விவேக்பாரதி 

தான தந்தன தானா தனாதன 
…தான தந்தன தானா தனாதன 
…..தான தந்தன தானா தனாதன – தனதானா ! 

சீறு மங்கர வோடே சடாமுடி 
…சீத ளம்பயி லாதே  நிலாவொடு 
…….சீவ னந்தக னோடே யுலாவிடு – சிவதேவீ !

தீது மெங்கிலு மூடே யெழாதற
…தீரு மந்நிலை மாதே அழாதிர
…….தீர மென்றிட மாரே விழாதுற – அருள்தாராய் !  

ஏறு மங்கரி காடே புகாதரு 
…ளேகி யெம்மன நாடே சடாரென 
……ஏறி அந்திரி நீயே தயாபரி – வரவேணும் 

ஏம மென்றுமெ சாகா துராவிட 
…ஏடி சங்கரி மாயே அடாசிடு 
……ஏத மென்றிடு தீயே சுடாதுற – உனைநாடி 

நீற ணிந்திடு வோமே கனாவிடை 
…நீளு மெம்மட நாவே கெடாமொழி 
…….நீவ ழங்கிடு வாயே பராபரை ! – பணிவோமே 

நீச மென்றிடு நோயே படாதுயர் 
…நீல கண்டனைப் போலே யுலாவிட 
……நீய ருள்தரு வாயே தடாகமு – முறைமாதே ! 

ஊற றுந்திட ஊழே தொடாதுற 
…ஊரெ ழுந்திட நீயே வொரேகதி 
…….ஊமை யெங்களின் வாயே சொலாமொழி – மொழிவாயே 

ஊசி தன்னிடை நீயே நியாயமு 
…மூரி லிங்ஙண மேவீ விழாவுற 
……வூப மென்றிட வாராய்க் கபாலியி – னுமையாளே !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.