Author: admin

  • வல்லபை நாதனே வருவாய் அருள்வாய்

    வல்லபை நாதனே வருவாய் அருள்வாய்

    சரஸ்வதி ராசேந்திரன்

    குருவே சிவனின் கொழுந்தே ஆனைமுகனே
    குஞ்சரனே  எழிற்  குஞ்சரி    நாதனே
    வருவாய் விரைவாய் வந்தனை ஆள்வாய்
    வல்லபை நாதனே வாழ்த்தி வணங்கினேன்

    அருள்வாய்  உனையே அனுதினம்  பணிவேன்
    அன்னை பராசக்தியின் அரும்  புதல்வனே
    திருமால்   மருகா  தீனரஷனே  கணேசா
    திருவடி பணிந்தேன்  துன்பம்  துடைப்பாய்

    தஞ்சம் அடைந்தேன் தாங்குமருள் தந்திடுவாய்
    கொஞ்சுமருள் கணபதியே  கூட்டுவித்து ஆட்படுத்து
    அஞ்சிடும்  அன்பருக்கு  அபயம்   அளிப்பாய்
    பஞ்சமி  பைரவி  பார்வதி    மைந்தனே

    கறைகளைப்  போக்கி, கடுந்துயர்    நீக்கி
    கரைசேர  வைக்கும்   கணபதி  தாளே
    கருதிடும் நலன்களைக்  கனிவாய் அருள்வாயே
    கருணையில் பொறுத்தருள் கருக்கிடென் பிழைகளை

    பிணிகளைப்  போக்கி, பெரும்பலம்  தேக்கிடு
    பணிந்துணை  எண்ணுவேன் பேணிக்  காத்திடு
    வீணிலே  காலம்  கடத்தாது விரைந்து வந்திடு
    அணிமிகு  செயல்கள்  புரிந்திட  ஆசிகூறு

    சிறுமையைப்   போக்கிச்  சீருளம்   ஆக்கிடு
    வறுமையைப்  போக்கி  வளத்தைத்  தேக்கிடு
    செல்வம்  தருவாய் சிறப்பையும்   தருவாய்
    அல்லல்   நீக்கி  அனுதினம்   துணையாகு

    Share
  • (Peer Reviewed) தமிழிலக்கியங்களில் விருந்தோம்பல் – ஒரு தொகுப்பாய்வு

    (Peer Reviewed) தமிழிலக்கியங்களில் விருந்தோம்பல் – ஒரு தொகுப்பாய்வு

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்                                                                                                                            
    உதவிப்பேராசிரியர், மொழிகள் துறை 
    பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், 
    பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
    வல்லம், தஞ்சை மாவட்டம் – 613403.   
    மின்னஞ்சல் முகவரி-   egowrisss@gmail.com

    ஆய்வு முன்னுரை

    ஒரு குறிப்பிட்ட பண்போ பண்புகளின் தொகுப்புக்களோ ஓர் இனத்தை அடையாளம் காட்டும். சப்பானியர் அரை உடம்பைக் குனிந்து குறுக்கி வணங்குவது அவர்க்கே உரிய உயரிய பண்பாகும். இருகை கூப்பிக் ‘கரமலர் மொட்டித்து’ வணங்குவது பொதுவாக இந்தியர்களின் பண்பாடாகாவும் சிறப்பாகத் தமிழர்களின் பண்பாடாகவும் கருதப்படுகிறது. இது ஏதோ தற்புகழ்ச்சி என எண்ணுதல் நெறியன்று. உலக இனக்குழுக்களை ஆராய்ந்த ஆய்வறிஞர்கள் பண்பாட்டுக் கூறுகளை ஆராய்ந்து உலகிற்குச் சொன்ன ஒப்பற்ற உண்மை இது. இந்தப் பின்புலத்தில் ‘விருந்தோம்பல்’ என்னும் தமிழர்களுக்கே உரிய தனித்த அடையாளத்தைப் பற்றிய இலக்கியக் குறிப்புக்களின் தொகுப்பாய்வே இந்தக் கட்டுரையாகும்.

    கட்டுரைக் கட்டுமானம்

    ‘தமிழிலக்கியங்களில் விருந்தோம்பல்’ – ஒரு தொகுப்பாய்வு’  என்னுந் தலைப்பில் இந்தக் கட்டுரை வடிவமைக்கப்படுகிறது. தமிழிலக்கியம் என்பது தமிழ்க்கவிதைகளேயாதலின் சங்க இலக்கியம் தொடங்கி இற்றை நாள் வரை உள்ள கவிதை இலக்கியங்களே ஆய்வுக்களமாகக் கொண்டு ஆய்வு நிகழ்த்தப்படுகிறது. தொகுப்பாய்வு முறையில் செய்யப்படும் இந்த ஆய்வு, ஆட்சி மாற்றங்கள், வரலாறுகள் மாறிச் சென்றாலும் விருந்தோம்பல் முதலிய உயர்பண்புகள் மக்கள் வாழ்வியல் நெறியிலிருந்து விலகிச் செல்வதில்லை என்னும் ஆழமான கருத்தியலை வலியுறுத்துவதாக அமைகிறது. முன்னோர்களின் பண்பாட்டு இருப்புக்களைத் தேடிக் கண்டறிவதும், கண்டு மகிழ்ச்சியடைவதும், ஒல்லும் வகையால் தொடர்ந்து பின்பற்றுவதுமே இந்த ஆய்வின் நோக்கமாகும். ஒரு நூலில் ஒரு கருத்து பற்றிய விளக்கமுறை ஆய்வைப் பகுப்பாய்வு என்பராதலின் ஒரு கருத்து பற்றிய பன்னூல்களின் கருத்துக்களின் தொகுப்புப் பற்றிய ஆய்வு தொகுப்பாய்வு எனக் கருதப்படலாம். முன்னுரை, உள்ளடக்கத் துணைத்தலைப்புக்கள், முடிவுரை என்னும் வடிவத்தில் அமைக்கப்படும் இந்தக் கட்டுரை, இப்பொருள் பற்றிய முந்தைய ஆய்வுகளின் தொடர்ச்சியாகவும் நினைவூட்டலாகவும் மீட்டுருவாக்கமாகவும் கருதப்படலாம்.

    விருந்து ஓர் இலக்கணப் பார்வை

    ‘விருந்து’ என்னும் சொல் விருந்தோம்பல், விருந்து புறந்தருதல், விருந்தயர்தல் என்னுமாறு பல்வகையான பின்னொட்டுக்களோடு இணைந்து பயன்படுத்தப்படுகிறது. ‘விருந்து’ என்ற சொல்லுக்குப் புதுமை என்று பொருள்.  பெண்களுக்குரிய சிறந்த பண்புகளில் ஒன்றாக விருந்தோம்பலைத் தொல்காப்பியம் குறிக்கிறது.

    விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
    பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்1

    விருந்து பற்றிக் கிட்டும் தலையாய சான்று இதுவே எனக் கொள்ளுதற்கு இடமுண்டு. இலக்கியங்களைப் பற்றிப் பேசும் தொல்காப்பியம் புதுமைப் போக்கோடு வெளிவரும் இலக்கியங்களையும் இந்தச் சொல்லால் அரவணைத்துக் கொள்வதையும் காண முடிகிறது.

    விருந்தே தானும்
    புதுவது கிளந்த யாப்பின் மேற்றே2

    தொல்காப்பியரை முக்காலமும் உணர்ந்த ஞானி என்பது பொருந்தாதாயினும் மொழி பற்றியும், அதன்கண் தோன்றி வளரும் இலக்கிய வளர்ச்சி மற்றும் நெறி பற்றியும் தெளிந்த ஞானம் பெற்றிருந்தார் என்பதற்குத் தொல்காப்பியமே சான்றாகும். தமிழின் இலக்கிய எதிர்காலத்தைச் சரியான தளத்தில் வைத்துக் கணிக்கின்ற நூற்பாவாக இது திகழ்கிறது எனலாம்.

    சங்க இலக்கியங்களில் விருந்தோம்பல்

    விருந்தயர்தல் இல்லறம். இல்லறம் கற்பியல். கற்பியல் அகம். ஆனால் இவ்வறத்தின் சிறப்பு நோக்கிய சங்கச் சான்றோர்கள் அகத்திலும் புறத்திலும் இவ்வறம் உள்ளிட்ட செய்திகள் கொண்ட பாக்களைக்  கோத்திருக்கிறார்கள். இது தனித்த விரிந்த ஆய்வுக்குரிய பொருளாகையால் ஒரு சில எடுத்துக்காட்டுக்களால் விளக்க முற்படலாம்.

    தூங்கல் ஓலை ஓங்குமடற் பெண்ணை
    மாஅரை புதைத்த மணல்மலி முன்றில்
    வரையாத் தாரம் வருவிருந்து அயரும்
    தண்குடி வாழ்நர் அம்குடிச் சீறூர்
    இனிது மன்ற அம்மதானே!” 3

    என்னும் நற்றிணைப் பாடலில் தலைவன் வராதபோது தன் சிற்றூரும் இன்னாதிருந்தது என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்தும் தோழி தலைவனைப் பற்றி அறியாத போது இருந்த ஊர்ச்சிறப்பில் வைத்து விருந்தோம்பலைக் கூறுவதை அறிய முடிகிறது. வருவிருந்து அயரும் தண்குடி வாழ்நர் அம்குடிச் சீறூர் இனிது’ என்பது தற்போது இன்னாமையைக் குறித்தது என்க.

    அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்             
    முல்லை சான்ற கற்பின்
    மெல்இயற் குறுமகள் உறைவின் ஊரே4

    வினைமுடித்து மீளும் தலைவன் தலைவியை விரைந்து  காணும் அவாவுக்கான காரணங்களை அடுக்குகிறபோது அவளுடைய ஊர்ப்பெருமையைப் புகழ்வதன் வழி அவளுடைய விருந்தோம்பும் மாண்பை விதந்தோதுகிறான். அகத்திணைப் பாடலொன்றில் தலைவியின் பண்புநலன்களை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்தப் பாடலின் கருத்து ஒரு பண்பாட்டுக் கருவூலமாகும். இளையான்குடி மாறனார் மழைக்கால இரவில் வந்த சிவனடியாரை உபசரித்த வரலாற்றுக்கு மூலமான முந்தைய சிந்தனை இது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடவந்த இடைக்காடனார், அவனுடைய விருந்தோம்பும் பண்பைக் குறிப்பிடுகிறார்.

    பெருவிறல் யாணர்த் தாகி, அரிநர்
    கீழ்மடை கொண்ட வாளையும்
    உழவர் படைமிளிர்ந்திட்ட யாமையும், அறைநர்
    கரும்பிற் கொண்ட தேனும்,பெருந்துறை
    நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
    வன்புலக் கேளிர்க்கு விருந்து அயரும்
    மென்புல வைப்பின நன்னாட்டுப் பொருந! 5

    கிள்ளிவளவன் விருந்தில் வாளும் ஆமையும் தேனும் மலரும் கைகோத்துள்ளன என்பது நோக்கத்தக்கது. ‘விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று’ என்னும் சிந்தனைக்கு மூலமான ‘இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் தமியர் உண்டலுமிலரே’6 என்னும் சிந்தனையும் புறநானூற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது இங்குக் கூடுதல் குறிப்பாகக் குறிக்கப்படுகிறது.

    கேளிர்போல கேள் கொளல் வேண்டி
    வேளாண் வாயில் வேட்பக் கூறி
    கண்ணில் காண நண்ணுவழி இரீஇ
    பருகு அன்ன அருகா நோக்கமொடு
    உருகு பாவைபோல் என்பு குளிர் கொளீஇ7

    பொருநர்களை உபசரித்தான் கரிகால்வளவன் என்னும் குறிப்பு அவன் உபசரித்த முறையினைப் பொருநராற்றுப்படை வழிக் காணமுடிகிறது.

    திருக்குறளில் விருந்தோம்பல்

    ‘நீதி’ என்பதற்கு வாழ்வியல் நெறி என்பது பொருத்தமாயின் திருக்குறளை ஒரு வாழ்வியல் நூல் எனல் பொருந்தும். தனிமனிதன் தொடங்கி அரசன் வரை உள்ள அனைவர்க்குமான வாழ்வியல் நெறியை அது நிரல்பட திறம்படக் கூறுகிறது. இந்தத் திருக்குறளில் விருந்தோம்பல் ஒரு தனித்த அதிகாரப் பொருண்மையாகக் கொள்ளப்பட்டுள்ளது என்பதே அதன் இன்றியமையாமையை ஓரளவு விளக்கக்கூடும். ‘தென்புலத்தார், தெய்வம், விருந்து ஒக்கல், தான்  என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை”8 என்னும் குறட்பாவிற்குச் சிறப்புரை எழுதிய பரிமேலழகர் விருந்து பற்றிய தம் ஆய்வுக்கருத்தினைப் பதிவு செய்திருக்கிறார்.

    விருந்து என்பது புதுமை. அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய வந்தார் மேல் நின்றது. அவர் இருவகையர். பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும்அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல் சுற்றத்தார் எல்லா அறங்களும் தான் உளனாய் நின்றுசெய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று 9

    இந்தக் கருத்தினாலும் இதனைத் தொடர்நது வருகின்ற இரண்டு குறட்பாக்களுக்கு அவர் எழுதிய உரையாலும் இல்லறம் கடைபோவதே விருந்தோம்புதலினால்தான் என்பது தெளிவாகும்.

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது 10

    என்னும் குறட்பா சிறப்புரையின் இறுதியில்  ‘இவை மூன்று பாட்டானும்  இல்நிலையின் நின்றான் அறம் செய்யும் ஆறு கூறப்பட்டது” என்று எழுதுகிறார் பரிமேலழகர். எனவே துறவறப்பயன் உயிர்களைப் பேணுதல் எனின் இல்லறப் பயன் விருந்தினரைப் பேணுதல் என்பது தெளிவாம்.

    காமத்துப்பாலில் ‘விருந்து’

    சங்க இலக்கியப் புறத்திணைப் பகுதியில் அமைந்துள்ள கொளுவும், அகத்திணைப் பாடல்களில் கொடுக்கப்பட்டுள்ள திணை, துறை விளக்கமும் திருக்குறளில் பரிமேலழகர் உரையில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரப் பொருண்மை விளக்கமும் பொருள் தொகுப்பு விளக்கமும் அவற்றைத் தெளிவுபட புரிந்து கொள்வதற்கு உதவும் பெருங்கருவிகள் ஆகும். அவற்றைப் பற்றிய புரிதலின்றி அவ்விலக்கியப் பாடல்களின் பொருளுணர்தல் அரிதாம்.

    தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால
    அம்மா அரிவை முயக்கு11

    களவியல் சார்ந்த இந்தக் குறட்பாவிற்குத் துறைவகுத்த பரிமேலழகர்,”

    இவளை நீ வரைந்து கொண்டு உலகோர்தம் இல்லிருந்து தமது பாத்துண்ணும் இல்லறத்தூடு படல் வேண்டும் என்ற தோழிக்கு (வரைவு மறுத்துத் தலைவன்  சொல்லியது)” 12

    என்றெழுதுகிறார். இல்லறத்துக்குட்படுத்த எண்ணும் தோழிக்கு அதன் பயனாகிய துறக்கச் செல்வம் தலைவியோடு கூடிய களவுப் புணர்ச்சியிலேயே கிட்டுமாதலின் தலைவன் மறுத்தான் என்பதாம். “இன்பம் பயத்தற்கண் தமக்குரிய இல்லின்கண் இருந்து உலகோர் தாளான் வந்த பொருளைத் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்கட்குப் பகுத்துத் தம் கூற்றை உண்டாற் போலும்” என்னும் தலைவன் கூற்றினால் இது புலப்படும். ‘தம்மில் இருந்து தமது பாத்து உண்டல்’ இல்லறப் பகுதியே என்பதை நினவூட்டப் பரிமேலழகர், ‘தென்புலத்தார்’ 13 எனத் தொடங்கும் குறட்பாவைத் தலைவன் உரையிலும் வைத்துக் கூறினார். இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திற்கு அடுத்தபடியாகத் திருக்குறள் காமத்துப்பாலில் இருவகை விருந்தின் சிறப்பும் போற்றப்பட்டுள்ளன என்பது இதனால் தெளிவாகும். தொல்காப்பியம் கற்பியலில் தலைமகள் பண்பாகக் கூறியதைத் திருவள்ளுவர் களவியலில் தோழி மற்றும் தலைவன் சிந்தனையில் வைத்துக் கூறும் நுண்ணியம் உணரத்தக்கது.

    வறுமைக்கிலக்கணம் வருவிருந்து ஓம்பாமை

    வறுமைக்கான பொருள் வரையறையை திருவள்ளுவர் இரண்டு பாக்களில் கூறியிருப்பதை அறிய முடிகிறது. அவற்றுள் ஒன்று விருந்தோம்பல் அதிகாரத்திலும் மற்றொன்று பொறையுடைமை அதிகாரத்திலும் காணப்படுகிறது.

    உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ம்பா
    மடமை மடவார்கண் உண்டு14

    (செல்வமிருந்தும் விருந்தோம்புதலைச் செய்யாதவர்கள்) பொருளால் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மையாக்கலின்  மடமையை இன்மையாக உபசரித்தார். பேதைமையால் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம்.” 15

    என்னும் பரிமேலழகரின் உரை நுட்பத்தால் உடைமை எஞ்ஞான்றும் பயனோக்கியது என்பதும், செல்வத்துப் பயன் ஈதலாதலின் அது கடைபோகாவழி அது இன்மையாகுமேயன்றி உடைமையாகாது என்பதும் விருந்தோம்புதல் பண்பாட்டு விழுமியம் என்பதும் அதனைச்  செய்யாமை ‘பேதைமை’ என்பதும் பெறப்படும். இதே கருத்தினை வேறொரு வாய்பாட்டில் எதிர்மறையில் வைத்தும் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். இல்லறத்தில் விருந்தோம்பலின் இன்றியமையாமை அதன் சிறப்பு ஆகியவற்றை எதிர்மறைமுகத்தால் திருவள்ளுவர் கூறியிருப்பது இங்குச் சிந்தனைக்குரியது. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இவை தேவையெனின் இவற்றின் இன்மையே வறுமை எனப்படல் வேண்டும். ஆனால் திருவள்ளுவர் இவை மூன்றும் இல்லாதிருந்தும் விருந்தினரைப் போற்ற வேண்டும் எனவும் போற்றாமையே வறுமை என்றும் வறுமைக்குப் புதுவெளிச்சம் பாய்ச்சுகிறார்.

    இன்மையுள் இன்மை விருந்தொரால்., வன்மையுள்
    வன்மை மடவார்ப் பொறை16

    என்பது குறட்பா. அறனல்லாத விருந்தொரால் பொருளுடைமை ஆகாதவாறு போல என்னும் உவமத்தால் விளக்குகிறார். பொறையுடைமை உயர்ந்த பண்பே. அவ்வுயர்ந்த பண்பினை விளக்கப் பயன்படுத்தும் விருந்தோம்பல் அதனினும் உயர்ந்தது என்பது ஆற்றலால் பெற்ற பொருளெனக் கொள்க. ‘உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை’ என்பது இலக்கணமாதலின்!

    விருந்தோம்புதலின் மூவகைப் பயன்கள்

    நல்லறம் செய்பவனை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகத் திருவள்ளுவர் விருந்தோம்புவார்க்குப் பல்வகை நன்மைகள் கிட்டும் என விளக்குகிறார். இதனை இம்மைப் பயன், மறுமைப் பயன், இருமைக்கான பயன் என வகுத்துக் கொண்டு ஐந்து குறட்பாக்களில் கூறுகிறார்.

    வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
    பருவந்து பாழ்படுதல் இன்று17

    அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
    நல்விருந்து ஓம்புவான் இல்18

    வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
    மிச்சில் மிசைவான் புலம் 19

    இம்மூன்று குறட்பாக்களும் பகுத்தறிவுக்கு முரணாக அமைந்திருப்பதாகச் சிலர் கருதக்கூடும். ‘பருவந்து பாழ்படுதலும்’, ‘அகனமர்ந்து செய்யாள் உறையும்’ என்பதும் ‘வித்தும் இடல் வேண்டும்’ என்பதும் அறிவுக்கு முரணாக அமைந்திருக்கின்றன என்பதைவிட உலகியல் நோக்கிக் கூறியனவாகக் கொள்ள வேண்டும். எதிர்பாராமல் உதவிசெய்தவனைத் ‘தெய்வமே நேரில் வந்து உதவிய”தாகக் கூறுவதில்லையா? அதுபோல என்க.

    செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
    நல்விருந்து வானத்தவர்க்கு20

    இனைத்துணைத்து என்பதொன்றில்லை விருந்தின்
    துணைத்துணை வேள்விப் பயன் 21

    என்னுங் குறட்பாக்களில் முறையே  மறுமைப் பயனையும் இருமைப் பயனையும் எடுத்துக் கூறுகிறார் திருவள்ளுவர். வேதம் ஓதுதல், யாகம் வளர்த்தல், விருந்தோம்புதல், தருப்பணம் செய்தல், பலியிடுதல் என்னும் வேள்வி ஐந்தனுள் ஒன்றுதான் விருந்தோம்புதல். ஒவ்வொரு வேள்விக்குமான பயன் வரையறுக்கப்பட்டுள்ளதெனினும் விருந்தோம்பலாகிய வேள்விக்கு அது செய்யும் அளவே அளவாக்கப்பட்டுள்ளது. ‘விருந்தின் துணை’ என்பதற்கு விருந்து செய்யும் அளவு என்பது பொருள். ‘சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று’ எனவும் ‘விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு’ எனவும் இல்லறத்தின் தலையாய கடமையாகிய விருந்தோம்பலை வலியுறுத்திய திருவள்ளுவர் அதன் அனைத்து வகைப் பயன்களையும் நிரல்படக் கூறுவதை நோக்குக.

    சிலப்பதிகாரத்தில் விருந்தோம்பல்

    குடிமக்கள் காப்பியம் எனச் சிறப்பிக்கப்படும் சிலம்பில் விருந்தோம்பலின் சிறப்பினைச் சித்திரிக்க ஏற்ற இடமில்லாது அடிகள் அல்லற்பட்டிருப்பது நன்கு புரிகிறது. இதே நிலை கம்பனுக்கும் வந்திருக்கிறது. கோவலனோடு  கண்ணகியாவது சில ஆண்டுகள் இல்லறம் நடத்தியதாகத் தெரிகிறது. ஆனால் இராமனுக்கும்  சீதைக்கும் அந்த வாய்ப்பும் இருந்ததாகத் தெரியவில்லை.

    மருந்தான் விருந்து

    தலைவியின் ஊடல் நீக்கும் வாயில்களுள் விருந்தும் ஒன்று. இதனைத் தொல்காப்பியம் பலபடப் பேசுகிறது. சிலப்பதிகாரத்தில் இரவு நேர வண்ணனைப் பகுதியில் தொல்காப்பிய இலக்கணம் நினைவு கூரப்பட்டிருப்பதை அறியமுடிகிறது. பரத்தையர்பால் பல்வரிக்கோலம் புனைந்துப் புணர்ச்சியின்பம்  அனுபவித்து வீடு திரும்பும் கணவன்மார்கள் தங்கள் மனைவியர் தங்களிடம் ஊடல் கொள்வார்கள் என எதிர்நோக்கி விருந்தைத் துணைக்கழைத்துக் கொண்டு செல்கிறார்கள். ஆனால் இல்லத்தரசியர் ஊடல் நீங்காமையை அவர்தம்  முகக்குறிப்பினைக் கண்டு பேதுறும் கணவன்மார்கள் ‘ஊடல் தீர்க்கும் மருந்து விருந்தினும் சிறந்தது உண்டோ?’ என நெஞ்சு நடுங்கியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விருந்தொடு புக்க பெருந்தோள கணவரோடு
    உடனுறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த
    வடமீன் கற்பின் மனையுறை மகளிர்
    மாதர் வாள்முகத்து மணித்தோட்டுக் குவளைப்
    போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை
    விருந்தின் தீர்ந்தில தாயின் யாவதும்
    மருந்தும் தருங்கொல் இம்மாநில வரைப்பெனக்
    கையற்று நடுங்கும் நல்விளை நடுநாள் 22

    இதனால் விருந்தின் பயன்பரப்பு நடப்பியல் சார்ந்தது என்பதும்  இல்லறச் சிக்கலை மிக நுட்பமான முறையில் தீர்த்து வைக்கும் பேராற்றல் விருந்துக்கு உண்டு என்பதும் பெறப்படும்.  எல்லாரும் அறிந்த சிலம்பின் மற்றொரு காட்சி கொலைக்களக்காதையில் சித்திரிக்கப்பட்டுள்ளமையாகும். கணவனைக் குற்றவாளி எனச் சுமத்திய பழிக்காக மாமதுரையைத் தீக்கிரையாக்கிய கண்ணகி புகாரில் மாதவியோடு வாழ்ந்த காலத்து வந்த அவன் பிரிவைத் தனக்கேற்பட்ட இழப்பாகக் கருதவில்லை. இல்லறம் செய்ய தன் கணவன் உதவவில்லையே என்றுதான் வேதனைப்பட்டிருந்திருக்கிறாள். காப்பிய நிகழ்வுகளின் இறுதிக்காட்சியில் வைத்து இதனைக் காட்டுகிறார் அடிகள்.

    “அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும்
    துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
    விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”23

    தன் கணவன் மீது பழிபோடாத கண்ணகியை இங்கு நாம் காணலாம். ‘உன்னோடு இல்லறம் நடத்த நான் கொடுத்துவைக்கவில்லை’ என்பதே அவள் ஆதங்கமாக இருந்திருக்கிறது. அதனால்தான் ‘இழந்த என்னை’ எனத் தன்மீது தானே பழிபோட்டுக் கொள்கிறாள். இல்லறத்தில் இழக்கக்கூடாத ஒன்று எனக் கருதும் அளவுக்கு விருந்தோம்புதல் அரியதொரு அறமாகக் கருதப்பட்டுள்ளது என்பதைச் சிலம்பின் வழி அறியலாம். இந்தப் பகுதியில் வரும் ‘தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடல்’ என்னும் தொடரில் மனம் பறிகொடுத்த பாவேந்தர் தாம் எழுதிய குடும்ப விளக்கில் இதற்கான விரிவுரையைத் தந்திருக்கிறார்.

    வீட்டுக்கு வந்த விருந்தோம்பு நாட்டிலுறு
    நற்றமிழர் சேர்த்தபுகழ் ஞாலத்தில் என்னவெனில்
    உற்ற விருந்தை உயிரென்று பெற்றுவத்தல்!
    மோந்தால் குழையும் அனிச்சம்பூ முகமாற்றம்
    வாய்ந்தால் குழையும் வருவிருந்தென்று ஆய்ந்ததிரு
    வள்ளுவனார் சொன்னார் அதனைநீ எப்போதும்
    உள்ளத்து வைப்பாய் ஒருபோதும் தள்ளாதே!
    ஆண்டு பலமுயன்றே ஆக்குசுவை ஊண்எனினும்
    ஈண்டு விருந்தினர்க்கும் இட்டுவத்தல் வேண்டுமன்றோ?
    வந்தாரின் தேவை வழக்கம் இவையறிய
    நந்தாவிளக்குன்றன் நல்லறிவே! செந்திருவே!
    இட்டுப்பார் உண்டவர்கள் இன்புற்று இருக்கையிலே
    தொட்டுப் பார் உன் நெஞ்சம் தோன்றுமின்பம்! – கட்டிக்
    கரும்பென்பார் பெண்ணை கவிஞரெலாம் வந்த
    விருந்தோம்பும் மேன்மையினால் அன்றோ?” 24

    திருக்குறளில் விருந்தோம்பல் என்னும் தனியதிகாரத்தைப் போலவே பாவேந்தரும் தமது குடும்பவிளக்கில் விருந்தோம்பலைத் தனியியலாகவே அமைத்திருப்பதன் மூலம் குடும்பத்தின் தலையாய அறம் விருந்தோம்புதலே என்பதில்  அவருடைய பார்வை தெளிவாக இருந்திருக்கிறது என்பது புலனாம்.

    பெரியபுராணத்தில் விருந்தோம்பல்

    நம்மை நாடி வரும் விருந்தினரை இன்சொல்லால் மகிழ்வித்தும் உள்ளம் கலந்து உறவாடியும், தங்குவதற்கேற்ற இடமளித்தும், ஆடை அணிகலன்கள் முதலியவற்றையும் அளித்தும் உபசரிக்க வேண்டும். இவ்வாறு விருந்தினரை உபசரிப்பவர்களைத் தேவர்கள் தம் விருந்தினராக ஏற்றுக் கொள்வார்கள் என, ஏலாதி பண்டையத் தமிழரின் விருந்தோம்பல் முறையைத் தெரிவித்து ‘நல்விருந்து வானத்தவர்க்கு’ என்னும் குறட்பாத் தொடரையும்  நினைவூட்டுகிறது.

    இன்சொல்அளாவல்இடம்இனிது ஊண் யாவர்க்கும்
    வன்சொல் களைந்து வகுப்பானேல் மென்சொல்
    முருந்து ஏய்க்கும் முட்போல் எயிற்றினாய்! நாளும்
    விருந்து ஏற்போர் விண்ணோர் விரைந்து 25

    தமிழர்தம் இந்தப் பண்பாட்டு விழுமியத்தின் காப்பிய வடிவமே பெரியபுராணம். பெரிய புராணத்தின் சாரம் விருந்தோம்பலே. எந்தச் சூழ்நிலையிலும் எத்தகைய விருந்தோம்பலையும் மேற்கொள்ள வேண்டும் என்னும் அவ்வறத்தின் மேன்மையை முன்னெடுப்பதாக அமைந்திருப்பதுதான் இளையான்குடி மாறனார் புராணம்.

    ஆரம் என்பு புனைந்த ஐயர்தம் அன்பர் என்னுந் தன்மையால்
    நேர வந்தவர் யாவராயினும் நித்தமாகிய பத்திமுன்
    கூர் வந்து எதிர்கொண்டு கைகள் குவித்து நின்று செவிப்புலத்து
    ஈரம் மென்மதுரப் பதம் பரிவெய்த முன்னுரை செய்தபின் 26

     கொண்டு வந்து மனைப்புகுந்து குலாவு பாதம் விளக்கியே
    மண்டு காதலின் ஆசனத்திடை வைத்து அருச்சனை செய்தபின்
    உண்டி நாலு விதத்தினில் ஆறு சுவைத் திறத்தினில் ஒப்பிலா
    அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துள்ளார் 27

    செல்வம் மேவிய நாளில்  இச்செயல் செய்வதன்றியும் மெய்யினால்
    அல்லல் நல்குரவானபோதினும் வள்ளல் என்று அறிவிக்கவே
    மல்லல் நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாடோறும் மாறிவந்து
    ஒல்லையில் வறுமைப் பதம்புக உன்னினார் தில்லை மன்னினார். 28

    ஈரமேனியை நீக்கி இடம் கொடுத்து
    ஆர இன்னமுது ஊட்டுதுற்கு ஆசையால்
    தாரமாதரை நோக்கி, தபோதனர்
    தீரவே பசித்தார் செய்வதென்? என்று 29

    என்னும் பாடல்கள் விருந்து உபசரிப்பார்க்குப் பரிமேலழகர் சொன்ன ‘நன்று ஆற்றல்’ என்னும் சொல்லுக்கு இலக்கியமாக அமைந்துள்ளதைக் காணலாம். பெரியபுராணத்துள் வருகின்ற விருந்தோம்பும் நிகழ்வுகளுள் இன்றியமையாது குறிக்கப்படுபவை மூன்று.

    1. சிறுத்தொண்டர் புராணம்.
    2. அப்பூதிநாயானார் புராணம்.
    3. இளையான்குடி மாறனார் புராணம்

    இவற்றுள் முந்தைய இரண்டும் (பிள்ளைக்கறி உண்டமையும், மாண்ட இளைய திருநாவுக்கரசு மீண்டதும்) மீயுயர் கற்பனை கலந்து அமைய இறுதியாக உள்ள இளையான் குடிமாறனார் புராணம் நடப்பியல் சார்ந்து அமைந்துள்ளது நோக்குதற்குரியது.

    கம்பராமாயணத்தில் விருந்தோம்பல்

    கம்பராமாயணத்தில் நேரடியான உபசரிப்பைக் கங்கைப் படலத்தில் காணமுடிகிறது. ‘ஆறுகொள் சடிலத்தானும் அயனும் என்று இவர்கள் ஆதி வேறுள குழுவையெல்லாம் வென்று’ மானுட அவதாரம் பெற்றுவந்த இராமனுக்கு நாவாய் வேட்டுவன் குகன் செய்த விருந்து அது. இராமனை உபசரிக்க எண்ணிய எல்லை நீத்த அருத்தியன் ஆகிய குகன்.

    இருத்தி ஈண்டுஎன்னலோடும்.
    இருந்திலன்., எல்லை நீத்த
    அருத்தியன், தேனும் மீனும்
    அமுதினுக்கு அமைவது ஆகத்
    திருத்தினென் கொணர்ந்தேன்
    என்கொல் திருவுளம் என்ன. 30

    நெஞ்சினில் அன்பையும் கைகளில் தேன், மீன் முதலியவற்றையும் கொண்டு வந்தான் குகன். அவனுடைய ஆழமான அன்பை நோக்கிய இராமன், மூத்தவர்களாகிய முனிவர்களை நோக்கிப் புன்னகைத்து விட்டுக், “குகனே! நீ அன்போடும் பக்தியோடும் கொண்டு வந்த தேனும், மீனும் மிகவும் அருமையானவை. அமுதத்தைக் காட்டிலும் சிறந்தவை. இவையெல்லாம் எம்மைப் போன்றவர் ஏற்கத்தக்கவையே. ஆதலால் நாம் அவற்றை இனிதாக உண்டவர்போல் ஆனோம்” என்று குகனிடம் கூறினான்.

