எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் – “எழுத்துக்கு எழுபது”

0

மீ. விசுவநாதன்

3886e5c9-93f0-4cc8-8780-cfde35377b53
சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களின் எழுபத்தி ஒன்றாவது பிறந்த தினத்தில் (05.07.2016) வெளியிடப் பட்ட “எழுத்துக்கு எழுபது” மலரைக் கண்டதும் கண்களில் ஒற்றிக்கொள்ளத் தோன்றும் வனப்பும், படித்ததும் மனத்திற்கு நிறைவும் தந்தது. பாலகுமாரனின் இளமைக் காலம் தொட்டு, இன்று வரை அவரது முக்கியமான நிகழ்வுகளின் அழகழகான வண்ணப்படங்கள் மலருக்குச் சிறப்பு சேர்க்கிறது. இந்த அழகிய மலரைத் தயாரித்த திரு. சூர்யா பாலகுமாரன் உள்ளிட்ட குழுவினருக்குப் பாராட்டுகள்..

எங்கே படைப்பாளி கொண்டாடப் படுகிறானோ அங்கேதான் மிக உன்னதமான படைப்புகள் மலரும். அந்தப் படைப்புகளால் மனிதம் உயரும். அதற்கு மிகச் சரியான சான்று இந்த “எழுத்திற்கு எழுபது” மலர்.

ஒரு படைப்பாளியை இன்னொரு படைப்பாளி கொண்டாடுவதும், அவனோடு சிநேகமாக இருப்பதை நினைத்து மகிழ்வதும் , அதிலும் மிக முக்கியமாக ஆயிரக்கணக்கான வாசகர்கள் அந்த எழுத்தாளனின் படைப்புகளைப் படித்தே உயர்ந்தோம் என்று பதிவு செய்வதும் அவ்வளவு எளிதாக நடந்து விடக்கூடியது அல்ல. அது ஏதோ ஒரு சிலருக்குத்தான் நிகழ்கிறது. அப்படி ஒரு நிகழ்வு எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கு வாய்த்திருப்பது நற்பேறு. அதற்கு விலையோ அவரது கடுமையான, இன்றும் அயராது தொடந்து செய்துவரும் உழைப்புதான்.

இந்த மலரில் பல பிரபலங்கள் அவருடனான நட்பைப் புகழ்ந்தும், மதித்தும் எழுதி இருக்கிறார்கள். அவரது தாயார் திருமதி சுலோச்சனா அம்மையார் தானூட்டிய தமிழ்ப் பாலை நினைவு கொண்டு அவரைக் கொஞ்சி இருக்கிறார். அவரது துணைவியர்கள் திருமதி. கமலா, திருமதி. சாந்தா, மகன் சூரியா, மகள் ஸ்ரீ கௌரி, என்று கும்பத்தினர் கொண்டாடி இருக்கின்றனர்.

திருமதி. சாந்தா பாலகுமாரனின் எழுத்தில் ஒரு சிறந்த படைப்பாளியைத் தான் கணவனாக அடைந்திருக்கும் பெருமைக்கு மேல் அவர் யோகி ராம்சுரத்குமார் என்ற மாபெரும் சக்தியால் ஆட்க்கொண்ட திருமகன் என்ற நிறைவு தெரிகிறது. சூர்யா பாலகுமாரன் தன்தந்தையையே தன்குருவாகப் பதிவு செய்தவிதத்தில் தெளிவும், நெகிழ்வும் இருக்கிறது. அவரது எழுத்தில் தந்தை பாலகுமாரனின் குரல் கேட்கிறது.

எழுத்தாளர் மாலன் தன் சிநேகிதனின் வளர்ச்சியில் மகிழ்ந்து, நெகிழ்ந்து பதிவு செய்ததில் கலப்படம் இல்லாத நட்பு தெரிகிறது. எழுத்தாளர் இந்துமதி பாலகுமாரனின் இயல்பான அன்பை விளக்கிய பகுதி அருமை. “பாலகுமாரனின் எழுத்து வலிமையைச் சொல்லி “உடையார்” நாவலின் தகுதியையும் மெச்சி, பாலகுமாரன் அவர்களுக்கு உயர்ந்த இலக்கிய விருதான “ஞானபீடம்” வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று சகபடைப்பாளியான இந்திரா சௌந்தர்ராஜன் பதிவு செய்திருக்கிறார்.

தேவகோட்டை வா. மூர்த்தியின் கட்டுரை ஆழ்ந்த நட்புக்கு ஒரு உதாரணம். அதில் பாலகுமாரன் தன் தாயார் மறந்த பொழுது குமுதம் பக்தி ஸ்பெஷல் (May, 1,2007) இதழில் ,” என்னுடைய நண்பர்கள் பலரும் அவளுக்கும் நண்பர்கள். தேவகோட்டை மூர்த்தி என்னுடைய தோழன். அதே சமயம் என் அம்மாவுக்குச் செல்லப்பிள்ளை. துக்கம் கேட்டு நண்பர்கள் வரத் தொடங்கினார்கள். ஆறுதல் சொன்னார்கள். தேவகோட்டை வா. மூர்த்தி வரும் பொழுது கொஞ்சம் மனம் கலங்கினேன், தடுமாறி அழுதேன்” என்று எழுதி இருப்பதைப் படித்து விட்டு பாலகுமாரனின் அன்பை, தன்னோடு அவர் கொண்ட தோழமையை எண்ணி வியக்கிறார் தேவகோட்டை வா. மூர்த்தி. இதே எண்ணம்தான் பாலகுமாரன் அவர்களுடன் பழகிய அத்தனை பேருக்கும் இருக்கும். இந்தப் பரந்து பட்ட அன்புதான் பாலகுமாரனின் சொத்து.

இயக்குனர் வசந்த் அவர்களின் கட்டுரை இந்த மலர்மாலையில் உள்ள வாசமிகு செண்பகப் பூவாய் மணக்கிறது. திரைப்படத் துறையில் பாலகுமாரனின் பங்களிப்பையும், தான் பாலகுமாரனின் எழுத்தால் எப்படி ஈர்க்கப் பட்டேன் என்பதையும் மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார்.

இவை எல்லாவற்றையும் விட பாலகுமாரனின் வாசககர்கள் பலர் தங்களது குடும்ப உறவின் மேன்மைகளும் , காதலும், சிநேகமும், கூடி வாழும் குணமும், குருபக்தியும் எப்படித் தங்களுக்குள் வந்தது என்ற பதிவுதான் இந்த மலருக்கான வைரமுடி.

கபடமில்லாமல் எழுதியிருகிறார்கள். நல்ல எழுத்து எப்படி ஒருவரது வாழ்க்கையை மடைமாற்றம் செய்யும் என்பதற்குச் சிறந்த உதாரணமாக இந்த வாசகர்களின் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. “மெர்க்குரிப் பூக்கள்” தொடங்கி “ராஜேந்திர சோழன்” வரை பாலகுமாரனோடு பயணித்த, இன்னும் பயணித்துக் கொண்டே இருகின்ற வாசகர்களின் அன்பே இந்த எழுத்துச் சித்தரின் வெற்றி.

” என் சிறப்புக்கெல்லாம் என் சத்குருநாதன் யோகி ராம்சுரத்குமாரின்” கருணையும், என் தாயார் சுலோச்சனா என்ற தமிழ்ப் பண்டிதையின் அன்பும், என்குடும்ப உறவுகளின் ஊக்கமும், சத்சங்க அன்பர்களின் நெருக்கமும், நட்புகளின் துணையுமே” காரணம் என்று கைகூப்பும்” பாலகுமாரனின் பணிவே இந்த மலரின் சாரம்.

இந்த அருமையான “எழுத்துக்கு எழுபது” என்ற வண்ணமலரை வெளியிட்ட விசா பதிப்பகத்தினருக்கு பாராட்டுகள்.

கடுமையாக உழைத்தால் தான் அடைய விரும்பிய உயரத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கையைத் தரக்கூடிய இந்த நூலை அனைவரும் படித்து மகிழ வேண்டும்.

அன்புடன்,

மீ.விசுவநாதன்

04.08.2016

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *