எம். ஜெயராமசர்மா, B.A Hons, Dip.in.Ed, Dip.in.Soc, M.Phil Edu, SLEAS

கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர்

மெல்பேண் . அவுஸ்திரேலியா

 

வள்ளுவத்தின் சிறப்பு

தமிழிலே தோன்றிய பல நூல்கள் வாழ்வியலைப் பற்றிய கருத்துக்களை பலவாறு எடுத்துக் காட்டிருக்கின்றன. அவைகள் கூறும் கருத்துக்கள் முழுமையான தாகவோ எக்காலத்துக்கும் ஏற்றனவாகவோ இருகின்றனவா என்று பார்க்கின்ற பொழுதான், திருக்குறளை நாம் கூர்ந்து பார்க்க வேண்டியுள்ளது.வாழ்வியல் சம்பந்தமான கருத்துக்களைப் பகர்ந்து நின்ற நூல்களுக்கு மத்தியில் திருக்குறள் ஒன்றே முன்னுக்கு நிற்கிறது என்பதே பலரது கருத்தாக இருக்கிறது.

நூல்களை இரண்டு வகையாகப் பார்க்கலாம். அந்தக் காலத்துக்கு ஏற்றவை, எக்காலத்துக்கும் ஏற்றவை என்று வகைப் படுத்தலாம். இதே வேளை நூல்களைக் கற்கும் வகையிலும் இருவகைப் படுத்தலாம். முதாலாவது எழுதிய காலத்துக்கே சென்று கற்பது. மற்றையது வாழும் காலத்திற்கு வந்து கற்பதாகும். இந்த வகையில் வள்ளுவமானது வாழும் காலத்திலேயே கற்கும் நூலாக விளங்குகின்றது. ஆகையால் தான் பல ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்க்கைக்கு வழிகாட்டும் வாழ்வியல் நூலாக விளங்கும் பெருமையைப் பெற்றிருக்கிறது.

திருக்குறள் தான் தோன்றிய காலம் முதல் இன்றளவும் தனித்துவம் மிக்கதாகவே விளங்குகிறது என்பதை எவருமே ஒத்துக் கொள்ளுவார்கள். அந்த அளவுக்கு அதன் அமைப்பும், அதில் சொல்லப்பட்ட கருத்துக்களும் இருக்கின்றன.

பகவத்கீதை வாழ்வுக்கு வழிகாட்டி தான். திருக்குரான் வாழ்வியலைக்  காட்டும் கருத்துக்கள் கொண்டது தான். பைபிளில் கூட வாழ்வியல் கருத்துகள்  காணப்படுகிறது. ஆனால் இவையாவும் சமயம் சார்ந்தனவாக இருக்கின்றன. கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை. மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம். மனிதன் மனிதனுக்குச் சொன்னது தான் வள்ளுவம்.

ஆகவே தான் திருக்குறள் எந்தவிதச் சமயச் சார்பும் கலவாத சமுதாயச் சிந்தனை மிகுந்த நூலாக இருக்கிறது. கூறப்படும் சிந்தனைகளும் யாராலும் கூறப் படாதனவாகவும், புரட்சிகரமானதாகவும்,புதுமையானதாகவும் இருக்கின்றன.

ஒருநூல் எழுதப்பட்ட காலத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் சில காலத்துக்கு மட்டுமே பொருந்துவதாகவே பெரும்பாலும் இருக்கும். சில வேளை எழுதப்பட்ட காலத்தோடே அக் கருத்துக்களும் வலுவிழந்தும் கூடப் போய்விடலாம். அப்படியான நூல்கள் நிலைத்து நிற்பது என்பது கடினமானதாகவே இருக்கும். ஆனால் எழுந்த காலம் தொடக்கம் இன்று வரை ஏன் இன்னும் பல காலங்களுக்கும் நிலைத்து நிற்கும் அளவுக்குச் சிந்தனைக் கருவூலங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் பெருமை  திருக்குறள் நூல் பெற்றிருப்பதால் தான் அது வாழும் நூலாக வாழ்வியலைக் காட்டும் நூலாக இருக்கிறது என்பதை யாவருமே ஏற்றுக் கொள்வார்கள்.

உண்டோம், உடுத்தோம், உறங்கினோம் , என்பது வாழ்க்கையல்ல. வாழ்க்கை என்பது இவற்றுடன் அடங்கி விடுகிறது என்னும் அபிப்பிராயம் பெரும்பாலும் நம்மிடையே காணப்படுகிறது. விலங்களும் சாப்பிடுகின்றன. உறங்கிவிடுகின்றன. நாமும் அப்படியிருந்தால் அதன் அர்த்தம் தான் என்ன? மனிதன் என்றால் அவன் சிந்திக்கத் தெரிந்தவன்.பகுத்தறியும் தன்மை பெற்றவன். அவன் வாழ்வும் விலங்கு வாழ்வும் ஒன்றாகுமா?

எனவே மனிதனது வாழ்வு இப்படித் தான் வாழவேண்டும்  என்னும் நிலைக்குள் இருந்துவிட்டால் தான் அங்கு வாழ்வியலைப் பார்க்கமுடியும். இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்குப் பல வழிகளைத் தேர்ந்து அவற்றை வழங்கி நிற்பதால் தான் வள்ளுவம் மிகச் சிறந்த வாழ்வியல் நெறியாகி நிற்கிறது எனலாம்.

வள்ளுவம் காட்டும் வழிகளை உலகிலுள்ள அனைவரும் கடைப்பிடித்தால் மிகவும் உன்னதமான வாழ்வு அவர்களுக்குக் கிடைத்து விடும். யாவரும் அறத்தின் வழியில் வாழுதல்  வேண்டும். அறத்தின் வழியில் பொருள் தேடுதல்வேண்டும். அறத்துடன் அன்பினையும் இணைக்க வேண்டும். அறமும் அன்புமும் இணையும் வேளை அத்துடன் ஒழுக்கத்தையும் சேர்த்துவிடல் மிகவும் முக்கியம் என்பது தான் வள்ளுவத்தின் தத்துவம்.

வாழ்வியல் முறைகள்

எப்படியும் வாழலாம் என்று மனம்போன போக்கிலே வாழ்ந்தால் வாழ்க்கை வாழ்க்கையாக இருந்து விடாது. வாழ்வென்றால் அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். குறிக்கோள் அற்ற வாழ்க்கை குருட்டு வாழ்க்கையாகும். சிந்திக்கும் ஆற்றல் மனிதனுக்குக் கிடைத்திருக்கும் பெரும் வரப் பிரசாதமாகும். பகுத்தறியும் பாங்கு என்பது மனிதனை மாநிலத்தில் உயர்த்தி வைப்பதற்குக் காரணமாய் இருக்கின்றது.

விலங்காக  மனிதன் விலங்குகளுடன் காட்டில் இருந்த நிலையைக் கடந்து நாட்டில் நாகரிகமாக வாழும் நிலைக்கு வந்து விட்ட பின்னரும் கூட மனிதனாக வாழ எண்ணா விட்டால் மனித வாழ்வுக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் அல்லவா?  எனவே கல்வியறிவு என்பது வாழ்வியலின் முக்கிய அம்சமாக விளங்குகின்றது.

இதனை வள்ளுவம் மிகவும் அழகாக எடுத்துச் சொல்லுகிறது.

  ” எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

     கண் என்ப வாழும் உயிர்க்கு”

  “கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

    புண்ணுடையர் கல்லா தவர்”

தனது அறிவாலும், நூல் அறிவாலும் நுனித்து அறிய வேண்டும். முதற் குறளில் எண் என்பதனை தன்னறி வென்றும் எழுத்து என்பதனை  நூல் அறிவு என்றும் எடுத்துக் கொண்டால் யாவருக்கும் வள்ளுவம் கூறும் பொருள் இலகுவில் புரிந்து விடும். எனவே தன்னறிவும் நூலறிவும் கல்வியால் வருகின்றதை நயமாகக் காட்டும் வள்ளுவம் வழிகாட்டிதானே!

கல்வி கற்கா விட்டால் கண்கள் இருந்தும் அந்தக் கண்கள் பயனற்ற வாகிவிடும் என்பது இரண்டாம் குறளால் உணர்த்தப்படுகிறது. கண்களால் பொருள்களைப் பார்க்கவே முடியும். ஆனால் பார்க்கப் படுகின்ற பொருளைப் பற்றி அறியவேண்டு மானால் அங்கே அறிவு தேவைப்படுகிறது. அதனைப் பெறுவதற்கு யாவரும் கற்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. கண்ணிருந்தும் விஷயங்களை அறியும் ஆற்றல் இல்லா விட்டால் அது புண்தானே என்று புரிய வைக்கும் வள்ளுவத்தின் பாங்கு தான் அதன் வெற்றி யெனலாம்.

வாழ்க்கையின் அத்திவாரம் கல்வியாக இருப்பின் அந்தச் சமூகம் தலைநிமிர்ந்த வாழ்க்கையினை வாழும். அறிவு என்பது வாழ்வியலின் அடிப்படையாகும். அதனை வளர்ப்பதற்குக் கற்றல் மிகவும் தேவையானதாகும். கற்கக் கற்க அறிவானது பெருக்கெடுத்துக் கொண்டே வரும்.

      “தொட்டனைத்து ஊறும் மணல்கேணி மாந்தர்க்கு

       கற்றனைத்து ஊறும் அறிவு “

கல்வியை ஒருதரம் நாம் கற்று விட்டோமேயானால் அந்தக் கல்வியானது நம்முடன் சேர்ந்து ஏழேழு பிறவிக்கும் வரும் என்று துணிவாகச் சொல்லி கற்பதை இலட்சியமாக்குங்கள் என வள்ளுவம் செப்பி நிற்கிறது.

 “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்க

 எழுமையும் ஏமாப்பு உடைத்து”

இது மாத்திர மல்ல கல்வியானது என்றுமே அழிவில்லாத செல்வமாகி நிற்கும். மற்றய செல்வங்கள் வராவிட்டாலும் கல்விச் செல்வமானது நம்முடன் வந்தே நிற்கும் அருமையும், பெருமையும் மிக்கது என்பது வள்ளுவத்தின் கருத்தாகும்

 “கேடில் விழுச்செல்லவம் கல்வி ஒருவற்கு

    மாடல்ல மற்றை யவை”

மனிதன் மனிதனாக வாழ சிறந்த வாழ்வியல் என்பதை அடையக் கற்றல் என்பது எல்லோருக்கும், எங்கும், எச்சமூகத்துக்குமே தேவை என்பது வள்ளுவத்தின் கொள்கை எனலாம்.

ஏன் கற்கவேண்டும்? கல்லாதவர்கள் வாழவில்லையா? குழந்தை பெற்றுக் குடும்பம் நடத்த வில்லையா? உயிரோடு இருக்க வில்லையா? என்றெல்லாம் விவாதங்கள் செய்யலாம். இதற்குச் சரியான பதிலையும் வள்ளும் வைத்திருக்கிறது.

 “விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

    கற்றாரோடு ஏனை யவர்”

விலங்குகள் கற்பதில்லை. அறிவுவளர்சி அற்றன. ஆனால் மனிதனோ அறிவுவளர்ச்சி உடையவன். மக்கள் மக்களாக வாழவேண்டும் என்றால் கல்வியறிவு முக்கியமாகும். உடல்வளர்ச்சி பெற்றுவிட்டால் வாழ்வுவாழ்வாகிவிடாது. அவ்வாறு வாழ்வது விலங்கு வாழ்க்கையே ஒக்கும்.  எண்ண வளர்ச்சிக்கு உரிய நூலறிவு தான் மனிதனை மனிதனாக்கும் என்று வள்ளுவம் சொல்லுகின்றது.

வள்ளுவத்தின் தனித்துவம்

அறநூல்கள் பல வந்திருக்கின்றன. அவையாவும் சமயம் சார்ந்ததாகவும்,  தாம் கூறும் அறக் கருத்துக்களை மட்டுமே முக்கியமாகக் கொள்ள வேண்டும் என்னும் தன்மையினவாகவுமே இருந்திருக்கின்றன. இதனால் இவைகள் நல்ல பல கருத்துக்களைச் சொன்னபோதும் அவற்றை மனித அன்றாட நடைமுறைகளுடன் இணைத்து அவற்றை வாழ்வியல் நெறியாக்கும் பாங்கினைப் பெற்று விட வில்லை என்று தான் கொள்ள முடிகிறது. ஆனால் வள்ளுவம் இந்த வகையில் தனித்துவம் பெற்றதாக நிற்கிறது. அறக் கருத்துக்களைத் தாங்கி நின்றாலும் அது எந்தச் சார்பும் அற்றதாகவும் , நடைமுறை வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் அமைந்து விடுகிறது. எனவே வள்ளுவம் வாழ்வியல் நூலாகவே விளங்குகிறது. அறநூல் என்பது வேறு. வாழ்வியல் நூல் என்பது வேறு. வள்ளுவம் வாழ்வியல் நூலாக மிளிர்வதனால்  தான், இனம் கடந்து, மொழி கடந்து, நாடு கடந்து, யாவருக்கும் ஏற்றதாக இருக்கிறது என்பது இங்கு நாம் எல்லோரும் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமாகும். உலகத்திலே இருக்கின்ற அனைவருக்கும் கல்வி முக்கியமானது. அதனை எவரும் தேவையற்றது என்று சொல்லவே மாட்டார்கள். அதே வேளை பொருளும் இன்றியமயாததுதானே! அந்தப் பொருளோடு அறமும் சேர்ந்துவிட்டால் மிகவும் சிறப்பாகவும் இருக்குமல்லவா? இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக ஒழுக்கம் தேவைதானே ! இதுதானே உண்மையான வாழ்வியல் தத்துவம். இதைத் தானே வள்ளுவமும் சொல்லி நிற்கிறது.

உலகத்திலே கொலை , களவு, கள், காமம், பொய்  இவைகள் இல்லாமல் போகுமானால் அந்த இடம் சொர்க்கமாகத்தானே இருக்கும் ! அப்படி அமைய வேண்டும் என்று வள்ளுவம் ஆசைப்பட்டது. அப்படியான இடத்தில் வாழும் வாழ்வையே “வையத்துள் வாழ்வாங்கு வாழுதல் ” என்று வள்ளுவம் கனவு கண்டது.

மனிதன் மனிதனாக வாழவேண்டுமானால் அவன் தன்னிலையை உணருதல் அவசியமானதாகும். அதற்கு  நிதானமே மிகவும் முக்கியமானதாகும். நிதானம் தவறினால் யாவுமே போய்விடும். நிதானத்தை இழக்கச் செய்வது ” கள் ” ஆகும். இந்தக் கள்ளினால் கொலைவரும், களவுவரும் , கூடவே காமமும் பொய்யும் இணைந்தே வந்துவிடும் என்பது வள்ளுவத்தின் அடிப்படையாகும். இவைகள் யாவும் இணைகின்ற பொழுது வாழ்வியலே கேள்விக்குறியாகி விடும்! ஆகவே மூலகாரணமாக  இருக்கின்ற கள்ளினை முதலில் கைவிடுதல் மிகவும் அவசியம் என்பதை வள்ளுவம் வலியுறுத்தி நிற்கிறது.

          “உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்

          கட்காதல் கொண்டொழுகு வார்”

கள்ளைக் குடித்தால் மதியை இழக்க நேருவதோடு, இருக்கின்ற பொருள்களோ வலிமையோ எதுவுமே பயனற்ற தாகிவிடும். அது மட்டுமல்ல பெரியவர்கள் கூட குடித்தவர்களை மனிதர்களாகவே மதிக்கவே மாட்டார்கள். எதிரிகள் கூட பயப்படாத நிலையினையும் கூட குடியானது ஏற்படுத்தி விடும் என்று வள்ளும் அறிவுறுத்தி நிற்கிறது

 “ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

   சான்றோர் முகத்துக் களி”

அன்பைச் செலுத்துகின்ற அன்னை  கூட கள் குடிப்பானை வெறுத்துவிடுவாளாம். அது மட்டுமல்ல அருளைச் செலுத்துகின்ற பெரியவர்களும் கூட குடிப்பவனை விரும்பாமல் வெறுத்து விடுவார்களாம் ! ஏனென்றால் இவர்களுக்கு முன்னாலேயே குடியால் தன்னிலை யிழந்து செய்யக் கூடாதவற்றை எல்லாம் செய்யும் நிலை வந்துவிடுகிறதாம். இதனால் கள்ளானது சமூகத்தில் வாழுகின்ற அதாவது மானத்துடன் வாழமுடியாமலே செய்து விடுவதால் அதனை விலக்குதல் அவசியம் என்பது வள்ளுவத்தின் நிலையாகும்.

கள்ளினால் வருகின்ற தீங்குபோல் தான் கோபத்தால் வருகின்ற அழிவுமாகும். “கோபமாவது பாவம் ” என்று சாதாரணமாகச் சொல்லுவது வழக்கம்.

    “சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்

      ஏமப் புணையைச் சுடும்”

கோபம் வந்து விட்டால் இன்னார் இனியார் என்று பார்ப்பதே இல்லை. நன்மை தீமை ஆராய்வதில்லை. உதவியவர் என்றோ, சுற்றத்தவர் என்றோ கூடப் பார்ப்பதும் இல்லை. யாருக்குக் கோவம் வருகிறதோ அவரையும் அழித்து அவரை அண்டிய வர்களையும் அழித்து விடும் வல்லமை கொண்டதாகும். நெருப்புக்கு சேர்ந்தாரைக் கொல்லி என்று ஒரு பெயரை வள்ளுவம் காட்டி அதடனுடன் கோபத்தையும் இணைத்துக் காட்டிய பின்பும் கோபம் கொள்ளுவது எந்த அளவுக்கு வாழ்வினை அழித்துவிடும் என்பது எல்லோருக்கும் விளங்கத்தானே வேண்டும். வாழ்வியலுக்குக் கோவம் என்பது கள்ளுடன் சேருமாயின் வாழ்வியல் சிறக்குமா? அதனை வாழ்வியல் என்று சொல்லத்தான் முடியுமா? நிம்மதியுடன் வாழவேண்டும் என்பது தான் வள்ளுவத்தின் நோக்கமேயாகும்.   எல்லாவற்றுக்கும் எங்களின் வாய்ச்சொற்களே காரணமாகிறது என்பதை பொதுவாக எல்லோரும் தெரிந்திருப்பது கட்டாயமானதாகும். இதனை வள்ளுவம் மிகவும் நாசூக்காக எடுத்துச் சொல்லுகிறது.

 “யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்

  சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”

எதனைக் காக்காது விட்டாலும் நாவை அதாவது சொல்லும் சொற்களைக் கவனத் துடன் சொல்லுதல் அவசியம். பேசும் வார்த்தைகளே நம்மைப் பெருமைக்கும் சிறுமைக்கும் ஆளாக்க வல்லன வாகும். நாவென்பதைக் காக்கா விட்டால் நாடே நலம் மிழந்தும் விடலாம். வாழ்வே அழிந்தும் விடலாம். இதனால் நாவடக்கம் என்பது மிகச் சிறந்த வாழ்வியல் தத்துவம் என்பதை வள்ளுவம் வற்புறுத்தி நிற்கிறது. இந்த நாகாத்தல்  என்பது உலகம் முழுவதிலும் வாழ்கின்ற அனைவருக்குமே பொருந்துவதாகும்.

அறம் என்று சொன்னால் அது ஒரு வாழ்க்கைத் தத்துவம். மக்களின் வாழ்க்கையில் முதல் ஆதாரமே அறமாகும். அதற்கு அடுத்ததாக பொருளை எடுத்துக்  கொள்ளலாம். மூன்றாவதாக இன்பத்தை எடுத்துக் கொள்ளலாம். இவை மூன்றுமே மனித வாழ்வியலின் மூல ஆதாரங்கள் என்றே எடுத்துக் கொள்ளுதல் பொருத்தமானதாகும்.

இவற்றை வள்ளுவம் எல்லோருக்கும் ஏற்ற வகையில் தந்து நிற்பதால் அது நிலைக்கும் வாழ்வியல் வழிகாட்டியாக இருக்கிறது என்பது வெளிப்படையாகும். நாகாத்தல் என்பது மிகச் சிறந்த அறமாகும்.

வாய்மை என்பதையும் நாவினாலும் , மனத்தினாலும் , காக்கவேண்டும். வாய்மை என்பது வாழ்க்கையின் முக்கிய அறமாகி நிற்கிறது. வாய்மை தவறும் பொழுது வாழ்க்கையே தவறி விடுகிறது.

       “உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

          உள்ளத்துள் எல்லாம் உளன்”

இது வள்ளுவம் சொல்லும் முக்கிய அறமென்றே கொள்ளலாம். பொய்மை ஒழிந்தால் வாழ்வு பிரகாசமாகும். வாய்மையானது வளர்ச்சி பெறுமானால் வாழ்வு வசந்தமாகிவிடும். வெகுளாமை வாய்த்துவிட்டால் யாவும் அது பெரும் வரமாக அமைந்துவிடும்.

மன்னிக்கும் பண்பு தான் மனித வாழ்வியலில் எல்லோருக்கும் வேண்டிய ஒன்றாகும். அந்தப் பண்பு குறையும் பொழுதோ அல்லது இல்லாமல் போகும் பொழுதோ மனித வாழ்வு அர்த்த மற்றதாகி விடுகிறது. துன்பம் செய்தாலும் அதனைத் தாங்கி திருப்பி துன்பத்தைச் செய்யாமல் நன்மையே செய்து பாருங்கள் உங்களின் நிலை உங்களை அறியாமலேயே உயரும் .உள்ளுக்குள் ஒரு ஆத்ம திருப்தியே வந்து சேரும் என்னும் வாழ்வியல் தத்துவத்தை வாழும் புதிய அணுகுமுறையை வள்ளும் காட்டி நிற்கிறது.

     “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

         நல்நயம் செய்து விடல்”

இதனை உலக மக்கள் கைக்கொண்டு வாழ்ந்தால் உலகம் சமாதானப் பூங்காவாக மாறிவிடும் நிலை வந்துவிடுமல்லவா? தனிமனிதன் முன்னேற்றம் சமுதாய முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். சமுதாயம் முன்னேற்றம் நாட்டுக்கே வழிவகுக்கும். நாடுகளின் முன்னேற்றம் தான் உலக முன்னேற்றமாகப் பரிணமித்து நிற்கும்.

இதற்கு என்ன தேவை யென்றால் நல்ல வாழ்வியல்முறை தான் தேவை. அந்த வாழ்வியல் முறையை வள்ளுவம் .. இல்லறவியலாகவும், துறவறவியலாகவும், அரசியல் இயலாகவும் , அங்கவியலாகவும், ஒழிபு இயல்பாகவும், இன்ப இயலாகவும், சொல்லி அதன்படி வாழ்ந்தால் வையத்து மாந்தரெல்லாம் வளமுடன் வாழலாம், வாழ்வாங்கு வாழலாம் என்று நம்பிக்கையும் துணிவையும் தந்து நிற்கிறது.

வள்ளுவத்தின் உன்னதம்

வள்ளுவம் என்பது மிகச்சிறந்த வாழ்வியல் என்பதை உலகப் பெரியோர்கள் பலர் தமது உள்ளத்தே பதித்து வைத்துள்ளார்கள்.

“இந்துவுக்கு ஒரு கடிதம்” என்னும் டால்ஸ்டாயின் ஒரு பிரதியில் வள்ளுவத்தின் “அன்பின் வழியது உயிர் நிலை” என்பது மிகவும் சிறப்பாகச் சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறது. இதனை தேசபிதா காந்தியடிகள் பார்த்துவிடுகிறார். அவரும் வள்ளுவத்தில் பெருமதிப்புற்று  – ” வள்ளுவரைப் போல் மிகப்பெரிய ஞானக் களஞ்சியத்தை வழங்கியவர் இந்தவுலகில் எவரும் இல்லை ” என்று நெஞ்சத்தால் போற்றுகின்றார்.

“இந்தியச் சிந்தனையும் அதன் வளர்ச்சியும்”  என்னும் நூலில் –  “திருக்குறள் இல்லாமல் இந்தியச் சிந்தனை என்பது முடிவில்லாததாகும்” என்று ஆல்பிரட்  ஸ்வைட்சர் என்னும் அறிஞர் போற்றி நிற்கின்றார்.

“ஒழுக்கமே மனிதனுடைய உயர்ந்த குறிக்கோளாக இருக்கவேண்டும்” என்பதை மிகுந்த உறுதியோடு வள்ளுவர் கூறியிருக்கிறார். ஒவ்வொருவரும் தனக்குள்  தானே செய்ய வேண்டிய கடமை என்ன? மற்றவர்களுக்குச் செய்யவேண்டிய கடமை என்ன? என்பனவற்றையெல்லாம் சிறந்த பண்பாட்டோடும், மதிநுட்பத்தோடும், வள்ளுவர் பேசுகிறார். உலக இலக்கியங்களுள் இத்தகைய மாண்புமிக்க மெய்யறிவு வேறு எந்த நூலிலும் இத்தனை சிறப்பாகப் பொலிவுறவில்லை என்று சொல்லலாம் என – உலக அறிஞரான ஆல்பர்ட்  ஸ்வைட்சர் போற்றியுள்ளார் .

 அதுமட்டுமல்ல “பிற இந்திய மொழி நூல்கள் வாழ்வின் நிலையாமையை வலியுறுத்துகின்றன. ஆனால் திருக்குறளோ வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உடன்பாட்டினை உணர்தும் நூல்” என்றும் விதந்து கூறுகின்றார். இதிலிருந்து வள்ளுவம் என்பது மிகச்சிறந்த வாழ்வியல் என்பது புலனாகிறதல்லவா!

பல உலக மொழிகளில் வள்ளுவம் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. எதற்காக இப்படிச் செய்யப்பட்டது என்பதை உற்று நோக்குதல் அவசியமாகிறது அல்லவா?  வள்ளுவம் காட்டும் வாழ்வியலை யாவருமே விரும்புகின்றமைதான் இதற்கு முக்கிய காரணமாகும். வள்ளுவம் பற்றி அறிவதற்கு யாவரும் ஆசைப்படுகிறார்கள்.அதுகூட அதன் வாழ்வியல் முறையினால்த்தான் என்பது இப்பொழுது வெட்ட வெளிச்சம் ஆகிறது.

வள்ளுவத்தில் சொல்லப்பட்ட  வற்றைத் தவறாது வாழ்வில் கடைப்பிடிக்கத் தவறுதல் கூடாது. வாழ்க்கையுடன் பொருத்திப்பார்த்து எவற்றைச் செய்தல்  வேண்டுமோ அவற்றைச் செய்து எவற்றைத் தவிர்க்க வேண்டுமோ அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

எப்படியும் வாழலாம் என்று வாழும் உலகமக்களுக்கு இப்படி வாழ்ந்து  பாருங்கள் உங்கள் வாழ்வு எப்படி  – இன்பமாக,  இன்னலின்றி , அமைதியாக, அறம்செறிந்து,அகமும்புறமும் தூய்மையாக, இதுதான் வாழ்க்கை என்று  இருக்கும் என்னும்  நிலையைக் காட்டி நிற்பது தான் வள்ளுவத்தின் வாழ்வியலாகும்.

ஆகவே  வைகத்திலுள்ளோர் வாழ்வாங்கு வாழ வேண்டுமாயின் வள்ளுவம்

சொல்லும்  வாழ்வியலைப் போற்றுங்கள். அதன்படி வாழ்ந்து வளமதைப் பெற்றிடுங்கள் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *