(Peer Reviewed) ஐயப்ப வழிபாட்டின் முக்கியத்துவம்
மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா
ஐயப்பனது வழிபாடு இன்று யாவராலும் மேற்கொள்ளப்படும் வழிபாடாக விளங்குகிறது. இந்த வழிபாடு இடைவிட்டு வந்த ஒன்றா அல்லது தொன்று தொட்டு வந்த ஒன்றா என்னும் வாதப்பிரதி வாதங்களும் சர்ச்சைகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. ஆனாலும் ஐயப்ப வழிபாடு மட்டும் தனது நிலையில் உயர்வு பெற்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வழிபாடாக வளர்ந்து வருவதையே காண முடிகிறது. அதுமட்டுமல்ல யாவரும் இந்த வழிபாட்டில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதில் பெரிதும் விருப்புடையவர்களாக இருப்பதையும் கண்டுகொள்ள முடிகின்றது.
கந்த புராணம், விஷ்ணு புராணம், பத்ம புராணம், யாவும் ஐயப்ப வழிபாடு பற்றி எடுத்துச் சொல்லுகின்றன. இப்புராணங்கள் தெய்வத்தன்மை மிக்கன. இவற்றில் ஐயப்பன் பற்றிய குறிப்பும் அவரது தோற்றம் பற்றிய விளக்கங்களும் இருக்கின்ற காரணத்தால் ஐயப்ப வழிபாட்டை இடைநடுவில் வந்தது என்று வாதிடுவதோ விமர்சிப்பதோ பொருத்தமற்றதாகி விடுகிறது. இதனால் ஐயப்ப வழிபாடானது தொன்று தொட்டே வந்திருக்கிறது என்றே கருதவேண்டி இருக்கிறதல்லவா!
ஐயப்பனை தர்மசாஸ்த்தா என்றும் பெயரிட்டும் வழிபடுவர். சாத்தன் என்பது காவலுக்குரிய தெய்வமாக விளங்கியிருக்கிறது. சாஸ்த்தா என்பது சமஸ்கிருதத்தில் வழங்கப்பட்டு, அதுவே தமிழில் சாத்தா என மருவி பின்னர் சாத்தனார் ஆகியது எனவும் வரலாற்றால் அறிய முடிகிறது.
காவல் தெய்வமாக விளங்கினார் என்பதற்கு அவரின் மற்றொரு பெயரான ‘பூதநாதன்’ என்பதும் பொருந்துவதாக இருப்பதாக வரலாறு சுட்டி நிற்கிறது. விநாயகப் பெருமானைக் கணங்களுக்கு அதிபதி என்ற நிலையில் ‘கணபதி’ என்கிறோம். தேவசேனைகளின் அதிபதியாக விளங்குவதால் முருகப்பெருமானைத் ‘தேவசேனாபதி’ என்கிறோம். ஐயப்பன் பூத கணங்களுக்குத் தலைமை தாங்குவதால் அவரைப் ‘பூதநாதன்’ எனப் போற்றுகிறோம். இதில் இன்னுமோர் அர்த்தத்தையும் நாம் கண்டுகொள்ளலாம். இந்த மனித சரீரமானது பஞ்ச பூதங்களால் ஆனது. எனவே பஞ்ச பூதங்களும் எந்த நேரமும் மனிதர்களை ஆட்டிப் படைக்கும் வல்லமை பெற்றிருக்கும் அல்லவா? அப்படிப்பட்ட மனிதர்களை அந்தப் பூதங்களிடமிருந்து காத்து இரட்சிக்கும் ஆற்றல் பூதநாதனாகிய ஐயப்பனால் மட்டுமே முடியும் அல்லவா? இதனாலும் பூதங்களை ஆளும் வல்லமை பெற்றவன் என்ற வகையிலும் ‘பூதநாதன்’ என்பது பொருத்தமாகி நிற்கிறதுதானே!
ஐயப்ப வழிபாட்டில் பல முக்கிய அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. அதன் காரணமாகவும் அந்த வழிபாட்டை அனைவரும் கைக்கொள்ளுகின்றனரோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. ஒரு மண்டலம் என்பது சாதாரண விஷயமல்ல. அந்த ஒரு மண்டலமும் எந்தவிதமான கெட்ட பழக்கங்களையும் மனத்தாற்கூட நினையாமல் ஐயப்ப வழிபாடு நடத்தப்படுகின்றது. இங்கு மனம் தூய்மை அடைவதோடு வாழ்வும் வெளிச்சம் பெறமுடிகிறது எனலாம்.
” உற்றநோய் நோற்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை “
என்னும் வள்ளுவர் வாக்கு இங்கு போற்றப்படும் நிலையே காணப்படுகின்றது. கடைப்பிடிப்பார்கள் செவ்வனே கடைப்பிடித்தால் சிறப்பு வந்து நிற்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இது ஐயப்ப வழிபாட்டின் முக்கியத்துவம் எனலாம்.
கடவுளர்களில்- பிரம்மச்சாரியாக ஐயப்பன் இருக்கின்றார். அதுமட்டுமல்ல அவரது கைகளிலே எந்தவித ஆயுதங்களும் இல்லை. இது அற்புதமான அமைப்பு அல்லவா? அவரது குழந்தை வடிவமும் புன்சிரிப்பு தவழும் முகலாவண்யமும் பார்ப்பவர் மனத்தைப் பக்குவப்படுத்திவிடும் அல்லவா!
உலகிலே எங்குப் பார்த்தாலும் சண்டை சச்சரவுகளும் அழிவுகளுமே காணப்படுகின்றன. ஆயுதக் கலாசாரம் என்பது பெருகி அமைதியைக் குலைத்துவிட்டது. இந்த நிலையில் ஆயுதமே கையில் ஏந்தாது அமைதியாயும் சிரிப்போடும் ஐயப்பன் காணப்படுவது அகில உலக அமைதிக்கும் உலகம் தழுவிய சமாதானத்துக்கும் நல்லதோர் எடுத்துக்காட்டு அல்லவா! இதனாலும் இந்த வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
காமம் என்பதுதான் யாவற்றுக்கும் மூல காரணமாகும். ஐயப்பன் பிரம்மச்சாரியாக விளங்கும் நிலையும், அவரது வழிபாட்டை மேற்கொள்ளும் நிலையில் பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கும் நிலையும் ‘எம்மிடையே உள்ள சிற்றின்பங்கள் அனைத்தையும் போக்கிவிடும்‘ என்பதையே எடுத்துக் காட்டுகிறது. காம எண்ணங்கள் நம்மைவிட்டுப் போய்விட்டால் உலகிலே காணும் யாவுமே ஆனந்த மயமாகவே தோற்றமளிக்கும். அந்த ஆனந்தமும் அற்பமானதல்ல. அது இறைத் தன்மை மிக்கதாகவே இருக்கும். இவையெல்லாம் ஐயப்ப வழிபாட்டின் முக்கியத்துவங்கள் எனலாம்.
எமக்குள்ளே இறைவன் இருக்கின்றான். அந்த இறைவனை நாங்கள் முயன்றால் கண்டுவிடலாம் என்று ஆன்றோர்கள் கூறுவார்கள். அதற்கு நல்ல தேடல் வேண்டும்.
“தேடிக் கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும்
தேடிக் காணொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன் “
என்று அருளாளர் ஒருவர் கூறுகின்றார். இது முற்றிலும் உண்மையானதாகும். இந்த அரிய தத்துவத்தை ஐயப்பன் வழிபாடு மிகவும் இலகுபடுத்தி இருக்கிறது.
ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வேளை ஒருவராவது மற்றவரைப் பெயர்சொல்லி அழைப்பது வழக்கம் அன்று. ஒருவரை ஒருவர் ‘சாமி’ என்றுதான் அழைப்பார்கள். இதுதான் ஐயப்ப வழிபாட்டின் அதியுச்ச நிலை எனலாம். சாதாரண நிலையில் இருக்கும் ஒருவர் சாமி என்னும் நிலைக்கு வருவதை வேறு எந்த வழிபாட்டிலும் காணவே முடியாது. அதனை ஐயப்ப வழிபாடு ஒன்றே உணர்த்தி நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மனிதர்கள் பல பிறவிகளிலும் செய்த பாவங்களும், புண்ணியங்களும் அவர்களுக்குப் பெரும் பாரமாகவே பிறவிதோறும் வந்து கொண்டிருக்கும். இவை இரண்டையும் விடும்பொழுதுதான் பிறவியென்னும் பிணி அகலும். இதனையே சைவ சித்தாந்தம் இருவினை ஒப்பு, மலபரிபாகம், சத்தினிபாதம் என்றெல்லாம் சொல்லும். இவை எமக்கும் விளங்குவது சற்றுக் கடினம்தான். ஆனால் ஐயப்ப வழிபாட்டில் இதனை இலகுவாக்கி ‘இருமுடி’ கட்டுதல் என்று வைத்துவிட்டார்கள். இருமுடியில் ஒன்றில் இறைவனுக்கான நிவேதனப் பொருட்களும் மற்றையதில் அடியவர்களுக்கான பொருட்களுமே அடங்கியிருக்கும். இங்கே இறைவனுக்கானவற்றை புண்ணிய மூட்டை என்றும் மற்றதைப் பாவ மூட்டை என்றும் கொள்ளலாம் அல்லவா? இந்த ஆன்மா ஆனது பாவத்தையும் புண்ணியத்தையும் சுமந்தபடியேதான் இருக்கும். இறைவனிடம் போகும்பொழுது அதுவும் பக்தியுடன் பக்குவமாகப் போகும்பொழுது பாவத்தின் நிலை குறைந்து புண்ணியம் மேலோங்க, ஆன்மாவின் பாரம் குறைவடையும். இந்த அரிய கருத்தே இருமுடித் தத்துவம் என்று ஐயப்ப வழிபாட்டில் காணப்படுகின்றது என்பது மனத்தில் கொள்ள வேண்டிய கருத்தாகும்.
பகவத் கீதையில் பதினெட்டு அத்தியாயங்கள் இருக்கின்றன. ஐயப்ப தரிசனத்திலும் பதினெட்டுப் படிகள் இருக்கின்றன. பாரதப் போரில் அர்ஜுனன் கலங்கிய கலக்கத்தைத் தெளிவாக்கி இறைத் தத்துவத்தையும் வாழ்க்கைத் தத்துவத்தையும் பகவான் கண்ணன் காட்டியதுவே கீதையென்னும் வேதமாக வந்தது.
அதே போன்றதுதான் ஐயப்ப வழிபாட்டிலும் பதினெட்டுப் படிகளின் தத்துவமும். முதல் ஐந்து படிகளும் கர்மேந்திரியங்களாகவும், அடுத்த ஐந்து படிகளும் ஞானேந்தியங்களாகவும், அடுத்த நான்கு படிகளும் அந்தக்கரணங்களாகவும், மிகுதி மூன்று படிகளும் முக்குணங்களாகவும் உருவகப்படுத்தப்படுகின்றன. இவற்றைக் கடந்தால் பதினெட்டாம் படியானது இறைதரிசனத்தைக் காட்ட வல்லது என்னும் அதியுன்னதத் தத்துவத்தை, படிகளைக் கொண்டே ஐயப்ப வழிபாடு உணர்த்தி நிற்கிறது என்பது மிகவும் முக்கியமானதாகும்.
தேங்காயினுள் நெய்விட்டு அதனை ஐயப்ப தரிசனத்தின்பொழுது கொண்டு செல்லும் வழக்கம் இருக்கிறது. தேங்காயில் மூன்று கண்கள் இருக்கின்றன. இவற்றில் ஒரு கண்ணை மட்டுமே திறந்து நெய்யினை விடுவார்கள். இங்கே கூட மிகச்சிறந்த தத்துவத்தை ஐயப்ப வழிபாடு காட்டி நிற்கிறது. மனிதர்களுக்குப் புறத்தே தெரிவது இரண்டு கண்களே. அதேவேளை மூன்றாவது கண்ணும் இருக்கின்றது. அதனையே அகக்கண் என்கிறார்கள். நெய் என்பது ஆன்ம ஞானம் அதனை உடம்பாகிய தேங்காயினுள் செலுத்த வேண்டுமானால் அதற்கு அகமாகிய கண்ணின் வழியேதான் செலுத்தமுடியும் எனவேதான் தேங்காயின் ஒரு கண்ணைத் திறத்தல் என்பது இங்கே ஏற்படுத்தப்பட்டது. இதனை அனைவரும் விளங்கி வழிபட்டால் நல்லதே.
ஐயப்ப வழிபாட்டில் அரனும் அரியும் இணையும் தன்மை காணப்படுகிறது. அரியும் அரனும் சேர்ந்த வடிவமானதால்தான் அரிகரசுதன் ஐயன் ஐயப்பன் என்று போற்றப்படும் நிலை இந்த வழிபாட்டில் ஏற்பட்டது எனலாம். இதனால் சைவ வைணவ ஒற்றுமையின் வடிவமாகவும் ஐயப்பனும் அவரது வழிபாடும் அமைந்திருப்பதும் இந்த வழிபாட்டின் மிக உன்னதமான முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது என்றும் கொள்ளலாம்.
ஆடுதல், பாடுதல், ஒன்று சேருதல், உணவிட்டு உபசரித்தல், சாதி, மத, ஏற்றத் தாழ்வுகள் பாராமை, சமரசம் என்னும் தரரகமந்திரமே மேலோங்கி இருத்தல், தீவிர வைராக்கியம், இன்முகம் காட்டுதல், இன்சொல் பேசுதல், பெரியவரைக் கனம் செய்யுதல், இப்படிப் பல நிலைகளில் ஐயப்ப வழிபாடு விளங்குகின்ற காரணத்தாலும் இன்றைய உலக நிலையில் மிகவும் முக்கியத்துவம் மிக்க வழிபாடாக ஐயப்ப வழிபாடு திகழ்கின்றது.
“சாமியே சரணம் ஐயப்பா ! சாமியே சரணம் ஐயப்பா!”
என்னும் ஒலியானது உலகையே ஒன்று கூட்டும் சக்தி மிக்கதாக விளங்கி ஐயப்ப வழிபாட்டை உலக வழிபாடாக மாற்றிவிடும் சக்திபெற்றதாக இன்று பிரவாகித்து நிற்கிறது என்பது நிதர்சனமாகும்.
“சரணம் சரணம் ஐயப்பா
சாமி சரணம் ஐயப்பா!”
———————————————————————————————————————————————
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
ஐயப்ப வழிபாட்டின் பெருமைகளையும் நுட்பங்களையும் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. சாத்தனார் வழிபாட்டிலிருந்து பூதநாதன் தோன்றிய விதத்தையும், ஐயப்ப வழிபாட்டில் பொதிந்திருக்கும் அகப்பொருள் உண்மைகளையும் சைவசித்தாந்த, புராணச் சான்றுகளோடு நிறுவுகிறது. ஐயப்ப விரதத்தின் மெய்த்தத்துவங்கள், வைராக்கியக் கொள்கை, இருமுடி கட்டுதல் ஆயுதமின்மை ஆகியவற்றுக்கான விளக்கங்கள் தரப்பெற்றுள்ளன. அற்றே தவத்திற் குரு என்னும் வள்ளுவத்தின் ஈற்றடிகளை வழிபாட்டிற்கான ஒழுகலாறாய்க் கட்டுரை உணர்த்துகிறது. இதனைப் போலவே அமைந்த முருக வழிபாட்டினையும் ஒப்புநோக்கியிருக்கலாம்.
———————————————————————————————————————————————