சு. கோதண்டராமன்

சிவன் எனும் நாமம்

 vallavan-kanavu111

தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும்

எனக்கே அருளாவாறு என்கொல்மனக்கினிய

சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப்

பேராளன் வானோர் பிரான்

அம்மையார்

வடமர் மீண்டும் பேசத் தொடங்கினார். “லகுலீசருக்கு குசிகர், கர்க்கர், மித்ரர், கௌருசேயர் என்று நான்கு சீடர்கள் உண்டு. அவர்களுடைய சிஷ்ய பரம்பரை பல்கிப் பெருகியது. இவர்கள் மூலமாகப் பாரதம் முழுவதும் பல பகுதிகளிலும் லகுலீசம் பரவியது. காலப்போக்கில் அது காலாமுகம், காபாலிகம் என்று பலவகையாக உருமாறிவிட்டது. அவரது உண்மையான சீடர்கள் கார்வானைச் சுற்றிய பகுதிகளில் மட்டும்தான் உள்ளனர். லகுலீசரது போதனைகள் பரவிய பின் எங்கள் நாட்டில் சமணம் முற்றிலும் ஒழிந்துவிட்டது. பாரதம் முழுவதும் பாசுபதத்தைப் பரப்ப வேண்டும் என்பதற்காக எங்கள் நாட்டிலிருந்து பலரும் இப்படிப் பல தேசங்களுக்கும் செல்கிறோம். என்னைச் சோழ தேசத்துக்குச் செல்லும்படி எங்கள் குரு அனுப்பினார். அவரது ஆணைப்படி இங்கு வந்துள்ளேன்” என்றார்.

“உங்கள் வழிபடு தெய்வம் பற்றிச் சொல்லுங்கள்” என்று அரசர் கேட்டார்.

அவர் விடையளித்தார். “எங்களுக்கு ருத்ரன்தான் தெய்வம். யஜுர் வேதத்தில் உள்ள ருத்ரம்தான் லகுலீசர் எங்களுக்கு உபதேசித்த பிரார்த்தனை மந்திரம். இதில் இறைவன் எல்லாமாக வியாபித்து நிற்பது கூறப்பட்டுள்ளது. நமோநம என்று முன்னூறு முறை வணங்கப்படும் தெய்வம் நான்கு வேதங்களிலும் ருத்ரன் அன்றி வேறு இல்லை. பதிநான்கு முறைகள் அவர் மங்களகரமானவர் என்ற பொருளுள்ள சிவ என்ற அடைமொழியால் சிறப்பிக்கப்படுகிறார். இந்தச் சிறப்பும் வேறு எந்த வேத தெய்வத்துக்கும் இல்லை. ருத்ரத்தில் ருத்ரனுக்குப் பல விதமான பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நமச்சிவாய என்ற மந்திரத்தை நாங்கள் ஜபம் செய்யப் பயன்படுத்துகிறோம். ருத்ரன் என்றும் பசுபதி என்றும் சிவன் என்றும் அழைக்கப்படுகிற அவரே வேதத்தின் பிரதான தெய்வம் என்பது லகுலீசரது போதனை. அந்தச் சிவனே லகுலீசராக அவதரித்தார். அவரை நாங்கள் வணங்குகிறோம். அதனால் எங்கள் சமயம் லகுலீசம் எனவும் பாசுபதம் எனவும் சைவம் எனவும் அழைக்கப்படுகிறது.”

“சிவ என்ற பெயர் நன்றாக இருக்கிறது. வடமொழியில் அது மங்களகரமானவர் என்று பொருள் படுகிறது. தமிழில் சிவந்த நிறமுள்ளவர் என்பதைக் குறிப்பிடுகிறது. இறைவனைச் செம்மேனிப் பேராளன் என்று அம்மையார் குறிப்பிடுகிறார். இரு மொழியிலும் உயர்ந்த பொருள் உள்ள அச்சொல் கொண்டு அழைப்பதையே நான் விரும்புகிறேன். சரி, நீங்கள் சிவனை எப்படி வழிபடுகிறீர்கள்? எங்கள் நாட்டில் சுதையால் விக்கிரகம் அமைத்து வழிபடுவது போல் ஏதேனும் விக்கிரகம் வைத்து வணங்குகிறீர்களா?”

 “எங்களைப் பொறுத்தவரை குரு வேறு, தெய்வம் வேறு அல்ல. லகுலீசரே ருத்ரன். அவர் சிவனுடன் இரண்டறக் கலந்திருப்பதாக நம்புகிறோம். அதைச் சித்தரிக்கும் வகையில் ஒரு வட்ட வடிவத் தூணின் மேல் பகுதியைக் கிண்ணம் கவிழ்த்தாற் போல செதுக்கி, நடுப்பகுதியில் லகுலீசரின் உருவத்தைச் செதுக்குகிறோம். விளிம்பு இல்லாத தூணின் பகுதியாக குருவின் உருவம் இருப்பது ஆதி அந்தம் இல்லாத இறைவனுடன் அவர் கலந்திருப்பதைக் காட்டுகிறது. இந்த வடிவத்தை நாங்கள் லிங்கம் என்கிறோம், அதற்கு அடையாளம் என்று பொருள். கர்க்கர் பரம்பரையில் வந்த நாங்கள் குருவை பத்மாசனத்தில் உட்கார்ந்த நிலையில் காட்டுகிறோம். மற்ற பரம்பரையில் வந்தவர்கள் குருவை நின்ற நிலையிலோ, ஒற்றைக் காலைத் தொங்கவிட்டுக் கல்மேல் அமர்ந்த நிலையிலோ சித்தரித்து லிங்கம் அமைக்கிறார்கள். லகுலீசர் மட்டுமன்றி அவரது சீடப் பரம்பரையில் வந்த குருமார்களின் உருவம் பொறித்த லிங்கங்களும் உண்டு. தூண் பின்புலம் இல்லாமல் லகுலீசர் தனது நான்கு சீடர்களுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் அமைந்த உருவங்களும் உள்ளன.

“வழிபாடு நடைபெறுவது சுடுகாட்டிலா அல்லது ஊருக்குள்ளா?”

“ஊருக்குள்தான்.”

“உங்கள் நெற்றியில் அணிந்திருப்பது சுடுகாட்டுச் சாம்பல் தானா?”

“இல்லை மன்னா, நாங்கள் தினசரி இரு வேளையும் அக்னி ஹோத்ரம் செய்பவர்கள். அதில் கிடைக்கும் சாம்பலை நீரில் குழைத்து அணிவோம்.”

மிகக் கவனமாகக் கேட்டார் அரசர். சென்ற வாரம் அவருக்கு ஏற்பட்ட உள்ளுணர்வு இப்பொழுது ஒரு வடிவம் எடுத்தது. ஏதோ தீர்மானத்திற்கு வந்தது போல அவர் முகம் பளிச்சிட்டது. அமைச்சரைப் பார்த்தார். ‘அமைச்சரே’ என்றார். அவர் பதிலுக்கு ‘மன்னா’ என்றார்.   இந்த ஒருவார்த்தைப் பரிமாற்றத்தில் ஒருவர் மற்றவரின் எண்ணங்களைப் புரிந்து கொண்டனர். இருவருமே மதியூகிகள். பேச்சுக்கு என்ன அவசியம்?

இப்பொழுது அமைச்சர் பேச ஆரம்பித்தார். “வேதியரே, நீங்கள் இந்த நாட்டிலேயே நிந்தரமாகத் தங்க முடியுமா?”

“மன்னிக்க வேண்டும் அமைச்சரே. எனக்கு வயதான தாய் தந்தையர் இருக்கின்றனர். நான் மூத்த மகன். அவர்கள் இருக்கும் வரை நான் அங்குதான் இருக்க வேண்டும்.”

“நீங்கள் ஊரை விட்டுக் கிளம்பி எவ்வளவு நாள் ஆகிறது?”

“ஆறு மாதம் ஆகிறது.”

“எந்த வழியாக வந்தீர்கள்?”

“சப்தபுர மலையைக் கடந்து தக்ஷிண பீடபூமி வழியாக வந்தேன். வழியில் பல ஆறுகள் காடுகள் இவற்றைக் கடந்து மைசூருக்கு வந்தபின் காவிரிக் கரையோடு நடந்து சோழ நாட்டை அடைந்தேன்.”

தான் அறிந்த உண்மையைப் பிறர்க்கு எடுத்துரைத்து எல்லோரும் நலம்பெற வேண்டும் என்னும் எண்ணம் அவர் உள்ளத்தில் எவ்வளவு வலுவாக இருந்தால் இத்தனை இடர்ப்பாடுகளையும் தாங்கிக் கொண்டு அவரைப் பயணம் செய்ய வைத்திருக்கும் என்று அரசர் வியந்தார்.

