Author: ஜெயராமசர்மா

  • திருவெம்பாவையும் மார்கழியும் !

     எம் . ஜெயராமசர்மா ..மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

    மார்கழி மாதத்தைப் பீடை பிடித்தமாதம் என்று சொல்லி –

    சுபநிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்துவிட்ட நிலையினைக் காண்கின்றோம். இது பற்றிய விளக்கத்தை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியமானதே. பல பெயர்கள் காலத்தின் போக்கால் கருத்து மாறுபட்டு வேறு ஒரு பொருளை உணர்த்துவது நடந்தே வந்திருக்கிறது.” ஒப்பிலி அப்பன்” என்னும் சுவாமியின் பெயரை உப்பிலி அப்பன் என மாற்றி – அந்த சுவாமிக்கு உப்பில்லாத பொருட் களையே நிவேதனம் செய்யும் வழக்கம் நாளடைவில் ஏற்பட்டுவிட்டது.அதே போன்றதே மார்கழி மாதம் பற்றியதுமாகும்.” பீடுடைய மாதம்” என்பது பீடை உடைய மாதமாக்கப் பட்டுவிட்டது.பீடு என்றால் பெருமையானது, உயர்வானது என்பது பொருளாகும்.

    திருவாதிரை நட்சத்திரம் ” ஆருத்ரா ” என சமஸ்கிருதத்தில் வழங்கப்ப டுகின்றது.சிவனையும் ஆதிரையான் எனக் குறிப்பிடும் வழமையும் எமது சமயத்தில் இருக்கிறது.மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரதுக்கு முந்திய பத்து நாட்களும் திருவெம்பாவையாகக் கருதி திருவாதிரை இடம்பெறும் பத்தாம் நாளை ” ஆருர்த்தா ” தரிசனம் எனப் போற்றி சிவனை வழிபடும் வழக்கமும் இந்த மார்கழிக்கே உரியது என்பதும் முக்கியமானதாகும்.அதுமட்டுமல்ல சம்பந்தப் பெருமான் அவதாரம் செய்ததுகூட மார்கழித்திருவாதிரை என்றும், சேந்தனார் திருப்பல்லாண்டு பாடி அசையாத தேரை அசையச் செய்து சிவனது தேரினை வலம்வரச் செய்ததும் மார்கழித்திருவாதிரை என்றும், வியாக்கிரபாதர்.. பதஞ்சலி ஆகிய சிவனருள் பெற்ற முனிவர்களுக்குச் சிவன் தனது அருட் கூத்தினை நிகழ்த்திக் காட்டியதும் கூட மார்கழித் திருவாதிரையில்த்தான் என்றும் அறியக் கிடக்கின்றது. இந்த வகையிலும் மார்கழி மாதம் முக்கியத்துவம் மிக்கதாகவும் கொள்ளப் படுகின்றது.

    மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும்.தை முதல் ஆனிமாத இறுதிவரை பகல்.ஆடிமுதல் மார்கழி மாத இறுதிவரை இரவு. இந்த இறுதியானது தேவர்களுக்கு விடியற்காலமாகும்.இதனால் மார்கழி என்பது தேவர்களின் விடியற் பொழுதாக இருப்பதால் அக்காலங்களில் காலை யில் எழுந்து குளித்து,அனைவரும் பூஜை வழிபாடுகளை ஆற்றுவது மிகவும் நலனை விளைவிக்கும் என்பது நம்பிக்கையாகும்.இதனால்த்தான் மார்கழி மாதம் தேவ காரியங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டது.

    இந்தக் காலத்தில்த்தான் மார்கழி நோன்பும் வருகிறது. மணிவாசகப் பெருமானின் திருவெம்பாவையும் பாடப்படுகிறது.ஆண்டாளின் திருப்பாவையும் பாடப்படுகிறது. திருப்பள்ளி எழுச்சியும் பாடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.தேவர்களுக்கு மட்டுமே உரிய மாதத்தில் வேறு எந்தவிதச் சிந்தனைகளுக்கும் இடம் கொடுக்கும் வண்ணம் ஏனைய விஷயங்களைச் செய்தல் தவிக்கப்பட்டதே அன்றி மார்கழி கூடாதது என்பதற்காகவோ மார்கழி பீடை பிடித்தது என்பதற்காகவே அல்ல என்பதை நாங்கள் யாவரும் நன்கு விளங்கிக் கொள்ளுதல் மிகவும் அவசியமாகும்.

    ” மாதங்களிலே நான் மார்கழி ” என கண்ணன் பகவத்கீதையில் சொல்லு வதை மனத்தில் கொண்டால் மார்கழியின் மகத்துவம் யாவருக்கும் விளங்கி விடும்.வடமொழியில் ” மார்கசீர்ஷம் ” என்று மார்கழி மாதம் அழைக்கப் படுகிறது.” மார்க்கம் ” என்றால் வழி என்பது பொருள். ” சீர்ஷம் ” என்றால் உயர்ந்த என்பது பொருள்.எனவே மார்கழி என்பது உயர்வுடையது என்பதை வடமொழியும் கூட எடுத்துக் காட்டுகிறது அல்லவா?

    திருவண்ணாமலையில் மணிவாசகரால் பாடப்பட்டதுதான்’திருவெம்பாவை”. திருவெம்பாவைப் பாடல்கள் அனைத்துமே கன்னிப் பெண்களால் பாடப்படும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது. இப்படியாகப் பாடும் பாடல் வகைகள் சங்ககாலத்திலேயே இருந்திருக்கிறது.

    பரிபாடல், நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய சங்ககால நூல்களில் மார்கழி நோன்பு பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. இங்கு பாவை நோன்பு பற்றிய செய்திகளையும் காண்கின்றோம்.எனவே மணி வாசகப் பெருமானின் பாவையர் பற்றிய இந்தவகையானது முந்தியும் இருக்கலாம் அல்லது பிந்தியதாகவும் இருக்கலாம் என்ற கருத்தும் இலக்கிய ஆராய்ச்சியாளரிடம் காணப்படுகின்றது. எது எப்படி இருப்பினும் – மார்கழி நோன்பு என்பது திருவெம்பாவையுடன் இணைகின்றது என்பதே முக்கிய செய்தி எனலாம்.

    ” திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் ” என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.மேல்நாட்டிலிருந்து இந்தியா வந்த டாக்டர் ஜி.யூ. போப் என்னும் ஆங்கிலேயரின் மனத்தைத் தொட்டதே இந்தத் திருவாசம்தான். தனது மனத்தைப் பறிகொடுத்த திருவாசகத்தை ஆங்கில மொழியில் மொழிமாற்றம் செய்தார் என்பதை யாவரும் அறிகின்றோம்.அந்த அளவுக்கு ஆத்மாவையே உருக்கி ஆண்டவனின் நினைப்பை ஊட்டவல்லது திருவாசகம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்பது எல்லோரதும் அவிப்பிராயமாகும்.

    அந்தத்திருவாசகத்துக்குள் அமைந்திருப்பதுதான் ” திருவெம்பாவை ” ஆகும்.விடியற்காலையிலே எழுந்த கன்னிப்பெண்கள் வீடுதோறும் சென்று இறைவனது பெருமையினை எடுத்துச் சொல்லி இன்னும் ஏன் நித்திரை செய்கின்றாய் விரைவாக எழுந்துவா எல்லோரும் நீராடி இறைவனது புகழை ஏத்திப் பாடுவோம் என்று பக்தி ததும்ப அழைக்கும் விதத்தில் அமைந்ததுதான் ” திருவெம்பாவை ” என்பது குறிப்பிடத்தக்கது.

    திரு + எம் + பாவை என்பது திருவெம்பாவை ஆகும்.தெய்வத்தை நோக்கிய பக்தி நிலையில் நின்று பாடும் பாடல்கள் என்பதே இதன் அர்த்தம் எனவும் கொள்ளலாம்.ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ” ஏலோர் எம்பாவா ” என்றே முடிகின்றதைக் காண்கின்றோம்.இதனைப் பாவைப் பாட்டு என்றும் நீராட்டுப் பாட்டு என்றும் குறிப்பிடுவார்கள்.

    இளம்பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டும் எனக்கருதி மார்கழிமாதத்தில் நோன்பு நோற்பது வழக்கம்.இந்தப் பெண்கள் அதிகாலை எழுந்து இறைவனது புகழைப்பாடி நீராடச் செல்லும் போது ” திருவெம்பாவை ” பாடல்களைப் பாடிச்சென்றுள்ளனர் என்பதையே இங்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.இதற்கு ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவையும் சான்றாகி நிற்கிறதெனலாம்.

    இதனால்த்தான் சைவத்தலங்களில் ” திருவெம்பாவையும் ” வைஷ்ணவத் தலங்களில் ” திருப்பாவையும் ” மார்கழிமாதத்தில் பாடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    முதல் நான்கு பாடல்களும் அதிகாலையில் நீராடப் புறப்பட்ட பெண்கள் இன்னும் நித்திரைவிட்டு எழாத தமது தோழியரை எழுப்புவதாக , அதற்கு அப்பெண்ணானவள் மறுமொழி கூறுவதாகவும் அமைந்திருக்கின்றது.

    ஐந்தாம் பாடல் தொடக்கம் எட்டாம் பாடல் வரை உள்ளன நித்திரை விட்டெழும் பெண்கள் கூறும் விதமாக இருக்கின்றன.
    ஒன்பதாம் பாடல் முதல் இருபதாம் பாடல் வரை நித்திரை கலைந்த பெண்கள் இறைவனைத் துதித்துப் பாடும் வகையில் அமைந்திருக்கின்றன.

    ” ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி ” ” மாலறியா நான்முகனும் காணா மலையினை ” ” என்னானை என் அரையன் இன்னமுது என்று எல்லோமும் சொன்னோம் கேள் ” கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை”

    ” முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே – பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே ” “இவ்வானும் குவலயமும் எல்லோரும் – காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி”

    ” வேதப்பொருள் பாடி அப்பொருளாம் மாபாடி
    சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தாழ்பாடி
    ஆதி திறம்பாடி அந்தமாம் மாபாடிப் பேதித்து “

    ” விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் – கண்ணார் அமுதமுமாய் நின்றான் ” என்று திருவெம்பாவைப் பாடல்கள் – எல்லாம் வல்ல இறைவனைப் பற்றிப் பெண்கள் பாடிப் பரவுவதாக எமக்கொல்லாம் விளக்கி நிற்கின்றது எனலாம்.

    திருவெம்பாவையும் திருப்பாவையும் மார்கழியில் அதிகாலை நேரத்திலே பாடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே முதலில் சுட்டிக் காட்டப்பட்ட படி தேவர்களின் காலைப்பொழுதாக இருப்பது ஒருமுக்கிய காரணம் என்பதை நம்பிக்கை எனக்கொள்வோம். அதற்குப் பின்னும் பல காரணங்களும் இருக்கின்றன என்பதும் முக்கியமானதாகும்.

    அதிகாலையில் துயில் எழுவது என்பதே ஆரோக்கியத்துக் அடிப்படை அல்லவா? அதுவும் மார்கழியில் அதிகாலை துயில் எழுந்து நீராடுவது என்பது உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதாகும். மார்கழியில் ஏற்படும் காலநிலை மாற்றமானது உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்று எமது முன்னோர்கள் அறிந்து வைத்திருந்தனர். அதனை அறிவுரை ஆக்கினால் யாவரும் புறந்தள்ளியும் விடக்கூடும் என்பதால் அதனை திருவெம்பாவையுடன் இணை த்துவிட்டனர் என்றே எண்ண வேண்டியிருக்கிறது.

    அதிகாலையில் விழித்தால் புத்தி தெளியும்.உடம்பில் இரத்தத்தில் நல்ல மாற்றம் ஏற்படும் நரம்புகழ் உற்சாகம் பெறும்.பித்தம் தணியும்.வாத, பித்தம் சமனிலை அடையும்.இவையெல்லாம் ஆரோக்கியம் சம்பந்தமானவை. இவையாயுமே திருவெம்பாவையினுள் அடங்கி இருக்கிறது என்பதே இங்கு மிகவும் இன்றியமையாத விஷயமாகும் என்பதை அறிதல் வேண்டும்.

    தமிழ்ப் பண்பு, அன்புணர்வு, ஒழுக்க நிலை, சமயமரபு, ஆத்மஞானம் அத்தனையும் திருவெம்பாவால் எமக்குக் கிடைக்கின்றது என்பதை யாவரும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

    வெறுமனவே திருவெம்பாவைப் பாடாமல் அதனூடாக எங்களுக்குக் கிடக்கும் அரிய பெரிய விஷயங்களை அறிந்து கொண்டு கோவிலில் பாடுவோமேயானால் நிச்சயம் திருவெம்பா எமக்கெல்லாம் பெரும் பயன் உடையாதாகவே இருக்கும்.

    வைகறைப் பொழுதை ” பிரம்ம முகூர்த்தம் ” என்று குறிப்பிடுவதையும் நாம் நோக்குதல் வேண்டும்.

    மார்கழியை பகவத்கீதை போற்றுகின்றது. மார்கழியில்த்தான் “ஆருர்த்தா” தரிசனம் நடக்கின்றது. மார்கழியில்த்தான் ” சுவர்க்க வாசல் ஏகாதசி ” உற்சவமும் இடம்பெறுகிறது.சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் உகந்த தெய்வீக மாதமாக மார்கழி திகழ்கிறது என்பதையும் மனத்தில் கொள்ளுதல் முக்கியமானதே.திருவெம்பாவையும்,திருப்பாவையும், இறைவன் புகழ் சேர்ப் பதற்கு மார்கழியில்த்தான் கோவில்கள் தோறும் பக்தியுடன் பாடப்படுகின்றன என்பதும் மிகவும் முக்கிய கருத்து என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.எனவே மார்கழியில் இறைவன் புகழ்பாடி எங்களின் வாழ்வு வளம்பெறப் பிரார்த்திப்போம்.

    Share
  • சாமியே சரணம்!

                              ஐயப்ப வழிபாட்டின் முக்கியத்துவம்

                      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    lord-ayyappa-hindu-god-of-sabarimala-temple

          [  எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா ]

          ஐயப்பனது வழிபாடு இன்று யாவராலும் மேற்கொள்ளப்படும் வழிபாடாக விளங்குகிறது.இந்த வழிபாடு இடைவிட்டு வந்த ஒன்றா அல்லது தொன்று தொட்டு வந்த ஒன்றா என்னும் வாதப்பிரதி வாதங்களும் சர்ச்சைகளும் நடந்து கொண்டு இருக்கின்றன.ஆனாலும் ஐயப்ப வழிபாடு மட்டும் தனது நிலையில் உயர்வு பெற்று எல்லோராராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வழிபாடாக வளர்ந்து வருவதையே காணமுடிகிறது.அதுமட்டுமல்ல யாவரும் இந்த வழிபாட்டில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதில் பெரிதும் விருப்புடையவர்களாக இருப்ப தையும் கண்டுகொள்ள முடிகின்றது.

         கந்தபுராணம், விஷ்ணு புராணம், பத்மபுராணம் , யாவும் ஐயப்ப வழிபாடு பற்றி எடுத்துச் சொல்லுகின்றன.இப்புராணங்கள் தெய்வத் தன்மை மிக்கன. இவற்றில் ஐயப்பன் பற்றிய குறிப்பும் அவரது தோற்றம் பற்றிய விளக்கங்க ளும் இருக்கின்ற காரணத்தால் ஐயப்ப வழிபாட்டை இடைநடுவில் வந்தது என்று வாதிடுவதோ விமர்சிப்பதோ பொருத்தமற்றதாகி விடுகிறது. இதனால் ஐயப்ப வழிபாடானது தொன்று தொட்டே வந்திருக்கிறது என்றே கருதவேண்டி இருக்கிறதல்லவா?

          ஐயப்பனை தர்மசாஸ்த்தா என்றும் பெயரிட்டும் வழிபடுவர். சாத்தன் என்பது காவலுக்குரிய தெய்வமாகாக விளங்கியிருக்கிறது. சாஸ்த்தா என்பது சமஸ்கிருதத்தில் வழங்கப்பட அதுவே தமிழில் சாத்தா எனமருவி பின்னர் சாத்தனார் ஆகியது எனவும் வராலாற்றால் அறியமுடிகிறது.

        காவல் தெய்வமாக விளங்கினார் என்பதற்கு அவரின் மற்றொரு பெயரான பூதநாதன் என்பதும் பொருந்துவதாக இருப்பதாக வரலாறு சுட்டி நிற்கிறது. விநாயகப் பெருமானை கணங்களுக்கு அதிபதி என்ற நிலையில் ” கணபதி ” என்கிறோம். தேவசேனைகளின் அதிபதியாக விளங்குவதால் முருகப்     பெருமானை” தேவசேனாபதி” என்கின்றோம். ஐயப்பன் பூதகணங்களுக்குத் தலமை தாங்குவதால் அவரை ” பூதநாதன் ” எனப் போற்றுகின்றோம்.

         இதில் இன்னுமொரு அர்த்தத்தையும் நாம் கண்டுகொள்ளலாம்.இந்த மனித சரீரமானது பஞ்சபூதங்களால் ஆனது. எனவே பஞ்சபூதங்களும்  எந்த நேரமும் மனிதர்களை ஆட்டிப்படைக்கும் வல்லமை பெற்றிருக்கும் அல்லவா?அப்படிப் பட்ட மனிதர்களை அந்தப்பூதங்களிடமிருந்து காத்து ரட்சிக்கும் ஆற்றல் பூத நாதனாகிய ஐயப்பனால் மட்டுமே முடியும் அல்லவா? இதனாலும் பூதங்களை ஆளும் வல்லமை பெற்றவன் என்ற வகையிலும் பூதநாதன் என்பது பொருத்த மாகி நிற்கிறதுதானே !

          ஐயப்ப வழிபாட்டில் பல முக்கிய அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.அதன் காரணமாகவும் அந்த வழிபாட்டை அனைவரும் கைக்கொள்ளுகின்றனரோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது.

         ஒரு மண்டலம் என்பது சாதாரணவிஷயமல்ல.அந்த ஒரு மண்டலமும் எந்தவிதமான கெட்ட பழக்க வழக்கங்களையும் மனத்தாற்கூட நினையாமல் கைவிட்டே ஐயப்ப வழிபாடு நடத்தப்படுகின்றது.இங்கு மனம் தூய்மை அடைவதோடு வாழ்வும் வெளிச்சம் பெறமுடிகிறது எனலாம்.

     ” உற்ற நோய் நோற்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை ” என்னும் வள்ளுவர்

    வாக்கு இங்கு போற்றப் படும் நிலையே காணப்படுகின்றது. கடைப்பிடிப் பார்கள் செவ்வனே கடைப்பிடித்தால் சிறப்புத்தான் வந்து நிற்கும். இது ஐயப்ப வழிபாட்டின் முக்கியத்துவம் எனலாம்.

       கடவுளர்களில் பிரம்மச்சாரியாக ஐயப்பன் இருக்கின்றார்.அதுமட்டு மல்ல அவரது கைகளிலே எந்தவித ஆயுதங்களும் இல்லை. இது அற்புதமான அமைப்பு அல்லவா? அவரது குழந்தை வடிவமும் புன்சிரிப்புத் தவழும் முகலாவண்யமும் பார்ப்பவர் மனத்தைப் பக்குவவப் படுத்திவிடும் அல்லவா ?

    உலகிலே எங்கு பார்த்தாலும் சண்டையும் அழிவுகளுமே ! ஆயுதக்கலாசாரம் பெருகி அமைதியைக் குலைத்துவிட்டது. இந்த நிலையில் ஆயுதமே கையில் ஏந்தாது அமைதியாயும் சிரிப்போடும் ஐயப்பன் காணப்படுவது அகில உலக அமைதிக்கும் உலகம் தழுவிய சமாதானத்துக்கும் நல்ல ஒரு எடுதுக்காட்டு அல்லவா ? இதனாலும் இந்த வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

         காமம் என்பதுதான் யாவற்றுக்கும் மூலகாரணமாகும்.ஐயப்பன் பிமச்சாரி யாக விளங்கும் நிலையும், அவரது வழிபாட்டை மேற்கொள்ளும் நிலையில் பிமச்சரியம் கடைப்பிடிக்கும் நிலையும் எம்மிடையே உள்ள சிற்றின்பங்கள் அனைத்தையும் போக்கிவிடும் தன்மையை ஏற்படுத்திவிடும் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.காம எண்ணங்கள் எம்மைவிட்டுப் போய்விட்டால் உலகிலே காணும் யாவுமே ஆனந்த மயமாகவே தோற்றமளிக்கும். அந்த ஆனந்தமும் அற்பம் ஆனதல்ல.அது இறைத்தன்மை மிக்கதாகவே இருக்கும். இவையெல்லாம் ஐயப்ப வழிபாட்டின் முக்கியத்துவங்கள் எனலாம்.

         எமக்குள்ளே இறைவன் இருக்கின்றான்.அந்த இறைவனை நாங்கள் முயன்றால் கண்டுவிடலாம் என்று ஆன்றோர்கள் கூறுவார்கள்.அதற்கு நல்ல தேடல் வேண்டும்.

       ” தேடிக் கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும்

           தேடிக் காணொனா தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன் “

    என்று அருளாளர் ஒருவர்கூறுகின்றார். இது முற்றிலும் உண்மையானதாகும். இந்த அரிய தத்துவத்தை ஐயப்பன் வழிபாடு மிகவும் இலகுபடுத்தி இருக்கிறது.

        ஐயப்ப விரதம் இருக்கும் ஐயப்ப பக்தர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வேளை ஒருவராவது மற்றயவரை பெயர்சொல்லி அழைப்பது வழக்கம் அல்ல.

    ஒருவரை ஒருவர் ” சாமி ” என்றுதான் அழைப்பார்கள். இதுதான் ஐயப்ப வழி பாட்டின் அதியுச்ச நிலை எனலாம்.சாதாரண நிலையில் இருக்கும் ஒருவர் சாமி என்னும் நிலைக்கு வருவதை வேறு எந்த வழிபாட்டிலும் காணவே முடியாது.அதனை ஐயப்ப வழிபாடு ஒன்றே தந்து நிற்கிறது என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

         மனிதர்கள் பல பிறவிகளிலும் செய்த பாவங்களும் , புண்ணியங்களும் அவர்களுக்குப் பெரும் பாரமாகவே பிறவி தோறும் வந்து கொண்டிருக்கும்.

    இவை இரண்டையும் விடும் பொழுதுதான் பிறவியென்னும் பிணி அகலும்.

    இதனையே சைவ சித்தாந்தம் இருவினை ஒப்பு, மலபரிபாகம், சத்தினிபாதம் என்றெல்லாம் சொல்லும். இவை எமக்கும் விளங்குவது சற்றுக் கடினம்தான்.ஆனால் ஐயப்ப வழிபாட்டில் இதனை இலகுவாக்கி ” இருமுடி ”  கட்டுதல் என்று வைத்துவிட்டார்கள். இருமுடியில் ஒன்றில் இறைவனுக்கான நிவேதனப் பொருட்களும் மற்றயதில் அடியவர்களுக்கான பொருட்களுமே  அடங்கியிருக்கும். இங்கே இறைவனுக்கானவற்றை புண்ணிய மூட்டை என்றும் மற்றயதை பாவ மூட்டை என்றும் கொள்ளலாம் அல்லவா ? இந்த ஆன்மா ஆனது பாவத்தையும் புண்ணியத்தையும் சுமந்த படியேதான் இருக்கும். இறைவனிடம் போகும்பொழுது அதுவும் பக்தியுடன் பக்குவமாகப் போகும் பொழுது பாவத்தின் நிலை குறைந்து புண்ணியம் மேலோங்க ஆன்மாவின் பாரம் குறைவடையும். இந்த அரிய கருத்தே இருமுடித் தத்துவம் என்று ஐயப்ப வழிபாட்டில் காணப்படுகின்றது என்பது மனத்தில் கொள்ள வேண்டிய கருத்தாகும்.

          பகவத்கீதையில் பதினெட்டு அத்தியாயங்கள் இருக்கின்றன. ஐயப்ப தரிசனத்திலும் பதினெட்டுப் படிகள் இருக்கின்றன. பாரதப் போரில் அர்ஜ்ஜுனன் கலங்கிய கலக்கத்தைத் தெளிவாக்கி இறைதத்துவத்தையும் வாழ்க்கைத் தத்து வத்தையும் பகவான் கண்ணன் காட்டியதுவே கீதையென்னும் வேதமாக வந்தது.

        அதே போன்றதுதான் ஐயப்ப வழிபாட்டிலும் பதினெட்டுப் படிகளின் தத்துவம்.முதல் ஐந்து படிகளும் கர்மேந்திரியங்களாகவும் அடுத்த ஐந்து படிகளும் ஞானேந்தியங்களாகவும் அடுத்த நான்குபடிகளும் அந்தக்கரணங்க ளாகவும் மிகுதி மூன்று படிகளும் முக்குணங்களாகவும் உருவகப்படுத்தப் படுகின்றன. இவற்றைக் கடந்தால் பதினெட்டாம் படியானது இறைதரிசனத்தை காட்ட வல்லது என்னும் அதியுன்னத தத்துவத்தை படிகளைக் கொண்டே ஐயப்ப வழிபாடு உணர்த்தி நிற்கிறது என்பது மிகவும் முக்கியமானதாகும்.

        தேங்காயினுள் நெய்விட்டு அதனை ஐயப்ப தரிசனத்தின் பொழுது கொண்டு செல்லும் வழக்கம் இருக்கிறது.தேங்காயில் மூன்று கண்கள் இருக்கின்றன. இவற்றில் ஒருகண்ணை மட்டுமே திறந்து நெய்யினை விடுவார்கள். இங்கே கூட மிகச்சிறந்த தத்துவத்தை ஐயப்ப வழிபாடு காட்டிநிற்கிறது.மனிதர்களுக்கு புறத்தே தெரிவது இரண்டுகண்களே.அதே வேளை மூன்றாவது கண்ணும் இருக்கின்றது.அதனையே அகக்கண் என்கிறார்கள்.நெய் என்பது ஆன்ம ஞானம் அதனை உடம்பாகிய தேங்காயினுள் செலுத்த வேண்டுமானால் அதற்கு அகமாகிய கண்ணின் வழியேதான் செலுத்தமுடியும் எனவேதான் தேங்காயின் ஒருகண்ணைத் திறத்தல் என்பது இங்கே ஏற்படுத்தப் பட்டது.இதனை அனைவரும் விளங்கி வழிபட்டால் நல்லதே.

           ஐயப்ப வழிபாட்டில் அரனும் அரியும் இணையும் தன்மை காணப்படு கிறது.அரியும் அரனும் சேர்ந்த வடிவமானதால்த்தான் அரகரசுதன் ஐயன் ஐயப்பன் என்று போற்றப் படும் நிலை இந்தவழிபாட்டில் ஏற்பட்டது எனலாம்.

    இதனால் சைவ வைஷ்ணவ ஒற்றுமையின் வடிவமாகவும் ஐயப்பனும் அவரது வழிபாடும் அமைந்திருப்பதும் இந்த வழிபாட்டின் மிக மிக முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது என்றும் கொள்ளலாம்

          ஆடுதல், பாடுதல், ஒன்று சேருதல், உணவிட்டு உபசரித்தல், சாதி, மத, ஏற்றத் தாழ்வுகள் பாராமை, சமரசம் என்னும் தரரகமந்திரமே மேலோங்கி இருத்தல், தீவிர வைராக்கியம், இன்முகம் காட்டுதல், இன்சொல்பேசுதல், பெரியவரைக் கனம் செய்யுதல், இப்படிப் பல நிலைகளில் ஐயப்ப வழிபாடு விளங்குகின்ற காரணத்தாலும் இன்றைய உலக நிலையில் மிகவும் முக்கி யத்துவம் மிக்க வழிபாடாக ஐயப்ப வழிபாடு திகழ்கின்றது.

            சாமியே சரணம் ஐயப்பா ! சாமியே சரணம் ஐயப்பா ! என்னும் ஒலியானது உலகையே ஒன்று கூட்டும் சக்திமிக்கதாக விளங்கி ஐயப்ப வழிபாட்டை உலக வழிபாடாக மாற்றிவிடும் சக்திபெற்றதாக இன்று பிரவாகித்து நிற்கிறது என்பது நிதர்சனமாகும்.

            சரணம் சரணம் ஐயப்பா சாமிசரணம் ஐயப்பா !

    Share
  • சுதந்திரத்தைப் பேணுவோம் !

       -எம். ஜெயராம சர்மா – மெல்பேண், அவுஸ்த்திரேலியா )

         அண்ணல் காந்தி
         அஹிம்சை கொண்டு
         அரவணைத்த சுதந்திரம்
         மண்ணிலிருக்கும் நிலையைப்பார்க்க
         மனசுஒடிஞ்சு போகுதே !

         காந்திமகான் படத்தைமட்டும்
         காசில்போட்டு வைத்துளோம்
         காந்திநினைத்த அத்தனையும்
         காற்றில்கரைந்து போயிற்றே !

         காந்திமகான் உள்ளகாசை
         கட்டுக்கட்டாய் பதுக்கிறார்
         காந்திகூட கைதியாகி
         கயவர்கையில் நிற்கிறார் !

         மதுவையொழிக்க வேண்டுமென்று
         மகான்காந்தி முழங்கிட்டார்
         மதுபெருகி இந்தியாவை
         மதிமயக்கி கெடுக்குது !

         தெரிவில்பெண்கள் போவதற்கே
         தினமுமச்சப் படுகின்றார்
         திசைக்குத்திசை கயவர்கூட்டம்
         தினமும்கற்பைப் பறிக்கிறார் !

         காவல்நிலையம் போவதற்கே
         கலக்கமாக இருக்குது
         காவல்துறை கூடயிப்போ
         கண்ணியத்தை மிதிக்குதே !

          நீதிமன்று கூடயிப்போ
          நெஞ்சைநிமிர்த முடியல
          நீதிகூட காசைப்பார்த்து
          நிலைகுலைந்து நிற்குது !

          சாதிபேரைச் சொல்லிசொல்லி
          பேதிகொடுத்து நிற்கிறார்
          நாதியற்ற கூட்டமாக
          நாட்டில்பலர் இருக்கிறார் !

          ஓடிவரும் நீரைக்கூட
          ஓரங்கட்டப் பார்க்கிறார்
          உழவர்கூட்டம் நீருக்காக
          உயிரைவிடப் பார்க்கிறார் !

          உணவில்மருந்தில் கலப்படத்தை
          உடனுக்குடன் செய்கிறார்
          உடல்நலத்தைப் பற்றியெல்லாம்
          உள்ளமேற்க மறுக்கிறார் !

         காசுகாசு என்றுவெண்ணி
         கண்ணியத்தைத் துறக்கிறார்
         கடவுள்சிலையை திருடிவிற்று
         காசைக்கணக்குப் பார்க்கிறார் !

        வெள்ளையரை நாட்டைவிட்டு
        விரட்டியடித்து விட்டாலும்
        கொள்ளையரின் கையிலிப்போ
        கொடுத்துவிட்டோம் நாட்டையே !

         ஊழல்செய்யும் கூட்டத்தாரால்
         நாளும்தீமை விளையுது
         ஆளைமாத்தி ஆளைமாத்தி
         அரசில்கொள்ளை நடக்குது !

        நல்லவரை நாட்டில்காண
        நமக்குளாசை இருப்பினும்
        நல்லவரும் நம்மைவிட்டு
        நாளும்வெளி செல்கிறார் !

        எத்தனையோ தியாகம்செய்து
        எடுத்தவெங்கள் சுதந்திரம்
        ஏற்கவொண்ணா இன்னல்பட்டு
        இந்தியாவில் இருக்குது !

        சுத்தமான சுதந்திரத்தை
        சுவைத்துச் சுவைத்துநின்றிட
        அத்தனபேர் உள்ளங்களும்
        அஹிம்சைபோற்ற வேண்டுமே !

        காந்திநேரு காமராசர்
        வந்தபாதை சென்றுநாம்
        கலாமையா நினைவில்வைத்து
        காத்துநிற்போம் சுதந்திரம் !

        சுதந்திரத்தை அனுபவிக்க
        சுதந்திரத்தை தேடுறோம்
        சுதந்திரமாய் வாழநாங்கள்
        சுதந்திரத்தைப் பேணுவோம் !

    Share
  • உதவிடலாம் !

          -எம் .  ஜெயராம சர்மா – அவுஸ்த்திரேலியா

           பார்வையை இழந்தவர்கள்
           பலபேர்கள் இருக்கின்றார்
           பார்வையுடன் இருப்பவர்நாம்
           பலவழியில் உதவிடலாம் !

           கல்விதனைக் காணாமல்
           கணக்கற்றோர் நாட்டிலுள்ளார்
           கற்றுநிற்கும் நாமவர்க்குக்
           கற்பதற்கு உதவிடலாம் !

           அன்னைதந்தை தெரியாது
           அலமந்து நிற்பார்க்கு
           ஆதரவுக் கரங்கொடுத்து
           அரவணைத்து உதவிடலாம் !

            ஓலைக் குடிசைதனில்
            ஒழுக்குவீட்டில் வாழ்பவர்க்கு
            ஒழுங்கான வாழ்வுவர
            உள்ளத்தால் உதவிடலாம் !

            நீர்கூடக் கிடைக்காமல்
            நிம்மதியைத் தொலைத்துநிற்கும்
            ஊரெல்லாம் தனையெண்ணி
            உணர்வோடு உதவிடலாம் !

           மருத்துவ வசதியின்றி
           மனம்நொந்து நிற்பார்க்கு
           மருத்துவத்தைத் தெரிந்தவர்கள்
           மனதார உதவிடலாம் !

          ஏமாற்றிப் பிழைப்பவரின்
          இடருக்குள் புகுந்தவர்கள்
          இன்னலின்றி வெளியில்வர
          இயன்றவரை உதவிடலாம் !

          மூடத்தனம் என்னும்
          மூட்டைக்குள் இருப்பவர்கள்
          முன்னேறி வருவதற்கு
          முயற்சியுடன் உதவிடலாம் !

          அன்புதனைக் காணாமல்
          அநேகரிங்கு இருக்கின்றார்
          அவரிடத்து நாம்சென்று
          அன்புகாட்டி உதவிடலாம்!

     

    Share
  • நீங்கவந்து பிறந்திடுங்க !

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    ஏவுகணை தந்தவரே
    இரக்ககுணம் மிக்கவரே
    இந்தியாவின் புகழ்தன்னை
    இமயமெனச் செய்தவரே!

    ஓய்வொழிச்சல் இல்லாமல்
    உண்மையாய் உழைத்தவரே
    உயர்ச்சிபெறும் மந்திரத்தை
    உலகினுக்கே உரைத்தவரே!

    உயர்ச்சிபெற்ற போதெல்லாம்
    உணர்விழக்கா நின்றவரே
    அயர்ச்சியெனும் சொல்தன்னை
    அதிர்ச்சியுடன் பார்த்தவரே!

    தளர்ச்சியுறும் மனத்தையெல்லாம்
    தானெழுப்பி நின்றவரே
    முயற்சிதனை முதலாக்கி
    முன்வந்து நின்றவரே!

    இல்லறத்தைத் துறந்தாலும்
    நல்லறத்தைத் துறவாமல்
    வள்ளுவரின் குறள்வழியே
    வாழ்ந்துநின்ற மாமணியே!

    சொந்தபந்தம் பாராமல்
    சுகதுக்கம் நோக்காமல்
    சொந்தமண்ணின் சுகத்துக்காய்த்
    தூங்காமல் உழைத்தவரே!

    செந்தமிழை நேசித்தச்
    சிறந்த விஞ்ஞானியையா
    நந்தமிழில் கல்விகற்று
    நாடுபோற்ற நின்றாயே!

    பட்டம்பல வந்தாலும்
    பதவிக்காய் அலையாமல்
    திட்டமிட்டு இந்தியாவைத்
    திரும்பிப்பார்க்கச் செய்தவரே!

    பணத்துக்காய் அலைந்துநிற்கும்
    பாதகரின் மத்தியிலே
    குணத்தாலே இடம்பிடித்துக்
    குவலயத்தில் உயர்ந்தவரே!

    காந்தி வந்தபின்னாலே
    காமராசர் வந்துநின்றார்
    கலாமையா போனதனால்
    கண்ணியத்தைத் தேடுகிறோம்!

    ஏழ்மையிலே பிறந்ததனால்
    எளிமைதனை ஏந்திநின்றார்
    எல்லோரின் மனங்களிலும்
    இங்கிதமாய் அமர்ந்துவிட்டார்!

    சிந்தனையில் உயர்ந்தாலும்
    சிறுவர்தமை நேசித்தார்
    வந்துநிற்கும் கூட்டமெல்லாம்
    வழியவர்க்கு உரைத்துநின்றார்!

    விஞ்ஞானி மெய்ஞ்ஞானி
    மேலான அவதானி
    கண்ணாலே பார்த்துவிடின்
    கருத்தாகப் பதித்திடுவார்!

    எந்நாளும் புன்சிரிப்பை
    இதழோரம் கொண்டுநிற்பார்
    எங்கள் கலாமையாவை
    இந்தியாவின் சொத்தென்போம்!

    அமெரிக்கத் தேசமதில்
    அரைக்கம்பம் கொடிபறக்க
    அப்துல்கலாம் உயர்வடைந்து
    அனைவரையும் அணைத்துவிட்டார்!
    இதழோரம் முடிபுரள
    இமைதன்னில் நரைதெரிய
    எங்கள் கலாமையாவை
    எப்போது நாம்காண்போம்?

    கலாமையா உங்களுக்குக்
    கனமான சலாமுங்க
    நிலவுலகில் மறுபடியும்
    நீங்கவந்து பிறந்திடுங்க!

    தலைவரெலாம் வந்தாலும்
    தானாட்சி செய்தாலும்
    நிலையான தலைவரென
    நீங்களன்றோ நிற்கின்றீர்!

    அரசியலில் இல்லாமல்
    ஆட்சியிலே அமர்ந்தீர்கள்
    அப்துல்கலாம் அய்யாநீர்
    ஆண்டவனின் அன்பளிப்பே !

     

     

    Share
  • எம்மனது அழுகிறது !

    எம். ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா

    apj-abdul-kalam-650-ap_650x400_71438008626
    வல்லரசு நல்லரசு எனமனதில் கொண்டுநிதம்
    வல்லவராய் நல்லாவராய் வாழ்ந்துநின்ற மாமனிதர்
    எல்லோரின் மனங்களிலும் இருந்தமர்ந்த கலாமவர்கள்
    இல்லை என்றுசொல்லிவிட எம்மனது அழுகிறது !

    ஈடில்லா விஞ்ஞானி எமைவிட்டுப் போனசெய்தி
    நாடெல்லாம் நினைந்தழவே நமன்கூட நடுங்குகிறான்
    விஞ்ஞானி தனையழைத்து விண்ணவரோ மகிழுகின்றார்
    மண்மீது இருப்போரோ மனம்நொந்து தவிக்கின்றார் !

    அப்துல்கலாம் ஐயா அனைவருமே அழுகின்றார்
    அணுத்துறையும் உமைத்தேடி அலமந்து நிற்கிறது
    அமைதியாய் இருந்துகொண்டு அனைத்தையும் செய்துநின்றாய்
    அழுகின்றோம் கலாமையா அழகுமுகம் காணாது !

    கனவுகாணச் சொல்லிவிட்டு காணாமல் போனதெங்கே
    கனவுநனைவு எல்லாமே கலாமாக இருக்கிறது
    காலனிடம் சென்றநீங்கள் கனவுகாணச் சொல்லிவிட்டு
    கடுகதியாய் இங்குவந்து காட்டிடுங்கள் முகத்தையையா !

    இங்கிருக்கும் பிள்ளைகளோ ஏக்கமுடன் இருக்கின்றார்
    எங்கள்கலாம் ஐயாவை எப்படிநாம் பார்ப்பதென
    தங்கத் தமிழ்மகனே தரமிக்க தமிழ்க் கவியே
    உங்களது இழப்பாலே உலகமே அழுகிறது !

    Share
  • எம்மோடே வாழுகின்றார் !

    – எம். ஜெயராம சர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

            மண்ணிலே உள்ளவர்கள்
            மனம்மகிழ இசையமைத்த
            மெல்லிசையின் மன்னனே
            விரைவாகப் போனதேனோ?

            விண்ணிலே உள்ளவரும்
            மெல்லிசையைக் கேட்பதற்கு
            விரும்பியுனை அழைத்ததனால்                 msviswa
            விண்ணோக்கிச் சென்றனையோ?

            கண்ணதாசன் வாலிபாடல்
            காலமெலாம் நினைப்பதற்கு
            உன்னுடைய இசையன்றோ
            உரமாக விளங்கியது!

            ஏழ்மைதனில் இருந்தாலும்
            இன்னல்பல பட்டாலும்
            வாழ்வெல்லாம் இசையுண்டு
            மாயிசையைத் தந்துவிட்டாய்

           நோய்வந்து படுத்தாலும்
           நுடங்கிநாம் நின்றாலும்
           மன்னவனே உன்னிசையே
           மாமருந்தாய் இருந்ததன்றோ!

           ’பா’வரிசைப் படங்களிலே
           பலபாடல் எம்மனத்தைப்
           பதமாக்கி இதமாக்கி
           பக்குவத்தைக் ஊட்டியதே!

           கவியரசர் பாட்டெழுத
           எம்எஸ்வி இசையமைக்க
           டிஎம்எஸ் பாடிவிடின்
           தேவருமே வந்துநிற்பார்!

           எத்தனையோ மெட்டுக்கள்
           எப்படித்தான் வந்தனவோ?
           இன்றுவுன் ஆர்மோனியம்
           இயம்பிடுமா இரசியத்தை?

           ஆர்மோனியம் இப்போ
           அநாதையாய் நிற்கிறது
           அதுவுன்னை நினைத்தபடி
           அழுதழுது நிற்கிறது!

            விஸ்வநாதன் எனும்பெரியோன்
            விண்ணோக்கிச் சென்றசெய்தி
            மண்ணிலுள்ள இசைக்கெல்லாம்
            மாறாத இழப்பன்றோ!

            இசைமன்னன் தனைப்பறித்த
            இரக்கமிலா அரக்கர்களே
            இசைமன்னன் இசையினைநாம்
            எப்பொழுதும் தரமாட்டோம்!

            எம்எஸ்வி இசையிலேநாம்
            எந்நாளும் இணைந்திருப்போம்
            எம்எஸ்வி இசையாக
            எம்மோடே வாழுகின்றார் !

     

    Share
  • அனைவருமே தடுத்திடுவோம் !

    – எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

      விஞ்ஞானம் தானிப்போ
      விண்ணோக்கிச் செல்கிறது
      நல்ஞானம் எனப்பலரும்
      நாட்டிலிப்போ சொல்லுகிறார்

     கல்ஞானம் எனவெண்ணிக்
     கட்டளையும் இடுகின்றார்
     உள்ளமெலாம் விஞ்ஞானம்
     உட்புகுந்தே நிற்கிறது

     தொழிநுட்ப விஞ்ஞானம்
     தொகையாக வந்துளது
    துறைதோறும் அதுசென்று
    சூடாக்கி நிற்கிறது

     கிராமத்தார் கூடவிப்போ
     ’கிறுகிறுத்து’ நிற்கின்றார்
    அங்கெல்லாம் தொழிநுட்பம்
    அரங்கேறி நிற்கிறது

     மொழிபற்றிக் கவலையின்றி
    முறுவலுடன் ஏற்கின்றார்
    முகம்பார்த்துக் கதைத்துவிட்டு
    அகங்குளிர்ந்தும் நிற்கின்றார்

     அழகான படம்பார்த்து
    அவர்மகிழ்வு கொள்ளுகிறார்
     அயல்நாட்டில் மருமகளின்
     சுகம்கேட்டும் நிற்கின்றார்

     குறுஞ்செய்தி பலர்பார்த்து
    குதூகலத்தில் மிதக்கின்றார்
    முகநூலால் திருமணங்கள்
    சபையேறி  நிற்கிறது

     வியாபாரம் பெருகுதற்கும்
    விளம்பரங்கள் செய்வதற்கும்
    நலமான நண்பனென
      நாட்டிலுள்ளோர் நினைக்கின்றார்

      தகவல் பரிமாற்றம்
      தான்பெருகி நிற்பதற்கும்
      சரியான வழியெனவே
      சகலருமே எண்ணுகிறார்

     அரசியல் தலைவரையும்
    ஆன்மீகத் தலைவரையும்
    ஆட்டிவைக்கும் சக்தியென
    அதுவிப்போ திகழ்கிறது

     கற்பழிப்பு நடப்பதற்கும்
    காடைத்தனம் செய்வதற்கும்
    கண்போன்ற தொழிநுட்பம்
    கருவியென நிற்கிறது

      மண்ணிலுள்ளோர் பயனடைய
      வந்ததொழில் நுட்பமதை
      மனிதகுல மாண்பழிக்க
      மாற்றுவது முறைதானா?

     விஞ்ஞானத் தொழில்நுட்பம்
     எஞ்ஞான்றும் உதவுவதை
     வீணடிக்கும் கூட்டமதை
     வீதிக்குக்  கொணர்ந்திடுவோம்

      நல்லபக்கம் பார்த்திட்டால்
    நமக்கெல்லாம் நன்மையன்றோ?
    நம்மனதில் நல்லவெண்ணம்
    நாளும்நாம் வளர்த்துநிற்போம்

      உள்ளமதில் நல்லவெண்ணம்
    ஊற்றெடுக்கச் செய்துவிடின்
    பள்ளமதில் வீழ்ந்திருக்கும்
    பாதகரும் மாறுவரே

      தொழில்நுட்பச் சேவையினைத்
    துஷ்டத்தனம் செய்யாமல்
    அழிவுநாடிச் செல்வதனை
    அனைவருமே தடுத்திடுவோம் !

     

    Share
  • அனைவரும் செய்திடுவோம் !

    எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா 

     

    பல்லில்லா வாயாலே பலகதைகள் நீசொல்வாய்
    கேட்டபடி நானிருருந்து கிறுகிறுத்துப் போய்விடுவேன்

    ஓரடிநீ வைத்தவுடன் உலப்பில்லா மகிழ்வுடனே
    உன்கையைப் பிடித்தபடி உன்னுடனே நான்நடப்பேன்

    பல்முளைத்த பின்னாலே பலதடவை நீகடித்தாய்
    தொல்லையென நினைக்காமல் சுகமாக நானினைத்தேன்

    மடிமீது கிடந்திருந்து மார்பினிலே உதைத்திடுவாய்
    மனமெல்லாம் இன்பவெள்ளம் பெருகெடுத்து நிற்குமப்போ

    முடிமீது கையைவைத்து முறுக்கிநீ இழுத்திடுவாய்
    முகஞ்சுழியா உனைப்பார்த்து முறுவலுடன் நானிற்பேன்

    மார்பினிலே படுத்திருந்து மழலையிலே பேசிடுவாய்
    ஊர்முழுக்க ஓடிவந்து உன்பேச்சைக் கேட்குமப்போ

    வேரிலே பழுத்தபலா என்றுமே வியந்துமவர்
    மாரியென முத்தமழை மாறிமாறிக் கொடுத்திடுவார்

    ஊர்போற்ற வந்தவுனை உயர்செல்வ மாநினைந்து
    உச்சியெலாம் முத்தமிட்டு உவகையிலே நான்மிதப்பேன்

    கண்ணுக்குள் மணியெனவே காலமெலாம் உனைநினைத்து
    எண்ணற்ற கனவுகளை எனக்குள்ளே நான்சுமந்தேன்

    நீவளர்ந்து உரமாகி நெடுந்தூரம் எனைத்தாங்கி
    வானளவு புகழ்பெறவே மனத்துள்ளே நினைத்திருந்தேன்

    சுரமுனக்கு வந்துவிடின் துடிதுடித்துப் போய்விடுவேன்
    நடுஇரவு ஆனாலும் நாடிநிற்பேன் வைத்தியரை

    நீசிரித்தால் நான்சிரிப்பேன் நீயழுதால் நானழுவேன்
    மேதினியில் நீதானே மேலான செல்வமென்பேன்

    தோழ்மீது ஏறிநின்று துஷ்டத்தனம் செய்திடுவாய்
    ஆள்பாதி ஆக்கிடுவாய் அத்தனையும் ஆனந்தம்

    நாள்முழுக்க உன்னுடனே நானிருக்க வேண்டுமென்று
    தோழணைத்துப் பிடித்திடுவாய் சுகமங்கே பெருக்கெடுக்கும்

    பள்ளிக்கூடம் விட்டுவிட்டு பாதிவழி வந்துநிற்பேன்
    துள்ளிவந்து எனைப்பற்றி அள்ளிமுத்தம் தந்துநிற்பாய்

    வெள்ளை உள்ளத்தோடென்னை விட்டுவிடா உன்விருப்பால்
    உள்ளமெலாம் இன்பமெனும் உணர்வாக ஓடிநிற்கும்

    சொல்லசொல்ல கதைகேட்பாய் சுற்றிவந்தும் கதைகேட்பாய்
    நல்லகதை சொல்லுவென நயமுடனே நாடிநிற்பாய்

    ஆராதகாதலுடன் அணைத்தபடி சொல்லி நிற்பேன்
    பேராவல் கொண்டுநீயும் பிரமிப்பாய் கேட்டிடுவாய்

    இப்போது போன்செய்தால் எடுக்கநீ தயங்குகிறாய்
    அப்போது என்பேச்சை ஆனந்தமாய் கேட்டாயே
    முப்போதும் உன்நினைப்பாய் முழுவதுமாய் இருந்தேனே
    இப்போது அழைப்பதற்கு எனக்கிப்போ யாருள்ளார்

    நான்நடக்க முடியாமல் நர்சிங்ஹோம் இருக்கின்றேன்
    நீநடந்த நடையினைநான் நினைவினிலே மீட்கின்றேன்
    என்மகனே என்நடையை இங்குவந்து பார்த்துவிடு
    உன்மனத்தில் பழையநடை ஓடிவந்து நின்றுவிடும்

    பார்ப்பதற்கு வருவாயா எனப்பார்த்து நிற்கிற்றேன்
    பார்வையிப்போ எனைப்பார்த்து பரிகசித்து நிற்கிறது
    பள்ளிக்கூடம் விட்டபின்பு பாதிவழி வந்தவனே
    பார்த்தபடி நிற்கின்றேன் பார்த்துவிட வருவாயா

    நடு இரவில் நீவிழித்தால் நானணைத்துக் கொஞ்சிடுவேன்
    நானெழுந்து விழித்தாலும் எனையணைக்க யாருமிலை
    தனிமையிலே வாடுகிறேன் தயவைநான் நாடுகிறேன்
    எனதருமை தவப்புதல்வா எனையணைக்க வருவாயா

    முதுமை வந்தகாரணத்தால் மூச்சுவிட முடியவில்லை
    தனிமையிலே தவிக்கின்றேன் தாகமெலாம் உன்னிடத்தில்
    புவிமீது உன்னையேநான் புதுமருந்தாய் உணருகிறேன்
    மடிமீது எனைவைத்து வருடிவிட வருவாயா

    உன்குடும்பம் உன்பிள்ளை உனக்கு அதுதேவைதான்
    என்றாலும் உன்னம்மா என்றுமுனக் கம்மாதான்
    இளமையிலும் முதுமையிலும் உனக்குநான் அம்மாதான்
    ஏக்கமுடன் இருப்பவளை பார்ப்பதற்கு வருவாயா

    நேர்சிங்ஹோம் வாழ்க்கை நிம்மதியாய் இல்லையப்பா
    யாரிடம்நான் சொல்லுவது நான்நொந்து போய்விட்டேன்
    வேரற்றமரமாக விழும்நிலையில் நான் உள்ளேன்
    யாருள்ளார் எனையணைக்க நானழுது தொலைகின்றேன்

    பிள்ளைகளே தயவுசெய்து பெற்றவரை பேணுங்கள்
    உள்ளமதில் பெற்றவரை உயர்த்திவைத்துப் பாருங்கள்
    கள்ளமிலா அன்புடைய வெள்ளமனம் உடையவரே
    கடவுளென திகழுமெங்கள் கண்நிறைந்த பெற்றவரே

    கண்ணிரில் அப்பாவும் கதறலுடன் அம்மாவும்
    மண்மீது இருந்துவிடின் மனிதருக்கே மதிப்புண்டா
    எண்ணிநாம் பார்க்காமல் இருந்துமே விட்டுவிட்டால்
    மண்ணிலே வாழ்வதிலே வாழ்வினுக்கே பயனுண்டா !

    அன்னையும்பிதாவும் முன்னறிதெய்வம்
    என்பதை அனைவரும்
    அறமெனக் கொண்டிடுவோம்
    அவர் அகமும்முகமும்
    ஆனந்தம் அடைய
    அனைவரும் செய்திடுவோம் !

    Share
  • உதவி நிற்போம் !

            –எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

              மாண்டவர் கணக்கை எண்ணில்
              மனமெலாம் கலங்கு திப்போ
              மீண்டவர் வாழ்வு கூட
              வீதியில் நிற்றல் ஆச்சே!

              ஆண்டவன் கணக்கில் யாவும்
              அப்போதே இருக்கு என்று
              தோன்றிடும் வண்ணம் பேசும்
              துடுக்கினைக் கேட் கின்றோமே!

              இயற்கையின் சீற்றம் வந்து
              இரக்கத்தை எடுத்து விட்டுத்
              துயரெனும் பரிசைத் தந்து
              துவம்சமே செய்த தங்கே!

              நேபாள மக்கள் வாழ்வில்
              நீண்டதோர் துயர ஆறு
              ஓடிய செயலைக் கண்டு
              உலகமே பதறிப் போச்சு!

              துன்பத்தில் ஆழ்ந்து நிற்பார்
              துயரெலாம் துடைக்க வேண்டும்
              அன்புடன் ஒன்று சேர்ந்து
              அனைவரும் உதவி நிற்போம் !

    Share
  • கைகூப்பிக் கேட்கின்றேன் !

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    அன்னையின் அரவணைப்பில் ஆனந்தம் நாம்கண்டோம்
    அவள்மடியில் படுத்துறங்கி அனைத்தையுமே நாம்பெற்றோம்
    இல்லையெனும் வார்த்தையவள் இதயத்தில் வந்ததில்லை
    இவ்வுலகில் அன்னையைப்போல் எவருமே இருந்ததில்லை

    அழுகுரலை அவள்கேட்டாள் ஆடியே போய்விடுவாள்
    பழுதெமை நாடாமல் பார்த்திடுவாள் அன்னையவள்
    கொழுகொம்பு போலவள் கோலாமாய்க் கொண்டிடுவாள்
    முழுவுலகில் அன்னையைப்போல் முன்னிற்பார் யாருமிலர்

    அன்னையவள் அடிதொழுதால் அனைவருக்கும் ஆனந்தம்
    அன்னையினை ஆலயமாய் அனைவருமே எண்ணிடுவோம்
    ஆருமற்று நிற்கின்ற அவலம்தனைக் காணாமல்
    அன்னையினைப் போற்றுதலே அவர்க்காற்றும் அருந்தொண்டே

    காப்பாற்றி நின்றவளைக் காப்பகத்தில் விட்டுவிட்டுக்
    கண்துடைக்கக் கொண்டாட்டம் கனவானே செய்யாதீர்
    கண்ணுக்குள் மணியாகக் காத்துக்காத்து வளர்த்தவளைக்
    கண்கலங்கச் செய்யாதீர் கைகூப்பிக் கேட்கின்றேன் !

     

    Share
  • மறுபடிநீ வரவேண்டும் !

      -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

        மிடுக்கான பார்வையுடன்
        மீசைவைத்த பாரதியாய்த்
        துடுக்காக எழுதிநின்ற
        துணிவான எழுத்துமன்னா!                               Jeyakantan_Tamil_Author

        அடுக்கடுக்காய்ப் பலதந்தாய்
        அனைவரையும் இழுத்துவைத்தாய்
        வெடுக்கென்று பேசிடினும்
        விதம்விதமாய்ச் சொன்னாயே!

        உன்னெழுத்தை விஞ்சுதற்கு
        உள்ளாரோ எழுத்தாளர்?
        மண்ணுலகில் உயிர்பெற்று
        மறுபடிநீ வரவேண்டும்!

        தமிழெழுதி தமிழெழுதி
        தலைநிமிர்ந்து நின்றாயே
        தமிழுலகம் இப்போது
        தலைவணங்கி நிற்கிறது !

       ஜெயகாந்தா மறைந்தாயா?
       நினைக்கவே முடியவில்லை
       ஜெயம்தந்த ஜெயகாந்தா
       நீஎன்றும் வாழுகிறாய் !
       

    Share
  • இறைவனையே எண்ணவைத்தார் !

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    இசைபாடி எமையெல்லாம்
    இறைவனையே எண்ணவைத்தார்
    அசையாத மனத்தையெல்லாம்
    அவர்பாடி அசையவைத்தார்!

    தனியான குரல்வளத்தால்                         NagoorHaniffa
    தரணியிலே உயரநின்றார்
    தரமாகத் தமிழ்பாடி
    உரமானார் தமிழிசையில்!

    நாகூரில் பிறந்தகுரல்
    நாடெங்கும் ஒலித்ததுவே
    கூவுகின்ற குயில்கூட
    நாகூரை நினைக்கிறதே!

    நாகூரின் நாயகனே
    நீயெங்கே போய்விட்டாய்?
    நாடுள்ளோர் உன்பாட்டால்
    நாளுமுனைத் தேடுகிறார்!

    காசுக்காய்ப் பாடாது
    கடவுளுக்காய்ப் பாடிநின்றாய்
    தேசமெலாம் இப்போது
    தேடுதையா உன்முகத்தை!

     

    Share
  • சகலருமே வேண்டிநிற்போம் !

            -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

            மன்மத வருடமதை மனமகிழ வரவேற்று
            துன்மதி போயிடவே துதித்துமே கடவுளைநாம்
            பன்முறை வணங்கிநின்றால் பலநன்மை வந்துவிடும்
            என்னினிய நண்பர்காள் இவ்வண்ணம் செய்திடுவீர் !

            புதுவருடம் எமக்கெல்லாம் புத்துணர்வு தந்திடட்டும்
            எமதுளத்தில் என்றென்றும் எழுந்திடட்டும் நல்லெண்ணம்
            தமதுயிரால் எமைவாழ வைத்துநிற்கும் பெரியோரைத்
            தானினைத்து அவர்பாதம் தனைவணங்கி நிற்போமே !

            நல்லவைகள் ஆற்றவெண்ணி நாமென்றும் நினைத்திடுவோம்
            அல்லவைகள் புறந்தள்ளி உள்ளமதைத் திருத்திடுவோம்
            உள்நுழையும் கள்ளமெலாம் உருக்குலையச் செய்துநிற்போம்
            நல்லவரின் அறிவுரையை நாம்கேட்டு நடந்திடுவோம் !

            கோவில்சென்று கும்பிடுவோம் குறையகல வேண்டிடுவோம்
            கோபமெனும் கொடுநெருப்பைக் குளிர்விக்க முயன்றிடுவோம்
            சாபமிடும் பேய்க்குணத்தை சம்காரம் செய்திடுவோம்
            சன்மார்க்கம் மனத்திலெழ சகலருமே வேண்டிநிற்போம் !

    Share
  • பெம்மானை வணங்கிடுவோம்!

         –எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

         சித்திரையின் பின்னாலே
         சிறப்பெல்லாம் வருமென்று
         பக்குவமாய்ப் பஞ்சாங்கம்
         பார்த்திடுவோம் யாவருமே!

         பஞ்சாங்கப் பலன்தன்னைப்
         பலபேரும் பார்த்துவிட்டு
         நெஞ்சார மகிழ்ந்தாலும்
         சிலநெஞ்சம் மகிழாது!

         பரிகாரம் செய்துவிடின்                                  Nataraja
         பலன்சிறந்து விடுமென்று
         பலன்குறைந்த நெஞ்சத்தார்
         பலவற்றைச் செய்திடுவார்!

         பூசைகள் பலசெய்வார்
         புதுவழிகள் பலபார்ப்பார்
         ஆசையால் உந்தியவர்
         காசையெல்லாம் செலவிடுவார்!

        சித்திரையை யாவருமே
        சிறப்பாக வரவேற்போம்
        சிக்கலெலாம் போகவேண்டிச்
        சிரத்தையுடன் செயல்படுவோம்!

        புத்தாடை உடுத்திடுவோம்
        புத்துணர்வு பெற்றிடுவோம்
        மொத்தமுள்ள நல்லவற்றை
        முழுமையுடன் செய்திடுவோம்!

        சித்திரையின் பின்னாலே
        சீராகும் எனும்நினைப்பால்
        அத்தனை பேருள்ளமுமே
        சித்திரையைக் கொண்டாடும்!

        வாசலிலே கோலமிட்டு
        வரவேற்போம் சித்திரையை
        நீதிநெறி தனைமனதில்
        நீங்காது தேக்கிவைப்போம்!

        தாய்தந்தை மனங்குளிரத்
        தாள்பணிந்து நின்றிடுவோம்
        பேய்மனத்தை ஒழிப்பதற்குப்
        பெம்மானை வணங்கிடுவோம்!

     

    Share