அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 63
இஸ்லாமிய கலைகள் அருங்காட்சியகம், கோலாலம்பூர், மலேசியா
முனைவர்.சுபாஷிணி
தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய இஸ்லாமிய கலைப்பொருட்களுக்கான அருங்காட்சியகம் மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூர் நகரில் உள்ளது. 1998ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த அருங்காட்சியகம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் இருக்கும் இடம் கோலாலம்பூரின் மையப் பகுதி. 30,000 சதுர அடி பரப்பளவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் கட்டிடங்கள் கட்டிட அமைப்பு. அல்குரான் மற்றும் ஆவணங்கள், இந்தியாவில் இஸ்லாம், சீனாவில் இஸ்லாம், மலேசியாவில் இஸ்லாம், ஆபரணங்கள், துணி வகைகள், போர் கருவிகள், காசுகள், இரும்புக் கருவிகள், இஸ்லாமிய கலையில் மரங்களின் பயன்பாடு, களிமண்பாண்டங்கள் ஆகிய பணிரெண்டு வகைகளில் இங்கே காட்சிப்பொருட்கள் வகைப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஏறக்குறைய ஏழாயிரம் அரும்பொருட்களும் இஸ்லாமிய சமயத் தொடர்பான நூல்களும் இந்த அருங்காட்சியகத்தில் காணக்கிடைக்கின்றன.
ஒவ்வொரு தளத்திலும் பார்த்து குறிப்பெடுத்துக்கொள்ள ஏராளமான அரும்பொருட்கள் இருப்பதால் இங்கு செல்ல விரும்புவோர் ஏறக்குறைய நான்கு மணி நேரங்களையாவது இந்த அருங்காட்சியகத்திற்காக ஒதுக்கி விடுவது நல்லது. நான் சென்றிருந்த சமயத்தில் இதற்கு நுழைவுக்கட்டணமாக 14 ரிங்கிட் வசூலித்தார்கள். ஆக செல்லும் முன் இதன் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தை ஒரு முறை பார்த்து தகவல்களை அறிந்து கொண்டு செல்வதும் உதவும்.
இஸ்லாமிய கலைகள் எனும் போது அதிலும் கட்டட கட்டுமானம் எனும் போது யந்திர வடிவங்களின் இணைப்பில் உருவாக்கப்பட்ட அமைப்புக்களை உலகம் முழுவதிலும் காணலாம். உலகில் இஸ்லாம் பரவிய நாடுகளில் கட்டப்பட்ட பள்ளிவாசல்களின் மாடல்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஸ்பெயினின் புகழ் மிக்க அல்ஹம்ரா, மாலியில் உள்ள ஜேனா பள்ளிவாசல், வட அமெரிக்கவின் நியூ மெக்சிக்கோ மானிலத்தில் உள்ள டார் அல் இஸ்லாம் பள்ளிவாசல், திருக்கியில் உள்ள செலிமியே பள்ளிவாசல், சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகர் பல்ளிவாசல் போன்றவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம்.
அல்குரான் மற்றும் ஆவணங்கள் உள்ள பகுதியில் அரிய ஆவனங்களும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட அல்குரான் நூல்களும் இருக்கின்றன. உதாரணமாக 12 அல்லது 13ம் நூற்றாண்டு அல்குரான் நூல் ஒன்று இங்குள்ளது. அனேகமாக இது ஸ்பெயின் அல்லது வட ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற குறிப்புடன் இந்த நூல் உள்ளது. வட இந்தியாவில் உருவாக்கப்பட்ட காஷ்மீரிய தாளைக் கொண்டு உருவாக்கப்பட்ட 19ம் நூற்றாண்டு அல்குரான் ஒன்றும் இங்குள்ளது.
இந்தியாவில் இஸ்லாம் எனும் பகுதியில் கண்களைக் கவரும் பல அரும்பொருட்களைக் காண முடிகின்றது. வட இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சிக்கு அதாவது கி.பி.1526-1828 வரையிலான காலகட்டத்திற்கு முன்னரே பரவலாக இந்தியாவிற்கான அரேபியர்களின் வருகை என்பது விரிவானது. முகலாய கலைப்பொருட்கள் அரேபிய இஸ்லாமிய கலைகளிலிருந்து மாறுபட்ட வடிவத்தில் தனித்துவத்துடன் திகழ்வது. அதனை வெளிப்படுத்தும் அரும்பொருட்கள் சில இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஓவியங்கள், கைவினைப்பொருட்கள், ஆடை ஆபரணங்கள், மன்னர்களின் கோட்டைகளை அலங்கரித்த பொருட்கள் என்பனவற்றைக் குறிப்பாகச் சொல்லலாம். இந்திய இஸ்லாமிய கலையை வெளிப்படுத்தும் வகையிலான 1850ம் ஆண்டு தங்கத்தில் வைரம் படித்த கழுத்தணி ஒன்றும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவிற்கு இஸ்லாமிய மதம் சிறிது சிறிதாக 14ம் நூற்றாண்டு வாக்கில் பரவியது. அரேபிய வணிகர்கள் மலாயா தீபகற்பம் வர ஆரம்பித்து பின்னர் படிப்படியாக உள்ளூர் மக்கள் இஸ்லாமிய மதத்தை தழுவிய நிலையில் பின்னர் மலாக்காவில் மன்னராக தன்னை நிலைப்படுத்திக் கொண்ட மன்னர் பரமேஸ்வரர் இரு நாடுகளுக்கான நல்லிணக்கத்திற்காக அரேபிய இஸ்லாமிய பெண்ணை மணந்து இஸ்லாமிய மதத்தை தாமும் தழுவியதால் மலாயா முழுமையாக இஸ்லாமிய நாடாக கி.பி15ம் நூற்றாண்டில் உருமாற்றம் கண்டது. படிப்படியாக நாடு முழுமைக்கும் இஸ்லாமிய கலைகள் வளர்ச்சியுற்றன. இஸ்லாமிய கட்டுமானக் கலைகள் கடந்த சில ஆண்டுகளில் மேலும் பரவலாக வளர்ச்சியுறுவதை நாடெங்கிலும் நன்கு காணலாம். இதனை வெளிப்படுத்தும் நூல்கள், ஆவணங்கள், கைவினைப்பொருட்கள், ஆடை ஆபரணங்கள் ஆகியனவும் இங்கே சேகரித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தைப் பற்றியும் இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிரந்தர கண்காட்சிகளைப்பற்றியும் அவ்வப்போது ஏற்பாடு செய்யப்படுகின்ற தற்காலிக கண்காட்சிகளைப்பற்றியும் இதன் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் தகவல் அறியலாம். http://www.iamm.org.my/ இப்பக்கத்தில் அருங்காட்சியகம் திறந்திருக்கும் நேரம், கட்டணம், முகவரி ஆகிய தகவல்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.
மிகப் புதுமையான கட்டுமான அமைப்பில் அமைக்கப்பட்டு ஏராளமான காட்சிப்பொருட்களுடன் நாட்டின் மையப்பகுதியில் இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கின்றது. மலேசியா செல்பவர்கள் இங்கே சென்று பார்த்து வருவதை உங்கள் பயணத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளுங்கள்.