மாற்றுக் கோணங்கள் (சிறுகதை)
செ. கோட்டாளம்
வீட்டு வேலைகளெல்லாம் முடிந்துவிட்டன. இனி செய்வதற்கு ஒன்றுமில்லை.
பிள்ளைகள் வீட்டிலிருந்தவரை ஓய்வில்லாமல் ஏதாவது வேலை இருந்துகொண்டேயிருந்தது. அவர்கள் வளர்ந்து வெளியேறியபின் வீட்டிலும் எங்கள் வாழ்விலும் நிறைய வெற்றிடங்கள் தோன்றியதுபோலிருந்தது. அந்த வெற்றிடங்களை கணவரும் நானும் ஒருவருக்கொருவர் நிரப்ப முயன்றோம்.
அவரருகில் வந்து அமர்ந்தேன். அவரோ படிப்பதில் கவனமாயிருந்தார். சற்றுநேரம் தொந்தரவுசெய்யாமலிருந்தேன்.
சட்டென்று திரும்பி “என்ன?” என்று கேட்டார். நான் என்னையுமறியாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்போலும். அதை உணர்ந்து சற்றே வெட்கி, “ஒன்றுமில்லை,” என்று சொல்லி வேறுபக்கம் திரும்பிக்கொண்டேன்.
இந்த வயதிலும் அவரது கம்பீரத்தோற்றம் என்னை கவரவே செய்தது. திருமணமான புதிதில் அவர்கவனத்தை ஈர்க்க நான் செய்த குறும்புகளை நினைத்துக்கொண்டேன்.
அவர் படித்துக்கொண்டிருந்த நூலை மேசையில் வைத்துவிட்டு, மீண்டும் என்பக்கம் திரும்பி, “என்ன சிரிப்பு?” என்றார். ஐயோ, மறுபடியும் மாட்டிக்கொண்டேன்.
“ஒன்றுமில்லை. நம் தொடக்கநாள்களை நினைத்துக்கொண்டேன்.”
அவர் புன்னகைத்து, “அப்படியா? என்ன நினைத்துக்கொண்டாய்?” என்றார்.
“இப்படித்தான் நீங்கள் எதையாவது படித்துக்கொண்டிருப்பீர்கள். நான் வந்து உங்களை நோண்டுவேன்.”
“அப்போதெல்லாம் நான் படிக்கவேண்டியது நிறைய இருந்தது. என் தொழில் அப்படி!”
“இன்னும் படித்துக்கொண்டுதானிருக்கிறீர்கள்!”
“இப்போது பொழுதுபோக்குக்காக நான் விரும்புவதை படிக்கிறேன். படிக்கவேண்டிய கட்டாயமில்லை.”
“ஆம். இப்போதாவது நான் ஒருத்தி இருக்கிறேனே என்று திரும்பிப்பார்த்து பேசுகிறீர்கள்!”
“முன்பு மட்டுமென்ன? நீ அருகில் வந்தால் புத்தகங்களை தூக்கியெறிந்துவிடுவேனே!”
இருவரும் ஒரேநேரத்தில் தொடங்கி பெரிதாக சிரித்தோம். அந்த சிரிப்பில் ஏராளமான மறைபொருள்கள் பொதிந்து கிடந்தன.
“நாம் தனியாயிருந்து எவ்வளவு கூத்தடித்திருக்கிறோம்!” என்றேன்.
“ஆம். என் வேலை வெளியூரிலிருந்ததால் தனிமை கிடைத்தது. இது எல்லாருக்கும் கிடைப்பதில்லை.”
“அதே தனிமை இப்போது மீண்டும் கிடைத்திருக்கிறது.”
“அப்படியானால் இனியும் என்னை படிக்க விடமாட்டாய்?”
“மாட்டேன்! என்னுடன் பேசுங்கள்!”
அவர் சிரித்து, “என் தலைவிதி! எங்கு போனாலும் எனக்கு இதே தொல்லைதான்!”
“என்ன, வேறு யாருமா?”
“சீ, என்ன நீ? நான் கல்லூரியில் படித்தபோது என் நண்பன் வரதன் செய்த குறும்புகளை சொன்னேன்.”
“ஆமாமாம். அடிக்கடி சொல்லியிருக்கிறீர்கள். அவர்மீது எனக்கு பொறாமையாயிருக்கிறது.”
அவர் வெடிச்சிரிப்பு சிரித்து, “போயும் போயும் அவன்மீதா உனக்கு பொறாமை? நீ பொறாமைப்பட எத்தனையோபேர் இருக்கிறார்கள்,” என்று என்னை சீண்டினார்.
“யார், மாலாவா?” என்று நானும் அவரை சீண்டினேன்.
“ஆம். அவளும் ஒருத்தி.”
“மொத்தம் எத்தனைபேர்?”
“எத்தனையோபேர்! அது சரி, மாலாவைப்பற்றி உனக்கு எப்படித்தெரியும்?”
“நீங்கள்தானே சொல்லியிருக்கிறீர்கள்! அவர்களை நீங்கள் காதலித்திருக்கிறீர்கள். அவர்கள் உங்களை திரும்பிக்கூட பார்க்கவில்லை.”
“அதெல்லாம் வயதுக்கோளாறு; ஒரு இனம்புரியாத கவர்ச்சி! காதலென்றால் என்னவென்று நீ வந்தபிறகுதானே தெரிந்தது!”
“உக்கும்! ஒன்றும் ஐசுவைக்கவேண்டாம்!”
இதுபோன்ற பல பொருளற்ற உரையாடல்களுக்காக எங்களுக்கு நிறைய நேரமிருந்தது. மற்றொருமுறை எங்கள் நண்பர் மலரைப்பற்றிய உரையாடல் எழுந்தது. பாவம், அவர் அண்மையில் கணவரையிழந்த துயரத்திலிருந்து மீளாமலிருந்தார்.
“அவர்களுக்கு கணவரே உலகம். வேறு சிந்தனை ஏதும் இல்லாமல் இருந்து பழகிவிட்டார்கள்,” என்றார் என் கணவர்.
“ஆம். அவர் இறந்ததும் எப்படி துடித்துவிட்டார்கள்!”
சற்றே சிந்தனையிலிருந்தபின் ஒரு பெருமூச்சை வெளியிட்டார். பிறகு சொன்னார், “இன்னும் நம் பெண்கள் தமக்கென்று ஒரு வாழ்வையும் தமக்கென்று ஒரு உலகையும் அமைத்துக்கொள்வதில்லை. கணவரும் குழந்தைகளுமே அவர்களுடைய உலகமாகிவிடுகிறது,” என்றார். அவர் படித்த நூல்களிலிருந்து எதையோ எடுத்துவிட்டார்போலும்.
“இப்போது கொஞ்சங்கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகிறது. ஆனால் மலரும் அவர்கணவரும் பழங்காலத்தினர்.”
“நாம் அவர்களைவிட மிகவும் இளையவர்கள் அல்லோம். நாமும் அப்படித்தான் இருக்கிறோம்.”
“ஆம். நம் பிள்ளைகளாவது அப்படியிருக்கமாட்டார்கள் என்று நம்புவோம்,” என்றேன்.
“இப்போது மலர் எப்படியிருக்கிறார்கள்? நீ பேசினாயா?”
“ஆம். அன்று பேசினேன். என்னுடன் பேசுவதில் சற்று ஆறுதலடைகிறார்கள். நாமும் அடிக்கடி போய் பார்க்கவேண்டும்,” என்றேன்.
நான் அவருக்கு நெருங்கிய தோழி. என்னுடன் எதையும் மனந்திறந்து பேசுவார். எனக்கு தன் துயரங்களை சொல்வதில் அவருக்கு ஒரு நிம்மதி!
மற்றொருமுறை மாலாவைப்பற்றியும் வரதனைப்பற்றியும் பேச்சு எழுந்தது.
மாலாவுக்கும் இரண்டு பிள்ளைகளாம். அவர்களும் வளர்ந்திருப்பார்கள். இவர் அவருடன் நேரடித்தொடர்பு வைத்துக்கொள்வதில்லை; எனினும் நண்பர்கள்மூலம் அவரைப்பற்றி தவறாமல் தெரிந்துகொள்வார். ஒருமுறை வேலன் என்ற ஒரு நண்பர் வீட்டுக்கு வந்திருந்தபோது இவர் அவரிடம் மாலாவைப்பற்றி அக்கறையுடன் விசாரித்ததில் எனக்கு இவர்மீது கோபமே வந்துவிட்டது.
அன்று எங்கள் வீட்டுக்கு வந்தபோதே வேலனுக்கு புற்றுநோய் இருந்திருக்கிறது; அது எங்களுக்கு தெரியாது. இரண்டு ஆண்டுகள் கழித்து தம் நாற்பத்தாறாம் வயதில் இறந்துவிட்டார். இவரும் இவர்நண்பர்களும் மிகவும் துயரமடைந்தனர். வேலன் திருமணமே செய்துகொள்ளாமலிந்ததால் அந்த துயரத்தில் பங்கேற்க மனைவிமக்கள் இல்லை.
“உங்கள் நண்பர் ஏன் திருமணமே செய்துகொள்ளவில்லை?” என்றேன்.
“அதுதான் எனக்கும் புரியாத புதிராயிருக்கிறது. நானும் பலமுறை கேட்டுவிட்டேன். சிரித்து மழுப்பிவிட்டான். வரதனும் அப்படித்தான்.”
இதைச்சொன்னதும் அவர்முகத்தில் ஒரு திடீர்மாற்றம் ஏற்பட்டது. பல உணர்ச்சிகள் அவரை தாக்கியதை கண்டேன்.
“எவ்வளவு முட்டாளாயிருந்தேன்!” என்றார். அவர்கண்கள் நீர்கோத்ததைக்கண்டு நான் பதறிவிட்டேன்.
“என்னங்க? என்ன ஆனது? திடீரென்று இப்படி ஆகிவிட்டீர்கள்!”
“வேலனும் வரதனும் திருமணஞ்செய்துகொள்ளாமலிருந்ததன் காரணம் எனக்கு விளங்குகிறது,” என்று சொல்லி சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார்.
“என்ன?” என்று கேட்டுவிட்டு அவர் பதில்சொல்ல காத்திருந்தேன்.
மென்குரலில் நிதானமாக சொன்னார், “அவர்கள் காதலர்கள்!”
“நானும் அப்படித்தான் நினைத்தேன். ஏதோ காதல் தோல்வியாயிருக்கலாம். அல்லது காதலிகளை வைத்திருந்திருக்கலாம்,” என்றேன்.
“நான் சொல்வது உனக்கு புரியவில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் காதலர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.”
நான் இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தேன். எனக்கு விளங்கவில்லை. விளங்கியது; ஆனால் தடுமாறினேன். என் மூளை இரண்டுபகுதிகளாக விடுபட்டு தவறான திசையமைவில் மீண்டும் சேர்ந்துகொண்டதுபோலிருந்தது. கண்ணாடியில் பார்க்கும்போது நம் முகம் தெரியாமல் முதுகு தெரிந்தால் எப்படியிருக்கும்? அப்படி உணர்ந்தேன்.
“அப்படியா நினைக்கிறீர்கள்?” என்றேன். வேறேதும் சொல்லத்தோன்றவில்லை. ஆனால் ஐயமில்லை. அவர்களிருவருடைய வாழ்க்கைகளையும் மாற்றுக்கோணத்தில் பார்த்தபோது எல்லாமே தெளிவானது. கோளாறு நம் கண்ணோட்டத்திலே இருந்திருக்கிறது. குருடிக்கு திடீரென்று கண்திறந்ததுபோலிருந்தது.
இருவருமே படித்த அறிவாளிகள். சமுதாயம் மதிக்கும் பெரிய வேலைகளிலிருப்பவர்கள். வேறு காலக்கட்டமோ இடமோவாயிருந்தால் அவர்கள் தங்கள் உறவை வெளிப்படையாக அறிவித்திருக்கலாம். ஒரே வீட்டில் வாழ்ந்திருக்கலாம். ஆனால் இப்போதைய உலகில் அவர்களுக்கு இடமில்லாததால் மறைவில் ஒருவருக்கொருவர் அன்புசெலுத்தி வாழ்ந்திருக்கின்றனர்,
பலநாள்களுக்குப்பிறகும் என் கணவர் துயரத்துடனே காணப்பட்டார். நான் அவரது கவனத்தை திருப்பி கலகலப்பாக்க முயன்றேன். அவர்மனத்தின் உள்ளெண்ணங்களை பகிருமாறு ஊக்கினேன்.
“மலர் கணவரையிழந்த துயரத்தில் துடித்ததுபோலவே வரதனும் வேலனையிழந்து துடித்திருப்பான். மலருக்கு நீ இருப்பதுபோல் வரதனுக்கு நான் நெருங்கிய நண்பன். வேலன் இறந்ததும் வரதன் முதல்வேலையாக என்னிடமே பேசினான். ஆனால் நீ மலருக்கு அளித்த ஆறுதலை நான் வரதனுக்கு அளிக்கவில்லை. அவனது கவலையை நான் கற்பனையிலும் காணவில்லை. அவன் காதலனை இழந்தது மட்டுமல்லாமல் தன் துயரத்தை வெளியிடவியலாத நிலையிலும் தனியே தவித்திருப்பான்.”
அவரை என்மீது சாய்த்துவைத்து ஆற்றுப்படுத்த முயன்றேன். சொல்வதற்கு ஏதும் கிடைக்கவில்லை. நாம் வாய்கிழியப்பேசும் இலக்கியமும் பண்பாடும் வாழ்க்கைமுறையும் விழுமியங்களும் இந்த நிலையை கையாள்வதற்கு பயிற்சியளித்திருக்கவில்லை. என்மீது சரிந்து குழந்தைபோல் அழுதுகொண்டிருந்தவரை உச்சந்தலையில் முத்தமிட்டு முதுகில் தடவினேன்.
வரதனுக்கு இவர்மீதே முதலில் காதல் என்பதை இவர் உணரவில்லை; நான் சுட்டிக்காட்டப்போவதில்லை.
About the Author
J. Kottalam is retired after serving in the scientific and technological research and development fields. He was born in 1954 in Kotkai of southern Tamilnadu in India. Having received MSc from Indian Institute of Technology at Madras and PhD from Michigan State University in USA, he worked at institutions such as University of California at San Diego, Scripps Research Institute, Harvard University and Cray Research with scholars including Nobel laureate Martin Karplus. He contributed to developing numerical algorithms for simulating the structures and dynamics of macromolecules such as proteins and nucleic acids in supercomputers. His further contributions are in the fields of Computational Fluid Dynamics and Statistical Physics. Now he is engaged in developing aids necessary for bringing the scientific wealth available in English to Tamil in a planned systematic manner.