படக்கவிதைப் போட்டி 47-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குரிய புகைப்படத்தை எடுத்துத்தந்திருக்கும் திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணனுக்கும், இப்படத்தைப் போட்டிக்கு ஏற்றது என்று தேர்வுசெய்துதந்திருக்கும் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமையின் நன்றி.
புவிவாழ் மாந்தர்கூட்டம் நித்தமும் படுந்துயர்கண்டு புத்தரும் மனம்சோர்ந்து நித்திரை கொண்டனரோ? என்ற கேள்வி நமக்குள் எழுகின்றது இந்தப்படத்தைப் பார்க்கும்போது!
புத்தரின் துயில்கோலம் நம் கவிகளின் மனங்களில் எத்தகைய சிந்தனை அலைகளை எழுப்பியிருக்கின்றது என்று அறிந்துவருவோம்!
***
”அடடா…! மக்களெல்லாம் ஆசையைத் துறந்திட்டார்; அன்பை அணைந்திட்டார்; சமூகமெங்கிலும் சமாதானப் பூக்களின் மணம்! எனும் சுகமான கனவொன்று காண்கின்றார் புத்தர்” என்று விளம்புகிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
அடடா,
அகிலத்து மாந்தரெல்லாம்
ஆசை துறந்திட்டார்,
அன்பைத் துணைகொண்டார்..
மாறிவிட்டனர் மனிதர்கள்,
வேறுபாடுகள் இல்லை
வெட்டுகுத்துகளும் இல்லை,
எங்கும் எதிலும் சமாதானம்..
மனிதனிடம் நோய்நொடி இல்லை
மரணமும் இல்லை அவனுக்கு,
நிரந்தரமாகிவிட்டான் மண்ணில்..
இருந்துகொண்டே கனவுகாண்கிறார்
புத்தர்,
இதழில் புன்னகை மிளிர…!
***
”ஆசை அறுமின்காள்!” என்று வையத்தைப் பார்த்து நான் அறைகூவல் விடுக்கின்றேனே…! மக்களின் ஆசைகள் அறுபடவேண்டும் என்று நான்மட்டும் ஆசைப்படல் முறையோ?!” என்று தன் அறியாமையை எண்ணித் தன்னுள் நகைக்கும் புத்தரை நம்முன் நிறுத்துகின்றார் திரு. மெய்யன் நடராஜ்.
ஆசைகளைத் துறக்கவேண்டும் என்று
ஆசைதானே பட்டிருக்கிறேன் நான்
ஆழ்ந்து சிந்திக்கும் எனக்கே
என் அறியாமையைப் பற்றி
சிரிப்பாக இருக்கிறது.
***
”மோகனப்புன்னகை பொலியும் புத்தரின் திருமுகம் மோனத்துயில் கொண்டதேன்? எத்தனை போதித்தும் இத்தரை மானுடர் எள்ளளவும் திருந்தவில்லையே… எனும் விரக்தியால் இருக்குமோ?” என்று ஐயுற்று வினவுகின்றார் திருமிகு. வேதா. இலங்காதிலகம்.
சித்தார்தரா அவரைப் பின்தொடரும்
பக்த பிக்குணியா பால
தேரோவா! பல கேள்விகள்
தேரோடின காட்சியால் என்னுள்.
எதுவும் கடக்குமெனும் சாந்தம்
பொதுப் போதனை வதனம்
மதுமிகு மோகனப் புன்னகை
அது இறவாப் புன்னகை.
அத்யந்த சயனம் கொண்ட
அரசமரத்தடிப் புத்தர் எப்போது
அமர்ந்த நிலையில் மறுபடி
அழகு சயனம் கொண்டார்!
தீராத நாட்டுப் பிரச்சனையால்
பாராத முகமாய் அவர்
இவர்கள் திருந்தார்கள் என்று
நிகர்வில்லா ஆழ்ந்த உறக்கமா!
மோனப் புத்தன் தூக்கம்,
தானம் வாங்கும் தேரோக்கள்
வானம் வெளிக்குமா! தமிழ்
கானம் இலங்கையெங்கும் கேட்க!
புத்தன் போதனை நாட்டில்
சத்தின்றிப் போனது ஏன்!
உத்தம புத்தம் ஏனோ
மொத்தமாய்ப் பின்பற்றப் படவில்லை!
***
”தன்னுடைய பல்லையும் அங்கியையும் கேசத்தையும் புனிதப்படுத்தியோர், தான்போதித்த நேசத்தையும் நல்லறத்தையும் சேதித்து மனிதத்தை மரணிக்கவைத்துவிட்ட ஆயாசத்தில் புத்ததேவனும் நீடுதுயில் கொண்டான் போலும்!” என்பது திரு. இளவல் ஹரிஹரனின் அனுமானம்!
இளைப்பாறுதல்
போதி தேவனுக்கும் தேவை….
கால்கள் நோவ
கால தேசங் கடந்து
போதனைகள் பரவிய அளவு
புனிதம் பெருகவில்லை
என்ற ஆயாசம்….
பல்லையும் முடியையும்
அங்கியையும் அடியினையும்
புனிதப்படுத்திய அளவு
மனிதத்தை மறந்து
புனிதத்தை இழந்தனரே
என்ற ஆயாசம்….
புத்தமும் சங்கமும்
தர்மமும் போயினவோ
பழங்கதையாய்…….
யுத்தமும் பிரிவினையும்
அதர்மமும் பெருகினவோ
புதுக்கதையாய்……
பட்டுப்போன போதிமரம்
பால்சுரக்காதோ எனும்
பரிவின் ஏக்கப் பெருமூச்சில்
இன்னும் கொஞ்சம்….
இன்னும் கொஞ்சம்….
ஆயாசம் நீண்டு
நீள்துயில் கொள்ள வைத்ததோ
புத்த பகவானே.
***
புத்தரின் அறிதுயில் காட்டும் மோனத்திருவுரு, நம் கவிஞர்களுக்குள் உறங்கிக்கிடந்த பல அரிய சிந்தனைகளைத் தட்டியெழுப்பியிருப்பதைக் கண்ணுற்று மகிழ்ந்தேன். பாராட்டுக்கள்!
இவ்வாரத்தின் சிறந்த கவிஞரையும், பாராட்டுக்குரிய கவிதையையும் அடுத்துக் காண்போம்!
ஞானி என்பவன் தன் அகத்துள்ளே மட்டும் தன்னைத் தேடுவதோடு நின்றுவிடுவதில்லை! அவன் தேடலின் பயணம்,
”நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே…” எனும் சங்கக்காதலுக்கு ஒப்பான அகலமும் ஆழமும் உயரமும் கொண்டதாய்ப் புறத்தேயும் விரிந்து பரந்தது. அவ்வாறு தன்னைத்தேடித் தானே பயணிக்கும் புத்தனின் முடிவற்ற தேடுதல் பயணத்தைப் பாடுபொருளாக்கியிருக்கும் கவிதை என்னைக் கவர்ந்தது.
அக்கவிதை…
திசை வேண்டாத
பறவையாய்
ஒரு மாய பயணத்தில்
புன்னகை மாறாமல்
அமர்ந்திருக்கிறான் அவன்…
அவனின்
இருத்தலில்
அன்பென்ற பூக்கள்
ஆகாயம் வரை
வளர்ந்து கொண்டேயிருக்கிறது…
கேட்டதற்கு
புத்தனைத் தேடி
பயணம் என்றான்
தொடர்ந்தபடி…
நன்றாக தெரியும்
போதியில் போதனை
சொன்ன புத்தன்
இவன் தானென்று…!
இருந்தும் தன்னை
வெளியில் தேடுவதும்
தொடர்வதும்
எதற்கான தொடக்கம்
என்று
யோசித்தேன்…
சட்டெனப் புரிந்ததில்
காலம் உதறி,
கர்வம் உதறிப்
பின்தொடர்ந்தேன்,
ஒரு புத்தனாக…!
காலமும் கர்வமும் உதறி, தன்னைக் கண்டடைதல் எனும் புண்ணியப் பாதையில் புத்தரின் பயணத்தை நீட்டித்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. கவிஜியைச் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்துள்ளேன். பாராட்டுக்கள் கவிஞரே!
***
இந்தியத் திருநாட்டில் கருவாகி, உருவாகி, உச்சந்தொட்ட புத்தம், ஈழத்து மண்ணில் சருகாகிக் கருகி மரணித்த அவலத்தை அலசியிருக்கும் கவிதையொன்று நாடி நரம்புகளில் வேதனை மின்னலைத் தெறிக்கவிட்டது.
அக்கவிதை…
துக்கமுற்று, துயருற்று
புத்தர் மகான்
துஞ்சுகிறார் நிரந்தரமாய்,
ஏக்கமுற்று மனது
வீக்கமுற்று!
இந்தியாவில் பிறப்பு!
ஈழத்தில் மரிப்பு!
நீதி, நெறி வற்றிப் போன
இலங்கா புரியிலே
ஈவு, இரக்க மின்றி
பல்லாயிரம் தமிழ் மக்கள்
மானம் இழந்தார்!
ஊனம் உற்றார்!
உயிரிழந்தார்!
உடல் உறுப்பிழந்தார்!
உடைகள்
உறிஞ்சப் பட்டார்!
கற்பிழக்கப் பட்டார்!
கால், கைகள்
வெட்டப் பட்டார்!
முலை அறுக்கப் பட்டார்!
தலைகள்
துண்டிக்கப் பட்டார்!
விடுதலை
வேண்டிப் போராடி யதற்கு!
ஆண்டாண்டு
தோறும்
சரித்திர நாயகி
கண்ணீர் கொட்டி நமக்குக்
கதை சொல்வாள் !
ஈழத் தீவில்
மீளாத் தூக்கத்தில்
விடை பெறுகிறார்
போதி மரப்
புத்தர்!
சிங்களத்தீவு, புத்தர் வகுத்த அன்புக்கும் அகிம்சைக்கும் மங்களம் பாடி, பவுத்தத்தை மீளாத் தூக்கத்தில் ஆழ்த்தியிருப்பது உள்ளுந்தொறும் வேதனையை மிகுவிக்கும் ஒன்றாகும். அதனை உள்ளந்தொடும் வண்ணம் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கும் திரு. ஜெயபாரதனின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியது என அறிவிக்கின்றேன்.
சொல் புதிதாய்ச் சுவை புதிதாய்ச் சோதிமிக்க நவகவிதை படைத்துவரும் கவிஞர் குழாத்துக்கு மீண்டும் என் பாராட்டும் நன்றியும்!
இராமன்-சீதா காலம் முதல் அரக்க குண அரசாட்சி நிலவும் ஈழத் தீவில், இருபத்தியைந்து ஆண்டுகளாய் நடந்த தமிழர் விடுதலைப் போரில், ஆயிரக் கணக்கில் உயிரிழந்தோர், கொலை செய்யப் பட்டோர், மான பங்கப் பட்டோர் துன்பக் கதைகளை, உலக வரலாறு இராமாயணக் காவியம் போல் பல்லாயிரம் ஆண்டுகள் மறக்காமல் சொல்லிக் கொண்டே இருக்கும்.
அந்த இரத்த களத்தில் புத்தர் பெருமானுக்கு இடமில்லை.
அதை வலியுறுத்திய எனது சிறு கவிதைக்குப் பாராட்டு தெரிவித்த வல்லமை படக்கவிதைத் தேர்வாளர் திருமிகு. மேகலாவுக்கு எனது நன்றியைக் கூறுகிறேன்.
சி. ஜெயபாரதன்