தேடிச் சோறு நிதம் தின்று (சிறுகதை)

0

மருங்கர்

மார்கழி மாதம் முடிந்து, கல்யாண சீசன் தொடங்கிவிட்டாலும், சென்னை மாநகரம் அன்று கடும் குளிரில் சற்றே நடுங்கிக்கொண்டிருந்தது. ஒரு அலுவலகத்தின் முன் நன்கு பரந்து விரிந்த வராண்டா. அங்கே கிட்டத்தட்ட 20 பெண்கள் வட்டமாகக் குழுமி இருந்தனர். அவர்களுக்கு நடுவில், ஒரு கை வேக வேகமாய், சற்று நெளிவு சுழிவுகளோடு கோலம் போட்டுக் கொண்டு இருந்தது.  அந்தக் கை கோலம் போட்டவாறே,

“நீங்க எப்போதும்  போடுற கோலம் போல இல்லாம, இந்தக் கோலத்துக்கு  எட்டாவது புள்ளியிலேயே  இப்படி வளைச்சுத்  திருப்பணும்” என்று பல விதமான குறிப்புகளைச் சொல்லியவாறே, அந்தக் கை  கோலத்தைப்  போட்டு முடித்தது. கொரோனா என்ற அரக்கனை,  தடுப்பு ஊசி மூலம் வெல்வது போன்ற ஒரு காட்சி அமைப்பு. அருகில் ஒரு அரசியல் அமைப்பின் கட்சிக் கொடியுடன் அதன் தலைவரது படம்.

“மீனா, இந்தக் கொரோனா உருவத்தைச் சிவப்பு நிற பூவாலையும், தடுப்பூசியைப் பச்சை நிறப் பூவாலையும் அலங்கரியுங்கள். மணல் சிற்பம் போல 3டீ எபக்ட் தரணும்.” அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே கோலம் போட்ட அந்த உருவம் எழுந்து நின்றது. சுற்றி இருந்த அனைத்துப் பெண்களும் ஒரே சமயத்தில் கைத்தட்டி ஆரவாரித்தனர்.

“சூப்பர் சார்! அப்படியே கலர் பிரிண்ட் போட்ட மாதிரி இருக்கு!” என்றாள் மீனா.

ராதாகிருஷ்ணன் சிரித்துக்கொண்டே “நான் சொல்லிக் கொடுத்தாலும், அதை நீங்க கரெக்டா செய்யணும் இல்ல! இன்னும் மூணு வாரம்தான் இருக்கு. எம்.பி. வீட்டுக் கல்யாணம். வேலையில ரொம்ப கவனமா இருங்க” எனச் சொன்னார். அவர்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய வேலைகளைப் பிரித்துக் கொடுத்தார். இந்தச் சமயத்தில் அவரைப் பற்றித் தெரிந்துகொள்வோம்!

ராதாகிருஷ்ணன் இயற்பெயர் ரவி. பிறந்து ஐந்து வயது வரை நடக்கவில்லை. ஏன், எழுந்து கூட நின்றதில்லை. அவரது அம்மா கஸ்தூரி செல்லாத கோயிலோ, டாக்டரோ  இல்லை. ரங்கோலி கோலம் போடுவதில், அவளை அடித்துக்கொள்ள கிருஷ்ணகிரியில் ஆள் இல்லை என்பார்கள். குழந்தையைப் பக்கத்தில் வைத்துக்கொன்டே பலவிதமான கோலம் போடுவாள். அதைப் பார்த்துப் பார்த்து, கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கில் ஏறிய  பைல் போல, குழந்தையின் நினைவில் அந்த நுட்பங்கள் ஏறிக்கொண்டன. குழந்தையை கோலத்தின்  அருகில் ஒரு நாள் விட்டுவிட்டு, வீட்டில் உள்ளே சென்றுவிட்டுத் திரும்பும் பொழுது, அதிர்ச்சியில் மூழ்கினாள்.

குழந்தை இரண்டு கால்களை முட்டியிட்டபடி, முதுகைச் சற்று குனிந்தவாறு ஏதோ கோலமாவில் கிறுக்கிக்கொண்டு இருந்தது. அருகில் சென்று பார்த்தாள்.  அச்சு வைத்தாற்போல்  “ராதாகிருஷ்ணன்” படம். அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.  அவளைப்  பார்த்ததும், குழந்தை ஓடி வந்து கட்டிக்கொண்டது. இன்று அவரது பூ மற்றும் கோலமாவு கலந்து 3டீ  எபக்ட் ரங்கோலி இல்லாத கல்யாணம் இல்லை எனச்  சொல்லலாம்!

மூன்று வாரங்கள் வேகமாக ஓடின. கல்யாண வீடு. ராதாகிருஷ்ணன் ரங்கோலி  இறுதி கட்டப்  பணிகளைச் சரி  பார்த்துக்கொண்டிருந்தார்.

“ராதா சார், சூப்பர். தலைவர் அசரப் போறார் பாருங்க!” என்று  பின்னிருந்து ஒரு குரல். திரும்பி பார்த்தார். அது பி.ஏ. சண்முகத்தின் குரல்.

“சந்தோசம் சார்” என்றார் நிறைவாக ராதாகிருஷ்ணன்.

“உங்க பினிஷிங் டச் சூப்பர் சார்! கொரோனாவை  எதிர்க் கட்சி சிவப்பு நிறத்திலேயும், தடுப்பூசி நம்ம கட்சி பச்சை நிறத்துல கொடுத்ததுதான் ஹைலைட்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

“என்ன இந்த ஆளு லூசு மாதிரி பேசறான். பேப்பர் எதுவும் பார்க்கலையா. அதுதானே கொரோனா கலர்” என்று மனத்தில் நினைத்தாலும், சும்மா வந்த நன்மதிப்பை நிராகரிக்க மனசில்லாமல் ஆமோதித்தவாறு சிரித்தார்.

“சார், நான் உங்க பேமண்டை அக்கௌன்ட்டுக்கு அனுப்பிட்டேன். அப்புறம், உங்க காரு பத்தி சொன்னீங்களே, ரொம்ப பழைய காரு போல”

“ஆமா சார், விண்டேஜ் வோக்ஸ்வேகன் பீட்டில் கார்.   நாலு மாசமா ஒழுங்கா ஓட மாட்டேங்குது.  அப்பா ஞாபகமா வச்சு இருக்கேன். எம்.பி. சாரும்  விண்டேஜ் கார் வச்சு இருக்காருன்னு கேள்விப்பட்டேன்.”

சிறிய அட்டையை அவர் கையில் கொடுத்தவாறே “எம்.பி. சார் காரை இங்கதான் சர்வீஸுக்குக் கொடுக்கறாரு” என்று சொல்லும் பொழுதே அவருக்கு ஏதோ ஒரு போன் கால் வந்தது. மினிஸ்டர் கிட்ட இருந்து என்று சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்து சென்றார்.

மறு நாள். கிழக்கு தாம்பரம் “செங்கதிர் கார் வோர்க் ஷாப்” பன்னிரண்டு மணிக்கெல்லாம் காரோடு ஆஜராகிவிட்டார். எம்.பி.யின் பரிந்துரை வேறு . இராஜ மரியாதையுடன் உள்ளே உட்கார வைத்தனர்.

சில  மணி நேரங்கள்  கழிந்தன.  ஒரு சின்ன பையன் “சார், உங்களை ஓனர் கதிர் கூப்பிடறாங்க.”

பட்டறையை நோக்கி நடந்தார்.  அங்கிருந்து சிவப்பு நிற  பீட்டில் கார் கம்பீரமாகத் தெரிந்தது.  அதன் சின்னமான ஹூட், அதாவது வாகன முகடுதான்,  அதன் ஹைலைட்.  சிறு வயதில், அவரது  அப்பா அதில் சறுக்கு மரம் போல, அவரை வைத்து விளையாடியது மனத்தில் வந்து ஓடியது, இல்லை சறுக்கியது!  பழைய பீட்டில் காருக்கு  என்ஜின் பின்பக்கம். யாரோ அங்கே  இருப்பது  தெரிந்தது.  அருகில் சென்று “கதிர் சாரைப்  பார்க்கணும்” என்றார்

“நான்தான் செங்கதிர், இந்த வோர்க் ஷாப்  ஓனர்” என்றாள் அந்தப் பெண்!

எந்த ஒரு சலனமும் அவர் முகத்திலோ, குரலிலோ இல்லை. “ஓ, அப்படியா, நீங்க கூப்பிடீங்கன்னு பையன் சொன்னான் ” என்றார்.

“சார், நீங்க கடைசியா சர்வீஸ் கொடுத்த இடத்துல சொதப்பிட்டாங்க. அவங்க போட்ட இந்தப் பாகம், இதுக்குச் சரிப்படாது . என்ஜின் சீரா இயங்குவதற்கு அதன்  தேவைக்கேற்ப சரியான அளவு எரிபொருளையும் காற்றையும் கலந்து  கொடுக்கணும். இந்தப் பாகம்  செவென்ட்டிஸ்க்கு அப்புறம்  வந்த பீட்டல் காருக்குத்தான் சரியா இருக்கும். அதனாலதான் இந்தப் பிரச்சனை வந்து இருக்கு”

“ஓ, அப்படியா, உங்க கிட்ட ஒரிஜினல் பார்ட்ஸ் இருக்கா?” எனச் சற்றுக் கவலையுடன் கேட்டார்.

“உ.பி.யில் இருந்து ஆர்டர் செய்யணும். இரண்டு வாரத்துல வந்துடும்”

“ஓகே செங்கதிர், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் பட்டதாரியா நீங்க? கார் சம்பந்தமான பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் வரவேற்பறையில்  பார்த்தேன்.”

“இல்லை சார், அப்பாவோட வோர்க் ஷாப்.  அப்பா இப்ப இல்ல. நான்தான் பாத்துக்கிறேன். சின்ன வயசுல இருந்து இங்கேதான் இருக்கேன். அவரோடேயே இருந்து எல்லாம் கத்துக்கிட்டேன். அப்பாவுக்கு விண்டேஜ் கார் மேல ஒரு பைத்தியம்” என்று சொல்லிவிட்டு பலவிதமான விண்டேஜ் கார்களைப் பற்றியும், அதன் என்ஜின் அமைப்பு, வேலை செய்யும் விதம் என அரைமணி நேரம் பேசினாள்.

சிறிது மூச்சு விட்ட பிறகு “சாரி, சார், ரொம்ப போர் அடிச்சுட்டேன் போல” என்றாள்

“நாட் அட் ஆல்! உங்க அப்பா பைத்தியம்னா, நான் ஒரு வெறியன்” என்றார் சிரித்துக்கொண்டே.

“ஓகே சார், ஸ்பேர்   பார்ட்ஸ் வந்த உடனே கால் பண்றேன். காரை ஷெட்டுல லாக் பண்ணி வைக்கறோம்” என்றாள்.  சிறிது நேரத்தில் வெளியே வந்தார்.

நல்ல பசி, அருகிலேயே  சிற்றுண்டி உணவகம் .

“சார், உள்ளே இடம் இல்லை, ஏதாவது மரத்துக்கு கீழே உள்ள ஒரு டேபிள்ல  உட்காருங்க” என்றான் சர்வர்.

நன்கு உயர்ந்த மரங்கள். அதன்  கீழே சில மேஜைகளும்,  நாற்காலிகளும் இருந்தன. மசால் தோசை, போண்டோ மற்றும்  டீயும் ஆர்டர் செய்தார்.

“ஹலோ சார், உங்கள் பக்கத்தில் உட்கார்ந்தா ஓகேவா” என்று பின்னிருந்து  சற்று பரிச்சயமான குரல் செங்கதிர்! “வாம்மா உட்காரு” என்றார்.

“தனி டேபிள் இல்ல , அதான்  உங்ககிட்ட கேட்கலாமுன்னு நினைச்சேன்” என்றாள்.

“அதனால என்னம்மா, ப்ளீஸ்” என்றார்

நன்றி என்று சொல்லிவிட்டு அவர் எதிரில் உள்ள நாற்காலியில் அமர்ந்தாள் . செங்கதிருக்கு 25 வயது இருக்கும். மாநிறம், சற்று ஒடிசலான தேகம். சுருள் முடி. பார்த்தால் திரும்பப் பார்க்கத் தோன்றும்  முகம். க்ரீஸ் பட்டு பட்டு, அவளது மினுமினுப்பு சற்று குறைந்துவிட்டது.

“நீங்க தப்பா நினைக்கலேன்னா , நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?”  எனக் கேட்டாள்.

“ப்ளீஸ்”.

“சார், நீங்க என்னைய முதல்ல பார்த்தப்ப, நீங்க ஒரு ஆண் கிட்ட பேசப் போகிறோம் என்று நினைச்சீங்க. ஆனா நான் யாரு என்று தெரிஞ்சதுக்கு அப்புறம், நீங்க ஆச்சரியப்படவே இல்லை. பொதுவா நான் தான் மெயின் மெக்கானிக் என்று தெரிஞ்சாலே வண்டியக் கூட கொடுக்க மாட்டாங்க. நீங்க ஒரு ரீஆக்ஷனும்   காட்டவில்லை” என்று சற்று ஆச்சரியமாகக் கேட்டாள் .

சிரித்துக்கொண்டே “நான் நீ ஒரு பெரிய மெக்கானிக் என்று நினைச்சேன், ஆனா நீ மனோதத்துவரா இருப்ப போல! நீ அன்பே வா படம் பார்த்து இருப்பே என்று  நினைக்கிறேன். அதுல டீ . ராமசந்திரன் சார், தான் ஒரு புண்ணாக்கு வியாபாரின்னு சொல்லுவாரு”

உடனே அவள் இடைமறித்து “சார், அதுக்கு புரட்சித் தலைவர் நீங்க கொடுத்த ரீஆக்ஷன் தான் கொடுப்பாரு. வியாபாரியோட திறமையைத்தான்  பார்க்கணும். அவன் செய்யற வேலையை  இல்லை என்பாரு” என்றாள் சற்று பெருமிதத்துடன்!

“ஸ்மார்ட் கேர்ள்” என்று அவர்  சொல்லும்பொழுதே, அவள் ஆர்டர் செய்த கீரை வடை வந்தது.

“சார், இங்க கீரை வடை பேமஸ்!”

“ஓ, அந்த சர்வர் போண்டோ என்று சொன்னான். ஒரு வேலை மீந்து போய் இருக்கும்.” என்றார் நக்கலாக.

“இன்னொரு கேள்வி. கடைப் பையனுக்கு உங்களைத்  தெரியும் போல, ரங்கோலி ராதாகிருஷ்ணன்தான் உங்க  பெயராமே?” என்று சற்று ஆச்சரியத்துடன்  கேட்டாள் .

“என்ன நீ, என்னைய பத்தி தெரிஞ்சு வச்சுக்கிட்டு, குறுக்கு விசாரணை பண்ண வந்து இருக்க போல?”

“என்ன சார், இப்படி சொல்றீங்க. எல்லாம் தற்செயல்” என்று சற்று கலக்கத்துடன் சொன்னாள் .

‘சும்மா விளையாட்டாகச் சொன்னேன், கேளு”

“உங்களைப்  பார்த்தப்ப எங்க அப்பா ஞாபகம் வந்தது. அதான் ஒரு விஷயத்தை  உங்ககிட்ட கன்சல்ட் பண்ணலாமுன்னு நினைச்சேன்”

அதைக் கேட்டதும் அவர் சற்று உணர்ச்சிவசப்பட்டார்.

“சொல்லும்மா” என்ற பொழுது , அவர் ஆர்டர் செய்த உணவுப் பொருட்கள் வந்தன.

“நம்ம இரண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. சாதாரணமா ஒரு ஆண் செய்யற வேலையை நானும், ஒரு பெண் செய்யற வேலையை நீங்களும் செய்யறீங்க” என்று சொல்லிவிட்டு ஏதோ சொல்ல நினைத்துச் சற்று தயங்கினாள் .

“தயங்காம சொல்லும்மா”

“நான் ஒரு பையனை லவ் பண்ணறேன் சார், அந்தப் பையனும் தான், நல்ல பையன், ஆனா அவனுக்கு நான் செய்யற வேலை  பிடிக்கலை. நான் என் வேலையை ரொம்ப நேசிக்கிறேன் சார்”

“உன்னைப் பார்த்தவுடன் எனக்கு தெரிஞ்சது செங்கதிர். உனக்கு எந்த மாதிரியான உதவி வேண்டும்?” என்று கனிவுடன் கேட்டார்.

“உங்களுக்கு இந்த மாதிரி பிரச்னை உங்க மனைவி கிட்ட இருந்து வந்து இருக்கா, நீங்கள் அதை எப்படி சமாளச்சீங்க”

“ஓ அதுவா” என்று சிரித்துக்கொண்டே தொடர்ந்தார். “செங்கதிர், என் மனைவி மாலதி முதல் முதல்ல  என் அலுவலகத்திற்கு வந்தபோது, ரொம்ப டென்ஷன் ஆயிட்டா. கிட்டத்தட்ட 40 பெண்கள். அவளுக்கு நம்பிக்கை வரணும் என்று அவளைப் பல நாள் ஆபீஸ்ல உக்கார வச்சேன். அவ வேலைக்கு வெச்ச ஆண்கள் மூலமாக, வேலை பார்த்த  பெண்களுக்குப் பல பிரச்சனைகள். கொஞ்ச நாட்களில் என்னோட தொழில் ஆர்வம், பெண்கள் கிட்ட நடந்துக்கிட்ட முறை, எவ்வளவு குடும்பங்கள் என்னை நம்பி இருக்குன்னு எல்லாத்தையும்  புரிஞ்சுக்கிட்டா. இப்ப எல்லாம் அவள் என் அலுவலகத்திற்கு வருவதில்லை. அந்தப் பையனுக்கு  நீ செய்யற வேலை பிடிக்கலையா இல்ல, ஆண்களோட வேலை பார்க்கிறது பிடிக்கலையா?” எனச் சரியான கேள்வியையும், தன் தட்டில் இருந்த ஒரு போண்டோவையும்  அவள் முன் வைத்தார்!

“சரியா சொல்ல மாட்டேங்கிறான் சார்”

“அப்ப அவனை உன் பட்டறையில்ல ஒரு நாள் வந்து இருக்கச் சொல்லு . உன்கிட்ட வேலைப் பார்க்கிறவங்க, உன்னை எப்படி மதிக்கிறாங்கன்னு என்பதைப் பார்த்தாலே திருந்திடுவான். இல்லையின்னா, அவனைக்  கூட்டிக்கிட்டு என் வீட்டுக்கு ஒரு நாள் வா, நான் அவன்கிட்ட பேசறேன்” என்றார் பெருந்தன்மையுடன்.

“ரொம்ப தேங்க்ஸ் சார்! அப்படியே செய்யறேன்” என்றாள் சற்று தெளிவுடன்.

“அது இருக்கட்டும்., நான் உன்கிட்ட உன் பட்டறையிலேயே ஒரு விஷயம் பத்தி பேச நினைச்சேன். டைம் கிடைக்கலை. இப்ப சொல்லலாமுன்னு தோணுது”

“என்ன விஷயம் சார்?” என்று ஆச்சரியத்துடன்  கேட்டாள்.

“நீ ஒரு  ஜி.டி. நாயுடு மாதிரி!  படிப்பறிவு இல்லை, ஆனா உனக்கு தொழில்நுட்ப அறிவு ஜாஸ்தி. ஒரு பாடப் புத்தகத்துல இருக்கற விஷயத்தை, நீ  விளக்கின விதம்   எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.  எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கறே!”

“ஒரு ஆர்வம் தான் சார், அப்பா கிட்ட இருந்து கத்துக்கிட்டேன்.”

“மின்சார கார்தான் விரைவில் இந்த உலகை ஆளப் போகிறது என்று சொன்னப்ப எல்லாரும் கிண்டல் பண்ணாங்க.  ஆனா இன்னிக்கு உலகத்துல ‘எலான் மஸ்க்’ டெஸ்லா முதலாளிதான் பெரிய  பணக்காரராக இருக்காரு. “

“சார் , இதை ..” என்று  ஏதோ சொல்ல ஆரம்பித்த பொழுது, சற்று கையை உயர்த்தி, பொறுமையாக இருக்கும்படி சைகை செய்தார் .

தேடிச் சோறுநிதந் தின்று என்ற  மகா கவி பாரதியார் பாடலைக் கேட்டிருக்கிறீயா?”

“சார், அந்தப் பாடல்  பெரும்பாலான நேரங்களில்  எனக்கு ஒரு ஊக்கம் தரக் கூடிய பாடல்” என்று சொன்னாலும் அவளுக்கு உள் மனத்தில் இன்னும் குழப்பமாகவே இருந்தாள் .

“என் வேலை ரொம்ப சுலபமா போச்சு.  அவர் தேடித் தேடி உணவு உண்டு, பல வெட்டிக் கதை பேசி, மனசு நொந்து பலர் கஷ்டம் படும்படி நடந்து, நரைச்சு கிழவன் ஆகி யாருக்கும் பயன் இல்லாமல் தனக்கும் பயன் இல்லாமல் வாழ்கிற சராசரி மனிதன் மாதிரி தான் வீழ்வேன் என நினைத்தாயோன்னு கேட்பாரு. “

“ஆனா அதுக்கும், எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு, புரியலை!”

“இரு, அவசரப்படாதே, சொல்லறேன்.  உன் வாழ்க்கை முடியறப்போ, நீ சில  ஆயிரம் கார் ரிப்பேர் பண்ணி இருப்ப, நல்ல சம்பாதிச்சும்  இருப்ப. நீ போன பிறகு, ஆனா நீ வந்த தடம் யாருக்கும் தெரியாது. வித்தியாசமா யோசி. எரிபொருள் உட்செலுத்தும் விதத்தில் நீ  ஒரு சின்ன மாற்றம் கண்டு பிடிச்சாலே, ஒரு வருசத்துக்கு இந்தியா பல ஆயிரம் கோடி  சேமிக்கலாம். இந்தியாவுல நிறையா பழைய கார் ஓடுது. நான் விண்டாஜ் காரை சொல்லலை, 90 மற்றும் இரண்டாயிரத்தில் வந்த கார்களைப்  பத்திதான் சொல்லறேன். உனது புத்தக அறிவையும், நடைமுறை அறிவையும்  வச்சு என்ன செய்யலாமுன்னு யோசி”

அவள் முகத்தில் திடீரென்று 1000 வாட்ஸ் பல்ப் போட்டது போல பிரகாசம்.

“சார், எனக்கு  எப்பவும் வித்தியாசமா ஏதாவது செய்யனும்னு என்று ஆசை சார்.  சரியான வழிநடத்தல் இல்லை சார்.  நீங்க சொன்னதுக்கு அப்புறம் ஒரு கிளாரிட்டி கிடைத்தது சார் ” என்றாள் சந்தோசத்துடன்.

“நான் உனக்கு ஒரு கோடுதான் போட்டுக் கொடுத்தேன். ரோடு போடறது உன் கையில்  தான் இருக்கு.  எந்த மாதிரியான விசயத்துல ஜெயிக்கணுமுன்னு முதல்ல கண்டுபிடி. வழி தானே பிறக்கும் . ஆல் தி பெஸ்ட்!”

சிறிது நேரத்தில் விடைபெற்றாள் . சிறிது தூரம் நடந்தவுடன்  திரும்பி பார்த்தாள். அவளுக்கு அங்கு இருந்த மரம் ஒரு போதிமரமாய் தான் தெரிந்தது. யாருக்குத் தெரியும்.  ஒரு லேடி ஜி.டி. நாயுடுவோ , எலான் மஸ்க்காகவோ அவள்  இன்னும் சில வருடங்களில் வரலாம்! அவளுக்குள் இருந்த விளக்கின் திரியைச் சற்று தூண்டிவிட்டார்  அவ்வளவுதான். ஆனால் இது போன்ற வழி நடத்தல் இல்லாமல், தடம் மாறிய ரயில் வண்டிகள் தான் இங்கு அதிகம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *