முனைவர் சே. கரும்பாயிரம்

இளநிலை ஆராய்ச்சி அலுவலர்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
தரமணி, சென்னை.

———————————————————————————-

ஊருணி

மக்கள் குடிநீருக்காகவும் பாசனத்திற்காகவும் பருவ மழையை நம்பி இருக்கின்றனர். அப்பருவமழை வைகாசி, ஆனி (சூன்) மாதங்கள் முதல் ஆவணி, புரட்டாசி (செப்டம்பர்) மாதங்கள் வரை தென்மேற்கிலிருந்து வீசக்கூடிய காற்றிலும் புரட்டாசி, ஐப்பசி (அக்டோபர்) மாதங்கள் முதல் கார்த்திகை, மார்கழி (டிசம்பர்) மாதங்கள் வரை வடகிழக்கிலிருந்து வீசக்கூடிய காற்றிலும் கிடைக்கிறது. அம்மழை எல்லா இடங்களிலும் பெய்வதில்லை. ஓர் இடத்தில் அதிகமாகவும் மற்றொரு இடத்தில் குறைவாகவும் பொழிகிறது. சில நேரங்களில் பெய்யாமலும் இருக்கிறது. பருவமழை பொய்த்துப் போகும்போதுதான் பஞ்சம் ஏற்படுகிறது. அத்தகைய பஞ்சத்தைத் தீர்க்க பண்டைத் தமிழர் மழைநீரினை வீணாக்காமல் சேகரிக்கும் முறையினைப் பின்பற்றினர்.

பொழிகின்ற மழைநீர் ஓடைகள் பலவாகப் பிரிந்து ஆற்றில் சேர்கிறது. பெருக்கெடுத்து ஆற்றுநீர் ஓடுமிடங்களில் முன்னோர்கள் அணைகளைக் கட்டித் தடுத்து நிறுத்தினர். அணைகளில் வழிந்த நீரை ஏரி, குளம் முதலான நீர்நிலைகளில் நிரப்பினர். ஏரிகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருந்தன. ஓர் ஏரி நிரம்பிய பின் அதன் உபரிநீர் அடுத்த ஏரிக்குச் சென்றது. இவ்வாறு மழை நீரானது வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் தேக்கி வைக்கப்பட்டது. எல்லா நீர்நிலைகளும் நிரம்பிய பின் எஞ்சிய நீரே கடலில் கலந்தது. அத்தகைய மழைநீரைப் பண்டைத் தமிழர் சேமித்த முறை இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது.

குளம், ஏரி முதலான நீர்நிலைகளில் அவர்கள் நீர் சேமித்தது போல ஊருணி என்னும் நீர்நிலையிலும் நீரினைச் சேமித்தனர். அந்த நீர்நிலை மிகவும் தொன்மை வாய்ந்ததாகும். அந்நீர்நிலையை உலகப் பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறள், நீலகேசி, கம்பராமாயணம், திருக்கைவழக்கம், திருக்கோவையார், கல்லாடம், திருக்குற்றாலக் குறவஞ்சி முதலான இலக்கியங்களும் திவாகரம் முதலான நிகண்டுகளும் அகராதிகளும் கூறியுள்ளன. தற்காலத்தில் ஊருணி என்னும் பெயரில் ஊர்ப் பெயர்களும் நீர்நிலைகளும் உள்ளன. அவ்வாறான ஊருணியை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

திருக்குறள்

திருவள்ளுவர் உயிரினங்கள் வாழ்வதற்கு இன்றிமையாத நீரின் தேவையை உணர்ந்து கடவுள் வாழ்த்துக்கு அடுத்தாக வான்சிறப்பு என்னும் அதிகாரத்தைக் குறிப்பிடுகிறார். மழை இயற்கை கொடுத்த கொடைகளுள் சிறந்தாகும். மழையைப் பற்றியும் மழைநீர் சேமிக்கக்கூடிய நீர்நிலை பற்றியும் குறட்பாக்கள் ஆங்காங்கே நேரடியாகவும் குறிப்பாகவும் கூறியுள்ளன. அந்த வகையில் ஒப்புரவு அறிதல் அதிகாரத்தின் ஐந்தாவது குறட்பாவில் உலகம் வாழ வேண்டும் என்று விரும்புகின்ற பேரறிவாளனிடம் (ஒப்புரவறிதல் கொண்டவனிடம்) உள்ள செல்வம் எல்லோருக்கும் பயன்படும் என்று கூறுவதற்கு உவமையாக “ஊருணி நீர்நிறைந் தற்றே” (திருக்குறள்.215) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  அக்குறட்பாவில் ஊருணி என்னும் சொல் ஆளப்பட்டுள்ளதற்குப் பழைய உரையாசிரியர்களான மணக்குடவர், பரிதியார், காளிங்கர், பரிமேலழகர் ஆகியோர் உரை தந்துள்ளனர்.

 மணக்குடவர்

மணக்குடவர் ஊருணி என்னும் சொல்லுக்கு “ஊர் உண்கின்ற கேணி” (திருக்குறள்.215, மணக்குடவர் உரை) என்னும் பொருளில் உரையைக் கூறியுள்ளார். அவர் கூறிய ஊர் உண்கின்ற கேணி என்னும் உரை சங்க இலக்கியத்தில் இரண்டு இடங்களில் ஆளப்பட்டுள்ளது. இதனை,

          “ஊருண் கேணி யுண்டுறைத் தொக்க

            பாசி யற்றே” (குறுந்தொகை, 399:1,2)

என்னும் பாடலடிகளில் ஊரார் உண்ணும் கேணியில் (சிறுகுளத்தில்) பாசியானது படர்ந்துள்ளது. அதனை நீக்கி உண்ணுவதற்குரிய நீராக்க முயற்சி செய்வர் என்றும்,

“ஊருண் கேணிப் பகட்டிலைப் பாசி

வேர்புரை சிதாஅர் நீக்கி நேர்கரை

நுண்ணூற் கலிங்க முடீஇ” (புறநானூறு, 392:13-15)

என்னும் பாடலடிகளில் பெரிய இலையுடைய பாசி ஊரார் உண்ணும் கேணியில் படர்ந்துள்ளது. அதனின் வேர் போல அணிந்திருந்த ஆடையைக் களைந்துவிட்டு, நேரிய கரையும் நுண்ணிய நூலாலுமான ஆடையை அணிந்து கொண்டனர் என்றும் கூறப்பட்டுள்ளன. மேற்கூறியவற்றிலிருந்து ஊருணி என்பது ஊரார் உண்ணக் கூடிய சிறிய அளவுடைய நீர்நிலை என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. அவற்றில் கேணி என்பது எந்த நீர்நிலையை உணர்த்துகின்றது என்பதை அறிய வேண்டியுள்ளது.

கேணி என்னும் சொல்லிற்கு மணலில் தோண்டிய கேணி (மணற்கேணி) (திருக்குறள், 396:1:3) என்றும் சேறாக உடைய நிலத்தில் தோண்டிய பள்ளம் (சுனை) (அகநானூறு,137:2:2) என்றும் அகலமாகத் தோண்டிய கிணறு (நற்றிணை, 92:5:4 ) என்றும் சிறிய அளவுடைய குளம் (சிறுகுளம்) (பட்டினப்பாலை, 51) என்றும் பொருள் தரப்பட்டுள்ளது. தற்காலத்தில் கேணி என்பது நீரூற்று உள்ள இடத்தில் வட்டவடிவமாகத் தோண்டி அதனைச் சுற்றிக் கல்லை அடுக்கிக் கட்டப்பட்டுக் குடிநீருக்காகவும் பிற தேவைகளுக்காகவும் மக்கள் பயன்படுத்துகின்றனர். இதற்குக் கிணறு என்னும் வேறு பெயரையும் குறிப்பிடுகின்றனர். கேணி, கிணறு ஆகிய இரண்டும் ஒன்றல்ல. அவை வெவ்வேறானவை என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. அது மேலும் ஆய்விற்குரியது. குறிப்பாக இந்தக் கேணி பழம்வீடுகளில் இன்றும் உள்ளதைக் காணமுடியும். ஆதலால் பல்வேறு பெயர்களைக் கொண்ட கேணி என்னும் நீர்நிலை தோன்றிய விதத்தை முதலில் காணவேண்டும்.

பூமியின் மேற்பரப்பில் நீரோடுவது போலப் பூமியின் கீழ்ப்பரப்பில் நீரோட்டங்கள் உண்டு. அவ் விடத்தின் மேற்பரப்பில் இயற்கையாக வெளிவரும் நீரை ஊற்று என்பர். அது இயற்கையாக உருவாகும் நீரூற்றாகும். செயற்கை நீரூற்று என்பது மனித முயற்சியால் உருவாக்கப்படுவதாகும். நீரோடிய மேற்பகுதி வறண்ட நிலையில் இருக்கும். அவ் விடங்களின் கீழ்த் தோண்டினால் நீர் ஊறும். அதில் உள்ள நீரை இறைத்தால் மீண்டும் மீண்டும் நீர் ஊறிக் கொண்டே இருக்கும். அதனை, “இறைப்பவர்க் கூற்றுநீர் போல மிகும்” (திருக்குறள், 1161) என்பார் திருவள்ளுவர். நிலத்தில் தோண்டி உருவாக்கப்பட்ட மணற்கேணி, சுனை, கிணறு, சிறுகுளம் முதலான நீர்நிலைகள் நீரூற்றுகளிலிருந்து பெறப்பட்டவை ஆகும். அதாவது மழை நீரினை நேரடியாகப் பெறாமல் ஊற்றிலிருந்து பெறப்பட்ட நீர்நிலைகள் எனப் புரிந்து கொள்ளலாம். நீரூற்றுகளிலிருந்து பெறப்பட்ட மேற்குறித்த நீர்நிலைகளில் கேணி என உரையாசிரியர் கூறும் பொருள் எது என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

“வண்டிமிர் பொய்கையும் வாவியுங் கயமும்

கேணியுங் கிணறு நீணிலைப் படுவும்” (பெருங்கதை, 3:3:5,6)

என்னும் பாடலடிகளில் கேணியை அடுத்துக் கிணறு என்னும் நீர்நிலை வந்துள்ளன. அதிலுள்ள கேணி என்பது சிறுகுளம் என்றும் அது இன்றைய மக்கள் பயன்படுத்தும் குட்டையைக் குறிக்கும் என்றும் உரையாசிரியர் பொ.வே.சோமசுந்தரனார் குறிப்பிட்டுள்ளார். குட்டையானது குளத்தைவிட சிறியதாகவும் மடுவை விட பெரியதாகவும் இருக்கும். அக்குட்டை வான் மழையை மட்டுமே நம்பியுள்ள நீர்நிலையாகும். மேற்குறித்த சான்றுகளின் முடிவாக உரையாசிரியர் மணக்குடவர் கூறியுள்ள கேணி என்னும் நீர்நிலை இன்றைக்குக் குட்டை (சிறுகுளம்) என்று சொல்வதை அறிந்து கொள்ளமுடிகிறது.

பண்டைக் காலத்திலிருந்து கேணி என்று முடிகின்ற ஊர்ப் பெயர்கள் சிறிய நீர்நிலையுடைய குட்டை என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளதா? என்பதை ஆராய்ச்சி செய்வது அவசியமாகிறது. சான்றாகத் திருவல்லிக்கேணியைக் குறிப்பிடலாம். கேணி என்றால் இன்றைய காலத்தில் மக்கள் வீட்டுப் பயன்பாட்டிற்காக உள்ள கேணியோடு ஒப்பிட்டுவிடக்கூடாது என்பதற்காகக் கூறப்படுகிறது. கேணி, குட்டை ஆகிய இரண்டும் நீர்நிலைகளாக இருந்தாலும் வெவ்வேறானவை ஆகும்.

இன்றைய காலத்தில் நவீன சாதனங்களைக் கொண்டு நீரினைப் பெறுவதால் குட்டையானது பல இடங்களில் சிதிலமடைந்தும் தூர்ந்தும் போயுள்ளதை எளிதாகக் காணலாம். அக்குட்டைகளைத் தூர்வாரினால் மழை நீரினைச் சேகரிக்க முடியும். அதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். குடிநீர் பிரச்சனையும் தீரும்.

பரிதியார்

பரிதியார் ஊருணிக்கு “வானேரி” (திருக்குறள், 215, பரிதியார் உரை) என்று குறிப்பிட்டுள்ளார். வானேரி என்பதை வான் + ஏரி எனப் பிரிக்கலாம். வான் என்பது மழையையும் ஏரி என்பது நீர்நிலையையும் குறிப்பதாகும். அதாவது மழையினால் நேரடியாக நீர் பெறக்கூடிய நீர்நிலை என்பதே இதன் பொருளாகும். பொதுவாக ஏரியில் நீர் சேமித்தல் என்பது பண்டைய காலந்தொட்டே இருந்து வருகிறது. ஏரி என்னும் சொல்லில் இரண்டு இணைந்த ஏரிகள் (பட்டினப்பாலை, 39) இருந்ததையும் பரந்த அளவில் நீரினையுடைய ஏரி (சிலப்பதிகாரம், 13:192) இருந்ததையும் பண்டைய இலக்கியங்கள் சுட்டுகின்றன. முன்னோர்கள் ஏரியை ஏற்படுத்துவதிலும் பராமரித்தலிலும் தனிக் கவனம் செலுத்தினர் என்பதற்கு ஏரி வாரியம் அமைத்திருந்ததைச் சான்றாகக் கூறலாம்.

ஏரியைக் குளம் என்றும் குளத்தை ஏரி என்றும் சொல்வது உண்டு. ஏரி, குளம் ஆகிய இரண்டும் வெவ்வேறானவை என்பதை, “பூசல் வன்கரைக் குளங்களு மேரியும் புகுவ” (பெரிய புராணம், 1027:4) என்னும் பாடலடி குறிப்பிட்டுள்ளது. அதாவது குளங்களிலும் ஏரியிலும் ஒரே நேரத்தில் நீர் புகுதலால் இரண்டு நீர்நிலைகளும் வேறானவை என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. அதோடு மட்டுமல்லாது அவ் வேரி ஆற்றுநீரைப் பெறக்கூடியதாகவும் அது பெரும்பாலும் பாசனத்திற்குப் பயன்படுபவதாகவும் இருந்தது. ஏரிகள் என்று பொதுவாகக் கூறினாலும் ஊருணிக்கு வானேரி என்று பரிதியார் உரை கூறியதை நோக்க வேண்டியுள்ளது.

வானேரி என்பது ஆற்றுநீர் இல்லாத இடங்களில் மழைநீரைச் சேமிப்பதற்காக உருவாக்கப்படுவதாகும். அதாவது மழைப் பொழிந்தவுடன் நீரானது பள்ளத்தை நோக்கி ஓடும். அந்நீர் பள்ளமான பகுதியில் தேங்கும். முன்னோர்கள் அவ் விடத்தில் கரை அமைத்து நீரைத் தேக்கி, மழையினால் அக்கரை உடையாதவாறு காவல் காத்தனர். அவ் வேரிகள் மழைநீரினை மட்டுமே நம்பி இருப்பதால் வானம் பார்த்த ஏரி என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். பண்டைக் காலத்தில் பெரும்பாலும் அவ்வேரிகளை ஆறு இல்லாத ஊர்களில் உருவாக்கி இருக்க வேண்டும். அது மக்களுடைய குடிநீரின் தேவையை முதன்மையாய்த் தீர்த்திருக்கும். ஆற்றுநீர் ஓடாத இடங்களில் மழைநீரினைச் சேமித்து வைக்கும் பழக்கமுடையவர்கள் முன்னோர்கள் என்பது இதன் மூலம் தெரியவருகிறது. எனவே வானேரியைப் பெரிய ஏரி என்று கூறுவாறுமுளர். அவ்வாறு கூறினாலும் அது மழைப் பொழிவை மட்டும் நம்பி இருப்பதால் பெரிய ஏரியாகவோ அல்லது ஏரியைவிடச் சிறியதாக உடைய குளமாகவோ இருக்க வாய்ப்பில்லை. அது ஒவ்வொரு ஊரிலும் மழை பெய்வதற்கு ஏற்றாற் போல அமைந்த ஒரு நீர்நிலை எனப் பொதுவாகக் குறிப்பிடலாம். அதனால்தான் ஊருணிக்கு வானேரி என்று பொருள் பொதிந்த உரையைப் பரிதியார் கூறியுள்ளதை நோக்க முடிகிறது.

காளிங்கர்

காலிங்கரைக் காளிங்கர் என்று அழைக்கும் மரபுமுண்டு. அவருடைய பெயரைத் தண்டபாணி தேசிகர் எழுதிய திருக்குறள் உரைக் களஞ்சியத்தில் காளிங்கர் என்றே குறிப்பிட்டுள்ளார். ஆதலால் இக்கட்டுரையில் அவருடைய நூல் எடுத்தாளப்படுவதால் காளிங்கர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. காளிங்கர் ஊருணி என்னும் சொல்லுக்கு “ஊருணியாகிய பேரேரியும் பெருங்குளமும்” (திருக்குறள், 215, காளிங்கர் உரை) என்று குறிப்பிடுவார். அவர் கூறும் பேரேரியும் பெருங்குளத்தையும் இரண்டாகப் பிரித்துப் பொருள் கொள்ளலாம்.

பண்டைய காலத்தில் கோட்டகம் (சீவகசிந்தாமணி, 41:3:4) என்னும் பெயரில் ஆழமான நீர்நிலை இருந்துள்ளது. அது பேரேரி என்னும் நீர்நிலையை ஒத்ததாக இருந்திருக்க வேண்டும். பொதுவாக ஏரியைச் சிற்றேரி, பேரேரி என்பர். சிற்றேரி என்பது தற்காலத்தில் தாங்கல் என்னும் பெயரில் வடமாவட்டங்களில் வழங்கப்படுவதைக் காணமுடிகிறது. பேரேரி என்பது பெரிய ஏரியைக் குறிக்கும். அப் பேரேரிகளை அரசர்கள் உருவாக்கியுள்ளனர். சுந்தரசோழப் பேரேரி, குந்தவைப் பேரேரி முதலான பேரேரிகளைச் சான்றாகக் கூறலாம். அரசர்கள் போலவே பேரேரிகளை அரசர்களுக்கு அமைச்சர்களாக இருந்தவர்களும் ஊர் தனவந்தர்களும் உருவாக்கியுள்ளனர். அது வற்றாத கடல் போலக் காட்சி அளித்ததால் சமுத்திரம், கடல், வாரிதி என்னும் பெயர்களையும் பெற்றுள்ளது. அதற்கு அம்பாசமுத்திரம் என்னும் ஊர்ப் பெயரில் நீர்நிலை இருந்துள்ளதைச் சான்றாகக் கூறலாம்.

பேரேரியைப் பேரி என்று சொல்வதும் உண்டு. பேரி என்பது பேரேரியிலிருந்து மருவி வந்த சொல்லாகும்.  பேரி என்னும் சொல்லில், “சிவலப்பேரி (சீவலப்பேரி), வீரபாண்டியப்பேரி” (முக்கூடற்பள்ளு, 92) ஆகிய பெயர் கொண்ட ஏரிகள் சுட்டப்பட்டுள்ளன. அவ் விரண்டு ஏரிகளும் பேரேரியைக் குறிப்பதாகும். பொதுவாகப் பேரேரிகள் ஆற்றுநீர் இல்லாத காலங்களில் பாசனத்திற்கும் மக்களுடைய தேவைகளுக்கும் உதவியுள்ளன. அது பெரிய கொள்ளளவைக் கொண்ட நீர்நிலையாதலால் ஊரின் புறத்தேதான் அமைந்திருக்கும்.  முன்னோர்கள் ஊரின் புறத்தே அத்தகைய பேரேரியை அமைத்தது மழைக் காலங்களில் பெருமளவில் சேதத்தைத் தவிர்ப்பதற்காகவே என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.

பேரேரியைப் போலவே பெருங்குளமும் பெரிய நீர்நிலைக்கு வழங்கக்கூடிய பெயராகும். பொதுவாகக் குளத்தைச் சிறுகுளம், பெருங்குளம் (பெரிய குளம்) என்று குறிப்பிடுவர். சிறுகுளத்தைப் பற்றி முன்பே மணக்குடவர் உரையில் கூறியதைக் காண்க. பெருங்குளத்தைப் பண்டைய தமிழர் பயன்படுத்தியுள்ளனர். இதனை,

“தொழின்மழை பொழிந்த பானாட் கங்குல்

எறிதிரைத் திவலை தூஉஞ் சிறுகோட்டுப்

பெருங்குளங் காவலன் போல” (அகநானூறு.252:11-13)

என்னும் பாடலடிகளில் மழை பெய்ததனால் அலைகளையுடைய பெருங்குளத்தின் கரையானது தழும்பியது. அதனால் அக்கரையைக் காவல் செய்தனர் என்று குறிப்பிட்டுள்ளன.

பெரிய குளம் என்பதால் கிட்டத்தட்ட ஏரி அளவிற்கு இருந்திருக்க வேண்டும். அப்பெருங்குளங்களுக்குப் பேரேரியைப் போலவே ஆற்றுநீர் பெறப்பட்டதும் அதன் கரை நீர் உடைந்து செல்லாத அளவிற்கு வலிமையாக இருந்ததும் பாசனத்திற்காக மடை திறந்து வாய்க்காலில் விடப்பட்டதும் கீழ்வரும் பாடலில் குறிப்பிடப்படுகிறது.

“அனைய வாகிய நதிபரந் தகன்பணை மருங்கின்

கனைநெ டும்புன னிறைந்துதிண் கரைப்பெருங்

புனையி ருங்கடி மதகுவாய் திறந்திடப் புறம்போய்

வினைஞ ரார்ப்பொலி யெடுப்பநீர் வழங்குவ வியன்கால்” (பெரிய புராணம், 1105)

என்பதன் மூலம் அறியலாம். மேற்கூறியவற்றிலிருந்து வற்றாத நீரினைக் கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கும் பாசனத்திற்கும் பேரேரி, பெருங்குளம் ஆகிய நீர்நிலைகள் பயன்பட்டதால் ஊருணி என்னும் சொல்லுக்குக் காளிங்கர் உரையெழுதியுள்ளதை நோக்கமுடிகிறது.

பரிமேலழகர்        

திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர். அவர் ஊருணி என்னும் சொல்லுக்கு “ஊரின் வாழ்வார் தண்ணீ ருண்ணுங் குளம்” (திருக்குறள், 215, பரிமேலழகர் உரை) என்று குறிப்பிட்டுள்ளார். உரையில் அவர் குறிப்பிடப்படுள்ள குளம் என்னும் நீர்நிலை மிகவும் பழைமை வாய்ந்ததாகும். அதாவது குளம் என்னும் நீர்நிலை நாகரிகக் கால மக்களால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக உலக நாகரிகங்கள் ஆற்றங்கரையில் தோன்றியது என்பர். ஆற்றங்கரையில் நாகரிகங்கள் தோன்றி வளர்ந்த இடம் மட்டுமல்ல. அது மக்கள் ஓர் இடத்தில் நிலைத்து வாழ்வதற்குரிய நீரினை முதன்மையாய்த் தந்த இடமுமாகும். அந்த இடத்தில் அவர்கள் குடிநீருக்காகவும் மற்றும் பிற தேவைகளுக்காவும் நீர்நிலைகளை உருவாக்கினர். அவற்றில் முதன்மையாக அமைவது குளமாகும்.

பண்டைய தமிழர் குளங்கள் உருவாக்குவதைத் தமது கடமையாகக் கொண்டிருந்தனர். தூர்ந்து போன குளத்தைத் தோண்டுதலும் (பட்டினப்பாலை, 282, 83), குளம் வெட்டுவதை அறமாகக் கருதிச் செய்தலையும் (சிறுபஞ்சமூலம், 66) பற்றிப் பண்டைய இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. மேலும் அவர்கள் பயன்படுத்திய குளம் என்னும் நீர்நிலைக்குக் குட்டம் (சிறுபாணாற்றுப்படை, 180), கயம் (பரிபாடல், 7:23), தடம் (பரிபாடல், 6:87), வாவி (சீவகசிந்தாமணி, 1204:1), படுகர் (திவாகரம், 5:61), அகழ் (மலைபடுகடாம், 214), தடாகம் (பரிபாடல், 9:77) பொய்கை (பெருங்கதை, 3:9:12) முதலான வேறு பெயர்கள் வழங்குவதைக் காணமுடிகின்றது. மேற்கூறிய குளம் தொடர்பாக வழங்கும் வேறுபெயர்களை ஆராய்ச்சி செய்வது மேலும் ஆய்வுக்குப் பயனுடையதாக இருக்கும்.

குளமானது குட்டையை விடப் பெரியதாகவும் ஏரியை விட சிறியதாகவும் இருக்கும். அதன் கரை பெரியதாக இருந்ததை “வியன்” என்று அகநானூறு (42:9:2) கூறியுள்ளது. அக்குளம் பெரும்பாலும் ஊர்க்குள்ளே இருந்துள்ளது. அது மழைநீரை வீணாக்காமல் சேமிக்கக் கூடியதாகவும் ஆற்றுநீரைப் பெறக் கூடியதாகவும் (மதுரைக்காஞ்சி, 244-246) இருந்துள்ளதைக் காணமுடிகிறது. சில நேரங்களில் மழை இல்லாமல் அது நீர் வற்றியும் இருந்தது. அதனை “அறுகுளம்” என்று புறநானூறு (142:1:1) குறிப்பிட்டுள்ளது.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஆன்றோர் கருத்து. ஊரில் கோயில் இருந்தால் கட்டாயம் குளம் இருக்கும். ஆதலால் தற்காலத்தில் ஊர்தோறும் குளங்கள் இருப்பதைக் காணமுடிகிறது.  அத்தகைய குளங்கள் பல உண்டு. அவை திருக்குளம், கோயிற்குளம், தெப்பக்குளம், தளிக்குளம், புதுமுகக்குளம், ஊர்க்குளம், முக்குளம், புதுக்குளம் முதலிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அத்தோடு மட்டுமல்லாது குளங்கள் பெயரால் இன்று பல ஊர்கள் அழைக்கப்படுகின்றன. சான்றாகச் சாத்தான் குளத்தைக் கூறலாம். எனவே பரிமேலழகர் ஊருணிக்குக் குளம் என்று குறிப்பிடுவதனால், அதன் தொன்மையும் ஊரின் கண்ணே இருந்தும் மக்களுடைய தேவையைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.

நீலகேசி

ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்றான நீலகேசி ஊருணியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. வாய்க்கால் இல்லாத ஊருணிக்கு மழைநீர் எவ்வாறு புகும் என்பதைக் கீழ்வரும் பாடலடிகள் குறிப்பிட்டுள்ளது.

“யூருணி நீர்நிறை வுண்டே யுறுபுனல்

வாரண வாய்க்கால் வரவில்லை யாக்கால்                  (நீலகேசி, 614:3,4)

என்பதன் மூலம் ஊருணிக்கு வாய்க்கால் வழியாக நீர் வரவேண்டும் என்பதை அறியமுடிகிறது.

கம்பராமாயணம்

கம்பர் இயற்றிய கம்பராமாயணத்தில் ஊருணி என்னும் நீர்நிலையை அதன் பயன் நோக்கில் காட்சிப் படுத்தியுள்ளார். அவர் ஊரார் உண்ணக்கூடிய ஊருணி நிறைதலும், பலருக்கு உதவக்கூடிய மரங்கள் பழுத்தலும், மழைநீர் பெய்தலும், ஆற்றுநீர் பெறுகுதலும், யார் வேண்டாம் என்று கூறுவார் என்று கீழ்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.

“ஊருணி நிறையவு முதவு மாடுயர்

பார்நுகர் பழுமரம் பழுத்த தாகவும்

கார்மழை பொழியவுங் கழனி பாய்நதி

வார்புனல் பெருகவும் மறுக்கின் றார்கள்யார்” (கம்பராமாயணம், 1480)

என்பதன் மூலம் ஊருணி நிறைதல் என்பது ஊருணி நீர் நிறைந்தற்று என்னும் குறளைப் போலவே கூறியுள்ளதைக் காணமுடிகிறது. மேலும் திருக்குறளுக்கு உரையெழுதிய வ.உ. சிதம்பரனார் இப்பாடலை மேற்கோளாகக் காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருக்கை வழக்கம்

          கம்பர் கம்பராமாயணம் பாடியது மட்டுமல்லாது சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, திருக்கைவழக்கம் முதலான சிற்றிலக்கியங்களையும் பாடியுள்ளார். திருக்கை வழக்கத்தில் ஊருணி என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது.

“- சும்மையார்

ஊருணி நீர்போ லுலகத் தவர்க்கெல்லாம்

பேரறிவா லீயும்ப்ர தாபக்கை”              (திருக்கைவழக்கம், ப.20)

என்னும் பாடலடிகளில் ஊருணியானது ஊரில் வாழ்வார் அனைவருக்கும் பயன்படுவது போலப் பிறர்க்கு உதவி செய்யும் உள்ளம் கொண்டவன் செல்வம் அனைவரும் உதவும் என்னும் கருத்தைப் பெறமுடிகிறது. இப்பாடலடிகள் மேற்கூறிய ஒப்புரவு அறிதல் என்னும் குறட்பாவின் கருத்திற்கு ஒப்பாக இருக்கிறது.

திருக்கோவையார்

“பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்று மாணிக்கவாசகரிடம் சிவபெருமான் வேண்டினார். அவர் அதன்படியே திருக்கோவையாரைப் பாடினார். அந்நூலில் ஊருணி என்னும் சொல் எடுத்தாளப்பட்டுள்ளது.

ஊருணி யுற்றவர்க் கூரன்மற் றியாவர்க்கு மூதியமே”            (திருக்கோவையார், 400:4)

என்னும் பாடலடியில் தன்னிடம் வந்தவற்குப் பயனைக் கொடுப்பது ஊருணியாகும். அது போலத் தலைவனும் எல்லோர்க்கும் பயன் உடையவனாக இருப்பான் என்பதைக் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேற்குறித்த பாடலின் மூலம் தன்னிடம் வந்து சேர்ந்த நீரைப் பிறருக்குக் கொடுத்துப் பயன்தருவது ஊருணி என்று கூறுவதை அறியமுடிகிறது.  

கல்லாடம்

சங்கக் காலத்துப் புலவர், தொல்காப்பித்துக்கு உரையெழுதியவர், பாட்டியல் நூல் எழுதியவர் எனக் கல்லாடர் பெயரில் பலர் இருந்துள்ளனர். அவற்றுள் கல்லாடத்தை இயற்றிய கல்லாடரும் ஒருவராவார்.  அந்நூல் “கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே” எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.  அத்தகைய நூலில் ஊருணி என்னும் சொல் இரண்டு இடங்களில் ஆளப்பட்டுள்ளது.

“பொய்பல புகன்று மெய்யொழித் தின்பம்

விற்றுணுஞ் சேரி விடாதுறை யூர

னூருணி யொத்த பொதுவாய்த் தம்பல

நீயுங் குதட்டினை யாயிற் சேயாய்” (கல்லாடம், 58:15-18)

என்னும் பாடலடிகளில் புதல்வனே! பல பொய்களைச் சொல்லியும் உண்மைகளைக் கைவிட்டும் இன்பத்தை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்ட பரத்தையர் வாழுமிடத்தில் உன் தந்தை இருப்பது போல, ஊரார்க்குப் பொதுவாகிய ஊருணியை ஒத்த பரத்தையரின் வாய்த் தம்பலத்தை (வெற்றிலை, பாக்கு) நீயும் மென்றாய் என்று தாய் கூறுவதும்,

“பொன்னணி மாடம் பொலிநகர்க் கூட

லாவண விதி யனையவ ரறிவுறி

ணூருணி யன்னநின் மார்பகந் தோய்ந்தவென

னிணைமுலை நன்ன ரிழந்தன வதுபோன்” (கல்லாடம், 77:24-27)

என்னும் பாடலடிகளில் பொன்னால் அணியப் பெற்ற மாடங்களாலே அழகு பெற்ற மதுரை மாநகரின் கடைத்தெருவினை ஒத்த நின்னுடைய (தலைவனுடைய) பரத்தையரை அறிவாராயின், ஊருணியை ஒத்த நின் மார்பினிடத்தே சேர்ந்த எனது இரண்டு மார்பகங்களும் நன்மை இழந்தது போல ஆகிவிடும் என்று தலைவி கூறுவதும் காணமுடிகிறது. மேற்கூறிய இரண்டு பாடலடிகளிலும் ஊருணி என்பது நீர்நிலை குறித்து வழங்கப்படுவதை அறியமுடிகிறது.

திருக்குற்றாலக் குறவஞ்சி

குற்றாலக் குறவஞ்சி திரிகூடராசப்பக் கவிராயரால் இயற்றப்பட்டதாகும். அந்நூலில் “ஊருணிப்பற்று” (திருக்குற்றாலக் குறவஞ்சி, 81) என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது. ஊருணிப்பற்றை ஊருணி + பற்று எனப் பிரிக்கலாம். ஊருணி என்பது நீர்நிலையையும் பற்று என்பது பயிரிடக்கூடிய நிலத்தையும் (வயலையும்) குறிக்கும். பொதுவாகப் பற்று என்னும் சொல்லில் வழங்கக்கூடிய நிலங்கள் அரசர்கள் காலத்தில் மானியமாக விடப்பட்ட நிலங்களைக் குறிப்பதாகும். அதனால் ஊருணி என்னும் நீர்நிலையைப் பராமரிப்பதற்காக விடப்பட்ட நிலத்திற்கு ஊருணிப்பற்று எனக் கூறுவது பொருத்தமாயிற்று. ஊருணிப்பற்றைப் போலவே ஊருணிப் பராமரிப்புக்காக விடப்பட்ட நிலத்திற்கு “ஊருணிப்புறம்” என்று சொல்வதைத் தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி (ப.108) குறிப்பிடுகிறது. எனவே நிலங்கள் ஊருணியைப் பராமரிப்பதற்காக விடப்பட்ட செய்தியை அறிந்து கொள்ளமுடிகிறது.

நிகண்டுகள்

நிகண்டின் தோற்றத்தை ஏழாம் நூற்றாண்டு என்பர். முதல் நிகண்டு திவாகரமாகும். திவாகரம் முதலான நிகண்டுகள் ஊருணி என்னும் சொல்லுக்கு “ஊர் உணும் பொதுநீர்” (திவாகரம், 5:64), “ஊருளோர் உண்நீர்” (பிங்கலம், 4:165), “உவளகம் (குளம்)” (சூடாமணி, 11:236) பொருள்களைத் தந்துள்ளன. சூடாமணி நிகண்டு உவளகம் என்னும் புதிய பொருளைத் தருகிறது. உவளகம் என்பது நீர்நிலையைக் குறிப்பதாகும். மேற்குறித்த நிகண்டுகள் ஊருணி என்னும் சொல்லுக்கு நீரையும் நீர்நிலையும் குறிப்பதை அறிய முடிகிறது.

அகராதிகள்

அகராதிகள் சொற்களின் அரிய பொருளை அறிவதற்குப் பெரிதும் உதவுகின்றன. அத்தகைய அகராதிகள் ஊருணி என்னும் சொல்லிற்கு “ஊராருண்ணுநீர்நிலை” (தமிழ்ப் பேரகராதி, ப.501) எனவும் “(பெரும்பாலும் கிராமப்புறத்தில் குடிநீருக்கான) குளம்” (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, ப.233) எனவும் பொருள் விளக்கங்களைத் தருகின்றன. மேலும் தற்காலத்தில் ஊருணி என்ற பெயரில் நீர்நிலை இருப்பதும் ஊர்கள் இருப்பதும் அறியமுடிகிறது.

இன்றைய நிலை

இலக்கியங்கள், நிகண்டுகள், அகராதிகள் ஆகியவை ஊருணி என்னும் சொல்லிற்கு ஊரார் உண்ணக்கூடிய நீர், குளம், நீர்நிலை ஆகிய பொருள்களை விளக்கமாகத் தருக்கின்றன. இந்தச் சொல்லை ஊர் + உண் + இ எனப் பிரிக்கலாம். ஊர் என்பது ஊரினர் என்றும் உண் என்பது உண்ணப்படும் நீர் என்றும் இ என்பது விகுதியாகவும் உள்ளது. ஊரினர் என்பது இடவாகுபெயராகவும், உண் என்பது உண்ணுவது, குடிப்பது, பருகுவது முதலானவற்றிற்கு வினையாகவும், இ என்பது செயப்படுபொருள் விகுதியாகவும் பொருள்களைத் தந்து ஊருணி எனக் காரணப் பெயராக அமைகிறது. ஊருணியைப் போலவே “ஊருண்ணி” என்னும் சொல்லைத் தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதியும் (ப.108) “ஊரணி” என்னும் சொல்லைத் தமிழ்ப் பேரகராதியும் (ப.500) குறிப்பிட்டுள்ளன. ஊருண்ணி என்னும் சொல்லை ஊர் + உண்ணி எனப் பிரித்து ஊருண்ணியானது தொகுத்தல் விகாரமாகி ஊருணி என ஆயிற்று. ஊரணி என்னும் சொல்லானது ஊர் + அணி எனப் பிரிக்கலாம். அதாவது ‘கோயில் இல்லா ஊர் பாழ்’ என்பது போல ஊருணி இல்லாத ஊரும் பாழாகும். ஆகவே ஊருணி ஊரணி என்று மருவியதும் அது ஊரிலிருந்து அழகையும் தருகிறது. ஊரணி என்று மருவிய சொல்லானது பழம் நழுவி பாலில் விழுந்தது போலாயிற்று. அதனால் ஊரணி என்று கூறுவதும் சாலப் பொருத்தமாம். மேலும் தற்காலத்தில் ஊரணி என்னும் பெயரில் கல்லூரணி என்னும் ஊர் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.

மக்கள் ஊருணியைக் குளம் என்று சொல்வது பெருவழக்காய் இருக்கிறது. திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் ஊருணியைக் குளம் என்று குறிப்பிடுவது இங்கு நினைவு கூரத்தக்கது. அதோடு மட்டுமல்லாது பிற்காலத்தில் திருக்குறளுக்கு உரையெழுதிய பெரும்பாலானோர் ஊருணியை நீர் உண்ணக்கூடிய குளம் என்றே குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஊர்க்குடிநீர் மற்றும் பாசனத்திற்குப் பயன்படுத்திய நீர்நிலையை ஊருணிகுளம் என்னும் சொல்லில் தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி (ப.108) குறிப்பிட்டுள்ளது நோக்கத்தக்கதாகும். தற்காலத்தில் ஊருணி என்ற பெயரில் மழைநீரினைச் சேமித்து வைக்கும் முறை மழைப் பொழிவு குறைவாக உடைய பகுதிகளில் இருந்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டின் வறட்சி மிகு மாவட்டங்களில் ஒன்றான இராமநாதபுரத்தில் காணப்படுகிறது. அந்நீர்நிலை குடிநீர்த் தேவைக்கும், மழை இல்லாத வறட்சிக் காலங்களில் பாசனத்திற்கும், கால்நடைகளின் தாகம் தீர்க்கவும் பயன்படுகிறது. அந்நீர்நிலையின் மைய இடத்தில் கேணி அமைத்திருப்பர். வறண்ட காலங்களில் அக்கேணி நீர் மக்களுக்குப் பயன்படுகிறது.

தொகுப்புரை

  • பண்டைய தமிழர் பயன்படுத்தி வந்த ஊருணி என்னும் நீர்நிலை காலந்தோறும் இருந்துள்ளதை அறியமுடிகிறது.
  • திருக்குறள் உரையாசிரியர்கள் குறிப்பிடும் கேணி, வானேரி, பேரேரி, பெருங்குளம், குளம் முதலான நீர்நிலைகளின் பெயர்கள் ஊருணிக்குப் பொதுவாய் அமைந்தது.
  • பண்டைய மக்கள் ஊரினருக்காகப் பயன்படுத்திய நீர்நிலைக்கு ஊருணி என்று கூறுவது பெயருக்கேற்றவாறு பொருத்தமாக அமைகிறது.
  • தென்மாவட்டங்களில் உள்ள சில நீர்நிலைகளை ஊருணி என்று அழைப்பது இன்றும் ஊருணி பயன்பாட்டில் உள்ளதை அறியமுடிகிறது.
  • மழைநீரைச் சேமித்துப் பயன்படுத்தும் இப்பண்பாடு பற்றிய அறிவினை இனிவரும் காலங்களுக்கும் தேவையாகும். அது பற்றிய அறிதலையும் புரிதலையும் தமிழ்ச் சமூக அறிவுக் களஞ்சியத்தில் வைப்பது கடமையாக உள்ளது.

துணைநூற்பட்டியல்

  1. அகநானூறு, (பதி.) பாகனேரி வெ.பெரி.பழ.மு. காசிவிசுவநாத செட்டியார், கழக வெளியீடு, சென்னை, 1951.
  2. இராமாயணம் – அயோத்தியா காண்டம் (முதற்பகுதி), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம், 2010.
  3. ஏரெழுபது, திருக்கைவழக்கம், ஞானபீடம் சீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் ஆதீன வெளியீடு, காஞ்சிபுரம், 1966.
  4. கல்லாடம், (பதி.) அருணாசல குருக்கள், லக்ஷ்மீ விலாஸ சாலை, சென்னை, 1932.
  5. குறுந்தொகை, (உரை.) பொ.வே. சோமசுந்தரனார், கழக வெளியீடு, சென்னை, 1955.
  6. சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம், (உரை.) பொ.வே. சோமசுந்தரனார், கழக வெளியீடு, சென்னை, 1979.
  7. சிறுபஞ்சமூலம், (உரை.) வித்துவான் பு.சி. புன்னைவனநாத முதலியார், கழக வெளியீடு, சென்னை, 1963.
  8. சீவகசிந்தாமணி மூலம், நச்சினார்கியருரையும், (பதி.) உ.வே. சாமிநாதையர், கபீர் அச்சுக்கூடம், சென்னை, 1969.
  9. திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றாலநாதசுவாமி கோயில் வெளியீடு, தென்காசி.
  10. திருக்குறள் உரைக்களஞ்சியம், ச.தண்டபாணி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 2008.
  11. திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும், (உரை.) ஸ்ரீ.உ.வே.வை.மு. கோபாலக்ருஷ்ணமாசார்யர், ஆனந்தா பார்வதி அச்சகம், சென்னை, 1965.
  12. திருக்கோவையார், (உரை.) பொ.வே. சோமசுந்தரனார், கழக வெளியீடு, சென்னை, 1970.
  13. நற்றிணை நானூறு, (உரை.) அ. நாராயணசாமி ஐயர், கழக வெளியீடு, சென்னை, 1976.
  14. நீலகேசி, (பதி.) அ. சக்கரவர்த்தி நயினார், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1984.
  15. பத்துப்பாட்டு மூலம் நச்சினார்கினியருரையும், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1986.
  16. புறநானூறு (201 – 400 பாட்டுகள்), (பதி.) ஔவை சு. துரைசாமிப்பிள்ளை, கழக வெளியீடு, 1951.
  17. பரிபாடல் மூலம் உரையும், (உரை.) பொ.வே. சோமசுந்தரனார், கழக வெளியீடு, சென்னை, 1975.
  18. பெரிய புராணம் மூலமூம் தெளிவுரையும், பாகம் – 2, (உரை.) வ.த. இராம சுப்பிரமணியம், திருமகள் நிலையம், சென்னை, 2002.
  19. பெருங்கதை, – பகுதி – 2, (உரை.) பொ.வே. சோமசுந்தரனார், கழக வெளீயிடு, சென்னை, 1970
  20. முக்கூடற்பள்ளு, (பதி.) மு. அருணாசலம், சாது அச்சுக்கூடம், சென்னை, 1940.
  21. சேந்தன் திவாகரம், பிங்கலம், சூடாமணி, சாந்தி சாதனா வெளியீடு, சென்னை, 2004.
  22. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, திருவான்மியூர், சென்னை, 2016.
  23. தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி, சாந்தி சாதனா வெளியீடு, சென்னை.
  24. தமிழ்ப் பேரகராதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1982.

***************************************************************************************

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

பண்டைத் தமிழர்கள் நீர்மேலாண்மையில் சிறந்து விளங்கியுள்ளனர். நீர்நிலைகளை உருவாக்கி விவசாயத்தில் பல புரட்சிகளைச் செய்துள்ளனர். ஆறு, குளம், ஓடை, ஊருணி போன்ற நீர்நிலைகள் விவாசயத்திற்குப் பயன்பட்டன. இக்கட்டுரை ஊருணி என்ற சொல்லையும் அதன் பயன்பாட்டையும் தெளிவாக விளக்குகின்றது. ஊருணி என்ற சொல்லாக்கமும், இலக்கியங்களிலும் உரைகளிலும் இச்சொல் எத்தகைய பின்புலத்தில் கையாளப்பட்டுள்ளது என்பதையும் கட்டுரையாளர் விளக்கியுள்ள திறம் பாராட்டிற்குரியது. ஊருணி குறித்து எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை உரிய ஆய்வுநெறிகளைப் பின்பற்றி அமைந்துள்ளது. கட்டுரையாளருக்குப் பாராட்டுகள்.

***************************************************************************************

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “(Peer Reviewed) ஊருணி

  1. அருமையான படைப்பு…வாழ்த்துகள் எழுத்தாளரே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.