மகாசக்திக்குப் பிரார்த்தனை
விவேக் பாரதி
அம்பிகே சிவசக்தி – எனை
ஆட்டுவிக்கும் காலம் எத்தனையோ?
அம்படி நானுனக்கு! – எனை
ஆற்றலோ டேவிடும் வில்லடிநீ!!
நம்பினேன் உள்ளவரை – அவர்
நாளெலாம் நடித்திடக் காணுகையில்
வெம்பினேன் மனதுக்குள்ளே – இந்த
வேதனை மாய்ந்திட வழியிலையோ?
உள்ளமாம் அகழியிலே – நான்
உள்ளொரு முதலைபோல் உழன்றிடவே
தெள்ளிய ஞானமெனும் – ஒளித்
தேரெனைக் கூப்பிடும் நாள்வருமோ?
பள்ளெலாம் உன்புகழ்தான் – என்
பாட்டெலாம் கூத்தெலாம் உன்பெயர்தான்
துள்ளும்வேல் கொடுத்தெனையும் – தொடும்
துக்கமும் நீங்கிடத் துணைபுரியே!!
பற்றிலா வாழ்வுகொடு – இப்
பாரினைப் பாடிடும் வலிமைகொடு
ஒற்றிலா நெஞ்சுகொடு – உன்
ஓங்கார ஓசையின் சந்தம்கொடு
முற்றிலா இன்பம்கொடு – சுக
முக்தியிலே எனை மூழ்கவிடு!
கற்றிலேன்! கல்விகொடு! – புவிக்
கயமையைப் போக்கிடும் கணையைக்கொடு!!
உன்னொளிக் கிரணத்திலே – பல
உவகைகண் டேன்மிக உணர்ச்சிகொண்டேன்
அன்னையே உன்மடிமேல் – என்
ஆவி அமர்ந்திடச் செய்பவளே
என்னையே தந்துவிட்டேன் – இங்கு
என்செயல் யாவையும் நின்செயலே
இந்நில வாழ்வினிலே – யான்
இயற்றுவ தெக்கடன்? சொல்லடியே!!
அம்பிகே சிவசக்தி!!
23.11.2017