Author: ஜெயராமசர்மா

  • மங்கலம் தரும் பொங்கலோ பொங்கல்!

    மங்கலம் தரும் பொங்கலோ பொங்கல்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    முன்னாள் தமிழ்மொழி கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா.

    “தை பிறந்தால் வழிபிறக்கும்” என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். புலம் பெயர்ந்த நாட்டினில் வாழுகின்ற எங்களின் பிள்ளைகளுக்கு இந்த மொழியின் அர்த்தம் என்னவென்று தெரியவே மாட்டாது. அவர்கள் தையைப் பற்றியோ அல்லது தையில் வருகின்ற பொங்கலைப் பற்றியோ எண்ணிப் பார்ப்பதே இல்லை. வயது வந்தவர்களான நாங்கள்தான் வருஷா வருஷம் தவறாமல் பொங்கலைப் பொங்கி வருகின்றோம். நாங்கள் பொங்கலைப் பொங்கி மகிழ்வது முக்கியம் தான். அதே வேளை எங்களின் பிள்ளைகளுக்கும் பொங்கலைப் பற்றி நாங்கள் தெளிவு படுத்துதலும் முக்கியமானது என்பதை நாங்கள் அனைவரும் மனத்தில் இருத்துவது மிகவும் அவசிய மானதே.

    புலம் பெயர்ந்த நாட்டில் வாழுகின்ற பிள்ளைகள் அங்குள்ள சூழலுக்கு ஏற்பவே தங்களை மாற்றிக்கொள்ளுகிறார்கள். அவ்வாறு மாறும் வேளை என்பது மிகவும் முக்கியமானதாகும். உணவில் மாறலாம். உடையில் மாறலாம். உழைப்பில் மாறலாம். ஆனால் உள்ளத்தில் தங்களின் பண்பாடு, கலாசாரம் பற்றிய எண்ணங்களை மட்டும் மாற்றாமல் அவர்கள் இருப்பதுதான் மிகவும் முக்கியமாகும். பண்பாடு, கலாசாரம், இவற்றினை உணர்த்துபவையே எங்களின் விழாக்களும் கொண்டாட்டங்களும். பண்பாட்டினை நிலைநிறுத்தும் மிகவும் முக்கிய நிகழ்வாக அமைவதுதான் “தைப்பொங்கல்” எனலாம். 

    தைமாதத்தின் தொடக்கத்தில் இந்த விழா ஏன் கொண்டாடப்படுகிறது? இந்த விழாவினை யாரை மையப்படுத்திக் கொண்டாடுகிறோம்? இந்த விழாவின் அடிப்படை எதனை உணர்த்துகிறது? இந்த விழாவில் தமிழரின் எத்தகைய பண்பாட்டு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன? இவையெல்லாம் புலம் பெயர்ந்த நாட்டில் வாழுகின்ற எங்கள் பிள்ளைகளுக்குச் சரிவரத் தெரியாது. நாங்களும் அதைப்பற்றி விளக்கிச் சொல்லுவதும் கிடையாது. பொங்கல் என்றால் புது உடைகள் வாங்குவோம். பொங்குவோம். தொலைக்காட்சியில் நடக்கும் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்போம். அத்துடன் பொங்கல் விழா நின்றுவிடும்.

    உழைப்பு என்பதுதான் சமுதாயத்தின் அடிப்படை. அந்த உழைப்பில் பங்கு கொள்ளும் அனைவரும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே. உழைப்புக்கு உதவும் மனிதர்கள், உழைப்புக்கு உதவிடும் விலங்குகள், உழைப்புக்கு உதவிடும் கருவிகள் கவனத்தில் கொள்ளபடுவதுதான் சமூதாய அறமாகும். அப்படியான ஒரு அறத்தினை வலியுறுத்தத்தான்  தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம் என்று எங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

    உலகிலே  உயிர்வாழ்வதற்கு வெப்பம் முக்கியமானது. காற்று முக்கியமானது நீர் முக்கியமானது. உணவு  முக்கியமானது. இவற்றுக்கெல்லாம் இறை அம்சம் கொடுத்து அவற்றை சமூகத்தின் உயர் நிலையில் வைக்கும் வழக்கம் நெடுங் காலமாக இருந்து வருகிறது என்பதை எங்கள் பிள்ளைகளின் மனதில் இருத்துவதும் முக்கியமான பொறுப்பாகும். இவையாவும் தைப்பொங்கலுடன் இணைகின்றன என்பதுதான் இங்கு சுட்டப்பட வேண்டிய அவசியமான அம்சம் எனலாம்.

    விவசாயம் என்பதுதான் சமூக வாழ்வுக்கு முதுகெலும்பாகும். விவசாயம்  கொண்டு வருகின்ற பொருட்களால்த்தான் சமூகத்தில் மக்களின் அன்றாட வாழ்வே சிறப்பாகிறது. அந்த விவசாயத்தைச் செய்பவன் இந்தப் பொங்கலில் போற்றப்படுகின்றான். அந்த விவசாயிக்கு உதவும் மாடுகள் பூசிக்கப்படுகின்றன. விவசாயத்தைச் செழிப்பாக்கும் சூரியன் வணங்கப்படுகிறது. விவசாயத்துக்கு உதவும் கருவிகள் மதிக்கப்படுகின்றன. இதனால் தைப்பொங்கல் என்பது நன்றியினை நவில்கின்ற பெருவிழா என்பதை நாங்கள் எங்களின் பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்த வேண்டும்.

    நகரத்தில், புலம்பெயர்ந்த நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் செய்யப்படும் விவசாயமோ, அதன் முறைகளோ, அங்கு விலங்குகள் விவசாயத்துக்கு உதவும் விதமோ, விவசாயத்துக்குப் பயன் படுத்தப்படும் ஏர் போன்ற கருவிகளோ தெரிவதற்கு உரிய வாய்ப்பு இல்லைதான். அவர்களுக்கு அவற்றினைப் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் விளக்கும் பொழுதுதான் தைப்பொங்கலின் போது செய்யப்படும் மரபார்ந்த விஷயங்களை அவர்களின் மனத்தில் பதியச் செய்யக் கூடியதாக இருக்கும்.

    தையில் அறுவடை செய்த புத்தரிசி கொண்டு புதுப்பானையில் பாலும் சர்க்கரையும் சேர்த்து, மண்பானையில் பொங்கி மகிழும்பொழுது பொங்கி வரும் பாலினைப் பார்த்து, குடும்பத்தில் உள்ளவர்கள் “பொங்கலோ பொங்கல்” என்று மகிழ்ந்து நிற்கும் நிலையினை எங்கள் பிள்ளைகளின் உள்ளத்தில் இருக்கச் செய்வது மிக இன்றியமையாதது.

    கலப்படம் இல்லாமல் யாவுமே உழைப்பின் பயனாக வந்த அரிசி, பால், சர்கரை, கரும்பு, இஞ்சி, மஞ்சள், வாழை, மாவிலை, இவையெல்லாம் மகிழ்ச்சியின் அடையாளங்கள். மனித சமூகத்தின் மாண்பின் அடையாளங்கள் எங்களின் பண்பாட்டின் அடையாளங்கள். இவை தைப்பொங்கலில் பயன்படுத்தும் பொழுது ஏற்படும் மனநிறைவுக்கு ஈடு இல்லை என்பதை எங்களின் பிள்ளைகளை உணரச் செய்யவேண்டும்.

    கூட்டுறவின் மகத்துவம் தைப்பொங்கலின் சிறப்பாகும். மனிதனும் விலங்குகளும் கூடி உழைத்து அதன் பயனாக வெளிப்படும் ஒரு கூட்டுறவுத் திருநாள் என்றுகூட தைப்பொங்கலை எடுத்துக்கொள்ளலாம். வருடத்தின் தொடக்கமாய் வரும் தையினை மங்கலகரமாக வரவேற்க வேண்டுமென்று எண்ணிப் பொங்கல் திருநாளினை ஏற்படுத்திய எங்களின் முன்னோர்களை நாங்கள் வாழ்த்தாமல் இருந்திட முடியுமா? வருடத் தொடக்கத்தில் மனத்தில் ஏற்படும் எண்ணங்கள்தான் அந்த வருடம் முழுவதையும் மகிழ்வுடன் வாழ வைக்கும் என்று எண்ணிய உளவியல் சிந்தனையை உவந்தேற்ற வேண்டாமா?

    பொங்கலின் முதலில் மார்கழியின் நிறைவில் போகி என்றொரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகி என்றால் பழைய விஷயங்களை பழைய பொருட்களைக் களைந்து விடுவதாகும். அடுத்துப் பொங்கல் வருகிறது. பழைய பொருட்களை எரித்து விடுவதைத்தான் போகியில் காண்கிறோம், உண்மையில் இதன் அர்த்தம் அதுவன்று. எங்கள் மனத்திலுள்ள பொறாமை வஞ்சகம், பொய், கபடு, சூது, வாது, இவற்றையெல்லாம் ஞானம் என்னும் தீயில் பொசுக்கி மனத்தைத் தூய்மை ஆக்கி, புத்தாடை உடுத்து, புதுப்பொங்கலைச் சுவையாக உண்டு புத்துணர்வு பெற்று நிற்கவேண்டும் என்பதுதான் இதன் தாத்பரியம் எனலாம்.

    பொங்கலுக்கு அடுத்து மாட்டுப் பொங்கல் வருகிறது. விவசாயத்துக்கு உதவிய மாடுகளுக்கும், பால் தந்து எம்மை வாழ்வித்த பசுக்களுக்கும் நன்றி நவிலும் நாளாக இது அமைகிறது. அடுத்த நாள் காணும் பொங்கல் அமைகிறது. உற்றார் உறவினரை, பெரியவர்களைக் கண்டு அவர்களின் வாழ்த்தினை, ஆசியினைப் பெற்றுக் கொள்ளும் நாளாக இந்த நாளை அமைத்து மகிழ்கின்றார்கள்.

    மாட்டுப் பொங்கல், போகித் திருநாள், காணும் பொங்கல் இவைபற்றி எல்லாம் நகரத்தில் வாழ்கின்றவர்களுக்கோ,  புலம்பெயர் பகுதிகளில் வாழ்கின்றவர்களுக்கோ தெரியவருவது குறைவாகும். பொங்கலைக் கூட குக்கரில் பொங்கி, தாங்கள் இருக்கும் வீட்டின் அடுப்படியில் வைத்து கரண்டியால் இரண்டு கரண்டி அவசர அவசரமாக வாயில் போட்டுவிட்டு வேலைக்கு ஓடும் நிலையினைத்தான் பொங்கல் நன்னாளில் காண்கின்றோம். மாடிக் குடியிருப்புகளில் வாழ்கின்றவர்களின் பொங்கலை நினைத்துப் பார்க்கவே பரிதாபமாகவே இருக்கும்.

    உழைப்பினை மையமாக்கி, தொழிலினை மையமாக்கி, அந்தஸ்தினை மையமாக்கி அன்னிய நாட்டினில் வாழும் எங்கள் தமிழர்களின் தைப்பொங்கல் சற்று சறுக்கிய தைப்பொங்கலாகவே அமைவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. சொந்த ஊரினில் தைப்பொங்கல் கொண்டாடுவதற்கும்  குடியேறிய அன்னிய நாட்டில் தைப்பொங்கல்  கொண்டாடுவதற்கும் வித்தியாசங்கள் காணப்பட்ட போதிலும் தைப்பொங்கலைக் கொண்டாடி மகிழ்வதில் தமிழர்கள் பின்னிற்கவில்லை என நினைக்கையில் பெருமிதம் கொள்ளத்தான் வேண்டும்.

    சமயம் கடந்த விழாவாக தமிழர் விழாவாக தைப்பொங்கல் விளங்குகிறது என்பதுதான் இந்த விழாவின் மிகச் சிறப்பு எனலாம். உலகில் வாழுகின்ற தமிழர்கள் – கிறிஸ்தவராயினும், இந்துக்களாயினும், தைப்பொங்கலை மகிழ்வுடன் “பொங்கலோ பொங்கல்” என்று பொங்கும் மனத்துடன் கொண்டாடி மகிழ்கிறார்கள். சமயச் சாயம் பூசப்படாத தமிழர் திருநாளாய் தைப்பொங்கல் திகழ்கிறது என்பது தமிழருக்கெல்லாம் மிகவும் பெருமையான விஷயம் அல்லவா!

    நன்றி நவிலும் விழா! உழைப்பாளரின் உன்னத விழா! கூட்டுறவின் விழா! மதபேதமற்ற மகோன்னத விழா! எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் நிறை என்னும் விழா! எனவே பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள் !

    Share
  • போகியின் அர்த்தம்!

    போகியின் அர்த்தம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பழையன கழிதல் வேண்டும்
    புதியன புகுதல் வேண்டும்
    போகியின் அர்த்தம் என்று
    போதனை இருக்கு நன்றாய்
    வேண்டாத பொருளை எல்லாம்
    தீயிலே போட்டு விட்டு
    வெற்றியாய்ச் சிரித்து நிற்றல்
    போகியின் நோக்கம் இல்லை!

    வீட்டிலே உள்ள குப்பை
    வெளியிலே போட்டு விட்டோம்
    காட்டாத குப்பை எல்லாம்
    மனக் கூட்டிலே நிறைந்திருக்கே
    அகமதன் அழுக்கைப் போக்கல்
    போகியின் அர்த்தம் என்று
    அனைவரும் உணரும் வேளை
    போகியே புகழ்ந்து நிற்கும்!

    Share
  • கங்காரு நாடு கருகியதே!

    கங்காரு நாடு கருகியதே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா

    கருகியது உடலம் கதறியது  உள்ளம்
    பதறியது நாடு சிதறியது வீடு
    சுட்டெரிக்கும் வெப்பம் தாக்கியது எங்கும்
    சுடர்விட்டுத் தீயும் ஆடியது கோரம்!

    கங்காரு நாடு கருகியது தீயால்
    கணக்கில்லா விலங்கு அக்கினிக்கு விருந்து
    கண்முன்னே யாவும் கரிமேடாய்ப் போச்சு
    கலக்கமுடன் மக்கள் வெறுமையுடன் நின்றார்!

    உயிர் பறிக்கும் தீயை உளவுறுதியுடனே
    எதிர்கொண்ட வீரர் இதயம் உறைகின்றார்
    அர்ப்பணிப்பு என்னும் அளப்பரிய பண்பை
    ஆஸ்திரேலிய நாட்டில் அவர்களிடம் கண்டோம்!

    உதவிபுரி கரங்கள் ஓய்ந்து விடவில்லை
    உளமார உருகி ஓடியோடிக் கொடுத்தார்
    தளர்வின்றி அரசும் தாராளம் கொண்டு
    நிலையுணர்ந்து கரத்தை நீட்டியதே நன்கு!

    Share
  • வரந் தருவாய் முருகா!

    வரந் தருவாய் முருகா!

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா
    மெல்பெண், ஆஸ்திரேலியா

    வரந் தருவாய் முருகா – வாழ்வில்
    நிரந் தரமாய் உன்னை
    நினைந்துமே நான் வாழ
    வரந் தருவாய் முருகா
    சிரமேறும் ஆணவம் குறைத்திடுவாய் – வாழ்வில்
    மரமாக இருப்பதையும் ஒழித்திடுவாய்
    உணர்வோடு உனைநினைக்க உதவிடுவாய் – என்றும்
    உயிர்ப்போடு வாழ்வதற்கு அருளிடுவாய்   (வரந்தருவாய் முருகா)

    குறைகூறும் மனமகல உதவிடுவாய் – வாழ்வில்
    கறையுள்ள செயலனைத்தும் களைந்தெறிவாய்
    திறலுடை பெரியோரை இணைத்திடுவாய் – என்றும்
    மறவாமல் உனைத்துதிக்க வரமருள்வாய் (வரந்தருவாய் முருகா)

    மாறுபடு சூரரினை திருத்தியவா – வாழ்வில்
    வேறுமுகம் அமையாது காத்திடுவாய்
    காரிருளை கருணையினால் களைந்திடுவாய் – என்றும்
    கரிசனையை என்மீது காட்டிடுவாய் (வரந்தருவாய் முருகா)

    Share
  • புதுமை காட்டும் புத்தாண்டு!

    புதுமை காட்டும் புத்தாண்டு!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

     

    வெடித்துச் சிதறும் பட்டாசு

    விடியல் காட்டும் குறியல்ல

    இடக்கு முடக்கு வாதங்கள்

    எதற்கும் தீர்வு வழியல்ல

    நினைப்பில் மெய்ம்மைப் பொறியதனை

    எழுப்பி நின்று பார்த்திடுவோம்

    பிறக்கும் வருடம் யாவருக்கும்

    சிறப்பை ஈந்து சிரிக்கட்டும்!

     

    அறத்தைச் சூது கவ்வுமெனும்

    நினைப்பை பொசுக்கி எரித்திடுவோம்

    உளத்தில் உறுதி எனுமுரத்தை

    இருத்தி வைக்க எண்ணிடுவோம்

    சிறுமை தொலைந்து போகட்டும்

    வெறுக்கும் எண்ணம் மடியட்டும்

    புதுமை காட்டும் பாங்குடனே

    புதிய வருடம் பிறக்கட்டும்!

    Share
  • ஏக்கம் மட்டும் போகவில்லை!

    ஏக்கம் மட்டும் போகவில்லை!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா


    புலம்பெயர்ந்து வந்தாலும்
    புலனெல்லாம் பிறந்தமண்ணின்
    நலந்திகழும் நினைவுகளை
    மறந்துவிட  முடியவில்லை
    உளமகிழப் பொங்கிநின்றோம்
    உவகையுடன் நாமிருந்தோம்
    வளமிழந்தோம் வாழ்விழந்தோம்
    புலம்பெயரும் நிலையானோம்!

    பண்பாடு  கலாசாரம்
    விட்டுநாம் அகலவில்லை
    பக்குவத்தை விட்டெறிந்து
    பறந்துமே திரியவில்லை
    கோயில்பல கட்டினோம்
    குலதெய்வம் நிறுவினோம்
    காலைமாலை தவறாமல்
    கடவுளிடம் முறையிட்டோம்!

    சாதிபற்றி எழுஞ்சண்டை
    சலசலத்துப் போனது
    சரிசமனாய் வாழுதற்கு
    உரியநிலம் ஆனது
    பேதமெனும் மனப்பேயும்
    பேதலித்துப் போனது
    என்றாலும் பிறந்தமண்ணின்
    ஏக்கம்மட்டும் போகவில்லை!

    Share
  • ஆஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியம் – ஒரு நோக்கு

    ஆஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியம் – ஒரு நோக்கு

    மகாதேவஐயர்  ஜெயராமசர்மா 
    B.A (Hons) Dip. in Edu , Dip. in Soc , Dip . in . com , M.Phil Edu ,SLEAS
    மேனாள் தமிழ் மொழி கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஆஸ்திரேலியாவில் தமிழர்கள்

    பல இடங்களிலிருந்தும் தமிழர்கள் புலம்பெயர்ந்து கங்காரு நாடு என்று சிறப்பித்து அழைக்கும் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்கள். இங்கு தமிழர்கள் வருகை எப்படி அமைந்தது என்பதை அறிந்து கொண்டால்த்தான் தமிழர்கள் தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும் எந்தவகையில் தங்களின் அக்கறையைச் செலுத்தினார்கள் என்று அறிவதற்கு பொருத்தமாக இருக்கும் என்னும் காரணத்தால் தமிழரின் வருகை பற்றி முதலில் தெரிந்து கொள்வோம்.

    நியூசிலாந்தின் தலைநககரமான வெலிங்டனில் உள்ள நூதனசாலையில் வெண்கல மணி ஒன்று இருக்கிறது. இந்தமணி வில்லியம் கொலன்சோ என்பவரால் நியூசிலாந்தின் நோர்த்லாண்ட் என்னும் இடத்தில் 1836 இல் கண்டுடெடுக்கப்பட்டது. அந்த மணியின் அடியில் இருபத்து மூன்று எழுத்துக்கள் சுற்றிவர இருக்கிறது. இவ்வாறு இருக்கும் எழுத்துக்கள் தமிழ் எழுத்தாக இருப்பதுதான் இங்கு மிகவும் முக்கியம் எனலாம். இதனால் இதனைத் தமிழ் மணி என்று அழைக்கலாம்.  இந்த மணியின் அடிப்பாகத்தில் “முகைய்யதின் வகுசுவின் கப்பல் மணி” என்ற கருத்தில் அதிலுள்ள வார்த்தைகள் அமைந்துள்ளன. கி.பி 200 இலிருந்து இன்று வரை எக்காலத்தைச் சேர்ந்ததாகவும் இதில் காணப்படும் எழுத்துக்களை அடக்கலாம் என்று Archaeological Survey of India கருதுகிறது. இங்கு காணப்படும்

    ‘முகைய்யதின்’ என்னும் பெயரைக் கொண்டு இஸ்லாமியா செல்வாக்கு வந்திருக்க இடமுண்டு எனக் கொண்டால் இந்த மணி கி.பி 1500 தொடக்கம் 1600 வரையானகாலப் பகுதியைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் கருதமுடிகிறது. அதே வேளை சோழர் காலத்தில் வெண்கலத்தாலான பொருட்கள் மிகவும் சிறப்புப் பெற்றிருந்தன. நியூசிலாந்தில் ஓக்லண்டில் வசிக்கும் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தைச் சேர்ந்த டாக்டர் ராசநாதன் கருத்துப்படி இம்மணியானது சோழர் காலத்தைச் சேர்ந்ததேஎன்றும் – சோழர்களால்த்தான் இம்மணியை இங்கு கொண்டுவரும் ஆற்றல் இருந்திருக்க வேண்டும் என்று ஆணித்தரமாக 1994 இல் தெரிவித்திருக்கிறார்.

    தமிழர்கள் குடியேற்றமானது கங்காரு நாட்டில் 1778 இலிருந்து ஆரம்பமாகியதுஎன அறியமுடிகிறது. இப்படியான குடியேற்றமானது 1837, 1838 ஆம் ஆண்டுகளில் அதிகமாக நடந்திருக்கிறது. கிழக்கிந்திய கம்பனியைச் சேர்ந்த ஆங்கிலேயர்களால் தமிழர்கள் இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள் என்று அறியமுடிகிறது. 1901 க்குப் பின்னர் தமிழர் குடியேற அனுமதி இல்லாமல் போய்விடுகிறது. 1965 இலிருந்து தமிழர்கள் இங்கு குடியேறத் தொடங்குகிறார்கள். ஆரம்பத்தில் வந்தவர்கள் திறமைஅடிப்படையில் தொழில் செய்ய அனுமதிபெற்றே வந்திருக்கிறார்கள். குடியுரிமை பெற்று வாழலாம் என்னும் வாய்ப்பு 1970 ஆம் ஆண்டு வந்ததால் தமிழர்களின் குடியேற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. 1983 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட நாட்டுச் சூழல் காரணமாக பெருமளவில் தமிழர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்துசேருகிறார்கள். 2009 ஆம் ஆண்டுக்குபின்னர் படகுகள் மூலமாகவும் தமிழர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் வந்துவிடுகிறார்கள்.

    ஏனைய உலக நாடுகளைவிட ஆஸ்திரேலியா வளத்தாலும் இடத்தாலும் பெரியது. அரசியல் ரீதியிலும் நூறுசத விகிதம் ஜனநாயகத்தைப் பேணும் நாடாகவும் விளங்குகிறது. இதனால் மனித மாண்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் உயர்வான பண்பாடும் இங்கு காணப்படுகிறது. இதனால் பலரும் இங்கு குடியேறி வாழ்வதற்குப் பெருவிருப்பத்தோடு இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

    கங்காரு நாடு எனப்போற்றப்படும் ஆஸ்திரேலியாவில் ஆறு மாநிலங்களும் இரண்டு மண்டலங்களும் என மொத்தம் எட்டு சமஷ்டி அரசாட்சிப் பிரிவுகள் காணப்படுகின்றன. இந்தநாட்டினது சனத்தொகை ஏறக்குறைய இரண்டு கோடி எனலாம். இந்தச் சனத்தொகை கிட்டத்தட்ட இலங்கையின் சனத்தொகையினை ஒத்ததாகும். ஆனால் இலங்கையைவிட ஆஸ்திரேலியா நிலப்பரப்பளவில் ஐம்பத்திரண்டு மடங்கு பெரியது என்பது முக்கியமாகும்.

    ஆஸ்திரேலியாவில் கூடுதலாகத் தமிழர்கள் வாழுமிடமாக சிட்னியைத் தலைநகராகக் கொண்ட நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தையே கொள்ளலாம். இங்கு தமிழர்களின் மொத்த எண்ணிக்கையில் நான்கில் மூன்றுக்கும் அதிகமானோர் வாழுகிறார்கள் என்பது நோக்கத்தக்கது. அதற்கடுத்ததாக மெல்பேணைத் தலைநகரமாகக் கொண்ட விக்டோரியாவைக் குறிப்பிடலாம். மேற்கு ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா (அடிலெயிட்) தலைநகரமான கன்பரா, வட மண்டலமான டார்வின், தஸ்மேனியா (ஹோபார்ட்) ஆகிய மாநிலங்களிலும் தமிழர்கள் வாழுகிறார்கள்.

    இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், பீஜி, தென் ஆபிரிக்கா, போன்ற இடங்களில் இருந்தெல்லாம் தமிழர்கள் காலத்துக்குக் காலம் வந்து குடியேறி இருக்கிறார்கள். வேலைக்காகவும், படிப்புக்காகவும், நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாகவும், வர்த்தகம் செய்யும் நோக்காகவும், என பல்வித நோக்கங்களால் தமிழர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறி உள்ளார்கள் என்றுதான் கொள்ள வேண்டியுள்ளது. இதில் இந்தியாவிலிருந்து வந்த தமிழர்களுக்கும் இலங்கையிலிருந்து வந்த தமிழர்களுக்கும் வேறுபாடுகள் நிறையவே இருக்கின்றன.

    இந்தியாவிலிருந்து வந்த தமிழர்கள் நாட்டுப் பிரச்சினை காரணமாக வந்தவர்கள் அல்லர். அவர்கள் படிப்பாலும் தொழிலாலுமே இங்கும் வந்திருக்கிறார்கள். ஆனால் இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் பலர், பல இழப்புகளைச் சந்திந்த பின்பே, இருக்க முடியாமல் உயிரினைக் காப்பாற்றி, மிச்சமிருக்கும் காலத்தை வாழ எண்ணி வந்தவர்கள் எனலாம். இதனால் இந்த இருவகைத் தமிழர்களின் சிந்தனை, செயற்பாடுகள் வேறு வேறாய்  இருப்பதையும் இங்கு கொள்ள முடிகிறது. இவர்களைவிட இன்னொரு வகைத் தமிழர்களாக, சிங்கப்பூர், மலேசியத் தமிழர்கள் விளங்குகின்றார்கள். பீஜி, மொரிசியஸ், தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பெயரளவில் தமிழர்களே அல்லாது அவர்கள் தமிழ் தெரியாத தமிழர்களாக இங்கு இருக்கிறார்கள்.

    ஏறக்குறைய எண்பதினாயிரம் தமிழர்கள் வாழ்ந்தாலும் குடிசன மதிப்பீட்டுப்படி ஐம்பதாயிரம் என்று கணக்குச் சொல்கிறது. குடிசன மதிப்பீட்டினை எடுக்கும்பொழுது வீட்டில் பேசும் மொழி தமிழ் என்றும் குறிப்பிடாமல் விடப்படுவதனால் இந்தக் குறைபாடு ஏற்பட்டு, தமிழரின் சரியான தொகை வராமல் இருக்கிறது என்பது முக்கியக் குறிப்பு எனலாம்.

     ஆஸ்திரேலியாவில் தமிழ் அமைப்புகள்

    தமிழர்கள் சேருமிடமெல்லாம் கலகலப்பும் இருக்கும். கலவரங்களுக்கும் குறைவிருக்காது. பண்பாடு கலாசாரம் என்பவற்றைக் காக்க வேண்டும் என்பதற்காகவே எப்படியோவெல்லாம் உழைப்பார்கள். அப்படி உழைக்கும் பொழுதில் அவர்களுக்கிடையே ஏற்படும் ஒவ்வாத தன்மைகளாலும், கருத்து முரண்பாடுகளாலும் தொடங்கவிருக்கும் அமைப்பு, பல அமைப்புகளாய், பல பெயர்களில் உருப்பெற்று வருவதை எல்லா இடங்களிலும் காணுகிறோம். இப்போட்டி சரியானதா, பிழையானதா என்பதற்கு அப்பால், இப்போட்டியினால் பல தமிழ் அமைப்புகள் உருவாகும் நிலை வருவது மகிழ்ச்சியானதுதானே! இப்படி ஒரு நிலை கங்காரு மண்ணிலும் தமிழர்கள் மத்தியில் காணப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டவே இப்படியாக விளக்கும் நிலை ஏற்பட்டது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

    அமைப்புகளுக்குள் போட்டி. தனிமனித ஆளுமைக்கிடையிலான போட்டி என்று இப்போட்டி, பல அமைப்புகளின் தோற்றத்துக்கு வழிவகுத்து விட்டதையே காண முடிகிறது. என்றாலும் தமிழ் அமைப்புகள் பல, நல்ல முறையில் செயலாற்றி வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. ஏறக்குறைய எண்பதினாயிரம் தமிழ் மக்கள் வாழுகின்ற கங்காரு மண்ணில் நூற்றுக்கு அதிகமான சங்கங்கள் இருக்கின்றன. தமிழ் மக்களின் ஒன்றுகூடலுக்கும், தாயக மண்ணின் துயர் துடைக்கும் நோக்கத்துக்குமாக ஆரம்பத்தில் இச்சங்கங்கள் அமைக்கப்பட்டன. பின்னர் ஏற்பட்ட மனோபாவங்களின் விளைவால் சங்கங்கள், அமைப்புகள் பிளவுக்கு ஆளாகின என்பதும் நோக்கத்தக்கதே.

    டாக்டர் ஆர். சிவகுருநாதன் தலைமையில் “இலங்கைத் தமிழர் சங்கம்” சிட்னியில் நிறுவப்பட்டது, இச்சங்கம் 1982 முதல் “ஈழத் தமிழர் கழகம்” என்று இன்றுவரை இயங்கி வருகிறது. சிட்னி “தமிழ் மன்றம்” 1978இல் ஆரம்பிக்கப்பட்டது. விக்டோரியா மாநிலத்தில் பேராசிரியர் எலியேசர் அவர்களால் 1978இல் “விக்டோரியா இலங்கைத் தமிழ்ச் சங்கம்” தொடங்கப்பட்டது. பின்னர் இச்சங்கம் 2000ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் திகதியில் அப்போதைய தலைவர் சட்டத்தரணி பாடுமீன் சு. ஶ்ரீ கந்தராசா தலைமையில் “விக்டோரியா ஈழத் தமிழ்ச் சங்கம்” என்று பெயர் மாற்றம் செய்ய்யப்பட்டது.

    1979இல் மேற்கு ஆஸ்திரேலிய தமிழ்ச் சங்கம், 1986இல் “இலங்கைத் தமிழர் சங்கம்” 1990 குயின்ஸ்லாந்து ஈழத் தமிழர் சங்கம், 1983 கன்பரா தமிழ்ச் சங்கம், 1983 தெற்கு ஆஸ்திரேலிய தமிழ்ச் சங்கம், 1984 தென் துருவத் தமிழ்ச் சம்மேளனம், இவ்வாறு சங்கங்கள் இருக்கின்ற வேளை சிட்னி, விக்டோரியா போன்ற இடங்களில் மேலும் பல சங்கங்கள் தோற்றம் பெற்றுத் தமிழ்ப் பணிகள், சமூகப் பணிகள் ஆற்றி வருகின்றன.

    சிட்னியைத் தலைநகராகக் கொண்ட நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் – ஆஸ்திரேலிய பட்டதாரிகள் சங்கம், மெல்பேணைத் தலைநகராகக் கொண்ட விக்டோரியா மாநிலத்தில் – ஆஸ்திரேலிய தமிழர் ஒன்றியம், விக்டோரியா தமிழ் கலாசாரக் கழகம், மெல்பேண் தமிழ்ச் சங்கம், விற்றல்சீ தமிழ்ச் சங்கம், ஆஸ்திரேலிய தமிழ் கலை இலக்கியச் சங்கம், கே சீ தமிழ் மன்றம் என்றும் தமிழ்ச் சங்கங்கள் இருந்து பணியாற்றி வருகின்றன. இவற்றைவிட மூத்த பிரஜைகளுக்கான சங்கங்கள், பல மாநிலங்களில் அமைந்து செயலாற்றி வருகின்றன. 1987ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட விக்டோரியா மூத்த பிரஜைகள் சங்கமே கங்காரு மண்ணில் முதலில் அமைக்கப்பட்டது என்னும் பெருமையைப் பெற்றுக்கொள்கிறது. இப்படிப் பல சங்கங்கள். தமிழர் அமைப்புகள் தொடங்கப்பட்டதற்குக் காரணங்கள்தான் என்னவாக இருக்கும் என்பதை மேலோட்டமாக ஆரம்பத்தில் கண்டோம். ஆனால் அப்படியான சிந்தனைகள் காலவோட்டத்தில் விரிவடைந்து தமிழர் கலை, கலாசாரம், தமிழ் மொழி வளர்ச்சி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, தற்போது வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கின்றன.

    ஆஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியம்

    ஆஸ்திரேலியாவில் தமிழரின் பரம்பல். அதனால் அவர்களினால் ஏற்படுத்தப்பட்ட தமிழ் அமைப்புகள் இவற்றுக்கும் குழந்தை இலக்கியத்துக்கும் என்னதான் தொடர்பு இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? தமிழர்கள் பலவகையினராய் பல நாடுகளில் இருந்து பல தேவைகளுக்காக வந்தாலும் – தமிழ் பேசும் தமிழர்களும் அவர்களது சிந்தனையும் தங்களின் மொழிமீதும், தங்களின் பண்பாடு மீதும், மாறாத பற்றுடன் இருந்தது – இருக்கிறது என்பதைத்தான் ஆஸ்திரேலியாவில் அவர்களது செயற்பாடுகளினால் கண்டுகொள்ள முடிகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமெனலாம். இலக்கு + இயம் என்பதுதான் இலக்கியம் ஆகிறது என்பதை இங்குள்ள தமிழ் பேசும், தமிழை நேசிக்கும், தமிழைச் சுவாசிக்கும் அத்தனைத் தமிழர்களும் நம்புகிறார்கள்.

    தமிழ்ப் படைப்பாளிகள் பலர் இங்கு இருக்கிறார்கள். தமிழ்ப் பத்திரிகைகள், தமிழ் சஞ்சிகைகள் பல, இங்கிருக்கின்றன. தமிழ் விழாக்கள், தமிழ்ப் போட்டிகள், விவாத அரங்குகள், நாட்டிய நிகழ்ச்சிகள் யாவும் இங்கு இடம்பெறுகின்றன. இவற்றுக்கெல்லாம் காரணம் இங்குள்ளவர்கள் தமிழை மறக்காமல் அதன் வழியில் செல்லுகிறார்கள் என்பதே.

    குழந்தை இலக்கியம் என்பது ஆணிவேரை ஒத்ததாகும். எழுதுவதற்கு மிகவும் சிரமமான இலக்கியம் எது என்றால் அது “குழந்தை இலக்கியமே” குழந்தைகளின் உளவியலைப் புரிந்துகொண்டால்தான் அது சாத்தியமாகும். குழந்தைகளின் இலக்கியம், இலக்கிய வகைகளிலே மிகவும் முக்கியமானதாகும். சிறிய வயதிலே படிக்கும் பழக்கம் இருந்தால்தான் பெரியவர்கள் ஆன பின்பும் படிப்பார்கள். பெரியவர்களின் இலக்கியத்துக்குக் கூட அடித்தளம் “குழந்தை இலக்கியமே”. ஆஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியத்தை வளர்ப்பதில் குறிப்பிட்ட படைப்பாளர்களே ஈடுபடுகிறார்கள். குழந்தைகளுக்கான படைப்புகளை ஒரு முக்கியப் பணியாக நினைத்தே அவர்கள்  படைக்கின்றார்கள்.

    சிறுகதைகள், நாடகங்கள், பாடல்கள், இறுவெட்டுகள், என்ற வகையிலும் நாட்டிய நாடகங்கள், நடனங்கள், வில்லுப்பாட்டுகள், என்ற வகையிலும் குழந்தைகளுக்கான படைப்பு முயற்சிகள் இங்கு அமைந்து காணப்படுகின்றன. தமிழைத் தங்களின் பிள்ளைகள் மறவாமல் இருக்க வேண்டும் என்று தமிழ்ப் பெற்றோர்கள் பலர் விரும்பும் காரணத்தால் ஆஸ்திரேலியாவில் தமிழ்ப் பள்ளிகள் ஆரம்பமாகின. ஆங்கிலத்தையே மொழியாகக் கொண்ட ஆஸ்திரேலியாவில் வளரும் தங்கள் பிள்ளைகள், ஆங்கிலத்தையே முதல் மொழியாகப் பயிலும் நிலை இருப்பதனால் நாளடைவில் தாய் மொழியான தமிழையும், பண்பாட்டையும் மறந்துவிடுவார்களோ என்னும் ஏக்கமும் பயமும் பெற்றோர் பலரிடம் இங்கு அடிமனத்தில் வேரூன்றி இருக்கிறது. அதனால் எப்படியும் அவர்களுக்குத் தாய் மொழியான தமிழினைக் கற்றிடும் நிலையினை ஏற்படுத்த எடுத்த முயற்சியாய் அமைந்தனவே இங்கு இருக்கும் தமிழ்ப் பள்ளிகள் ஆகும்.

    தமிழ் அமைப்புகள் பலவும் தமிழர்கள் வாழும் மாநிலங்களில் தமிழ்ப் பள்ளிகளை ஆரம்பித்திருக்கின்றன. அப்பள்ளிகள் வார இறுதி நாட்களில் மட்டுமே இயங்குகின்றன. அங்கு பாலர் வகுப்புத் தொடக்கம் பல்கலைக்கழகத்து முன் தேர்வுக்குமான பாடத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. பல்கலைக்கழகத்து முன்தேர்வுக்குத் தமிழ்  ஒரு பாடமாக எடுக்க, ஆஸ்திரேலிய அரசாங்கம் அனுமதி வழங்கியிருப்பது நல்லவொரு வரப்பிரசாதமாய் அமைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் பெற்றோர்கள் பலர், தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிக்கு ஆர்வத்துடன் அனுப்பி வைக்கிறார்கள். இப்பள்ளிகளிலே ஆடல், பாடல், கதை சொல்லல், நாடகம் என்று குழந்தை இலக்கியம், தன்னையறியாமலேயே வளர்ந்து வருகிறது.

    குழந்தை இலக்கியம் என்று தெரியாமலேயே அங்கிருக்கும் ஆசிரியர்கள் குழந்தை இலக்கியத்தினைப் பல்வேறு வகைகளில் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். இங்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் எவருமே ஆசிரியப் பணி ஆற்றியவர்கள் அல்லர். ஒரு சிலரே ஆசிரியராக இருந்து அனுபவம் பெற்றவர்கள். ஏனையோர் வைத்தியராகவும், பொறியியலாளராகவும், தொழில்நுட்பவியலாளராகவும், கணக்காளராகவும் இருக்கிறார்கள்.

    இவர்களுக்குக் குழந்தை இலக்கியம் என்றால் என்ன என்பது தெரியாது. ஆனால் இவர்கள் குழந்தை இலக்கியத்தைக் கற்பிப்பதில் தம்மை அறியாமலே ஈடுபடுகிறார்கள்.

    ஆஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியம் பற்றி எழுதவோ அல்லது பேசவோ தொடங்குவதாய் இருந்தால் அம்பி என்னும் அம்பிகைபாகரை உச்சரிக்காமல் தொடங்கவே இயலாது. அந்த அளவுக்கு ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் தமக்கென ஒரு தனியான இடத்தினை அவர் ஏற்படுத்தி வைத்துள்ளார். அம்பி தாய்மொழிப் பற்று மிக்கவர். சமூக அக்கறை கொண்டவர். அடுத்த  தலைமுறையினரான குழந்தைகளை மனமிருத்தினார். அதனால் அவரின் குழந்தைகள் பற்றிய சிந்தனை, சிறப்பினைப் பெற்றது எனலாம்.

    ஆரம்பத்தில் சிறுகதை எழுதியவர் பின்னர் கவிஞராகவே மலர்ந்தார். கவிஞராகவே இருக்கவே ஆசையும் கொண்டார். தமிழ்நாட்டில் குழந்தை இலக்கியம் என்றதும் எல்லோர் நினைவிலும் வந்து நிற்பவர் கவிமணி அவர்களே. அம்பியையும் ஈழத்துக் கவிமணி என்றுதான் அழைக்கின்றனர். அந்த அளவுக்கு குழந்தைகளிடம் பற்றும் பாசமும் கொண்டு அவர்களுக்காக கவிதை இலக்கியத்தை வளர்த்து நின்றார். கணித ஆசிரியராய் இருந்தவரின் எண்ணத்தில் குழந்தைகள் இலக்கியம் கருக்கொண்டது என்றால் அந்த அளவுக்கு அம்பியின் ஈடுபாடு குழந்தைகள் பால் மிக்கிருந்தது என்றுதான் கருதமுடிகிறது.

    குழந்தைகளுக்கான இலக்கியம் படைப்பதற்கு கடின உழைப்பு. பொறுமை, சொற்களஞ்சிய அறிவு மிகவும் முக்கியம் ஆகும். குழந்தைகளின் கவிதைகள் அவர்களின் நாட்டப் பொருட்களை மையமாகக் கொண்டிருக்கவும் வேண்டும். வீண் சொற்களையோ, வர்ணனைகளையோ, குழந்தைப் பாடல்கள் கொண்டிருப்பது கூடாது. இவற்றையெல்லாம் மனமிருத்தியே கவிஞர் அம்பி அவர்கள் குழந்தை இலக்கியத்தைப் படைத்தார். இவர் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் குழந்தைகளுக்கான கவிதைகளையும் தந்திருக்கிறார். ஆஸ்திரேலிய தமிழ்க்குழந்தைகள் தமிழில் பேச வேண்டு. பேசிப் பேசி மகிழ வேண்டும் என்பதே அவரின் பேரவாக இருந்தது. இந்த எண்ணத்தை மனமிருத்தியே ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தைக் கட்டி எழுப்புவதில் அம்பி அவர்கள் பெரும்பங்கு வகித்தார் என்பதை இங்கு வாழும் தமிழர்கள் அனைவருமே ஒரு மனதாக ஏறுக்கொள்ளுவார்கள்.

    “கொஞ்சும் தமிழ்”, “பாலர் பைந்தமிழ்” என்னும் கவிதை நூல்களை குழந்தை இலக்கியமாய் அளித்திருக்கிறார். இவரின் அணுகு முறை ஆஸ்திரேலிய குழந்தைகளை மனமிருத்தியதுதான் என்பதே இங்கு முக்கியமாகும். சூழலுக்கு ஒவ்வாத விடயங்களை யார் படைத்தாலும் அஃது பொருத்தம் அற்றதாகவே ஆகிவிடும். அப்படிப் பாடிஅமைப்பதை விட படைக்காமலே இருந்திடலாம். நீண்ட கால ஆசிரியப்பணி. பல நாடுகளில் ஆசியப்பணி. புலம் பெயர் நாடுகளில் உள்ள பிள்ளைகளின் உள்ளக்கிடக்கை இவற்றை எல்லாம் மிகவும் உன்னிப்பாகாகக் கவனத்தில் கொண்ட  காரணத்தினால்த்தான் அம்பி அவர்களின் குழந்தை இலக்கியம் ஆஸ்திரேயாவில் முக்கியத்துவம் மிக்கதாக அமைகின்றது எனலாம்.

    “நீங்கள் இனிய தமிழ் வேச வேண்டு. பேசிப் பழக வேண்டும். இனிமையாக பேசி மகிழவேண்டும். நீங்கள் இனிய பாடல்கள் பாட வேண்டு. பாடப் பழக வேண்டும். இனிமையாகப் பாடி மகிழ வேண்டு. நீங்கள் பாடல்கள் பாடி ஆட வேண்டும். பாடி ஆடி மகிழ வேண்டும். பெற்றோரையும் மற்றோரையும் மகிழ்வித்தல் வேண்டும். நீங்கள் பாடி ஆடும்போது அபிநயம் செய்து மகிழ வேண்டும். அபிநயம் செய்யப் பழக வேண்டும். அபிநயத்தால் எல்லோரையும் மகிழ்வித்தல் வேண்டும். நீங்கள் பாடி ஆடி அபிநயஞ் செய்து மகிழும்போது அறிந்த சொற்களின் பொருளை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். புதிய சொற்களையும் அறிதல் வேண்டும். புதிய சொற்களுடன் அறிவு வளர்ச்சியும் பெறுதல் வேண்டும்.” என்று – ” கொஞ்சும் தமிழ் பாடல்கள்” நூலில் அம்பி அவர்கள் தனது மனத்தினை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    அம்பியின் பாடல்கள் தனித்துவம் மிக்கன. குழந்தைகளின் நாவில் உச்சரிக்கக் கூடிய எளிய தமிழ், அவர்களின் சிந்தையில் பதியக் கூடிய ஓசை நயத்துடனான சொற்கோலங்கள். இதனால் குழந்தைகள் அந்நியப்பட்டு விடாமல் பாடலுடன் நெருங்கி ஒட்டுற வாடுகின்றனர். இதுவேதான் “அம்பி” என்னும் குழந்தை இலக்கியப் படைப்பாளருக்கு ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள முக்கியத்துவம் எனலாம். வினா விடை முறையிலே பல பாடல்களை அமைத்திருக்கிறார். அங்கு குழந்தைகளின் உளவியலை அவர் நன்கு அறிந்து எழுதியிருக்கிறார் என்பதையே காணமுடிகிறது. ஆஸ்திரேலிய குழந்தைகளை மனமிருத்தி

    “அம்பி மழலை” என்னும் குழந்தை இலக்கிய நூலை ஆக்கியிருக்கிறார். கங்காரு ஆஸ்திரேலிய நாட்டின் அடையாளம். அதனை சிறியவர் முதல் பெரியவர்வரை விரும்பி இரசிப்பார்கள். இந்த நாட்டில் உள்ள தமிழ் குழந்தைகளுக்கு விளங்காத விலங்குகளை அறிமுகப்படுத்தவோ அல்லது அவை பற்றி சொல்லுவதோ பொருத்தம் அற்றது என்பதை அம்பி அவர்கள் தெரிந்து காரணத்தால் “ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி அருமையான சின்னக்குட்டி” என்று பாடாமல்

       முன் இரண்டு காலைத் தூக்கி
       முன்னே பாய்ந்து செல்குவேன்

       பின் இரண்டு காலில் துள்ளி
       பாய்ந்து பாய்ந்து செல்லுவேன்

       சின்னக்குட்டியை வயிற்று பையில்
       செருகிக் கொண்டு செல்லுவேன்

       என்னைப் போன்ற அன்னை யாரோ
       என்று கேட்டுச் செல்லுவேன்

       என்னைத் தெரியுமா – என்
       பெயரைத் தெரியுமா?    

       என்று கங்காரு பற்றி குழந்தைகளுக்கு காட்டுகிறார் அம்பி.

    “கொஞ்சும் தமிழ்” அழகிய வண்ணப்படங்களுடன் ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியமாய் வந்திருக்கிறது. அத்துடன் “பாலர் பைந்தமிழ்” படைப்பும் சேர்ந்துவிட்டது.

    “தமிழில் சிறுவர் இலக்கியம் இல்லாமை பெருங்குறையாகும். சிறுவர் இலக்கியத்தில் நாம் பின்தங்கி விட்டோம். அத்துறையில் “அம்பி யுகம் ” ஆரம்பமாகி விட்டது என்று நாம் பெருமையும் பூரிப்பும் அடைய வேண்டும்.” என ஈழத்து அறிஞர் அஸீஸ் அவர்கள் குறிப்பிடுகிறார்.

    “ஆஸ்திரேலியச் சிறுவருக்கு மட்டுமல்ல புலம் பெயர்ந்து பிறமொழிச் சூழல்களில் வளரும் எல்லாச் சிறுவருக்கும் ஏற்ற வகையில் அம்பியின் பாடல்கள் அமைகின்றன” என்று கலாநிதி. கவிஞர் கந்தவனம் குறிப்பிடுகிறார். இப்படி பலரும் அம்பியின் குழந்தை இலக்கியம் பற்றி விதந்தே நிற்கிறார்கள். தற்பொழு தொண்ணூறு அகவை கடந்து ஆஸ்திரேலிய மண்ணில் அம்பி அவர்கள் வாழுகிறார்கள் என்பது குழந்தை இலக்கியத்துக்கே பெருமை எனலாம். கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளைபோல், இன்று ஆஸ்திரேலிய கவிமணியாய் வாழும் அம்பி ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் முக்கிய இடத்தினை வகிக்கிறார் என்பதுதான் உண்மை.

    அம்பிக்கு அடுத்த நிலையில் குழந்தை இலக்கியத்தை கையில் எடுத்தவர் என்னும் வகையில் வானொலிமாமா என்று எல்லோராலும் அழைக்கப்படும் திரு நா. மகேசன் அவர்கள் விளங்குகிறார்கள். கணக்காளராக வேலை பார்த்தாலும் இவர் இதயத்தில் குழந்தைகள் பற்றிய சிந்தனையே கருக்கொண்டு இருந்தது எனலாம். இலங்கை வானொலியில் “சிறுவர் மலர்” என்னும் நிகச்சியைத் தொகுத்து வழங்கி பிரபல்யம் அடைந்தமையால் அவரை  “வானொலி மாமா” என்று அழைக்கும் அளவுக்கு செல்வாக்கினைப் பெற்றுவிட்டார். இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியா வந்தபின்பும் அவர் வானொலி மாமா ஆகவே இருக்க விரும்பினார்.

    ஆஸ்திரேலியாவில் வாழும் குழந்தைகளை மனதில் வைத்து அவர்களுக்காக பாடல்கள், நாடகங்கள், கதைகள், என்று தனது ஆளுமையை வெளிப்படுத்தி பயனுறச் செய்தார். சிறுவர்களுக்காக பாடல்கள் எழுதினார்.  “பாட்டும் கதையும்” என்று கதைப்பாடல் நூலையும். சிறுவர் கவியரங்கக் தொகுதியாய் “நாகடக்கவியரங்கு நூலையும், “ஒளவை வந்தாள்” என்னும் மாணவர் மேடை நாடக நூலையும், தந்ததோடு நின்றுவிடாமல் சிறுகதையாக சிறுவர்களுகாக ” ஆஸ்திரேலியாவில் ஆத்திசூடி” என்னும் அருமையான நூலையும் தந்திருக்கிறார். அதுமட்டுமன்றி “திருவிழா” என்னும் சிறுவர் சைவசமய நாவலையும் தந்து சிறப்பித்து இருக்கிறார்.

    “ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ்ச் சிறுவர்களோடு பழகியபோது அவர்களின் தமிழ் ஆர்வத்தை உணர்ந்தேன். ஆர்வம் இருப்பினும் அவர்களது வாழ்க்கை நிலை அவர்களின் தமிழ் அறிவுக்கும் – தமிழ் நாட்டுச் சூழல் அறிவுக்கும் தடையாகவே இருந்தது.

    ஆத்திசூடி வாக்கியங்களை ஆஸ்திரேலியச் சூழலில் பொதிந்து கதைகளாக தந்தால் இங்குவாழும் சிறுவர்கள் விளங்கிக் கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்று கருதினேன். பல நண்பர்கள் இதை ஆதரித்து எழுதும்படி தூண்டினார்கள். அதன் விளைவுதான் “அவுஸ்திரேலியாவில் ஆத்திசூடி” என்று இக்கதை நூலின் முன்னுரையில் வானொலிமாமா மகேசன் கூறுவது மனமிருத்த வேண்டிய விடயம் எனலாம்.

    பன்னிரண்டு கதைகள் இதில் இடம் பெறுகின்றன. அறச்சாலைப் பெண் – (அறஞ்செய விரும்பு) , பூங்காவில் புகுந்தவன் – (ஆறுவது சினம்) புத்தகம் போயிற்றே – (இயல்வது கரவேல்) கண்தானம் – (ஈவது விலக்கேல்), குத்துச் சண்டை – (உடையது விளம்பேல்) மோட்டார் ஓட்டுநர் – (ஊக்கமது கைவிடேல்), கல்வியா செல்வமா – (எண் எழுத்து இகழேல்), மதிய உணவு – (ஏற்பது இகழ்ச்சி), தமிழ்க் கிழவர் – (ஐயம் இட்டுண்), வாழைப்பழத் தோல் – (ஒப்புர ஒழுகு), அறிவுச் சக்கரம் – (ஓதுவது ஒழியேல்),  பரிசளிப்பு விழா – (ஒளவியம் பேசேல்) என்னும் வகையில் ஒளைவையின் ஆத்திசூடியை விளக்கும் பாங்கில் அமைந்திருபதுதான் இதன் சிறப்பு எனலாம். வானொலி மாமாவாய் ஆகிவிட்ட மகேசன் அவர்கள் ஆஸ்திரேலியாவிலே இருபத்து நான்கு மணிநேரமும் இயங்கும் இன்பத்தமிழ் வானிலியில் “சிறுவர் மலர்” நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் என்பதும் மனங்கொள்ளப் படவேண்டிய முக்கிய அம்சம் எனலாம். அம்பியும் வானொலிமாமா மகேசனும் ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் முக்கிய இடத்தை வகிக்கின்றனர் என்பது மிக மிக முக்கியமானதாகும்.

    பச்சையப்பன்கல்லூரியில் அறிஞர் மு. வ. அவர்களிடம் கல்வி கற்று இலண்டனில் பக்தி இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று பல உயர் பதவிகளை வகித்த ஆ. கந்தையா அவர்கள் இன்று எம்மிடையே இல்லாது விட்டாலும் அவரும் குழந்தை இலக்கியத்தில் தன்னை ஈடுபடுத்தி அவர்களுக்காக “மழலை அமுதம்” என்னும் குழந்தைப் பாடல் நூலையும், “கங்காரு தாவித் தாவி ஓடுவதேன்”, வால் நீண்டது எப்படி” என்னும் சிறுவருக்கான நூலினையும் தந்திருக்கின்றார். ஆஸ்திரேலியாவில் சிட்னியில் வாழ்ந்து அங்கேயே தனது வாழ்க்கைப் பயணத்தை நிறைவு  செய்த தமிழ் ஆராய்ச்சி அறிஞரான முனைவர் ஆ. கந்தையா அவர்களும் ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டுவிட்டார் என்பது உண்மையான விடயமாகும்.

    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநராக விளங்கிய ஜெயராமசர்மா அவர்கள் அவுஸ்திரேலிய குழந்தைகளை மனமிருத்தி பல கவிதைகளையும் இசைப்பாடல்களையும் தந்திருக்கிறார். பிறந்தநாள் கொண்டாட்டங்களில் அநேகமானவர்கள் ஆங்கிலமும் தமிழும் கலந்துதான் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைப் பாடிவருகின்றனர். இதனை அவதானித்த ஜெயராமசர்மா அவர்கள் இங்குள்ளவர்கள் பிறந்தநாள் விழாவில் பாடத்தக்க வகையில் குழந்தைகளை வாழ்த்தி குழந்தைகளின் இலகுவான மொழிநடையிலேயே “தமிழில் பிறந்தநாள் வாழ்த்து” பாடியிருக்கிறார். அதனை பலரும் விரும்பி இப்பொழுது தங்கள் வீடுகளில் பிறந்தநாளின் பொழுது குழந்தைகளை வாழ்த்திப் பாடிவருவது குறிப்பிடத்தக்கதாகும். மெல்பேணின் தென்கிழக்குப் பகுதியில்

    கேசி தமிழ் மன்றத்தத்தால் “இளவேனில்” என்னும் சஞ்சிகை சிறுவர்களை மையப்படுத்தியே வெளிவருகிறது. ஆஸ்திரேலியாவில் சிறுவர்களை மையப்படுத்தி வெளிவரும் சஞ்சிகை இதுவாகவே இருக்கிறது. இச்சஞ்சிகையில் ஜெயராமசர்மா குழந்தைகளுக்காக கவிதைகளை எழுதி வருகிறார். அதனைப் படித்த குழந்தைகள் ஆர்வமாய் வாசித்து சுவைக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். “குருவிக்கூடு” , ²உயர்ந்திடுவோம் வாழ்வினிலே”, ²அழகுதமிழ் பேசிடுவோம்” ஆகிய பாடல்களை இளவேனில் தாங்கி பல குழந்தைகளின் மனதில் இருத்தியே வைத்திருக்கிறது.

    “உணர்வுகள்” என்னும் கவிதை நூலினை ஜெயராமசர்மா அவர்கள் ஆஸ்திரேலியாவில் வெளியிட்டார். அதில் மொழி என்னும் பகுதியில் குழந்தைகளுக்கான பல கவிதைகள் இடம் பெறுகின்றன. “புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி யிருக்கிறது. தமிழ் மொழியை அழிந்துவிடாமல் காப்பாற்றக் குழந்தைகளுக்கு அறிவுரை கூறும் பாடல்கள் பலவற்றை அடுத்துவரும் “மொழி”  என்னும் பிரிவிலே காண்கிறோம் என்று “ஞானம்” சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் திரு. ஞானசேகரன் ஜெயராமசர்மாவின் உணர்வுகள் கவிதை நூலுக்கு வழங்கிய அணிந்துரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    “அன்னைத் தமிழ்மொழிமீது அலாதி கொண்டு பிள்ளைகட்கு தமிழ் மொழிமேல் மோகம்வர யாத்த கவிதை சொல்லனைத்தும் சுகம்தரவே சுந்தரக் கவிதையென்பேன். “மாண்மிகு அம்மாவை மம்மியென்றழைக்கலாமோ?” அருமை வரிகளிட்டு அவசியக் கருத்தை அசத்தியிருக்கின்றீர்” என்று கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தை (பம்மல்) நிறிவியவரும் அதன் பொதுச் செயலாளருமான காவிரி மைந்தன் “உணர்வுகள்” கவிதை நூலில் “சுவைத்தவர்கள் சொல்லுகிறார்கள்” பகுதியில் தனது மனக்கிடக்கையினை வெளிப்படுத்தி இருக்கிறார். கவிதைகளுடன் ஜெயராமசர்மாவால் சிறுவருக்காக ‘மலர்கள்”, “சிரிப்பு” “பொங்கல்”, என்னும் நாட்டிய நாடகங்களும் – “மாமா வருகிறார்”, “நல்ல காலம்” ஆகிய வில்லுப்பாட்டும் படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ஆஸ்திரேலியாவின் குழந்தை இலக்கியத்தில் நாடகம் என்னும் சொல்லினை உச்சரித்தால் அங்கு நிச்சயமாய் வந்து நிற்பவர் மாவை நித்தியானந்தன் அவர்கள்தான். விக்டோரிய மாநிலத்தில் பல தமிழ் பள்ளிகள் இருந்தாலும் மாவை நித்தியால் தொடங்கப்பட்ட “பாரதி பள்ளி” கற்பித்தல், ஒழுங்கமைப்பு, ஆசிரியர் கட்டமைப்பு, தமிழ் ஆர்வம், யாவற்றிலும் முன்னிற்கிறது என்பதுதான் அதன் விசேடம் எனலாம். இருபத்து ஐந்து வருடமாக இயங்கிவரும் இப்பள்ளியில் தமிழ் கற்க பல மாணவர்கள் விரும்பி வருகிறார்கள். அந்த அளவுக்கு நித்தி அவர்கள் நல்ல ஆசிரியராய் நல்ல நிர்வாகியாய் தமிழின்மீது ஆராக் காதல் கொண்டவராய் விளங்குகிறார்.

     “பாப்பா பாரதி” என்னும் இறுவெட்டு இங்குள்ள சிறுவர்களை மையப்படுத்தி முதலில் வெளிவந்த மிகவும் சிறந்த குழந்தை இலக்கிய படைப்பு எனலாம். இதுவரை மூன்று பாகங்கங்களில் “பாப்பா பாரதி” இறுவெட்டு வந்திருக்கிறது. இங்குள்ள சிறுவர்களின் மனங்களில் நித்தியின் இம்முயற்சி பதிந்திருக்கிறது – வெற்றி பெற்றிருக்கிறது என்பதையே காட்டுகிறதல்லவா? சிறுவர்களுக்கென்றே “சட்டியும் குட்டியும்”, “நாய்க்குட்டி ஊர்வலம்”, “சின்னச் சின்ன நாடகங்கள்”, என்னும் நாடக நூல்களையும் நித்தி தந்திருக்கிறார்கள். ஐந்து வயதுமுதல் பத்துவயது வரையும், எட்டு வயது முதல் பதின்மூன்று வயது வரையும், பின் பதின்மூன்று வயதுக்கு மேற்பட்டோர் என்று தனது நாடகங்களை நித்தி அவர்கள் வகுத்துத் தந்திருக்கிறார். வயதுகளைக் குறிப்பிட்டு எழுதியதால் அவ்வவ் வயதினருக்கு ஏற்ற சொற்களை அங்கே அவர் முக்கியத்துவப்படுத்தி இருப்பது அவரிடம் காணப்பட்ட  குழந்தைகளின் உளவியல் அறிவு என்றேதான் கருதமுடிகிறது.

    “சிறுவருக்காக எழுதுவது என்றுமே எனக்கு மகிழ்ச்சியைத் தரும் அனுபவமாக இருந்திருக்கிறது. கணிசமான காலமாக நான் எழுத்துத் துறையில் ஈடுபட்டு அது தரும் ஆத்ம திருப்தியை அனுபவித்து வந்திருந்தாலும், நூல் வெளியீட்டீல் அக்கறை செலுத்தவில்லை. இப்பொழுது எனது சிறுவர் நாடகங்கள் தொகுப்புகள் வெளிவர உள்ளன. அவற்றில் இது முதலாவது. இத்தொகுப்புகள் வயதின் அடிப்படையில் அமைய உள்ளன.

    வளர்ந்தோருக்கான நாடக முயற்சிகளில் ஈடுபட்டிருந்த எனது ஆர்வம் சிறுவர் நாடகத்தின் பால் திரும்பியதற்கு புலப்பெயர்வு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. குழந்தைகள் தமிழ் கற்கவென 1994 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் பாரதி பள்ளியை ஆரம்பித்தேன். இது குழந்தைகள் பற்றிய அறிவையும், அவர்களை விளங்கிக் கொள்ளும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள எனக்கும் ஒரு பள்ளியாயிற்று. ஒவ்வொரு வருடமும் இருநூற்றுக்கு மேற்பட்ட ஆங்கிலத்தை முதன் மொழியாகக் கொண்ட மாணவர்களுக்குத் தமிழிற் பேசி நடிக்க பயிற்றுவித்து அவர்களை மேடையில் காண்பது ஒரு தேவையாக இருந்தது. இருந்து வருகிறது.

    இந்த நாடகங்களை எழுதுகையில் சொற்சிக்கனம், எளிமை, வயதுக்கேற்ற சொற்கோவை ஆகிய அம்சங்களில் கவனம் சுலுத்த முயன்றுள்ளேன். பாடல்களும் ஓசை நயத்துடன் கூடிய வார்த்தைக் கோலங்களும் இந் நாடகங்களில் முக்கியத்துவம் பெறுவதையும் காணமுடியும். இந்த நாடகங்கள் யாவும் பாரதி பள்ளியில் முதல் மேடையேற்றம் கண்டவை. அத்துடன் சிறுவர் சிறுமியரை நன்கு கவர்ந்தமையுமாகும். தமிழிலுள்ள சிறுவர் நாடகத்தின் அகலமும் ஆழமும் மேலும் விரிதல் வேண்டும். வகை வகையான தன்மையில் வித்தியாசப்படும், கலைத்துவம் மிக்க நாடகப் பிரதிகள் பல்வேறு வயதினருக்கும் தேவைப்படுகிறது. இந்தத் தேவைக்கான ஒரு துளி பங்களிப்பாக எனது நாடகத் தொகுப்புகள் அமையுமாயின் அதுவே நான் அடைய விரும்புவதாகும், என்று மாவை நித்தியே குறிப்படுவது இங்கு நோக்கத்தக்கதாகும்.

    வானொலி மாமாவாக மகேசன் அவர்கள் இருப்பதுபோல வானொலி மாமியாக புவனா இராஜரட்ணம் அவரகள் ஆஸ்திரேலியாவில் விளங்குகின்றார். சிறுவர் நாடகங்களை எழுதினார். இசைப்பாடல், நாட்டியப்பாடல், வில்லுப்பாடு என்று இவரின் ஆளுமை ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் இடம் பெற்றது எனலாம். இவரின் வழியிலே ராணி தங்கராசா அவர்கள் மாண வர்களை மையப்படுத்தி நாடகங்கள் எழுதி இயக்கியும் உள்ளார்.இவர்களுடன் திரு சந்திரகாசன் அவர்களும் வந்து நிற்கிறார். இவரும் சிறுவர் நாடகத்தை வளர்பத்தில் பெரும் ஊக்கமுடையவராக விளங்குகின்றார்.

    மெல்பேண் மணி என்று அழைக்கப்படும் கனகமணி அவர்கள் நாடகங்கள், கதைகள், இசைப்பாடல்கள், கவிதைகள், வானொலிச் சித்திரங்கள் என்று பன்முகமாக தன்னை வெளிப்படுத்தி நிற்கிறார். இவரின் “சிறுவர் கதம்பம்”

    “மணியாரம்” என்னும் பல்சுவைக் கதம்ப மாலை “பாசத்தின் வலிமை” என்னும் நூலில் இடம்பெறும் நாடகங்கள் ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் இணைந்து கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

    முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள் சிறுவர்களுக்காக பல கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். அவர் ஒரு சிறந்த ஊடகவிலாளராக இருக்கின்ற காரணத்தால் ஆஸ்திரேலிய குழந்தைகளின் மனநிலையினை நன்கு அறிந்து வைத்து அதற்குத் தகுந்தாற் போல தனது பங்களிப்புக்களை வழங்கிவருகிறார் எனலாம். இங்குள்ள சிறார்கள் கணனியிலேயே தங்களின் பொழுதினை செலுத்திவருவதைக் கண்ணுற்ற முனைவர் சந்திரிகா அவர்கள்

    “சிறுவருக்கான கணனி” என்னும் நூலினை ஆக்கிக் கொடுத்திருக்கிறார். “வர்ணம்” என்னும் பெயரில் ஆஸ்திரேலிய குழந்தைகளுக்கு நல்ல ஒரு கதை நூலினையும் கொடுத்திருக்கிறார். அண்மையில் முனைவர் சந்திரிகா அவர்களினால் “கொசுவீட்டில் பாயசம்” என்னும் வர்ணப்படங்கள் கொண்ட கதை நூல் தொகுத்து வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் முனைவர் சந்திரிகாவும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

    யசோதரா பாரதி சிங்கராயர் பல்மருத்துவர். ஆனால் நடனம், இசை, யாவற்றையும் கற்றுத் தேர்ந்தவர். ஈழத்தில் வாழ்ந்த புகழ்பூத்த தமிழ் புலவர் தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவரின் பேரனின் மகளாவார். இவரின் தந்தையார் சோமசுந்தர பாரதியும் பல்மருத்துவராவார். அதேவேளை இவர் ஒரு வரகவியாகவும் விளங்குகிறார். வாழையடி வாழையென தமிழும் இவர்களுடன் இணைந்தே வந்து கொண்டிருக்கிறது. மருத்துவம் படித்தாலும் மருத்துவத்தில் ஈடுபடாமல் குழந்தைகளை மனமிருந்தி – அவர்களுக்கு தமிழ் கற்பிப்பதிலும், தான் கற்ற இசையை , நடனத்தை, கற்பிப்பதிலும் தன்னை ஈடுபடுத்தி ஆத்மதிருப்தி அடைகின்றார் என்றுதான் சொல்லல் வேண்டும்.

    1997 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு வந்த இவர் சிட்னியிலேயே வாழ்ந்து வருகிறார். சிட்னியிலுள்ள தமிழ் பள்ளியில் பயிலும் சிறுவர்களுக்கு நடனம், நாட்டிய நாடகம், என்று தனது பணியினை மேற்கொண்டு வெற்றியும் ஈட்டி உள்ளார். இவரால் 400 க்கு மேற்பட்ட சிறுவர் நாட்டிய நடன நிகழ்ச்சிகள் மேடையேற்றப் பட்டிருக்கின்றன. மூன்று வயது தொடக்கம் பதினாறு வயது வரைக்குமான குழந்தைகளை மையப்படுத்தி இவரின் செயற்பாடுகள் இன்றும் சிட்னியில் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

     “பரா ஒலம்பிக் 2000” சிட்னியில் நடைபெற்ற வேளை 68 குழந்தைகளை நடன நிகழ்வும், கிருஷ்ண அவதாரங்களைக் காட்டும் நாட்டிய நாடகமும் இவரின் ஆற்றலை யாவரும் அறியப் பண்ணியது எனலாம். 6 வயது தொடக்கம் 10 வயதுவரையுள்ள  52 குழந்தைகளை வைத்து வீதியிலே காவடி நடனம் ஆடச்செய்து யாவரையும் பிரமிக்க வைத்தார். “கார்த்திகை மாலை”,  “சுனாமி”, “கிருஷ்ண வதாரம்”, என்பன ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்துக்கு வலுச் சேர்க்கும் பாங்கில் அமைந்திருக்கின்றன என்பதுதான் உண்மையெனலாம்.

     “புலம்பெயர்ந்த ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள குழந்தைகள் தொலைக் காட்சிகளைப் பார்ப்பதும், வீடியோ விளையாட்டுக்களில் ஈடுபட்டு அதனையே வெறித்துப் பார்த்துக்கொண்டும் கெடும் குழந்தைகள் எண்ணிக்கை கூடுதலாகவும், பெற்றோரின் பங்கெடுப்பு குடும்பநேரங்களில் குறைந்தபடியாலும் , பல வித்தியாசங்களை உணர்ந்தேன். இந்த நிலையை நாட்டியங்கள், நாட்டிய நாடகங்கள், மூலம் மாற்றி என்னிடம் பயிலும் மாணவர்கள் மத்தியில் வெற்றியும் கண்டுள்ளேன். நடனப் பயிற்சியின் முன் கதையாக அந்த நடனக் காட்சிகளை சொல்லிக் கொடுப்பேன். பெற்றோர் சில பேருக்கும் கதைகள் பல சொல்லிக் கொடுக்க வேண்டிய நிலையும் உள்ளது.இதனால் குழந்தைகள் அந்தக் கதைகளை தாங்களாகவே ஆராய்ந்து படிக்கும் ஆர்வம் தூண்டப்படுகின்றது. என்னைச் சில பேர் கேட்பார்கள் – நல்ல பாட்டிமாதிரி கதை சொல்லிக் கொடுக்கிறீர்கள் என்று ….. அது எனக்கு பெரிய திருப்தியைக் கொடுக்கும். ஆம் நான் அந்த பாட்டியின் இடைவெளியை நிரப்பும் திருப்திதான் அது. இவ்வாறு யசோ அவர்கள் தன்னுடை அனுபவத்தை வெளிப்படுத்தி நிற்கிறார். இவரின் இப்படியான முயற்சிகள் ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்துக்கு நல்லதோர் பக்க பலம் என்றே எண்ண முடிகிறது.

    மாத்தளைச் சோமு அவர்கள் நாடறிந்த நல்ல எழுத்தாளர். இவர் பல படைப்புகளை சிறுவர் அல்லாதவர்க்கே வழங்கி வந்திருக்கிறார் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவருள்ளும் ஒரு குழந்தைகள் உலகம் இருந்திருக்கிறது என்பதை இவரின் குழந்தை களுக்கான கவிதைகளும், குட்டிக்கதைகளும், காட்டி நிற்கின்றன. ஆஸ்திரேலியாவில் சிட்னியில் வாழும் இவர் “தமிழ் ஓசை” என்னும் சஞ்சிகையின் ஆசிரியராக விளங்குகிறார். சுட்டி விகடன், தினமணி – சிறுவர் கதிர், ரத்தினமாலா போன்ற பத்திரிகையில் குழந்தைகளுக்கான கவிதைகள், குட்டிக்கதைகளை எழுதிக்கொண்டு வருகிறார். “ஆஸ்திரேலிய ஆதிவாசிக்கதைகள்”  என்று ஒரு கதை நூலினை 2012 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் வெளியிட்டார். இக்கதைகள் பெரியவர்களுக்கு என்று படைக்கப்பட்ட போதும் – இதில் ஏறத்தாள பத்துக்கதைகள் சிறுவர்களுக்கு ஏற்றனவாக இருக்கிறது என்று மாத்தளைச் சோமுவே கூறுகின்றார். இந்தியப் பத்திரிகைகளில் இவரின் குழந்தைகள் பற்றிய படைப்புகள் வெளிவந்தாலும் – அவைகள் அனைத்துமே ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்துக்கும் வலு சேர்க்கும் வகையிலேயே அமைந்திருக்கிறது என்பதுதான் முக்கியமாகும். தான் குழந்தைகளுக்காக படைத்த அனைத்தையும் தொகுத்து விரைவில் நூலாக வெளியிட இருபதாகவும் என்னிடம் தெரிவித்தார்.

    மாத்தளைச் சோமு அவர்களைப் போல நல்ல எழுத்தாளர்தான் திரு முருகபூபதி அவர்கள். இவர் மெல்பேண் நகரில் வாழ்கிறார். இவரும் சிறுவர்கள் அல்லாதவர்க்கே பலவற்றையும் படைத்தளித்தார். என்றாலும் தனது சிறிய பராயத்தில் தனது பாட்டி தனக்குச் சொன்ன கதைகளை அவரால் மறந்துவிடவே முடியவில்லை. பாட்டிகள்தான் உண்மையில் குழந்தை இலக்கியத்தின் முன்னோடிகள் என்பதை முருகபூபதி நம்பினார். அதனால் புலம்பெயர்ந்த ஆஸ்திரேலிய நாட்டில் வளரும் எங்களின் தமிழ்க் குழந்தைகளை மனமிருத்தி “பாட்டி சொன்ன கதைகள்” என்னும் சிறுவருக்கான கதை நூலினை வெளியிட்டுவைத்தார். பன்னிரண்டு கதைகள் கொண்ட இந்தக் கதைநூல் இங்குள்ள சிறுவர்கள் படித்து பயன் பெற உதவியாய் அமைகிறது.

    இவர்களின் வழியிலே உஷா ஜவகர் அவர்களும் இணைந்து கொள்ளு கின்றார். “குறும்பபுக்கார இளவரசியும் கனிவான தேவதையும்”, “மாயக்கிழவியின் மந்திரம்”, “அதிசய உயினங்களைப் பற்றிய அரிய செய்திகளும் கதைகளும்”, ஆகிய நூல்களை அளித்து ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் தனக்கு ஒரு அடையாளத்தை இவர் எடுத்துக் கொள்ளுகிறார் எனலாம். வர்ணப் படங்கள். பெரிய எழுத்துக்கள். பளிச்சிடும் காகிதம். கவர்ச்சியான வசனங்கள். குழந்தைகள் மனம்விரும்பும் தலைப்புகள். இவைகள் அனைத்துமே உஷா ஜவகர் அவர்கள்  குழந்தைகளின் உளவியலை நன்கு தெரிந்தவர் என்பதையே காட்டுகிறது எனலாம்.

    “பாப்பா பாரதி” என்னும் இசைவடிவான இறுவெட்டு ஆஸ்திரேலிய குழந்தைகளுக்காக வெளிவந்து பல ஆண்டுகள் கடந்து நிற்கும் நிலையில் 2013 ஆம் ஆண்டில் “மலரும் மொட்டுகள்” என்னும் இசைவடிவான இறுவெட்டு வெளிவந்திருக்கிறது. சங்கீத பூஷணம் திருமதி பொன்னம்மா சத்தியமூர்த்தி அவர்களின் நெறியாள்கையில் இது வெளிவந்திருக்கிறது.

    சிறுவர்களுக்காக வெளிவந்த பாடல்களுக்கும், புதிய பாடல்களுக்கும் இசைவடிவம் கொடுத்து சிறுவர்களின் அபிநயத்துடன் வெளிவந்திருப்பதே மிகவும் சிறப்பான அம்சம் எனலாம்.” ஆஸ்திரேலியாவில் வளருகின்ற குழந்தைகளுக்கு நல்லறிவையும், நமது கலாசாரத்தையும், ரசனையுடன் புரிந்து கொள்ளவும், தாய்மொழியான தங்கத் தமிழை வளர்த்துக் கொள்ளவும் நல்ல சிறுவர் பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு மெட்டு அமைத் திருக்கின்றார்.” என்று இசை இறுவெட்டு பற்றி ஆஸ்திரேலியாவின் மிருதங்க வித்துவான் திரு ரவி ரவிச்சந்திரா விதந்து பாராட்டியமை மனங் கொள்ளத் தக்கது எனலாம்.

    புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியா வந்தாலும் தங்களின் வருங்கால சந்ததிகளை தங்களின் மொழி, பண்பாடு, மறவாமல் வளரப்பண்ணல் வேண்டும் என்னும் அவா இங்குள்ள தமிழ்ப் படைப்பாளிகள் அனைவரிடமும் மேலோங்கி இருக்கிறது என்பதையே இதுவரை நாம் பார்த்தோம். எவ்வளவுதான் இலக்கியப் படைப்புகள் படைத்தாலும் – குழந்தைகளுக்கான இலக்கியம் வளர்ச்சியடையாவிட்டால் அங்கு பூரணத்துவம் வந்துவிடாது என்பதை ஆஸ்திரேலிய படைப்பாளர்கள் முழுமையாகவே நம்புகிறார்கள். இதனால் குழந்தை இலக்கியத்தை எப்படியெல்லாம் ஆஸ்திரேலியாவில் மேலும் வளர்ச்சி அடையச் செய்யலாம் என்று சிந்தித்தும் செயலாற்றிக் கொண்டுமே இருக்கிறார்கள். அந்தவகையில் ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தினுள் இன்னும் பல புதிய படைப்பாளிகளும், ஆர்வலர்களும் இணைந்து கொள்ள காத்திருக்கிறார்கள் என்னும் இனிப்பான நல்ல செய்தினை வழங்கி நிற்பதில் பெருமகிழ்வு அடைகின்றேன்.

