நிர்மலா ராகவன்

நீங்கள் குதர்க்கவாதியா?

நலம்-1-1-1

`குதர்க்கம்!’

யாராவது உங்களை இப்படிப் ழித்திருக்கிறார்களா?

பெருமைப்படுங்கள்! நீங்கள் சுயமாகச் சிந்திக்கிறீர்கள். உங்களுக்குக் கற்பனைத்திறன் அதிகம் என்பதைப் பிறர் புரிந்து கொள்ளவில்லை.

உங்கள் தனித்திறமையைக் காட்ட வரைவது, எழுதுவது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட ஆரம்பிக்கவில்லையா இன்னும்?

ஒருவர் எப்போது எழுத்தாளனாக ஆசைப்படுகிறார் என்றால், பிறரது எழுத்தை நிறையப் படித்தபின், `இதைவிட நன்றாக என்னால் எழுதமுடியுமே!’ என்ற எண்ணம் எழும்போது.

`என்ன எழுதுவது?’ என்ற குழப்பமானால், ஒரு நோட்டுப் புத்தகத்தில் உங்களைப் பாதித்த ஏதாவது ஒன்றைப்பற்றி கொஞ்சம் எழுதுங்கள். முடிவைப்பற்றி யோசிக்காது, தினமும் தூங்குமுன் இருபது நிமிடங்களாவது அதற்காகச் செலவிடுங்கள். நாளடைவில், எழுதுவது எளிதாகும். பிரபலமான ஆங்கில எழுத்தாளர்கள் பலரும் இம்முறையைப் பரிந்துரைக்கிறார்களே என்று நானும் முயன்று பார்த்தேன். நல்ல பலன் கிடைத்தது.

ஒரு சிறு புத்தகத்தை எப்போதும் உங்களுடன் வைத்துக்கொண்டிருந்தால், வெளியில் போகும்போது வித்தியாசமாகக் காணப்படும் எதையாவது உடனடியாகக் குறித்துக்கொள்ள முடியும்.

திரைப்படங்கள், நல்ல எழுத்தாளர்களின் புத்தகங்கள் ஆகியவையும் கற்பனையைத் தூண்ட வல்லவை. உதாரணமாக, ஒருவன் காதலியுடன் வந்த பெண்ணைப் பார்க்கிறான். அவன் மனம் சலனமடைகிறது என்று குதர்க்கமாக யோசியுங்கள். `இவள்தான் எனக்கு ஏற்றவள்!’ என்று அத்தோழியை மணந்துகொள்கிறான். அப்போது காதலியின் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்தால், ஒரு கதை கிடைக்கும்.

ஒவ்வொரு நாளையும் ஒரேமாதிரி கழிக்காது, அதாவது வீட்டு வேலை முடிந்து புத்தகத்தைக் கையில் எடுத்தபடியே தூக்கம் அல்லது தொலைகாட்சி பார்ப்பது என்று நேரத்தைச் செலவிடாது, அசாதாரணமாக எதையாவது செய்வது மூளைக்குப் பயிற்சி கொடுப்பதுபோல். உதாரணம்: இயற்கைக் காட்சிகளை ரசித்துப் பார்த்தபடி சாயந்திர வேளையில் உலவுவது. வெவ்வேறு திசைகளில், வேடிக்கை பார்த்துக்கொண்டே நடப்பது (பார்ப்போர் நம்மைப் பைத்தியம் என்று நினைத்தாலும்) வித்தியாசமாகச் சிந்திக்க வைக்கும். நடைப்பயிற்சியால் மன இறுக்கம் குறைய, கற்பனைக் குதிரை விரைந்து ஓட ஆரம்பிக்கும்.

வளரும்போதே தாழ்வு மனப்பான்மை

“ஒன் தங்கையைப் பார்! எப்படி கலகலன்னு இருக்கா! நீயும் இருக்கியே, உம்மணாமூஞ்சி!”

“என்ன இருந்தாலும் நீ பொம்பளைப்பிள்ளை!”

இம்மாதிரியெல்லாம் பெரியவர்களால் சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகள் தாழ்மை உணர்ச்சியுடன் வளர்கிறார்கள். துணிந்து எதையும் சாதிக்கப் பயம் எழுகிறது. தம்மைப்போல் இல்லாத பிறரைப் பார்த்து ஆச்சரியமோ, பொறாமையோ எழுகிறது.

இப்படிப்பட்டவர்கள் எந்த வயதானாலும், `நான் ஒரு தனிப்பிறவி. பிறர்போல் இருக்க வேண்டிய அவசியமில்லை,’ என்று தமக்குத்தாமே வலியுறுத்திக்கொண்டால் தன்னம்பிக்கை வளரும்.

எத்தனை வயதானாலும், பிறர் கூறுவதையெல்லாம் ஆமோதித்து, அதன்படியே இம்மி பிசகாது நடக்க ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மூளை எதற்கு? அரைத்த மாவே அரைபடுவது இதனால்தான். `ஊருடன் ஒத்து வாழ்!’ என்று என்றால், ஒருவருக்குத் தனித்தன்மை இருக்கக்கூடாது என்று அர்த்தமா?

எழுத்தால் புரட்சி

பேனாவால் கத்தியைவிட அதிகம் சாதிக்க முடியும். பிறர் எழுதியதைப் படித்தே தம் வாழ்வின் போக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் பலர். ஆனால் எத்தனைபேர் துணிந்து, பேனா (இப்போது கணினி) பிடிக்கிறார்கள்?

`புரட்சி எழுத்தாளர்!’

நூதனமான, ஆனால் சமூகத்தை நல்விதமாக மாற்றக்கூடிய கருத்துக்களை எழுதுபவரை பலவீனமாக்க சிலர் கையாளும் உத்தி இது. தமக்குச் சாதகமாக இருக்கும் நடைமுறையை இவள் ஏன் மாற்ற முயற்சிக்கிறாள் என்ற அச்சத்தில் அவளைப் பழிக்கிறார்கள்.

எப்போதும் பிறரால் பாராட்டப்பட வேண்டும் என்று நினைத்து வாழ்பவர்களால் எதையும் சாதிக்க இயலாது. எந்தவித எதிர்ப்பையும் சமாளித்து, துணிந்து எதிர்க்கும் தைரியம் இருப்பவர்களால்தான் எத்துறையிலும் நிலைத்து நிற்க முடிகிறது.

கரு எப்படிக் கிடைக்கும்?

பரிச்சயமில்லாதவர்களுடன் பேசினால், புதிய விஷயங்களை அறியமுடியும்.
ஒரு முறை தைப்பூசத்திற்கு முதலிரவு நான் மலேசியாவில் பிரசித்தமான பத்து மலைக்குச் சென்று தங்கினேன். தனியாக. பையில் பேனா, காகிதத்துடன். லட்சக்கணக்கான பக்தர்களும், காவல் துறை அதிகாரிகளும் அங்கிருந்ததனால் பயமில்லை.

நள்ளிரவில் மழை பிடித்துக்கொண்டது. ஒரு கட்டடத்தின்கீழ் தங்கியபோது, அருகிலிருந்த முதியவர் தாமாகப் பேசினார்: “கட்டையன் உசிருள்ள பாம்பை கத்தியால ரெண்டா வெட்டி, சீனியில தோய்ச்சு சாப்பிடுவாம்மா!”

அவர் குறிப்பிட்டது ஜப்பான்காரனை என்று புரிந்து, “உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று சந்தேகத்துடன் வினவினேன்.

புதிய விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள நிறைய கேள்விகள் கேட்க நேரிடும். சிலர், `நம்மைச் சோதிக்கிறாளோ?’ என்று ஆத்திரப்படவும் செய்வார்கள்.

அனைவருக்குள்ளும் பல விஷயங்கள், அந்தரங்கம் இருக்கின்றன. அதை யாரிடம் சொல்லி நிம்மதி அடையலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். உண்மையாகவே தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறோம், நமக்கு அவர் கூறப்போவதில் ஆர்வம் என்பதைப் புரியவைத்தால், தயக்கமின்றி பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.

1942 -ல், அன்றைய சயாமிலிருந்து பர்மாவரை ஒரு ரயில் பாதையை அமைக்க பல்லாயிரக்கணக்கான மலாயாக்கார்கள், பிணைக்கைதிகளாக இருந்த ஆங்கிலேயர்கள் ஆகியோரை ஜப்பானியர்கள் பிடித்துப்போனார்கள். என் பக்கத்தில் அமர்ந்திருந்தவரும் ஒருத்தராம். (மதுக்கடையிலிருந்தபோது, அங்கிருந்த அனைவரையும் துப்பாக்கி முனையில் ஒரு லாரியில் கடத்திக்கொண்டு போய்விட்டனர், வீட்டுக்கே தெரியாது).

நான் பேராவலுடன் பல கேள்விகள் கேட்டேன் அதைப்பற்றி. வாய்வழி சரித்திரம் போல் ஆகுமா?

எங்களைச் சுற்றி பத்து இளைஞர்களும் சுவாரசியமாக அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நிறையப் பேசிவிட்டு, பழைய நினைவுகளின் தாக்கத்தைத் தாங்கமுடியாது, “போகணும்!” என்று எழுந்து, வேகமாக அப்பால் சென்றார்.

கும்பலோடு கும்பலாக இருக்க வேண்டும், தனித்துத் தெரியக்கூடாது என்று பழைய புடவை ஒன்றைக் கட்டிக்கொண்டு போயிருந்தேன் அன்று. நட்புடன் பழகி, தன் விரிப்பில் என்னைப் படுத்துக்கொள்ள உபசாரம் செய்த வெள்ளையம்மா என்ற மாது, `டீச்சருங்களுக்கு சம்பளம் கம்மியா?’ என்று விசாரித்தாள்!

அவளுடைய கணவனையும் ஜப்பானியர்கள் பிடித்துப்போக இருந்தபோது, எதிர்வீட்டு இளைஞனின் குடும்பத்துக்கு முன்னூறு வெள்ளி கொடுத்து, கணவனுக்குப் பதிலாக அவனை அனுப்பினார்களாம். போன இடத்தில் இறந்த 60,000 தமிழர்களில் அவனும் ஒருத்தனாகிப்போனான். அதனால்தான் அரைகுறையாக நின்றுபோன பலரின் முயற்சி இன்று “மரண ரயில்வே” என்று அழைக்கப்படுகிறது.

“நாங்க முன்னூறு வெள்ளி குடுத்தோம்!” என்று திரும்பத் திரும்ப அழுத்திச்சொன்னாள் வெள்ளையம்மா, தனது குற்ற உணர்ச்சியைக் குறைத்துக்கொள்ள முயற்சிப்பவளாக.

(அந்தக் காலத்தில் ஒரு சவரன் தங்கம் பத்து அல்லது இருபது வெள்ளியாக இருந்திருக்கும். ஐம்பது வருடங்களுக்குமுன்னரே முப்பது வெள்ளிதான். அப்போதெல்லாம், `பணத்தட்டுப்பாடு வந்தால், அடகு வைத்துக்கொள்ளலாம். தங்கம் வாங்குங்கள்,’ என்று வானொலியில் தமிழில் அறிவுரை கூறுவார்கள். தொடுத்து வைத்த மல்லிகைச்சரம்போல், தங்கச்சங்கிலியை கடை வாசலில் தொங்க விட்டிருப்பார்கள். காவலுக்கு யாரும் கிடையாது என்பது என்னைப் பெரிதும் அதிசயப்படுத்தியது. வாடிக்கையாளர் தமக்கு வேண்டிய நீளத்தில் வெட்டச் செய்து வாங்கிப் போவார்!)

பூரி, அது, இது என்று தைப்பூசத்திற்கு முதல் நள்ளிரவில் சாப்பிடக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மறுநாள் காலை, சக்கரங்களில் அமைக்கப்பட்ட, தாற்காலிகமான கழிப்பறைகளுக்கு வெளியே பெரிய வரிசை. `ஒண்ணுக்குப் போறதுக்கெல்லாம் காசு கேக்கறான்!’ என்று ஒரு பெண்மணி கத்திக்கொண்டிருந்தாள். ஓர் உபகாரி எல்லாருக்கும் வாளியில் தண்ணீர் கொண்டு வந்தபடி இருந்தாள்.

புதிய அனுபவங்களைத் தேடிப்போனால், அசௌகரியங்கள் ஏற்படத்தான் செய்யும். அவைகளைப் பெரிது பண்ணாமல் ரசிக்கத் தெரிந்தால், எல்லாமே அனுபவங்கள்தாம். உடனுக்குடன் எழுதுகிறோமோ, இல்லையோ, மூளை சுறுசுறுப்பு குன்றாமல், எப்போதுமே நம்மை உற்சாகமாக வைக்கும்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *