Author: விவேக்பாரதி

  • மகாசக்திக்குப் பிரார்த்தனை

    விவேக் பாரதி

     

    Aadi-Sakti-parvati-Mata

     

    அம்பிகே சிவசக்தி – எனை
    ஆட்டுவிக்கும் காலம் எத்தனையோ?
    அம்படி நானுனக்கு! – எனை
    ஆற்றலோ டேவிடும் வில்லடிநீ!!
    நம்பினேன் உள்ளவரை – அவர்
    நாளெலாம் நடித்திடக் காணுகையில்
    வெம்பினேன் மனதுக்குள்ளே – இந்த
    வேதனை மாய்ந்திட வழியிலையோ?

    உள்ளமாம் அகழியிலே – நான்
    உள்ளொரு முதலைபோல் உழன்றிடவே
    தெள்ளிய ஞானமெனும் – ஒளித்
    தேரெனைக் கூப்பிடும் நாள்வருமோ?
    பள்ளெலாம் உன்புகழ்தான் – என்
    பாட்டெலாம் கூத்தெலாம் உன்பெயர்தான்
    துள்ளும்வேல் கொடுத்தெனையும் – தொடும்
    துக்கமும் நீங்கிடத் துணைபுரியே!!

    பற்றிலா வாழ்வுகொடு – இப்
    பாரினைப் பாடிடும் வலிமைகொடு
    ஒற்றிலா நெஞ்சுகொடு – உன்
    ஓங்கார ஓசையின் சந்தம்கொடு
    முற்றிலா இன்பம்கொடு – சுக
    முக்தியிலே எனை மூழ்கவிடு!
    கற்றிலேன்! கல்விகொடு! – புவிக்
    கயமையைப் போக்கிடும் கணையைக்கொடு!!

    உன்னொளிக் கிரணத்திலே – பல
    உவகைகண் டேன்மிக உணர்ச்சிகொண்டேன்
    அன்னையே உன்மடிமேல் – என்
    ஆவி அமர்ந்திடச் செய்பவளே
    என்னையே தந்துவிட்டேன் – இங்கு
    என்செயல் யாவையும் நின்செயலே
    இந்நில வாழ்வினிலே – யான்
    இயற்றுவ தெக்கடன்? சொல்லடியே!!

    அம்பிகே சிவசக்தி!!

    23.11.2017

    Share
  • சித்தக் கனவு

    -விவேக்பாரதி

     

     

    கண்மூடிக் கட்டிலிலே கனவோடு சாய்ந்திருக்கப்

    பண்பாடும் நெஞ்சகத்தில் பாழாக ஒருகேள்வி

    கேட்டது ! நெஞ்சம் கிளர்ந்தது ! கேள்விதனைக்

    கேட்டவரார் அஃதறியேன்! கேள்விமட்டும் எதிரொலியாய்!!

    உண்மைக்குப் பொருளென்ன? ஊர்வாழ வழியென்ன?

    பெண்மைக்கு விடையென்ன? பேரழகுந் தான்என்ன?

    என்றெல்லாம் கேட்டிருந்தால் ஏதேனும் கவிசொல்லி

    மன்றத்து முன்னவரின் மரியாதை உரைசொல்லி

    தூங்கி இருப்பேன்! தோன்றிவந்த கேள்வியதோ

    ஏங்கிட வைக்கும் எக்காளக் கேள்வியம்மா!

    என்தேவை யாதென் றென்னை யாரோ

    தன்தேவை தீரத் தடுத்தங்கு கேட்டுவிடத்

    தேவையென்று நானெதனைத் தெளிந்துரைப்பேன் தெய்வதமே!!

    தேவையென்றால் யாதென்றே தெரியாத பிள்ளையன்றோ!!

    விட்டில் பூச்சிக்கு விளக்கொளிதா னேதெரியும்!

    சிட்டுக் குருவிக்கு சிறுநெல் தானேதெரியும்!

    பாடசாலை பயில்கின்ற பச்சிளம் பாலகனைத்

    தேடலரும் வேதாந்தம் சித்தாந்தம் என்றெல்லாம்

    பெருங்கேள்வி கேட்டுவிட்டால் பேதை என்செய்வேன்!

    குரங்குக்குக் கீதைக் குணமூட்டல் சாத்தியமா?

    கண்கட்டிக் காதலனைக் காட்டுக்குள் விட்டதுபோல்,

    பண்கூட்ட மறந்ததொரு பாடகனின் மேடைபோல்,

    அச்சம் எதிலும் அச்சமயம்! அச்சமயம்,

    உச்சிக் குடுமியை உயரே பிடித்திழுத்துக்

    காதைத் திருகிக் கனிவான கொட்டுவைத்து

    எழுப்பி விட்டதொரு ஏகாந்த அருட்சோதி!

    ஆகாச மார்க்கத்தில் ஆழ்ந்துவந்த நற்ஜோதி!

    ஏகாரம் சேர்கவிபோல் எழும்பிவந்த பொற்சோதி!

    “ஏடா பிள்ளாய்! எழுத்தறிவும் பெற்றிலையோ

    மூடா! முன்னவர்கள் மொழிந்தனவும் கற்றிலையோ?

    நின்தேவை விளம்ப நிமிடங்கள் பலநூறோ?

    என்கேள்விக் கதுசொல்” என்றென்னை அதட்டிடவே

    ஒன்றும் புரியாமல் ஓரசைவும் காட்டாமல்

    வன்புலியைக் கண்டவொரு வளையெலிபோல் காட்டுக்குள்

    சிங்கத்தைக் கண்டவொரு சிறுநரிபோல் நின்றிருந்தேன்!

    அங்கதற்குள் ஒருமாற்றம் அண்டிப் பயங்கொடுக்கச்

    சட்டென்று விழித்தேன் சகலமும் பின்னறிந்து

    பட்டென்று பேனாவைப் பாசத்தோ டெடுத்ததற்குச்

    செல்ல முத்தங்கள் சிலவிட்டு வாழ்த்திட்டு

    வெல்லத் தமிழணங்கை வென்று தொழுதிட்டு

    தேவை யாதென்று தெளிவாய் எழுதவந்தேன்!

    “தேவை தெரிந்துவிட்டால் தேவனாகிப் போவேனே!”

    அதற்குள் இன்னுமொரு அழகான இளம்பெண்ணாள்

    பதுமை, சிரிக்கின்ற பால்குடம்! இதழ்ச்சிவப்பால்

    என்னை அழைக்க எழுதவந்த கதைமறந்து

    மின்னேர் உடல்புல்லி மீண்டுமீண்டும் முத்தமிட்டு

    மோகப் பெருமயக்கில் மொத்தமும் மறந்ததுபோல்!

    ஏகக் காதலே இதயமெலாம் நின்றதுபோல்!

    உச்சக் கலைதொட் டுடல்விட்டு வானுலக

    எச்சம் அடைந்தேன்! ஏராளப் பறவைகள்

    கூடி முயங்கிக் குதிக்கும் விசும்பிடையே

    பாடி மகிழ்ந்தேனப் பாவை கைவிலகப்

    பதறி விழித்தேன் பார்வை திருத்திச்

    சிதறிய விழிக்கோணம் சிந்தாமல் சேர்த்து

    மணிபார்த்தேன்! மணியெட்டு மயக்கம் தீர்ப்பதற்காய்க்

    கனிந்த காலை,”சித்தக் கனவென்று சொல்லியதே!!

     

     

    Share
  • வரவேற்புக் கவிதை

    விவேக் பாரதி

     

    என் கல்லூரியில் இன்று இணைந்திருக்கும் முதலாமாண்டு மாணவர்களுக்கு மூத்த(இரண்டாமாண்டு) மாணவனான நான் மனதாரப் பாடிய வரவேற்புக் கவிதை….

    இளமை கொண்டவர்கள் வாழ்கவே – வாழ்கவாழ்க
    இளமை கொண்டவர்கள் வாழ்கவே !
    வளமை ஆக்கவந்த மக்களாம் – வாழ்கவாழ்க
    வலிப டைத்தவர்கள் வாழ்கவே !

    கனவு காணுங்கண்கள் வாழ்கவே – உயருதற்குக்
    கடமை ஆற்றுங்கைகள் வாழ்கவே !
    மனதில் அச்சமற்ற வீரர்கள் – பூமியெங்கும்
    மணம்ப ரப்பிநீடு வாழ்கவே !

    வேட்கை கொண்டநெஞ்சர் வாழ்கவே – சூழுகின்ற
    வேத னையெரித்து வாழ்கவே !
    பாட்டி சைக்ககுமிதழ்கள் வாழ்கவே – கல்விகற்று
    பாரு யர்த்தும்வர்க்கம் வாழ்கவே !

    காதல் பேணுமக்கள் யாவரும் – இன்பமுற்று
    கவிதை போலமண்ணில் வாழ்கவே !
    நீதி நேர்மைகொண்டு வாழ்ந்திடும் – இளைஞரென்றும்
    நீடு வாழ்கவாழ்க வாழ்கவே !

    எச்ச ரிக்கைகொண்ட மானுடர் – நல்லவார்த்தை
    எழுத மண்ணில்நன்கு வாழ்கவே !
    மெச்சு தற்குமுரிய சக்தியாம் – இளைஞரென்னும்
    மேன்மை யாளர்வாழ்க வாழ்கவே !

    Share
  • கருமாரி கிரகமாலை

     

    விவேக்பாரதி

     
    காப்பு

    318794_207332152667266_100001714496823_574807_651454047_n

    நவக்கிரக நாயகியே நானுன் பதத்தில்
    அவம்நீங்க வேண்டி அமர்ந்து – கவிசொல்வேன் !
    மாலை முடிந்திடவும் மாற்றம் நிகழ்ந்திடவும்
    காலங் கொடுத்தருள்வாய் காப்பு !

    நூல் :

    காரிய மாற்றிக் கடமைசெய் வோரின் கருத்திடையில்,
    சீரிய நோக்கிற் சிறப்புறச் செல்பவர் சிந்தைதனில்
    பேருரு வாகும் பெருங்கரு மாரி பெயருரைக்கச்
    சூரியத் தேவன் சுகத்தினை நல்கிச் சுடருகவே !

    சுடர்விடு மட்டிகை சுட்டிக ளாரமும் சூடியிங்கே
    இடமெனும் பாக மிருந்தருள் வீசும் இறையவளைக்
    கடமை புரியும் கருமா ரியவள் கனிப்பெயரைச்
    சடுதியிற் சொல்லிடச் சந்திரன் இன்பொளி சாற்றுகவே !

    சாற்று மவள்பெயர் தந்திடும் சக்திகள் சங்கடத்தை
    மாற்றி உயர்க்கதி மண்ணில் நிறுத்திடும் ! மாண்புடைய
    காற்றி லுயர்ந்து கருமா ரியின்பேர் கருதுகின்ற
    ஆற்ற லுணர்ந்தங் காரகன் நன்மை அளித்திடவே !

    அளிக்கும் சிரத்தையி லானந்தங் கண்டே அணைத்திடுவாள் !
    ஒளிதிகழ் கல்வியி லுண்மையி லூன்றியிங் கோங்கிடுவாள் !
    களிதருந் தேவி கருமா ரியின்பேர் கதைத்திடவே
    தெளிவினை நெஞ்சிடைத் தேக்க புதனெனும் தேவனுமே !

    தேவரின் துன்பமும் தேய்ந்திடக் கந்தனின் தேசெனவே
    காவலர் கைகொளும் கங்கெனும் வேலினைக் கைகொடுத்தாங்
    காவலில் நின்ற அருங்கரு மாரி அருட்பெயரைக்
    கூவிட வந்து குருவறி வூட்டுக குணமுடனே !

    குணமும் திறமும் குறையில் மதியும் குவித்திடுவாள் !
    மணமும் தவமும் மடமன மாளும் வழிவகுப்பாள்
    கணக்கை அறியும் கருமா ரியவள் கனற்பெயரால்
    பணமும் உயர்வும் பலசுக் கிரனவர் பாய்ச்சுகவே !

    பாய்ந்தெழுஞ் சத்தம் பகலிர வெல்லாம் படபடக்கக்
    காய்ந்தெழுந் தந்தக் கடுமகி ஷாசுரன் காலமறுத்
    தோய்ந்தவள் பேரை ஒழுகித் துதிக்கு மொருவர்தமை
    ஆய்ந்துபின் பற்றியிங் காள்க சனியெனு மாண்டவனே !

    ஆண்டவன் கொண்ட அரவைக் குடையா யமைத்திருப்பாள் !
    மீண்டது கையின் விரல்மோ திரமாய் மிளிர்ந்திடுமே !
    வேண்டு மனைத்தையும் வேகமெ னத்தரும் வெற்றியின்பேர்,
    யாண்டுமு ரைக்க யிராகுவும் நோக்குக யாக்கையையே !

    யாக்கை கடந்தவள் யாரும் வணங்கிட ஆதரிப்பாள் !
    பூக்கள் மணந்தரும் புன்னகை ஏந்திப் பொலிந்திடுவாள் !
    காக்கை நிறத்தள் கருமா ரியின்பேர் கதைசொலவே
    கேட்கும் அனைத்தையும் கேதுவும் நல்குக கேண்மையிலே !

    கேண்மையு மாகிக் கெடுத்திடு மெண்ணங் கெடுத்தெனக்கும்
    ஆண்மையை என்று மருள்க நவகிரக ஆண்டவர்தாம் !
    பூண்பது சத்தியம் ! புத்தியில் நிற்பது பூரணமே !
    காண்பது சக்தியைக் காய மவள்செயுங் காரியமே !
    “ஓம் சக்தி”

    Share
  • எது பக்தி ??

    விவேக் பாரதி

     
    பக்தி என்ப தெல்லாம் – இங்கே
    பாழ்ப டிந்து போச்சு !
    முக்தி என்ப தெல்லாம் – சாகும்
    மூட மென்று மாச்சு !
    பக்தி என்ப தென்ன ? – அன்பைப்
    பாடு கின்ற சமயம்
    அக்னி யாயின் அதனை – ஏற்றும்
    அறிவுத் திரியே பக்தி !

    பக்தி ஒன்றி னாலே – கிட்டும்
    பலன்கள் நூறு கோடி
    மக்கள் என்ற எண்ணம் – தங்கி
    மண்ணில் ஒழுக்கம் நேரும் !
    பக்க முள்ள மனத்தை – மனத்தால்
    பார்த்தும் உதவி செய்தும்
    அக்க றைகள் காட்டும் – நிலைமை
    அந்த பக்தி நல்கும் !

    கடவுள் பேரைச் சொல்லி – பெரிதாய்க்
    கட்சி சேர்த்துக் கொண்டு
    நடை முறை வழங்கி – அதிலே
    நடக்கத் தவறு கின்ற
    மடமை அல்ல பக்தி ! – உயரும்
    மார்க்கம் பக்தி யாகும் !
    உடைமை தீரும் போதும் – கையின்
    உறுதி பக்தி ஆகும் !

    ‘பற்றி ருக்க வேண்டும் – எதிலும்
    பசையி ருக்க வேண்டும்
    ஒற்றி ருக்க வேண்டும்” – என்றே
    ஓதல் பொய்மை யாகும் !
    பற்ற றுத்த நிலையே – உண்மைப்
    பக்தி யாகும் ! ஆசை
    அற்றி ருக்கும் நிலையே – பெரிய
    அருளின் பக்தி யாகும் !

    வேலை மீது மனிதன் – இங்கே
    வைக்கும் பாசம் பக்தி !
    கால மாற்றம் தன்னை – மனங்கள்
    காதல் கொள்ளல் பக்தி !
    கோலக் கவிதை மீது – கவிஞன்
    கொள்ளும் உரிமை பக்தி !
    ஞாலம் எங்கும் அன்பை – விதைக்கும்
    ஞானம் பக்தி யாமே !

     

    Share
  • காதலதிகாரம் (1)

    விவேக் பாரதி

    unnamed (4)

    Share
  • நீயிருப்பதால்

    விவேக் பாரதி

    unnamed (1)

    நீயிருப்பதால் இங்கு நானிருக்கிறேன் !
    நீயசைப்பதால் மண்ணில் நான்நடிக்கிறேன் !
    தீயிருப்பதால் என்னைப் பாடவைக்கிறாய் !
    திமிருப்பதால் கொஞ்சம் ஓடவைக்கிறாய் !

    பூமணத்திலே எழுந்து வார்த்தை தருகிறாய் !
    தாமதத்திலே என்னைத் தாங்கிக் கொள்கிறாய் !
    தீமனத்தில் நீரையூற்றி நீ தணிக்கிறாய் !
    நாமணக்கப் பாடல்தந்து நீ சிரிக்கிறாய் !

    ஏங்கவைத்துக் கதறி என்னை எழுதவைக்கிறாய் !
    தூங்கவிட்டு பின்னெழுப்பிக் கனவு தருகிறாய்
    வாங்கிவிட்ட பாவமென்ன ? என்னைக் கையிலே
    தாங்கிக்கொள்ள நேரமென்ன ? வா அணைக்கவே !

    மாலைநேரத் தென்றல் போல நீ நுழைகிறாய் !
    கோலம்நூறு என்னகத்தில் நீ வரைகிறாய் !
    வேலையென்ன பாரினுக்குள் என்னை வைக்கிறாய்
    காலமென்னும் நூல்படைத்து நீ அசைக்கிறாய் !

    ஒற்றைக் கையில் வீணையோடு நீ ஜொலிக்கிறாய்
    கற்றைக் கூந்தல் காற்றிலாட தீ வளர்க்கிறாய் !
    நெற்றிக் கண்ணன் பாதியாகி நிமிரவைக்கிறாய்
    வெற்றி உண்மை வீரமாகக் கொலுவிருக்கிறாய் !

    Share
  • கவியரசர் கண்ணதாசன்

    விவேக பாரதி 

     

    கவியரசர் கண்ணதாசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து….இன்று காலை பொதிகைத் தொலைக்காட்சியில் நான் கேட்ட ஒரு கிராமியப் பாடலின் மெட்டில்….

    unnamed

    வானம்விட்டு வந்தானோ ? மண்ணுக்குள்ள நின்னானோ ?
    வார்த்தையால கட்டிப்போட்டு அவுக்காம போனானோ ?
    ஞானஞ்சொல்லித் தந்தானோ யாருகிட்ட கேட்டானோ ?
    ஞாலமெலாம் வாய்பொளக்க நாளும்பாடி வெச்சானோ ?

    ஊனமுற்ற பேர்கள உசுப்பிவிடும் பாட்டுல,
    ஊருக்குள்ள கேக்குற உற்சாகக் கூத்துல,
    தானும்வந்து நிக்குறானடி – என் கண்ணம்மா
    தமிழால சொக்குறோமடீ !

    பாட்டுபாடி வந்தானே பாடமெலாஞ் சொன்னானே
    பக்குவமா பக்தியோடு பலசேதி தந்தானே !
    ஆட்டம்போட வெச்சானே அமையாக வெச்சானே !
    ஆடி அடங்கிப்போகும் அர்த்தமெலாஞ் சொன்னானே !

    கூட்டஞ்சேக்க பாக்கல ! கொள்கயெதும் பேசல !
    கூட்டாளி யாகல ! குடுக்காம போகல !
    நாட்டுக்குள்ள நிக்குறானடி – என் கண்ணம்மா
    நாமபாத்து சொக்குறோமடீ !

    கண்ணனுக்கு தாசனா ! கவிதைக்கெல்லாம் ராசனா !
    கதசொல்லும் பாட்டுகளக் காலமெலாம் வீசுனான் !
    வண்ணத்தமிழக் கொஞ்சுனான் ! வரிவரியாக் கொஞ்சுனான் !
    வாழ்க்கையோட தத்துவத்த வாழ்ந்துகிட்டே பாடுனான் !

    கிண்ணத்தையும் மறக்கல ! கீதையையும் மறக்கல !
    கீழிருந்து வந்தவன் மறுபடியும் விழுகல !
    எண்ணத்துல நிக்குறானடி – என் கண்ணம்மா
    எழுத்தால சொக்குறோமடீ !

    https://soundcloud.com/vivekbharathi/nlb3dghekzqg

    Share
  • நாளையென்ன நாளை

     

    நாளையென்ன நாளையைய்யா வரதராஜா ! – உன்
    . நல்லருளை இன்றனுப்பு வரதராஜா !
    நீளுகின்ற காத்திருப்பு போதும்ராஜா – உன்
    . நிர்மலக்க ழல்காட்சி சிந்துராஜா !
    தோளிலென்னை வேஷபாரம் தாக்குகின்றதே – மனம்
    . தோற்றபடி வெந்தழுது வீங்குகின்றதே
    ஆளுமாக பாதஜாலம் காட்டுராஜா – அட
    . அம்பிகையின் சோதரனே வரதராஜா !

    காலமென்னை ஆட்டுவிக்கக் கண்டிருப்பதோ – உன்
    . கழல்பிடிக்க விளையாட்டு கொண்டிருப்பதோ
    ஓலமிட்டு கெஞ்சுமொலி கேட்கவில்லையோ – என்ன
    . ஓரவிழியின் ஜாலமெலாம் பிள்ளைமுன்னமோ ?
    தோலிறுக்கம் மொழிநடுக்கம் நேரும்போதுதான் – உரு
    . தோற்றியெனைத் தேவலோகம் காட்டுமெண்ணமோ ?
    பாலனிட்ட கவிப்புலம்பல் மாண்டுபோகவோ – ஒரு
    . பார்வையொளி வீசமனம் சொல்லவில்லையோ ?

    காத்திருப்பு நன்மையென்று கண்டபோதிலும் – உன்
    . கருணைமழை கடமைவினை அதைமறுப்பதோ ?
    பூத்திருக்கும் கண்களுக்குள் புயல்நடப்பதோ ? – வளிப்
    . பூழ்திவந்து நெஞ்சினோரம் வெடிவெடிப்பதோ ?
    சாத்திரங்கள் சொல்வதுபோல் வாட்டுமெண்ணமோ ? – இந்தச்
    . சமகாலத் தீயட்டம் இன்னும்மன்னுமோ ?
    ஆர்த்தெழுந்து கையிலெனைத் தூக்குராஜா – உன்
    . அருட்கமலப் பாதத்தைக் காட்டுராஜா !

     

    https://soundcloud.com/vivekbharathi/drofx6rv7ntu

     

    “ஓம் சக்தி”
    விவேக்பாரதி

    Share
  • காலப் பெண்ணே

    தில்லித் துருகர்செய்த வழக்கமடி” மற்றும் “மன்னர் குலத்தினிடை பிறந்தவளை” என்ற பாரதி பாட்டின் சந்தமெட்டு !

    என்னை அலையவைத்துச் சிரிப்பதென்ன – அடி
    எங்குந் திகழ்கின்ற காலப்பெண்ணே !
    உன்னைப் புகழ்வதன்றி இந்தச்சிறுவன் – எழில்
    ஊறுஞ் சொல்வேறு சொல்லியதுண்டோ ?
    மின்ன லெனப்போகும் காலப்பெண்ணே ! – எனை
    மீட்டி இயக்கிடுவை காலப்பெண்ணே !
    சின்னஞ் சிறுவனென நானிருப்பதால் – உன்னில்
    சிக்கி உழல்கவென நீவிடுப்பதோ ?

    எத்த னைதூரம் செல்லவைக்கிறாய் – சின்ன
    ஏழைக் குடலலுப்பை நீயளிக்கிறாய்
    பத்துப் பதினைந்து மைல்நடக்கிறேன் – எனைப்
    பார்த்திங் கமர்ந்தபடி பரிகசிக்கிறாய் !
    நித்தம் உனைக்கேட்ப தொன்றுமட்டுமே – வழி
    நீளம் குறைக்கும்வழி தந்துசென்றிடு
    பித்தைத் தீர்க்கவழி எண்ணுவையெனில் – கவி
    பீறிட் டெழும்வேகம் நீவழங்கிடு !

    காற்றைக் கவியாக்கிக் காலம்கழிப்பேன் – அடி
    காக்கை ஒலியினிலுஞ் சந்தம்பிடிப்பேன்
    நேற்றை இன்றாக்கி நாளைவகுப்பேன் – இந்த
    நெஞ்சம் தூங்கும்வரை பாடல்படிப்பேன் !
    ஆற்றல் அறிவென்று பேசிக்களிப்பேன் – என்றன்
    அம்மை முகஜாலம் சொல்லிரசிப்பேன்
    போற்றி உனைச்சொல்லி வாழ்த்தையொலிப்பேன் – பெரும்
    போதந் தருகின்ற வார்த்தைபடைப்பேன் !

    “ஓம் சக்தி”
    விவேக்பாரதி

    Share
  • உமையாள் திருப்புகழ் -7

    விவேக்பாரதி 

    தான தந்தன தானா தனாதன 
    …தான தந்தன தானா தனாதன 
    …..தான தந்தன தானா தனாதன – தனதானா ! 

    சீறு மங்கர வோடே சடாமுடி 
    …சீத ளம்பயி லாதே  நிலாவொடு 
    …….சீவ னந்தக னோடே யுலாவிடு – சிவதேவீ !

    தீது மெங்கிலு மூடே யெழாதற
    …தீரு மந்நிலை மாதே அழாதிர
    …….தீர மென்றிட மாரே விழாதுற – அருள்தாராய் !  

    ஏறு மங்கரி காடே புகாதரு 
    …ளேகி யெம்மன நாடே சடாரென 
    ……ஏறி அந்திரி நீயே தயாபரி – வரவேணும் 

    ஏம மென்றுமெ சாகா துராவிட 
    …ஏடி சங்கரி மாயே அடாசிடு 
    ……ஏத மென்றிடு தீயே சுடாதுற – உனைநாடி 

    நீற ணிந்திடு வோமே கனாவிடை 
    …நீளு மெம்மட நாவே கெடாமொழி 
    …….நீவ ழங்கிடு வாயே பராபரை ! – பணிவோமே 

    நீச மென்றிடு நோயே படாதுயர் 
    …நீல கண்டனைப் போலே யுலாவிட 
    ……நீய ருள்தரு வாயே தடாகமு – முறைமாதே ! 

    ஊற றுந்திட ஊழே தொடாதுற 
    …ஊரெ ழுந்திட நீயே வொரேகதி 
    …….ஊமை யெங்களின் வாயே சொலாமொழி – மொழிவாயே 

    ஊசி தன்னிடை நீயே நியாயமு 
    …மூரி லிங்ஙண மேவீ விழாவுற 
    ……வூப மென்றிட வாராய்க் கபாலியி – னுமையாளே !

    Share
  • உமையாள் திருப்புகழ் – 6

    விவேக்பாரதி

    தந்ததன தந்தனம் தந்ததன தந்தனம் 
       தந்ததன தந்தனம் – தந்ததானா ! 

    முன்புதம தன்பனுஞ் சந்திரனு மிங்ஙணம் 
    …முந்திவர வென்றதும் – தன்றனோடு 

    முள்ளநகை தன்னையும் விண்ணுலவ நல்கி,நம் 
    …முல்லையிலொ ளிர்ந்திடுஞ் – சம்புமாரி !

    துன்பமது மெங்கிலுந் துண்டெனநொ றுங்கிடுந் ! 
    …துள்ளிவரு மன்பனின் – பிள்ளைகேவத் 

    துங்கமுள கொங்கையின் நல்லமுது தந்தவன் 
    …துஞ்சிடவ மர்ந்த்துஞ் – சம்புமாரி !

    கன்றதும யங்கிடுங் கண்ணிமன மின்புறுங் 
    …கந்துகமெ ரிந்திடுஞ் – சந்தராகங் 

    கண்டவழி நல்கிடுங் கண்ணனவ னுந்தொழுங் 
    …கண்டவிட மன்னனின் – சம்புமாரி !

    சின்னமதி கொண்டிடுஞ் சிந்தைதெளி வும்பெறுஞ் ! 
    …சிங்கமதி லுள்ளநஞ் – சிந்துதாயைச் 

    சிந்தைசெய வந்திடும் நல்லவினை ! சந்தமுஞ் 
    …சிந்துமுமை யெங்களின் – சம்புமாரி ! 

    Share
  • நாராய் அழு


    விவேக்பாரதி 

     

    நேரிசை ஆசிரியப்பா 

     

    கதிரவ னுதியாக் கருநிறக் காலை
    சதிர்படு மந்தச் சமவெளிப் பனியின்
    பால்நிற மன்ன படுவழ கோடே
    கால்நிற முள்ளக் கருநிற நாராய் !
    பெறுமல கதிலே பேருரு கொண்ட
    உறுமீ னேந்தி யுச்சியிற் செல்வாய் !
    உனதருங் கூட்ட மோய்விட மெல்லா
    மெனதருந் தலைவ ! னேவு கணையன் !
    விண்ணளந் திட்ட விசையன் ! வீரன் !
    கண்ணினி லதனைக் காட்டா மனிதன் !
    அப்துல் கலாமெனு மதிசயக் கார !
    னொப்பிலா தலைவன் ! ஒழுகிய பண்பன் !
    தலைமுடி கவிழ்ந்தும் தலைகவி ழாதே
    யுலகினைக் கண்ட உத்தம வில்லன் !
    வீணையும் மீட்டும் வித்தகக் காரன் !
    ஆணைக ளன்பாய் அவழ்த்திடும் மன்னன் !
    அழகிற குன்போ லக்கினிச் சிறகைத்
    தொழுதிட விரித்த தொல்லறி வாளன் !
    தென்றிசை தோன்றி எண்திசை யெங்குந்
    தன்பெய ரொலிக்கத் தமிழ்சொலுந் தீரன் !
    நாடிதை யாண்ட நாயக ! னென்கோ !
    ஆடிடா குணத்த ! னழிவினுக் கழிவை !
    ஆண்டவ னென்னு மாணவக் காரன்,
    ஆண்டவ னுயிரை அருகி லிழுத்துச்
    சுயநலச் செய்கை சுயவுரு காட்டிக்
    கயவனைப் போலே கடமையைச் செய்திங்
    கின்றோ டோராண் டாச்சென
    நின்றல றிடுவாய் நீயழு வாயே !

     

    Share