அமைச்சர் கேட்டார். “அடுத்து வேறு எங்கு போவதாக உத்தேசம்?”

“பாண்டிய மன்னனைப் பார்த்து விட்டு எங்கள் நாட்டுக்குத் திரும்ப வேண்டும்.”

“பாண்டிய நாட்டில் உங்களுக்கு வரவேற்பு இருக்காது. அங்கு அரசரே சமண சமயத்தவர். சரி, நர்மதை நதி மேற்குக் கடலில் தானே கலக்கிறது?”

“ஆம், அமைச்சரே.”

“அந்த இடத்தின் பெயர் என்ன?”

“பாருகச்சம். பரூச் என்றும் சொல்வார்கள். பார்கவ முனிவர் கச்சம் அதாவது ஆமை வடிவில் அங்கு வந்ததால் அந்தப் பெயர் ஏற்பட்டதாக ஐதிஹம்.”

“உங்கள் ஊரிலிருந்து பாருகச்சம் வரை படகில் செல்ல முடியுமா, வழியில் நீர்வீழ்ச்சிகள் எதுவும் இல்லையே?”

“படகில் செல்லலாம்.”

அரசரின் முகத்தைப் பார்த்துக் கொண்டே அமைச்சர் வேதியரிடம் சொன்னார். “இங்கேயே ஒரு மாதம் தங்குங்கள்.” அரசர் ஆமோதிப்பது போல் தலையை அசைத்தார். “நானும் உங்களுடன் வருகிறேன். படகிலேயே போய் விடலாம். ஒரே மாதத்தில் போய்விடலாம் என நினைக்கிறேன்.”

“படகிலா?”

“ஆம். இங்கே நாகைத் துறைமுகத்தில் ஏறிக் கன்னியாகுமரி, மங்களூர் வழியாக பாருகச்சத்தை அடைவோம். அங்கிருந்து நர்மதையில் படகைச் செலுத்திக் கார்வானில் இறங்குவோம்.”

“கார்வான் நதிக்கரையில் இல்லை. சினோர்தான் நதிக்கரைப் பட்டணம். அங்கிருந்து ஒரு நாள் நடையில் கார்வானை அடையலாம்.”

“மன்னா, இவருடன் சென்று வர அனுமதி வேண்டுகிறேன்.”

“நான் சொல்லாமலே என் மனதில் உள்ளதைச் சரியாகப் புரிந்து கொண்டீர்கள், பிரமராயரே. இத்தகைய அமைச்சர்களைப் பெற்ற நான் உண்மையில் பாக்கியசாலி. சரி, ஒரு படகை ஏற்பாடு செய்யுங்கள். துணைக்குச் சில காவலர்களை அழைத்துக் கொள்ளுங்கள். தேவையான உணவுப் பொருள்களை நிரப்புங்கள். தேவையான பொற்காசுகளை எடுத்துக் கொள்ளுங்கள். சென்று கார்வான் பிராமணர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பாருங்கள். அவந்தி அரசரைப் பார்த்து, அவர்களில் சிலரை இங்கு அனுப்ப முடியுமா என்று கேளுங்கள். வருவார்கள் என்றால் ஆங்கிரஸ பிரமராயரை அனுப்பி அவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யலாம். என் மனதில் உள்ள லட்சியம் வர வர நெருங்கி வருவதை உணர்கிறேன். இறைவன் வழிகாட்டட்டும்.”

“சரி, மன்னா.”

“நீங்கள் வடதேசம் போவதற்கு முன் செய்ய வேண்டிய மற்றொரு வேலை உள்ளது.”

“சொல்லுங்கள் மன்னா.”

“அம்மையாரைப் போற்றுபவர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள் என்று கணக்கெடுக்கச் சொன்னனே, அது எந்த அளவில் இருக்கிறது?”

“எல்லா ஊர்களிலிருந்தும் தகவல் வந்து விட்டது மன்னா. ஏழு ஊர்களில் அம்மையார் நீண்ட நாட்கள் தங்கி இருக்கிறார். அங்கெல்லாம் அம்மையாரைப் போற்றும் மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள்.”

“அந்த ஏழு ஊர்களுக்கும் அம்மையாரின் நினைவாக ஆலங்காடு என்று பெயர் மாற்ற ஏற்பாடு செய்யுங்கள்.”

“நம் தலைநகருக்கு மேற்கே அரைக் காத தூரத்திற்கும் குறைவாக ஒரு ஊர் உள்ளது. அதுதான் அன்று வந்த கவிராயரின் ஊர்.”

“அப்படியா, அந்த ஊர்தான் நமக்கு அம்மையாரைப் பற்றி அறிந்துகொள்ள வழிகாட்டியது.  அதற்குத் தலை ஆலங்காடு என்று பெயரிடுங்கள்.”

“அந்த ஏழு ஊர்களில் வடக்குக் கோடியில் உள்ளது பழையனூர், அம்மையார் காலமான இடம். அது பல்லவர் வசம் உள்ளது.”

“பல்லவ மன்னன் சைவத்துக்குச் சாதகமாக இருப்பாரா என்பதை ஒற்றர் மூலம் அறிய ஏற்பாடு செய்யுங்கள். முதலில் நம் நாட்டில் உள்ள ஆறு ஆலங்காடுகளிலும் கோயில்கள் ஏற்படுத்த வேண்டும். அங்கு இந்தக் கார்வான் வேதியர் சொன்னபடி லிங்கங்கள் அமைத்து அதற்குத் தினசரி பூசை செய்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள். அங்கெல்லாம் அம்மையாரின் பாடல்கள் தினந்தோறும் ஓதப்பட வேண்டும்.”

“சரி, மன்னா. லிங்கம் அமைப்பதில்தான் ஒரு பிரச்சினை. கல்லில் உருவம் செதுக்கக் கூடியவர்கள் நம் சோழ தேசத்தில் இல்லை. இங்கே எல்லோரும் அம்மி கல்லுரல் செதுக்கும் கல் தச்சர்கள் தாம். இங்கு சுதை வேலை செய்யக் கூடியவர்கள் இருக்கிறார்கள். விண்ணகரங்களில் உள்ள திருமால் உருவங்கள் போல் சுதையில் செய்து விடலாமா?”

“சுதை விக்கிரகம் வேண்டாம். என்றும் உள்ள ஈசனுக்கு என்றும் நிலைக்கக் கூடிய கருங்கல்லில்தான் லிங்கம் அமைக்க வேண்டும். நம் கல் தச்சர்களைக் கொண்டு இரு முழ நீளமுள்ள வட்ட வடிவத் தூணை அமைக்கச் சொல்லுங்கள். இதில் ஒரு முழம் மண்ணில் புதைந்து இருக்கட்டும். அதன் மேற்புறம் குழவி போல அரைக்கோளமாக இருக்கட்டும்.

அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்

இன்றுந் திருவுருவங் காண்கிலேன்என்றுந்தான்

எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்

எவ்வுருவோ நின்னுருவம் ஏது

என்று அம்மையார் இறைவனின் அருவத்தைக் குறிக்கிறார். படர்சடை, பொன் மலை போல் திருமேனி, தாமரை போல் அடி என்று உருவத் தோற்றத்தையும் குறிக்கிறார். நாம் அமைக்கும் லிங்கம் அருவத்தையும் உருவத்தையும் ஒருங்கே குறிப்பதாக இருக்கட்டும்.”

“சரி மன்னா.”

“இங்கு ஆரூரில் புற்று வழிபடப்படுகிறது. இனி அது சிவனுக்கு உரிய அடையாளமாக  இருக்கட்டும். இங்கும் நாள் தோறும் அம்மையாரின் பாடல்கள் ஓதப்பட வேண்டும்.”

“சரி மன்னா.”

“அத்துடன் காழி, கடவூர், நாலூர், விற்குடி, வீழிமிழலை ஆகிய ஐந்து ஊர்களின் மயானங்களில் லிங்கம் நட்டுக் கோயில் கட்டிப் பூசை நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். இந்தப் பன்னிரண்டு கேந்திரங்களும் தமிழ்நாட்டின் தலை விதியை மாற்றப் போகின்றன. சோழ வம்சம் தன் இழந்த பெருமையை மீண்டும் அடையப் போகிறது.”

கோயில் கட்டுவதற்கும் சோழவம்சம் பெருமை அடைவதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்று புரியாமல் விழித்தார் வடம வேதியர். அது அரசருக்கும் அமைச்சருக்கும்தான் தெரியும் .

    இப்பொழுது அமைச்சர் பேசினார், “மன்னிக்க வேண்டும் மன்னா. சமயத்துறையில் இவ்வளவு விரைவான மாற்றங்களை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதைக் கொஞ்சம் யோசிக்க வேண்டும். அவரவர்க்கு அவரவர் நம்பிக்கையே உண்மையாகத் தோன்றும். வெளிதேசக் கடவுளை அவர்கள் மேல் திணித்தால் அவர்கள் ஏற்க மறுக்கக் கூடும்.”

“கவலை வேண்டாம், அமைச்சரே. நாம் செய்வது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத பெரும் மாற்றங்கள் அல்ல. பழம் தமிழ் இலக்கியங்களில் இந்தத் தெய்வத்தைப் பற்றிய குறிப்புகள் இருப்பதால் இது வெளியிலிருந்து திணிக்கப்பட்ட தெய்வமாக இராது. மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

“மேலும் நான் முன் சொன்ன காழி முதலான ஊர்களில் மயானத்தில் சுடலை மாடன் வழிபாடு நடப்பது உண்மை தானே. சுடலை மாடனின் உருவம் மேலே குறுகிச் செல்லும் ஒரு செவ்வகமும் அதன்மேல் ஒரு அரை வட்டமுமாகச் செங்கல்லால் அமைக்கப்படுகிறது. நாம் சொல்லும் சிவலிங்க வடிவம் வட்டம் குறுகி அரைக் கோளத்தில் முடிகிறது. அதிலிருந்து சிறிதளவுதான் மாறுகிறது.”

அரசர் தரையில் படம் வரைந்து காண்பித்தார்.

“மாடன் பொது இல்லைச் சுற்றிய பகுதிகளில் ஆலமரம் காணப்படும் நிலையை பரவலாகக் காணமுடிகிறது. அம்மையார் கூறும் தெய்வமும் ஆலங்காட்டுத் தெய்வம்தான்.

“அம்மையார் நமது நாட்டில் பிறந்தவர். நம் மொழியில் பாடல்களை இயற்றியவர். சமணம் மக்களுடைய போர்க்குணத்தை நசுக்கி வீரம் இல்லாமல் செய்து விட்டது. இவ்வுலக வாழ்வில் உற்சாகம் இன்மையை ஏற்படுத்திக் கலைகளில் நாட்டத்தைக் குறைத்து விட்டது. ஆனால் அதிருஷ்டவசமாக, அது மக்களின் இலக்கிய நாட்டத்தைக் குறைக்கவில்லை. இன்றும் சங்க இலக்கியங்களைப் படிப்பவர்களும் போதிப்பவர்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களிடையே அம்மையாரின் பாடல்கள் பரவ வழி செய்தால் போதும். இவ்வளவு உயர்ந்த இலக்கியச் சுவை கொண்ட நூல் அண்மைக் காலத்தில் தோன்றியதில்லை என்பதை ஒப்புக் கொள்வார்கள், பரமதத்தன் இறை நம்பிக்கை இல்லாதவன், ஆனால் பேய் பற்றிய கதைகளை நம்பியவன். அதனால் மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி வெளிப்பட்ட போது அது பேயின் வேலையாகத்தான் இருக்க வேண்டும் எனக் கருதினான். அம்மையாரின் பாடல்களைப் படித்தவர்கள், இவ்வளவு அற்புதமான நூலைப் படைத்தவர் பேய் மகளாக இருக்க முடியாது என்பதை உணர்வர். அவருடைய ஆழ்ந்த இறையன்பு படிப்பவரைத் தொற்றிக் கொள்ளும்.”

அமைச்சர் அரசரின் மதியூகத்தை வியந்தார். “மக்களின் நாடியைப் பிடித்துப் பார்த்து அவர்களுக்கு ஏற்ற வகையில் தொலைநோக்குத் திட்டம் தீட்டி, உடனடியாக முடிவு எடுக்கும் திறமை இருப்பதால்தான் அவர் சிறந்த அரசராக இருக்கிறார். அரசருக்குச் செய்தி சேகரித்துக் கொடுப்பதும், அவர் கூறும் செய்தியை மக்களிடம் சேர்ப்பிப்பதும் ஆன தகவல் களஞ்சியமாக மட்டுமே நான் இருப்பதால் நான் அமைச்சராக அவருக்குக் கீழ் நிலையில் இருக்கிறேன்” என்று நினைத்துக் கொண்டார்.

 தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *