விவேக் பாரதி

unnamed (1)

நீயிருப்பதால் இங்கு நானிருக்கிறேன் !
நீயசைப்பதால் மண்ணில் நான்நடிக்கிறேன் !
தீயிருப்பதால் என்னைப் பாடவைக்கிறாய் !
திமிருப்பதால் கொஞ்சம் ஓடவைக்கிறாய் !

பூமணத்திலே எழுந்து வார்த்தை தருகிறாய் !
தாமதத்திலே என்னைத் தாங்கிக் கொள்கிறாய் !
தீமனத்தில் நீரையூற்றி நீ தணிக்கிறாய் !
நாமணக்கப் பாடல்தந்து நீ சிரிக்கிறாய் !

ஏங்கவைத்துக் கதறி என்னை எழுதவைக்கிறாய் !
தூங்கவிட்டு பின்னெழுப்பிக் கனவு தருகிறாய்
வாங்கிவிட்ட பாவமென்ன ? என்னைக் கையிலே
தாங்கிக்கொள்ள நேரமென்ன ? வா அணைக்கவே !

மாலைநேரத் தென்றல் போல நீ நுழைகிறாய் !
கோலம்நூறு என்னகத்தில் நீ வரைகிறாய் !
வேலையென்ன பாரினுக்குள் என்னை வைக்கிறாய்
காலமென்னும் நூல்படைத்து நீ அசைக்கிறாய் !

ஒற்றைக் கையில் வீணையோடு நீ ஜொலிக்கிறாய்
கற்றைக் கூந்தல் காற்றிலாட தீ வளர்க்கிறாய் !
நெற்றிக் கண்ணன் பாதியாகி நிமிரவைக்கிறாய்
வெற்றி உண்மை வீரமாகக் கொலுவிருக்கிறாய் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *