-மேகலா இராமமூர்த்தி

திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணனின் கைவண்ணத்தில் உருவான புகைப்படத்தை இவ்வாரப் போட்டிக்கான படமாகத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞருக்கும், தேர்வாளருக்கும் வல்லமைஇதழ் நன்றி நவில்கின்றது.

headstand kids

தாம் சாதிக்க நினைப்பதைத் தலைகீழாக நின்றாகவேனும் சாதித்துவிடத் துடிக்கும் இந்த இளஞ்சிறார்களின் அரியமுயற்சி திருவினையாகட்டும்!

இனி, இவ்வாரப் போட்டிக்கான கவிதைகளில் நம் கருத்தைச் செலுத்துவோம்!

***

பட்டம்போலப் பறந்து பரவசத்தில் திளைக்கும் பிள்ளைகளுக்கு அழகிய ‘பிள்ளைத்தமிழ்’ பாடியிருக்கின்றார் திரு. வ.க. பரமநாதன்.

பட்டம்   போலப்  பறக்கிறார்
பரவ சத்தில் மிதக்கிறார்
கட்டி நிழலை இழுக்கிறார்
களிப்பி லாடிக் கிடக்கிறார்
எட்டி நின்று பார்ப்பதில்
எழுந்து ஓடத் துடிப்பதில்
சுட்டிப் பிள்ளை யிவர்போலச்
சுகிக்க மனதும் ஏங்குதாம்

***

’தலைகீழ் விகிதங்களாய் வாழ்க்கை இருக்கையில் இருகையை ஊன்றிச் சிரசாசனம் செய்துதானே சிம்மாசனம் பிடிக்கவேண்டியிருக்கின்றது’ என்று இந்தப் பிள்ளைகளின் சார்பில் வாதிடுகின்றார் திரு. இளவல் ஹரிஹரன்.

தலைகீழ் விகிதங்களாய்
வாழ்க்கை இருக்கையில்
சிரசாசனம் செய்தே
சிம்மாசனம் பிடிக்க வேண்டியுள்ளது

சூரியனும்
எங்கள் நிழலைச்
சுட்டெரிக்குமோ……
மகிழ்ச்சிக் கடல்
பொதுவன்றோ எல்லோருக்கும்
அந்த வானம் போல….

கைநிறைய அள்ளுவோம்,
களிப்பில் துள்ளுவோம்
தொடுவானம் போலத்
தொலைதூரம் செல்வதல்ல
வாழ்க்கை……

தொட்டுவிடும் தூரந்தான்,
கையூன்றி நிலத்தைக்
கைப்பிடிப்போம்
நமக்கான இடம்
எப்போதும் உள்ளது
வாருங்கள் வாழலாம்….
எல்லோரையும வாழ்த்தலாம்,
வாழவைப்போம் என்றென்றும்..

***

’மண்ணில் தலைகீழாய் நின்றேனும் விண்ணைத்தாண்டிப் பறக்கவிழையும் இச்சிறாரை, பாசமெனும் வலைவிரித்து அடக்கிவிடாதீர்! அவர்தம் முன்னேற்றத்தை முடக்கிவிடாதீர்!’ என்று வேண்டுகோள் விடுக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

வஞ்சமெனும் பெரும்பாரம்
நெஞ்சில் புகாதவரை,
பிஞ்சுக் குழந்தைகள் இதயம்
பஞ்சுபோல் மெல்லியதுதான்..

அதனால்,
இறக்கைகள் இல்லாமலே
பறப்பரிவர் விண்ணைத் தாண்டியே..

பறக்கட்டும் இந்தப்
பட்டாம்பூச்சிகள்,
பாசவலை விரித்து
முடக்கிவிடாதீர்கள் இவர்கள்
முன்னேற்றத்தை..

பறக்கட்டும் பறக்கட்டும்
இந்தப்
பட்டாம்பூச்சிகள்…!

***

’சிறுவர்காள்! துள்ளிவிளையாடும் பிள்ளைப்பருவ விளையாட்டுக்கள் உள்ளம் தொடுபவைதாம்! ஆயினும் இவற்றோடு நின்றுவிடாது எதிர்கால வாழ்வையும் சீராய்த் திட்டமிடுங்கள்! சிகரம் தொடுங்கள்! என்று இன்னுரை பகர்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

உண்மை உணர்க !
உருண்டு திரண்டு
உழன்று சுழன்று
மண்ணில் இருந்து
விண்ணில் பறக்க
முயன்று பார்ப்பது
பள்ளிசெல்லும் வயதில்
துள்ளிப் பறப்பதும்
இயல்புதான் இது
விளையாட்டுதான் !
ஆனால் வாழ்க்கையில்
கெட்ட வழியில்
சொத்து சேர்த்து உயராமல் நல்
முத்தாய் பெயர் பெற
நயம்பட உழைத்தும்
சுயமாய் நேர்பட நின்றும்
உயரம் ஏறி
சிகரம் தொட்டு
உயரும் நிலைதான்
பிறப்பின் சிறப்பே
எந்த நிலையிலும்
உயர உயரப் பறந்தாலும்
ஓர் நாள் பறவை கீழிறங்கும்
உண்மைதனை உணர்க பிள்ளைகளே

***

சுட்டித்தனம் செய்யும் இந்தக்கெட்டிக்காரச்சிறுவர்களுக்கு மண்ணில் நீந்துவதும் தலைகீழாய் நடப்பதும் சர்வசாதாரணந்தான்! என்கிறார் திருமிகு. வேதா. இலங்காதிலகம்.

கடற்கரையில் சிரசாசனம் யோகாசனம்
படம் தலைகீழான பதிவினம்
வானம் கீழே கைமுட்டியின்று
வாலாய உடலின் சாகசம்.
மனமொரு நிலைப்படுத்தும் ஆசனம்
தனம் தலையோடிணைந்து உறுப்புகளிற்கு
உயிர்சத்து, தடையற்ற இரத்தோட்டம்
உயர் ஞாபகசக்தி, குரலினிமையுருவாகும்.

சிட்டுக் குருவிகள் சிறகடிப்பாய்
சுட்டித்தனச் சிறுவருக்கிது சர்வசாதாரணம்.
தண்ணீரில் நீந்துவது போன்றிவர்
மண்ணில் நீந்துமிது கைநடை.
தலைகீழ் நடையொரு சாகசம்
விலையேதுமில்லை சுட்டிச் சிறுவருக்கு.
கையால் சாகசம் செய்யுமிவருக்கு
வாழ்க்கையொரு விளையாட்டுச் சதுரங்கம்.

*** 

தலைகீழாய் நின்று தவம்புரியும்(!) இந்தச் சிறுவர்களின் சாகசத்திற்குச் சிறந்த விளக்கங்களைத் தம் பாக்களின்வழி வழங்கியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

நம் அடுத்தவேலை…இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைச் சந்திப்பது!

இன்றைய இளையபாரதத்தினர் நாளைய உலகை நன்முறையில் சமைக்கப்போகும் நவயுகத்தின் சிற்பிகள்! ஆதலால், கட்டுறுதிமிகு உடல்திறனை அவர்கள் இளமையிலேயே பெறுதற்குப் பெரியோர் துணை நிற்கவேண்டும். மண்ணிலும் கல்லிலும் மலையிலும் மழையிலும் துள்ளிவிளையாடினாலன்றோ உடல் உறுதிபெறும்? அதற்கு வாய்ப்பளிக்கும் விதத்தில், சிறார்களின் உலகை வீட்டுக்குள்ளேயே முடக்கிவிடாது, சிட்டுக்குருவிகளைப்போல் அவர்களைச் சுதந்திரமாய்த் திரிந்து பறந்துவரப் பெரியோர் அனுமதிக்க வேண்டும். ’கல்விப்பட்டங்கள்’ மட்டுமே வாழ்க்கை என்று எண்ணிவிடாது, சிறுவர்கள் வானைநோக்கி ஏவும் வண்ணப்பட்டங்களுக்குள்ளும் அவர்களின் மகிழ்ச்சியும் இன்பமும் மறைந்திருப்பதைப் பெரியோர் அறியவேண்டும்.

அவ்வாறு, சிறுவர்களின் உலகத்தில் பயணித்து அவர்களின் உணர்வுகளைப் பொருளுள்ள வார்த்தைகளில் பொதிந்து தந்திருக்கும் கவிதையொன்று வாசித்தேன். அதில் இடம்பெற்றுள்ள… “நீங்கள் நினைக்கலாம் எங்கள் கைகளில் இருப்பது பட்டமென்று… பட்டமல்ல அது! விழுந்துவிட எத்தனிக்கும் பூமியைப் 
பிஞ்சுக் கரங்களால் தாங்கிப் பிடிக்கும் காகிதச் சும்மாடு” என்ற வரிகளை மிகவும் நேசித்தேன்.

அக்கவிதை…

நம்பிக்கைச் சிறகுகள் போதும் எமக்கு.
விண்ணை மண்ணாய் மாற்றும்
வித்தைகள் கற்ற நாங்கள்
வார்த்தைகள் கொண்டு தம்பட்டம்  அடியாமல்
வானத்தில் பறந்து  எம் பட்டம்  விடுவோம் !

நீங்கள் நினைக்கலாம்
எங்கள் கைகளில் இருப்பது
பட்டமென்று ,
பட்டமல்ல அது.
விழுந்துவிட எத்தனிக்கும் பூமியை
பிஞ்சு கரங்களால் தாங்கிப் பிடிக்கும்
காகிதச் சும்மாடு .

எங்களை  எங்கள் உலகத்தில் நின்று பாருங்கள்
உங்களிலிருந்து உதிர்ந்துபோன
எங்களின் காலம் உங்களை
எங்கள் உலகத்துக்கே
மறுபடியும் அழைத்துப் போகக்கூடும் .

வாருங்கள் எம்மோடு வந்து
விளையாடுங்கள்.
உங்கள் வறட்டுப் பிடிவாதங்களை
எடுத்து வீசிவிட்டு
எங்கள் மனதோடு எங்களிடம் வரும் உங்களை
இந்த வானம் மட்டுமல்ல
எந்த வானமும் நிராகரிக்காது.

பெரியோர்களைச் சிறார்களின் உலகிற்கு இருகரம்நீட்டி வரவேற்கும் இந்தக் கவிதையைத் தீட்டியிருக்கும் திரு. மெய்யன் நடராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தெரிவுசெய்துள்ளேன்.

***

 

சிறாருக்கும் அவர்தமைவிட்டு விலகியே நிற்கும் பெரியோருக்கும் இடையேயுள்ள வாழ்வியல் முரண்பாடுகளை அழகாய் விவரிக்கும் மற்றொரு கவிதையும் கண்டேன்! ”காடுகள் மரங்களோடு கடவுளையும் வளர்க்கத் தெரிந்தவர்கள் நீங்கள்!” என்று பெரியோரின் செயலைச் சரியாய்ச் சுட்டும் அறிவார்ந்த சிறுவர்களை இக்கவிதை நமக்கு அடையாளம் காட்டுகின்றது!

எங்கள் உலகை
உங்கள் சாவிகள்
ஒருபோதும் திறக்காது

அது மலைகள் வளர்ந்த
தேசமாக இருக்கையில்
உங்கள் கழுத்து ஓர்  எல்லையில்
நின்று விடும்

அருவிகள் செய்பவர்கள் நாங்கள்
என்பதால் உங்கள்
கேள்விகள் எங்களை
நனைப்பதில்லை

காடுகள் மரங்களோடு
கடவுளையும் வளர்க்கத்
தெரிந்தவர்கள்உங்கள்
பிரார்த்தனைகளை நாங்கள்
உதைத்துத் தள்ளுகிறோம்

புல்வெளிகள் புதிது என்பது
எங்கள் தத்துவம், மாயங்கள் என்பது
உங்கள் முகம்..
அது ஒப்பனைஎங்களுக்கு வேண்டாம்..

எந்தப் பூட்டிலும் எங்கள்  உலகம்
நுழைந்து
வெளி வந்து விடும்அதற்கு
உங்கள் சாவிகள் தேவையில்லை..

காரணமற்ற எங்களை
முறைத்து விட்டு நீங்கள்
சென்றால்
சரி என்று குட்டிக்கரணம்
போட்டு விட்டு
கடந்து
விடுவோம் …
பிறகு காட்டாறு என்று
கூறுவது உங்கள் இஷ்டம்
 

ஒப்பனைநிறைந்த பெரியோரின்உலகை வெறுக்கும் சிறாரையும், அவர்தரப்பு நியாயங்களையும் நிரலாய்ப் பட்டியலிட்டுள்ள திரு. கவிஜியின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்த் தேர்ந்தெடுத்துள்ளேன். 

மலர்ந்துள்ள இந்தப் புதியஆண்டில் கவிஞர்தம் கற்பனைகள் மேன்மேலும் சிறக்க என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 45-இன் முடிவுகள்

  1. புதிய வருசத்தில் முதல் ஆனந்தம். சிறந்த கவிதையாய் தேர்வாக்கியமைக்கு நன்றி. 
    தோழர் கவிஜி அவர்களுக்கும் மற்றும் சக போட்டியாளருக்கும் வாழ்த்துக்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *