அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 61

0

ஜிம் தோம்சன் அருங்காட்சியகம், பாங்கோக், தாய்லாந்து

முனைவர்.சுபாஷிணி

இந்த வாரம் நாம் காணவிருக்கும் அருங்காட்சியகம் அமைந்திருப்பது தாய்லாந்தின் பாங்காக் நகரில்.

இந்தப் பூவுலகில் மனிதர்கள் பிறந்து, வாழ்ந்து மறைந்து கொண்டேயிருக்கின்றோம். ஒவ்வொருவரும் இந்த உலகிற்கு வந்த காரணத்தை ஏதாவது ஒரு வகையில் நிறைவேற்றிவிட்டுத்தான் செல்கின்றோம். ஒரு சிலரது வாழ்க்கை தனக்கு மட்டுமே பயனளிப்பதாக அமைந்து விடுகின்றது. ஒரு சிலரது வாழ்க்கை பிற உயிர்களுக்குத் துன்பம் விளைவிக்கும் நாச செயல்கள் நிறைந்ததாய் அமைந்து விடுகின்றது. ஒரு சிலரது வாழ்க்கையோ அவர்கள் மறைவிற்குப் பின்னரும் கூட அவர்கள் பெயர் உலகில் நிலைத்து நிற்கும் வகையில் அமைந்து விடுகின்றது. அப்படி நிலைத்து நிற்கும் வரிசையில் இருப்போர் ஏராளம்.

ஒருவரை நினைத்துப் பார்த்து நினைவு கூர்ந்து அவர்களது செயற்பாடுகளை சில குறிப்பிடத்தக்க காரணங்களுக்காக பாராட்டுகின்றோம். அந்த வகையில் வருபவர்தான் திரு.ஜிம் தோம்சன் அவர்கள்.

1

ஜிம் தோம்சன் அவர்கள் பிறப்பால் ஒரு வட அமெரிக்கர். டெலேவர் மாநிலத்தில் உள்ள கிரீன்வீல் நகரில் 1906ம் ஆண்டில் பிறந்தார். கட்டிடக் கட்டுமானத்துறையில் பயிற்சி எடுத்தவர் இவர். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் அவர் தாமாகவே முன் வந்து அமெரிக்க ராணுவத்தில் பணியாற்ற தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். முதலில் இவருக்குப் பணி ஐரோப்பாவில் வழங்கப்பட்டிருந்தது. ஆகையால் ஐரோப்பாவில் அச்சமயம் ராணுவப் பணியில் இருந்த துருப்புக்களோடு ஐரோப்பாவில் தங்கி பணியாற்றினார். பின்னர் பணிக்காக இவர் ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு அனுப்பப்பட்டார். இவரது முதல் பணி தாய்லாந்தில் அமைந்திருந்தது. ஆயினும் பாங்காக் வருவதற்கு சில தினங்களுக்கு முன்னரே இரண்டாம் உலகப் போர் முடிவுற்றது என்ற காரணத்தால் அவர் ராணுவச் சேவையில் ஈடுபட வாய்ப்பு அமையவில்லை. ராணுவச் சேவைக்காகத் தாய்லாந்து வந்து சேர்ந்த ஜிம் தோம்சன் தாய்லாந்தின் அழகில் தன் மனதைப் பறிகொடுத்தார்.

தாய்லாந்தின் கலையம்சங்களும் கிராமிய கைவினைப் பொருட்களும் துணி வேலைப்பாடுகளும், மர வேலைப்பாடுகளும் ஜிம் தோம்சனின் மனதைக் கொள்ளைக் கொண்டன. தான் இதுவரை பார்த்திராத கலையம்சங்கள் தாய்லாந்து கலை பாணியில், இருப்பதை அவர் உணர்ந்தார். அவரது சிந்தனை தாய்லாந்து கிராமப்புற வாழ்க்கையில் இருக்கும் நுணுக்கமான விஷயங்களிலேயே ஆர்வம் கொண்டு அவர்தம் கவனத்தை முழுமையாக ஈர்க்க ஆரம்பித்தது.

2

குறிப்பாக கையால் பின்னப்படும் பட்டு ஆடைகள் மறக்கப்பட்ட ஒருகலையாக அச்சமயம் மாறிக்கொண்டிருந்தது. இது ஜிம் தோம்சனின் கவனத்தை ஈர்க்கவே, இக்கிராமியத் தொழிற்கலை மறையக் கூடாது என்றுமுடிவெடுத்து இந்தக் கலையை மீட்டெடுக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அவருக்கு இயற்கையாகவே துணிகளில் வர்ணம் சேர்க்கும் கலையில் அனுபவமும் இருந்தது. இதன் அடிப்படையில் இந்தக் கலையை புதுமைப்படுத்தி கிராமத்துக் கலைக்கு புதிய வடிவம் கொடுத்து இதனை ஒரு வர்த்தகப் பார்வையில் விரிவு படுத்தினார். உலக அளவில் குறிப்பாக ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளில் இக்கலை விரிவாக்கம் பெற தொடர்ந்து பல முயற்சிகளைச் செய்து வெற்றியும் கண்டார்.

அடிப்படையில் ஒரு கட்டிடக் கலைஞராகத் தொழில் முறையில் பயிற்சி பெற்றவர் ஜிம் தோம்சன். அவருக்குத் தாய்லாந்து தேக்கு மர கிராமிய வீடுகளின் கட்டுமானக் கலை மனதை கவர்ந்தது. தாய்லாந்து வீடுகளும் சரி, புத்த விகாரைகளும் சரி, பொதுவாகவே கூரைப்பகுதி என்பது சமமாக இல்லாது தனித்துவமிக்க வகையில் அமைந்திருக்கும் தன்மை கொண்டது. இது மேற்குலக கட்டுமானக் கலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதொரு வடிவம்.

3

தாய்லாந்து வீடுகள் எனும்போது அவை தரைப்பகுதியானது நிலத்திலிருந்து உயரமாக தூக்கி வைத்து கட்டப்பட்ட வகையில் இருக்கும். கால்கள் அமைத்தது போன்ற அமைப்பும் இருப்பதால் வீட்டுக்குக் கீழ்ப்பகுதியில் மணல் தரை பார்வைக்குத்தென்படும் வகையில் இருக்கும். வெள்ளம் வரும் போது நீர்மட்டம் அதிகரித்தால் அது வீட்டை பாதிக்காதவாறு இவ்வகை வீடுகள் அமைந்திருப்பதும் மிக சமயோஜிதமாக யோசித்துக் கட்டிய கட்டுமானம் இவை என்பது புலப்படும்.

தாய்லாந்து கட்டுமானக் கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஜிம் தோம்சன் பாங்கோக் நகரின் மையப்பகுதியில் ஒரு நிலத்தை வாங்கி அங்கே தாய்லாந்து கட்டுமானக் கலையை வளர்க்கும் வகையில் 6 வீடுகளை அமைத்தார். அந்த வீடுகளில் தான் ஆசியாவில் பயணித்த சமயத்தில் தான் சேகரித்த கலைப்பொருட்களைக் காட்சிக்கு வைத்தார். ஒரு தனி வீட்டில் தாய்லாந்து பட்டு பற்றிய தகவல் களஞ்சியத்தை வடிவமைத்தார். பட்டுப்புழுக்களிலிருந்து நூல் தயாரிக்கும் விதத்தை விளக்கும் விபரங்களை அருங்காட்சியகமாக அமைத்தார்.

4

இந்த வீடுகளை அமைத்து காட்சிப்பொருட்களை வைக்கும் முன் தாய்லாந்து சமயச் சடங்கு முறைகளைப் பின்பற்றி புதுமனை புகு விழாவினையும் நடத்தினார். இதற்குத் தாய்லாந்து ஜோதிடர்களை அணுகி நல்ல நேரம் கணித்து புதுமனை புகுவிழாவை ஏற்பாடு செய்து பின்னரே தன் புதிய இல்லப் பூங்காவிற்கு குடி புகுந்தார். முதலில் இந்த இடத்தை தனது சொந்த கலையுணர்வுக்காக அமைத்த ஜிம் தோம்சன் இந்த இல்லப்பகுதி பலரது கவனத்தை ஈர்ப்பதைப் பார்த்து இதனைப் பொது மக்கள் பயன்பெறும் வகையில் அருங்காட்சியகமாக மாற்றினார். தனக்கென்று ஒரு குடும்பம் என இல்லாத நிலையில் இந்த அருங்காட்சியகத்திலிருந்து சேகரிக்கின்ற வருமானத்தை தாய்லாந்து கலைப்பண்பாட்டு வளர்ச்சிக்காகச் செயல்படும் நிறுவனங்களுக்குச் சென்று சேரும் வகையில் ஏற்பாடுகளைச் செய்தார்.

1967ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதி மலேசியாவின் கேமரன் ஹைலண்ட்ஸ் மலைப்பிரதேசத்தில் தமது நண்பர்களோடு சுற்றுலாவிற்குச் சென்ற ஜிம் தோம்சன் அவர்கள் திடீரென்று காணாமல் போனார். அவரை எங்கு தேடியும் யாராலும் கண்டு பிடிக்கமுடியவில்லை. எந்த வித தடயங்களும் அவரது மறைவைப் பற்றி யாருக்குமே கிடைக்கவில்லை. அவரது மறைவுக்குப் பின்னர் அவர் அமைத்த தாய்லாந்து கட்டுமானக் கலைக்கூட அருங்காட்சியகம் ஜிம் தோம்சன் அறக்கட்டளையினால் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றது. அவரது விருப்பப்படியே அருங்காட்சியகம் பொது மக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கே தொடர்ச்சியாக தாய்லாந்து பாரம்பரிய பட்டு நெய்யும் கலையும் காட்சிப்படுத்தப்படுகின்றது.

5

ஜிம் ஜோம்சன் அருங்காட்சியகத்திற்கு நான் 2013ம் ஆண்டில் ஜனவரி மாத ஆரம்பத்தில் சென்றிருந்தேன். தாய்லாந்தில் சுற்றுலா முடித்து பாங்காக் நகரில் இருந்த இறுதி நாட்களில் தற்செயலாக இந்த அருக்காட்சியகம் பற்றி கேள்விப்பட்டு சென்று வந்தேன்.

அருங்காட்சியகத்தின் உள்ளே நுழையும் முன்னரே பச்சை பசேலன தாவரங்கள் நம்மை வரவேற்கின்றன. எழில் கொஞ்சும் அழகிய கலைக்கூடம் இது. கலைப்பிரியர்களாக இருந்தால் ஒரு நாள் முழுவதையும் இந்த வளாகத்திலேயே நிச்சயம் செலவிடலாம்.

6

ஜிம் தோம்சன் இந்த அருங்காட்சியகத்தில்

தாய்லாந்து செல்பவர்கள் இந்த அருங்காட்சியகத்திற்குச் சென்று வரலாம். திரு.ஜிம் தோம்சனின் தாய்லாந்து கட்டிடக் கலை வேலைப்பாடுகளின் மீதான மிகுந்த ஈடுபாட்டினை இங்கு வருபவர்கள் நிச்சயமாக உணரமுடியும். ஜிம் தோம்சன் மறைந்தாலும் அவர் பெயரை சொல்லிக் கொண்டிருக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் திகழ்கின்றது.

சரி.. அடுத்த பதிவில் வேறொரு நாட்டில் மற்றுமொரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கின்றேன்… தொடர்ந்து வாருங்கள்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *