தித்திக்குதே திருக்குறள் – 5

0

 

இல்லாளைக் காப்பதற்கே அவன் வருவான்

 

திவாகர்

4cc22b24-a0a8-4540-9369-d6da16e66d07

நம்பமுடியவில்லை தமயந்தி  நீசொல்வதை

நம்பமுடியவில்லை என்மகளா சொல்வது

மறுகல்யாணத்துக்கு சம்மதமென! விதியால்

ஒருகல்யாணம் செய்து வாழ்விழந்தாய்

தந்தைநான் மகளுக்கோர் மறுவாழ்வு

வந்தால் மறுப்பவன் தந்தையல்லன்

காட்டிலே கட்டியமனைவியை விட்டநளன்

நாட்டுக்கினி திரும்புவது நிச்சயமில்லையே

வருடங்கள் ஏழாயிற்றே எங்கேதான்

இருப்பான் என்பதும் தெரியவில்லையே

உயிருக்குயிராக இருப்பதாக முன்சொன்னவன்

உயிரோடிருந்தும் எப்படித்தான் மறந்தானோ

அல்லும்பகலும் அவனேகதியென யிருந்தவளை

அல்லில் அல்லல்படுத்தி மறைந்தானே

இல்லாளே இனியில்லை எனநினைத்து

இல்லம்வரை கூடவிட்டுவர மறுத்தானே

கல்நெஞ்சத்துக் கள்வனைப்போல நள்ளிரவில்

நல்லாளை நன்மதியாளைப் பிரிந்தானே

நல்லமனமில்லையம்மா அந்த நளனுக்கென

சொல்லமனம் கூசினாலும் சொல்லவைத்தானே

எண்ணியெண்ணி ஆறாமல் இருந்தேனே

கண்மணி நல்லதோர் பதில்தந்தாயம்மா

மறுமணம் சம்மதமென்றாய் இனிநீ

மறுசொல் பேசாதே மற்றவையென்கையில்

 

ஒருசொல் சொன்னேனேயென அப்பா

ஓராயிரம் வசவுகள் பதில்தந்தீரே

நளமகாராசன் என்கணவன் அவனைக்

கள்வனாகக் கல்மனதாய் கடிந்தீரே

ஓருயிராய் ஈருடலாய் வாழ்ந்தோம்

ஆருயிருக்கும் அப்பாலும் அன்பாயிருந்தோம்

அன்புக்கு மறுசொல் உண்டென்றாலது

அன்பான நளச்சக்கரவர்த்தி என்பேனப்பா

சொல்லின் செல்வன் என்கணவனப்பா

நல்லறனும் காப்பவன் அவன்தானப்பா

பெரும்பண்புக்கு பேர்போனவன் எவனென்றால்

பெருமையாய்சொல்வேன் அதுவும் நளனேதானப்பா

அன்பும்பண்பும் கொண்டநளச்சக்கரவர்த்தி

எனையேன்விடுத்தான் ஆராய வேண்டுமப்பா

சூதத்திலே நாட்டையும்வீட்டையும் இழந்தவன்

சேதமும்சோகமும் தனக்குமட்டுமே என்றானப்பா

தான்கொண்டகாதலிக்கு அத்துன்பம்வேண்டாமென

நானென் தந்தையாரிடம் தனித்திருக்கச்செய்து

தான்மட்டும் எனைவிடுத்துத் தனியேசெல்வானாம்

ஏனிந்த தண்டனையென நான்கேட்க

சுகத்தை மனையாளோடு பங்குபோடலாம்

சோகத்தைப் பங்குபோட்டால் அது அறநெறியோ

நாளாகநாளாக பிரிவென்பது மரத்துப்போகும்

வேளைவந்தபின் முழுதுமெனை மறப்பாயே

நாளும்பொழுதும் நளனேயென வாழ்ந்தவள்

நாளாகநாளாக நளனை மறப்பேனோ

நாட்டிலேசுகம் கண்டு நன்றாயிருந்தவளை

காட்டில்வாழ்வதே  துன்பம் எனக்கண்டாயோ

காடும்நாடும் நளனிருக்க வருத்தம்தாரா

வீடுசென்றாலோ நளன்நினைவே துயரமாம்

வாழ்ந்தாலும் உன்னோடுதான் என்வாழ்வே

வீழ்ந்தாலும் உன்மடியில்தான் என்சாவே

மன்றாடிநின்றவளை நன்றெனவே அன்றே

தன்னோடு என்னையும் கூட்டித்தான்போனான்

இரவுவந்ததப்பா இவரோடிருக்கையில் எனக்கு

இரவும்பகல்போல இதமாக உணர்ந்தேனப்பா

கட்டிலிலே பஞ்சுமெத்தையிலே படுப்பவளேயின்று

கட்டாந்தரையில் எப்படித்தான் படுப்பாயோ

கண்கொண்டு காணேனே கண்ணின்மணியே

கண்ணுறங்கு இன்றுமட்டும் என்றானே

பெண்படும் துன்பத்தைப் பொறுக்காமல்

பண்பாளன் சொன்னானோ ஒருவார்த்தை

புரியாமல் கண்ணுறங்கினேனப்பா புரிந்தது

மறுநாள்காலையில் அவன்பிரிந்த காரணம்

மனையாளின் மீதுவைத்த அன்பேயப்பா

மனமுருகி அவனறநெறியை உணர்ந்தேனப்பா

 

என்னவெல்லாம் சொல்கின்றாய் தமயந்தி

சொன்னவார்த்தை அத்தனையும் உண்மையானால்

மறுகல்யாணம் என்கின்ற உன்விருப்பமென்

சிற்றறிவுக்கு சிறுபிள்ளைத்தனமாய் படுகின்றதே

 

சிறுபிள்ளை விளையாட்டல்ல தந்தையே

மறுகல்யாணம் என்றொரு மார்க்கத்தில்

அறநெறியோடு சுயம்வரமெனும் ரூபத்தில்

சிறப்பான என்கணவனை திரும்பப்பெறுவேன்

உள்மனதொன்று இடித்துச் சொன்னதப்பா

உள்ளங்கவர் கணவனை அழைத்துக்கொள்ளென

இதுவேதருணம் என்றே சொல்லியது

வதுவைசெய்தவன் வரத்தான் செய்வானென

உயர்பண்பாளன் நளன் எங்கிருந்தாலும்

சுயம்வரச்செய்தி அவன்செவிக்குச் செல்லுமப்பா

அன்பையெல்லாம் என்மீதே வைத்தவனப்பா

என்பால் எனைநினைந்து எங்கும்நில்லாமல்

இல்லாளைக் காப்பதற்கே நளன்வருவான்

இல்வாழ்க்கைப் பயனையும் அவன்தருவான்

 

*******************************************

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது. (திருக்குறள் – 45)

இல்வாழ்க்கை அன்பும் தர்மநெறியும் உடையதாய் விளங்கினால் அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

 

தொடருவோம்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.