கவிதைகள்மின்னூல்கள்

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 7

சி. ஜெயபாரதன்.

kahlil-gibran

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

“கலைத்துவம் என்பது புதிராகவும், மறைந்தும் இருப்பவற்றுள் நமக்கு வெளிப்படையாய்த் தெரிவதை விட ஒரு படி உயர்ந்தது !

“எழில் (Beauty) என்பது கண்ணாடியில் தன்னையே நோக்கிக் கொள்ளும் முடிவில்லாமை (Eternity).”
– கலில் கிப்ரான்

“நான் உலகத்தை விட்டு ஏகாந்தத்தைத் தேடியதற்குக் காரணம் : பணிவு என்பது பலவீனம் என்றும், பரிவு என்பது கோழைத்தனம் என்றும், செல்வப் பகட்டு ஒருவித வலுவென்றும் நம்பிடும் பல்வேறு மாந்தருக்கு மதிப்பளிப்பதில் நான் களைப்படைந்து போவதே !”
– கலில் கிப்ரான் (From A Treasury of Kahlil Gibran 1951)

நான் ஏகாந்தத்தைத் தேடினேன், போலி அறிவைத் (Spectre of Knowledge) தமது கனவுகளில் கண்டு கொண்டு அவரது குறிக்கோளை அடைந்து விட்டதாக நம்பிடும் சுயநல வாதிகளிடமிருந்து என்னை மறைத்துக் கொள்ள !”
– கலில் கிப்ரான் (From A Treasury of Kahlil Gibran 1951)

வாழ்க்கையின் விளையாட்டுக் களம்

ஒரு மணி நேரமே
ஒதுக்கப் பட்டது
அழகைத் தேடும் முயற்சிக்கு !
மெலியோர் அஞ்சி
வலியோர்க்கு அளித்திடும்
பூரண நூற்றாண்டுக்
கீர்த்திக்குக்
காதல் தகுதி பெறும் !

அந்த நேரத்தில் தான்
வெளிப்படும்
மனிதனின் இயற்கைத் தன்மை !
அந்த நூற்றாண்டில் தான்
உறங்கிடும் மெய்ப்பாடு
தடுமாற்றக் கனவுகளின்
நடுங்கும் கைகளுக்கு
இடையே !

அந்த நேரத்தில் தான்
ஆத்மா நோக்கிக் கொள்ளும்
தனக்காக
இயற்கையின் நியதியை !
அந்த நூற்றாண்டுக் காக
தன்னைத் தானே
ஆத்மா
சிறையிட்டுக் கொள்ளும்
மனித விதியின் பின்னே !
அடக்கு முறை
இரும்பு
விலங்கு மாட்டப்படும்
ஆத்மாவுக்கு !

அந்த நேரம் தான்
உள்ளுணர்ச்சி எழுந்திடும்
சாலமனின்
இசைப் பாக்களால் !
அந்த நூற்றாண்டில் தான்
குருட்டுத்தன அதிகாரம்
பால்பெக்* கோயிலைப் (1)
பாழாக்கியது !

அந்த நேரம் தான்
(ஏசு கிறித்துவின்)
“மலைப் பேருரை” உதித்தது !
அந்த நூற்றாண்டில் தான்
தகர்க்கப் பட்டன
பல்மைராக்* கோட்டைகளும் (2)
பாபிலோன் கோபுரமும் !

அந்த நேரம் தான்
முகமது நபி மெக்காவுக்குப்
பயணம் இருந்தது !
அந்த நூற்றாண்டு தான்
மறந்தது
அல்லாவை !
கொல்கொதாவை* (3) !
சினாய் மலையை !
_______________________________________________________________

1. பால்பெக்* கோயில் (Baalbek Ruined Temple in Lebanon)
2. Palmyra is an ancient city of central Syria,
3. கொல்கொதா (Golgotha)
(ஏசு கிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்த இடம்)
_______________________________________________________________

வாழ்க்கையின் விளையாட்டுக் களம்

ஒரு மணி நேரமே
ஒதுக்கப் பட்டது
பலவீனரின்
களவு போன சமத்துவத்தைப்
பற்றி நாம்
கவலைப் படுவதற்கும்
மனம் நோவ தற்கும் !
பேராசையும்
பெரும் பதவி மோகமும்
நிரம்பிய
நூறாண்டை விட அது
பாராட்டத் தக்கது !

அந்த மணி நேரத்தில்தான்
எந்தன் இதயம்
சுத்த மானது
துக்கத்தைச் சூடாக்கி
காதல் விளக்கேற்றி
கதிரொளி வீசிக் கொண்டு !
அந்த நூற்றாண்டில் தான்
மெய்ப்பாடைத் தேடும்
வேட்கை
மேதினியின் நெஞ்சுக்குள்
மேவியது !

அந்த மணி நேரத்தில்
வேரிட்டன
ஓங்கி உயர்வ தெல்லாம் !
அந்தத் தருணம் தான்
மௌன தியானத்தின்
மணிக் கணக் கானது
தியான வேளை,
பிரார்த்தனை வேளை
புதிய யுகத்தின்
நன்னெறி வேளை !

அந்த நூற்றாண்டு தான்
நீரோ மன்னன் வாழ்க்கை
மண் பொருள்
மூலமாய்த் தன்னையே
அர்ப்பணிக்கும் !

யுக யுகமாய்
நாடக அரங்கில்
காட்சி தரும்
வாழ்க்கை இதுதான் !
ஏட்டில் பதிக்கப் பட்டது
நூறாண் டுகளாய் !
புதிராய்ப் பல்லாண்டுகள்
நீடித்தது !
பாக்களாய் அதனைப் பாடியது
பல நாட்களாய் !
ஒரு மணி நேரத்தில்
உன்னத மானது !
ஆனால் அத்தருணம்
முடிவில்லாத
மாணிக்கக் கல்போல்
நிலை பெற்றது
மதிப்புடன் !

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க