– எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

  விஞ்ஞானம் தானிப்போ
  விண்ணோக்கிச் செல்கிறது
  நல்ஞானம் எனப்பலரும்
  நாட்டிலிப்போ சொல்லுகிறார்

 கல்ஞானம் எனவெண்ணிக்
 கட்டளையும் இடுகின்றார்
 உள்ளமெலாம் விஞ்ஞானம்
 உட்புகுந்தே நிற்கிறது

 தொழிநுட்ப விஞ்ஞானம்
 தொகையாக வந்துளது
துறைதோறும் அதுசென்று
சூடாக்கி நிற்கிறது

 கிராமத்தார் கூடவிப்போ
 ’கிறுகிறுத்து’ நிற்கின்றார்
அங்கெல்லாம் தொழிநுட்பம்
அரங்கேறி நிற்கிறது

 மொழிபற்றிக் கவலையின்றி
முறுவலுடன் ஏற்கின்றார்
முகம்பார்த்துக் கதைத்துவிட்டு
அகங்குளிர்ந்தும் நிற்கின்றார்

 அழகான படம்பார்த்து
அவர்மகிழ்வு கொள்ளுகிறார்
 அயல்நாட்டில் மருமகளின்
 சுகம்கேட்டும் நிற்கின்றார்

 குறுஞ்செய்தி பலர்பார்த்து
குதூகலத்தில் மிதக்கின்றார்
முகநூலால் திருமணங்கள்
சபையேறி  நிற்கிறது

 வியாபாரம் பெருகுதற்கும்
விளம்பரங்கள் செய்வதற்கும்
நலமான நண்பனென
  நாட்டிலுள்ளோர் நினைக்கின்றார்

  தகவல் பரிமாற்றம்
  தான்பெருகி நிற்பதற்கும்
  சரியான வழியெனவே
  சகலருமே எண்ணுகிறார்

 அரசியல் தலைவரையும்
ஆன்மீகத் தலைவரையும்
ஆட்டிவைக்கும் சக்தியென
அதுவிப்போ திகழ்கிறது

 கற்பழிப்பு நடப்பதற்கும்
காடைத்தனம் செய்வதற்கும்
கண்போன்ற தொழிநுட்பம்
கருவியென நிற்கிறது

  மண்ணிலுள்ளோர் பயனடைய
  வந்ததொழில் நுட்பமதை
  மனிதகுல மாண்பழிக்க
  மாற்றுவது முறைதானா?

 விஞ்ஞானத் தொழில்நுட்பம்
 எஞ்ஞான்றும் உதவுவதை
 வீணடிக்கும் கூட்டமதை
 வீதிக்குக்  கொணர்ந்திடுவோம்

  நல்லபக்கம் பார்த்திட்டால்
நமக்கெல்லாம் நன்மையன்றோ?
நம்மனதில் நல்லவெண்ணம்
நாளும்நாம் வளர்த்துநிற்போம்

  உள்ளமதில் நல்லவெண்ணம்
ஊற்றெடுக்கச் செய்துவிடின்
பள்ளமதில் வீழ்ந்திருக்கும்
பாதகரும் மாறுவரே

  தொழில்நுட்பச் சேவையினைத்
துஷ்டத்தனம் செய்யாமல்
அழிவுநாடிச் செல்வதனை
அனைவருமே தடுத்திடுவோம் !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *