எம்மோடே வாழுகின்றார் !

– எம். ஜெயராம சர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

        மண்ணிலே உள்ளவர்கள்
        மனம்மகிழ இசையமைத்த
        மெல்லிசையின் மன்னனே
        விரைவாகப் போனதேனோ?

        விண்ணிலே உள்ளவரும்
        மெல்லிசையைக் கேட்பதற்கு
        விரும்பியுனை அழைத்ததனால்                 msviswa
        விண்ணோக்கிச் சென்றனையோ?

        கண்ணதாசன் வாலிபாடல்
        காலமெலாம் நினைப்பதற்கு
        உன்னுடைய இசையன்றோ
        உரமாக விளங்கியது!

        ஏழ்மைதனில் இருந்தாலும்
        இன்னல்பல பட்டாலும்
        வாழ்வெல்லாம் இசையுண்டு
        மாயிசையைத் தந்துவிட்டாய்

       நோய்வந்து படுத்தாலும்
       நுடங்கிநாம் நின்றாலும்
       மன்னவனே உன்னிசையே
       மாமருந்தாய் இருந்ததன்றோ!

       ’பா’வரிசைப் படங்களிலே
       பலபாடல் எம்மனத்தைப்
       பதமாக்கி இதமாக்கி
       பக்குவத்தைக் ஊட்டியதே!

       கவியரசர் பாட்டெழுத
       எம்எஸ்வி இசையமைக்க
       டிஎம்எஸ் பாடிவிடின்
       தேவருமே வந்துநிற்பார்!

       எத்தனையோ மெட்டுக்கள்
       எப்படித்தான் வந்தனவோ?
       இன்றுவுன் ஆர்மோனியம்
       இயம்பிடுமா இரசியத்தை?

       ஆர்மோனியம் இப்போ
       அநாதையாய் நிற்கிறது
       அதுவுன்னை நினைத்தபடி
       அழுதழுது நிற்கிறது!

        விஸ்வநாதன் எனும்பெரியோன்
        விண்ணோக்கிச் சென்றசெய்தி
        மண்ணிலுள்ள இசைக்கெல்லாம்
        மாறாத இழப்பன்றோ!

        இசைமன்னன் தனைப்பறித்த
        இரக்கமிலா அரக்கர்களே
        இசைமன்னன் இசையினைநாம்
        எப்பொழுதும் தரமாட்டோம்!

        எம்எஸ்வி இசையிலேநாம்
        எந்நாளும் இணைந்திருப்போம்
        எம்எஸ்வி இசையாக
        எம்மோடே வாழுகின்றார் !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.