மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா

பூமிக்கு வந்த புதுமலராய் நாமிருப்போம்
கோபிக்கும் குணமதனைக்
குழிதோண்டிப் புதைத்து நிற்போம்
சாமிக்கு அருகணைய
சன்மார்க்கம் மனம் கொள்வோம்
ஆருக்கும் இடராக
அமையாது நாம் வாழ்வோம்!

மண்ணுக்குள் வேரூன்றும் மரமாக
நாம் இருப்போம்
கண்ணுக்குள் மணி போன்று
கருத்துகளை இருத்திடுவோம்
விண்ணிற்கும் பரிதியைப் போல்
மண்ணினிலே விளங்கிடுவோம்
எண்ண மெலாம் எந்நாளும்
இமயமென உயர்த்திடுவோம்!

அரை குறையாய் வாழுவதை
அகமிருந்து அகற்றிடுவோம்
அறம் அதனை வாழ்வாக்கி
ஆனந்தம் பெற்றிடுவோம்
பெறுமதியாய்ச் சொல் தேர்ந்து
பெருமகிழ்வாய் உரைத்திடுவோம்
வறுமை நிலை வந்தாலும்
வாய்மையினைக் காத்துநிற்போம்!

நிலை தளர்ந்து நிற்பாரை
நிமிந்துவிடச் செய்திடுவோம்
தலை குனியச் செய்வாரை
தானுணரச் செய்துநிற்போம்
விலை பேசும் உறவுகளின்
உளமன்பை நிறைத்திடுவோம்
வளமாக நாம் வாழ
வழிவகுப்போம் வாருங்கள்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.