(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

மீ.விசுவநாதன்

அத்யாயம்: 21

குலதெய்வம் சீராங்குளம் ஸ்ரீ புளியங்க்காவய்யன் ஸ்ரீ தர்மசாஸ்தா “

asmv

அவனுக்குக் குலதெய்வம் தர்மசாஸ்தா. கல்லிடைகுறிச்சிக்கு தெற்கே மணிமுத்தாறு மலையடிவாரத்தில் இருக்கின்ற “சீராங்க்குளம்” என்ற இடத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ புளியங்காவய்யன் தர்மசாஸ்தா. ஒவ்வொரு வருடமும் குறைந்தது ஒரு முறையேனும் குடும்பத்தினர் அனைவரும் இரண்டு, மூன்று மாட்டு வண்டிகளில் காலை ஏழு மணிக்குப் புறப்பட்டுச் சென்று வழிபாடு முடித்துவிட்டு வரும் பொழுது மாலை மூன்று மணி ஆகிவிடும். அவனுக்குத் தந்தை வழிப் பாட்டி, தாத்தா, சின்னத் தாத்தா, சித்திப் பாட்டி, அப்பா, அம்மா, அக்கா, சித்தாப்பா, சித்தி, அத்தைகள் என்று ஒரு பெரிய உறவுக் கூட்டமாகச் சென்று தரிசனம் செய்து வருவார்கள். வண்டியில் செல்லும் பொழுது வண்டிக்காரரின் அருகில் “கோஸ் பெட்டி”யில் அமர்ந்து வருவதுதான் அவனுக்கு ரொம்பவும் பிடித்தமானது. கல்லிடைகுறிச்சி “ரயில்வே லைன்” தாண்டி, வண்டி செல்லும் பொழுது, சாலையின் இரு பக்கமும் தோட்டமும், வயல்வெளிகளும், பெரிய குளங்க்களுமாகக் கண்ணுக்கு விருந்தாக இருக்கும். மாட்டு வண்டியில் பயணம் செய்வதே தனி சுகம்தான். “ஏலே..எங்கனலே போறே..நேரே ரோட்டப் பாத்துப் போங்கலே” என்று கையில் வைத்திருக்கும் ஒரு நீண்ட பிரம்பால் வண்டி மாட்டின் பின்புறம் தட்டிய படியே வண்டிக்காரர் மாட்டுடன் பேசிக் கொண்டே ஓட்டுவது ரசனையாக இருக்கும். அவனும் அந்த வண்டிக்கரரிடம் கேட்டு மாட்டின் கயிறுகளைப் பிடித்துக் கொண்டு வண்டி ஓட்டி இருக்கிறான். ஆனால் அப்போது வண்டிமாடுகள் ஒரு பக்கமாக சென்று விடும். “அம்பி.. கயற எங்கட்ட கொடு ….உன்னால புடிக்க முடியாது மாடு வயக்காட்டுல இறங்கிடும்ல ” என்று சிரித்துக் கொண்டே அவனிடம் இருந்து அந்தக் கயிறை வாங்கிக்கொள்வார்.

amsv
குலதெய்வக் கோவிலுக்கு நேரே கிழக்கில் ஒரு பெரிய குளம் உண்டு. அதில் எப்பொழுதும் தண்ணீர் நிரம்பி இருக்கும். கோடையில் கொஞ்சம் குறைவாக இருக்கும். கொக்குகளும், நாரைகளும், மைனா, குருவி போன்ற பறவைகளும் அந்தக் குளத்தின் நீரின் மீது பறந்து செல்லும் அழகை அவன் கண்கொட்டாமல் ரசித்துப் பார்ப்பான். கோவிலுக்கு தென்புறம் மலைப் பகுதியும், மேற்குப் பகுதியிலும், வடக்குப் பகுதியிலும் பச்சை வயல்களுமாக கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். கோவிலுக்கு வடபுறத்தில் ஒரு பெரிய ஆலமரம் உண்டு. அதில் நிறைய பறவைகள் அமர்ந்திருக்கும். அந்த ஒலி மனதிற்கு உல்லாசமாக இருக்கும். காற்று ஜிலு ஜிலுவென்று வரும். அந்த ஆல மர நிழலில்தான் வண்டியை நிறுத்தி, மாடுகளைக் கட்டி வைப்பார்கள். வண்டிக்காரர் கோஸ் பெட்டியில் தலை வைத்து படுத்து விடுவார். சுகமான காற்றில் அவர் அங்கே தூங்கி ஓய்வெடுப்பார். மற்றவர்கள் பூஜை சாமான்களை எடுத்துக் கொண்டு கோவிலுக்குள் சென்று விடுவார்கள். கோவிலைப் பூசாரி திறந்து விட்டதும், குடும்பத்து ஆண்களும் பெண்களும் கோவிலைச் சுத்தமாகப் பெருக்கி, பக்கத்துக் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து கோவிலின் தரையில் தெளித்துத் துடைப்பார்கள். அதன் பிறகு சுவாமியின் சன்னதிப் படிகளிலும், சன்னதியிலும், முன்புறத்திலும் அழகாகக் கோலம் போடுவார்கள். சுவாமிக்கு அபிஷேகப் பொருட்களை நேர்த்தியாக அவனுக்குத் “தாத்தாக்கள்” சன்னதியில் வைப்பார்கள். சித்தப்பாக்கள் எல்லோரும் வட்டமாக அமர்ந்து கொண்டு பழங்களை உரித்தும், வெல்லம், தேன், கற்கண்டு போன்ற பொருள்களைச் சேர்த்தும் ஒரு பெரிய பாத்திரத்தில் பஞ்சாமிருதம் தயாரிப்பார்கள். அவனும், அவனுக்கு அக்கா பாலா, அவனது அத்தையின் மகன் (அத்தான்) ஸ்ரீதர் ஆகியோரும் பழங்களை உரித்தும், வெல்லத்தைப் பொடி செய்தும் கொடுப்பதுண்டு. “டேய்..கண்ணா..கைய எச்சில் பண்ணக் கூடாது..” என்று அவனுக்குச் சித்தப்பாக்கள் மெல்லிய குரலில் சொல்லுவார்கள்.

அவனுக்குப் பாட்டி, அம்மா, சித்தி, அத்தை எல்லோரும் “தேங்காய்ப்பால் பாயசம்” (தேங்காயைத் துருவி, அந்தப் பூவை நன்றாக அரைத்துப் பாலெடுத்துக் கொதிக்க வைத்து அதில் வெல்லம், கொஞ்சம் நெய் , ஏலம் சேர்த்துச் செய்யும் பாயசம்- சாஸ்தா பாயசம் என்பார்கள் ), “சர்கரைப் பொங்கல்”, பொங்கல், “ஹவிஸ்” (வெறும் சாதம்) போன்ற உணவு வகைகளை சுவாமிக்கு நிவேதனம் செய்வதற்காக அங்கிருக்கும் ஒரு சிறிய மடப்பள்ளியில் உள்ள விறகு அடுப்பில் தயார் செய்வார்கள். வெளிப் பிராகாரத்தில் இருக்கும் ஆட்டுக்கல்லில் (இந்தத் தலைமுறைக்கு அது “மிக்ஸி”. ஆட்டுக்கல்லில் நடுக்குழியில் போடும் பொருளை, கல்உருளையால் சுற்றிச் சுற்றி அரைபார்கள். “மிக்ஸி”யில் போடும் பொருள் சுற்றிச் சுற்றி வந்து அரைபடும். இதுதான் கால மாற்றம்) துருவிய தேங்காய்ப் பூவை ஆட்டுக்கல்லில் நன்றாக அரைத்து பாயசம் செய்வதற்காக அத்தையோ, அம்மாவோ, சித்தியோ கொண்டு தருவார்கள். எல்லோரும் சேர்ந்து வேலைகளைப் பகிர்ந்து கொள்வது என்ற நல்லமுறை குலதெய்வத்தின் முன்பு கற்றுக்கொள்ளும் கூட்டுக் குடும்பப் பாடமாகவே அவனுக்கத் தோன்றும்.

” ப்ரும்மஸ்ரீ சங்கர வாத்தியார் “

asankப்ரும்மஸ்ரீ சங்கர வாத்தியார் தான் அந்தக் கோவிலின் பூஜைகளை நீண்ட காலமாகச் செய்து வருகிறார். அவருக்கு, குலதெய்வக் காரர்களின் குடும்ப உறவுகள் எல்லோரையும் நன்றாகத் தெரியும். வேதம் கற்றவர். நிறைய இளைஞர்களுக்கு வேதம் கற்றுக் கொடுத்துக் கொண்டுமிருந்தவர். நாங்கள் குலதெய்வ வழிபாட்டிற்கு வரப் போகிறோம் என்ற செய்தியைச் சொன்னால் போதும், அவரே கூட இருந்து மனதிற்குத் திருப்த்தியாக பூஜைகளைச் செய்து கொடுப்பார்.

ஸ்ரீ சங்கர வாத்தியார் அந்தக் கோவிலின் மூலஸ்தான ஸ்ரீ தர்மசாஸ்தாவுக்கும், அம்பாளுக்கும், அவர்கள் முன்பு இருக்கும் ஐயப்பனின் “யானை”வாகனத்திற்கும், உள்ளே தென்மேற்கு மூலையில் இருக்கும் விநாயகர், வடகிழக்கில் இருக்கும் சிவலிங்கம் அனைவருக்கும் நல்லெண்ணெய் தேய்ப்பார். கோவிலுக்கு உள்ளே தென்பகுதியில் இருக்கும் ஸ்ரீ சங்கிலி பூதத்தார், வடபகுதியில் இருக்கும் பெரிய மாடன் – சின்ன மாடன் போன்ற காவல் தெய்வங்களுக்கும் பளபளவென எண்ணையைத் தடவி அபிஷேகத்திற்குத் தயாராக வைப்பார்.

amsv1சுவாமி சன்னதிக்கு முன்னால் கோலத்தின் மீது இரண்டு பெரிய வாழை இலைகளைப் போட்டு அதில் பச்சரிசியைப் பரப்பி அதன்மீது நூல் சுற்றிய நன்னீர் நிறைந்த கும்பத்தை வைத்து, அதனுள் மாவிலையையும், தேங்காயையும் வைப்பார். குடுபத்துப் பெரியவர்களிடம்,” மாமா பூஜைய ஆரம்பிக்கலாமா” என்று கேட்பார். “சரி..” என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். உடனே குடுபத்துப் பெரியவரை கும்பத்தின் அருகில் வடக்கு திசையைப் பார்த்து அமர வைத்து “சங்கல்ப” மந்திரம் சொல்லி ஆரம்பிப்பார். ஸ்ரீ ருத்ரம், சமகம், புருஷ சூக்தம் போன்ற மந்திரங்களை அவருடன் அந்த மந்திரங்கள் தெரிந்த குடும்பத்துப் பெரியவர்களும் சேர்ந்து சொல்லுவார்கள். மந்திர ஜபம் முடிந்தபின்பு சுவாமிக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி அபிஷேகம், பாலபிஷேகம், வாசனைத்திரவியப் பொருட்கள் கலந்த நன்னீர் அபிஷேகம், தயிர், தேன், சந்தன அபிஷேகம், இளநீர், பன்னீர் அபிஷேகம் முடித்து, ஜபித்த கும்ப ஜலத்தினால் குலதெய்வத்தைக் குளிர்விப்பர்கள். இறுதியாக “விபூதி” அபிஷேகம் செய்து கற்பூரம் காண்பித்து அபிஷேகத்தைப் பூர்த்தி செய்வார்கள்.

சுவாமிக்கு எடுத்து வந்திருந்த புதிய வஸ்திரங்களையும், அழகிய பூமாலைகளையும் சுவாமிக்கும், காவல் தெய்வங்களுக்கும் அணிவித்தபின்பு, ” மாமா …அர்ச்சனை பண்ணலாமா…நேவித்யம் தயாராயாச்சா…” என்று சங்கர வாத்தியார் கேட்ப்பார். “ஓ..பேஷாப் பண்ணுங்கோ…” என்று அவனுக்குத் தாத்தா சொல்லுவார். அர்ச்சனை முடிந்து, “பாயசம், சக்கரப் பொங்கல், பொங்கல், சாதம், பானகம், பழம், வெற்றிலை பாக்குடன் நிவேதனம் செய்வார். அடுத்ததாக சுவாமியின் சன்னதியில் வரிசையாக பதினெட்டு இடங்களில் கற்பூரம் ஏற்றி அனைவரும் ஒரே குடும்பமாக, ஒரே குரலாக “சுவாமியே சரணம் ஐயப்பா…எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா ..சீரான்குளம் ஸ்ரீ தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா ….சபரிகிரி வாசனே சரணமையப்பா ..” என்று சரண கோஷம் சொல்லி “ஒன்னாம் திருப்படி சரணம் பொன்னையப்பா..” என்ற படிபாடலைப் பாடி நமஸ்காரம் செய்வார்கள். அதன் பின்பு “பூதநாத சதானந்தா சர்வபூத தயாபரா..ரக்ஷ ரக்ஷ மகாபாகோ சாஸ்த்ரே துப்யம் நமோன்னமாக” என்று சொல்லியும், “லோகவீர்யம் மகாபூஜ்யம் சர்வரக்ஷாஹரம் விபும் …பார்வதி ஹிருதயானந்தம் சாஸ்தாரம் குலதெய்வதம்” (பிரணமாமிகம் என்ற பாடமும் உண்டு) என்ற சுலோகத்தையும் சொல்லி எல்லோரும் சுவாமி சன்னதியில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிப்பர்கள். அதன் பிறகு சுவாமி பிரசாதங்களை சங்கர வாத்தியார் அவனுக்கு தாத்தாவிடம் மந்திரங்கள் சொல்லித் தருவார். தாத்தா அதை மிகுந்த பக்தியுடன் பெற்றுக்கொண்டு தனது சகோதரர்கள், குடும்பத்து உறவுகள் அனைவருக்கும் தருவார். அனைவரும் அதைக் கண்ணில் ஒற்றிக் கொள்வார்கள். அவனுக்குத் தாத்தா சாஸ்தாவின் விபூதிப் பிரசாதத்தை அவனுக்கும், அவனக்கு அக்கா பாலாவுக்கும், அத்தையின் மகன் ஸ்ரீதருக்கும் நெற்றியில் இடுவார். அதன் பிறகு வாத்தியாருக்கு தக்ஷிணை கொடுப்பார். வாத்தியாருக்கு எங்களையும் நமஸ்காரம் செய்யச் சொல்லித் தானும் குடும்பத்தோடு நமஸ்கரிப்பார்.

அதன் பிறகு அனைவரும் அந்தக் கோவிலுக்கு உள்ளேயே வரிசையாக அமர்ந்து கொள்வார்கள். அனைவருக்கும் இலையில் பிரசாதம் பரிமாறுவார்கள். அதை அமிர்தமாக அனைவரும் சேர்ந்து உண்பார்கள். அந்தக் கோவிலுக்கு வெளியில் வயல் காட்டில் வேலை செய்து கொண்டிர்ப்பவர்களை அழைத்து அவர்களுக்கும் பிரசாதம் வழங்குவார்கள். கூட வந்த வண்டிக் காரருக்கும் கோவிலுக்குள் அழைத்து பிரசாத உணவைப் பரிமாறுவார்கள். பிரசாதம் சாப்பிட்ட இடத்தைத் தூய்மை செய்த பின்னர் அனைவரும் கோவில் வாசலில் இருக்கும் “கல்யானையின்” அருகில் வந்து நிற்பார்கள். குடும்பத்துக்குப் பெரியவரான அவனுக்குத் “தாத்தா” சுவாமியைப் பிராத்தனை செய்து கொண்டு “தேங்காய் வடல்” போடுவார். அனைவரும் மீண்டும் குலதெய்வத்தை நமஸ்கரித்து விட்டு ஆலமரத்தடியில் இருக்கும் மாட்டு வண்டியில் ஏறி வீட்டிற்குத் திரும்புவார்கள். வீட்டிற்குள் நுழையும் பொழுது மதியம் மூன்று மணி ஆகியிருக்கும்.

மாட்டுவண்டியில் ஏறும் முன்பாக ஒரு முறை அவனுக்கு ஒன்று விட்ட “ரமணிச் சித்தப்பா” அங்குள்ள குளக்கரையில் அவனது கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்தபடி அங்கிருக்கும் பறவைகளின் அருகில் அழைத்துச் சென்று காட்டினார். அவைகள் பயமில்லாமல் அந்த குளக்கரையில் இருந்த அழகும், நீர்ப்பரப்பில் பறந்து சென்ற அழகும் சித்திரம் போல அவளுள்ளே இருக்கிறது. ரம்யமான இடம். இயற்கை அழகை ரசிப்பதும், போற்றுவதும் கூட அவனுக்குக் குலதெய்வ வழிபாடுதான்.

இன்று வரை அவன் ஒவ்வொரு வருடமும் அவனுக்கு முன்னோர்கள் காட்டிய வழியில் குடும்பத்தோடு குலதெய்வத்தைச் சென்று வழிபட்டு வருகின்றான். இப்போதெல்லாம் கோவிலுக்குப் போகும் பாதை நன்றாக இருக்கிறது. அவனுக்கு சித்தப்பா குடும்பத்தினரும் தவறாமல் வழிபாட்டு வருகின்றனர். அவனது ஒன்று விட்ட சகோதரன் “ராஜா” வேலையாக “துபாய்” நகரத்தில் இருந்தாலும் குலதெய்வத்திற்கு மறக்காமல் வழிபாடுகள் செய்து வருகிறான். இதுபோலவே சீரான்குளம் ஸ்ரீ தர்மசாஸ்தாவைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் குடும்பம் குடும்பமாகவே வந்து வழிபாடு செய்துவிட்டு மனநிறைவோடு வாழ்ந்து வருகின்றனர். இப்பொழுது சங்கர வாத்தியாரின் மகன்தான் கோவில் பூஜைகளைக் கவனித்து வருகிறார். அவர் வேதம் படித்தவர். C. A . படித்த பண்புள்ள பட்டதாரியும் கூட.

முன்பு அவனுக்கு அப்பாவும், சிங்கம்பட்டி கணக்கையரின் மகன் V. குருசாமி அவர்களும், K. S. சங்கரசுப்ரமணியன் (அம்பி மாமா) அவர்களின் துணையுடன் இந்தக் கோவில் நிர்வாகத்தைக் கவனித்து வந்தனர்.

K. S. சங்கரசுப்ரமணியன் (அம்பி மாமா), ரங்கநாத வாத்தியாரின் பெண் திருமதி. பொன்னா, மகாதேவன் , குருசாமி சாரின் மகன் G. வெங்கடராமன், ஸ்ரீ சங்கர வாத்தியார் போன்ற நல்லோர்களின் தொடர்ந்த முயற்சியாலும், சிருங்கேரி ஜகத்குரு அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் பரிபூர்ண கிருபையாலும் “ஜய வருடம் தை மாதம் 25ம் தேதி ஞாயிற்று கிழமை (08.02.2015)” காலை ஒன்பதுக்கு மேல் பத்தரை மணிக்குள் மிதுன லக்னத்தில் பூர்ண புஷ்கலாம்பாள் ஸமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ர சுவாமிக்கும், மற்றுமுள்ள பரிவார தேவதைகளுக்கும் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. அவரைக் குலதெய்வமாகக் கொண்ட நூற்றுக் கணக்கான குடும்பத்தினர் மிக்க மகிழ்ச்சியுடனும், பக்தியுடனும் கலந்து கொண்டனர். தொலைதூரத்தில் இருப்பவர்கள் அவரை மனதாரப் பிராத்தித்துக் கொண்டு தங்களால் இயன்ற கைங்கர்யம் செய்து நமஸ்கரித்தனர். கும்பாபிஷேக சமயத்தில் அவன் ஒரு கவிதை எழுதி குலதெய்வத்தின் திருவடிகளில் பக்தியோடும், மிக்க பணிவோடும் அனைவருக்காகவும் சமர்ப்பித்தான். அதை அவன் இப்பொழுது உங்களோடு பகிர்ந்து கொள்கின்றான்.

சீராங்குளம் ஸ்ரீ தர்ம சாஸ்தா

காட்டுப் புறத்திலே கோவில் – “சாஸ்தாasmv3
காக்கும் குலதெய்வ மாகும்”
ஏட்டுப் படிப்புகள் வேண்டாம் – ஈசன்
ஏற்கிற நல்மனம் போதும் !
வீட்டுக் கவலைகள் போகும் -பக்தி
வித்துத் தவமர மாகும்
மூட்டுக் கனலினை உள்ளே – “நான்”
முற்று மழிந்திடக் காண்பாய் ! (1)

சீராங் குளமெனும் ஊரில் – அய்யன்
சீரோ டிருகிறான் பாரில் !
பாரா திருப்பதே இல்லை – அவன்
பக்தர்க்குச் சோதனை இல்லை !
பேரும் புகழுடன் வைப்பான் – குலப்
பெருமை உயர்ந்திட நிற்பான்
வாரும் அனைவரு மிங்கே – “சாந்தி
வளத்தைப் பெருக்கிடு மின்றே !” (2)

“குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே” என்ற முதுமொழிக்கேற்ப மனம், மொழி, வாக்காலும், உடலாலும், இயன்ற பொருளாலும் குலதெய்வத்தைக் கொண்டாடு வோம். வம்சம் வளமையோடும், வல்லமையோடும், தர்மசிந்தனையோடும், நிறைவான மனத்தோடும், ஆரோக்கியத்தோடும் பல்லாண்டுகள் வாழும். அவனுக்கு அதில் ஆழமான நம்பிக்கை உண்டு.

16.07.2015
அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

படங்கள்  உதவி   “, K.V. அன்னபூர்ணா . நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *