பாவலர்  கருமலைத்தமிழாழன்

 

அன்பின்நல்   இலக்கணமே   தாய்தான் !   பாச

            —அணைப்பிற்கு   இலக்கியமாய்த்   திகழ்ப   வள்தாய்

தன்வயிறு   பட்டினியில்    தகிக்கும்   போதும்

            —தன்குழந்தை   பசிதீர்த்து   மகிழ்ப  வள்தாய்

தன்பிள்ளை    நோய்தனக்குத்    தான்து   டித்துத்

            —தன்னுணவு   பத்தியத்தில்   காப்ப  வள்தாய்

வன்மம்தீக்    கயவனென்று    தூற்றும்   போதும்

            —வாஞ்சையுடன்    திருத்துதற்கே    முயல்ப   வள்தாய் !

 

எங்கிருந்தோ    வந்தவள்தான்    என்ற   போதும்

            —எல்லாமும்    கணவனென்றே    தன்னை    மாற்றி

பொங்கிவரும்    தாய்வீட்டு    நினைவ    ழித்துப்

            —பொழுதெல்லாம்    புகுந்தவீட்டின்    உயர்வை   எண்ணி

மங்கலத்தை    மனையேற்றி    மடிய   ளித்து

            —மனந்தன்னில்    கொழுநனுக்கே    இடம   ளித்து

செங்கதிர்போல்   குலம்ஒளிரக்   குழந்தை   பெற்றுச்

            —செவ்வாழ்வை    அளிப்பவளே    மனைவி   நல்லாள் !

 

தன்குருதி    பாலாக   ஊட்டும்   அன்னை

            —தன்னுடலால்    இன்பத்தைக்   கொடுக்கும்    தாரம்

தன்னுடைய    மகிழ்ச்சியினை    எண்ணி    டாமல்

            —தன்குழந்தை    கணவனுக்கே    வாழ்வர்   நாளும்

அன்பான    தாயைப்போல்    அரவ    ணைக்கும்

            —அருமையான    தாரந்தான்    அமைந்து   விட்டால்

இன்பந்தான்    வாழ்க்கையிங்கே !   இல்லை   யென்றால்

            —இவ்வுலகே    நரகந்தான்   நொடிகள்    தோறும் !

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *