உணவும் உணர்வும்!
-மேகலா இராமமூர்த்தி
மனித சமுதாயத்தின் அடிப்படைத்தேவைகள் மூன்று. அவை உணவு உடை மற்றும் உறையுள். இந்த மூன்றிலும் முதலிடம் பெறுவது உணவே. உணவில்லையேல் புவியில் உயிர்வாழ்வே இல்லை. அதனாலன்றோ புறநானூறும், மணிமேகலையும்,
”உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே” என்று உணவு தருவோரைப் போற்றுகின்றன.
பாவேந்தர் பாரதிதாசனும் இதேகருத்தை வழிமொழியும் விதமாய்,
உணவினை ஆக்கல் மக்கட்(கு)
உயிர் ஆக்கல் அன்றோ? வாழ்வு
பணத்தினால் அன்று வில்வாட்
படையினால் காண்பதன்று
தணலினை அடுப்பில் இட்டுத்
தாழியில் சுவையை இட்டே
அணித்திருந் திட்டார் உள்ளத்(து)
அன்பிட்ட உணவால் வாழ்வோம் என்று மொழியக் காண்கின்றோம்.
மனித வாழ்வுக்கு ஆதாரமாய்த் திகழும் இந்த உணவு குறித்து ஆராய்ந்தால், வையத்து மாந்தர் அனைவரும் ஒரே மாதிரியான உணவுப்பழக்கத்தைக் கொண்டவரல்லர் என்பது புலப்படும்.
பரவலாய், மக்களிடையே வழக்கத்திலிருக்கும் உணவுமுறைகள் சில நம் பார்வைக்கு…
மரக்கறி, புலால் எனும் இரண்டுவகை உணவையும் அனுமதிக்கும் அசைவ உணவுமுறை (உலகமக்களில் பெரும்பான்மை இனத்தோர் இவ்வகையினரே); பால்படு பொருள்களையும், மரக்கறியையும் மட்டுமே அனுமதிக்கும் சைவ உணவுமுறை (சமணரும், இந்து சமயத்தின் சில பிரிவினரும் இம்முறையைப் பின்பற்றுகின்றனர்); புலாலுணவை ஆதரித்தாலும் உயிர்களை நேரடியாகக் கொலைசெய்தல் பாவம் என வலியுறுத்தும் பௌத்தரின் உணவுமுறை; இறைச்சியைப் புசிக்கலாம்; எனினும் பன்றியிறைச்சி கூடாது எனத்தடை விதிக்கும் இசுலாமியரின் உணவுமுறை போன்றவை மக்களிடையே அதிகம் காணப்படும் உணவுமுறைகளாகும்.
இவையேயன்றி, புலால், பால்படுபொருள்கள், முட்டை, தேன் முதலியவற்றைத் தவிர்த்த மரக்கறியுணவைமட்டும் வலியுறுத்தும் வீகன் (Vegan) உணவுமுறை; தானியங்கள் தவிர்த்துப் புலால், பெர்ரிகள் (berries), விதைகள் (nuts) ஆகியவற்றைப் பெருமளவில் உண்ணச்சொல்லும் (கற்காலமனிதனின் உணவுமுறையான) பேலியோலிதிக் (Paleolithic) உணவுமுறை போன்றவையும் நடைமுறையில் உள்ளன.
இவ்வுணவுமுறைகளைக் கூர்ந்துநோக்குங்கால், பல்வேறு இனக்குழுக்களின் மரபையும், பாரம்பரியத்தையும், அவரவர் வாழ்விடங்களில் அதிகம் கிடைத்த உணவினையும் அடிப்படையாகக்கொண்டே இவை அமைந்திருப்பது தெளிவாகின்றது.
உயிரிரக்கத்தையும் அகிம்சையையும் முக்கியக் கொள்கைகளாய்க் கொண்டு கட்டமைக்கப்பட்ட சமணம், அதனடிப்படையில், உயிர்களைக்கொன்று அவற்றின் ஊனால் தயாரிக்கப்பட்ட ஊணை உண்பதைப் பாவமெனக் கருதி அதனைக் கடிந்து ஒதுக்கியது. இந்தக் கோட்பாட்டை, இந்துமதத்தின் சில பிரிவினரும் ’உயர்ந்தது’ என்று ஏற்றுப் பின்பற்றலாயினர். எனினும், உலகின் பெரும்பான்மையான சமயங்கள் மரக்கறி உணவைத்தான் மக்கள் உட்கொள்ளவேண்டும் எனும் கொள்கை எதனையும் வகுக்காததால், மரக்கறியுண்டு மன்னுயிர் ஓம்பும் மக்களைவிட, மாமிசம் உண்டு தன்னுயிர் ஓம்பும் மக்களின் தொகையே உலகில் மிகுதியாய் இருக்கக் காண்கின்றோம்.
உயிரிரக்கக் கோட்பாட்டை உயிரென ஓம்பும் மாந்தர் இதுகண்டு உளம்நொந்து, ”உயிர்களைக் கொன்றுதின்பது பாவமில்லையா?” என்று வினவினால், அதனை ஏற்க மறுக்கும் புலாலுணவினர், ”உயிர்க்கொலையில்லாத உணவுமுறையே உலகில் இல்லை; மரக்கறி உணவிலும் உயிர்க்கொலை உண்டு; மரம், செடி, கொடிகளின் இலைகளைப் பறிப்பதுண்பதும், காய்கனிகளைப் பிடுங்கித் தின்பதும்கூடக் கொலைக்குச் சமமானதுதானே? அத் தாவரங்களுக்கு ஊறுசெய்வதுதானே? என்று எதிர்க்கேள்வி எழுப்புகின்றனர்.
நம்மைச் சற்றே நிலைதடுமாறச் செய்யும் இக்கேள்விக்கு, சுதந்திரப்போராட்ட வீரரும், சிறந்த சிந்தனையாளருமான அமரர் சுப்பிரமணிய சிவா அவர்கள் பின்வருமாறு பதிலுரைக்கின்றார்:
“நாம் நம் நகங்களையும் உரோமங்களையும் குறைப்பதால் அவை அழிந்துபோவதில்லை; மீண்டும் வளரவே செய்கின்றன. அதுபோல் மரம் செடிகளில் இலைகளையும் காய்கனிகளையும் பறித்துண்பதால் அவை அழிவதில்லை. மீண்டும் இலைகள் துளிர்க்கின்றன; காய்கனிகள் தோன்றுகின்றன. விலங்குகளைப் புசிப்பது அப்படியல்லவே? அவற்றைக் கொன்றன்றோ மக்கள் புசிக்கின்றனர்; மக்களின் உடல்கொழுக்க, அவ்வுயிர்கள் தம் உடலையும், உயிரையும் சேர்த்தேயன்றோ தியாகம் செய்கின்றன. அவற்றை மீண்டும் உயிரோடு மீட்டுவர இவர்களால் இயலுமா?” எனக் கேட்கின்றார்.
சிவாவின் பதிலில் சமாதானம் அடையாத மாமிசப்பிரியர்கள், ”சிறந்த ஆன்மிகவாதியும், இந்துமதக் காவலருமான சுவாமி விவேகானந்தரே புலாலுணவை ஆதரித்திருக்கும்போது நாங்கள் உண்பதில் தவறென்ன?” என்று மீண்டும் அவரிடம் கேள்விக்கணை தொடுத்திருக்கின்றனர்.
அதற்கும் அசரவில்லை சுப்ரமணிய சிவா. ”சில சந்தர்ப்பங்களை முன்னிட்டு விவேகானந்தர் அவ்வாறு சொன்னது உண்மைதான். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் மாமிசஉணவை வெறுத்தார் என்பதிலும், அதனை இகழ்ந்தே கூறியுள்ளார் என்பதிலும் ஐயமில்லை. ஆனால் மாமிச உணவின்மீது மட்டற்ற காதல் கொண்டிருக்கும் மக்களோ, அப்பழக்கத்தைக் கைவிடவிரும்பாமல், ஏதோ ஒரு விசேஷ சந்தர்ப்பத்தில் சுவாமிஜி சொன்ன அந்தக் கருத்தை அப்படியேபிடித்துக்கொண்டு தங்கள் உணவுக்கொள்கையை நியாயப்படுத்த முனைகின்றனர்; இஃது அவர்கள் சுயநலத்தின் வெளிப்பாடேயன்றி வேறில்லை” என்று சூடாகப் பதிலுரைத்திருக்கின்றார்.
உண்மைதான்! மக்கள் எப்போதுமே பிறர் சொல்லும் கருத்துக்களில் அவர்களுக்குப் பிடித்தமான பகுதியை மட்டும் பிரித்தெடுத்துக்கொண்டு எஞ்சியதை விட்டுவிடும் குணமுடையோராகவே இருக்கின்றனர்!
இல்லையென்றால், “தன்னை அடக்கியாளப்பழகியவன் ஒருபோதும் புறஉலக விஷயங்களுக்கு அடிமையாக மாட்டான்; அத்தகையவனே வையத்தில் வாழத் தகுதிபடைத்தவன் ஆகின்றான்” எனவும், ஈதொத்த இன்னும்பல பொன்மொழிகளையும் வீரத்துறவி விவேகானந்தர் வையத்துக்கு வழங்கிச்சென்றிருக்க, அவையனைத்தையும் காற்றில் பறக்கவிட்ட மக்கள், புலாலை ஆதரித்து அவர் பேசியதை மட்டும் மறவாமல் பற்றிக்கொண்டு போற்றுவானேன்?
உணவுமுறைகளுக்கும், மனிதரிடம் காணப்படும் (சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம் எனும்) முக்குணங்களுக்குமிடையே நெருங்கிய தொடர்பிருப்பதாய் அருளாளர்கள் கருதுகின்றனர். அவ்வகையில், தாவர உணவுகள் எளிதில் சீரணமாவதுடன், சத்துவ குணத்தையும் மிகுவிக்கும் ஆற்றல் பெற்றவை என்பதை ஆன்மிகம் ஒப்புக்கொள்வதுபோலவே மருத்துவ அறிவியலும் ஒப்புக்கொள்கின்றது. இதற்கு ஆதாரமாய்ப் பல ஆராய்ச்சிக்கட்டுரைகள் மருத்துவ ஆய்வேடுகளில் காணக்கிடைக்கின்றன.
”காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று பறவைகளையும் அரவணைத்தவன் மகாகவி பாரதி. பாடித்திரியும் பறவைகளையும், ஓடித்திரியும் விலங்களையும் கொன்றுதின்பது மனிதநேயச் செயலன்று என்று பகரும் பரிதிமாற்கலைஞர் எனும் தண்டமிழறிஞர், தன்னுடைய ’புள்’ எனும் கவிதையில் புள்ளினைக் கணைகொண்டு வீழ்த்தி, நெய்பெய்து சமைத்துண்ணும் மானுடரின் செயலை வன்மையாய்க் கண்டிக்கின்றார்.
புள்ளே மென்சிறைப் புள்ளே பல்வகை
வண்ணமும் மேவிய வனப்புடைப் பறவாய்
[…]
ஐயகோ நின்னை அருமையிற் பேணார்
வெய்ய கணைகொடு வீழ்ப்பர் அதான்று
நெய்பெய் தட்டுநிற் குய்ம்மணம் கமழ
எயிற்றிடை மென்று வயிற்றின்
இட்டு நாள்தொறும் கெட்டுலை வாரே!
’தனிப்பெருங்கருணையே அருட்பெருஞ்சோதி’ என்று முழங்கிய வள்ளலாரும், ”புலால் உண்ணற்க; எவ்வுயிரையும் கொலை செய்யற்க!” என்றே திருவாய்மலர்ந்தருளியுள்ளார். மண்ணுலகில் வாழ்வதற்குத் தமக்கிருக்கும் உரிமை பிற உயிர்களுக்குமுண்டு என்பதை மாந்தர் உணரவேண்டும். அவ்வெண்ணம் முகிழ்த்தால், பிறவுயிர்களின் ஊனை உவக்காது, உயர்வழியில் – உயர்ந்தோர் வழியில் தம் உணவுக்கொள்கையை அவர்கள் மாற்றிக்கொள்வர்.
கொலையும் புலையும் கடிந்தொதுக்கிய மனிதனை மன்னுயிரனைத்தும் கைகூப்பித் தெய்வமெனத் தொழும் என்பது குறளாசானின் துணிபு.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும். (குறள்: 260)
பிறவிகளில் அரிதான மானுடப் பிறவியை மகத்தான பிறவியாக்கும் அருள்நெறிக்கண் மாந்தர் அனைவரும் நின்றொழுகினால் மனித வாழ்க்கை பொருளுடைத்தாகும் என்பதில் ஐயமில்லை.
***
கட்டுரைக்கு உதவியவை
1. சுப்ரமணிய சிவா கட்டுரைகள் – ஞானபாநு
2. http://ourworld.unu.edu/en/new-research-says-plant-based-diet-best-for-planet-and-people
3. http://nutritionfacts.org/topics/plant-based-diets/
4. http://pssmovement.org/tamil/concepts/8-articles/58-neeya-nee-unum-unavu
5. http://tamil.vallalyaar.com/?p=3002#Q1