில்
    உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோமென்று
    வெகுண்டு வெறுப்பினைக் காட்டினான்!
    வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
    மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் என்று
    நதிநீர் இணைப்பே நாட்டின் வளர்ச்சிக்குக்
    கதியாகும் என்றவன் கூறினான்!

    புதுமைப் பெண்களைப் போற்றினான் – அவர்
    புவியாள வேண்டியே ஏற்றினான்
    ஓடி விளையாடு பாப்பா என்று
    குழந்தைகளுக் கறிவுரை கூறினான்!
    பாஞ்சாலி சபதம் இயற்றியே – மகா
    பாரதத்தின் புகழ் பரப்பினான்
    பாரத மாதாவைப் போற்றியே அவன்
    வந்தே மாதரம் பாடினான்!

    பக்தியுடன் சக்தியைப் பாடினான் – தேச
    பக்தியின் சிறப்பையும் பாடினான்
    கண்ணனைக் கண்ணம்மா ஆக்கியே – பல
    பொன்னான பாடல்கள் பாடினான்!
    புதிய ஆத்திசூடி இயற்றினான் – மனதில்
    பதியும்படி எளிமையாக்கினான்
    குயில் பாட்டின் மூலம் காதல் கதையொன்று
    நெடுங்கவிதையாகவே நல்கினான்
    சாதிக்  கொடுமைகளைச் சாடினான் – சம
    நீதி  கிடைக்க வழி தேடினான்!

    ’வாழ்க நீ எம்மான்!’ என்று காந்தியைப் போற்றினான்
    வஞ்சக எண்ணம் கொண்டோரைத் தூற்றினான்
    பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பற்றியும்
    புரட்சிகள் பற்றியும் கூறினான்!
    கவிதைகள் கட்டுரைகள் கருத்துப் படங்களால்
    சுதந்திர வேட்கையைத் தூண்டினான்
    வறுமையில் தவித்த போதிலும் – தலை
    வணங்காது வாழ்ந்து காட்டினான்
    வெள்ளையர் விரட்டிய போதிலும் – மனம்
    எள்ளளவும் கலங்காது நின்றவன்!
    பாரதத்தாயின் விலங்கினை  உடைத்து
    சுதந்திரத் தாயாய்க் காண நினைத்தவன்
    பார்த்தசாரதி கோயில் யானையால்
    பரமனடியினைச் சேர்ந்தான்
    பாரதத்தாய் மனம் சோர்ந்தாள்!

    பாரதியின் புகழ்  பாடிடுவோம்
    பாரதியாரின் வழி நடப்போம்
    பாரத தேசத்தின் பெருமைதனைப்
    பாரது உணரச் செய்திடுவோம்!

     

    Share
  • பாரதி – ஒரு நினைவாஞ்சலி

    பாலசுப்ரமணியம்
    images

    பாரதி!
    உனக்கும் எனக்கும் தான் எத்தனை ஒற்றுமை !

    நீ பிறந்த அதே நெல்லைச்சீமையிலே
    நான் பிறந்தேன் !
    உன் வீட்டுக்கும் என் வீட்டுக்கும்
    எட்டுக்(ம்) கல் தூரம்!

    நீ பிறந்த அதே நட்சத்திரத்தில்
    நான் பிறந்தேனாம் !
    ஜோதிடர்கள் சொல்லுகிறார்கள் !

    நீ வாழ்ந்த அல்லிக்கேணியிலே
    நானும் வளர்ந்தேன் !

    உன் பெயரை
    என் பெயர் கடன் வாங்கிக்கொண்டது!

    கூடலிலே நீ தமிழ் ஊட்டி வளர்த்த
    பள்ளியிலே நான் மாணவன்!

    ஆனால், பாரதி,
    நீயோ ஒரு கான மயில்!
    நானோ ஒரு வான்கோழி :
    சிறகடிக்கிறேன், சிந்திக்காதே,
    என்னை மன்னித்துவிடு!

    பாரதி!

    பராசக்தியைத் தவிர
    யாருக்கும் தலை வணங்க மறுத்த
    தலையை நிறுத்தும் ஒரு முண்டாசு!

    பறங்கியர் நெஞ்சம் பதைபதைக்க
    ‘நெற்றி அடி’ கொடுக்கும்
    ஓர் பரந்த நெற்றி !

    பாற்கடலில் அமுதம் தேடுவதுபோல்
    பாலுண்ட கண்களில் மேருவினைப்போல்
    இரு கரு விழிகள் !

    எரிமலை மூச்சு விட்டாற்போல்
    தகிக்கும் மூச்சுக்காற்று – அது
    மீசையில் மோதி “மாகாளி, மாகாளி ” யென
    மோனத்தில் சொல்லும் மந்திரம் !

    உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
    உதட்டினை முத்தமிடப்
    பிறந்த தமிழ்க் கவிதை!

    காக்கை குருவி யெங்கள் ஜாதியென
    கருணை கொண்ட உள்ளம் !
    கருப்பு அங்கியில்
    வெள்ளை நெஞ்சம்!

    பூமியைத் தட்டிய அவன் தடிகள்
    பூதேவிக்குப் பூபாளம் பாடின!

    மண்ணை முரசாக்கி அவன்தன்
    தடியால் தட்டியபோது
    “யாமிக்கப் பயமேனென்று”
    பாரதத் தாய்க்கு பலம் கொடுத்தது !

    துடிக்கும் மீசையைக் கண்டு
    துவண்ட பரங்கியர்
    தங்களைத் தாங்களே கொட்டிக் கொண்டனர்!

    வீசு நடையைக்கண்டு
    ஆசை கொண்ட தோள்கள்
    கைவீச்சுக் தோள் கொடுத்தன !

    பாஞ்சாலிக்கு சபதம் கொடுத்தவனின்
    அஞ்சாத தேச மதம் கண்ட
    யானை கூட அச்சத்தில் மதம் கொண்டது !

    காலடியில் வீழ்ந்தாலும்
    கலங்கிடாத பாரதி
    காந்திக்கும் குருவானான் !!

    Share
  • ஊர்ச் சிப்பி நீ!

     – ராஜகவி ராகில்

    உன் அழகு
    திருவிழா
    அதில்
    தொலைந்து போனான்
    என் கண் சிறுவன்!

    உன்னைப்
    புகைப்படம் எடுத்தால்
    தெரியும்
    ரோஜாப்பூ!

    உன்
    பாதம்பட்ட மண்ணெடுத்து
    எறும்புகள் கட்டும்
    மணல் மாளிகை!

    உன்
    கொலுசு ஓசை கேட்ட
    தென்றல்
    உணர்ச்சிவசப்பட்டு ஆகிடலாம்
    புயலாக!

    உன்
    தரிசனம் கிடைப்பின்
    தேனாகும்
    எவர் குருதியும்!

    தமிழ்
    தன்னைத் தானே ரசிக்கிறது
    நீ
    உச்சரிக்கும்போது
    மட்டும்!

    முழு நிலா
    தேய்கிறது
    உன் முகஅழகை
    வெல்ல முடியவில்லையாம்!

    உன்
    ஊர்ச்சிப்பிக்குள்
    ஒரே ஒரு
    முத்து
    நீ!

     

    Share
  • அன்னை

    சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்.

    அன்னை (பலர் குடியிருந்த (குடியிருக்கும்) கோவில்)

    received_1572346819684554
    அம்மா!

    ‘இந்த ஒரு வார்த்தையில்தான் அகிலமே உள்ளடக்கம்’.

    ஆம், அன்னையானவள் இல்லத்தின் ஜீவநாடி. அந்தத் தாய் தன் திருமணத்தின் முன்னரே தன் அன்னை, உடன்பிறந்தவர்க்கு அன்னையாய்த் திகழ்ந்தவள். அடிமை இந்தியாவில் அவதரித்து இருப்பினும், தன் இல்லம் தழைத்தோங்கி நிற்கப் பாடுபட்டவள். குடும்பத்தில் செல்லமாக வளர்க்கப்பட்டும், தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தபோதும் தந்தை ஸ்தானத்தைத் தான் எடுத்துக் கொண்டவள்.

    தந்தையின் மரணம் அவளை வெகுவாய் பாதித்தது. இளம் வயதில் பத்தாம் வகுப்பு வரை பயின்று, தட்டச்சில் தேர்ச்சி பெற்று, குடும்ப நண்பர் உதவியுடன் குடும்பப் பொறுப்பைக் கையிலெடுத்தவள்.

    ஏதோ புண்ணியம் செய்ததால். தன் மகள் போல பாவித்த அவர் உதவியுடன் முன்னேறி மெல்ல மெல்ல அவள் அரசுப் பணியில் சேர்ந்தாள். ஒரே சேலையைக் கிழித்து, அக்கா, தங்கை உடுத்து, தம்பி பாவம், அவன் பல இடங்களுக்குச் செல்பவன் எனப் பிள்ளையாய் அவனுக்கு நல்ல உடை அணிவித்து அழகு பார்த்தவள்.
    தம்பி தங்கையை ஊக்குவித்து அவர்களையும் ஆளாக்கி, அரசுப் பணியில் அமர்த்தி பணியாற்றச் செய்தவள். பின் தன் பொறுமைக்குக் கிடைத்த பரிசாய் அமைந்த கணவனுக்கோ அரசுப் பள்ளியில் ஆசிரியப் பணி. கணவன் உதவியுடன் தாய், தங்கை, தம்பிக்கு ஆதரவாய் இருந்து, உடன்பிறந்தோர்க்கும் நல்ல திருமண வாழ்க்கை அமைத்துக் கொடுத்தவள்.

    ‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது’

    என்னும் வள்ளுவனின் வாய்மொழிக்கேற்ப இல்லறத்தை இனிதாய் நடத்தி வந்து, கட்டினவன் இஷ்டப்பட, தான் கஷ்டப்பட்டு இரண்டு ஆண்பிள்ளைகள், ஒரே பெண் என மூவருக்குத் தன் கருவறையைக் கடனாகக் கொடுத்து, இந்த விந்தை உலகைக் காணச் செய்தவள் அந்தத் தாய்.

    பிரசவத்திற்கு முன் தன் செல்ல மகளைப் பெற்றெடுக்க அவள் பட்ட வேதனை தான் என்ன சொல்ல. ஒற்றைத் தலைவலியால் அவதியுற்று, அந்தக் கஷ்டத்தினூடே அலுவலகம் சென்று பணியாற்றி, பெண் சிசுவைப் பாதுகாத்து ஈன்றெடுத்தாள்.

    ‘பெண் பிள்ளை வேண்டாமென்ற பழங்கூற்றைத் தான் போக்க
    பத்துமாதம் பெண் சிசுவைக் கருவில் பாதுகாத்து வளர்த்தவள்’,
    பின் ஈன்றெடுத்து, தந்தை அவர்தம் கைகளிலே தாலாட்டக் கொடுத்தப் பெருமை, நம் அன்னை அவளையே சாரும்.

    குழந்தைகளைப் பாதுகாத்து வளர்க்க அவள் அன்னை உதவியாக இருந்ததால், அவள் சுமை சற்றுக் குறைந்தது. தானும், தன் கணவனும் அரசுப் பணியில் இருந்ததாலோ என்னவோ, தம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க முடிந்தது. எத்தனை வீடுகளில், அக்காலத்தில் அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வி கிடைப்பது சாத்தியம் என்பதைச் சற்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அந்த வகையில் நம் அன்னை புண்ணியவதி, பிள்ளைகளும் அதிர்ஷ்டசாலிகளே.

    ‘தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போலச் சேலை’
    என்னும் கூற்றுக்கிணங்க நம் அன்னையின் மழலைகள் அவளைப் போலவே படிப்பில் படு சுட்டியாய்த் திகழ்ந்தால்,

    ‘ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக் கேட்டத் தாய்’
    என நம் ஐயன் வள்ளுவப் பெருமான் வாய்மொழிக்கும் உதாரணமான சிறப்பு அன்னை அவளுக்கு மட்டுமே.

    பிள்ளைகளைக் கடைசி வரை ஆளாக்கி அன்னையென இருந்த பெருமை பாட்டி, அன்னை மற்றும் சிற்றன்னைக்கு உண்டு. எனவே அன்னையென மூன்று காவல் தெய்வங்கள் இருந்தால் இல்லம் கோவில் தானே?

    பிள்ளைகள் படித்த கிறித்தவப் பள்ளியில் இரு செவிலித்தாய் அன்னையராய் குழந்தைகளை அரவணைத்து, அன்பு செலுத்தி கல்வி தந்ததால், நம் அன்னையின் இல்லம் மெல்ல மெல்லப் பல்கலைக்கழகமாக மாறத் தொடங்கியது. செவிலி அன்னையரின் பிரார்த்தனையால், அவர்கள் வேளாங்கண்ணி மாதா கோவில் சென்று வந்து அவர்கள் தந்த எண்ணெய் பிரசாதத்தாலும், அவளின் ஒற்றைத் தலைவலியும் நாளடைவில் மறைந்தது. இப்படி அன்னையானவள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஜோதியெனத் திகழ்கிறாள்.

    அடுத்து தம்பி, தங்கை திருமணத்தை இனிதே நடத்திக் கொடுத்து, அவர்களின் அன்னையாய் கணவனுடன் நின்று ஆசி அளித்து இனிதே வாழ வைத்து, அவர்கள் பிள்ளைகளையும் அரவணைத்தவள் அவள்.

    பாட்டியானவள் பேரப்பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுத்து, சமையலும் முடித்து வைத்திடுவாள். அன்னை மற்றும் சித்தியின் பணி அன்னையாய் அலுவலகப் பணியின் இடையிலும், பள்ளி சென்று பிள்ளைகளின் நலன் நோக்குதல், பின் அவர் தேவையை படிப்பில் பூர்த்தி செய்தல் எனத் தொடர்கிறது. அன்னையின் அன்புக்கு என்றும் அழிவில்லை, அவள் பணிக்கு என்றும் ஓய்வில்லை.

    அவள் மகனும், மகளும் உயர்நிலை பயிலும் போது பள்ளியிலேயே முதல், மூன்றாம் இடம் பிடித்த போது, கணவனுடன் அகமகிழ்ந்து அவர்கள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு வழி வகுத்துக் கொடுக்கும் நிலையில் அவள் இப்போது மூன்று பிள்ளைகளையும் ஏதுவான பிரிவில் சேர்த்து மேல்நிலைக் கல்வி பயில வகை செய்தாள்.

    ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’
    என்பது போல் பிள்ளைகளின் முயற்சிக்கும், கணவனுடன் கைகோர்த்து தாய் தந்த ஊக்கத்திற்கும் பலனாக மூத்த பிள்ளைக்கு மருத்துவக் கல்லூரி, மற்ற இருவருக்கு பொறியியல் கல்லூரியில் சேர அனுமதி. அவர்களின் கல்லூரி படிப்பு செலவிற்கு கணவன் உழைக்க, தானும் இல்லத்திலும் வேலை செய்து கொண்டு, அலுவலகத்திலும் இன்முகத்தோடு அயராது உழைத்திருப்பாள்? அந்த வேதனையை அவள் வெளிக்காட்டியதே இல்லை. ஏனெனில் தாய் பொறுமையின் இலக்கணம்.

    செல்லமாய் வளர்த்த மகளைக் கல்லூரியின் விடுதியில் விட்டு அவள் நலன் அறிய நேரமானால், கணவனுடன் சேர்ந்து துடித்த வேதனையைச் சொல்ல வார்த்தையே இல்லை. பட்ட துன்பத்திற்கெல்லாம் பலனாக மூத்த மகனுக்கு அரசு மருத்துவமனையிலும், மற்ற மகன், மகளுக்கு பொறியியல் கல்லூரியில் பணி. இப்போது தாயின் மகிழ்வையும், மனநிலையையும் நான் உரைக்கத் தேவையில்லை.

    அலுவலகப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுப் பின், இரு மகன்களுக்கும் மருத்துவப் பணியில் உள்ள இரு குணவதிகளை மனைவியாய் அமைத்துக் கொடுத்து, மருமகள்கள் இருவருக்கும் அன்னையாய்த் திகழ்கிறாள் நம் அன்னை. பிறகு தன் தாயும் நோய்வாய்ப் பட்டுப் பிரிந்தபோது, தாங்கொண்ணா துயருற்ற அவளுக்கு அன்னை அவள் கணவன் மட்டுமே.

    அன்னையாய் மருமகள்கள் இருவருக்கு மட்டுமின்றி, தம் பேத்திகளுக்கும் அன்னை அவளே. அவர்கள் இருவரையுமே பள்ளி செல்லும் வரை வளர்த்து ஆளாக்கி விட்டு மகன்கள் குடும்பத்திற்கும் துணை நிற்கிறாள். அன்னையாய் விளங்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்ணயர்வு என்பதே கிடையாது.

    அப்படித்தான் நம் அன்னை தன் கணவனுடன் இணைந்து மகன்கள், மருமகள்கள் பணிக்குச் சென்ற போது பேத்திகளை கண்ணயர்வின்றி கவனித்துக் கொண்டது. அன்னையின் பணி இதுதான் என நாம் பட்டியலிட முடியாது.

    ஆனால் அந்த அன்னைக்கு இத்தனை மகிழ்விலும் ஓர் மனக்குறை மட்டுமே. தன் செல்ல மகள் மணம் தாமதமானால் எந்த அன்னை மனம் சகிப்பாள்? அன்னையாவாள் முதல் தெய்வம். அந்தத் தெய்வத்தின் மனக்குறையும் ஒரு நாள் நிவர்த்தி பெறுமா என்றால் நிச்சயம் நிவர்த்தி ஆகும். எல்லாம் வல்ல தெய்வம், அவள் பட்ட கஷ்டத்திற்குப் பலன் நிச்சயம் தரும்.

    ஆம், ஒவ்வொரு பெண்ணுமே இந்த அவனியில் ஜனனம் எடுக்கும் தருணத்திலிருந்து, இவ்வுலகை விட்டு மறையும் வரை தாயாகத்தான் அவளை மாற்றிக் கொண்டு, தாய்மைப் பணிக்கென தன்னை அர்ப்பணிக்கிறாள் என்பதே நிதர்சனமான உண்மை. இதனால் அவள் படும் வேதனைகளை வெளிக்காட்டிக் கொள்வதில்லை என்பதும் உண்மையே.

    அன்னையே அன்பின் முதல் மொழி, கண்கண்ட தெய்வம், ஏன் அனைவரின் வாழ்க்கைக்கும் ஆதாரம். ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’, என்பதை விடுத்து ‘அவளின்றி ஓர் அணுவும் அசையாது’ எனக் கொள்வதே சாலச் சிறந்ததாகும்.

    அன்னையைப் பற்றிச் சுருங்கச் சொன்னால் அம்மா என்பதே அனைவர் அழைக்கும் முதல் வார்த்தை. அன்னையைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
    அன்பின் திரு உருவம்,
    அனைவர் வீட்டின் வாழும் தெய்வம்,
    பத்து மாதம் நம்மை சுகமாய்ச் சுமந்த சுமைதாங்கி,
    பரந்த உலகிற்காக நம்மை வழங்கிய வள்ளல்,
    பிள்ளை நிலாவாய் இருந்த நமக்கு வான் நிலா காட்டி அமுதூட்டிய அன்புத் தோழி,
    இளம்பிறையாய் இருந்த நம்மை முழுநிலவாய் வாழ்வில் மாற்றும் சிற்பி!

    அதனால் மழலை நமக்காக, மாதாவாகிய அவள் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் அவளுக்காகப் பிரார்த்தித்து, மாதாவின் திருவடி பணிவோம். அன்னையை இழந்து வாடுவோர்க்கு மனக்குறையே வேண்டாம். அன்னை என்றாலே அன்பு. ஆம்! அன்னை மறைவதில்லை. அவள் ஒவ்வோர் இல்லத்திலும் ஒரு பெண் மகளாய் வேறு ஸ்தானத்தில் நித்தம் வலம் வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

    அதனால் அன்னையின் அடி பணிவோம், அன்னையைப் போற்றுவோம், பெண்மையைப் போற்றுவோம், பேணிக் காப்போம். என்னைப் பெற்ற அன்னையின் அடி பணிந்து, என் கட்டுரையை இனிதே நிறைவு செய்கிறேன்.

    Share
  • மழலை நிலா!

    -ராஜகவி ராகில்

    உயிர் பெறுவதற்குக்
    காத்திருக்கிறது
    உன் மொழி!

    வயலின்                                                         Mom n baby
    வீணை
    புல்லங்குழல்
    எல்லாம் சேர்ந்த
    தனி
    இசைக்கருவி நீ!

    செடிகள்
    பூப் பூக்கின்றன
    நீ தவழ்வது பார்த்து
    ரசிப்பதற்காக!

    உன் விழிகள் காண்பதென்றால்
    விண்மீன்கள் வரும்
    பகலிலும்!

    நீ மூச்சுவிடும்போது மட்டும்தான்
    சுத்தம் அடைகிறது
    காற்று!

    உன் விரல்கள் தொட்டுப்பார்க்க
    எத்தனை ஆசை தெரியுமா
    மலர்களுக்கு?!

    தாய்க்கு
    உயிர்கொடுத்த
    தென்றல் நீ!

    உலகில்
    அதிசயங்களே இல்லை
    உன்னைத்தவிர!

    இறைவன் நிகழ்த்திய
    மகிழ்ச்சி நீ!

    அதோ…
    உன் புன்னகை தேடி
    வருகின்றன
    பட்டாம் பூச்சிகள்!

    உன் முதல் வார்த்தை அம்மாதான்
    என்றாலும்
    அவள் காத்திருக்கிறாள்
    குழந்தையாக!!

    ***

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • கருவறைத் தெய்வம் இவள்!

    -ராதா மரியரத்தினம் 

    கருவறைத் தெய்வம் இவள்
    காலடி ஓசையிலே
    காலமெல்லாம் நான்
    திருநிறை அழகுத் தெய்வம்
    திகட்டாத தேன் அடை
    தேனில் குழைத்த தினை மா இவள்

    மதுரை மீனாளிவள்
    மாசற்ற பொன்னிவள்
    மலடி என்ற சொல்லை
    வேரோடறுக்க வந்தவள்!

    வேனில் காற்றவள்
    வேய்ங்குழல் கானமவள்
    தூளிக்குள் உறங்க வந்த
    வானத்து நிலவவள்
    கானகத்து மயிலிவள்!

    கன்னத்தில் வைத்த
    திருஷ்டிப் பொட்டிலெனைக்
    கட்டிப்போட்டவள் இவள்
    காதல் கணவன் தந்த
    ஒப்பிலாப் பொக்கிஷமிவள்
    என் தாயே திரும்ப வந்து
    என்னைத் தாயாக்கிய தெய்வமிவள்!

    என்ன சொல்லி நான் பாட…
    என் தங்கமிவள் பெருமை
    வார்த்தைகளைத் தேடுகிறேன்
    வாசமுள்ள முல்லை கொண்டு
    வார்த்தைகளைப் பாசமாய்க் கோக்கிறேன்!

     

    Share
  • எங்கள் கண்ணன் பிறந்தான்!

    -சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்

    அகிலத்தையே அன்னைக்கு வாய்வழி காட்டியவனே
    ஆயர்குலக் கொழுந்தாய் விளங்கும் நல் அச்சுதனே
    இரந்துபின் கர்ணனுக்கு மோட்சம்தனைத் தந்தவனே
    ஈதலினால் சபையில் திரௌபதியின் மானம் காத்தவனே!  krishnan images.jpg (6)

    உலகம் உய்ய கீதோபதேசம் அருளிய நாயகனே – நீ
    ஊதும் குழலால் மெய்ம்மறந்த கோபியர்தான் எத்தனை பேர்?
    எட்டாவது மழலையாய் இன்று அஷ்டமியில் வந்தவனே
    ஏற்ற தசாவதாரத்தில் உந்தன் ஆற்றலினால் சிறந்தவனே!

    ஐ! கண்டதுமே திருஷ்டிபடும் அழகு செல்லக் கண்ணனே
    ஒருத்திக்கு ஒருவனெனும் உயர்வழி நின்ற சீதாராமனே
    ஓங்கி உலகளந்த உத்தமனே தூயவனே வாமனனே
    தேவி நாராயணியை மார்பில் தாங்கிய மாலவனே!

    நின் பிஞ்சுமலர்க் காலடி மெல்லத்தான் எடுத்து வைத்துச்
    சகத்தில் உள்ளோர் இல்லமெல்லாம் அருளைப் பொழிய
    சடுதியில் வந்திடுவாய் சிரித்த குழந்தையாய் பூபாலனே
    பாரதத்தில் பார்த்தனுக்குத் துணைநின்ற பார்த்தசாரதியே
    காத்தருள வேண்டுமய்யா அடைந்தோம் சரணாகதியே!

     

     

    Share
  • ஆசிரியரை நினைவுகூா்வோம்!

    -சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்

    அன்னை தந்தையை அடுத்துவரும் ஆசானே – உம்
    ஆசி ஒன்றிருந்தால் உலகையே தான் வெல்லலாமே  teacher
    இலைமறை காய் போன்ற மாணவர் அறிவதனை
    ஈடற்ற கலங்கரை விளக்கமாய் ஒளிரச் செய்பவரே
    உன்னதமான நின் கரத்தால் பாலகர் கரம் பிடித்து
    ஊக்கமுடன் ‘அ, ஆ’ எழுதக் கற்றுக் கொடுப்பவரே
    எழுத்தறிவித்த இறைவனே, எங்கள் குருநாதரே
    ஏகமனதுடன் உமை இன்று நினைவுகூா்வோம் நாமே
    ஐயம் தெளிவித்துக் கல்விக்கண் திறக்கும் கர்த்தாவே
    ஒளிமயமான எதிர்காலம் எங்களுக்கு நீர் வழங்கி
    ஓய்வின் பின்னும் உறுதுணையாய் உடன் நிற்கின்றீரே
    வாழ்வில் எத்தனைக் கட்டங்கள் நாங்கள் கடந்து வரினும்
    வாழவைக்கும் குருவே நின்தாள் தொழுது பணிவோமே!

     

     

    Share
  • கோகுலாஷ்டமி – கண்ணன் கவிதை

    -சரஸ்வதி ராசேந்திரன்

    ஏகாந்தச் சேவை   தாராய்!
    காரிருள்      நடு நிசி     வேளையிலே
    கண்ணன்      பிறந்தான்   கடுஞ்சிறையில்   BabyKrishna
    மண்ணை      உண்டு     உலகைக் காட்டினான்
    வெண்ணெய்     திருடித்   தின்பவனவன்
    மாடுகள்     மேய்க்கும்    கண்ணன் அவன்
    ஜாலம்   ஆடும் மாயக்   கண்ணன்
    குருவாயூரில்   குழந்தையாய்    நின்று
    திருமேனித்       தரிசனம்     தந்தான்
    குழலூதி     மனம் குளிர     வைப்பான்
    கோபியரின்     சேலைமறைத்துக்   குறும்புசெய்வான்
    பகலிரவாய்      அவனை   நாம்      வணங்குவோம்
    பரந்தாமன்      தாளினைச்   சரண் புகுவோம்
    எத்தனையோ   லீலை      செய்தாய்  கண்ணா
    ஏகாந்தச் சேவை    தாராய்!

     

    Share
  • இலக்கியங்களில் மெய்ப்பாடுகள்

    — கவிஞர். மா. உலகநாதன்.

    பல்கால் பழகினும் தெரியா உளவேல்
    தொல்காப்பியம் திருவள்ளுவர் கோவை
    மூன்றினும் முழங்கும்
    -சுவாமிநாத தேசிகர்

    மெய்ப்பாடு என்பது, வெளிப்படுவது என்று பொருள்படும்.

    உள்ளத்து உணர்ச்சிகளால் செயல்களில் தோன்றும் வெளிப்பாடு மெய்ப்பாடு. எட்டு வகையான மெய்ப்பாடுகள் எனத் தொல்காப்பியம் வரையறுக்கிறது. விரிக்கின் அதுவே 32 வகையெனவும் கூறும்.

    நகையே அழுகை இனிவரல் மருட்கை
    அச்சம் பெருமிதம் வெகுளி உவகை யென்று
    அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப!
    (தொல் – பொருள்:247)

    நகை:
    நகை என்பது சிரிப்பு; அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருக வாய்விட்டுச் சிரித்தலும் என மூன்று வகைப்படும். இவற்றை நான்கு கூறினுள் அடக்கிக் கூறுவர் தொல்காப்பியர்.

    எள்ளல் இளமை பேதைமை மடனென்(று)
    உள்ளப் பட்ட நகைநான் கென்ப.
    (மெய் – நூற் 4 (இளம்)

    இங்கே, அகநானூற்றுப் பாடலொன்றில், பேதைமை பற்றி வரும் நகையைக் காண்போம்.

    தலைவி, தன் தாய் தன்னை வெகுண்டதின் காரணத்தினைத் தன் பேதைமையால் உணராது, அது பற்றி நகைக்கின்றாள்.

    “நகை நீ கேளாய் தோழி! அல்கல்
    ……………
    நல்லை மன்! ஏன நகூஉப் பெயர்ந்தோளே.”
    (அகம் : 248)

    தோழி! நேற்று நகைப்புக்கு இடமான ஒரு செய்தியைக் கேள்! தலைவன் இரவுக்குறியின் கண் தோட்டத்திற்கு வந்தான். அவனை நம் தாய் கண்டாள். பின் விரைவாக என் முகத்தைப் பார்த்தாள். என்னை நோக்கி, நீ மிகவும் நல்லவள்! என்றாள். தலைவன் சிரித்தபடி அப்பால் சென்றான்.

    இது எப்படியிருக்கிறதென்றால், தன்னை எதிர்த்த ஆண் பன்றியின் வீரத்தை மதித்துக் கானவன் அம்பை எய்யாமல் மீண்டது போல், அன்னையும் நம் தலைவனின் பெருந்தகைமையை நினைத்து அவனைக் கடிந்து கொள்ளாமல் போய்விட்டாள்!

    அழுகை:
    அழுகை என்பது அவலம்; இரக்கம் தானே அவலித்தலும், அவலம் கண்டு அவலித்தலும் என அஃது இருவகைப்படும். அழுகை விரிந்து நடப்பதை தொல்காப்பியர்.

    “இளிவே, இழவே அசைவே வறுமையென
    விளிவேல் கொள்கை அழுகை நான்கே!”
    என்பார்.

    கைகேயி கொண்ட வரங்களால், இராமன் நாடிழந்து காடு செல்கின்றான் என்பதை எண்ணி நகரத்திலுள்ளார் பலர் அழுகின்றனர். மக்கள் மட்டும் அல்லாது எல்லா உயிர்களும் அழுதனவாம்.

    உயர்திணை அழுகை:
    “ஆடினர் அழுதனர்; அமுத ஏழிசை
    பாடினர் அழுதனர்; பரிந்த கோதையர்
    ஊடினர் அழுதனர்; உயிரின் அன்பரைக்
    கூடினர் அழுதனர்; குழாங் குழாங் கொடே!”
    நகர்நீங்கு படலம் – 213

    அஃறிணை அழுகை:
    “ஆவும் அழுத அதன் கன்று அழுத அன்றலர்ந்த
    பூவும் அழுத புனல் புள் அழுத கள் ஒழுகும்
    காவும் அழுத களிறு அழுத கால்வயப் போர்
    மாவும் அழுத அம் மன்னவனை மானவே.”
    நகர்நீங்கு படலம் – 1703

    இளிவரல்:
    இளிவரல் என்பது இழிபு; அஃதாவது மானக்குறைவு; இளிவரல் எனும் இம்மெய்ப்பாடு தோன்றுவதை

    “மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு
    யாப்புற வந்த இனிவரல் நான்கே.”
    மெய்ப்-நூல்.6 (இளம்)
    என்று தொல்காப்பியர் விரித்துக் கூறுவார்.

    காமப்பிணி கொண்ட தலைவியொருத்தி மழையுடன் வந்த வாடைக் காற்றினை நோக்கி, ‘நீ இமய மலையையும் அசைக்கும் தன்மையினை உடையாய் ; எளியவளாகிய என்னை அலைப்பது வீரமோ’? என்று கூறித் தன் பிணியுடைமை கருதி இகழ்ச்சியுறுகின்றாள்.

    மருட்கை :
    மருட்கை என்பது வியப்பு ; இதனைத் தொல்காப்பியர்,

    “புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
    மதிமை சாலா மருட்கே நான்கே!”
    எனும் நூற்பாவால் கூறுவர்.

    இங்கே, சிறுமை பற்றிய மருட்கையைக் காணலாம் ஒரு தலைவன் தலைவியின் இடைச் சிறுமை கண்டு வியப்பது.

    “மைம்மலர் ஓதி மணிநகைப் பேதை தன்
    கொம்மை வரிமுலை ஏந்தினும் – அம்ம
    கடையிற் சிறந்த கருநெடுங்கண் பேதை
    இடையிற் சிறிய தொன்றில்.”
    என்ற பாடலில் தலைவன் அங்ஙனம் வியக்கிறான்.

    அச்சம்:
    அச்சம் என்பது பயம். அச்சத்தின் இயல்பினைத் தொல்காப்பியர்,

    “அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
    பிணங்கல் சாலா அச்சம் நான்கே.”
    மெய்ப் – நூற் -8(இளம்)
    என்ற விதியால் கூறுவர்.

    கள்வர் பற்றி வரும் அச்சத்தைக் கலிப்பாட்டடிகள் கவனப்படுத்துகின்றன. இக்கள்வன் ஆறலைக் கள்வனல்லன். தலைவியின் மனங்கவர் கள்வன்.

    தலைவி, தலைவனை நோக்கி, ‘நீ கண்ணை மூடித் திறப்பதற்குள் மறைந்து விடுங் கள்வன் என்னை விட்டு நீங்குதி’! என்கிறாள்.

    “ஓரூ உ நீயெங்கூந்தல் கொள்ளல்! யாம் நின்னை
    வேரூஉதுங் காணுங் கடை
    தேரியிழாய்!”
    (கலி – 87)

    இப்பாடலில் கள்வன் போலும் தலைவனைக் கண்டு தலைவி அஞ்சி இமைப்பின் இதழ் மறைவு ஆங்கே கெடுதி! என்கின்றாள்.

    வள்ளுவரும்,
    “நெஞ்சத்தார் காத லவராக வெய்து உண்டல்
    அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.” குறள்: 1128

    எம் காதலர் எம் நெஞ்சினுள் இருக்கின்றார். ஆகையால், சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணி அவற்றை உண்ண அஞ்சுகின்றோம் என்கிறாள்.

    பெருமிதம்:
    பெருமிதம் என்பது வீரம். அஃது ஏனைப் பெருமைகளோடு ஒப்ப நில்லாது பேரெல்லையாக நிற்பதால் பெருமிதம் எனப்பட்டது.

    “கல்வி தறுகண் இசைமை கொடையெனச்
    சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே.”
    மெய்ப் -நூற்-9(இளம்)
    என்ற தொல்காப்பியர் கூற்றால் அறியப்படும். இங்கே, கொடை பற்றி வரும் பெருமிதம் பேசப்படுகிறது.

    “சித்தரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
    வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
    நடையும் நடப்பழக்கம் – தயையும்
    கொடையும் பிறவிக் குணம்.”

    போர்க்களத்தில் கண்ணனுக்குத் தம் புண்ணியம் அனைத்தும் தாரை வார்த்த பிறகு, கர்ணன் தன் கொடை பற்றிய பெருமிதத்தால் பேசுகின்றான்.

    “தருமன் முதலான அரிய காதல்
    தம்பியரோ டெதிர்மலைந்து தறுகண் ஆண்மைச்
    செருவில் என துயிர் அனைய தோழற் காகச்
    செஞ்சோற்றுக் கடன் கழித்தோர் ; தேவர் கோவுக்கு
    உரைபெறுநற் கவசமும்குண் டலமும் ஈந்தேன்,
    உற்றபெரு நல்வினைப்பே நுனக்கே தந்தேன்.”
    (வில்லிபாரதம் – 17ஆம் போர்ச்சருக்கம்-248)

    வெகுளி:
    வெகுளி என்பது சினம். அதன் இயல்பினை,

    “உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற
    வெறுப்பின் வந்த வெகுளி நான்கே.”
    (மெய்ப்-நூற் 10(இளம்)

    என்ற நூற்பாவால், தொல்காப்பியம் கூறும்.

    உறுப்பறை (உறுப்பு சிதைதல்) பற்றி வரும் வெகுளி எத்தகையது என்பதைக் காணலாம்.

    தன்னுடைய மூக்கும் காதும் சுக்ரீவனால் அழிந்தமை கண்டு கும்பகருணன் சினங்கொள்கிறான்.

    “எண்ணுடைத் தன்மையன் இனைய எண்ணிலாப்
    பெண்ணுடைத் தன்மையன் ஆய பீடையால்
    புண்ணுடைச் செவியொடு மூக்கும் பொன்றலால்
    கண்ணுடைச் சுழிகளும் குருதி கால்வன.”
    (கம்ப-கும்பகருணன் வதைப்-297)

    கும்பகருணன் கொண்ட சினத்தால் அவன் கண்கள் குருதியைக் கொப்பளித்தனவாம்.

    உவகை:
    உவகை என்பது காமம் முதலிய மகிழ்ச்சி, இதன் இயல்பினைத் தொல்காப்பியர்,

    “செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென
    அல்லல் நீத்த உவகை நான்கே.”
    (மெய்ப்-நூற்-11 (இளம்)
    என்ற நூற்பாவால் அறியத் தருகிறார்.

    விளையாட்டு பற்றி வரும் உவகை எத்தகையது என்பதை இனிக் காண்போம். விளையாட்டு என்பது ஆறு குளம் சோலை முதலாகிய வனப்பு மிக்க இடங்களில் தங்கித் துணையோடு விளையாடி மகிழுவது ஆகும்.

    சீவகன் தன் துணைவியாருடன் நீர் விளையாட்டில் ஈடுபடுகின்றான். காந்தருவதத்தை விளையாட்டில் தோற்றோடி சீவகனைத் தழுவிக்கொள்கின்றாள்.

    “அடுத்தசாந் தலங்கால் சுண்ணம்
    அரும்புனல் கவர அஞ்சி
    உடுத்தபட் டொளிப்ப ஒண்பொன்
    மேகலை ஒன்றும் பேசா
    கிடப்பமற் றரசன் நோக்கிக்
    கெட்டதுன் துகில் மற் றென்ன
    மடத்;தகை நாணிப் புல்லி
    மின்னுச்சேர் பருதி யொத்தான்”
    (சிந்தா – 2666)
    என்ற சிந்தாமணிப் பாடலில், மடத்தகை நாணிப் புல்லி, மின்னுச் சேர் பருதியொத்தான் என்றதனால், இங்கு (காதல்) விளையாட்டுப் பொருளாக உவகை பிறந்தமை அறியலாகிறது.

    முடிவுரை:
    தொல்காப்பியம் காட்டும் மேற்கூறிய மெய்ப்பாடுகள் இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன. படிப்போரின் கற்பனை, உய்த்துணரும் அறிவு, பொருளறியும் திறன் இவற்றினால் மட்டுமே இந்த நயங்களை, சுவையை அறிந்து மாந்த முடியும். சங்க இலக்கியங்களில் பொதிந்து கிடக்கின்ற கருவூலங்களை அள்ளியள்ளி, களித்துக் களித்து இன்புறலாம். இன்னும் இன்னும் என்று தேடித் தேடிப் படிக்கலாம். ஆய்வாளர்கள் மேலும் மேலும் முயல்வார்களாக!

    துணை நின்ற நூல்கள்:
    1. சுப்பு ரெட்டியார், ந.டாக்டர் ; முன்னாள் தமிழ்த்துணைத்தலைவர், பேராசிரியர் ; திருவேங்கடவன் பல்கலைக்கழகம், திருப்பதி பழனியப்பா பிரதர்ஸ் – சென்னை,
    600 014 – நவ-1963.
    2. சங்க இலக்கியங்கள்
    3. கம்ப இராமாயணம்.

    கவிஞர். மா. உலகநாதன்,
    முனைவர் பட்ட ஆய்வாளர்,
    வரலாற்றுத்துறை,
    திரு.வி.க.அரசு கலைக்கல்லூரி,
    திருவாரூர் – 610 003.
    worldnath_131149@yahoo.co.in

    Share
  • விடியும்பொழுது

    -விஜயகுமார் வேல்முருகன்

    இரவின் கருமை மெல்லக்
    கரைந்து கொண்டிருந்தது
    கிழக்கில் எழும் செங்கதிர்களால்…

    கரைகின்ற இருளிலும்
    கரைக்கின்ற ஒளியிலும்
    கரைகின்றன காக்கை கூட்டங்கள்

    பாறையின் மீது
    பாதைகள் கண்டு
    பாதங்கள் பதித்தன எறும்புகள்

    பாவையர் வளை கைகள்
    பாவிசைக்கும் ஒலியோடு
    பார்த்து இட்டனர் கோலங்கள்

    கோலத்தின் அழகைக் காணக்
    கோளமாய் ஆதவன் உதிக்கவே
    கோவையாய்ப் பொழுதும் விடிந்தது!

     

    Share
  • நல்உழைப்புக்கு வணக்கம்!

    – சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்

    (திரைத் துறையினருக்காக)

    சுட்டெரிக்கும் கோடையிலும்
    கத்திரி வெயில் தனிலும்
    பகலவனையும் சாந்தப்படுத்திப்
    பகலிரவுதான் பாராவண்ணம்
    உழைப்பின் கண்நோக்கி
    ஊர் பலவும் விட்டு வந்து
    சினிமா எனும் வேடந்தாங்கலில்
    சிறப்புறவே தஞ்சம் புகுந்து
    பற்பல பிரிவில் சாதிக்கும்
    கற்றறிந்த நற்பறவைகள்,
    தம் வலி தான் மறந்து
    நாள் நேரம் யாவும் மறந்து
    மனைவி மக்கள் மற்றும் மறந்து
    பிறர் வலி எனும் பேரிடர் களைந்து
    பொன்மனச் செம்மலெனத் தான்
    நல் மனங்கள் பாராட்டும் பெற்று
    பொலிவுற்றுத் திகழ்ந்திடவே
    அகம் குளிர வாழ்த்திடுவோம்
    அவர்தம் உழைப்புக்கு வணக்கம் செலுத்தி
    உயர்வுக்குமே தோள் கொடுப்போம் நாமே!

     

    Share
  • ஹைக்கூ

    -சரஸ்வதி ராசேந்திரன்

    மழை

    வாடும் வேருக்கு
    நீர் விடும்
    இயற்கை!

    அமாவாசை

    நிலவு தொலைந்த
    சோகத்தில்  முகம்
    இருண்டுகிடக்கிறது
    வானம்!

    முழு  நிலவு

    வான் குளத்தில்
    மலர்ந்தது
    வெண் தாமரை!

    அலைகள்

    கரைப்பார் கரைத்தால்
    பாறையும்
    கரையும்!

    கறையான்

    சேமித்த புத்தகங்களைச்
    சில  நொடிகளுக்குள் படித்துக்
    கரைத்துக் குடித்தது!

    விண்மீன்கள்

    வானம் முழுதும்
    மத்தாப்புச்
    சிதறல்கள்!

     

    Share
  • கர்மவீரர் காமராசர்

    –ச. பொன்முத்து.

    “அன்னை சிவகாமி பெற்றெடுத்த தமிழ்ச் சிங்கம்.. பொற்கால ஆட்சியை நடத்திக் காட்டிய தலைவர்! தர்மமே மானிடப் பிறப்பெடுத்துத் தரணியிலே வந்துதித்து ஏழைகளைக் காத்து நின்றதென்றால் காமராசருக்கே அது சாலப் பொருந்தும். நம் தமிழ் நாட்டில் இலட்சோப லட்சம் மக்கள் கல்விச்செல்வம் பெற்றுத் திகழ்வதற்கு காமராசர் ஒருவரே காரணம் என்பதை மறுக்க இயலாது.

    எளிமைக்கு இவர், இனிய எடுத்துக்காட்டு! கருப்புத் தங்கம்.. காங்கிரஸ் பேரியக்கத்தில் மாநிலத் தலைவர் – இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்- இரண்டுமுறை இந்தியாவின் பிரதம மந்திரிகளை நிர்மாணித்த கிங் மேக்கர்! தன்னிகரில்லாப் பெருந்தலைவர்! ஈடில்லா உழைப்பாளி! மக்களுக்காகவே வாழ்ந்து மக்களுக்காகவே தியாக வாழ்வேற்று மறைந்த மா மனிதர் இவர் என்பதை இவரின் இறுதி ஊர்வலத்தில் கூடிய கூட்டம் சாட்சி சொன்னது! என்றும், அந்த நன்றிப் பெருக்கோடு உளம் கனிந்து அத்திருமகனாரை நினைவில் நிறுத்தும் பொருட்டு, உலகெங்கும் வாழும் தமிழர்கள் பலரும் பங்கேற்க, “கர்மவீரர் காமராசர்” என்னும் கட்டுரைப் போட்டியை அறிவித்திருக்கிற நிலையில், துணிவு மிக்க செயற்குரியவர்; எளிமை கண்டு இரங்கிடும் பண்பாளர்; ஏழ்மையில் தான்  உழன்றதை எந்நிலையிலும் மறவாதவர்; அதிகாரம் என்ற அழுக்கு ஒட்டாத தூய்மையாளர்;  உலகச் சிந்தனையாளர்கள்  வார்த்தைகளில் உதிர்த்தவற்றை வாழ்ந்து காட்டியதோடு, மக்களின் நலம் சார்ந்து நல்லபல செயல்களைச் சட்டமியற்றி செயல்படுத்திச் சாதித்தவர் எனப்  பலவகையில் காமராசரைப் போற்றிப் புகழலாம்.

    அரசியலில் அக்பரைப் போல் கெட்டிக்காரர்; அனுபவத்தில் நேருஜிக்கு இணையானவர், நேர்மையிலும், தியாகத்திலும், எளிமையிலும் காந்திஜிக்கு இணையான தலைவர். தன்னைத்தானே தூய்மைப்படுத்திக் கொள்பவனும், சுயமாகத் தியாகம் செய்யக் கூடியவனுமான இந்தியனே, தான் பிறந்த நாட்டுக்கு உற்ற துணையாக இருக்க முடியும் என்று கூறிய மகாத்மா காந்தி கருத்துப்படி நடந்து காட்டியவர்  தென்னாட்டு காந்தி காமராசர். இளமை என்னும் வசந்த காலத்தை இந்த நாட்டின் சேவைக்கு அர்ப்பணித்து திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர் கர்மயோகி கர்மவீரர் எனப் பல வண்ணம் புகழ்ந்து வணங்கலாம்.

    “மானிடத் தன்மையைக் கொண்டு – பலர்

    வையத்தை ஆள்வது நாம் கண்டதுண்டு

    மானிடத் தன்மையை நம்பி – அதன்

    வண்மையினால் புவி வாழ்வுகொள் தம்பி

    ‘மானிடம் ’ என்றொரு  வாளும்- அதை

    வசத்தில்  அடைந்திட்ட உன்இரு தோளும்

    வானும் வசப்பட வைக்கும் – இதில்

    வைத்திருக்கும் நம்பிக்கை வாழ்வைப் பெருக்கும்”

    இக்கவிதையில் பாவேந்தர் பாரதிதாசன், உலகத்தின் உயர்வு என்பது ஒவ்வொரு தனி மனிதனின் சிந்தனையிலும் கூட்டுழைப்பிலும் தங்கி நிற்கின்றது; ஒவ்வொரு மனிதனின் தோற்றமும் வாழ்வும், ஆக்கமும் அழிவும் அவன் சார்ந்துள்ள சமுதாயத்தின் நலத்திற்காகவே நிகழ்கின்றன;  நிகழவும் வேண்டும்  என்றுரைக்கிறார். இச்சிந்தனை வழியே, கர்மவீரர் காமராசரின் வாழ்க்கையின் அத்தனை நிகழ்வுகளும் இந்தச் சமூகத்து மக்களின் நலத்திற்காகவே அமைந்தது என்றால் அது மிகையாகாது.

    இளமையில் கர்மவீரர்

    தங்கமணி மாளிகையில்

    தனிவயிரப் பந்தலிட்டு

    மங்கையர்கள் சுற்றிவந்து

    மங்கலமாய் கோலமிட்டுத்

    திருநாள் அலங்காரச்

    சிலைபோல் அலங்கரித்து

    வாழ்த்தொலிக்கப் பெற்றெடுக்கும்

    மகனாக வந்ததில்லை!

    . . . .     . .  .      . .  .

    நிமிர்ந்தால் தலையிடிக்கும்

    நிற்பதற்கே இடமிருக்கும்

    அமைவான ஓர்குடிலில்

    ஐயா நீ வந்துதித்தாய்!

    என்னும் கவியரசு கண்ணதாசனின் கவிதை வரிகள் காமராசரின் பிறப்பையும், இல்லச் சூழலையும் எடுத்தியம்புவன.

    ஏழ்மை குடியிருக்கும் எளிய குடும்பச் சூழலில் பிறந்து ஏழ்மையைக் கண்டு துவண்டு விடாமல்,  ஏழைமக்கள் ஏற்றம் பெறும் வகையில்  சிந்தித்த, செயலாற்றிய பெருமகன் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து  1987-ல் நிர்வாகக் காரணங்களால் பிரிக்கப்பட்ட விருதுநகர் மாவட்டத்திலுள்ள விருதுநகரில் 15.07.1903-ல் நாள் பிறந்தார். அவரது தந்தை  குமாரசாமி,  தாயார் சிவகாமி அம்மாள் ஆவார்.  அவர்களின் குல தெய்வமான காமாட்சி அம்மனின் பெயரால் முதலில் காமராசருக்கு “காமாட்சி” எனப்  பெயரிட்டார்கள்.  காமராசரை “ராஜா” என செல்லமாக  அவரது தாயார் அழைத்து வந்தார். பின்னர் காமாட்சி மற்றும் ராஜா ஆகிய பெயர்களை இணைத்து காமராசர் என்றே அழைத்தார்கள்.

    1909 ஆம் ஆண்டு தனது 6 வயதில்  தந்தை குமாரசாமி நாடார் காலமாகவே சில ஆண்டுகளே பள்ளிக்குச் சென்றார் காமராசர். பின்னர் தனது 12-வது வயதில் படிப்பை நிறுத்த வேண்டிய நிலை உருவாகவே,  ஜவுளிக் கடை ஒன்றில் காமராசர் வேலையைப் பார்க்க நேரிட்டது.

    பள்ளியில் நடைபெற்ற  விநாயகர் பூசையின்போது குறைவாக பிரசாதம் வாங்கி வந்ததற்காக கடிந்து கொண்ட தனது பாட்டியிடம், ஒவ்வொருவரிடமும் ஐந்து பைசா வீதம் வசூல் செய்த ஆசிரியர் பிரசாதத்தையும் ஒரே மாதிரியாகப் பிரித்து வழங்க ஏற்பாடு செய்யாததற்கு ஆசிரியரைத்தான் கடிந்து கொள்ள வேண்டும் என  மாணவப் பருவத்தில் காமராசர் கூறியது அவரது உயர்ந்த பண்புக்கு சான்றாகும்.

    காலைநேரத்தில் மதம் பிடித்த நிலையில் ஓடிக் கொண்டிருந்த யானையை அடக்க முடியாமல் அனைவரும் அஞ்சி நடுங்கி, பயந்து ஓட,   அதன் நிலையை உணர்ந்த காமராசர் விரைந்து கோயிலுக்குச் சென்று அதனைக் கட்டியிருக்கும் இரும்புச் சங்கிலியை யானையின் துதிக்கைக்கு வீசி எறிந்து அதனுடைய கோபத்தை தணித்த சிறுவனாக,  எழுந்துள்ள சிக்கலுக்கான தீர்வை எளிதில் செயல்படுத்தும் தீரம் இளமையிலேயே காமராசரிடம் குடிகொண்டிருந்தது என்பதற்கு சான்று பகர்வதாகும்.

    விடுதலைப் போரில் கர்மவீரர்:

                அவ்வப்போது சாலைகளில் கேட்கப்படுகிறது ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லும், விடுதலைப் போராட்டக் களமும் இளைஞனாக இருந்த காமராஜரை விடுதலைப் போராட்டத்தின் பக்கம் திருப்பியது.  1919 ஏப்ரலில் ரௌலட் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் விடுத்த அழைப்பை ஏற்று காங்கிரசின் முழுநேர ஊழியரானார்.  இதே ஆண்டில் சத்தியமூர்த்தியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

    திறனறிந்து தேர்ந்த கொளல்.

    என்னும் வள்ளுவத்திற்கிணங்க, சத்தியமூர்த்தியை தன்னுடைய அரசியல் ஆசானாகவே ஏற்றார்.

                தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகச் சத்தியமூர்த்தி இருந்தபோது, காமராஜ் செயலாளராக இருந்தார்.  பிறகு காமராஜ்  தலைமைப் பொறுப்புக்கு வந்தபோது, சத்தியமூர்த்தி செயலாளராக இருந்து செயல்பட்டார்.  சத்தியமூர்த்தியும் காமராஜரும் ‘குரு-சீடர்’ என்ற முறையில் இருந்தார்கள் எனச் சிலர் சொல்வதுண்டு.

                1927-ம் ஆண்டு சென்னையில் ‘கர்னல் நீல்’ சிலையை அகற்றம் போராட்டம் நடத்த  அண்ணல் காந்தியிடம் அனுமதி பெற்ற நிலையில், போராட்டம் நடத்தாமலேயே அச்சிலை அகற்றப்பட்டது. 1928-ல் மதுரைக்கு வந்த சைமன் குழுவை எதிர்த்துப் போராட்டம் ;  வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்; 1930-ல் சட்டமன்றுப்பு இயக்கம்; 1945-ல் ஆகஸ்டு புரட்சி  எனப் பல்வேறு விடுதலை வேள்விகளில் கலந்து கொண்டு,  சிறைவாசம் அனுபவித்தார்.

    முழந்துண்டு சட்டைக்கும் முதலில்லாத் தொழிலாளி

    பழனிமலை ஆண்டிக்குப் பக்கத்தில் குடியிருப்போன்

    பொன்னில்லான், பொருளில்லான், புகழன்றி வசையில்லான்

    இல்லாளும் இல்லான், இல்லையெனும் ஏக்கமிலான்

    அரசியலைக் காதலுக்கே அர்பணித்தார் மத்தியிலே

    காதலையே அரசியலுக்கு கரைத்துவிட்ட கங்கையவன்

    என வாழ்க்கை முழுமையையும் காமராசர் மக்கள் பணிக்கே அர்ப்பணித்ததை படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர் கண்ணதாசன்.  இதனை உள்வாங்கிய தமிழருவி மணியன்,

    நீ. . . முக்கால் கைச் சட்டையிலும்

    முழந்துண்டு வேட்டியிலும்

    சுயதேவைக்குச் சுவரெழுப்பியவன்

    என வியந்து போற்றுகிறார்.

    கட்சிப் பணியில் கர்மவீரர்

    “வெறும் படிப்பறிவு, சொல்லிக் கொடுத்த கலையறிவு – இவை மட்டும் நாட்டை ஆள்வோருக்குப் போதாது.  எளிதில் எவரும் எட்டமுடியாத பட்டறிவைத்தான் அவர்கள் நிறையப் பெற்றிருக்க வேண்டும்.  வாழக்கையின் பெரும் பகுதியை அந்தப் பட்டறிவைப் பெறுவதில் செலவிட்ட ஒருவனே எஞ்சிய காலத்தில் நாட்டை ஆளத் தகுதியுடையவனாவான்” என்ற பிளேட்டோவின் கூற்று நம் கர்மவீரர் காமராசருக்குரியது.

                “எனக்குச் சுமார் 18 வயது. 1923ஆம் வருஷம் காங்கிரஸில் சேர்ந்திருந்தேன். . .  சுயராஜ்யம் நம்நாட்டுக்கு வேண்டும்; காங்கிரசும் காந்தியுமே அதைப் பெற முடியும்’- இதுதான் அப்போது எனக்கத் தெரிந்த அரசியல் விவகாரம்.  காங்கிரஸ் இடும் வேலையை முன் பின் பாராமல் அப்படியே செய்வேன்.  காங்கிரஸிலில் உள்ள தலைவர்களில் ஒற்றுமை, வேற்றுமை ஒன்றும் தெரியாது.  காங்கிரஸ் சட்டசையைப் பகிஷ்கரிக்கச் சொல்கிறது, தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அதைச் செய்யப் பாடுபட்டேன்.

    அடுத்தாற்போல் சுயராஜ்யக் கட்சியைச் சட்டசபைக்குள் செல்ல அனுமதி கொடுத்து எல்லாக் காங்கிரஸ்காரர்களையும் வேலை செய்யச் சொன்னார்கள்.  அதையும் பிரச்சாரம் செய்தேன்.  பிறகு 1930ஆம் வருஷத்தில் சட்டமறுப்பு நடந்தது.  சட்ட மறுப்பில் சிறை சென்றேன்.  இப்போது  சட்டசபைக்கு என்னை அனுப்பியிருக்கிறார்கள்.  இவை எல்லாவற்றிலும் காங்கிரஸ் கட்டுப்பாட்டுப்படி நடப்பதுதான் எப்போதும் நான் கொண்ட கொள்கை.” என காமராஜ் தனது கட்சிப் பணி குறித்து விவரிப்பது நோக்கத்தக்கது.

    தமுக்கடிக்கும் தொண்டராய் இருந்து  தலைவர்களுக்கு ஆலோசனை கூறும் உயர்தகு நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்டதும், கட்சிக்காக உண்டியல் குலுக்கி நிதி திரட்டிய நிலையிலிருந்து பிரதமர்களை நிர்ணயிக்கும் ‘கிங் மேக்கராக’ செல்வாக்கு பெற்றதும், 1940 முதல் 1954 வரை 14 ஆண்டு காலம்,  இடைவெளியின்றி காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், 12 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 15 ஆண்டுகள் தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகவும், 9 ஆண்டுகள் முதலமைச்சராகவும்  தொடர்ந்து நீடிக்கும் அளவிற்கு தன் நிலையை நிர்ணயித்துக் கொண்டதும், காமராசர்  ஆற்றிய  அரிய பணிகளால் என்றால் அது மிகையாகாது.

    கல்விப் பணியில் கர்மவீரர்:

     என்னருந் தமிழ்நாட்டின்கண் எல்லாரும்கல்வி கற்றுப்

    பன்னருங் கலைஞானத்தால் பராக்கிரமத்தால் அன்பால்

    உன்னத இமயமலைபோல் ஓங்கிடும் கீர்த்தியெய்தி

    இன்புற்றார் என்றுமாற்றார் இயம்பக்கேட்டிடல் எந்நாளோ?

    என ஏங்கிய பாரதிதாசனின் ஏக்கத்தைப் போக்கவும்,  பாமரப் பிள்ளைகள் படித்து பண்டிதர் களாக்கவும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் ராஜாஜி மாற்றி அமைத்து நடைமுறைப் படுத்திய குலக் கல்விக் கொள்கையைக் கைவிட்டதோடு எல்லா ஏழைக் குழந்தைகளுக்கும், தொடக்கக் கல்வி இலவசம் என்னும் திட்டத்தைச் செயல்படுத்தினார் காமராசர்.

    ராஜாஜியால் நிதிப்பற்றாக்குறை காரணமாக மூடப்பட்ட 6000 ஆரம்பப் பள்ளிகளை  ஆட்சிக்கு வந்த சிலமாதங்களில்  மீண்டும் திறக்கும்படி  ஆணையிட்டார் காமராசர். மேலும் 300 மக்கள் இருக்கும் கிராமத்திற்கு ஓர் ஆரம்பப்பள்ளி.  3 மைல்களுக்கு ஒரு நடுநிலைப்பள்ளி.  5 மைல்களுக்கு ஓர் உயர் நிலைப்பள்ளி என 14000 புதிய பள்ளிகள் கட்டவும் உத்தரவிட்டார்.  எல்லா நகரங்களிலும் கல்லூரிகள் என தொடங்கி தமிழ்நாட்டு மக்கள் ஒளிபெற கல்விக்கண்களை திறந்துவிட்டார்.

                ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், உடற்பயிற்சிக் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், மதுரையிலும், தஞ்சாவூரிலும் மருத்துவக் கல்லூரிகள் என கல்வித் துறையில் மிகப் பெரிய புரட்சி செய்தார்.

                கல்வி கற்பது என்பது ஏதோ பகட்டான செயல் என்ற எண்ணத்தைப் போக்கி, பாமர மக்களும் முயன்றால் எதையும் எட்டிப்பிடிக்க முடியும் என்கிற நிலையை உருவாக்கினார் காமராசர்.  அன்று இட்ட வித்துகள் முளைத்து வேர்விட்டு வளர்ந்து தழைத்து இன்றைய தமிழகத்தில் பெரும் விருட்சங்களாகப் பெரிய பெரிய கல்வி நிறுவனங்களாக பல்வேறு பல்கலைக் கழகங்களாகப் பல்துறைக் கல்வியை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

    kplan” நான் படிக்கக் காரணம் என் அப்பா. என் அப்பா படிக்கக் காரணம் காமராசர். Happy Birthday Kamaraj…” என அவரது பிறந்த நாளில் வாழ்த்துக் கூறி தன்னுடைய முகநூலில் (Facebook) பதிவு செய்கிறார் கார்த்திகேயன் சுப்பிரமணியன்.

    ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டு வந்த கல்வி என்கிற சொத்தை இலவசமாக வழங்கி புரட்சி செய்தவர் காமராஜர். அதனால் தான் அவரை எல்லோரும் ‘கல்வி வள்ளல்’ என்றும் ‘கல்விக்கண் திறந்த காமராசர்’

     

     என்று அழைத்தனர்.  ஆனால் இன்றோ மாணவர்களின் நிலையோ வேறாக உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது மேலுள்ள படம்.

    இன்று உயர்வகுப்பினர் மட்டுமே ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படும் ஐஐடி நிறுவனத்தை, அனைத்து வகுப்பு மாணவர்களின் உயர்கல்விக்காகவும் தொடங்கிய பெருந்தகையாளர் காமராசர். படிக்க வரும் மாணவர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கும் வகையில் ‘மதிய உணவுத்’ திட்டம் தீட்டி நிறைவேற்றினார்!

    முற்பகல் மூளை நிரப்பி

    பிற்பகல் வயிறு நிரப்பி

    தார்க்கோல் சிறுவர்களை

    எழுதுகோல் ஏந்த வைத்தாய்

    அது உன் தொலைநோக்கு.

    என வைரமுத்து தன் வார்த்தைகளில் காமராசரை வாழ்த்துகிறார்.

                தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை நிலைபற்றிய காமராசரின் துல்லிய அறிவும், மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அவருக்கிருந்த ஆர்வமும், துறைச் செயலாளர்களிடத்தில் அவரது மதிப்பையும் மரியாதையையும் பலமடங்கு உயர்த்தின.  அலுவலர்கள் அறியாத பல விஷயங்களை, முதலமைச்சராவதற்கு முன்னரும் பின்னரும் அவர் மேற்கொண்ட பயணங்கள் அவருக்குக் கற்றுத் தந்தன. தமிழகத்தின் ஒவ்வொரு மூலைமுடுக்கும் அவருக்கு நன்கு தெரியும்.  ஒவ்வொரு முறையும் சுற்றுப் பயணத்திலிருந்து திரும்பியதும், மக்கள் தேவைகளைக் கண்டறிந்த காமராசர், பல புதுமைகளைப் புகுத்தி நிர்வாகத்தைச் செம்மைபடுத்தினார்.

    நீர் மேலாண்மையில் கர்மவீரர்:

      பெருந்தலைவர் காமராசர் கல்வி வளர்ச்சி ஏற்பட்டுவிட்டால், சாதி வித்தியாசம் தன்னாலே அகன்றுவிடும். தாழ்த்தப்பட்ட ஒருவர் கலெக்டராகிவிட்டால், ‘நான் உயர்ந்த சாதி ஆகையால் நான் அவர் கீழ் வேலை செய்ய மாட்டேன்’ என்று யாரும் கூற முடியாதுன்னேன். உயர்ந்த சாதின்னு கூறிக் கொள்பவன் தானாவே கலெக்டர் உத்தரவுக்கு வேலை செய்யறான். ஆகவே, கல்வியே இந்த ஜாதிய கொடுமைய போக்க வழிவகுக்கும்ன்னேன்!”

                ” டாக்டருக்கு படிச்ச தாழ்த்தப்பட்டவன் ஊசி போட்டு எந்த நோயாளி செத்தான்னேன்? பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எஞ்சினீயர் கட்டுன எந்தப் பாலம் இடிஞ்சுபோச்சுன்னேன்? யாருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் இஞ்சினியரும் ஆகலாம். டாக்டரும் ஆகலாம்னேன்!” என சாதி கட்டமைப்புகளை அடியோடு வெறுத்தார்.

    தனது அமைச்சரவையில் பரமேஸ்வரன் என்னும் தாழ்த்தப்பட்டவரை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக்கி கோயில்களில் முதல்மரியாதை பெற வைத்தவர் காமராசர். பேச்சுதான் செயல்.. செயல்தான் பேச்சு என வாழ்ந்தவர் காமராசர்.

                 நீர்பாசனமற்று வறண்டு கிடந்த பூமியை வளமாக்கும் நோக்கோடு மழைநீரை சேமித்து, தேக்கி விவசாய நிலங்களுக்கு நீர்பாசனம் செய்ய அமராவதி அணை, ஆரணியாறு அணை, வைகை அணை, மணிமுத்தாறு அணை, மலம்புழா அணை, சாத்தனூர் அணை, மேட்டூர் கால்வாய், குந்தா அணை,  வாலையாறு அணை, பரம்பிக்குளம்-ஆழியாறு அணை, கீழ்பவானி அணை, கிருஷ்ணகிரி அணை, புள்ளம்பாடி அணை, மங்கலம் அணை, கோமுகி அணை, மேல்கட்டளை கால்வாய்,  வீடுர் அணை, தோப்பியார் ஏரி, மீனக்கரை ஏரி, பெரியாறு நீர்மின் திட்டம் என்பன போன்ற அணைகளைக் கட்டி நீர்மேலாண்மையை மேம்படுத்திய பெருமை காமராசரைச் சாரும்.  இதனையே,

    நதிகளை ‘அணை’த்து

    நீரிலும் பெயரெழுதி

    நிலைத்தாய்,

    அது உன் சரித்திரம்.

     என வார்த்தைகளில் வடிக்கிறார் வைரமுத்து.

                மேலும், நீர்மேலாண்மையோடு நீர்மின்சக்தி தயாரிக்கும் பணிகளையும் மேற்கொண்டார் காமராசர்.  தொழில்வளம் பெருகும் நிலையில், தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் தேவைப்படும்  என்ற நோக்கில் அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியது.

    தொழில் மேம்பாட்டில் கர்மவீரர்:

    தொழிற்சாலைகளுக்கான அடிப்படை கட்டமைப்புகளை ஒருங்கிணைந்த முறையில் காமராசர் உருவாக்கியதன் மூலமாக தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது  இடத்தைப் பிடித்தது. அயல்நாட்டுச் சுற்றுப்பயணத்தின்போது இந்திய தேசத்தின் நலத்திற்கும்,  தமிழகத்தின் உயர்வுக்கும் வித்திட்டார்.

    1. நெய்வேலி நிலக்கரித் திட்டம், 2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை, 3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ், 4.ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை, 5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை, .கல்பாக்கம் அணுமின் நிலையம், கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை, 8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை, 9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, 10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை, 11 .துப்பாக்கி தொழிற்சாலை, 12. நெய்வேலி நிலக்கரி சுரங்கம், 13. சேலம் இரும்பு உருக்காலை, 14. பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை, 15. அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை, 16. சமய நல்லூர் அனல்மின் நிலையம், 17. சென்னை அனல்மின் நிலையம், 18. நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை என்பன போன்ற தொழிற்சாலைகளை நிறுவி எண்ணற்ற தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பினையும் அவர்களுக்கான வாழ்வாதாரத்தையும் உருவாக்கித் தந்த பெருமை காமராசரையே சேரும்.

    பதவித் துறப்பில் கர்மவீரர்:

    வேலூர் சிறையில் இருந்தபோது,  1941-ம் ஆண்டில் விருதுநகர் நகராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  1937-ல் இப்பதவி தம்மைத் தேடி வந்தபோது, குறுகிய வட்டச் செயல்பாட்டுக்குள் தம்மை நிறுத்திக் கொள்ள விரும்பாததால் ஏற்கமறுத்தார் காமராசர்.  இதுபோன்ற பதவியில் இருப்பவர்கள், சரியாகக் கவனித்து பொறுப்போடு செயலாற்ற வேண்டும் என்பதில் உறுதியோடு இருந்தார்.  விடுதலையானதும் விருதுநகருக்கு வந்து, முனிசிபல் கவுன்சில் கூட்டத்தில் தலைவராகக் கலந்து கொண்டு, தம்மைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி கூறிவிட்டுத் தொண்ணுhறாவது தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டுப் பதவியை ராஜினாமா செய்தார்; கட்சி வேலைகளுக்காகப் பதவியைத் தூக்கி எறிந்தார்.

    காமராசர் முதலமைச்சராக இருந்தபோது பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி வகித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியில் சில பிரச்சனைகள் உருவாகின. எனவே காமராசர் ஒவ்வொரு மாநிலத்திலுள்ள மூத்த தலைவர்களும் நீண்ட நாட்கள் பதவி வகிக்கின்றவர்களும், ஆட்சிப் பணியை விட்டு விலகி கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற திட்டத்தை பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் கூறினார். இந்தத் திட்டத்தைப் பிரதமர் ஜவஹர்லால் நேரு வரவேற்று ஆதரித்தார்; மிகவும் பாராட்டினார்; உலகத்திலுள்ள நாளிதழ்களெல்லாம் பெருந்தலைவர் காமராஜரின் இந்தத் திட்டத்தைப் பாராட்டின. மூத்த தலைவர்கள் பதவி விலகும் திட்டத்தை “காமராசர் திட்டம்” என்றே அழைத்தார்கள். இதனை ‘கே பிளான்’ என்றே கூறினார்கள். இதற்கு முன்னுதாரணமாக தான் வகித்த முதலமைச்சர் பதவியைத் துறந்து கட்சிப்பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

    இராமனுக்கு நாளைய தினம் முடிசூட்டு விழா என்றபோது எந்தளவுக்கு மகிழ்வாய் இருந்தானோ அதே அளவுக்கு மறுநாள் வனவாசம் என்றபோதும் மகிழ்வாய், ‘அன்றலர்ந்த தாமரையாய்’ இருந்ததாக கம்பன் வர்ணிப்பதைப் போல காமராசர் தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் துறந்தபோது மனமகிழ்வாய் இருந்ததாகக் கூறுவர்.  ஆனால், கர்மவீரர் காமராசரோ,

    இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

    துன்பம் உறுதல் இலன்.

    என வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடும் மனநிலையை ஒத்திருந்தார். அதனால்தான் கண்ணதாசன்,

    தீயன நாடார், என்றும்

        சிறுமைகள் நாடார், வாழ்வில்

    மாயங்கள் நாடார், வெற்று

         மந்திரம் நாடார், நீண்ட

    வாய்கொண்டு மேடை சாய்க்கும்

         வரட்டு வார்த்தைகள் நாடார்

    தமிழ் மேம்பாடும் நீதிமன்ற சூடும்:

          கர்மவீரர் காமராசர் தமிழ்ப் புத்தாண்டு தினமான 13.04.1953 அன்று தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார். பகல் உணவுத் திட்டத்தை முதலில் எட்டயபுரத்தில் தொடங்குவது என முடிவெடுத்தார்.

    ‘வயிற்றுச் சோறிட வேண்டும்-இங்கு

    வாழும் மனிதருக் கெல்லாம்

    பயிற்றிப் பலகல்வி தந்து-இந்தப்

    பாரை உயர்த்திட வேண்டும்’

    என்றும்,

     ‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்;

          ஆல யம்பதி னாயிரம் நாட்டல்;

    அன்ன யாவினும் புண்ணியம் கோடி

          ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்’

    என்று பாடிய மகாகவி பாரதி  பிறந்த மண்ணில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து  தமிழ்க் கவிதைகளால் விடுதலைக்கு வேகமூட்டிய மகாகவிக்கு மரியாதை செய்தார்.

    மூதறிஞர் ராஜாஜியின் பல்வேறு செயல்பாடுகளில் காமராசர் முரண்பட்டிருந்தாலும்,  தான் அமைத்த மந்திரிசபையில் சி.சுப்பிரமணியம் உட்பட ராஜாஜியின் அமைச்சரவையில் இருந்தவர்களையும் சேர்த்துக் கொண்டார். இவ்வாறு தமிழுக்கும், தமிழுக்காக உழைத்தவர்களும் பெருமை சேர்த்ததோடு,

    கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

    ஒன்றுநன்று உள்ளக் கெடும்

    என்ற வகையில் ஒருவரிடம் உள்ள நல்ல செயலை எடுத்துக் கொண்டு அவரைப் பாராட்டவும் அவர்களிடம் ஆலோசனை பெறவும் முனைந்தவர் காமராசர்.

    ஆனால், ஈழப் பிரச்சனையில்  முதலமைச்சர் எடுத்த முடிவு சரியில்லை என  முரண்பட்டார் என்பதற்காக, “வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகக் கட்டடத்தின் மேல், பெரிய அளவில் நியான் விளக்கு போர்டு உள்ளது. அதில், “தமிழ் வாழ்க’ என்கிற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது. இதை உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால், கொள்கை ரீதியான மாறுபாடுகள் இருந்தாலும் மனுதாரரைப் போன்ற தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் சிந்தனையாளர்களை கவுரவப்படுத்த வேண்டும். தமிழ் சிந்தனையாளர்களை பாதுகாப்பதன் மூலமே தமிழ் வாழும். அப்போது தான், நியான் விளக்கு பொருத்தப்பட்ட போர்டில் உள்ள, “தமிழ் வாழ்க’ என்கிற வாசகம் மேலும் மிளிரும்” என  நீதிபதி சந்துரு ஆணையிடும் அளவுக்கு கீழ்த்தரமான அரசியல் நடத்துவோரே இன்றுள்ள அரசியல்வாதிகளாய் நாட்டை வலம் வந்து கொண்டுள்ளனர்.

    விளம்பரம் விரும்பா கர்மவீரர்:

                “விளம்பரத்தைத் துரத்திக்கொண்டு ஓடும் அரசியல் வாதிகளிடையே, விளம்பரம் தன்னைத் தேடி வந்தபோதும், அதைத் துரத்தி அடிக்கும் அரசியல்வாதியாகக் காமராசர் வாழ்ந்தார்” எனப் பத்திரிகையாளர்சோ  குறிப்பிட்டதற்கு சான்றாக ஒன்றைக் குறிக்கலாம்.

    காமராசர் இலங்கை, மலேயா, ரஷ்யா, கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, பல்கேரியா, செக்கோஸ்லேவாகியா, யூகோஸ்லோவாகியா போன்ற வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இரஷ்யாவின் அழைப்பை ஏற்று 22.06.1966-ம் ஆண்டு மாஸ்கோ சென்றார்.  குளிரைச் சிறிதும் பொருட்படுத்தாமல் எளிய உடையில் சென்ற காமராசரை அங்குள்ள மக்கள் வியப்புடன் பார்த்தனர்.   நமது நாட்டு வேட்டியும் சட்டையுமே அணிந்து சென்றதால் இந்த எளிய உடை பற்றியும் அவருடைய எளிமை குறித்தும் அந்தந்த நாட்டு பத்திரிகைகளும் வெகு சிறப்பாக பாராட்டின.  மக்களும் வியந்து போற்றினர்.  வைரமுத்து இதனை,

    சோவியத்தின் உறைபனிக்

    காற்றிலும்

    கதராடை பூண்டே

    கைவீசி நடந்தாய்

    அது உன் எளிமை.

    என வார்த்தெடுக்கிறார்.

    பள்ளியில் தொடர்ந்து கல்விகற்க இயலாத நிலையில், காமராசருக்கு ஆங்கில அறிவு குறைவு என்று கூறுவாருண்டு. ஆனால் அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு சம்பவத்தைச் சுட்டுகின்றனர் காமராசரைக் குறித்து அறிந்தோர்.  லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது இலங்கைக்குச் சென்று  ஒப்பந்தம் ஒன்று செய்துகொண்டு திரும்பினார். சென்னையில் ராஜ்பவனில் நிருபர்கள் அவரைச் சந்தித்துக் கேள்விகள் கேட்டனர். ஒருவர் கேட்டார், “இப்போது நீங்கள் செய்துகொண்டிருக்கிற ஒப்பந்தத்தை தொடர்ந்து பதவிக்கு வரும் ஆட்சியாளர்கள் மதித்து நடப்பார்களா?”” என்றார். அப்போது அங்கிருந்த பெருந்தலைவர்,

     “Don’t go and print any such suggestions in the paper. This is an agreement signed by two Democratic Governments. Just as any Democratic Government in India would honour this agreement, the successive Governments in Ceylon will also honour this agreement. That is the principle involved in it.”  என ஆங்கிலத்தில் பதிலிறுத்தாராம். இந்த பதிலினை சாஸ்திரியும் ஒப்புக் கொண்டாராம்.  மேலும், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளும் காமராசருக்குத் தெரியும் என்கின்றனர்.

                ஆனால் இன்றுள்ள அரசியல்வாதிகள் எனக்கு பல மொழிகள் தெரியும் என்று கூறிக் கொண்டாலும், வழக்கு சார்ந்த தாள்களைப் பார்க்க, தமிழில் மொழிபெயர்க்கக் கூறி தங்களின் மொழியறிவை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் அவலநிலையும் உள்ளது.

                கல்விச் சாலைகள், தொழிற்கூடங்கள், அணைக்கட்டுகள், போக்குவரத்து சாலைகள், மக்கள் மேம்பாடு,  என காமராசரின் ஆட்சி சிறப்பாக நடந்து வந்த நிலையில், ‘மலையக் கொடஞ்சு அணைகள் கட்டியிருக்கிற குந்தா அணை போன்றவற்றையும், நாம் செய்த சாதனைகளையும் ஒரு ‘நியூஸ் ரீலா’ எடுத்தா வர்ற தேர்தலுக்கு உதவியாக இருக்கும்’ என்று  நெல்லை ஜெபமணி கூற, சற்றே யோசித்த காமராசர், ‘எவ்வளவு செலவாகும்’ என்று வினவ, ‘ஒரு மூணு இலட்சம் வரை ஆகும்’ என்று பதிலளிக்கப்பட்டது.

                ‘ அடப்பாவிகளா? . .  மூணு இலட்சமா? இந்த மூணு இலட்சம் இருந்தா நான் இன்னும் பத்து ஊர்ல பள்ளிக்கூடம் கட்டிப்பிடுவேன். . . புள்ளைங்க படிக்க வழியக் காணோம், நீ நியூஸ் ரீல் காட்டி வெளிச்சம் போடப் பாக்குறியா. .  போ. . போ . .’  என காமராசர் விரட்டினார்.

                ஆனால் இன்றுள்ள அரசியல்வாதிகள், சட்டப்பேரவை வைரவிழா நினைவுத் தூண் கட்டுவதற்கு ரூ.1.32 கோடி செலவும், அதனை திறப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்க ரூ.1.43 கோடியும் செலவு செய்வதைப் பார்க்கிறபோது, காமராசரின் பெயரை ஓட்டுக்காக உச்சரிக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகிறது.

    பொதுவாழ்வில் கர்மவீரர்:

    உலகில் முதன்மையானது எது என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது, ‘தாய்’ என்றாராம். இரண்டாவதாக எது முதன்மையானது எனக் கேட்டபோது, ‘தாய்’ என்றாராம். மூன்றாவதாக முதன்மையானது எது என்று கேட்டபோதும், ‘தாய்’ என்றாராம்.

    காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே என்று வாழ்ந்து, எல்லாவற்றையும் துறந்த பட்டினத்தடிகள் கூட, தாயின் மரணத்தில் கண்ணீர் விட்டு ‘ஐயிரண்டு திங்களாய் அங்கம் எலாம் நொந்து பெற்று’ எனப் பாடித் தீமூட்டினாராம்.  ஆனால்  காமராசர் தனது தாயிடம் நடந்து கொண்ட விதம் நம்மை எல்லாம் மெய் சிலிர்க்கச் செய்கிறது. இதனை உள்வாங்கிக் கொண்ட தமிழருவி மணியன்

    நீ. .  ஏழ்மையில் பிறந்து ஏழ்மையை உணர்ந்து

    ஏழைகள் வாழ ஆட்சியில் அமர்ந்தவன்!

    உன் பொது வாழ்க்கை. . .

    வேள்வி வளர்க்கும் தபோவனத்தைப் போல்

    தூய்மையானது.

    வாய்மையும் நேர்மையும்

    உன் வாழ்க்கை நதியின்

    இரண்டு கரைகள்.

    எனப் புகழ்ந்துரைக்கிறார்.

    காமராசர்  அமைச்சரவையிலிருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், விருதுநகரிலுள்ள காமராசரின் வீட்டிற்கு கோடை காலத்தின் பொழுது சென்றிருந்தார். அப்பொழுது  காமராசரின் தாயார் சிவகாமி அம்மாள் பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தார். உடனே தன்னுடைய சொந்த செலவில் ஒரு மின் விசிறியை வாங்கி வந்து, அதை இயக்குவதைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் போனார். பிறகொரு சமயம் வீட்டிற்குப் போனபோது மின் விசிறியைப் பார்த்துவிட்டு விசாரித்த காமராசர், எத்தனையோ தாய்மார்கள் பனை ஓலை விசிறியால் தான் விசிறிக் கொள்ளும் பொழுது, உனக்கு மட்டும் வெங்கட்ராமன் மின் விசிறி ஏன் வாங்கித் தந்தார்? முதலமைச்சரின் அம்மா என்பதால் தானே. இது கூட சலுகை லஞ்சம் மாதிரி தான் என்று சொல்லி விட்டு அந்த மின்விசிறியை விருதுநகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துக் கொண்டு போகச் சொல்லிவிட்டார் .

    தன்னுடைய பெயரை பயன்படுத்தி தனது குடும்பத்தினர் எந்த தவறான காரியத்திலும் ஈடுபடக் கூடாது என காமரசர் மிகவும் கண்டிப்பாக இருப்பார். இதனாலேயே தனது தாயாரை தான் முதல்வரான பிறகும் விருது நகரிலேயே தங்க வைத்தார்.  அம்மாவை சென்னைக்கு அழைத்து வந்தால், “அவர்களோடு கூட நாலு பேரு வருவான்,  அப்புறமா அம்மாவை பாக்க , ஆத்தாவை பார்க்கன்னு பத்து பேரு வருவான் . இங்கேயே டேரா போடுவான். இங்க இருக்குற டெலிபோனை யூஸ் பண்ணுவான், முதலமைச்சர் வீட்டிலிருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரிகளை மிரட்டுவான் எதுக்கு வம்புன்னு தான் அவங்களை விருதுநகர்லயே விட்டு வச்சிருக்கேன்” என தனது நண்பரிடம் கூறினாராம்.

    டெல்லியில் நடந்த உலகக் கண்காட்சி  துவக்க விழாவுக்கு அன்றைய பிரதமர் நேருவுடன் காமராசரும் சென்றிருந்தார். தற்பொழுது பேரூந்து நிலையங்களிலும் இரயில் நிலையங்களிலும் வெகு சாதாரணமாகக் காணப்படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியிருந்தது . நேரு எந்திரத்தில் ஏறி நின்று, காசு போட்டு எடை பார்த்தார். மத்திய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே செய்தனர். காமராசர் மட்டும் சற்றே ஒதுங்கி நின்றிருக்க, நேரு அவரையும் எடை பார்க்கும்படி கட்டாயப் படுத்தினார். அவரோ மறுத்துவிட்டார். சுற்றியிருந்தோர் பிரதமர் சொல்லியும் காமராசர் மறுக்கிறாரே என்று திகைத்து நின்றனர்.

    அப்பொழுது நேரு சொன்னார்; ” காமராசர் எதற்கு மறுக்கின்றார் என்று எனக்குத் தெரியும் , இந்த எந்திரத்தில் ஏறி நின்று போடும் காசு கூட இப்பொழுது இவரிடம் இருக்காது” என்றார். பிறகு, காமராசருக்கு தானே காசு போட்டு எடை பார்த்தார் நேரு .

    முழந்துண்டு சட்டைக்கும் முதலில்லாத் தொழிலாளி

    பழனிமலை ஆண்டிக்குப் பக்கத்தில் குடியிருப்போன்

    பொன்னில்லான், பொருளில்லான், புகழன்றி வேறில்லான்

    என்ற கவிதைவரிகள் காமராசரின் நிதர்சன வாழ்வை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

    தேர்தல் சமயத்தில் எல்லா அரசியல்வாதிகளும் தங்களின் சொத்து விபர கணக்குகளை வெளியிட்டு இருக்கின்றனர். நம் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் சொத்து விபரக் கணக்குகளை ஒப்பிட்டு பார்த்தால் அவரின் எளிய வாழ்க்கை நமக்குப் பாடமாக அமையும்.

    1. சட்டை பையில் .. ரூபாய் 100
    2. வங்கிகணக்கில் .. ரூபாய் 125
    3. கதர் வேட்டி .. 4
    4. கதர் துண்டு .. 4
    5. கதர் சட்டை .. 4
    6. காலணி .. ஜோடி 2
    7. கண் கண்ணாடி .. 1
    8. பேனா .. 1
    9. சமையலுக்கு தேவையான பத்திரங்கள் -6

                இவற்றையெல்லாம் கண்ணுறும்போது கர்மவீரரின் பொதுவாழ்வில் தூய்மை என்னும் உயர்பண்பு உள்ளபடியே எண்ணி வியக்கத்தக்கது.

    ‘ஈன்றாள் பசிகாண் பானாயினும் செய்யற்க

    சான்றோர் பழிக்கும் வினை’

    என்ற குறள்வழி வாழ்ந்த காமராசரின் செயல்களைப் பார்த்தே மறைந்த அப்துல்கலாம் அவர்களும்,  குடியரசு மாளிகையில் வந்து தங்கிய தனது குடும்பத்தினருக்கான செலவை தனது வருமானத்திலிருந்து எடுத்து செலவு செய்தாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    கர்மவீரர் குறித்து சான்றோர்:

                “காமராசர் பதவியையே நம்பி வாழ்பவரல்லர்.  தம்மாலானதை மக்களுக்குச் செய்யவோமென்று நினைத்துக் கொண்டு செய்பவர். காலுக்கு ஆகாத செருப்பைக் கழற்றியெறிவது போல தம் மக்களுக்குத் தொண்டு செய்ய இடந் தராத பதவியை அவர் விரும்பவில்லை. காரணம் அவர் பெண்டு, பிள்ளை குட்டி அற்றவர்.  யாருக்கும் சொத்து சேர்க்க வேண்டும் என்ற அவசியமும் இல்லாதவர்.  எனவேதான் அவரால் மக்களுக்கு நன்மை செய்ய முடிகிறது.  மற்ற எந்த அரசியல்கட்சியை எடுத்துக் கொண்டாலும் அவரைப் போன்ற ஆளைக் காட்ட முடியாது.

                “கல்வி சம்பந்தப்பட்ட வரையில் எந்த நிகழ்ச்சி ஆரம்பித்தாலும் கடவுள் வாழ்த்துச் சொல்வரை நிறுத்திவிட்டுக் காமராஜருக்கு வாழ்த்துக் கூற வேண்டும்””

    நமது நாட்டைப் பொறுத்தவரையில் காமராசர் ஒரு பெரிய தியாகி ஆவார்.   காமராசர் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இந்தியாவில் தோன்றியிராத ஓர் அதிசய மனிதராகி, மக்களின் பாராட்டுதலையும் போற்றுதலையும் பெற்றவராக விளங்கினார்.  கடந்த 2000 ஆண்டுகளில் தமிழகம் கண்டிராத வளர்ச்சியை காமராசர் ஆட்சியில் காண்கிறோம் என தந்தை பெரியார் பாராட்டினார். மேலும் “பச்சைத் தமிழர்” என்றும் பெரியார் காமராசரைப் புகழ்ந்துரைத்தார். பொதுக்கூட்டங்களில் குழந்தைகளுக்குப் பெயர் வைக்க வலியுறுத்தும் போது பெரியார் அந்தக் குழந்தைகளுக்கு காமராசர் என்றே பெயர் வைப்பாராம்.

    23.04.1967 அன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளி ஆண்டுவிழாவில் காமராசர் திருவுருவப் படத்தை திறந்து வைத்து அண்ணா ஆற்றிய உரையில், ” நான் அவரது படத்தை நான் திறக்கிறேன் என்றால் அவர் தமிழகத்துக்கு நன்மை என்பதற்காக.  அடக்கி ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்துதான் உன்னதானமான மனிதர்கள் தோன்றுவார்கள் என்று மூதறிஞர்கள் கூறியிருக்கிறார்கள்.

    வைரம் என்பது நீண்ட நெடுங்காலத்துக்குப் பூமியின் அழுத்தத்தால், கீழே அடங்கி ஒடுங்கிக் கிடந்த கரித்துண்டுதான்.  அதுபோல் நெடுங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து தோன்றி வைர மணிகளில் ஒருவரே காமராசர்” எனப் போற்றிப் புகழ்ந்தார்.

    தமிழ்நாடு காங்கிரசின் அப்போதைய நான்கு தூண்களாக இருந்த பெரியார், திரு.வி.க. சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு, சர்க்கரைச் செட்டியார் ஆகியோர் ராஜாஜியின் மேட்டுக்குடி அரசியல் பிடிக்காமல் காங்கிரசிலிருந்து விலகிய நிலையில், ராஜாஜியை எதிர்த்து கடைசி வரை காங்கிரசில் இருந்தவர் காமராசர்.  இதைக் கருத்தில் கொண்டே  தமிழ்த்தென்றல் திரு.வி.“எங்கள் நான்கு பேரின் ஒரே உருவமாக நீங்கள் இருக்கிறீர்கள்.  ரொம்ப மகிழ்ச்சி” எனக் காமராசரைப் புகழ்ந்துரைத்தார்.

    சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றிய தி.மு.க. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காமராசருக்கு ஆளுயர வெண்கலச் சிலையை நிறுவியது.  இந்தச் சிலையை 09.10.1961-ல் அன்றைய பிரதமர் நேரு திறந்து வைத்தார்.  அவ்விழாவில், “உண்மையான தலைவன் என்பதற்கு எடுத்துக் காட்டத் தக்கதோர் உதாரணம்; மக்கள் மத்தியில் உருவானதோர் தலைவன்; தான் ஏற்றுக் கொண்டுள்ள பொறுப்பை நிறைவேற்றத்தக்க ஆற்றல் கொண்ட தலைவன்; செயலில் தன்னை மறந்து ஈடுபடும் தலைவன் சிலையைத் திறக்கிறேன்.

    உயிரோடு இருப்பவர்களுக்குச் சிலை அமைப்பதை நான் விரும்புவதில்லை.  முறைந்த பின் மரியாதை செலுத்துவதே ஏற்றது என எண்ணுபவன் நான்.  ஆனால் காமராஜ் என் நண்பர் என்ற முறையிலும், அவர் மக்களிலிருந்து தோன்றிய மக்கள் தலைவர் என்ற முறையிலும் அவருக்கு விதிவிலக்கு  அளிப்பதே மாண்பு.

    நாட்டில் குறைந்த (ஏழுபேர்) மந்திரிகளைக் கொண்டு இந்தியாவில் முன் உதாரணமான மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்கி, ஊழலற்ற ஆட்சி நடத்தினார்.  அதை கவுரவிக்கும் வகையில் அவரது சிலையைத் திறக்கிறேன்” என்றார்.

    எம்.ஜி.ஆர். அவர்கள், “காமராசர் என் தலைவர்; அண்ணா என் வழிகாட்டி” என மொழிந்தார். கலைஞர் கருணாநிதி தன் எழுத்திலும் பேச்சிலும் காமராசரைப் பல வகைகளில் புகழ்ந்துரைத்துள்ளார்.  மேலும் காமராசர் பிறந்த நாளான ஜுலை 15-ஐ ‘கல்வி வளர்ச்சி நாள்’  என அறிவித்தார்.

    காமராசர் தன்னுடைய தனிப் பெரும் செயல்களால்  மாற்று அரசியல் களத்தில் இருந்தவர்களும் மதிக்கத்தக்க வகையில் நடந்து கொண்டார்.  ‘குற்றம் இலனாய் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாய்ச் சுற்றும் உலகு” என வள்ளுவப் பெருந்தகை கூறியது  கர்மவீரர் காமராசரையே குறிக்கும்.

    கர்மவீரருக்கு நாம் செய்தன; செய்யத்தக்கன:

    02.10.1977அன்று இம்மண்ணுலகை நீங்கிய கர்மவீரரரின்  நாட்டுத் தொண்டுக்கு மதிப்பளித்து இந்திய அரசு “பாரத ரத்னா” பட்டம் வழங்கியது. தமிழக அரசு விருதுநகர் இல்லத்தையும் சென்னை திருமலைப் பிள்ளை சாலையில் அவர் வாழ்ந்து வந்த இல்லத்தையும் அன்னாரின் நினைவு இல்லங்களாக ஆக்கியுள்ளது.  ஓவ்வொரு நாளும் பலரும் அங்கே சென்று அவர் வாழ்ந்த இடத்தையும் அவர் உபயோகப்படுத்திய பொருட்களையும் கண்டு வணங்கிச் செல்கின்றனர்.

    மதுரைப் பல்கலைக் கழகம் இன்று “மதுரை காமராசர் பல்கலைக் கழகம்” என்று பெயர் மாற்றப் பெற்றுள்ளது.  கல்வித்  தொண்டாற்றிய காமராசருக்குத் தக்க நினைவுச் சின்னமாகும். சென்னை கிண்டியில் காமராசர் அடக்கம் செய்யப்பட்ட இடம் காமராசர் நினைவு ஆலயமாக அமைக்கப்பட்டுள்ளது.

    ஊருக்கு உழைத்தவனே உறங்குகிறாயோ

    உழைத்தது போதுமென்று உறங்குகிறாயோ

    ஊராருக்கு அழுதவனே உறங்குகிறாயோ

    ஊராரை அழ வைத்து உறங்குகிறாயோ

    நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

    நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

    தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்

    நாடு முன்னேற நாளும் உழைத்தவனை  (நாடு பார்த்ததுண்டா. . )

    பள்ளி அறியாத பிள்ளை பல பேரின் முகத்தை பார்த்தானடா

    அது ஊரு சுற்றாமல் சோறு தான் போட்டு படிக்க வைத்தானடா

    மாடு பிடித்த கையில் ஏடு கொடுத்த மகராஜன் இவன்தானடா

    ஊரு உலகெங்கும் தேடி பார்த்தாலும் ஈடு எவந்தானட

    இத்தனை தவம் தான் என்று வருந்த வைக்கிறானே

    திரும்ப வர வேண்டுமே எங்கள் கருப்பு காந்தி இவனே (நாடு பார்த்ததுண்டா. . )

    பதவி இருந்தாலும் பதவி போனாலும் உதவி புரிவானடா

    தனை பெற்ற தாயை விட பிறந்த நாடு தான் பெரிது என்பானடா

    ஆற்று நீரையே அணைகள் கட்டியே தேக்க வைத்தானடா

    கண்கள் ஊற்றும் நீரை தடுக்க இயலாமல் ஏங்க வைத்தானடா

    வலிமை இருந்த போதும் மிக எளிமையோடு இருந்தான்

    வெள்ளை உள்ளம் கொண்ட எங்கள் கருப்பு காந்தி இவனே(நாடு பார்த்ததுண்டா. . )

    காமராஜருக்காக வாலி எழுதி இளையராஜா பாடிய பாடல் காமராசரின் இறுதி ஊர்வலத்தை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் காவியம்.

    உன் பிரிவுக்குப் பின்

    நாங்கள் வரங்கள் வாங்கிய தேவர்கள் அல்லர்.

    சாபங்கள் சுமக்கும் சாதாரண மனிதர்கள்.

    உன் பார்வை வெளிச்சம் படமுடியாததால்

    எங்கள் வாழ்க்கை

    பாழும் இருட்டில் படுத்திருக்கிறது.

    என்னும் தமிழருவி மணியனின் இரங்கலும் எண்ணத்தக்கது.

    சோலை  என்றால் பூத்து மணம் பரப்ப வேண்டும். தோட்டம் என்றால், காய்த்துக் கனி குலுங்க வேண்டும்.   தலைவனென்றால்.. மக்கள் பணி ஆற்ற வேண்டும் அந்த வகையில்,  எளிமை, அடக்கம், ஒழுக்கம், மனத்திட்பம், சிக்கனம், முயற்சி, ஊக்கம்,  வாய்மை,  நேர்மை,  நடுநிலைமை, துப்புரவு, உள அமைதி,  நிறையுடைமை, பணிவுடைமை என்பன போன்ற சான்றோர் போற்றும் பண்புகளை தன்னகத்தே கொண்டு குழந்தைகள் படிப்பதற்காகவும், மதிய உணவுக்காகவும் உலக நாடுகளிடம் கையேந்தி உதவிய கொடை வள்ளல் கர்மவீரர் காமராசர்.

    பதினெண்கீழ்க்கணக்கு  நூல்களுள் ஒன்றான நாலடியார் அறிவிக்கிற,

    இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்

    இல்லான் கொடையே கொடைப்பயன் – எல்லாம்

    ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்

    பொறுக்கும் பொறையே பொறை. (நாலடியார் 65)

    என்ற பாடல்  ஒருவர்,  இளமைக் காலத்தில் தங்களின் ஐந்து புலன்களுக்கும்  மிக எளிதாக அடிமைப்பட்டு விடுவர். அவரே முதியவராகும் பொழுது புலனடக்கம் என்பது எளிதாகின்றது. ஆனால், உண்மையான புலனடக்கம் என்பது ஒருவர் இளையவராக இருக்கும் பொழுது அடக்குவதே என்றும்,  கொடை என்பது  ஒருவரிடம் பொருள் குறைந்து இருக்கும் நிலையில், அவர் மற்றவருக்கு உதவி செய்வாரானால், அதுவே கொடை எனவும் விளக்குகின்றது இந்தப் பாடல்.

    நிதியில்லை, அதனால் மதுக்கடைகளைத் திறந்து நிதி திரட்டுகிறோம் என அரசாட்சி நடத்தும் இன்றைய அவல நிலையை எண்ணி தலைகுனிய வேண்டியுள்ளது.

    கர்மவீரர் காமராசர் என்ற தலைப்பில்  பேராசிரியர் சி.இலக்குவனார் நூலொன்றை எழுதியுள்ள நிலையில்,  ‘வல்லமை இணையதளம் நடத்தும் இக்கட்டுரையை, அவரைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிற அரசியல் தலைவர்கள் காமராசர் வாழ்ந்த நெறிகளிலிருந்து எங்ஙனம் பிறழ்ந்து தங்களின் செயல்பாடுகளை வகுத்துக் கொண்டுள்ளார்கள் என்ற கோணத்தில் அணுகுவோம்.

    ‘இந்தியாவே உன்னிடம் இருந்தது! ஆனால் உன் சட்டைப்பை காலியாகவே இருந்தது’ என்ற தலைப்பிலான கவிஞர் மேத்தாவின் கீழ்க்கண்ட வரிகளிலும் இந்த நெருப்புமழை பொழிவதைக் காணலாம்.

    ஒரு தீர்க்கதரிசியை நேசிப்பதைப் போல் உன்னை நேசிக்கிறேன். உன்னால்தான் முடிந்தது தாயையும் பார்க்காமல் நாட்டைப் பார்ப்பதற்கு! உன் கையில் தராசு! இவர்கள் கையிலோ சூட்கேஸ்! நீ நினைத்திருந்தால் கரன்ஸி நோட்டுகளால் விருதுநகரில் இன்னொரு இமயமே எழுந்திருக்கும்!  (இந்தியாவே உன்னிடம் . . )

    ஆலைகளை  நேசித்தவரிடையே நீ அபூர்வமானவன்! ஏழைகளை நேசித்தாய்! நீ லட்சுமியை அனுப்பி சரஸ்வதியை வரவழைத்தாய்.  இவர்களோ சரஸ்வதியையே லட்சுமியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆமாம். . நீ கல்விக்கண் திறந்தாய்! இவர்களோகல்விக் கடை திறந்தார்கள்! என்னால் கள்ளுக்கடை வைத்திருப்பவர்களை மன்னிக்க முடிகிறது. கல்விக்கடை வைத்திருப்பவர்களை மன்னிக்க முடியவில்லை

    நிஜத்தைச் சொல்கிறேன் நேரு குடும்பத்தின் மீது நீ  பாசம் வைக்காதிருந்தால் இந்தியாவின் பரிமாணமே வேறு காந்திதான் நீயும். .  கருப்புக் காந்தி மகாத்மா காந்தியோ சிரிக்கும் நெருப்பு நீ சிரிக்கத் தெரியாத  நெருப்பு! அந்த நெருப்பு திரு நீறாகி விட்டது. உன் சாம்பலுக்கும் தணல் தகிக்கிறது.

    பெரியாரின்  பல்கலைக்  கழகத்தில் பச்சைத் தமிழன் எனும் பட்டம் பெற்றவனே இன்று நீ இங்கிருந்தால் இங்கிருக்கும் காய்ந்த தமிழர்களைக் கண்டித்திருப்பாய்! இன உணர்வு தமிழனுக்கு இருந்திருந்தால் இந்தியாவின் ஸ்டாலினாய் இருந்திருக்க வேண்டியவன் நீ! நீ நாடியிருந்தால் ஒரு தமிழன் பிரதமராயிருக்க முடியும். நீதான். .  நாடா ராயிற்றே!

    மணிமுடி உன்முன் வைக்கப்பட்டது. ஆனால் நீ காளிக்குத் தலையை வெட்டித் தந்த கபாலிகனாகவே காலத்தை முடித்தாய்! மறக்க முடியவில்லை மனது வலிக்கிறது! உன்னை  நினைக்கவும் முடியவில்லை நிஜம் நெஞ்சைக் கிழிக்கிறது!

    பொதுவாழ்வில் நேர்மை, தனிவாழ்வில் தூய்மை, வார்த்தைகளில் வாய்மை இம்மூன்று பண்புகளையும் உள்ளடக்கிய இரசாயனக் கலவையில் உதித்தவன்தான் கர்மவீரர் காமராசர்  என்பார் தமிழருவி மணியன்.

    மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

    எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் – செவ்வி

    அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார்

    கருமமே கண்ணா யினார் (நீதிநெறி விளக்கம்.53)

    என்பதற்கொப்ப, தாம் எடுத்த பணியை, காரியத்தை எத்தனை தடைகள் வந்தாலும்  செவ்வனே செய்து முடிக்கிற தீரமிக்க ஆற்றலாளராய் விளங்கியதால்தான் காமராசர் கர்மவீரர் என்ற புகழுக்குரியவரானார்.

    அத்தகு புகழுக்கும் சிறப்புக்கும் உரிய காமராசரின் வாழ்வியல் நெறிகள், தலைமைப் பண்புகள், தனி மனித மாண்புகள் என ஏராளமாய் உள்ளவற்றில்  சிலவற்றைச் சுட்டிக் காட்டுவது  வாழும் மக்களுக்கும், வருங்காலத் தலைமுறைக்கும் அறிமுகப்படுத்தியதாக அமையும் என்ற நோக்கில் காலம் உள்ள வரையும் நிலைத்து நிற்கும் மாமனிதரின் வாழ்வியலில் நுழைவோம்; அவர் வழி நடப்போம்இந்தியாவின் பெருமையை உலகில் நிலை நிறுத்துவோம்.

    —————–

    கட்டுரைக்கு உதவிய நூல்கள்:

    1. காமராஜ் ஒரு சகாப்தம்

    .கோபண்ணா,  சூர்யா பப்ளிகேஷன்ஸ்,  ‘காமராஜ் பவன்’,  573, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-6  முதற்பதிப்பு ஜூலை 2003

    1. காமராஜ் ஒரு சரித்திரம்

    முருக தனுஷ்கோடி,  பூம்புகார் பதிப்பகம்,  சென்னை-108  பதிப்பு 1975

    1. காமராஜரும் கண்ணதாசனும்

    தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம், 50/18, ராஜாபாதர் தெரு, தியாகராய நகர், சென்னை-17  பதிப்பு 2006.

    1. காமராஜருடன் கால்நூற்றாண்டு

    உதவியாளர் வைரவன், ரமணா கம்யூனிகேஷன்ஸ், புதிய எண் 25/2, லட்சுமி காலனி, தியாகராய நகர், சென்னை-17  மூன்றாம் பதிப்பு 2013.

    1. திருக்குறள்
    2. நாட்டுக்கு உழைத்த நல்லவர் காமராஜ்

    சந்தான லக்ஷ்மி,  பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14, முதற் பதிப்பு 14.11.1975.

    1. நாலடியார்
    2. நீதிநெறி விளக்கம்
    3. பாரதிதாசன் கவிதைகள்
    4. பாரதியார் கவிதைகள்
    5. பெருந்தலைவர் காமராசர்

    பட்டத்தி மைந்தன், சீதை பதிப்பகம், 6/16, தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5,  முதற்பதிப்பு  திசம்பர் 2006.

    1. பெருந்தலைவர் காமராஜ் நற்பணி டிரஸ்ட்டின் நான்காம் ஆண்டு மலர்.

    –           62/2 பேரம்பாலு தெரு, பழைய வண்ணை, சென்னை-21.

    1. காமராசர் குறித்த தமிழருவி மணியன்  அவர்களின் பேச்சு

                  (https://www.youtube.com/watch?v=jloAIJBhvxE)

    Share
  • “பார்க்கட்டும் … ஆகலாம் …” – கர்மவீரர் காமராசர்!

    ச.சசிகுமார்.

    “ஏதாவது செய்யதான் நாமெல்லாம் இங்க இருக்கோம். இந்த கோட்டையில வந்து உக்காந்திருக்கோம்னேன்… முடியாதுன்னு சொல்ல ஆயிரம் காரணம் கண்டுபிடிக்கவா படிச்சிருக்கோம்? முடியும்னு சொல்ல ஒரு காரணம் கண்டுபிடிங்கன்னேன்…”

    —முதலமைச்சரின் அறை அதிர்ந்தது. சில அதிகாரிகளும், அமைச்சர்களும் இருக்கைகளில் அமர்ந்திருக்க, சில நொடிகள் அசாத்திய அமைதி… மின்விசிறியின் சப்தம் மட்டும் சன்னமான இரைச்சலில் …

    “Dead investment… பிரயோஜனம் இல்லாத திட்டம்னு எல்லாம் சொல்ல நம்மை மக்கள் தேர்ந்து எடுக்கலை… ஏதாவது செய்வோம்னு தான் மக்கள் காத்திருக்காங்க… உங்க பட்ஜெட்ல இதுக்கெல்லாம் பணமில்லேன்னாக்கூட இது நடக்கணும்… அதுக்குள்ள வழியைப் பாருங்க..”

    —தண்ணீர் குடித்து விட்டு, கல்வி ஆலோசகர் நெ. து . சுந்தரவடிவேலு-வை அழைத்துக்கொண்டு, அறையிலிருந்து வெளியேறினார் முதல்வர். அதிகாரிகள் செய்வதறியாமல் எழுந்தனர். தத்தமக்குள் பேசிக்கொண்டு கலைந்தனர்.

    சில வாரங்களுக்கு முன்…
    1956 – நெல்லை அருகே , சேரன்மாதேவி… முதல்வரின் வாகனம், அதற்கான அடையாளங்கள் இன்றி எளிமையாக விரைந்துகொண்டிருக்கிறது. வெயிலடிக்கும் வறண்ட வெளியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேய்ந்துகொண்டிருக்கும் கால்நடைகள். தொலைவில் கையில் குச்சியுடன் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் சிறுவன். கல்வி வள்ளல், முதல்வர் காமராசர் வண்டியை ஓரமாக நிறுத்தச் சொல்கிறார். காரிலிருந்து இறங்கி, மெல்ல அந்த சிறுவனை நோக்கி நடக்கிறார்… வெள்ளை கதராடை அனற்காற்றில் படபடக்கிறது… ஆளற்ற வெளியில் இரண்டு அதிகாரிகள் தொடர, முரட்டு காலணிகளின் கீழ் சருகுகளும், முட்களும் சரசரக்க… தமிழக முதல்வர் சிறுவனை நோக்கி நடக்கிறார். ஏதும் புரியாமல், அதிகாரிகள் ஓட்டமும் நடையுமாக.

    “தம்பி… என்னப்பா பதினோரு மணி ஆகுது… பள்ளிக்கூடம் போகாம இங்க இருக்கே …” முதல்வர் கேட்க சிறுவனிடமிருந்து பதிலில்லை.

    “தம்பி சொல்லுப்பா… பள்ளிக்கூடம் போகலையா?”

    “ம்ம்… நீங்க யாரு…?” சிறுவன் கேட்க, சிரிக்கிற முதல்வர். அதிகாரிகள் அவனிடம் எதோ சொல்ல முயல, அமைதியாக இருக்கச் சொல்லி விட்டு தொடர்கிறார்.”

    உன் கேள்விக்கு பதில் நான் சொல்றேன்… என் கேள்விக்கு பதில் சொல்லு தம்பி…”

    சிறுவன் முதல்வரை மேலும் கீழும் பார்த்தவாறே,” அப்பா, அம்மா ரெண்டுவேரும் கூலி வேலைக்கு போயிருவாங்க… தங்கச்சி தம்பிய பாத்துக்கிடுவா… நான் காலையில மாட்டைப் பத்திக்கிட்டு வந்து, சாயங்காலம் போனாத் தான், நாங்க ரெண்டு வேளை சோறு திங்க முடியும்…”

    “தம்பி… படிச்சா… வளர்ந்து நல்ல வேலைக்கு போயி, நல்லா இருக்கலாம்லா டே…” அவன் மொழியில் கேட்கிறார்.

    “ஐயா, படிச்சா… நாளைக்கு நல்லா இருக்கலாம்… இன்னிக்கு பசிக்குமே…” சிறுவன்

    “சரி தம்பி…பசிக்கு, சோறு போட்டா பள்ளிக்கூடம் போவியா?”

    கண்களில் புரியாத சந்தேகத்துடன் சிறுவன் ,” நீங்க சோறு போடுவீங்களா?”

    அன்று, சென்னை திரும்பும் வரை முதல்வர் மனதிலும், செவியிலும் அந்த சிறுவனின் கேள்வி தொடந்து ஒலித்துக் கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன், பெருந்தல்மண் கல்விமேம்பாடு கூட்டத்திற்கு சென்று வந்த கல்வி ஆலோசகர் நெ.து.சுந்தரவடிவேலு மேலும் கொடுத்த தகவல்கள் முதல்வர் மனதை உலுக்கின. மதியவேளையில் பள்ளிப் பிள்ளைகள் பசிக் கொடுமையால், மயங்கி விழுந்த செய்தி அதிர்ச்சி அடையச் செய்தது. அவசர அவசரமாக அதிகாரிகளைக் கூட்டி, ஆலோசனை செய்து, பள்ளிகளில் மதிய உணவு வழங்குவதற்கான வழிமுறைகள் கேட்டால், “DEAD INVESTMENT” எனவும், நிதி நிலைமை அதற்கு இடம் கொடுக்கவில்லை எனவும் அடுக்கடுக்காக காரணங்கள்.

    அறையில் இருந்து வெளியே வந்து முதல்வர் நெ. து .சு விடம், “இவங்க என்ன சொன்னாலும் நான் இந்த திட்டத்தை கண்டிப்பாக நிறைவேத்தத்தான் போறேன்னேன்… அரசு கஜானால பணம் இல்லைன்னாலும் இது நடக்கும்… வெளைச்சல்ல முதல் படி கடவுளுக்கும், ரெண்டாவது படி வேலைசெஞ்சவனுக்கும் அளந்து கொடுக்கும் வசதி உள்ளவங்க, மூணாவது படி நெல்லை படிக்கிற பிள்ளைகளுக்காக அளந்து கொடுங்கன்னு கேக்கப் போறேன்… நம்ம பிள்ளைங்க படிக்கணும்யா… படிக்கணும்… அவங்களுக்காக நான் ஊர், ஊரா… போயி… பிச்சைப் பாத்திரம் ஏந்தினா என்ன தப்புங்கிறேன்?”

    — பிச்சைப் புகினும் கற்கை நன்றே… ஔவையின் வார்த்தைகளை அந்த தலைவன் படித்ததில்லை. உணர்ந்திருந்தது தான் ஆச்சர்யம். அன்று, அந்த அதிசயத் தலைவனின் வார்த்தைகளுக்கு, தமிழ் மாநிலம் கட்டுப்பட்டது. நாகலாபுரம் விவசாயப் பெருமக்கள் இசைந்து படியளக்க, பல் வேறு இடங்களில் இருந்தும், உதவித் தொகைகளும், உணவு தானியங்களும் வந்து நிறைய, ஒரு மாநில முதல்வரின் முயற்சியால், அரசு நிதியுதவி ஏதுமின்றி 1956 ஜூலை மாதத்தில் தொடங்கியது “மதிய உணவுத் திட்டம்”. ஏறத்தாழ பதின்மூன்று மாதங்கள் அரசு நிதியின்றி, தொடர்ந்த திட்டம். பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல தடையாக இருந்த, பசி, பட்டினி… நீங்கி பள்ளிகளில் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். 1957 அக்டோபர் மாதம் முதல் அரசு நிதியுதவியுடன் மதிய உணவுத் திட்டம் தொடரும் என அறிவிப்பு வந்தது.

    கல்வி வள்ளல் காமராசர்… கர்ம வீரர் காமராசர்… கறுப்பு காந்தி காமராசர்… The King maker காமராசர்… இந்திரா காந்தி அம்மையார் அருகே, கால் மேல் கால் போட்டு கம்பீரமாக மேடையில் அமர்ந்து காட்சி தரும் இந்த மனிதரின் ஆளுமையின் வீச்சு என்ன?

    பள்ளிப்படிப்பை முடிக்காத இந்த எளிய மனிதரிடம், பண்டித நேரு வந்து ஆலோசனை கேட்க அவசியப்படுத்தியது எது?

    கோடு உயர்ந்து, குன்றம் தாழ்ந்து போன போதும், ராஜாஜி போன்ற பெரிய மேதைகளை மதித்தும், அதே சமயம் முரண்பட்டும், அரசியல்செய்யும் இவரின் பலம் என்ன விதமானது?

    இந்திய விடுதலைக்காக, காந்தியடிகளின் உண்மைத்தொண்டனாக வாழ்வில் ஆறாண்டுகளுக்கு மேல் சிறைகளில் வாடி வெளிவந்த இந்த மனிதர் நாட்டிடத்தும், மக்களிடத்தும் கொண்ட பற்று எத்தகையது? “குணாளா… குலக்கொழுந்தே…” என எதிர்க்கட்சி பேரறிஞரையும் உருகி மடல் எழுத வைத்த நேர்மை எவ்வகை சார்ந்தது?

    “காமராசர் ஆட்சி மீண்டும் மலர வாக்களியுங்கள்…” – ஒவ்வொரு ஐந்து வருட இடைவெளியிலும் தமிழ் கூறும் நல்லுலகின் மூலை , முடுக்கெல்லாம், தெருக்களிலெல்லாம்… வெவ்வேறு மேடைகளில், வெவ்வேறு குரல்களில் ஒலிக்கும் ஒரே வாக்கியம். இதற்காக இந்த மனிதர் செய்தது என்ன?

    இவை தலைமுறைகள் தாண்டி தொடரும் கேள்விகள்.

    காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், தமிழக முதல்வர்… இந்திய அரசியல் அரங்கில் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய மத்திய ஆட்சி பீடத்தின் ராஜ குரு… இத்தனையில் இவர் யார்? இத்தனை பதவிகளில், இத்தனை பொறுப்புக்களில், இத்தனை பெருமைகளில்… எது இன்று வரை இந்த மனிதரை எண்ணி எண்ணி வியக்க வைக்கிறது? “இது தான்” என அறுதியிட்டு, உறுதி பட பதில் சொல்லிவிட இயலாத கேள்வி.

    ◆ “வயதான காலம் நான் தனியா இங்கிருந்து என்ன ஐயா செய்ய… அங்க உன்னோட வந்து இருந்து, உனக்கு பொங்கி போட்டு, கொறைய காலத்தை கழிக்கலாம்னு நெனைக்கேன்! நீ சரின்னு சொன்னா, கெளம்பி வந்துருவேன்!” – மணமாகாமல் தனித்து இருக்கும் தன் மகன் மேலுள்ள அக்கறையில் தாய் சிவகாமி அம்மாள் தனது தள்ளாத வயதில் தயங்கித், தயங்கி கேட்க,”வேண்டாம்” -என மறுத்து விட்டார். “அம்மா நீ… அங்க வந்து என்னோட இருக்கது பத்தி பிரச்சனையில்லை… அப்புறம், உன்னைப் பாக்க வந்தேன்னு சொல்லி ஊர்ல இருந்து பத்து பேரு சொந்தக்காரன் வருவான்… தங்குவான்… முதலமைச்சருக்கு சொந்தம்னு ஊரெல்லாம் சொல்லுவான்… அதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னேன்… தவிர, நாம வாங்குற சம்பளத்துக்கும் அதெல்லாம் கட்டுப்படி ஆகாதுன்னேன்…” – சுற்றம் சூழ்ந்து, அதனால் நேர்மை கேள்விக்குள்ளக்கப் படுமோ? என்ற தூய எண்ணம்.

    ◆ தலைமைச் செயலகத்தில் ஒரு உயர் அதிகாரி, தனக்கு கீழ் வேலை செய்யும் ஒரு கடை நிலை ஊழியரை தொடந்து இழிவாக நடத்துவது முதல்வரின் கவனத்துக்கு வருகிறது. தனிப்பட்ட முறையில் உறுதி செய்து கொள்கிறார். ஒரு நாள் தனது அறைக்கு அந்த அதிகாரியை அழைக்கிறார். எதிரே இருக்கும் நாற்காலியில் அமரச் சொல்லுகிறார். முதல்வர் அவரது பணிகளைத் தொடர்கிறார். சற்று நேரத்தில் அந்த கடைநிலை ஊழியரை தனது அறைக்கு அழைத்து, அவரையும் இன்னொரு நாற்காலியில் அமரச் சொல்லி, மேசையில் இருக்கும் கோப்புக்களை பார்க்கத் தொடங்குகிறார். உயர் அதிகாரியும், கடை நிலை ஊழியரும் ஒன்றும் புரியாத குழப்பத்தில் ஒருமணி நேரத்திற்கு மேல் அருகருகே அமர்ந்து இருக்கிறார்கள். சற்று நேரம் கழித்து, “சரி… நீங்க போகலாம்…” என்று கடை நிலை ஊழியரை அனுப்பி விடுகிறார். அவர் போன பின்னர், உயர் அதிகாரியிடம், “என்ன ஆயிருச்சி?? ஒன்றரை மணி நேரம் பக்கத்துல, பக்கத்துல தானே உக்காந்து இருந்தீங்க… என்ன ஆயிருச்சி? போயி உங்க வேலைய நீங்க பாருங்க… அவரு வேலைய அவரு பார்ப்பாரு… புரிஞ்சிதா? நாம எல்லாம் செய்யிற வேலை நாட்டுக்கு தான் வெளங்குச்சா?… இதுல என்ன பெருசு… சிறுசு… மேலு? கீழு? -ன்னேன் ? போங்க!” – முதல்வர் முன்னால் வியர்த்து கொட்டிவாறு நின்றிருந்த உயர் அதிகாரி தன இருக்கைக்கு திரும்பினார். கடுமையற்ற, கண்டிப்பினால் தவறை திருத்துகிற லாவகம்.

    ◆ முதல்வர் மேசையில் குவிந்து கிடக்கும் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள். ஐம்பது மாணவர்களை அவர்களின் தகுதி அடிப்படையில் முதல்வர் தெரிந்தெடுத்து மருத்துவக் கல்விக்கென பரிந்துரைக்கலாம். ஐநூறு விண்ணப்பப் படிவங்கள், ஐம்பதை தேர்வு செய்ய வேண்டும். கல்வி அமைச்சரும், இதர செயலாளர்களும் அந்தப் பணியை செய்து உதவ முதல்வர் அறையில் காத்திருக்கிறார்கள்… முதல்வர் வந்து அமர்கிறார். சொல்கிறார்கள். “இப்ப முடிச்சு கையில கொடுத்துடுறேன்… ஐம்பது விண்ணப்பங்கள் தானே…” என்கிறார் முதல்வர். “ஐயா… மொத்தம் ஐநூறு … அதுல இருந்து ஐம்பது தெரிவு செய்யணும்…. நாங்க அவங்க மதிப்பெண் தகுதி, மற்ற விஷயங்களை எல்லாம் பார் த்து உங்ககிட்ட ஒரு நூறு விண்ணப்பங்கள் நாங்க கொடுக்கிறோம்…”

    “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… ஒரு அரை மணி நேரம் உக்காருங்க…” கல்வி வள்ளல் விண்ணப்ப படிவங்களை சரசரவென புரட்டுகிறார். தெரிவு செய்து கொடுக்கிறார். “எத்தனை ஆயிருக்கு? பாருங்க?” “ஐயா… அறுபத்து ஏழு ஆயிருக்கு … “

    “சரி… அறுபத்து ஏழு பேருக்கும் சீட்டு குடுக்கணும்.. பார்த்து ஏற்பாடு செய்ங்க” – நாற்பத்தைந்தே நிமிடங்களில் வேலை முடிந்து அடுத்த வேலைக்கு போகிறார். கல்வியமைச்சரும், செயலாளர்களும், வியக்கிறார்கள். எந்த அடிப்படையில் தெரிந்தெடுத்தார் என விளங்காமல் குழம்புவதைப் புரிந்து கொண்டு,”
    ஒண்ணுமில்லை… அந்த விண்ணப்பபடிவங்களில் எதுல, பெற்றோர் கையெழுத்து -ங்கிற பகுதியில விரல் ரேகைப் பதிவா கைநாட்டு இருந்ததோ அதை எல்லாம் எடுத்துக் கொடுத்தேன்… பெத்தவங்க எழுதப் படிக்கத் தெரியாம இருக்கும் குடும்பத்துக்கு, மருத்துவக் கல்வி போய்ச் சேரணும்… அது தான் முக்கியம்னேன்…” – முதல்வர் சொல்லச் சொல்ல, அனைவரும் வியந்து நின்றனர். தெளிவு… எது யாருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதில் தெளிவு.

    ◆ மாநிலத்தின் நீர்ப்பாசன நிலை மற்றும் மேம்பாடு குறித்து ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது. மெத்தப் படித்த விற்பன்னர்கள் திட்டங்கள் குறித்து ஆங்கிலத் தமிழில் விளக்குகிறார்கள். ஒரு தகவல் ஆங்கிலத்தில் தவறாக விளக்கப்படுகிறது. முதல்வர் குறுக்கிடுகிறார்.” அந்த அணையின் கொள்ளளவு இன்னும் அதிகம். அதன் மூலம் பாசன வசதி கிடைக்கும் நிலஅளவு நீங்க சொன்னதை விட அதிகம்… சரி பாத்துட்டு சொல்லுங்க… தவறான தகவல் சொள்ளக்கூடாதுன்னேன்…” அந்த நீர் பாசனத்துறை விற்பன்னர் சரி பார்த்து திருத்திக் கொண்டு தவறுக்கு வருந்துகிறார்.

    ” பரவாயில்ல… விடுங்க… இனிமேல் சரியா தயார் பண்ணிட்டு வரணும்… எந்த ஆறு எங்க தோன்றி, எங்க கடலில் கலக்குது? அதுக்கு எத்தனை கிளை நதிகள் இருக்கு, குறுக்கே எத்தனை அணைகள் கட்டி இருக்கு? அதனுடைய கொள்ளளவு எத்தனை? அதன் மூலம் எந்த மாவட்டத்துக்கு, எத்தனை பரப்பளவு நிலத்துக்கு பாசன வசதி செய்யப்பட்டிருக்கு? எத்தனை மின்னுற்பத்தி நிலையங்கள் இருக்கு? எத்தனை வாய்க்கால்கள்? அதன் குறுக்கே எத்தனை பாலங்கள்? – எல்லாம் உங்களுக்கு தெரியணும்னேன்… எனக்கு மட்டும் தெரிஞ்சிருந்து பிரயோஜனம் இல்லை… பூகோளம் தெரியாத எனக்கு அதைப் பற்றி தெரிஞ்சி என்ன பிரயோஜனம்? உங்களுக்கு தெரியணும்… படிச்சவங்களுக்கு விவரம் தெரிஞ்சாத் தான் மக்களுக்கு பிரயோஜனமா இருக்கும்னேன்…” படிக்காத மேதை சொல்லச் சொல்ல, படித்தோர் கூட்டம் தலையசைத்து ஆமோதித்தது. மக்கள் நலன் குறித்தே, மனதாலும், அறிவாலும், உடலாலும், உணர்வாலும், உயிராலும் செயல்பட்ட கர்ம வீரர்.

    தனிமனித வாழ்வின் ஒழுக்கம் மற்றும், விழுமியங்களை மகாத்மா காந்தியிடமிருந்தும், நாட்டு முன்னேற்றம் குறித்த, நவீன சிந்தனை, செயலாக்கங்களை பண்டித நேருவிடமிருந்தும், அரசியல் பயிற்சியினை தீரர் சத்தியமூர்த்தியிடமிருந்தும் கற்று, மூவரின் சரிவிகிதக் கலவையாக வாழ்ந்த காமராசர் எனும் மாபெரும் மனிதர் எண்ண, எண்ண … வியக்க வைக்கும் பேரதிசயம். காமராசர் எனும் அதிசய மனிதரின் வரலாறு, எந்த அரசியல் கட்சியின் வரலாற்றோடும் இணைத்துப் பார்க்க இயலாத தனி வரலாறு. தாமரை இல்லை நீர்த்துளி போல் எவற்றுடனும் ஒட்டாத தனிப்பெரும் வாழ்க்கை. பதவியில் இருந்தாலும், இல்லாவிடினும், மக்களுக்காக, மக்கள் வாழ்வின் மேம்பாட்டுக்காக, மக்களின் கல்விக்காக, கணந்தோறும், உழைத்து, உருகிய உன்னதத் தலைவர். தன்னுடன் பணியாற்றிய அத்துணை அமைச்சர்களையும் தனது நேர்மையாலும், அறத்தாலும், நெறியாலும் ஆழமாக பாதித்த பேராளுமை. கக்கன், வி ராமையா, லூர்து அம்மாள் சைமன்… என எளிமையாய் மக்களுக்கென வாழ்ந்து, மறைந்த அதிசய அந்நாளைய அமைச்சர்கள், இந்நாளில் நமக்கு வேற்று கிரக வாசிகளைப் போல் தெரிவது தான் வேதனை. மாற்று அரசியல் நிலைப்பாடு கொண்ட தந்தை பெரியார் “பச்சைத் தமிழர் ” என மனமுவந்து கொண்டாடியதும், எனது சமூக சம நீதி கொள்கைகளை செயல்படுத்துவது காமராசர் தான் என நெகிழ்ந்ததும் வலிமையான வரலாற்று பதிவுகள்.

    மணவாழ்வு துறந்து, துணை துறந்து, பற்று அத்தனையும் துறந்து துறவியென வாழ்ந்து மறைந்த மாமனிதரை மொத்த தமிழ் கூறும் நல்லுலகின் மனங்களெல்லாம் தமது இல்லத்து இனிய உறவென ஏற்றுக்கொண்டு அன்றும், இன்றும், என்றும் போற்றுகின்றன. தனது தோழர் ஜீவா விடம் காமராசர் 1950 -வருட நாட்களில் நாட்டு விடுதலை குறித்தும், இன்னும் நாடு பயணிக்க வேண்டிய தூரம் குறித்தும் பேசிக்கொண்டு இருக்கையில், ” ஜீவா… சோறு பொங்கி தயாரா இருக்கு… எல்லாம் வயிறாரச் சாப்பிடணும்… என்ன ஒண்ணு ?? பரிமாறும் போது பாத்து கவனமா… சிந்தாம பரிமாறணும் … வீணாப் போயிறக் கூடாது… நெருப்புல நெறைய, நெறைய்ய… கட்டைகள் வெந்துருக்கு… ” கண்களில் கண்ணீர் துளிகளோடு சொல்லியிருப்பதாக வாசித்தது நினைவுகளில் அலையடித்துக் கொண்டிருந்தது.

    சிந்தாமல் பரிமாறப் பட்டிருக்கிறதா? எழுபதாண்டுகள் நிறைவடைய இன்னும் சில ஆண்டுகளே இருக்கும் தருணத்தில்… கேள்விகள். “இந்தியாவின் வல்லரசு” குறித்து கனவுகளும், குரல்களும்… நாடெங்கும் ஒலிக்கும் தருணத்தில், வாங்கிய விடுதலை வகையாய் பயன் கொள்ளப்பட்டிருக்கிறதா? சகலமும் அரசியலாக்கப்பட்டு, வாக்குகளாக மாற்ற எத்தனை, எத்தனை கூச்சல்கள், குழப்பங்கள்… கூத்துக்கள். நல்லரசே பெருங்கனவாக இருக்க வல்லரசு இங்கே சாத்தியமா?

    அத்துவான வறண்ட வெளியில், வெயிலின், அனற் காற்றில், மாடு மேய்க்கும் சிறுவனாக கர்மவீரர் வரவுக்காக கேள்வியுடன் காத்திருப்பதாக உணர்ந்தேன். தூரத்தில் நெடிதுயர்ந்த உருவம், வெள்ளை உடை அவரே தான்… நெருங்கி வர, வர, எனது இதயத் துடிப்பு துரிதமானது… “ஐயா” தொண்டை அடைக்க அழைத்தேன்.

    “சொல்லுங்க தம்பி…”

    “ஐயா… உங்களிடம் ஒரு கேள்வி… கேக்கலாமா… “

    புன்னகையுடன், கேட்கலாம் என்று தலையசைக்கிறார்.

    “ஐயா… சில சிக்கலான, பதில் சொல்ல தயக்கமான கேள்விகளுக்கும், கோரிக்கைகளுக்கும் “ஆகட்டும்… பார்க்கலாம்” என சொல்லி கடந்துவிடுவீர்கள் என கேள்விப்பட்டு இருக்கிறேன்… எனது கேள்விக்கு தயவு செய்து அந்த பதிலை சொல்ல வேண்டாம்… என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்…”

    ” ம் … கேளுங்க தம்பி…”

    தயக்கத்துடன் கேட்கிறேன், “ஐயா… வாங்கிய விடுதலையே இன்னும் வகையாக பகிர்ந்தளிக்கப் படாத இன்றைய நிலையில், இந்தியாவில் நல்லரசு என்பதே நனவாகாத நிலையில்… ஐயா…வல்லரசு என்பது சாத்தியமா?”

    கண்களைப் பார்த்து சிரித்தார்.
    “பார்க்கட்டும் … ஆகலாம்….”

    “ஐயா… என்ன?”

    “பார்க்கட்டும்… ஆகலாம்னேன்…”

    “புரியலீங்க ஐயா”

    “தம்பி… புரியலியா… பதவிப் பொறுப்பில் இருக்கவங்க மட்டுமில்லாம, மக்களும் கூட , ஒவ்வொருத்தரும் அவருக்கான வேலையை நியாயமா, நேர்மையா, உண்மையா, முழு மனசோடு , பார்க்கட்டும்… நீங்க எதிர்பார்க்கிற மாதிரி இந்தியா சீக்கிரம் நல்லரசு ஆகும்… வல்லரசும் ஆகலாம்”
    “பார்க்கட்டும் … ஆகலாம்… “

    அர்த்தம் புரிந்த மாதிரி இருந்தது. திடுக்கென விழித்துக்கொண்டேன். விடியற் காலை இரண்டு மணி வரை விழித்திருந்து கர்மவீரர் காமராசர் பற்றி எழுதியதன் விளைவு … கனவிலும் கர்மவீரர். எனது உடல் முழுதும் வியர்த்திருந்தது.

    எழுந்து தண்ணீர் குடித்து கடிகாரம் பார்த்தேன்… நான்கு மணி.

    “”பார்க்கட்டும் … ஆகலாம்… “””பார்க்கட்டும் … ஆகலாம்… ” செவிகளில் எதிரொலித்துக்கொண்டு இருந்தது.

    “ஆக வேண்டியதை, பார்க்க வேண்டும்…”

    அன்று, அதன் பின்னர் தூக்கமில்லை.

    Share