Author: டாக்டர்.சுபாஷிணி

  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 69

    தேசிய அருங்காட்சியகம், சூரிச், சுவிச்சர்லாந்து (2)
    (ஜோஹான்னஸ் குட்டன்பெர்க்)

    முனைவர்.சுபாஷிணி

    அச்சுப்பதிப்பாக்கம் உலக மக்கள் வாழ்வியலில் மாபெரும் சிந்தனைப் புரட்சிக்கு அடித்தளம் அமைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. மிகக்கடினமான எழுதும் முறையும், ஒரு நூலை உருவாக்க எடுத்துக் கொள்ளப்பட்ட நீண்ட நேரம் என்பதும் கல்வியை குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும்தான் ஏதுவானதான ஒரு சூழலை இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலுமே ஏற்படுத்தியிருந்தன. அச்சு இயந்திரங்கள் படிப்படியாக பயன்பாட்டில் பரவத் தொடங்கியபின்னர் ஒரு தனி நூல் தயாரிப்பு என்பதற்கு பதிலாக ஒரே அச்சுக்கூடத்தில் ஒரு தயாரிப்பினை மட்டும் கொண்டு பல நூல்களை உருவாக்கலாம் என்ற நிலை உருவானது. இது அதிக அளவில் நூல்கள்பதிப்பாக்கம் பெறுவதற்கு அடித்தளம் அமைத்தது. இதுவே ஐரோப்பாவில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி அது உலகம் முழுவதும் பரவும் நிலையையும் உருவாக்கியது. இப்புரட்சிக்கு ஆதாரமாக அமைந்த அச்சு இயந்திரம் உருவாகி நூற்கள் எண்ணிக்கையில் பலவாக அச்சிடப்பட உருவான காலம் 15ம் நூற்றாண்டாகும்.

    1

    அச்சு இயந்திரத்தின் தந்தை என அறியப்படும் ஜொஹான்னஸ் குட்டன்பெர்க் 1436ம் ஆண்டில் அச்சு இயந்திரத்தைப்பற்றி தனது சூழலில் இருந்த ஏனைய சில ஆர்வலர்களுடன் சேர்ந்து தொடங்க முயன்றார். கடும் ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக, 1439ம் ஆண்டில் இம்முயற்சி வெற்றி பெற ஆரம்பித்தது. பதிப்புத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய இந்த முயற்சி தோன்றியபோது முதலில் ஜெர்மனியில் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் நகரமான மைன்ஸ் நகரில் தான் ஒரு அச்சு ஆலை உருவாக்கப்பட்டது. இதனை ஜொகான்னஸ் குட்டன்பெர்க் தொடங்கி நடத்தி வந்தார். அச்சுப்பதிப்பாக்கத்திற்கு வரவேற்பு கூடியபோது, அதாவது 1480ஆம் ஆண்டில் ஜெர்மனி தவிர்த்து ஏறக்குறைய் 270 இடங்களில் ஐரோப்பாவின் பல இடங்களில் அச்சு ஆலைகள் உருவாகின.

    2
    அச்சு ஆலைகள், கல்வியும், உலக அறிவும் சமூகத்தில் உள்ள ஒரு சாராருக்கு மட்டுமானதல்ல. அவை எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்ற புரட்சியை உருவாக்கி வெற்றியும் கண்டது. அச்சு இயந்திரங்கள் இல்லாத ஒரு நிலையை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது அல்லவா?

    சுவிச்சர்லாந்தைப் பொறுத்தவரை அங்கு குட்டன்பெர்க்கின் அச்சு இயந்திரத்தை வாங்கி சூரிச் நகரில் அச்சு ஆலையை உருவாக்கியவர் கிறிஸ்தோவ் ஃப்ரோஷாவர் (1490 – 1564). ஆரம்ப காலத்தில் அச்சு ஆலைகளில் பைபிள்களே மிக அதிக அளவில் அச்சிடப்பட்டன. இவரது பெயரிலேயே தற்சமயம் சூரிச் நகரின் மையப்பகுதியில் ஒரு சாலையும் இருக்கின்றது. இவர் பைபிள் மட்டுமன்றி, மார்ட்டின் லூதரின் எழுத்துக்கள், சுவிங்லியின் எழுத்துக்கள் ஆகியனவற்றோடு யுராஸ்மூஸ் ஃபோன் ரோட்டர்டாம் அவர்களின் எழுத்துக்களையும் அச்சிட்டவர் என்ற சிறப்பினைப் பெறுகின்றார். இவரது அச்சுப்பணிக்குப் பயன்படுத்தப்பட்ட தாட்கள் அங்கே சூரிச் நகரிலேயே உள்ள லிம்மாட் தாள் தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்பட்டன.

    3

    சூரிச் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள சேகரிப்புக்களில் ஜொகான்னஸ் குட்டன்பெர்கின் அச்சு இயந்திரம் ஒன்றும் உள்ளது. ஒரு முழு அச்சு இயந்திரம். மரத்தால் உருவாக்கப்பட்ட, இன்னமும் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்கும் அச்சு இயந்திரத்தை இங்கே பாதுகாப்பான ஒரு பகுதியில் இங்கே காட்சிக்கு வைத்துள்ளார்கள்.. இங்கே காட்சிக்கு இருக்கும் இந்த அச்சு இயந்திரம் போன்ற வடிவில் உள்ள ஒரு அச்சு இயந்திரம்தான் 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்து அங்கே கொல்லத்தில் தமிழின் முதல் தமிழ் அச்சு நூல் உருவாகக் காரணமாகவும் இருந்தது என்பதை நாம் இவ்வேளையில் நினைவுகூரத்தான் வேண்டும்.

    4

    இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த அச்சு இயந்திரத்தோடு 16, 17ஆம் நூற்றாண்டு அச்சு நூல்கள் சிலவற்றையும் காட்சிக்கு வைத்துள்ளனர். உலக வரலாற்றில் அறிவுத்தளத்தில், பெரும் புரட்சியை ஏற்படுத்திய இவ்வகைப் பணிகளைப் பற்றி அறிந்து கொள்ளும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை.

    5

    சூரிச் தேசிய அருங்காட்சியகத்தில் இருக்கும் ஏனைய சில அரும்பொருட்களைப் பற்றி மேலும் சொல்கிறேன். தொடர்ந்து வாருங்கள்.

    தொடரும்..
    சுபா

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக்கருவூலம் – 69

    தேசிய அருங்காட்சியகம், சூரிச், சுவிச்சர்லாந்து

    (நிக்கலஸ் கோப்பர்னிக்கஸ்)

    முனைவர்.சுபாஷிணி

    உலக அருங்காட்சியகங்களில் மிக முக்கியமான அருங்காட்சியகங்களின் பட்டியலில் இடம் பெறும் ஒன்று சுவிச்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள நேஷனல் மியூசியம். பொதுவான அருங்காட்சியக அமைப்பு அல்லது புது உலகக்கட்டிட கட்டுமான அமைப்பு, அல்லது கிரேக்க அக்ரோபோலிஸ் வகை கட்டுமான அமைப்பு என்றில்லாமல், பிரஞ்சு மறுமலர்ச்சிக்கால கட்டுமான வடிவில், ஒரு மாளிகையைப் போன்ற அமைப்பில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குட்டி அரண்மனையோ என வியக்க வைக்கும் அழகிய கட்டிடம் இது. இக்கட்டிடத்தை 1898ம் ஆண்டில் கட்டுமானக் கலைஞர் குஸ்தாவ் கல் (Gustav Gull ) வடிவமைத்துள்ளார். இவர் 19ம் நூற்றாண்டின் சுவிச்சர்லாந்தின் புகழ்மிக்க கட்டிடக்கலைஞர்களில் ஒருவர். இக்கட்டிடம் தவிர்த்து சூரிச் நகரில் அமைந்திருக்கும் உரானியா கட்டிடம், லிண்டன்கோஃவ் மலை, மூன்ஸ்டர்ஹோவ், வைசன்கோவ் சூரிச், சூரிச் பிரேடிகெர் தேவாலயம் ஆகிய சூரிச் நகரின் மையக் கட்டிடங்களை வடிவமைத்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர்.

    as1

    ஏனைய அருங்காட்சியகங்களைப் போன்றே, நிரந்தரக் கண்காட்சியும் சிறப்புக் கண்காட்சியும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உலக வரலாற்றில் கடற்பயணங்கள், புவியியல் துறை, வானவியல் ஆராய்ச்சி, புதுயுகத்தை உருவாக்கிய புத்தகப் பதிப்புத்துறை புரட்சி, என மட்டுமல்லாது ஐரோப்பிய கலை வளர்ச்சி, கிறிஸ்துவ சமய வரலாற்றுச் சின்னங்கள் என பல்வேறு வகையான சேகரிப்புக்களுடன் வருவோருக்குத் தகவல் களஞ்சியமாகத் திகழ்கின்றது இந்த அருங்காட்சியகம். இங்கிருக்கின்ற ஆவணங்களும் வரலாற்றுச் சின்னங்களும் உலக வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பவை என்பதால் ஒரு சில குறிப்பிட்ட விஷயங்களைத் தனித்தனிப் பதிவாக விவரித்து எழுதுவது வாசிப்போருக்கு உதவும் எனக் கருதுகின்றேன்.

    as2

    அந்த வகையில் இந்தப் பதிவில் நிக்கோலஸ் கார்ப்பர்னிக்கஸ் அவர்களைப் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    நிக்கோலஸ் காப்பர்னிக்கஸ் (1473 – 1543) இன்றைய போலந்து நாட்டில் பிறந்தவர். இலத்தீன், போலந்து, ஜெர்மனி, இத்தாலி, கிரீக் மொழிகளைப் பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர். தனது கல்வியைப் போலந்து தலைநகரம் கிராக்கோவிலும், இத்தாலியிலும் கற்று பின்னர் வெகு தீவிரமாக வானவியல் துறையில் தனது ஆய்வுகளை மேற்கொண்டவர். அவரது நூலான On the Revolutions of the Celestial Spheres மிகப்புகழ்பெற்ற நூல் என்பதுடன், இத்துறையில் மிக முக்கிய ஆய்வு நூல் என்ற சிறப்புத்தகுதியைப் பெறுவதும் இந்நூல்தான். பூமியைச் சுற்றி ஏனைய கோள்கள் வலம் வருகின்றன என ஏனையோர் நினைத்து ஆய்வுகளைச் செய்து கொண்டிருந்தபோது அச்சிந்தனைக்கு மாற்றாக, சூரியனைச் சுற்றித்தான் பூமியும் ஏனைய கோள்களும் வலம் வருகின்றன என்று கூறி வானவியல் ஆய்வில் முத்திரைப்பதித்தவர் நிக்கோலஸ் கார்ப்பர்னிக்கஸ்.

    as3

    புதிய சிந்தனைகளை உலகுக்குப் படைப்போரையும், மாற்றுக் கருத்துக்களை முன்வைப்போரையும் உலகம் உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக அவர்களின் கருத்துக்களையும் ஆய்வுகளையும் திட்டித்தீர்ப்பதும், குறைகூறி மறுப்பதும் உலக வரலாற்றில், அதிலும் குறிப்பாக கருத்துக்களத்திலும் இயல்பே. இதே நிலை இன்றும் தொடர்வதுதான். நிக்கோலஸ் கார்ப்பர்னிக்கஸின் ஆய்வு வெளியீடுகள் அவரது காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 17ம் நூற்றாண்டில் கலீலியோவின் ஆய்வுகளுக்குப் பின்னரும் ஜொகான்னெஸ் கெப்லரின் வானவியல் ஆய்வுகளுக்குப் பின்னரும் நிக்கோலஸ் கார்ப்பர்னிக்கஸ் புவியியல் கோட்பாடு அதாவது சூரியனை மையமாக வைத்து கோள்கள் வலம் வருதல் எனும் கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    as4

    இந்த சூரிச் அருங்காட்சியகத்தின் வானவியல் ஆய்வுக்கூடப்பகுதியில் நிக்கோலஸ் காப்பர்னிக்கஸின் இந்த குறிப்பிட்ட வானவியல் ஆய்வுத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய ஆய்வினை விளக்கும் அவரது கையெழுத்துப் பிரதியைக் கொண்ட 17ம் நூற்றாண்டு நூல் பாதுகாக்கப்படுகின்றது. அதே போல மேலும் நிக்கோலஸ் காப்பர்னிக்கஸின் தன் கையில் ஒரு மூலிகைச் செடியை வைத்திருப்பது போன்று தோற்றமளிக்கும் அவரது வரைபடமும், அவரது வரலாற்றுச்செய்தியும் ஆய்வுச் செய்தியும் அடங்கிய 17ம் நூற்றாண்டு நூல் ஒன்றும் இங்கே பாதுகாக்கப்படுகின்றது. இவை இரண்டும் எவ்வகையில் இந்த அருங்காட்சியகத்திற்குக் கிடைக்கப்பெற்றன என்ற தகவல்கள் கிடைக்கவில்லை.

    as5

    இந்த சூரிச் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள மேலும் சில அரும்பொருட்களையும் ஆவணங்களையும் பற்றிய விளக்கங்களை அடுத்த பதிவில் தொடர்கின்றேன். தொடர்ந்து வாருங்கள்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 68

    பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகம், ஃபிலடெல்ஃபியா, வட அமெரிக்கா

    முனைவர்.சுபாஷிணி

    பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகத்தின் வடிவமைப்பு மிகப் பிரமாண்டமானது. அடித்தளத்தில் நான் சென்ற போது ஆசிய, அதிலும் தெற்காசிய சிற்பங்களின் கண்காட்சி வைத்திருந்தனர். இதில் அறிய புத்தர் சிற்பங்களும் திபேத்திய அருங்கலைப் படைப்புக்களும் நிறைந்திருந்தன. உள்ளே கட்டணம் கட்டி டிக்கட் பெற்றுக் கொண்ட உடன் முதல் தளத்திலேயே அங்குள்ள ரோமானிய, கிரேக்க சேகரிப்புக்களைப் பார்வையிடத் தொடங்கலாம். ஆனால், நான் அங்கே தொடங்காமல் அடித்தளத்தில் இருந்த சிறப்புக் கண்காட்சியை பார்வையிட ஆரம்பித்தேன்.

    as

    கி.பி.11ஆம் நூற்றாண்டு சமண தீர்த்தங்கரர் கருங்கல் சிற்பம் ஒன்று இந்தியாவின் நியூ டெல்லி அருங்காட்சியகத்திலிருந்து வாங்கப்பட்ட சிற்பம் இங்கு காட்சிக்கு உள்ளது. இந்த சிற்பத்தை விலை கொடுத்து பிலடெல்ஃபியா அருங்காட்சியகத்திற்கு பொருளுதவி செய்தவர்கள் திரு. திருமதி ரோலண்ட் என்ற செய்தியையும் இங்கு காணலாம். இது 1968ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வாங்கப்பட்டது. கல்லால் ஆன மிக நேர்த்தியான வகையில் அமைந்த சிற்பம் இது. பாதப்பகுதியில் மட்டும் சேதம் ஏற்பட்ட வகையில் உள்ளது.

    இதே போல விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம வடிவத்தின் சிற்பம் ஒன்றும் இங்குள்ளது. இது கி.பி. 4ஆம் நூற்றாண்டு சிற்பம் என்றும் மதுரா, அதாவது இன்றைய உத்திர பிரதேசம் பகுதியிலிருந்து கிடைக்கப்பெற்றது, இதுவும் இந்தியாவிலிருந்து வாங்கப்பட்ட சிலைதான். அதற்கு பொருளுதவி செய்தோர் பற்றிய குறிப்புகளும் அருங்காட்சியகத்தில் உள்ளது.

    as1

    இங்குள்ள மற்றுமொரு அற்புத சேகரிப்பு இந்தியாவின் மத்திய பிரதேசத்திலிருந்து வாங்கப்பட்ட 11 ஆம் நூற்றாண்டு அர்த்தநாரீஸ்வரர் சிற்பம். இதுவும் கருங்கல்லில் செய்யப்பட்ட சிற்பமே. இந்திய சிற்பக்கலைக்கு உதாரணமாகத் திகழும் வகையில் இந்த சிற்பத்தின் அமைப்பு அமைந்திருக்கின்றது.

    இந்த அருங்காட்சியகத்தில் சேகரிப்பில் சிறப்பானவற்றுள் ஒன்றாகக் கருதப்படும் சுவர்க்கத்தின் நாயகனான இந்திரனின் சிலை ஒன்றும் இங்குள்ளது. இது நேப்பாளின் காட்மண்டு நகரிலிருந்து வாங்கப்பட்ட தனியார் சேகரிப்பிலிருந்து அருங்காட்சியகத்திற்குக் கிடைத்த 12ஆம் நூற்றாண்டுச் சிற்பம்.

    as2

    இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே இருக்கும் மிகப் பிரம்மாண்டமான அமைப்புகளில் 14ஆம் நூற்றாண்டு மூரோமாச்சி காலத்து கோயில் ஒன்றையும் குறிப்பிடலாம். இது ஜப்பானின் நாரா என்ற பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டு அருங்காட்சியகத்தின் உள்ளேயே வைக்கப்பட்டுள்ளது. மூங்கிலால் மிக நேர்த்தியாகச் செய்யப்பட்ட கோயில் வளாகம். அதனுள்ளே பலகையால் ஆன கோயில் அமைக்கபப்ட்டு ஆலயத்தின் மத்தியில் புத்தர் சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இங்கே நின்று பார்க்கும் போது அருங்காட்சியகத்தில் தான் இருக்கின்றோமா அல்லது ஒரு ஜப்பானிய புத்தர் கோயிலில் இருக்கின்றோமா என குழம்பித்தான் போய்விடுவோம்.

    as6

    இந்த ஜப்பானிய புத்தர் கோயில் இருக்கும் அதே தளத்திலேயே மற்றுமொரு பிரமாண்டமான கோயில் இருக்கின்றது. இது ஸ்பெயினின் கட்டாலானியா பகுதி, அதாவது இன்றைய பார்செலோனா இருக்கும் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட செயிண்ட் ஓத்தோ – செயிண்ட் போனவென்சோ தேவாலயத்தின் ஒரு மண்டபத்தின் ஒரு பகுதி. கிபி 1490 வாக்கில் கட்டப்பட்டது என அறியப்படும் இந்தக் கோயில் கல்லால் கட்டப்பட்டது. இதன் சில பகுதிகள் மரத்தால் ஆனவை. தங்க முலாம் பூசப்பட்ட வகையில் அமைக்கப்பட்டவை. இதுவும் ஒரு தனியார் கொடுத்த நன்கொடையின் வழி கிடைக்கப்பெற்றது. செயிண்ட் ஒத்தோ என்பவர் கத்தோலிக்க சமய குருமாராக இருந்து அங்கு ப்ரான்சிச்கான் அமைப்பில் இருந்து சமயம் பரப்பும் சேவையைச் செய்தவர்கள். அவர்கள். சமயம் பரப்பும் பணிக்காக மரோக்கோ நாட்டிற்குச் செய்ன்று அங்குள்ள மசூதி ஒன்றில் கத்தோலிக்க சமயம் பரப்பும் நடவடிக்கையைச் செய்ததால் இவர்கள் அங்கேயே சிரச்சேதம் செய்யபப்ட்டு கொல்லபப்ட்டனர். அவர்களின் நினைவாக ஸ்பெயின் நாட்டில் எழுப்பப்பட்ட தேவாலயத்தின் ஒரு பகுதி தான் இங்கிருப்பது.

    as4

    இப்படி இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் சிறப்பானவற்றைப் பற்றி சொல்லிக் கொண்டேயிருக்கலாம். ஒரு நாள் முழுவதும் இருந்தால் இந்த அருங்காட்சியகத்தை நன்கு சுற்றிப்பார்த்து இங்குள்ள அரும்பொருட்கள் சேகரிப்புக்கள் பற்றி அரிந்து கொள்ளலாம்.

    இந்த அருங்காட்சியகத்துக்கு அருகில் இருக்கும் மேலும் இரண்டு அருங்காட்சியகங்களுக்குச் செல்வதற்கு சிறப்பு பேருந்து வசதி. உள்ளது. இந்தப் பேருந்து இலவசம். இது வரும் வேளையில் இதில் ஏறிக் கொண்டால் அடுத்த அருங்காட்சியகத்திற்குக் கொண்டு சென்று விடும் வகையில் வசதிகள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

    as5

    பிலடெல்ஃபியா அருங்காட்சியகத்திற்குச் சென்று வந்தது எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவம். மதுரை ஸ்ரீமதனகோபாலசுவாமி மண்டபம் மட்டுமல்லாது ஜப்பான், ஸ்பெயின், பிரான்சு, சீனா, கொரியா, என பல நாடுகளின் வழிபாட்டு வளாகங்கள் இங்கிருப்பது இதன் பெருமையைக் கூறும் வகையில் இருக்கின்றது.

    சரி. அடுத்த கட்டுரையில் மேலும் ஒரு நாட்டில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தைப் பற்றி விவரிக்கின்றேன். தொடர்ந்து வாருங்கள்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 67

    பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகம், ஃபிலடெல்ஃபியா, வட அமெரிக்கா

    முனைவர்.சுபாஷிணி

    மேலை நாடுகளில் தங்கள் நாட்டு அரும்பொருட்களைச் சேகரித்து வைப்பது போல அல்லது அதற்கும் சற்று கூடுதலான ஆர்வத்துடன் ஆசிய, ஆப்பிரிக்க தென் அமெரிக்க நாடுகளின் அரும்பொருட்களைச் சேகரித்து வைக்க வேண்டும் என்ற பெரும் ஆர்வம் இருப்பது, இந்த நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களுக்குச் செல்லும் போது உணர முடியும். ஆசிய நாடுகளுக்கே உரித்தான இறைவடிவங்கள், எழுத்து முறை வளர்ச்சி தொடர்பானவை, நூல்கள், இலக்கியங்கள் என்பனவோடு விலை உயர்ந்த கற்கள், பொன், வைடூரிய ஆபரணங்கள் என்ற வகையிலும் தங்கள் சேகரிப்புக்களை இத்தகைய அருங்காட்சியகங்கள் சேகரித்து வைத்துள்ளன. உலகப் பிரசித்தி பெற்ற அருங்காட்சியகங்களில் எகிப்திய பண்டைய நாகரிகத்தின் சின்னங்களும், இந்திய உபகண்டத்தின் சமயச்சின்னங்களும், சீன தேசத்தின் மன்னர்களின் உடமைப் பொருட்களும், ஆப்பிரிக்க தேசத்தின் ஆதிவாசிகளின் நம்பிக்கைக்கு உரிய பொருட்களும் இவ்வகை சேகரிப்புக்களில் முக்கியமானைவையாக இடம்பெறுகின்றன. ஐரோப்பிய நாடுகளின் பெரும் நகரங்களில் உள்ள ஏறக்குறைய அனைத்து அருங்காட்சியகங்களிலும் இத்தகைய சேகரிப்புக்களைப் பார்த்திருக்கின்றேன்.

    as1
    அண்மையில் வட அமெரிக்கா சென்றிருந்தபோது நான் சென்று வந்த சில அருங்காட்சியகங்களில் இத்தகைய அரும்பொருட் சேகரிப்புக்களைப் பார்த்தேன். அத்தகைய அருங்காட்சியகங்களில் ஒன்றுதான் பிலடெல்ஃபியா அருங்காட்சியகம்.

    திரு.நரசய்யா அவர்கள் எழுதி வெளியிட்ட ஆலவாய் நூலை வாசித்த போது மதுரையிலிருந்த ஒரு கோயிலின் சில பகுதிகள் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டதை அவர் குறிப்பிட்டிருந்தது என் நினைவில் இருந்தது. அதனை நேரில் சென்று பார்ப்பதுடன் இங்குள்ள ஏனைய அரும்பொருட்களையும் காணும் ஆவலுடன் இங்கு சென்றிருந்தேன்.

    as2

    இந்த அருங்காட்சியகத்தின் மூன்றாம் மாடியில் சில கோயில்களின் மண்டபங்களும் கருவறைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்ட கோயிலில் ஒரு பகுதியானது ஸ்ரீ மதனகோபாலசுவாமி கோயில் மண்டபம். மதுரையிலிருந்து இந்த கோயில் மண்டபத்தை அமெரிக்காவிற்கு கொண்டு வந்திருக்கின்றனர். 1912ம் ஆண்டில் திருமதி அடலீன் பெப்பர் என்பவர் இதனை மதுரையில் காசு கொடுத்து வாங்கியிருக்கின்றார். பின்னர் அவரது மகள் சூசன் பெப்பர் இந்த மண்டபத்தை பிலடெல்ஃபிய அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றார்.

    as3

    இன்று தான் கோயில் கலைப்பொருட்கள் ஒரு சில சமூக விரோதிகளால் கொள்ளயடிக்கப்பட்டு திருடப்படுகின்றன என்றால் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளிப்படையாக காசு கொடுத்து ஒரு அம்மையார் கோயில் மண்டபத்தையே வாங்கிக் கொண்டு வந்திருக்கின்றார் என்பது திகைக்க வைக்கின்றது தானே. இந்தக் கோயில் நாயக்கர் காலத்தில் அதாவது கிபி 1550ம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்ட கோயிலென இங்குள்ள குறிப்பில் காணலாம்.

    நான் சென்றிருந்த நேரத்தில் இப்பகுதியை சீரமைப்பு செய்து கொண்டிருந்தமையால் என்னால் சரியாகப் புகைப்படம் எடுக்க இயலவில்லை. இருட்டாக ஒளி வெளிச்சம் குறைந்த நிலையில் இருந்ததால் புகைப்படம் சரியாக எடுக்க இயலவில்லை. இவை கருங்கற்களால் ஆன தூண்கள். நாயக்கர் கால அமைப்புடன் கூடியவை. கோயில்களில் நாம் காணும் கற்தூண்களில் பொறுத்திய சிற்பங்கள் என வரிசையாக இவை இங்கே உள்ளன. அருங்காட்சியகத்திற்குள் நம் கண்கள் பழகிய ஒரு கோயிலைக் காண வியப்பாகத்தான் இருந்தது. 1940ம் ஆண்டு தொடங்கி இந்த மண்டபம் பொது மக்கள் பார்வைக்காக இங்கே இருக்கின்றது. இந்த அருங்காட்சியகம் வருவோரின் கண்களுக்கு இது விருந்து.

    பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகம் திங்கள் தவிர ஏனைய நாட்களில் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். அருங்காட்சியகத்தின் முகவரி, 2600 Benjamin Franklin Parkway, Philadelphia, PA 19130.

    as4

    ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட பழமையானது இந்த அருங்காட்சியகம். 1876ம் ஆண்டில் தொடங்கப்பட்டு பின்னர் இந்த அருங்காட்சியகத்தின் சேகரிப்புக்கள் படிப்படியாக விரிவாக்கம் கண்டன. இங்குள்ள மேலும் சில அரும்பொருட்கள் பற்றி அடுத்த பதிவில் தொடர்கின்றேன்.

    தொடரும்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 66

    சிக்மண்ட் பிராய்டு அருங்காட்சியகம், வியன்னா, ஆஸ்திரியா

    முனைவர்.சுபாஷிணி

    மனிதர்களுக்கு ஏற்படுகின்ற பல்வேறு உடல் நோய்களுக்குக் காரணமாக உளவியல் பிரச்சனைகளே அமைகின்றன. வெளிப்படையாக உடலில் தோன்றும் நோய்கள் என்பன சில. மனிதர்களாகிய நமக்கு ஏற்படுகின்ற பல நோய்கள் ஆழ்மனதில் தேங்கிக் கிடக்கின்ற சங்கடங்கள், பீதிகள், அச்சங்கள், வேதனைகள், துயரங்கள், ஏமாற்றங்கள், வலிகள், தோல்விகள் ஆகியவற்றின் தேக்கத்தினால் ஏற்படுபவையாகவே இருக்கின்றன. இவற்றின் மூலத்தை அறியும் முயற்சியில் சமயஞானிகளும் விஞ்ஞானிகளும் ஆய்வில் ஈடுபடுவது என்பது தொன்று தொட்டு நிகழ்வதைக் காண்கிறோம்.

    as6

    ஆஸ்திரிய நாட்டின் தலைநகரான வியன்னாவில் உலகப் புகழ்மிக்க அருங்காட்சியகங்கள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கனவற்றுள் ஒன்றாகத் திகழ்வது உளவியல் நிபுணரும் நரம்பியல்துறை வல்லுனரும் சைக்கோ-அனாலிசிச் எனச்சொல்லப்படும் உளவியல் ஆய்வுத்துறைக்கான வழிமுறைகளை பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு உலகப்புகழ் பெற்றவருமான சிக்மண்ட் பிராய்டு அருங்காட்சியகம்.

    இவரது ஆய்வு முறையானது ஒரு ஆய்வாளர் ஆழ்மனத்தில் படிந்து கிடக்கும் நினைவுகளின் முரண்பாடுகளை தனித்தனியாகப் பிரித்து அலசி ஆராய்வதை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆய்வில், உளவியல் பாதிப்புக்குள்ளானவரின் மனதில் எழும் கற்பனை உலகங்களும், கனவுகளும் நுணுக்கமான ஆய்வுப் பொருட்களாக கையாளப்படும். இவரது ஆய்வுகளில் மிகக் குறிப்பாக சிறு குழந்தைகளின் தன்னைப்பற்றிய சுய எண்ணம், காமம் தொடர்பான உளப்பிறழ்ச்சிகள், சுயசிந்தனை என்பவை மைய ஆய்வுப் பொருட்களாகக் கையாளப்படுவன என்பது குறிப்பிடத்தக்கது.

    as5

    ​​சிக்மண்ட் பிராய்டு – சில புகைப்படங்களின் தொகுப்பு

    வியன்னா நகரின் மையப்பகுதியிலேயே பார்லிமென்ட், அரச அலுவலகங்கள், நூலகம் அனைத்தும் இருக்கும் பகுதியில் சற்று தள்ளி இருந்தாலும் நடக்கும் தூரத்திலேயே அமைந்திருக்கின்றது இந்த அருங்காட்சியகம். அவர் வாழ்ந்து ஆய்வு செய்த கட்டிடமே இன்று அவரது நினைவைப் பறைசாற்றும் நினைவு மாளிகையாகவும் அருங்காட்சியகமாகவும் திகழ்கின்றது.

    இன்றைக்கு செக் ரிபப்ளிக் நாட்டின் ஒரு நகரமாகத் திகழ்ந்த ஃப்ரைபெர்க் (Freiberg) நகரில் இவர் 1856ம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி பிறந்தார். தமக்கு ஐந்து வயதாகும் போது இவரது குடும்பத்தினர் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவிற்கு குடி பெயர்ந்தனர். அது தொடங்கி வியன்னாவிலேயே இவரது வாழ்க்கை அமைந்தது. 1881ம் ஆண்டில் மருத்துவத்துறையில் பட்டம் பெற்று திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர். இவரது ஆறாவது மகள் அன்னா, இவரைப் போலவே உலகப்புகழ்பெற்ற உளவியல் ஆய்வுத்துறை நிபுணராகத் திகழ்ந்தார். இந்த சிக்மண்ட் பிராய்டு அருங்காட்சியகத்தில் இவர்கள் இருவருடையதுமான ஆவணங்களும் ஆய்வுக் குறிப்புகளும் பாதுகாக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    as4

    ​சிக்மண்ட் பிராய்டு அமர்ந்து பயன்படுத்திய நாற்காலி

    முதலில் இவரது ஆய்வுகள் ஹிஸ்டீரியா நோயாளிகளைப் பற்றியதாக அமைந்தது. பின்னர் அந்த ஆய்வுகளிலிருந்து விடுபட்டு கனவுகள் பற்றிய ஆய்வுகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். 1900 ஆண்டு, The Interpretation of Dreams என்ற நூலை வெளியிட்டார். தொடர்ச்சியான ஆய்வின் பலனாக 1901ம் ஆண்டில் The Psychopathology of Everyday Life என்ற நூலையும் 1905ம் ஆண்டு Three Essays on the Theory of Sexuality என்ற நூலையும் எழுதி வெளியிட்டார். ஆரம்ப நிலையில் இவை பெருமளவிலான வரவேற்பைப் பெறவில்லை. ஆயினும் 1909ம் ஆண்டு அமெரிக்காவில் தொடர்ச்சியாக பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவு செய்ய அழைக்கப்பட்டார். அதன் பின்னர் 1916ம் ஆண்டு இவரது Five Lectures on Psycho-Analysis வெளிவந்தது. இவை அவரது புகழை உயர்த்தின.

    as3

    ​​சிக்மண்ட் பிராய்டு பயன்படுத்திய பார்வையாளர்கள் அறை

    சிக்மண்ட் பிராய்டு அவர்களின் ஆய்வுகள் உலகளவில் உளவியல் துறையில் நிலையான இடத்தைப் பிடித்தன. எந்த அளவிற்கு அவரது ஆய்வுகள் புகழப்பட்டனவோ அந்த அளவிற்கு அவரது ஆய்வுகள் குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளாக்கப்பட்டன. ஆயினும் அவரது ஆய்வுகள் எட்டிய ஆழத்தை இத்துறையில் வேறு ஆய்வு முறைகள் எட்டினவா என்பது கேள்விக்குறியே.

    சிக்மண்ட் பிராய்டின் இறுதிக் காலம் சோகம் நிறைந்ததாகவே அமைந்தது. அவருக்குத் தொண்டைப்புண் நோய் ஏற்பட்டு அது புற்று நோயாக மாறி அவரது உடலில் வலிமையைக் குறைத்தது. மருத்துவர்களிடம் வேண்டிக் கேட்டு அதிகப்படியான மயக்க மருந்து கொண்ட மாத்திரைகளை விழுங்கி அவர் 1939ம் ஆண்டில் தான் நாடு கடந்து வசித்து வந்த இங்கிலாந்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

    இது ஒரு வருந்தத்தக்க நிகழ்வு!

    as2
    ​​சிக்மண்ட் பிராய்டு அலுவலகம் – தற்சமயம் காட்சிக் கூடமாக உள்ளது

    மலேசியாவில் என் இளம் வயதில், மறைந்த உளவியல் அறிஞரும் தமிழறிஞருமான டாக்டர்.லோகநாதன் அவர்களின் இலவச உளவியல் வகுப்புகளில் பாடம் கேட்ட காலங்களில் சிக்மண்ட் பிராய்டு பற்றி அடிக்கடி நான் அவரது வகுப்புகளில் கேள்விப்பட்டதுண்டு. மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து மறைந்த டாக்டர்.லோகநாதன் அவர்கள் சிக்மண்ட் பிராய்டு அவர்களின் ஆய்வு முறை வழியில் உளவியல் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    as1
    ​​சிக்மண்ட் ப்ராய்ட் – வீட்டு வாசலில்

    சிக்மண்ட் பிராய்டு அவர்களது ஆய்வு முறைகள் மனிதகுல உளவியல் சிக்கல்களை ஆராய்ந்து தீர்வுகாணும் வழிமுறைமைகளை உலகுக்கு வழங்கியுள்ளன . இவர் போற்றப்பட வேண்டிய உலக ஆய்வாளர்களின் வரிசையில் தனியிடத்தைப் பெறுபவர்!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 65

    அமெரிக்க போர்ப்படை வீரர்கள் மயானம், லுக்ஸம்பர்க்

    முனைவர்.சுபாஷிணி

    லுக்ஸம்பர்க் ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு சிறிய நாடு. ஜெர்மனியோடு, பிரான்சு, பெல்ஜியம் ஆகிய இரண்டு நாடுகளையும் எல்லையாகக் கொண்டது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் 1940ம் ஆண்டில் மே10ம் தேதி ஹிட்லர் தலைமையிலான நாஸி படைகள் லுக்ஸம்பர்க் நாட்டிற்குள் ஊடுருவின. ஒரே நாளில் லுக்ஸம்பர்க் நாட்டைக் கைப்பற்றியது ஜெர்மனியின் அப்போதையை நாஸி அரசு. 1944ம் ஆண்டின் இறுதி வாக்கிலும் 1945ம் ஆண்டில் 2ம் உலகப்போரின் முடிவிலும் நாஸி அரசிடமிருந்து லுக்ஸம்பர்க் விடுதலை பெற்றது.

    இரண்டாம் உலகப்போர் தொடங்கும் முன்னர் லுக்ஸம்பர்க் நாட்டில் ஏறக்குறைய 3500 யூதமக்கள் குடியிருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிரான சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர் ஜெர்மனியிலிருந்து வெளியேறி இங்கே வந்து குடியேறியவர்கள். நாஸி அரசு லுக்ஸம்பர்க்கை கைப்பற்றிய பின்னர் அங்கு குடியிருந்த யூத மக்களை அருகாமையில் இருக்கும் பிரான்சுக்கு சென்று விடும்படி கட்டாயப்படுத்தியது. ஏறக்குறைய 2500 மக்கள் அந்த வகையில் பிரான்சுக்கு குடிபெயர்ந்து விட்டனர். எஞ்சியவர்கள் கதி தான் பரிதாபம். எஞ்சிய ஏறக்குறைய 800 யூதர்களை நாஸி அரசு ஜெர்மனியில் ஏற்படுத்தப்பட்ட கெத்தோக்களுக்கு கொண்டு வந்து விட்டனர். கெத்தோ என்பது ஜெர்மனியின் அப்போதைய நாஸி அரசுக்கு எதிரானோரை வைத்து சித்ரவதை செய்யும் வதை முகாம்.

    மறைந்தும் ஒளிந்தும் சில யூத மக்கள் இருந்தவர்கள். ஆயினும் எஞ்சிய 800 யூதர்களையும் கெத்தோக்களுக்கு கொண்டு சென்ற பின்னர் ஜெர்மனியின் நாஸி அரசு லுக்ஸம்பர்கை யூதர்கள் வெளியேற்றப்பட்ட தூய்மை செய்யப்பட்ட நாடாக பிரகடனப்படுத்தியது.

    தூய்மைவாத, இனவாத சிந்தனையின் எத்தனைப் பெரிய கொடுங்கோலாட்சியின் சிந்தனை இது என்று நினைக்கும் போதே மனிதம் தொலைத்த மக்கள் சிந்தனையின் கொடூர சிந்தனைப் போக்கினை காண முடிகின்றது. சமூக நல்லிணக்கத்திற்கு மதவாதமும் இனவாதமும் தூய்மைவாதமும் என்றுமே நன்மை செய்ய முடியாது. அது எத்தகைய தன்மை உடையதாக இருப்பினும் தூய்மை வாதம் மக்கள் வாழ்க்கைக்கு கேடு விளைவிக்கும் ஒரு சிந்தனை தான். பொதுமைப்பண்பிலிருந்து மக்கள் விலகும் நிலை ஏற்படும் தருணம் அது சமூகச் சீரழிவுக்கு நிச்சயமாக வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.!

    1s

    இந்த அமெரிக்க போர்ப்படை வீரர்கள் மயானம் 1944ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் நாள் முதன் முதலில் ஒரு தற்காலிக இடுகாடாக அமைக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் உயிர்நீத்த போர்ப்படை வீரர்களில் சிலரது உடல்கள் இங்கே அச்சமயம் புதைக்கப்பட்டன. இங்கே புதைக்கப்பட்டோரில் 116 யூத இனத்தைச்சார்ந்த போர்ப்படை வீரர்களும் அடங்குவர். இவர்களது கல்லறையின் மேல் நட்சத்திர வடிவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

    2s

    தற்சமயம் இந்த அமெரிக்க போர்ப்படை வீரர்கள் மயானம் 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதனைச் சுற்றி 33.5 ஏக்கர் காடுகள் சூழ்ந்துள்ளன.

    இந்த மயானப் பகுதிக்கு முன்னர் வாகனம் நிறுத்தும் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயில் உயர்ந்த இரும்புக் கம்பிகள் பூட்டப்பட்ட நுழைவாயிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் நமக்குத் தென்படுவது இந்த மயானத்தை மையப்படுத்தும் வகையில் இங்கே புதைக்கப்பட்டிருக்கும் ஆண் பெண் போர்ப்படை வீரர்களை நினைவு படுத்தும் வகையில் அமைந்திருக்கும் ஒரு பிரம்மாண்டமான நினைவுச் சின்னம். இதற்கு முன்னர் வலது புறத்தில் சிறிய அலுவலகமாக அருங்காட்சியகப் பகுதி அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தினுள்ளே, அமெரிக்க சான்றிதழ்கள், கொடிகள், புகைப்படங்கள், கடிதங்கள் என அரும்பொருட்கள் சில காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது மிகச் சிறியதொரு பகுதி தான்.

    3s

    இந்த அறையை விட்டு வெளியே வந்தால் வலது இடது என இரு புறங்களிலும் பளிங்குக் கற்களால் எழுப்பப்பட்ட சுவரில் இரண்டாம் உலகப்போரை நினைவுறுத்தும் வகையில் அமைந்த விளக்கக் குறிப்புகள் விரிவாக வழங்கப்பட்டுள்ளன. இந்த விளக்கப்படங்களும் குறிப்புகளும் போர்ப்படைகள் மேற்கு ஐரோப்பாவில் போரின் போது சென்ற வழித்தடங்களை விவரிக்கும் வகையில் உள்ளன. ஒரு பகுதியில் இந்தப் போரின் போது காணாமல் போன 371 போர்ப்படை வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

    4s

    இந்த இடத்திலிருந்து மையப்பகுதியில்தான் உயர்ந்த கோபுரம் போன்ற நினைவாலயம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த நினைவாலயத்தினுள் விளக்கு எறிந்து கொண்டிருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே அமெரிக்கக் கொடி பிரம்மாண்டமான அளவில் நிறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு கத்தோலிக்க தேவாலயம் போன்ற அமைப்பில் தான் உருவாக்கப்பட்டுள்ளது.

    இங்கிருந்து கீழே இறங்கி நடக்க ஆரம்பித்தால் பச்சைக் கம்பளம் விரித்தார் போல இருக்கும் புல்வெளியில் வெள்ளை நிறச் சிலுவைகள் நிறைந்த மயானக் காட்சியைக் காணலாம். இங்கே 5076 இறந்து போன போர் வீரர்கள் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு பளிங்கு சிலுவைபோன்ற அமைப்பிலான கல்லறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லறை அமைக்கப்பட்டுள்ள பகுதி ஆர்டென் (Ardennes) என அழைக்கப்பட்ட, 2ம் உலகப்போரின் போது மிக முக்கிய போர் நடைபெற்ற இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இது இறுக்கமான காடுகள் நிறைந்த ஒரு பகுதி. லுக்ஸம்பர்க் நாட்டின் தலைநகரான லுக்ஸம்பர்க் நகரம் உலகப்போரின் போது அமெரிக்க ராணுவத்தின் போர்ப்படை தலைமையகமாகத் திகழ்ந்தது. இங்கே பணியில் இருந்த ஜெனரல் ஜோர்ஜ். எஸ்.. பாட்டர்ன் அவர்களது உடலும் இங்கேதான் புதைக்கப்பட்டது.

    5s
    கல்லறைகள் நிறைந்த இந்தப் புல்வெளியில் அங்குச் சென்றிருந்த போது உலகப்போரின் நிகழ்வுகளை மனதில் அசைபோட்டுக் கொண்டே நெடுந்தூரம் நடந்தேன். மனிதர்களின் சுயநலமே பல சமூகக் கோளாறுகளுக்கு மூல காரணமாக அமைகின்றன. இது பெறுமளவில் அரசியல் ஆதரவும் பெறும் போது பெரும் சமூகப் பேரழிவை ஏற்படுத்துகின்றன. சுயநலத்தோடு இனவாதமும் தூய்மைவாதமும் பேசிய எவரும் இன்று இந்த உலகில் நிலைக்கவில்லை.

    உலகமே பல இயற்கைப் பொருட்களின் கலவையில் தான் புதுப்புது பரிணாம மாற்றத்தையும் வளர்ச்சியும் பெற்றுள்ளது. மாற்றங்கள் தவிர்க்கமுடியாதவை. சுயநலப்போக்கை விட்டு பொதுநலப்பண்பை வளர்த்து மானுடம் தழைக்க அனைவரும் அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்பதை நினைவுறுத்துவதாகவே இந்த வகைச் சின்னங்கள் நம் முன்னே காட்சிப்பொருளாய் நிற்கின்றன. அதனைப் புரிந்து அன்பையும் நேசத்தையும் வளர்க்கும் மனிதர்களாக நாம் இருப்போம்.

    அடுத்த பதிவில் மற்றுமொரு நாட்டில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். தொடர்ந்து வாருங்கள்!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 64

    அரச அருங்காட்சியகம், கெண்டபரி, இங்கிலாந்து

    முனைவர்.சுபாஷிணி

    அருங்காட்சியகங்களில் இருக்கின்ற அரும்பொருட்களைக் காட்சிப்படுத்துகின்ற அருங்காட்சியகங்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பணிகளில்  சிறப்புக் கண்காட்சிகளை இணைத்துக் கொள்வர். உலகப்பிரசித்தி பெற்ற அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்படுவதற்காக வேறொரு அருங்காட்சியகத்திலிருந்தோ அல்லது தனியார் சேகரிப்பிலிருந்து, அல்லது மற்ற அமைப்புகளிலிருந்தோ கூட இவ்வகைச் சிறப்பு கண்காட்சிக்குட்படுத்தப்படும் பொருட்கள் தருவிக்கப்பட்டு காட்சி படுத்தப்படுவது வழக்கம்.

    எனது அருங்காட்சியகப் பயணங்களில் அவ்வப்போது இத்தகைய உலகப்பிரசித்தி பெற்ற அரும்பொருட்களையோ ஆவணங்களையோ காணக்கூடிய வாய்ப்பு எனக்கு ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு சிறப்பான வாய்ப்பு அமையும் போது ஆகா .. என்ன நம் அதிர்ஷ்டம் என என் மனதிற்குள் நான் நினைத்துப்பார்த்து மகிழ்வதுண்டு. அத்தகைய ஒரு வாய்ப்புதான் எனக்குச் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் உள்ள கெண்டர்பரி நகரம் சென்றிருந்த போது கிட்டியது.

    06d52bd4-f5f5-4c51-9452-2260c45fe19e

    இங்கிலாந்தின் புகழ்மிக்க பிரித்தானிய நூலகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படும் மெக்னகார்ட்டா கெண்டர்பரிக்கு கண்காட்சிக்காகக் கொண்டுவரப்பட்டு அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த மெக்னகார்ட்டா தற்சமயம் உலகின் பல புகழ்மிக்க அருங்காட்சியகங்களுக்குச் சிறப்பு கண்காட்சிக்கு உலகம் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு அரும்பொருள். அப்படி என்ன இந்த மெக்ன கார்ட்டாவில் எனக் கேட்பவர்களுக்காக சில விபரங்களைத் தருகின்றேன்.

    as

    கி.பி.1215ஆம் ஆண்டு வாக்கில் இங்கிலாந்தை ஆண்டு கொண்டிருந்த மன்னன் ஜோன் மிக மனிதாபிமானமற்ற முறையிலான ஒரு அரசாட்சியை நடத்திக் கொண்டிருந்தார். இவர் கி.பி. 1199ஆம் ஆண்டில் அரசராக முடிசூட்டிக் கொண்டவர். ஏனைய பிரபுக்களுக்கு ஆட்சி ரீதியில் மிகுந்தபாதிப்பை கொடுக்கும் வகையிலான ஆட்சியை இவர் நடத்திக் கொண்டிருந்தார். இவரைப் பதிவிலிருந்து நீக்குவது என்பதும் முடியாத காரியமாக இருந்தது. ஏனைய பிரபுக்கள் அனைவரும் சேர்ந்து மன்னர் ஜோனுக்கு அழுத்தம் கொடுத்து நில உரிமை தொடர்பான விசயத்தில் சட்ட மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் அப்படி ஒத்துழைக்கத் தவறினால் அவர்களது ஆதரவை மீட்டுக் கொள்வர் எனவும் முடிவு செய்தனர். அந்த நேரத்தில் தான் மன்னர் ஜோன் பிரான்சு நாட்டில் நடைபெற்று முடிந்த போரில் தோல்வியைத் தழுவி தனது படைகளோடு இங்கிலாந்தின் கெண்டபரி திரும்பியிருந்தார். ஆக இந்தச் சூழலில் பிரபுக்களை எதிர்ப்பது சரியல்ல என்ற முடிவுக்கு அவரும் வந்தார். இல்லையென்றால் ஆட்சி பறிபோய்விடும் என்பதை அவரால் ஊகிக்க முடிந்தது.

    மன்னர் ஜோனுக்கும் ஏனைய பிரபுக்களுக்குமான பேச்சு வார்த்தை தொடங்கியது. ஆனால் அது வெற்றிகரமான வளர்ச்சியைக் காணவில்லை. சலிப்படைந்த ஏனைய பிரபுக்கள் இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபர்ட் நகரில் படைகளைத் திரட்டினர். 1215ஆம் ஆண்டு மே 17ஆம் நாள் மிகப்பெரிய படையுடன் அணிவகுத்துச் சென்று லண்டன் நகரை அடைந்து லண்டன் நகரைக் கைப்பற்றினர். இதனைக் கேள்வியுற்று எங்கே தம் ஆட்சி பறிபோய்விடுமோ என்று மன்னர் ஜோன் அஞ்சத்தொடங்கி பேச்சு வார்த்தைக்கு மீண்டும் சம்மதம் தெரிவித்தார்.

    as1

    மன்னர் ஜோனின் குழுவும் ஏனைய பிரபுக்களும் ரன்னிமீட் நகரில் சந்தித்தனர். ஏற்கனவே உள்ள சட்டத்தை அதிகாரப்பூர்வமாக்குவது என்பதோடு வாய்மொழி உறுதிகளாக இருந்த சில சட்டங்களையும் இந்தச் சந்திப்பில் ஆவணப்படுத்தினர். இந்த ஆவணத்தின்படி சட்டம் என்பது அரசனுக்கும் மேலான அதிகாரத்தைக் கொண்டது என்ற நிலைப்பாட்டை உறுதி செய்வதாக அமைந்தது.

    தான் ஒப்புதல் அறிவித்து ஏற்றுக் கொண்ட இந்த ஆவணத்தை நடைமுறைப்படுத்தும் முன் புனிதத்தந்தை போப் அவர்களிடம் இவ்விசயம் தெரிவிக்கப்பட்டது. இது அரசனுக்கு நிகழ்ந்த உச்சக் கட்ட அவமானம் என அவர் கூறி இது செல்லாது எனப் பிரகடனப்படுத்தினார். இதனை இப்பிரபுக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சலிப்படைந்த பிரபுக்கள் உள்ளூரில் போரைத் தொடங்கினர். 1216ஆம் ஆண்டில் ஏறக்குறைய இங்கிலாந்தின் பாதி அளவு மன்னர் ஜோனின் எதிரிகளான பிரபுக்களின் கைவசமானது. அதே ஆண்டு மன்னர் ஜோன் மரணமடைந்தார். இது நிலமையை மேலும் மோசமாக்கியது. மன்னரின் ஒன்பது வயது புதல்வர் புதிய மன்னரானார். மன்னர் மூன்றாம் ஹென்றி என அவருக்குப் பெயர் வழங்கி பட்டம் சூட்டப்பட்டது.

    அதன் பின்னர் மெக்னா கார்ட்டாவில் மாற்றங்கள் சில செய்யப்படுவது நிகழ்ந்தது. மெக்னாகர்ட்டா இங்கிலாந்தின் முதல் சட்ட ஆவணம் என்பது இதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தும். மெக்னா கார்ட்டாவில் மேலும் புதிய சட்டங்கள் தொடர்ந்து இணைக்கப்பட்டும் சட்டத்திருத்தங்கள் உள்ளிணைக்கப்பட்டும் மாற்றங்கள் நிகழ்வது இயல்பாக நடந்தது. ஆனால் 1300க்குப் பிறகு மெக்னா கார்ட்டா பொதுவாக மறக்கப்பட்ட ஒரு விசயமாக அமைந்து போனது. அடுத்தடுத்த ஆட்சியாளர்களும் அதனை மறந்து போயினர். ஆனால் மெக்னா கார்ட்டா பற்றிய பேச்சுக்களும் அதன் தேவையும் மீண்டும் 17ம் நூற்றாண்டில் உயிர்பெற்றுக் கிளம்பியது.

    as2

    சட்ட நிபுணர் சர் எட்வர்ட் கோக் மெக்னா கார்ட்டாவை மறுவாசிப்பு செய்தார். அதன் பின் மெக்னா கார்ட்டா பற்றிய பேச்சு தொடர இது இங்கிலாந்தின் மிக முக்கிய சட்ட ஆவணம் என்ற சிறப்பை பெற்றது. மெக்னா கார்ட்டாவில் இருக்கும் சட்ட குறிப்புக்களில் தனி மனித உரிமை தொடர்பானவை, அரசியலமைப்புச் சட்டம் தொடர்பானவை என்பவை குறிப்பிடத்தக்கவை.

    உதாரணமாக இதில் உள்ள ஒரு சட்டத்தின் படி, எந்தவொரு தனிமனிதரும் முறையான ஒரு விசாரணை இல்லாமல் சிறையில் அல்லது அரசின் பாதுகாப்பில் வைக்கப்படக் கூடாது என்று ஒரு சட்டம் குறிப்பிடுகின்றது.

    as3
    மெக்னா கார்ட்டாவில் உள்ள எழுத்துக்கள் லத்தீன் மொழியில் அமைந்துள்ளன.

    மெக்னா கார்ட்டாவின் 800ம் ஆண்டு விழா 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி, அது நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்தின் பிரித்தானிய நூலகத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

    இந்த அரும்பொருள், சிறப்பு கண்காட்சிக்காக வந்திருந்த கெண்டர்பரி நகரமானது, இங்கிலாந்தைப் பொறுத்தவரை வரலாற்று ரீதியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகரம். ஏனெனில் இங்குதான் ரோமானியப்படை முதன் முதலாக ஆட்சியைக் கைப்பற்றியதோடு பின்னர் கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தையும் இங்கிலாந்து முழுமைக்கும் பரவலாக்கியது.

    அருங்காட்சியகம் பர்றிய குறிப்பு
    Canterbury Royal Museum
    Beaney House of Art and Knowledge
    18 High St, Canterbury CT1 2BD, United Kingdom
    நுழைவு இலவசம்

    இங்கே நான் சென்றிருந்த அரச அருங்காட்சியகத்தில் கெண்டர்பரி நகரின் வரலாற்றைச் சொல்லும் பல அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை எல்லாம் பார்த்து குறிப்பெடுத்து வர நிச்சயம் நான்கு மணி நேரங்களாவது ஆகும். இங்கிலாந்தின் கெண்டர்பரி நகரம் செல்பவர்கள் தவறவிடாமல் செல்ல வேண்டிய மிக முக்கிய ஒரு அருங்காட்சியகம் இந்த அரச அருங்காட்சியகம்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 63

    இஸ்லாமிய கலைகள் அருங்காட்சியகம், கோலாலம்பூர், மலேசியா

    முனைவர்.சுபாஷிணி

    தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய இஸ்லாமிய கலைப்பொருட்களுக்கான அருங்காட்சியகம் மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூர் நகரில் உள்ளது. 1998ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த அருங்காட்சியகம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் இருக்கும் இடம் கோலாலம்பூரின் மையப் பகுதி. 30,000 சதுர அடி பரப்பளவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

    பள்ளிவாசல் கட்டிடங்கள் கட்டிட அமைப்பு. அல்குரான் மற்றும் ஆவணங்கள், இந்தியாவில் இஸ்லாம், சீனாவில் இஸ்லாம், மலேசியாவில் இஸ்லாம், ஆபரணங்கள், துணி வகைகள், போர் கருவிகள், காசுகள், இரும்புக் கருவிகள், இஸ்லாமிய கலையில் மரங்களின் பயன்பாடு, களிமண்பாண்டங்கள் ஆகிய பணிரெண்டு வகைகளில் இங்கே காட்சிப்பொருட்கள் வகைப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஏறக்குறைய ஏழாயிரம் அரும்பொருட்களும் இஸ்லாமிய சமயத் தொடர்பான நூல்களும் இந்த அருங்காட்சியகத்தில் காணக்கிடைக்கின்றன.

    ஒவ்வொரு தளத்திலும் பார்த்து குறிப்பெடுத்துக்கொள்ள ஏராளமான அரும்பொருட்கள் இருப்பதால் இங்கு செல்ல விரும்புவோர் ஏறக்குறைய நான்கு மணி நேரங்களையாவது இந்த அருங்காட்சியகத்திற்காக ஒதுக்கி விடுவது நல்லது. நான் சென்றிருந்த சமயத்தில் இதற்கு நுழைவுக்கட்டணமாக 14 ரிங்கிட் வசூலித்தார்கள். ஆக செல்லும் முன் இதன் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தை ஒரு முறை பார்த்து தகவல்களை அறிந்து கொண்டு செல்வதும் உதவும்.

    1

    இஸ்லாமிய கலைகள் எனும் போது அதிலும் கட்டட கட்டுமானம் எனும் போது யந்திர வடிவங்களின் இணைப்பில் உருவாக்கப்பட்ட அமைப்புக்களை உலகம் முழுவதிலும் காணலாம். உலகில் இஸ்லாம் பரவிய நாடுகளில் கட்டப்பட்ட பள்ளிவாசல்களின் மாடல்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஸ்பெயினின் புகழ் மிக்க அல்ஹம்ரா, மாலியில் உள்ள ஜேனா பள்ளிவாசல், வட அமெரிக்கவின் நியூ மெக்சிக்கோ மானிலத்தில் உள்ள டார் அல் இஸ்லாம் பள்ளிவாசல், திருக்கியில் உள்ள செலிமியே பள்ளிவாசல், சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகர் பல்ளிவாசல் போன்றவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம்.

    2

    அல்குரான் மற்றும் ஆவணங்கள் உள்ள பகுதியில் அரிய ஆவனங்களும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட அல்குரான் நூல்களும் இருக்கின்றன. உதாரணமாக 12 அல்லது 13ம் நூற்றாண்டு அல்குரான் நூல் ஒன்று இங்குள்ளது. அனேகமாக இது ஸ்பெயின் அல்லது வட ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற குறிப்புடன் இந்த நூல் உள்ளது. வட இந்தியாவில் உருவாக்கப்பட்ட காஷ்மீரிய தாளைக் கொண்டு உருவாக்கப்பட்ட 19ம் நூற்றாண்டு அல்குரான் ஒன்றும் இங்குள்ளது.

    3

    இந்தியாவில் இஸ்லாம் எனும் பகுதியில் கண்களைக் கவரும் பல அரும்பொருட்களைக் காண முடிகின்றது. வட இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சிக்கு அதாவது கி.பி.1526-1828 வரையிலான காலகட்டத்திற்கு முன்னரே பரவலாக இந்தியாவிற்கான அரேபியர்களின் வருகை என்பது விரிவானது. முகலாய கலைப்பொருட்கள் அரேபிய இஸ்லாமிய கலைகளிலிருந்து மாறுபட்ட வடிவத்தில் தனித்துவத்துடன் திகழ்வது. அதனை வெளிப்படுத்தும் அரும்பொருட்கள் சில இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஓவியங்கள், கைவினைப்பொருட்கள், ஆடை ஆபரணங்கள், மன்னர்களின் கோட்டைகளை அலங்கரித்த பொருட்கள் என்பனவற்றைக் குறிப்பாகச் சொல்லலாம். இந்திய இஸ்லாமிய கலையை வெளிப்படுத்தும் வகையிலான 1850ம் ஆண்டு தங்கத்தில் வைரம் படித்த கழுத்தணி ஒன்றும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    5

    மலேசியாவிற்கு இஸ்லாமிய மதம் சிறிது சிறிதாக 14ம் நூற்றாண்டு வாக்கில் பரவியது. அரேபிய வணிகர்கள் மலாயா தீபகற்பம் வர ஆரம்பித்து பின்னர் படிப்படியாக உள்ளூர் மக்கள் இஸ்லாமிய மதத்தை தழுவிய நிலையில் பின்னர் மலாக்காவில் மன்னராக தன்னை நிலைப்படுத்திக் கொண்ட மன்னர் பரமேஸ்வரர் இரு நாடுகளுக்கான நல்லிணக்கத்திற்காக அரேபிய இஸ்லாமிய பெண்ணை மணந்து இஸ்லாமிய மதத்தை தாமும் தழுவியதால் மலாயா முழுமையாக இஸ்லாமிய நாடாக கி.பி15ம் நூற்றாண்டில் உருமாற்றம் கண்டது. படிப்படியாக நாடு முழுமைக்கும் இஸ்லாமிய கலைகள் வளர்ச்சியுற்றன. இஸ்லாமிய கட்டுமானக் கலைகள் கடந்த சில ஆண்டுகளில் மேலும் பரவலாக வளர்ச்சியுறுவதை நாடெங்கிலும் நன்கு காணலாம். இதனை வெளிப்படுத்தும் நூல்கள், ஆவணங்கள், கைவினைப்பொருட்கள், ஆடை ஆபரணங்கள் ஆகியனவும் இங்கே சேகரித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    6

    இந்த அருங்காட்சியகத்தைப் பற்றியும் இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிரந்தர கண்காட்சிகளைப்பற்றியும் அவ்வப்போது ஏற்பாடு செய்யப்படுகின்ற தற்காலிக கண்காட்சிகளைப்பற்றியும் இதன் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் தகவல் அறியலாம். http://www.iamm.org.my/ இப்பக்கத்தில் அருங்காட்சியகம் திறந்திருக்கும் நேரம், கட்டணம், முகவரி ஆகிய தகவல்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.

    மிகப் புதுமையான கட்டுமான அமைப்பில் அமைக்கப்பட்டு ஏராளமான காட்சிப்பொருட்களுடன் நாட்டின் மையப்பகுதியில் இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கின்றது. மலேசியா செல்பவர்கள் இங்கே சென்று பார்த்து வருவதை உங்கள் பயணத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளுங்கள்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 62

    கெல்ட்டன் அருங்காட்சியகம், ஹோஹ்டோர்ஃப், ஜெர்மனி

    முனைவர்.சுபாஷிணி

    ஏறக்குறைய இன்றைக்கு 2500 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியின் பாடன் ஊர்ட்டென்பெர்க் எனும் மாநிலத்தில் உள்ள ஹோஹ்டோர்ஃப், எனும் பகுதியில் இறந்த தங்களின் மன்னனுக்காக கெல்ட் மக்கள் குன்று ஒன்றை உருவாக்கி அதில் நினைவாலயம் ஒன்றை உருவாக்கினார்கள். நாளடைவில் அப்பகுதியில் பல்வேறு பூகோள நில மாற்றங்களினாலும் விவசாயம் தொடர்பான நடவடிக்கைகளினாலும் அந்தக் குன்று சற்றே தாழ்நிலமாக வடிவம் பெற்றது. 1968ம் ஆண்டில் ஒரு தன்னார்வத் தொண்டூழிய தொல்லியல் ஆய்வாளர் சில வித்தியாசமான கற்களை அப்பகுதியில் கண்டெடுக்கவே, அப்பகுதியைத் தொல்லியல் ஆய்விற்கு உட்படுத்த முயற்சிகள் எடுக்க, அங்கு ஆய்வுகள் தொடங்கின. உயர்தரமான அகழ்வாய்வு முறைகளைப் பயன்படுத்தி இப்பகுதியிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட முயற்சிக்குப் பலன் கிடைத்தது.

    asu

    2500 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போன தம் மன்னனைப் புதைத்து வைத்து அவன் சென்றிருக்கும் மறு உலகத்தில் அவனுக்குத்தேவை எனத் தாம் கருதிய பொருட்களையும் கூடவே வைத்து மிக அழகிய அறை ஒன்றை அந்தக் குன்றிற்குள் அம்மக்கள் உருவாக்கியிருக்கின்றனர். அகழ்வாராய்ச்சியின் போது இறந்த மன்னனுக்காக அம்மக்கள் கட்டிய அறை, அந்த அறையில் அம்மன்னனை அவர்கள் உறங்க வைத்திருந்த தங்கக்கட்டில், அவன் உடலின் மேல் அவர்கள் அணிவித்திருந்த தங்கத்தினாலான அணிகணலன்களான கால் வளையங்கள், கை வளையங்கள் நெற்றிப்பகுதி அலங்காரம் என்பனவற்றோடு அவன் மேற்குலகில் பயணம் செய்வான் என்ற நம்பிக்கையில் அவனுக்காக உயர்தரமான ஒரு தேரும் அவன் நீர் அருந்தும் வகையில் பெரிய தங்கத்தினாலான ஒரு கூஜாவையும் தயாரித்து அந்த அறையில் அம்மக்கள் வைத்திருந்தனர் என்பது இந்த அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

    டோனாவ் நதிக்கறையில் கண்டெடுக்கப்பட்ட ஏனைய சில இறந்தோருக்கான ஈமச்சடங்கு நினைவாலயங்களை ஒத்த வடிவிலேயே இந்த கெல்ட் நினைவாலயக் குன்றும் அதில் கிடைத்த ஈமச்சடங்குச் சின்னங்களும் அமைந்திருக்கின்றன, இந்த ஆய்வு ஜெர்மனியில் எந்தெந்த பகுதிகளில் கெல்ட் இன மக்கள் விரிந்து பரந்து வாழ்ந்தனர் என்பதை அடையாளம் காண உதவும் வகையில் இருக்கின்றது என்பது மிக முக்கிய அம்சமாக அமைகின்றது.

    asu1

    மன்னன் புதைக்கபப்ட்ட பகுதியில் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நிகழ்த்திய அகழ்வாய்வுகளில் அதே பகுதியில் கெல்ட் இன மக்கள் வாழ்ந்ததற்கானத் தடயங்களாக அமையும் பல பொருட்களை அகழ்வாய்வுக் குழுவினர் கண்டெடுத்திருக்கின்றனர். அதில் கெல்ட் சமூகத்தினர் தமது அன்றாட வாழ்க்கை உபயோகத்திற்காகப் பயன்படுத்திய பொருட்கள், இரும்புப் பட்டறை, மண்பாண்டங்கள், குதிரை வண்டிகள், சமையல் அடுப்புகள், சமையல் பாத்திரங்கள், அலங்காரப் பொருட்கள். தொழிற்கருவிகள், போருக்கான கருவிகள் என பலதரப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. மனித எலும்புக்கூடுகளும் இதில் அடங்கும்.

    asu2

    இந்தப் பொருட்களை எல்லாம் காட்சி வைக்கும் பொருட்டு ஜெர்மனியின் பாடர்ன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் உள்ள ஹோஹ்டோர்ஃப் பகுதியில் ஒரு பிரத்தியேக அருங்காட்சியகத்தை உருவாக்கி, அது 1991ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் கி.மு. 540 வாக்கில் வாழ்ந்து இறந்த அம்மன்னனின் ஈமச்சடங்கு அறை, அவனது முழு உடலின் எலும்புக்கூடு ஆகியவற்றோடு அங்கே கண்டெடுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும் காட்சிக்கு வைத்திருக்கும் ஒர் இடமாகத் திகழ்கின்றது.

    அருங்காட்சியகத்தின் உள்ளே பட விவரணைகள் உள்ளன. ஆங்கிலம், டோய்ச் ஆகிய இரு மொழிகளிலும் விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் கெல்ட் சமூகத்து மக்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களோடு விரிவான அகழ்வாய்வுப் பணி தொடர்பான செய்திகள் வழங்கப்பட்டுள்ளன. மன்னனின் எலும்புக்கூடும் முதல் தளத்திலேயே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    asu4

    கீழ்தளத்தில் ஒரு தனிப்பகுதியில் மன்னனின் அறை, அவனது தங்கக் கட்டில், அவனது தேர், அவனது அணிகலன்கள், தண்ணீர் கூஜா ஆகியன மிகச்சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    இதனைக் கடந்து சென்றால் ஒரு தனி அறை வருகின்றது. அங்கே இந்த அருங்காட்சியகம் பற்றியும் இங்கு படிப்படியாக நிகழ்ந்த தொல்லியல் ஆய்வுகள் பற்றிய விளக்கமும் ஆவணப்படமாக காட்டப்படுகின்றது. பார்வையாளர்கள் இங்கு வந்து அமர்ந்து முழு தகவல்களையும் திரைக்காட்சியாகப் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.

    இப்பகுதியில் நிகழ்ந்த அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட முக்கிய சிலை ஒன்றும் இதே அருங்காட்சியகத்தில் உள்ளது. அது ஒரு போர் வீரனின் சிற்பம். இது மிகத் தனித்துவம் வாய்ந்த கெல்ட் இன போர் வீரர்கள், அதிலும் குறிப்பாக ஆல்ப்ஸ் பகுதியை பிரதினிதிக்கும் வகையில் அமைந்த ஒரு மிகப் பெரிய, ஆளுயர சிற்பம்.

    asu5

    இந்த அருங்காட்சியகத்திற்கு வருபவர்கள் கெல்ட் மக்களைப் பற்றி அறிந்து கொள்ள பல தகவல்கள் உள்ளன. புத்தகங்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

    அருங்காட்சியகத்தின் வெளிப்புறத்தில் கெல்ட் மக்களின் பண்டைய வாழ்க்கை முறையை சித்தரிக்கும் மாதிரி குடியிருப்புகளை உருவாக்கியுள்ளனர். இது கெல்ட் மக்களின் பண்டைய இல்ல அமைப்பு, பட்டறை அமைப்பு, விவசாய அமைப்பு ஆகியவற்றைப் பார்வையாளர்களுக்கு விளக்குவதாகவும் அமைகின்றது.

    asu6

    நான் வசிக்கின்ற லியோன்பெர்க் நகரிலிருந்து 27 கி. மீ. தூரத்தில் தான் இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கின்றது என்றாலும் இந்த ஆண்டு தான் இதற்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கெல்ட் இன மக்களைப் பற்றி ஒரு நூலில் வாசித்த போது இந்த நகர் பற்றி தற்செயலாக அறிய வர மேலதிகத் தகவலை இணையத்தில் தேடிய போது இந்த அருங்காட்சியகம் பற்றிய தகவல் எனக்குக் கிடைத்தது. இங்கே நேரில் சென்று இங்குள்ள அரும்பொருட்களை அதிலும் குறிப்பாக இறந்த மன்னனின் ஈமச்சடங்கு அறை, தேர், அவனது தங்கக் கட்டில், அணிகலன்கள் என பார்த்தபோது ஆச்சரியத்தில் மூழ்கினேன்.

    அருங்காட்சியகத்தின் முகவரி
    Keltenmuseum Hochdorf/Enz
    Keltenstraße 2, 71735 Eberdingen.

    இப்படித்தான் பக்கத்திலே இருந்தாலும் கூட பல முக்கிய இடங்களை நாம் காணத்தவறுவது என்பது பலருக்கும் நிகழ்ந்திருக்கும். ஆக நமது சுற்றுப்புறத்தில் இருக்கின்ற முக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை தேடி அவற்றைச் சென்று பார்த்து வருவது நமது வரலாற்று அறிவை மேலும் வளர்த்துக் கொள்ள உதவும்.

    சரி. அடுத்த பதிவில் ஐரோப்பாவில் உள்ள மேலும் ஒரு அருங்காட்சியகத்தை அறிமுகம் செய்கின்றேன். எந்த ஊரில் உள்ள எந்த அருங்காட்சியகமாக இருக்கும் என்று யோசித்து வையுங்கள்!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 61

    ஜிம் தோம்சன் அருங்காட்சியகம், பாங்கோக், தாய்லாந்து

    முனைவர்.சுபாஷிணி

    இந்த வாரம் நாம் காணவிருக்கும் அருங்காட்சியகம் அமைந்திருப்பது தாய்லாந்தின் பாங்காக் நகரில்.

    இந்தப் பூவுலகில் மனிதர்கள் பிறந்து, வாழ்ந்து மறைந்து கொண்டேயிருக்கின்றோம். ஒவ்வொருவரும் இந்த உலகிற்கு வந்த காரணத்தை ஏதாவது ஒரு வகையில் நிறைவேற்றிவிட்டுத்தான் செல்கின்றோம். ஒரு சிலரது வாழ்க்கை தனக்கு மட்டுமே பயனளிப்பதாக அமைந்து விடுகின்றது. ஒரு சிலரது வாழ்க்கை பிற உயிர்களுக்குத் துன்பம் விளைவிக்கும் நாச செயல்கள் நிறைந்ததாய் அமைந்து விடுகின்றது. ஒரு சிலரது வாழ்க்கையோ அவர்கள் மறைவிற்குப் பின்னரும் கூட அவர்கள் பெயர் உலகில் நிலைத்து நிற்கும் வகையில் அமைந்து விடுகின்றது. அப்படி நிலைத்து நிற்கும் வரிசையில் இருப்போர் ஏராளம்.

    ஒருவரை நினைத்துப் பார்த்து நினைவு கூர்ந்து அவர்களது செயற்பாடுகளை சில குறிப்பிடத்தக்க காரணங்களுக்காக பாராட்டுகின்றோம். அந்த வகையில் வருபவர்தான் திரு.ஜிம் தோம்சன் அவர்கள்.

    1

    ஜிம் தோம்சன் அவர்கள் பிறப்பால் ஒரு வட அமெரிக்கர். டெலேவர் மாநிலத்தில் உள்ள கிரீன்வீல் நகரில் 1906ம் ஆண்டில் பிறந்தார். கட்டிடக் கட்டுமானத்துறையில் பயிற்சி எடுத்தவர் இவர். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் அவர் தாமாகவே முன் வந்து அமெரிக்க ராணுவத்தில் பணியாற்ற தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். முதலில் இவருக்குப் பணி ஐரோப்பாவில் வழங்கப்பட்டிருந்தது. ஆகையால் ஐரோப்பாவில் அச்சமயம் ராணுவப் பணியில் இருந்த துருப்புக்களோடு ஐரோப்பாவில் தங்கி பணியாற்றினார். பின்னர் பணிக்காக இவர் ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு அனுப்பப்பட்டார். இவரது முதல் பணி தாய்லாந்தில் அமைந்திருந்தது. ஆயினும் பாங்காக் வருவதற்கு சில தினங்களுக்கு முன்னரே இரண்டாம் உலகப் போர் முடிவுற்றது என்ற காரணத்தால் அவர் ராணுவச் சேவையில் ஈடுபட வாய்ப்பு அமையவில்லை. ராணுவச் சேவைக்காகத் தாய்லாந்து வந்து சேர்ந்த ஜிம் தோம்சன் தாய்லாந்தின் அழகில் தன் மனதைப் பறிகொடுத்தார்.

    தாய்லாந்தின் கலையம்சங்களும் கிராமிய கைவினைப் பொருட்களும் துணி வேலைப்பாடுகளும், மர வேலைப்பாடுகளும் ஜிம் தோம்சனின் மனதைக் கொள்ளைக் கொண்டன. தான் இதுவரை பார்த்திராத கலையம்சங்கள் தாய்லாந்து கலை பாணியில், இருப்பதை அவர் உணர்ந்தார். அவரது சிந்தனை தாய்லாந்து கிராமப்புற வாழ்க்கையில் இருக்கும் நுணுக்கமான விஷயங்களிலேயே ஆர்வம் கொண்டு அவர்தம் கவனத்தை முழுமையாக ஈர்க்க ஆரம்பித்தது.

    2

    குறிப்பாக கையால் பின்னப்படும் பட்டு ஆடைகள் மறக்கப்பட்ட ஒருகலையாக அச்சமயம் மாறிக்கொண்டிருந்தது. இது ஜிம் தோம்சனின் கவனத்தை ஈர்க்கவே, இக்கிராமியத் தொழிற்கலை மறையக் கூடாது என்றுமுடிவெடுத்து இந்தக் கலையை மீட்டெடுக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அவருக்கு இயற்கையாகவே துணிகளில் வர்ணம் சேர்க்கும் கலையில் அனுபவமும் இருந்தது. இதன் அடிப்படையில் இந்தக் கலையை புதுமைப்படுத்தி கிராமத்துக் கலைக்கு புதிய வடிவம் கொடுத்து இதனை ஒரு வர்த்தகப் பார்வையில் விரிவு படுத்தினார். உலக அளவில் குறிப்பாக ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளில் இக்கலை விரிவாக்கம் பெற தொடர்ந்து பல முயற்சிகளைச் செய்து வெற்றியும் கண்டார்.

    அடிப்படையில் ஒரு கட்டிடக் கலைஞராகத் தொழில் முறையில் பயிற்சி பெற்றவர் ஜிம் தோம்சன். அவருக்குத் தாய்லாந்து தேக்கு மர கிராமிய வீடுகளின் கட்டுமானக் கலை மனதை கவர்ந்தது. தாய்லாந்து வீடுகளும் சரி, புத்த விகாரைகளும் சரி, பொதுவாகவே கூரைப்பகுதி என்பது சமமாக இல்லாது தனித்துவமிக்க வகையில் அமைந்திருக்கும் தன்மை கொண்டது. இது மேற்குலக கட்டுமானக் கலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதொரு வடிவம்.

    3

    தாய்லாந்து வீடுகள் எனும்போது அவை தரைப்பகுதியானது நிலத்திலிருந்து உயரமாக தூக்கி வைத்து கட்டப்பட்ட வகையில் இருக்கும். கால்கள் அமைத்தது போன்ற அமைப்பும் இருப்பதால் வீட்டுக்குக் கீழ்ப்பகுதியில் மணல் தரை பார்வைக்குத்தென்படும் வகையில் இருக்கும். வெள்ளம் வரும் போது நீர்மட்டம் அதிகரித்தால் அது வீட்டை பாதிக்காதவாறு இவ்வகை வீடுகள் அமைந்திருப்பதும் மிக சமயோஜிதமாக யோசித்துக் கட்டிய கட்டுமானம் இவை என்பது புலப்படும்.

    தாய்லாந்து கட்டுமானக் கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஜிம் தோம்சன் பாங்கோக் நகரின் மையப்பகுதியில் ஒரு நிலத்தை வாங்கி அங்கே தாய்லாந்து கட்டுமானக் கலையை வளர்க்கும் வகையில் 6 வீடுகளை அமைத்தார். அந்த வீடுகளில் தான் ஆசியாவில் பயணித்த சமயத்தில் தான் சேகரித்த கலைப்பொருட்களைக் காட்சிக்கு வைத்தார். ஒரு தனி வீட்டில் தாய்லாந்து பட்டு பற்றிய தகவல் களஞ்சியத்தை வடிவமைத்தார். பட்டுப்புழுக்களிலிருந்து நூல் தயாரிக்கும் விதத்தை விளக்கும் விபரங்களை அருங்காட்சியகமாக அமைத்தார்.

    4

    இந்த வீடுகளை அமைத்து காட்சிப்பொருட்களை வைக்கும் முன் தாய்லாந்து சமயச் சடங்கு முறைகளைப் பின்பற்றி புதுமனை புகு விழாவினையும் நடத்தினார். இதற்குத் தாய்லாந்து ஜோதிடர்களை அணுகி நல்ல நேரம் கணித்து புதுமனை புகுவிழாவை ஏற்பாடு செய்து பின்னரே தன் புதிய இல்லப் பூங்காவிற்கு குடி புகுந்தார். முதலில் இந்த இடத்தை தனது சொந்த கலையுணர்வுக்காக அமைத்த ஜிம் தோம்சன் இந்த இல்லப்பகுதி பலரது கவனத்தை ஈர்ப்பதைப் பார்த்து இதனைப் பொது மக்கள் பயன்பெறும் வகையில் அருங்காட்சியகமாக மாற்றினார். தனக்கென்று ஒரு குடும்பம் என இல்லாத நிலையில் இந்த அருங்காட்சியகத்திலிருந்து சேகரிக்கின்ற வருமானத்தை தாய்லாந்து கலைப்பண்பாட்டு வளர்ச்சிக்காகச் செயல்படும் நிறுவனங்களுக்குச் சென்று சேரும் வகையில் ஏற்பாடுகளைச் செய்தார்.

    1967ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதி மலேசியாவின் கேமரன் ஹைலண்ட்ஸ் மலைப்பிரதேசத்தில் தமது நண்பர்களோடு சுற்றுலாவிற்குச் சென்ற ஜிம் தோம்சன் அவர்கள் திடீரென்று காணாமல் போனார். அவரை எங்கு தேடியும் யாராலும் கண்டு பிடிக்கமுடியவில்லை. எந்த வித தடயங்களும் அவரது மறைவைப் பற்றி யாருக்குமே கிடைக்கவில்லை. அவரது மறைவுக்குப் பின்னர் அவர் அமைத்த தாய்லாந்து கட்டுமானக் கலைக்கூட அருங்காட்சியகம் ஜிம் தோம்சன் அறக்கட்டளையினால் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றது. அவரது விருப்பப்படியே அருங்காட்சியகம் பொது மக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கே தொடர்ச்சியாக தாய்லாந்து பாரம்பரிய பட்டு நெய்யும் கலையும் காட்சிப்படுத்தப்படுகின்றது.

    5

    ஜிம் ஜோம்சன் அருங்காட்சியகத்திற்கு நான் 2013ம் ஆண்டில் ஜனவரி மாத ஆரம்பத்தில் சென்றிருந்தேன். தாய்லாந்தில் சுற்றுலா முடித்து பாங்காக் நகரில் இருந்த இறுதி நாட்களில் தற்செயலாக இந்த அருக்காட்சியகம் பற்றி கேள்விப்பட்டு சென்று வந்தேன்.

    அருங்காட்சியகத்தின் உள்ளே நுழையும் முன்னரே பச்சை பசேலன தாவரங்கள் நம்மை வரவேற்கின்றன. எழில் கொஞ்சும் அழகிய கலைக்கூடம் இது. கலைப்பிரியர்களாக இருந்தால் ஒரு நாள் முழுவதையும் இந்த வளாகத்திலேயே நிச்சயம் செலவிடலாம்.

    6

    ஜிம் தோம்சன் இந்த அருங்காட்சியகத்தில்

    தாய்லாந்து செல்பவர்கள் இந்த அருங்காட்சியகத்திற்குச் சென்று வரலாம். திரு.ஜிம் தோம்சனின் தாய்லாந்து கட்டிடக் கலை வேலைப்பாடுகளின் மீதான மிகுந்த ஈடுபாட்டினை இங்கு வருபவர்கள் நிச்சயமாக உணரமுடியும். ஜிம் தோம்சன் மறைந்தாலும் அவர் பெயரை சொல்லிக் கொண்டிருக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் திகழ்கின்றது.

    சரி.. அடுத்த பதிவில் வேறொரு நாட்டில் மற்றுமொரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கின்றேன்… தொடர்ந்து வாருங்கள்!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 60

    பாரதி பிறந்த இல்ல அருங்காட்சியகம், எட்டயபுரம் (2), தமிழ்நாடு

    முனைவர்.சுபாஷிணி

    பாரதி நினைவு இல்லத்தின் பக்கத்து வீட்டில் தான் நான் இந்தப் பயணத்தின் போது தங்கியிருந்தேன் என்று முதல் பதிவில் குறிப்பிட்டேன். அந்த வீட்டின் சொந்தக்காரர் திருமதி சாவித்ரி. இவரது கணவர் மறைந்த திரு.துரைராஜ் அவர்கள். இவர் எட்டயபுரம் ராஜா பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்தவர். தற்சமயம் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக அவர்களது மகள் தான் பொறுப்பேற்றிருக்கின்றார். திரு.துரைராஜ், அவர் வாழ்ந்த காலத்தில் எட்டயபுரத்தில் இருந்த பாரதி அன்பர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டவர். அம்மையார் சாவித்திரி, தமிழகம் நன்கறிந்த திரு.பாஸ்கர தொண்டைமான் அவர்களின் சகோதரி. இவர்களது சகோதரர் ரகுநாத தொண்டைமான் பாரதி நூலகம் ஒன்றினை ஏற்படுத்தினார். அந்த நூலகம் இந்த இல்லம் இருக்கும் வீடுகளின் வரிசையில் முதலாவதாக இருக்கின்றது. நான் சென்ற சமயத்தில் அந்த நூலகத்தின் பொறுப்பாளராக இருந்தவர் திரு.இளசை மணியன் அவர்கள்.

    பாரதி பிறந்த இல்லமாக இருக்கும் இந்த வீடு எவ்வாறு ஒரு அருங்காட்சியகமாக மாறியது என்று சிலர் யோசிக்கலாம்.

    ab1
    நுழைவாயிலில்

    பாரதியின் தாய் மாமன் திரு.சாம்பசிவம் ஐயர், பாரதி இங்கிருந்து சென்ற பிறகும் இந்த இல்லத்தில் இருந்திருக்கின்றார். பிறகு அவருடைய உறவினர்கள் சிலர், அவர்கள் கல்கத்தாவில் இருந்திருக்கின்றனர். அவர்கள் இந்த இல்லத்தைச் சில காலம் வேறொருவருக்கு வாடகைக்கு கொடுத்திருக்கின்றனர். பக்கத்து வீட்டில் குடியிருந்த திரு.துரைராஜ் ஆசிரியர், அதாவது அம்மையார் சாவித்திரியின் கணவர் சாம்பசிவ ஐயரின் உறவினர்களை அணுகி இந்த இல்லத்தை வாங்கியிருக்கின்றார். இந்த வீடு பாரதியின் பெயர் சொல்லும் ஒரு இடமாக அமையவேண்டும் என்பது திரு.துரைராஜ் அவர்களின் கனவாக இருந்திருக்கின்றது. ஆக, வாங்கியவுடன் அந்த இல்லத்தில் ஒரு நூலகத்தை ஏற்படுத்தியிருக்கின்றார். 1973ம் ஆண்டு வரை இந்த இல்லம் பலர் வந்து நூல்களை வாசித்து செல்லும் நூலகமாக இருந்துள்ளது. 1973ல் அன்றைய தமிழக முதல்வர்.திரு.கருணாநிதி அவர்கள் ஆட்சியில் இந்த இல்லத்தை பாரதி நினைவு இல்லமாக பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டது. அப்போது இந்த இல்லத்தை அரசாங்கத்திடம், இக்கட்டிடத்திற்கானப் பணத்தை பெற்றுக் கொண்டு திரு.துரைராஜ் ஆசிரியர் குடும்பத்தினர் ஒப்படைத்து விட்டனர்.

    ab2

    இன்று இந்த இல்லம் தமிழக வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக உருவாக்கப்பட்டு தினமும் ஒரு சிலர் வந்து பார்த்துச் செல்லும் வகையில் ஒரு அருங்காட்சியகமாகப் பாதுகாக்கப்படுகின்றது.

    இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே பாரதியின் வரலாற்றுக் குறிப்பு வழங்கப்பட்டுள்ளது. பாரதி வெளியிட்ட நாளிதழ்கள், பாரதி சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், சில ஆவணங்கள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    ab3
    பாரதியின் கையெழுத்து

    பாரதியாரின் இலக்கிய முயற்சிகளை விட தேசப்பற்று சார்ந்த, சமுதாய சீர்திருத்தம் சார்ந்த, விடுதலை வேட்கை நிறைந்த சிந்தனைகள் மக்கள் மனதில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தின.

    பாரதியார் தான் பிறந்த எட்டயபுரத்தில் தொடக்கப்பள்ளியில் கற்று பின்னர் திருநெல்வேலியில் உள்ள இந்துக் கல்லூரியில் உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம் வரை பயின்றார். 1897 ஜூன்மாதம் பாரதிக்கும் செல்லம்மாளுக்கும் கடையம் என்ற ஊரில் திருமணம் நடைபெற்றது. 1898ல் பாரதியின் தந்தை இறந்த போது அவருக்கு வயது 15 தான். அதன் பின்னர் காசிக்குச் சென்று அங்கு சில காலம் இருக்கும் சூழல் அவருக்கு ஏற்பட்டது அங்கே அலாகாபாத் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். டெல்லிக்கு அப்போது ஒரு தர்பாரில் கலந்து கொள்ளச் சென்றிருந்த எட்டயபுரம் ஜமீந்தார் பாரதியை மீண்டும் எட்டயபுரத்திற்கே அழைத்து வந்தார். ஆக 1901 முதல் 1904 வரை மீண்டும் எட்டயபுரத்தில் பாரதி வசிக்கும் சூழல் உருவானது. 1904ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதே ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சுதேசமித்திரன் பத்திரிக்கையின் உதவி ஆசிரியர் பணி அவருக்கு அமைந்தது.

    ab5
    அடுத்த இரண்டாண்டுகளில் பாரதியின் எழுத்துப் பணி மேலும் விரிவடந்தது. 1906 ஆண்டில் இந்தியா வார இதழின் பொறுப்பாசிரியராக இருந்து செயல்படத்தொடங்கினார். 1908 ம் ஆண்டில் இந்தியா பத்திரிக்கைக்கு தடை வழங்கியது அப்போதைய ஆங்கிலேய காலணித்துவ அரசு. அதே ஆண்டு அக்டோபர் மாதம் புதுச்சேரியிலிருந்து இந்தியா பத்திரிக்கையை வெளிக்கொணர்ந்தார். 1909ம் ஆண்டில் தொடர்ச்சியாக புதுவையில் இருந்த வாரே விஜயா, கர்மயோகி ஆகிய இதழ்களை வெளியிட்டார். 1910ம் ஆண்டு மார்ச் மாதம் புதுவையிலும் இந்தியா இதழுக்கு தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்டது. இப்படி இவரது பத்திரிக்கைப் பணி என்பது தொடர்ச்சியாக மேடு பள்ளங்களைச் சந்தித்தவாறே நிகழ்ந்தது.

    1920ம் ஆண்டில் மீண்டும் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் இவருக்கு தொடர்பு உண்டானது . மீண்டும் அதன் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் அடுத்த ஆண்டு திருவல்லிக்கேணி கோயில் யானை தாக்கியதில் உடல் நிலை தளர்ந்து போக அதே ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நள்ளிரவில் 12ம் தேதி அதிகாலையில் மறைந்தார். அப்போது பாரதிக்கு வயது 39 மட்டுமே.

    ab4

    இவ்வளவு குறுகிய காலங்கள் மட்டுமே வாழ்ந்தாழும் பாரதி விட்டுச் சென்ற தாக்கம் என்பது தமிழ் உலகில் மாறாத இடம் பிடிப்பதாய் அமைந்திருக்கின்றது.

    ஏட்டில் பாரதியைப் பற்றி படிக்கும் போது ஏற்படும் உணர்வு என்பது ஒரு வகை. பாரதி பிறந்த இடத்திற்கு வந்து பார்த்து அங்கே சில நிமிடங்களைச் செலவிடும் போது பாரதியுடன் இணைந்து பயணிக்கும் உணர்வு மேலிடுவதைத் தவிர்க்க முடியாது.

    இந்த அருங்காட்சியகம் வார நாட்களில் திறந்திருக்கின்றது. எட்டயபுரம் வருபவர்கள் இங்கே வந்து பார்த்து செல்லும் போது அதே வரிசையில் இருக்கும் ரகுநாதன் நூலகம் – பாரதி ஆய்வு மையத்தையும் தவறாமல் பார்த்துச் செல்லுங்கள். இங்கே பாரதி தொடர்பான பல சேகரிப்புக்கள் உள்ளன. இவை ஏனைய பல தொடர் ஆய்வுகலுக்கு நிச்சயம் உதவக் கூடியவை.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 59

    பாரதி பிறந்த இல்ல அருங்காட்சியகம், எட்டயபுரம், தமிழ்நாடு

    முனைவர்.சுபாஷிணி

    நல்லதோர் வீணை செய்தே – அதை
    நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
    சொல்லடி சிவசக்தி – எனைச்
    சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
    வல்லமை தாராயோ – இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே

    இளம் வயதில் என் தாயார் தமிழ்ப்பாடம் போதித்த போது இப்பாடலையும் சொல்லக் கேட்டு வளர்ந்தேன். இந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளிலும் இருப்பவை தனித்தனி சொற்கள் தாம் என்றாலும் அவை ஒன்றாக இணைந்து முழு வடிவம் பெற்று இவ்வரிகள் ஏற்படுத்திய அதிர்வுகளும் அதனால் என் உள்ளத்தில் ஏற்பட்ட தாக்கம் என்பதும் மிக ஆழமானது; அர்த்தம் நிறைந்தது.

    தமிழ் இலக்கியச் சுவையை விரும்புவோராகட்டும், நாட்டின் சுதந்திரத்தை விரும்புவோராகட்டும், தனி மனித சிந்தனைச் சுதந்திரத்தை விரும்புவோராகட்டும், மத நல்லிணக்கத்தை விழைவோராகட்டும், பெண் சமூகத்தின் விடுதலைக்கு உழைப்பவர்களாகட்டும், சமய சிந்தனைகளில் திளைப்போராகட்டும், சாதிக் கொடுமைகளை எதிர்ப்போராகட்டும்.. இவர்கள் அத்துணை பேருக்கும் ஏதாவது ஒரு வகையில் பாரதியின் செய்யுள் வரிகளோ, விரிவான கட்டுரைகளோ, கார்ட்டூன் வரைப்படச் சித்திரங்களோ, நாளிதழ் செய்திகளோ கைகொடுத்துத் துணையாக நிற்கின்றன.

    பாரதி வாழ்ந்த காலம் இந்திய தேசமே சுதந்திர தாகம் கொண்டு எழுச்சியுடன் இருந்த ஒரு காலகட்டம். தன்னலம் கருதா சுதந்திர தியாகிகள், சிந்தனையாலும், உடலாலும் ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியை எதிர்த்து தனியாகவோ, குழுக்களாகவோ ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான தம் எதிர்ப்பைக் காட்டிய காலகட்டம் அது. இந்த எதிர்ப்புகள் சுவரொட்டிகளாகவும். கையெழுத்துப் பிரதிகளாகவும், நாளேடுகளாகவும், திறந்த வெளி பிரச்சாரப் பேச்சுக்களாகவும், வெளிப்பட்டு மக்கள் மனதில் தோன்றிய சுதந்திர தாகத்திற்கு மேலும் எழுச்சியை ஊட்டின. அப்படி சுதந்திர தாகத்துடன் நாட்டு விடுதலைக்காகவும், மக்கள் மனதிலே ஆழப்பதிந்திருக்கும் மூடச்சிந்தனைகள், சமூக உயர்வு தாழ்வுகள் ஆகியனவற்றைக் களைந்து அதற்கும் விடுதலை வேண்டி செயல்பட்டவர்களில் பாரதியார் தனித்துவம் மிக்கவராகத் திகழ்கின்றார். சாகாவரம் பெற்ற அவரது சிந்தனையின் எழுத்து வடிவங்கள் வாசிப்போர் மனதில் இன்றும் அதே அதிர்வினை ஏற்படுத்துவதை புறக்கணித்து விடமுடியாது.

    தமிழகத்தின் கடந்த நூற்றாண்டில் தோன்றி வாழ்ந்து மறைந்த முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் திகழும் சுப்ரமணிய பாரதியார் பிறந்தது தமிழகத்தின் எட்டயபுரம் என்ற ஒரு சிற்றூரில். அந்தச் சிற்றூரில் அவர் பிறந்து, வளர்ந்து வாழ்ந்த இல்லம் தற்சமயம் பாரதியார் நினைவு இல்லம் ஒரு அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த அருங்காட்சிகயத்திற்குத்தான் இன்றைய பதிவின் வழி நாம் செல்லவிருக்கின்றோம்.

    2009ஆம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை வரலாற்றுப் பதிவுகளுக்காக தமிழகத்தின் தென்பகுதிக்குச் சென்றிருந்தேன். அந்தப் பயணத்தில் எட்டயபுரத்து ஜமீந்தாரின் அரண்மனை தொடர்பான தகவல்களைப் பதிவாக்கும் பணி மையப்பணியாக எனது திட்டத்தில் இடம்பெற்றிருந்தது. அப்பணியின் போது எட்டயபுரத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன்.

    நான் தங்கியிருந்த வீடு இப்போது பாரதியார் பிறந்த இல்ல அருங்காட்சியகமாக இருக்கின்ற பாரதியார் பிறந்த இல்லத்தின் பக்கத்து வீடு!

    bharathy

    நான் என் பயண ஏற்பாடுகளைச் செய்த போது இது எனக்குத் தெரியாது. இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கலந்த அனுபவம் கிட்டும் என்ற எதிர்பார்ப்பு இன்றி எட்டயபுரம் சென்ற எனக்கு நான் அங்கு சென்ற பிறகு தான் பாரதி பிறந்து வளர்ந்து ஆடி ஓடி விளையாடிய வீட்டின் பக்கத்து வீட்டில் இரண்டு நாட்கள் தங்கப் போகின்றோம் என்ற விடயம் தெரிந்தது.

    b1

    பாரதியார் பிறந்த இல்லத்தின் பக்கத்து வீட்டு வாசலில் திரு.இளசை மணியன் மற்றும் நண்பர்களுடன்

    பச்சை நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட வீடு அது. வீட்டின் மாடிப்பகுதியில் பாரதி பிறந்த வீடு என்ற பெயர் பலகை மாட்டப்பட்டுள்ளது. நுழை வாசலிலேயே வீட்டின் இரண்டு பக்கங்களிலும் திண்ணை வைத்து கட்டப்பட்ட வீடு அது. வீட்டின் பின்புறத்தில் கிணறு ஒன்றும் உள்ளது. திண்ணையைத் தாண்டி உள்ளே நுழையும் போது முகப்பு பகுதி வருகின்றது. அப்பகுதியில் வலது புரத்தில் கருஞ்சிலை வடிவத்தில் பாரதியார் முகத்தை வடித்து வைத்திருக்கின்றனர். அதற்கு சற்று தள்ளி ஒரு பகுதியை பாரதி பிறந்த இடம் எனக்குறிப்பிட்டுள்ளனர்.

    b2
    பாரதியார் பிறந்த இடம் எனக் குறிக்கப்படும் பகுதி

    தொடர்ந்து வாருங்கள். உள்ளே சென்று இந்தபாரதி பிறந்த இல்ல அருங்காட்சியகத்தில் இருக்கும் தகவல்களை அறிந்து கொள்வோம்.

    தொடரும்..

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 58

    கைரோ அருங்காட்சியகம் (2), எகிப்து

    முனைவர்.சுபாஷிணி

    கைரோ அருங்காட்சியகம் என அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் எகிப்திய அருங்காட்சியகம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றது. ஏறக்குறைய 120,000 அரும்பொருட்களைச் சேகரித்து வைத்துள்ளது இந்த அருங்காட்சியகம். உலகிலேயே ஃபாரோக்களைப் பற்றிய மிக அதிகமான தகவல்களைக் கொண்ட ஒரு அருங்காட்சியகம் என்றால் அது இந்த கைரோ அருங்காட்சியகம் தான்.

    ak1
    தங்கள் குழுவினருக்குப் பயண வழிகாட்டி விளக்கம் தருகின்றார்

    கைரோ அருங்காட்சியகத்தில் மம்மிக்களைப் போல கவரும் இன்னொரு விடயம் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ள இறந்த பண்டைய அரச குடும்பத்தினரின் ஈமச்சடங்குப் பொருட்கள். ஈமச்சடங்குப் பொருட்கள் என்றவுடன் உடனே தூபக்கால், சிறிய மண்பாண்டம், மணிகள், கைவினைப் பொருட்கள், சாமி வடிவங்கள் என்று எண்ணி விடவேண்டாம்.

    ஒவ்வொரு அரச குடும்பத்தினரது புதைக்கப்பட்ட வீடுகளிலிருந்து வெளிக்கொணரப்பட்டவை அனைத்தும் விலைமதிக்கமுடியாதவை. தங்கம், வெள்ளி, வைடூரியம், விதம் விதமான மணிகள், வைரக்கற்கள் என ஒவ்வொரு அரச குடும்பத்தினரின் அவரது தகுதி, முக்கியத்துவத்திற்கேற்ற வகையில் இறந்தவரின் மம்மி செய்யப்பட்ட உடலோடு இணைத்து வைக்கப்பட்டிருக்கும். அது மட்டுமா ?

    இறந்த அந்த அரச குடும்பத்தினரின் இறப்புக்குப் பின்னர் அவர் வாழ்கின்ற உலகத்தில் அவர் பயன்படுத்துவதற்காகத் தேர், வாகனங்கள், பெட்டிகள், மிக நுணுக்கமாகச் செய்யப்பட்ட ஆடைகள், சாப்பிடுவதற்கான பாத்திரங்கள், இன்னும் அவர் என்னென்னவெல்லாம் பயன்படுத்துவார் என்று நினைத்தார்களோ அத்தனையையும் தங்கத்தினாலும் வெள்ளியாலும், விலை உயர்ந்த பொருட்களினாலும் செய்திருக்கின்றனர். தேர்கள், படுக்கை கட்டில்கள் எல்லாம் தங்கமுலாம் பூசப்பட்டு கண்களை கூசச் செய்வதாக இருக்கின்றன. புதைக்கப்பட்ட வீடுகள் என்று குறிப்பிட்டேன். ஆம். புதைக்கப்பட்ட ஒவ்வொரு அரச குடும்பத்தினருக்கும் பல அறைகளைக் கொண்ட குகை வீடுகள் உருவாக்கப்பட்டன. இந்த குகை வீடுகள் எகிப்திய பாலைவனப் பகுதியில் நைல் நதியின் இரு பக்கங்களிலும் அமைந்திருக்கின்றன.ஒரு பக்கத்தில் அரசர்களின் பள்ளத்தாக்கு (Valley of the Kings), மறு பகுதியில் அரசியர்களின் பள்ளத்தாக்கு (Valley of the Queens).

    ak2

    கர்னாக் ஆலய வாசலில்

    நான் கைரோ அருங்காட்சியகம் சென்ற சமயத்தில் இளம் வயதில் இறந்த மன்னன் தூத்தான்சாமூனின் ஈமச்சடங்குப் பொருட்கள் அனைத்தும் அங்கு அன்றைக்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இப்பகுதி மிகுந்த பாதுகாப்புகளோடு கண்காணிக்கப்படும் பகுதி. தூத்தான்சாமூனின் மம்மிபடுத்தப்பட்ட உடல் ஏனைய அரசர்களது உடலைப் போல நல்ல நிலையில் இல்லை. இதற்குக் காரணம் இந்த இளம் அரசன் ஒரு சதிச்செயலால் மிக இளமையிலேயே வெட்டி கொல்லப்பட்டவர். இவரது உடல் மிகுந்த சேதப்படுத்தப்பட்ட நிலையில் மம்மியாக்கப்பட்டு ஏதோ ஒரு வகையில் பாதுகாத்துவிட்டார்கள். தாக்குதலில் அவரது தலைப்பகுதி மிகச்சிதைந்து போனதால் அவரது உடலின் மேல் தங்கத்தாலான கவசம் ஒன்றினைச் செய்து வைத்திருக்கின்றனர். தூத்தான்சாமூனுக்காகச் செய்யப்பட்ட ஒவ்வொரு பொருளையும் பார்த்து அதிசயத்தில் திகைத்துப் போய் நின்றேன்.

    கைரோ அருங்காட்சியகத்தில் இருக்கும் பல ஒரு விலை மதிக்க முடியாத பொருட்களில் என் மனதைக் கவர்ந்த மேலும் ஒன்று என்னவென்றால் இங்கிருக்கும் அரசி ஹட்செப்சத் அவர்களது மம்மி என்று கூறலாம்.

    கைரோ அருங்காட்சியகம் வருவதற்கு முன்னர் கட்சிப்சத் தனக்காக நினைவு மண்டபமாகக் கட்டிய கோயிலை பெனி ஹசான் பகுதியில் பார்த்து விட்டுத்தான் கைரோ அருங்காட்சியகம் வந்திருந்தேன். ஆகையால் பேரரசியார் ஹட்செப்சத் அவர்களது பராக்கிரமங்களை ஓரளவு அருங்காட்சியகம் வரும் முன்னரே தெரிந்து கொள்ள முடிந்தது.

    ak3

    பேரரசியார் ஹட்செப்சத் தானே தனக்குக் கட்டிய நினைவாலயம்

    இவர் அரசியாக முடிசூடிக் கொண்டு பண்டைய எகிப்தின் பதினெட்டாவது பரம்பரையின் ஐந்தாவது ஃபாரோவாக (மாமன்னனாக அல்லது பேரரசியாக) ஆட்சி செய்தவர். இவரது காலம் கி.மு 1507 – 1458. அதாவது மாமன்னன் ராம்ஸசுக்கு முன்னரே ஆட்சி செய்தவர் என்பதோடு பண்டைய எகிப்தில் மிகப் பிரமாதமான பல கட்டுமானங்களைச் செய்வித்தவர் என்ற பெரும் புகழ் பெற்றவர். இவர் பேரரசர் முதலாம் தூத்மோசிசின் மகள். முதலாம் தூத்மோசிசின் முதல் மனைவிக்குப் பிறந்தவர். அதே முதலாம் தூத்மோசிசின் இன்னொரு மனைவிக்குப் பிறந்த இரண்டாம் தூத் மோசிசை மணந்தவர்.

    பேரரசியார் ஹட்செப்சத் தன் ஆட்சிக் காலத்தில் மிக விரிவாக நாடெங்கிலும் வர்த்தகத்தை விரிவுபடுத்தினார். முடங்கிக்கிடந்த சாலை சீரமைப்புப் பணிகளை செம்மைப்படுத்தி பிற நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் செழிப்புற வகை செய்தார். குறிப்பிடத்தக்க கோயில்களை இவர் எகிப்தில் கட்டினார். இவர் காலத்தில் சிற்பக்கலை செழித்தது. இவர் காலத்து சிற்பங்கள் உலகின் பல அருங்காட்சியகங்களைச் சிறப்பு செய்கின்றன. அதில் குறிப்பாக நியூயோர்க் மெட்ரோபோலிட்டன் அருங்காட்சியகத்தில் பேரரசியார் ஹட்செப்சத் கால சிற்பத் தொகுதிகளுக்கென்றே ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது குறைப்பிடப்படவேண்டிய ஒன்றே.

    ak4

    கர்னாக் கோயில் ஒபிலிஸ்க்

    இவர் காலத்தில் கார்னாக் கோயிலில் மேலும் சில சிற்பங்களை இவர் இணைத்திருக்கின்றார். பண்டைய பெண் தெய்வமான முட் தெய்வத்தின் கற்பக்கிருக பகுதியைச் சீர் செய்தார். அது மட்டுமன்றி இரட்டை ஒபில்ஸ்குகளை இக்கோயிலின் வாசலில் பிரதிஷ்டை செய்தார். அதில் ஒன்று உடைந்து விழுந்து விட்டது. ஆனால் மற்றொன்று இன்னமும் அதே கோயிலில் இருக்கின்றது. இதுவே உலகின் மிக உயரமான ஒபிலிஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது. ஒபிலிஸ்க் என்பது செலிண்டர் போன்ற அமைப்பில் மிக உயரமாக அமைந்து அதன் நுனிப்பாகத்தில் சூரியக் கதிர்போல் கூர் முனையைக் கொண்டிருக்கும் ஒரு வடிவம். இது சூரியக் கடவுளை பிரதிபலிக்கும் ஒரு வடிவம் என்றும் குறிப்பிடலாம். பேரரசியார் ஹட்செப்சத் தனது 22வது ஆட்சிக் காலத்தில் இறந்தார். கிடைக்கின்ற ஆவணங்களின்படி இவர் ஜனவரி மாதம் 16ஆம் தேதி கி.மு 1458ஆம் ஆண்டு இறந்தார் எனத் தெரிகின்றது.

    இன்னொரு சுவாரசியமான விடயம் என்னெவென்றால் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மன்னர்கள் தாடி வைத்திருப்பது வழக்கம். அதனை பிரதிபலிக்க பேரரசியார் ஹட்செப்சத் தானும் செயற்கை தாடி ஒன்றினை செய்து அணிந்து கொண்டு அரசவைக்கு வருவாராம்.

    ak5

    பேரரசியார் ஹட்செப்சத் உருவச்சிலை தாடியுடன்

    இந்தப் பேரரசியார் ஹட்செப்சத் அவர்களின் மம்மியும் இந்த கைரோ அருங்காட்சியகத்தில் இருக்கின்றது. இவரது ஆட்சிக் காலத்து விடயங்களை அறிந்து கொண்டு நேரில் இப்பேரரசியார் ஹட்செப்சத்தை பார்த்தபோது உண்மையிலேயே பிரமிப்பில் உறைந்து போனேன்.

    ak6

    பேரரசியார் ஹட்செப்சத்தின் மம்மியாக்கப்பட்ட உடல்

    இப்படி சொல்லிச் சொல்லி விளக்க எத்தனை எத்தனையோ அரும்பொருட்கள் இந்த கைரோ அருங்காட்சியகத்தில் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் விலை மதிக்க முடியாத அரும்பொருட்கள்.

    உலக வரலாற்றிற்கு உன்னத சரித்திரத்தை எகிப்து வழங்கியுள்ளது. அந்த பழைய காலத்தை மீட்டுக்கொண்டுவந்து நம் கண்முன்னே அனுபவமாகத் தருவதாக இந்த கைரோ அருங்காட்சியகம் திகழ்கின்றது.

    சரி.. அடுத்த பதிவில் மேலும் ஒரு அருங்காட்சியகத்துடன் உங்களைச் சந்திக்கின்றேன். இந்த ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து பெயர்ந்து வேறு எங்கு உங்களை அழைத்துச் செல்லப்போகின்றேன் என ஊகித்து வையுங்கள்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 57

    கைரோ அருங்காட்சியகம், எகிப்து

    முனைவர்.சுபாஷிணி

    kairo

    கைரோ அருங்காட்சியகம்

    என் அனுபவத்தில் இதுவரை ஏறக்குறைய நானூறுக்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களுக்குச் சென்றிருப்பேன். அவை அனைத்திலும் நினைத்த மாத்திரத்தில் ஒரு சில அருங்காட்சியகங்கள் மனக்கண்ணில் வந்து நிற்கும். அதனை வரிசைப்படுத்தினால் அவ்வரிசையில் முதலில் இடம் பெறுவதாக அமைவது எகிப்தில் இருக்கும் கைரோ அருங்காட்சியகம் தான்.

    இந்த அருங்காட்சியகத்திற்குச் செல்வதற்கு நான் சற்று கூடுதலான பிரயத்தனம் செய்திருக்கின்றேன் என்று குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். 2009ஆம் ஆண்டில் நைல் நதியில் சூடான் வரை பயணித்து விட்டு ஹூர்காடாவில் நான் சுற்றுப்பயணம் பதிவு செய்திருந்த நிறுவனம் பயணத்தை தற்காலிகமாக முடித்திருந்தனர். ஹூர்காடா பகுதியில் செங்கடல் ஓரத்தில் ஓய்வெடுக்கும் வகையில் ஐந்து நாட்களை ஒதுக்கியிருந்தனர். எங்கள் பயணக்குழுவில் வந்திருந்த ஒரு சிலராக சேர்ந்து மூன்று நாட்களுக்கு கைரோ சென்று வருவது என முடிவெடுத்தோம். ஹூர்காடாவிலிருந்து இரவு நேர பஸ் எடுத்தால் ஏழு மணி நேரப்பயணத்தில் எகிப்தின் தலைநகரான கைரோவை அடைந்து விடலாம். அப்படி ஒரு ஏற்பாட்டை செய்து கொண்டு எட்டு பேர் கொண்ட குழுவினர் ஹூர்காடா நோக்கி பயணப்பட்டோம்.

    கைரோவில் இருந்த மூன்று நாட்கள் குறிப்பிடத்தக்க இடங்களைச் சுற்றிப்பார்த்தோம் என்றாலும் அதில் மனதில் வெகுவாக கவர்ந்தவை பிரமிட்களும் கைரோ அருங்காட்சியகமும் தான்.

    ​கைரோ அருங்காட்சியகம்

    அதில் கைரோ தேசிய அருங்காட்சியகத்தில் எகிப்திய நாகரிகத்தின் மையப் புள்ளிகளாக இருந்த பண்டைய மன்னர்கள் அவர்கள் துணைவியர் ஆகியோர் உடல்கள் பாடம் செய்யப்பட்டு மம்மிக்களாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமையை பார்வையிட்டு வந்தது மனதில் மறக்க முடியாத வகையில் இன்றும் பதிந்திருக்கின்றது.

    இளமை காலத்தில் பள்ளியில் படித்த காலத்திலிருந்தே எகிப்திய மம்மிக்களைப்பற்றி கேள்விப்பட்டு அவற்றை நேரில் பார்ப்போமா என்று யோசித்ததுண்டு. அந்த வாய்ப்பு நிஜத்தில் எனக்குக் கிட்டியபோது அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை என்பேன். அது என்ன செத்த பிணங்களான மம்மிக்களை பார்ப்பதில் ஒரு ஆர்வம் என சிலர் நினைக்கலாம். அவை வெறும் செத்த பிணங்கள் என்று நாம் கூறிவிட முடியாது. மாறாக அவை இன்றைக்கு 5000 ஆண்டு பழமையான மனிதர்களை நம்முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு அற்புத அனுபவம். இந்த அற்புத அனுபவத்தை நேரில் உணரும் போது உண்மையில் நாம் மெய் சிலிர்க்காமல் இருக்கமுடியாது. இல்லையென்றால் எதற்காக மில்லியன் கணக்கில் எகிப்தின் இந்த கைரோ அருங்காட்சியகத்திற்கு ஒவ்வொரு வருடமும் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர் என்ற கேள்வி எழும் தானே!

    kairo1

    ​மாமன்னன் முதலாம் செட்டியின் பராக்கிரமங்களைக் கூறும் கர்னாக் கோயில் வாசலில்

    கைரோ அருங்காட்சியகத்தில் மம்மி சேகரிப்புக்களுக்காக இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையிலும் தலா 12 மம்மிக்கள் என காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் முதல் அறையில் பண்டைய எகிப்தின் பாரோக்கள் என அழைக்கப்படும் பேரரசர்களின் மம்மிக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாவது அறையில் மேலும் சில பாரோக்களுடன் அவர்களது மனைவி மற்றும் பண்டைய எகிப்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிலரின் மம்மிக்கள் வைக்கப்பட்டுள்ளன. நூல்களில் படித்து பாரோக்களின் பராக்கிரமத்தை அறிந்த நமக்கு அவர்களின் உடலை நேரில் பார்க்கின்றோம் என்பது திகைக்க வைக்கும் ஒரு நிகழ்வுதானே. அதிலும் என்னை ஈர்த்தது மன்னன் 2ம் ராம்ஸளின் பாடம்செய்யப்பட்ட மம்மி உடல். இவர் பண்டைய எகிப்தை 67 ஆண்டுகள் ஆண்ட பேரரசர். அடுத்ததாக மன்னன் முதலாம் ராம்ஸசின் மகனும் மன்னன் 2ம் ராம்ஸசின் தந்தையுமான முதலாம் செட்டியின் மம்மியைக் குறிப்பிடுவேன்.

    ஒன்றை கவனித்தீர்களா?
    இந்த மன்னர்களின் பெயர்கள் நமக்கு பரிச்சயமான பெயர்கள் போல் தானே ஒலிக்கின்றன? எகிப்து தொடர்பான பலதரப்பட்ட ஆய்வுகள் தென்னிந்திய மானுடவியல் ஆய்வுகள் செய்வோருக்கு மிகச் சுவாரசியமான தகவல்களை நிச்சயம் வழங்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

    சரி. யார் இந்த இரண்டாம் ராம்ஸஸ்? இவரை ஏன் முக்கியமாக அதிலும் முதலாம் ராம்ஸஸை விட முக்கியமாக இங்கே நான் குறிப்பிட்டுச் சொல்கின்றேன் எனக் கேள்வி எழலாம். 2ம் ராம்ஸஸைப் பற்றிச் சொல்கின்றேன்.

    kairo2

    ​மாமன்னன் ராம்ஸஸின் பதப்படுத்தப்பட்ட மம்மி

    பேரரசன் 2ம் ராம்ஸஸ் கி.மு 1279 முதல் கி.மு 1213 வரை பரந்த எகிப்தை ஆண்ட மாமன்னன். கீழே இன்றைய சூடான் மேற்கே சிரியா என மிக விரிவான நிலப்பகுதி இவரது ஆட்சிக்குட்பட்டிருந்தது. மிக இளம்வயதிலேயே இவரது தந்தையார் முதலாம் செட்டி இவரை இளவரசராக நியமித்திருந்தார் என்பதுவும் தொடர்ச்சியாக தமது பதின்ம வயதினிலேயே ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார் என்றும் புக் ஆஃப் டெத் நூலில் உள்ள குறிப்புக்களிலுருந்து அறிகின்றோம். இவர் நீண்ட ஆண்டுகாலம் ஆட்சி செய்து தமது 90 அல்லது 91 வயதில் உயிர் நீத்தார். தமது ஆட்சிப்பொறுப்பின் காலத்தில் நைல் நதிக்கரையில் எகிப்திய அரசின் பிரமாண்டமான தலைநகரமான பை-ராம்ஸஸை உருவாக்கினார். இவர் இறந்த சமயத்தில் இவரது உடல் மம்மியாக பாடம் செய்யப்பட்டு மன்னர்கள் பள்ளத்தாக்கில் (Valley of King) வைக்கப்பட்டிருந்தது. தற்சமயம் அது கைரோ அருங்காட்சியகத்தில் உள்ளது. 2ம் ராம்ஸஸ் கட்டிய கட்டுமானங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. பல கோயில்களை கட்டிய புகழ் இவருக்கிருந்தாலும் சூடானில் நைல் நதிக்கரையோரத்தில் இன்றைக்கு 4000 ஆண்டுகள் வாக்கில் 2ம் ராம்ஸஸ் அமைத்த அபு சிம்பெல் ஆலயம் ஒரு மைல்கல். இன்று அது எகிப்தின் எல்லை பகுதிக்கு யுனெஸ்கோ மற்றும் ஏனைய சில ஐரோப்பிய நாடுகளின் உதவியோடு கொண்டு வரப்பட்டு அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றது.

    kairo3

    அபு சிம்பல் ஆலயம்

    2ம் ராம்ஸஸின் அதிகாரப்பூர்வ மனைவி நெஃபடாரி மிக புகழ்மிக்க ஒரு அரச ஆளுமையாக கருதப்பட்டவர். எகிப்தில் ஜெர்மானிய தொல்லியல் துறை நிகழ்த்திய ஒரு அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட இவரது தங்கத்தினால் ஆன கழுத்து வரைக்குமான உருவச்சிலை ஜெர்மனியில் பெர்லின் நகரில் இருக்கும் புதிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு உள்ளது. எகிப்து இச்சிலையை ஓரிரு முறை கேட்டும் கூட இச்சிலை ஜெர்மனியினால் திருப்பி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அபு சிம்பல் ஆலயத்தில் பேரரசன் ராம்ஸஸின் உருவச் சிலை போலவே நெஃபட்டாரியின் உருவச் சிலையும் இருக்கின்றது. மன்னன் 2ம் ராம்ஸஸ் ஆணையிட்டு தன் மகாராணிக்காக கட்டிய ஆலயத்தின் வாசலில் நெஃபட்டாரியின் உருவச் சிலையையும் காணலாம்.

    kairo4

    மாமன்னன் முதலாம் செட்டியின் உருவப்படம்

    பேரரசன் 2ம் ராம்ஸஸின் தந்தை முதலாம் செட்டி ஏறக்குறைய பதினொரு அல்லது பதினைந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர் என்றாலும் இவர் காலத்தில் குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எகிப்திய மொழியில் இவரது பெயரான செட்டி என்பது சேத் எனும் கடவுளின் பெயரை ஒத்து அமைவது. நைல் நதிக்கரையோர ஆலயங்களில் ஒன்றான கார்னாக் கோயிலில் முதலாம் செட்டியின் பராக்கிரமங்களை விளக்கும் ஹீரோக்ளிப்ஸ் ஆவணங்கள் சுவற்றில் வரிசையாகப் பதிக்கப்பட்டிருக்கின்றன. அவைமட்டுமன்றி மன்னர்கள் பள்ளத்தாக்கில் இவரது சமாதி இருக்கும் நீண்ட அறையில் இவரது ஆட்சிக் காலத்து வரலாற்றுச் செய்திகள் சுவர் முழுக்க ஹீரோக்ளிப்ஸ் குறியீடுகளால் வழங்கப்பட்டுள்ளன. மன்னர் முதலாம் செட்டியின் சமாதியை புதையுண்ட மணல் பகுதியிலிருந்து முதலில் கண்டெடுத்தவர் ஆஸ்திரியாவில் பிறந்த இத்தாலிய பூர்வீகத்தைக் கொண்ட Giovanni Battista Belzoni என்ற உலகப் புகழ்பெற்ற தொல்லியல் ஆய்வறிஞர். இப்பொழுது மாமன்னன் முதலாம் செட்டியின் மம்மியாக்கப்பட்ட உடல் கைரோ அருங்காட்சியகத்தில் உள்ளது.

    இந்த மம்மிக்களைப் பார்க்க கைரோ அருங்காட்சியகத்தினுள்ளே செல்வோம்.

    தொடரும்…

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 56

    டாஹாவ் நாஸி சித்ரவதை முகாம் அருங்காட்சியகம்(3), பாயார்ன், ஜெர்மனி.

    முனைவர்.சுபாஷிணி

     

    ஒரு சக மனிதரைத் தாக்கி வதைத்தல் என்பது வன்மம் நிறைந்த மனதிற்கு மட்டுமே கைகூடும். அப்படி அமைந்தவர்களில் சிலர் இந்த டாஹாவ் மனித சித்ரவதை முகாம்களில் அதிகாரிகளாகப் பணியாற்றியிருக்கின்றார்கள். அவர்களில் யோஹான் கான்ஸூஸ்டர் என்பவர் ஒருவர். இவர் டாஹாவ் முகாமில் 1933 முதல் 1939 வரை பணியில் இருந்தார். பங்கரில் வார்டனாகப் பணியாற்றியவர்களில் இவரும் ஒருவர். சிறைக்கதிகள் இவரின் மேல் மிகுந்த பயம் கொண்டிருந்தனர் எனக் குறிப்புக்கள் சொல்வதிலிருந்து கொடுமையான நடைமுறைகளை நிகழ்த்தியவராக இவர் இருந்திருப்பார் என்பதை அறியமுடிகின்றது. சிறைக்கைதிகளில் சிலரையும் இவர் கொன்றிருக்கின்றார் என்ற கூடுதல் தகவலும் இவர் பெயருடன் இணைந்திருக்கின்றது. இவர் அமெரிக்க ராணுவத்தினர் முகாம் பகுதிக்கு 1945ம் ஆண்டில் வருவதற்கு முன்னரே முகாமிலிருந்து வெளியேறிவிட்டார் என்பதோடு அவர் காணாமல் போய்விட்டார் என பெர்லின் ஆர்க்கைவின் குறிப்பு தெரிவிக்கின்றது.

    as

    இவரைப் போன்ற இன்னொருவர் ஜோசப் ஷோய்ஸ். இவரும் இந்த முகாமில் ஒரு சிறை கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர். 1938 முதல் 1942 வரை இங்கே முகாமில் பணியில் இருந்திருக்கின்றார். இவரும் கொடுமையான வகையில் சிறைக்கைதிகளைச் சித்ரவதைச் செய்து கொன்றவர். இவர் அமெரிக்க ராணுவத்தினரால் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதோடு 1946ம் ஆண்டு கொலைக்குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தூக்குத்தண்டனை வழங்கி கொல்லப்பட்டார்.

    யோஹான் கிக் என்பவர் 1937 முதல் 1945 வரை இந்த முகாமில் அரசியல் அமைப்பின் தலைவராக (Gestapo) பணியாற்றியவர். இவர் சிறைக்கைதிகளை மிக மோசமாக நடத்தியவர் என்ற குறிப்பு உள்ளது. அது மட்டுமன்று. சிறைக்கைதிகளில் பலரைக் கொன்றவர் என்ற தகவலும் கிடைக்கின்றது. மிகக் கொடூரமான நாஸி அதிகாரியாகச் செயலாற்றியிருக்கின்றார். இவர்களைப் போல இந்த முகாமில் இருந்தவர்கள் பலரது குறிப்புக்களை இந்த பங்கர் பகுதி அருங்காட்சியகத்தில் காண முடிகின்றது.

    அமெரிக்க ராணுவம் இப்பகுதியைக் கைப்பற்றி சிறைக்கைதிகளை விடுவித்த பின்னர் இந்த டாஹாவ் மனித சித்ரவதை முகாம் அமெரிக்க ராணுவ மையமாக மாற்றப்பட்டது. இங்கே தான் நாஸி குற்றவாளிகள் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டார்கள். இது ராணுவ சிறையாக சில ஆண்டுகள் செயல்பட்டது என்பதை இங்குள்ள குறிப்புக்கள் வழி அறிந்து கொள்ள முடிகின்றது. இங்கே அரசியல் கைதிகளைத் துன்புறுத்தி கொலை செய்த இடத்திலேயே அங்கு பணியாற்றிய சில அதிகாரிகள் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டு இங்கே காவலில் வைக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டனர். ” வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்” என்பதற்கு ஏற்றார் போன்ற நிலை தான் இவர்களுக்கு ஏற்பட்டது.

    ஜெர்மனியில் நாடு முழுமைக்கும் நாஸி போர்குற்றங்களில் ஈடுபட்டோர் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சிலர் தூக்கு தண்டனை வழங்கி கொல்லப்பட்டனர். பலர் பல ஆண்டுகள் சிறைவாசம் மேர்கொண்டனர். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் தப்பி ஓடி விட்டனர். எங்கே இருக்கின்றார்கள் என்ற விபரமே அறியாத வகையில் சில கேஸ்கள் இன்னமும் முடியாமலேயே இருக்கின்றன.

    as1

    கைதிகள் தங்கியிருந்த அறையில்

    1942ம் ஆண்டில் ஜூன் மாதத்திலிருந்து நவம்பர் மாதம் மட்டும், அதாவது 5 மாதங்களில், சித்ரவதை முகாம்களுக்கு கொண்டு வரப்பட்ட அரசியல் கைதிகளின் மொத்த எண்ணிக்கை 109,861. இவர்களில் 70,610 பேர் இறந்து போனவர்கள். விடுவிக்கப்பட்டவர்கள் 4711 பேர். கொல்லப்பட்டவர்கல்ள் 9267. இதில் இறந்து போனவர்கள் என்போர் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு இறந்தவர் என்றும் கொல்லப்பட்டவர்கள் தண்டனை கொடுக்கப்பட்டு உடன் உயிர் பறிக்கப்பட்டவர்கள் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி மிக அதிகமான எண்ணிக்கையில் மனிதர்கள் கொல்லப்பட்டதால் அவர்களை எறிக்க பயன்படுத்தும் வகையில் முகாம்களின் அருகிலேயே பிண எரிப்பு ஆலைகளையும் நாஸி அரசு கட்டியது.

    as2

    பிண எரிப்பு கருவிகள் பொருத்தப்பட்ட சவக்கிடங்கு

    1942 முதல் நாஸி அரசு மிக அதிகமான அளவில் அரசியல் கைதிகளைப் பிடித்து சிரை வைத்து சித்ரவதைச் செய்யும் பணியில் மிகத்தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தது. நாஸி அரசு என்பது இப்போதைய ஜெர்மனி என்பதைக் கடந்து பால்டிக் நாடுகளான எஸ்தோனியா, லாத்வியா, லித்துவானியா, போலந்து, நெதர்லாந்து என்ற வகையில் விரிந்த ஒரு நிலப்பகுதியாக மாறி இருந்தத காலகட்டம் அது. ஆக டாஹாவ் சித்ரவதை முகாம் போல இந்த ஏனைய நாடுகளிலும் சித்ரவதை முகாம்கள் உருவாக்கப்பட்டு யூதர்களும் நாஸி அரசை விமர்சிக்கும் மக்களும் பிடித்து சிறைவைக்கப்பட்டு கொடுமை செய்யப்பட்டனர்.

    இந்தக் கொடுமைகளோடு மேலும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது 1944ம் ஆண்டு நவம்பர் மாதம் பரவிய தொற்றுநோய். கொத்து கொத்தாக சிறைக்கைதிகளில் பலர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தனர். அவர்களின் சடலங்களை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு போய் சுடலையில் எரித்து முடித்தனர் முகாம் பணியாளர்கள். அது போல பல சிறைக்கைதிகள் காசநோயினால் பாதிக்கப்பட்டனர். இவர்களை 20 பேர் ஒரு குழு என்ற வகையில் பாதிக்கப்பட்டோரை விஷ மருந்து ஊசி போட்டு கொன்றிருக்கின்றனர்.

    as3

    இறந்த கைதிகளின் சடலங்கள்

    சித்ரவதை முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருந்த கைதிகள் பல்வகை தொழில்களைச் செய்ய ஈடுபடுத்தப்பட்டார்கள். அவர்களில் உடல் நிலை மிக மோசமாக ஆனவர்களை மருந்து கொடுத்து பாதுகாத்து காப்பாற்ற கண்காணிப்பாளர்கள் விரும்புவதில்லை. அவர்களைக் கொடுமையான வகைகளில் மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்துவது போன்ற பயங்கரவாத செயல்களிலும் நாஸி அரசு ஈடுபட்டது. எப்படி முயல், எலி, நாய், குரங்கு போன்ற விலங்குகளுக்கு பல வகை மருந்துகளைக் கொடுத்து சோதனைச் செய்தார்களோ அதே போல இந்த கால கட்டத்தில் அரசியல் கைதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் இவ்வகைச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர் என்பதை அறியும் போது மனம் அதிர்ச்சியில் உறைந்து போகின்றது. இந்த முகாம் இப்படி நிகழ்த்தப்பட்ட சோதனைகளைப் பற்றியும் எல்லா தகவல்களையும் வழங்கியிருப்பதை நினைக்கும் போது வியப்படையாமல் இருக்க முடியவில்லை.

    இப்படி கொடூரங்களின் இருப்பிடமாக 12 ஆண்டுகாலம் இந்த சித்ரவதைமுகாம் செயல்பட்டிருக்கின்றது. நாஸி ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் எல்லா முகாம்களிலும் அதன் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

    ஜெர்மனி படிப்படியாக பல அரசியல் மாற்றங்களை 109ம் நூற்றாண்டில் சந்தித்தது. நாஸி அரசு மறைந்தாலும் இன்றளவும் நாஸி கொள்கை முற்றிலுமாக ஜெர்மனி ஆஸ்திரியா போன்ற நாடுகளில் மறைமுகமாக செயல்பட்டு வருகின்றது. வெளிப்படையாக தெரியாவிட்டாலும் இது இயங்குகின்றது என்பதை பொது மக்கள் அறிவர். அரசு மிகக் கடுமையான சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு தீவிரவாதிகளைக் கைது செய்வதும் நடக்கின்றது.

    எனது அனுபவத்தில் கடந்த 18 ஆண்டுகளில் கிழக்கு ஜெர்மனியில் இயங்கும் சில நாஸி கொள்கை சார்பு அமைப்புக்கள் மேற்கொண்ட சில வன்முறை சம்பவங்களைப் பற்றி ஊடகங்களின் வழி கேள்விப்பட்டிருக்கின்றேன். அரசின் தீவிரக் கண்காணிப்பில் இந்த அமைப்புக்கள் இருக்கின்றன.

    இன்று டாஹாவ் சித்ரவதை முகாம் சுற்றுப்பயணிகளுக்கு மட்டுமல்லாது உள்ளூர் மக்களுக்கும் வரலாற்றை அவர்களுக்கு பாடமாகப் புகட்டும் அறிவுக்களஞ்சியமாகத் திகழ்கின்றது. தாம் யூதர்களுக்கு இழைத்த கொடுமையை சான்றுகளோடும் அறிக்கைகளோடும், புகைப்படங்களோடும் ஜெர்மானிய அரசு இங்கே விரிவாக வெளியிட்டுள்ளது.

    as4

    நினைவகத்தின் வாசலில்

    ஜெர்மனிக்கு வருபவர்கள் தவறாது பார்க்க வேண்டிய அருங்காட்சியகங்களில் இதனையே முதன்மை இடத்தில் வைக்க வேண்டும் என தயங்காது பரிந்துரைப்பேன்.

    அடுத்த பதிவில் மற்றுமொரு நாட்டில் ஒரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். அனேகமாக நாம் ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்திருக்கும் நாடு ஒன்றிற்குத்தான் செல்லவிருக்கின்றோம். எதுவாக இருக்கும் என யோசித்துக் கொள்ளுங்கள்!!

    தொடருவோம்

    Share