நிர்மலா ராகவன்

 

தாய்ப்பாசம்

நலம்-1-1-1

`எனக்கு என் கணவரைப் பிடிக்காது. அதனால், அவரால் வந்த குழந்தைகளையும் பிடிக்காது!’ தான் செய்தது தன்னைப் பொறுத்தவரையில் சரிதான் என்று தலையை நிமிர்த்திக்கொண்டு என்னிடம் கூறிய பெண்மணி என்னைவிட மூத்தவர்.

அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்ள, பெண்களுக்கு வயது வித்தியாசம் ஒரு பொருட்டேயில்லை.

திருமணமானதும், கணவர் ஏகாம்பரத்துடன் இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு வந்தவர் காமாட்சி. விவரம் தெரியாத வயது. அரைகுறையான கல்வி. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, உறவினர்களின் ஆதரவில் வளர்ந்தவர். `புருஷன், மாமியார், நாத்தனார் இவர்களோட மனசு கோணாமல் நடந்துக்கணும்!’ என்று அவர்கள் அளித்த அறிவுரையை மந்திரமாகக் கடைப்பிடித்தார். புக்ககத்தினர் எப்படி நடத்தினாலும், எதிர்ப்பு தெரிவிக்காது, மௌனமாக ஏற்றுக்கொண்டார்.

தாய்க்கு ஒரே மகன் ஏகாம்பரம். `என்னுடன் என் அருமை மகனைப் பங்கு போட்டுக்கொள்ள இவள் வந்துவிட்டாளே!’ என்று முதியவள் ஆத்திரப்பட்டிருக்க வேண்டும். தாய் சொல்லைத் தட்டாத செல்லத் தனயன் அம்மா சொல்லும்போதெல்லாம் மனைவியை அடித்தாராம்.

`எதற்கு அடித்தார்?’ என்று காமாட்சி அம்மாளை விசாரித்தேன்.

ஒரு முறை, பிள்ளைக்குப் பாலூட்டிக்கொண்டிருந்ததால், மாமியாருக்குச் சோறு போட சற்று தாமதமாக, `என்னைப் பட்டினி போட்டு, கொல்லப் பாக்கறாடா!’ என்று அழுதிருக்கிறாள்.

பொதுவாக, எந்த விதமான வதைக்கு ஆளாகிறவர்களும் பொறுமையுடனோ, அச்சத்துடனோ அதை ஏற்கும்போதும் வதைப்பவருக்குத் தன் பலம் கூடிவிட்டதுபோல் ஓர் உணர்வு ஏற்படும். இதுவும் ஒருவித போதைதான். போகப் போக, வதையின் கொடுமை அதிகரிக்கும்.

தினமுமே தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து, சுவற்றில் இடிப்பாரென்று கேட்டபோது, `ஐயோ, மூளை என்ன கதி!’ என்று என் மனம் அதிர்ந்தது. கூடியவரையில் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாது, மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

மனைவியின் அருமை புரியாது, அவளுடன் தன் குழந்தைகளையும் `அம்போ’ என்று விட்டுவிட்டு, ஓர் இளைய மனைவியுடன் உல்லாசமாக வேறிடத்தில் காலத்தைக் கழித்திருந்தார் கணவர் ஏகாம்பரம். முதுமை வந்ததும், இளையவளை நிர்க்கதியாக விட்டுவிட்டு, மூத்த மனைவியிடம் வந்துவிட்டார்.

அவர் எதிர்பார்த்த நிம்மதி என்னவோ குடும்பத்தில் கிடைக்கவில்லை. `பிள்ளைகளெல்லாம் அம்மா சொல்கிறதைத்தான் கேட்கிறார்கள்!’ என்று அவர் புலம்பும் அளவுக்கு உதாசீனம் செய்யப்பட்டார். சிறு வயதில் அவர்களுக்குத் தேவையானபோது அருகில் இருந்து பக்கபலம் அளிக்கவில்லை ஏகாம்பரம். அவர்கள் பெற்றிருந்ததைத்தானே திருப்பி அளிக்க முடியும்! `இப்போது நீங்கள் எங்களுக்கு வேண்டாம்!’ என்பதுபோல் விட்டேற்றியாக நடந்துகொண்டார்கள்.

பொதுவாக, கணவன் அன்பாக, உண்மையாக இருக்கும்வரைதான் அவர்கள் இணைந்து பெற்ற குழந்தைளிடம் தாய்க்கும் அன்பிருக்கும்.

வளர்ந்ததும், ஆண்பிள்ளைகள் அப்பாவைப்போல ஆனார்கள். பெண்கள் அம்மாவைப்போல், கணவர் என்ன செய்தாலும் சிரித்த முகத்துடன் ஏற்கத் தயாரானார்கள். அந்த தாய்க்குத் தன் பிள்ளைகளைப் பார்க்கும்போதெல்லாம், கணவரின் நினைவுதான் வந்தது.

இப்போது முதல் வாக்கியத்தைப் படியுங்கள்.

ஏகாம்பரத்தின் இறுதி யாத்திரையின்போது காமாட்சி அம்மாள் கதறின கதறலைப் பார்த்தவர்கள், `ஒரு பெண்ணால் இப்படிக்கூட கொண்டவனிடம் அன்பு வைக்க முடியுமா!’ என்று வியந்திருப்பார்கள்.

என்னால் பொறுமையாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை. வயதில் பெரியவராக இருக்கலாம். ஆனால், என்னிடம் தன் கடங்காலத் துயரைப் பகிர்ந்துகொண்டவர் ஆயிற்றே!

காமாட்சி அம்மாளின் அருகே போய், `அவரோட நீங்க சந்தோஷமா குடித்தனம் நடத்தினது என்ன தட்டுகெட்டுப்போச்சு? ஒடம்பைக் கெடுத்துக்கொண்டு இப்போ எதுக்கு அழுகிறீர்கள்?’ என்று உரிமையுடன் அதட்டினேன்.

`அவர் இருக்கிறவரையில்தானே சமூகத்திலே எனக்கு மதிப்பு?’ என்று மெல்லிய குரலில் பதில் கேள்வி கேட்டாலும், அழுகை என்னவோ அடியோடு நின்றது.

அடுத்த சில ஆண்டுகளுக்குள் காமாட்சி அம்மாளின் முடிவும் வந்தது. அவரது உயிரற்ற உடலில் நெற்றியில் ஒரு நரம்பு புடைத்துக்கொண்டிருந்தது என் கண்களுக்குத் தப்பவில்லை. உயிர் போனபிறகும், மன இறுக்கமா!

அருகில் போய் உட்கார்ந்துகொண்டு, `இனிமே உங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது. இப்போதாவது அமைதியாக இருங்கள்!’ என்று திரும்ப திரும்பச் சொன்னேன்.

பிள்ளைகள் பெரிய குரலெடுத்து அழுதுகொண்டிருந்ததில், என்னை யாரும் கவனிக்கவில்லை.

சில நிமிடங்கள் கழித்து, அவர் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாது, ஒருவித `சவக் களை’ வந்ததைப் பார்த்தபோதுதான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது.

ஏன் இப்படி ஓர் அவல வாழ்க்கை என்று என் யோசனை போயிற்று.

புக்ககத்தார் என்ன சொன்னாலும், செய்தாலும் ஒரு பெண் பொறுமையாக அதை ஏற்க வேண்டும் என்று காமாட்சிக்கு அளிக்கப்பட்ட போதனையாலா?

தன் கடமைகளை எப்படிச் சரிவர ஆற்றுவது என்று யோசித்து நடக்காது, தாய் சொன்னதற்கெல்லாம் தலையாட்டி, சுயநலத்தைப் பெரிதாக நினைத்து நடந்த கணவராலா?

மருமகளையே போட்டியாக நினைத்து, கொடுமைகள் பல செய்த சிறுபிள்ளைத்தனமான மாமியாராலா?

குடும்பத் தலைவர் தன் கடமையிலிருந்து வழுவினால், குடும்பம் எப்படியெல்லாம் சீரழியும் என்பதற்குச் சான்று காமாட்சி அம்மாளின் கதை.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நலம் .. நலமறிய ஆவல்.. (5)

  1.   உங்களுடைய அணைப்பு அந்த அம்மாவுக்குக் கடைசி 
    காலத்தில் கிடைத்தது அதிர்ஷ்டம் தான். மனம் உடைந்தது உடைந்ததுதான்.
    அந்த மாமியருக்கும் நிம்மதியா கிடைத்திருக்கும். சந்தேகம்தான்.
    அருமையான பகிர்வு.

  2. தங்கள் மனங்கனிந்த பாராட்டுக்கு நன்றி, ரேவதி. தாங்களும் நிம்மதியாக இருக்கத் தெரியாது, பிறரது மகிழ்ச்சியையும் பறித்துக்கொள்ளத்தான் பார்க்கிறார்கள் பலரும்.

    நிர்மலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *