பழமொழி கூறும் பாடம்

0

– தேமொழி.

பழமொழி: சுரத்திடைப் பெய்த பெயல்

 

கரப்புடையார் வைத்தகடையும் உதவா
துரப்புடைய மன்னர்க்கே துப்புரவ தல்லால்
நிரப்பிடும்பை மிக்கார்க் குதவஒன் றீதல்
சுரத்திடைப் பெய்த பெயல்.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
கரப்பு உடையார் வைத்த, கடையும் உதவா,
துரப்புடைய மன்னர்க்கே துப்புரவு; அது அல்லால்,
நிரப்பு இடும்பை மிக்கார்க்கு உதவ ஒன்று ஈதல்-
சுரத்திடைத் பெய்த பெயல்.

பொருள் விளக்கம்:
(வறுமையில் வாடுவோருக்குக் கொடுத்து உதவாது) ஒளித்து வைப்பவரின் செல்வம் இறுதியில் அவர் சந்ததிக்கும் உதவாது போகும். (பின்னர் புதையலாக அது கண்டெடுக்கப்பட்டு) பகைவரைத் துரத்தி விரட்டும் தொழிலைச் செய்யும் அரசுக்கு உரிமை உடையதாக உலக வழக்குப்படி சென்று சேரும். அவ்வாறின்றி, வறுமையில் துன்பம் மிகக் கொண்டவருக்கு உதவுமாறு அப்பொருள் மூலம்  ஒரு உதவி செய்வது வறண்டப் பாலை நிலத்திற்குப் புத்துயிர் ஊட்டும் மழைக்கு ஒப்பாகப் பயன் அளிக்கும்.

பழமொழி சொல்லும் பாடம்: செல்வத்தை மறைத்து வைக்காமல், வாடும் வறியவர்க்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் கொடுத்து உதவுவதே சிறந்த ஈகையாகும். தேடிச் சேர்த்த பொருளைத் தக்கவருக்கு உதவப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தைத் திருக்குறள்,

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. (குறள்: 212)

ஒருவர் முயன்று சேர்க்கும் செல்வத்தைத் தக்கவருக்கு பயன்படுமாறு கொடுத்துதவ வேண்டும் என்று விளக்குகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *