படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன் – 18

0

முனைவர் ச.சுப்பிரமணியன்

முனைவர் கருவூர் கன்னலின் ‘அற்றைத் திங்கள்’ – ஒரு கவிதைப் பார்வை

முன்னுரை

முறையாகத் தமிழ் படித்தவர்கள் பெரும்பாலும் படைப்புத் தொழிலில் ஈடுபடுவதில்லை. அப்படி ஈடுபட்டாலும் அவை பரிமளிப்பதில்லை. இந்தக் கருத்தினை வல்லமையில் நான் எழுதிவரும் கட்டுரைகள் பலவற்றில்  சுட்டிக்காட்டியிருக்கிறேன். ஆசிரியப்பணி வேறு. படைப்புத் தொழில் என்பது வேறு. முன்னது திட்டமிட்ட பாடத்திட்டத்திற்கும் பயிற்சிக்கும் உட்பட்டது. பின்னது உள்ளத்தோடு உறவு கொண்டது. புலவர் குழந்தை, அறிஞர் மு.வ., புலவர் சரவணத்தமிழன், பொன்னிவளவன், மணிவண்ணன், உளுந்தூர் பேட்டை சண்முகம், ஈரோடு தமிழன்பன், அப்துல் ரகுமான், சிற்பி, மேத்தா, வைரமுத்து முதலிய விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரே தமிழை முறையோடு முன்னெடுப்பவர்கள். அண்மைக்காலத்தில் இந்த நிரலில் வருபவர் முனைவர் கவிஞர் கருவூர் கன்னல் அவர்கள். நாவல், சிறு கதை படைப்பாளர், கவிஞர், ஆய்வியல் அறிஞர் என்னும் பன்முகத் தளத்தில் தனது முத்திரையை வலிமையாகப் பதித்திருப்பவர். இவர் எழுதிய ‘மழை’ என்னும் நாவலைப் பற்றிய என் மதிப்பீடு சில ஆண்டுகளுக்கு முன் வல்லமையில் வெளிவந்துள்ளது. பாவேந்தர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கும் இந்தப் பண்பாட்டுப் பாவலரின் அற்றைத் திங்கள்’ என்னும் குறும்பாவியத்தை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

அசை அடியான கதை

அசை பாட்டான கதை என்று சொல்லியிருக்கலாம். பெருங்காவியத்திற்கும் குறும்பாவியத்திற்கும் வேறுபாடு உண்டு. பல அடிகள் கொண்டவை பாட்டு. எனவே அசை சீராகி, சீர் அடியாகி, அடி பாட்டாவதால் குறுங்காவியம் என்பதை அசையின் மூன்றாவது நிலையாகிய அடியாகவே கருதலாம். பெருங்காப்பியங்களில் அல்லது இதிகாசங்களில் இடம்பெற்று ஏதோ ஒரு காரணத்தால் தன்னைப் பாதித்த ஒரு நிகழ்வைக் குறும்பாவியமாகவே சிறுகதையாகவோ வெளிப்டுத்துவதும் தமிழ்க்கவிதைக் கோட்பாடுகளில் ஒன்று. இதற்குப் பல நூறு எடுத்துக்காட்டுக்களைச் சொல்ல முடியும். சான்றாக எல்லாருக்கும் தெரிந்து இராமாயணத்தில் இடம்பெற்ற அகலிகைக் கதையைச் ‘சாப விமோசனம்’ என்ற பெயரில் புதுமைப்பித்தன் சிறுகதையாக்கியதைக் கூற முடியும். இந்த மரபு பாரதத்தின் கிளைக்கதைகளில் ஒன்றான நளனின் கதையைப் புகழேந்தி பாடியதில் இருந்தே தொடங்கிவிடுகிறதெனலாம்.

புறநானூற்று நிகழ்வொன்றினைச் ‘சான்றாண்மை’ என்னும் பெயரில் குறுங்காப்பியமாகச் செய்தார் முதுபெரும் தமிறிஞர் அடிகளாசிரியர் என்னும் குருசாமி தேசிகர். பாரதக்கதையில் துரியோதனன் அவையில் தன்னைப் பாதித்த பாஞ்சாலியின் துயர் கண்டு வெதும்பிய பாரதி ‘பாஞ்சாலி சபதம்’ என்னும் பெயரால் குறுங்காவியம் படைத்தார். வடமொழியில் பில்கணன் எழுதிய ‘பில்கணீயம் கணபதிப் புலவர் என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அந்த நூலின் கருவைக் கொண்டு பாவேந்தர் எழுதியதுதான் ‘புரட்சிக்கவி’ என்னும் தனித்தன்மை வாய்ந்த குறுங்காவியம். சிலம்பில் வரும் கானல்வரியை அடிப்படையாகக் கொண்டு கவிஞர் தமிழ் ஒளி எழுதிய புரட்சிக்காப்பியமே ‘விதியோ வீணையோ? என்பது. ஐம்பெருங்காப்பியங்களுள் சிதிலமடைந்த இரண்டு காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியின் சில பகுதிகளை ‘மந்திரி குமாரி’ என்று மாறுவேடம் தரித்த அழகியாக்கிக் காட்டியவர் கலைஞர். ஆட்டனத்தி ஆதிமந்தி என்பார் பற்றிப் புறநானூற்றில் வரும் செய்தித் துளிகளைச் சேகரித்து ‘மன்னாதி மன்னன்’ என்னும் பெயரில் திரைக்கதையைக் காப்பியமாகச் செதுக்கியவர் கண்ணதாசன். தமிழிலக்கிய உலகிலும் அரசியல் அரங்கிலும் பொதுவாழ்விலும் மிகப்பெரிய விவாதப் பொருளாகியது பேரறிஞர் அண்ணா எழுதிய நீதி தேவன் மயக்கம் என்னும் நாடகமாகும். ‘இரக்கமெனும் ஒரு பொருளில்லா அரக்கர்’ என்னும் தொடரால் எங்களை எப்படிக் கம்பன் அழைக்க முடியும்? என்று கம்பரையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி நீதிதேவன் முன் இராவணனை வழக்காட வைத்தவர் அண்ணா. இந்த நிரலில் கடையெழு வள்ளல்களில் மயிலுக்குப் போர்வை தந்து புகழ் பெற்ற பேகன், தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து வாழ்ந்தது பற்றிய குறிப்பு புறநானூற்றில் காணப்படுகிறது, அந்தக் குறிப்பினைக் கொண்டு அறியப்படும் பேகனின் கூடாவொழுக்கமும் கண்ணகியின் துயரமும் படைப்பாளர்கள் பலரையும் பாதித்தது. அவருள் கவிஞர் முருகுசுந்தரமும் கவிஞர் கன்னலும் அடங்குவர். சில எண்சீர விருத்தங்களால் முருகுசுந்தரம் தன் பாதிப்பைப் பதிவு செய்ய, கவிஞர் கன்னலோ தன் பெயருக்கேற்ப ஐம்பத்தெட்டு  கன்னற் கவிதைகளால் ஒரு சிறு காப்பியத்தையே செதுக்கியிருக்கிறார். எழுதியவருக்கு நூல் உரிமை! இன்பம் நமதுரிமை!

மூல மந்திரம்

முருகுசுந்தரம் மற்றும் கன்னல் ஆகியோரின் கவிதைகளுக்கான மூல மந்திரம் புறநானூற்றில் இருக்கிறது. கடையெழு வள்ளல்களில் ஒருவனான வையாவிக்கோன் பெரும்பேகன் என்பான் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து நல்லூரைச் சேர்ந்த ஒருத்தியோடு தகாத உறவு கொண்டிருந்தான். பிரிவாற்றாத கண்ணகி கோவலன் மனைவி கண்ணகிபோலவே இல்லத்திருந்தாள். பிறர் இரக்கத்திற்கு ஆளாகியிருந்தாள். மன்னனுடைய இல்லறத்திலும் கருத்துரை நல்கும் உரிமை பெற்றிருந்த சங்கச் சான்றோர்களான . கபிலர், பரணர், அரிசில் கிழார், பெரும்பூதனார் முதலியோர் பேகனிடம் சென்று கண்ணகியின் துயர்நீக்க வேண்டிக் கொண்டனர். இந்நிகழ்வு பற்றிப் புறநானூற்றில் ஏறத்தாழ பத்துப் பாடல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நளியிரு சிலம்பின் சீறூர் ஆங்கண்
வாயில் தோன்றி வாழ்த்தி நின்று
நின்னும் நின் மலையும் பாட, இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
முலையகம் நனைப்ப விம்மிக்
குழல் இனைவதுபோல் அழுதனள் பெரிதே!” (புறம்143)

எனப் பாணர் வாய்மொழியாகப் பதிவு செய்யும் கபிலரின் குறிப்பு மொழியும்

               யாம் கிளைஞரேம் அல்லேம்! கேள்! இனி
                  எம்போல் ஒருத்தி நலன் நயந்து என்று
                  வரூஉம் என்ப வயங்கு புகழ்ப் பேகன்
                  ஒல்லென ஒலிக்கும் தேரொடு
முல்லை வேலி நல்லூ ராளே!” (புறம் 144)

கடாஅ யானை கலிமான் பேக!
பசித்தும் வாரேம்! பாரமும் இலமே!
களங்கனியன்ன  கருங்கோட்டு சீறியாழ்
நயம் புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி
அறம்செய்து ஈமோ அருள் வெய்யோய்!’ என
இஃது யாம் இரந்த பரிசில்! அஃது இருளின்
இனமணி நெடுந்தேர் ஏறி
இன்னாது உறைவி அருந்துயர் களைமே! (புறம் 145)

என்னும் பாணர் வாய்மொழியாக வந்த பரணர் தமிழும்

                 “நீ நல்காமையின் நைவரச் சாஅய்
அருந்துயர் உழக்கும் நின் திருந்திழை அரிவை
கலிமயிற் கலாவம் கால்குவித் தன்ன
ஒலிமென் கூந்தல் கமழ்புகை  கொளீஇத்
தண்கமழ் கோதை புனைய
வண்பரி நெடுந்தேர் பூண்க நின் மாவே! (புறம்146)”

என்னும் அரிசில்கிழார் அறிவுறுத்தலும் படிக்கின்ற நம்மைக் கவர்ந்தது போலவே பாவலர்களையும் கவர்ந்திருக்கிறது. பெண்ணின் துயரம் என்பது தமிழ்க்கவிதையுலகின் தலைசிறந்த பாடுபொருள். தலைவியைப் பிரிந்து தலைவன் சென்றாலும் பிரிவுத் துன்பம் பற்றிய பாடல்கள் எல்லாம் பெண்களுக்கானவையே! பாலைத்திணையில் பிரிந்தவன் தலைவன். ஆனால் புலம்புதல் தலைவிக்கு. தலைவன் புலம்பியதாக ஒரு பாடல் உண்டா?

எழுவருள் இருவர்

பேகன், பாரி, காரி, ஆய், அதியமான், நள்ளி, ஓரி என்பதே இன்றைய தமிழிலக்கிய உலகில் வழங்கிவரும் வள்ளல் வரிசை. இது அகர நிரலாக இல்லை. வள்ளன்மையின் நிரலாக இருக்கக்கூடும் என அனுமானிக்கலாம். அனுமானிக்கவே மயிலுக்குப் போர்வை தந்த பேகனும் முல்லைக்குத் தேர் நல்கிய பாரியும் தனித்துவம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். பாரியைப்

பூத் தலைஅறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கவெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பின் பாரி

என்று பாடுகிறார்கள்.  புலவர்களால் தாம் பாடப்படுவதையே விரும்பும் மன்னர்கள், பாடி வந்தவர்களுக்கு அவர்கள் நாடிய பரிசிலை நல்குவது இயல்பு. ஆனால் நாக்கில்லாத காரணத்தால் முல்லைக் கொடி தன்னைப் பாடாது எனத் தெரிந்தும் தான் ஏறி வந்த மணித்தேர் கொடுத்ததால் பாரி போற்றப்படுகிறான். பேகனோ இன்னும் ஒரு படி மேலே செல்கிறான். முல்லை படரக் கொம்பின்றித் தவித்தது உண்மை. ஆனால் மயில் மேகம் கண்டு ஆடியது. நடுங்கியதாகக் குறிப்பில்லை. நாட்டியத்து மயிலுக்கும் குளிரினாலே நடுங்குகிற மயிலுக்கும் வேறுபாடு அறியாது கொடைமடத்தின் கொடுமுடிக்குச் சென்றவன் பேகன். அதனால்தான் கடையெழு வள்ளல்கள் நிரலில் அவனுக்கு முதலிடம். இந்த அனுமானம் பின்வரும் சான்றோர்களின் பதிவுகளாலும உறுதி செய்யப்படலாம். கொடைமடம் பட்டவர் பலராயினும்  இலக்கியங்களில் எடுத்துக்காட்டாக அமைந்தவர்  பேகனும் பாரியுமாகிய இருவருமே!   ஐயனாரிதனார் இயற்றிய புறப்பொருள் வெண்பா மாலையில்

முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
எல்லை நீர் ஞாலத்து இசைவிளங்கத் தொல்லை
இரவாமல் ஈந்த இறைவர்போல் நீயும
கரவாமல் ஈகை கடன்””

என்றும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் முன்றுறை அரையனார் எழுதியபழமொழி நானூறு என்னும் இலக்கியத்துள்

முல்லைக்குத் தேரும்மயிலுக்குப் போர்வையும்,
தொல்லை, அளித்தாரைக் கேட்டறிதும் சொல்லின்,
நெறி மடல் பூந் தாழை நீடு நீர்ச் சேர்ப்ப!
அறி மடமும் சான்றோர்க்கு அணி.

என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரிசை வெண்பாக்களால்.  அறிந்த கொள்ளலாம்.

பெரும்பூதனும் முருகு சுந்தரமும்

திராவிடச் சிந்தனைக் கவிஞர்கள் பெண் விடுதலை பாடுவது  இயல்பே. அவ்வகையில் கவிஞர் முருகுசுந்தரத்தைக் கண்ணகியின் துயரம் கவனத்தை ஈர்க்கப் பேகனின் அரண்மனையை நிகழ்விடமாக வைத்துக் கண்ணகியின் துயர் நீக்கக் கற்பனைக் களம் அமைக்கிறார்.  அவையில் பரணர் பேகனின் பல்புகழைப் பாட, செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார் எழுந்து “மனைவியின் கண்ணீரைத் துடைக்காமல் மயிலின் குளிரைப் போக்கியது பாராட்டுக்குரியது அன்று. பேகனின் தவறைச் சுட்டிக்காட்டி அறிவுரை கூறுங்கள் என்று அவையில் முழுக்கமிடுவதாகக் கற்பனை செய்து பாடுகிறார்.

போர்க்களத்தின்  கொடுமைகளை எடுத்துக் காட்டிப்
புவிமன்னர் பகைதீர்க்கும் பரண! பேகன்
கார்க்கூந்தல் கண்ணகியைப் பிரிந்து வாழும்
கதையுமக்குத் தெரியாதா? முல்லை வேலி
ஊர்ப்பரத்தை உதடுகளின் கொடைக்கு வள்ளல்
உட்கார்ந்து கிடக்கின்றான் அந்தப் பேகன்
வேர்ப்புகழை விளாசுகிறீர் பாட்டுப் போர்வை
விரித்திந்த களங்கததை மூடு கின்றீர்

கார்போன்ற கருங்கூந்தல் நடுங்க ஏக்கக்
கண்ணிரண்டும் புண்ணாகி நடுங்க வில்லின்
கூர்போன்ற உதட்டுமுனை நடுங்க செங்கை
குலைக்காந்தள் போல்நடுங்க உருட்டிவிட்ட
தேர்போலக் கிடக்கின்றாள் மனைவி! அந்தப்
தென்பொதினிப் பொன்மயிலை மூடுதற்குப்
போர்வை கொண்டு போகட்டும் பேகன் என்று
பூதனங்கு முழக்கமிட்டான் பரணர் போனார்!!”

இதே நிகழ்வைக் கவிஞர் கருவூர் கன்னல் சித்திரித்துக் காட்டியிருக்கும் பாங்கு சற்று வேறுபட்டது. .

கன்னலின் அற்றைத் திங்கள்

தமிழ்த்தாய் வணக்கம் அல்லது தமிழ்த்தாய் வாழ்த்து என்னும் இடைக்கால கவிமரபைப் பின்பற்றும் கன்னல் நான்கு பாடல்களில் தமிழ் வாழ்த்தையும் புதுமையான நான்கு எண்சீர் விருத்தங்களால் தன் உள்ளங்கவர்ந்த காதலிக்காக்கிய நூலின் படையலையும் தொடர்ந்து ஐம்பது எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களால்  ‘அற்றைத் திங்கள்’ என்னும் தலைப்பில் கண்ணகியின் துயரத்தைப் பாடியிருக்கிறார்.

கவியுலகம் காணாத தமிழ்த்தாய் வாழ்த்து

பொதுவாக நூலின் ;தொடக்கத்தில் பதிவு செய்யப்படும் கடவுள் வாழ்த்து, அவையடக்கம், நூல் படையல் முதலியவற்றைப் பெரும்பாலோர் அவ்வளவாகக் கவனிப்பதில்லை. அவையெல்லாம் நூற்பாகின் வெல்லக்கட்டி என்பதை அறிந்திருந்தால் கவனித்திருப்பார்கள். அபிராமி பட்டர் பாடிய அபிராமி அந்தாதியில் ‘தார் அமர் கொன்றையும்  எனத் தொடங்கும் காப்புச் செய்யுளே ஏனைய நூறுபாடல்களின் சாரத்தைத் தந்து விடுவதைக் காண்க. ‘கவிஞர் கன்னல் இந்த நூலில் பாடியிருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தும் ‘வேண்டுகிறேன்’ என்ற தலைப்பில் பாடியிருக்கும் காதலிக்கான படையலும் மிகவும் போற்றத்தக்கன.

தேன்கூட உன் சுவைக்குத் தோற்றுப் போகும்!
தென்பொதிகை பூங்காற்றும் புறமே காணும்!
வான்நிலவும் நலன் குன்றும்! பூத்திருக்கும்
வனப்பாலே உயிர்கேட்கும் அணங்கும் நாணும்!
தேன்தழுவும் அரும்புகளும் தலையைச் சாய்க்கும்!
தென்தமிழே! உனைப்பற்றிச் சுவைகள் கண்டார்!
வானுலகின் இன்பத்தை எண்ணியேங்கும்
வழக்கத்தை மறந்தார்!நல் ஞானம் பெற்றார்!”

என்னும் தமிழ்த்தாய் வாழ்த்தின் இறுதி விருத்தம் முழுமையும் மரபார்ந்த சிந்தனைகளை உள்ளடக்கி அமைந்திருக்கிறது. ஆனால் முந்தைய பாடல்களில் தமிழுறையும் இடங்களாக அவர் பாடியிருப்பது இதுவரை யாரும் பாடாதது. பாடிக் கேட்காதது.

மேடையாகட்டும் நூலாகட்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகின்ற கவிஞர்கள் ‘பாண்டியன் கை வளர்ந்தவளே’ என்று பாடாவிட்டால் அவர்கள் பிறவி பெருமையடையாது என்று எண்ணுபவர்கள். அடுத்த நிலையில் ‘கம்பனின் கைவண்ணம் கண்டவளே! கண்ணதாசனின் பேனாவாக இருந்தவளே! என்பார்கள். ‘வாலிக்கு வழி காண்பித்தவளே! வைரமுத்துக்கு வளம் சேர்த்தவளே! என்பார்கள். சமயச்சிந்தனை உடையவர்கள் ‘வைகையில் நீந்தியவளே! நெருப்பை எரித்தவளே’ என்பார்கள். இவற்றையும் இவைபோல்வனவற்றையும் கேட்டுக் கேட்டு விட்டம் அகன்றுபோன என் காதுகளில் கன்னலின் தமிழ்த்தாய் வாழ்த்து உண்மையில் தேனையும் பாலையும் வார்த்தது என்பேன்.

மூட்டை தூக்கும் மாந்தர்களின் மூச்சுக்குள்ளே
      மூழ்கிப்போய் சிரிப்பவளே!
விறகுடைக்கும் செந்தமிழர் செயலில்
      நெஞ்சில் வினையாற்றி மகிழ்பவளே!”

“…………………………………………………………………….இனத்தைக் காக்க
மறந்தவரின் உயிர்தேடி கழுவில் ஏற்றும்
      மறவர்களைத் தொடர்பவளே!”

நெட்டை மலைச் சாரலிலே தவழ்ந்து மக்கள்
      நினைவுக்குள் குடியேறி அமுத ஊற்றைக்
கொட்டுகின்ற பைந்தமிழே!

தமிழ் எங்கே இருக்கிறது என்று பார்த்தீர்களா? பாண்டியன் கையைவிட்டுப் பாமரனின் கோடரிக்குள் வந்துவிட்டதாம்! மன்னன் கையிருந்திருந்தால் தமிழுக்கு  வடமொழியின் கதி வந்திருக்கும். தமிழ் மக்கள் மொழியாகி வழக்கில் இருந்ததால்தான் ஆரியம்போல் அழியாத சீிரிளமை திறம் பெற்று வாழ்கிறது என்னும் கருத்தினை இலக்கிய நயத்தோடு பதிவு செய்திருக்கும் வாழ்த்து இது. முனிவன் வளர்த்த தமிழ் அல்ல! .மூட்டைதூக்கும் முனுசாமி வளர்க்கும் தமிழ்! வேந்தன் வளர்த்த தமிழ் அலல! விறகுடைக்கும் வீராசாமி வளர்க்கும் தமிழ்! நெடுஞ்செழியன் வளர்த்த தமிழ் அல்ல! நெட்டைமலைச் சாரல் மக்கள் நினைவுக்குள் வளர்க்கும் தமிழ்! கற்பனையில் புதுமை செய்தவர் உண்டு. வடிவத்தில் புதுமை கண்டவர் உண்டு. கருததுக்களில் புதிய சிந்தனையைப் பதிவு செய்தவர் உண்டு. தமிழ்த்தாய் வாழ்த்தில் உளமார்ந்த புதுமை செய்த கவிஞர் சிலரே! அந்தச் சிலருள் முதல் வரிசையில் முந்தியிருப்பவர் முனைவர் கன்னல்!

வித்தியாசமான வேண்டுதல்

பேகனின் மனைவி கண்ணகியின்  துன்பத்தைச் சித்திரிக்கும் இந்த நூலைத் தன் காதலிக்கு அர்ப்பணிப்புச் செய்ய எண்ணுகிறார் கவிஞர். ஒருவனுடைய மரணச்சூழல் எப்படி அமைய வேண்டும் என்பது பற்றியும் திருவள்ளுவர் சிந்தித்திருக்கிறார்.

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்து கோள் தக்கது உடைத்து (780)

என்பார் திருவள்ளுவர். கன்னலோ தன்னுடைய சாக்காடு காதலிக்குத் தெரியாமல் போய்விடக்கூடாதென்றும், அவள் வந்து அரற்றும் நிலையே அரிய நிலை என்றும் பாடுகிறார்.

ஊரெல்லாம மாலையிட்டே இறுதி யாக
ஊர்தியிலே வைத்தென்னை உலாநடத்திப்
பார்வியக்க அரசாங்கச் சிறப்பு செய்து
பாராட்ட வேண்டாம்!”

சுடுகாட்டின் ஓரத்தில் எரியும் போது
சுற்றியுள்ள கலைஞரெல்லாம் ஒன்று கூடி
விடுக்கின்ற இரங்கலுரை வேண்டாம்

ஊர்கூடும் முச்சந்தி நடுவில் என்றன்
உருவத்தைச் சிலையாக எடுத்தே நன்கு
பேர பெற்ற அறிஞரெல்லாம் ஒரு நாள் கூடிப்
பெருமையினை உலகறியப் புகழ்ந்து பேசும்
சீர சிறப்பு செய்வதெலலாம் எனக்கு வேண்டாம்!

“அவளுக்கோர் ஆள்விடுங்கள்” என்று வேண்டுகிறார். இந்த வேண்டுதல்தான் இதுவரைத் தமிழ்க் கவிதையுலகம் காணாதது என்கிறேன். இதே கருத்தினை வேறு வாய்பாட்டில் சிலர் பாடியிருக்கக் கூடும். கவிஞன் என்ன சொல்கிறான்? எல்லாருக்கும் ஆள் அனுப்பும் அவசரத்தில் அவளை மறந்துவிடாதீர்கள்! என்னைக் காதலித்த பாவத்திற்காக அவளை வெறுத்து விடாதீர்கள்! என் ஆவி சித்தி அடைய வேண்டுமென்றால் என் நெஞ்சக்கூடு முழுமையாக எரிய வேண்டும். அந்தக் கூட்டில் குடியிருக்கும் அவள் வரவேண்டும். அவளுக்குச் சேதி சொல்லி அனுப்ப மறந்துவிடாதீர்கள் என்கிறார்.. கவிஞனுக்கு ஊர் செய்யும் சிறப்புக்கள் ஒரு பொருட்டேயில்லையாம். தன் காதலி வந்து கதறுவதுதான் சங்கீத ஓப்பாரியாம்.

அந்த மேற்கந்தி வானத்து நிலவு வந்து
மதுவிழிகள் நீர்சூழக் கதற வேண்டும்!
மற்றவர்கள் அதைக் கேட்டுத் தேம்ப வேண்டும்!
“………………………………………………………….என் செவியில் மெல்லப்
போர்விழியால் நினைவுக்குள் தமிழைக் கொட்டும்
பொன்நிலவோ என் பேரைச் சொல்லிச் சொல்லி
நீர் ஓடி அவள் விசும்பும் ஓசை கேட்டு
நெருப்பினிலே நான் எரிந்து சாக வேண்டும்!

‘ஒருமையுடன் நின் திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.’ எனத்தொடங்கிப் பல வேண்டுதல்களை கந்தகோட்டத்தில் வைப்பார் வள்ளற் பெருமான். கன்னலோ தன் மரணத்தில் செய்யக் கூடாதனவற்றைப் ‘செய்ய வேண்டாம் ’பட்டியலிட்டுச் செய்ய வேண்டிய ஒரே செயலாகத்தன் காதலியின் வரவை வேண்டுகிறார். “மதுவிழிகள் நீர்சூழக் கதற வேண்டும்! மற்றவர்கள் அதைக் கேட்டுத் தேம்ப வேண்டும்!” என்னும் வரியால் தன் மீது அவள் வைத்திருக்கும் அன்பையும் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறார்.

கன்னல் செய்த கதை மாற்றம்

புறநானூற்றுக் கருத்துக்களைப் பெரும்பாலும அப்படியே தழுவிக் கவிஞர் முருகுசுந்தரம் ‘போர்வை’ என்னுந் தலைப்பில் கவிதை பாடினார். கன்னல் கதைத்தளத்தைத் தானே அமைத்துக் கொள்கிறார். பேகனை இளம்பேகனாக ஆக்கிவிடுகிறார். நல்லூர்ப் பெண்ணுக்குத் தமிழாழி என்று பெயரிடுகிறார். இயற்கை வளங்களைக் கண்டு மயங்கி யாழிசை மீட்டுகிறான் இளம்பேகன். அவனிசைக்குத் தக்கவாறு பாடுகிறாள் தமிழாழி. இளம்பேகனைச் சுற்றியிருந்தவர்கள் இனிமையாகப் பாடியவளுக்குப் பரிசு என்ன என்று வினவப் பேகன் அவளிருக்கும் மனைநோக்கிப் பறக்கிறான். .அவள் இசைநேர்த்தி கண்டு இதயத்தைப் பறிகொடுத்து அவள் இல்லத்திலும் இதயத்திலும் ஒரே நேரத்தில் குடியேறி வடுநீங்கு சிறப்பின் தன் மனையகம்மறந்து விடுதல் அறியா விருப்பினன் ஆனான்.

தன் வறுமை போக்க பேகனை நாடிச் செல்கிறார் பரணர். பேகன் அரண்மனையில் பேகன் இலலை. கணவனைப் பிரிந்து பேதலித்து நின்ற கண்ணகியைக் காண்கிறார். கவலை கொள்கிறார். கபிலரின் அறிவுரையும் சேர, பேகனைக் காண நல்லூருக்கு வருகிறார். அவனோடு இருக்கும் நல்லூர்  நங்கையைப் பரணர் காண்கிறார். வியப்படைகிறார். பேகனுக்கு அறிவுரை கூறுகிறார். பேகனும் பரணரும் ஊர் திரும்ப, தமிழாழியும் உடன்வருகிறாள். கண்ணகியைத் தமிழாழி வணங்குகிறாள். தமிழாழியைக் கண்ணகி தழுவிக் கொளகிறாள். இருமலர் இல்லறத்தைப் பேகன் முன்னெடுக்கிறான்.

வெளிப்படையாக நடந்த அன்றைய சமுதாய ஒழுக்கத்தையும மறைமுகமாகவும் பரவலாகவும் நடக்கும் இன்றைய சமுதாய ஒழுக்கததையும் நன்கு அறிந்தும் புரிந்தும் கதையில் செய்யப்பட்டிருக்கும் மாற்றம் கண்டிக்கத்தக்கதன்று. பொதுமக்களிடம் பெருந்தாக்கத்தை உணடாக்கும்  திரைப்பட ஊடகங்களில் கூட, இருதார இல்லறம் அனுமதிக்கப்படுகிறது என்பது சிந்திக்கத்தக்கது.

இசையால் வசமான இதயங்கள்

சிலப்பதிகாரத்தில் மாதவியைக் கோவலன் விரும்பிச் சென்றமைக்கு அவனுடைய கலையுள்ளம் காரணம் என்பர். பேகன் பரத்தைமையொழுக்கம் உடையவன் என்னும பதிவு அவன் பெருமைக்கு பங்கம் ஏற்படுத்தும் என்று கருதிதய கன்னல். அவனையும் ஓர் கலைப்பிரியனாகக் காட்ட முயன்றிருக்கிறார். தமிழாழியின் வியத்தகு இசைப்புலமையை பேகன் அறிந்து கொள்வது போன்ற கதைக்களத்தை அமைத்துக் கொள்கிறார். ‘ஈரிரு பண்ணும் எழுமூன்று திறனும்’ என்பது பிங்கலந்தை.  யாழில் இசை எழுப்புதற்குச் செய்யும் பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு என்னும் எட்டினையும், இசை நிலையின் தீதின்மை ஆராய்தற்குச் செய்யும் வார்தல், வடித்தல் உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்னும் எட்டினையும் ஒருங்கே குறிக்கும் . பண்கள் நூற்று மூன்று’ என்பார் பரிமேலழகர். பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி இவை நான்கும் பெரும்பண்கள். நாற்பெரும் பண்ணுக்கும் இருபத்தொரு திறங்கள் கூறப்பட்டன. பாலையாழ்ததிறன் 5, குறிஞ்சியாழ்த்திறன் 8, மருதயாழ்த்திறன் 4, செவ்வழி யாழ்த்திறன் 4 ஆக 21. இவ்விருபத்தொன்றும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என வகைக்கு நான்காய் எண்பத்துநான்காகும். இசைச் சுரங்களின் மாத்திரை வேறு பாட்டினாலே முற்குறித்த ஒவ்வொரு பண்ணும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என நால்வகைச் சாதியாயின என்ற நுட்பத்தை யாழ் நூலிற் காணலாம். இது பற்றிய ஐயங்களையும் விளக்கங்களையும் தமிழாழியிடம் கேட்டறிந்தானாம் பேகன்.

மாதவியின் கலைநுணுக்கமே கோவலனை ஈர்த்தது என்னும் கருத்தினைக் குறிப்பாகப் புலப்படவைப்பார் அடிகள். காணியாளம்பட்டி கவிஞர் கன்னலோ வெளிப்படையாகப் பதிவு செய்கிறார். அவ்வளவுதான் வேறுபாடு.

உவமங்களின் ஆளுமை

கவிஞனுக்கு அவனுடைய கவிதையே முகவரி. அந்தக் கவிதைக்கோ அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உவமங்களே முகவரி. கவிதைகளை உவமவழி சுவைத்தல் என்பது தமிழ்க்கவிதைக் கொள்கைகளின் தலையாயது. கன்னலின் படைப்புக்களில் பொதுவாகவும் அவருடைய கவிதைகளில் சிறப்பாகவும் பயன்படுத்தப்பட்டிருப்பன உவமங்கள். ‘வெண்பாவிற் புகழேந்தி’ என்பது போல யாப்பு மேலிட்டுக் கவிஞர்கள் பெருமை பெறுவதுண்டு. உவமைக் கவிஞர் சுரதா என்பது போல உவமத்தின் மேலிட்டுப் பெருமை பெறுவதும் உண்டு..

உவமத்தைச் சொல்பவரும் அனுபவித்துச் சொல்ல வேண்டும். அதனைப் படிப்பவரும் உணர்ந்து அனுபவிக்க வேண்டும். வேண்டாத பெண்டாட்டியாய் உவமமானால் இரண்டுக்கும் பெருமையில்லை! பொருளை விளக்குவது உவமத்தின் பணி என்பது உண்மையே ஆனால் அது படைப்பாளின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும்; அடையாளமாகவும் அவனுடைய புலமையின் ஆழத்தைக் காட்டும் ஆடியாகவும் பார்வையின் விசாலத்தைப் பறைசாற்றும் முரசாகவும் ;அமைகிறது.

ஒரு பொருளை ஒரு உவமத்தால் விளக்குதல்,
ஒரு பாட்டில் ஒரு உவமத்தை மட்டும் வைத்துக் காட்டுதல்,
ஒரு பொருளுக்குப் பல உவமஙகளைப் பட்டியலிடுதல்,
ஒரே பாட்டில் பல உவமஙகளைச் செறித்துக் காட்டுதல்

என இன்னும் பல்வகையாக உவமப் பயன்பாடு தமிழ்க்கவிதைகளில் அமைந்துள்ளதை அறியலாம்.  இந்த அளவுகோலால் ‘அற்றைத் திங்கள்’ உவமங்கள் நோக்கப்படின் கட்டுரையின் அளவு பெருகும் எனக் கருதிச் சுருக்கமாக ஒரு சில உவமங்களின் அழகியல் சிறப்பினை  மட்டும் இப்பகுதி விளக்க முயல்கிறது. தமிழாழியின் தோற்றம் கற்பனையின் ஆழத்தை ஆழப்படுத்தும் என்பதையும் அதன் பரப்பை விரிவுபடுத்தும என்பதை

உசுப்பிவிட ஓடுகின்ற குறுமு யல்போல்
ஓடிவரும் கற்பனைகள்  ஆர்ப் பரிக்கும்

என்று எழுதுகிறார். அவள் அழகைக் கண்ட காண்பார் நிலையை

கூடையிலே நெருப்பை அள்ளிக் கொட்டினாற்போல்
கொடுமையினை அவள் தந்தாள்

என்னும் உவமத்தால் விளக்குகிறார். கதைநாயகியை உவமத்தால் சித்தரிக்கும் கண்ணதாசன்

விரிக்காத தோகைமயில்! வண்டு வந்து
மடக்காத வெள்ளை மலர்! நிலவு கண்டு
சிரிக்காத அல்லிமுகம்! செகததில் யாரும்
தீண்டாத இளமை நலம்! பருவஞானம்!

என உவமத்தோரணத்தால் கவிமாலை புனைவார். நம் கன்னலும்

வெட்டிவைத்த நிலவைப்போல நெற்றி! கோல
     விழியிரண்டும செங்குவளை! ………..
……………………………………………………………………………………………………………….
தேன்ததும்பும் செவ்வாம்பல் போல் இதழ்கள்!
வெட்கமின்றி மங்கையரும் கன்னம் தொட்டு
     வெண்ணிலவின் புன்னகையைத் தின்று செல்வர்!”

எனத் தமிழாழியின் பேரழகை இயற்கையோடு இயைத்து கவித்தோரணம் கட்டியிருக்கிறார். பேகனுக்கு முன்னால் தமிழாழி தலைகுனிந்து நிற்கிறாளாம். எப்படித் தெரியுமா?

தலைவாரிப் பூச்சூடித் தமிழே வந்து
தன்முன்னே நிற்பதுபோல் அவன் உணர்ந்தான்

தமிழைத் தாயாகப் பாடிய கவிஞர் இவர். இங்கே பேகனின் காதலியைத் தமிழாகக் காண்கிறார். மனைவியைத் தாயாக நோக்கி வணங்கும் தமிழ் மரபைக் குறிப்பாகச் சுட்டினார் என்றும் கூறலாம்.  திரையிசைப் பாடல் ஒன்றில்

பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
என் தேவையை யார் அறிவார்,
உன்னை போல் தெய்வம் ஒன்றே அறியும்

என்று  மனைவியைத் தெய்வத்திற்கு உவமமாக்குவார் கண்ணதாசன். ‘உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை’ என்பதனால் பொருளைவிட உவமம் சிறந்தது. இங்கே தெய்வத்தைவிட மனைவி சிறந்தவள். இந்த மரபுவழிச் சிந்தனைதான் தமிழாழியைத் தமிழாகப் பார்க்க வைத்திருக்கிறது. கன்னல் ஒரு மரபுவழிக் கவிஞர் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. தமிழாழியைக் கண்டு திரும்பும் பேகன்

தன்னலத்தை இழந்து பொது நலத்தை நாடும்
தக்கவர்போல் கடந்து சென்றான்

என்று உவமத்தில் புதுமை சேர்க்கும் கன்னல்

தொழத்தக்க இளந்துறவி போன்ற தோற்றம்!
தொண்ணூறு விழுக்காடு தூய நெஞ்சம்
அழ வாழ்வார் வாழ்க்கையினை மாறறும் நோக்கம்!
அருளொழுகும் விழிவீச்சு! அன்பின் ஆட்சி
கழகத்துத் தமிழ் பேசும திருவாய்

என்று பேகன் தோற்றத்தை வண்ணனை செய்கிறார். சிலப்பதிகாரத்தில் காப்பியத் தலைவி கண்ணகியை முதலில் அறிமுகம் செய்த பிறகுதான் கோவலனை அறிமுகம் செய்கிறார் அடிகள். கன்னல் பேகனைச் செய்யும் அறிமுகம்

மண்தேய்த்த புகழினான்! மதிமுக மடவார்தம்
பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டேத்தும் செவ்வேள் என்று இசைபோக்கிக் காதலால்
கொண்டேத்தும் கிழமையான் கோவலன் என்பான்

என்னும் அடிகளின் வண்ணனைக்கு மாறுபட்டிருப்பது காண்க. பெண்கள் குழாஅத்துள் கோவலன்’ என்பதும் மக்கள் குழாஅத்துள் பேகன் என்பதும் நோக்குக.

தம் வறுமை போக்கும் நோக்கத்தோடு வள்ளல் பேகனைச் சந்திக்கச் செல்கிறார் பரணர். அவன் வீட்டில் அவன் மனைவி கண்ணகி அழுத கண்ணீர்க் கோலத்தில் இருக்கிறாள். கபிலர் பரணரிடம் பேகனின் புறவொழுக்கத்தையும் கண்ணகியின் துயரத்தையும் எடுத்துச் சொல்கிறார். பரணர் பேகனுக்கு அறிவுரை நல்குகிறார்.

வெண்ணிலவை வெடிவைத்துத் தகர்க்க லாமா?
      வீதியிலே வீசுதற்கா முத்து மாலை?
தண்டமிழை அழிப்பதற்கா தமிழன்? தண்ணீர்
      தாமரைக்கேன் சிறைச்சாலை?

வினாக்களின் அடுக்கு பரணரின் வேதனையையும் கண்ணகியின் துயரையும் உணரத்துவதாக உள்ளன. தண்டமிழை அழிப்பதற்கா தமிழன்? என்னும் உவமம் சொந்த வீடு என்பதற்காகச் சுவரிலே கிறுக்கிய வரலாற்று உண்மையை உணர்த்துவதாக உள்ளது.

கருத்து,, கற்பனை, உணர்ச்சி, வடிவம் என்னும் கவிதைக் கூறுகளுக்குள் வடிவமும் கருத்தும் ஆராய்ச்சிக்குட்பட்டன. ஆனால் உணர்ச்சியும் கற்பனையும் அனுபவத்திற்கு உட்பட்டன. ஆய்வு அங்கே பயன்தராது. உவமம் கற்பனையின்பாற்படும். நுண்ணிய ஆழமான அழகியல் ததும்பும் கன்னலின் உவமங்களை இந்த நூலில் பல பக்கங்களில் நான் படித்தேன்! சுவைத்தேன்!

வண்ணனைக் குவியல்

சிறுகதையின் பெருக்கம் நாவலாகாது. நாவலின் சுருக்கம் சிறுதையாகாது. இவற்றுக்கிடையே குறுநாவல் என்ற வடிவத்தையும் நாம் கண்டிருக்கிறோம். அதுபோலப் பெருங்காப்பியம் சிறுகாப்பியம் என்பனவற்றிக்கு இடையில் குறும்பாவியம் என்று ஒன்றினை அழைப்பார்கள். எதனை யார் எப்படி அழைத்தால் என்ன? கவிதை மணக்கிறதா? கருத்து சிறக்கிறதா? கற்பனை கொழிக்கிறதா? உணர்ச்சி கொந்தளிக்கிறதா என்பதுதான் சுவைப்பவனின் உள்ளத்தே  எழும் உணர்வுத் தேவை.!  அந்த வகையில் ‘அற்றைத் திங்கள்’ என்னும் இந்தக் குறும்பாவியத்தில் வண்ணனைப் பகுதிகள் நெஞ்சையள்ளுபவையாக அமைந்திருக்கின்றன. கவிதைகளை மனப்பாடம் செய்யாமல் சுவைப்பது பயனைத் தராது. பாராயணம் என்பது தமிழ்க்கவிதைச் சுவைக்கு அடிபபடை..

குயில் கூவிக் கொண்டிருக்கும்! கோலமிகுந்த
மயிலாடிக் கொண்டிருக்கும்! வாசமுடைய நற்
காற்று குளர்நதடிக்கும்! கண்ணாடிபோன்ற நீர்
ஊற்றுக்கள் உண்டு!. கனிமரங்கள் மிக்க உண்டு!
பூக்கள் மணங்கமழும்! பூக்கள் தோறும் சென்று தே
னீக்கள் இருந்தபடி இனனிசைபாடிக் களிக்கும்
வேட்டுவப்பெண்கள் விளையாடப் போவதுண்டு
காட்டு மறவர்களும் காதல்மணம் செய்வதுண்டு
நெஞ்சில் நிறுத்துங்கள்! இந்த இடத்தைத் தான்
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்று சொல்லிடுவார்

ஒரு கதைக்களப் படப்பிடிப்பையே நடத்தி முடிப்பார் பாரதிதாசன். இயற்கையில் மனம் பறிகொடுத்த கவிஞன் தான் எழுதும் எந்தப படைப்பிலும் எந்தக் கதைச் சூழலிலும் மிகச் சாதுரியமாக வண்ணனையைப் பதிவிட்டுவிடுவான். அவன் படைப்புள்ளத்தின் பளிங்கு நிலை அது. பால்வண்ணப் பதிவு அது.

பாஞ்சாலியை இந்தியத்தாயாக உருவகம் செய்து பாரதி எழுதிய நெருப்புக் காவியம் பாஞ்சாலி சபதம். பாண்டவர் விதி முன்செல்ல அஸ்தினாபுரம் செல்கிறார்கள். வழியில் சோலையொன்றில் தங்குகிறார்கள். அந்த மாலை  பாண்டவர்களுக்கும் நமக்கும் துன்பமாலை!. பாரதிக்கோ கவிதை மாலை! அவன் கவிஞனல்லவா? அதனால் அது அவனுக்குக் கற்பனை மாலை!. அந்த மாலையின் அழகை பாஞ்சாலிக்கு அர்ச்சுனன் காட்டுவதாகப் பாரதி பாடுகிறான்.

                  பாரடியோ வானத்தில் புதுமை யெல்லாம்!
பண்மொழீ! கணநதோறும் மாறி மாறி
ஓரடிமற்றோரடி யோடு ஒத்த லின்றி
உவகையுற நவநவமாய்த் தோன்றும் காட்சி!
யாரடி இங்குஇவைபோலப் புவியின் மீதே
எண்ணரிய பொருள்கொடுத்தும் இயற்ற லுற்றார்?
சீரடியால் பழவேத முனிவர் போற்றும்
செழுஞ்சோதி வனப்பையெல்லாம் சேரக் காண்பாய்!
……………………………………………………………………………………………………………..
அடிவானத்தே அங்கு பரிதிக் கோளம்!
அளப்பரிய விரைவினோடு சுழலக் காண்பாய்
இடிவானத்து ஒளிமின்னல் பததுக் கோடி!
எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து
முடிவான வட்டததைக் காளி ஆங்கே
மொய்குழலால் சுற்றுவதன் மொய்ம்பு காணாய்!
வடிவானது ஒன்றாக தகடு இரண்டு
வட்டமுறைச் சுழலுவதை வளைந்து காண்பாய்!

காப்பியத்தின் கதை வேகம் தடைபடுவதைப் பற்றிக் கவலைப் படாத பாரதி தன் கவியுள்ளத்தின் காரணமாகவும் சிற்றிலக்கியத்தின் கட்டுமானச் சிறப்புக்குக் களங்கம் வந்துவிடாமலும் இந்த வண்ணனையைப் பதிவு செயதிருக்கிறான் எனலாம். பாரதியின் இந்தப் படைப்பு நெறி கன்னல் காவியத்திலும் பின்பற்ற்பட்டுள்ளது.

பொன்னந்தி தமிழ் நிலத்தை வெல்லமாக்கிப்
பூக்களெல்லாம் தமிழ்பாடும் இனிய நேரம்
தென்தமிழில் தேனூற்றிக் குயில்கள் பாடும்!
தெற்குமலை அருவியெல்லாம் முழவாய் வீழும்!
இன்னிசையை வண்டியக்க குவளை ஆடும்!
இதயத்தைக் காட்சியெனும் அணங்கு மூடும்!”

என்னும் இயற்கை வண்ணனையிலும்

அரைநிலவு வானத்தை ஆட்சி செய்யும்
அதைப் பார்த்து வானிலவு கண்ணடிக்கும்!
தரைவந்து தமிழ்படித்து மீண்டும் போகத்
தங்க நிலா அங்கிருந்து குதிக்கப்பார்க்கும்!”

வெண்மதியின் கல்லறையே மேற்கு வானம்
வீழ்கதிரின் ஈனில்லம் கிழக்கு வானம்!”

என்பன போன்ற இயல்பான வண்ணனைகள் இந்தக் குறுங்காவியத்தை திருமண வீட்டுத் தோரணங்களாகக் காட்சிப்படுத்துகின்றன. தற்குறிப்பேற்ற அணியை விளக்கும் தமிழாசிரியப் பெருமக்கள மதுரை மதிலில் கிழிந்து போய் பறக்கும் கொடியை கொஞ்ச நாள் ஒதுக்கி வைத்துவிட்டு  இனிமேலாவாது “தரைவந்து தமிழ்படித்து மீண்டும் போகத் தங்க நிலா அங்கிருந்து குதிக்கப் பார்க்கும்” என்பது போன்ற வரிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மண்ணிற்கும் விண்ணிற்குமான இடைவெளியில் நிலவு நடத்துகின்ற பயணம் வானத்திலிருந்து மண்ணுக்கு வந்து தமிழ் படிப்பதற்காக நிலவு குதிப்பதைப்போல இருக்கிறது என்னும் அழகியல் எண்ணி மகிழத்தக்கது.

வடிவக் கோட்பாடுகள்

தமிழ்க்கவிதைகளின் பொருண்மையும் அதனை வெளிப்படுத்தும் வடிவமும் பிரிக்க இயலாதவை. வெண்பாவில் எழுதுவன ஆசிரியப்பாவில் எடுபடாது. கொச்சகக் கலியில் பாடவேண்டிய பாவையை வஞ்சிப்பாவில் பாட முடியாது. ‘அற்றைத் திங்கள்’ என்னும் கதைபொதி காப்பியத்தை ஐம்பத்தெட்டு எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களால் பாடியிருக்கிறார் கன்னல். மரபின் பரிமாணமும் பரிணாமமும் தெரியாத தமிழ்நாட்டுக் கவிஞர் (?) பலர் இதுமாதிரியான விருத்தங்களை எழுதி வைத்துக் கொண்டு மரபுக்கவிதைகள் என்றும் ‘எழுதுகிற தங்களை ‘மரபுப்பாமணி’ என்றும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுகிறார்கள். கவிதையில் பொருட்பரிமாணம் ஒருபக்கம் யாப்பியல் பரிமாணம் ஒரு பக்கம். இவ்விரண்டும் இணைந்ததுதான் மரபுக் கவிதைகள். இந்த அடிப்படை உண்மையை அறிய இயலாதவர்கள்  எழுதுவதைவிட எதனையும் எழுதாமல் இருப்பதே நல்லது.

இடைக்காலத்தில் வந்த எண்சீர் விருத்தம்

தொடக்கக் காலத்தில் இடம் பெற்றிருந்தவை பாவகைகளே. இனங்கள் அல்ல. தொல்காப்பியச் செய்யுளியலால் இதனை அறிந்து கொள்ள இயலும். தாழிசை, துறை, விருத்தம் என்னும் பிற்காலத்து இனங்கள் தமிழ் யாப்பின் நெகிழ்ச்சியை அடையாளப்படுத்துவன. முன்னவற்றில் வல்லமையுடையார் பின்னவற்றை எழுதுவதற்கும் முன்னவற்றில் ஏதும் அறியாமலேயே பின்னவற்றுள் ஒன்றினை எழுதுவதற்கும் தர நிர்ணயம் உண்டு. வெண்பா எழுதத் தெரியாதவன் வெளிவிருத்தம் எழுதுவதாகச் சொல்வது வேதனையல்லவா? அப்பர் பெருமான் எழுதிய திருத்தாண்டகமே எண்சீர் விருத்த யாப்பில் அமைந்துள்ளது. நந்திக்கலம்பகத்தில் பல பாடல்கள் எண்சீர் விருத்தங்களாலானவை  ‘விருத்தத்திற்கோர் கம்பன்’ என்பது அவன்காலத்தது அது என்பதைப் புலப்படுத்தும்.  அதற்கு முன்பு ஆசிரிய விருத்தங்கள் இருந்ததற்கான அகச்சான்றுகள் இல்லை. எனவே எண்சீர் விருத்தங்கள் அறுசீர் விருத்தங்கள் இடைக்காலத்தைவை. இவை எப்படி மரபுக்கவிதையாகும்? தொடங்கி நடப்பதே மரபு. வந்து புகுந்தது மரபாகுமா? இனி திணை மரபு, மொழி மரபு, சொல்மரபு, அகத்திணை மரபு, புறத்திணை மரபு, என்பவையெல்லாம் எதனைக் குறிக்கின்றன? நூன்மரபில் தொடங்கி மரபியலில் முடித்தாரே தொல்காப்பியர்?  எனவே எண்சீர் விருத்தம் உட்பட எந்த  வகை யாப்பினால் எழுதப்பட்டாலும் அதனாலேயே அது மரபுக் கவிதையாகிவிடாது. தமிழ்க்கவிதையின் பொருள் மரபு பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். அகத்திணை மரபு போற்றப்பட்டிருக்க வேண்டும்.

மூவசைச்சீரை நாலசைச் சீராக்கும் ஆளுமை

கன்னல் அறிவை இயற்பொருளாகவும் ஆற்றலைத் துணைப் பொருளாகவும் கொண்டவர். திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் இமயங்களிடம் தமிழ் கற்றவர். கவிதையுணர்வு தலைக்காவிரி போல அவர் நெஞ்சில் ஊறியது. அனைத்துவகை யாப்புக்களையும் யாப்பியல் மரபுகளையும் அறிந்தவர். தொல்காப்பியம் காட்டும் அத்தனை மரபுகளையும் கற்றவர். கற்று உணர்ந்தவர். அவர் எண்சீர் விருத்தத்தில் கண்ணகியின் துயரத்தைப் பாடியிருப்பது மரபுக்கவிதைகளில் என்றால் புரிந்து கொள்ள முடிகிறது.

எண்சீர் விருத்தத்தின் மந்தணம்

தேமாங்காய் தேமாங்காய் தேமா தேமா என்ற அரையடி யாப்பில் அமையப் பெற்றுதுதான் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். இந்த வாய்பாடு அமைவதன் அருமை, இயலாமையில் முடிந்தது. அதனால் பின்னாலே வந்தவர்கள் ‘காய் காய் மா மா’ என்று தங்களுக்குத் தாங்களே வசதியாக்கிக் கொண்டார்கள். இந்த அரையடியிலும் ஒரு நுட்பம் உண்டு. மூன்றாவது நான்காவது சீர்களில் வரவேண்டிய ‘மா’ ‘மா’ என்பனவற்றை இரண்டு தனித்தனி ஈரசைச் சீர்களாகக் கருதுவார் பலர். கவியாற்றல் படைத்தோர் மூவசைச் சீர்களையே இரண்டு ஈரசைச்சீர்களாக மாற்றிக் காட்டும் வல்லமை உடையவர்கள். கனனல் அந்தத் திண்மை உடையவர். அவர் எழுதுகிறார்.

““அப்போது தமிழாழி யாழை ஏந்தி
      அடுத்தடுத்தே இசையமைத்தாள்! தமிழைச் சேர்த்தாள்

இதுபோன்ற இடங்களில் மூன்று, நான்கு, ஏழு மற்றும் எட்டு ஆகிய சீர்கள தனித்தனி ஈரசைச்சீர்கள் என்பதை நோக்க வேண்டும்.  ஆனால் பார்ப்பதற்கு தனித்தனி ஈரசைச்சீர்களாகத் தோன்றி உண்மையில் மூவசைசீர்களே அவ்வாறு தனித்தனி ஈரசைச்சீர்களாக இருக்கும் வண்ணம் எழுதுவதுதான் இவ்வகை விருதத யாப்பின் தனிப்பெரும் சிறப்பாகும்.

கண்ணீரைப் பெண்ணாக்கி உலவவிட்டாய்!
கல்லறைக்கா அவள்போக நாள்குறித்தாய்?”

இதுபோன்ற அடிகளில் ‘உலவவிட்டாய்’ என்பதும் ‘நாள்குறித்தாய்’ என்பதும் உண்மையில் ‘கருவிளங்காய்’, ‘கூவிளங்காய்’ வாய்பாடுகளுக்குள் அடங்கும் மூவசைச்சீர்களாகும். அவற்றை விட்டிசைக்க வைத்து இரண்டு தனித்தனி ஈரசைச்சீர்களாக ஆக்கிக் கொள்வதும அத்தகைய சீர்களை இயல்பாகப் பயன்படுததுவதுமே யாப்பாளுமையாகும். இந்த ஆளுமை கைவரப் பெறாதவர்கள சில ஆயத்த சீர்களைச் (Ready made templates)  செருகிவிடுவார்கள். எண்சீர் விருத்தம் நீர்த்துப் போனதற்கான காரணங்களில் இது தலையாயது. எப்போதாவது எதையாவது எழுதுபவர்கள இப்படித்தான் ‘ஆயத்த சீர்களை’ அடுக்குவார்கள்.  எப்போதும் எழுதுகிற கன்னல் முதலியோருக்கு மூன்றை நாலாக்குவது கைவந்த கலை. இந்த நூல் எண்சீர் விருத்தங்களால் நானறிந்த உண்மை இது.

நிறைவுரை

கடற்கரையில் மாதவியைக் கைவிட்டு அதற்கு ஊழ்வினை காரணம் என்றார் அடிகள். வேங்கை மர நிழலில் ‘வெந்து தணிந்த’ கண்ணகியின் முடிவுக்கும் விதியை காரணமாக்கினார். காதல் வாழ்க்கையிலும் வாழ்க்கைப் போராட்டத்திலும் பெண்களை வெற்றிபெறச் செய்து வாழவைக்க வேண்டும் என்ற எண்ணமுடைய கன்னல் முதலியோர் கதைக்கருவின் உருவத்தை மாற்றிக் கொள்கிறார்கள். தமிழுணர்வு, இனவுணர்வு, இயற்கை வண்ணனை, எழுச்சியான சிந்தனை, பெண் விடுதலை, காதலுறவு, கலப்படமற்ற அன்பு என்னும் பல தளங்களில் அற்றைத் திங்களைப் பவனி வரச் செய்திருக்கிறார் கவிஞர் கன்னல். துறந்தவர்களையும் இழந்தவர்களையுமே பாடிய தமிழ்க்கவிதை உலகில் தமிழாழியையும் கண்ணகியையும் வாழச் செய்திருக்கிறார். இவையெல்லாம் ஏதும் தெரியாத எனக்கே இனிக்கிறது! எல்லாம் தெரிந்த உங்களுக்கு இனிக்காதா என்ன?

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.