    Share
  • கழல் தொழுதல் முறையல்லவா !

    கழல் தொழுதல் முறையல்லவா !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், அவுஸ்திரேலியா

    உண வூட்டும் கையதனை
    உதறி நிற்கும் உள்ளங்களே
    மன முடைந்து நிற்கின்ற
    நிலை யுமக்குத் தெரியலையா
    தின மும்மை கண்விழித்து,
    கண நேரம் பிரியாமல்
    பிணி யனைத்தும் தான்சுமந்த
    சுமை தாங்கி நினைவிலையா!

    அணி மணிகள் கண்டாலோ
    துணி வகைகள் பார்த்தாலோ
    வகை வகையாய் வாங்கிவந்து
    வடி வாக்கும் மனமல்லவா
    இரவு பகல் தெரியாது
    எதையும் தனக் காக்காது
    நில வுலகில் உமைமட்டும்
    நினைத்த மனம் கலங்கலாமா!

    கண் இருந்து நீர்வடிந்தால்
    புண் ணாகிப் போம்மனது
    தண் நீரும் பருகாமல்
    தான் உருகும் மனதங்கே
    மண் மீது வந்தசெல்வம்
    என் றெண்ணி வாழுமந்த
    கண் கண்ட தெய்வத்தின்
    கழல் தொழுதல் முறையல்லவா!

    (குறிப்பு: ஆஸ்திரேலியாவிலுள்ள முதியோர் அமைப்பு ஒன்றின் விழாவுக்குச் சென்று உரை ஆற்றிய வேளை, என் மனத்தில் எழுந்த எண்ணமே இக்கவிதை. அவர்களின் முன்னால் கண்களில் நீர்முட்ட உரையாற்றும் நிலை ஏற்பட்டது. அந்த உள் உணர்வினால் உடனே எழுதியதே இக்கவிதை.)

    Share
  • ஈழத்தில் திருப்பாவையும் ஆண்டாளும் ஒரு நோக்கு

    ஈழத்தில் திருப்பாவையும் ஆண்டாளும் ஒரு நோக்கு

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, 
    மெல்பேண், அவுஸ்திரேலியா. 
    முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர். 
    
    

    “மாதங்களில் நான் மார்கழி” என்று கீதையில் கண்ணன் கூறுகிறான். அந்த வாக்கை வைணவர்கள் மனங்கொண்டு மார்கழி முழுவதையும் வழிபாட்டுக்கு உரிய மாதமாக்கி விட்டார்கள் என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. மார்கழி என்றதும் சுப நிகழ்ச்சிகளைச் செய்வதை பொதுவாகவே இந்துக்கள் தவிர்த்துக் கொள்ளுகிறார்கள். இந்த நிலை ஈழத்திலும் காணப்படுகிறது. திருமணம், வீடு குடுபுகுதல், காதுகுத்தல், ஏடுதொடக்குதல் முதலான சுப விஷயங்களை மார்கழியில் செய்வதை தவிர்த்து விடுகிறார்கள். அப்படித் தவிர்ப்பதற்கு அவர்கள் கூறும் காரணம் – மார்கழி பீடை பிடித்த மாதம் என்பதே ஆகும். ஆனால் உண்மையில் மார்கழி பீடுடைய மாதமே என்பதை மனமிருத்தத் தவறி விடுகின்றனர்.

    மார்கழி தேவ வழிபாட்டுக்கு உகந்த மாதம் என்பதாலேயே அதில் மக்களுக்கான விழாக்களைத் தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மையாகும். மார்கழியில்த்தான் திருப்பாவை, திருவெம்பாவை, பாடப்படுகிறது. ஆருர்த்தா தரிசனம், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறத்தல், போன்ற முக்கிய தெய்வ வழிபாடுகள் இடம்பெறுகின்றன. இந்தவகையில் மணிவாசகப் பெருமானும் ஆண்டாள் நாச்சியாரும் சைவர்களாலும், வைணவர்களாலும் ஏற்றிப் போற்றி வணங்குதலுக்கு ஆளாகி இருப்பதையும் காண்கின்றோம்.

    மணிவாசகப் பெருமானின் திருவெம்பாவை பற்றி ஈழத்தவர்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும். ஈழத்தில் இருக்கும் சைவக் கோவில்கள் பெரியனவாக இருந்தாலும், சிறியனவாக இருந்தாலும், அங்கெல்லம் மார்கழியில் திருவெம்பாவை மிகவும் பக்திபூர்வமாக அனுஷ்டிக்கப்படும். காலையில் அதுவும் மிகவும் அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சியுடன் ஆரம்பித்து திருவெம்பாவை பாடல்முழுவதும் பாடி கோவிலில் பூஜை வழிபாடு நிறைவு பெறும்.

    சைவ ஆலயங்களான அனைத்து ஆலயங்களிலும் இந்த நடை முறை நீண்ட காலமாகவே நடைபெற்று வருவதை யாவரும் அறிவர். அதேவேளை விஷ்ணு ஆலயங்களில் திருவெம்பாவைக்குப் பதிலாக திருப்பாவை பாடப்படும் முறை காணப்படுகிறது. திருவெம்பாப் பாடல்களை பெரும்பாலான சைவர்கள் அறிந்தளவும் திருப்பாவையினை அறிந்தவர்களாக இல்லை என்பது முக்கிய விஷயமாகும். அதேநேரம் மணிவாசப் பெருமானை அறிந்ததுபோல் ஆண்டாள் நாச்சியார் அதிகளவில் அறியப்படவில்லை என்பதும் நோக்கத் தக்கதாகும்.

    ஈழத்தில் பல பாகங்களிலும் விஷ்ணு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அங்கெல்லாம் பூஜைகளை ஆற்றுகின்றவர்கள் பெரும்பாலும் சிவப்பிராமணர்களே என்பது இங்கு முக்கியமாக நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஈழத்தில் சைவமே நிறைந்து காணப்படுகிறது. வைஷ்ணவம் என்னும் பெயர் படித்தவர்கள் மட்டத்தில் தெரிந்தளவு பாமர்களிடம் சென்றடையவில்லை என்றுதான் கொள்ளவேண்டி இருக்கிறது. வைஷ்ணவ சம்பிரதாயங்கள் இந்தியாவில் இருப்பது போன்று ஈழத்தில் இல்லை என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். வடகலை, தென்கலை, நாமம் இடுதல், என்றால் பெரும்பாலான ஈழத்தவர்களுக்கு விளங்குமா என்பது ஐயமேயாகும். இந்த நிலையில் வைஷ்ணவ அடியவாராய் விளங்கும் ஆண்டாள் நாச்சியார் பற்றியும் அநேகம் பேர் அக்கறை காட்டும் நிலையிலும் இல்லை என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. மணிவாசகப் பெருமானை அறிந்து வைத்திருக்கும் அளவுக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடியை அறிந்திருப்பவர் மிகவும் குறைவாகவே காணப்படுகிறார்கள்.

    பல்கலைக்கழகத்தில் தமிழை, இந்துநாகரிகத்தைப் படிக்கும் மாணவர்களும் படிப்பிக்கும் ஆசிரியர்ளும் பாடத்துக்காக ஆண்டாள் நாச்சியாரையும் அவரது திருப்பாவையும் அவரின் படைப்புக்களையும் அவர்பற்றிய வரலாற்றையும் அறிந்து வைத்திருக்கிறார்களே அன்றி மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு மிகவும் அரிதாகவே இருக்கிறது என்பது மிகவும் முக்கிய விஷயமாகும்.

    யாழ்ப்பாணம் முழுவதும் நாவலர் கலாசாரம், கநதபுராண கலாசாரம் நிறைந்த இடமாகும். இங்குள்ள கோவில்கள் பெரும்பாலும் ஆகமவிதிப்படி பூஜைகள் நடைபெறும் சைவக் கோவில்களேயாகும். ஆனால் பொன்னாலை வரதராஜப் பெருமாள், வல்லிபுர ஆழ்வார், யாழ்நகரில் உள்ள பெருமாள் கோவில், தற்பொழு இணிவிலில் புதிதாக அமைக்கப்பட்ட இணுவில் திருப்பதி கோவில் யாவும் விஷ்ணு கோவில்களே ஆகும். விஷ்ணு கோவிலாக இருந்தாலும் வைஷ்ண பட்டாச்சாரியார்கள் இங்கு பூஜை ஆற்றுவதில்லை. இங்கு பூஜை ஆற்றுகிறவர்கள் யாவருமே சிவப் பிராமணர்களே என்பது நோக்கத்தக்கதாகும்.

    ஈழத்திலுள்ள விஷ்ணு ஆலயங்களில் சிவப்பிராமணர்களும், சைவர்களும் இருந்தாலும் மார்கழியில் அங்கெல்லாம் ஆண்டாள் நாச்சியாரின் வடிவங் கொண்ட சிலை உள்வீதியில் பக்தியுடன் வலம் கொண்டுவரப்பட்டு ஸ்ரீரங்க நாதர் முன்னே வைக்கப்பட்டு திருப்பாவை இன்றளவும் காலைப் பூஜையின் பொழுது பாடப்பட்டு வருகிறது என்பது முக்கிய அம்சம் எனலாம்.

    வைஷ்ணவம் என்பது சமயபாடப் புத்தகத்தில் படிக்கும் அளவுக்கு ஈழத்தில் இருக்கிறதே அல்லாமல் சைவம் போன்று மக்களால் கடைப்பிடிக்கும் அளவுக்கு இல்லை என்பது மனங் கொள்ளத்தக்கதாகும்.

    திருமுறைகளும், நாயன்மார்களும் அறியப்பட்டளவுக்கு ஆழ்வார்களும் அவர்களது பாசுரங்களும் பொதுமக்களிடம் சென்றடையவில்லை என்றுதான் கருதவேண்டி இருக்கிறது. அதற்குக் காரணம் ஈழத்தில் சைவம் பெற்ற முக்கியத்துவமே எனலாம். அறுபத்து மூன்று நாயன்மார் பெற்ற முக்கியத்துவத்தை பன்னிரு ஆழ்வர்களும் ஈழத்துப் பெரும்பாலான மக்களிடம் பெற்றிருக்கிறார்களா என்பது ஐயத்துக்கு உரியதாகவே இருக்கிறது. பெரிய புராணம் கோலோச்சிய அளவுக்கு, கந்தபுராணம் போற்றப்படும் அளவுக்கு  வைஷ்ணவ ஆழ்வார்களும் அவர்களது திருப்பாசுரங்களும் அறியப்பட்டிருப்பது மிகவும் குறைவென்றே கொள்ள வேண்டி இருக்கிறது.

    சமயச் சொற்பொழிவாற்றுகின்ற பெரியவர்கள்கூட சைவ இலக்கியங்களையும், சைவ மேன்மைகளையும் எடுத்துச் சொல்லுவார்களே அன்றி வைஷ்ண சம்பிரதாயங்களையோ அல்லது வைஷ்ணவ ஆழ்வார்களையோ பற்றியோ சொல்லுவது மிகவும் அரிதாகும். மணிவாசகர் மன்றம், மணிவாசகர் சபை என்றெல்லாம் அமைத்து அதன்மூலம் போட்டிகளும் பரிசுகளும் அளித்து மார்கழியில் வீதிகளில் மணிவாசகரின் திருப்பள்ளி எழுச்சி திருவெம்பா பாடல்களைப் பாடும் அளவுக்கு – ஆண்டாள் நாச்சியாரோ அவரது திருப்பவையோ இடம்பெற்றதாகத் தெரியவில்லை.

    நாயன்மார்களைப் போற்றும் முகமாக குருபூசைத்தினம் என்று அமைத்து கோவில்களிலும், பாடசாலைகளிலும், சிறப்பான பூஜை வழிபாடு செய்யும் அளவு வைஷ்ணவ ஆழ்வார்களுக்கோ குறிப்பாக ஆண்டாள் நாச்சியாருக்கு ஈழத்தில் செய்யப்படுவது அரிதென்றே சொல்லலாம்.

    யாழ்ப்பாணத்தில் புதிதாக இணிவிலில் திருப்பதி என்னும் பெயரில் விஷ்ணுவுக்கு பெரியதொரு கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு விநாயகர் தொடக்கம் விஷ்ணுவரை மிகவும் பிரமாண்டமான சிலா விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இக்கோவிலில் ஆண்டாள் நாச்சியாரிக்கும் ஒரு சன்னிதானம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு செல்லும் அடியவர்கள் ஆண்டாள் நாச்சியாரையும் வணங்கியே செல்லுகிறார்கள்.

    விஷ்ணு ஆலயங்களில் ஆண்டாள் நாச்சியார் வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் வழிபடச் செல்லும் அடியார்களுக்கு சரியான விளக்கம் இல்லாத காரணத்தால் விஷ்ணு கோவில் செல்பவர்கள் ஆண்டாள் பற்றிக் கவனம் செலுத்தத் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பதும் நோக்கத்தக்கது. வல்லிபுரக் கோவிலில் திருமண்ணும் திருநீறும் வழங்கப்படுகிறது. விஷ்ணு ஆலயமாக இருந்தாலும் சிவனும் விஷ்ணுவும் இங்கு பிரித்துப் பார்க்கும் விதத்தில் வழிபாடு அமையவில்லை என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது.

    ஆண்டாள் நாச்சியாரின் தமிழ் அமுதத் தமிழ். அவரின் பக்தி அளவிடமுடியாத பக்தி. ஈழத்தில் சைவத்தின் உச்சத்தால் வைஷ்ணவ அடியரான ஆண்டாள் நாச்சியாரை சாதாரண மக்கள் அறியும் வாய்ப்புக் கிட்டவில்லை என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது.

    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
           நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
    தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
            ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
    பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
          தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
    வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
        நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

     

    Share
  • திருவிளக்குத் திருவிழா – ஒரு நோக்கு

    திருவிளக்குத் திருவிழா – ஒரு நோக்கு

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா
    தமிழ்மொழிக் கல்வி முன்னாள் இயக்குநர் 
    
    

    ‘ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே’ என்று இறைவனை மனமெண்ணி துதிப்பதும், பிரார்த்தனை செய்வதும், பாடுவதும், ஆடுவதும், நடைமுறையில் இருந்து வருகிறது. இறைவனைக் கண்டோமா என்றால் அதற்குச் சரியான பதிலை எம்மால் சொல்லிவிட முடியாமலே இருக்கிறோம். ஆனாலும் இறைவன் இருக்கிறான் என்பதைப் பலரும் நம்பியே இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இறைவனை கல்லிலும், செம்பிலும், மண்ணிலும், மரத்திலும், பொன்னிலும், நிலத்திலும், நீரிலும், காற்றிலும், தீயிலும், ஒளியிலும் ஒலியிலும், மழையிலும், இடியிலும், என்று பலநிலையில் காண முற்படுகின்றோம். இந்த வகையில் ஒளிவடிவில் இறைவனை மனமிருத்தும் தத்துவார்த்தமான விழாவாக விளங்குவதுதான் கார்த்திகை மாதத்தில் வருகின்ற’ திருவிளக்குத் திருவிழா’ எனலாம்.

    தீபத்திருவிழா என்றதும் ‘தீபாவளி’ பண்டிகைதான் எங்கள் மனதில் வந்து முதலில் நிற்பதாகும். உண்மையில் கார்த்திகையில் வருகின்ற விழாவினைத்தான் ‘தீபாவளி’ என்று கொள்ளுதல் வேண்டும் என்னும் ஒரு கருத்தும் இன்று பரலாகி வருகிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும். தீவ + ஆவலி என்றால் தீபங்களை வட்டமாக வைப்பதாகும். கார்த்திகை விழாவிலும் தீபங்கள் வரிசையாயும் வட்டமாயும் வீட்டு வாசல்களில் வைக்கப் படுகிறது. கோவில்களிலும் வைக்கப் படுகிறது. எனவே கார்த்திகையில் வருகின்ற’  திருவிளக்கு விழாவினை ‘தீப ஒளித் திருநாள்’ என்றால் பொருந்தாதா என்று கேட்கும் நிலையும் உருவாகி வருகிறது என்பதும் மனமிருத்த வேண்டிய கருத்தாக இருக்கிறதல்லவா?

    தீபாவளி எனும்பொழுது ஆணவம் அடங்கிய நிலை அடையாளப் படுத்தப்படுகிறது. கார்த்திகை தீபத்திருவிளக்கு விழாவும் ஆணவம் அடங்கிய நிலையினயே காட்டி நிற்கிறது. தீபாவளியில் திருமால் இணைக்கப்படுகிறார். கார்த்திகை தீபத்திருவிளக்கு விழாவில் சிவன் இணைக்கப்படுகிறார். சிவன் என்பதோ திருமால் என்பதோ முக்கியமல்ல. இறை என்பதுதான் இங்கு முக்கியமாகும். அதாவது ஆணவம் அடங்கினால் இறையின் தரிசனம் கிடைக்கும் என்பதுதான் இதன் உண்மையான தத்துவமாக பொதிந்து கிடக்கிறது எனலாம்.

    அடிமுடி தேடிய வரலாறு, ஆறுமுகப் பெருமான் தோன்றிய வரலாறு, என்று பல வரலாறுகள் கார்த்திகை திருவிளக்குத் திருவிழாவுடன் தொடர்பு படுத்தப்படுகிறது. இங்கெல்லாம் முக்கியத்துவம் பெற்று நிற்பது ஒளியேயாகும். அடி முடி வரலாற்றில் இறைவன் ஜோதிப் பிழம்பாக வந்தார் என்பதும், ஆறுமுகன் வரலாற்றில் இறைவனின்  நெற்றிக் கண்ணில் தோன்றிய ஒளிப் பொறியே ஆறுமுகனாக கொள்ளப் பட்டார் என்றும் கருதும் நிலையில் ஒளிதான் முக்கியம் பெற்று நிற்கிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    ஆதிகாலத்து மனிதன் வாழ்க்கையில் ஒளி மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக அமைந்தது. இருளைக் கண்டால் பயந்த மனிதன் ஒளியைக் கண்டபொழுது உவகை உற்றான். ஒளி எப்படி வருகிறது என்பதை அவனால் அறிய முடிய வில்லை. இதனால் ஒளி என்பது உயர்வானது என்னும் கருத்து அவனின் உள்ளத்தினுள் இறுக்கமாய் அமர்ந்து கொண்டே விட்டது எனலாம். மனித வரலாற்றில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியின் பின்னர் அறம் என்றும் நீதி என்றும் கடவுள் என்றும் சமயம் என்றும் ஏற்பட்ட பின்னரும் கூட ஒளியின் இருக்கை என்பதும் முக்கியத்துவத்தை இழக்காமலே தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அதன் நிலையினையே கார்த்திகை திருவிளக்குத் திருவிழாவாக மாறியிருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

    இந்து சமயத்தில் விளக்கு என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்று நிற்கிறது. எந்தவொரு நிகழ்ச்சியானாலும் விளக்கு இல்லாமல் அந்த நிகழ்ச்சி இடம்பெறவே மாட்டாது. மங்கலம் என்னும் அரிய கருத்து விளக்குடன் இணைக்கப்பட்டே விட்டது. விளக்கினை சகல செல்வங்களும் தரும் இலக்குமி ஆகவே ஆக்கியும் விட்டார்கள். இறைவழி பாட்டில் ஒளியின் இடம் மிகவும் இன்றியமை யாததாகும். ஒளியின் அடையாளங்களாக பல விளக்குகள்  கோவில்கள் தோறும் இருக்கின்றன. இறைவனுக்கு நடைபெறும் பூசையின் பொழுது காட்டப்படும் பலவித தீபங்கள் அனைத்துமே ஒளியின் வெளிப்பாடே எனலாம்.

    கார்த்திகைத் திருவிளக்குத் திருவிழா என்றால் எல்லோர் எண்ணங்களிலும் திருவண்ணாமலைதான் முன்வந்து நிற்கும். அங்குதான் இவ்விழா மிகவும் பக்திபூர்வமாக நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்ல பஞ்சபூத தலங்களில் அக்கினிக்குரிய தலமாகக் கொள்ளப் படுவதும் திருவண்ணாமலைத் தலமேயாகும். அக்கினிக்கான தலத்திலே கார்த்திகைத் திருவிளக்கு விழாவினைச் செய்வதுதான் மிகவும் பொருத்தம் என்னும் ஐதீகம் தொடர்ந்து கொண்டே வருவதால் திதுவண்ணாமலைக் கார்த்திகைத் தீப விழா இந்துக்களின் முக்கிய சமயவிழாவாக அமைந்து விட்டது.

    திருவண்ணாமலையின் உச்சியில் மிகப்பெரிய தீபம் ஏற்றப் படுகிறது. மூன்று தொடக்கம் நான்கு நாட்கள்வரை எரியும் இத்தீபம் அறுபது மீட்டர்வரை ஒளியினைக் காட்டி நிற்கும். அண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகைத் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம் ஆகும் எனலாம். இத்தீபங்கள் ஏற்றப் படுவதால் பலனுண்டா என்னும் வினாவும் இல்லாமல் இல்லை. இந்து சமயத்தில் நம்பிக்கைகள் பல இருக்கின்றன. ஆனால் மூட நம்பிக்கைகளை விதைக்க முற்படுவதால்த்தான் கடவுளையோ சமயத்தினையோ கேள்விக்கு ஆளாக்கும் நிலை ஏற்படுகிறது எனலாம். எக்காரியத்துக்கும் அர்த்தம் இல்லாமல் இந்துசமயம் இருக்கவில்லை என்பது மனமிருத்த வேண்டிய கருத்தாகும். அர்த்தத்தை மக்கள் மனதில் அமர்த்திட அங்கு இறை நம்பிக்கையை இணைத்திருக்கிறது என்பதை விளங்கிக் கொண்டால் எந்தச் சிக்கலுக்கும் இடமிருக்காது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

    பெருந்தீபங்கள் ஏற்றுவதால் புயல் தோன்றுவது தடுக்கப்படும் என்றும் அப்படிப் புயல் தோன்றுமாயின் அதன் வேகம் தணிக்கப்படும் என்று நம்பப் படுகிறது. திருவிளக்குகள் ஆன்மாவுக்கும் ஆண்டவனுக்கும் இடையில் உள்ள இணைப்பை உணர்த்தி நிற்கின்றன. விளக்கில் எரிகின்ற சுடரானது  நமக்கு நன்றாகத் தெரியும் புறத்தோற்றமாகும். ஆனால் அந்தச் சுடரானது  எண்ணெயை மெல்ல மெல்ல கிரகித்தே எரிகிறது என்பது நாமுணரவேண்டிய அகத் தோற்றமாகும். வாழ்க்கையில் தெளிவான புறத்தோற்றத்தையும் அதற்கு அடிப்படையான நுட்பமான புறத்தோற்றத்தையும் உணர்ந்து செயற்பட வேண்டு என்பதை  எடுத்துக்காட்டி நிற்பதே தீபவளிபாட்டின் உட்கருத்தாகும்.

    மிருகத்துடன் காட்டில் வாழ்ந்த மனிதன் நாளடைவில் காட்டைவிட்டு நாட்டுக்கு வருகிறான். நாட்டினை உருவாக்கி தனது வாழ்வினை வளமாக்குகின்றான். அவ்வழியில் சமயம் முகிழ்க்கிறது. கடவுள் நம்பிக்கை எழுகிறது. மனிதனே தனக்கான வழிபாட்டு முறைகளை உருவாக்குகிறான். இங்குதான் நம்பிக்கை என்பது தலைமை வகிக்கிறது. அந்த நம்பிக்கைதான் கடவுளையே தோற்றுவிக்கிறது. நம்பிக்கையின் அடிப்பபடையில் பல கதைகள் உருவாகின்றன. அக்கதைகள் நம்பக்கூடியனவா நம்ப முடியாதனவா என்பது விவாதம் அல்ல. அக்கதைகள் மனிதனை நல்வழிப் படுத்த உதவியாய் அமைந்தன என்பதை மறுத்துவிட முடியாது.

    இந்த வகையில் உருவான பல புராணங்களை விமர்சனம் செய்வதோ அல்லது கிண்டல் கேலி செய்வதோ பொருத்தம் உடையதாகத் தெரியவில்லை. தத்துவங்களை அப்படியே சொன்னால் ஏற்றுக் கொள்ளுவது என்பது மிகவும் கடினமாகும். அதனால் சாதாரண மக்களும் விளங்கிக் கொள்ளும் வண்ணம் உண்மைகளும் தத்துவங்களும் நல்லவடிவில் கதை என்னும் வடிவமாக்கப்படும் தேவை அவசியமானது. அந்தவகையில் கார்த்திகை திருவிளக்கு விழா பற்றி புராணக்கதைகள் பல இருக்கின்றன. அவற்றை நம்புவதா? அப்படியெல்லாம் நடக்குமா? என்றெல்லாம் எண்ணும் பாங்கினை விட்டுவிட்டு மனித வாழ்வினை வையத்துள் வாழ்வாங்கவாழ உதவும் நல்ல கருத்துக்களை சமயத்தின் ஊடாகவும் இறையென்னும் மெய்பொருளின் ஊடாகவும் காண்பதும் கருத்திருத்துவதுமே பண்புடை செயலாகும். அந்தவகையில் கார்த்திகைத் திருவிளக்கு விழாவினை மனமிருத்துவோம்! ஒளிமயமாக இறைவனைக் காண்போம். ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்பார்த்து இருப்போம். ஜோதிப் பிழம்பாக இறையினைக் காணுவோம்!

     
    Share
  • (Peer Reviewed) ஐயப்ப வழிபாட்டின் முக்கியத்துவம்

    (Peer Reviewed) ஐயப்ப வழிபாட்டின் முக்கியத்துவம்

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஐயப்பனது வழிபாடு இன்று யாவராலும் மேற்கொள்ளப்படும் வழிபாடாக விளங்குகிறது. இந்த வழிபாடு இடைவிட்டு வந்த ஒன்றா அல்லது தொன்று தொட்டு வந்த ஒன்றா என்னும் வாதப்பிரதி வாதங்களும் சர்ச்சைகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. ஆனாலும் ஐயப்ப வழிபாடு மட்டும் தனது நிலையில் உயர்வு பெற்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வழிபாடாக வளர்ந்து வருவதையே காண முடிகிறது. அதுமட்டுமல்ல யாவரும் இந்த வழிபாட்டில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதில் பெரிதும் விருப்புடையவர்களாக இருப்பதையும் கண்டுகொள்ள முடிகின்றது.

    கந்த புராணம், விஷ்ணு புராணம், பத்ம புராணம், யாவும் ஐயப்ப வழிபாடு பற்றி எடுத்துச் சொல்லுகின்றன. இப்புராணங்கள் தெய்வத்தன்மை மிக்கன. இவற்றில் ஐயப்பன் பற்றிய குறிப்பும் அவரது தோற்றம் பற்றிய விளக்கங்களும் இருக்கின்ற காரணத்தால் ஐயப்ப வழிபாட்டை இடைநடுவில் வந்தது என்று வாதிடுவதோ விமர்சிப்பதோ பொருத்தமற்றதாகி விடுகிறது. இதனால் ஐயப்ப வழிபாடானது தொன்று தொட்டே வந்திருக்கிறது என்றே கருதவேண்டி இருக்கிறதல்லவா!

    ஐயப்பனை தர்மசாஸ்த்தா என்றும் பெயரிட்டும் வழிபடுவர். சாத்தன் என்பது காவலுக்குரிய தெய்வமாக விளங்கியிருக்கிறது. சாஸ்த்தா என்பது சமஸ்கிருதத்தில் வழங்கப்பட்டு, அதுவே தமிழில் சாத்தா என மருவி பின்னர் சாத்தனார் ஆகியது எனவும் வரலாற்றால் அறிய முடிகிறது.

    காவல் தெய்வமாக விளங்கினார் என்பதற்கு அவரின் மற்றொரு பெயரான ‘பூதநாதன்’ என்பதும் பொருந்துவதாக இருப்பதாக வரலாறு சுட்டி நிற்கிறது. விநாயகப் பெருமானைக் கணங்களுக்கு அதிபதி என்ற நிலையில் ‘கணபதி’ என்கிறோம். தேவசேனைகளின் அதிபதியாக விளங்குவதால் முருகப்பெருமானைத் ‘தேவசேனாபதி’ என்கிறோம். ஐயப்பன் பூத கணங்களுக்குத் தலைமை தாங்குவதால் அவரைப் ‘பூதநாதன்’ எனப் போற்றுகிறோம். இதில் இன்னுமோர் அர்த்தத்தையும் நாம் கண்டுகொள்ளலாம். இந்த மனித சரீரமானது பஞ்ச பூதங்களால் ஆனது. எனவே பஞ்ச பூதங்களும்  எந்த நேரமும் மனிதர்களை ஆட்டிப் படைக்கும் வல்லமை பெற்றிருக்கும் அல்லவா? அப்படிப்பட்ட மனிதர்களை அந்தப் பூதங்களிடமிருந்து காத்து இரட்சிக்கும் ஆற்றல் பூதநாதனாகிய ஐயப்பனால் மட்டுமே முடியும் அல்லவா? இதனாலும் பூதங்களை ஆளும் வல்லமை பெற்றவன் என்ற வகையிலும் ‘பூதநாதன்’ என்பது பொருத்தமாகி நிற்கிறதுதானே!

    ஐயப்ப வழிபாட்டில் பல முக்கிய அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. அதன் காரணமாகவும் அந்த வழிபாட்டை அனைவரும் கைக்கொள்ளுகின்றனரோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. ஒரு மண்டலம் என்பது சாதாரண விஷயமல்ல. அந்த ஒரு மண்டலமும் எந்தவிதமான கெட்ட பழக்கங்களையும் மனத்தாற்கூட நினையாமல் ஐயப்ப வழிபாடு நடத்தப்படுகின்றது. இங்கு மனம் தூய்மை அடைவதோடு வாழ்வும் வெளிச்சம் பெறமுடிகிறது எனலாம்.

     ” உற்றநோய் நோற்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை “

    என்னும் வள்ளுவர் வாக்கு இங்கு போற்றப்படும் நிலையே காணப்படுகின்றது. கடைப்பிடிப்பார்கள் செவ்வனே கடைப்பிடித்தால் சிறப்பு வந்து நிற்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இது ஐயப்ப வழிபாட்டின் முக்கியத்துவம் எனலாம்.

    கடவுளர்களில்- பிரம்மச்சாரியாக ஐயப்பன் இருக்கின்றார். அதுமட்டுமல்ல அவரது கைகளிலே எந்தவித ஆயுதங்களும் இல்லை. இது அற்புதமான அமைப்பு அல்லவா? அவரது குழந்தை வடிவமும் புன்சிரிப்பு தவழும் முகலாவண்யமும் பார்ப்பவர் மனத்தைப் பக்குவப்படுத்திவிடும் அல்லவா!

    உலகிலே எங்குப் பார்த்தாலும் சண்டை சச்சரவுகளும் அழிவுகளுமே காணப்படுகின்றன. ஆயுதக் கலாசாரம் என்பது பெருகி அமைதியைக் குலைத்துவிட்டது. இந்த நிலையில் ஆயுதமே கையில் ஏந்தாது அமைதியாயும் சிரிப்போடும் ஐயப்பன் காணப்படுவது அகில உலக அமைதிக்கும் உலகம் தழுவிய சமாதானத்துக்கும் நல்லதோர் எடுத்துக்காட்டு அல்லவா! இதனாலும் இந்த வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

    காமம் என்பதுதான் யாவற்றுக்கும் மூல காரணமாகும். ஐயப்பன் பிரம்மச்சாரியாக விளங்கும் நிலையும், அவரது வழிபாட்டை மேற்கொள்ளும் நிலையில் பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கும் நிலையும் ‘எம்மிடையே உள்ள சிற்றின்பங்கள் அனைத்தையும் போக்கிவிடும்‘ என்பதையே எடுத்துக் காட்டுகிறது. காம எண்ணங்கள் நம்மைவிட்டுப் போய்விட்டால் உலகிலே காணும் யாவுமே ஆனந்த மயமாகவே தோற்றமளிக்கும். அந்த ஆனந்தமும் அற்பமானதல்ல. அது இறைத் தன்மை மிக்கதாகவே இருக்கும். இவையெல்லாம் ஐயப்ப வழிபாட்டின் முக்கியத்துவங்கள் எனலாம்.

    எமக்குள்ளே இறைவன் இருக்கின்றான். அந்த இறைவனை நாங்கள் முயன்றால் கண்டுவிடலாம் என்று ஆன்றோர்கள் கூறுவார்கள். அதற்கு நல்ல தேடல் வேண்டும்.

                             “தேடிக் கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும்

                              தேடிக் காணொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன் “

    என்று அருளாளர் ஒருவர் கூறுகின்றார். இது முற்றிலும் உண்மையானதாகும். இந்த அரிய தத்துவத்தை ஐயப்பன் வழிபாடு மிகவும் இலகுபடுத்தி இருக்கிறது.

    ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வேளை ஒருவராவது மற்றவரைப் பெயர்சொல்லி அழைப்பது வழக்கம் அன்று. ஒருவரை ஒருவர் ‘சாமி’ என்றுதான் அழைப்பார்கள். இதுதான் ஐயப்ப வழிபாட்டின் அதியுச்ச நிலை எனலாம். சாதாரண நிலையில் இருக்கும் ஒருவர் சாமி என்னும் நிலைக்கு வருவதை வேறு எந்த வழிபாட்டிலும் காணவே முடியாது. அதனை ஐயப்ப வழிபாடு ஒன்றே உணர்த்தி நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    மனிதர்கள் பல பிறவிகளிலும் செய்த பாவங்களும், புண்ணியங்களும் அவர்களுக்குப் பெரும் பாரமாகவே பிறவிதோறும் வந்து கொண்டிருக்கும். இவை இரண்டையும் விடும்பொழுதுதான் பிறவியென்னும் பிணி அகலும். இதனையே சைவ சித்தாந்தம் இருவினை ஒப்பு, மலபரிபாகம், சத்தினிபாதம் என்றெல்லாம் சொல்லும். இவை எமக்கும் விளங்குவது சற்றுக் கடினம்தான். ஆனால் ஐயப்ப வழிபாட்டில் இதனை இலகுவாக்கி ‘இருமுடி’ கட்டுதல் என்று வைத்துவிட்டார்கள். இருமுடியில் ஒன்றில் இறைவனுக்கான நிவேதனப் பொருட்களும் மற்றையதில் அடியவர்களுக்கான பொருட்களுமே  அடங்கியிருக்கும். இங்கே இறைவனுக்கானவற்றை புண்ணிய மூட்டை என்றும் மற்றதைப் பாவ மூட்டை என்றும் கொள்ளலாம் அல்லவா? இந்த ஆன்மா ஆனது பாவத்தையும் புண்ணியத்தையும் சுமந்தபடியேதான் இருக்கும். இறைவனிடம் போகும்பொழுது அதுவும் பக்தியுடன் பக்குவமாகப் போகும்பொழுது பாவத்தின் நிலை குறைந்து புண்ணியம் மேலோங்க, ஆன்மாவின் பாரம் குறைவடையும். இந்த அரிய கருத்தே இருமுடித் தத்துவம் என்று ஐயப்ப வழிபாட்டில் காணப்படுகின்றது என்பது மனத்தில் கொள்ள வேண்டிய கருத்தாகும்.

    பகவத் கீதையில் பதினெட்டு அத்தியாயங்கள் இருக்கின்றன. ஐயப்ப தரிசனத்திலும் பதினெட்டுப் படிகள் இருக்கின்றன. பாரதப் போரில் அர்ஜுனன் கலங்கிய கலக்கத்தைத் தெளிவாக்கி இறைத் தத்துவத்தையும் வாழ்க்கைத் தத்துவத்தையும் பகவான் கண்ணன் காட்டியதுவே கீதையென்னும் வேதமாக வந்தது.

    அதே போன்றதுதான் ஐயப்ப வழிபாட்டிலும் பதினெட்டுப் படிகளின் தத்துவமும். முதல் ஐந்து படிகளும் கர்மேந்திரியங்களாகவும், அடுத்த ஐந்து படிகளும் ஞானேந்தியங்களாகவும், அடுத்த நான்கு படிகளும் அந்தக்கரணங்களாகவும், மிகுதி மூன்று படிகளும் முக்குணங்களாகவும் உருவகப்படுத்தப்படுகின்றன. இவற்றைக் கடந்தால் பதினெட்டாம் படியானது இறைதரிசனத்தைக் காட்ட வல்லது என்னும் அதியுன்னதத் தத்துவத்தை, படிகளைக் கொண்டே ஐயப்ப வழிபாடு உணர்த்தி நிற்கிறது என்பது மிகவும் முக்கியமானதாகும்.

    தேங்காயினுள் நெய்விட்டு அதனை ஐயப்ப தரிசனத்தின்பொழுது கொண்டு செல்லும் வழக்கம் இருக்கிறது. தேங்காயில் மூன்று கண்கள் இருக்கின்றன. இவற்றில் ஒரு கண்ணை மட்டுமே திறந்து நெய்யினை விடுவார்கள். இங்கே கூட மிகச்சிறந்த தத்துவத்தை ஐயப்ப வழிபாடு காட்டி நிற்கிறது. மனிதர்களுக்குப் புறத்தே தெரிவது இரண்டு கண்களே. அதேவேளை மூன்றாவது கண்ணும் இருக்கின்றது. அதனையே அகக்கண் என்கிறார்கள். நெய் என்பது ஆன்ம ஞானம் அதனை உடம்பாகிய தேங்காயினுள் செலுத்த வேண்டுமானால் அதற்கு அகமாகிய கண்ணின் வழியேதான் செலுத்தமுடியும் எனவேதான் தேங்காயின் ஒரு கண்ணைத் திறத்தல் என்பது இங்கே ஏற்படுத்தப்பட்டது. இதனை அனைவரும் விளங்கி வழிபட்டால் நல்லதே.

    ஐயப்ப வழிபாட்டில் அரனும் அரியும் இணையும் தன்மை காணப்படுகிறது. அரியும் அரனும் சேர்ந்த வடிவமானதால்தான் அரிகரசுதன் ஐயன் ஐயப்பன் என்று போற்றப்படும் நிலை இந்த வழிபாட்டில் ஏற்பட்டது எனலாம். இதனால் சைவ வைணவ ஒற்றுமையின் வடிவமாகவும் ஐயப்பனும் அவரது வழிபாடும் அமைந்திருப்பதும் இந்த வழிபாட்டின் மிக உன்னதமான முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது என்றும் கொள்ளலாம்.

    ஆடுதல், பாடுதல், ஒன்று சேருதல், உணவிட்டு உபசரித்தல், சாதி, மத, ஏற்றத் தாழ்வுகள் பாராமை, சமரசம் என்னும் தரரகமந்திரமே மேலோங்கி இருத்தல், தீவிர வைராக்கியம், இன்முகம் காட்டுதல், இன்சொல் பேசுதல், பெரியவரைக் கனம் செய்யுதல், இப்படிப் பல நிலைகளில் ஐயப்ப வழிபாடு விளங்குகின்ற காரணத்தாலும் இன்றைய உலக நிலையில் மிகவும் முக்கியத்துவம் மிக்க வழிபாடாக ஐயப்ப வழிபாடு திகழ்கின்றது.

            “சாமியே சரணம் ஐயப்பா ! சாமியே சரணம் ஐயப்பா!”

    என்னும் ஒலியானது உலகையே ஒன்று கூட்டும் சக்தி மிக்கதாக விளங்கி ஐயப்ப வழிபாட்டை உலக வழிபாடாக மாற்றிவிடும் சக்திபெற்றதாக இன்று பிரவாகித்து நிற்கிறது என்பது நிதர்சனமாகும்.

                                                                          “சரணம் சரணம் ஐயப்பா

           சாமி சரணம்  ஐயப்பா!”

    ———————————————————————————————————————————————

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ஐயப்ப வழிபாட்டின் பெருமைகளையும் நுட்பங்களையும் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. சாத்தனார் வழிபாட்டிலிருந்து பூதநாதன் தோன்றிய விதத்தையும், ஐயப்ப வழிபாட்டில் பொதிந்திருக்கும் அகப்பொருள் உண்மைகளையும் சைவசித்தாந்த, புராணச் சான்றுகளோடு நிறுவுகிறது. ஐயப்ப விரதத்தின் மெய்த்தத்துவங்கள், வைராக்கியக் கொள்கை, இருமுடி கட்டுதல் ஆயுதமின்மை ஆகியவற்றுக்கான விளக்கங்கள் தரப்பெற்றுள்ளன. அற்றே தவத்திற் குரு என்னும் வள்ளுவத்தின் ஈற்றடிகளை வழிபாட்டிற்கான ஒழுகலாறாய்க் கட்டுரை உணர்த்துகிறது. இதனைப் போலவே அமைந்த முருக வழிபாட்டினையும் ஒப்புநோக்கியிருக்கலாம்.

    ———————————————————————————————————————————————

    Share
  • வாழ்ந்து காட்டுவோம்!

    வாழ்ந்து காட்டுவோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா

    வாழ்க வாழ்கவென்று
    வாழ்த்துக் கூறுவோம்
    ஆழ்கதீய அனைத்துமென்று
    ஆசி வழங்குவோம்
    பேசும்வார்த்தை கொண்டுநாளும்
    பிணக்கைப் போக்குவோம்
    வாழும்காலம் சிறந்துநிற்க
    வாழ்ந்து காட்டுவோம்!

    தீதும் நன்றும் வெளியிருந்து
    வருவதில்லையே
    யாவுமெங்கள் மனமிருந்து
    கிளர்ந்து வருகுதே
    வாதமிட்டு வாதமிட்டு
    மனத்தை உடைக்கிறோம்
    வாழும்நாளை மலர வைக்க
    வாழ்ந்து காட்டுவோம்!

    விதியைநொந்து விதியைநொந்து
    மதியை இழக்கிறோம்
    விடியுமென்னும் எண்ணமதை
    தொலைக்கப் பார்க்கிறோம்
    தெளிவுகொண்டு பார்ப்பதற்குச்
    சிக்கற் படுகிறோம்
    புவியின்மீது நல்லவாழ்வைக்
    காண முயலுவோம்!

    Share
  • பூமிக்கு வந்த புதுமலராய் நாமிருப்போம்

    பூமிக்கு வந்த புதுமலராய் நாமிருப்போம்

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா

    பூமிக்கு வந்த புதுமலராய் நாமிருப்போம்
    கோபிக்கும் குணமதனைக்
    குழிதோண்டிப் புதைத்து நிற்போம்
    சாமிக்கு அருகணைய
    சன்மார்க்கம் மனம் கொள்வோம்
    ஆருக்கும் இடராக
    அமையாது நாம் வாழ்வோம்!

    மண்ணுக்குள் வேரூன்றும் மரமாக
    நாம் இருப்போம்
    கண்ணுக்குள் மணி போன்று
    கருத்துகளை இருத்திடுவோம்
    விண்ணிற்கும் பரிதியைப் போல்
    மண்ணினிலே விளங்கிடுவோம்
    எண்ண மெலாம் எந்நாளும்
    இமயமென உயர்த்திடுவோம்!

    அரை குறையாய் வாழுவதை
    அகமிருந்து அகற்றிடுவோம்
    அறம் அதனை வாழ்வாக்கி
    ஆனந்தம் பெற்றிடுவோம்
    பெறுமதியாய்ச் சொல் தேர்ந்து
    பெருமகிழ்வாய் உரைத்திடுவோம்
    வறுமை நிலை வந்தாலும்
    வாய்மையினைக் காத்துநிற்போம்!

    நிலை தளர்ந்து நிற்பாரை
    நிமிந்துவிடச் செய்திடுவோம்
    தலை குனியச் செய்வாரை
    தானுணரச் செய்துநிற்போம்
    விலை பேசும் உறவுகளின்
    உளமன்பை நிறைத்திடுவோம்
    வளமாக நாம் வாழ
    வழிவகுப்போம் வாருங்கள்!

    Share
  • செந்திருவே! கந்தவேளே!

    செந்திருவே! கந்தவேளே!

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா
     
    விழிக்குத் துணையானாய் எங்கள்
    மொழிக்கும் துணையானாய்
    பழிக்குப் பகையானாய் நாளும்
    வழிக்குத் துணையானாய்!
     
    அழிக்கும் பகையனைத்தும் நில்லா
    நிலைக்குக் களனானாய்!
    இமைக்கும் விழியில் என்றும்
    இருக்கும் கதிர்வேலா!
     
    தந்தைக்குப் பாடமுரைத்தாய் அதனால்
    தரணிக்கே குருவானாய்!
    சொந்தமுடன் கந்தனென்பார் வாழ்வைச்
    சோதனைக்குள் சிக்கவைப்பாய் !
     
    உந்தனது சோதனையால் நாளும்
    உழலுகின்ற பக்தர்தமை
    செந்திருவே கந்தவேளே விரைவில்
    சிறப்படையச் செய்திடப்பா!
    Share
  • ஆழ்துளைக்குள் அவலம்!

    ஆழ்துளைக்குள் அவலம்!

    -மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஆழ்துளைக்குள் அழுகையொலி
    அனைவரையும் உலுக்கியதே!
    வாழவெண்ணி வந்தவுயிர்
    ஆழத்துள் அடங்கியதே!

    ஓலமிட்டு அழுதவர்கள்
    ஓடியோடி அலைந்தவர்கள்
    நாளைவரும் எனநினைத்தார்
    ஆழ்துளையோ விடவிலையே!

    தண்ணீரைத் தேடினோர்க்குக்
    கண்ணீரே மிச்சமெனப்
    பிஞ்சுக் குழந்தையொன்று
    பேதலிக்க வைத்ததுவே!

    கெஞ்சினார் கிண்டினார்
    கேட்கவில்லை இறைவனுக்கு
    பிஞ்சுக் குழந்தை உயிர்
    பிரியும்நிலை ஆனதே!

    பெற்றாரின் தவறா?
    பேணி நிற்கும்
    பேரரசின் தவறா?

    கற்றாரின் தவறா?
    கடவுளின் தவறா?
    யார்தவறோ அறியோம்!
    பிஞ்சின் அழுகை மட்டும்
    நெஞ்சலாம் ஒலிக்கிறதே!!

    Share