நெல்லைத் தமிழில் திருக்குறள்- 80
நாங்குநேரி வாசஸ்ரீ
80. நட்பாராய்தல்
குறள் 791:
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு
ஒருத்தரப் பத்தி சரியா தெரிஞ்சிக்கிடாம சேக்காளியாப் பழகினோம்னா பொறவு விட்டுப்போட்டு போக ஏலாத அளவு சங்கடத்த உண்டாக்கிப் போடும்.
குறள் 792:
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்
மறுபடி மறுபடி சோதிச்சுப் பாக்காம பழகுத சேக்க(நட்பு) சாவுத அளவு தொயரத்த உண்டாக்கிப் போடும்.
குறள் 793:
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு
ஒருத்தனோட கொணம், பொறந்த குடி, செஞ்ச தப்பு, சாதி சனத்தோட தன்ம இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்ட பொறவு சேக்காளியா இருக்கணும்.
குறள் 794:
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு
ஒசந்த குடியில பொறந்து பொல்லாப்புக்கு அஞ்சுதவன ஏதாச்சும் விலையாக் கொடுத்தாது சேக்காளியா ஆக்கிக்கிடணும்.
குறள் 795:
அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய
வல்லார்நட் பாய்ந்து கொளல்
தப்பு செய்ய நெனயுதப்போ மனசு நோவ அழவுட்டு செஞ்சபொறவு கண்டிச்சும் சொல்லுத ஒலக நடப்ப அறிஞ்சவுகளோட சேக்காளியா இருக்கணும்.
குறள் 796:
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
கெடுதல் வருததுனால ஒரு நன்மயும் உண்டு. அது எவன் நல்ல சேக்காளின்னு காட்டிக் கொடுத்துப் போடுத சாதனமா அமைஞ்சுக்கிடும்.
குறள் 797:
ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்
கூறுகெட்டவனோட சேக்கய விட்டுப்போடுதது ஒருத்தனுக்கு லாபத்தக் கொடுக்கும். .
குறள் 798:
உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு
உற்சாகத்தக் கொறைக்குத எந்தக் காரியத்தயும் நெனச்சிப் பாக்கக் கூடாது. அது கணக்கா சங்கடம் வருதப்போ நழுவி ஓடுத சேக்காளிய கூட வச்சிக்கிடக் கூடாது.
குறள் 799:
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்
சங்கடப்படுத காலத்துல கைவிட்டுட்டுப் போனவுகளோட நெனப்பு, சாவுத நேரத்துல கூட நெஞ்ச சுட்டுப் பொசுக்கும்.
குறள் 800:
மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும
ஒருவுக ஒப்பிலார் நட்பு
மனசுல மாசு இல்லாதவுகளோட சேக்க வச்சிக்கிடணும். ஒத்துப் போவாதவங்களோட சேக்கய, விலை கொடுத்தாது வெலக்கிப் போடணும்.
(அடுத்தாப்லையும் வரும்…