Advertisements
இலக்கியம்கட்டுரைகள்

ஈழத்தில் திருப்பாவையும் ஆண்டாளும் ஒரு நோக்கு

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, 
மெல்பேண், அவுஸ்திரேலியா. 
முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர். 

“மாதங்களில் நான் மார்கழி” என்று கீதையில் கண்ணன் கூறுகிறான். அந்த வாக்கை வைணவர்கள் மனங்கொண்டு மார்கழி முழுவதையும் வழிபாட்டுக்கு உரிய மாதமாக்கி விட்டார்கள் என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. மார்கழி என்றதும் சுப நிகழ்ச்சிகளைச் செய்வதை பொதுவாகவே இந்துக்கள் தவிர்த்துக் கொள்ளுகிறார்கள். இந்த நிலை ஈழத்திலும் காணப்படுகிறது. திருமணம், வீடு குடுபுகுதல், காதுகுத்தல், ஏடுதொடக்குதல் முதலான சுப விஷயங்களை மார்கழியில் செய்வதை தவிர்த்து விடுகிறார்கள். அப்படித் தவிர்ப்பதற்கு அவர்கள் கூறும் காரணம் – மார்கழி பீடை பிடித்த மாதம் என்பதே ஆகும். ஆனால் உண்மையில் மார்கழி பீடுடைய மாதமே என்பதை மனமிருத்தத் தவறி விடுகின்றனர்.

மார்கழி தேவ வழிபாட்டுக்கு உகந்த மாதம் என்பதாலேயே அதில் மக்களுக்கான விழாக்களைத் தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மையாகும். மார்கழியில்த்தான் திருப்பாவை, திருவெம்பாவை, பாடப்படுகிறது. ஆருர்த்தா தரிசனம், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறத்தல், போன்ற முக்கிய தெய்வ வழிபாடுகள் இடம்பெறுகின்றன. இந்தவகையில் மணிவாசகப் பெருமானும் ஆண்டாள் நாச்சியாரும் சைவர்களாலும், வைணவர்களாலும் ஏற்றிப் போற்றி வணங்குதலுக்கு ஆளாகி இருப்பதையும் காண்கின்றோம்.

மணிவாசகப் பெருமானின் திருவெம்பாவை பற்றி ஈழத்தவர்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும். ஈழத்தில் இருக்கும் சைவக் கோவில்கள் பெரியனவாக இருந்தாலும், சிறியனவாக இருந்தாலும், அங்கெல்லம் மார்கழியில் திருவெம்பாவை மிகவும் பக்திபூர்வமாக அனுஷ்டிக்கப்படும். காலையில் அதுவும் மிகவும் அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சியுடன் ஆரம்பித்து திருவெம்பாவை பாடல்முழுவதும் பாடி கோவிலில் பூஜை வழிபாடு நிறைவு பெறும்.

சைவ ஆலயங்களான அனைத்து ஆலயங்களிலும் இந்த நடை முறை நீண்ட காலமாகவே நடைபெற்று வருவதை யாவரும் அறிவர். அதேவேளை விஷ்ணு ஆலயங்களில் திருவெம்பாவைக்குப் பதிலாக திருப்பாவை பாடப்படும் முறை காணப்படுகிறது. திருவெம்பாப் பாடல்களை பெரும்பாலான சைவர்கள் அறிந்தளவும் திருப்பாவையினை அறிந்தவர்களாக இல்லை என்பது முக்கிய விஷயமாகும். அதேநேரம் மணிவாசப் பெருமானை அறிந்ததுபோல் ஆண்டாள் நாச்சியார் அதிகளவில் அறியப்படவில்லை என்பதும் நோக்கத் தக்கதாகும்.

ஈழத்தில் பல பாகங்களிலும் விஷ்ணு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அங்கெல்லாம் பூஜைகளை ஆற்றுகின்றவர்கள் பெரும்பாலும் சிவப்பிராமணர்களே என்பது இங்கு முக்கியமாக நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஈழத்தில் சைவமே நிறைந்து காணப்படுகிறது. வைஷ்ணவம் என்னும் பெயர் படித்தவர்கள் மட்டத்தில் தெரிந்தளவு பாமர்களிடம் சென்றடையவில்லை என்றுதான் கொள்ளவேண்டி இருக்கிறது. வைஷ்ணவ சம்பிரதாயங்கள் இந்தியாவில் இருப்பது போன்று ஈழத்தில் இல்லை என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். வடகலை, தென்கலை, நாமம் இடுதல், என்றால் பெரும்பாலான ஈழத்தவர்களுக்கு விளங்குமா என்பது ஐயமேயாகும். இந்த நிலையில் வைஷ்ணவ அடியவாராய் விளங்கும் ஆண்டாள் நாச்சியார் பற்றியும் அநேகம் பேர் அக்கறை காட்டும் நிலையிலும் இல்லை என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. மணிவாசகப் பெருமானை அறிந்து வைத்திருக்கும் அளவுக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடியை அறிந்திருப்பவர் மிகவும் குறைவாகவே காணப்படுகிறார்கள்.

பல்கலைக்கழகத்தில் தமிழை, இந்துநாகரிகத்தைப் படிக்கும் மாணவர்களும் படிப்பிக்கும் ஆசிரியர்ளும் பாடத்துக்காக ஆண்டாள் நாச்சியாரையும் அவரது திருப்பாவையும் அவரின் படைப்புக்களையும் அவர்பற்றிய வரலாற்றையும் அறிந்து வைத்திருக்கிறார்களே அன்றி மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு மிகவும் அரிதாகவே இருக்கிறது என்பது மிகவும் முக்கிய விஷயமாகும்.

யாழ்ப்பாணம் முழுவதும் நாவலர் கலாசாரம், கநதபுராண கலாசாரம் நிறைந்த இடமாகும். இங்குள்ள கோவில்கள் பெரும்பாலும் ஆகமவிதிப்படி பூஜைகள் நடைபெறும் சைவக் கோவில்களேயாகும். ஆனால் பொன்னாலை வரதராஜப் பெருமாள், வல்லிபுர ஆழ்வார், யாழ்நகரில் உள்ள பெருமாள் கோவில், தற்பொழு இணிவிலில் புதிதாக அமைக்கப்பட்ட இணுவில் திருப்பதி கோவில் யாவும் விஷ்ணு கோவில்களே ஆகும். விஷ்ணு கோவிலாக இருந்தாலும் வைஷ்ண பட்டாச்சாரியார்கள் இங்கு பூஜை ஆற்றுவதில்லை. இங்கு பூஜை ஆற்றுகிறவர்கள் யாவருமே சிவப் பிராமணர்களே என்பது நோக்கத்தக்கதாகும்.

ஈழத்திலுள்ள விஷ்ணு ஆலயங்களில் சிவப்பிராமணர்களும், சைவர்களும் இருந்தாலும் மார்கழியில் அங்கெல்லாம் ஆண்டாள் நாச்சியாரின் வடிவங் கொண்ட சிலை உள்வீதியில் பக்தியுடன் வலம் கொண்டுவரப்பட்டு ஸ்ரீரங்க நாதர் முன்னே வைக்கப்பட்டு திருப்பாவை இன்றளவும் காலைப் பூஜையின் பொழுது பாடப்பட்டு வருகிறது என்பது முக்கிய அம்சம் எனலாம்.

வைஷ்ணவம் என்பது சமயபாடப் புத்தகத்தில் படிக்கும் அளவுக்கு ஈழத்தில் இருக்கிறதே அல்லாமல் சைவம் போன்று மக்களால் கடைப்பிடிக்கும் அளவுக்கு இல்லை என்பது மனங் கொள்ளத்தக்கதாகும்.

திருமுறைகளும், நாயன்மார்களும் அறியப்பட்டளவுக்கு ஆழ்வார்களும் அவர்களது பாசுரங்களும் பொதுமக்களிடம் சென்றடையவில்லை என்றுதான் கருதவேண்டி இருக்கிறது. அதற்குக் காரணம் ஈழத்தில் சைவம் பெற்ற முக்கியத்துவமே எனலாம். அறுபத்து மூன்று நாயன்மார் பெற்ற முக்கியத்துவத்தை பன்னிரு ஆழ்வர்களும் ஈழத்துப் பெரும்பாலான மக்களிடம் பெற்றிருக்கிறார்களா என்பது ஐயத்துக்கு உரியதாகவே இருக்கிறது. பெரிய புராணம் கோலோச்சிய அளவுக்கு, கந்தபுராணம் போற்றப்படும் அளவுக்கு  வைஷ்ணவ ஆழ்வார்களும் அவர்களது திருப்பாசுரங்களும் அறியப்பட்டிருப்பது மிகவும் குறைவென்றே கொள்ள வேண்டி இருக்கிறது.

சமயச் சொற்பொழிவாற்றுகின்ற பெரியவர்கள்கூட சைவ இலக்கியங்களையும், சைவ மேன்மைகளையும் எடுத்துச் சொல்லுவார்களே அன்றி வைஷ்ண சம்பிரதாயங்களையோ அல்லது வைஷ்ணவ ஆழ்வார்களையோ பற்றியோ சொல்லுவது மிகவும் அரிதாகும். மணிவாசகர் மன்றம், மணிவாசகர் சபை என்றெல்லாம் அமைத்து அதன்மூலம் போட்டிகளும் பரிசுகளும் அளித்து மார்கழியில் வீதிகளில் மணிவாசகரின் திருப்பள்ளி எழுச்சி திருவெம்பா பாடல்களைப் பாடும் அளவுக்கு – ஆண்டாள் நாச்சியாரோ அவரது திருப்பவையோ இடம்பெற்றதாகத் தெரியவில்லை.

நாயன்மார்களைப் போற்றும் முகமாக குருபூசைத்தினம் என்று அமைத்து கோவில்களிலும், பாடசாலைகளிலும், சிறப்பான பூஜை வழிபாடு செய்யும் அளவு வைஷ்ணவ ஆழ்வார்களுக்கோ குறிப்பாக ஆண்டாள் நாச்சியாருக்கு ஈழத்தில் செய்யப்படுவது அரிதென்றே சொல்லலாம்.

யாழ்ப்பாணத்தில் புதிதாக இணிவிலில் திருப்பதி என்னும் பெயரில் விஷ்ணுவுக்கு பெரியதொரு கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு விநாயகர் தொடக்கம் விஷ்ணுவரை மிகவும் பிரமாண்டமான சிலா விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இக்கோவிலில் ஆண்டாள் நாச்சியாரிக்கும் ஒரு சன்னிதானம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு செல்லும் அடியவர்கள் ஆண்டாள் நாச்சியாரையும் வணங்கியே செல்லுகிறார்கள்.

விஷ்ணு ஆலயங்களில் ஆண்டாள் நாச்சியார் வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் வழிபடச் செல்லும் அடியார்களுக்கு சரியான விளக்கம் இல்லாத காரணத்தால் விஷ்ணு கோவில் செல்பவர்கள் ஆண்டாள் பற்றிக் கவனம் செலுத்தத் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பதும் நோக்கத்தக்கது. வல்லிபுரக் கோவிலில் திருமண்ணும் திருநீறும் வழங்கப்படுகிறது. விஷ்ணு ஆலயமாக இருந்தாலும் சிவனும் விஷ்ணுவும் இங்கு பிரித்துப் பார்க்கும் விதத்தில் வழிபாடு அமையவில்லை என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆண்டாள் நாச்சியாரின் தமிழ் அமுதத் தமிழ். அவரின் பக்தி அளவிடமுடியாத பக்தி. ஈழத்தில் சைவத்தின் உச்சத்தால் வைஷ்ணவ அடியரான ஆண்டாள் நாச்சியாரை சாதாரண மக்கள் அறியும் வாய்ப்புக் கிட்டவில்லை என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
       நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
        ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
      தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
    நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

 

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க