விவேக்பாரதி

 
காப்பு

318794_207332152667266_100001714496823_574807_651454047_n

நவக்கிரக நாயகியே நானுன் பதத்தில்
அவம்நீங்க வேண்டி அமர்ந்து – கவிசொல்வேன் !
மாலை முடிந்திடவும் மாற்றம் நிகழ்ந்திடவும்
காலங் கொடுத்தருள்வாய் காப்பு !

நூல் :

காரிய மாற்றிக் கடமைசெய் வோரின் கருத்திடையில்,
சீரிய நோக்கிற் சிறப்புறச் செல்பவர் சிந்தைதனில்
பேருரு வாகும் பெருங்கரு மாரி பெயருரைக்கச்
சூரியத் தேவன் சுகத்தினை நல்கிச் சுடருகவே !

சுடர்விடு மட்டிகை சுட்டிக ளாரமும் சூடியிங்கே
இடமெனும் பாக மிருந்தருள் வீசும் இறையவளைக்
கடமை புரியும் கருமா ரியவள் கனிப்பெயரைச்
சடுதியிற் சொல்லிடச் சந்திரன் இன்பொளி சாற்றுகவே !

சாற்று மவள்பெயர் தந்திடும் சக்திகள் சங்கடத்தை
மாற்றி உயர்க்கதி மண்ணில் நிறுத்திடும் ! மாண்புடைய
காற்றி லுயர்ந்து கருமா ரியின்பேர் கருதுகின்ற
ஆற்ற லுணர்ந்தங் காரகன் நன்மை அளித்திடவே !

அளிக்கும் சிரத்தையி லானந்தங் கண்டே அணைத்திடுவாள் !
ஒளிதிகழ் கல்வியி லுண்மையி லூன்றியிங் கோங்கிடுவாள் !
களிதருந் தேவி கருமா ரியின்பேர் கதைத்திடவே
தெளிவினை நெஞ்சிடைத் தேக்க புதனெனும் தேவனுமே !

தேவரின் துன்பமும் தேய்ந்திடக் கந்தனின் தேசெனவே
காவலர் கைகொளும் கங்கெனும் வேலினைக் கைகொடுத்தாங்
காவலில் நின்ற அருங்கரு மாரி அருட்பெயரைக்
கூவிட வந்து குருவறி வூட்டுக குணமுடனே !

குணமும் திறமும் குறையில் மதியும் குவித்திடுவாள் !
மணமும் தவமும் மடமன மாளும் வழிவகுப்பாள்
கணக்கை அறியும் கருமா ரியவள் கனற்பெயரால்
பணமும் உயர்வும் பலசுக் கிரனவர் பாய்ச்சுகவே !

பாய்ந்தெழுஞ் சத்தம் பகலிர வெல்லாம் படபடக்கக்
காய்ந்தெழுந் தந்தக் கடுமகி ஷாசுரன் காலமறுத்
தோய்ந்தவள் பேரை ஒழுகித் துதிக்கு மொருவர்தமை
ஆய்ந்துபின் பற்றியிங் காள்க சனியெனு மாண்டவனே !

ஆண்டவன் கொண்ட அரவைக் குடையா யமைத்திருப்பாள் !
மீண்டது கையின் விரல்மோ திரமாய் மிளிர்ந்திடுமே !
வேண்டு மனைத்தையும் வேகமெ னத்தரும் வெற்றியின்பேர்,
யாண்டுமு ரைக்க யிராகுவும் நோக்குக யாக்கையையே !

யாக்கை கடந்தவள் யாரும் வணங்கிட ஆதரிப்பாள் !
பூக்கள் மணந்தரும் புன்னகை ஏந்திப் பொலிந்திடுவாள் !
காக்கை நிறத்தள் கருமா ரியின்பேர் கதைசொலவே
கேட்கும் அனைத்தையும் கேதுவும் நல்குக கேண்மையிலே !

கேண்மையு மாகிக் கெடுத்திடு மெண்ணங் கெடுத்தெனக்கும்
ஆண்மையை என்று மருள்க நவகிரக ஆண்டவர்தாம் !
பூண்பது சத்தியம் ! புத்தியில் நிற்பது பூரணமே !
காண்பது சக்தியைக் காய மவள்செயுங் காரியமே !
“ஓம் சக்தி”

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.