Author: மேகலா இராமமூர்த்தி

  • காதலுக்கு மரியாதை!

    -மேகலா இராமமூர்த்தி

    ”காதல் காதல் காதல்
    காதல்போயின் காதல்போயின்
    சாதல் சாதல் சாதல்” 
    என உணர்ச்சிததும்பக் காதலின் மகத்துவத்தைச் சகத்துக்கு உணர்த்தினான் மகாகவி பாரதி.

    காதல் என்பது பிறருக்கு விவரிக்க இயலாத ஓர் உள்ளத்து உணர்வு; காட்டலாகாப் பொருள். ஊழ் கூட்டுவிப்பதனால், ’வடகடலிட்ட ஒரு நுகத்தின் ஒருதுளையில் தென்கடலிட்ட ஒருகழி கோத்தாற்போல்’ (இறையனார் அகப்பொருளுரை – சூத்திரம் 2) எங்கோபிறந்த ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் காதல் கொள்கின்றனர். இந்தக் காதலை, ‘நோய்’ என்று புகல்வதிலும், ‘அணங்கு’ என்று மருள்வதிலும் பொருளில்லை. குளகை (அதிமதுரத்தழை) மென்ற யானை மதங்கொள்வதைப்போல், தக்கவரைக் கண்டால் வெளிப்படும் தன்மையுடையது இந்தக் காதல்!” என்கிறார் சங்கப்புலவர் மிளைப்பெருங்கந்தனார்.

    காமங் காம மென்ப காமம்
    அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
    கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
    குளகுமென்று ஆள்மதம் போலப்
    பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே (குறுந்: 136)

    (காதலும், காமமும் ஒரேபொருளிலும் சங்க இலக்கியத்தில் பயின்றுவருதலுண்டு.)

    தெய்வத்தின் ஆணையால் நிகழ்வது, ஊழின்வலியால் விளைவது என்று காதல்குறித்துச் சான்றோர் சாற்றியிருப்பினும், இவையாவும் உண்மைக்காதலுக்கே பொருந்துவதாகும். அப்படியானால் ”போலிக்காதல் என்ற ஒன்று உண்டா?” என்ற வினா நமக்கு எழலாம். இன்றைய இளைய சமுதாயத்தினர் சிலரின் நடத்தையை நோக்குங்கால், ”போலிக்காதல் இல்லை என்று சொல்லுவதற்கில்லை” என்றே பதிலிறுக்கவேண்டியிருக்கின்றது. ஆம்! இன்றைய இளைஞர் பலருக்குக் காதல் என்பது பொழுதுபோக்காகவும், காமஇச்சையைத் தணித்துக்கொள்வதற்கான குறுக்குவழியாகவும் மாறிவருவதாய்த் தோன்றுகின்றது. மக்கள் நடமாட்டம் மிகுந்திருக்கும் கடற்கரைகள், பூங்காக்கள் போன்ற பொதுவிடங்களிலும், பேருந்துகள், புகைவண்டிகள் உள்ளிட்ட ஊர்திகளிலும் காதலர்கள் என்று சொல்லிக்கொள்(ல்)வோர் அரங்கேற்றும் அருவருக்கத்தக்க காட்சிகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

    அஞ்சுவது அஞ்சாமையும், நாணுவது நாணாமையும் பேதைமையே ஆகும். மற்றவருக்குக் காட்சிப்பொருளாய்க் காதல்மாறுவது வேதனைக்குரியது. நம் தமிழ்ப்பண்பாட்டிற்கு அது முற்றிலும் எதிரானதுங்கூட. பெற்றோருக்குத் தெரியாமல் தலைவனும் தலைவியும் வளர்த்த அருமைக் காதலை, ’களவு’ எனத் திணைவகுத்து அனுமதித்த நம் புலவோர், அவர்கள் நாணமின்றிப் பொதுவிடத்தில் பலர்காணக் காதல்வளர்ப்பதை அனுமதித்தாரில்லை. ’பலர் காண’ என்பதில் உயர்திணையை மட்டுமல்லாது அஃறிணையையும் அடக்கியிருக்கும் உயர்ந்த மரபுக்கு சொந்தக்காரர்கள் நாம் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

    என்ன….? அஃறிணை உயிர்கள் முன்பும் காதல் வளர்ப்பது தவறா? என்றுதானே வியக்கிறீர்கள்? நற்றிணைப் பாடலொன்று பகரும் கருத்து அதைத்தான் சொல்கின்றது!

    விளையாடு ஆயமொடு  வெண் மணல் அழுத்தி
    மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
    நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
    நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
    அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
    அம்ம நாணுதும்  நும்மொடு நகையே……….. (நற்றிணை – 172)

    நெய்தல் நிலத்தலைவன் ஒருவனும், தலைவி ஒருத்தியும் ஒருவரை ஒருவரை சந்தித்தனர் கடற்கரையில். ’கடலோரக் கவிதை’யாய் காதல் மலர்ந்தது அவர்களிடையே. பிறரறியாது தினந்தோறும் சந்தித்துவந்தனர் இருவரும். அவர்கள் காதலை அறிந்தாள் தலைவியின் ஆருயிர்த்தோழி. ஒருநாள் பகற்பொழுதில் தலைவியைச் சந்திக்கவந்தான் தலைவன். அவ்வேளையில் தலைவியுடன் தோழியும் இருந்தாள். அவளைக்கண்டு நட்போடு புன்னகைத்த தலைவன், தலைவியோடு அருகிலிருந்த புன்னைமரத்தடியில் அமரப்போனான்.

    அவ்வளவுதான்! தீயை மிதித்ததுபோல் பதறிய தலைவி, அவ்விடத்தைவிட்டு அகன்று நின்றாள். அவளின் செயல்கண்டு திகைத்த தலைவன், ”ஏன் இந்த மரத்தைக் கண்டதும் பதறி விலகுகின்றாய்? உன் அச்சத்துக்குக் காரணமென்ன?” என்று வினவினான் வியப்போடு!

    ”இந்தப் புன்னையருகில் என்னால் உம்மோடு அமரமுடியாது; ஏன்…அமரவும் கூடாது!” என்று புதிர்போட்டாள் தலைவி. விடைதெரியாது விழித்த தலைவன், தலைவியருகில் நின்றுகொண்டிருந்த தோழியை நோக்கினான். தலைவியின் தயக்கத்துக்கான காரணத்தைத் தோழி அப்போது விளம்பலுற்றாள் விவரமாய்.

    ”சிலகாலத்திற்கு முன்பு நானும்(தோழி), தலைவியும் எங்கள் ஆயத்தோடு இங்கே (தற்போது புன்னைமரம் இருக்குமிடத்தில்) கிச்சுக்கிச்சுத் தம்பலம்1 விளையாட விரும்பி, அவ்விளையாட்டில் ஒளித்துவைக்க ஏற்றதொரு பொருளைத் தேடிக்கொண்டிருந்தோம். சுற்றுமுற்றும் பார்த்தபோது முற்றிய புன்னைவிதை ஒன்று எங்கள் கைக்குக் கிட்டியது. அதைவைத்து விளையாடிவிட்டுச் சிறிதுநேரங்கழித்து மண்ணுள் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவ்விதையை இங்கு விட்டுவிட்டு அவரவர் இல்லிற்குச் சென்றுவிட்டோம்.

    சிறிதுநாள் கழித்து மீண்டும் நாங்கள் இவ்விடம்வந்து பார்த்தபோது, என்ன ஆச்சரியம்…! அந்தப் புன்னைவிதை சிறிதாய் முளைவிட்டிருக்கக் கண்டோம்; அளவற்ற மகிழ்ச்சி கொண்டோம். அந்தச் சின்னஞ்சிறுசெடியை நெய்கலந்த இனியபாலை நீர்போலப் பெய்து வளர்த்துவந்தோம். (தலைவி இல்லத்தின் செல்வவளம் இங்கே குறிப்பாலுணர்த்தப்படுகின்றது!)

    அந்த புன்னைச்செடியை எம் அன்னைக்கும் காட்டினோம். புன்னையைக் கண்ட அன்னை மகிழ்ச்சிமீதூர, ”நும் தங்கையைப் போன்ற இந்தப் புன்னை நும்மினும் சிறந்ததாகும்” (நும்மினும் சிறந்தது நுவ்வையாகும்) என்று இதனைப் புகழ்ந்துரைத்தார். அன்னை போற்றிய இப்புன்னையை அதுமுதல் எங்கள் தங்கையாகவே எண்ணிவருகின்றோம். அதனால்தான், அது பார்த்திருக்க, அதனருகே உம்மோடு அமர்ந்து நகையாட நனிநாணுகின்றாள் எம் தலைவி” என்று எடுத்துரைத்தாள் தோழி.

    தோழியின் உரைகேட்டுப் பிரமித்துப்போனான் தலைவன். கேளிர்முன்பு (அது மரமாகவே இருந்தபோதினும்) காதல்வளர்க்க நாணிய தலைவியின் மாண்பும், மாட்சியும் நம்மைச் சிலிர்க்கவைக்கின்றன அல்லவா? இத்தகைய நாணமும் நற்பண்பும் இன்றைய ’மாடர்ன்’ காதலர்களிடம் மறைந்து அசட்டுத்துணிச்சலும், ஒழுக்கக்கேடும் மலிந்துவருவது மனவருத்தத்தை மிகுவிக்கின்றது.   

    ஆதலால் காதலர்களே! காதல் செய்யுங்கள்…தவறில்லை; அதனைக் கண்ணியத்தோடும் கட்டுப்பாட்டோடும் செய்யுங்கள். அதுதான் எல்லாரும் உவப்பது! அன்றியும் காதலுக்கு நீவிர் காட்டும் மரியாதையும் அதுவே!

    ***

    1. கிச்சுக்கிச்சுத் தம்பலம்அன்றைய மகளிர் விளையாட்டுக்களில் ஒன்று. மண்ணை நீளமாகக் குவித்து அதனுள் ஒருபொருளை (ஒருபெண்) ஒளித்துவைக்க, (இன்னொருபெண்) அதனைக் கண்டுபிடிக்கவேண்டும். இதனைக் ’காய்மறை விளையாட்டு’ என்றும் அழைப்பர். நாகரிகம் மிகுந்துவிட்ட இக்காலத்தில் ’கணினி விளையாட்டுக்கள்’ வரவேற்பைப்பெற்று, காய்வைத்து விளையாடும் இதுபோன்ற விளையாட்டுக்கள் மண்ணைவிட்டே விரைந்து மறைந்து வருகின்றன.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 56-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    மரங்கள் இயற்கை நமக்களித்த வரங்கள். அவற்றின் அருமையறியாது அழித்தோம். விளைவு? பசுமையின்றி, பருவமழையின்றி மாநிலமே வறண்டுவருவதைக் கண்கூடாய்க் காண்கின்றோம்.

    மரங்களைக் கணக்கின்றி அழித்தொழித்த பெரியோரின் தவறு, பிள்ளைகளுக்கல்லவா தீராத்துயரைத் தந்துவிடுகின்றது? “தம் தலைமுறையிலேனும் பசுமை மீண்டும் தழைக்கட்டும்; பூமி பிழைக்கட்டும்” எனக்கருதி இளஞ்சிறார் இருவர் மரக்கன்றை நட்டு, நீர்வார்க்கும் நற்செயல் நம் நெஞ்சில் பால்வார்க்கின்றது!

    புகைப்படக்கலைஞர் புதுவை திரு. சரவணனின் புகைப்படத்தை இவ்வாரப்போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்துள்ளார் வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றி!

    sapling

     

     

     

     

     

     

     

     

    புகைப்படத்தைத் தம் கவிதையால் அணிசெய்துள்ள கவிஞர் பெருமக்களின் கவின்கவிதைகளைப் படித்து இரசிப்போம் இனி!

    மரங்களையழித்து, சோலைவனமாயிருந்த மாநிலத்தைப் பாலைவனமாக்கிய தாய்தந்தையரின் பிழைதனைநீக்கி, மரம்நட்டு மண்காக்கும் இளஞ்சிறாரைப் போற்றுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அப்பன் செய்த செயலதுதான்
    அங்கே மரத்தை வெட்டிவிட்டான்,
    தப்பென தந்தையர் அறியவில்லை
    தாவரம் அழிப்பதைக் குறைக்கவில்லை,
    இப்படிப் போனால் சிலகாலம்
    இப்பார் முழுதும் பாலையாகும்,
    தப்பெனத் தெரிந்த தனையரெல்லாம்
    தாமே வந்தார் மரம்நடவே…!

    ***

    ”மனிதனைப்போல் நன்றிமறந்து நகர்ந்துவிடும் இழிகுணம் மரங்களுக்கில்லை; இன்று நீ நீரூற்றினால், நாளை உன்னை நிழல்தந்து காக்குமவை நகராது!” என்று மரத்தின் அருங்குணத்தைச் சிறார்களுக்குச் சுட்டுகின்றார் தாரமங்கலம்  திரு. வளவன்.

    நம்பிக்கையோடு நீர் ஊற்று
    மரம் மனிதனைப் போல் அல்ல
    உன்னிடம் உதவி பெற்ற பிறகு
    உன்னை உதறி விட்டு போய் விட
    நீ நட்ட அதே இடத்தில் விருட்சமாய்
    வளர்ந்து ஊருக்கே நிழல் தரும்

    உனக்கு தெரியுமா நீ இன்று நடும் இந்த செடி
    உன்னை விட உயரமாய் வளரும் என்று..
    அதை நீ நிமிர்ந்து பார்க்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை

    ***

    இணையத்தில் இறக்குமதி செய்துசாப்பிடும் இழிநிலையை வருங்காலத்தில் தவிர்த்திட, மரம்நடுதலின் அவசியத்தை இன்றே இளையோர்க்குச் சொல்லித்தாருங்கள்!” என்று அறிவுறுத்துகின்றார் திரு. க. கமலகண்ணன்.

    இனி வரும் சமுதாயம் 
    இணையத்தில் 
    இறக்குமதி செய்து சாப்பிடும் 
    இழிவான நிலைக்கு வரலாம் 
    இளமைலேயே சந்ததிகளுக்கு 
    இயற்கை பயிரிடல் பற்றிச் சொல்லத்தர 
    இல்லை எனில் விவசாயம் 
    இனிக்காது போகும் நிலை 
    இயல்பாக விருந்தாளியாக வரும் 
    இது தொடர்ந்தால் சர்வாதிகாரியாய் 
    இருமுடியை வைத்தது போல ஆட்சியில் 
    இதயம் கமற அனைவருக்கும் உணவு 
    இல்லை என்ற நிலை வரலாம் 
    இளைய சமுதாயத்திற்குச் சொல்லிக் கொடுப்போம் 
    இயற்கையின் பரிமாணத்தை மண்ணையும் மரத்தையும் 
    ….பயிரையும் மரம் நடுதலையும்

    ***

    கவிமழைபொழிந்து கருத்துப்பயிர் வளர்த்திருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைக் கண்டுவருவோம் இனி!

    இயற்கையோடு மனிதன் கைகோத்திருந்த காலத்தில் வானம் பொய்க்கவில்லை; வளம் பிழைக்கவில்லை. இன்றோ, தன்னலத்திலேயே திளைத்துவிட்ட மனிதக்கூட்டம், அமுதனைய மழையையும், வெயிற்கேற்ற நிழலையும், வீசும் தென்றற்காற்றையும் இலவசமாய் அள்ளித்தந்த மரங்களின் அருமை மறந்து அவற்றை வெட்டிவீழ்த்திவிட்டு இயற்கைச்சீற்றங்களாலும், செயற்கை மாசுகளாலும் அல்லலுறுகின்றது.

    நம் மண்ணின்மைந்தர்கள் வேரிலே வெந்நீரைப் பாய்ச்சிவிட்டு, இலையிலே பசுமைதேடும் மடமையை இனியேனும் ஒழித்து மரங்களை நடுதல் நன்று! என்று புகல்கின்ற கவிதையொன்று கருத்தைக் கவர்கின்றது!

    செத்த பின்
    சிந்து பாடும்
    செந்தமிழ் நாட்டின்
    வாரிசுகள் நாம்
    காடுகளை
    அழித்துவிட்டு
    மழைக்குத் தவம்
    இருக்கும்
    மண்ணின் மைந்தர்கள் நாம்

    வேரிலே
    வெந்நீர் ஊற்றிவிட்டு
    இலையிலே
    பசுமைதேடும்
    பகுத்தறிவுவாதிகள் நாம்

    அவசியங்களை
    அலட்சியப்படுத்திவிட்டு
    அவதிப்படும்
    அறிவிலிகள் நாம்
    போதும் போதும்
    இனியொரு விதி செய்வோம்
    இந்த ஜெகத்தினை
    வளமாக்குவோம்
    வா நண்பா வா
    காக்கின்ற இயற்கையைக் காப்போம்
    கேடுசெய்யும் மாசுகளைத் தவிர்ப்போம்
    மழைதரும் மரம் நிறைய வளர்ப்போம்
    முன்னோர் செய்த தவறுதவிர்ப்போம்
    அப்துல் கலாம் தோன்றிய நாடு
    அவர் வகுத்த பாதையில் மரம் நடு!

    ”காடுவாழவும், கேடுவீழவும் இன்றே வளர்ப்போம் மரங்களை!” என முழங்கும் திருமிகு. சரஸ்வதி ராஜேந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிக்கின்றேன்.

    ***

    இயற்கையின் ஆயுள்ரேகையாய்த் திகழ்பவை மரங்கள்; அவையின்றி அமையாது உலகு என்ற உண்மையை உரைக்கின்றது மற்றொரு கவிதை!

    நேற்றைய சமுதாய உயிர்ப்பில் நாங்கள்.
    நாளைய சமுதாய உயிர்ப்பிற்காய் இவர்கள்.
    பூமிக்குப் பசுமை போர்த்தும் செயல்.
    பூமியென்ற உடலை மரத்திற்குத் தருதல்.
    மரம் நடுகையை சிறு மனதிலே
    வரமாய்க் கொடுத்தால் மழை வருமே!
    மரமின்றி அமையாது உலகு அறிவோம்.
    மரமே இயற்கையின் ஆயுள் ரேகை.
     
    காற்றின் மூலக்கூறுகள், சூரியக் 
    கதிரினொளிக் கூறுகள் மரத்தின் அணுக்கள்.
    ஆற்றலுடை வேர் முனைகள் போர்வீரர்களாகி
    ஆற்றும் செயலாம் மரம் வாழ்க்கைவேர்.
    பெருமனதான மூதாதையர் விட்டுச் சென்றவை
    தெருவோரம், ஏரி, ஆற்றுக்கரை நிழல்கள்.
    இயற்கையின் பரிசாம் மரங்களை இவர்கள்
    செயற்கையில் நடுவதால் நீர் பெறுவோம்.

    ”மழைக்கு வழிகோலும் மரங்களை வளர்த்து, மன்பதை காப்போம்” என்று நன்மொழி பகர்ந்திருக்கும் திருமிகு. வேதா. இலங்காதிலகத்தின் கவிதைக்கு என் பாராட்டுக்கள் உரித்தாகுக.

     

     

    Share
  • ஆணவக் கொலை!

    -மேகலா இராமமூர்த்தி

    தமிழர் பண்பாடு தரணியிலேயே தலைசிறந்தது என்று பெருமைபேசிப் பூரிப்படைவோர் நாம். உண்மை…வெறும் புகழ்ச்சியில்லை! அத்தகைய பீடும் பெருமையும் உடையதுதான் நம் பண்பாடு. எனினும், அவ்வுயரிய பண்பாட்டைப் பேணுவதிலும், அழியாது கட்டிக்காப்பதிலும் எவ்வளவுதூரம் நாமின்று முனைப்பாயிருக்கிறோம் என்பதைச் சிந்திக்கவேண்டிய தருணமிது!

    பகுத்தறிவுப் பகலவன் ஒளிவீசிய தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் இனவாதச் சிந்தனைகளும், சாதிப் படுகொலைகளும், இந்த அநியாயங்களையெல்லாம் வோட்டுக்காகவும் பதவிக்காகவும் கைகட்டி வேடிக்கைபார்க்கும் அரசியல்கட்சிகளின் கையாலாகாத்தனமும், ’பண்பாடு’ என்ற ஒன்று நம் தமிழரிடம் இன்னமும் மிச்சமிருக்கின்றதா? எனும் கேள்விக்கணையை நம் நெஞ்சில் கூர்மையாய்ப் பாய்ச்சுகின்றது.

    நாட்டையாளும் அரசனாயினும் சரி, காட்டில் திரியும் மனிதனாயினும் சரி, இருவரும் உண்பது நாழியளவே; உடுப்பவை இரண்டே; பிற அடிப்படைத் தேவைகளும் அவ்வாறே சாமானிய மாந்தர்க்கும், நாடாளும் வேந்தர்க்கும் பொதுவானவை என்பது சங்கப் பெரும்புலவர் நக்கீரர் கண்டறிந்த உண்மை.

    தெண்கடல் வளாகம் பொதுமையின்றி
    வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
    நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
    கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
    உண்பது நாழி உடுப்பவை இரண்டே
    பிறவும் எல்லாம் ஓரொக்
    கும்மே….(புறம் – 189 – நக்கீரனார்)

    வாழ்வின் இயல்பு இவ்வாறிருக்க, தங்களை ’ஆண்ட பரம்பரை’ என்று சிலர் கூறிக்கொண்டு தருக்கித் திரிவதும், வேறுசிலரை தீண்டத்தகாத அடிமைகளாய்க் காலிலிட்டு மிதிப்பதும், நாம் மக்களா இல்லை விலங்குநிலையிலிருந்து சற்றும் விலகாத மாக்களா எனும் ஐயத்தையும், சீற்றத்தையும் தோற்றுவிக்கின்றது.

    இவ்விடத்தில் ஆயுதங்களின் பயன்பாடு குறித்தும் நாம் ஆராயவேண்டும். நம் முன்னோர் அரிவாளைக் கண்டுபிடித்தது கதிரறுக்கத்தானே ஒழிய (நமக்கு வேண்டாதோரின்) கழுத்தை அறுக்க அன்று! ஆனால் இப்போதைய நடைமுறைகள் இதனை முற்றிலும் பொய்யாக்கிவருகின்றன. களைவெட்டிய அரிவாள் இன்று மனிதரின் தலைவெட்டிச் சாய்க்கின்ற அவலத்தை என்னென்பது? சாதிப்பூசல்களும் இனக்கலவரங்களும் அரிவாளின் துணையுடனேயே இற்றைநாளில் அனுதினமும் அரங்கேற்றம் காண்கின்றன!

    ஓர்ஆண்மகன் வேற்றுசாதிப் பெண்ணைத் தன் ’பெண்சாதி’ (மனைவி) ஆக்கிக்கொள்ளத்தான் நம் சமூகத்தில் எத்தனைத் தடைகள்!? அதிலும் அந்த ஆடவன், வக்கிரபுத்தி படைத்த, (so-called) மேட்டுக்குடியினரால் ’தாழ்த்தப்பட்டோன்’ என்று முத்திரை குத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவனாயிருந்தால்….? அவன் செத்தான்!

    காதலுக்குச் சாதியில்லை மதமுமில்லையே என்று முழங்கினார் கவியரசர். ஆனால் சாதிவெறிகொண்ட கூட்டமோ, “மதமும் இனமும் பாராது வருகின்ற காதலில் எமக்குத் துளியும் சம்மதமில்லை” என்று கொக்கரிக்கின்றது. மனம் பார்த்து வருகின்ற காதல், இனி இனம்பார்த்து வந்தால்தான் காதலும் காதலித்தோரும் தப்பிப்பிழைப்பர் போலிருக்கின்றது!

    அதற்குச் சமீபத்திய சான்று 19 வயதே நிரம்பிய இளம்பெண் கௌசல்யா!

    காதல்ஒருவனைக் கைப்பிடித்துத் தன் இல்லற வாழ்வைத் தொடங்கிய கௌசல்யா, தன் சொந்தக் குடும்பத்தினராலேயே எங்கே தன் கணவனுக்கும் தனக்கும் முடிவு நெருங்கிவிடுமோ என ஒவ்வொருநாளும் அஞ்சியஞ்சிச் செத்தவண்ணமே வாழ்ந்துவந்திருக்கின்றார்!! அவர் நினைத்ததுபோலவே இதயமற்ற சாதிவெறி இருசக்கரவண்டியில்வந்து அந்த இளஞ்சோடியைச் சரமாரியாய் வெட்டியிருக்கின்றது. கண்ணெதிரிலேயே தன் காதற்கணவன் கோரமாய் மாண்டுபோவதைக் கண்ட அந்த இளம்பெண்ணின் உள்ளம் எப்படிப் பரிதவித்திருக்கும்? பதறித் துடித்திருக்கும்?

    தங்கள் சாதியின் கவுரவத்தைத் (!) தக்கவைத்துக்கொள்வதற்குத்தான் பெண்ணின் குடும்பம் இந்தக் கொலையில் இறங்கியது என்று இந்த காட்டுமிராண்டித்தனமான வெறிச்செயலுக்கு நியாயம் கற்பிக்கப்படுகின்றது கயவர்களால்! ஐயகோ! கொலையா ஒரு சமூகத்தின் கவுரவத்தைக் காத்துநிற்கப் போகிறது??!! நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்!

    அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
    தந்நோய்போல் போற்றாக் கடை
    என்றார் வள்ளுவர். பிற உயிர்களுக்குக் கொடுந்தீங்கு இழைக்கும் இத்தகைய அறிவற்ற கொலைபாதகரைக் கண்டால் அந்த தெய்வப்புலவரும் கண்ணீர்விட்டன்றோ கதறுவார்!

    இளம் உள்ளங்களில் இயல்பாய்த் தோன்றும் மலரினும் மெல்லிய காதலைச் சிதைத்துவிட்டுச் சாதி எனும் நச்சரவை அங்கே குடியேற்றுவதால் தேவையற்ற சச்சரவும் சண்டையும், இனப்பகையுந்தான் வளருமேயன்றி மனிதநேயம் மலராது.

    சங்கக் கவிஞன் பூங்குன்றனைப்போல் ‘யாவரும் கேளிர்’ எனும் அளவிற்கு நாம் பரந்தமனம் கொள்ளாவிடினும் பரவாயில்லை; ”என் இனத்தைத் தவிர அனைவரும் என் பகைஞர்!” என்று ஆவேச முழக்கமிட்டு ஆயுதமேந்தாமல் இருந்தாலே போதுமானது என்று சொல்லுமளவுக்கு அல்லவா தமிழனின் தரம் இன்று தாழ்ந்து போய்விட்டது! நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்ணும் நனிநாகரிகம் கொண்டிருந்த தமிழன், இன்றோ தமிழினத்தைச் சேர்ந்தவனையே பகைத்து, அவன் வாயில் வலியச்சென்று நச்சை ஊட்டவும் துணிந்துவிட்டான்!

    ’என் சாதி உயர்ந்த சாதி’ எனும் பொருளற்ற அகந்தை கொண்டு, அருள் கொன்று, விலைமதிப்பில்லா மனித உயிர்களை ’ஆணவக் கொலை’ செய்வதற்குப் பதிலாய், நம்மிடம் குடியிருக்கும் ’நான்’ எனும் ஆணவத்தைக் கொலை செய்வோம்! அதுதான் உண்மையான ஆணவக் கொலை!

    மாந்தர்காள்! கிடைத்தற்கரியது இம்மானுடப் பிறவி. இப்பிறவி வாய்த்தோர், ஒருவரோடு ஒருவர் அன்புபாராட்டியும், இனியவை கூறியும், இன்னா செய்யாது, இன்முகத்தோடும், இரக்கத்தோடும் கூடிவாழ்ந்தால் கோடியின்பம் நம்மை நாடி வாராதோ?

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 55-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    அடடா! இந்த மழலையின் மகிழ்ச்சிக்குளியலைக் காணக் கண்கோடி வேண்டாமோ? குட்டிநிலவின் பட்டுமேனியை ஆசையோடு தொட்டுவிளையாடுகின்றன பொங்கிவரும் நீரலைகள்!

    சின்னஞ்சிறு கைப்பேசியில் கைதுசெய்துவிடமுடியுமா இந்த வண்ணநிலவின் வடிவழகை?

    baby's bath

     

     

     

     

     

     

     

     

    அழகோவியத்தைத் தன் படக்கருவியில் அள்ளிவந்திருக்கும் புகைப்படக்கலைஞர் திரு. பிரேம்நாத் திருமலைசாமிக்கும், இப்படத்தைக் கவிதைப்போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கும் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் எம் நன்றி!

    இனி கவிதைகளுக்குச் செல்வோம்!

    ***

    துள்ளிவரும் வெள்ளிநீரில் வெண்தாமரையாய் மின்னும் இம்மழலையின் அழகைக் கண்டு இரசிக்கவா? இல்லை அள்ளி எடுக்கவா? என்று ஆசையாய்க்  கேட்கின்றார் திரு. ஹரிஹரன்.

    வைரமேனியின் மேல் வைரத் துளிகள் பாய,
    மொட்டு சாய்வது போல் தலைசாய ,
    வெண்தாமரையாய் உம்மேனி நீரினுள் தெரிய ,
    பூங்காற்றும் உம்அழகுடன் போட்டியிட விச,
    அழகே,
    இயற்கையில் இயற்கை நீராடுகிறது.
    உன்னை,
    நீர்க்குமிழிகள் சுடுமோ? குளிருமோ?
    நீரின் வேகம் உம்மை அச்சுறுத்துமோ?
    என் நெஞ்சம் தேடுகிறது.
    உம் அழகைக் கண்டு ரசிக்கவா?
    உன் ஆனந்தம் கண்டு நெகிழவா?
    உம்  மேனியை அள்ளி எடுக்கவா?
    சொல்லடா என் செல்வமே!, சொல் ,

    உன் மொழி எனக்குத் தெரியாது ,
    என் மொழி உனக்குத் தெரியாது .
    அதனாலே,
    உன் உயிரை நானே படமெடுக்கிறேனடா!…

    ***

    கொட்டும்நீரில் குதித்துவிளையாடும் பட்டுத்தளிரின் பரவச அனுபவத்தைக் கவிதையாக்கியிருக்கின்றார் திரு. மதிபாலன். 

    கொட்டிடும் நீரில் குதித்து  விளையாடும் 
    பட்டுத் தளிரே பரவசமோஒட்டி 
    உறவாடும் நீரலை உன்னால் இனிக்கும் 
    மறக்குமோ அந்த சுகம் ?

    ***

    சித்திரக்குளியல் செய்யும் பத்தரைப் பசும்பொன்னின் ‘சூரியத் திருமேனி’யைப் போற்றிப் பாடியிருக்கின்றார் திரு. இளவல் ஹரிஹரன்.

    சின்னச் சூரியத் திருமேனி யொன்று
    சித்திரக் குளியல் செய்கிறது
    எண்ணத் தொலையா நீர்ப்பூக்களதன்
    எழில்மேனியில் பெய்கிறது

    கண்ணும் கருத்தும் கவரும் வகையிலதைக்
    கைகளில் படத்தைப் பிடிக்கிறதுஇந்த
    மண்ணில் வந்த வான நிலவென்
    மகிழ்வாய்க் குழந்தை நடிக்கிறது.

    […]

    சிகரம் வைத்த காட்சி எனவே
    சித்திர மாக்கிப் பார்க்கிறதுநல்ல
    மகவின் குளியல் ஆனந்தந் தன்னை
    பெற்றோர் பார்க்கச் சேர்க்கிறது.

    இதுபோல இன்பம் உலகில் இல்லை
    இனிதே வாழக் கற்பிக்கும்….இங்கு
    இழந்த வாழ்வின் இன்பம் அதிகம்
    இதனை மீட்டுப் புதுப்பிப்போம்.

    ***

    ”நீர்கண்டு பதறும் குழந்தையல்லன் இவன்! எதிர்காலத்தில் நீரையே ஆளும் வல்லமை மிக்கோன்!” எனக்குழந்தையை வியந்து போற்றுகின்றார் திருமிகு. வேதா. இலங்காதிலகம். 

    வெள்ளிச் சாரலில் உள்ளம் குளிர
    துள்ளி வரும் நிரிலுடல் குளிர
    கொள்ளை இன்பக் காட்சியில் மழலை
    அள்ளும் அழகுக் காட்சியை அப்படியே
    கொள்ளும் கருவியுடன் தந்தை போலவன்.
    வெள்ளத்தில் பிள்ளைக்குப் பாதுகாப்பாய் அம்மா.
    கோடையின் ஆனந்த ரசனையின் அனுபவத்தில்
    ஆடையற்ற மேனியின் ஆனந்தப் பரவசம்.

    நீர் கண்டு பதறும் குழந்தையல்ல
    நீரையே ஆளுவான் இவன் எதிர்காலத்தில்
    ஆகா! என்ன இன்பக் காட்சி!
    வாகாக மூலிகை கழுவிய நீர்ப்
    போர்வை குழந்தையைத் தழுவ அனுபவச்
    சார்பில் ஆனந்த ரசனை முகம்.
    கிளர்ச்சி அனுபவத்தால் குழந்தை மன
    வளர்ச்சிக்கு ஆதரவு தரும் பெற்றோர்!
    ***

    ”மறந்துபோன மரபுகளில் ஒன்று களியூட்டும் வயல்வெளிக் குளியல்; அதனை மீண்டும்  நினைவூட்டுகின்றது இந்தப் பட்டுத்தாமரையின் ஒய்யாரக் குளியல்” என்கிறார் திரு. க. கமலகண்ணன்.

    மறந்து போன பாரம்பரிங்களில்
        இதுவும் ஒன்று
    வயல்வெளி குளியல் மகிழ்ச்சிகளில்
        நம்மை வென்று
    வாழ்வில் இன்றியமையா பல
        இழந்தது நின்று
    சிலிர்க்கும் தருணங்கள் அது
        கிடைக்குமா இன்று
    என மனது ஏங்குகிறது
        வெட்கத்தை தின்று
    கொடுத்து வைத்த குழந்தையடா
        வளருவாய் நீ நன்று

    ***

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைச் சந்திப்போம்!

    எடுக்கப்படும் புகைப்படம் ஒவ்வொன்றும் சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்துச் சங்கமமாகும் காலமிது! அந்த உண்மையைச் சின்னக்குழந்தை செப்புவதாய் அமைத்திருக்கும் ஒரு கவிதை மனங்கவர்கின்றது.

    பாய்ஞ்சு வந்தத் தண்ணியில் 
    ****பயமில் லாமக் குளிக்கிறேன்
    தேய்ச்சுக் குளிக்க வில்லைநான்
    ****
    தேகம் குளிரக் குளிக்கிறேன்

    ஆச தீரக் குளிக்கிறேன்
    ****
    அழாம நானே குளிக்கிறேன்
    பேசக் கூட முடியல
    ****
    பின்னால் தண்ணி முட்டுது

    ஆடை யின்றிக் குளிக்கிறேன்
    ****
    அமர்ந்துக் கொண்டே குளிக்கிறேன்
    கோடை வெயிலும் தெரியல
    ****
    கொஞ்சங் கூட சலிக்கல

    அம்மா துணையா நிக்குறா
    ****
    அப்பா போட்டோ எடுக்குறார்
    சும்மா விடவாப் போகிறார்
    ****
    சுற்றி வாட்ஸ்அப் பண்ணுவார்

    நாளை உமக்கும் வந்திடும்
    ****
    நல்லா என்னப் பாக்கணும்
    தோளைக் குலுக்கி ரசிச்சதும்
    ****
    சூடா லைக்கும் பண்ணணும் ….!!!

    பாய்ந்துவரும் தண்ணீரில் பயமில்லாமல் குளிக்கும் இந்தக்குழந்தை, தன்னைப் புகைப்படமெடுக்கும் தந்தை அடுத்து அதனை எங்கெல்லாம் ’வலையேற்றுவார்’ என்பதைச் சுவையோடு விவரிப்பது, நம்மை இரசிக்கவும் சிரிக்கவும் வைக்கின்றது! இக்கவிதையை இயற்றியிருக்கும் திருமிகு. சியாமளா ராஜசேகர் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகிறார்.

    ***

    நகரங்களை நோக்கிய மக்களின் இடைவிடாப் படையெடுப்பால், இயற்கையோடு இயைந்த கிராமவாழ்க்கை இன்று கனவாய், பழங்கதையாய் மாறிவருகின்றது.

    ’கூட்டுப்பறவையாய் நகரில்வாழும் குழந்தைக்கு, நாட்டுப்புற வாழ்வும், வனப்பும் குதூகலமே’ என்று கூறும் கவிதை நம்மைச் சிந்திக்க வைக்கிறது.

    நாட்டுப் புறத்தை மறந்தேதான்
    நகர வாழ்க்கை வந்தோர்தம்
    கூட்டுப் பறவைக் குழந்தைக்குக்
    கிராமம் கண்டதும் குதூகலம்தான்,
    தோட்ட நீரில் புகுந்தேதான்
    துள்ளிக் குதித்தே ஆடுதல்பார்,
    ஆட்டம் பார்க்கும் பெற்றோரும்
    அந்தநாள் நினைவில் குளித்தாரே…!

    நாட்டுப்புற வாழ்வின் இனிமையை எளிமையாய்ச் சொல்லியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனுக்கு என் பாராட்டுக்கள்!

     

     

    Share
  • கை கொடுக்கும் நம்பிக்கை!

    -மேகலா இராமமூர்த்தி

    இயல்பில் மனிதன் ஒரு சமுதாய விலங்கு (Man is by nature a social animal) என்பார் தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில். மனித வாழ்வு தனிமையில் இனிமை காண இயலாதது. உலகத்தோடு ஒட்ட ஒழுகுவதிலும் சமுதாயத்தோடு இணைந்தும் இயைந்தும் வாழ்வதிலும் முழுமை காண்பது. அவ்வாறு ஒருவர் மற்றொருவரைச் சார்ந்துவாழ்வதற்கு அடித்தளமாக இருப்பது நம்பிக்கை எனும் நல்லுணர்வு. ஒரு குழந்தை தன்தாய் சுட்டிக்காட்டுகின்ற மனிதரைத் தந்தையென ஏற்றுக்கொள்வதற்கு அடிப்படையாய்த் திகழ்வதுகூட (தன் தாய்மீது அச்சேய் கொள்ளும்) நம்பிக்கையே எனலாம்!

    முன்பின் அறிமுகமில்லாத ஓர் ஆடவனும், ஆரணங்கும் காதல்கொண்டு, செம்புலப்பெயல்நீர்போல் அன்புடை நெஞ்சுகலப்பதற்குக் களமமைப்பதும் அவர்கள் ஒருவர்மீது மற்றொருவர் கொள்ளுகின்ற அசைக்கவியலா நம்பிக்கையே!

    தலைவன் ஒருவன்மீது மாறாக் காதல்கொண்ட தலைவியொருத்தி, அவனை ’நின்ற சொல்லர்’ (நாட்டு வழக்கில் சொல்வதென்றால் பேச்சு மாறாதவர்) என்று வாயாரப் புகழ்வதை நற்றிணைப் பாடலில் கபிலர் காட்டுவார்.

    நின்ற சொல்லர் நீடுதோன்றினியர்
    என்றும் என் தோள் பிரிபறியலரே
    (நற்: 1)

    இன்னொரு தலைவியோ தன் காதல்மீது இமய நம்பிக்கை கொண்டவளாய்த் தானும் தலைவனும் கொண்ட காதல், நிலத்தைவிடப் பெரிது, வானத்தைவிட உயர்ந்தது, நீரினும் ஆழமானது என்று அளந்துபார்த்தவள்போல் ஆணித்தரமாய்க் கூறுவது நமக்குப் பெருவியப்பை விளைக்கின்றது.

    நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
    நீரினும் ஆரள வின்றே சாரற்
    கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
    பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.  (குறுந்: 3)

    காதலுக்கு மட்டுந்தானா கை கொடுக்கும் நம்பிக்கை? இல்லை… நட்புக்கும் அதுவே வீற்றிருக்கை! நேரில் காணாதபோதினும் ஒத்தஉணர்ச்சி கொண்ட இரு உயர்ந்த உள்ளங்கள் உயிர்நட்பு கொண்டதனைத் தமிழ்கூறு நல்லுலகு நன்கறியும். ஆம்! சோழ அரசனாகிய கோப்பெருஞ்சோழனுக்கும், பாண்டி நன்னாட்டுப் புலவர் ஆந்தையாருக்கும் இடையில் முகிழ்த்து மலர்ந்திருந்த நட்பெனும் நறுமலர் புறநானூற்றில் இன்றும் புதுமணம் பரப்பிக்கொண்டுதான் இருக்கின்றது!

    தான் பெற்றமக்களால் தாங்கொணாத் துயருக்கு ஆளான கோப்பெருஞ்சோழன் அதற்குமேலும் தன் இன்னுயிரைத் தரித்திருக்க விரும்பவில்லை. வடக்கிருந்து உயிர்துறப்பது எனும் முடிவை எடுத்தான். அரசவாழ்வைத் துறந்து, தருப்பைப்புல் ஆசனம்பரப்பி வடக்கு நோக்கி அமர்ந்தான்; அவனைச் சுற்றிலும் அவன்மீது பெருமதிப்பும், அன்பும் கொண்டிருந்த அரசவையினரும் புலவர்பெருமக்களும் குழுமியிருந்தனர் வேதனையோடு. புலவர் பெருமக்களை நோக்கித் தன் பார்வையை வீசினான் காவலன். தன் குறிப்பறிந்து அருகில்வந்த புலவோரை நோக்கி, “அருமை நண்பர் ஆந்தையாருக்கென என்னருகே ஆசனம் ஒன்றை அமையுங்கள்!” என்று உத்தரவிட்டான்.

    அரச கட்டளையாயிற்றே மறுக்க முடியுமா? அரசனுக்கருகே ஆசனம் அமைக்கப்பட்டது ஆந்தையாருக்கு. ஆயினும், அரசன் நீங்கலாக ஆங்கே குழுமியிருந்த ஏனையோருக்கு பாண்டி நாட்டிலுள்ள ’பிசிர்’ எனும் ஊரிலிருந்து, செய்தி கேள்விப்பட்டு, ஆந்தையார் இவ்வளவு தூரம் வருவார்; வந்து அரசனோடு உயிர்விடுவார் என்றெல்லாம் எள்ளளவும் நம்பிக்கை இருக்கவில்லை. நாட்கள் நகர்ந்தன. ஆந்தையாரோ வரக்காணோம். அரசனும் உயிர்துறந்துவிட்டான். சுற்றியிருந்தோர், இனியும் ஆந்தையார் வருவார் எனும் எண்ணத்தைக் கைவிட்டு அங்கிருந்து புறப்பட எத்தனித்த வேளையில், தொலைவில் ஒருமனிதர் அவர்கள் நின்றிருந்த இடத்தை நோக்கி விரைந்து வந்துகொண்டிருப்பதைக் கண்டனர்; வியப்போடு அத்திசை நோக்கினர். அருகே வந்த அம்மனிதர் அவர்களிடம் தன்னை ”ஆந்தையார்” என்று அறிமுகப்படுத்திக்கொள்ள, அனைவரும் அதிசயித்தனர்; அவரை ஆரத்தழுவி உரையாடி மகிழ்ந்தனர்.

    ஆந்தையாரை வரவேற்ற சான்றோரில் ஒருவரும், கோப்பெருஞ்சோழனின் அன்புக்குரிய அவைப்புலவருமான பொத்தியார், ”நண்பர் ஆந்தையார் எனைக்காண அவசியம் வருவார்” என்ற மன்னனின் (பெருமைமிகு) எண்ணத்தையும், அது பிழைபடாதவாறு வந்த புலவரின் சிறப்பையும் எண்ணியெண்ணி வியப்பும் மருட்கையும் ஒருங்கே எய்தியவராய் அவ்வுணர்வை அழகியதோர் பாட்டாய் வடித்தார்.

    நினைக்கும் காலை மருட்கை உடைத்தே
    எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்
    அதனினும் மருட்கை உடைத்தே பிறன் நாட்டுத்
    தோற்றம் சான்ற சான்றோன் போற்றி
    இசைமர பாக நட்புக் கந்தாக
    இனையதோர் காலை ஈங்கு வருதல்
    வருவன் என்ற கோனது பெருமையும்
    அதுபழு தின்றி வந்தவன் அறிவும்
    வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்
    தன்றே… (புறம் – 217: பொத்தியார்)

    பின்னர், ஆந்தையாரும் மன்னன் மடிந்த இடத்தருகிலேயே வடக்கிருந்து உயிர்துறந்தார் என்பது புறம் நமக்கு அறியத்தரும் செய்தி.

    புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
    நட்பாங் கிழமை தரும்
    எனும் வள்ளுவத்துக்கு விளக்கமாய்த் திகழ்வது இக்காவிய நட்பு!

    இவ்வாறு, பிறர்மீது கொள்ளும் நம்பிக்கை, காதலுக்கும் நட்புக்கும் பாதையமைப்பதுபோல், தன்மீதே ஒருவன் கொள்ளும் நம்பிக்கை அவன் தனிவாழ்வின் வெற்றிக்கும், பெற்றிக்கும் வழிவகுக்கின்றது. ஏழைமையோடு தோழமைகொண்ட போதிலும், தளராத தன்னம்பிக்கையோடு வாழ்வில் சாதனைபடைத்த எத்தனையோ அறிஞர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் வரலாறு நமக்குக் காட்டவில்லையா?

    மாந்தரிடம் காணக்கிடைக்கும் இந்நம்பிக்கை, தம்மைச் சார்ந்ததாகவும், சகமனிதர்களைச் சார்ந்ததாகவும் மட்டுமே உள்ளதா அல்லது அதனையும் தாண்டிப் பயணிக்கின்றதா என்று சற்றே சிந்தித்தால், அவர்தம் நம்பிக்கையின் எல்லை வானளவு விரிந்து, கண்ணால் காணவொண்ணாத கருத்துருவான கடவுள்வரை அது நிறைந்திருக்கக் காண்கின்றோம். தத்தம் சமயக் கோட்பாடுகளுக்கியைந்த வகையில் கடவுளின் உருவிலும், உடையிலும் மக்கள் மாறுபாடுகள் கொள்ளுகின்றனரேயன்றி, கடவுளே உலகையும், உயிர்களையும் படைத்தவர், அவரை நம்பினார்க் கெடுவதில்லை என்பன போன்ற நம்பிக்கை முழக்கங்களில்(!) மாற்றமில்லை. சிலநேரங்களில் இந்த இறைநம்பிக்கை கரைபுரண்டோடி, தேவையற்ற மூடநம்பிக்கைகளில் மானுடரை மூழ்கடித்துவிடுகின்ற ஆபத்தான வேலையையும் செய்யத் தவறுவதில்லை. அதுபோல் மனிதர்மீது மனிதர் கொள்ளும் நம்பிக்கையானது துரோகத்திலும், அவநம்பிக்கையிலும் முடிந்துபோவதையும் மறுப்பதற்கில்லை.

    ஆயினும், ஒரோவழி (at times) நிகழும் இவைபோன்ற எதிர்மறை விளைவுகளை நீக்கிவிட்டு நோக்கினால், வாழ்வைச் செம்மையாய் நடாத்துதற்குத் தேவையான பலத்தையும், மனவுரத்தையும் நம்பிக்கை மாந்தர்க்குத் தந்து வையத்தை வாழ்விக்கின்றது என்றே கூறலாம்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 54-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    சின்னாளும் பல்பிணியும் கொண்ட நிலையற்ற இம்மானுட வாழ்வில், அன்பெனும் பிணைப்பு மனித உள்ளங்களை இணைத்து நிற்குமானால், வறுமையிலும் செம்மையாய்ச் சிறப்பாய் வாழலாம்.

    baby and grandam

     

     

     

     

     

     

     

     

     

     

    அடடா! அன்பெனும் பிடியுள் அகப்பட்ட எழிற்சிலையாய்ப் புகைப்படத்தில் காட்சிதரும் இந்தக் குழந்தையின் கள்ளமற்ற முகமும், காந்தக் கண்களும் நம் சிந்தை நிறைக்கின்றன.

    இவ்வழகிய புகைப்படத்தை எடுத்துள்ள திரு. ராஜவுக்கும்(?), போட்டிக்கு இதனைத் தேர்வுசெய்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமையின் நன்றி!

    இனி இவ்வாரக் கவிதைகளுக்குச் செல்வோம்!

    ***

    பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டு வாடும் புதியமலரொன்றும், பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆதரவை நாடும் முதியமனமொன்றும் அன்பு இல்லத்தில் அமைதியாய் இணைந்திருப்பதைப் பேசுகின்றது திரு. செண்பக ஜெகதீசனின் கவிதை.

    அன்பு இல்லத்தில்,
    மூதாட்டியின் முணுமுணுப்பு
    ஐந்து பெற்றும்
    அனாதையாய் நான்,
    யாரோ பெற்று
    அனாதையாய் நீ..

    இருவரும் ஒன்றானோம் இங்கு
    பிள்ளைகள் கைவிட்டனர்
    என்னை,
    பெற்றவர் கைவிட்டனர்
    உன்னை…!

    ***

    முதுமையும் இளமையும் சந்தித்து வாழ்வின் பல்வேறு நிலைகள் குறித்துச் சிந்தப்பதைக் கவிமாலையாய்த் தொடுத்திருக்கின்றார் திரு. இளவல் ஹரிஹரன். கவிஞர் சொல்வதுபோல், வாய்த்திருக்கும் வாழ்க்கையினைப் பேய்க்குணமின்றித் தாய்மனத்தோடு வாழ்ந்தால் வாழ்க்கை தித்திக்கும் தேன்பாகுதான்! 

    பால்யமும் முதுமையும்
    ஒருவர் மடியிலே ஒருவர்.

    பாலவிழிகளில்
    பால்மணம் மாறா ஏக்கம்….

    கால்களற்ற சிறுமியின்
    கரங்களில் என்னவோ
    கால்களில் பூட்டி ஓடும்
    சறுக்கும் சக்கரக் கால்கள்….

    […]

    கால இடைவெளி
    கண்ணைக்கட்டுமோ….
    ஓலமிடத்தான்
    உள்மனம் சுட்டுமோ
    […]

    அருகருகே அன்றொருநாள்
    இளமையும் முதுமையும்
    இனிதாகச் சந்தித்தன….

    முகச்சுருக்கங்கள் முகவரியாம்
    முதுமையினைப் பார்த்தபடி
    இளவட்ட இளமைதான்
    ஏளனமாய்க் கேட்டது…..

    காலதேவனின் கடைவாயிலில்
    கண்மயங்க நின்றதென்ன….
    ஓலமிடும் உள்நாக்கின்
    உணர்விழந்து நின்றதென்ன……

    காலதேவனின் நுழைவாயிலில்
    கால்பதிக்கும் கட்டிளமையே
    பாலபருவம் படிக்கவேண்டிய
    பாடங்கள்தான் நிகழ்காலம்
    அனுபவங்களால் முதிர்ச்சியுற்றேன்,
    அவலங்களால் அதிர்ச்சியுற்றேன்,
    நினைவலையில் நிறையவரும்
    நிகழுணர்வால் முதுமையுற்றேன்,

    அழகிழந்ததாய் நினைக்கின்றாய்
    அகவுணர்வால் அழகுற்றேன,
    நிறைவாழ்வு வாழ்ந்துவிட்டேன்
    நிம்மதியாய் இருக்கின்றேன்.
    காலனவன் அழைத்தாலும்
    கவலையில்லை ஏற்றிடுவேன்
    வாழுங்காலம் உனதன்றோ
    வாழ்ந்துவிடு இளமையிலே….

    வாய்க்கின்ற வாழ்க்கையிங்கு
    வாழ்நளில் ஒருமுறைதான்
    பேய்த்தனமான குணம்நீக்கிப்
    பெருவாழ்வு வாழ்ந்துபார்,
    நோயுடலம் கொள்ளாமல்
    நோன்புவாழ்வு வாழ்ந்துபார்,
    தேய்பிறையாய் வாழாமல்
    திருப்தியுடன் வாழ்ந்துபார்.

    முதுமையிலும் சுருக்கமின்றி
    முழுமையாக வாழ்ந்திடலாம்,
    புதுமையெனும் இளமையோடு
    பொலிவுறவே வாழ்ந்திடலாம்.

    இதுகேட்ட இளமைதான்
    இறுமாப்பை நீக்கிவிட்டு
    எதுசரியோ அதுவொன்றே
    இளமையினது வழியென்றே
    பொதுவான நல்பதிலை
    புன்னகையாய்த் தானளித்து
    முதுமையினை வணங்கியதே
    முகமலர்ந்து கரங்குவித்தே.

    அடுத்து நாம் சந்திக்கவிருப்பது இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை!

    சாதனைபுரியும் தகுதியும் திறனும் மாதரிடம் மலையளவு குவிந்திருந்தபோதினும், வீட்டுக்குள்ளேயே பெண்ணைப் பூட்டிவைத்தனர் அன்றைய விந்தை மனிதர்! புறநானூற்றுப் பெண்புலவர் பொன்முடியாருங்கூட, ஈன்று புறந்தருதலோடு பெண்ணின் கடனை முடித்துவிட்டுச் சான்றோனாக்கும் பொறுப்பைத் தந்தைக்குத் தந்துவிட்டது நம்மைச் சற்று வருந்தவே வைக்கின்றது!

    இன்றோ காலம் மாறிவிட்டது. அடுக்களையைத் துடைத்துக்கொண்டிருந்த பெண்ணரசி இன்று அண்டவெளியில் ஆராய்ச்சி செய்கின்றாள். அகத்தினுள் முடங்கிக்கிடந்தவள் இன்று சகத்தை ஆள்கின்றாள். ஆணினும் மேலாகப் பெண்ணினம் சாதிக்கும் காலமிது என்பதனைத் தக்கசான்றுகளோடு தன் அருமைப் பெயர்த்திக்கு விளக்கி, அவள் உயர்வுக்கு வழிகாட்டுகின்றார் அறிவிற்சிறந்த பாட்டி ஒருவர்!

     

    புலியை முறத்தால் விரட்டிய
    புறநானுற்றுப் பெண் கூட
    ஈன்று புறந்தருதல் என் தலை கடனே
    சான்றோனாக்குதல் தந்தையின் கடனே என
    ஆணாதிக்க சிந்தனைக்குள்
    அமிழ்ந்து போனாள்

    போற்றா ஒழுக்கம் கொண்ட கோவலனைத்
    தூற்றாது தலையிலேற்றித் திரிந்தாள் கண்ணகி

    அடக்குதலும் அடுக்களையில்
    முடக்குதலுமே தம் பணியென
    எம் தலைமுறையினர்

    சிறையிட்டுச் சிரித்தனர்

    என் அன்புப் பேத்தியே
    மாற்றங்கள் மலருகின்ற
    மகத்தான தருணமிது
    சமுதாயச் சன்னல்கள்
    மெல்லத் திறந்து
    முடங்கிக் கிடந்த நம்மீது
    விடுதலை வெளிச்சத்தைப்
    பாய்ச்சுகின்ற நேரமிது

    இனி ஆணுக்கு நிகராக… அல்ல
    அதை விடவும் மேலாகச்
    சாதித்துக் காட்டிச்
    சரித்திரம் படைப்பது
    நம் கடமை!

    ஆணினத்தின் பலவீனமாம்
    கொலை களவு காமம் மது
    இவற்றில் பங்கு கேட்பதல்ல
    நாம் கோரும் பெண்ணுரிமை!

    ஆடைக் குறைப்பும்
    அலங்கார மாற்றங்களும்
    அடிமை விலங்கொடித்த
    அறிகுறிகள் ஆகாது!
    ஜான்ஸி ராணி முதற்கொண்டு
    சானியா மிர்சா வரை
    சாதனைகளால் மட்டுமே
    நினைவு கொள்ளப்படுகிறார்கள்

    என் செல்லமே…!
    அறிவியல் அரசியல்

    இலக்கியம் ஆன்மீகம்
    இன்னும் பல துறைகளில்
    பெண்கள் கோலோச்சும் போதுதான்
    நாம் கொண்ட துயரங்கள்
    நம்மை விட்டு விலகும்!

    வறுமையில் வாடும் பாட்டியின்
    வார்த்தைகளா இவையென
    நீ வியப்பது புரிகிறது
    அறிவுக்கு வறுமையில்லை
    என் அன்புச் செல்லமே!

    நாளைய நாடு
    பெண்களால் மட்டுமே மலரும்
    நம்பிக்கை கொள்
    உன்னாலும் இந்த உலகம்
    உயரப் போகிறது ஒரு நாள்!

     

    ”வறுமை என்பது வாழ்வுக்குத்தான்; அறிவுக்கு இல்லை” எனும் பாட்டியின் வைர வரிகளைத் தாங்கிநிற்கும் இந்தக் கவிதையைப் படைத்திருக்கும் திரு. கொ. வை. அரங்கநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    ***

    ‘வாழ்க்கை என்பது ஊழின் வழியில் பயணிக்கும் தன்மையது’ என்பது மாந்தரின் பரவலான எண்ணம். இதனையே, ’நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப்படூஉம்’ என்று பறைசாற்றுகின்றது பூங்குன்றனாரின் புறப்பாட்டு!

     

    இதோ…இங்கே முதுமையின் மடிமையில் தலைசாய்ந்திருக்கின்றது இளமை. ஆனால் முதுமை, இளமைக்கு எத்தனைநாள் காவலாய் இருக்கவியலும்? குழந்தையின் வருங்காலம் நல்லமனிதர்களின் துணையால் நலமாய் இருக்கவேண்டுமே எனக் கவல்கின்றது ஒரு கவிதை!

     

    என்ன என்ன எண்ணங்கள் இச்
    சின்னப் பெண்ணின் நெஞ்சினில்
    சின்னச் சின்ன விழிகளினுள்
    தேங்கி நிற்கும் ஏக்கங்கள்

    நாளையிந்த வாழ்வினில் தான்
    பயணம் போகும் பாதையில்
    தைக்கப் போகும் நெருஞ்சி முட்கள்
    தரப்போகும் வலிகளை எண்ணுகிறாளோ?

    பாட்டியவள் மடியிலே இன்று
    பாவமவள் வாழும் வாழ்க்கை தரும்
    பாதுகாப்பு தொடர்ந்திடுமோ புவியில்
    பாட்டி கதை முடிந்து போனால்!?

    வாழ்வு தனது பரீட்சைகளை அவளுக்கு
    வழங்கி மனதை வலுப்படுத்திநாளை
    மங்கையரெல்லாம் பெருமைப்படும் வகை
    மாண்புமிகு புகழ் அடைந்து உயர்ந்திடுவாளோ?

    காலமொரு விசித்திர காற்றாடி
    சுற்றிச் சுற்றி வரும்போது அவரவர்
    சூழல் எங்கு நிலை கொள்ளுமோ வாழ்வுச்
    சூத்திரமே அதுதானே அகிலத்தினிலே

    பிஞ்சு மனக் கனவுகள் அவளை வாழ்வில்
    விஞ்சுமொரு நிலைக்கு உயர்த்தும் வகை
    நானிலத்தின் மனிதவகை உழைத்திட்டால்
    நாளையந்தச் சிறுமியின் விழிகளில் நாம்
    காண்பதெல்லாம் ஆனந்த நர்த்தனமே!

     

    பிஞ்சுக்குழந்தையின் நெஞ்சக்கனவுகள் பலித்திட வழிசொல்லும் திரு. சக்தி சக்திதாசனின் இக்கவிதைக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 53-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குரிய புகைப்படத்தின் உரிமையாளர் திரு. பிரேம்நாத் திருமலைசாமிக்கும், அவரின் புகைப்படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்துள்ள வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமை இதழின் நன்றி!

    marriage ritual

     

     

     

     

     

     

     

     

     

     

    ’இல்லறமல்லது நல்லறமில்லை’ என்பது முதுமொழி. ’அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்பது வாழ்வியல் அறிஞர் வள்ளுவரின் வாய்மொழி. இவ்வினிய இல்லறத்தைத் தொடங்கிவைப்பது இருமனங்கள் இணையும் திருமணம் எனும் மங்கல நிகழ்வு.

    ’உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவையோடு’ மிக எளிமையாய்த் தமிழர் திருமணம் நிகழ்ந்ததோர் பொற்காலம்! அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு வதுவைச் சடங்குகளை உள்ளடக்கியதாய் அது விரிவடைந்தது பிற்காலம்!

    திருமணம் என்பது இலட்சக்கணக்கான பொருட்செலவில் நிகழும் ஆடம்பரச் சடங்காய், வரதட்சணை எனும் பெயரில் பெண்ணை விலைபேசும் வியாபாரமாய் மாறிவிட்டிருப்பது தற்காலம்! இந்நிலை மாறி, திருமணம் காதலின் அடிப்படையில், எளிமையும், இனிமையும் நிறைந்ததாய் மாறும் காலம் எக்காலம்?

    ***

    இவ்வாரக் கவிதைப்போட்டியை அணிசெய்திருக்கும் மணியான கவிதைகளைப் படித்துச் சுவைக்கும் நேரமிது!

    மறக்கமுடியாத இனிய நிகழ்வுகளை உள்ளடக்கிய திருமணச் சடங்குகளை அழகிய சொல்மலர்களெடுத்து விளக்கியிருக்கின்றார் திரு. க. கமலகண்ணன். 

    அக்னியைச் சுற்றி
    அம்மி மிதித்து
    அருந்ததியைப் பார்த்து
    அனைத்து உறவுகளும்
    அருகிலே இணைந்திருக்க
    அருமையான தருணத்தில்
    அட்சதையைக் கரங்களால்
    அனைவரும் தூவ இனி
    அன்பு மனைவி இவள் என்று
    அருகில் அமர்ந்து மங்கள தாலியை
    அணிவிக்க மறக்க முடியாத நினைவுகளை
    அத்துணை சுலபத்தில் மறக்க முடியுமா
    அந்த அம்மி காத்திருக்கிறது
    அழகிய மணமகளின் கால் மிதிக்க
    அக்னி அம்மி குத்துவிளக்கு மரக்காலில் நெல்
    அனைத்துடன் ஒளிஓவியக் கருவிகளும்
    அற்புத நிமிடங்களைப் பதிவு செய்ய
    அன்புடன் இணைந்து கொண்டது இப்போது
    அளவில்லா ஆனந்தம் எப்போதும்
    அரிய நினைவுகளை நினைவுகூர

    ***

    சமையல் உபகரணமாயிருந்த அம்மி, சடங்கு உபகரணமாகிக் கரணம் (திருமணம்) முடிந்ததும் மூலையில் முடங்கிக் கண்ணீர் வடிக்கின்றது என்று வேதனையுறுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    சமையல் உபகரணம்
    சடங்கு உபகரணமாகி,
    வேலை முடிந்ததும்
    மூலையில் வைக்கப்படுகிறது..

    அம்மி மிதித்தவர்களும்
    அங்கே வேடிக்கை பார்த்தவர்களும்,
    அகன்றுவிட்டனர்
    அதை
    அம்போ என விட்டுவிட்டு..

    மெல்லியலார் கைகளால்
    மிளகரைத்த காலத்தையும்,
    மின் உபகரணங்கள் வரவால்
    மறக்கப்பட்டு
    புறந்தள்ளப்பட்ட கதையையும்
    எண்ணிக்
    கண்ணீர் வடித்துக் காத்திருக்கிறது
    அடுத்த
    கல்யாணத்திற்காக…!

    ***

    ’அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சம்பிரதாயமெல்லாம் பொருள்பொதிந்தவையே; வெறும் பொழுதுபோக்கல்ல’ என்கிறார் திரு. மெய்யன் நடராஜ்.

    அம்மி மிதித்து அருந்ததி பார்க்கின்றச் 
    சம்பிர தாயச் சடங்கினைக்  – நம்முன்னோர்  
    உண்டாக்கி வைத்ததெலாம் ஒப்புக்கு அல்லவே 
    கண்ணுற்றால் அர்த்தங்கள் நூறு. 

    ***

    ’வல்லமைமிகு வட்டெழுத்தே இல்லறம் எனப் போற்றுவர் பண்பாட்டுக் காவலர்; அந்நல்லறத்தை உணராத அறிவிலிகளோ அதனை நீர்மேல் எழுத்தெனச் சாற்றுவர்’ என்கிறார் திருமிகு. மலர்விழி மங்கையர்க்கரசி.

    இரட்டைநாயனமாய் எங்கும்
    இணைந்த இசைச்சங்கமமே
    குடும்பகீதம் என்றே உணர்த்திநிற்பன
    இரட்டைக் குத்துவிளக்குகளே!
    தொல்காப்பியன் சொன்ன
    மெய்ப்பாடெட்டையும் அன்புநீர்பெய்து
    அருஞ்சுவைதுவையலாய் நிகழ்வுகள்
    வழங்கி நீடூழிவாழ்வதே நல்லறஇல்லறமே
    ஈதுணர்த்தும் அம்மிக்கல் குழவி.
    நிறைநாழி நெல்நிறைத்தல்
    பறைசாற்றிப் பாரம்பரியம்போற்றி
    விதைநெல்லாய் வாழ்ந்துசிறக்கவே!
    அடியிரண்டு இணைநிற்கும்பாதங்கள்
    ஆளுக்கொன்றாய் அறுத்தோடி விலகாது
    அருகருகே அன்பாலிணைத்த இருகோடுகளே!
    இப்போது அறிவிலிகள்
    அரற்றுவர் தண்ணீரில்எழுத்தெனவே 
    எப்போதும் பண்பாட்டுக்காவலர்
    போற்றுவர் வல்லமைமிகு வட்டெழுத்தேயது!

    *** 

    படத்தில் காணக்கிடைக்கும் மங்கலப்பொருள்கள் ’இல்லறத்தில் இல்லாததொன்றில்லை’ என்பதையே குறிப்பால் உணர்த்துகின்றன என்பது திரு. மதிபாலனின் கருத்து.

    துன்பத்தை தூளாய் ஆக்கி 
          துயரத்தை அரைக்கும் அம்மி 
    இன்பத்தை எடுத்துக் காட்ட 
           இதம்தரும் மல்லி கைப்பூ
    அன்பென்னும் ஒளியை வீச 
           அழகான விளக்கி ரண்டு 
    என்னதான் இங்கே இல்லை 
            இருவரும் சேர்ந்து வாழ !

    ***

    திருமணவாழ்வு, அம்மியில் அரைபடும் அவல வாழ்வாயில்லாமல் செம்மையாய்ச் சீராய் அமைதலே நலம்; ஆதலால் நீக்கிடுக தேவையற்ற சுயநலம்” என விளம்புகின்றார் திருமிகு. வேதா இலங்காதிலகம்.

    சிந்திய அறுகரிசி சிதறிய பூக்களுமாயிது
    எந்த வகையிலோ மனக்கோல முடிவிது.
    பந்தங்கள் நிற்பது சீதனப் பொருட்களின்
    பக்கமாயும் இருக்கலாம் என்றும் கொள்கிறேன்.
    அம்மியில் அரைபடும் வாழ்வாக பலரது
    செம்மையாம் திருமண வாழ்வு அமைகிறது.
    அம்மையப்பன் போல பத்திரமாக நடுவிலது
    அமைவாகும் புகைப்படக்கருவியேன் புரண்டு கிடக்கிறது!

    குளப்பத்தின் பின்னரான ஒரு ஓய்வா!
    அளப்பரிய புயலுக்குப் பின்னான அமைதியா!
    விளக்கங்கள் அம்மி, அருந்ததி, விளக்கிற்கெனவோ
    வளமாகப் பலவுண்டு, வழக்கிலிவையெங்கே போகிறதோ!
    அலைந்த ஆதிவாழ்வு அமரிக்கையாய் தாலிக்கட்டுக்குள்ளானது.
    அந்த நிலைமாறி ஆதி நிலைக்கின்றிது
    தலைகீழாகிறது தடுப்பாரெவரோ! வழி எதுவோ!
    விலையற்ற கலாச்சாரம் பேணிக் காக்கப்படவேண்டும்!

    ***

    ஆணும் பெண்ணும் இல்வாழ்வில் இணையப் பாலமாய் விளங்கும் ’ஆயிரங்காலத்துப் பயிரான’ திருமணத்தில் நிகழ்த்தப்பெறும் சடங்குகளின் உட்பொருளை நுட்பமாய்த் தன் கவிதையில் நுவலுகின்றார் திருமிகு. சரஸ்வதி ராஜேந்திரன்.      

    எதிர்கால ஒழுக்கத்திற்கு
    அக்னி சாட்சி
    படியைத்தாண்டமாட்டேன் என்பதே
    அம்மி மிதித்தல்
    நிரந்தர கற்பு நட்சத்திரமாக மின்ன
    அருந்ததி பார்த்தல்
    பாலோடுசேர்ந்தபழம்போல் சுவைபெற
    பால் பழம் சாப்பிடல்
    பூ மணம் போல் புகழ் பரப்புவோம்என
    பூமணம் இடுவது
    ஒரு முடிச்சு கணவனுக்கு
    இரண்டாவது முடிச்சு
    தாய் தந்தையருக்கு
    மூன்றாவது முடிச்சு
    தெய்வத்துக்கு அடங்கி போக
    மூன்று முடிச்சு
    பெண்ணுக்கு தற்காப்பு வேண்டும்அது
    காப்பு கட்டல்
    இதன் அர்த்தம் புரிந்து
    ஆணும் பெண்ணும்
    இணைந்து வாழ்தலே நல்ல இல்லறம்
    வருவது ஒருமுறை
    அருமை புரிந்து வாழ்வது நடை முறை

    ***

    வாழ்க்கையெனும் பெருங்கடலை ’நம்பிக்கை’ எனும் துடுப்பின் உதவிகொண்டு மணமகனும் மணமகளும் கடக்கவேண்டும் என நல்லுரை பகர்கின்றார் திரு. நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்.

    அன்றே அய்யன் திருவள்ளுவர் 
    மனத்தை மலராக உவமையாக்கினார்
    இரு மனங்களும் சேருவது திருமணம்
    மணமகன் உயிராகவும் , அச்சாணியாகவும்
    மணமகள் உடலாகவும், சக்கராமாகவும்
    வாழ்க்கை என்ற இல்லறக் கடலை
    நம்பிக்கை என்ற துடுப்புடன் கடக்கட்டும்
    தங்கம் தற்சமயத்தில் பலரக்கும் எட்டாதொன்று
    பூவோ அனைவருக்கும் எட்டுமொன்று
    அம்மியை மிதக்கிறமோ , இல்லையோ
    மம்மியை (தன் அம்மாவை) மதிக்க  வேண்டும்
    அருந்ததியை பார்க்கிறமோ , இல்லையோ
    அன்பு, அடக்கம், கருணை, கடமை
    ஆணவமின்மை, பொறுமை, கோபமின்மை
    என்ற நற்குணங்குணங்கள் இருப்பவர்களாக
    இருத்தல் அவசியம்…

    ***

    சிந்தனைக்கு விருந்தாய் நல்ல கவிதைகளைப் படைத்திருக்கின்றீர்கள் கவிஞர்களே! பாராட்டுக்கள்!

    ***

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகியிருப்பது யார் என்பதை அடுத்து அறிந்துவருவோம்!

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது
    என்பது தெய்வ(ப்புலவரின்) வாக்கு. இன்றோ பல திருமணங்கள் அன்பும் பண்புமின்றிச் சந்தேகப் புயலிலும் வரதட்சணைச் சூறாவளியிலும் சிக்கிச் சின்னாபின்னமாகி வருவதை நாளுக்குநாள் நீதிமன்றங்களில் நீண்டுநிற்கும் மணவிலக்கு வழக்குகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன! அப்படியானால் அம்மியும் அருந்ததியும் மணவிழாவில் இடம்பிடிப்பதன் நோக்கந்தான் என்ன? மனிதர்களின் கல்மனத்தையும், மின்னிமறையும் நட்சத்திர இயல்பையும் உணர்த்தத்தானோ? என வேதனையோடு இன்றைய நடப்பைப் பேசும் ஒரு கவிதை நெஞ்சைத் தொடுகின்றது!

    எத்தனை சாட்சிகள்
    இருந்தால் என்ன
    ஆயிரங் காலத்துப்பயிர்
    சந்தேகப் புயலிலும்
    வரதட்சணை சுனாமியிலும்
    பொருந்தா மனப் புழுதியிலும்
    அகந்தைபிடித்தாட்டும் பனிப்பொழிவிலும்
    சின்னாபின்னப்பட்டுப் போகிறதே

    அம்மி மிதித்தல்
    அவ்வப்போது மனம் கல்லாதல்,
    அருந்ததி பார்த்தல்
    மின்னி மறையும நட்சத்திரமாய்த்
    தொலைந்து போதல்,

    குத்துவிளக்கேற்றி வைத்து
    அடியிலிருக்கும்
    இருளையே மனதில் நிறைத்தல்,

    மூன்று முடிச்சு
    முடிந்தால் கழுத்தை இறுக்கும்,
    பெண்ணிற்கோ
    அவசியப்படாத அடையாளமாய்

    எல்லாம் மங்கலமே
    சிதறு தேங்காயாய்
    வாழ்க்கையைப் பிரித்து மேய்ந்து
    முகநூல்களிலும், இணையங்களிலும்
    பேருக்கு வாய்க்கும்
    பொருந்தா நட்பின்
    சந்தர்ப்பவாதங்களினாலும், காமத்தாலும்
    பிரிவதற்கென்றே
    குடும்ப
    வழக்கு மன்றங்களில்
    அலைந்து கொண்டிருப்போர்க்கு
    இவை யாவும்
    அஃறிணைப் பொருட்களே
     

    ’மனப்பொருத்தமில்லா மணவாழ்வு, (நறு)மணமில்லா வருத்தமிகு வாழ்வே!’ என்பதை உணர்த்தியிருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. இளவல் ஹரிஹரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    ***

    தன் மணவாழ்வின் மங்கல நிகழ்வுகளை மணம்வீசும் மலரும் நினைவுகளாய் மீட்டிப்பார்க்கும் மங்கை இவள்!

    மஞ்சள் குங்குமங் கலந்தே
    நெஞ்சக் குடிலினுள் நீ
    குடி புகுந்த வேளையதை
    சூடி விட்ட மல்லிகையும்
    கூடி நின்ற ஆன்றோரின்
    தேடி வந்த அட்சதையும்
    வாழ்க என்ற வாழ்த்துகளும்
    சூழ்ந்து வந்த சுற்றமும்
    அம்மி மிதிக்கையிலே
    அம் மெட்டி நீ சூட்டும்
    அழகிய நினைவுகளும்
    ஒழுக்கத்தில் அருந்ததியை
    முழுவதுமாய் கொண்டிரு
    என்றுன் கை பிடித்து
    வான் ஒளிரும் நட்சத்திரமொன்றை
    பகலவனின் பகலொளியில்
    அகத்தினிலே வேண்டியதும்
    அக்கினியின் சாட்சியத்தில்
    இக் கன்னியின் கழுத்தில்
    மாங்கல்யம் சூட்டியதும்
    மங்காது என்னுள்ளே இன்று
    மீண்டும் இனிமையுடன்
    காணும் மணவிழாவில்
    தேனாய்த் தித்தித்தே
    மனதை நிறைக்கிறது

    ’நினைத்தாலே இனிக்கும்’ தன் திருமண நாளை மங்கையொருத்தியின் வார்த்தைகளாய்த் தேர்ந்தசொற்களில் விவரித்திருக்கும் திருமிகு. புனிதா கணேசனின் இக்கவிதைக்கு என் பாராட்டுக்கள்!

    Share
  • படக்கவிதைப் போட்டி 52-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணனின் புகைப்படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமிகு. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் வல்லமையின் நன்றிக்கு உரியவர்கள்.

     book store

     

     

     

     

     

     

     

     

     

     

    குவியல் குவியலாய்க் கொலுவிருக்கும் புத்தகங்கள்! வெறும் புத்தகங்களா அவை? இல்லை…அகத்தைத் தூய்மையாக்கி, அறிவை விரிவாக்கி, உலகை வெல்லச்செய்யும் ஆயுதங்கள்!

    நூல்களின் சிறப்பை விளக்கவந்த பாவேந்தர்,

    நூலைப்படி – சங்கத்தமிழ்
    நூலைப்படி – முறைப்படி
    நூலைப்படி!

    காலையிற்படி கடும்பகல்படி
    மாலை, இரவு பொருள்படும்படி
    நூலைப்படி!

    கற்பவை கற்கும்படி
    வள்ளுவர் சொன்னபடி
    கற்கத்தான் வேண்டுமப்படி
    கல்லாதவர் வாழ்வதெப்படி?  

    என்று மு(எ)ப்போதும் நூல்களைக் கற்கவேண்டியதன் அவசியத்தைச் செப்பிச் செல்கின்றார். 

    சரி…புத்தகக் குவியல்கண்ட நம் கவிஞர் பெருமக்கள் எத்தகு கவிதைகளைப் புனைந்திருக்கின்றனர் என அறியப் புகுவோம்!

     ***

    ’பொலிவாக முன்னர்த் தோற்றங்காட்டிய புத்தகங்கள் பின்னர் மதிப்பிழந்து மலிவாய்ப் போவதுபோன்றதே மானுட வாழ்வின் இயல்பும்!’ என்று புத்தகங்களை மனிதரின் நிலையோடு ஒப்பிடுகின்றார் திரு. மதிபாலன். 

    புத்தகங்கள் , ஏடுகளில் புன்னகைக்கும் ரத்தினங்கள்!
    பொத்திவைத்த அறிவென்னும் பொக்கிஷத்தின் சுரங்கங்கள்!

    உள்ளூரின் இதழ்முதலாய் உலகஇலக் கியம்வரைக்கும்
    எல்லாமும் இங்குண்டு,எடுப்பதெல்லாம் குறைந்தவிலை!

    கடைகடையாய் அலைந்தபின்னும் காணாத புத்தகமும்
    நடைபாதைக் கடையிதிலே நாம்காணக் கிடைப்பதுண்டு!

    புதிதாக வந்தபோது பொலிவாக இருந்ததுதான்
    எதனாலோ இங்குவந்து இயல்புகெட்டுக் கிடக்கிறது!

    பயனுள்ள வரைக்கும்தான் பலர்நம்மைப் புகழ்ந்திடுவார்
    பயன்குறைந்து போய்விட்டால் பாதையோரப் புத்தகம்தான்!…

    *** 

    ’நூலகத்தில் துலங்கி வாலறிவை வளர்த்த புத்தகங்கள் வழிமாறிப் போனாலும் மரணிப்பதில்லை; அவற்றைத் தேடித்தேடிப் படித்த மனிதனும் அவ்வாறே!’ என்று சாகாவரம் பெற்ற புத்தகங்களின் புகழ்பாடுகின்றார் திரு. கவிஜி.

    நீர் அடித்துப் போன 
    புத்தக நினைவுகளின்
    கூட்டுக்குள்
    திறந்து விடப் பட்டுக்
    கொண்டேயிருக்கிறது,
    சிறுவயது முதல் சேர்த்து
    வைத்த அவரின் நூலகம்… 

    அது
    வழி மாறிய பதிவுகளை
    கரையெங்கும்
    விட்டுப் போகிறது

    […]

    ஒரு புத்தகம், அதில்
    சில பக்கம்
    அல்லது ஒரு பக்கம் ஒரே
    ஒரு பக்கம்
    எவர் கையிலாவது அகப்படலாம்….

    மண்ணுக்குள் வேராக விதி செய்யலாம்
    வினை செய்யலாம்

    காலம் முழுக்க
    அடையாளமின்றி
    படித்தவர்,
    கடல் தாண்டியும் ஏதாவதொரு
    தீவுக்குள் விதையலாம்… 

    புத்தகங்கள் மரணிப்பதில்லை,
    படித்த அவரைப் போலவே

    *** 

    ’அட்டைக்குள் பதுங்கியிருக்கும் அறிவு நீரூற்று புத்தகம்; அதனிடம் தலைகுனிந்தவன் வாழ்வில் தலைநிமிர்வான்’ என்று அழகாக அனுபவமொழி பகர்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அறிவு நீரூற்று
    அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது

    அட்டைகளுக்குள்..

    எடுத்துக் குடிப்பவரை
    ஏமாற்றியதில்லை என்றும்,
    ஏற்றித்தான் விடுகிறது
    குன்றாய் உயர..

    இதனிடம் தலைகுனிந்தால்,
    தலைநிமிரலாம் வாழ்வில்..

    ஆனால் இன்று அது
    அடுக்கிவைக்கப்பட்டிருக்கிறது
    நூலகத்தில்,
    எடுத்துப்பார்க்க ஆளின்றி..

    கொலுவிருக்கிறது புத்தகக்கடையில்
    கூடுதல் விலை மதிப்பில்..

    அந்த அறிவு இங்கே
    பேரம் பேசப்படுகிறது
    பழைய புத்தகக் கடையில்…!

    *** 

    சொற்பமாய்க் கிடைத்த நேரத்திலும் அற்புதப் புத்தகங்களைக் கற்றுத் தன் சொற்சுவை நிறைந்த உரைகளால் பாராளுமன்றத்தில் பாராட்டைப் பெற்ற நேரு பெருமானைத் தன் கவிதையில் நினைவுகூர்ந்திருக்கின்றார் திரு. க. கமலகண்ணன்.

    நேரு பாராளுமன்றத்தில்
    புதிய புதிய கருத்துக்களையும்
    உதாரண உவமைகளையும் சொல்லுவாராம்
    கேட்கின்ற அத்துணைப் பேருக்கும்
    ஆச்சரியம் நேருக்கு மட்டும் எப்படி
    நேரம் கிடைகிறது ஒருவர் துணிந்து
    கேட்டே விட்டாராம் எப்படி என்று
    திருடினேன் என்றாராம் நேரு
    அரங்கமே அதிர்ந்து போனது
    புரியவில்லை என்றாரம் அவர்
    என் உதவியாளர் உறங்குவதற்கு
    நான்கு மணி நேரம் தருவார்
    அதில் ஒரு மணி நேரம் திருடி
    புதிய புத்தகங்களை படிப்பேன்
    என்று சொல்லி மீண்டும் அரங்கத்தை
    அதிர வைத்தாராம் நேரு
    புத்தகம் வெறும் காகிதமல்ல
    பொக்கிஷம்…

     ***

    புத்தகக்கடைகண்டு முத்தான கவிதைகளை வடித்திருக்கும் கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்!

    சிறந்த கவிதையைப் படைத்திருக்கும் கவிஞர் யார் எனக் கண்டுவரும் தருணமிது!

     ”தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத் தூறும் அறிவு” என்பது வான்புகழ் வள்ளுவரின் வாய்மொழி. அறிவை ஆழமாகவும் அகலமாகவும் வளர்த்துக்கொள்ள நாம் அகலாது அணுகவேண்டியவை நூல்கள்! வெறும் அச்சேறிய காகிதங்களாய்ப் பார்க்கப்பட்டுப் ’பயனில’ என்று வீசப்படும் புத்தகங்கள் எத்தனையோ அறிஞர்களையும் சிந்தனையாளர்களையும் அவனிக்கு அளித்தவை என்பதனை அவற்றின் மதிப்புணர்ந்த யாரே மறுப்பர்? அத்தகைய புத்தகங்களைப் பதுமநிதி எனப் புதுமையாய்ப் போற்றும் கவிதை என் சித்தத்தைக் கொள்ளையிட்டது! 

    வேண்டாமென்று வீசுவோர் பலர் அதை
    வேண்டுமென்று தேடுவோர் பலர்; அதைத்
    தோண்டி எடுக்கட்டுமென்ற தாராள மனதில்
    தோராயமாய் விற்கிறார் இங்கு இவர்!
    பாதையோரப் புத்தக அகமானாலும் தரம்
    போதையெனும் அறிவு பெற வரம்.
    கீதையும் பெரும் காதைகளும் மலிவாகி
    பாதையாகும் அறிவுச் சுடர் ஏற்ற.

    அழகோ அலங்கோலமோ அறிவிற்கேது தரம்!
    பழையதோ புதியதோ அறிவு மொழியுரம்.
    பழகிய அறிவுச் சாரற் குளிப்பாம்
    புத்தக வனத்துக் கருத்துணர்வுப் பொக்கிசம்.
    வாசிப்பு அருகிடும் காலத்தில் புதையலாய்
    நேசித்து அறிவூற்றில் நீந்திப் பயனடைவார்.
    புத்தகப் பக்கத்தில் ஒளிரும் முத்துக்கள்
    சத்தை உணராதவன் செத்தவன் ஆகிறான்.

    பாம்புப் புற்று போன்ற அடுக்கில்
    தோம்பு, தோட்டக்கலை, தொல்காப்பியம் ஈறாக
    கூம்பகம், கூட்டுறவு, கூத்துப் பாட்டென
    வேம்போ இனிப்போ அத்தனையும் தேடலாம்.
    பதுக்கிடு! என்றும் பழசென்று வீசாதே!
    பதுமநிதி போன்றது பன்முக நூல்கள்.
    மதுரவாக்கு  பழைய நூல்களும் வளர்க்கும்
    பொதுவான நல்லறிவு தேடிப் படி!

    ”தேடிப் படி நல்ல நூல்களை!” என நமைநாடிச் சொல்லும் கவிதையைத் தீட்டியிருக்கும் திருமிகு. வேதா. இலங்காதிலகம் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வு பெறுகின்றார்.

    *** 

    ’வண்ணச்சிந்தனைகளை வாழ்வில் விதைத்த புத்தகங்கள் இன்று கருப்பு வெள்ளையாய் நிறமாறிப் போனாலும், டிஜிட்டல் யுகத்திலே அவை எண்ணிம வடிவில் உருமாறிப் போனாலும், காகித உருவில் நம் நெஞ்சிற்கு இதமளித்த புத்தகங்களுடனான நம் உறவு காலத்தை வென்றது’ என்று கவினுறப் பேசுகின்ற கவிதையொன்று!

    வண்ண வண்ண சிந்தனைகளை
    வார்த்தெடுத்தப் புத்தகங்கள்
    எண்ணக் குவியல்களால்
    புரட்சிகளை உருவாக்கியப் புத்தகங்கள்
    இன்று
    கருப்பும் வெள்ளையுமாய் மாறிப் போனது
    காலத்தின் கோலம்!

    அன்று
    வாய் மொழிச் சொற்களில்
    வலம் வந்த சிந்தனைகள்
    கல்லுக்குள் இடம் மாறி
    ஓலைக்குள் உருமாறி
    தொழில் புரட்சி ஈன்றெடுத்த
    அச்சு இயந்திரத்தால்
    காகிதத்திற்குள் புகுந்து
    புத்தகமாய்ப் பரிணமித்தது!

    புவியின் நிலை மாற்ற
    புத்தகங்கள் ஆற்றிய பணி
    போற்றற்குரியது!

    இன்று
    காகிதத்திலிருந்து
    டிஜிட்டலுக்குத் தாவும்
    அறிவியல் தருணம்!

    வடிவ மாற்றமென்பது
    இயற்கையின் இயல்பே

    போர்டு ஐகானில் பயணிப்பவர்கள்
    மாட்டு வண்டிகள்
    மரணித்துவிட்டதே என்று
    கவலை கொள்வதில்லை!
    என்றாலும்
    புத்தகங்களுக்கும்
    நமக்குமான உறவை
    எந்த டிஜிட்டலினாலும்
    டெலிட் செய்ய முடியாது! 

    மனிதனைப் பல்துறை வித்தகனாக்கும் புத்தகங்களின் பரிணாமவளர்ச்சியைப் பாங்காய்ச் சொல்லியிருக்கும் திரு. கொ.வை. அரங்கநாதனின் கவிதையைப் பாராட்டுக்குரியது என அறியத்தருகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 48-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமதி. ராமலக்ஷ்மி ராஜனின் புகைப்படத்தை இவ்வாரத்திற்கான போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். வல்லமைமிகு பெண்மணிகள் இவ்விருவருக்கும் நன்றி நவில்கின்றது வல்லமை இதழ்.

     

     elephant

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    விலங்குகளில் கம்பீர அழகுகொண்டது யானை; தன் நெடிதுயர்ந்த தோற்றத்தால் காண்போரை வியக்கவும் நயக்கவும் வைப்பது!

    காடுகளில் புலியினையும், களங்களில் வீரரையும் பொருது கொல்லும் ஆற்றல்மிகு களிற்றியானை, தெருக்களில் வலம்வருகையில், அதன் இயல்புக்கு மாறான வகையில், ஒருவித மிரட்சியோடும், மருட்சியோடும்  நம்மை நோக்குவது வேதனை தருவதாயுள்ளது.

    இனி கவிஞர்களின் கவிதைகள் நம் கவனத்திற்கு…

    ***

    ”யாரோ கொடுத்த அன்பளிப்பாய்க் காட்டிலிருந்து நாட்டுக்குள் வந்தேன். இங்கே எனக்கு அன்பை அளிக்க எவருமில்லை! பாகனுக்கு உழைப்பதே என் பிழைப்பு; யாரும் இருக்குமிடத்தில் இருந்தால்தான் மதிப்பு!” என உள்ளம்குமுறும் களிற்றைக் காண்கின்றேன் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் கவிதையில்.

    யாரோ கோவிலுக்கு
    கொடுத்த அன்பளிப்பாம் நான்
    காட்டைவிட்டு( பிறந்தவீடுவிட்டு)
    நாட்டுக்குள் ( புகுந்தவீடுவந்ததும்) பாகனின்
    கட்டுப்பாட்டுக்குள் வந்தாயிற்று
    என் பழக்க வழக்கங்கள் யாவும்
    கரும்பையும் மூங்கிலும்தின்றவனுக்கு
    கடலையும் பொங்கலும் புளியோதரையும்
    சர்க்கரை வியாதியை உண்டாக்க
    மருத்துவரின் பரிந்துரைப்படி காலை
    ஒரு மைல்தூரம் நடைபயிற்சி பாகனுடன்
    போகும் வழியெல்லாம் மக்கள் அணுக
    சாமிக்கு சாமரம் வீசிய கையால்(தும்பிக்கையால்)
    யாசகம் கேட்க வைத்தான் பாகன்
    மக்கள் கொடுக்கும் இலவசம்
    உணவென்றால் எனக்கு
    பணமென்றால் பாகனுக்கு என
    புரிந்துணர்வு ஒப்பந்தம் இருவருக்குள்

    […]

    வேட்டையாடிய யானையாகி பாகன் கையில்
    வித்தை காட்டும் பொருளாகி வாழ்கிறேன்
    என்னை விட மனிதனுக்கு சக்தி அதிகம்தான்
    தன்னைப்போலவே என்னை மாற்றியுள்ளானே?
    வருடம் ஒரு முறைபிறந்த வீடு அனுப்புவார்கள
    ஆட்சியாளரின் அறிவுறைப்படி அதிகாரிகள்
    அது ஒன்றே எனக்கு ஆறுதல்தரும் விஷயம்
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான்
    எல்லா சவுக்கியமும்…….என்பதே நியதி

    ***

    ”கடவுளாய் முன்னோர் வணங்கிய என்னை, மக்கள்முன் கையேந்தவைத்த மனிதனின் மடமையை, பேராசையை என்னென்பது?” என்றெண்ணி வருந்துகின்றது இரந்துண்ணும் இந்த யானை என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உருவில் பெரிய யானையதை
    ஊர்வலம் பவனி நாயகரை,
    தெருவில் இரந்திட விட்டுவிட்டார்
    தேவை தமக்குப் பெருக்கிவிட்டார்,
    பெருகிடும் மாந்தர் ஆசைக்கே
    பெருந்துணை யாக்கிக் களித்திட்டார்,
    கருணை உருவாய்க் கண்டமுன்னோர்
    கடவுளாய்ப் படைத்ததை மறந்தாரோ…!

    ***

    கோயில்வாசலில் நிற்கும்போது யானைக்குப் பிடிக்காத மதம், கோயிலுள் மனிதரின் குலமும் கோத்திரமும் விசாரிக்கப்படும்போது ஆத்திரத்தில் பிடித்துவிடுகின்றது; காரணம்…அதற்குப் பிடிப்பதில்லை மனிதரின் ’மதம்’ என்பது திரு. மெய்யன் நடராஜின் வாதம்!

    கோயிலின் வாசலில் நிற்கின்றபோது
    கும்பிட்டு வணங்கிப் போவோர் கண்டும்
    பிடிக்காத மதம், யானைக்கு
    கோயிலின் தெய்வத்தை
    கும்பிட வருவோரிடத்தே
    குலம் கோத்திரம் கேட்டுக்
    குடைவதைப் பார்த்ததும்
    கோபத்தில் பிடித்துவிடுகிறதோ?

    *** 

    ”மதம் ‘பிடித்த’ மனிதரெலாம் மதம்பிடித்தே ஆடிடுவார்; மாற்றுமதங் கொண்டவரை மிதிப்பார்; தவறாய் மதங்கொண்ட யானையென விதிப்பார்” என்று மனிதமனத்தைப் படம்பிடித்துக்காட்டும் யானையைத் தன் கவிதையில் தீட்டியுள்ளார் திரு. இளவல் ஹரிஹரன். 

    பேருருவ யிரொன்று
    பிச்சைகேட்க வைத்துவிட்ட
    பீடிழந்தஂநிலைதந்த மனிதன்….தன்
    பேராசைக் கிரையாக்கும் கொடியன்.

    காடிழந்த கவலையோடு
    வாழ்விடத்தைத் தேடவைத்து
    ஊரூராய் ஓடவிட்ட மனிதன்….தன்
    ஒருநலமே நோக்கமெனும் கொடியன்.

    […]

    மனமகிழும் சர்கஸிலே
    மந்திரமாய் எனையாட்டி
    மக்களினைக் கவருகின்றான் மனிதன்….என்
    மனக்கவலை புரிந்துகொள்ளாக் கொடியன்.

    மதம்பிடித்த மனிதரெலாம்
    மதம்பிடித்தே ஆடிடுவார்
    மாற்றுமதங் கொண்டவரை மிதிப்பார்தவறாய்
    மதஙகொண்ட யானையென விதிப்பார்.

    ஓரானை பேரானை
    ஒன்றானை வணங்குதலால்
    ஊரானைக் காப்பதெந்தன் பண்பாம்….நல்ல
    பேரானைக் காப்பதுங்கள் அன்பாம்.

    சிறியதொரு சங்கிலியில்
    சிற்றானை கட்டுண்டு
    பெரியதொரு தும்பிக்கை ஆட்டும்அது
    பேரன்பில் பிணைந்திருக்கக் காட்டும்.

    கைநீட்டிப் பிச்சைகேட்கும்
    கவலையான நிலையெனக்குக்
    கணப்போதும் தந்திடவும் வேண்டாம்மனிதா
    கணநாதன் துணைமறக்க வேண்டாம். 

    ***

    கட்டுப்பாடற்றுக் காட்டில் சுதந்திரமாய்த் திரிந்துவந்த யானையைத் தன் உணவுத் தட்டுப்பாடு தீர்க்கப் பிச்சையெடுக்கவைத்த பாகனின் வன்செயலையும், அதனால் யானைபடும் பாட்டையும் சொல்லோவியங்களாய்த் தீட்டியுள்ளீர்கள் கவிஞர்களே! பாராட்டுக்கள்!

    அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார் என அறிந்துவருவோம்!

    இயற்கையின்படைப்பில் மனிதனை விஞ்சிய தன்னலஉயிர்கள் ஏதுமில்லை. தன்னூன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்; தான் வளமாய் வாழ்வதற்கு மன்னுயிர்களுக்கெல்லாம் இன்னல் தருவான். இதோ…கம்பீரநடைபயின்று காட்டில் களித்திருந்த களிற்றியானையை இரவலன் ஆக்கினான் இரக்கமற்ற மனிதன். இயற்கையோடு போட்டியிட்டுத் தோல்வியே தழுவிடினும் மாறவில்லை அவன் குணம்; நினைக்கையில் குமுறிடுதே மனம்! என்று யானையின்மீது கழிவிரக்கம்கொண்டு கவிவடித்திருக்கின்றார் ஒரு கவிஞர்!

    எங்களை அறியவில்லை!

    ஆண்டவன் பணிக்கு வந்த உன்னை
    அங்காடித் தெருக்கள்தோறும்
    கையேந்த வைத்த
    கருணையற்றவர்கள் நாங்கள்

    அன்பிற்கு நீ தந்த இசைவினை
    அடிமைச் சாசனமென்று எண்ணி
    உன்னை அடக்கி விட்டதாய்ப்
    போலிப் பெருமிதத்தில் புன்னகைக்கிறோம்

    உன் பலம் உனக்குத் தெரியாதென
    நிச்சயமாய் நம்பும் நாங்கள்
    எங்கள் பலவீனங்களை
    என்றுமுணர்ந்ததில்லை
    அதனால்தான்
    இயற்கையை வென்றுவிட்டோமென்ற
    எங்கள் இறுமாப்பு,
    கொட்டிய மழையில்
    முற்றிலுமாய்க் கரைந்தது

    பண்பற்ற எங்கள் செய்கைகளால்
    நீ பதற்றமடையும் பொழுதெல்லாம்
    மதம் பிடித்துவிட்டதாய் அறிவித்து
    மயக்க ஊசிப் போடுகிறோம்
    ஆனால் நாங்களோ
    மத வெறியுடனேத் திரிகிறோம்
    மயக்க ஊசிப்போட மட்டும்
    மருத்துவர் எவருமில்லை!

    அவ்வப்போது மதமும், வெறியும் கொள்ளும் யானையினும், எப்போதும் மதவெறிகொண்டலையும் மனிதனே அதிக அழிவினை அவனிக்குத் தருகின்றான் எனும் பொருத்தமான கருத்தைச் சொல்லும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. கொ.வை. அரங்கநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்று அறிவிக்கின்றேன். 

    ***  

    கல்லினுள் இருக்கும் தேரைக்கும் படியளப்பவன் அந்த ஈசன் என்பர் ஆன்றோர். ஆனால் இங்கோ பாகனுக்காக வீதியில் அலைந்துவிட்டுத் தன் விதியை நொந்தபடி வாயிலில் நிற்கும் இந்த வாயில்லா சீவனின் துயர் கண்டும் அவன் கல்லாய் இருப்பதேனோ? என்று அறச்சீற்றம் கொள்ளும் கவிதையொன்று!

    பிச்சை எடுக்க வைத்த
    மனிதனின் துரோகத்தில்
    தவம் கலைந்தது
    ஒற்றை யானை

    யாகச காட்சிக்கு
    மறுத்து விட்ட பசி
    வெறும் கோயிலின்
    சாட்சியானது

    யோசிக்க யோசிக்க
    எறும்பானது யானை,
    பெரும் சோகம்
    கண்களானது..

    புகைப்படத்தில்
    பதிந்திட்ட
    காடுகளின் பெருந்துயர்
    அங்குச பொய்மையில்
    ஆத்திரம் அடக்கியது

    எட்டிப் பார்த்து விட்டு
    தலை கவிழ்ந்து கொண்ட
    கடவுள் எப்போதும் போல..
    அதே கல்லுக்குள் 

    கடவுளைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றிடும் ஒரு களிற்றினைக் கண்ணுறச்செய்த திரு. கவிஜியின் கவிதையைப் பாராட்டுக்குரியது என்று சுட்டவிரும்புகிறேன்.

    பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி!

     

     

    Share
  • உணவும் உணர்வும்!

    -மேகலா இராமமூர்த்தி

    மனித சமுதாயத்தின் அடிப்படைத்தேவைகள் மூன்று. அவை உணவு உடை மற்றும் உறையுள். இந்த மூன்றிலும் முதலிடம் பெறுவது உணவே. உணவில்லையேல் புவியில் உயிர்வாழ்வே இல்லை. அதனாலன்றோ புறநானூறும், மணிமேகலையும்,

    ”உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே” என்று உணவு தருவோரைப் போற்றுகின்றன.

    பாவேந்தர் பாரதிதாசனும் இதேகருத்தை வழிமொழியும் விதமாய்,

    உணவினை ஆக்கல் மக்கட்(கு)
       உயிர் ஆக்கல் அன்றோ? வாழ்வு
    பணத்தினால் அன்று வில்வாட்
       படையினால் காண்பதன்று
    தணலினை அடுப்பில் இட்டுத் 
       தாழியில் சுவையை இட்டே
    அணித்திருந் திட்டார் உள்ளத்(து)
       அன்பிட்ட உணவால் வாழ்வோம் என்று மொழியக் காண்கின்றோம்.

    மனித வாழ்வுக்கு ஆதாரமாய்த் திகழும் இந்த உணவு குறித்து ஆராய்ந்தால், வையத்து மாந்தர் அனைவரும் ஒரே மாதிரியான உணவுப்பழக்கத்தைக் கொண்டவரல்லர் என்பது புலப்படும்.

    பரவலாய், மக்களிடையே வழக்கத்திலிருக்கும் உணவுமுறைகள் சில நம் பார்வைக்கு…

    மரக்கறி, புலால் எனும் இரண்டுவகை உணவையும் அனுமதிக்கும் அசைவ உணவுமுறை (உலகமக்களில் பெரும்பான்மை இனத்தோர் இவ்வகையினரே);  பால்படு பொருள்களையும், மரக்கறியையும் மட்டுமே அனுமதிக்கும் சைவ உணவுமுறை (சமணரும், இந்து சமயத்தின் சில பிரிவினரும் இம்முறையைப் பின்பற்றுகின்றனர்); புலாலுணவை ஆதரித்தாலும் உயிர்களை நேரடியாகக் கொலைசெய்தல் பாவம் என வலியுறுத்தும் பௌத்தரின் உணவுமுறை; இறைச்சியைப் புசிக்கலாம்; எனினும் பன்றியிறைச்சி கூடாது எனத்தடை விதிக்கும் இசுலாமியரின் உணவுமுறை போன்றவை மக்களிடையே அதிகம் காணப்படும் உணவுமுறைகளாகும்.

    இவையேயன்றி, புலால், பால்படுபொருள்கள், முட்டை, தேன் முதலியவற்றைத் தவிர்த்த மரக்கறியுணவைமட்டும் வலியுறுத்தும் வீகன் (Vegan) உணவுமுறை; தானியங்கள் தவிர்த்துப் புலால், பெர்ரிகள் (berries), விதைகள் (nuts) ஆகியவற்றைப் பெருமளவில் உண்ணச்சொல்லும் (கற்காலமனிதனின் உணவுமுறையான) பேலியோலிதிக் (Paleolithic) உணவுமுறை போன்றவையும் நடைமுறையில் உள்ளன.

    இவ்வுணவுமுறைகளைக் கூர்ந்துநோக்குங்கால், பல்வேறு இனக்குழுக்களின் மரபையும், பாரம்பரியத்தையும், அவரவர் வாழ்விடங்களில் அதிகம் கிடைத்த உணவினையும் அடிப்படையாகக்கொண்டே இவை அமைந்திருப்பது தெளிவாகின்றது.

    உயிரிரக்கத்தையும் அகிம்சையையும் முக்கியக் கொள்கைகளாய்க் கொண்டு கட்டமைக்கப்பட்ட சமணம், அதனடிப்படையில், உயிர்களைக்கொன்று அவற்றின் ஊனால் தயாரிக்கப்பட்ட ஊணை உண்பதைப் பாவமெனக் கருதி அதனைக் கடிந்து ஒதுக்கியது. இந்தக் கோட்பாட்டை, இந்துமதத்தின் சில பிரிவினரும் ’உயர்ந்தது’ என்று ஏற்றுப் பின்பற்றலாயினர். எனினும், உலகின் பெரும்பான்மையான சமயங்கள் மரக்கறி உணவைத்தான் மக்கள் உட்கொள்ளவேண்டும் எனும் கொள்கை எதனையும் வகுக்காததால், மரக்கறியுண்டு மன்னுயிர் ஓம்பும் மக்களைவிட, மாமிசம் உண்டு தன்னுயிர் ஓம்பும் மக்களின் தொகையே உலகில் மிகுதியாய் இருக்கக் காண்கின்றோம்.

    உயிரிரக்கக் கோட்பாட்டை உயிரென ஓம்பும் மாந்தர் இதுகண்டு உளம்நொந்து, ”உயிர்களைக் கொன்றுதின்பது பாவமில்லையா?” என்று வினவினால், அதனை ஏற்க மறுக்கும் புலாலுணவினர், ”உயிர்க்கொலையில்லாத உணவுமுறையே உலகில் இல்லை; மரக்கறி உணவிலும் உயிர்க்கொலை உண்டு; மரம், செடி, கொடிகளின் இலைகளைப் பறிப்பதுண்பதும், காய்கனிகளைப் பிடுங்கித் தின்பதும்கூடக் கொலைக்குச் சமமானதுதானே? அத் தாவரங்களுக்கு ஊறுசெய்வதுதானே? என்று எதிர்க்கேள்வி எழுப்புகின்றனர்.

    நம்மைச் சற்றே நிலைதடுமாறச் செய்யும் இக்கேள்விக்கு, சுதந்திரப்போராட்ட வீரரும், சிறந்த சிந்தனையாளருமான அமரர் சுப்பிரமணிய சிவா அவர்கள் பின்வருமாறு பதிலுரைக்கின்றார்:

    “நாம் நம் நகங்களையும் உரோமங்களையும் குறைப்பதால் அவை அழிந்துபோவதில்லை; மீண்டும் வளரவே செய்கின்றன. அதுபோல் மரம் செடிகளில் இலைகளையும் காய்கனிகளையும் பறித்துண்பதால் அவை அழிவதில்லை. மீண்டும் இலைகள் துளிர்க்கின்றன; காய்கனிகள் தோன்றுகின்றன. விலங்குகளைப் புசிப்பது அப்படியல்லவே? அவற்றைக் கொன்றன்றோ மக்கள் புசிக்கின்றனர்; மக்களின் உடல்கொழுக்க, அவ்வுயிர்கள் தம் உடலையும், உயிரையும் சேர்த்தேயன்றோ தியாகம் செய்கின்றன. அவற்றை மீண்டும் உயிரோடு மீட்டுவர இவர்களால் இயலுமா?” எனக் கேட்கின்றார்.

    சிவாவின் பதிலில் சமாதானம் அடையாத மாமிசப்பிரியர்கள், ”சிறந்த ஆன்மிகவாதியும், இந்துமதக் காவலருமான சுவாமி விவேகானந்தரே புலாலுணவை ஆதரித்திருக்கும்போது நாங்கள் உண்பதில் தவறென்ன?” என்று மீண்டும் அவரிடம் கேள்விக்கணை தொடுத்திருக்கின்றனர்.

    அதற்கும் அசரவில்லை சுப்ரமணிய சிவா. ”சில சந்தர்ப்பங்களை முன்னிட்டு விவேகானந்தர் அவ்வாறு சொன்னது உண்மைதான். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் மாமிசஉணவை வெறுத்தார் என்பதிலும், அதனை இகழ்ந்தே கூறியுள்ளார் என்பதிலும் ஐயமில்லை. ஆனால் மாமிச உணவின்மீது மட்டற்ற காதல் கொண்டிருக்கும் மக்களோ, அப்பழக்கத்தைக் கைவிடவிரும்பாமல், ஏதோ ஒரு விசேஷ சந்தர்ப்பத்தில் சுவாமிஜி சொன்ன அந்தக் கருத்தை அப்படியேபிடித்துக்கொண்டு தங்கள் உணவுக்கொள்கையை நியாயப்படுத்த முனைகின்றனர்; இஃது அவர்கள் சுயநலத்தின் வெளிப்பாடேயன்றி வேறில்லை” என்று சூடாகப் பதிலுரைத்திருக்கின்றார்.

    உண்மைதான்! மக்கள் எப்போதுமே பிறர் சொல்லும் கருத்துக்களில் அவர்களுக்குப் பிடித்தமான பகுதியை மட்டும் பிரித்தெடுத்துக்கொண்டு எஞ்சியதை விட்டுவிடும் குணமுடையோராகவே இருக்கின்றனர்!

    இல்லையென்றால், “தன்னை அடக்கியாளப்பழகியவன் ஒருபோதும் புறஉலக விஷயங்களுக்கு அடிமையாக மாட்டான்; அத்தகையவனே வையத்தில் வாழத் தகுதிபடைத்தவன் ஆகின்றான்” எனவும், ஈதொத்த இன்னும்பல பொன்மொழிகளையும்  வீரத்துறவி விவேகானந்தர் வையத்துக்கு வழங்கிச்சென்றிருக்க, அவையனைத்தையும் காற்றில் பறக்கவிட்ட மக்கள், புலாலை ஆதரித்து அவர் பேசியதை மட்டும் மறவாமல் பற்றிக்கொண்டு போற்றுவானேன்?

    உணவுமுறைகளுக்கும், மனிதரிடம் காணப்படும் (சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம் எனும்) முக்குணங்களுக்குமிடையே நெருங்கிய தொடர்பிருப்பதாய் அருளாளர்கள் கருதுகின்றனர். அவ்வகையில், தாவர உணவுகள் எளிதில் சீரணமாவதுடன், சத்துவ குணத்தையும் மிகுவிக்கும் ஆற்றல் பெற்றவை என்பதை ஆன்மிகம் ஒப்புக்கொள்வதுபோலவே மருத்துவ அறிவியலும் ஒப்புக்கொள்கின்றது. இதற்கு ஆதாரமாய்ப் பல ஆராய்ச்சிக்கட்டுரைகள் மருத்துவ ஆய்வேடுகளில் காணக்கிடைக்கின்றன.

    ”காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று பறவைகளையும் அரவணைத்தவன் மகாகவி பாரதி. பாடித்திரியும் பறவைகளையும், ஓடித்திரியும் விலங்களையும் கொன்றுதின்பது மனிதநேயச் செயலன்று என்று பகரும் பரிதிமாற்கலைஞர் எனும் தண்டமிழறிஞர், தன்னுடைய ’புள்’ எனும் கவிதையில் புள்ளினைக் கணைகொண்டு வீழ்த்தி, நெய்பெய்து சமைத்துண்ணும் மானுடரின் செயலை வன்மையாய்க் கண்டிக்கின்றார்.

    புள்ளே மென்சிறைப் புள்ளே பல்வகை
    வண்ணமும் மேவிய வனப்புடைப் பறவாய்
    […]

    ஐயகோ நின்னை அருமையிற் பேணார்
    வெய்ய கணைகொடு வீழ்ப்பர் அதான்று     
    நெய்பெய் தட்டுநிற் குய்ம்மணம் கமழ
    எயிற்றிடை மென்று வயிற்றின்
    இட்டு நாள்தொறும் கெட்டுலை வாரே!

    ’தனிப்பெருங்கருணையே அருட்பெருஞ்சோதி’ என்று முழங்கிய வள்ளலாரும், ”புலால் உண்ணற்க; எவ்வுயிரையும் கொலை செய்யற்க!” என்றே திருவாய்மலர்ந்தருளியுள்ளார். மண்ணுலகில் வாழ்வதற்குத் தமக்கிருக்கும் உரிமை பிற உயிர்களுக்குமுண்டு என்பதை மாந்தர் உணரவேண்டும். அவ்வெண்ணம் முகிழ்த்தால், பிறவுயிர்களின் ஊனை உவக்காது, உயர்வழியில் – உயர்ந்தோர் வழியில் தம் உணவுக்கொள்கையை அவர்கள் மாற்றிக்கொள்வர்.

    கொலையும் புலையும் கடிந்தொதுக்கிய மனிதனை மன்னுயிரனைத்தும் கைகூப்பித் தெய்வமெனத் தொழும் என்பது குறளாசானின் துணிபு.

    கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா உயிரும் தொழும்.
    (குறள்: 260)

    பிறவிகளில் அரிதான மானுடப் பிறவியை மகத்தான பிறவியாக்கும் அருள்நெறிக்கண் மாந்தர் அனைவரும் நின்றொழுகினால் மனித வாழ்க்கை பொருளுடைத்தாகும் என்பதில் ஐயமில்லை.

    ***

     கட்டுரைக்கு உதவியவை

    1. சுப்ரமணிய சிவா கட்டுரைகள் – ஞானபாநு

    2http://ourworld.unu.edu/en/new-research-says-plant-based-diet-best-for-planet-and-people

    3. http://nutritionfacts.org/topics/plant-based-diets/

    4. http://pssmovement.org/tamil/concepts/8-articles/58-neeya-nee-unum-unavu

    5. http://tamil.vallalyaar.com/?p=3002#Q1

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 47-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குரிய புகைப்படத்தை எடுத்துத்தந்திருக்கும் திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணனுக்கும், இப்படத்தைப் போட்டிக்கு ஏற்றது என்று தேர்வுசெய்துதந்திருக்கும் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமையின் நன்றி.

    sleeping buddha

    புவிவாழ் மாந்தர்கூட்டம் நித்தமும் படுந்துயர்கண்டு புத்தரும் மனம்சோர்ந்து நித்திரை கொண்டனரோ? என்ற கேள்வி நமக்குள் எழுகின்றது இந்தப்படத்தைப் பார்க்கும்போது!

    புத்தரின் துயில்கோலம் நம் கவிகளின் மனங்களில் எத்தகைய சிந்தனை அலைகளை எழுப்பியிருக்கின்றது என்று அறிந்துவருவோம்!

     ***

    ”அடடா…! மக்களெல்லாம் ஆசையைத் துறந்திட்டார்; அன்பை அணைந்திட்டார்; சமூகமெங்கிலும் சமாதானப் பூக்களின் மணம்! எனும் சுகமான கனவொன்று காண்கின்றார் புத்தர்” என்று விளம்புகிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அடடா,
    அகிலத்து மாந்தரெல்லாம்
    ஆசை துறந்திட்டார்,
    அன்பைத் துணைகொண்டார்..

    மாறிவிட்டனர் மனிதர்கள்,
    வேறுபாடுகள் இல்லை
    வெட்டுகுத்துகளும் இல்லை,
    எங்கும் எதிலும் சமாதானம்..

    மனிதனிடம் நோய்நொடி இல்லை
    மரணமும் இல்லை அவனுக்கு,
    நிரந்தரமாகிவிட்டான் மண்ணில்..

    இருந்துகொண்டே கனவுகாண்கிறார்
    புத்தர்,
    இதழில் புன்னகை மிளிர…! 

    *** 

    ”ஆசை அறுமின்காள்!” என்று வையத்தைப் பார்த்து நான் அறைகூவல் விடுக்கின்றேனே…! மக்களின் ஆசைகள் அறுபடவேண்டும் என்று நான்மட்டும் ஆசைப்படல் முறையோ?!” என்று தன் அறியாமையை எண்ணித் தன்னுள் நகைக்கும் புத்தரை நம்முன் நிறுத்துகின்றார் திரு. மெய்யன் நடராஜ். 

    ஆசைகளைத் துறக்கவேண்டும் என்று 
    ஆசைதானே பட்டிருக்கிறேன் நான் 
    ஆழ்ந்து சிந்திக்கும் எனக்கே  
    என் அறியாமையைப் பற்றி 
    சிரிப்பாக இருக்கிறது.

     *** 

    ”மோகனப்புன்னகை பொலியும் புத்தரின் திருமுகம் மோனத்துயில் கொண்டதேன்? எத்தனை போதித்தும் இத்தரை மானுடர் எள்ளளவும் திருந்தவில்லையே… எனும் விரக்தியால் இருக்குமோ?” என்று ஐயுற்று வினவுகின்றார் திருமிகு. வேதா. இலங்காதிலகம்.

     
    சித்தார்தரா அவரைப் பின்தொடரும்
    பக்த பிக்குணியா பால
    தேரோவா! பல கேள்விகள்
    தேரோடின காட்சியால் என்னுள்.
    எதுவும் கடக்குமெனும் சாந்தம்
    பொதுப் போதனை வதனம்
    மதுமிகு மோகனப் புன்னகை
    அது இறவாப் புன்னகை.

    அத்யந்த சயனம் கொண்ட
    அரசமரத்தடிப் புத்தர் எப்போது
    அமர்ந்த நிலையில் மறுபடி
    அழகு சயனம் கொண்டார்!
    தீராத நாட்டுப் பிரச்சனையால்
    பாராத முகமாய் அவர்
    இவர்கள் திருந்தார்கள் என்று
    நிகர்வில்லா ஆழ்ந்த உறக்கமா!

    மோனப் புத்தன் தூக்கம்,
    தானம் வாங்கும் தேரோக்கள்
    வானம் வெளிக்குமா! தமிழ்
    கானம் இலங்கையெங்கும் கேட்க!
    புத்தன் போதனை நாட்டில்
    சத்தின்றிப் போனது ஏன்!
    உத்தம புத்தம் ஏனோ
    மொத்தமாய்ப் பின்பற்றப் படவில்லை!

    ***

    ”தன்னுடைய பல்லையும் அங்கியையும் கேசத்தையும் புனிதப்படுத்தியோர், தான்போதித்த நேசத்தையும் நல்லறத்தையும் சேதித்து மனிதத்தை மரணிக்கவைத்துவிட்ட ஆயாசத்தில் புத்ததேவனும் நீடுதுயில் கொண்டான் போலும்!” என்பது திரு. இளவல் ஹரிஹரனின் அனுமானம்! 

    இளைப்பாறுதல்
    போதி தேவனுக்கும் தேவை….
    கால்கள் நோவ
    கால தேசங் கடந்து
    போதனைகள் பரவிய அளவு
    புனிதம் பெருகவில்லை
    என்ற ஆயாசம்….

    பல்லையும் முடியையும்
    அங்கியையும் அடியினையும்
    புனிதப்படுத்திய அளவு
    மனிதத்தை மறந்து
    புனிதத்தை இழந்தனரே
    என்ற ஆயாசம்….

    புத்தமும் சங்கமும்
    தர்மமும் போயினவோ
    பழங்கதையாய்…….

    யுத்தமும் பிரிவினையும்
    அதர்மமும் பெருகினவோ
    புதுக்கதையாய்……

    பட்டுப்போன போதிமரம்
    பால்சுரக்காதோ எனும்
    பரிவின் ஏக்கப் பெருமூச்சில்
    இன்னும் கொஞ்சம்….
    இன்னும் கொஞ்சம்….
    ஆயாசம் நீண்டு
    நீள்துயில் கொள்ள வைத்ததோ
    புத்த பகவானே.
         

    ***

    புத்தரின் அறிதுயில் காட்டும் மோனத்திருவுரு, நம் கவிஞர்களுக்குள் உறங்கிக்கிடந்த பல அரிய சிந்தனைகளைத் தட்டியெழுப்பியிருப்பதைக் கண்ணுற்று மகிழ்ந்தேன். பாராட்டுக்கள்! 

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞரையும், பாராட்டுக்குரிய கவிதையையும் அடுத்துக் காண்போம்! 

    ஞானி என்பவன் தன் அகத்துள்ளே மட்டும் தன்னைத் தேடுவதோடு நின்றுவிடுவதில்லை! அவன் தேடலின் பயணம்,

    ”நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று
    நீரினும் ஆரள வின்றே…” எனும் சங்கக்காதலுக்கு ஒப்பான அகலமும் ஆழமும் உயரமும் கொண்டதாய்ப் புறத்தேயும் விரிந்து பரந்தது. அவ்வாறு தன்னைத்தேடித் தானே பயணிக்கும் புத்தனின் முடிவற்ற தேடுதல் பயணத்தைப் பாடுபொருளாக்கியிருக்கும் கவிதை என்னைக் கவர்ந்தது.

    அக்கவிதை… 

    திசை வேண்டாத
    பறவையாய்
     
    ஒரு மாய பயணத்தில்
    புன்னகை மாறாமல்
    அமர்ந்திருக்கிறான் அவன்

    அவனின்
    இருத்தலில்
    அன்பென்ற பூக்கள்
    ஆகாயம் வரை
    வளர்ந்து கொண்டேயிருக்கிறது

    கேட்டதற்கு
    புத்தனைத் தேடி
    பயணம் என்றான்
    தொடர்ந்தபடி

    நன்றாக தெரியும் 
    போதியில் போதனை
    சொன்ன புத்தன்
    இவன் தானென்று…!

    இருந்தும் தன்னை
    வெளியில் தேடுவதும்
    தொடர்வதும்
    எதற்கான தொடக்கம்
    என்று
    யோசித்தேன்

    சட்டெனப் புரிந்ததில்
    காலம் உதறி,
    கர்வம் உதறிப்
    பின்தொடர்ந்தேன்,
    ஒரு புத்தனாக…! 

    காலமும் கர்வமும் உதறி, தன்னைக் கண்டடைதல் எனும் புண்ணியப் பாதையில் புத்தரின் பயணத்தை நீட்டித்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. கவிஜியைச் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்துள்ளேன். பாராட்டுக்கள் கவிஞரே!

     ***

    இந்தியத் திருநாட்டில் கருவாகி, உருவாகி, உச்சந்தொட்ட புத்தம், ஈழத்து மண்ணில் சருகாகிக் கருகி மரணித்த அவலத்தை அலசியிருக்கும் கவிதையொன்று நாடி நரம்புகளில் வேதனை மின்னலைத் தெறிக்கவிட்டது.

    அக்கவிதை…

    துக்கமுற்று, துயருற்று
    புத்தர் மகான்
    துஞ்சுகிறார் நிரந்தரமாய்,
    ஏக்கமுற்று மனது 
    வீக்கமுற்று
    இந்தியாவில் பிறப்பு!
    ஈழத்தில் மரிப்பு
    நீதி, நெறி வற்றிப் போன 
    இலங்கா புரியிலே
    ஈவு, இரக்க மின்றி
    பல்லாயிரம் தமிழ் மக்கள் 
    மானம் இழந்தார்!
    ஊனம் உற்றார்!
    உயிரிழந்தார்!
    உடல் உறுப்பிழந்தார்!
    உடைகள்
    உறிஞ்சப் பட்டார்!  
    கற்பிழக்கப் பட்டார்
    கால், கைகள்
    வெட்டப் பட்டார்!
    முலை அறுக்கப் பட்டார்!
    தலைகள் 
    துண்டிக்கப் பட்டார்
    விடுதலை
    வேண்டிப் போராடி யதற்கு!
    ஆண்டாண்டு 
    தோறும்
    சரித்திர  நாயகி 
    கண்ணீர் கொட்டி நமக்குக்
    கதை சொல்வாள் !
    ஈழத் தீவில்
    மீளாத் தூக்கத்தில்
    விடை பெறுகிறார்
    போதி மரப்
    புத்தர்! 

    சிங்களத்தீவு, புத்தர் வகுத்த அன்புக்கும் அகிம்சைக்கும் மங்களம் பாடி, பவுத்தத்தை மீளாத் தூக்கத்தில் ஆழ்த்தியிருப்பது உள்ளுந்தொறும் வேதனையை மிகுவிக்கும் ஒன்றாகும். அதனை உள்ளந்தொடும் வண்ணம் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கும் திரு. ஜெயபாரதனின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியது என அறிவிக்கின்றேன்.

    சொல் புதிதாய்ச் சுவை புதிதாய்ச் சோதிமிக்க நவகவிதை படைத்துவரும் கவிஞர் குழாத்துக்கு மீண்டும் என் பாராட்டும் நன்றியும்!

     

     

     

    Share
  • நல்வழியில் நடக்கும் தொல்குடி!

    -மேகலா இராமமூர்த்தி

    மனிதகுலம் தோன்றிய தொடக்ககாலத்தில் மனிதர்கள் தனித்தனியாகவே வாழ்ந்தனர். காலப்போக்கில் விலங்குகளிடமிருந்தும், மழை, காற்று, தீ முதலிய இயற்கைச் சக்திகளின் இடர்களிடமிருந்தும் தம்மைக் காத்துக்கொள்வதற்காகவே அவர்கள் குழுக்களாய் வாழத்தொடங்கினர். எப்போது குழுக்கள் தோன்றினவோ அப்போதே யார் அதனை வழிநடாத்திச் செல்வது? எனும் கேள்வியும் பிறந்து, ”உடல்வன்மையும் மனத்திண்மையும் வாய்ந்தவொருவனே அதற்குத் தகுதியானவன்” என்ற தீர்வையும் அவர்கள் கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்தியிருக்கவேண்டும்.

    பின்னர், மாந்தகுலவளர்ச்சி காரணமாய், ஒரே இடத்தில் அனைவரும் வாழ்வதற்கு இயலாமல் மக்கள் இடம்பெயர்ந்தும், புலம்பெயர்ந்தும் குடியேறினர். அவ்வாறு அவர்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம் தொழிலடிப்படையிலான பிரிவுகள் தோன்றின. அவ்வவ்விடங்களில் அவர்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலைவர்களும் தோன்றலாயினர். இதுவே நாளடைவில் முடியாட்சிமுறையை முகிழ்க்கச் செய்தது எனலாம்.

    தலைவன் ஒருவன்கீழ் ஏனையோர் அடங்கிவாழும் இத்தகைய ஆண்டான் அடிமைமுறைக்கு என்று கால்கோள் நடப்பட்டதோ அன்றே போரும் பூசலும் வேர்கொள்ளத்தொடங்கிவிட்டன. யார் அடுத்துத் தலைவனாகி அனைவரையும் அடக்கியாள்வது? யார் வையமனைத்தையும் தன் கையகப்படுத்துவது? என்ற போட்டியில் ஒற்றுமையும் சகிப்புத்தன்மையும் சகமனிதரையும் தன்னைப்போல் நேசிக்கும் அன்புடைமையும் மனிதர்களிடம் காணாமற்போயின. இன்றோ… பேராசையற்றவரை, உலகத்தோடு ஒட்டவொழுகும் உயர்ந்தோரை, நிபந்தனையின்றி அனைவரிடமும் அன்புபாராட்டும் நல்லுளம் கொண்டோரைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கின்றது! 

    இத்தகைய சூழலில், அன்பும் அமைதியும் அறவாழ்வும் வாழ்வோரை இனிக் காணவே வாய்ப்பில்லையோ என்று நாம் கவலும் வேளையில்… ”ஏன் காணமுடியாது? இதோ நாங்கள் இருக்கிறோம்!” எனும் குரல்கள் நம் காதுகளில் அமுதத்துளிகளாய் விழுகின்றன.

    ஆம்! அறத்தையும் அமைதிநெறியையும் கைக்கொண்டுவாழும் மக்கள் இன்னும் புவிப்பந்தைவிட்டு முற்றாய் அழிந்துபோய்விடவில்லை. அங்குமிங்குமாய்ச் சிலர் இன்னும் இந்நற்பண்புகளுக்கு நீர்பாய்ச்சி வளர்த்துவரவே செய்கின்றனர் என்றறியும்போது நமக்கு ஏற்படும் களிப்பு அளப்பரியது. அம்மேன்மக்கள் யார்? அவர்கள் எந்த நகரத்தில் வசிக்கின்றனர் என்று சிந்திக்கின்றீர்களா?

    அவர்கள் யாரும் நகரத்தில், நவநாகரிக உலகில்வாழும் மேட்டுக்குடியினரல்லர்; கல்வியில் கரைகண்ட அறிஞர்களும் அல்லர். பின்னர் யார்?

    Orang_Asliஅவர்கள் மலேசிய தீபகற்பத்திலுள்ள (Peninsular Malaysia) காடுகளில் வாழும் பழங்குடியினர்! என்ன வியப்பாயிருக்கின்றதா? அவர்கள் வாழ்க்கைமுறையை அறிந்தால் இன்னும் அதிகமான வியப்புக்கு நாம் ஆளாவோம்!

    அப்பழங்குடியினரின் வாழ்க்கைமுறையை அறிந்துவருவோம்! வாருங்கள்!

    ’ஓரங் அஸ்லி’ (Orang Asli = Native people/Aboriginal people) என்றழைக்கப்படும் மலேசியப் பழங்குடியினரில் 18 வகைகள் (18 types of tribes) இருப்பதாய்த் தெரிகின்றது. இவர்கள் 3 பெரும் பிரிவுகளில் அடக்கப்பட்டுள்ளனர். அத்தகைய பிரிவுகளில் ஒன்று ‘செமாங்’ (Semang). இந்தச் செமாங்கின் ஓர் உட்பிரிவுவே ’பெடக்’ (Batek) என்பது. இப்பிரிவினர் மலேசிய தீபகற்பத்திலுள்ள (Peninsular Malaysia) காடுகள், தாமான் நெகாரா தேசியப்பூங்கா (Taman Negara National Park) மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கின்றனர்.

    பொருளாதாரம்: காட்டிலிருந்து வேட்டையாடியும் சேகரித்தும் கிடைக்கின்ற காடுபடுபொருள்களை விற்றும், அரிதாக, மிகச்சிறிய அளவில் பயிர்த்தொழில் செய்தும் ஈட்டும் பொருளே இம்மக்களின் வாழ்வாதாரம். பொதுவுடைமையின் தந்தையான ’கார்ல் மார்க்ஸ்’ வந்து போதிக்காமலேயே பொதுவுடைமைத் தத்துவத்தைப் பின்பற்றுவதைத் தம் கடமையாகக் கொண்டிருப்பவர்கள் இம்மக்கள். ஆம்! தனியொருவன், (இவர்கள்) அனைவருக்கும் பொதுவான நிலத்தைத் தனதென்று உரிமைகோரும் ’ஏகபோக’ முதலாளித்துவக் கொள்கையே இவர்களிடம் கிடையாது. அவ்வளவு ஏன்… அந்தச் சிந்தனையே கேலிக்குரியது எனக்கருதுபவர்கள் இம்மக்கள்! காடும், அதிலுள்ள வளங்களும் அனைவர்க்கும் பொதுவானவை என்பதே இவர்கள் சித்தாந்தம்.

    Batek_girl_and_brotherநம்பிக்கைகளும் கொள்கைகளும்:  ஒரு மனிதன் இன்னொருவனிடம் எவ்வித நியாயமான காரணமுமின்றிச் சினங்கொள்வது, தம்மினத்தவருக்குக் காய்ச்சல், மூச்சுத்திணறல், உடல் பலவீனம், மனவுளைச்சல் முதலியவற்றைத் தருகின்ற ’கெஓய்’ (ke’oy) எனும் நோயைப் பரப்பும் என்று நம்புகின்றனர் இவர்கள். இந்த நோயால் பீடிக்கப்பட்ட ஒருவனை, இதனைப் பரப்பியதாய் மக்கள் நம்பும் இன்னொருவன், நாட்டுவைத்திய முறைகளைக் கையாண்டும், நோயாளியின் மார்பில் குளிர்ந்தகாற்றை ஊதியும் அவனுடலில் குடியிருக்கும் ’கெஓய்’ நோயை விரட்டவேண்டும்.

    இவ்வாறு, முறையற்ற ’வெகுளி’யால் சமூகத்திற்குத் தீங்குசெய்வோர் இச்சமூகமக்களின் ஆதரவை இழப்பர். ’பெடக்’ சமூகமக்களைச் ’சமாதானச் சகவாழ்வை விரும்பும் வேட்டைச்சமூகத்தினர் – 2011’-ஆக (Batek, a peaceful foraging society – 2011) என்று அறிவித்தார் அமெரிக்காவின் நியூ ஹாம்ஷையரிலுள்ள டார்ட்மவுத் கல்லூரியின் மானுடவியல்துறையின் கவுரவப் பேராசிரியரும், (Emeritus Professor, Dept. of Anthropology, Dartmouth College, New Hampshire, U.S.A.), பழங்குடியினர் குறித்த ஆராய்ச்சியில் ஆர்வத்தோடு ஈடுபட்டுவருபவருமான பேரா. கிர்க் எண்டிகாட் (Porf. Kirk Endicott)  என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

    போரைத் தவிர்த்தலும், தீர்த்தலும்: இம்மக்களிடையே கருத்துவேற்றுமைகள் ஏற்படுவது மிகக்குறைவு. அவ்வாறு ஏற்படுமாயின், பொதுமன்றில் தங்கள் பிரச்சனை குறித்து விவாதித்துத் தம் கருத்துக்கு ஆதரவு திரட்டுவது இவ்வினத்தாரின் வழக்கம். அம்முறை வெற்றிதராதாயின், கருத்துவேற்றுமை ஏற்பட்ட குழுக்களில் ஒன்று, மற்றொரு குழுவோடு தமக்கு விளைந்த கசப்புணர்வும் அதிருப்தியும் மாறும்வரை – மறையும்வரை, சிறிதுகாலம் தம் சமூகத்தைவிட்டு வெளியேறிவிடுமாம். சிறிதுகாலம் சென்றபின்பே மீண்டும்வந்து தம் மக்களோடு இணையுமாம். ’காலமெனும் மாமருந்து… கோபத்தையும் விரோதத்தையும் ஆற்றும் அருமருந்து’ என்று கண்டறிந்து செயற்படும் இம்மக்களின் உளவியலறிவு பிரமிப்பை ஏற்படுத்துகின்றது.

    சமூகத்தில் ஆண், பெண் நிலை: இக்குடியினரில், ஆடவரே பொதுவாக வேட்டைத்தொழிலைச் செய்வோராகவும், பெண்டிர் காய்கனிகளைச் சேகரிப்போராகவும் விளங்குகின்றனர். எனினும், இருவரின் உழைப்பும் சமமாகவே மதிக்கப்படுகின்றது. அரிதாக, வேட்டையில் பெண்டிரும், காய்கனி சேகரிப்பில் ஆடவரும் ஈடுபடுவதுண்டு. ’இந்தத் தொழிலை இவர்தான் செய்யவேண்டும்’ எனும் கடுமையான வரையறையோ, ஆடவரையும் பெண்டிரையும் பால் அடிப்படையில் பிரித்துப்பார்க்கும் நடைமுறையோ இவர்களிடம் இல்லை.

    திருமணங்களும் ஆண், பெண் இருவரின் அன்பின் அடிப்படையிலும் அவர்களிடம் காணப்படும் ஒத்தகுணங்களின் (பொருத்தத்தின்) அடிப்படையிலுமே அமைகின்றன. சமூகத்தின் அடக்குமுறையும், ஆதிக்கமும் காதலுக்குக் குறுக்கேநின்று குந்தகம் செய்வதில்லை. ஒத்த தலைவன் தலைவியருக்கிடையே அமையவேண்டிய ’பத்துவகைப் பொருத்தங்கள்’ குறித்து ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியம் சொல்வதை இங்கே நாம் பொருத்திப்பார்க்கலாம்.

    ”பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
    உருவு
    நிறுத்த காம வாயில்
    நிறையே
    அருளே உணர்வொடு திருஎன

    முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே” (தொல்: பொருள்: 488)

    தொல்காப்பியம் அறியாத்தொல்குடியினரான இவர்கள் அந்நெறி நிற்பது வியப்பே!

    இத்தகைய உளமொத்த காதல்வாழ்விலும், அத்திபூத்தாற்போல், கணவன் மனைவியரிடையேயான உறவில் விரிசல்கண்டுவிடுமானால் அவர்கள் இருவரும் மணவிலக்குப் பெறுவதையும் இச்சமூகம் அனுமதிக்கின்றது. அவ்வாறு மணவிலக்கு நிகழ்ந்துவிடும் சூழலில், மணவிலக்குப்பெற்ற பெண் தன் சுற்றத்தையும் நட்பையும் சார்ந்துவாழ வேண்டியவளாகின்றாள்.

    குழந்தை வளர்ப்பு: ’பெடக்’ சமூகத்தைச்சேர்ந்த பெற்றோர் தம் Batekman1குழந்தைகளைக் கொண்டாடுவதிலும், கொஞ்சுவதிலும், அவர்களோடு நேரம் செலவழிப்பதிலும் மிக்க ஆர்வம் உடையவர்கள். இதில், ஆண்குழந்தை பெண்குழந்தை எனும் பேதமில்லை அவர்களிடம்! பெற்றோர், குழந்தைகளை அடிப்பதும் தாக்குவதும் அரிதினும் அரிது. ஏனெனில் தாக்குதல், கொல்லுதல் எனும் பொருள்களில் கையாளப்படும் ’சேகல்’ (sakel) எனும் சொல், இச்சமூகத்தினரால் கடுமையாக வெறுத்து ஒதுக்கப்பட்ட சொல்லாகும். தாக்குதல் எனும் சொல்லையே வெறுப்பவர்கள் அதனைச் செயலில்காட்ட முனைவரா? குழந்தைகள்விளையாட்டில்கூட முரட்டுத்தனமோ, வன்முறையோ ஒருவரோடு ஒருவர் போட்டியிடுவதோ கூடாது என்றெண்ணுபவர்கள் இவர்கள். இவ்வினமக்களைப் பெற்றோராகப் பெறும் பிள்ளைகள் பேறுபெற்றோரே என்று எண்ணத்தோன்றுகின்றது!

    சமுதாய நடைமுறைகள்: இச்சமூகத்தினரில், ஒத்தசெயல்களில் ஆர்வம்கொண்ட பலர் ஒன்றுகூடி அச்செயல்களில் ஈடுபடுதல் வழக்கம். அவற்றிலொன்று மீன்பிடித்தல். எப்போதும் சுறுசுறுப்புடன் திகழும் இம்மக்கள் சோம்பித்திரிவதை விரும்புவதில்லை. ஏனெனில், ஒருவருடைய சோம்பல் இன்னொருவருக்கு வேலைப்பளுவைக்கூட்டும் என நினைக்கின்றனர்.

    சுயமதிப்பீடு: ’கானகமே தம் உறைவிடம்’ என்றெண்ணும் இவ்வினத்தார், தம்மைக் ’கானவராய்’ அடையாளப்படுத்துவதையே விரும்புகின்றனர். காட்டில் எந்த இடத்தில் தங்க விழைகின்றனரோ அங்கே குடிசைபோட்டுத் தங்குவதைத் தம் வழக்கமாய்க்கொண்டிருக்கின்றனர். கானகவாசம் குளிர்ச்சியையும், நல்ல உடல்நலத்தையும் தமக்குத்தருவதாய்க் கருதுகின்ற இம்மக்கள், மரங்களடர்ந்த காட்டைவிட்டு, வெப்பம்மிகுந்த திறந்தவெளிகளில் தங்குவதை விரும்புவதில்லை.

    பகிர்ந்துண்ணல்: ’பெடக்’ சமூகத்தைப் பொறுத்தவரை, தாங்கள் வேட்டையில் சேகரித்த உணவுப்பொருள்கள் அனைத்தையும் பகுத்துண்டுவாழும் பண்புகொண்டோராய்த் திகழ்கின்றனர். தம் இல்லங்களில் சமைக்கப்படும் உணவைத் தட்டிலிட்டு அதனைத் தம் பிள்ளைகளின் தளிர்க்கரங்களில் தந்து, மற்றவருக்கும் பகிர்ந்தளித்து உண்ணுதல் என்பது இவர்களின் வாழ்க்கைமுறையாய் இருக்கின்றது. பகுத்துண்ணலின் மகத்துவத்தைக் குழந்தைகளும் அறியவேண்டும் என்பதற்கான ஏற்பாடே இது. உணவு மட்டுமல்லாது, இவர்களுக்குப் பரிசிலாய்க் கிடைக்கும் பொருள்களையும்,  வணிகத்தின் வாயிலாய்ப் பெறும்/வாங்கும் பொருள்களையும் இவர்கள் பிறரோடு பகிர்ந்துகொள்ளத் தயங்குவதில்லை.

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
     (322) என்ற வள்ளுவத்தை இவர்கள் எங்குக் கற்றனர்?

    போருக்கும் வன்முறைக்கும் எதிரான அணுகுமுறை: இத்தொல்குடி மக்கள் வன்முறைக்கு முற்றிலும் எதிரானவர்கள். யாரேனும் பகைவர் தம்மைத் தாக்கவந்தால், எதிர்த்தாக்குதல் தொடுக்காமல் அவர்களிடமிருந்து தப்பியோடிவிடுவதையே தம் வழக்கமாய் வைத்திருக்கின்றனர். இது பயத்தினால் அன்று! பகைவனுக்கும் அருளும் இவர்தம் நன்னெஞ்சில் விளைந்த பாசத்தினால்!

    1988-ஆம் ஆண்டு, பெடக் மக்களை அவர்கள் வசிக்கும் காட்டுப்பகுதிக்கே சென்று சந்தித்த பேராசிரியர் எண்டிகாட், இவ்வினத்தைச்சார்ந்த மனிதன் ஒருவனிடம், “உம்முடைய முன்னோர் ஏன் தம்மைத் தாக்கியோரைத் துப்பாக்கியால் சுடவில்லை?” (“Why didn’t his ancestors shoot the attackers?”) என்று வினவியுள்ளார். அதற்கு அம்மனிதன் சற்று அதிர்ச்சியோடு, ”ஏனெனில், அவ்வாறு தாக்குவது அவர்களைக் கொன்றுவிடுமே!” (“Because it would kill them”) என்று பதிலிறுத்திருக்கின்றான். இப்பதில் அந்தப் பேராசிரியரை மட்டுமன்று…நம்மையும் திகைக்கவைக்கின்றது!

    ”வன்முறை, மற்றவருக்குத் துன்பமிழைத்தல், பழிவாங்குதல் போன்ற இழிகுணங்களை முற்றாய் வெறுத்தொதுக்கிய மக்கள் இவர்கள்!” என்று இவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கும் பேராசிரியர் எண்டிகாட், அண்டையில் வாழும் மலேசிய மக்களால் தமக்கு ஏற்படும் தொந்தரவுகளைத்தவிர்க்க இம்மக்கள் அவ்விடங்களைவிட்டு அகன்றுசெல்கின்றனரேயொழிய அவர்களை எதிர்த்துத் தாக்குதலோ, போரோ புரிவதில்லை என்று பதிவுசெய்திருக்கின்றார் (It was recorded in 1988).

    வான்புகழ் வள்ளுவரின் தெய்வக்குறள் போதிக்கும் இன்னாசெய்யாமை, சான்றாண்மை, ஈகை, ஒப்புரவு, அன்புடைமை, விருந்தோம்பல் உள்ளிட்ட அனைத்து அறப்பண்புகளையும் தம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கின்றனர் மலேசியக் கானகவாசிகளான பெடக் மக்கள்.

    நகரங்களில் வாழ்ந்தால்தான் நாகரிகம் வளரும்; பண்பாடு மிளிரும் என்ற எண்ணத்தில் நகரங்களை நாடிச்சென்று வாழ்ந்துவரும் நாகரிக மனிதர்களிடத்தும், அனைத்து அறநூல்களையும் எழுத்தெண்ணிப் படித்துவிட்டோம் என்று தருக்கோடும் செருக்கோடும் செப்பித் திரியும் மெத்தப்படித்த மேதைகளிடத்தும் காணக்கிடைக்கா அரும்பண்புகள், ’கானவர்’ என்று தம்மைப் பெருமிதத்தோடு புகலும் படிப்பறியா, உலகின் பாடறியா இத்தொல்குடியினரிடம் நிறைந்து கிடக்கின்றது!

    காட்டில் வாழ்ந்தாலும், கல்வியில் (நகர்வாழ் மக்களினும்) தாழ்ந்தாலும், நயத்தகு நாகரிகத்திலும், வியத்தகு (மாந்தப்) பண்புகளிலும் நாடுவாழ் நல்லறிஞரினும், காடுவாழ் இத்தொல்குடியினர் பன்மடங்கு உயர்ந்துநிற்கின்றனர். இத்தகையோராலேயே மானுடம் வெல்கின்றது!

    *** 

    கட்டுரைக்கு உதவியவை:

    https://en.wikipedia.org/wiki/Orang_Asli
    https://en.wikipedia.org/wiki/Batek_people
    https://cas.uab.edu/peacefulsocieties/societies/batek/

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 46-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. வாசகன் பாலசூரியனின் வண்ணப்படத்தை இவ்வாரத்தின் போட்டிப்படமாகத் தேர்வுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் வல்லமை இதழின் நன்றி!

     boy in a swing

    ’யாரிடமும் பூசலின்றிப் பிணக்கின்றி ஊசலாடி மகிழ்ந்திருந்தால் வாழ்வே பூக்கோலந்தான்!’ என்று தன் புன்னகையால் புரியவைக்கின்றான் இந்தப் பாலகன். கள்ளமற்ற அவன் காந்தப்புன்னகை உள்ளம் தொடுகின்றது!

    அடுத்து, போட்டிக்கு வந்துள்ள கவிதைகளைக் கண்ணுறுவோம் வாருங்கள்!

    ***

    ஊனமான பொம்மையும், உடைந்த ஊஞ்சலுங்கூட வஞ்சமிலா நெஞ்சு படைத்த பிஞ்சுக்குழந்தைகட்குக் குதூகலத்தையும் மகிழ்வையும் தந்துவிடுகின்றன. பெரியவராகும்போதுதான் ’போதும்’ எனும் பெருந்தனம் நம்மிடமிருந்து காணாமல் போய்விடுகின்றது என்று வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வஞ்சித்துவிட்டாலும் வறுமை,
    வஞ்சம் கொஞ்சமுமில்லை
    பிஞ்சுகள் நெஞ்சினிலே,
    அதனால்
    பஞ்சமில்லை சிரிப்புக்கு..

    ஊனமான பொம்மையிலும்,
    உடைந்த ஊஞ்சலிலும்
    கிடைத்துவிடுகிறது பேரானந்தம்..

    அடைத்துவிடுகிறது இந்த
    அமுத நீரூற்று,
    போதுமென்ற பெருந்தனம்
    போய்விடுகிறது,
    பிள்ளை
    பெரியவன் ஆனதும்..

    மாறுவானா மனிதன்
    மழலையரைப் பார்த்தாவது…!

    ***

    கற்பனைச் சிறகில் விரிகின்ற புதுஉலகினை விதைப்பது இச்சிறுவனின் முறுவலோ? என்று வியக்கிறார் திரு. கவிஜி.

    இல்லாத தேசத்தில்
    இரை தேடும்
    பறவையொன்றின்
    தொலைந்து போன
    ஒரு பாதை
    நீண்டு கிடப்பதான
    கற்பனையில்
    உதிர்க்கின்ற ஒரு இறகு
    புது உலகை
    விதைக்கத் தொடங்குகிறது,
    அது இவன் புன்னகையாகவும்
    இருக்கலாம்

    ***

    ஆணி கழற்றிய பலகையில் ஆணிக்கையாய் ஆடுகின்றான் சிறுவன். இந்தப் பலகையின் பழுதை நீக்கி அதனைக் குழந்தைகள் ஆடுதற்கேற்ற ஆசனமாய் மாற்றிடல் வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றார் திருமிகு. வேதா இலங்காதிலகம்.

    நாணிட வேண்டிய விடயம்
    பேணிப் பாதுகாக்காத விளையாட்டிடம்!
    ஆணி களட்டிய பலகையது
    ஆணிக்கையாகத் துணிந்து ஆசனமாக்கியது.

    பட சட்டத்தின் நடுவில்
    அடக்கிக் கட்டி, அமர்ந்து
    படபடப்பின்றி ஆடுகிறான் ஊஞ்சல்!
    அடடா! ஏழைக்கேற்ற எள்ளுருண்டை!

    விழுந்திடாது பிடிக்கும் உறுதியும்
    வழுகும் பலகையைக் கால்களால்
    அழுத்தும் சாதுரியச் சிரிப்பும்
    வாழ்வின் சவாலின் ஏற்பு!

    துள்ளும் மகிழ்வில் ஆடுகிறான்
    உள்ளதை வள்ளிசாக அனுபவித்துப்
    பிள்ளைகள் மகிழ்வாரவர் குணமது!
    அள்ளும் வாழ்க்கைப் பாடமது!

    பிள்ளைகள் விளையாட்டிடத்தை வளமாக
    பிரிதியுடன் பராமரித்தல் அவசியம்
    பிற்போக்கு நிலைமை மாறட்டும்!
    பிரதான கடமை மேலிடத்திற்கு

    (ஆணிக்கை – உறுதி)

    ***

    சிறுவனின் ஊ(ஞ்)சலாட்டம் உணர்த்திடும் வாழ்வியல் உண்மைகளைப் பாங்குறப் பதிவுசெய்திருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது எது, அதன் ஆசிரியர் யார் என்று காண்போம்!

    கள்ளமற்ற வெள்ளை உள்ளம் பிள்ளைகளுடையது. அவர்களால் மட்டுமே சிறிய விஷயங்களில்கூடப் பெரிய இன்பத்தைக் காணமுடிகின்றது. தம் மனத்தைத் துயரின்றிப் பேணமுடிகின்றது. இந்தக்கலையை பெரியவர்களும் கற்றால் ’பேராசை’ எனும் வார்த்தையே வையத்தில் வழக்கொழிந்து போகுமே!

    ”இதோ ஒரு சிறுவன் உடைந்த ஆசனத்தையும் அரியாசனமாய் எண்ணி ஆடுகின்றான்! முகத்தில் மகிழ்ச்சியோ கரைபுரண்டு ஓடுகின்றது. அவன் ஊசலை உந்தி முன்னேறுவது போலவே நாமும் வாழ்வில் உந்துதலோடு முயன்றால் அனைவரையும் முந்தலாம் என்கிறது ஒரு கவிதை; தருகிறது மனத் தெளிவை!

    போகி யால்
    யாரோ போக்கிய
    உடைந்த ஊஞ்சல்
    பழைய இரும்பு
    எடுப்பவனிடம் சிக்கப்
    பழசானாலும்
    புதிதாய்த் தெரிந்தது
    அவன் மகனுக்கு
    அடுத்த நாளே அதை
    அரசு கட்டிலாக்கி
    அரியணனை ஏறினான்
    ஆனந்தமாய் வீசிவீசிஆட
    தூசியாய் தெரிந்தது துயரம்
    மகனின் உல்லாசம்
    பெற்றவனையும்
    தொற்றிக்கொண்டது
    சுடுபட்ட வாழ்க்கை
    விடு பட்டதுபோல்
    ஊஞ்சல் ஆட்டம்
    உல்லாசமானதுதான்
    சிதறிக்கிடக்கும்
    சீர் கெட்டவாழ்க்கை
    உதறி உந்தி உந்தி ஆடி
    உவகை அடைந்தான்
    கிடைப்பதைக் கொண்டு
    திருப்திப்படும் வாழ்க்கை
    புரிந்து சகித்து
    பொருந்தியே வாழும்
    பாடம் எல்லோருக்கும்
    பொருந்தும்தானே!

    ’கிடைப்பதில் நிறைவாய் வாழ்வதே வாழ்க்கை’ என்று முத்தாய்ப்பாய்த் தன் கவிதையை முடித்திருக்கும்  திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    ***

    ’ஆண்டவன் ஆட்டுவிக்கும் ஊஞ்சலே இம்மானுட வாழ்க்கை; இதனை ஆடும் வகையில் ஆடினால் வாழ்வு பொருள்படும்; இல்லையேல் வாழ்வே இருள்படும்’ எனும் தத்துவ முத்தைத் தந்திருக்கும் கவிதையொன்று சிந்தை கவர்ந்தது.

    இருப்பதைக் கொண்டு
    மகிழ்வுடன் இங்கு
    இருப்பதே வாழ்க்கை…..இதைக்
    கருத்துடன் கூறும்
    சிறுவனின் சிறுமுகம்
    சிந்தனை நோக்கை.

    எத்தனை துயரம்
    இடரெது வரினும்
    இலேசாய்க் கொண்டால்மனமே
    அத்தனைத் துயரையும்
    அழிந்திடச் செய்யும்
    அகத்தில் குழந்தை ஆனால்.

    ஊஞ்சல் என்பது
    ஆடிடும் வாழ்க்கை
    யார்க்கும் எளிதாய் அமைவதுஅதை
    ஆடும் விதத்தில்
    ஆடி மகிழ்ந்தால்
    அற்புதமாகும் வாழ்வது.

    சிதைந்த ஊஞ்சல்
    அறுந்த சங்கிலி
    சிந்தையில் காட்டும் பாடமிதுஇந்தத்
    திறந்த வெளியே
    பாடம் புகட்டும்
    சிறந்த பள்ளிக் கூடமிது.

    பூக்கள் மலரும்
    குழந்தையின் சிரிப்பில்
    பூங்காவாகும் நாட்கள்….கவிப்
    பாக்களில் வளரும்
    பருவங்கள் தோறும்
    வாழ்க்கைப் புத்தகத் தாள்கள்.

    எல்லாம் அறிவோம்
    எதுவும் அறியோம்
    என்பது தானிங்கு வாடிக்கை….இதை
    எண்ணி ஒவ்வொரு
    மணித்துளிஂவாழ்ந்தால்
    வாழ்க்கை வாண வேடிக்கை. 

    ’ஊஞ்சலில் அமர்ந்து வாழ்வியலை உபதேசிக்கின்றான் இந்தச்சிறுவன். இவன் மனநிலையை நாமும் பெற்றால், வாழ்வே வண்ணம் சிந்தும் வாணவேடிக்கைதான்’ எனும் திரு. இளவல் ஹரிஹரனின் கவிதை பாராட்டுக்குரியதாய்த் தேர்வுபெறுகின்றது.

    பங்குபெற்ற அனைவருக்கும் என் நன்றி!

     

     

    Share
  • விளையாட்டிலும் வெளிப்பட்ட வீரம்!

    -மேகலா இராமமூர்த்தி

    வீரமும் காதலும் தமிழர்வாழ்வின் இருகண்கள் என்பது நாம் அடிக்கடிக் கேட்கும் வாசம்தான்! ஆம்! அன்றையமக்களின் வாழ்வில் வீரமும் காதலும் இணையில்லா இருபெரும் உணர்வுகளாகவே காட்சியளித்திருக்கின்றன என்பதற்கு நம்இலக்கியங்கள் சாட்சிகூறுகின்றன. காதலைப் பாடும் அகத்திணைப்பாடல்கள் எண்ணிக்கையில் மிகுதி; எனினும், வீரத்தை விதந்தோதிய பாடல்களுக்கும் பஞ்சமில்லை. முடிமன்னர் கோலோச்சிய அன்றைய தமிழகத்தில், ’(போர்செய்து) விழுப்புண்படாத நாளெல்லாம் வீண்நாளே!’ என்பதே தமிழக வீரர்களின் எண்ணமாயிருந்திருப்பதை வான்புகழ் வள்ளுவரும் திருக்குறளில் தெளிவுபடுத்தியிருக்கின்றார்.

    விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள்
    வைக்கும்தன் நாளை எடுத்து.
    (776)

    போரற்ற காலங்களில் ‘போரடிக்காமல்’ (not to get bored) பொழுதுபோக்குவதற்குக்கூட வீரவிளையாட்டுக்களையே நாடியிருக்கின்றனர் நம்மவர்! அவ்வாறு அவர்கள் விளையாடிய வீரவிளையாட்டுக்கள் சிலவற்றை இங்கே நாம் நினைவுகூர்வோம்!

    ஏறுதழுவுதல்: ஏற்றினைத் தழுவி அதன் திமிலைப்பிடித்து வீரஆடவர் அடக்குதலே ஏறுதழுவுதல் அல்லது ஏறுகோளாகும் (it is a bull-taming sport). இவ்விளையாட்டு ஆநிரைகளைத் தம் செல்வமாய்க்கொண்டிருந்த முல்லைநிலத்து மக்களிடையே அன்று மிகச்சாதாரணமாய் நடந்த ஓர் நிகழ்வு என்பதைச் சங்க இலக்கியம் நமக்கு அறியத்தருகின்றது. காளைகளின் கொம்பைப்பிடித்தல் ஆண்மை, வாலைப்பிடித்தல் தாழ்மை என்பது தமிழர்கொள்கை.

    முல்லைநிலத்துக் காரிகையரின் கைத்தலம்பற்ற அப்பகுதியைச்சார்ந்த ஆடவர் ஏறுதழுவுதல் எனும் வீரவிளையாட்டில் வென்றேயாகவேண்டும் என்பது நியதி. வளமான புல்லையுண்டுத் தளதளவெனக் கொழுத்துநின்ற ஏறுகள், கொடும்புலிகளையும் குத்திக்கொல்லும் வீரமும் ஆற்றலும் மிக்கவை. ஆதலால், அவற்றைக் ’கொல்லேறு’ என்று குறிப்பிட்டனர் மக்கள். அந்தக்கொல்லேற்றின் கொம்பைக்கண்டு அஞ்சாத வீரமறவரையே அந்நிலத்துமகளிர் மணப்பர். அவ்வாறில்லாது, ஏற்றைக்கண்டஞ்சித் தோற்றோடுவோனின் தோள்களை இம்மை மட்டுமின்றி மறுமையிலும் தழுவ மாட்டார்கள் அப்பெண்டிர்!

    இதைத்தான்,

    கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
    புல்லாளே ஆயமகள்
    என்கின்றது முல்லைக்கலி.

    Madurai-alanganallur-jallikattuஅற்றைநாளைய ஏறுதழுவுதலே இற்றைநாளைய ’சல்லிக்கட்டாகும்.’ மதுரை மாவட்டத்தைச்சார்ந்த அலங்காநல்லூர் எனும் ஊர் தமிழ்மரபின் எச்சமான இவ்வீரவிளையாட்டை அழிந்துவிடாமல் காக்கும் ஊராய்த் திகழ்ந்துவருகின்றது. சில்லாண்டுகளாக, இவ்விளையாட்டில் விதிமீறல்கள், அரசியல் போன்றவை (விரும்பத்தகாதவகையில்) உள்நுழைந்ததால் உச்சநீதிமன்றம் இவ்விளையாட்டுக்குப் ’பிராணிவதை’ என்று முத்திரைகுத்தித் தடைவிதித்துவிட்டது. அத்தடையைவென்று, நம்மறவரின் மாண்பைக்காட்டும் இவ்வீரவிளையாட்டு தமிழ்மண்ணில் மீண்டும் உயிர்த்தெழும் என்று நம்புகின்றனர் சல்லிக்காட்டு ஆர்வலர்கள்!

    மல்லாடல்: மற்போர் (wrestling) என்ற பெயரில் அன்று நடைபெற்றுவந்த மல்லாடலும் ஓர் வீரவிளையாட்டே! தமிழகத்தில் வீரமல்லர்கள் பலர் அன்றிருந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவன் உறந்தையிலிருந்த (உறையூர்) வேளிர்தலைவனான தித்தனின் மகனான பெருநற்கிள்ளி. அழகும் ஆற்றலும் ஒருங்கே பொருந்திய வீரஇளைஞனான பெருநற்கிள்ளி, ’போரவை’ என்று அழைக்கப்பட்ட மற்போர் பயிற்சிக்கூடமொன்றை நடாத்திவந்தமையால் ’போரவைக் கோப்பெருநற்கிள்ளி’ என்றே இவனை அழைத்தனர் புலவோர். யாது காரணத்தாலோ, ’நொச்சிவேலித் தித்தன்’ என்று பரணரால் புகழந்துபோற்றப்பட்ட (அகம்.122) தித்தனுக்கும், அவனுடைய வீரமைந்தனான பெருநற்கிள்ளிக்கும் மனவேறுபாடு வந்துவிட்டது. அதனால், மகனென்றும் பாராது கிள்ளியை ஊரைவிட்டு வெளியேற்றிவிடுகின்றான் தித்தன்.

    அத்தனால் (தந்தை) வெளியேற்றப்பட்ட பெருநற்கிள்ளி பலவிடங்களில் சுற்றிவிட்டு ஆமூர் எனும் ஊரில்வந்து தங்கியிருந்தான். அவ்வூரில் புகழ்பெற்ற மல்லன் ஒருவன் இருந்தான். அவன் பெருநற்கிள்ளி மல்லாடலில் வல்லவன் என்றறிந்து அவனை மல்யுத்தத்துக்கு அறைகூவியழைத்தான். சிலிர்த்தெழுந்த கிள்ளி, அந்த மல்லனின் மார்பின்மீது ஒருகாலும், முதுகின்மீது மற்றொருகாலும் வைத்து அவன் மதவலியை முருக்கி, பசித்த யானை மூங்கிலைத் தின்பதுபோல், அவன் தலையையும் காலையும் முறியமோதி அவனை வென்றான். இந்தக் காட்சியைக்கண்டு வியப்பும் பெருமிதமும் அடைந்த புலவர் சாத்தந்தையார், “மகன்புரிந்த இந்த அற்புதப்போரினை தித்தன் (விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்) கண்டிருக்கவேண்டுமே!” என்று மெய்புளகித்துப் பேசுகின்றார்.

    …. ஆமூர் ஆங்கண்
    மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
    ஒருகால் மார்பொதுங்கின்றே; ஒருகால்
    வருதார் தாங்கிப் பின்னொதுங்கின்றே
    நல்கினும் நல்கான் ஆயினும் வெல்போர்
    போர் அருந்தித்தன் காண்கதில் அம்ம
    பசித்துப் பணைமுயலும் யானை போல
    இருதலை ஒசிய எற்றிக்
    களம்புகு மல்லர் கடந்தடு நிலையே. (புறம் – 80)

    வேட்டையாடல்: வேட்டையாடுதல் அன்று சிலருக்குத் தொழிலாகவும் சிலருக்குப் பொழுதுபோக்கான வீரவிளையாட்டாகவும் விளங்கிற்று. வேட்டையைத் தொழிலாகக்கொண்டோர் ’வேடர்’ என்றும் ’வேட்டுவர்’ என்றும் அழைக்கப்பட்டனர். குறுநிலமன்னர்களான வேளிரும், பெருநிலமாண்ட வேந்தரும் இதனைப் பொழுதுபோக்காய்க் கொண்ருந்தனர். கொல்லிமலைத் தலைவனான ’வல்வில்’ ஓரி, ஓர் அம்பிலேயே யானை, புலி, மான், முள்ளம்பன்றி, உடும்பு என ஐந்து விலங்குகளை வீழ்த்தும் வில்லாளனாய்த் திகழ்ந்தான். அதன்காரணமாய், வில்லிலே வல்லவன் எனும்பொருள்பட ‘வல்வில்’ ஓரி என்று விளிக்கப்பட்டான்.

    விலங்குகளுக்கு வீடுபேறளிக்கும் கொலைத்தொழிலாக வேட்டம் விளங்கியபோதினும், அதிலும் ஓர் அறநெறியைப் பேணினர் வேட்டுவர் என்பதைக் கண்ணப்பநாயனார் புராணம் கவினுறக் கழறுகின்றது. ஆம்! விலங்குகளின் குட்டிகளையும், கருவுற்று வயிறலைத்து ஓடும் பெட்டை விலங்குகளையும் கொல்லாது விடுத்து, வலிய விலங்குகளை வேட்டையாடுவதையே வேட்டுவர் தம் வழக்கமாய்க்கொண்டிருந்தனர் என்றறியும்போது, வீரத்திலும் வெளிப்படும் அவர்தம் ஈரம் நம்மை நெகிழ்ச்சியுறச்செய்கின்றது.

    இச்செய்தியைப் பெரியபுராணம் மிடுக்கான சொற்களில் எடுத்தியம்புவதைக் காணுங்கள்.

    துடியடியன மடிசெவியன  
       துறுகயமுனி தொடரார்
    வெடிபடவிரி சிறுகுருளைகள்
     
       மிகைபடுகொலை விரவார்
    அடிதளர்வுறு கருவுடையன
     
       அணைவுறுபிணை அலையார்
    கொடியனஎதிர் முடுகியும்உறு
     
       கொலைபுரிசிலை மறவோர்   (பெ.புராணம் – கண்ணப்பநாயனார் புராணம்)

    இவ்வேட்டைக்கலை சங்ககாலத்தோடு மங்கிவிடவில்லை. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்து, வெள்ளையரை எதிர்த்து வீரமரணடைந்த மருதுசகோதரர்களில் மூத்தவரான பெரியமருது மிகச்சிறந்த வேட்டைக்காரராய்த் திகழ்ந்திருக்கின்றார். இச்செய்தியை, அவர்களோடு நெருங்கிப்பழகிய ஆங்கிலஅதிகாரி ஒருவர் தன்நூலில் பதிவுசெய்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ஆனைப்போர்: மனிதரும் மனிதரும் புரிந்துவந்த போர் போதாதென்று விலங்கினங்களையும் மோதவிட்டு வேடிக்கைப்பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர் பண்டைத்தமிழர். அவற்றில் ஒன்று ஆனைப்போர். கருமலை போன்ற ஆனைகளை ஒன்றோடொன்று பொருதச்செய்து கண்டுகளித்திருக்கின்றனர் சீமான்களும் கோமான்களும். இப்போரைப் பாதுகாப்பாய்க் காண்பதற்கென்றே அரசர்களின் தலைநகரங்களில் அன்று தனிமாடங்கள் இருந்தனவாம்.

    வள்ளுவரும், செல்வத்தைத் தன்னிடமுடைய ஒருவன் ஒருசெயலைத் தொடங்குவது, குன்றிலே ஏறிநின்று (கீழேநிகழும்) யானைப்போரைப் பார்ப்பதுபோல் பாதுகாப்பானது என்று கூறுவதை இங்கே நாம் நினையலாம்.

    குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
    உண்டாகச் செய்வான் வினை
    .  (758)

    ஆட்டுப்போர்: ஆனைப்போரைப்போலவே ஆட்டுக்கடாக்களை மோதவிட்டுக் களித்திருக்கின்றனர் தமிழ்க்குடியினர். அதற்கென்றே ஆட்டுக்கடாக்களைச் சிலர் வளர்க்கவும் செய்திருக்கின்றனர். இவற்றைப் ’பொருதகர்’ என்கின்றார் தெய்வப்புலவர்.

    ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
    தாக்கற்குப் பேருந் தகைத்து.
    (486)

    (ஊக்கமுடையவன் (காலம்பார்த்து) ஒடுங்கியிருப்பது, ஆட்டுக்கடா தாக்குவதற்குக் காலம்பார்த்து எவ்வாறு பின்வாங்குமோ அதனை ஒக்கும்.)

    சேவற்போர்: பறவையினங்களையும் போரின்றி இருக்கவிடவில்லைcock fight நம்மனோர். கோழிச்சேவல்கள், காடைகள் போன்றவற்றையும் போரில் ஈடுபடுத்தி அவற்றை ஆர்வத்தோடு கண்டுகளித்திருக்கின்றனர். சேவல்களின் கால்களில் முள்ளையோ கத்தியையோ கட்டிச் சற்றுக்கோரமாய்ப் போரிடச்செய்திருக்கின்றனர் என்று அறிகின்றோம்.

    கறுப்புறு மனமும் கண்ணில் சிவப்புறு சூட்டும் காட்டி
    உறுப்புறு படையின் தாக்கி உறுபகை இன்றிச் சீறி
    வெறுப்புஇல களிப்பின் வெம்போர் மதுகைய வீரவாழ்க்கை
    மறுப்பட
    ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும்;

    என்று சேவற்போரின் தன்மையைக் கம்பகாவியம் பேசும்.

    அந்நாளில், சோழரின் பழையதலைநகரான உறையூரில் வீரக்கோழிகள் மிகுந்திருந்தமையால் அதற்குக் ’கோழியூர்’ என்ற பெயரும், அதனையாண்ட சோழருக்குக் ’கோழிச்சோழர்’ என்றபெயரும் ஏற்பட்டன.

    இவ்வாறு, பொருதலில்லா வாழ்க்கை பொருளற்ற வாழ்க்கை எனும் கொள்கையுடையோராய் வாழ்ந்து, வீரவரலாற்றை வடித்துச்சென்றிருக்கும் தமிழரின் மறம் – அவர்தம் போர்த்திறம் நம்மை மலைக்கவைக்கின்றது அல்லவா? 

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 45-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணனின் கைவண்ணத்தில் உருவான புகைப்படத்தை இவ்வாரப் போட்டிக்கான படமாகத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞருக்கும், தேர்வாளருக்கும் வல்லமைஇதழ் நன்றி நவில்கின்றது.

    headstand kids

    தாம் சாதிக்க நினைப்பதைத் தலைகீழாக நின்றாகவேனும் சாதித்துவிடத் துடிக்கும் இந்த இளஞ்சிறார்களின் அரியமுயற்சி திருவினையாகட்டும்!

    இனி, இவ்வாரப் போட்டிக்கான கவிதைகளில் நம் கருத்தைச் செலுத்துவோம்!

    ***

    பட்டம்போலப் பறந்து பரவசத்தில் திளைக்கும் பிள்ளைகளுக்கு அழகிய ‘பிள்ளைத்தமிழ்’ பாடியிருக்கின்றார் திரு. வ.க. பரமநாதன்.

    பட்டம்   போலப்  பறக்கிறார்
    பரவ சத்தில் மிதக்கிறார்
    கட்டி நிழலை இழுக்கிறார்
    களிப்பி லாடிக் கிடக்கிறார்
    எட்டி நின்று பார்ப்பதில்
    எழுந்து ஓடத் துடிப்பதில்
    சுட்டிப் பிள்ளை யிவர்போலச்
    சுகிக்க மனதும் ஏங்குதாம்

    ***

    ’தலைகீழ் விகிதங்களாய் வாழ்க்கை இருக்கையில் இருகையை ஊன்றிச் சிரசாசனம் செய்துதானே சிம்மாசனம் பிடிக்கவேண்டியிருக்கின்றது’ என்று இந்தப் பிள்ளைகளின் சார்பில் வாதிடுகின்றார் திரு. இளவல் ஹரிஹரன்.

    தலைகீழ் விகிதங்களாய்
    வாழ்க்கை இருக்கையில்
    சிரசாசனம் செய்தே
    சிம்மாசனம் பிடிக்க வேண்டியுள்ளது

    சூரியனும்
    எங்கள் நிழலைச்
    சுட்டெரிக்குமோ……
    மகிழ்ச்சிக் கடல்
    பொதுவன்றோ எல்லோருக்கும்
    அந்த வானம் போல….

    கைநிறைய அள்ளுவோம்,
    களிப்பில் துள்ளுவோம்
    தொடுவானம் போலத்
    தொலைதூரம் செல்வதல்ல
    வாழ்க்கை……

    தொட்டுவிடும் தூரந்தான்,
    கையூன்றி நிலத்தைக்
    கைப்பிடிப்போம்
    நமக்கான இடம்
    எப்போதும் உள்ளது
    வாருங்கள் வாழலாம்….
    எல்லோரையும வாழ்த்தலாம்,
    வாழவைப்போம் என்றென்றும்..

    ***

    ’மண்ணில் தலைகீழாய் நின்றேனும் விண்ணைத்தாண்டிப் பறக்கவிழையும் இச்சிறாரை, பாசமெனும் வலைவிரித்து அடக்கிவிடாதீர்! அவர்தம் முன்னேற்றத்தை முடக்கிவிடாதீர்!’ என்று வேண்டுகோள் விடுக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வஞ்சமெனும் பெரும்பாரம்
    நெஞ்சில் புகாதவரை,
    பிஞ்சுக் குழந்தைகள் இதயம்
    பஞ்சுபோல் மெல்லியதுதான்..

    அதனால்,
    இறக்கைகள் இல்லாமலே
    பறப்பரிவர் விண்ணைத் தாண்டியே..

    பறக்கட்டும் இந்தப்
    பட்டாம்பூச்சிகள்,
    பாசவலை விரித்து
    முடக்கிவிடாதீர்கள் இவர்கள்
    முன்னேற்றத்தை..

    பறக்கட்டும் பறக்கட்டும்
    இந்தப்
    பட்டாம்பூச்சிகள்…!

    ***

    ’சிறுவர்காள்! துள்ளிவிளையாடும் பிள்ளைப்பருவ விளையாட்டுக்கள் உள்ளம் தொடுபவைதாம்! ஆயினும் இவற்றோடு நின்றுவிடாது எதிர்கால வாழ்வையும் சீராய்த் திட்டமிடுங்கள்! சிகரம் தொடுங்கள்! என்று இன்னுரை பகர்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    உண்மை உணர்க !
    உருண்டு திரண்டு
    உழன்று சுழன்று
    மண்ணில் இருந்து
    விண்ணில் பறக்க
    முயன்று பார்ப்பது
    பள்ளிசெல்லும் வயதில்
    துள்ளிப் பறப்பதும்
    இயல்புதான் இது
    விளையாட்டுதான் !
    ஆனால் வாழ்க்கையில்
    கெட்ட வழியில்
    சொத்து சேர்த்து உயராமல் நல்
    முத்தாய் பெயர் பெற
    நயம்பட உழைத்தும்
    சுயமாய் நேர்பட நின்றும்
    உயரம் ஏறி
    சிகரம் தொட்டு
    உயரும் நிலைதான்
    பிறப்பின் சிறப்பே
    எந்த நிலையிலும்
    உயர உயரப் பறந்தாலும்
    ஓர் நாள் பறவை கீழிறங்கும்
    உண்மைதனை உணர்க பிள்ளைகளே

    ***

    சுட்டித்தனம் செய்யும் இந்தக்கெட்டிக்காரச்சிறுவர்களுக்கு மண்ணில் நீந்துவதும் தலைகீழாய் நடப்பதும் சர்வசாதாரணந்தான்! என்கிறார் திருமிகு. வேதா. இலங்காதிலகம்.

    கடற்கரையில் சிரசாசனம் யோகாசனம்
    படம் தலைகீழான பதிவினம்
    வானம் கீழே கைமுட்டியின்று
    வாலாய உடலின் சாகசம்.
    மனமொரு நிலைப்படுத்தும் ஆசனம்
    தனம் தலையோடிணைந்து உறுப்புகளிற்கு
    உயிர்சத்து, தடையற்ற இரத்தோட்டம்
    உயர் ஞாபகசக்தி, குரலினிமையுருவாகும்.

    சிட்டுக் குருவிகள் சிறகடிப்பாய்
    சுட்டித்தனச் சிறுவருக்கிது சர்வசாதாரணம்.
    தண்ணீரில் நீந்துவது போன்றிவர்
    மண்ணில் நீந்துமிது கைநடை.
    தலைகீழ் நடையொரு சாகசம்
    விலையேதுமில்லை சுட்டிச் சிறுவருக்கு.
    கையால் சாகசம் செய்யுமிவருக்கு
    வாழ்க்கையொரு விளையாட்டுச் சதுரங்கம்.

    *** 

    தலைகீழாய் நின்று தவம்புரியும்(!) இந்தச் சிறுவர்களின் சாகசத்திற்குச் சிறந்த விளக்கங்களைத் தம் பாக்களின்வழி வழங்கியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    நம் அடுத்தவேலை…இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைச் சந்திப்பது!

    இன்றைய இளையபாரதத்தினர் நாளைய உலகை நன்முறையில் சமைக்கப்போகும் நவயுகத்தின் சிற்பிகள்! ஆதலால், கட்டுறுதிமிகு உடல்திறனை அவர்கள் இளமையிலேயே பெறுதற்குப் பெரியோர் துணை நிற்கவேண்டும். மண்ணிலும் கல்லிலும் மலையிலும் மழையிலும் துள்ளிவிளையாடினாலன்றோ உடல் உறுதிபெறும்? அதற்கு வாய்ப்பளிக்கும் விதத்தில், சிறார்களின் உலகை வீட்டுக்குள்ளேயே முடக்கிவிடாது, சிட்டுக்குருவிகளைப்போல் அவர்களைச் சுதந்திரமாய்த் திரிந்து பறந்துவரப் பெரியோர் அனுமதிக்க வேண்டும். ’கல்விப்பட்டங்கள்’ மட்டுமே வாழ்க்கை என்று எண்ணிவிடாது, சிறுவர்கள் வானைநோக்கி ஏவும் வண்ணப்பட்டங்களுக்குள்ளும் அவர்களின் மகிழ்ச்சியும் இன்பமும் மறைந்திருப்பதைப் பெரியோர் அறியவேண்டும்.

    அவ்வாறு, சிறுவர்களின் உலகத்தில் பயணித்து அவர்களின் உணர்வுகளைப் பொருளுள்ள வார்த்தைகளில் பொதிந்து தந்திருக்கும் கவிதையொன்று வாசித்தேன். அதில் இடம்பெற்றுள்ள… “நீங்கள் நினைக்கலாம் எங்கள் கைகளில் இருப்பது பட்டமென்று… பட்டமல்ல அது! விழுந்துவிட எத்தனிக்கும் பூமியைப் 
    பிஞ்சுக் கரங்களால் தாங்கிப் பிடிக்கும் காகிதச் சும்மாடு” என்ற வரிகளை மிகவும் நேசித்தேன்.

    அக்கவிதை…

    நம்பிக்கைச் சிறகுகள் போதும் எமக்கு.
    விண்ணை மண்ணாய் மாற்றும்
    வித்தைகள் கற்ற நாங்கள்
    வார்த்தைகள் கொண்டு தம்பட்டம்  அடியாமல்
    வானத்தில் பறந்து  எம் பட்டம்  விடுவோம் !

    நீங்கள் நினைக்கலாம்
    எங்கள் கைகளில் இருப்பது
    பட்டமென்று ,
    பட்டமல்ல அது.
    விழுந்துவிட எத்தனிக்கும் பூமியை
    பிஞ்சு கரங்களால் தாங்கிப் பிடிக்கும்
    காகிதச் சும்மாடு .

    எங்களை  எங்கள் உலகத்தில் நின்று பாருங்கள்
    உங்களிலிருந்து உதிர்ந்துபோன
    எங்களின் காலம் உங்களை
    எங்கள் உலகத்துக்கே
    மறுபடியும் அழைத்துப் போகக்கூடும் .

    வாருங்கள் எம்மோடு வந்து
    விளையாடுங்கள்.
    உங்கள் வறட்டுப் பிடிவாதங்களை
    எடுத்து வீசிவிட்டு
    எங்கள் மனதோடு எங்களிடம் வரும் உங்களை
    இந்த வானம் மட்டுமல்ல
    எந்த வானமும் நிராகரிக்காது.

    பெரியோர்களைச் சிறார்களின் உலகிற்கு இருகரம்நீட்டி வரவேற்கும் இந்தக் கவிதையைத் தீட்டியிருக்கும் திரு. மெய்யன் நடராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தெரிவுசெய்துள்ளேன்.

    ***

     

    சிறாருக்கும் அவர்தமைவிட்டு விலகியே நிற்கும் பெரியோருக்கும் இடையேயுள்ள வாழ்வியல் முரண்பாடுகளை அழகாய் விவரிக்கும் மற்றொரு கவிதையும் கண்டேன்! ”காடுகள் மரங்களோடு கடவுளையும் வளர்க்கத் தெரிந்தவர்கள் நீங்கள்!” என்று பெரியோரின் செயலைச் சரியாய்ச் சுட்டும் அறிவார்ந்த சிறுவர்களை இக்கவிதை நமக்கு அடையாளம் காட்டுகின்றது!

    எங்கள் உலகை
    உங்கள் சாவிகள்
    ஒருபோதும் திறக்காது

    அது மலைகள் வளர்ந்த
    தேசமாக இருக்கையில்
    உங்கள் கழுத்து ஓர்  எல்லையில்
    நின்று விடும்

    அருவிகள் செய்பவர்கள் நாங்கள்
    என்பதால் உங்கள்
    கேள்விகள் எங்களை
    நனைப்பதில்லை

    காடுகள் மரங்களோடு
    கடவுளையும் வளர்க்கத்
    தெரிந்தவர்கள்உங்கள்
    பிரார்த்தனைகளை நாங்கள்
    உதைத்துத் தள்ளுகிறோம்

    புல்வெளிகள் புதிது என்பது
    எங்கள் தத்துவம், மாயங்கள் என்பது
    உங்கள் முகம்..
    அது ஒப்பனைஎங்களுக்கு வேண்டாம்..

    எந்தப் பூட்டிலும் எங்கள்  உலகம்
    நுழைந்து
    வெளி வந்து விடும்அதற்கு
    உங்கள் சாவிகள் தேவையில்லை..

    காரணமற்ற எங்களை
    முறைத்து விட்டு நீங்கள்
    சென்றால்
    சரி என்று குட்டிக்கரணம்
    போட்டு விட்டு
    கடந்து
    விடுவோம் …
    பிறகு காட்டாறு என்று
    கூறுவது உங்கள் இஷ்டம்
     

    ஒப்பனைநிறைந்த பெரியோரின்உலகை வெறுக்கும் சிறாரையும், அவர்தரப்பு நியாயங்களையும் நிரலாய்ப் பட்டியலிட்டுள்ள திரு. கவிஜியின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்த் தேர்ந்தெடுத்துள்ளேன். 

    மலர்ந்துள்ள இந்தப் புதியஆண்டில் கவிஞர்தம் கற்பனைகள் மேன்மேலும் சிறக்க என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்!

     

    Share