    அரியதாம் உவப்ப உள்ளத்து
    அன்பினால் அமைந்த காதல்
    தெரிதரக் கொணர்ந்த என்றால்
    அமிழ்தினும் சீர்த்த அன்றே
    பரிவினின் தழீஇய என்னின்
    பவித்திரம் எம்ம னோர்க்கும்
    உரியன இனிதின் நாமும்
    உண்டனெம் அன்றோ என்றான்31

    உள்ளத்து அன்பின் மிகுதியால் கொண்டு வந்த பொருள்கள் உண்ணத்தகாதன ஆயினும் சுமந்து வந்த அன்பு மிகுதியால் அவையும் உண்ணத்தகும் பயனைத் தரவல்லனவே என்னும் உயரிய கருத்தினைக் கவிச்சக்கரவர்த்தி இந்த இடத்தில் பதிவு செய்திருக்கிறார். கள்ளம் கபடமற்ற உள்ளமும் எளியவரை மதிக்கும் பெருந்தன்மையும் விருந்தோம்பல் அறத்தினை உயர்த்தும் என்னும் மாண்பினை இதனால் அறிந்து கொள்ளலாம்.

    உண்டபின் தாம்பூலம் தரிக்கும் வழக்கமுள்ளவன் இராமன்.  அதனை அவனுக்கு அன்பைக் குழைத்து மடித்துத் தரும் சீதை தற்போது அசோகவனத்தில். தான் இல்லாதபோது அவற்றையெண்ணி மருகுகின்றாள்.

    அருந்து மெல்லடகு ஆரிட அருந்தும் என்று அழுங்கும்!
    விருந்து வந்தபோது என்னுறுமோ என விம்மும்!” 32

    கணவனுக்கு அடைகாய் மடித்துக் கொடுப்பதும் இல்லறத்தில் விருந்தோம்புதலும் இணைந்து செய்ய வேண்டிய கடமை. அறம். அவ்விரண்டனையும் செய்ய முடியாமல் தான் தனித்து இருப்பதாகச் சீதை வருந்தினாள் என்பதாம். சிலப்பதிகாரத்தில் கண்ணகி தன் கணவனிடம் நேராகவே கூறினாள். சீதை செய்ய வேண்டிய கடமையைச் செய்ய இயலவில்லையே என தனக்குத்தானே மருகினாள்.  ‘இழந்த என்னை’ என்பது கண்ணகி வாக்கு. ‘என விம்மும்’ என்பது சீதையின் மெய்ப்பாடு. இரண்டிடங்களிலும் புலவர் பெருமக்கள் தலைமகன்களின் குற்றத்தைக் கூறாமல் தலைமகள்களின் வருத்தத்தையே முன்னிலைப்படுத்தியிருக்கிறார்கள் என்பது சிந்திக்கத்தக்கது.  

    விருந்தோம்பும் கலைமரபு

    வீடு தேடி வந்தார்க்குச் சோறு போட்டு அனுப்புவதன்று விருந்தோம்பல்.  இல்லறத்தின் தலையாய கடமையாக விருந்தோம்புதல் குறிக்கப்படினும் அதனை முறையாகச் செய்ய வேண்டும், செய்தார்கள் தமிழர்கள் என்பதிலேதான் பண்பாட்டு விழுமியம் அடங்கியிருக்கிறது.

    மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து’” 33

    என்னும் குறட்பாவில் மோப்ப மற்றும் நோக்க என்னும் இரண்டு சொற்களுக்குத் தம் நுண்ணிய உரையினால் விளக்கம் சொல்வார் பரிமேலழகர். இந்தக் குறளில் அமைந்துள்ளது வேற்றுமை அணி. உவம அணி அன்று.

    சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அது பற்றி நண்ணிய வழி இன்சொல்லும் அதுபற்றி உடன்பட்ட வழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள் முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின் தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப்பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். 34

    என்பது பரிமேலழகர் விளக்கம். அனிச்சப்பூ தீண்டுதலாகிய மூன்றாம் நிலையில்தான் வாடும். விருந்தினரோ நோக்குதலாகிய முதனிலையிலேயே வாடுவர் ஆதலின் அனிச்சப்பூவினும் மெல்லியர் என்பதாம். பரிமேலழகரின் இந்த உரை நுண்ணியம் அறிவு சார்ந்தது என்பதோடன்றிப் பண்பாடு சார்ந்தது எனல் பொருந்தும். திருக்குறள் உரைக்குப் பலகாலம் பின்னால் தோன்றிய விவேக சிந்தாமணி என்னும் நூலில் அழகர் சொன்ன மூன்று பண்புகள் ஒன்பதாக விரிவடைந்திருக்கின்றன என்பதை அறிய முடிகிறது.

    விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
    வியத்தல், நல் மொழி இனிது உரைத்தல்,
    திருந்துற நோக்கல், வருகென உரைத்தல்,
    எழுதல், முன் மகிழ்வன செப்பல்,
    பொருந்து மற்றவன்தன் அருகுற இருத்தல்,
    போம் எனின் பின் செல்வ தாதல்,
    பரிந்துநல் முகமன் வழங்கல், இவ் வொன்பான்
    ஒழுக்கமும் வழிபடும் பண்பே35

    என்னும் பாடலின் வழி, வரும் விருந்தினரை மெச்சுதலும், அவரிடத்து இன்மொழி பேசுதலும், முகமலர்ச்சி கொண்டு நோக்குதலும், வருக என வரவேற்றலும், மரியாதை நிமித்தம் எழுந்து நிற்பதும், அவன் மகிழும்படியான செய்திகளைக் கூறுதலும் வந்து சேர்ந்த அவனது அருகிலேயே அமர்வதும், விடை பெற்றுச்  செல்லும் போது நேசமுற்று பின் சென்று, மகிழ்வான முகத்துடன் அவனை வழியனுப்புதலுமாகிய  ஒன்பது வகையால் விருந்தினரை உபசரிக்க வேண்டும் என்று கூறுகிறது. விருந்தினர்கள் விடைபெற்றுச் செல்லும் போது, அவர்கள் பின்னே, ஏழடி நடந்து சென்று, தமிழரிடையே நிலவிய பண்டை மரபு ஆகும். இம்மரபைக், கரிகாலன், தன்னை நாடி வந்த பொருநர்களை வரவேற்று உபசரித்து, அவர்கள் விடைபெறும் போது ஏழடி தூரம் நடந்து சென்று வழியனுப்பினான் என்பதைக்,

    “காவின் ஏழு அடிப் பின் சென்று” 36

    மேற்கண்ட பாடலடி விளக்குகிறது. மேற்கண்ட குறிப்புக்களிலிருந்து விருந்தோம்பல் என்பது தமிழ்மக்கள் வாழ்வியலின் ஒரு கூறாகவும் கலைமரபாகவும் பின்பற்றப்பட்டு வந்துள்ளது என்பதை அறியலாம். இதன் தொடர்ச்சியாக விருந்தயர்வாருக்கு இன்றியமையாத பண்பாக முகமலர்ச்சியே என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதையும் காணமுடிகிறது.

    ஒப்புடன் முகம லர்ந்தே
    உபசரித் துண்மைப் பேசி
    உப்பில்லாக் கூழிட்டாலும்
    உண்பதே அமுத மாகும்
    முப்பழ மொடுபா லன்னம்
    முகங்கடுத் திடுவா ராயின்
    கப்பிய பசியி னோடு
    கடும்பசி ஆகுந் தானே37

    என்னும் பாடலடி உணர்த்துகிறது. விருந்தின் புண்ணியம், பொருளில் இல்லை. அயர்வாரின் உள்ளத்தில் இருக்கிறது. இல்லறத்தானின் உள்ளத்து இனிப்பு அவன் உபசரிக்கும் பொருளில் வந்து அமைகிறது. திண்ணனார் எச்சில்படுத்தியதில் உண்டான பாசம் இறைவனுக்கு இனித்தது போல! புளித்துப் போன குழம்பு, தவிடு, கூழ், புழுக்கள் பற்றிய மாவு, அரைக்கீரையின் வேர், கெட்டியாய் இல்லாத தயிர், பக்குவம் தவறிய சருக்கரைப் பாகு, கிளறிய களி, நன்றாகத் தீட்டப்படாத அரிசியில் பொங்கி இடப்பட்ட சோறு, உப்பு போடப்படாத நீராகாரம் ஆகிய இவையே ஆயினும், இவ்வுணவானது அன்புடன் பரிமாறப்பட்டதாயின் உண்பவன் மகிழ்வான். அவன் மகிழ்ச்சி உபசரித்தவனின் உள்ளத்தோடு கரைவதால்.

    கெட்டசாறு தவிடு கஞ்சி
    கிருமி உண்ட மா அரைக்
    கீரை வேர்தெளித்த மோர்மு
    றிந்த பாகு கிண்டுமா
    இட்ட சோறு கொழியல் உப்பி
    டாத புற்கை ஆயினும்
    எங்கும் அன்ப தாக நுங்க
    இன்ப மாயி ருக்குமே38

    ஆனால் தேன்பாகு, பசுநெய், பருப்பு வகைகள், முப்பழ வர்க்கங்கள்,  பால் சாத வகைகள், தாளிக்கப்பட்ட கறி வகைகள், பல்வகை பலகாரங்கள்  சுண்டக் காய்ச்சப்பட்ட திரட்டுப் பால், சருக்கரைப் பொங்கல் முதலியவற்றுடன் உணவு படைத்தாலும், அன்போடு இடப்படாததாயின் அங்கே விருந்தறம் நிறைவு பெறுவதில்லை.

    பட்ட பாத பசுவின் நெய்ப
    ருப்பு முக்க னிக்குழாம்
    பானி தங்கள் தாளி தங்கள்
    பண்ணி கார வகையுடன்
    அட்ட பாலகு ழம்பு கன்னல்
    அமுத மோடும் உதவினும்
    அன்பனோ டளித்தி டாத
    அசனம் என்ன அசனமே 39

    என்னும் பாடலடி உணர்த்துகிறது. எனவே எத்தகைய உணவினை இட்டாலும் அதனை அன்பினோடு இடுதல் வேண்டும் என்பதே பழந்தமிழரின் விருந்தோம்பல் கொள்கையாகும். இன்முகம், இன்சொல், இனியவை ஆற்றல் என்பனவற்றின் தொகுப்பே விருந்தோம்பல் என்பதை மேற்காட்டிய சில எடுத்துக்காட்டுக்களால் அறிந்து கொள்ள இயலும்.

    நிறைவுரை

    தமிழர்தம் பண்பாட்டு அடையாளங்கள் பல. அவற்றுள் தலையாயது விருந்தோம்பல். இயற்கை வாழ்வினைப் புறந்தள்ளிச் செயற்கையில் சிந்தனைப் போக்கிய தற்காலத்தில் இது கனவாய்க் கற்பனையாய்ப் பொய்யாய்ப் புனைவாய் மெல்லப் புறப்பட்டு இல்லறத்தின் புறம் போயிருக்கலாம். அதன் சாரம் இன்னும் மணந்து கொண்டுதான் இருக்கிறது. தமழிலக்கியங்கள் முழுமையாகக் கிட்டாத காரணத்தால் இது பற்றிக் கிட்டும் செய்திகள் குறைவே. ஆனால் கிட்டியிருக்கிற அத்தனை இலக்கியங்களிலும் விருந்தோம்பல் பேசப்பட்டுள்ளது என்பதே உண்மை. விருந்தோம்பலைப் பெண் பின்பற்றியிருக்கிறாள். ஆண் நேசித்திருக்கிறான். ஆண்டவனுக்கு அடியவன் செய்திருக்கிறான். அடியவருக்கு சாமான்யன் செய்திருக்கிறான். அவதாரங்களுக்கும் விருந்தோம்பல் நிகழ்த்தப்பட்டுள்ளது.  மன்னர்கள் புலவர்களுக்குச் செய்திருக்கிறார்கள். புலவர்கள் தங்கள் மனைவியருக்கு இது பற்றிப் புகன்றிருக்கிறார்கள். சுருங்கச் சொன்னால் தமிழிலக்கியப் பெரும்பரப்பில் அங்கிங்கெனாதபடி எங்கும் ஒளிவெள்ளமாய் ஊடுருவி நிற்பது விருந்தோம்பல் என்னும் பண்பே என்பதை ஓரளவு நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அப்புரிதலுக்கு இந்தக் கட்டுரை ஓர் அணிற்பங்காகக் கருதப்படலாம்.

    சான்றெண் விளக்கம்

    1. தொல்காப்பியர் தொல். கற்பியல்           நூ.எண். 11
    2. மேலது செய்யுளியல்                 நூ.எண். 231
    3. கதப்பிள்ளையார் நற்றிணை         பா.எண். 135 வரி.1-5
    4. இடைக்காடனார் நற்றிணை         பா.எண் 142 வரி 8-10
    5. இடைக்காடனார் புறநானூறு        பா.எண் 42 வரி. 12-18
    6. கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி புறநானூறு பா.எண். 182
    7. முடத்தாமக்கண்ணியார் பொருநராற்றுப்படை.  வரி. 74-78
    8. திருவள்ளுவர் திருக்குறள்                      கு.எண். 43
    9. பரிமேலழகர் மேலது உரை
    10. திருவள்ளுவர் திருக்குறள்                        கு.எண். 45
    11. மேலது                                                                            கு.எண். 1007
    12. பரிமேலழகர் மேலது உரை
    13. திருவள்ளுவர் திருக்குறள்                         கு.எண். 43
    14. மேலது கு.எண். 89
    15. பரிமேலழகர் மேலது உரை
    16. திருவள்ளுவர் திருக்குறள்       கு.எண். 153
    17. மேலது                     கு.எண். 83.
    18. மேலது கு.எண். 84
    19. மேலது கு.எண்.  85
    20. மேலது கு.எண்.  86
    21. மேலது கு.எண்.  87
    22. இளங்கோவடிகள் சிலப்பதிகாரம்  இ.வி.எ.காதை          வரி. 227-234
    23. மேலது கொலைக்களக்காதை             வரி. 73-75
    24. பாரதிதாசன் குடும்பவிளக்கு    கண்ணிகள் – 34-40
    25. கணிமேதாவியார் ஏலாதி                  பா.எண். 7
    26. சேக்கிழார் பெரியபுராணம்     பா.எண். 442
    27. மேலது பா.எண். 443
    28. மேலது பா.எண். 445
    29. மேலது பா.எண். 449
    30. கம்பர் கம்பராமாயணம் கங்கைப்படலம்.          பா.எண்.41 வரி. 1-3
    31. மேலது பா.எண். 42
    32. மேலது காட்சிப்படலம்                                 பா.எண். 15
    33. திருவள்ளுவர் திருக்குறள்                    கு.எண். 90
    34. பரிமேலழகர் மேலது உரை
    35. விவேகசிந்தாமணி பா.எண். 33
    36. முடத்தாமக்கண்ணியார் பொருநராற்றுப்படை வ. 7
    37. விவேகசிந்தாமணி பா.எண். 4
    38. மேலது பா.எண். 57
    39. மேலது பா.எண். 58

    துணைநூற்பட்டியல்  

    1. ஆசிரியர்குழு (உரை) ஏலாதி, சாரதா பதிப்பகம், சென்னை. பதிப்பு – 2018.
    1. கேசிகன் புலியூர் (உ.ஆ.), நற்றிணை, பாரி நிலையம், சென்னை – 600108, நான்காம் பதிப்பு – 1967.
    1. சுப்பிரமணியன் ச.வே. (ப.ஆ.), தொல்காப்பியம், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, சென்ன – 600108. ஐந்தாம் பதிப்பு – 2003 .
    1. சேக்கிழார் பெரிய புராணம், திருப்பனந்தாள் மடம், திருத்திய பதிப்பு – 1967
    1. திருவள்ளுவர், திருக்குறள், தெ.இ.சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை -1975.
    1. துரைசாமிப்பிள்ளை ஒளவை புறநானூறு மூலமும் உரையும், தெ.இ.சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1967.
    1. துரை.அரங்கனார் கருவிலே திருவுடையான், மீனாட்சி புத்தக நிலையம், 60, மேலக்கோபுரத் தெரு, மதுரை – 1, இரண்டாம் பதிப்பு – 1966.
    1. பரிமேலழகர் (உ.ஆ.) திருக்குறள் உரை, தெ.இ. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. 1975.
    1. பத்மநாயன்(உரை) விவேகசிந்தாமணி, கற்பகம் புத்தகாலயம், சென்னை. பதிப்பு – 2008.
    1. பாரதிதாசன் குடும்பவிளக்கு, பாரி நிலையம், சென்னை – 108. நான்காம் பதிப்பு – 1966.
    1. வேங்கடசாமி நாட்டார் ந.மு.(உ.ஆ.) சிலப்பதிகாரம், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை. திருத்திய இரண்டாம் பதிப்பு – ஜுலை 1999

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தமிழிலக்கியங்களில் விருந்தோம்பல் – ஒரு தொகுப்பாய்வு’ என்னுந்  தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

    1. ஆய்வுப் பொருளின் பன்முகப் பயன்பாடு நோக்கிப், பழந்தமிழ்ப் பண்பாட்டுத் தேட்டங்களை நினைவூட்டுவதும் மீட்டுருவாக்கம் செய்வதும் அவற்றின் சிறப்புக்களை எடுத்து மொழிவதும் இன்றைய சூழலில் ஏற்றதே!
    1. ஒரே பொருண்மை பற்றித் தமிழிலக்கியப் பரப்பிலிருந்து தொகுக்கப்பட்ட கருத்துருக்களின் ஆய்விற்குத் ‘தொகுப்பாய்வு’ எனப் பெயரிட்டிருப்பது பொருத்தமே!
    1. ‘தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடல்’ என்னுந் தொடர், ‘நற்றமிழர் ஞாலத்தில் சேர்த்த புகழ்’ என மரபு வழியாகப் பாவேந்தரிடம் அடைக்கலம் பெற்றிருப்பதைக் கட்டுரையாளர் சுட்டுவது அவர்தம் மரபுவழி ஆய்வுச் சிந்தனையை வெளிப்படுத்துவதாய் உள்ளது.
    1. கண்ணகிக்கும் சீதைக்கும் ஏற்பட்ட துன்பங்களுள் தலையாய துன்பமாக விருந்தோம்பாத் துயரமே என்பதை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் கட்டுரையாளர் நிறுவுகிறார்.
    1. ‘அனிச்சப்பூவன்ன விருந்தினர்’ என்னும் உவமப் பொருளினும்  அனிச்சப்பூவினும் மென்மையானவர் விருந்தினர்’ என்னும் உறழ்ச்சிப் பொருளைப் பரிமேலழகர் உரைவழி எடுத்துக்காட்டி அது வேற்றுமையணி என நிறுவுவது கட்டுரையாளரின் இலக்கண வன்மையையும் ஆய்நெறிப் புலமையையும் ஒருசேரப் புலப்படுத்துகிறது.
    2. விருந்தோம்பும் நெறி மற்றும் உணவு வகைகள் முதலியவற்றை விவேகசிந்தாமணியிலிருந்து தொகுத்திருக்கும் கட்டுரையாளர், இளையான்குடி மாறனார் புராணத்தில் சித்தரிக்கப்படும் சிவனடியார் விருந்தோம்பலை அழகுற எடுத்தோதுகிறார்.
    3. பல இலக்கியங்களிலிருந்து தொகுத்த செய்தி மலர்களை  ‘விருந்தோம்பல்’ என்னும் மாலைக்குள் கண்ணியாக்கித் தரும் இந்த ஆய்வாளருக்குப் பாராட்டுக்கள்!

    Share
  • தேடிச் சோறு நிதம் தின்று (சிறுகதை)

    தேடிச் சோறு நிதம் தின்று (சிறுகதை)

    மருங்கர்

    மார்கழி மாதம் முடிந்து, கல்யாண சீசன் தொடங்கிவிட்டாலும், சென்னை மாநகரம் அன்று கடும் குளிரில் சற்றே நடுங்கிக்கொண்டிருந்தது. ஒரு அலுவலகத்தின் முன் நன்கு பரந்து விரிந்த வராண்டா. அங்கே கிட்டத்தட்ட 20 பெண்கள் வட்டமாகக் குழுமி இருந்தனர். அவர்களுக்கு நடுவில், ஒரு கை வேக வேகமாய், சற்று நெளிவு சுழிவுகளோடு கோலம் போட்டுக் கொண்டு இருந்தது.  அந்தக் கை கோலம் போட்டவாறே,

    “நீங்க எப்போதும்  போடுற கோலம் போல இல்லாம, இந்தக் கோலத்துக்கு  எட்டாவது புள்ளியிலேயே  இப்படி வளைச்சுத்  திருப்பணும்” என்று பல விதமான குறிப்புகளைச் சொல்லியவாறே, அந்தக் கை  கோலத்தைப்  போட்டு முடித்தது. கொரோனா என்ற அரக்கனை,  தடுப்பு ஊசி மூலம் வெல்வது போன்ற ஒரு காட்சி அமைப்பு. அருகில் ஒரு அரசியல் அமைப்பின் கட்சிக் கொடியுடன் அதன் தலைவரது படம்.

    “மீனா, இந்தக் கொரோனா உருவத்தைச் சிவப்பு நிற பூவாலையும், தடுப்பூசியைப் பச்சை நிறப் பூவாலையும் அலங்கரியுங்கள். மணல் சிற்பம் போல 3டீ எபக்ட் தரணும்.” அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே கோலம் போட்ட அந்த உருவம் எழுந்து நின்றது. சுற்றி இருந்த அனைத்துப் பெண்களும் ஒரே சமயத்தில் கைத்தட்டி ஆரவாரித்தனர்.

    “சூப்பர் சார்! அப்படியே கலர் பிரிண்ட் போட்ட மாதிரி இருக்கு!” என்றாள் மீனா.

    ராதாகிருஷ்ணன் சிரித்துக்கொண்டே “நான் சொல்லிக் கொடுத்தாலும், அதை நீங்க கரெக்டா செய்யணும் இல்ல! இன்னும் மூணு வாரம்தான் இருக்கு. எம்.பி. வீட்டுக் கல்யாணம். வேலையில ரொம்ப கவனமா இருங்க” எனச் சொன்னார். அவர்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய வேலைகளைப் பிரித்துக் கொடுத்தார். இந்தச் சமயத்தில் அவரைப் பற்றித் தெரிந்துகொள்வோம்!

    ராதாகிருஷ்ணன் இயற்பெயர் ரவி. பிறந்து ஐந்து வயது வரை நடக்கவில்லை. ஏன், எழுந்து கூட நின்றதில்லை. அவரது அம்மா கஸ்தூரி செல்லாத கோயிலோ, டாக்டரோ  இல்லை. ரங்கோலி கோலம் போடுவதில், அவளை அடித்துக்கொள்ள கிருஷ்ணகிரியில் ஆள் இல்லை என்பார்கள். குழந்தையைப் பக்கத்தில் வைத்துக்கொன்டே பலவிதமான கோலம் போடுவாள். அதைப் பார்த்துப் பார்த்து, கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கில் ஏறிய  பைல் போல, குழந்தையின் நினைவில் அந்த நுட்பங்கள் ஏறிக்கொண்டன. குழந்தையை கோலத்தின்  அருகில் ஒரு நாள் விட்டுவிட்டு, வீட்டில் உள்ளே சென்றுவிட்டுத் திரும்பும் பொழுது, அதிர்ச்சியில் மூழ்கினாள்.

    குழந்தை இரண்டு கால்களை முட்டியிட்டபடி, முதுகைச் சற்று குனிந்தவாறு ஏதோ கோலமாவில் கிறுக்கிக்கொண்டு இருந்தது. அருகில் சென்று பார்த்தாள்.  அச்சு வைத்தாற்போல்  “ராதாகிருஷ்ணன்” படம். அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.  அவளைப்  பார்த்ததும், குழந்தை ஓடி வந்து கட்டிக்கொண்டது. இன்று அவரது பூ மற்றும் கோலமாவு கலந்து 3டீ  எபக்ட் ரங்கோலி இல்லாத கல்யாணம் இல்லை எனச்  சொல்லலாம்!

    மூன்று வாரங்கள் வேகமாக ஓடின. கல்யாண வீடு. ராதாகிருஷ்ணன் ரங்கோலி  இறுதி கட்டப்  பணிகளைச் சரி  பார்த்துக்கொண்டிருந்தார்.

    “ராதா சார், சூப்பர். தலைவர் அசரப் போறார் பாருங்க!” என்று  பின்னிருந்து ஒரு குரல். திரும்பி பார்த்தார். அது பி.ஏ. சண்முகத்தின் குரல்.

    “சந்தோசம் சார்” என்றார் நிறைவாக ராதாகிருஷ்ணன்.

    “உங்க பினிஷிங் டச் சூப்பர் சார்! கொரோனாவை  எதிர்க் கட்சி சிவப்பு நிறத்திலேயும், தடுப்பூசி நம்ம கட்சி பச்சை நிறத்துல கொடுத்ததுதான் ஹைலைட்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

    “என்ன இந்த ஆளு லூசு மாதிரி பேசறான். பேப்பர் எதுவும் பார்க்கலையா. அதுதானே கொரோனா கலர்” என்று மனத்தில் நினைத்தாலும், சும்மா வந்த நன்மதிப்பை நிராகரிக்க மனசில்லாமல் ஆமோதித்தவாறு சிரித்தார்.

    “சார், நான் உங்க பேமண்டை அக்கௌன்ட்டுக்கு அனுப்பிட்டேன். அப்புறம், உங்க காரு பத்தி சொன்னீங்களே, ரொம்ப பழைய காரு போல”

    “ஆமா சார், விண்டேஜ் வோக்ஸ்வேகன் பீட்டில் கார்.   நாலு மாசமா ஒழுங்கா ஓட மாட்டேங்குது.  அப்பா ஞாபகமா வச்சு இருக்கேன். எம்.பி. சாரும்  விண்டேஜ் கார் வச்சு இருக்காருன்னு கேள்விப்பட்டேன்.”

    சிறிய அட்டையை அவர் கையில் கொடுத்தவாறே “எம்.பி. சார் காரை இங்கதான் சர்வீஸுக்குக் கொடுக்கறாரு” என்று சொல்லும் பொழுதே அவருக்கு ஏதோ ஒரு போன் கால் வந்தது. மினிஸ்டர் கிட்ட இருந்து என்று சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்து சென்றார்.

    மறு நாள். கிழக்கு தாம்பரம் “செங்கதிர் கார் வோர்க் ஷாப்” பன்னிரண்டு மணிக்கெல்லாம் காரோடு ஆஜராகிவிட்டார். எம்.பி.யின் பரிந்துரை வேறு . இராஜ மரியாதையுடன் உள்ளே உட்கார வைத்தனர்.

    சில  மணி நேரங்கள்  கழிந்தன.  ஒரு சின்ன பையன் “சார், உங்களை ஓனர் கதிர் கூப்பிடறாங்க.”

    பட்டறையை நோக்கி நடந்தார்.  அங்கிருந்து சிவப்பு நிற  பீட்டில் கார் கம்பீரமாகத் தெரிந்தது.  அதன் சின்னமான ஹூட், அதாவது வாகன முகடுதான்,  அதன் ஹைலைட்.  சிறு வயதில், அவரது  அப்பா அதில் சறுக்கு மரம் போல, அவரை வைத்து விளையாடியது மனத்தில் வந்து ஓடியது, இல்லை சறுக்கியது!  பழைய பீட்டில் காருக்கு  என்ஜின் பின்பக்கம். யாரோ அங்கே  இருப்பது  தெரிந்தது.  அருகில் சென்று “கதிர் சாரைப்  பார்க்கணும்” என்றார்

    “நான்தான் செங்கதிர், இந்த வோர்க் ஷாப்  ஓனர்” என்றாள் அந்தப் பெண்!

    எந்த ஒரு சலனமும் அவர் முகத்திலோ, குரலிலோ இல்லை. “ஓ, அப்படியா, நீங்க கூப்பிடீங்கன்னு பையன் சொன்னான் ” என்றார்.

    “சார், நீங்க கடைசியா சர்வீஸ் கொடுத்த இடத்துல சொதப்பிட்டாங்க. அவங்க போட்ட இந்தப் பாகம், இதுக்குச் சரிப்படாது . என்ஜின் சீரா இயங்குவதற்கு அதன்  தேவைக்கேற்ப சரியான அளவு எரிபொருளையும் காற்றையும் கலந்து  கொடுக்கணும். இந்தப் பாகம்  செவென்ட்டிஸ்க்கு அப்புறம்  வந்த பீட்டல் காருக்குத்தான் சரியா இருக்கும். அதனாலதான் இந்தப் பிரச்சனை வந்து இருக்கு”

    “ஓ, அப்படியா, உங்க கிட்ட ஒரிஜினல் பார்ட்ஸ் இருக்கா?” எனச் சற்றுக் கவலையுடன் கேட்டார்.

    “உ.பி.யில் இருந்து ஆர்டர் செய்யணும். இரண்டு வாரத்துல வந்துடும்”

    “ஓகே செங்கதிர், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் பட்டதாரியா நீங்க? கார் சம்பந்தமான பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் வரவேற்பறையில்  பார்த்தேன்.”

    “இல்லை சார், அப்பாவோட வோர்க் ஷாப்.  அப்பா இப்ப இல்ல. நான்தான் பாத்துக்கிறேன். சின்ன வயசுல இருந்து இங்கேதான் இருக்கேன். அவரோடேயே இருந்து எல்லாம் கத்துக்கிட்டேன். அப்பாவுக்கு விண்டேஜ் கார் மேல ஒரு பைத்தியம்” என்று சொல்லிவிட்டு பலவிதமான விண்டேஜ் கார்களைப் பற்றியும், அதன் என்ஜின் அமைப்பு, வேலை செய்யும் விதம் என அரைமணி நேரம் பேசினாள்.

    சிறிது மூச்சு விட்ட பிறகு “சாரி, சார், ரொம்ப போர் அடிச்சுட்டேன் போல” என்றாள்

    “நாட் அட் ஆல்! உங்க அப்பா பைத்தியம்னா, நான் ஒரு வெறியன்” என்றார் சிரித்துக்கொண்டே.

    “ஓகே சார், ஸ்பேர்   பார்ட்ஸ் வந்த உடனே கால் பண்றேன். காரை ஷெட்டுல லாக் பண்ணி வைக்கறோம்” என்றாள்.  சிறிது நேரத்தில் வெளியே வந்தார்.

    நல்ல பசி, அருகிலேயே  சிற்றுண்டி உணவகம் .

    “சார், உள்ளே இடம் இல்லை, ஏதாவது மரத்துக்கு கீழே உள்ள ஒரு டேபிள்ல  உட்காருங்க” என்றான் சர்வர்.

    நன்கு உயர்ந்த மரங்கள். அதன்  கீழே சில மேஜைகளும்,  நாற்காலிகளும் இருந்தன. மசால் தோசை, போண்டோ மற்றும்  டீயும் ஆர்டர் செய்தார்.

    “ஹலோ சார், உங்கள் பக்கத்தில் உட்கார்ந்தா ஓகேவா” என்று பின்னிருந்து  சற்று பரிச்சயமான குரல் செங்கதிர்! “வாம்மா உட்காரு” என்றார்.

    “தனி டேபிள் இல்ல , அதான்  உங்ககிட்ட கேட்கலாமுன்னு நினைச்சேன்” என்றாள்.

    “அதனால என்னம்மா, ப்ளீஸ்” என்றார்

    நன்றி என்று சொல்லிவிட்டு அவர் எதிரில் உள்ள நாற்காலியில் அமர்ந்தாள் . செங்கதிருக்கு 25 வயது இருக்கும். மாநிறம், சற்று ஒடிசலான தேகம். சுருள் முடி. பார்த்தால் திரும்பப் பார்க்கத் தோன்றும்  முகம். க்ரீஸ் பட்டு பட்டு, அவளது மினுமினுப்பு சற்று குறைந்துவிட்டது.

    “நீங்க தப்பா நினைக்கலேன்னா , நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?”  எனக் கேட்டாள்.

    “ப்ளீஸ்”.

    “சார், நீங்க என்னைய முதல்ல பார்த்தப்ப, நீங்க ஒரு ஆண் கிட்ட பேசப் போகிறோம் என்று நினைச்சீங்க. ஆனா நான் யாரு என்று தெரிஞ்சதுக்கு அப்புறம், நீங்க ஆச்சரியப்படவே இல்லை. பொதுவா நான் தான் மெயின் மெக்கானிக் என்று தெரிஞ்சாலே வண்டியக் கூட கொடுக்க மாட்டாங்க. நீங்க ஒரு ரீஆக்ஷனும்   காட்டவில்லை” என்று சற்று ஆச்சரியமாகக் கேட்டாள் .

    சிரித்துக்கொண்டே “நான் நீ ஒரு பெரிய மெக்கானிக் என்று நினைச்சேன், ஆனா நீ மனோதத்துவரா இருப்ப போல! நீ அன்பே வா படம் பார்த்து இருப்பே என்று  நினைக்கிறேன். அதுல டீ . ராமசந்திரன் சார், தான் ஒரு புண்ணாக்கு வியாபாரின்னு சொல்லுவாரு”

    உடனே அவள் இடைமறித்து “சார், அதுக்கு புரட்சித் தலைவர் நீங்க கொடுத்த ரீஆக்ஷன் தான் கொடுப்பாரு. வியாபாரியோட திறமையைத்தான்  பார்க்கணும். அவன் செய்யற வேலையை  இல்லை என்பாரு” என்றாள் சற்று பெருமிதத்துடன்!

    “ஸ்மார்ட் கேர்ள்” என்று அவர்  சொல்லும்பொழுதே, அவள் ஆர்டர் செய்த கீரை வடை வந்தது.

    “சார், இங்க கீரை வடை பேமஸ்!”

    “ஓ, அந்த சர்வர் போண்டோ என்று சொன்னான். ஒரு வேலை மீந்து போய் இருக்கும்.” என்றார் நக்கலாக.

    “இன்னொரு கேள்வி. கடைப் பையனுக்கு உங்களைத்  தெரியும் போல, ரங்கோலி ராதாகிருஷ்ணன்தான் உங்க  பெயராமே?” என்று சற்று ஆச்சரியத்துடன்  கேட்டாள் .

    “என்ன நீ, என்னைய பத்தி தெரிஞ்சு வச்சுக்கிட்டு, குறுக்கு விசாரணை பண்ண வந்து இருக்க போல?”

    “என்ன சார், இப்படி சொல்றீங்க. எல்லாம் தற்செயல்” என்று சற்று கலக்கத்துடன் சொன்னாள் .

    ‘சும்மா விளையாட்டாகச் சொன்னேன், கேளு”

    “உங்களைப்  பார்த்தப்ப எங்க அப்பா ஞாபகம் வந்தது. அதான் ஒரு விஷயத்தை  உங்ககிட்ட கன்சல்ட் பண்ணலாமுன்னு நினைச்சேன்”

    அதைக் கேட்டதும் அவர் சற்று உணர்ச்சிவசப்பட்டார்.

    “சொல்லும்மா” என்ற பொழுது , அவர் ஆர்டர் செய்த உணவுப் பொருட்கள் வந்தன.

    “நம்ம இரண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. சாதாரணமா ஒரு ஆண் செய்யற வேலையை நானும், ஒரு பெண் செய்யற வேலையை நீங்களும் செய்யறீங்க” என்று சொல்லிவிட்டு ஏதோ சொல்ல நினைத்துச் சற்று தயங்கினாள் .

    “தயங்காம சொல்லும்மா”

    “நான் ஒரு பையனை லவ் பண்ணறேன் சார், அந்தப் பையனும் தான், நல்ல பையன், ஆனா அவனுக்கு நான் செய்யற வேலை  பிடிக்கலை. நான் என் வேலையை ரொம்ப நேசிக்கிறேன் சார்”

    “உன்னைப் பார்த்தவுடன் எனக்கு தெரிஞ்சது செங்கதிர். உனக்கு எந்த மாதிரியான உதவி வேண்டும்?” என்று கனிவுடன் கேட்டார்.

    “உங்களுக்கு இந்த மாதிரி பிரச்னை உங்க மனைவி கிட்ட இருந்து வந்து இருக்கா, நீங்கள் அதை எப்படி சமாளச்சீங்க”

    “ஓ அதுவா” என்று சிரித்துக்கொண்டே தொடர்ந்தார். “செங்கதிர், என் மனைவி மாலதி முதல் முதல்ல  என் அலுவலகத்திற்கு வந்தபோது, ரொம்ப டென்ஷன் ஆயிட்டா. கிட்டத்தட்ட 40 பெண்கள். அவளுக்கு நம்பிக்கை வரணும் என்று அவளைப் பல நாள் ஆபீஸ்ல உக்கார வச்சேன். அவ வேலைக்கு வெச்ச ஆண்கள் மூலமாக, வேலை பார்த்த  பெண்களுக்குப் பல பிரச்சனைகள். கொஞ்ச நாட்களில் என்னோட தொழில் ஆர்வம், பெண்கள் கிட்ட நடந்துக்கிட்ட முறை, எவ்வளவு குடும்பங்கள் என்னை நம்பி இருக்குன்னு எல்லாத்தையும்  புரிஞ்சுக்கிட்டா. இப்ப எல்லாம் அவள் என் அலுவலகத்திற்கு வருவதில்லை. அந்தப் பையனுக்கு  நீ செய்யற வேலை பிடிக்கலையா இல்ல, ஆண்களோட வேலை பார்க்கிறது பிடிக்கலையா?” எனச் சரியான கேள்வியையும், தன் தட்டில் இருந்த ஒரு போண்டோவையும்  அவள் முன் வைத்தார்!

    “சரியா சொல்ல மாட்டேங்கிறான் சார்”

    “அப்ப அவனை உன் பட்டறையில்ல ஒரு நாள் வந்து இருக்கச் சொல்லு . உன்கிட்ட வேலைப் பார்க்கிறவங்க, உன்னை எப்படி மதிக்கிறாங்கன்னு என்பதைப் பார்த்தாலே திருந்திடுவான். இல்லையின்னா, அவனைக்  கூட்டிக்கிட்டு என் வீட்டுக்கு ஒரு நாள் வா, நான் அவன்கிட்ட பேசறேன்” என்றார் பெருந்தன்மையுடன்.

    “ரொம்ப தேங்க்ஸ் சார்! அப்படியே செய்யறேன்” என்றாள் சற்று தெளிவுடன்.

    “அது இருக்கட்டும்., நான் உன்கிட்ட உன் பட்டறையிலேயே ஒரு விஷயம் பத்தி பேச நினைச்சேன். டைம் கிடைக்கலை. இப்ப சொல்லலாமுன்னு தோணுது”

    “என்ன விஷயம் சார்?” என்று ஆச்சரியத்துடன்  கேட்டாள்.

    “நீ ஒரு  ஜி.டி. நாயுடு மாதிரி!  படிப்பறிவு இல்லை, ஆனா உனக்கு தொழில்நுட்ப அறிவு ஜாஸ்தி. ஒரு பாடப் புத்தகத்துல இருக்கற விஷயத்தை, நீ  விளக்கின விதம்   எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.  எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கறே!”

    “ஒரு ஆர்வம் தான் சார், அப்பா கிட்ட இருந்து கத்துக்கிட்டேன்.”

    “மின்சார கார்தான் விரைவில் இந்த உலகை ஆளப் போகிறது என்று சொன்னப்ப எல்லாரும் கிண்டல் பண்ணாங்க.  ஆனா இன்னிக்கு உலகத்துல ‘எலான் மஸ்க்’ டெஸ்லா முதலாளிதான் பெரிய  பணக்காரராக இருக்காரு. “

    “சார் , இதை ..” என்று  ஏதோ சொல்ல ஆரம்பித்த பொழுது, சற்று கையை உயர்த்தி, பொறுமையாக இருக்கும்படி சைகை செய்தார் .

    தேடிச் சோறுநிதந் தின்று என்ற  மகா கவி பாரதியார் பாடலைக் கேட்டிருக்கிறீயா?”

    “சார், அந்தப் பாடல்  பெரும்பாலான நேரங்களில்  எனக்கு ஒரு ஊக்கம் தரக் கூடிய பாடல்” என்று சொன்னாலும் அவளுக்கு உள் மனத்தில் இன்னும் குழப்பமாகவே இருந்தாள் .

    “என் வேலை ரொம்ப சுலபமா போச்சு.  அவர் தேடித் தேடி உணவு உண்டு, பல வெட்டிக் கதை பேசி, மனசு நொந்து பலர் கஷ்டம் படும்படி நடந்து, நரைச்சு கிழவன் ஆகி யாருக்கும் பயன் இல்லாமல் தனக்கும் பயன் இல்லாமல் வாழ்கிற சராசரி மனிதன் மாதிரி தான் வீழ்வேன் என நினைத்தாயோன்னு கேட்பாரு. “

    “ஆனா அதுக்கும், எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு, புரியலை!”

    “இரு, அவசரப்படாதே, சொல்லறேன்.  உன் வாழ்க்கை முடியறப்போ, நீ சில  ஆயிரம் கார் ரிப்பேர் பண்ணி இருப்ப, நல்ல சம்பாதிச்சும்  இருப்ப. நீ போன பிறகு, ஆனா நீ வந்த தடம் யாருக்கும் தெரியாது. வித்தியாசமா யோசி. எரிபொருள் உட்செலுத்தும் விதத்தில் நீ  ஒரு சின்ன மாற்றம் கண்டு பிடிச்சாலே, ஒரு வருசத்துக்கு இந்தியா பல ஆயிரம் கோடி  சேமிக்கலாம். இந்தியாவுல நிறையா பழைய கார் ஓடுது. நான் விண்டாஜ் காரை சொல்லலை, 90 மற்றும் இரண்டாயிரத்தில் வந்த கார்களைப்  பத்திதான் சொல்லறேன். உனது புத்தக அறிவையும், நடைமுறை அறிவையும்  வச்சு என்ன செய்யலாமுன்னு யோசி”

    அவள் முகத்தில் திடீரென்று 1000 வாட்ஸ் பல்ப் போட்டது போல பிரகாசம்.

    “சார், எனக்கு  எப்பவும் வித்தியாசமா ஏதாவது செய்யனும்னு என்று ஆசை சார்.  சரியான வழிநடத்தல் இல்லை சார்.  நீங்க சொன்னதுக்கு அப்புறம் ஒரு கிளாரிட்டி கிடைத்தது சார் ” என்றாள் சந்தோசத்துடன்.

    “நான் உனக்கு ஒரு கோடுதான் போட்டுக் கொடுத்தேன். ரோடு போடறது உன் கையில்  தான் இருக்கு.  எந்த மாதிரியான விசயத்துல ஜெயிக்கணுமுன்னு முதல்ல கண்டுபிடி. வழி தானே பிறக்கும் . ஆல் தி பெஸ்ட்!”

    சிறிது நேரத்தில் விடைபெற்றாள் . சிறிது தூரம் நடந்தவுடன்  திரும்பி பார்த்தாள். அவளுக்கு அங்கு இருந்த மரம் ஒரு போதிமரமாய் தான் தெரிந்தது. யாருக்குத் தெரியும்.  ஒரு லேடி ஜி.டி. நாயுடுவோ , எலான் மஸ்க்காகவோ அவள்  இன்னும் சில வருடங்களில் வரலாம்! அவளுக்குள் இருந்த விளக்கின் திரியைச் சற்று தூண்டிவிட்டார்  அவ்வளவுதான். ஆனால் இது போன்ற வழி நடத்தல் இல்லாமல், தடம் மாறிய ரயில் வண்டிகள் தான் இங்கு அதிகம்!

    Share
  • மாற்றுக் கோணங்கள் (சிறுகதை)

    மாற்றுக் கோணங்கள் (சிறுகதை)

    செ. கோட்டாளம்

    வீட்டு வேலைகளெல்லாம் முடிந்துவிட்டன. இனி செய்வதற்கு ஒன்றுமில்லை.

    பிள்ளைகள் வீட்டிலிருந்தவரை ஓய்வில்லாமல் ஏதாவது வேலை இருந்துகொண்டேயிருந்தது. அவர்கள் வளர்ந்து வெளியேறியபின் வீட்டிலும் எங்கள் வாழ்விலும் நிறைய வெற்றிடங்கள் தோன்றியதுபோலிருந்தது. அந்த வெற்றிடங்களை கணவரும் நானும் ஒருவருக்கொருவர் நிரப்ப முயன்றோம்.

    அவரருகில் வந்து அமர்ந்தேன். அவரோ படிப்பதில் கவனமாயிருந்தார். சற்றுநேரம் தொந்தரவுசெய்யாமலிருந்தேன்.

    சட்டென்று திரும்பி “என்ன?” என்று கேட்டார். நான் என்னையுமறியாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்போலும். அதை உணர்ந்து சற்றே வெட்கி, “ஒன்றுமில்லை,” என்று சொல்லி வேறுபக்கம் திரும்பிக்கொண்டேன்.

    இந்த வயதிலும் அவரது கம்பீரத்தோற்றம் என்னை கவரவே செய்தது. திருமணமான புதிதில் அவர்கவனத்தை ஈர்க்க நான் செய்த குறும்புகளை நினைத்துக்கொண்டேன்.

    அவர் படித்துக்கொண்டிருந்த நூலை மேசையில் வைத்துவிட்டு, மீண்டும் என்பக்கம் திரும்பி, “என்ன சிரிப்பு?” என்றார். ஐயோ, மறுபடியும் மாட்டிக்கொண்டேன்.

    “ஒன்றுமில்லை. நம் தொடக்கநாள்களை நினைத்துக்கொண்டேன்.”

    அவர் புன்னகைத்து, “அப்படியா? என்ன நினைத்துக்கொண்டாய்?” என்றார்.

    “இப்படித்தான் நீங்கள் எதையாவது படித்துக்கொண்டிருப்பீர்கள். நான் வந்து உங்களை நோண்டுவேன்.”

    “அப்போதெல்லாம் நான் படிக்கவேண்டியது நிறைய இருந்தது. என் தொழில் அப்படி!”

    “இன்னும் படித்துக்கொண்டுதானிருக்கிறீர்கள்!”

    “இப்போது பொழுதுபோக்குக்காக நான் விரும்புவதை படிக்கிறேன். படிக்கவேண்டிய கட்டாயமில்லை.”

    “ஆம். இப்போதாவது நான் ஒருத்தி இருக்கிறேனே என்று திரும்பிப்பார்த்து பேசுகிறீர்கள்!”

    “முன்பு மட்டுமென்ன? நீ அருகில் வந்தால் புத்தகங்களை தூக்கியெறிந்துவிடுவேனே!”

    இருவரும் ஒரேநேரத்தில் தொடங்கி பெரிதாக சிரித்தோம். அந்த சிரிப்பில் ஏராளமான மறைபொருள்கள் பொதிந்து கிடந்தன.

    “நாம் தனியாயிருந்து எவ்வளவு கூத்தடித்திருக்கிறோம்!” என்றேன்.

    “ஆம். என் வேலை வெளியூரிலிருந்ததால் தனிமை கிடைத்தது. இது எல்லாருக்கும் கிடைப்பதில்லை.”

    “அதே தனிமை இப்போது மீண்டும் கிடைத்திருக்கிறது.”

    “அப்படியானால் இனியும் என்னை படிக்க விடமாட்டாய்?”

    “மாட்டேன்! என்னுடன் பேசுங்கள்!”

    அவர் சிரித்து, “என் தலைவிதி! எங்கு போனாலும் எனக்கு இதே தொல்லைதான்!”

    “என்ன, வேறு யாருமா?”

    “சீ, என்ன நீ? நான் கல்லூரியில் படித்தபோது என் நண்பன் வரதன் செய்த குறும்புகளை சொன்னேன்.”

    “ஆமாமாம். அடிக்கடி சொல்லியிருக்கிறீர்கள். அவர்மீது எனக்கு பொறாமையாயிருக்கிறது.”

    அவர் வெடிச்சிரிப்பு சிரித்து, “போயும் போயும் அவன்மீதா உனக்கு பொறாமை? நீ பொறாமைப்பட எத்தனையோபேர் இருக்கிறார்கள்,” என்று என்னை சீண்டினார்.

    “யார், மாலாவா?” என்று நானும் அவரை சீண்டினேன்.

    “ஆம். அவளும் ஒருத்தி.”

    “மொத்தம் எத்தனைபேர்?”

    “எத்தனையோபேர்! அது சரி, மாலாவைப்பற்றி உனக்கு எப்படித்தெரியும்?”

    “நீங்கள்தானே சொல்லியிருக்கிறீர்கள்! அவர்களை நீங்கள் காதலித்திருக்கிறீர்கள். அவர்கள் உங்களை திரும்பிக்கூட பார்க்கவில்லை.”

    “அதெல்லாம் வயதுக்கோளாறு; ஒரு இனம்புரியாத கவர்ச்சி! காதலென்றால் என்னவென்று நீ வந்தபிறகுதானே தெரிந்தது!”

    “உக்கும்! ஒன்றும் ஐசுவைக்கவேண்டாம்!”

    இதுபோன்ற பல பொருளற்ற உரையாடல்களுக்காக எங்களுக்கு நிறைய நேரமிருந்தது. மற்றொருமுறை எங்கள் நண்பர் மலரைப்பற்றிய உரையாடல் எழுந்தது. பாவம், அவர் அண்மையில் கணவரையிழந்த துயரத்திலிருந்து மீளாமலிருந்தார்.

    “அவர்களுக்கு கணவரே உலகம். வேறு சிந்தனை ஏதும் இல்லாமல் இருந்து பழகிவிட்டார்கள்,” என்றார் என் கணவர்.

    “ஆம். அவர் இறந்ததும் எப்படி துடித்துவிட்டார்கள்!”

    சற்றே சிந்தனையிலிருந்தபின் ஒரு பெருமூச்சை வெளியிட்டார். பிறகு சொன்னார், “இன்னும் நம் பெண்கள் தமக்கென்று ஒரு வாழ்வையும் தமக்கென்று ஒரு உலகையும் அமைத்துக்கொள்வதில்லை. கணவரும் குழந்தைகளுமே அவர்களுடைய உலகமாகிவிடுகிறது,” என்றார். அவர் படித்த நூல்களிலிருந்து எதையோ எடுத்துவிட்டார்போலும்.

    “இப்போது கொஞ்சங்கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகிறது. ஆனால் மலரும் அவர்கணவரும் பழங்காலத்தினர்.”

    “நாம் அவர்களைவிட மிகவும் இளையவர்கள் அல்லோம். நாமும் அப்படித்தான் இருக்கிறோம்.”

    “ஆம். நம் பிள்ளைகளாவது அப்படியிருக்கமாட்டார்கள் என்று நம்புவோம்,” என்றேன்.

    “இப்போது மலர் எப்படியிருக்கிறார்கள்? நீ பேசினாயா?”

    “ஆம். அன்று பேசினேன். என்னுடன் பேசுவதில் சற்று ஆறுதலடைகிறார்கள். நாமும் அடிக்கடி போய் பார்க்கவேண்டும்,” என்றேன்.

    நான் அவருக்கு நெருங்கிய தோழி. என்னுடன் எதையும் மனந்திறந்து பேசுவார். எனக்கு தன் துயரங்களை சொல்வதில் அவருக்கு ஒரு நிம்மதி!

    மற்றொருமுறை மாலாவைப்பற்றியும் வரதனைப்பற்றியும் பேச்சு எழுந்தது.

    மாலாவுக்கும் இரண்டு பிள்ளைகளாம். அவர்களும் வளர்ந்திருப்பார்கள். இவர் அவருடன் நேரடித்தொடர்பு வைத்துக்கொள்வதில்லை; எனினும் நண்பர்கள்மூலம் அவரைப்பற்றி தவறாமல் தெரிந்துகொள்வார். ஒருமுறை வேலன் என்ற ஒரு நண்பர் வீட்டுக்கு வந்திருந்தபோது இவர் அவரிடம் மாலாவைப்பற்றி அக்கறையுடன் விசாரித்ததில் எனக்கு இவர்மீது கோபமே வந்துவிட்டது.

    அன்று எங்கள் வீட்டுக்கு வந்தபோதே வேலனுக்கு புற்றுநோய் இருந்திருக்கிறது; அது எங்களுக்கு தெரியாது. இரண்டு ஆண்டுகள் கழித்து தம் நாற்பத்தாறாம் வயதில் இறந்துவிட்டார். இவரும் இவர்நண்பர்களும் மிகவும் துயரமடைந்தனர். வேலன் திருமணமே செய்துகொள்ளாமலிந்ததால் அந்த துயரத்தில் பங்கேற்க மனைவிமக்கள் இல்லை.

    “உங்கள் நண்பர் ஏன் திருமணமே செய்துகொள்ளவில்லை?” என்றேன்.

    “அதுதான் எனக்கும் புரியாத புதிராயிருக்கிறது. நானும் பலமுறை கேட்டுவிட்டேன். சிரித்து மழுப்பிவிட்டான். வரதனும் அப்படித்தான்.”

    இதைச்சொன்னதும் அவர்முகத்தில் ஒரு திடீர்மாற்றம் ஏற்பட்டது. பல உணர்ச்சிகள் அவரை தாக்கியதை கண்டேன்.

    “எவ்வளவு முட்டாளாயிருந்தேன்!” என்றார். அவர்கண்கள் நீர்கோத்ததைக்கண்டு நான் பதறிவிட்டேன்.

    “என்னங்க? என்ன ஆனது? திடீரென்று இப்படி ஆகிவிட்டீர்கள்!”

    “வேலனும் வரதனும் திருமணஞ்செய்துகொள்ளாமலிருந்ததன் காரணம் எனக்கு விளங்குகிறது,” என்று சொல்லி சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார்.

    “என்ன?” என்று கேட்டுவிட்டு அவர் பதில்சொல்ல காத்திருந்தேன்.

    மென்குரலில் நிதானமாக சொன்னார், “அவர்கள் காதலர்கள்!”

    “நானும் அப்படித்தான் நினைத்தேன். ஏதோ காதல் தோல்வியாயிருக்கலாம். அல்லது காதலிகளை வைத்திருந்திருக்கலாம்,” என்றேன்.

    “நான் சொல்வது உனக்கு புரியவில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் காதலர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.”

    நான் இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தேன். எனக்கு விளங்கவில்லை. விளங்கியது; ஆனால் தடுமாறினேன். என் மூளை இரண்டுபகுதிகளாக விடுபட்டு தவறான திசையமைவில் மீண்டும் சேர்ந்துகொண்டதுபோலிருந்தது. கண்ணாடியில் பார்க்கும்போது நம் முகம் தெரியாமல் முதுகு தெரிந்தால் எப்படியிருக்கும்? அப்படி உணர்ந்தேன்.

    “அப்படியா நினைக்கிறீர்கள்?” என்றேன். வேறேதும் சொல்லத்தோன்றவில்லை. ஆனால் ஐயமில்லை. அவர்களிருவருடைய வாழ்க்கைகளையும் மாற்றுக்கோணத்தில் பார்த்தபோது எல்லாமே தெளிவானது. கோளாறு நம் கண்ணோட்டத்திலே இருந்திருக்கிறது. குருடிக்கு திடீரென்று கண்திறந்ததுபோலிருந்தது.

    இருவருமே படித்த அறிவாளிகள். சமுதாயம் மதிக்கும் பெரிய வேலைகளிலிருப்பவர்கள். வேறு காலக்கட்டமோ இடமோவாயிருந்தால் அவர்கள் தங்கள் உறவை வெளிப்படையாக அறிவித்திருக்கலாம். ஒரே வீட்டில் வாழ்ந்திருக்கலாம். ஆனால் இப்போதைய உலகில் அவர்களுக்கு இடமில்லாததால் மறைவில் ஒருவருக்கொருவர் அன்புசெலுத்தி வாழ்ந்திருக்கின்றனர்,

    பலநாள்களுக்குப்பிறகும் என் கணவர் துயரத்துடனே காணப்பட்டார். நான் அவரது கவனத்தை திருப்பி கலகலப்பாக்க முயன்றேன். அவர்மனத்தின் உள்ளெண்ணங்களை பகிருமாறு ஊக்கினேன்.

    “மலர் கணவரையிழந்த துயரத்தில் துடித்ததுபோலவே வரதனும் வேலனையிழந்து துடித்திருப்பான். மலருக்கு நீ இருப்பதுபோல் வரதனுக்கு நான் நெருங்கிய நண்பன். வேலன் இறந்ததும் வரதன் முதல்வேலையாக என்னிடமே பேசினான். ஆனால் நீ மலருக்கு அளித்த ஆறுதலை நான் வரதனுக்கு அளிக்கவில்லை. அவனது கவலையை நான் கற்பனையிலும் காணவில்லை. அவன் காதலனை இழந்தது மட்டுமல்லாமல் தன் துயரத்தை வெளியிடவியலாத நிலையிலும் தனியே தவித்திருப்பான்.”

    அவரை என்மீது சாய்த்துவைத்து ஆற்றுப்படுத்த முயன்றேன். சொல்வதற்கு ஏதும் கிடைக்கவில்லை. நாம் வாய்கிழியப்பேசும் இலக்கியமும் பண்பாடும் வாழ்க்கைமுறையும் விழுமியங்களும் இந்த நிலையை கையாள்வதற்கு பயிற்சியளித்திருக்கவில்லை. என்மீது சரிந்து குழந்தைபோல் அழுதுகொண்டிருந்தவரை உச்சந்தலையில் முத்தமிட்டு முதுகில் தடவினேன்.

    வரதனுக்கு இவர்மீதே முதலில் காதல் என்பதை இவர் உணரவில்லை; நான் சுட்டிக்காட்டப்போவதில்லை.


    About the Author

    J. Kottalam is retired after serving in the scientific and technological research and development fields. He was born in 1954 in Kotkai of southern Tamilnadu in India. Having received MSc from Indian Institute of Technology at Madras and PhD from Michigan State University in USA, he worked at institutions such as University of California at San Diego, Scripps Research Institute, Harvard University and Cray Research with scholars including Nobel laureate Martin Karplus. He contributed to developing numerical algorithms for simulating the structures and dynamics of macromolecules such as proteins and nucleic acids in supercomputers. His further contributions are in the fields of Computational Fluid Dynamics and Statistical Physics. Now he is engaged in developing aids necessary for bringing the scientific wealth available in English to Tamil in a planned systematic manner.

    Share
  • கண்ணைக் கட்டிக்கொண்டு சதுரங்கம் விளையாடி அசத்தல்

    கண்ணைக் கட்டிக்கொண்டு சதுரங்கம் விளையாடி அசத்தல்

    இளம் வயதில் சதுரங்கம் விளையாடினால் பல வெற்றிகளை எளிதில் பெறலாம் – குவைத் மாணவர் பேச்சு 

    தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நிகழ்ச்சி. குவைத் நாட்டில் பயிலும் மாணவர், தம் கண்களைக் கட்டிக்கொண்டு செஸ் விளையாண்டு மாணவர்களை ஆச்சரியத்தில் அசத்தினார்.

    ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

    குவைத் நாட்டில் ஆசிரியையாகப் பணிபுரியும் சாந்தி முன்னிலை வகித்தார்.

    குவைத் நாட்டில் ஐந்தாம் வகுப்புப் பயிலும் மித்திலேஷ் ரஞ்சித்குமார் கண்ணைக் கட்டிக்கொண்டு பிற மாணவர்களுடன் செஸ் விளையாண்டு அசத்தினார். மாணவர்கள் அனைவரும் ஆச்சிரியமாகப் பார்த்தத்துடன் பல்வேறு சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர். விளையாண்டு முடிந்த பிறகு மித்திலேஷ் மீண்டும் தான் நகர்த்திய காய்களையும், தன்னுடன்  விளையாண்டவர் நகர்த்திய காய்களையும் மிக அழகாக நினைவில் வைத்து முழு விளையாட்டையும் நகர்த்திக் காண்பித்தார்.

    “கண்ணைக் கட்டிக்கொண்டு விளையாடுவதற்குத் தொடர் பயிற்சியே காரணம்” என்று கூறினார்.

    நிறைவாக, ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

    பட விளக்கம் :  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குவைத் நாட்டில் பயிலும் மாணவர் கண்ணைக் கட்டிக்கொண்டு செஸ் விளையாண்டு மாணவர்களை ஆச்சரியத்தில் அசத்தினார்.

    வீடியோhttps://www.youtube.com/watch?v=PTdFVhD0X3w

    Share
  • ஆகஸ்டு 19இல் மேதகு-2 வெளியீடு ; விரைவில் தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் வெளியீடு

    ஆகஸ்டு 19இல் மேதகு-2 வெளியீடு ; விரைவில் தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் வெளியீடு

    கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழத் தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான மேதகு படம் வெளியானது. தற்போது, அதன் இரண்டாம் பாகமாக, மேதகு திரைக்களம் சார்பில் தயாரிப்பாளர்களே இல்லாமல் ‘மேதகு-2’ படம் தயாராகியுள்ளது.

    தஞ்சாவூரை சேர்ந்த தஞ்சை குகன் குமார், அயர்லாந்தில் உள்ள கவிஞர் திருக்குமரன் மற்றும் டென்மார்க்கை சேர்ந்த சுமேஷ் குமார் ஆகியோர் இதன் தயாரிப்பு நிர்வாகிகளாக செயல்பட்டு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத் தயாரிப்பு நிர்வாகத்தில் தமிழன் சதீஸ், முனீஸ், பிரபாகரன் மற்றும் தங்க பிரபா ஆகியோர் உறுதுணையாகப் பணிபுரிந்துள்ளார்கள்.

    சிங்களப் பேரினவாத அரசால் தமிழ் மக்களின் இடத்திலேயே அவர்களுக்குச் சொந்தமான உரிமைகள் மறுக்கப்பட்டதையும் அவர்களுக்கு சம உரிமை கிடைக்காததால் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழல் உருவானதையும் 1950-களில் இருந்து எப்படி எல்லாம் தமிழர்கள் பிரச்சனைகளைச் சந்தித்தார்கள் என்பதையும், அவற்றை எப்படித் துணிச்சலாக எதிர்கொண்டார்கள் என்பதையும் பற்றி முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருந்தது. இதில் தமிழீழத் தலைவர் பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்வியல் மட்டுமே சொல்லப்பட்டிருந்தது.

    குறிப்பாக, தமிழர்களுக்குத் துரோகம் இழைத்த ஒருவரைக் களை எடுப்பதாகவும் அவர்களை சிங்கள அரசு தேட ஆரம்பிக்க, அவர்கள் காட்டுக்குள் தலைமறைவு ஆவதாகவும் முதல் பாகம் முடிவடைந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் அடுத்த 12 வருடக் காலக்கட்டத்தில் என்ன நடந்தது என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    போராட்ட உணர்வு கொண்ட இளைஞர்களை ஒன்று சேர்த்து, தமது உரிமையை மீட்டெடுப்பதற்காக புதிய இயக்கத்தை உருவாக்குவதையும் அதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் சோதனைகள், அவர்களுக்கு ஏற்படும் உணர்வு மிக்க சம்பவங்கள், அதனால் ஏற்படும் இழப்புகள், தியாகங்கள் என இந்த இயக்கம் உருவானது எப்படி, அதற்கு இந்தியாவில் இருந்து மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி, மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் தமிழகத்தில் இவர்களுக்கு பயிற்சி பெற எப்படி உதவியாக இருந்தார்கள் என்பதெல்லாம் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெறுகிறது.

    1983ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில் இலங்கை முழுவதும் நாடளாவிய பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான இன வன்முறை நடைபெற்ற கருப்பு ஜூலை கலவரத்தையும், அதனால் ஒன்றரை லட்சம் மக்கள் உலகெங்கும் அகதிகளாகப் புலம் பெயர்ந்த துயர நிகழ்வையும் இதில் காட்டுவதுடன் அதற்கு காரணம் என்ன, அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதையும் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

    அதே போன்று 1981ஆம் ஆண்டு தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு யாழ் நூலகத்தைத் தீக்கிரையாக்கிய துயரமான சம்பவம் நடைபெற்றது. பெரிய அளவில் வெளியே தெரியாத இந்தச் சம்பவத்தின் பின்னணியையும் இதன் மூலம் தெரியப்படுத்தி உள்ளனராம்.

    கதாநாயகனாக, தமிழீழத் தலைவர் கதாபாத்திரத்தில் கௌரிசங்கர்  நடித்துள்ளார். கௌரவத் தோற்றத்தில் நாசர் நடித்துள்ளார்.

    இரா.கோ யோகேந்திரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதை மற்றும் வரலாற்று ஆய்வில் மேதகு திரைக்களக் குழுவினருடன் சுபன் முன்னின்று உதவி புரிந்துள்ளார்.

    இசையமைப்பாளர் பிரவின் குமார், ஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன், படத்தொகுப்பு ஆதித்யா முத்தமிழ் மாறன் (குவியம் ஸ்டுடியோ) கலை இயக்குனர் இன்ப தினேஷ், சண்டைப் பயிற்சி ஜாக்குவார் தங்கம் மற்றும் அவரது மகன் விஜய் ஜாக்குவார் தங்கம்,  பாடகர்கள் சைந்தவி,  புதுவை சித்தன் ஜெயமூர்த்தி என இந்தப் படத்தின் தொழில்நுட்பக் குழுவும் மிகப்பெரிய பங்களிப்பை இந்தப் படத்திற்காக வழங்கியுள்ளனர்.

    வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி இந்தப் படம், வெளிநாட்டுத் திரையரங்குகளில் உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. இப்போதே ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா ஆகியவற்றில் முன்பதிவு தொடங்கியுள்ளது.

    ஏற்கெனவே மேதகு படத்தின் முதல் பாகத்திற்கு இந்தியாவில் சென்சார் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டதால் இந்த இரண்டாம் பாகத்திற்கும் சென்சார் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து, அனைத்து மக்களுக்கும் இந்தப் படம் சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்தப் படத்தை வெளியிடுவதற்காகவே தமிழ்ஸ் ஓடிடி (tamils OTT) என்கிற புதிய ஓடிடி தளத்தையும் தொடங்கியுள்ளனர்.

    தியேட்டர்களில் படம் வெளியான சில நாட்களிலேயே தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் (www.tamilsott.com) இந்த படம் வெளியாக இருப்பதால், படத்தைத் திரையிட முடியாத இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் அரபு நாடுகள் ஆகியவற்றில் உள்ள மக்களும் இந்தப் படத்தை பார்க்க முடியும்.

    முன்னதாக இதற்குப் பழ. நெடுமாறன், பெ. மணியரசன், அரசியல் தலைவர்கள் – திருமாவளவன், ராமதாஸ், வேல்முருகன், தனியரசு,  நடிகர்கள் – சத்யராஜ், சசிகுமார், விஷால், ஜி.வி பிரகாஷ் ஆகியோர் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share
  • அறிவிப்பு: 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூர்

    அறிவிப்பு: 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூர்

    மதிப்பிற்குரிய தமிழறிஞருக்கு,

    வணக்கம். அனைவரும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறோம். இரண்டாண்டுகளுக்குப் பிறகு தங்களை மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த மின்னஞ்சல் வழியாக சில முக்கிய அறிவிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.

    1. பத்தாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படைத்த ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய முதல் தொகுப்பு சூலை 26, 2022 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. எளிமையாக மற்றும் சீரிய முறையில் நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் திரு. முனைவர் பொன்னவைக்கோ அவர்கள் தலைமையில், மன்றத்தின் துணைத்தலைவர் திரு. முனைவர். சுந்தரமூர்த்தி மற்றும் நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்கள் திரு.கோ.விசுவநாதன் (வேந்தர், VIT, பல்கலைக்கழகம்) ,தொழிலதிபர் திரு. வி.ஜி. சந்தோசம் ஆகியோர் வெளியிடச் சிங்கப்பூரைச் சார்ந்த ‘தி மில்லினியல் தமிழ்’ அமைப்பின் தலைவர் திரு. மணியம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

    2. பதினோராம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்த மாநாடு சிங்கப்பூர் நகரில் வரும் ஆண்டு 2023, மே மாதம் 26 முதல் 28 வரை நடைபெறும். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்துடன் சிங்கப்பூரைச் சார்ந்த ‘தி மில்லினியல் தமிழ்’ அமைப்பு இணைந்து இந்த மாநாட்டை நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் தாங்கள் அனைவரும் பங்கேற்க அன்புடன் அழைக்கின்றோம். இந்த மடலில் விரிவான செய்திக்குறிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    நன்றி.

    நிர்வாகக்குழு
    உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்

    ஆய்வுக்குழு
    11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
    சிங்கப்பூர்

    Announcement: 11th International Conference – Seminar on Tamil Studies

    Dear Scholar,

    Greetings.

    Hope you all are doing well and have come out of the pandemic safe and healthy. At this time we want to provide you with few updates.

    1. The 10th International Conference- Seminar on Tamil Studies proceedings was released in Chennai on July 26, 2022.

    2. The next 11th International Conference- Seminar on Tamil Studies to be held on May 26-28, 2023 in Singapore has been announced.

    We look forward to your participation.

    We will soon share more details about the Conference theme and topics through this email and also on the 11th Conference website https://icsts11.org and http://iatrofficial.org.

    Nanri,

    Executive Committee
    International Association of Tamil Research (IATR)

    Academic Committee
    11th International Conference- Seminar on Tamil Studies

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! -19

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! -19

    முனைவர் ச.சுப்பிரமணியன்

    பண்ணைக் கவிக்கோ துரை.வசந்தராசன் எழுதிய ‘குற்றங்களே தீர்ப்பு எழுதினால்’ என்னும் கவிதை நூல் பற்றிய செங்கோணப் பார்வை

    முன்னுரை

    ‘விளையும் பயிர் முளையிலே’ என்பர். தம்பி வசந்தராசன் விளைந்த பயிர்தான். இதன் முளை அன்று வெளியான இந்த நூலில் தெரிந்ததுதான். விளைந்த பயிரின் மகத்துவம் உணரப்பட்டதா என்பதுதான் என்னுள் எழுந்த வினா. ஆற்றல் மிக்க கவிதைப் படைப்பாளர்கள் அரியர். அந்த அரியருள்ளும் அரியர் இவர். நாற்பதாண்டுகளுக்கு முன் அதாவது இவருக்கு முப்பது வயது கூட எட்டாத காலத்தில் இன்னும் தெளிவாகச் சொன்னால் வாழ்க்கைச் செலவுக்கே வரும்படி இல்லாத சூழலில் தன்னைப் பற்றியும் தன் எதிர்காலத்தைப் பற்றியும் கவலையும் பதைப்பும் கொண்டிருக்க வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் சமுதாயத்தைப் பற்றி எண்ணியிருக்கிறார். எழுதியிருக்கிறார். படித்திருக்கிறார். பாடியிருக்கிறார். அவற்றையெல்லாம் பொறுப்புடன் தொகுத்து ஒரு நூலாகவும் வடிவமைத்திருக்கிறார். எத்தனைப் பேர் இப்படிச் செயல்பட்டிருக்கிறார்கள் என்று கணக்கெடுத்தால் தம்பி வசந்தனின் கொள்கை உரம் புரியும். கோட்பாட்டின் நெறி தெரியும். இன்றைக்குக்கூட எழுதுபவர்கள் தங்கள் படைப்புக்களை நகல் எடுத்து வைத்துக் கொள்வதில்லை. அவர்கள் மீதே அவர்களுக்கு நம்பிக்கையில்லை. அனைத்துச் சிந்தனைகளும் ஆவணப்படுத்தப்படல் வேண்டும். அப்படி ஆவணப்படுத்திய காரணத்தால்தான் இன்றைக்கு நூல் வெளிவந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பும் அதனைப் படிக்கிறோம். சிந்திக்கிறோம். விவாதிக்கிறோம். சிந்தனை ஒரு கருவூலம்!. அது பொதுவெளிக்கு வந்தபின் பொதுச்சொத்தாகி விடுகிறது. கருவூலமாகிய பொதுச்சொத்தைக் காக்க வேண்டியது நம் கடமையல்லவா? இந்தப் பின்புலத்தில் தம்பி வசந்தராசனின் ‘குற்றங்களே தீர்ப்பெழுதினால்’ என்னும் கவிதைத் தொகுப்பு மதிப்பீடு செய்யப்படுகிறது.

    தமிழ்த்தாய் வாழ்த்து

    பெற்ற தாயை வணங்குகிறார்களோ இல்லையோ தமிழ்க்கவிஞர்கள் பெரும்பாலோர் தமிழ்த்தாயை உச்சி குளிர வாழ்த்தி வணங்கிவிடுவார்கள். வசந்தனின் தமிழ்த்தாய் வாழ்த்து மரபார்ந்த உணர்ச்சித் துடிப்போடு அமைந்திருக்கிறது இந்நூலில். முன்னிலையில் வைத்துத் தமிழ்த்தாயைப் பரவாமல் படர்க்கையில் வைத்து வணங்கியிருக்கிறார். தமிழோடு வாழ்ந்திருக்கிறார் வசந்தராசன்!

    “வானூற்றும் கார்மேகச் சொல்வி ரிப்பில்
    வளச்சீரும் அடிதொடையும் தானடக்கி
    நானூற்றும் தமிழ்க்கவிதை மிளிர்வ தாலே
    நான்காணு கின்றேனே காதல் இன்பம்”

    சீரினால் அடி. அடிக்குள் தொடை. இவற்றையெல்லாம் கலந்துதரும் தன்னுடைய கவிதைகளில் காதலின்பத்தைக் காணுகிறாராம். என்னதான் புதுக்கவிதை எழுதினாலும் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, இனம் பற்றிய தனது புலமை ஐயத்திற்கிடமாகிவிடக் கூடாது என்னும் கவலை இல்லாத கவிஞர் எவருமிலர். பொதுவாக மரபுக்கவிதை எழுதுபவர்கள் பாடலுக்கு முன்பே வாய்பாடுகளைக் குறிக்கிற வழக்கத்தை இன்றும் காணலாம். அதற்குக் காரணம் ‘தனக்கும் யாப்பு தெரியும்’ என்பதை விளம்பரப்படுத்துவதற்காக அல்ல. பிறர் தனக்கு யாப்பு தெரியாதோ என்று நினைத்துவிடக் கூடாதே என்னும் அச்சமே! எனவேதான் நான் ஊற்றும் தமிழ்க்கவிதை என வாளா கூறாமல் ‘சீரும் அடி தொடையும் தானடக்கி’ என்று நிமிர்ந்து கூவுகிறார்.

    “விரல் வெண்டை எனைத்தழுவ நெளியும் போது
    வெளிர்தங்க நகக்கூர்கள் பேசும் போது
    குரல் கம்பி, ‘உம்’ கூட்டி விடைபகன்று
    குதித்தோடும் என்மொழிகள் ராணி நெஞ்சில்
    பரலொலியாய் பசுமொழியாய் பரவும் போது
    குரலெழுப்பிப் பறக்கின்ற எதுகை மோனை
    குன்றொளியாய் மிளிர்கின்ற கவிதை ஊற்று!”

    எந்தப் பொழுதிலும் என் தமிழை நான் மறக்கமாட்டேன் என்று சொல்ல வருகிறார். விரல்கள் தழுவும்போதும், நகங்கள் பேசும்போதும், குறிப்பு மொழிகளால் காதலியோடு பரிமாறிக் கொள்ளும் போதும் தமிழ் மறப்பதில்லையாம்!. எந்தத் தமிழை? ‘எதுகை மோனை குன்றொளியாய் மிளிர்கின்ற கவிதை ஊற்றையாம்!” முந்தைய வரிகளில் கவிதை உறுப்புக்களைச் சொன்னவர் இந்தப் பாட்டில் தொடை விகற்பங்களால் தனது கவிதை சிறப்படைவதைக் கூறுகிறார்.

    “வாய்வைத்து ஊதுகையில் கழுத்துச் சங்கு
    வளைத்திட்டு இதழுக்கு ஊட்டி விட்டுப்
    போய்விட்ட தேனொலியும் கட்ட விழ்த்த
    புதுத்தென்றல் வாசமென இதய வீட்டின்
    பாய்விரித்துப் பழமங்கை படுத்து விட்டுப்
    பக்கத்தில் எனையழைத்துப் பேசும் சொற்கள்
    நோய்காதல் தீர்க்கின்ற மூச்சு எல்லாம்
    நடமாடும் தமிழ்க்கவிதை காதல் இன்பம்”

    (வ)சந்த’ராசன் ‘சிந்து’ ராசன்’ ஆன கதை

    பொதுவாக மரபுக்கவிதை எழுதத் தொடங்குபவர்கள் அசை, சீர், தளை என்னும் இலக்கணக்கூறுகளில் கவனம் செலுத்துவார்கள். அவர்கள் அவற்றையே மரபுக்கூறுகள் என எண்ணிவிடுவதுதான் இதற்குக் காரணம். மரபு மக்கட்சமுதாயத்தைச் சார்ந்தது, தழுவியது என்பதை அவர்கள் மறந்து போனதன் இலக்கிய வெளிப்பாடுதான் வாய்பாடுகளை முன்னிறுத்திக் கவிதைகளைப் புனைய முற்படுவது. மக்கட்சமுதாயத்தை எண்ணி நூல் செய்ததால்தான் தொல்காப்பியர் இலக்கியத்தில் விருந்து, புலன் முதலியவற்றையும் சிந்திக்க முடிந்திருக்கிறது. அந்த வகையில் சிந்து என்பதற்கு இலக்கணம் இல்லை.. சான்றாக வெண்பா என்பது குறள் வெண்பா மட்டுமே. மற்ற வெண்பாக்கள் ஒன்று குறள் வெண்பாவின் விரிவாக இருக்க வேண்டும். அல்லது அந்த விரிவின் சிதைவுகளில் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் சிந்து முதலிய மக்களிசைப் பாடல்கள் ஒவ்வொரு முழுமையான தாளக்கட்டை அடிப்படையாகக் கொண்டவை. எத்தனை வகைச் சிந்து என்பது கணக்கில் அடங்காது. படைப்பவனின் உள்ள அசைவுகளுக்கு ஏற்பச் சொற்கள் இடமாறி நடமாடும். சந்தம் சதிராடும். ஒவ்வொரு சிந்தும் ஒவ்வொரு வகையானவை. காவடிச்சிந்து, வளையல் சிந்து, நொண்டிச்சிந்து, வழிநடைச்சிந்து, ஆனந்தக் களிப்பு, இலாவணி, கிளிக்கண்ணிகள், வண்டிக்காரன் பாட்டு என்னும் பெயர்களே சிந்துப்பாடல்களின் களங்களைக் காட்டிவிடும். இத்தகைய சிந்துப்பாடல்களைக் காய் காய் என்றோ மா மா என்றோ அடக்கிவிட இயலாது, அளந்துவிடவும் முடியாது. அப்படிச் செய்வது அபத்தத்தின் உச்சம். அண்ணாமலை ரெட்டியார் அவர்களே சிந்துக்குத் தந்தை என்றாலும் மகாகவி பாரதியை அவ்வாறு பாவேந்தர் அழைத்ததற்கு வலிமையான காரணம் உண்டு. ரெட்டியாரின் காவடிச்சிந்தில் ஒருசில வகைமாதிரிகளையே காண முடியும். ஆனால் மகாகவி தன் பாடல்களில் அத்தனை வகைகளையும் கையாண்டிருப்பார். குறிப்பதற்கு ஒன்று உண்டு, சிந்துக்குத் தந்தையான பாரதி எழுதிய சிந்துக்களில் காவடிச் சிந்து என்பது ஒரே பாட்டுதான் இருப்பதாகத் தெரிகிறது.

    “வில்லினை யொத்த புருவம் வளைத்தனை;

    வேலவா! – அங்கோர்
    வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி
    யானது, வேலவா!

    சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு

    வள்ளியைக் – கண்டு
    சொக்கி மரமென நின்றனை
    தென்மலைக் காட்டிலே

    கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
    பாதகன் – சிங்கன்
    கண்ணிரண் டாயிரங் காக்கைக்
    கிரையிட்ட வேலவா!
    பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்
    வள்ளியை – ஒரு
    பார்ப்பனக் கோலந் தரித்துக்
    கரந்தொட்ட வேலவா!”

    என்பது மட்டுமே மகாகவியால் பாடப்பட்ட காவடிச் சிந்தென்று தெரிகிறது. திரையிசைப்பாடல்களில் தோல்வியே அடையாத பாடல்கள் சிந்துக்களே! பல்வகைச் சந்தங்களில் பலவகைப் பாடல்களைத் திரைப்படப் பாடலாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். பாடகர்கள் தங்களது இனிமையான குரலில் அவற்றைப் பாடுகிறபோது உள்ளம் சிலிர்க்கிறது. உயிர் சிணுங்குகிறது.

    “கட்டான சிட்டுப் பொண்ணு
    கிட்டத்தில ஒட்டி நின்னு
    தொட்டு உன்னைக் கட்டிக் கொள்ள
    துணிஞ்சு இங்கே வந்தேன் இந்த
    வேளை!  —  உன்
    தொல்லையெல்லாம் தீர்ந்து போகும்
    நாளை!!”

    என்னும் ஆலங்குடி சோமுவின் புகழ்பெற்ற பாடல் நினைவிற் கொள்ளத்தகும். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின்,

    “ஆடைகட்டி வந்த நிலவோ? கண்ணில்
    மேடை கட்டி ஆடும் எழிலோ? குளிர்
    ஓடையில் மிதக்கும் மலர்
    ஜாடையில் குளிக்கு மிவள்
    காடுவிட்டு வந்த மயிலோ? நெஞ்சில்
    கூடுகட்டி வாழும் குயிலோ?”

    என்ற பாடலை மகாலிங்கம் பாடுகிறபோது துள்ளாத மனமும் துள்ளுமல்லவா?

    “முள்ளை விலக்கி மலரை விரித்ததில்
    கள்ளைச் சுவைக்க வந்தேன் – ரசம்
    அள்ளிக் குடிக்க வந்தேன் – அந்தக்
    கொள்ளை இறைவனின் சம்மதத்தோ டென்று
    கூறத் துணிவு கொண்டேன்!  — துயர்
    ஓடக்கனவு கண்டேன்!”

    என்ற சிந்துக்கண்ணியை வசந்தமாளிகையில் சௌந்தரராசன் குரலில் கேட்டும் மயங்காதவர் உளரா?

    “நீலக்கடலலை மோதி வருவதில்
    நெஞ்சம் பறிகொடுத்தேன் – இன்று
    கோடி அலைகள் என் நெஞ்சில் எழுவதை
    யாரிடம் போய்உரைப்பேன்?”

    என்னும் பாடியிருக்கிறார் கண்ணதாசன். அந்த மரபிலே வந்தவர் தம்பி வசந்தராசன். இந்த நூலிலே பலவகையான சிந்துக்களைப் பாடியிருக்கிறார்.

    “பெண்ணை மலரென்று சொல்லித் திரிந்து நாம்
    கிள்ளிக் கசக்குவதா? தட்சிணைத்
    தீயில் பொசுக்குவதா?
    மண்ணில் பிறந்தவர் தன்னை உணராமல்
    இன்னும் இருப்பதுவா? ஐயகோ
    இன்னும் இருப்பதுவா?

    கொட்டும் இருளிலும் பட்டப்பகலிலும்
    ஒட்டி இருப்பதற்கும் குழந்தை
    பெத்துக் கொடுப்பதற்கும் – கணவன்
    செத்த பின்னரவள் பொட்டு தாலியெனும்
    சொத்தை இழப்பதற்கும் – வருவது
    சொத்துக்காய் சாவதற்கா?”

    20ஆம் நூற்றாண்டில் தமிழாசிரியர் பலர் சிந்துக்கு இலக்கணம் செய்வதாய்ச் சொல்லிக் கொண்டு புலவனுடைய வடிவக் கற்பனைக்கு வாய்பாடு தர முயன்றிருக்கிறார்கள். ஆனால் பாடுகிற கவிஞனின் காட்டாற்று வெள்ளத்திற்கு வெற்று வாய்பாடுகள் அணைபோட முடியாது தடுமாறி நிற்கின்றன. யார் வேண்டுமானாலும் சிந்து எழுதலாம். சிந்து என்பது உள்ளத்தின் துள்ளல்! அந்தத் துள்ளல் எந்த வகையிலும் அமையலாம். எந்த வாய்பாட்டிலும் அமையலாம். அதற்கெல்லாம் வரையறை கிடையாது. வரையறுக்கவும் முடியாது. எழுதிய சிந்துக்கு வேண்டுமானால் இவர்கள் இலக்கணம் சொல்லிக் கொள்ளலாம். அப்படிச் சொல்லப் புகுந்தால் எத்தனை ஆயிரம் கவிஞர்கள்? எத்தனை ஆயிரம் உள்ளங்கள்? எத்தனை ஆயிரம் துள்ளல்கள்? எத்தனை ஆயிரம் சிந்துகள்? எண்ணிப் பாருங்கள். அதனால்தான் சிந்துக்கு வடிவ வரையறை இல்லை! இயலாது. கூடாது. யாப்பிலக்கணம் கற்பிப்பதாய் ஒருவர் தாம் எழுதிய 600 பக்க நூலில் சமநிலைச் சிந்து, வியனிலைச் சிந்து என இருவகைக் கூறுகிறார். வியனிலைச் சிந்துக்கு இருசீர் இரட்டை முதலாக ஆறு வகைகளைக் கூறுகிறார். காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து, வழிநடைச் சிந்து என்று முன்னெடுத்து ஆனந்தக் களிப்பு, தெம்மாங்கு முதலியவற்றையும் சிந்தொடு இணைத்துக் கொள்கிறார். தாலாட்டு, ஒப்பாரி, கண்ணிகளையும் சிந்துக்குள் அடக்குகிறார். புலவர் குழந்தை, புலவர் சரவணத்தமிழன் சொல்லியிருக்கும் சிந்துக்கள் தனி. இதிலிருந்து என்ன தெரிகிறது. சிந்துக்கு இலக்கண வரையறை செய்வது வீண்முயற்சி என்பதுதான். நேரிசை வெண்பாவையும் சிந்தொலியில் பாடியிருக்கிறார்கள். விரிப்பின் பெருகும்.

    “கேடு ஒழிந்திட கேள்வி பிறக்கணும்
    கேட்டுக் கொண்டாயா தோழனே! – நம்
    நாடு நலம்பெற நம்முடைச் செய்கைகள்
    நன்மை விளைக்கணும் தோழனே!”

    என்பது வசந்தராசன் எழுதியிருக்கும் மற்றொரு சிந்து வடிவம்.

    “ஆடிவரும் அழகுறுப்புக் கூடம் — நெஞ்சம்
    அவளுருவைச் செய்துவிடும் பாடம்! உள்ளம்
    நாடிவிடும் ராணிமுன்னே
    நாட்டியமாய் இசையுமுன்னே
    ஆடும் – பின் ஓடும்!”

    இந்தத் தொடக்கநிலைச் சந்தங்களைக் கொண்ட சிந்துக்கள் பின்னாளில் எடுத்த விஸ்வரூபத்தையும் நம்மால் காண முடிகிறது.

    “போதை அணை உடைத்துப் பேதை இதழ்கொடுத்தாள்!
    பேச மறந்து நின்றேன் தோழி!-அந்த
    வாதை தினம்கடுக்க வாசல் மொழிதிறந்து
    வந்து கவிபெயர்த்தேன் தோழி!”

    “மொண்டு பருகும் மது! மொத்தக் கவிதையவள் !
    முத்தக் கவிதையினில் சொல்வேன்!–நீ
    கண்டு பிடித்துக்கொடு காலம் இருக்கும்வரைக்
    கவிதை வடித்துத் தமிழ் வெல்வேன்!”

    “‍‍‍‍‍அம்பு மலர்க்குறும்பு!ஆசை மனக்கரும்பு!
    அன்பு ஊஞ்சல்பிடித் தாடும்!–அதில்
    வம்பு விளையாடிக் கொம்புத் தேன்கூடி
    வசந்த நதிப்படகும் ஓடும்!”

    “வானை விரலிடுக்கில் வாரி வழியவிட
    நாண விழியிரண்டே போதும்!-அவள்
    மோனை இமையிரண்டில் மோகம் முந்திவர
    மூன்று தமிழ்ச்சுவையும் மோதும்!”

    “காதல் எழுதுகிற காலின் விரல்முனையில்
    கன்னி மண்ணுமது பூக்கும்!–களி
    நாதம் சுமந்துவர நாடு கிறங்கியெழ
    நாளும் மூச்சுவழி சாய்க்கும்!”

    “ஆன மட்டுமவள் வானைக் குட்டுகிற
    அண்டப் பெருவளியின் அழகு! –ஒரு
    மோன மொழிவழியில் மொத்த அழகெழுதி
    மூடி வைத்தபடி பழகும்!”

    “காதல் இணையவளைக் காணும் விழியிரண்டில்
    காலம் கவியெழுதிக் கடக்கும்!–அவள்
    பாத இணையடியில் பட்ட பூமிக்கொரு
    பாப விமோசனமும் கிடைக்கும்!”

    சொல்லிப்பாருங்கள்! சந்தத்தின் சுகம் தெரியும்! கவிதை இருக்கிற இடம் இலக்கணம் அல்ல. கவிதையில் இருப்பதுதான் இலக்கணம். ஆயிரம் சந்தங்களில் சிந்து பயின்றவர் கண்ணதாசன். அவரைத் தொடர்ந்து வென்றவர் வசந்தராசன். அவர் கவிதைகளைப் படிப்பதில் கவலை மறக்கிறேன். கண்டு வியக்கிறேன்!

    பெண்விடுதலையில் பரத்தைமையொழுக்கம்

    பொதுவாகப் பெண்விடுதலை பேசும் படைப்பாளர்களாகட்டும் கவிஞர்களாகட்டும் ஆண்கள் திட்டமிட்டே பெண்களை நாசமாக்குகிறார்கள் என்பது போலவும் வறுமையின் காரணமாகவே விலைமகளிர் என்னும் பிரிவு சமுதாயத்தில் கிளைத்து வந்தது எனவும் பெண்தொடர்பான பாலியல் வக்கிரங்கள் அனைத்திற்கும் ஆண்களே காரணம் என்பதுபோல எழுதிவருகிறார்கள். இந்தக் கருத்தியல் பரத்தமையொழுக்கம் பற்றிய முழுமையான புரிதலைக் காட்டுமா என்பது தெரியவில்லை. முழுமையானதா என்றும் புரியவில்லை. பசி போனால் பரத்தமை போய்விடும் என்பது பத்தாம்பசலித்தனமான வாதம்.

    பரத்தமை என்பது ஒழுக்கத்திரிபாகத்தான் சங்கக் காலத்தில் கருதப்பட்டிருந்தது. பின்னாலே மூவேந்தர் ஆட்சியிலும் அதனைத் தடைசெய்ததாகவோ கண்டிக்கப்பட்டதாகவே குறிப்பில்லை. அதற்குப் பின்னாலே மராட்டியர் ஆட்சியிலும் அவரைத் தொடர்ந்த ஆங்கிலேயர் ஆட்சியிலும் இது குறித்த மாற்றுச் சிந்தனை இருந்ததற்கான வலிமையான தரவுகள் இல்லை. இதற்குப் பின்னாலேதான் மேட்டிமை கனவான்களின் உதவியோடு ஒரு மாற்றுத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அதாவது சட்டப்படி பரத்தமையை ஒழிப்பது. அந்தரங்கத்தில் அதனை வளர்ப்பது. இல்லாவிட்டால் சட்டமியற்றி நூறாண்டுகள் ஆகியும் அதனை ஒழிக்க முடியாதது மட்டுமன்று மும்பை முதலிய இடங்களில் அத்தொழில் வரன்முறை செய்யப்பட்டுள்ளது.

    “பாற்கடல் அமுதத்தைத்
    தேவர்கள் சுவைத்துவிட்டதால்தான்
    எங்கள் இதழ் அமுதத்தை
    அரக்கர்களுக்கு வழங்குகிறோம்
    எங்களுடைய நீதிமன்றத்தில்தான்
    ஒழுக்கம் தண்டிக்கப்படுகிறது
    நாங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம்
    ஆடை வாங்குவதற்காக”

    என்னும் கவிதை 1971இல் எழுதப்பட்டது. ஆனால் சொர்க்க பூமியாக அன்றைக்குத் திகழ்ந்த சோவியத் ஒன்றியத்தில் 1917இல் புரட்சி வெடித்து 1991 இல் அது தாழ்ச்சியுறும் வரை 75 ஆண்டுகள் முக்கால் நூற்றாண்டு சோசலிசத்தின் பெயரால் ஆட்சி நடைபெற்றது. மக்கள் சீனத்தில் 1956இல் புரட்சி வெடித்து 2009 வரை 53 ஆண்டுகள் அரை நூற்றாண்டுக்குமேல் சோசலிசத்தின் பெயரால் ஆட்சி நடைபெற்றது. இந்த நாடுகள் எல்லாம் வறுமையுள்ள நாடுகளா? பரத்தமை ஒழியவில்லையே!. பாலியல் குற்றங்கள், நீலப்படத் தயாரிப்புகள் மற்றும் வெளியீடுகள் மறையவில்லையே! குறையவில்லையே! காரணம் என்ன? கண்ணதாசன் தாம் எழுதிய திரையிசைப் பாடல் ஒன்றில்,

    “ஒவ்வொரு பெண்ணும் கண்ணகிதான்
    ஒவ்வொரு நதியும் காவிரிதான்
    சமுதாயம் ஜாடை செய்தால்
    கலைமகள் கூட விலைமகள்தான்!

    தாயாகிக் குழந்தைக்குப் பால் தேடினேன்
    பால்வாங்க வழியின்றிப் பணம் தேடினேன்
    பணந்தேடும் அதற்காக விலைபேசினேன்
    பகவானும் என்மீது வலை வீசினான்”

    என்று பரத்தமையின் பன்முகப் பரிமாணங்களை உள்வாங்கியே எழுதியிருக்கிறார். எனவே, பரத்தமைக்கும், பசி பஞ்சம் பட்டினிக்கும் நேரடியாகத் தொடர்புபடுத்திப், பசி ஒழிந்தால் பரத்தமை ஒழியும் என்கிற வாய்பாடு பொருளற்றது என்பதைச் தொடர்புடையவர்கள் புரிந்து கொள்ளுதல் வேண்டும். பரத்தமைக்கு வயிற்றுப் பசியைத் தாண்டி வேறுபல காரணங்களும், ஏதோ ஒரு வகையில் பாலுறவுப் பசியும் காரணமாக அமைகின்றன என்பதை நாம் உணரவேண்டும். ஒப்புக் கொள்ள வேண்டும்.

    வயிற்றுப் பசி எப்படி விதம் விதமான உணவுகளை நாடுகிறதோ, அதேபோலப் பாலுறவுப் பசியும் விதம் விதமான உறவுகளை வழிமுறைகளை நாடுகிறது. வயிற்றுப் பசியுள்ள ஒருவன் அனைத்து வகை உணவுகளையும் வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடலாம். வெளியிலும் வாங்கிச் சாப்பிடலாம். அதேபோலப் பாலுறவுப் பசிக்காரனும் அவன் விரும்பியவாறான உறவுகளை வீட்டிலும் பெறலாம். இயலாதபோது வெளியிலும் பெறலாம். இது அவரவர் வாழ்நிலை, சமூக இருப்பு, சுற்றி நிலவும் கட்டுப்பாடு அல்லது கட்டுப்பாடின்மை அல்லது பழகும் வாய்ப்பு, வாய்ப்பின்மை இவற்றைப் பொறுத்தே அமைகிறது. இதனாலேயே இது இயல்பாகவும் நிகழ்ந்து விடுகிறது.

    தற்போது புழல் சிறையில் அடைப்பட்டிருக்கும் அபிராமி என்ற பெண் தன் கள்ளக்காதலன் வேண்டுகோளின்படி தன் கணவனையும் குழந்தைகள் இருவரையும் கொல்ல முயன்றார். கணவனைக் கொல்லும் சூழல் வாய்க்காத நிலையில் தன் கணவனுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளையும் தாயென்றும் நினையாமல் அவர்களைக் குழந்தைகளென்றும் பாராமல் கொன்ற செய்தி சில நாள் ஒளிபரப்புக்குப் பயன்பட்டதை நாம் அறிவோம். அப்போது அந்தப் பெண் சொன்னார் “என் கணவனைவிடப் பிரியாணிக் கடை சுந்தரத்தை நான் அதிகமாக விரும்பினேன்”

    கவிஞர்கள் என்ன சொல்கிறார்கள்? சுந்தரத்தின் செயலை ஆணாதிக்கம் என்கிறார்களா? அபிராமியின் செயலுக்கு வறுமை காரணம் என்கிறார்களா? மகளிர் அமைப்பினர் என்ன சமாதானம் கூறுவார்கள்? வறுமையில் வாடும் பெண்களெல்லாம் பரத்தமையொழுக்கம் பூணுகிறார்களா என்ன? அது என்றைக்கும் ஒழுக்கக் கேடு. தெளிவாகச் சொன்னால் தமிழகத்தைப் பொருத்தவரை எந்த அரசாலும் கண்டிக்கவோ தடைசெய்யவோ விரும்பாத ஒழுகலாறு. இப்படித்தான் இந்த மண்ணின் வரலாறு அமைந்திருக்கிறது.

    எனவே பரத்தமை ஒழுக்கம் நிலவிய ஒழுக்கம். ஆனால் சமுதாய ஏற்பளிப்பு கிடையாது. விலைமகளிர் சமுதாயப் பிரிவு. அது வறுமையின் காரணமாகத்தான் அமைந்திருந்தது என்பதற்கான வலுவான சான்றுகள் வரலாற்றில் இருப்பதாகத் தெரியவில்லை. உலகில் எந்தக் காலத்திலும் எந்த ஒரு சமுதாயமும் முழுமையும் புனிதப்பட்டு இருந்துவிட இயலாது. தமிழ்ச் சமுதாயத்திலும் இது ஊடுருவியிருந்தது என்பதே உண்மை வரலாறு. நடப்பியல். கவிஞர் ஈரோடு தமிழன்பன் எழுதிய ‘வணக்கம் வள்ளுவ’ என்னும் நூலில் விலைமாதர்கள் வள்ளுவரிடம் கேட்ட வினாக்கள்’ என்னும் தலைப்பில் எழுதியிருக்கும் கவிதை வரிகளில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் அனைத்தையும் சமுதாயத்தின் உண்மையான நிலைப்பாட்டை உரைத்ததாகக் கொள்ளுதற்கு இயலாது.

    “எந்த விலை மாது
    தன் மகளுக்குக் குபேரன் வீட்டில்
    சம்பந்தம் பேசினாள் என்று?”

    என வினவும் தமிழன்பனின் வினா பொருளுடையதா? என்பதைச் சிந்திக்க வேண்டும். இந்தச் சிந்தனைகளையெல்லாம் உள்ளடக்கி எழுதுகிறார் வசந்தராசன்.

    “வறுமைகளும் ஏழ்மைகளும் வாழு மட்டும்
    வரதட்ச ணைக்கொடுமை நீங்கு மட்டும்
    கருமையிலே கன்னிசுகம் தேடு கின்ற
    காமுகர்கள் திருந்தி மனம் வாழும் மட்டும்
    வெறுமுடலைக் காட்டுகிற விபச்சாரந்தான்
    வேர்விட்ட ஆல்போல வளருமென்பேன்!”

    “எல்லாரும் இராமர்களாய் இருந்துவிட்டால்
    எதற்கிங்கே விபச்சாரம்? கரும்பு கண்ட
    வெல்லமெனில் ஈக்கூட்டம் இருக்குந் தானே?
    வெட்கமென்ன இதையிங்கே வெளியில் சொல்ல?
    இல்லையொரு நாதியிங்கே என்பதால்தான்
    இடையவிழித்தோம்!”

    என்னும் விருத்தத்தில் வசந்தராசன் கண்ணதாசன் பின்பற்றிய பரத்தமை ஒழுக்கத்திற்கான காரணத்தை வழிமொழிந்திருக்கிறார். கவிதைக்காக மட்டுமன்றி இவருடைய கன்னித் தொகுப்பில் இடம் பெற்ற சமுதாயத்தின் அவலக்குரலைச் சுருதிபேதம் இல்லாமல் இவர் வாசித்ததற்காகவும் இது இங்கே சுட்டப்படுகிறது.

    கருத்துக்களின் கொள்கலன்

    கவிதைத் தொடர்பான கட்டுரைகளில் அது பற்றிய கூடுதல் வரலாற்றுச் செய்திகளையோ புனைவுச் செய்திகளையோ அறிந்து கொள்வதும் அவற்றோடு தொடர்புபடுத்திக் கவிதையை உணர்ந்து சுவைப்பதும் கவிதைப்பயனைப் பெருக்கக்கூடும். நான் சொல்லப் போவது வள்ளற் பெருமான் வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் நிகழ்வு. அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த நிகழ்வின் அடையாளமும் சூழலும்  மாறலாம். அடிப்படை உண்மை உயர்ந்தது, சிறந்தது. மிக உயர்ந்த கற்பித்தல் கோட்பாட்டை உள்ளடக்கியது. பெருமானின் அண்ணனின் பெயர் சபாபதி. தம்பி இராமலிங்கத்தைக் குருகுலக் கல்வியில் சேர்க்க எண்ணிய அவர் காஞ்சி மகாவித்வான் சபாபதி முதலியாரிடம் அழைத்துச் சென்றார். தன் ஆவலைத் தெரிவித்தார். முதலியாரும் விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டார். அன்றே வகுப்பு தொடங்கியது. வகுப்பில் இருந்த மாணவர்கள் இறைவணக்கம் பாடினர். அவர்கள் பாடிய இறைவணக்கம்,

    “ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
    ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
    மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
    வஞ்சனையைச் செய்வாரோடு இணங்க வேண்டாம்
    போகாத இடந்தனிலே போகவேண்டாம்
    போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்!
    வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே”

    உலகநாதர் எழுதிய உலகநீதி!. பெருமானின் முகத்தில் மகிழ்ச்சியும் இல்லை! வருத்தமும் இல்லை. சமநிலை! ஐயாவின் வாட்டத்திற்குக் காரணம் கேட்டார் ஆசிரியர். சிறார்களிடம் வேண்டாம் என்னும் எதிர்மறைச் சொல்லைவிட வேண்டும் என்னும் உடன்பாட்டுச் சொல்தான் மனத்தில் பதியும். எனவே இந்தப் பாடலை என் மனம் ஒப்பவில்லை என்றார். “பாட்டின் எல்லா வரிகளையும் ‘வேண்டும் என்று முடியுமாறு’ பாட முடியுமா? உன்னால் சொல்ல முடியுமா?” என்றும் வினவினார். அப்போது வள்ளலார் பாடிய பாடல்தான்,

    “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
    உத்தமர்தம் உறவு வேண்டும்
    உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
    உறவு கலவாமை வேண்டும்

    பெருமை பெறும் நினது புகழ் பேசவேண்டும்!
    பொய்ம்மை பேசாதிருக்க வேண்டும்!
    பெருநெறி பிடித்தொழுக வேண்டும்!
    மதமான பேய் பிடியாமை வேண்டும்!”

    இந்தப் பாடல் தொடங்கி அமைந்திருக்கும் திருத்தணிகைமாலை பின்னாளில் செப்பம் செய்யப்பட்டதாகக் கொள்ளலாம். காரணம் அச்சிறிய வயதில் வள்ளலாருக்குக் கந்தகோட்டம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  இந்தப் பாடலில் ‘வேண்டும்’ என ஐயா முடித்திருந்தாலும் எழுவாயையும் எச்சத்தையும் எதிர்மறையாக்கி வினைமுடிப்பினை மட்டும் உடன்பாடாக்கிக் காட்டும் சதுரப்பாடு உணர்க. இரண்டு எதிர்மறைகள் ஒரு உடன்பாடாகுமல்லவா? அவன் ‘கெட்டவன் அல்லன்’ என்றால் ‘நல்லவன்’ என்று பொருள்படுவதுபோல!

    “சூழுதல் வேண்டுந் தாள்கள்
    தொழுதிடல் வேண்டும் அங்கை
    தாழுதல் வேண்டுஞ் சென்னி
    துதித்திடல் வேண்டுந் தாலு
    ஆழுதல் வேண்டுந் தீமை
    அகன்றுநான் இவற்கா ளாகி
    வாழுதல் வேண்டும் நெஞ்சம்
    தடுத்தது மானம் ஒன்றே!”

    என்னும் கந்தபுராணச் செய்யுளிலும் இந்நெறி பின்பற்றப்பட்டிருப்பது காண்க. இந்த முன்னோர் நெறியில் மூழ்கிப் போயிருந்த நான் தம்பி வசந்தராசனின் இந்த நூலில் காணப்படும் கவிதையொன்றினைப் படித்தபோது எனக்குத் தோன்றிய சிந்தனைகளை இங்கே பதிவு செய்கிறேன்.

    “பிறப்புக்கு அணைபோட்டுப் பிள்ளைக்கு அறிவூட்டிப்
    பிழையின்றி வளர்க்க வேண்டும்! – சோம்பி
    இரைப்பைக்கு உரம்போட்டு இரவுக்குத் துணைதேடும்
    இழிநிலைகள் ஒழிக்க வேண்டும்!

    அடுத்தவன் நல்வாழ்வின் அடிக்கல்லைப் பறிக்கின்ற
    அவலங்கள் மாற வேண்டும்! – பணம்
    படைத்தவன் இறையென்ற பகல்வேடச் செய்கைகள்
    பலியாகி ஒழிய வேண்டும்!

    இறையென்னும் பெயராலே இருக்கின்ற மூடங்கள்
    இல்லாமல் போகவேண்டும்! – ஒரு
    வரைக்குள்ளே நாமிருந்து வளர்க்கின்ற பண்பாடு
    வளமைதனை ஆள வேண்டும்!

    இரவுக்கும் பகலுக்கும் இடைவெளியே இல்லாமல்
    எப்போதும் உழைக்க வேண்டும்! – வந்த
    வரவுக்குள் செலவடக்கும் வாழ்க்கையின் தத்துவத்தை
    வழியெங்கும் பொறிக்க வேண்டும்!

    சீர்கேட்டுப் பெண் கேட்கும் சீர் கெட்ட திருமணங்கள்
    சிந்தனைகள் மாற வேண்டும்! — காதல்
    வேர்பாய்ச்சித் திருமணத்தில் வேற்றுமைகள் வெறுத்தொதுக்கி
    வேதனையை ஓட்ட வேண்டும்!

    உள்ளத்தின் கனவுக்கும் உறைகின்ற நனவுக்கும்
    உறவென்ற பாலம் வேண்டும்!  — அதில்
    கள்ளங்கள் கபடுகள் கண்ணீரின் மூலங்கள்
    கண்டிப்பாய் மாற வேண்டும்!

    எட்டாத மாளிகையை எட்டியுள குடிசையுடன்
    இணைக்கின்ற உருவம் வேண்டும்! – அதில்
    கட்டாயம் சமதர்மம் கச்சிதமாய்க் குடியிருக்க
    காலத்தின் துணையும் வேண்டும்!”

    என்ற பாடலில் ஒவ்வொரு அடியையும் வேண்டும் என்ற வினைமுடிபு கொண்டு நிறைவு செய்திருக்கிறார். இது எதிர்மறைக்கு எதிரான உடன்பாடு அன்று. இயல்பாகவே அமைந்த உடன்பாடு. இந்தப் பாடலைப் பாவேந்தர் எழுதிய,

    “வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
    விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
    சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
    தொகையாக எதிர்நிறுத்தித் தூள்தூ ளாக்கும்
    காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!
    கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
    கீழ்ச்செயல்கள் விடவேண்டும்!………”

    என்ற பாடலோடு ஒப்பிட்டுச் சுவைக்க முடியும். ‘வேண்டும்’ என்ற வினைமுடிபில் மயங்கிய கண்ணதாசன்,

    “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்!
    நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்!
    பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்
    பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும்
    மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்
    மடிமீது விளையாடும் சேயாக வேண்டும்”

    என்றெழுதினார். கவிதையில் மரபு படிவது என்பது இதுதான். ஒரு கவிதை மரபுக்கவிதை என வழங்கப்படுவதற்கான தகுதிகளில் இதுதான் தலையாயது. பாடலின் வடிவத்தில் மரபு என்பதும் இதுதான். காய் காய் மா மா என அரைகுறை வாய்பாடுகளையெல்லாம் மரபென்று எண்ணிக் கொண்டு ‘மாபாதகம்’ செய்வார் கொஞ்சம் நின்று நிதானித்துச் செல்ல வேண்டும். மற்றவர்கள் விருத்தத்தில் செய்த வித்தையைத் தம்பி வசந்தராசன் சிந்தில் செய்து காட்டியிருக்கிறார் என்பதுதான் சொல்ல வந்த கருத்து.

    குருத்தில் வடியும் குருதி வெள்ளம்

    மகாகவியின் முதற் கவிதை எதுவென்று நானறியேன் ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்பதைப் பாவேந்தரின் முதற்பாடலாகச் சொல்லுகிறார்கள். எது எப்படி இருந்தாலும் முதற்பாடல் எழுதுகிறவர்களும் முதல் தொகுப்பினை வெளியிடுகிறவர்களும் பெரும்பாலும் அஃறிணைகளைப் பற்றியும் கந்பனை கலந்தும், காதல் பற்றியும் கவியளப்பார்கள். அதனால் கதையளப்பார்கள். தம்பி வசந்தராசனின் இந்தத் தொகுப்பில் காதல் கவிதையே பெரும்பாலும் இல்லை என்பது வியப்புக்குரியது. தனது படைப்புக் குறிக்கோளை வெளிப்படுத்தும் இராசன்,

    “கஞ்சிக் கலயங்கள்
    நெஞ்சின் அடிகளில்
    அஞ்சி நடுங்கிடும் தீயை – ஏழ்மை
    அழுத்திக் கிடந்திடும் வாயை
    கொஞ்ச கொஞ்சமாய் என்
    கொள்கைக் கவிகளால்
    நெஞ்சுவாய் நீக்கி வைப்பேன்”

    என்று பதிவு செய்திருக்கிறார். இந்தக் கொள்கைப் பிரகடனத்தை இந்த நூல் முழுவதும் இவர் கொண்டு செலுத்தியிருக்கிறார்.

    “சேற்றுச் செருப்பணிந்து
    செவ்வயலில் சிற்றிடைகள்
    நாற்று நடுமழகை
    நயமாகப் பாடியநீ
    சோற்றுக்கு வழியின்றி
    சோர்ந்து ஒண்ட நிழலின்றி
    மாற்றுத் துணிக்கேங்கும்
    மக்களை ஏன் பாடவில்லை?”

    இந்தக் கவிதையைப் பிறரை நோக்கியதாகக் கருதாமல் இராசன் தன்னை நோக்கி வினவியதாகவே கருதினால் பாட்டின் சாரம் கூடுதலாகும். கெட்டியான களிமண் சேற்றில் காலை ஊன்றி அடுத்த அடிக்காகத் தூக்கி வைக்கிறபோது ஒட்டிய சேறே காலணியாகத் தொடரும். இந்த அவலக்  காட்சியின் அரிய கலைநுட்பத்தைச் “சேற்றுச் செருப்பணிந்து” எனக் கவிதையில் காட்டியிருக்கும் பாங்கு கண்டேன்! பரவசம் கொண்டேன்!

    ‘வேதனைத் துளிர்ப்புக்கள்’ என்னுந் தலைப்பில் சேரிவீட்டு மழலைகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

    “எச்சில் படுக்கைச்
    சாணச் சகதியில்
    குச்சியாய்க் கிடந்து
    குளிரில் ஒடுங்கும் இவர்
    சோற்றுக்கு அலைவதே
    சொந்த வாழ்வெனில்
    சாதனைப் பட்டியல்
    சாதிப்ப தென்ன?”

    நூறாண்டு பேசும் ஓராண்டுச் சாதனையைப் பேசியவர்கள் எல்லாம் அடுத்த தேர்தலில் கூட்டுவதற்குக் குப்பையாகக் கூட இருக்க மாட்டார்கள் என்பதைத் தொடர்ந்து ஆராய்கிறார்.

    “உழைத்துக் கொடுப்பவர்
    வீதியில் கிடக்கையில்
    உண்டு கொழுத்தவர்
    மாடியில் படுக்கையில்

    பிழைக்க வழிதராக்
    கொள்கைத் துணிகளைப்
    பிய்த்து எறிந்திடப்
    புதுயுகம் பிறந்திட
    புறப்படு தோழா புறப்படு!”

    என ஆற்றுப்படுத்துகிறார். அணி திரட்டுகிறார் கவிதையில். முப்பது வயதில் வாழ்க்கைச் சிக்கல்களில் மொத்துண்டு கிடந்த இளைஞன் ஒருவன் எழுதிய கவிதை இது என்பதை நம்ப வேண்டும். எண்பது வயதில் ‘கன்னம் சிவந்த பொன்னம்மா’வைப் பாடுகிற வயோதிகக் கவிஞர்கள் இதனைக் கொஞ்சம் மனசாட்சியோடு சிந்திக்க வேண்டும். கவிஞன் தன்னைப் பாதிக்கிற விஷயங்களில் மிகக் கவனமாகவும் எச்சரிக்கையாவும் இருக்க வேண்டும். ‘தன்னை நெருப்புக் கவிஞன்’ என்று முன்னுரையில் சொல்லிக்கொண்டு “நாயிடு ஹால்” கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தால் நினைவு கொதிக்காதா? கொதிக்கும் நெஞ்சு நடுங்காதா?

    “உப்பு நீரு உலகத்திலே ஓட்டைப் படகு பயணத்திலே
    அப்பன் பாட்டன் எல்லோருக்கும் ஐலசா! வலை
    அடங்கு மீனே வாயும் வயிறும் ஐலசா!”

    பார்த்தீர்களா கவிஞன் பார்வையை? தூண்டில்காரன் பார்வை தூண்டிலின் முள் மீது. வலைவீசுகிறவன் மனம் வலையில் விழும் மீன்கள் மீது. பரந்த கடல் பயணம் வெறும் பயணம் ஆகிவிடக் கூடாது என்னும் வேதனை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மீனவனுக்கும் உண்டு. படகு ஓட்டை. படகு நீரால் நிரம்பிக் கவிழுமானால் வலையில் எப்படி மீன் விழும்? படகு நீரால் நிரம்பக் கூடாது. வலை மீனால் நிரம்ப வேண்டும். வலை நிரம்பினால் வயிறு நிரம்பும்! இவருடைய கவிதை வலையில் விழுவன எல்லாம் கண்ணீர் மீன்களே!

    பாட்டரங்க முழக்கம்

    ஓரளவு வளர்ந்த நிலையில் பாட்டரங்கங்கள் பலவற்றில் பங்கு கொள்கிற வசந்தராசன் இந்த நூலில் ஒரு பாட்டரங்கக் கவிதையை எழுதியிருக்கிறார். இது உண்மையில் பாட்டரங்கத்திற்காக எழுதிப் பதிப்பிக்கப் பெற்றதா? இந்த நூலுக்காகவே எழுதியதா என்பதற்கான குறிப்பு ஏதுமில்லை. எவ்வாறாயினும் எண்சீர் விருத்தங்களால் எழுதப்பட்டிருக்கும் அந்தப் பாடல் இந்த நூலின் ஒட்டுமொத்த பாடுபொருளையும் ஒருசில வரிகளில் முழங்குவதாகவே அமைந்திருக்கிறது. எண்ணிக்கையில் ஐந்து எண்சீர் விருத்தங்களைக் கொண்டிருக்கும் அந்தப் பாடலின் தலைப்பு ‘ஏழ்மைக்கு விடிவில்லை’. இந்தக் கவிதை நூலின் தலைப்பு ‘குற்றங்களே தீர்ப்பெழுதினால்’ என்பதாக அமைய உள்ளடக்கத் தலைப்புக்கள் எல்லாம் “வியர்வை தெய்வங்கள்”, “சேறு”, “முடங்கள்”, “தண்டிக்க வந்திடும் சட்டங்களே!”, “மயான வெளிகள்” என்னுமாறு அமைந்து கவிஞனின் சமுதாய நோக்கினைப் புலப்படுத்துவதாய் அமைந்திருக்கின்றன.

    “இடுகாட்டு விறகானோம்! இடிம ழையின்
    இனங்காட்டும் மண்ணானோம்! இரக்கம் நெஞ்சில்
    அடைகாக்கும் புள்ளானோம்! அரசாங் கத்தின்
    அடியேறும் படியானோம்! அவல வாழ்வின்
    விடையில்லாக் கணக்கானோம்! வறுமைப் போதின்
    விடியாத இரவானோம்! கார ணந்தான்
    படையாகத் திரண்டெழுந்து உரிமைப் போரை
    படைக்காமல் போனதுதான்! வேறு என்ன?
    மூட்டுங்கள் புரட்சித்தீ! முடுக்கும் மூலை
    முடங்கட்டும் வெற்றுவாதம்! தீவ ளர்க்க
    பாட்டரங்கம் உதவட்டும்!…”

    கவிதையிலக்கணத்தைக் கற்றுக்கொண்டு பாடுபொருளை ஒவ்வொன்றாகக் கருத்தில் கொண்டு பாடுவது ஒருவகை. அது பெரும்பாலும் பொதுவானது. இளைஞன் ஒருவன் தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தை உற்று நோக்கி அதன் எதிர்மறை வாழ்வியல் நிலையைப் படைப்பிலக்கியத்தில் கொண்டுவருவது அரிது. ‘சமுதாயப் பார்வைகளே இந்த நூலில்’ என்று இதனை நான் இந்தக் கட்டுரையில் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறேன்.

    “நீரில்லாப் பாலைநிலம்! நெஞ்ச வீட்டின்
    நினைவேக்கக் கானல் நீர்! தறிபுகுந்த
    தாரில்லா நாடாக்கள்! தலைமையில்லாத்
    தனிமையோடு துயரங்கள்! இன்ப மென்னும்
    வேரில்லாச் செடிகொடிகள்! பகல் தூக்கத்தே
    வெளியாகும் கனவிதழ்கள்! ஏழ்மை யென்னும்
    எரிமலைக்கு எருவாகி எலும்புக் கூடாய்
    அழுகி வரும் நடைப்பிணமாய் ஏழை நாங்கள்!”

    “கரைவீழ்ந்த கரையானோம்! கரையோ ரத்துக்
    காய்ந்தகொடிச் சருகானோம்! கடலின் வெள்ளைத்
    திரையொதுக்கும் அழுக்கானோம்! வெட்டப் பட்ட
    திரைப்படத்துச் சுருளானோம்! வாழ்க்கை யென்னும்
    வரைபடத்துக் குறையானோம்! சமுதா யத்தின்
    வழித்தடத்தின் கல்லானோம்! வயிற்றுக் கேங்கி
    அரசியலின் உணவானோம்! வஞ்ச கத்தின்
    அரிச்சுவடி அறியாத அகதி யானோம்!”

    என்னுமாறு அமைந்த உருவகச் சங்கிலிகள், உடைந்து உருக்குலைந்து போன சமுதாயத்தின் உண்மை வடிவத்தை உணர்த்துவனவாம். வெற்றசைகளால் நிரம்பி வழியும் எண்சீர் விருத்த உலகில், செறிவும் ஆழமும் கொண்ட சீர்களால் நெய்யப்பட்ட கவிதைகளைத் தந்திருக்கிறார் இராசன்.

    வாழ்வியல் திட்டம்

    இந்த நூலைப் பற்றி எவ்வளவோ எழுதலாம். கருத்தில் கட்டுரையின் அளவு. ‘வாடும் பயிருக்கு வசந்தம் காட்டவே’ என்னும் தலைப்பில் எழுதியிருக்கும் சிந்து நெஞ்சைக் கொள்ளை கொள்ளுவதற்குப் பதிலாகப் பதைக்க வைக்கிறது. சமுதாய அவலங்களைக் கவிதைச் சுவை குறையாமல் நிரலாகப் பதிவு செய்திருக்கும் பாங்கு!

    “புதியதோர் பாரதம் பிறந்திட வேணும்
    புறப்படு! புறப்படு தோழனே! அதில்
    புதுமைகள் பூக்கணும் புதுத்தேன் சுரக்கணும்
    புன்மைகள் போக்கணும் தோழனே!”

    என்று குறிக்கோளை முன்னெடுக்கும் கவிஞன் இருக்கிற சமுதாயத்தின் இரங்கத்தக்க நிலையை நிரல்படுத்துகிறான்.

    “திறமையின் ஊற்று தூங்கிக் கிடக்குது
    தட்டி எழுப்பு தோழனே”

    “கைகளில் ஆயிரம் வீமனின் வலிமை
    காத்துக் கிடக்குது தோழனே!”

    “கருத்தினில் பளிங்கெனத் தெளிவுமிருக் கையில்
    காலம் கடப்பதேன் தோழனே!”

    எனப் பட்டியலிட்டு ஒவ்வொரு தனிமனிதனும் விடியலைக் காண விரையச் சொல்கிறார். இவற்றையெல்லாம் தனிமனிதனை நோக்கிக் கூறப்பட்டவையாகக் கருதினாலும்,

    “மூட வழக்கங்களை முற்றிலும் அழிக்கணும்’’

    “வாடும் பயிருக்கு வசந்தம் காட்டணும்’

    ‘வெட்ட வெளிகளும் பட்டு விரிக்கணும்’

    ‘புள்ளிகள் வைத்துநீ கோலம் போடணும்’

    என்பன போன்றவற்றைச் சமுதாய அழுக்குகளாகக் கருதி அவற்றைக் களையும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

    களிம்பில்லாத செம்பா?

    இந்தக் கன்னித் தொகுப்பில் எல்லாமே சுவைத்தக்க கவிதைகளா? குறைகளே இல்லையா? எனச் சிலர் வினவக்கூடும். அது உண்மையே. அவை அறியாமையாலும் அவசரத்தாலும் அமைந்தவை. திட்டமிட்ட முரண்பாடுகள் அல்ல. சான்றாகப் புதுக்கவிதை என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கும் சில சொல் எம்பல்களை உரைநடையாகக் கூடக் கருத முடியாது. புதுக்கவிதைப் பரிமாணம்  பற்றிய தெளிவின்மையே இதற்குக் காரணம். மரபுக்கவிதைக்கு வடிவம் வெளியிலிருந்து வருவது. இலக்கணத்தை வைத்துக் கொண்டு எழுதுவது. அதனையே நெறியன்று என்பவன் நான். எழுதப்படுவதையே தனக்கான வடிவமாக ஆக்கிக் கொள்வது புதுக்கவிதை. புதுக்கவிதைக்கான வடிவம் உள்ளேயே அமைவது. மரபுக்கான உணர்ச்சிகள் வேறு. புதுக்கவிதைக்கான உணர்ச்சிகள் வேறு. பொருண்மைகளும் வேறு. புதுக்கவிதையில் தம்பி வசந்தராசனின் இன்றைய வளர்ச்சி இதனின் வேறுபட்டது. இன்றைக்கு இவற்றை அவர் எழுதியிருந்தால் இந்தப் பத்திக்கு வேலையிருந்திருக்காது. ஆனால் இதுவும் சேர்ந்துதான் அவர். அம்மணத்தோடு சேர்ந்ததுதானே ஆடை வாழ்வு?

    நிறைவுரை

    தம்பி வசந்தராசன் முகநூலில் எழுதி வரும் கவிதைகளைப் படித்துச் சுவைத்து அச்சுவையைப் பரிமாறி வருகிறேன். அவருடைய கவி மூலத்தை அறிதல் வேண்டும் என்னும் துடிப்பால் அவர் எழுதிய இந்தக் கன்னித் தொகுப்பை நான் கண்டேன். எனக்குத் தெரிந்தவரை கன்னித் தொகுப்பில் காதல் பற்றிப் பாடாத அல்லது மிகக் குறைந்த அளவில் பாடிய கவிஞர்களுள் தம்பி வசந்தராசனுக்கு இடம் உண்டு. இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் தொடர்பு உண்டு. அன்றைக்கு வாழ்க்கையில் காதல் நிலைத்ததால் இலக்கியத்தில் காதல் மணந்தது. இன்றைக்கு நிலைமை தலைகீழ். காதல் ஒரு செயற்கையாகிவிட்டது. செயற்கையைப் பாடி என்ன பயன்? அலங்கோல வாழ்க்கையில் அகம் எடுபடாது, படைப்பில் குறையிருப்பது போலவே பார்வையிலும் குறையிருக்கலாம்.  அதிலும் என்னுடையது வயோதிகப் பார்வை. சமுதாயத்தின் மீது தான் கொண்ட அக்கறையைத் தனக்குத் தெரிந்த கவிதைத் தொழிலால்  வெளிப்படுத்தியிருக்கிறார். செய்யும் தொழிலே தெய்வம்!.

    (தொடரும்….)

    Share
  • (Peer Reviewed) தொல்காப்பிய அகனைந்திணையில் முதற்பொருளும் கருப்பொருளும்

    (Peer Reviewed) தொல்காப்பிய அகனைந்திணையில் முதற்பொருளும் கருப்பொருளும்

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், மொழிகள் துறை 
    பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
    பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
    வல்லம், தஞ்சை மாவட்டம் – 613403.                                                                                             
    மின்னஞ்சல் முகவரி egowrisss@gmail.com

    முன்னுரை

    தமிழின் தலையிலக்கணமாகிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களையும் அதிகாரத்திற்கு ஒன்பது இயல்களையும் கொண்டு விளங்குகிறது. மொழியின் எழுத்திலக்கணத்தை எழுத்ததிகாரத்திலும், சொல் அமையும் பாங்கினைச் சொல்லதிகாரத்திலும் விளக்கிக் காட்டிய தொல்காப்பியம், சொற்களால் அமையும் இலக்கியம் பற்றிய கருத்துக்களைப் பொருளதிகாரத்தில் ஆராய்கிறது. இப்பொருளதிகாரத்தைத் தமிழர்தம் வாழ்வியலோடு தொடர்புபடுத்திச் சிந்திக்கும் அறிஞர்களும் உளர். இலக்கணமாயினும் இலக்கியமாயினும் தாம் தோன்றுகின்ற சமுதாயத்தின் தாக்கம் இல்லாது அமைதல் அரிது என்பது உண்மையாயினும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தைக் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டிலின் ‘கவிதையியல்’(Poetics) என்னும் நூலோடு ஒப்புவைத்து ஆராய்வதே பொருத்தமானதாகும்.

    பொருளதிகார அமைப்பு

    தொல்காப்பியப் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்னும் ஒன்பது இயல்களைத் தனது உள்ளடக்கமாகக் கொண்டு திகழ்கிறது. அகத்திணை மாந்தர்களின் கூற்றுப்பகுதியில் அமையும் உவமப்பாங்கை ஆராய்வதே உவமவியல் என்னும் கருதுகோள் ஏற்கப்படின், அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், உவமவியல் ஆகிய ஐந்தும் அகப்பொருள் பற்றியும், புறத்திணையியல் புறம் பற்றியும் ஏனைய மூன்றும்  இருதிணைக்கண் செய்யுள் முறைமை பற்றியும் ஆராய்வதாகக் கொள்ள முடியும். அகத்திணைக்கண் சுட்டப்பட்டுள்ள முதற்பொருள், கருப்பொருள் ஆகியன பற்றி இக்கட்டுரை சுருக்கமாக ஆராய்கிறது.

    அகத்திணை உள்ளடக்கம்

    பொருளதிகாரத்தின் முதல் இயலான அகத்திணையியல் அகத்திணைகள் ஏழு என்னும் வரையறையோடு தொடங்குகிறது. அகவொழுக்க மரபும், தாயர், தோழி, கண்டோர், தலைவன் முதலியோர்தம் கூற்றுப்பகுதிகளும் நடுவண் ஐந்திணைகளின் உரிப்பொருள் அமைதியும் கூறப்படுகின்றன. உள்ளுறை உவமம், ஏனை உவமம், தமக்கென நிலம், பொழுது இல்லாத கைக்கிளை, பெருந்திணை முதலியவற்றின் இயல்புகளும் சுட்டப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து அகப்பொருள் இலக்கியங்கள் கலிப்பா, பரிபாடல் ஆகிய இருவகைப்பாக்களில் மட்டும் பாடப்பெறும் என்பதும் கூறப்படுகிறது. அகத்துறைப் பாடல்களில் தலைமக்களின் இயற்பெயர் சுட்டுவது மரபன்று என்னும் உயரிய இலக்கியக் கொள்கை வற்புறுத்தப்படுகிறது. இத்தனைச் சிறப்புக்களும் கொண்ட இந்த அகத்திணையியல், தலைவியின் கூற்றுப்பகுதியைக் கூறாதது சிந்தனைக்குரியது.

    திணைக்குத் துணையாகும் முதலும், கருவும்

    ‘திணை’என்னும் சொல் முதற்கண் ஒழுக்கத்தைக் குறித்துப் பின் ஆகுபெயராய் அவ்வொழுக்கம் நிகழும் நிலத்தினைக் குறித்தது. ‘நெய்தற்கண் குறிஞ்சி மயங்கியது’என்பதில் ‘குறிஞ்சி’என்பது ஒழுக்கம். ‘காட்டுக்கோழி குறிஞ்சிக்குரியது’ என்பதில் ‘குறிஞ்சி’என்பது நிலம். திணையாகிய ஒழுக்கத்தைப் பாடுவதே புலனெறி வழக்கம். இப்புலனெறி வழக்கம் சிறக்க வேண்டுமாயின் முதற்பொருளின் பின்புல அமைதி மிகவும் வேண்டப்படுவதாகும். அப்பின்புலம் முதற்பொருளாலும் கருப்பொருளாலும் அமையும். சான்றாகப், பாலையாகிய பிரிவைப் பாடும் ஒருசூழலில், அப்பிரிவொழுக்கத்தின் பின்புலம் மனத்துன்பத்தை மிகுவிப்பதாக இருத்தல் வேண்டும். காலையிலோ, மாலையிலோ, இரவிலோ பாடுவதாக அமைந்தால் அப்பாடல் சிறக்காது., மேலும் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் வேதனையை அருவி, சாரல், மயில், குயில் என்னும் பின்புலத்திலும் விளக்க முடியாது., விளக்கினால் செய்யுள் சிறக்காது. பட்டமரம்,, சுடுமணல், பறக்கும் பருந்து என்னும் பின்புலத்தில் நண்பகல் பொழுதில் விளக்கினால் பாட்டின் சிறப்பும், தலைவிபடும் பிரிவுத்துன்பமும் கற்பார் உள்ளத்தில் ஆழப்பதியும். எனவே முதற்பொருள் என்பதும் கருப்பொருள் என்பதும் ஒழுக்கமாகிய திணை பற்றிய பாடல் சிறக்க தொல்காப்பியம் அமைத்துத் தந்த ‘அமைப்பு’(Settings) என்பதை நினைவில் இருத்துதல் வேண்டும். இன்றைய திரைப்படம் வரை இந்த மரபு பின்பற்றப்படுகிறது என்பதும் ஈண்டுச் சுட்டத்தகுந்தது.

    முதற்பொருள் அமைப்பில் தொல்காப்பியத்தின் அறிவியல் பார்வை

    இயங்குதிணையும் நிலைத்திணையுமாகிய உலகத்துப் பொருள்கள் தோன்றுவதற்குக் காரணமும் அவற்றிற்கு ஆதாரமுமாக விளங்குவது புவியும் அப்புவியின் சுழற்சியால் நிகழும் கூறுபாடுகளுமாகும். புவியின் இயற்கையமைப்பை ஒட்டி மலை சார்ந்த நிலம், காடு சார்ந்த நிலம், ஆறுகள் பரந்து செல்லும் சமநிலம், கடற்கரையைச் சார்ந்த மணற் பரப்புடைய நிலம் எனப் பிரித்து நிலத்தை நானிலம் என வழங்குவர். இதனைத் தொல்காப்பியம் ‘காடுறை உலகம், மைவரை உலகம், தீம்புனல் உலகம், பெருமணல் உலகம்’ என வழங்கும். புவி ஞாயிற்றினின்றும் தோன்றியது. அப்புவி கதிரவனின் ஈர்ப்பாற்றலுக்கு உட்பட்டு, அதன் ஒளியையும் ஏனைய நாள்மீன்களின் ஒளியையும் பெற்றுச் சுழன்று வருவதுடன், தனக்குத் தானே சுழன்று வரும் இயல்பினை உடையது. புவியின் இருவேறு சுழற்சிகளால் ஏற்படுவனவே பெரும்பொழுதும் சிறுபொழுதும் ஆகும். பெரும்பொழுதினை வழக்கில் ‘பருவம்’என்பர். இவ்வாறு ஞாயிற்றினால் அமைந்த புவியையும் அப்புவியின் சுழற்சியினால் தோன்றும் இருவகைப் பொழுதுகளையும்  ‘முதற்பொருள்’எனச் சுட்டுவது நேரியதே ஆகும்.

    “முதல் எனப்படுவ நிலம்பொழு திரண்டின்
    இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே” 1

    என்பது தொல்காப்பியம்.

    ஐந்திணைகளும் முதற்பொருள்களும்

    கைக்கிளை முதலாகப் பெருந்திணை இறுதியாகச் சொல்லப்பட்ட அகத்திணைகள் ஏழனுள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகளுக்கு நிலம் வகுக்க வேண்டிய தொல்காப்பியம் பாலை தவிர்த்த ஏனைய நான்கு திணைகளுக்கு மட்டுமே நிலத்தை வரையறை செய்திருக்கிறது.  முதற்பொருள்கள் இரண்டனுள் தலையாயதான நிலத்தினை,

    “மாயோன் மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும்
    முல்லை, குறிஞ்சி, மருதம்,நெய்தல்எனச்
    சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”2

    என்னும் நூற்பாவில் சுட்டிச்செல்கிறார் தொல்காப்பியர். ‘காடுறை உலகம்’ முல்லை எனவும், ‘மைவரை உலகம்’குறிஞ்சி எனவும், ‘தீம்புனல் உலகம்’மருதம் எனவும், ‘பெருமணல் உலகம்’நெய்தல் எனவும் பெயர்பெறும். இந்நூற்பாவில் அகன் ஐந்திணைகளில் ஒன்றாகிய பாலைக்குத் தனித்த நிலம் ஒதுக்கப்படவில்லை. தட்பவெப்பநிலை காரணமாக அமையும் நானிலங்களின் திரிபே பாலையாகும் என்பதே இதற்குக் காரணம்.

    ஐந்திணைப் பிரிவும் இருவகைப் பொழுதுகளும்

    ஏனைய கோள்களைப் புவி சுற்றுவதாலும், புவி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதாலும் உண்டாகும் பருவ மாறுதல்களும் பொழுது மாறுதல்களும் முறையே பெரும்பொழுது, சிறுபொழுது எனத் தொல்காப்பியத்தால் வகுத்துரைக்கப்படுகின்றன. இதில் ஆண்டின் உட்பகுதியைப் பெரும்பொழுது என்றும் நாளின் உட்பகுதியைச் சிறுபொழுது என்றும் கூறலாம்.முல்லையாகிய இருத்தல் ஒழுக்கத்திற்குக் கார்காலமாகிய பெரும்பொழுதையும் அக்கார்காலத்துள் மாலையைச் சிறுபொழுதாகவும் தொல்காப்பியம் உரித்தாக்குகிறது.  இதனைக்,

    “காரும் மாலையும் முல்லை”3

    என்னும் நூற்பாவில் கூறும் தொல்காப்பியம், குறிஞ்சியாகிய புணர்தல் ஒழுக்கத்திற்குப் பெரும்பொழுதில் கார்காலமும் முன்பனிக்காலமும், சிறுபொழுதில் மாலைக்காலமும் உரித்தாகக் கூறுகிறது. இதனைக்,

    “குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர்”4

    “பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப”5

    என்னும் நூற்பாவில் சுட்டுகிறார்.

    “வைகறை விடியல் மருதம்”6

    என்னும் நூற்பாவினால், மருதமாகிய ஊடல் ஒழுக்கத்திற்கு ஆறு பெரும்பொழுதுகளையும் குறிப்பாக உரிமையாக்கி,, அப்பெரும்பொழுதுகளில் அமையும் வைகறை, விடியல் ஆகிய இருவகைச் சிறுபொழுதுகளையும் உரிமையாக்கினார். நெய்தல் திணைக்கு,

    “எற்பாடு நெய்தலாதல் மெய்பெறத் தோன்றும்”7

    என விதி செய்த தொல்காப்பியர், மருதத்தைப் போலவே அறுவகைப் பெரும்பொழுதுகளையும் நெய்தலுக்கு உரிமையாக்கிச்,  சிறுபொழுதுகளில்  ‘எற்பாடு’என்பதையும் உரிமையாக்கினார்.

    நடுவுநிலைத் திணையும் முதற்பொருள் அமைதியும்

    பாலையை ‘நடுவுநிலைத் திணை’ என்பார் தொல்காப்பியர். நடுவுநிலைத் திணை என்றால் ‘ஏனைய திணைகளுக்கு நடுவே இருக்கும் திணை’என்பது பொருளன்று. ஏனைய திணைகளின் நிலங்கள் திரிந்த நிலையையே தனக்கு நிலமாகப் பயன்படுத்திக் கொள்வதாலும், ஏனைய நால்வகை ஒழுக்கங்களுக்கிடையே தனக்குரிய பிரிவை நிகழ்த்திக் கொள்வதுமாகிய சிறப்பு நிலையே ‘நடுவுநிலை’எனப்படும். எதனையும் சாராது இருப்பது பற்றற்ற நிலை. எல்லாவற்றோடும் சார்ந்திருப்பதே நடுவு நிலை. எனவே தான் தொல்காப்பியம் ‘நடுத்திணை’என்னாது ‘நடுவுநிலைத் திணை’எனச் சுட்டுகிறது. நான்கு திணைகளோடும் பிரிவால் உறவு பாராட்டுவது பாலைத் திணையாதலின் அது நடுவுநிலைத் திணையே. நிலமாகிய முதற்பொருள் இல்லையாயினும் பாலைக்கென பிரிவாகிய உரிப்பொருள் உண்டு. அப்பிரிவொழுக்கம் நிகழ வேண்டுமாயின் பொழுது கூறியே ஆதல் வேண்டும். எனவேதான் தொல்காப்பியம்,

    “நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலோடு
    முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே”8

    “பின்பனி தானும் உரித்தென மொழிப”9

    என்னும் நூற்பாக்களினால் பெரும்பொழுதுகளில் இளவேனில், முதுவேனில் ஆகிய இருவகை வேனிற்காலத்தையும், பின்பனிக் காலத்தையும், சிறுபொழுதுகளில் நண்பகலையும் அதற்கு உரிமையாக்குகிறது. பாலையொழுக்கம் ஏனைய நான்கு திணைகளுள் நிகழ்ந்தாலும், அவ்வொழுக்கம் பாடுபொருளாகிற பொழுது, பாலையின் பின்புலத்தையே கொண்டிருக்க வேண்டும் என்பதே இந்நூற்பாவின் சாரமாகும். குறிஞ்சியில் நிகழும் பாலையொழுக்கத்தைக் குறிஞ்சிப் பின்புலம் கொண்டு அமைத்தல் கூடாது என்பது கருத்து.

    இருபொழுதும் மயங்கினால் தான் திணையா?

    திணைகளுக்குரிய பொழுதுகளை வரையறுக்கும் பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது ஆகிய இரண்டனையும் இணைத்தே தொல்காப்பியம் கூறுவதைக் காணலாம். ‘காரும் மாலையும் முல்லைக்குரிய’என்பது போலத் திணை பற்றிய புலனெறி வழக்கத்தில் இவ்விருபொழுதுகளும் இவ்வாறு இணைந்துதான் கூறப்பட வேண்டுமா? என்னும் ஐயம் நிகழ்கிறது. ஏதேனும் ஒருபொழுது மட்டும் இருந்தால் வழுவாய் விடுமோ? என்னும் ஐயத்தைத் தொல்காப்பியம் பின்வரும் நூற்பாவினால் அகற்றுகிறது.

    “இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றலும்
    உரிய தாகும் என்மனார் புலவர்”10

    என்பது தொல்காப்பியம். இதில், ‘இருவகைப் பொழுதும் தோன்றலும் உரியதாகும்’என்பதனால் ‘தோன்றாமையும் உண்டு’என்பது பெறப்படும். ‘தோன்றலும்’என்பதில் உம்மை எதிர்மறைப் பொருளதாகும்.

    அகத்திணை மயக்கம்

    குறிப்பிட்ட நிலத்தில் குறிப்பிட்ட ஒழுக்கந்தான் நிகழும் என்பது நடைமுறையாகாது. குறிஞ்சியில் புணர்தல் மட்டுமே நிகழும் என்பது பொருத்தமாகாது., நெய்தலில் இரங்கலைத் தவிர ஏனைய ஒழுக்கங்கங்கள் நிகழாது என்பது கற்பனை. எல்லா ஒழுக்கங்களும் எல்லா நிலத்திலும் நிகழும். அதாவது ஒருநிலத்துக்கென்று ஓதப்பட்ட ஒழுக்கம் மற்றொரு நிலத்திலும் நிகழ வாய்ப்புண்டு. இதனைத் தான் ‘மயக்கம்’என்னும் சொல்லால் பொருளதிகாரம் குறிக்கிறது. சொல்லதிகாரத்தில் சுட்டப்படும் வேற்றுமை மயக்கம் போன்றது இது. தொல்காப்பியம்,

    “திணைமயக் குறுதலும் கடிநிலை இலவே
    நிலனொருங்கு மயங்குதல் இல்லென மொழிப
    புலன்நன்கு உணர்ந்த புலமை யோரே”11

    என்னும் நூற்பாவில் இது பற்றி ஆராய்கிறது. ஒருநிலத்துக்குரிய ஒழுக்கம் மற்றொரு நிலத்தில் மயங்குவது உண்டு., அவ்வாறு மயங்குதல் கூடாது என்னும் வரையறை இல்லை., ஆனால் ஒருநிலம் இன்னொரு நிலத்தில் மயங்குதல் கூடாது. ‘ஒருநிலத்திற்குரிய மாந்தர் மற்றொரு நிலத்துக்குச் செல்லுங்கால், தத்தமக்குரிய ஒழுக்கத்தைப் பின்பற்றுவதால் ஒழுக்கமாகிய திணை மயங்கலாம் எனவும், ஒருநிலம் அசைந்து மற்றொரு நிலத்துக்குள் செல்லாதாதலால் நிலம் மயக்கம் ஏற்படையது அன்று’எனவும் தொல்காப்பியம் கூறியிருப்பது நுண்ணிய சிந்தனையாகும். நிலம், பொழுது, அவற்றின் மயக்கம் என்னும் முதற்பொருள் பற்றிய கருத்துக்களை அகத்திணையியலில் பதினெட்டு நூற்பாக்களில் விரித்துரைத்த தொல்காப்பியம்,’ முதலெனப் படுவது ஆயிரு வகைத்தே’என மீண்டும் எடுத்துரைத்து முதற்பொருள் ‘நிலம், பொழுது என இரண்டே’என வரையறுப்பதையும் ஈண்டுச் சுட்டலாம்.

    ஐந்திணைகளும் கருப்பொருள்களும்

    முதல், கரு, உரி என்பதே முறையாயினும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இந்த நெறி பின்பற்றப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. முதல், உரி, கரு என்றே அது இலக்கணம் கூறிச் செல்கிறது. அந்த வகையில் கருப்பொருள் என்பது ஒருதிணைக்குரிய தெய்வம், திணைமக்களுக்குரிய உணவு, அந்நிலத்தில் திரியும் விலங்கு, அந்நிலத்தில் விளையும் மரம், பறக்கின்ற பறவை, மக்களுடைய தொழில், அந்நில மக்கள் அடிக்கின்ற பறை, இசைக்கின்ற யாழ் இவற்றின் விரிவு ஆகியவற்றைக் குறிக்கும் என விளக்குகிறது.

    “தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
    செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
    அவ்வகை பிறவும் கருவென மொழிப”12

    என்பது கருப்பொருள் பற்றிய தொல்காப்பிய நூற்பாவாகும். இந்த நூற்பாவில் ‘பிற’என்னும் பயன்பாட்டால், ஒருநிலத்துக்குரிய பூவும், ஊரும், நீரும் கருப்பொருளாகத் தழுவிக் கொள்ளப்படும். கருப்பொருள்களில் ஒன்றாகிய தெய்வத்தோடு சேர்த்தே தொல்காப்பியம் முதற்பொருளாகிய நிலத்தை அறிமுகம் செய்கிறது என்பதும் பொதுவாக இன்னின்னவை கருப்பொருள் என்றுதான் இந்நூற்பா உரைக்கிறதேயன்றி, இந்த நிலத்துக்கு இன்னவை கருப்பொருள் என விதந்தோதவில்லை என்பதும் அவை சான்றோர் நெறியும் மரபும் பற்றிக் கொள்ளப்படும் என்பதும் ஈண்டுச் சுட்டப்படுகின்றன.

    திணைகளும் கருப்பொருள்களும்

    குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வகுக்கப்பட்ட நிலங்களும் அவற்றிற்குரிய கருப்பொருள்களும் சான்றோர் நெறி பற்றிப் பின்வருமாறு பட்டியலிடப்படுகின்றன.

    குறிஞ்சித் திணையின் கருப்பொருள்கள்

    தெய்வம்                            –              சேயோன் (முருகன்)
    உயர்ந்தோர்                       –              சிலம்பன்
    தாழ்ந்தோர்                   –              குறவன்
    பூ                                            –              குறிஞ்சிப்பூ
    மரம்                                     –              வேங்கை
    பறவை                                               –              மயில்
    விலங்கு                             –              புலி, யானை
    உணவு                                –              மூங்கில் அரிசி
    பறை                                    –              தொண்டகப் பறை
    யாழ்                                     –              குறிஞ்சி யாழ்
    பண்                                      –              குறிஞ்சிப் பண்
    ஊர்                                  –              சிறுகுடி
    நீர்                                   –              அருவிநீர், சுனைநீர்
    தொழில்                             –              வேட்டையாடுதல்

    முல்லைத் திணையின் கருப்பொருள்கள்

    தெய்வம்                     –              மாயோன் (திருமால்)
    உயர்ந்தோர்                       –              நாடன்
    தாழ்ந்தோர்                   –              இடையர்
    பூ                                            –              முல்லைப்பூ
    மரம்                                     –              பிடவம்
    பறவை                                               –              காட்டுக்கோழி
    விலங்கு                             –              முயல்
    உணவு                                 –              சாமை
    பறை                                    –              ஏறுகோட்பறை
    யாழ்                                     –              முல்லை யாழ்
    பண்                                      –              முல்லைப் பண்
    ஊர்                                        –              பாடி
    நீர்                                   –              காட்டாறு
    தொழில்                             –              ஆனிரை மேய்த்தல்

    மருதத் திணையின் கருப்பொருள்கள்

    தெய்வம்                            –              வேந்தன்
    உயர்ந்தோர்                       –              ஊரன்
    தாழ்ந்தோர்                   –              உழவன்
    பூ                                    –              தாமரைப்பூ
    மரம்                                     –              மருதமரம்
    பறவை                                               –              அன்னம்
    விலங்கு                             –              எருமை
    உணவு                                –              செந்நெல்
    பறை                                    –              மணமுழவு
    யாழ்                                     –              மருத யாழ்
    பண்                                      –              மருதப் பண்
    ஊர்                                        –              ஊர்
    நீர்                                          –              ஆற்றுநீர்
    தொழில்                             –              விதைத்தல்

    நெய்தல் திணையின் கருப்பொருள்கள்

    தெய்வம்                            –              வருணன்
    உயர்ந்தோர்                       –              புலம்பன்
    தாழ்ந்தோர்                        –              பரதவர்
    பூ                                    –              தாழம்பூ
    மரம்                                     –              விளரியாழ்
    பறவை                                               –              அன்றில்
    விலங்கு                             –              பகடு, சுறா
    உணவு                                –              மீன்
    பறை                                    –              மீன்கோட்பறை
    யாழ்                                     –              நெய்தல் யாழ்
    பண்                                      –              நெய்தற் பண்
    ஊர்                                        –              பாக்கம்
    நீர்                                   –              கடல்நீர்
    தொழில்                             –              உப்பு விளைத்தல்

    பாலைத் திணையின் கருப்பொருள்கள்

    தெய்வம்                            –              கொற்றவை
    உயர்ந்தோர்                       –              விடலை
    தாழ்ந்தோர்                        –              எயினர்
    பூ                                            –              குராஅம்பூ
    மரம்                                     –              ஓமை
    பறவை                                               –              கழுகு, பருந்து
    விலங்கு                             –              வலியிழந்த யானை
    உணவு                                –              கொள்ளையடிப்பன
    பறை                                    –              சூறைகோட்பறை
    யாழ்                                     –              பாலை யாழ்
    பண்                                      –              பாலைப் பண்
    ஊர்                                        –              பறந்தலை
    நீர்                                   –              அறுநீர்க் கூவல்
    தொழில்                             –              கொள்ளையடிப்பன

    முடிவுரை

    மேற்கண்ட கட்டுரைப் பகுதியில் இதுகாறும் சுட்டப்பட்டிருக்கும் கருத்துக்களின் அடிப்படையில், தொல்காப்பியத்தின் முதற்பொருள் பாகுபாடு அறிவியலுக்கு இசைந்ததே என்பதும், ஒருதிணைக்குரிய நிலமும் அந்நிலத்திற்குரிய பெரும்பொழுதும் சிறுபொழுதும் முதற்பொருள் என்பதும், பாலைக்கெனத் தனித்த நிலத்தைத் தொல்காப்பியம் சுட்டவில்லை என்பதும் ஆனால் பாலைத்திணையாகிய ஒழுக்கத்திற்குரிய இருவகைப் பொழுதுகளையும் தொல்காப்பியம் சுட்டத் தவறவில்லை என்பதும் புலனெறி வழக்கத்தில் இருவகைப் பொழுதுகளுள் ஒன்றிருந்தாலும் இழுக்கில்லை என்பதும், திணையாகிய ஒழுக்கம் மயங்கலாம் என்பதும், எந்நிலையிலும் நிலங்கள் இரண்டு தம்முள் மயங்கல் கூடா என்பதும், கருப்பொருளாகிய தெய்வத்தை முன்னிறுத்தியே முதற்பொருளாகிய நிலத்தைத் தொல்காப்பியம் அறிமுகம் செய்கிறது என்பதும் பொதுவாகக் கருப்பொருள்களைச் சுட்டிச்செல்கிறதேயன்றிக் குறிப்பிட்டு இன்ன திணைக்கு இன்னின்னவை கருப்பொருள் எனக் கூறவில்லை என்பதும் கருப்பொருள்கள் மரபுவழியாகவே கூறப்பட்டு வருகின்றன என்பதும் ஓரளவு விளக்கப்பட்டன.

    சான்றெண் விளக்கம்

    1. தொல்காப்பியர் தொல்காப்பியம் (பொருள்)   நூற்பா எண். 4
    2. மேலது                                                நூற்பா எண். 5
    3. மேலது நூற்பா எண். 6
    4. மேலது நூற்பா எண். 7
    5. மேலது நூற்பா எண். 8
    6. மேலது நூற்பா எண். 9
    7. மேலது நூற்பா எண். 10
    8. மேலது நூற்பா எண். 11
    9. மேலது நூற்பா எண். 12
    10. மேலது நூற்பா எண். 13
    11. மேலது நூற்பா எண். 14
    12. மேலது நூற்பா எண். 20

    துணை நூற்பட்டியல்

    தொல்காப்பியர், தொல்காப்பியம்
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தொல்காப்பிய அகனைந்திணையில் முதற்பொருளும் கருப்பொருளும் என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

    1. பொருளுணர் அச்சம் பொறுமையின்மை முதலியன காரணமாக  இன்றைக்கும் பெறவேண்டிய கவனத்தைப் பெறாமல் இருக்கும் நமது தமிழின் தலைச்செல்வம் தொல்காப்பியத்தை மீளாய்வு செய்து அறிமுகக் கட்டுரை செய்திருக்கும் கட்டுரையாளருக்குப் பாராட்டு!
    1. கட்டுரையின் உள்ளடக்கத்தை முன்னுரையில் அளவாகவும் செறிவாகவும் கூறியிருப்பது ஆய்வாளரின் கட்டுரை வன்மையைக் காட்டுகிறது. .
    1. அகத்திணை உள்ளடக்கத்தை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு பதிவு செய்திருக்கும் ஆய்வாளர். இத்தனைச் சிறப்புக்களும் கொண்ட இந்த அகத்திணையியல், தலைவியின் கூற்றுப்பகுதியைக் கூறாதது சிந்தனைக்குரியது.’ என துணிந்து கூறுவது அவர்தம் ஆய்வில் அவர் கொண்டிருக்கும் உறுதியையும் நம்பிக்கையையும்  பறைசாற்றுகிறது.
    1. “முதற்பொருள் என்பதும் கருப்பொருள் என்பதும் ஒழுக்கமாகிய திணை பற்றிய பாடல் சிறக்க தொல்காப்பியம் அமைத்துத் தந்த‘அமைப்பு’(Settings) என்பதை நினைவில் இருத்துதல் வேண்டும்.” என்னும் கருத்தியல் தொல்காப்பியத்தை இலக்கியத்திற்கான இலக்கண நூல் என்பதை உரக்கச் சொல்கிறது.
    1. நிலம் பொழுதாகிய இரண்டின் பகுப்பிலும் அறிவியல் உணர்வு மேலோங்கி நிற்கிறது என்பதை ஆய்வாளர் தகுந்த சான்றுகளுடனும் எடுத்துக்காட்டுகளுடனும் தந்திருப்பது போற்றுதற்குரிய்து.
    1. பாலையை நடுவுநிலைத் திணை என்பதற்கான காரணத்தை விளக்க வந்த கட்டுரையாளர் எதனையும் சாராது இருப்பது பற்றற்ற நிலை. எல்லாவற்றோடும் சார்ந்திருப்பதே நடுவு நிலை. என வரையறை செய்து எல்லாத் திணைகளிலும் தனது பிரிவொழுக்கத்தை நிகழ்த்திக் ;கொள்ளும் பேராற்றல் வாய்ந்த திணை பாலைத்திணை என்பதை அழகுற விளக்கியிருக்கிறார்.
    1. ‘குறிஞ்சியில் நிகழும் பாலையொழுக்கத்தைக் குறிஞ்சிப் பின்புலம் கொண்டு அமைத்தல் கூடாது’ என்றும் பாலைநிலப் பின்புலத்தைக் கொண்டே அமைக்க வேண்டும் என்றும் கட்டுரையாளர் எச்சரிப்பது தொல்காப்பியத்தைச் சரியான தளத்தில் வைத்துப் புரிந்து கொண்டிருக்கும் அவர்தம் புலமைச் சதுரப்பாட்டை உணர்த்துகிறது.
    1. இருபொழுதும் அமைந்தால்தான் திணையா? ஒரு பொழுது மட்டும் சுட்டினால் திணையாகாதா? என்னும் சிந்தனையை முன்னெடுக்கும் ஆய்வாளர்  “இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றலும் உரிய தாகும் என்மனார் புலவர்”10 என்னும் நூற்பாவில் அமைந்த உம்மையை எதிர்மறை உம்மையாக் கொள்ளும் நச்சினார்க்கினியர் கருத்தினை வழிமொழிந்து தனது கருத்துக்கு வலிமையூட்டுவது பொருத்தமான ஆய்வு நெறியே!
    1. முதற்பொருள் கருப்பொருள் பட்டியலைத் தந்திருக்கும் கட்டுரையாளர், முன்னுரை மற்றும் முடிவுரை ஆகியவற்றை மாட்டேற்றாக அமைத்து ஒரு சிறிய அரிய ஆய்வுக் கட்டுரையையும் செம்மையாக வடிவமைக்க இயலும் என்பதை உறுதி செய்திருக்கிறார்.


     

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன் – 18

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன் – 18

    முனைவர் ச.சுப்பிரமணியன்

    முனைவர் கருவூர் கன்னலின் ‘அற்றைத் திங்கள்’ – ஒரு கவிதைப் பார்வை

    முன்னுரை

    முறையாகத் தமிழ் படித்தவர்கள் பெரும்பாலும் படைப்புத் தொழிலில் ஈடுபடுவதில்லை. அப்படி ஈடுபட்டாலும் அவை பரிமளிப்பதில்லை. இந்தக் கருத்தினை வல்லமையில் நான் எழுதிவரும் கட்டுரைகள் பலவற்றில்  சுட்டிக்காட்டியிருக்கிறேன். ஆசிரியப்பணி வேறு. படைப்புத் தொழில் என்பது வேறு. முன்னது திட்டமிட்ட பாடத்திட்டத்திற்கும் பயிற்சிக்கும் உட்பட்டது. பின்னது உள்ளத்தோடு உறவு கொண்டது. புலவர் குழந்தை, அறிஞர் மு.வ., புலவர் சரவணத்தமிழன், பொன்னிவளவன், மணிவண்ணன், உளுந்தூர் பேட்டை சண்முகம், ஈரோடு தமிழன்பன், அப்துல் ரகுமான், சிற்பி, மேத்தா, வைரமுத்து முதலிய விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரே தமிழை முறையோடு முன்னெடுப்பவர்கள். அண்மைக்காலத்தில் இந்த நிரலில் வருபவர் முனைவர் கவிஞர் கருவூர் கன்னல் அவர்கள். நாவல், சிறு கதை படைப்பாளர், கவிஞர், ஆய்வியல் அறிஞர் என்னும் பன்முகத் தளத்தில் தனது முத்திரையை வலிமையாகப் பதித்திருப்பவர். இவர் எழுதிய ‘மழை’ என்னும் நாவலைப் பற்றிய என் மதிப்பீடு சில ஆண்டுகளுக்கு முன் வல்லமையில் வெளிவந்துள்ளது. பாவேந்தர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கும் இந்தப் பண்பாட்டுப் பாவலரின் அற்றைத் திங்கள்’ என்னும் குறும்பாவியத்தை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    அசை அடியான கதை

    அசை பாட்டான கதை என்று சொல்லியிருக்கலாம். பெருங்காவியத்திற்கும் குறும்பாவியத்திற்கும் வேறுபாடு உண்டு. பல அடிகள் கொண்டவை பாட்டு. எனவே அசை சீராகி, சீர் அடியாகி, அடி பாட்டாவதால் குறுங்காவியம் என்பதை அசையின் மூன்றாவது நிலையாகிய அடியாகவே கருதலாம். பெருங்காப்பியங்களில் அல்லது இதிகாசங்களில் இடம்பெற்று ஏதோ ஒரு காரணத்தால் தன்னைப் பாதித்த ஒரு நிகழ்வைக் குறும்பாவியமாகவே சிறுகதையாகவோ வெளிப்டுத்துவதும் தமிழ்க்கவிதைக் கோட்பாடுகளில் ஒன்று. இதற்குப் பல நூறு எடுத்துக்காட்டுக்களைச் சொல்ல முடியும். சான்றாக எல்லாருக்கும் தெரிந்து இராமாயணத்தில் இடம்பெற்ற அகலிகைக் கதையைச் ‘சாப விமோசனம்’ என்ற பெயரில் புதுமைப்பித்தன் சிறுகதையாக்கியதைக் கூற முடியும். இந்த மரபு பாரதத்தின் கிளைக்கதைகளில் ஒன்றான நளனின் கதையைப் புகழேந்தி பாடியதில் இருந்தே தொடங்கிவிடுகிறதெனலாம்.

    புறநானூற்று நிகழ்வொன்றினைச் ‘சான்றாண்மை’ என்னும் பெயரில் குறுங்காப்பியமாகச் செய்தார் முதுபெரும் தமிறிஞர் அடிகளாசிரியர் என்னும் குருசாமி தேசிகர். பாரதக்கதையில் துரியோதனன் அவையில் தன்னைப் பாதித்த பாஞ்சாலியின் துயர் கண்டு வெதும்பிய பாரதி ‘பாஞ்சாலி சபதம்’ என்னும் பெயரால் குறுங்காவியம் படைத்தார். வடமொழியில் பில்கணன் எழுதிய ‘பில்கணீயம் கணபதிப் புலவர் என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அந்த நூலின் கருவைக் கொண்டு பாவேந்தர் எழுதியதுதான் ‘புரட்சிக்கவி’ என்னும் தனித்தன்மை வாய்ந்த குறுங்காவியம். சிலம்பில் வரும் கானல்வரியை அடிப்படையாகக் கொண்டு கவிஞர் தமிழ் ஒளி எழுதிய புரட்சிக்காப்பியமே ‘விதியோ வீணையோ? என்பது. ஐம்பெருங்காப்பியங்களுள் சிதிலமடைந்த இரண்டு காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியின் சில பகுதிகளை ‘மந்திரி குமாரி’ என்று மாறுவேடம் தரித்த அழகியாக்கிக் காட்டியவர் கலைஞர். ஆட்டனத்தி ஆதிமந்தி என்பார் பற்றிப் புறநானூற்றில் வரும் செய்தித் துளிகளைச் சேகரித்து ‘மன்னாதி மன்னன்’ என்னும் பெயரில் திரைக்கதையைக் காப்பியமாகச் செதுக்கியவர் கண்ணதாசன். தமிழிலக்கிய உலகிலும் அரசியல் அரங்கிலும் பொதுவாழ்விலும் மிகப்பெரிய விவாதப் பொருளாகியது பேரறிஞர் அண்ணா எழுதிய நீதி தேவன் மயக்கம் என்னும் நாடகமாகும். ‘இரக்கமெனும் ஒரு பொருளில்லா அரக்கர்’ என்னும் தொடரால் எங்களை எப்படிக் கம்பன் அழைக்க முடியும்? என்று கம்பரையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி நீதிதேவன் முன் இராவணனை வழக்காட வைத்தவர் அண்ணா. இந்த நிரலில் கடையெழு வள்ளல்களில் மயிலுக்குப் போர்வை தந்து புகழ் பெற்ற பேகன், தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து வாழ்ந்தது பற்றிய குறிப்பு புறநானூற்றில் காணப்படுகிறது, அந்தக் குறிப்பினைக் கொண்டு அறியப்படும் பேகனின் கூடாவொழுக்கமும் கண்ணகியின் துயரமும் படைப்பாளர்கள் பலரையும் பாதித்தது. அவருள் கவிஞர் முருகுசுந்தரமும் கவிஞர் கன்னலும் அடங்குவர். சில எண்சீர விருத்தங்களால் முருகுசுந்தரம் தன் பாதிப்பைப் பதிவு செய்ய, கவிஞர் கன்னலோ தன் பெயருக்கேற்ப ஐம்பத்தெட்டு  கன்னற் கவிதைகளால் ஒரு சிறு காப்பியத்தையே செதுக்கியிருக்கிறார். எழுதியவருக்கு நூல் உரிமை! இன்பம் நமதுரிமை!

    மூல மந்திரம்

    முருகுசுந்தரம் மற்றும் கன்னல் ஆகியோரின் கவிதைகளுக்கான மூல மந்திரம் புறநானூற்றில் இருக்கிறது. கடையெழு வள்ளல்களில் ஒருவனான வையாவிக்கோன் பெரும்பேகன் என்பான் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து நல்லூரைச் சேர்ந்த ஒருத்தியோடு தகாத உறவு கொண்டிருந்தான். பிரிவாற்றாத கண்ணகி கோவலன் மனைவி கண்ணகிபோலவே இல்லத்திருந்தாள். பிறர் இரக்கத்திற்கு ஆளாகியிருந்தாள். மன்னனுடைய இல்லறத்திலும் கருத்துரை நல்கும் உரிமை பெற்றிருந்த சங்கச் சான்றோர்களான . கபிலர், பரணர், அரிசில் கிழார், பெரும்பூதனார் முதலியோர் பேகனிடம் சென்று கண்ணகியின் துயர்நீக்க வேண்டிக் கொண்டனர். இந்நிகழ்வு பற்றிப் புறநானூற்றில் ஏறத்தாழ பத்துப் பாடல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    நளியிரு சிலம்பின் சீறூர் ஆங்கண்
    வாயில் தோன்றி வாழ்த்தி நின்று
    நின்னும் நின் மலையும் பாட, இன்னாது
    இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
    முலையகம் நனைப்ப விம்மிக்
    குழல் இனைவதுபோல் அழுதனள் பெரிதே!” (புறம்143)

    எனப் பாணர் வாய்மொழியாகப் பதிவு செய்யும் கபிலரின் குறிப்பு மொழியும்

                   யாம் கிளைஞரேம் அல்லேம்! கேள்! இனி
                      எம்போல் ஒருத்தி நலன் நயந்து என்று
                      வரூஉம் என்ப வயங்கு புகழ்ப் பேகன்
                      ஒல்லென ஒலிக்கும் தேரொடு
    முல்லை வேலி நல்லூ ராளே!” (புறம் 144)

    கடாஅ யானை கலிமான் பேக!
    பசித்தும் வாரேம்! பாரமும் இலமே!
    களங்கனியன்ன  கருங்கோட்டு சீறியாழ்
    நயம் புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி
    அறம்செய்து ஈமோ அருள் வெய்யோய்!’ என
    இஃது யாம் இரந்த பரிசில்! அஃது இருளின்
    இனமணி நெடுந்தேர் ஏறி
    இன்னாது உறைவி அருந்துயர் களைமே! (புறம் 145)

    என்னும் பாணர் வாய்மொழியாக வந்த பரணர் தமிழும்

                     “நீ நல்காமையின் நைவரச் சாஅய்
    அருந்துயர் உழக்கும் நின் திருந்திழை அரிவை
    கலிமயிற் கலாவம் கால்குவித் தன்ன
    ஒலிமென் கூந்தல் கமழ்புகை  கொளீஇத்
    தண்கமழ் கோதை புனைய
    வண்பரி நெடுந்தேர் பூண்க நின் மாவே! (புறம்146)”

    என்னும் அரிசில்கிழார் அறிவுறுத்தலும் படிக்கின்ற நம்மைக் கவர்ந்தது போலவே பாவலர்களையும் கவர்ந்திருக்கிறது. பெண்ணின் துயரம் என்பது தமிழ்க்கவிதையுலகின் தலைசிறந்த பாடுபொருள். தலைவியைப் பிரிந்து தலைவன் சென்றாலும் பிரிவுத் துன்பம் பற்றிய பாடல்கள் எல்லாம் பெண்களுக்கானவையே! பாலைத்திணையில் பிரிந்தவன் தலைவன். ஆனால் புலம்புதல் தலைவிக்கு. தலைவன் புலம்பியதாக ஒரு பாடல் உண்டா?

    எழுவருள் இருவர்

    பேகன், பாரி, காரி, ஆய், அதியமான், நள்ளி, ஓரி என்பதே இன்றைய தமிழிலக்கிய உலகில் வழங்கிவரும் வள்ளல் வரிசை. இது அகர நிரலாக இல்லை. வள்ளன்மையின் நிரலாக இருக்கக்கூடும் என அனுமானிக்கலாம். அனுமானிக்கவே மயிலுக்குப் போர்வை தந்த பேகனும் முல்லைக்குத் தேர் நல்கிய பாரியும் தனித்துவம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். பாரியைப்

    பூத் தலைஅறாஅப் புனைகொடி முல்லை
    நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
    கறங்குமணி நெடுந்தேர் கொள்கவெனக் கொடுத்த
    பரந்தோங்கு சிறப்பின் பாரி

    என்று பாடுகிறார்கள்.  புலவர்களால் தாம் பாடப்படுவதையே விரும்பும் மன்னர்கள், பாடி வந்தவர்களுக்கு அவர்கள் நாடிய பரிசிலை நல்குவது இயல்பு. ஆனால் நாக்கில்லாத காரணத்தால் முல்லைக் கொடி தன்னைப் பாடாது எனத் தெரிந்தும் தான் ஏறி வந்த மணித்தேர் கொடுத்ததால் பாரி போற்றப்படுகிறான். பேகனோ இன்னும் ஒரு படி மேலே செல்கிறான். முல்லை படரக் கொம்பின்றித் தவித்தது உண்மை. ஆனால் மயில் மேகம் கண்டு ஆடியது. நடுங்கியதாகக் குறிப்பில்லை. நாட்டியத்து மயிலுக்கும் குளிரினாலே நடுங்குகிற மயிலுக்கும் வேறுபாடு அறியாது கொடைமடத்தின் கொடுமுடிக்குச் சென்றவன் பேகன். அதனால்தான் கடையெழு வள்ளல்கள் நிரலில் அவனுக்கு முதலிடம். இந்த அனுமானம் பின்வரும் சான்றோர்களின் பதிவுகளாலும உறுதி செய்யப்படலாம். கொடைமடம் பட்டவர் பலராயினும்  இலக்கியங்களில் எடுத்துக்காட்டாக அமைந்தவர்  பேகனும் பாரியுமாகிய இருவருமே!   ஐயனாரிதனார் இயற்றிய புறப்பொருள் வெண்பா மாலையில்

    முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
    எல்லை நீர் ஞாலத்து இசைவிளங்கத் தொல்லை
    இரவாமல் ஈந்த இறைவர்போல் நீயும
    கரவாமல் ஈகை கடன்””

    என்றும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் முன்றுறை அரையனார் எழுதியபழமொழி நானூறு என்னும் இலக்கியத்துள்

    முல்லைக்குத் தேரும்மயிலுக்குப் போர்வையும்,
    தொல்லை, அளித்தாரைக் கேட்டறிதும் சொல்லின்,
    நெறி மடல் பூந் தாழை நீடு நீர்ச் சேர்ப்ப!
    அறி மடமும் சான்றோர்க்கு அணி.

    என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரிசை வெண்பாக்களால்.  அறிந்த கொள்ளலாம்.

    பெரும்பூதனும் முருகு சுந்தரமும்

    திராவிடச் சிந்தனைக் கவிஞர்கள் பெண் விடுதலை பாடுவது  இயல்பே. அவ்வகையில் கவிஞர் முருகுசுந்தரத்தைக் கண்ணகியின் துயரம் கவனத்தை ஈர்க்கப் பேகனின் அரண்மனையை நிகழ்விடமாக வைத்துக் கண்ணகியின் துயர் நீக்கக் கற்பனைக் களம் அமைக்கிறார்.  அவையில் பரணர் பேகனின் பல்புகழைப் பாட, செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார் எழுந்து “மனைவியின் கண்ணீரைத் துடைக்காமல் மயிலின் குளிரைப் போக்கியது பாராட்டுக்குரியது அன்று. பேகனின் தவறைச் சுட்டிக்காட்டி அறிவுரை கூறுங்கள் என்று அவையில் முழுக்கமிடுவதாகக் கற்பனை செய்து பாடுகிறார்.

    போர்க்களத்தின்  கொடுமைகளை எடுத்துக் காட்டிப்
    புவிமன்னர் பகைதீர்க்கும் பரண! பேகன்
    கார்க்கூந்தல் கண்ணகியைப் பிரிந்து வாழும்
    கதையுமக்குத் தெரியாதா? முல்லை வேலி
    ஊர்ப்பரத்தை உதடுகளின் கொடைக்கு வள்ளல்
    உட்கார்ந்து கிடக்கின்றான் அந்தப் பேகன்
    வேர்ப்புகழை விளாசுகிறீர் பாட்டுப் போர்வை
    விரித்திந்த களங்கததை மூடு கின்றீர்

    கார்போன்ற கருங்கூந்தல் நடுங்க ஏக்கக்
    கண்ணிரண்டும் புண்ணாகி நடுங்க வில்லின்
    கூர்போன்ற உதட்டுமுனை நடுங்க செங்கை
    குலைக்காந்தள் போல்நடுங்க உருட்டிவிட்ட
    தேர்போலக் கிடக்கின்றாள் மனைவி! அந்தப்
    தென்பொதினிப் பொன்மயிலை மூடுதற்குப்
    போர்வை கொண்டு போகட்டும் பேகன் என்று
    பூதனங்கு முழக்கமிட்டான் பரணர் போனார்!!”

    இதே நிகழ்வைக் கவிஞர் கருவூர் கன்னல் சித்திரித்துக் காட்டியிருக்கும் பாங்கு சற்று வேறுபட்டது. .

    கன்னலின் அற்றைத் திங்கள்

    தமிழ்த்தாய் வணக்கம் அல்லது தமிழ்த்தாய் வாழ்த்து என்னும் இடைக்கால கவிமரபைப் பின்பற்றும் கன்னல் நான்கு பாடல்களில் தமிழ் வாழ்த்தையும் புதுமையான நான்கு எண்சீர் விருத்தங்களால் தன் உள்ளங்கவர்ந்த காதலிக்காக்கிய நூலின் படையலையும் தொடர்ந்து ஐம்பது எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களால்  ‘அற்றைத் திங்கள்’ என்னும் தலைப்பில் கண்ணகியின் துயரத்தைப் பாடியிருக்கிறார்.

    கவியுலகம் காணாத தமிழ்த்தாய் வாழ்த்து

    பொதுவாக நூலின் ;தொடக்கத்தில் பதிவு செய்யப்படும் கடவுள் வாழ்த்து, அவையடக்கம், நூல் படையல் முதலியவற்றைப் பெரும்பாலோர் அவ்வளவாகக் கவனிப்பதில்லை. அவையெல்லாம் நூற்பாகின் வெல்லக்கட்டி என்பதை அறிந்திருந்தால் கவனித்திருப்பார்கள். அபிராமி பட்டர் பாடிய அபிராமி அந்தாதியில் ‘தார் அமர் கொன்றையும்  எனத் தொடங்கும் காப்புச் செய்யுளே ஏனைய நூறுபாடல்களின் சாரத்தைத் தந்து விடுவதைக் காண்க. ‘கவிஞர் கன்னல் இந்த நூலில் பாடியிருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தும் ‘வேண்டுகிறேன்’ என்ற தலைப்பில் பாடியிருக்கும் காதலிக்கான படையலும் மிகவும் போற்றத்தக்கன.

    தேன்கூட உன் சுவைக்குத் தோற்றுப் போகும்!
    தென்பொதிகை பூங்காற்றும் புறமே காணும்!
    வான்நிலவும் நலன் குன்றும்! பூத்திருக்கும்
    வனப்பாலே உயிர்கேட்கும் அணங்கும் நாணும்!
    தேன்தழுவும் அரும்புகளும் தலையைச் சாய்க்கும்!
    தென்தமிழே! உனைப்பற்றிச் சுவைகள் கண்டார்!
    வானுலகின் இன்பத்தை எண்ணியேங்கும்
    வழக்கத்தை மறந்தார்!நல் ஞானம் பெற்றார்!”

    என்னும் தமிழ்த்தாய் வாழ்த்தின் இறுதி விருத்தம் முழுமையும் மரபார்ந்த சிந்தனைகளை உள்ளடக்கி அமைந்திருக்கிறது. ஆனால் முந்தைய பாடல்களில் தமிழுறையும் இடங்களாக அவர் பாடியிருப்பது இதுவரை யாரும் பாடாதது. பாடிக் கேட்காதது.

    மேடையாகட்டும் நூலாகட்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகின்ற கவிஞர்கள் ‘பாண்டியன் கை வளர்ந்தவளே’ என்று பாடாவிட்டால் அவர்கள் பிறவி பெருமையடையாது என்று எண்ணுபவர்கள். அடுத்த நிலையில் ‘கம்பனின் கைவண்ணம் கண்டவளே! கண்ணதாசனின் பேனாவாக இருந்தவளே! என்பார்கள். ‘வாலிக்கு வழி காண்பித்தவளே! வைரமுத்துக்கு வளம் சேர்த்தவளே! என்பார்கள். சமயச்சிந்தனை உடையவர்கள் ‘வைகையில் நீந்தியவளே! நெருப்பை எரித்தவளே’ என்பார்கள். இவற்றையும் இவைபோல்வனவற்றையும் கேட்டுக் கேட்டு விட்டம் அகன்றுபோன என் காதுகளில் கன்னலின் தமிழ்த்தாய் வாழ்த்து உண்மையில் தேனையும் பாலையும் வார்த்தது என்பேன்.

    மூட்டை தூக்கும் மாந்தர்களின் மூச்சுக்குள்ளே
          மூழ்கிப்போய் சிரிப்பவளே!
    விறகுடைக்கும் செந்தமிழர் செயலில்
          நெஞ்சில் வினையாற்றி மகிழ்பவளே!”

    “…………………………………………………………………….இனத்தைக் காக்க
    மறந்தவரின் உயிர்தேடி கழுவில் ஏற்றும்
          மறவர்களைத் தொடர்பவளே!”

    நெட்டை மலைச் சாரலிலே தவழ்ந்து மக்கள்
          நினைவுக்குள் குடியேறி அமுத ஊற்றைக்
    கொட்டுகின்ற பைந்தமிழே!

    தமிழ் எங்கே இருக்கிறது என்று பார்த்தீர்களா? பாண்டியன் கையைவிட்டுப் பாமரனின் கோடரிக்குள் வந்துவிட்டதாம்! மன்னன் கையிருந்திருந்தால் தமிழுக்கு  வடமொழியின் கதி வந்திருக்கும். தமிழ் மக்கள் மொழியாகி வழக்கில் இருந்ததால்தான் ஆரியம்போல் அழியாத சீிரிளமை திறம் பெற்று வாழ்கிறது என்னும் கருத்தினை இலக்கிய நயத்தோடு பதிவு செய்திருக்கும் வாழ்த்து இது. முனிவன் வளர்த்த தமிழ் அல்ல! .மூட்டைதூக்கும் முனுசாமி வளர்க்கும் தமிழ்! வேந்தன் வளர்த்த தமிழ் அலல! விறகுடைக்கும் வீராசாமி வளர்க்கும் தமிழ்! நெடுஞ்செழியன் வளர்த்த தமிழ் அல்ல! நெட்டைமலைச் சாரல் மக்கள் நினைவுக்குள் வளர்க்கும் தமிழ்! கற்பனையில் புதுமை செய்தவர் உண்டு. வடிவத்தில் புதுமை கண்டவர் உண்டு. கருததுக்களில் புதிய சிந்தனையைப் பதிவு செய்தவர் உண்டு. தமிழ்த்தாய் வாழ்த்தில் உளமார்ந்த புதுமை செய்த கவிஞர் சிலரே! அந்தச் சிலருள் முதல் வரிசையில் முந்தியிருப்பவர் முனைவர் கன்னல்!

    வித்தியாசமான வேண்டுதல்

    பேகனின் மனைவி கண்ணகியின்  துன்பத்தைச் சித்திரிக்கும் இந்த நூலைத் தன் காதலிக்கு அர்ப்பணிப்புச் செய்ய எண்ணுகிறார் கவிஞர். ஒருவனுடைய மரணச்சூழல் எப்படி அமைய வேண்டும் என்பது பற்றியும் திருவள்ளுவர் சிந்தித்திருக்கிறார்.

    புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
    இரந்து கோள் தக்கது உடைத்து (780)

    என்பார் திருவள்ளுவர். கன்னலோ தன்னுடைய சாக்காடு காதலிக்குத் தெரியாமல் போய்விடக்கூடாதென்றும், அவள் வந்து அரற்றும் நிலையே அரிய நிலை என்றும் பாடுகிறார்.

    ஊரெல்லாம மாலையிட்டே இறுதி யாக
    ஊர்தியிலே வைத்தென்னை உலாநடத்திப்
    பார்வியக்க அரசாங்கச் சிறப்பு செய்து
    பாராட்ட வேண்டாம்!”

    சுடுகாட்டின் ஓரத்தில் எரியும் போது
    சுற்றியுள்ள கலைஞரெல்லாம் ஒன்று கூடி
    விடுக்கின்ற இரங்கலுரை வேண்டாம்

    ஊர்கூடும் முச்சந்தி நடுவில் என்றன்
    உருவத்தைச் சிலையாக எடுத்தே நன்கு
    பேர பெற்ற அறிஞரெல்லாம் ஒரு நாள் கூடிப்
    பெருமையினை உலகறியப் புகழ்ந்து பேசும்
    சீர சிறப்பு செய்வதெலலாம் எனக்கு வேண்டாம்!

    “அவளுக்கோர் ஆள்விடுங்கள்” என்று வேண்டுகிறார். இந்த வேண்டுதல்தான் இதுவரைத் தமிழ்க் கவிதையுலகம் காணாதது என்கிறேன். இதே கருத்தினை வேறு வாய்பாட்டில் சிலர் பாடியிருக்கக் கூடும். கவிஞன் என்ன சொல்கிறான்? எல்லாருக்கும் ஆள் அனுப்பும் அவசரத்தில் அவளை மறந்துவிடாதீர்கள்! என்னைக் காதலித்த பாவத்திற்காக அவளை வெறுத்து விடாதீர்கள்! என் ஆவி சித்தி அடைய வேண்டுமென்றால் என் நெஞ்சக்கூடு முழுமையாக எரிய வேண்டும். அந்தக் கூட்டில் குடியிருக்கும் அவள் வரவேண்டும். அவளுக்குச் சேதி சொல்லி அனுப்ப மறந்துவிடாதீர்கள் என்கிறார்.. கவிஞனுக்கு ஊர் செய்யும் சிறப்புக்கள் ஒரு பொருட்டேயில்லையாம். தன் காதலி வந்து கதறுவதுதான் சங்கீத ஓப்பாரியாம்.

    அந்த மேற்கந்தி வானத்து நிலவு வந்து
    மதுவிழிகள் நீர்சூழக் கதற வேண்டும்!
    மற்றவர்கள் அதைக் கேட்டுத் தேம்ப வேண்டும்!
    “………………………………………………………….என் செவியில் மெல்லப்
    போர்விழியால் நினைவுக்குள் தமிழைக் கொட்டும்
    பொன்நிலவோ என் பேரைச் சொல்லிச் சொல்லி
    நீர் ஓடி அவள் விசும்பும் ஓசை கேட்டு
    நெருப்பினிலே நான் எரிந்து சாக வேண்டும்!

    ‘ஒருமையுடன் நின் திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.’ எனத்தொடங்கிப் பல வேண்டுதல்களை கந்தகோட்டத்தில் வைப்பார் வள்ளற் பெருமான். கன்னலோ தன் மரணத்தில் செய்யக் கூடாதனவற்றைப் ‘செய்ய வேண்டாம் ’பட்டியலிட்டுச் செய்ய வேண்டிய ஒரே செயலாகத்தன் காதலியின் வரவை வேண்டுகிறார். “மதுவிழிகள் நீர்சூழக் கதற வேண்டும்! மற்றவர்கள் அதைக் கேட்டுத் தேம்ப வேண்டும்!” என்னும் வரியால் தன் மீது அவள் வைத்திருக்கும் அன்பையும் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறார்.

    கன்னல் செய்த கதை மாற்றம்

    புறநானூற்றுக் கருத்துக்களைப் பெரும்பாலும அப்படியே தழுவிக் கவிஞர் முருகுசுந்தரம் ‘போர்வை’ என்னுந் தலைப்பில் கவிதை பாடினார். கன்னல் கதைத்தளத்தைத் தானே அமைத்துக் கொள்கிறார். பேகனை இளம்பேகனாக ஆக்கிவிடுகிறார். நல்லூர்ப் பெண்ணுக்குத் தமிழாழி என்று பெயரிடுகிறார். இயற்கை வளங்களைக் கண்டு மயங்கி யாழிசை மீட்டுகிறான் இளம்பேகன். அவனிசைக்குத் தக்கவாறு பாடுகிறாள் தமிழாழி. இளம்பேகனைச் சுற்றியிருந்தவர்கள் இனிமையாகப் பாடியவளுக்குப் பரிசு என்ன என்று வினவப் பேகன் அவளிருக்கும் மனைநோக்கிப் பறக்கிறான். .அவள் இசைநேர்த்தி கண்டு இதயத்தைப் பறிகொடுத்து அவள் இல்லத்திலும் இதயத்திலும் ஒரே நேரத்தில் குடியேறி வடுநீங்கு சிறப்பின் தன் மனையகம்மறந்து விடுதல் அறியா விருப்பினன் ஆனான்.

    தன் வறுமை போக்க பேகனை நாடிச் செல்கிறார் பரணர். பேகன் அரண்மனையில் பேகன் இலலை. கணவனைப் பிரிந்து பேதலித்து நின்ற கண்ணகியைக் காண்கிறார். கவலை கொள்கிறார். கபிலரின் அறிவுரையும் சேர, பேகனைக் காண நல்லூருக்கு வருகிறார். அவனோடு இருக்கும் நல்லூர்  நங்கையைப் பரணர் காண்கிறார். வியப்படைகிறார். பேகனுக்கு அறிவுரை கூறுகிறார். பேகனும் பரணரும் ஊர் திரும்ப, தமிழாழியும் உடன்வருகிறாள். கண்ணகியைத் தமிழாழி வணங்குகிறாள். தமிழாழியைக் கண்ணகி தழுவிக் கொளகிறாள். இருமலர் இல்லறத்தைப் பேகன் முன்னெடுக்கிறான்.

    வெளிப்படையாக நடந்த அன்றைய சமுதாய ஒழுக்கத்தையும மறைமுகமாகவும் பரவலாகவும் நடக்கும் இன்றைய சமுதாய ஒழுக்கததையும் நன்கு அறிந்தும் புரிந்தும் கதையில் செய்யப்பட்டிருக்கும் மாற்றம் கண்டிக்கத்தக்கதன்று. பொதுமக்களிடம் பெருந்தாக்கத்தை உணடாக்கும்  திரைப்பட ஊடகங்களில் கூட, இருதார இல்லறம் அனுமதிக்கப்படுகிறது என்பது சிந்திக்கத்தக்கது.

    இசையால் வசமான இதயங்கள்

    சிலப்பதிகாரத்தில் மாதவியைக் கோவலன் விரும்பிச் சென்றமைக்கு அவனுடைய கலையுள்ளம் காரணம் என்பர். பேகன் பரத்தைமையொழுக்கம் உடையவன் என்னும பதிவு அவன் பெருமைக்கு பங்கம் ஏற்படுத்தும் என்று கருதிதய கன்னல். அவனையும் ஓர் கலைப்பிரியனாகக் காட்ட முயன்றிருக்கிறார். தமிழாழியின் வியத்தகு இசைப்புலமையை பேகன் அறிந்து கொள்வது போன்ற கதைக்களத்தை அமைத்துக் கொள்கிறார். ‘ஈரிரு பண்ணும் எழுமூன்று திறனும்’ என்பது பிங்கலந்தை.  யாழில் இசை எழுப்புதற்குச் செய்யும் பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு என்னும் எட்டினையும், இசை நிலையின் தீதின்மை ஆராய்தற்குச் செய்யும் வார்தல், வடித்தல் உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்னும் எட்டினையும் ஒருங்கே குறிக்கும் . பண்கள் நூற்று மூன்று’ என்பார் பரிமேலழகர். பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி இவை நான்கும் பெரும்பண்கள். நாற்பெரும் பண்ணுக்கும் இருபத்தொரு திறங்கள் கூறப்பட்டன. பாலையாழ்ததிறன் 5, குறிஞ்சியாழ்த்திறன் 8, மருதயாழ்த்திறன் 4, செவ்வழி யாழ்த்திறன் 4 ஆக 21. இவ்விருபத்தொன்றும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என வகைக்கு நான்காய் எண்பத்துநான்காகும். இசைச் சுரங்களின் மாத்திரை வேறு பாட்டினாலே முற்குறித்த ஒவ்வொரு பண்ணும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என நால்வகைச் சாதியாயின என்ற நுட்பத்தை யாழ் நூலிற் காணலாம். இது பற்றிய ஐயங்களையும் விளக்கங்களையும் தமிழாழியிடம் கேட்டறிந்தானாம் பேகன்.

    மாதவியின் கலைநுணுக்கமே கோவலனை ஈர்த்தது என்னும் கருத்தினைக் குறிப்பாகப் புலப்படவைப்பார் அடிகள். காணியாளம்பட்டி கவிஞர் கன்னலோ வெளிப்படையாகப் பதிவு செய்கிறார். அவ்வளவுதான் வேறுபாடு.

    உவமங்களின் ஆளுமை

    கவிஞனுக்கு அவனுடைய கவிதையே முகவரி. அந்தக் கவிதைக்கோ அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உவமங்களே முகவரி. கவிதைகளை உவமவழி சுவைத்தல் என்பது தமிழ்க்கவிதைக் கொள்கைகளின் தலையாயது. கன்னலின் படைப்புக்களில் பொதுவாகவும் அவருடைய கவிதைகளில் சிறப்பாகவும் பயன்படுத்தப்பட்டிருப்பன உவமங்கள். ‘வெண்பாவிற் புகழேந்தி’ என்பது போல யாப்பு மேலிட்டுக் கவிஞர்கள் பெருமை பெறுவதுண்டு. உவமைக் கவிஞர் சுரதா என்பது போல உவமத்தின் மேலிட்டுப் பெருமை பெறுவதும் உண்டு..

    உவமத்தைச் சொல்பவரும் அனுபவித்துச் சொல்ல வேண்டும். அதனைப் படிப்பவரும் உணர்ந்து அனுபவிக்க வேண்டும். வேண்டாத பெண்டாட்டியாய் உவமமானால் இரண்டுக்கும் பெருமையில்லை! பொருளை விளக்குவது உவமத்தின் பணி என்பது உண்மையே ஆனால் அது படைப்பாளின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும்; அடையாளமாகவும் அவனுடைய புலமையின் ஆழத்தைக் காட்டும் ஆடியாகவும் பார்வையின் விசாலத்தைப் பறைசாற்றும் முரசாகவும் ;அமைகிறது.

    ஒரு பொருளை ஒரு உவமத்தால் விளக்குதல்,
    ஒரு பாட்டில் ஒரு உவமத்தை மட்டும் வைத்துக் காட்டுதல்,
    ஒரு பொருளுக்குப் பல உவமஙகளைப் பட்டியலிடுதல்,
    ஒரே பாட்டில் பல உவமஙகளைச் செறித்துக் காட்டுதல்

    என இன்னும் பல்வகையாக உவமப் பயன்பாடு தமிழ்க்கவிதைகளில் அமைந்துள்ளதை அறியலாம்.  இந்த அளவுகோலால் ‘அற்றைத் திங்கள்’ உவமங்கள் நோக்கப்படின் கட்டுரையின் அளவு பெருகும் எனக் கருதிச் சுருக்கமாக ஒரு சில உவமங்களின் அழகியல் சிறப்பினை  மட்டும் இப்பகுதி விளக்க முயல்கிறது. தமிழாழியின் தோற்றம் கற்பனையின் ஆழத்தை ஆழப்படுத்தும் என்பதையும் அதன் பரப்பை விரிவுபடுத்தும என்பதை

    உசுப்பிவிட ஓடுகின்ற குறுமு யல்போல்
    ஓடிவரும் கற்பனைகள்  ஆர்ப் பரிக்கும்

    என்று எழுதுகிறார். அவள் அழகைக் கண்ட காண்பார் நிலையை

    கூடையிலே நெருப்பை அள்ளிக் கொட்டினாற்போல்
    கொடுமையினை அவள் தந்தாள்

    என்னும் உவமத்தால் விளக்குகிறார். கதைநாயகியை உவமத்தால் சித்தரிக்கும் கண்ணதாசன்

    விரிக்காத தோகைமயில்! வண்டு வந்து
    மடக்காத வெள்ளை மலர்! நிலவு கண்டு
    சிரிக்காத அல்லிமுகம்! செகததில் யாரும்
    தீண்டாத இளமை நலம்! பருவஞானம்!

    என உவமத்தோரணத்தால் கவிமாலை புனைவார். நம் கன்னலும்

    வெட்டிவைத்த நிலவைப்போல நெற்றி! கோல
         விழியிரண்டும செங்குவளை! ………..
    ……………………………………………………………………………………………………………….
    தேன்ததும்பும் செவ்வாம்பல் போல் இதழ்கள்!
    வெட்கமின்றி மங்கையரும் கன்னம் தொட்டு
         வெண்ணிலவின் புன்னகையைத் தின்று செல்வர்!”

    எனத் தமிழாழியின் பேரழகை இயற்கையோடு இயைத்து கவித்தோரணம் கட்டியிருக்கிறார். பேகனுக்கு முன்னால் தமிழாழி தலைகுனிந்து நிற்கிறாளாம். எப்படித் தெரியுமா?

    தலைவாரிப் பூச்சூடித் தமிழே வந்து
    தன்முன்னே நிற்பதுபோல் அவன் உணர்ந்தான்

    தமிழைத் தாயாகப் பாடிய கவிஞர் இவர். இங்கே பேகனின் காதலியைத் தமிழாகக் காண்கிறார். மனைவியைத் தாயாக நோக்கி வணங்கும் தமிழ் மரபைக் குறிப்பாகச் சுட்டினார் என்றும் கூறலாம்.  திரையிசைப் பாடல் ஒன்றில்

    பேருக்கு பிள்ளை உண்டு
    பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
    என் தேவையை யார் அறிவார்,
    உன்னை போல் தெய்வம் ஒன்றே அறியும்

    என்று  மனைவியைத் தெய்வத்திற்கு உவமமாக்குவார் கண்ணதாசன். ‘உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை’ என்பதனால் பொருளைவிட உவமம் சிறந்தது. இங்கே தெய்வத்தைவிட மனைவி சிறந்தவள். இந்த மரபுவழிச் சிந்தனைதான் தமிழாழியைத் தமிழாகப் பார்க்க வைத்திருக்கிறது. கன்னல் ஒரு மரபுவழிக் கவிஞர் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. தமிழாழியைக் கண்டு திரும்பும் பேகன்

    தன்னலத்தை இழந்து பொது நலத்தை நாடும்
    தக்கவர்போல் கடந்து சென்றான்

    என்று உவமத்தில் புதுமை சேர்க்கும் கன்னல்

    தொழத்தக்க இளந்துறவி போன்ற தோற்றம்!
    தொண்ணூறு விழுக்காடு தூய நெஞ்சம்
    அழ வாழ்வார் வாழ்க்கையினை மாறறும் நோக்கம்!
    அருளொழுகும் விழிவீச்சு! அன்பின் ஆட்சி
    கழகத்துத் தமிழ் பேசும திருவாய்

    என்று பேகன் தோற்றத்தை வண்ணனை செய்கிறார். சிலப்பதிகாரத்தில் காப்பியத் தலைவி கண்ணகியை முதலில் அறிமுகம் செய்த பிறகுதான் கோவலனை அறிமுகம் செய்கிறார் அடிகள். கன்னல் பேகனைச் செய்யும் அறிமுகம்

    மண்தேய்த்த புகழினான்! மதிமுக மடவார்தம்
    பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
    கண்டேத்தும் செவ்வேள் என்று இசைபோக்கிக் காதலால்
    கொண்டேத்தும் கிழமையான் கோவலன் என்பான்

    என்னும் அடிகளின் வண்ணனைக்கு மாறுபட்டிருப்பது காண்க. பெண்கள் குழாஅத்துள் கோவலன்’ என்பதும் மக்கள் குழாஅத்துள் பேகன் என்பதும் நோக்குக.

    தம் வறுமை போக்கும் நோக்கத்தோடு வள்ளல் பேகனைச் சந்திக்கச் செல்கிறார் பரணர். அவன் வீட்டில் அவன் மனைவி கண்ணகி அழுத கண்ணீர்க் கோலத்தில் இருக்கிறாள். கபிலர் பரணரிடம் பேகனின் புறவொழுக்கத்தையும் கண்ணகியின் துயரத்தையும் எடுத்துச் சொல்கிறார். பரணர் பேகனுக்கு அறிவுரை நல்குகிறார்.

    வெண்ணிலவை வெடிவைத்துத் தகர்க்க லாமா?
          வீதியிலே வீசுதற்கா முத்து மாலை?
    தண்டமிழை அழிப்பதற்கா தமிழன்? தண்ணீர்
          தாமரைக்கேன் சிறைச்சாலை?

    வினாக்களின் அடுக்கு பரணரின் வேதனையையும் கண்ணகியின் துயரையும் உணரத்துவதாக உள்ளன. தண்டமிழை அழிப்பதற்கா தமிழன்? என்னும் உவமம் சொந்த வீடு என்பதற்காகச் சுவரிலே கிறுக்கிய வரலாற்று உண்மையை உணர்த்துவதாக உள்ளது.

    கருத்து,, கற்பனை, உணர்ச்சி, வடிவம் என்னும் கவிதைக் கூறுகளுக்குள் வடிவமும் கருத்தும் ஆராய்ச்சிக்குட்பட்டன. ஆனால் உணர்ச்சியும் கற்பனையும் அனுபவத்திற்கு உட்பட்டன. ஆய்வு அங்கே பயன்தராது. உவமம் கற்பனையின்பாற்படும். நுண்ணிய ஆழமான அழகியல் ததும்பும் கன்னலின் உவமங்களை இந்த நூலில் பல பக்கங்களில் நான் படித்தேன்! சுவைத்தேன்!

    வண்ணனைக் குவியல்

    சிறுகதையின் பெருக்கம் நாவலாகாது. நாவலின் சுருக்கம் சிறுதையாகாது. இவற்றுக்கிடையே குறுநாவல் என்ற வடிவத்தையும் நாம் கண்டிருக்கிறோம். அதுபோலப் பெருங்காப்பியம் சிறுகாப்பியம் என்பனவற்றிக்கு இடையில் குறும்பாவியம் என்று ஒன்றினை அழைப்பார்கள். எதனை யார் எப்படி அழைத்தால் என்ன? கவிதை மணக்கிறதா? கருத்து சிறக்கிறதா? கற்பனை கொழிக்கிறதா? உணர்ச்சி கொந்தளிக்கிறதா என்பதுதான் சுவைப்பவனின் உள்ளத்தே  எழும் உணர்வுத் தேவை.!  அந்த வகையில் ‘அற்றைத் திங்கள்’ என்னும் இந்தக் குறும்பாவியத்தில் வண்ணனைப் பகுதிகள் நெஞ்சையள்ளுபவையாக அமைந்திருக்கின்றன. கவிதைகளை மனப்பாடம் செய்யாமல் சுவைப்பது பயனைத் தராது. பாராயணம் என்பது தமிழ்க்கவிதைச் சுவைக்கு அடிபபடை..

    குயில் கூவிக் கொண்டிருக்கும்! கோலமிகுந்த
    மயிலாடிக் கொண்டிருக்கும்! வாசமுடைய நற்
    காற்று குளர்நதடிக்கும்! கண்ணாடிபோன்ற நீர்
    ஊற்றுக்கள் உண்டு!. கனிமரங்கள் மிக்க உண்டு!
    பூக்கள் மணங்கமழும்! பூக்கள் தோறும் சென்று தே
    னீக்கள் இருந்தபடி இனனிசைபாடிக் களிக்கும்
    வேட்டுவப்பெண்கள் விளையாடப் போவதுண்டு
    காட்டு மறவர்களும் காதல்மணம் செய்வதுண்டு
    நெஞ்சில் நிறுத்துங்கள்! இந்த இடத்தைத் தான்
    சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்று சொல்லிடுவார்

    ஒரு கதைக்களப் படப்பிடிப்பையே நடத்தி முடிப்பார் பாரதிதாசன். இயற்கையில் மனம் பறிகொடுத்த கவிஞன் தான் எழுதும் எந்தப படைப்பிலும் எந்தக் கதைச் சூழலிலும் மிகச் சாதுரியமாக வண்ணனையைப் பதிவிட்டுவிடுவான். அவன் படைப்புள்ளத்தின் பளிங்கு நிலை அது. பால்வண்ணப் பதிவு அது.

    பாஞ்சாலியை இந்தியத்தாயாக உருவகம் செய்து பாரதி எழுதிய நெருப்புக் காவியம் பாஞ்சாலி சபதம். பாண்டவர் விதி முன்செல்ல அஸ்தினாபுரம் செல்கிறார்கள். வழியில் சோலையொன்றில் தங்குகிறார்கள். அந்த மாலை  பாண்டவர்களுக்கும் நமக்கும் துன்பமாலை!. பாரதிக்கோ கவிதை மாலை! அவன் கவிஞனல்லவா? அதனால் அது அவனுக்குக் கற்பனை மாலை!. அந்த மாலையின் அழகை பாஞ்சாலிக்கு அர்ச்சுனன் காட்டுவதாகப் பாரதி பாடுகிறான்.

                      பாரடியோ வானத்தில் புதுமை யெல்லாம்!
    பண்மொழீ! கணநதோறும் மாறி மாறி
    ஓரடிமற்றோரடி யோடு ஒத்த லின்றி
    உவகையுற நவநவமாய்த் தோன்றும் காட்சி!
    யாரடி இங்குஇவைபோலப் புவியின் மீதே
    எண்ணரிய பொருள்கொடுத்தும் இயற்ற லுற்றார்?
    சீரடியால் பழவேத முனிவர் போற்றும்
    செழுஞ்சோதி வனப்பையெல்லாம் சேரக் காண்பாய்!
    ……………………………………………………………………………………………………………..
    அடிவானத்தே அங்கு பரிதிக் கோளம்!
    அளப்பரிய விரைவினோடு சுழலக் காண்பாய்
    இடிவானத்து ஒளிமின்னல் பததுக் கோடி!
    எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து
    முடிவான வட்டததைக் காளி ஆங்கே
    மொய்குழலால் சுற்றுவதன் மொய்ம்பு காணாய்!
    வடிவானது ஒன்றாக தகடு இரண்டு
    வட்டமுறைச் சுழலுவதை வளைந்து காண்பாய்!

    காப்பியத்தின் கதை வேகம் தடைபடுவதைப் பற்றிக் கவலைப் படாத பாரதி தன் கவியுள்ளத்தின் காரணமாகவும் சிற்றிலக்கியத்தின் கட்டுமானச் சிறப்புக்குக் களங்கம் வந்துவிடாமலும் இந்த வண்ணனையைப் பதிவு செயதிருக்கிறான் எனலாம். பாரதியின் இந்தப் படைப்பு நெறி கன்னல் காவியத்திலும் பின்பற்ற்பட்டுள்ளது.

    பொன்னந்தி தமிழ் நிலத்தை வெல்லமாக்கிப்
    பூக்களெல்லாம் தமிழ்பாடும் இனிய நேரம்
    தென்தமிழில் தேனூற்றிக் குயில்கள் பாடும்!
    தெற்குமலை அருவியெல்லாம் முழவாய் வீழும்!
    இன்னிசையை வண்டியக்க குவளை ஆடும்!
    இதயத்தைக் காட்சியெனும் அணங்கு மூடும்!”

    என்னும் இயற்கை வண்ணனையிலும்

    அரைநிலவு வானத்தை ஆட்சி செய்யும்
    அதைப் பார்த்து வானிலவு கண்ணடிக்கும்!
    தரைவந்து தமிழ்படித்து மீண்டும் போகத்
    தங்க நிலா அங்கிருந்து குதிக்கப்பார்க்கும்!”

    வெண்மதியின் கல்லறையே மேற்கு வானம்
    வீழ்கதிரின் ஈனில்லம் கிழக்கு வானம்!”

    என்பன போன்ற இயல்பான வண்ணனைகள் இந்தக் குறுங்காவியத்தை திருமண வீட்டுத் தோரணங்களாகக் காட்சிப்படுத்துகின்றன. தற்குறிப்பேற்ற அணியை விளக்கும் தமிழாசிரியப் பெருமக்கள மதுரை மதிலில் கிழிந்து போய் பறக்கும் கொடியை கொஞ்ச நாள் ஒதுக்கி வைத்துவிட்டு  இனிமேலாவாது “தரைவந்து தமிழ்படித்து மீண்டும் போகத் தங்க நிலா அங்கிருந்து குதிக்கப் பார்க்கும்” என்பது போன்ற வரிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மண்ணிற்கும் விண்ணிற்குமான இடைவெளியில் நிலவு நடத்துகின்ற பயணம் வானத்திலிருந்து மண்ணுக்கு வந்து தமிழ் படிப்பதற்காக நிலவு குதிப்பதைப்போல இருக்கிறது என்னும் அழகியல் எண்ணி மகிழத்தக்கது.

    வடிவக் கோட்பாடுகள்

    தமிழ்க்கவிதைகளின் பொருண்மையும் அதனை வெளிப்படுத்தும் வடிவமும் பிரிக்க இயலாதவை. வெண்பாவில் எழுதுவன ஆசிரியப்பாவில் எடுபடாது. கொச்சகக் கலியில் பாடவேண்டிய பாவையை வஞ்சிப்பாவில் பாட முடியாது. ‘அற்றைத் திங்கள்’ என்னும் கதைபொதி காப்பியத்தை ஐம்பத்தெட்டு எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களால் பாடியிருக்கிறார் கன்னல். மரபின் பரிமாணமும் பரிணாமமும் தெரியாத தமிழ்நாட்டுக் கவிஞர் (?) பலர் இதுமாதிரியான விருத்தங்களை எழுதி வைத்துக் கொண்டு மரபுக்கவிதைகள் என்றும் ‘எழுதுகிற தங்களை ‘மரபுப்பாமணி’ என்றும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுகிறார்கள். கவிதையில் பொருட்பரிமாணம் ஒருபக்கம் யாப்பியல் பரிமாணம் ஒரு பக்கம். இவ்விரண்டும் இணைந்ததுதான் மரபுக் கவிதைகள். இந்த அடிப்படை உண்மையை அறிய இயலாதவர்கள்  எழுதுவதைவிட எதனையும் எழுதாமல் இருப்பதே நல்லது.

    இடைக்காலத்தில் வந்த எண்சீர் விருத்தம்

    தொடக்கக் காலத்தில் இடம் பெற்றிருந்தவை பாவகைகளே. இனங்கள் அல்ல. தொல்காப்பியச் செய்யுளியலால் இதனை அறிந்து கொள்ள இயலும். தாழிசை, துறை, விருத்தம் என்னும் பிற்காலத்து இனங்கள் தமிழ் யாப்பின் நெகிழ்ச்சியை அடையாளப்படுத்துவன. முன்னவற்றில் வல்லமையுடையார் பின்னவற்றை எழுதுவதற்கும் முன்னவற்றில் ஏதும் அறியாமலேயே பின்னவற்றுள் ஒன்றினை எழுதுவதற்கும் தர நிர்ணயம் உண்டு. வெண்பா எழுதத் தெரியாதவன் வெளிவிருத்தம் எழுதுவதாகச் சொல்வது வேதனையல்லவா? அப்பர் பெருமான் எழுதிய திருத்தாண்டகமே எண்சீர் விருத்த யாப்பில் அமைந்துள்ளது. நந்திக்கலம்பகத்தில் பல பாடல்கள் எண்சீர் விருத்தங்களாலானவை  ‘விருத்தத்திற்கோர் கம்பன்’ என்பது அவன்காலத்தது அது என்பதைப் புலப்படுத்தும்.  அதற்கு முன்பு ஆசிரிய விருத்தங்கள் இருந்ததற்கான அகச்சான்றுகள் இல்லை. எனவே எண்சீர் விருத்தங்கள் அறுசீர் விருத்தங்கள் இடைக்காலத்தைவை. இவை எப்படி மரபுக்கவிதையாகும்? தொடங்கி நடப்பதே மரபு. வந்து புகுந்தது மரபாகுமா? இனி திணை மரபு, மொழி மரபு, சொல்மரபு, அகத்திணை மரபு, புறத்திணை மரபு, என்பவையெல்லாம் எதனைக் குறிக்கின்றன? நூன்மரபில் தொடங்கி மரபியலில் முடித்தாரே தொல்காப்பியர்?  எனவே எண்சீர் விருத்தம் உட்பட எந்த  வகை யாப்பினால் எழுதப்பட்டாலும் அதனாலேயே அது மரபுக் கவிதையாகிவிடாது. தமிழ்க்கவிதையின் பொருள் மரபு பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். அகத்திணை மரபு போற்றப்பட்டிருக்க வேண்டும்.

    மூவசைச்சீரை நாலசைச் சீராக்கும் ஆளுமை

    கன்னல் அறிவை இயற்பொருளாகவும் ஆற்றலைத் துணைப் பொருளாகவும் கொண்டவர். திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் இமயங்களிடம் தமிழ் கற்றவர். கவிதையுணர்வு தலைக்காவிரி போல அவர் நெஞ்சில் ஊறியது. அனைத்துவகை யாப்புக்களையும் யாப்பியல் மரபுகளையும் அறிந்தவர். தொல்காப்பியம் காட்டும் அத்தனை மரபுகளையும் கற்றவர். கற்று உணர்ந்தவர். அவர் எண்சீர் விருத்தத்தில் கண்ணகியின் துயரத்தைப் பாடியிருப்பது மரபுக்கவிதைகளில் என்றால் புரிந்து கொள்ள முடிகிறது.

    எண்சீர் விருத்தத்தின் மந்தணம்

    தேமாங்காய் தேமாங்காய் தேமா தேமா என்ற அரையடி யாப்பில் அமையப் பெற்றுதுதான் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். இந்த வாய்பாடு அமைவதன் அருமை, இயலாமையில் முடிந்தது. அதனால் பின்னாலே வந்தவர்கள் ‘காய் காய் மா மா’ என்று தங்களுக்குத் தாங்களே வசதியாக்கிக் கொண்டார்கள். இந்த அரையடியிலும் ஒரு நுட்பம் உண்டு. மூன்றாவது நான்காவது சீர்களில் வரவேண்டிய ‘மா’ ‘மா’ என்பனவற்றை இரண்டு தனித்தனி ஈரசைச் சீர்களாகக் கருதுவார் பலர். கவியாற்றல் படைத்தோர் மூவசைச் சீர்களையே இரண்டு ஈரசைச்சீர்களாக மாற்றிக் காட்டும் வல்லமை உடையவர்கள். கனனல் அந்தத் திண்மை உடையவர். அவர் எழுதுகிறார்.

    ““அப்போது தமிழாழி யாழை ஏந்தி
          அடுத்தடுத்தே இசையமைத்தாள்! தமிழைச் சேர்த்தாள்

    இதுபோன்ற இடங்களில் மூன்று, நான்கு, ஏழு மற்றும் எட்டு ஆகிய சீர்கள தனித்தனி ஈரசைச்சீர்கள் என்பதை நோக்க வேண்டும்.  ஆனால் பார்ப்பதற்கு தனித்தனி ஈரசைச்சீர்களாகத் தோன்றி உண்மையில் மூவசைசீர்களே அவ்வாறு தனித்தனி ஈரசைச்சீர்களாக இருக்கும் வண்ணம் எழுதுவதுதான் இவ்வகை விருதத யாப்பின் தனிப்பெரும் சிறப்பாகும்.

    கண்ணீரைப் பெண்ணாக்கி உலவவிட்டாய்!
    கல்லறைக்கா அவள்போக நாள்குறித்தாய்?”

    இதுபோன்ற அடிகளில் ‘உலவவிட்டாய்’ என்பதும் ‘நாள்குறித்தாய்’ என்பதும் உண்மையில் ‘கருவிளங்காய்’, ‘கூவிளங்காய்’ வாய்பாடுகளுக்குள் அடங்கும் மூவசைச்சீர்களாகும். அவற்றை விட்டிசைக்க வைத்து இரண்டு தனித்தனி ஈரசைச்சீர்களாக ஆக்கிக் கொள்வதும அத்தகைய சீர்களை இயல்பாகப் பயன்படுததுவதுமே யாப்பாளுமையாகும். இந்த ஆளுமை கைவரப் பெறாதவர்கள சில ஆயத்த சீர்களைச் (Ready made templates)  செருகிவிடுவார்கள். எண்சீர் விருத்தம் நீர்த்துப் போனதற்கான காரணங்களில் இது தலையாயது. எப்போதாவது எதையாவது எழுதுபவர்கள இப்படித்தான் ‘ஆயத்த சீர்களை’ அடுக்குவார்கள்.  எப்போதும் எழுதுகிற கன்னல் முதலியோருக்கு மூன்றை நாலாக்குவது கைவந்த கலை. இந்த நூல் எண்சீர் விருத்தங்களால் நானறிந்த உண்மை இது.

    நிறைவுரை

    கடற்கரையில் மாதவியைக் கைவிட்டு அதற்கு ஊழ்வினை காரணம் என்றார் அடிகள். வேங்கை மர நிழலில் ‘வெந்து தணிந்த’ கண்ணகியின் முடிவுக்கும் விதியை காரணமாக்கினார். காதல் வாழ்க்கையிலும் வாழ்க்கைப் போராட்டத்திலும் பெண்களை வெற்றிபெறச் செய்து வாழவைக்க வேண்டும் என்ற எண்ணமுடைய கன்னல் முதலியோர் கதைக்கருவின் உருவத்தை மாற்றிக் கொள்கிறார்கள். தமிழுணர்வு, இனவுணர்வு, இயற்கை வண்ணனை, எழுச்சியான சிந்தனை, பெண் விடுதலை, காதலுறவு, கலப்படமற்ற அன்பு என்னும் பல தளங்களில் அற்றைத் திங்களைப் பவனி வரச் செய்திருக்கிறார் கவிஞர் கன்னல். துறந்தவர்களையும் இழந்தவர்களையுமே பாடிய தமிழ்க்கவிதை உலகில் தமிழாழியையும் கண்ணகியையும் வாழச் செய்திருக்கிறார். இவையெல்லாம் ஏதும் தெரியாத எனக்கே இனிக்கிறது! எல்லாம் தெரிந்த உங்களுக்கு இனிக்காதா என்ன?

    (தொடரும்)

    Share
  • தமிழ்க்காரி (சித்ரா மகேஷ்) அவர்களின் 2 நூல்கள் வெளியீட்டு விழா

    தமிழ்க்காரி (சித்ரா மகேஷ்) அவர்களின் 2 நூல்கள் வெளியீட்டு விழா

    அமெரிக்க வாழ் தமிழ் எழுத்தாளரான தமிழ்க்காரி என்கிற சித்ரா மகேஷ் அவர்களின் 2 நூல்கள் வெளியீட்டு விழா 23.06.2022 அன்று லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில் நடைபெற்றது. தமிழ் இலக்கியத்தை பறை சாற்றும் வகையில் ஓவியர் மருதுவின் தூரிகையில் தமிழ்க்காரியின் எழுத்தில் உருவான காதல் கதை சொல்லட்டுமா? மற்றும் பூக்கள் பூக்கும் தருணம் ஆகிய 2 நூல்களும் அந்தரி பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டன.

    இவ்விழாவில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வரவேற்புரை வழங்க, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், மதுரை நகைச்சுவை மன்ற தலைவரும்  பட்டிமன்ற பேச்சாளருமான பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தமிழ் வளர் மைய இயக்குனர் முனைவர் இரா.குறிஞ்சி வேந்தன் ஆகியோர் நூல்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினர்.

    விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது,

    தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி அனைவரையும் வரவேற்று பேசும் போது,

    எழுதுவது சிறிய விஷயம் கிடையாது. எங்கள் ஊரில் எழுத்தாளர்கள் பற்றாக்குறையை தீர்க்க வந்த சித்ரா அவர்களை பொக்கிஷமாக கருதுகிறோம். சங்க இலக்கியத்திலிருந்து தான் சகோதரி அவர்கள் காதலைப் பற்றி எழுதியிருக்கிறார்.

    எனக்கு அவ்வப்போது தோன்றும் விஷயம், பள்ளியில் திருக்குறளை மனப்பாடம் செய்யுங்கள் என்று கூறுவதற்கு பதிலாக காதலை வெளிப்படுத்த திருக்குறளைப் பயன்படுத்துங்கள் என்று கூறியிருந்தால், அனைவரும் திருக்குறளைப் படித்திருப்பார்கள். சுலபமாகவும் மனப்பாடம் ஆகியிருக்கும்.  அதிகளவில் புத்தகங்கள் வெளியானது தமிழ் மொழியில் தான். இருப்பினும், இன்னும் நிறைய புத்தகங்கள் வெளியாக வேண்டும் என்றார்.

    ஓவியர் டிராட்ஸ்கி மருது பேசும் போது,

    தமிழ்க்காரி அவர்களை 5 வருடங்களுக்கு முன்பு டெக்ஸாஸில் ஒரு விழாவில் தான் சந்தித்தேன். அந்த விழாவை சுறுசுறுப்பாகவும் சிறப்பாகவும் நடத்தினார். அதன்பிறகு, அவரிடம் எழுதுவதற்கு ஆர்வம் இருப்பதை அறிந்து கொண்டேன். ஒரு கலைஞராக சித்ராவின் எழுத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தேன்.  அவர்கள் எழுத்து மூலம் காட்டிய இந்தியாவைத் தான் ஐரோப்பா காட்சியாகப் பார்த்தது.

    ஓவிய கல்லூரியில் மூத்த ஆசிரியர்களின் மூலம் தமிழ் மீது பார்வையும் ஆர்வமும் உண்டாகியது.  சித்ராவின் இந்த நூலுக்குப் பிறகு தமிழைப் பற்றிக் காட்சியாக பல படைப்புகள் வரும் என்றார்.

    முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசும்போது,

    வைரத்தை நீங்கள் மிகச்சரியாக எப்படி கணிக்க முடியுமென்றால் அதைப் பட்டுத்துணியில் வைத்துத் தான். அதை போல என் தங்கை தமிழ்க்காரி கவிதைகள் மூலம் தமிழ் நிலம், தமிழ் மண்ணிற்கு உரிய கலைகளை உலகமெங்கும் கொண்டு சென்றிருக்கிறார். மகா கலைஞன் என்று சொல்லக் கூடியவர் ஓவியர் டிராட்ஸ்கி மருது. பொதுவாக புத்தக விழாவிற்கு செல்வது மனதிற்கு மகிழ்ச்சி தருபவை. கடந்த 3 ஆண்டுகளில் புத்தக விழாவிற்கு செல்வதில் பல அலுவல்கள் காரணமாக ஒருமுறைக்கு நூறு முறை யோசித்து தான் வருவதாகச் சொல்வேன். ஏனென்றால், வருகிறேன் என்று கூறி விட்டு அலுவல் காரணமாக கடைசி நிமிடங்களில் செல்ல இயலாவிட்டால் அது தவறாகி விடும் என்பதற்காக.

    ஆனால், மிகக் குறைந்த அளவே புத்தக விழாவிற்கு சென்று வந்த அவலமான சூழலை மாற்றி, மிகுந்த மகிழ்ச்சிக்குரிய மாலையாக இந்த மாலையை என் தங்கை பரிசாக தந்திருக்கிறார். மொழி உரைநடையில் இருக்கும் போது தான் வீரியமான சுவாசமாக புலப்படும் என்று கவிஞர் அபி சொன்னதாக கேட்ட ஞாபகம். ஆனால், என்னைப் பொருத்தவரை கவிதையில் தான் மொழி தன்னுடைய சுவாசத்தை வெளிப்படுத்துகிறது என்று நான் நம்புகிறேன்.

    காதல் கதை சொல்லட்டுமா? மற்றும் பூக்கள் பூக்கும் தருணம்… இந்த இரண்டு புத்தகங்கள் கிரேக்க புராணம், ஓவியத்தினுடைய ஆழம் பற்றி ஒரு இடத்தில் சொல்லுகிறது. அதாவது தன்னுடைய காதலனுடைய நிழலை சுவரில் பார்த்த காதலி, என்று வரைய துவங்குவதில் இருந்து கிரேக்கர்களின் வரலாற்றை கூறுகிறது. அதற்கு ஓவியர் மருதுவை சரியாக தேர்வு செய்திருக்கிறார். ஓவியமாக புத்தகத்தைப் பார்த்து ஓவியத்தைத் தொட்டு உணரும் பொழுது மகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது. அதற்கு மருது அண்ணனுக்குப் பாராட்டுகள்.

    என்னுடைய புத்தகத்தின் அட்டையில் மருது அண்ணனின் ஓவியம் இல்லாமல் ஒன்று கூட வெளியானதில்லை. கவிதைகளுக்காக காத்திருப்பதைவிட  அண்ணன் தான் முகப்போவியம் வரைய வேண்டும் என்று காத்திருந்து உரிமையோடு வாங்கி செல்பவள் நான். ஏனென்றால், கவிதை, கட்டுரை, புதினம் எதுவாக இருக்கட்டும் இன்னொரு கலை வடிவத்தின் கையைப் பிடித்துக் கொண்டு நடைபோடும் போது அதனுடைய தாக்கமும், அதனுடைய வீரியமும், அதனுடைய வெளிப்பாடும், வேறொரு இடத்திற்கு வாசகர்களை அழைத்துச் செல்லுகின்றன.

    வாழ்க்கையின் அருகில் இருப்பவன் தான் மிகச் சிறந்த வாசகனாக இருக்க முடியும். மிகச் சிறந்த கவிஞனாகவும் இருக்க முடியும். அந்த வகையில் சிறந்த வாசகனாகவும், வாழ்வைக் கொண்டாடுபவளாகவும், ரசனைக்காரியாகவும் தான் தமிழ்க்காரி எனக்கு அறிமுகம். இன்னும் சொல்லப்போனால் இன்று தான் பார்த்திருக்கிறோம் என்றாலும் கூட எத்தனையோ முறை பார்த்ததைப் போல, எத்தனையோ முறை பேசியதைப் போல பல இரவுகளில் உரையாடி இருக்கின்றோம். தீராத தாகம் போல தமிழை உண்டு, பருகி, கேட்டு அதனைப் பல வகையிலும் வாசித்து, உள்வாங்கிக் கொண்டு அதை கவிதைகளிலே கொண்டு வருகின்ற வித்தையை தங்கை தன் வசப்படுத்தியிருக்கிறார்.

    தமிழ்க்காரி அருமையான பெயர். பெயரில் என்ன இருக்கிறது? பெயரில் தான் எல்லாமே இருக்கிறது. தமிழ்க்காரி ஆகட்டும், தமிழச்சி ஆகட்டும், ஏன் இந்த புனைப் பெயரை எடுக்கின்றோம்? இதில் ஓர் அரசியல் இருக்கின்றது. தமிழ் மண்ணோடு, நிலத்தோடு தொடர்புடைய இன்னும் சொல்லப்போனால் கிராமத்தில் புழுதிப் படர்ந்த கிளைச் சாலையில் வியர்வையும், கவிச்சியும் அடிக்கின்ற மண்ணிலிருந்து வருகின்ற பெண் நான் என்பதால், நான் தமிழச்சி ஆவேன். அதைப் போலத் தான் தமிழைப் அனைத்து புலன்களாலும் துய்த்து அதனைத் தனது வெளிப்பாட்டினால் மட்டுமல்லாமல், இந்த இரண்டு புத்தகங்களிலும் குறிப்பாக, தமிழ்த் திணைகளை சங்கத் தமிழின் நீட்சியாக ஐயா அவர்கள் சொன்னதுபோல தமிழ்த் திணை பண்பாடுகளும், அயல் பண்பாடுகளும் இணைந்து பின்னிப் பிணைந்து வாழ்கின்ற சூழல் தான். பல்வேறு தேசங்களில் நீங்கள் பரவிக்கிடந்து பிழைப்பிற்காக புலம்பெயர்ந்து வாழ்கின்ற சூழலில், தமிழ் பண்பாடுடன், வேர்களை செழுமையான மரபிலிருந்து, அந்த வேர்களைத் தக்க வைத்துக் கொண்டு அதே சமயம் அயல் பண்பாட்டினுடைய இறக்கைகளையும் எப்படி சரியாக அணிந்து கொள்ள வேண்டும் என்ற சூழலில் தன்னுடைய மொழி, தன்னுடைய நிலம், தன்னுடைய இலக்கியம் தந்திருக்கின்ற செம்மையான வளத்தை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு புத்தகத்திலும், நடைமுறை வாழ்க்கையிலும் செல்லுகின்ற தங்கையின் படைப்புகளைப் பற்றி நான் விரிவாக அணிந்துரை எழுதியிருக்கின்றேன்.

    மொழி என்று சொன்னால் கிரேக்கத்தை தத்துவத்தின் மொழி என்று சொல்லுவார்கள். லத்தீனை சட்டத்தின் மொழி என்பார்கள். இத்தாலியை காதலின் மொழி என்பார்கள். தமிழை இரக்கத்தின் மொழி என்கிறார்கள். ஆனால், இரண்டு புத்தகத்தில் சங்கத்தின் நீட்சியாகப் படிக்கும் பொழுது, தமிழைத் தான் காதலின் மொழி என்று சொல்ல வேண்டும். குறுந்தொகையில் நல்லை என்று வர்ணிக்கப்பட்ட பாடலில் சிலவற்றை எடுத்து உரை எழுதியிருக்கிறார். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், பெரும்பாலான உரைகள் ஆண்களால் எழுதப்பட்டவை. எனக்குத் தெரிந்து முதல்முறையாக ஒரு பெண் அதுவும் தமிழ்க்காரியாக முற்றிலும் அவருடைய கண்ணோட்டத்தோடு நல்லை அல்லை நீ, மயிலிறகாம் கூந்தல் போன்ற அருமையான தலைப்புகளை சூட்டியிருக்கிறார்.

    குறிஞ்சிப் பாட்டு நாடகத்தில் நான் நடித்துள்ளேன். அந்த நினைவோடு இந்த புத்தகங்களுக்குள் சென்றேன். பொதுவாக 99 பூக்களைத் தான் நாம் நினைவில் கொள்வோம். அதையும் எனது உரையில் சுட்டிக் காட்டியிருப்பேன்.

    நான் பாலை நிலத்துக்காரி. முழுக்க முழுக்க கரிசல்காடும், வானம் பார்த்த பூமியும், செழுமை என்பதை அறியாத திறந்த வெளியில் கிடை ஆடுகளுடனும், ஆட்டுப் புழுக்கையுடனும் மஞ்சணத்தி மற்றும் வேப்பமரம் கூட அரிதாக இருக்கின்ற கால சூழலில் வளர்ந்த பெண் நான். தமிழச்சி என்ற பெயர் சூட்டும் முன்பு விரலி என்கிற பெயர் மீது மிகப்பெரிய நேசமும், வியப்பும் இருந்தது. ஏனென்றால், பாடி ஆடி, நடிப்பதால் விரலி என்கிற பெருமை கொள்கின்றேன். திணை மரபினுடைய நீட்சியாக வாழ்க்கை மரபை இன்று வரை கொண்டுவர விரும்பினாலும், எச்சங்களைத் தான் இன்னமும் வைத்திருக்க முடிகின்றது. ஏனென்றால், திணை மரபை நவீன உலகம் எவ்வளவு தூரம் சிதைக்க முடியுமோ அவ்வளவு தூரம் சிதைத்தாகி விட்டது. மீட்டெடுகின்ற முயற்சியாக அண்ணனைப் போல ஓவியத்தின் வழியாக வரலாற்றுத் தொடர்ச்சியை மிகச் சரியாக கொடுக்க வேண்டும்.

    இப்போது இருக்கும் தலைமுறைக்கு சங்க இலக்கியங்களை சுலபமாக புரிய வைக்கக்கூடிய சரியான வழியைக் சித்ரா காட்டியிருக்கிறார். பேச்சு மொழிக்கும், கவிதை மொழிக்கும் பாதை தூரமானது. அதை புத்தக வடிவில் கொடுக்கும் போது எழுதுவோர்களுக்கும், வாசிப்பவர்களுக்கு தனிப்பட்ட உலகத்தை கொடுக்கிறது.

    நட்சத்திரங்களை விட அதிகம் பேசுவது, அவற்றின் இடையே இருக்கும் இருள் என்று தமிழ் சொல்லுவது போல, இரண்டு வார்த்தைகள், இரண்டு வாக்கியங்கள், இரண்டு கவிதைகளுக்கு இடையிலான மௌனம் என்று சொல்லப்படுகிற இடைவெளி மிகுந்த முக்கியத்துவமாக கருதப்படுகின்றது. அதுபோல காதல் உணர்வை தமிழ்க்காரி எப்படி குறிஞ்சித் திணை கபிலரின் வரிகளிலிருந்து எடுத்து தன் வரிகளிலே எழுதுகின்றார் என்பதை கவனமாக பார்க்க வேண்டும். இரவு முழுதும் காதல் முடித்து எழுந்த பெண்ணைப் போல இன்று காலை கண் விழிக்கின்றது. காற்று எனும் பைனாகுலரின் வழியாக காட்டுகின்றது ஒரு குழந்தையின் கண்களுடன். இன்னமும் பழுக்காத பச்சை ஆப்பிளை போல இன்றைய தினம் இருக்கின்றது. இதுதான் நவீன மொழி கொடுத்திருக்கின்ற வசீகர வெளிப்பாடு.

    திணை மரபை எழுத்து வடிவில் கொடுக்கின்ற தங்கையின் பிரயத்தனம் பாராட்டிற்குரியது. எனது கவிதைகளை விற்றப் பிறகு தான் தெரிந்தது. இலையுதிர் காலத்திற்கு பிறகும் நறுமணம் இருக்கும் என்று. அது போல தங்கையின் நறுமணம் ஊட்டுகின்ற எழுத்துகள் நமக்கு கிடைத்திருக்கின்றது. அதற்கு இன்னும் மணம் சேர்த்தது அண்ணன் மருதுவின் ஓவியங்கள். ஒரு கவிதையைப் படித்து முடித்ததும் மனக் கண் முன் ஒரு சித்திரம் எழும். அதை அப்படியே ஓவியமாக கொடுத்திருக்கிறார். ஓலைச்சுவடி தமிழை கணினி உலகத்திற்கு ஏற்ப செழுமையைக் கூட்டி தந்திருக்கின்றார். காலந்தோறும் அவ்வை வரிசையில் தமிழ்க்காரியையும் வைத்துப் போற்றுவோம். அவர் தொடர்ந்து தமிழ் செய்ய வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு அவ்வை இருந்திருக்கிறார். இனிமேலும் இருக்க வேண்டும். 89-ஐத் தாண்டிய பேரரசர்களால் பாதுகாக்கப்பட்டு, 449 நற்புலவர்களால் ஆராயப்பட்டு, 4440 ஆண்டுகள் நிலைத்திருக்கும் முதல் சங்கத் தமிழ், பிற்காலத்தில் வந்த 49 பாண்டிய அரசர்களால் பேணப்பட்டு. அகத்தியர், தொல்காப்பியர் முதலான கவிவாணர்களால் பேணப்பட்டு, பாண்டிய நாட்டைக் கடல் கொண்ட பொழுதும் தப்பி பிழைத்தது இடைச்சங்க தமிழ். இப்படிப்பட்ட சங்கப் பாடல்களை நமக்காக மிக அழகாக நம் கைகளில் அடுத்த தலைமுறைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கின்ற என் அன்பு தங்கை தமிழ்க்காரிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும்என்றார்.

    முனைவர் ரா.குறிஞ்சிவேந்தன் பேசும்போது,

    அமெரிக்காவில் சித்ராவை அக்கா என்று அழைப்பது மரபு. தமிழில் வடஅமெரிக்க கூட்டமைப்பில் பல சங்கங்கள் இருக்கின்றது. அனைத்து சங்கங்களையும் வழிநடத்துவது யார் என்றால் சித்ரா என்று கூறுவார்கள்.

    உயர்தொழில்நுட்ப வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நவீன உலகில் இப்படி ஒரு நூலை நான் பார்த்ததில்லை. நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவில் இருந்து கொண்டு குறிஞ்சிப் பாட்டையும், குறுந்தொகையையும் தன்னுடைய புத்தகங்களில் கொண்டு வந்திருக்கிறார். ஆனால், இங்கு யாரும் இல்லையே என்பதில் ஆதங்கம் வருகிறது. அனைத்து கவிஞர்களையும் நினைவுபடுத்தியிருக்கிறார்.

    இந்த புத்தகங்களை படிக்கும் போது சித்ராவைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. அந்த கவிதையோடு சேர்த்து மருதுவின் ஓவியங்களையும் பார்க்கும் போது, தமிழ் பண்பாட்டை அழகாக கொடுத்திருக்கிறார். பாடங்களுக்காக அயல்நாட்டிற்கு செல்பவன். அப்படி போகும்போது பார்த்த அரிய குறிஞ்சி மலர் தான் சித்ரா. இன்னும் மேலும், மேலும் அவர் எழுத வேண்டும் என்றார்.

    முனைவர் கு.ஞானசம்பந்தம் பேசும்போது,

    கார்த்திகேய சிவசேனாதிபதி திருவள்ளுவரைப் பற்றி அவர் யார் தெரியுமா? என்று கூறியதும், திடுக்கிட்டேன். ஏனென்றால், அவரை மட்டும் தான் விட்டு வைத்திருக்கிறார்கள். ஆனால், அவர் கூறியது போல் திருக்குறளின் காமத்துப்பாலை பாடப் புத்தகத்தில் வைக்க வேண்டும்.
    மேலும், தொடர்ந்து 30 ஆண்டு காலமாக  அழகர் விழாவை நேரடியாக வழங்கும் பாக்கியம் எனக்கு கிடைத்து வருவதில் மகிழ்ச்சி.

    கடந்த 10 ஆண்டுகாலமாக சித்ராவை எனக்கு தெரியும். ஆனால், அதிகமாக பேச மாட்டார்கள். செயல்பாடு அதிகம் உள்ளவர்கள். இப்புத்தகங்கள் படிக்கும்வரை இவருக்கு தமிழ் மீது இவ்வளவு ஆர்வம் இருப்பது தெரியாது. இப்புத்தகத்தை பல்கலைக் கழகங்களில் கொடுத்திருந்தால் நிச்சயமாக தனியாக டாக்டர் பட்டம் கொடுத்திருப்பார்கள்.

    இதுவரை ஒரே ஒரு பெண் தான் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார். அதற்கு திருக்குறள் தீபலங்காரம் என்று பெயர். ஆனால், அவர் முழுமையாக முடிக்கவில்லை.

    அதுபோல் பெண் உரை எழுதுவது மிகவும் அரிது. சித்ரா வந்திருப்பது பாராட்டுக்குரியது. இவரைப் போல் பெண்கள் பலரும் உரை எழுத முன்வர வேண்டும்.

    பரிமேலழகர் இன்னொரு திருவள்ளுவர். குறுந்தொகையில் மோசிகனார் பாடலை எடுத்து எழுதியிருக்கிறார். குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்களை சேர்ப்பதற்கு உ.வே.சாமிநாதர் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. ஆனால், ஒவ்வொரு பூவையும் தொகுத்து எழுதியிருக்கிறார்.

    20 வரிகளில் வர்ணிக்கும் அழகை ஒரே படத்தில் வரைந்திருக்கிறார் ஓவியர் மருது.

    2000 வருடங்களுக்கு முன்பு குறுந்தொகையில் கபிலர் எழுதியதையும், பெண்ணின் மனநிலையையும், தன்னுடைய மனநிலையையும் எடுத்து சித்ரா அழகாக எழுதியிருக்கிறார்.

    முனைவர் சித்ரா பேசும்போது,

    இந்த மேடையில் அமர்ந்திருக்கும் அனைவரும் எனக்காக இங்கு வந்து பேசுவார்கள் என்று சிறிதும் நினைத்து பார்த்ததில்லை. தமிழச்சி அக்காவையும், குறிஞ்சி அவர்களையும் பார்க்காமலேயே அவர்கள் மீது அன்பு கொண்டதற்கு காரணம் தமிழ் தான். குறிஞ்சி அவர்களிடம் தமிழ் கற்கும் ஆர்வம் வரும்.
    ஓவியர் மருது மிகப் பெரிய ஆளுமை. அவர் என்னுடைய படைப்புக்கு ஓவியம் தீட்ட ஒப்புக் கொண்டதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

    எழுதுவதை நிறுத்தக் கூடாது என்று அப்பாவாக துணையாக இருப்பது தினகரன் அண்ணா அவர்கள் தான். என்னுடைய தினகரன் அண்ணாவுக்கு தனி நன்றி என்றார்.

    நிறைவாக அந்தரி பதிப்பகம் சார்பில் ஷோபா இரமேஷ்குமார் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

    விழாவில், தமிழ்க்காரி (சித்ரா மகேஷ்) எழுதிய பூக்கள் பூக்கும் தருணம் என்ற புத்தகத்தை முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட முனைவர் கு.ஞானசம்பந்தம் பெற்றுக் கொண்டார். அடுத்து, காதல் கதை சொல்லட்டுமா? என்ற புத்தகத்தை முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட முனைவர் ரா.குறிஞ்சி வேந்தன் பெற்றுக் கொண்டார்.

    Share