நிர்மலா ராகவன்

முன்னுரை

“நாட்டியத்திற்குப் பாட்டு எழுதிக்கொடேன்!’ மகள் ஷீலா என்னைக் கெஞ்சினாள். அதற்கு முன்பே, இரண்டு வருடங்களாகப் பலமுறை கேட்டிருந்தாள்.

விடாமல், மறுபடியும் கேட்டபோது, “பாட்டா!’’ என்று முதலில் அயர்ந்தேன். “எனக்குப் பாட்டெல்லாம் எழுதத் தெரியாது. ஏதோ, கதை, கட்டுரை. நாடகம், நாட்டிய விமரிசனம் என்று எழுதிக்கொண்டிருக்கிறேன். வேறு யாரையாவது கேட்டுப்பார்!”

“அம்மாவே மறுத்தால், நான் யாரைக் கேட்பது?” என்றாள், பரிதாபகரமாக முகத்தை வைத்துக்கொண்டு.

அதில் பொதிந்திருந்த லாஜிக் என்னைச் சம்மதிக்கவைத்தது.

முதல் பாடல் எழுத ஆரம்பிக்கும்போது அச்சமும் கூடவே எழுந்தது. விக்னமில்லாமல் என் முயற்சியில் வெற்றிபெற பிள்ளையாரை மனத்துள் துதித்தேன். அடுத்து, `நீயே வந்து எழுதிக்கொடு,’ என்று கலைக்கடவுளான ஸரஸ்வதியை வேண்டினேன். பின்பு, என் இசைக் குரு பத்மஸ்ரீ T.S.கல்யாணராமன். (`எப்படி எழுதறது, ஸார்?’) பின்னர், பல பாடல்களில் இவரது பரிந்துரைகள் உண்டு. (நான் பாட்டெழுத ஆரம்பிக்குமுன்னரே அவர் இவ்வுலகைவிட்டுப் போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது).

இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்ப்பாடல்களை இயற்றி, அவற்றில் சிலவற்றை வாத்தியங்களுடன் பதிவு செய்திருக்கிறேன். இவை பெரும்பாலும் பரதநாட்டியத்திற்கான பாடல்களாகும்.

ஒவ்வொரு பாடலும் இயற்கையுடன் நான் ஒன்றியிருந்த சமயம் தானாக அமைந்தவை.  ஓர் இந்துக் கடவுளின்மேல், அவரை ஒட்டிய கதை ஒன்றுடன் இருக்கும். (இப்படியாக அடிக்கடி என் “மேதாவித்தனத்தைக்” காட்டிக்கொள்வேன். எல்லாம் தலபுராணங்கள் மற்றும் ஆன்மிகப் புத்தகங்களின் உபயம் என்று யாருக்குத் தெரியப்போகிறது!).

பாடல்கள் எங்கே, எப்படிப் பிறந்தன என்ற சிறு குறிப்பை இத்தொடரில் எழுத உத்தேசித்திருக்கிறேன். பிள்ளையாரிலிருந்து ஆரம்பிப்போமா? (நான் எழுதிய முதல் பாடல் இதுவல்ல. அந்தக் கதை பிறகு).

விக்ன விநாயகனே

கோலாலம்பூரின் கிழக்குப் பகுதியில், 280 கிலோமீட்டர் தூரத்தில் செராடிங் (CHERATING) என்ற இடம் இருக்கிறது, கடலோரத்தில். நீர்நிலைகளைக் காணும்போது என் மனம் உற்சாகம் அடையும். கடலைப் பார்த்தபடி, அலையோசையை ரசித்தபடி பாடிக்கொண்டிருப்பேன்.

ஒரு முறை, செராடிங்கில் சில தினங்களைக் கழித்துவிட்டு, நானும் என் இளைய மகள் சித்ராவும் வாடகைக் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, பிறந்த பாடல் இது.

காரின் ஜன்னலை சரியாக மூட இயலாத நிலையில், போக்குவரத்து சப்தம் காதைத் துளைத்தது. நிம்மதியாக பாடலைப் புனைய ஒரு வழி கிடைத்தது: ஒரு தினசரியை என் உடல் முழுவதிலும் கூடாரம்போல் கவிழ்த்துக்கொண்டு, எழுத ஆரம்பித்தேன். அனுபல்லவியில், சிவனார் பிள்ளையாரை துதிப்பதாக வருகிறது. முப்புரங்களை எரிக்க சிவன் புறப்பட்டபோது, கணபதியை வணங்காததால் தேரின் அச்சு உடைந்ததாக அருணகிரிநாதர் பாடியிருக்கிறார். பிள்ளையாரை வணங்கியதும் தடை நீங்கியது.

சரணம்: பாற்கடலைக் கடையுமுன், தேவர்களும் அசுரர்களும் விநாயகரை வணங்காததால், மத்தாக இருந்த மேருமலை சாய்ந்துவிட்டது. தம் தவற்றை உணர்ந்து, கிளிஞ்சல்களுடன் கடல் நுரையைச் சேர்த்து கணபதியாக்கி வணங்கினர். விக்னமும் விலகியது.

(திருவலஞ்சுழியில் வெள்ளை வெளேரென்று இருக்கிறது ஸ்வேத விநாயகர் விக்கிரகம். ஸ்வேதா என்றால் வெள்ளை).

ஒரு நிகழ்ச்சியின் முதல் அங்கமாகப் பலர் இணைந்து, நாட்டிய நாடகமாக ஆட ஏற்ற பாடல். இப்பாடலைக் கேட்க: https://www.youtube.com/watch?v=bfv-BuDciVM

Youtube: Mahavidya Dance Theatre

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *